சிறகு

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று.

002குளிர்காற்று பரவி இருந்த அறையில் மல்லிகை மணத்துடன் ஒருவித திரவியத்தின் வாசமும் நிரம்பி இருந்தது. குமட்டியது. மல்லிகையை வெளியே வீசிவிட்டு வரலாமா என யோசித்தாள். உள்ளே நுழைந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இல்லாமல் கால் வழுவிழந்திருந்தது. யாராவது பார்த்துவிட்டால்? இந்த எண்ணம் ஏன் உள்ளே நுழையும்போது தோன்றவில்லை என நினைக்கும்போது வியப்பாக இருந்தது. அந்நியமான சூழலுக்குரியதாக மாறிய மலரைக் கழிவறையில் வீசி ப்ளஷ் இழுத்தாள். அதன் உறுமல் சத்தம்கூட அவளை மிரட்டுவதாகவே இருந்தது. சில இதழ்கள் நீரில் மிதந்தன. தண்ணீர் பீலியால் அடித்தபோது உள்ளே சென்று மீண்டும் வெளியே வந்தது. கழிவறைக்குழியில் மல்லிகையைப் பார்ப்பது சகிப்பதாய் இல்லை. விழிகளில் ஒளி மங்கி பதற்றம் மட்டுமே நிறைந்திருந்தது.

அவள் அணிந்திருந்த அந்த இளஞ்சிவப்புக் குடைவெட்டுப் பாவாடையும் கச்சிதமான கருப்பு மேல் சட்டையும் ஒரு நவீன அழகை அவளுக்கு தந்திருந்தது.  குளிரூட்டிப் பொருத்தப்பட்ட அறைக்குள் அவளது மூச்சுக் காற்று மட்டும் வெப்பமாகவே இருந்தது. காய்ந்து வரண்டு போவதாய் உணரும்போதெல்லாம் அவளது உதடுகளை எச்சிலால் ஈரப்படுத்திகொண்டாள். உதடுகளை வாயினுள் மடித்து மடித்து விரிக்கும்போது கொஞ்சம் அச்சம் குறைவதாக உணர்ந்தாள். யாரோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அனைத்தையும் நேர்த்தியாகச்  செய்தாள். அவளது நீண்ட விரல்கள் பாவாடையைக் கசக்கிப் பிழிந்துகொண்டே இருந்தது. பொறுமை இழந்தவள் போல சட்டென எழுந்து அறையின் கதவில் இருக்கும் கண்ணாடி துவாரம் வழியாகப் பார்த்தாள். யாரும் வரவில்லை. கதவுக்கு நேராக மேலே காமிரா இருந்தது. அது தன்னைப் படம் எடுத்திருக்குமா என நினைக்கும்போது கால்கள் நடுங்கின. கண்ணாடி வழி தெரியும் நடமாட்டமற்ற விடுதியின் வெளி, அச்சம் கொள்ள செய்தது.  பதற்றம் இன்னமும் அதிகரித்தது. இதயத் துடிப்பின் வேகம் காதுவரை கேட்டது. அறையில் எங்கேனும் காமிரா இருக்குமா என சுற்றும் முற்றும் பார்த்தாள்.  கைப்பேசியை எடுத்தாள்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இல்லைனா நான் கெளம்பி போயிடட்டுமா?” என்றவள் கைபேசியைக் கீழே வைத்து விட்டு மெத்தை மீது அமர்ந்தாள். குரலில் ஏன் உறுதியில்லை என நினைக்கும்போது கூச்சம் ஒட்டிக்கொண்டது.

இதே போலொரு அழகான சிவப்பு நிற குடைவெட்டுப் பாவாடையோடு மிகக் கட்சிதமான வெள்ள டீ சட்டையை அன்றும் அவள் அணிந்திருந்தாள். காலை முழுதும் போர்த்தியிருந்த அந்தப் பாவாடைக்குள் ஒளிந்திருந்த அவளது சின்ன பாதங்களின் வெள்ளி கொலுசு சத்தமிட்டு அவனுக்குக் காட்டிக்கொடுத்தது. இடப்பக்கமாக மாட்டியிருந்த கைப்பையின் வாரை அவளது இடது கரத்தால் இறுகப் பற்றியிருந்தாள். கருப்பு கைவளையல்கள் வெயில் பட்டு மின்னியது.  அவள் நடைக்குப் பாவாடையின் அசைவு நளினம் சேர்ப்பதாய் இருந்தது. அவள் பால் அதிகம் சேர்க்கப்பட்ட காப்பி நிறம்தான் என்றாலும் அது அவளுக்கு மிகப் பொருத்தமானது. லேசாக மின்னிக் கொண்டிருந்த வெள்ளை மூக்குத்தி இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் எடுப்பாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டாள்.

அவன் அவளை இரசித்துக் கொண்டே நெறுங்கி வந்தான். வெள்ளை நிற டீ சட்டை என்றுமில்லாத தனி அழகை அவனுக்குக் கொடுத்திருந்தது.  நடையில்  கம்பீரம் நிறைந்திருந்தது. அதை அவள் ரசித்தாள். இடைவெளி குறையக் குறைய அவளது விழிகள் அவனைப் பார்க்க வலுவற்றதாய் கீழே கவிழ்ந்து கொண்டன. அவள் எதிர்பார்க்காத ஒரு நொடியில் சட்டென முன் பாய்ந்து ஓரடி இடைவெளியில் செம்பருத்தி மலரை அவளிடம் நீட்டினான். அவள் ஒரு நொடி திகைப்புக் காட்டி பின் கண்ணத்தில் குழி விழும் சின்னப் புன்னகையுடன் தலைகுனிந்து கை நீட்டினாள். சில நிமிடங்களுக்கு முன் அந்தச் சிற்றுண்டி சாலையின் முன்புற தோட்டத்தில் இருந்த மலர் இப்போது இவளது கையில்.  ‘ஒரு ரோஜா கொடுத்திருக்கலாம்’ என்றது உள்மனம்.  கண்கள் இப்போது அந்தச் சிற்றுண்டியில் தோழிகள் யாரும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டன. “தேங்ஸ்” ஏதோ  ரகசியம் போல சொல்லிட்டு யாரும் பார்ப்பதற்கு முன்னால் மின்னலாய் விரைந்தாள்.

அந்தக் கல்லூரியில் 2 வாரத்துக்கு முன்பு புதிதாக மலர்ந்த காதல் ஜோடிகள் அவர்கள். அவன் அவளுடைய சீனியர். அவளை மட்டுமே  ரேகிங் செய்கிற அளவுக்கு நல்லவனாக இருந்தான். முக்கியமாக அவள் போடுகிற கொழுசை ரொம்பவே கேலி செய்தான். அவனை எங்குப் பார்த்தாலும் ஓடி மறைந்துகொள்வாள். அல்லது கொலுசைக் கழட்டி புத்தகப் பையில் வைத்துக்கொள்வாள். அவள் ஆண்களின் கண்களை அறிந்தவள்.  அவன் கண்ணில் காதலைத் தவிர வேறெதையும் பார்த்ததே இல்லை. தினம் காலையில் ஒரு முறை வகுப்பு முடிந்து புறப்படும்போது பார்ப்பதோடு சரி. பிறகு இரவு தூங்குவதற்கு முன் சில நிமிடம் கைபேசியில் பேசுவான்.

