நேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்

03கடந்த 2016-ல் என் தோழி ஹேமா ஒரு செய்தியைப் புலனம் வழியாக என்னிடத்தில் காட்டினார். வல்லினத்தின் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு அது. பள்ளியில் நான் சில பேச்சுப்போட்டிகளுக்காக மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதுவதால் என்னை ஒரு நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டேன்.

கதை எழுதி அனுப்பவேண்டிய நாள் 15.09.2016. நானும் கதையை எழுதி அனுப்பிவிட்டேன். நவம்பர் மாதத்தில்   எனக்கு வல்லினத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. கலை இலக்கிய விழா 8-க்கான அழைப்பு அது.  அதே நாளில் சிறுகதை பரிசரிப்பு விழாவும் கூட. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நண்பர்களிடம் பெருமையுடன் காட்டினேன். என் சிறுகதை பரிசுப்பெற்றதாக நானே கற்பனைச்செய்து கொண்டேன். தலைக்கால் புரியவில்லை; கடிதத்தில்  திரு. நவீனின் தொலைபேசி எண் இருந்தது .

உடனே தொடர்பு கொண்டேன். அப்பொழுது திரு. நவீன் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் எதோ ஒரு பல்கலைக்கழக மாணவன் என்று நினைத்துக்கொண்டேன். விடுமுறையில் வந்து வல்லினத்திற்கு உதவிச்செய்கிறார் என்று நினைத்தேன். அவரிடம் ‘எனக்குப் பரிசு கிடைத்ததா?’ என்று வினவினேன். அதற்கு அவர் “நாங்கள் பெயர்களை மறைத்து  விட்டுதான் நீதிபதியிடம் ஒப்படைப்போம். முடிவு எங்களுக்கே தெரியாது என்றார். நான் பெற்றோருடன் வரலாமா? என்று வினவினேன். தரளமாக வரலாம் என்று கூறினார். என் அப்பாவிடம் கடித்ததைக் காட்டினேன். மகிழ்ச்சியடைந்தார். என் அப்பா “உனக்கு பரிசு கிடைக்கும் என்று நீ எப்படிக்கூறுகிறாய்?” என்றார் . “என்னுடைய கதையின் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு” என்றேன். ஏழு  ஆறுதல் பரிசுகளின் ஓர் ஆறுதல் பரிசு கிடைக்காதா ?  என மனயுறுதியுடன்  இருந்தேன்.

வல்லினத்தின் 8 வது இலக்கிய விழாவில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. என் பெயரை நிச்சயம் கூப்பிட்டிருப்பார்கள். நான் தான் செல்லவில்லை என்று வருத்தப்பட்டேன். ஒரு வாரம் கடந்து ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் தொலைப்பேசியில் திரு.நவீனை அழைத்தேன். யாருக்கு முதல் பரிசு என்று கேட்டேன். முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற கதையின் தலைப்புகளைக் கூறினார். மறுபடியும் ஆறுதல் பரிசில் ‘சீருடை’ எனும் கதை வந்துள்ளதா என்று வினவினேன். அக்கதை தன் பார்வைக்கே வரவில்லை என்று கூறினார். அவமானமாக  இருந்தது. நான்  சுதாரித்துக்கொண்டு “இவ்விழாவின் நிகழ்வு பத்திரிகையில் வருமா?” என்று கேட்டேன். அவர் “வல்லினம் எனும் இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம்” என்று கூறினார்.

நான் பள்ளி முடிந்தவுடன் வல்லினம் இணையத்தைப் படித்தேன். வல்லினத்தை நான் ஒரு பொழுதுப்போக்கு இணையத்தளம் என்று நினைத்தேன். அது ஒரு சமுதாயத்தின் அறிவார்ந்த குரல் என்று படிக்கும் போதே  உணர்ந்தேன். பல பேட்டிகளைப் படித்தேன். சினிமாவிலும் மேற்குநாடுகளிலும்தான் தான் இம்மாதிரியான பேட்டிகளைப் பார்த்ததுண்டு. இது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சில கதைகள் புரியவில்லை. பலமுறை படித்தேன்.

