ஒரு நிகழ்ச்சியும் ஒரு நாவலும்

28நவம்பர் 18ஆம் தேதி வல்லின ஏற்பட்டில் நடைபெற்ற 10வது கலை இலக்கிய விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கமாக நான் கலந்துகொள்கிறே ஒரே உள்நாட்டு இலக்கிய விழா இதுதான் என்கிறபோதிலும் இவ்விழா இவ்வாண்டுடன் முடிவடையவிருக்கிறது என்கிற அறிவிப்பினை வாசித்தபோது சாக்குப்போக்குச் சொல்லாமல் கைப்பேசி டைரி குறிப்பில் எழுதிவைத்துக்கொண்டு பல எதிர்ப்பார்புடன் நிகழ்விற்குச்சென்றேன்

என் எதிர்ப்பார்ப்பு வீண்போகவில்லை. நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக அரங்கேறியது. நூல் வெளியீடு, சிங்கை தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் வருகை மற்றும் அவர்களின் சிறப்புரை. வெளியீடு கண்ட நூல் பற்றிய கேள்வி பதில் அங்கம். குறுநாவல் போட்டியின் முடிவுகள், சுவையான தேநீர் பலகாரம் என வழக்கத்திற்கு மாறாக நிகழ்ச்சியின் அணிவகுப்பு மிகவும் சிறப்பாகவே இருந்தது.

இந்நிகழ்ச்சியினை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய என் இனிய தம்பி கங்காதுரைக்கு இவ்வேளையில் வாழ்த்துகள். கோர்வையாக அழகிய தமிழில் சோர்வடையச்செய்யாமல் நிகழ்வை இறுதிவரை வழிநடத்தினார்.

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த இறுதி ஆண்டுவிழாவில் அதிக வாசக04 எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். அரங்கம் நிரம்பி வழிந்தது. பின்புறமுள்ள கதவுகளையெல்லாம் திறந்துவிட்டு கூடுதல் நாற்காலிகள் போடப்பட்டும் சிலர் நின்றுகொண்டே நிகழ்வை கண்டு ரசித்தார்கள். கூட்டம் பெரிதுதான், இருந்தபோதிலும் நிஜமான இலக்கிய ஆர்வமுள்ள வாசக உள்ளங்கள் குறைவு என்றே சொல்லவேண்டும் காரணம், பலர் நிகழ்வின் நடக்கின்ற சுவாரஸ்யங்களை புறந்தள்ளி தமது சொந்த கதையளப்பில் மெய்மறந்து லயித்துக்கொண்டிருந்தனர். இது ஆர்வத்துடன் நிகழ்வை கண்டு ரசிக்கவந்தவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சலாகவே இருந்தது. நிகழ்ச்சியின் இடையே மைக்கை வாங்கிய நவீன், கதையளக்க ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து அரங்கை விட்டு வெளியேறவும், என்று சற்று கடுமையாகவே எச்சரித்ததையும் இங்கே நினைவுகூர்கிறேன்.

இலக்கியத்தின்பால் ஈடுபாடு அல்லது ஆர்வம் என்பது, ஏற்கனவே என்னமாதிரியான இலக்கியப்புரிதலை நாம் வளர்த்துக்கொண்டுள்ளோம் என்பதைப்பொருத்தே அமைகிறது. முழுக்கமுழுக்க இலக்கியம் மட்டுமே பேசுகிற நிகழ்வில், ஏற்கனவே வேறுபல `இலக்கிய’ நிகழ்வில் கலந்து பழகியவர்களுக்கு வல்லின நிகழ்வு கண்டிப்பாக சோர்வினைத்தான் கொடுத்திருக்கும். காரணம் பல இலக்கிய நிகழ்வுகள், சினிமாக்கூத்து கும்மாளங்களோடு மாலை பொன்னாடை அரசியல் பிரமுகர் பேச்சு, தனிமனித துதிபாடல், ஒன்றுமே இல்லாத எழுத்தைக்கொண்டாடுதல், பணபலம் உள்ளவர்களைப் பாராட்டிப்போற்றுதல், அனைவரையும் மேடையேற்றி குலுக்கல் பரிசு வழங்குதல், பேனா பிடிப்பவர்களை எல்லாம் எழுத்தாளர்கள் என்று புகழ்பாடுதல், கைத்தட்டுங்கள் கைத்தட்டுங்கள் என நம்மை `டார்ச்சர்’ செய்தல், பட்டிமன்ற பேச்சாளர்களின் சிரிப்பு மூட்டுகிற பேச்சு என துவங்கி சில சினிமா நடிகர்களின் சர்க்கஸ் சாகசங்கள் என எல்லாம் நடந்தேறிய பிறகு, கொஞ்சம் இலக்கியம் பேசுவது உண்டு. அதைத் தவறு என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். காரணம் நானும் அம்மாதிரியான நிகழ்வில் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்ட ஆசாமிதான்.

மனது வயது கொடுக்கிற அனுபவம், அதன் அடிப்படையில் ஏற்படுகிற பக்குவத்தில் ரசனைகள் ஆர்வங்கள் மாறுபடுகிறபோது, அதை நோக்கியே நமது பயணமும் துவங்கிவிடுகிறது. நாம் மட்டும் மாறியிருக்கிற பட்சத்தில் பிறரை எச்சரிப்பது என்ன நியாயம். ரசனைகள் அவரவர் விருப்பம். நிகழ்வை பொதுவாக அறிவிக்கின்ற பட்சத்தில்  பலவித எண்ணப்போக்குடைய மக்கள் கூடுவது இயல்புதானே.

ஆக,  இனிவரும் விழாக்களில் ஒத்த இலக்கிய ரசனையுடைய கூட்டத்தை மட்டுமே கூட்டுகிற எண்ணத்தை வல்லினம் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் இந்த விழாவை இறுதி விழாவாக அறிவித்திருக்கின்றார்கள் என்றே நான் யூகிக்கிறேன். அப்படியே இருக்குமாயின் இந்த ஸ்ரீவிஜியை மறந்துவிடவேண்டாம்.

index03வல்லின நிகழ்வில் வெளியீடு கண்ட பல புத்தகங்களின் `மிச்சமிருப்பவர்கள்’ என்கிற குறுநாவலும் அடங்கும். இதை எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் எழுதியுள்ளார். இந்த குறுநாவலுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனக்கு செல்வன் காசிலிங்கம் அவரின் எழுத்துநடையில் ஒரு ஈடுபாடு உள்ளது. வல்லினத்தில் ஏற்கனவே அவரின் சில சிறுகதைகளை வாசித்து அந்த எழுத்துபாணியினைக் கண்டு வியந்ததுண்டு.

‘வரலாற்றின் விந்து’ என்கிற மேற்கோலின் அடிப்படையில் வல்லின ஆசிரியர் ம.நவீன் எழுதிய முன்னுரை, நாவலுக்குள் என்னை விரைவாகத் தள்ளியது.

கதை, தீக்குச்சிகள் மேல்நோக்கி நிற்க அதன் கீழ்பகுதி தீப்பற்றி எரிவதைப்போன்ற காட்சியமைப்பை நம் கண்முன் நிழலாட வைத்து பிள்ளையார்சுழி போட்டுள்ளார் செல்வன் காசிலிங்கம். மலேசிய படைப்புலகத்தில் இவர் நிலைத்து நிற்கப்போகிற ஓர் படைப்பாளி என்பதற்கான அடையாளமாகவே இதை நான் காண்கிறேன்.

நாவலில், தமிழர்களின் மிக சமீபத்திய வரலாற்றுச்சுவடுகளை ஒரு டாக்குமெண்டரி தொகுப்புபோல் வாசகர்களுக்குப் படைத்துள்ளார். டாக்குமெண்டரி என்றால் உண்மையை மட்டுமே சொல்வது. சிங்கம், புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் காட்டில் வாழும் இதர சாதாரண உயிரினங்களை எப்படி வேட்டையாடி இரையாக்குவதைக் காட்சியாக்குவார்களோ, அதுபோலவே கதையினைச் சொல்லாமல், நடப்பதை அப்படியே நமக்குக் காட்டியிருக்கின்றார் செல்வன்.

