ராஜேஷ் ஜீவா கவிதைகள்

தன்னையுண்ணும் ஒருவன்04

நீண்ட நாட்களாக
ஊர்ஊராக யாசித்தும்
பசியாற எதுவும் கிடைக்காதவன்
நெடிய யோசனைக்குப் பின்
உண்பதற்குத் தன்னைத்
தேர்ந்து கொண்டான்
மலைக்குகை
தைல ஓவியத்தில்
தொல்குடியொருவன்
கையிலேந்திய கூர்ஈட்டியை
கைமாறாகப் பெற்று
மார்புச் சதையை
கிழித்துச் சுவைத்தவன்
அடுத்ததாக
தன்  கெண்டைக்காலில்
விளைந்திருக்கும்
கொழுத்த திரட்சியினை
அறுத்துத் தின்கையில்
கடல்கன்னியர் சிப்பிகளை
ஆசை ஆசையாகப்
பிரித்துச் சாப்பிடுவதை
நினைத்துக் கொண்டான்
தாது வருஷத்துப் பசியாற்ற
உதரத்தைத் தேர்ந்த அவனுக்கு
பின்னர் தன்னை உண்பதற்கான
அவசியம் நேரவில்லை.

ஒருநாள்05

எல்லாவற்றையும் அப்புறப்படுத்த
வேண்டியிருக்கிறது ஒருநாள்
இந்தக் குப்பைகளை காய்கறிக் கழிவுகளை மாதுளம்பழத் தோல்களை சாமியெறும்புகள்
இழுத்துக் கொண்டு போகும் விட்டில் பூச்சியின் இறந்த பாகங்களை தேங்காய் நார்களை
சூப்பர் மேக்ஸ் ப்ளேடு வாங்கி வழித்தெடுத்த அக்குளின் ரோமங்களை சிமெண்ட் தொட்டிக்கு பின்புறம்
மறைவாய் வைத்திருக்கும் காண்டம்களை காலாவதியான
குல்கந்து சூரணங்களை
கேன்வாட்டர் மூடியில் சேகரமாகியிருக்கும்
நெகட்டிவ் ரிசல்ட் மூத்திரங்களை
முறிந்த மண வாழ்க்கையின்
கப் & சாசர்களை
நெடு மாதங்களுக்குப் பின் சந்தித்த கல்லூரித் தோழியின் குட்மார்னிங் மெசேஜ்களை
இந்த ஒருநாளையும் அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது ஒருநாள்

சிலீமுகம்06

சுவரில் தொங்கும்
பலவித அளவுப்படங்களை
நீண்டநேரம் பார்வையிட்டவள்
முலாம்பழ வடிவத்திற்கு
ஆர்டர் கொடுத்து
சிகித்சை அறையில்
நீட்டிப் படுத்தாள்
நவீனச்சூட்டில் இளகும்
சதைகள் திரட்டி
உருவம் வடிக்கையில்
கடல் மணலில் ஈரம் சேர்த்து
இட்டிலிகளும் குழல் புட்டுகளும்
தோழியரோடு பிடித்துத் தின்றது
நாநுனியில் தித்தித்தது
தகிக்கும் வெய்யிலின்
உஷ்ணம் தணிக்க
சிலீமுகத்தில் ட வடிவில்
ஸ்ட்ராவினைப் பொருத்தி உறிஞ்ச
கொதிக்கும் தார்ச்சாலை
மொஹல் தோட்டமாய்
பூத்துக் குலுங்கியது

எலியும் புலியும்images

வீட்டில் எலியும் வெளியில் புலியும் வெளியில் எலியும் வீட்டில் புலியும்
பால்யத்திலிருந்து சிநேகிதர்கள்
பொன்வண்டு வளர்ப்பது
புளியங்காய் அடிப்பது
தலைப்பிரட்டை பிடிப்பது
கைச்சதையில் தவளை எடுப்பது
லக்கிபிரைஸ் சுரண்டுவது
சைக்கிள் டயர் உருட்டுவது
ரேடியோ காந்தத்தில்
மணற்பேய் ஓட்டுவது
அமராவதியம்மா  உளுந்தங்களிக்கு
உண்டியல் நோண்டுவது என
சகல தர்ம காரியங்களுக்கும்
இருவரே உபயஸ்தர்கள்.
புறவழிச்சாலை முடிவு வரை
காலாறப் போகும் மாலைநடையில்
குக்கர் விசிலைக் கணக்கெடுப்பது
முதல் இறப்பிற்குப் பின்னான
வாழ்வு வரை தத்துவ யதார்த்த
விகசிப்புகள் மின்னி மறையும்
என்ன
பேருந்து நிறுத்த வெளியில்
இளமான்கள் கடந்து செல்வதைப்
பார்க்கையில் மட்டும்
புலிக்கு கொஞ்சம்
வாயைப் பிளக்க வேண்டும்
வெள்ளைப்பிச்சி வாசம்
பிடிக்கையில் மட்டும் வீட்டில்
எலிக்கு கொஞ்சம்
தலையைச் சொறிய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *