ரொட்டி கோசம்

indexசரியாக எட்டுக்கு அலாரம் வைத்து எட்டரைக்கு விழிப்பதுதான் ஷாகுலின் வழக்கம். சில சமயங்களில் எட்டு நாற்பதுக்குப் போகும். அன்றைய தினம் தோற்றுப்போன அந்த பத்து நிமிடத்தை ஜெயிக்கவே முடிந்ததில்லை. அவனின் வேலை அப்படி. கீழே 24 மணி நேரமும் இயங்கும் சாப்பாட்டுக்கடை; மேலே படுக்கை. தினசரி வேலை. வருடம் முழுவதும் அதுதான் வாடிக்கை. ஒன்பது மணிக்கு முதலாளி கல்லாவில் இருப்பார். படிகளில் இறங்கி இடதுபுறம் திரும்பி முதலாளியைக் கடந்துதான் கிச்சனில் நுழைய முடியும். பத்து நிமிட தாமதம் என்றால் நாள் முழுதும் அதைக்குறித்து சின்ன பிரசங்கம் செய்யாமல் விடமாட்டார்.

எட்டரைக்கு எழுந்து ஒன்பது மணிக்கு இறங்குவது வரை எல்லா நிமிடங்களுக்கும் ஒரு கணக்கு இருந்தது. இத்தனை வருடங்களில் உருவாகி வந்த உடலியல் கணக்கு. அது பொய்த்ததே இல்லை. என்றாவது ஒருநாள் ஒரே ஒரு பியர் உபரியாக குடிக்கும் அன்றுதான் நேரப் பிசகு வந்துவிடும். கழிவறையில் அமர்ந்தபடியே பல்துலக்கி எல்லாம் முடிந்து வெளிவர பத்து நிமிடம், சேவிங் இரண்டு, குளிக்க ஐந்து, துவட்டி உடையணிந்து எண்ணெயிட்டு தலைவார மூன்று, படுக்கையை மடித்துப்போட்டு திருத்தம் செய்ய மூன்று, வீட்டில் மனைவி அன்றைய நாளில் பேசவேண்டிய விஷயங்கள் பேச ஐந்து நிமிடம், கடைசி இரண்டு நிமிடங்களில் வேலையில் இறங்க வேண்டும். இதில் எதாவது ஒரு விஷயத்தில் பிழை நேர்ந்தாலும் தாமதம் உண்டாகிவிடும். பெரும்பாலும் தாமதிப்பதில்லை. மிகச் சில நாட்களில் மட்டும் உண்டாகும் தாமதங்களின் போது முதலாளியின் பார்வைக்கு அர்த்தம் அவனுக்குத் தெரியும்.

“பண்டாரிய உட்டுட்டு பாத்தா இந்தக் கடைக்கு நீதான் சீனியர். நீயே லேட்டா வந்தா புதுப் பசங்க எப்படி வருவாங்க. உன்ன பாத்து அவன் அவன் பத்து நிமிசம் லேட்டா வந்தா கட எப்புடி ஓடும்? இங்க ஒவ்வொரு நிமிசமும், ஒவ்வொரு நொடியும் காசு பாத்தே ஆகணும். கடை வாடகை, சீபிஎப்பு, லெவி, சம்பளம், எல்லாம் தாண்டி நான் காச கண்ணுல பாக்கறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது. உனக்குல்லாம் எப்படி எக்ஸ்ரை தூக்கம் வருது?” இதையெல்லாம் அவர் வாயைத் திறந்து பேசமாட்டார். ஆனால் அவரின் பார்வைக்கு அதுதான் அர்த்தம். இத்தனை வருட அனுபவத்தில் முதலாளி பார்வையின் ஒவ்வொரு கோணமும் அவனுக்கு அத்துபடி. அதனால்தான் அவனை கல்லாவில் அவ்வப்போது நிற்க வைத்திருப்பார். வேறெவரும் கைவைக்க அனுமதியில்லை.

நகரத்தின் மையப் பகுதியில் அந்தச் சாப்பாட்டுக்கடை இயங்கி வந்தது. 24 மணி நேரமும் ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். இக்கடையில் வேலைக்கு இறங்கிய இந்தப் பதினான்கு வருடங்களில் மூன்று முறை விடுமுறை எடுத்திருக்கிறான். எல்லாமே உயர் எண் காய்ச்சல்கள். ஒரு வெள்ளி பனடால்களால் முறிக்க முடியாத காய்ச்சல் அவை. உடலை எவ்வித தொந்தரவும் செய்யாமல் விட்டால் இரண்டு நாளில் சரியாகக்கூடிய அச்சுகவீனங்களை மருந்துகளால் ஒருநாளில் குணமாக்கிவிடலாம் என்று நம்புபவராக முதலாளி இருந்தார். ஓய்வாக இருக்கும் சமயங்களில் தான் எப்போது கடைசியாக விடுப்பு எடுத்தோம் என்பதை யோசித்துப் பார்ப்பான். மிகச் சரியாக நாளும் கிழமையும் நினைவுக்கு வந்துவிடும். தனித்திருப்பதன் கொடூர தினங்கள் அவை.

அவனின் அறை மிக விசாலமானது. இரண்டு வரிசை கட்டில்கள் கொண்டது. ஒவ்வொரு கட்டிலும் இரண்டு அடுக்கு கொண்டவை. மேலே ஒருவர், கீழே ஒருவர். பத்து பேர் பகல் ஷிப்டிலும் பத்து பேர் இரவு ஷிப்டிலும் இருந்தனர். கீழ்தள கட்டில்கள்தான் வசதியானவை. ஒருவருக்கு கீழ்தள கட்டில் கிடைக்க ஐந்தாறு வருடங்கள் கூட ஆகலாம். பக்கவாட்டில் நைலான் கயிற்றால் இணைத்து அதன் மேலே துண்டு, லுங்கி, உள்ளாடை காய வைக்கலாம். அவை திரைச்சீலை போல செயல்படுவதால் தனித்திருப்பதுபோல தோற்றமளிக்கும். ஒரு குகைக்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தரும். பேசுவது வெளியில் கேக்காது. இரவில் எவ்வளவு நேரமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம். படம் பார்க்கலாம், வெளிச்சத்தினால் தொந்தரவு இருக்காது. அந்த அறையில் எப்போதும் பத்து பேர் உறங்கிக்கொண்டிருப்பார்கள். எல்லா செய்கைகளிலும் ஒரு பூனைத்தன்மை குடியேறிவிடும். எப்பொருளையும் சத்தமில்லாமல் எடுத்து வைத்து வெளியேறப் பழக்கப்பட்டிருந்தனர். அந்த மேல்தளத்தின் எல்லா சன்னல்களும் எல்லா நாட்களிலும் திறந்தபடியே இருந்தன. காலை முன்புறமும் மாலை பின்புறமும் வெயில் தாராளமாக உள்ளே நுழைவதால் புழக்கத்திற்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு கட்டிலுக்கும் ஒரு டேபிள் பேன் அல்லது இரும்பச் சட்டத்தில் பொருத்தும்படி ஒரு சிறிய கிளிப் உள்ள பேன். எந்த நேரமும் பத்து டேபிள் பேன் ஓடிக்கொண்டிருப்பதால் எதோ ஆலைக்குள் இருப்பதைப் போன்ற உணர்வை புதிதாக வருபவர்களுக்குத் தரும். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்குப் போகும்போது இவ்வித சப்தங்கள் ஏதும் இல்லாமல் உறங்கச்செல்வது திகைப்பைத் தரும். அச்சமயங்களில் தலைமாட்டில் ஒரு டேபிள் பேனை வைத்து ஓடவிட்டுவிடுவான்.

உலகம் புரிய ஆரம்பித்த வயதிலேயே வெளிநாடு வந்தவன் ஷாகுல். 20 வயதில் கல்யாணம், 21 வயதில் புரூணை. அப்பாவோடு ஒரே சாப்பாட்டுக்கடையில் ஏழு வருட வேலை. ஆர்டர் எடுத்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு உயிர் பிரிந்தது. வழக்கம்போலவேதான் அன்றைக்கும் வேலைக்கு வந்தார். அன்று மறையப் போவதான எந்த அறிகுறியுமே அவரிடம் இல்லை. தொங்கிக்கொண்டிருந்த கயிறு விடுபட்டதும் விழுவதுபோல நிலத்தில் சரிந்தார். உடலை ஒரு குலுக்கு குலுக்கினார். இடதுபுறம் வாய் இழுத்துக்கொண்டது. கடையில் எல்லோரும் சத்தமிட்டுக்கொண்டே ஓடிவர அவனும் ஓடி வந்து பார்த்தான். எல்லோருமாகச் சேர்ந்து பிரேதத்துடன் இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அதன்பிறகு புரூணை போகவில்லை. முதலாளி அழைத்துப் பார்த்தார். அதே கடையில் வேலை செய்யவோ, அந்த ஊரில் வேலை செய்யவோ அவனுக்கு மனம் ஒப்பவில்லை என்பதால் சிங்கப்பூர் வந்தது முதல் தற்போது இருப்பது வரை ஒரே கடை, ஒரே முதலாளி.

எல்லா தகப்பன்களையும் போலவே அவனுக்கும் இரண்டு லட்சியங்கள் இருந்தன. முதலாவது ஒரு சொந்த வீட்டைக் கட்டுவது. வீடென்றால் நாலு சுவர் எழுப்பி மேலே தளம் போட்டு நிறமடிக்கும் அட்டைப்பெட்டி வீடல்ல. அது ஒரு கனவு வீடு. இரண்டாவது லட்சியம் மகனை விமானியாக்கிப் பார்ப்பது. முதலாவது லட்சியத்தின் முப்பது சதம் பூர்த்தியடைந்திருந்தது. நாகப்பட்டினத்தில் இடம் வாங்கி மனைவி பேருக்கு ரெஜிஸ்தர்almadinah-restaurant1 செய்து. வீட்டு வேலைகளை ஆரம்பித்து வந்திருந்தான். போர் போட்டு மோட்டார் வைத்து நீரை கையில் பிடித்துப் பார்க்கவே கிட்டத்தட்ட 1 லட்சம் பறந்துவிட்டது. அவன் நினைத்ததுபோல ஒரு வீட்டைக் கட்டி முடித்துவிடுவதாக அவன் மனைவி சஹிதா அவனிடம் வாக்குக் கொடுத்திருந்தாள். வளரும் வீட்டின் உருவாக்கத்தில் சரிபாதி உழைப்பை அவள் தந்துகொண்டிருந்தாள். தினமும் காலை எழுந்து முந்தைய நாள் செய்த வேலைகள், ஆன செலவுகள், தேவைப்படும் பொருள்கள் குறித்த பேச்சுதான் பெரும்பாலும். கடைசியாக பையன் குறித்த பேச்சில் முடியும். இந்த வீடு கட்டும் வேலையால் அவன் படிப்பு எவ்விதத்திலும் பாழாகக்கூடாது என்பதில் இருவருமே கவனமாக இருந்தனர். தற்போது பதினோராம் வகுப்பு, பனிரெண்டு முடித்து வெளிவரும்போது வீடும், அது சார்ந்த கடன்களும் முடிந்திருக்கும். அப்போது அசுர கதியில் உழைத்து தேவைப்பட்டால் தனது முதல் லட்சியத்தை விற்று இரண்டாவது லட்சியத்தை நிறைவேற்றும் எண்ணம் அவன் மனதில் உண்டு.

இப்படியாகப்பட்ட நேரத்தில்தான் முதலாளி அழைத்து அவனிடம் சொன்னார்.

“ஏலா ஷாகுலு, கடைக்கு என்.இ.ஏ காரனுங்க பைன் அடிச்ச கணக்குலாம் எடுத்து பாத்தா, மாசம் ரெண்டு மூனாயிரம் வெள்ளி ஆகுது, பொகக்கூண்டு, ஸ்டோர் ரூமு, பரோட்டா அடிக்கற டேபிளு, ஆளுக்காரங்க சுத்தம், கரப்பான் பூச்சி, எலிங்க குறுக்க மறுக்க ஓடுறதுன்னு எதாச்சும் ஒரு மேட்டர்ல பெரிய அமவுண்ட எழுதிட்டு போயிடறான். பத்து பதினஞ்சி வருசமா மராமத்து பாக்கல, அங்கங்க சின்ன சின்னதா ரிப்பேர் பண்ணது மட்டுந்தான் செஞ்சது. முழுசா ஒரு ரினோவேஷன் பண்ணியாகணும்னு சொல்லிட்டானுங்க. கடைக்கு மொத்தமா பதினாலு நாள் பூட்டு போட்டு வேலை நடக்கப்போகுது. ஊருக்கு போயிட்டு வந்துடு. சரியா இருக்கும்” என்று சொன்னபடி பார்த்தார்.

அவன் மையமாக தலையாட்டினான்.

முதலில் விஷயம் மகிழ்ச்சியானதுதான். உடலுக்கு கொஞ்சம் ஓய்வு என்றாலும்கூட ஊரில் கட்டிக்கொண்டிருக்கும் வீடு குறித்த நினைவு எழுந்தது. முதல் தளம் போட்டதோடு சுவர்கள் பூசப்படாமல், உறுதித்தன்மைக்காகப் பக்கச்சுவர்களில் நீர் தெளித்துக்கொண்டிக்கிற நிலையில் இருந்தது. ஊர் போய் திரும்பி வரும் செலவில் நாற்பது மூட்டை சிமெண்ட் வாங்க முடியும். ஊர் செல்வது அத்தனை நல்ல யோசனை அல்ல. இங்கிருப்பதுதான் நல்லது என யோசித்தபடி முதலாளிக்கு பதில் அளித்தான்.

“இப்பதான் அத்தா போய்ட்டு வந்தேன். எட்டு மாசம்கூட முடியல. வீடு வேற போய்கிட்டு இருக்கு. இந்த நெலமைல போக முடியாது. இங்கயே இருந்துக்கறேத்தா என்றான்”

“மேலயும் சேத்துதான் வேலை. நீ மட்டும் வேணா தங்கிக்க. எல்லாரையும் ஊருக்கு போகச் சொல்லிட்டேன். நாளைக்கு பாஸ்போர்ட்டு எடுத்துட்டு வரேன். கைல வச்சிக்க,” என்றார்.

“சரித்தா,” என்று தலையாட்டிக்கொண்டான்.

ஒருபுறம் மகிழ்ச்சி கொப்புளித்துக்கொண்டு வந்தது. முழுதாக பதினான்கு நாட்கள் ஓய்வு. சம்பளமில்லா ஓய்வுதான் சங்கடப்படுத்தியது. அரை மாத சம்பளம் வீட்டின் வளர்ச்சியில் சிறிய தேக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் வாழ்வின் நீண்ட பயணத்தில் இந்தச் சிறிய ஓய்வு தேவைதான் என்று அவன் மனம் சொன்னது.

கடைக்குத் தாடி வைத்த ஒரு இஞ்சினியர் தினமும் வந்து வரைபடத்தோடு முதலாளியுடன் அமர்ந்து நீண்ட நேரம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

மெல்லியதாக மனதில் ஒரு மகிழ்ச்சி குடியேறியிருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு தனக்கு கிடைக்கப்போகும் நீண்ட விடுமுறையைப் பற்றியதான மகிழ்ச்சிதான் அது. இந்த பதினான்கு வருட வேலையில் மொத்தமாக பதினான்கு நாட்கள் விடுமுறைகூட எடுத்ததில்லை. வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் கடையின் புத்தாக்கம் குறித்த செய்திகளைச் சொல்லியபடி இருந்தனர்.

இந்த விடுமுறை நாட்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று மனதுக்குள் திட்டம் போட ஆரம்பித்தான். சிங்கப்பூரில் அவனுக்குத் தெரிந்த ஒரே இடம் கடையும் மேலறையும் மட்டுமே. அதிகபட்சம் முதலாளியோடு அவரது பொங்கோல் வீட்டுக்குப் போனதுதான். அதுவும் கூட காரில் சென்றது. உண்மையில் சினிமாவில் பார்த்த சிங்கப்பூரை அவன் இன்னமும் பார்க்கவில்லை. ஒரு இடம் விடாமல் பார்த்துவிட வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.

அவன் நினைத்தது போலவே அந்த நாளும் வந்தது. முதல் நாளிரவு வேலை பின்னி எடுத்தது. மொத்தமாக எல்லா சாமான்களையும் கழுவி ஒதுக்கி வைக்க வேண்டும். ஸ்டோர் ரூம், கிட்சன், டேபிள் சேர் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து முடியும்போது உடல் ஓய்வு கேட்டுக் கெஞ்சியது. எல்லாம் முடிந்து மேலே ஏறும்போது ஒரு மணி ஆகியிருந்தது. அதுவரையும் முதலாளி இருந்துவிட்டுதான் சென்றார். போகும்போது கையில் நூறு வெள்ளி கொடுத்து சாப்பாட்டுச் செலவுக்கு வச்சிக்க என்று சொன்னார். அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

இதுவரை வெளிக் கடைகளில் எங்குமே சாப்பிட்டதில்லை. யாராவது வாங்கி வந்து பார்சல் கொடுத்ததுண்டு. வேறு சாப்பாட்டுக் கடைகளில் அமர்ந்து சாப்பிட்டதில்லை நல்லதுதான். நினைத்த இடத்தில் நினைத்ததுபோல சாப்பிடலாம்.

மறுநாள் விடிந்து பொழுதாகி மாலைதான் கீழே இறங்கி வந்தான். கடையின் அடையாளம் மொத்தமும் மாறி இருந்தது. மூன்று புறத்தில் சாரம் கட்டி பச்சை நிற துவர்த்து துண்டு போலிருந்த துணிகளால் மூடியிருந்தனர். பொருள் எடுத்துச்செல்லவும் ஆட்கள் நுழையவும் சின்ன நுழைவாயில். எஞ்சினியரும் இன்னும் சில ஆட்களும் உள்ளே நின்று பேசிக்கொண்டிருந்தனர். சாப்பாடு, குழம்பு அடுக்கி வைக்கும் கூண்டு இருந்த மேடை உடைத்து கடையே விஸ்தீரணம் அடைந்திருந்தது. அரைநாளில் கடையின் மொத்த அடையாளமும் மாறியிருந்தது. அதற்கு மேல் பார்க்க மனமில்லாமல் வெளியேறினான். காலையில் இருந்து சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. மெல்ல நடந்து ஜாலான் புசார் ரோட்டுப் பக்கம் நடையைக்கட்டினான். தான் வசித்த தெருக்கோடியே அவனுக்குப் புதிய இடத்தில் நடமாடுவது போன்று தோற்றமளித்தது.

பாதை அறியாத இடத்தில் தொலை தூரம் சென்று திரும்ப வேண்டும் என்ற ஆசை திடீரென உதயமாகியது. ஜாலான் புசார் முட்டும் இடத்திலிருந்து இடது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான். கால்கள் இரண்டும் ஓய்வைக் கெஞ்சும் வரை நடக்க வேண்டுமாய் தோன்றியது. நடந்துகொண்டே இருந்தான். கடைக்கூச்சல்களில் இருந்து பழகிய காதுகள் சட்டென அமைதியான சாலைகளைக் கண்டதும் திகைத்தன. ஏதேதோ பாதைகளில் நடந்து காலாங் ஆற்றை அடைந்திருந்தான். அங்கே சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நாகையில் சிறுவயதில் மீன் பிடித்தது நினைவுக்கு வந்தது. மிகுந்த ஆசையோடு மீன் பிடிக்கும் இடத்திற்கு நகர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். இரண்டு சீனர்கள் தினமும் மீன் பிடிக்கும் வழக்கமுள்ளவர்கள் போல இருந்தனர். ஒரு கையில் புகையும் சிகரெட் மறுகையில் பியர் பாட்டில். தூண்டிலில் மணி அசையும்போது மட்டும் பரபரப்பாக இருந்தனர். உலகில் தன்னைத்தவிர அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாகப்பட்டது. பிடித்த மீன்களை வெள்ளை பக்கெட்டில் விட்டிருந்தனர். மெல்ல எட்டிப்பார்த்தான். எல்லாமே கெலுத்தி மீன்கள். அளவில் பெரிதாக இருந்தன. ஆற்றில் கெலுத்திதான் அதிகம் கிடைக்கும். அங்கிருந்த ஒருவன் “உனக்கு வேணும்னா எடுத்துட்டுப்போ” என்றான். வேண்டாம் என மறுத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். திடீரென பியர் குடிக்கும் எண்ணம் வரவே ஓடிப்போய் இரண்டு டின்கள் வாங்கிவந்து குடித்தபடியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். முதல் டின் உள்ளே போனதும் இந்த உலகத்தின் மேலும், மக்களின் மேலும், மரங்களின் மேலும் எல்லா ஜீவராசிகளின் அன்பு சுரந்தது. இரண்டாவது டின் முடியும்போது மெல்ல சாய்ந்து உறங்கிவிட்டிருந்தான்.

அதிகாலை மூன்று மணி அளவில் பெய்த மழைதான் அவனை எழுப்பியது. சட்டென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது எப்படித் தூங்கினோம் என்றே தெரியாமல் தூங்கிவிட்டதை நினைத்து லேசாக குற்றவுணர்ச்சி கொண்டான். மேலே அண்ணாந்து பார்த்தான் வானத்தில் நட்சத்திரங்கள் மங்களாக தெரிந்தது. மெல்ல எழுந்து சென்று புளோக்குக்கு அடியில் நின்றுகொண்டான். மழை வேகம்பிடித்தது. வயிற்றுக்குள் பசி அமிலம் சுரக்கத்தொடங்கியபோதுதான் இரவு ஒன்றூமே சாப்பிடவில்லை என்று தோன்றியது. மஞ்சள் நிற நியான் விளக்கின் ஒளியில் தூறல் விழுந்தது தங்கத்துகள்கள் காற்றில் பறப்பதுபோல இருந்தது. அருகில் கடைகள் ஒன்றுமில்லை. தேக்காவாக இருந்தால் கடைகள் 24 மணி நேரமும் இருக்கும் பசிக்கு எதாவது தேட முடியும்.

எந்தப் பக்கம் சென்று வீடடைவது என்ற பெரும்குழப்பம் பசியைவிட பெரிதாய் இருந்தது. எல்லாத் திசையும் ஒரே மாதிரி இருந்தது. எத்திசையில் இருந்து தான் இங்கு வந்து அடைந்தான் என்று தெளிந்தபோதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆற்றுப்பாலத்திலிருந்து இறங்கி இடதுபுறம் வந்தான். அதன் எதிர்த்திசையில் சென்றுகொண்டே இருந்தால் ஜாலான் புசாரில் முட்டலாம். பிறகு அங்கிருந்து சுலபம் என எண்ணிக்கொண்டவனாய் நடந்து வந்து லாவண்டர் தெரு வந்ததும் மறுபடி குழம்பினான். தன் மீதே இப்போது எரிச்சலாக உணர்ந்தான். ஒரு சிறிய தொலைவு கூட தம்மால் ஏன் வழியைப் பின் தொடர்ந்துவிட இயலவில்லை என்று நொந்துகொண்டான். நார்த் பிரிட்ஜ் ரோடு வந்தபோதுதான் தான் தவறான பாதையில் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தான். சோர்ந்து போய் அமர்ந்தபோது நசீர் பாயின் நினைவு வந்தது. நசீர் பாய் இங்குதான் அருகில் எங்கோ வேலை செய்கிறார். ஊர்க்காரர். மலபார் பள்ளிக்கு அடுத்த சாப்பாட்டுக்கடை என்ற நினைவு. நேராக வந்து வலதுபுறம் திரும்பி நடந்துகொண்டே இருந்தான். பள்ளிவாசலுக்கு அடுத்த கடையே அதுதான். உள்ளே சென்று விசாரித்தபோது கிச்சனில் இருப்பதாகச் சொன்னார்கள். கிச்சன் பக்கம் எட்டிப்பார்த்தால் கோரெங் போட்டுக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து என்ன விஷயம் என்றார்.

சின்ன வயசுல இருந்த மாதிரியே இன்னும் எங்க போனாலும் வழிய மறந்துடுது ஒனக்கு என்றார் நசீர்.  நல்ல காரமான ஒரு நாசி கொரேங் சொல்லியிருந்தான். அவன் கவனமெல்லாம் செக்கச்சிவந்த நாசியின் மேல் இருந்தது.

ரொம்ப குழம்பாத ஷா. நூல் பிடிச்சமாதிரி நேரா போ; எங்கயும் திரும்பாத. ஒரே ரோடுதான். முஸ்தபா வர வரக்கும் நட. அப்புறம் வழி உனக்கே தெரியும். தெரியுந்தான?

சிரித்துக்கொண்டே சொன்னார். “தெரியும் பாய்.” சொல்லிக் கிளம்பினான் ஷாகுல்.

இப்படி யாராவது எளிதாக வழி சொன்னால் எளிதில் வீடடையலாம். ஒரு குழப்பமும் இல்லை. அப்போது அவர் தனது கடைக்கு கீழே நின்றிருந்தார். கிட்டத்தட்ட அதிகாலை ஆகியிருந்தது. முதல்முறையாக பனிரெண்டு மணிநேரம் கடை அல்லாத ஓரிடத்தில் இருந்தது இதுதான் முதல் முறை. அதை எண்ணும்போது மனதில் திரும்பவும் சாகச உணர்வு மீண்டெழுந்தது.

படுக்கையில் சாய்ந்தபோது ஆறாகி இருந்தது. உறக்கம் வரவில்லை. எதோ ஒரு பொக்கிஷம்போல ஒன்று கைக்கு கிடைத்து அதைச் சரியாக உபயோகிக்காமல் இருக்கிறோமா என்று எண்ணினான். என்ன செய்யலாம்? ஊர் சுத்தலாம். எவ்வளவு சுற்ற முடியும்? கையில் காசு வேண்டுமல்லவா என்ற எண்ணம் வந்ததும் எல்லாம் அடங்கிப்போனது. ஏன் சுத்த வேண்டும் இங்கே வேறு எதாவது வேலை செய்யலாம். காலையில் முடிவு செய்துகொள்ளலாம் என்று நினைத்ததும் சிரிப்பு வந்தது. இதுவே காலைதானே. இவ்விதம் தனியாக சிந்தித்து, தனியாக ஊர்சுற்றி, தனியாக சிரித்து எல்லாம் தனிமையிலே என்ன மயிர் வாழ்க்கை இது, சும்மா இருக்கும்போதுதானே எல்லா சிந்தனைகளும். தினக்கூலி வேலை செய்யும் சீனக்கிழவனிடம் விசாரித்து எங்காவது போகலாம். இந்த எண்ணம் மிகச்சரியானது என்று தோன்றியது.

சீனக் கிழவர் பேரெல்லாம் தெரியாது. நல்ல உடல்வாகு. வாயில் பற்கள் ஒன்றுகூட இல்லை. பாக்கெட்டில் பல்செட் வைத்திருப்பார். பேசும்போது எடுத்து அணிந்துகொள்வார். கடைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நம் கடையில் கோப்பிகோசம் குடிப்பவர். அவரிடம் கேட்டால் எதாவது வேலை சொல்வார். எட்டு மணியளவில் கம்போங் ரோட்டு பார்க்கிங் ஏரியாவில் குத்தவைத்து அமர்ந்திருப்பார். அந்த நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும். அவரைப்போலவே நிறைய வயதானவர்கள் அமர்ந்திருப்பார்கள். வேலைக்கு ஆள் எடுப்பவர்கள் வேலையைப் பொறுத்து லாரியில் ஏற்றிச் செல்வார்கள். இப்போது போனால் பார்க்கலாம் ஆனால் உடலுக்கு சிறிது ஓய்வு தேவை நாளை செல்லலாம் என்றெண்ணியபடி உறங்கிப்போனான்.

மாலை எழுந்ததும் மறுபடியும் காலாங் ஆற்றங்கரைக்கு போகலாமா என யோசித்து பின் முடிவை கைவிட்டான். ஒரு மாயச்சுழலுக்குள் புகுந்து மீண்டு வந்ததுபோல இத்தெருக்கள் அச்சமூட்டுகிறது. அடையாளங்களை நினைவில் வைக்காத பிழைதான். எப்படிப் பார்த்தாலும் வேறு எதோ தெருவுக்குள் நுழைந்து தொலைதூரம் சென்று விடுவது வாடிக்கையாகிவிட்டது.

மறுநாள் காலை சீனக் கிழவரைப் பார்த்ததும் வேலை எதாச்சும் இருக்கா என்றான். தன் சின்னஞ்சிறிய கண்களால் மேலும் கீழும் பார்த்து “கஷ்டம்தான் ஆனா பாக்கலாம். இங்க உக்காராத. தூரமா நில்லு, நான் சொல்லும்போது வா” என்றார் கிழவர். கொஞ்ச நேரத்தில் 14 பிட் லோரி ஒன்று வந்தது.

“2 கண்டெயினர் நிக்குது. பாயா லேபர்ல வேலை. ரெண்டாயிரம் மூட்டை மூவ் பண்ணனும். முடியுமா?” என்றார் கிழவர்.

“எத்தனை கிலோ?”

“25கிலோ மூட்டை. ஆளுங்க இருப்பாங்க, தள்ளுவண்டி இருக்கும். முடிஞ்சா செய். ஆனா சின்னாங்கான வேலையெல்லாம் என்னைபோல வயசானவங்களுக்குதான். நீ செய்யலாம். உனக்கு ஓகேவா?”

“எவ்வளவு தருவாங்க?”

“ஷேர்தான். கண்டெயினருக்கு 300 வெள்ளி. எத்தன பேர் போறிங்களோ ஷேர். சாப்பாடு உண்டு. முடியும்னா வண்டில ஏறு. நான் பேசிட்டேன்,” என்றார்.

லாரியின் பின்பக்கம் சாலையைப் பார்த்தவாறு அமர்ந்துகொண்டான். பூமி தன்னிலிருந்து பின்னோக்கிச்செல்வது போல இருந்தது. முதலில் வினோதமான அனுபவமாக இருந்து பின் ஒன்றுமில்லாமல் போக பக்கவாட்டில் பார்க்க ஆரம்பித்தான். கரம் சிகரெட்டை புகைத்தபடி இரண்டு இந்தோனேசியர்கள் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். புரூணையில் சில வருடம் வேலை செய்ததால் மலாய் பாஷை அத்துபடி. அவர்கள் தன்னைக்குறித்துதான் புகார் தொணியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து நம் தலையில் அதிக வேலையை சுமத்தி விடுவார்களோ என்ற அச்சத்திலிருந்தான்.

பாயா லேபாரில் ஒரு வேர்ஹவுஸ் பில்டிங். அரக்கு நிற கண்டெய்னர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றிருந்தன. வேலைகளைப் பிரித்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஒருவன் கண்டெயினருக்கு உள்ளேயும் ஒருவன் தள்ளுவண்டி தள்ளவும், வேர்ஹவுஸ் உள்ளே ஒருத்தன் அடுக்கி வைப்பதாகவும் பேசி ஷாகுலை மேல ஏற்றினர்.

முதல் வரிசை மூட்டைகளை எடுக்கும்போது எளிதாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகு உள்ளே செல்லச் செல்ல வெக்கை கூடி மொத்த உடலும் பூமிக்கடியில் உள்ளதுபோல வியர்த்தது. அளந்து பார்த்தால் ஒரு பக்கெட் அளவு தேறும் என்பதுபோல வியர்த்தது. இரும்பு கண்டெயினருக்கு மேலே அடித்த வெயில் அப்படியே உள்வாங்கப்பட்டு உள்ளே காந்தியது. இரண்டு பேரும் பேசி வைத்துததான் நம்மை மேலே ஏற்றியிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டான். புரிந்தபோது உடலின் மொத்த சக்தியும் நீராக வெளியேறியிருந்தது.

Hock_Lamஇரண்டு பேரும் வெளியே நின்று சிரித்துக்கொண்டிருந்தனர். தன்னிடம் சிரிக்கக்கூட தெம்பில்லாததுபோல உணர்ந்தான். நல்ல குளிர்ந்த நீரைக் கேட்டு தொண்டை கெஞ்சியது. முக்கால்வாசி கண்டெயினர் காலியானபோது சாப்பாடு வந்தது. நல்ல நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்தான். முடியவில்லை என்று இப்படியே போய்விடலாமா? காசு கொடுக்கமாட்டார்கள் என்பதைவிடச் சிரித்துவிடுவார்கள். சாப்பிட்டு செக்யூரிட்டி அறையோரம் இருந்த சிறிய மரத்தின் அடியில் காலை நீட்டி, சாய்ந்து படுத்துவிட்டான். கொஞ்ச நேரத்திலேயே வந்து எழுப்பினார்கள். இப்போதுதான் உடை சற்று உலர்ந்திருந்தது. மறுபடி உள்ளே சென்றால் மறுபடி நனையும். பின் சோர்வு விரக்தி எல்லாம் ஒன்றுசேர்ந்து ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என்று ஆத்திரமாக வந்தது.

இப்போ உள்ள போய் மூட்டைய அடுக்கு. ஆனா அடுத்த கண்டெயினர் உள்ள நீதான் போகணும் என்றதும் உடனே சம்மதித்தான். இவர்களுக்கு கொஞ்சம் கருணை உள்ளது. அவர்கள் வழக்கமாக கடின வேலைகள் செய்பவர்கள்போல் எந்த சுணக்கமும் இல்லாமல் மிகுந்த சுறுசுறுப்புடன் வேலை செய்தனர். உள்ளே மூட்டை அடுக்குவது கொஞ்சம் எளிதாக இருந்தது. கொஞ்சம் ஆசுவாசம். அம்மகிழ்ச்சி நீண்ட நேரம் இல்லை. இரண்டாவது கண்டெயினரின் லாக்கை உடைத்து கதவு திறந்ததும் திமுதிமுவென மூட்டை உள்ளிருந்து சரிந்தது. சட்டென விலகிவிட்டான். கொஞ்சம் பிந்தியிருந்தால் மேலே மூட்டை சரிந்திருக்கும். இதற்கும் அவர்கள் சிரித்தார்கள்.

ஒவ்வொரு மூட்டையையும் தூக்கி வெளியே தள்ளும்போதும் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் வலி தெரிந்தது. தனக்கு வயதாகிவிட்டதாக உணர்ந்தான். வயதானதை விடவும் கடின வேலை உடலுக்குப் புதியதாக இருந்ததால்தான் இத்தனை வேதனை. உடல் பழகி இருந்தால் இதென்ன பெரிய வேலை என்று நினைத்தாலும் இது கடின வேலைதான் என்பதுபோல அவர்களும் மிக அதிக அளவில் சோர்ந்திருந்தனர்.

நூறு வெள்ளித்தாள் ஒன்று கைக்கு வந்தபோது உடலின் வலி கொஞ்சம் குறைந்ததுபோல உணர்ந்தான். கூடவே ஒரு டின் பியரையும் சீனன் கொடுத்தான். கறுப்பு நிற கின்னஸ் பியர். இதுவரை அதை ருசித்ததே இல்லை. வாங்கி ஒரு பைக்குள் போட்டபடி லாரியின் பின்பக்கம் ஏறிக்கொண்டான். கம்போங் தெருவில் நுழைந்து டிரைவர் இறங்கி வந்து எழுப்பினான். அவ்வளவு அசதியில் தூக்கம் வந்திருந்தது. கைகால் எதையும் அசைக்க முடியாத அளவு வலி. அப்படியே யாராவது தூக்கிக்கொண்டுபோய் படுக்கையில் கிடத்தினால் தேவலாம் என்றிருந்தது. அசைவு இல்லாதபோதுதான் உடல் இறுக்கமடைந்ததுபோல இருந்தது. இரண்டு எட்டு எடுத்து வைத்தவுடன் தசைகள் இளகிக்கொடுத்தன. நாளைக் காலை எழும்போது இதைவிட பலமடங்கு வலிக்கும். உடல் உழைப்பு சார்ந்தவர்கள் ஏன் தினமும் மது எடுத்துக்கொள்கிறார்கள் என்பது ஓரளவு புரிந்தது.

ஒரு முழுநாளும் ஓய்வு எடுத்தபிறகுதான் உடலில் கொஞ்சம் தெளிவு பிறந்தது. வெளி வேலைக்குச் செல்லக்கூடாது என மனதுக்குள் உறுதிபூண்டான். வேறென்ன செய்யலாம்? இந்த நகரத்தில் மிக நெருக்கமான நட்பு வட்டத்தில் அவசியம் சந்தித்தே ஆகவேண்டிய நபர் யாராவது இருக்கிறார்களா என யோசித்தான். நிச்சயமாக தனித்திருக்க வாய்ப்பில்லை, யாரையாவது சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம். எவ்வளவு யோசித்தும் இந்நகரத்தில் அத்யந்த நண்பர் யாருமில்லை. அப்படியே இருந்தாலும் கூட அதிகபட்சம் ஒரு காபி குடித்து முடிக்கும் வரைதான் பேச முடியும். அதையும் தாண்டி யாருமே இல்லை என்ற முடிவுக்கு வந்தபோதுதான் ஶ்ரீதேவி நினைவுக்கு வந்தாள்.

ஶ்ரீதேவியைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கலாம். அதிகபட்சம் இரண்டு வருடம் இருக்கலாம். இந்த இரண்டு வருடத்தில் ஒருநாள்கூட அவளை நினைத்துப் பார்த்ததில்லை. திடீரென அவளுடைய நினைப்பு வருகிறதென்றால் நாம் நிச்சயம் அவளைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். எங்கே போய் தேடுவது. யாரிடம் கேட்பது. கடையில் எல்லோரும் ஶ்ரீதேவியை மூதேவி என்று அழைப்பர். நிரந்தரமாக அவளுக்கு ரொட்டி கோசம் என்றொரு பெயர் இருந்தது. லைனில் பலர் நின்றாலும் அவள் அமரும் டேபிளுக்கு அவனைத்தான் போகச் சொல்வார்கள். தொடர்ந்து அவனே அவளிடம் ஆர்டர் எடுக்க வேறு யாரையும் அவள் தேடுவதில்லை. வேறு யாருக்கும் அவள் ஆர்டர் கொடுப்பதுமில்லை. அவள் எப்போதுமே இரண்டு ரொட்டி கோசம் தவிர வேறு எதையும் ஆர்டர் செய்ததில்லை. ஆகவே அவள் தலை தெரிந்தாலே இரண்டு ரொட்டி கோசம் அவனே அடித்து பூப்போல அவளுக்கு கொடுத்துவிடுவான். மிக அபூர்வமாக என்றாவது நல்ல கஸ்டமர் அவளுக்கு கிடைத்தால் சீஸ் ரொட்டி ஆர்டர் செய்வாள். ஆனால் மிக அபூர்வம். எப்போதுமே ரொட்டி கோசம் என்பதால் அவளது நிரந்தரப் பெயராக ரகசியமாக இருந்தது.

வெள்ளையர் காலத்தில் இந்த தெருவானது சிவப்பு விளக்குப் பகுதியாக இருந்தது. இரு தெரு முழுக்க திருநங்கைகள் இருந்தனர். காலப்போக்கில் தெரு முழுக்க இருந்த தொழில் நலிவடைந்து ஒரே ஒரு வீடாக ஆனது. வாளிப்பாக எல்லோரும் இருந்ததால் தோற்றத்தில் அவலட்சணமான ஶ்ரீதேவியை விரும்பி யாரும் வருவதில்லை என்பதால் அவளுக்கு சம்பளமும் மிகக் குறைவாம். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாளோதான் அவளுக்கு வேலை கொடுத்தார்கள். முன்புறம் இவள் அமர்ந்தால் வாடிக்கையாளர் முகம் சுளித்து ஒதுங்கிவிடுவார் என்பதால் கடைசியாக கண்ணுக்கு எட்டாத தூரத்தில்தான் அவளுக்கு இடம் கிடைக்கும். முன்னவர்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து விடுவதால் கடைசிவரை யாரும் வருவதில்லை. அதனால் அவளுக்கு வரவு குறைவு ஆகவே செலவும் மிகக் குறைவுதான். அவள் இத்தொழிலுக்கு சீனியர் என்றுதான் சொல்லவேண்டும்.

பெண்மை துளிர்த்து முழுப்பெண்ணாக மாறும் பொழுதில் உடலில் பெண்மைக்கான சுழிவுகளும் திரட்சிகளும் வந்து சேர்ந்துவிடும். ஆனால் அவளுக்கு உடலில் பெண்மைத்தனம் கூடிவரவில்லை. பெண் வேடமிட்டவள் போன்ற உருவம்தான் எப்போதுமே. தினசரி ஷேவிங் செய்தாக வேண்டும் இல்லையென்றால் முள் முள்ளாக முடி முளைத்துத் தெரியும் அளவுக்கு முகத்தோற்றம். நல்ல முட்டைக்கண்கள். தடித்த உதடுகள் சிகரெட் பிடித்து கறுத்திருந்தன. நீளமான ஒல்லிக் கைகளில் ஆண்மைத்தனமாக ஓடிய நரம்புகள். கரகரப்பான குரல். தாட்டியான உடல்வாகு. ஒட்டிய மார்பகம். மயிர் முளைத்த கால்களில் நீளமான விரல்கள் என மற்றவர்களோடு ஒப்பிட அவலட்சணமாகவே கருதப்பட்டாள். எல்லோரும் நிரந்தரமாக ஒதுக்கி ஒதுக்கி யாரிடமும் எதையும் எதிர்பார்க்கக்கூடிய எண்ணமெல்லாம் அடியோடு மறைந்திருந்தது. ஏதோ உயிர்வாழ வேண்டுமே என்ற நினைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனுஷி.

ரொட்டி கோசம் ஒருவேளை இறந்திருப்பாளா என்று தோன்றியது. அதற்கு வாய்ப்பில்லை.lighter எப்படியாகிலும் செய்தி வராமல் போகாது. இங்குதான் எங்காவது இருக்கவேண்டும். சிரமமில்லை கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடித்து என்ன செய்வது? என்றொரு மாபெரும் குழப்பம். ஏன் அவளைத் தேடிச்சென்று பார்க்கக்கூடாது. மனதின் ஓரத்தில் அவளைக் குறித்த கரிசனம் எப்போதும் உண்டு. அவளைப்போல நிறைய பேர் கடைக்கு வருவதுண்டு, ஆனாலும் அவளிடம் யாரிடமும் இல்லாத நல்ல குணம் இருப்பதாக உள்மனம் சொன்னது. ஒருவேளை எல்லோரும் ஒதுக்கியதால் அவள் மேல் கருணை வந்ததா என்றால் அதுவுமில்லை. ஊருக்குப் போகாத பெருநாள்களின்போது அவளுக்காக பிரியாணி கொடுத்ததுண்டு. ஒரு தீபாவளிக்கு அவள் ஒரு சட்டையைப் பரிசளித்தாள். அதையும் யாரும் பார்க்காதவாறு மறைத்து வைத்துக்கொடுத்தாள். நிச்சயம் அவள் மேல் பிரியம் உண்டு. பிரியத்திற்குரியவரை சந்திப்பதில் பிழையென்ன இருக்கமுடியும். அவளைக் கண்டுபிடிக்க ஒரு யோசனை இருந்தது. ஷில்பாவிடம் கேட்டாள் சொல்வாள். ஷில்பாவும் ஶ்ரீதேவியைப்போலதான். ஆனால் இன்னும் சீனியர். வயது முதிர்ந்தவள். இப்போது தொழில் செய்வதில்லை. விசேஷங்களில் பெண்களுக்கு மேக்கப் செய்யும் வேலை செய்வதாகச் சொன்னது நினைவிருக்கிறது. அவ்வப்போது போனில் சாப்பாடு ஆர்டர் செய்வாள். அவளிடம் நிச்சயம் ஶ்ரீதேவி பற்றிய விவரம் இருக்கலாம்.

ஷில்பா முன்பு பார்த்ததை விடவும் நலிவடைந்திருந்தாள். முட்டிக்கு சற்று கீழ் வரை நீண்டிருக்கும் நைட்டி ஒன்று அணிந்திருந்தாள். மிகப்பழைய நைட்டியானது கிழியும் தறுவாய்க்கு முந்தையை நிலைமையில் இருந்தது. ஒருவிதமாக மக்கிப்போனதுபோல. முன்பெல்லாம் தழையத் தழைய இருப்பதுபோல முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்திருப்பாள். நீண்ட நாள் தொடராததால் முன்பிருந்த நிலைக்கு திரும்பியிருந்தது. புயல்காற்றிலும் அலையாத உறுதியான கம்பிகள் போல இருந்தன. நிறைய முடி உதிர்ந்திருந்ததால் மெலிதான வழுக்கை தெரிந்தது. நடு வகிட்டில் பொட்டு வைத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் ஆச்சரியம் உண்டானது அவளது முகத்தில். என்ன விஷயம் என்பதுபோல பார்த்தாள்.

“கடை புதுப்பிக்கும் வேலை நடக்குது அதான் சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்.”

ஒரு சேர் எடுத்துப்போட்டு அமரச்சொன்னாள். கொஞ்சம் தாழ்ந்த குரலில், “இங்க தண்ணி கலக்க முடியாது. கடைலதான் வாங்கிட்டு வரணும். வாங்கிட்டு வரட்டுமா” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம்,” என்று மறுத்துவிட்டு நலம் விசாரித்தான்.

சும்மாதான் பார்க்க வந்தேன் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. “என் வாழ்க்கையில் இதுவரை ஒரு ஆண் கூட சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்ததில்லை,” என்றாள். முன்பை விடவும் உடல் மெலிந்திருந்ததை சுட்டிக்காட்டி சுகர் வந்திருக்கிறதா உடம்ப துருவா செக்கப் பண்ணனும் என்றாள். கரிசனம் இருந்ததுபோலதான் இருந்தது.

சர்க்கரைநோய்க்கு இதுவரை செக்கப் செய்யவில்லை. இப்போதுதான் அதைக்குறித்த நினைவு வருகிறது. சுகர்ல்லாம் இல்ல. வேலை அதிகம். லைன்ல நிக்கற ஆளுங்கள முதலாளி குறைச்சிட்டார். கிச்சன்லயும் லைன்லயும் நின்னு ஒருமாதிரி ஆச்சு உடம்புக்கு.

பேச்சுவாக்கில் ரொட்டி கோசம் பற்றிய பேச்சை அவளாகவே இழுத்தபோதுதான் எங்கோ செக்யூரிட்டி வேலை செய்வதாகச் சொன்னாள். “என்ன திடீர்னு ரொட்டி கோசத்த தேடறிங்க பாய்?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. ரொம்ப நாளா பாக்கல, ஏன் வருசமே கூட இருக்கும். போனமுறை பெருநாள் ஊருக்குப் போனப்ப பாத்தது. இங்க திரும்பி வந்தப்புறம் செய்தியே இல்ல. நானும் கேட்டு சலிச்சிபோய் விட்டுட்டேன். நின்னா வேலை, படுத்தா தூக்கம்னு இருக்கற வாழ்க்கைல யாரத் தேடறது சொல்லுங்க. இப்ப கடை லீவ் இல்லியா. அதான் சும்மா பாக்கலாம்னு வந்தேன். ஊருக்குப் போனப்ப என் பையனுக்கு ஒரு பேனா வாங்கிக் குடுத்தாங்க. விலை கூடின சாமான். அதுலதான் பையன் பரீட்சை எழுதினான். நல்ல மார்க் வேற. நன்றி சொல்லலாம்னு தேடுனாகூட கிடைக்கல.” ரொட்டி கோசத்துடன் வாடிக்கையாளர் என்ற நிலையைத் தாண்டிய நட்பை ஓரளவு அவள் அறிவாள்.

ஏதோ யோசித்தவள் உள்ளே சென்று ஒரு டைரியை எடுத்து வந்து பக்கங்களைப் புரட்டினாள். இதான் அவள் வேலை செய்ற பில்டிங் அட்ரஸ். இன்னும் அங்கதான் செய்றாளா தெரியாது. நானும் அவளைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. போய்ப் பார்த்தா தெரியும் என்று எழுதிக்கொடுத்தாள். பேருந்து எண்ணும் கூடுதலாக எழுதிக்கொடுத்தாள்.

அவள் இறங்கச்சொன்ன இறக்கத்திற்கு இரண்டு இறக்கம் தள்ளி இறங்கியிருந்தான். பூதக்கண்ணாடியை குடையாக பிடித்துச் செல்வதைப்போல வெப்பம் உள்ளே புகுந்து அத்தனை நீரும் வியர்த்து வந்தது. உள்ளாடை முதல் மேல்சட்டை வரை நசநசத்தது. சரியான கட்டிடத்தைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தபோதுதான் கொஞ்சம் நிம்மதி. வெக்கையிலிருந்து திடீரென குளிரூட்டப்பட்ட கட்டிடத்தில் நுழைந்ததும் உடல் திகைத்து சிலிர்த்தது. உடலோடு ஒட்டிய சட்டையின் ஈரம் உடலில் பட்டதும் மூத்திரம் கழிக்க வேண்டும் போல இருந்தது. அது ஜுரோங்கில் மிகப்பெரிய ஷாப்பிங் மால். கடைகள் எல்லாம் அதீத வெளிச்சத்தோடு ஒரு அந்நியத்தன்மையாக உணர்ந்தான். எங்கு யாரிடம் விசாரிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நல்லவேளையாக இடதுபுறம் கழிவறை இருந்தது. பச்சை நிற சீருடை அணிந்த ஒருவர் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் விசாரிக்கலாம் என்றபோதுதான் அவளின் பெயர் மறந்துபோனது. நினைவில் ரொட்டி கோசம் மட்டுமே இருந்ததால் பெயர் எளிதில் நினைவுக்கு வரவில்லை. செக்யூரிட்டியை எங்கு பார்க்கலாம் என்று கேட்டபோது முதல் தளத்திலேயே இடதுபுறம் இருப்பதாக சொன்னார்.

அவள் அங்குதான் இருந்தாள். நம்பவே முடியாத ஆச்சரியத்துடன் எதிர்கொண்டாள். இந்தச் சந்திப்பு இயல்பாக நடந்த ஒன்று என்றுதான் அவள் நினைத்திருக்கக்கூடும். எங்க இவ்வளவு தூரம் என்றாள். உன்னைத்தான் தேடி வந்தேன் என்று சொல்வதில் எனக்கு எவ்வித கூச்சமும் இல்லை. ஒரு நீண்ட பயணத்தின் ஓய்வு நாட்களைப்போல எனக்குக் கிடைக்க இந்த ஓய்வை இப்படியாக நான் அமைத்துக்கொண்டதை எப்படி அவளுக்கு புரிய வைப்பேன் எனத்தெரியவில்லை. நேரடியாகவே உன்னைக்காண வந்தேன் என்றேன். உள்ளுக்குள் அவள் உடைந்து லேசாக கண்ணீர் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. இச்சூழலை மாற்ற வேண்டும். ஏன் என்பதுபோல முகக்குறி.

“ஒரு நன்றி சொல்லிட்டுப்போகலாம் என வந்தேன்” என்றேன்.

“எதுக்கு நன்றி?”

“பேனா…” என்றேன். அவள் கிட்டத்தட்ட அதை மறந்திருந்தாள்.

பிள்ளை நலத்தையும் மனைவியையும் விசாரித்தாள். சட்டென அவளுக்குள் சிறு உற்சாகம் தொற்றிக்கொண்டது, ஒருவிதமான பெருமிதமும் புன்னகையும் சேர்ந்து அவளை கொஞ்சம் அழகாக்கின. “ஒன்னற வருஷம் கழிச்சு இப்பதான் தோணுச்சா நன்றி சொல்ல? பொய் சொல்லாம உண்மைய சொல்லுங்க ஷா” என்றாள். அவள் எப்போதுமே என்னை ஷா என்று அழைப்பது அத்தருணம்வரை நினைவில் வந்திருக்கவில்லை. “உண்மைய சொல்லணும்னா இப்போ கடைல வேலை நடக்குது. ஒருவாரம் பத்துநாள் லீவ். ஊர் சுத்த தெரியல. தெரிஞ்சவன் ஊர்க்காரன் எல்லாருமே ஏதோ ஒரு வேலைல இருக்கறதுனால யாரை பாக்கறதுன்னு தெரியல. நமக்கு இந்த ஊர்ல பாக்க ஆள் யாருமே இல்லயான்னு யோசிக்கும்போதுதான் உன்னோட ஞாபகம் வந்தது. ஷில்பாகிட்ட கேட்டதும் சொன்னாங்க. அதான் பாக்கலாம்னு வந்தேன்.”

“எப்படி இருக்க தேவி?”

“என் பேர் ரொட்டி கோசம். அப்டிதான உங்க கடையில எனக்குப் பேரு.”

“உனக்கு மட்டுமில்ல, கடைக்கு ரெகுலரா வர்ற கஸ்டமர் நிறைய பேருக்கு அப்படி பட்டபேர் உண்டு. எங்களுக்குள் மட்டும் புழங்கும் பெயர் அது, சால்னா மண்ட, கொப்பறை, சிலுக்கு, ரேடியோ பெட்டி, விக்ஸ் டப்பா, கட்ட வண்டி, டாக்சி கருப்பன், மஞ்சப்பொடி, தெம்மாங்கு, இப்படி பல பேர் இருக்கு. ஆனா நான் என்னிக்குமே உன்னை ரொட்டி கோசம் சொன்னதில்ல.”

“தெரியும். என் வாழ்க்கை அப்படி ஆச்சு.” இப்பொழுதெல்லாம் ரொட்டி கோசம் சாப்பிடுவதை நிறுத்தியிருப்பதாகச் சொன்னாள். வேலை ஷிப்ட் மாற இன்னும் கொஞ்சம் நேரம் உள்ளது. முன்கூட்டியே செல்ல பர்மிஷன் வாங்குதாகவும் அவனை அங்கயே காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்றாள்.

சீருடை களைந்து மேலுக்கு மட்டும் வேறு சட்டை போட்டிருந்தாள். கையில் சிறிய பொதிப்பை.

“எங்கே போகலாம்?”

“உன் வீட்டுக்கே போலாமே” என்றேன்.
கொஞ்சம் யோசித்தவள் “சரி” என்றாள்.
அவளின் வீடு ஓரறை கொண்டதாக இருந்தது. பேச்சிலர் அறை போல அங்கங்கே துணிகள் சிதறிக்கிடந்தன. ஹால் முழுக்க அங்கங்கே மட்டமான சிகரெட் துண்டுகள் பாதி இழுத்து வீசப்பட்டிருந்தன. அந்த அறையிலிருந்து நீக்கவே முடியாதபடி புகையின் மணம் தங்கிவிட்டிருந்தது. சிலது பீடித்துண்டுகளாகவும் இருந்தன. மாதக்கடைசியில் இழுப்பாளாக இருக்கும்.

“இவ்வளவும் நீ குடிச்சிப்போட்டதா?” என சிகரெட் துண்டுகளைப் பார்த்தபடி கேட்டேன்.

“கொஞ்சம் நான் குடிச்சது. மீதியெல்லாம் இங்க ஒருத்தர் தங்கி இருந்தார். வயசான ஆள். வீடில்லாதவர். எப்பவாச்சும் வருவார் ரெண்டு மூணு நாள் தங்கிட்டு போயிடுவார்.”

“வீடு நீ வாங்கினதா?”

“நான் வீடு வாங்கறதா? எனக்கென்ன குடும்பம் இருக்கு வீடு வாங்க. படாதபாடுபட்டு, கால் தேய நடந்து  எம்.பி கைல கால்ல விழுந்து இந்த வீட்டை குறைந்த வாடகைக்கு எடுத்திருக்கேன்.”

பார்களில் இருப்பதுபோன்ற உயர இருக்கை கொண்ட ஒரே ஒரு சேர்தான் அவ்வீட்டில் இருந்தது. அதில் அமரச்சொல்லி, கொஞ்ச நேரத்தில் வீட்டை திருத்தம் செய்வதாகச் சொன்னாள். கண்களில் மன்னிப்பைக்கோரும் கெஞ்சல் இருந்தது. நான் பின்புறம் கையைக் கட்டியவாறு சமையலறை சென்று பார்வையிட ஆரம்பித்தேன். எலிகளின் இருப்பிடம் போல டப்பாக்கள் உருண்டு பொடிகள் ஆங்காங்கே சிந்தி, எண்ணெய்ப் பிசுக்குடன் இருந்தது.

“பெரும்பாலும் கடையில வாங்கிச் சாப்பிடுவேன். எப்போதுமே மேகி. கிச்சன் பக்கம் தண்ணி குடிக்கப்போறதோட சரி,” என்று சமாளித்தாள்.

“நீ எல்லாத்தையும் சுத்தம் செஞ்சி வை, கொஞ்ச நேரத்துல வரேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

ரொட்டி செய்ய மாவும் இன்னபிற பொருட்களும் கொஞ்சம் சிக்கனும் வாங்கி வந்திருந்தேன்.
வீடு ஓரளவுக்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அவள் குளித்து முடித்து வந்திருந்தாள். நாசியை சிரமப்படுத்தாத ஏதோ ஒரு வாசனை அறையை சூழ்ந்திருந்தது.

கையில் வைத்திருந்த பைகளைப் பார்த்ததும் “ரொட்டி செய்யப்போறிங்களா?” என்று கண்கள் விரியக் கேட்டாள். “உண்மைய சொல்லணும்னா நான் இப்போ ரொட்டி கோசம் சாப்பிடறதில்ல. பழைய வாழ்க்கை அடிக்கடி நினைவுக்கு வந்து தூக்கம் கெடும். சந்தியாக்காகூட கேட்டாங்க. லைசென்ஸ் வச்சிருக்க நீ சும்மாவாச்சும் வந்து உக்காரு, சம்பளம் தரேன்னு. முடியாதுன்னு வந்துட்டேன். போதும் அந்தப் பொழப்பு.”

நான் மாவைக்கொட்டி பிசைந்து பாவு போட ஆரம்பித்தேன். அவள் “ஒரு சிகரெட் பத்திக்கட்டுமா?” என அனுமதி கேட்டபடியே பற்ற வைத்துக்கொண்டாள். எனக்கும் ஒன்று தேவைப்பட்டது. உணர்ந்தவள்போல என் வாயில் ஒன்றை வைத்து நெருப்பு வைத்தாள். பாவு கொஞ்சம் ஊறி வந்தால் அடிக்க வசதியாக இருக்கும் என்று எண்ணியபடி அவள் எதிரே அமர்ந்து புகைக்க ஆரம்பித்தேன்.

“ராஜா செத்துட்டார் தெரியுமில்ல?” என்றேன்.

ராஜா என்பவர் பகலில் வெளியில் செல்ல முடியாதவர்களுக்காக வேண்டிய உதவிகளை செய்து அந்த வருமானத்தில் வாழ்பவர். அதிலொன்றும் வருமானம் இல்லை ஆனால் ஒன்றிரண்டு மிச்சம் வருவதுபோலவே கணக்கிட்டு காசு கொடுப்பர். இரவு முழுக்க விழித்திருக்க வேண்டியிருப்பதால் பகலில் தூங்கி மாலை ஒப்பனை செய்யவே நேரம் சரியாக இருப்பவர்களுக்கு ராஜாதான் எல்லாம். சுருங்கச்சொன்னால் எடுபிடி. மிக வயதானவர். நாம் ஒன்று சொன்னால் அவர் வாங்கி வருவது ஒன்றாக இருக்கும். பெரும்பாலும், சாப்பாடு, தண்ணி, சிகரெட், பாக்கு, காண்டம், நாலு நம்பர், டோட்டோ என எதைச்சொன்னாலும் வாங்கி வருபவர். அறிவிக்கப்படாத கமிஷன் ஒன்றுண்டு. மிகச்சொற்ப வருமானம் அனைத்தையும் பீராக வாங்கி குடித்துவிடுவார். எப்போதாவது சாப்பிடுவதுண்டு.

ஆச்சரியத்தை அதிகம் வெளிக்காட்டாமல் அதேசமயம் மெலிதாக முகம் வாடியது போன்றிருந்தது. மரணம் எல்லோருக்கும் வருவதுதான். தனக்கும் வரும். “இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம் இல்ல,” என்றாள்.

“சீக்கிரம் போனது ஒருவகையில நல்லதுதான். கடைசி கொஞ்ச நாள்ல அவரால சுத்தமா நடக்க முடியல, காலுக்கு இடையில இரும்பு குண்டு கட்டின மாதிரி விரைகள் ரெண்டும் வீங்கிடுச்சி. தண்ணிக்குள்ள அகலக்கால் வச்சு நடக்கற மாதிரி துழாவி துழாவி வருவார். கண்பார்வையும் மங்க ஆரம்பிச்சுடுச்சி. பிடிவாதமா எங்கயும் மருத்துவம் பார்க்காம இருந்தார். கொஞ்சநஞ்ச குடியா குடிச்சார் மனுசன். செத்த அன்னைக்கு ஒரு அரவமும் இல்லை. ஒரு வேன்ல தூக்கிப் போடும்போது அஞ்சாறு பேர் நின்னு பாத்தாங்க. அவ்வளவுதான். இந்த மாதிரி வாழ்க்கைய நெனச்சா அப்படி ஒரு வேகாளம் வருது.”

உருட்டி வைத்த மாவு உருண்டைகளை நான் விசிற ஆரம்பித்தேன். அவள் ஒரு குழந்தையைப்போல அருகில் வந்து ‘எனக்கும் கத்துகுடேன்’ என்பதுபோல நின்றாள். நினைத்த மாத்திரத்தில் விசிற முடியாது, லாவகமும், விசிறுகள் வீச்சும் தன்னிச்சையாக நீண்ட பயிற்சியின் முடிவில் கிடைப்பது. அவள் முயற்சித்து தோற்றுப்போய் கை அலம்பிக்கொண்டு வந்தாள்.

தரையிலேயே தட்டுகளைப் பரப்பி உண்டோம். “ரொட்டி கோசத்தை சந்தோஷமான நிலைல நான் இன்னிக்கு சாப்பிடப்போறேன்,” என்றாள். கொஞ்சம்போல அவள் மது வைத்திருந்தாள். ஆளுக்கு சரிபாதியாக சரித்து சாப்பிட்டு முடித்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வயிறு நிறைய சாப்பிட்டதாகச் சொன்னாள். எனக்கு விடுமுறையை கழித்துவிட்டதுபோன்ற எண்ணம் வந்திருந்தது.

நான் கிளம்புவதாகச் சொன்னேன்.

இங்கேயே தங்கி காலையில் போகலாம் என அவள் சொல்ல வாயெடுத்து பின் “ஏன் இவ்வளவு சீக்கிரம்” என்பதோடு முடித்துக்கொண்டாள்.

வாசலைத் தாண்டும்போது, ரொட்டி கோசம் சாப்பிட்டபின் பழைய வாழ்க்கை ஞாபகத்துக்கு வந்துவிட்டதாகச் சொன்னாள். அதை அவள் வருத்தமாகச் சொன்னாளா என நான் திரும்பி முகத்தைப் பார்க்கவில்லை.

1 comment for “ரொட்டி கோசம்

  1. மருதன் பசுபதி
    June 11, 2019 at 4:30 pm

    வழக்கம் போலவே சிங்கையின் இங்கு இடுக்குகளில் ஒட்டித் தவிக்கும் ஒட்டடை போன்ற வாழ்வை புனைவாக்கியிருக்கிறார் கதிர்.

    ஒரு பீர் டின்னை குடித்ததும் மனிதர் உட்பட அனைத்தின் மீதும் அன்பு பொங்கும் ஒட்டடைகள் இவர்கள்.

    அவர்களின் அன்புக்கான ஏக்கமே கதிரின் கதைகளாக விரிகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...