‘இலக்கிய பிரதியைப்படித்துவிட்டு அது எனக்கு விளக்கவில்லை என்று ஒரு வாசகன் கூறுவது  படைப்பாளியின்  காரணமா? அல்லது எழுத்தாளர் காரணமா?’ என்ற கேள்விக்கு யாதர்த்தக் கதைப்படித்தவர்களுக்கு நவீனத்துவம் கடுமையாகத்தான் இருக்கும் என்று சு.வேணுகோபால் தனது நேர்காணலில் சொன்ன பதில் என் வாசிப்பு மிகவும் தரம் குன்றி உள்ளதைக் காட்டியது. வல்லினத்தின் பல கதைகளைப்படிக்க ஆரம்பித்தேன். பேட்டிகள், பயணக்கட்டுரைகள், எனத் தொடர்ந்தது. அப்போதுதான் நான் பேசிய திரு. நவீன்  வல்லினத்தின் ஆசிரியர் என்று தெரிந்துகொண்டேன்.  அச்சம் தட்டியது.

தொடர்ந்து நவீனை வாசிக்க ஆரம்பித்தேன். நவீனின் பயணக்கட்டுரை  ‘சாம்பல் பூத்த02 தெருக்கள்’ மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஓர் எழுத்தாளரின் சிந்தனையும் அவர் காணும் காட்சியும் மிகவும் கவித்துவமாகவும்  அலங்காரமின்றி உண்மையே அதிகம் இருந்தன. அதுபோலவே உண்மைக்கும்  நியாயத்திற்கும் மட்டும்தான் வல்லினம் தலை வணங்கும் என்பதைத் தெள்ளத்தொளிவாகத் தெரிந்துகொண்டேன். வல்லினம் விழாவில் கலந்து கொள்ள ஆவல் கொண்டேன். ஆனால், வல்லினத்தில் எழுதவேண்டும் என்றால் முதலில் என் வாசிப்புத்திறன் மிகவும் ஆழமாக இருக்கவேண்டும். எனக்கு அது கிடையவே கிடையாது. நடப்பது நடக்கட்டும் என்று வல்லினத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு  நற்செய்தி ‘ஆசிரியருக்கான சிறுகதைப்போட்டி’ என ஓர் அறிவிப்பை வல்லினத்தில் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் என்று மனதில் உறுதிக்கொண்டேன். அதில் எந்த ஒரு விதிமுறையும் இல்லை. மறுபடியும் திரு.நவீனிடம் பேச வேண்டுமா என்று தோன்றியது. வேறு வழி இல்லை பேசியே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் அதே எண்ணுக்கு அழைத்தேன். தொலைப்பேசி அலறியது ஆனால் பதில் இல்லை. சோர்வுடன் தொலைப்பேசியை வைத்துவிட்டேன் நவீன் என்னை அழைத்தார். இயல்பான நட்புடன் பேசினார். ஒரு வாரம் கடந்து என்னையும் எழுத ஆவல்கொண்ட ஆசிரியர்கள் பலரையும் யாழ் சிறுகதை குழுவில் சேர்த்தார்.

முதல் பணி எங்களுக்கு நாஞ்சின் நாடன் அவர்களின் ‘சாலப்பரிந்து’ எனும் சிறுகதையைப்படித்து விட்டு எங்கள் கருத்தை எழுதவேண்டும். ஒரு தாயாரின் இறுதிக்கட்டபயணத்தின் கதை அது. அதில் உள்ள நுட்பம், அதில் மறைந்துள்ள ஆன்மா அதையெல்லாம் கண்டுப்பிடித்து எழுதவேண்டும். நவீன இலக்கியத்தைப்பற்றி ஓர் அணு அளவும் தெரியாது. கதையில் வரும்  மலையப்பன் குற்றுயிர் கொலையுயிருமாக இருக்கும் தன் தாயை ஜலசாமதிச்செய்கிறான் தன் மனைவியின் துணையுடன். ஆசிரியர்கள் அனைவரும் கதையில் வரும் மகனையும் மருமகளையும் வசைப்பாடினோம். எல்லாவற்றையும் படித்துவிட்டு, நவீன் ஒர் உதாரணக்கட்டுரையை வழங்கினார். அது திரு. பாண்டியனின் கருத்து. அதில் அவர் யாரையும் குறை கூறவில்லை. வாசகர்கள் கதையினை திட்டவட்டமான போதனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எங்களுக்கு விளக்கமளித்தார். அடுத்த நாள் பவா செல்லதுரை, கு.பா.ரா போன்றோரின் கதையினை வாசித்து அதன் நுட்பத்தைக்கூற வேண்டும். நான் எனக்குத்தெரிந்தவற்றை எழுதினேன். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுகதை எங்களுக்கு இடுப்பணியாக வழங்கப்பட்டது. கதையிலேயே எனக்குப்பிடித்தது  சுந்திர ராமசாமி எழுதிய ‘பிரசாதம்’. நகைச்சுவையானக்கதை. ஒரு காவலதிகாரி தன் குழந்தைக்குப் பிறந்தநாள் கொண்டாட  5 வெள்ளி சம்பாதிக்க வேண்டிய நிலை. ஓர் அப்பாவியான அர்ச்சகரை ஏமாற்றி பணம் வாங்கும் கதை. இறுதியில் இவ்விருவர் இடையே எதிர்பாராத நட்பு உருவாகும்.

நவீன்  ‘உள்ளிருந்து உடற்றும் பசி’    எனும் கதை வாசிக்கக்கூறியிருந்தார். இக்கதை  சு. வேணுகோபல் அவரின் கதை. மிகவும் அதிர்ச்சியாக இருந்து. ஏதோ நவீன இலக்கியம் பற்றி 1 சதவீதம் புரிந்து கொண்டதால் மனிதனின் பல்வேறு முகங்களில் அதுவும் ஒன்றென சமாதானம் அடைந்தேன்.

இவ்வாறு ஒரு போட்டிக்கு முன்பாக எழுத்தாளர்களைத் தயார்படுத்துவது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னும் வல்லினத்தின் மேல் எனக்கு மதிப்பு பன்மடங்கானது. மிகவும் மகிழ்ச்சியுடன் இடுப்பணியைச்செய்து முடித்தேன். சுஜாதாவின் ‘நகரம்’, கி.ரா அவர்களின் ‘கதவு’ போன்ற நவீன இலக்கிய சிறுகதைகள் எங்களுக்குப்பாடமாக அமைந்தது.

எந்த ஒரு சந்தேகமோ அல்லது கேள்வி எழுத்தாலோ நவீனிடம் பதில் பட்டென்று வரும். காலத்தாமதம் ஆனது கிடையாது. தெளிவாக விளக்கம் கிடைக்கும். நட்புடனான உரையாடல் எங்களை இடுப்பணியைச் செய்ய ஆர்வத்தை மூட்டியது. பட்டறையில் கலந்துகொள்ள நவீனையும் சந்திக்க நாள்களை எண்ணிக்கொண்டிருந்தேன். அவரும்  அக்குழுவும் செய்யும்  மாபெரும் நிகழ்வை நேரடியாகக் காண காத்திருந்தேன்.

குறிப்பிட்ட நாளில் பட்டறையில் கலந்துகொண்டேன். பட்டறை ஆரம்பமானது எழுத்தாளர் சு.வேணுகோபல் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. முதல் கேள்வி ‘ஒரு  நல்ல எழுத்தாளர் எப்படி இருக்கவேண்டும்?’ முதல் பதில் ‘அதிகம் வாசிக்கவேண்டும். நுட்ப வாசிப்பு அவசியம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் இருக்கவேண்டும். எதையும் எதிர்ப்பார்த்து எழுதக்கூடாது. அதிகப்பட்ச உண்மையைப் பயமின்றி எழுதவேண்டும். மையக்கருத்தை விட்டு விலக்ககூடாது.’ அவரின் அனுபவம் கேட்கப்பட்டது. அவர் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது ஜெயகாந்தன் வருகைக்காக மாணவர்கள் அவரின் புத்தகத்தைப்படிக்கவேண்டும் என்று கூறியதும் குறைந்த பட்சம் 46 புத்தகங்கள் படித்ததாகக் கூறினார்.

07அவ்வாசிப்பின் வழி ஜெயகாந்தனின் படைப்புலகத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு தனக்கு தன்னம்பிகை உண்டு என்று கூறினார். சு.ரா அவர்களின் கதையப்படிக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக கருத்து ஒன்று பிறக்கும் என்றும் ஜெயகாந்தன் கதையினைப்படிக்கும்போது முடிவு  சுலபமாக தெரிந்துவிடும் என்றும் கூறினார். வேணூகோபல் அவர்கள் எங்களுக்குப்பட்டறை நடத்தும்போது மிகவும் ஆத்மார்த்தமாகவும் தன்னையே உணர்ச்சிப்பிளம்பாக உருவாக்கி பாடம் சொல்லிக்கொடுத்தது ஒரு பாக்கியமாக கருதுகிறேன். அவரின் ஆத்மார்த்தமான உழைப்பு அவரின் பேச்சில் தெரிந்தது. ஒரு கதையை எழுதும்போது  மிகவும் உயிரோட்டமாக எழுத வேண்டும் என்று கூறினார் . நெருப்பு என்றால் பொசுங்கும் வாடை எழுத்தில் இருக்கவேண்டும் என்று கூறினார். சீ.முத்துசாமியின் ‘இரை’ கதையினை முதல் பாடமாக விளக்கினார் .

இப்பட்டறையில் திரு.பவா செல்லதுரை அவர்களின் கதைசொல்லும் விதம் எனக்குப்பிடிந்திருந்தது. சற்று நிறுத்தி குரலை அழுத்திக்கதை கூறும் விதம் விசித்திரமாக இருந்தது. வெகுளித்தனமான பேச்சு என்னை வேறு உலகத்திற்குக்கொண்டு சென்றது. சு.ரா அவர்களின் ‘விகாசம்’ எனும் கதையினை திரு.பவா செல்லதுரை கூறியது  என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு ஜவுளிக்கடை  முதலாளி பார்வையற்ற தன் தொழிலாளியின் திறமையக்கண்டு மிரளும் கதை. பின்னர் பால் சக்கரியா எனும் ஒரு மலையாள எழுத்தாளரில் ‘தேன்’ எனும்  சிறுகதை. கொஞ்சம் கூட எதார்த்தத்தின் நிழலைக்கூட தொட்டுப்பார்த்திராத ஒரு கதை. கரடிக்கும் ஒரு பெண்ணுக்கு மலரும் காதல் திருமணக்கதை. எல்லாமே செவிக்கும் மனதுக்கும் இன்பமாகவும் புனைவுகளின் சாத்தியத்தையும் புரிய வைத்தது.

இடைவேளைக்குப் பிறகு சு.வேணுகோபல் ‘உள்ளிருந்து உடற்றூம் பசி’ என்ற கதையினை ஒட்டி ஆசிரியர்கள் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் வரும் அண்ணன் பாத்திரத்தை அலசி ஆராய்ந்தோம். சிறு வயதில் தாயில் இறப்பு, தந்தை போலிஸ் மனைவியுடன் தகாத உறவு, மூன்று தங்கைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை அண்ணன் பாத்திரத்தைப் படம்பிடித்துக்காட்டியது. பிறகு அவருடைய ‘சொல்லமுடிந்தது’ கதையினைப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன.

நேரம் போனது தெரியவில்லை. மணி 1:00 ஆனது. பட்டறை முடிவடைந்தது. மதிய உணவுக்குப்பின் வல்லின விழா ஆரம்பமானது. பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அனைத்து வல்லின உறுப்பினர்களையும் காண முடிந்தது. டாக்டர் சண்முக சிவா, அ.பாண்டியன், அ.ரெங்கசாமி, சரவண தீர்த்தா, பேராசிரியர் முல்லை, கங்காதுரை, விஜயலட்சுமி என பலரும் இருந்தனர். நவீன் இது வல்லினத்தின் இறுதி விழா என்று கூறினார். பத்து நூல்களின் புத்தகவெளியீடு மிக எளிய முறையில் வியாபார நோக்கமின்றி அரசியல் பார்வை துளிக்கூட  இன்றி அறிவார்த்தமாக ஆடம்பரமின்றி நடந்தேறியது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் நூல் சம்பந்தமாக கலந்துரையாடல்  வைக்கப்பட்டது. இது எனக்குப்புதுமையாக இருந்தது. சரவண தீர்த்தா சினிமாவின் வழி பெண்ணியத்தைப்பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதுபவர். அவர் பெண்ணியத்தைப்பற்றிப் பேசிய விதம் அருமையாக இருந்தது.

சு. வேணுகோபல் அவர்கள் ‘மீண்டு  நிலைத்த நிழல்கள்’ எனும் நூலைப்பற்றிய விமர்சனம் மிகவும் நெகிழவைத்த ஓர் உரை. மலேசிய இலக்கியத்தின் மேல் அவருக்கு அக்கறை ஊற்றேடுத்து வழிந்தது. நவீனைப் பார்த்து நீ அதிகம் எழுதவேண்டும். உன்னுள் இருக்கும் இலக்கியத்தை நீ பாழாக்கிக்கொண்டுள்ளாய். என்று கூறும்போது அவரின் குரல் கரகரத்தது. ‘சார் நீங்கள் இங்கேயே இருந்துவிடுங்கள்’ என்று  உரக்க  கத்தவேண்டும் போல இருந்தது.

நேரம் போனதே தெரியவில்லை. மணி 7.00.  எட்டு மணிக்கு நான் விமான நிலையத்தில் இருக்கவேண்டும். நவீன் மேடையில் புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்தார். நான் மனமின்றி புறப்பட்டேன்.

விமான நிலையத்திற்கு வண்டி ஓட்டிய சீனத்தாத்தாவிடம் பேசிக்கொண்டே சென்றேன்.10 சரியாக 8:15 க்கு அனைத்துல விமான நிலையம் வந்து சேர்ந்தேன். ‘எத்தனை  மணிக்கு விமானம்?’ என்றார். “எட்டு” என்றதும் மிகவும் பதற்றமானர். “சீக்கிரம் செல்” என்றார். எப்படியாயினும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு சிறுதொகைக்கட்டினேன். அடுத்த விமானம் எடுத்தேன். இன்னும் 2 மணி நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது என் கையில் நவீன் எழுதிய புத்தகம் இருந்தது. ‘நாரில் மணம்’. பனிக்கூழை சுவைத்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மலாய் பெண்மணி என்னை எழுப்பினார். “நாங்கள் கடையை மூடப்போகிறோம்…” என்னையறியாமல் நான் உறங்கிவிட்டேன் . புத்தகம் ஒரு மூலையில் கிடைந்தது. மணி 9:45. என் தொலைப்பேசியைத்திறந்து பார்த்தேன். என் பெற்றோர் 8 முறை அழைத்திருந்தார்கள். பட்டறையில் சந்தித்த தோழி  அழைத்திருந்தார். அக்கறையாக நலம் விசாரித்தார். வீடு சென்றவுடன் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்புங்கள் என்றார் . வல்லினம் தந்த இன்னொரு பரிசு தோழி பாமா.

இரவு மணி 11.45 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். காலையில் பள்ளியில் சிறிது வேலையில் இருந்தேன். மாலை பள்ளிக்குத்தயாராகிக்கொண்டிருக்கும்போது   என் கண்ணில் நாரில் மணம் தென்பட்டது, பொதுவாக இரவில் தான் வாசிப்பேன் ,, சரி சிறிது நேரம் வாசிக்கலாம் என்று புத்தகத்தைத்திறந்தேன். ‘கண்ணீரைப்பின் தொடருதல்’ என்ற பத்தியை வாசித்தேன். ஒரு சிறைகைதியில் கதை. அவர் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவரைக்கான நவீன் ஜோகூர் பாருவிற்கு வந்தது ஒரு எழுத்தாளருக்கு இன்னொரு படைப்பாளி தரும் நம்பிக்கை எனலாம். அவரின் ஆறு நாவல்களை வாங்கிக்கொண்டு சென்றது, அவரின் நாவலில் வெளியுலகம் புதைந்து கிடைந்தை எழுதினார். மறுபடியும் அழைத்தால் அவரின் அழைப்பை எடுக்கப்போவதில்லை என்று உருக்கமாக நவீன் எழுதியிருந்ததைப்படிக்கும்போது எனக்கு  அழுகை வந்துவிட்டது. மனம் எரிந்தது. வலியோடும் எரிச்சல் கூடியதும்  இதுதான் மனஎரிச்சல் என்று உணர்ந்தேன் . எரிச்சல் அதிகமானது பிறகுதான் தெரிந்தது நான் சூடாகிகிக்கொண்டிருக்கும் இஸ்திரிப்பெட்டியில் சாய்த்துக்கொண்டு கதையைப்படித்துள்ளேன் என்று.  மனதில் ரணம் உடலில் தீக்காயம் .

இனி அடுத்தப்பணி கதையை எழுதுவது. நிச்சயம் எழுதுவேன். பரிசுக்காக இல்லை . என் மகிழ்ச்சிக்காக. ஆம் இப்பட்டறை அதற்காகத்தான். போட்டி என புதியவர்களை ஆர்வப்படுத்தி இலக்கியம் என்றால் என்னவென்று சொல்லிக்கொடுத்திருக்கிறது வல்லினம்.    சிலர் சொல்வது போல வல்லினம் நடத்தும் போட்டிகள் நேர்மையற்றவைதான். அவர்கள் போட்டிகள் வழி பரிசைக்கொடுக்க நினைக்கவில்லை. பரிசுகளை துறக்கும் படைப்பாளிகளை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறார்கள்.

7 comments for “நேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்

  1. ஸ்ரீவிஜி
    January 1, 2019 at 2:19 pm

    அருமையான எழுத்துப்பாணியைக் கொண்டுள்ளீர்கள் புனிதவதி. மயக்கம் கொடுக்கக்கூடிய எழுத்துநடை அழகிய தமிழ்.

  2. மதிவதனா
    January 2, 2019 at 2:08 pm

    Genuity, true passion and soul search in your words touched me, I was tearing without realizing. All the best Punitha. Sincerely wish for a fruitful journey in your path.

    • அ.புனிதவதி
      January 4, 2019 at 8:45 am

      THANKS DEAR,IM SO TOUCHED BY YOUR GENUINE COMPLIMENTச் .மிக்க நன்றி. மதிவதனா.

  3. அ.புனிதவதி
    January 4, 2019 at 8:16 am

    மிக்க நன்றி சகோதரி ஸ்ரீவிஜி. நுண்ணியப்புள்ளியாக இருந்த என் இலக்கிய அறிவு ”இப்பொழுதுதான் ஊசியின் தூவாரம் அளவுப்போல உயர்ந்துள்ளது ….இன்றும் கடுமையாக வாசிக்க வேண்டும் …..

  4. Manijegathisan
    January 12, 2019 at 5:08 pm

    நல்ல பதிவு. வாழ்த்துகள்.

  5. Sunthari Mahalingam
    May 12, 2019 at 11:46 pm

    sirappaana pathivu. unarnthu ezhuthiyullirgal punithavathi. vaalthukkal.

    • Punitha
      July 3, 2019 at 10:04 am

      நன்றி சுந்தரி மணி ஜெகதீசன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...