இந்த வரலாற்று தடத்தில் நானும் இருந்துள்ளேன். கதாசிரியரின் கைகளைப் பற்றிக்கொண்டு அவர் செல்கிற இடம், காண்கிற காட்சி, நடக்கின்ற அவலம், அரசியல் தகிடதத்தோம் வேலைகள், கோவில் நிகழ்வுகள், திமிதி தேர்திருவிழாக்கள், எஸ்டேட் சூழல், புறம்போக்கு நில குடியிருப்புகளின் போராட்டங்கள் என எல்லாவற்றிலும் நான் அவருடன் ஒரு சக பயணியாக பவனி வருவதைப்போன்ற பிரம்மையிலேயே இக்கதையினை வாசித்துமுடித்தேன்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, எஸ்டேட் கம்பத்துச்சூழலில் வாழ்கிறபோது, பள்ளிக்கூடங்களுக்கு மைல் கணக்கில் நடக்கவேண்டும், வாகன பேருந்து வசதிகள் இல்லை, மின்சாரம் அட்டவணைப்படி பிச்சை, பிரிவினை அவலங்கள், குழாயடி சண்டைகள், தெருச்சண்டைகள், குண்டர்கும்பல் அராஜகம், காப்பிக்கடை வெட்டிப்பேச்சு என ஒருவித பய நெருடல் சூழலிலேயே வாழ்வு சுழன்று கொண்டிருந்தது. இதே சூழலில் வாழ்வு தொடருமாயின் நம்மால் ஒரு அடிகூட முன்னேற முடியாது என்கிற அச்சம் எப்போதும் இருக்கும். எஸ்டேட் வாழ்வு என்பது ஒரு சிறியவட்டத்தில் குண்டுசட்டி குதிரையோட்டும் வாழ்வுதானே. பால்மரம், வெளிக்காட்டுவேலை, காண்டாவாளி உளியுடன் உரம், பூச்சிக்கொள்ளி மருந்து மண்வெட்டி கத்தி கோடரி என அதற்குள்ளேயே நிற்க, கம்பத்துச்சூழல் என்பது புறம்போக்கு நிலத்தில் வீட்டைக்கட்டிக்கொண்டு சீனர்களிடம் (பெரும்பாலும்) கூலிவேலை செய்து, நிலமும் சொந்தமில்லாமல் வீடும் சொந்தமில்லாமல் ஒன்றுமில்லா வாழ்வுதான்.

இதற்கு விடிவுகாலம் வராதா? நாமும் முன்னேற என்ன வழி? பட்டணத்தில் கூடுதல் வசதியுடன் அப்பா வீடு வாங்கமாட்டாரா? மின்சாரம், வீட்டுக்குள்ளேயே குழாய்நீர், நவீன பாடசாலை என நாமும் நவநாகரீக வாழ்வு வாழமாட்டோமா? என்று ஏங்கிய ஒன்றுமறியா பருவத்தின் வெளிப்பாட்டினை, கதாசிரியர் உடைத்து எறிகிறார். அம்மாதிரியான எண்ணம் கால ஓட்டத்திற்கு தேவையெனினும், அப்போதைய வாழ்வுச்சூழலின் யதார்த்தங்களையும் அங்குள்ள வெள்ளந்தி மக்களின் குணங்களையும், அதில் தென்பட்ட நிஜமான மனிதநேயம், அன்பு, பரிவு, நேசம் அக்கறை போன்றவற்றையும் மிக மிக அழகாக மண்மனம் கமழ அவரின் பாணியில் எழுதியுள்ளார். எழுதியுள்ளார் என்பதைவிட அச்சூழலின் அழகியலை மீள்பார்வை செய்யவைத்துள்ளார்.

அந்த அழகியலுக்கு ஊறு விளைவிக்கின்ற சதிவேலைகள் நடக்கின்றபோதுதான் அங்கிருந்த தமிழ்மக்கள் தங்களின் போராட்ட உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணற ஆரம்பித்திருக்கின்றனர். எல்லாம் விதிப்படி அந்த மாரியம்மா கருணையில் நடப்பவை நடந்தே தீரும் என்கிற போக்கில் காண்டாவாளியோடு கும்பிடு போட்டுவிட்டு கடமையில் கண்ணாய் இருந்தவர்களின் வாழ்வில், அரசியல் பார்வை எப்படி நுழைந்தது, அது எந்தெந்த வடிவில் விஸ்வரூபம் எடுத்தது என தெளிவாக விவரிக்கும் நாவல் இது. நம் இனத்து வழக்கறிஞர்களின் பின் 2007 நவம்பர் 25யில் சுமார் இரண்டுலட்சம் தமிழர்கள் எப்படி வீதிக்கு தைரியமாக திரண்டு வந்தார்கள், எங்கிருந்து வந்தது இந்த தைரியம், என்கிற எல்லா முடிச்சுகளுக்கு நாமே விடையினை கண்டுகொள்கிற நிலைக்கு நாவலை மிக நுட்பமாக நகர்த்தியுள்ளார் செல்வன் காசிலிங்கம்.

கதையில் யாரைப்பற்றியும் ஆராயாமல், குற்றம் சுமத்தாமல், அரசாங்கத்தை அசிங்கப்படுத்தாமல், கதைச்சொல்லி, அன்றைய நடப்புச்சூழலை அதன்போக்கியேலே நம்மிடம் அப்படியே எழுதிக் காட்டியிருக்கின்றார். வாகர்களான நாம் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் சூட்சமங்களை புரிந்துகொண்டு உள்ளிருக்கின்ற அரசியலை உள்வாங்கி அதன் அவலங்களை அறிந்துகொள்ள வழிவகுத்துக்கொடுத்திருக்கின்றார். கலை வெளிபாட்டில் சொல்லாமல் சொல்கிற உத்தி என்பது இதுதான். இதுவே கைதேர்ந்த எழுத்தளர்களின் பாணியும் கூட.

அன்றைய காலகட்டத்தில் பால்மரத் தோட்டச் சூழல் என்று உழன்றபோதும், இன்றைய நவீன சூழலை நோக்கி நகர்ந்திருக்கிற வேளையிலும், தமிழர்களின் தற்போதைய நிலையில்  மாற்றங்கள் ஏதும் பெரிய அளவில் நிகழாமல் இருப்பதை அவ்வப்போது வாழ்ந்த மக்களையே சாட்சியாக நாவலில் வைத்துள்ளார்.

சிறைச்சாலையில் நிகழ்ந்த மர்ம மரணங்களை கதையில் நுழைத்திருக்கின்றார். கைதி ஒருவரின் மரணம் குறித்த விளக்கத்தை ஒரு பிரேதப்பரிசோதனை மருத்துவராக மாறி நமக்கு விளக்கமளித்திருக்கிற இடங்களை வியப்புடன் வாசித்தேன். ஒரு கதைக்களத்தை நம்பகத்தன்மையாக்க அப்படைப்பாளிக்கு இருக்க வேண்டிய உழைப்பை கண்டு வியந்தேன்.

உள்ளூர் அரசியல் நாடகக்கூத்துகளை கதையில் நுழைத்திருக்கின்ற இடங்களில் செல்வன் காசிலிங்கம் தொடர்ச்சியாக சமூக மாற்றங்களை,  அரசியல் போக்குகளை கவனிக்கிறார் என்பதும் அதன் மேல் அவருக்கு விமர்சனம் இருப்பதும் அந்த விமர்சனத்தைப் பிரச்சாரமாகவோ செய்தியாகவோ புலம்பலாகவோ மாற்றாமல் கலையாக மாற்றியுள்ளார் என்பதில் திருப்தி.

கோவில் திருவிழா, தீமிதிக்கு தயாராகும் காட்சி, தேர் செல்கிற இடங்களுக்கு எல்லாம் இரவு முழுக்க ஊர்சுற்றித்திரிவது, வழிநெடுக மக்கள் கொடுக்கிற நொறுக்குத்தீனிகளை வயிறுமுட்ட சாப்பிடுவது, திரை கட்டி திடலில் சினிமா படம் போடுவது, தேருடன் நடக்கமுடியாத பெரிசுகள் வேகமாக முந்திக்கொண்டு படம் பார்க்க பாய்களைப்போட்டு திடலில் இடம் பிடிப்பது, ஆதிபராசக்தி படத்தின் போது பலருக்கு அருள்வந்தது ஆடுவது, ஆற்றோரத்தில் கரகம் பாலிப்பது, ஆற்றுநீரில் குளித்து நீர்சொட்ட பெண்கள் பலர் பால்குடம் ஏந்தி நடப்பது, காதல் கண்சிமிட்டல்கள், காம சில்மிஷங்கள்  என பல பழய நினைவுகளை இக்கதை அசைபோட வைத்து வாசிப்புக்கு அணுக்கமாக்கியது.

செல்வன் காசிலிங்கத்தின் எழுத்துப்பணி தொடர வேண்டும்.

1 comment for “ஒரு நிகழ்ச்சியும் ஒரு நாவலும்

  1. Sunthari Mahalingam
    May 12, 2019 at 11:59 pm

    Vaalthukkal

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...