கைப்பேசியை மெத்தையில் படுத்தபடியே பார்த்தாள்.  நேரம் இரவு 9.00 ஆகியிருந்தது. மீண்டும் அந்தக் கதவின் கண்ணாடி துவாரத்தை நோட்டமிட்டாள். அவளுக்கு அப்போதிருந்த பொழுதுபோக்கு அதுதான். யாரோ இருவர் தூரத்திலிருந்து வருவது தெரிந்தது. கண்களைச் சுறுக்கிப் பார்த்தாள்; அப்போதும் தெளிவாகக் கண்களுக்குப் புலப்படவில்லை. ஆனால், வருபவர் தம்பதியர் போல தெரிந்தனர். சற்று நேரத்தில் அவர்களின்  உருவம் ஓரளவு தெளிவாகத் தெரிந்தது.  அவர்கள் சீன ஜோடிகள். இடபுறமாக வரும் அவனது இடுப்பில் அந்தப் பெண்ணின் இடது கை இறுக்கியிருந்தது. அந்தச் சீனப் பெண் கால் சட்டை அணிந்திருக்கவில்லையோ என கால்களையே உற்றுப்பார்த்தாள்.  அவளது உடலைவிடவும் சிறுத்திருந்த டீசட்டைக்குக் கீழே ஒரு தடித்தக் கருப்புக் கோடு லேசாக தெரிந்தது. ‘அதுவாகத்தான் இருக்கும்’ பதிலைச் சொல்லிக் கொண்டாள். அவ்விளைஞன் அவளது தோள்களைத் தன் கையால் அணைத்தபடி இருந்தான். ‘சே நானும் அவரோட இப்படி வந்துருக்கலாம்…? இப்படி தனியா வந்து காத்துருக்கிறது கொடுமை.’  அவர்கள் இப்போது இன்னும் பக்கத்தில் தெளிவாகத் தெரிந்தார்கள். சுற்றி மனிதர்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக எந்த அறிகுறியும் அப்போது அவர்களின் முகத்திலும் செயலிலும் இல்லை. அவன் அவளையும் அவள் இவனையும் பார்த்து ஏதோ சில்மிஷமாகப் பேசிக்கொண்டே முன்னோக்கி நடக்கிறார்கள். அவர்கள் கண்ணாடி துவாரத்தை நெருங்க நெருங்க  முழுமையாக தெரிந்த உருவம் இப்போது இடுப்பளவுதான் தெரிந்தது. அந்தச் சீனப் பெண்ணின் வனப்பான மார்பையே கூர்ந்து கவனித்தாள்.  மார்பு பள்ளத்தில் மின்னிக் கொண்டிருந்த ஊதா நிறக் கல் வைத்த பெண்டன் அவளது கவர்ச்சியை அதிகரித்தது. மினு மினுப்பான வெள்ளைத்தோளில் படிந்திருந்த ஊதா நிற பெண்டன் அவள் உடல் அசைவுக்கேற்ப எட்டிப்பார்த்துக் கொண்டே அசைந்துகொண்டிருந்தது. கண்களைச் சிறைபிடித்துக் கொண்ட அழகான உறுத்தல் அது. கதவு துவாரத்திற்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. நடந்து வந்தவர்களின் முகம் இப்பொழுது மிகத் தெளிவாக தெரிகிறது. அந்தச் சீனத்தியின் முகத்தில் பளிச்சென்று ஈர்த்தது அவளது ரத்த நிற உதடுதான். தூரத்தில் இருப்பவர்களும் அடையாளம் காணலாம் போல. கண்கள் தேடிப் பிடிக்கும் அளவுக்கு சிறுத்திருந்தது. அடர்ந்திருந்த கண் இமை போலி என சட்டென தெரிந்தது. சப்பை மூக்கு, அடர்த்தியான பௌடர், சட்டென அவள் முகம் ஒரு முகமூடிபோல தோற்றம் கொடுத்தது. அவை அனைத்தும் வயதை மறைப்பதற்கான முயற்சி என்பதை கொஞ்ச நேரத்தில் அறிந்துகொண்டாள். அவளிட,ம் அவனை விடவும் குறைந்தது 10 வயது முதுமை தெரிந்தது. இப்போது இவர்கள் கணவன் மனைவி இல்லாமலும் இருக்கலாமோ என்று சந்தேகம் வந்தது அவளுக்கு. சில்மிஷங்களுடன்  நடந்து வந்து பொழுதுபோக்கியவர்கள் இப்போது அவளது பக்கத்து அறைக்குள் நுழைந்தனர்.

சட்டென வழித்துணை இழந்தவள் போல காட்சி தொலைந்த வருத்தத்தில் மீண்டும்angel-reading-love மெத்தைக்கே சென்றாள். நெடு நேரமாகக் குனிந்தபடியே கதவு துவாரத்தில் பார்த்ததால் ஏற்பட்டிருந்த கழுத்து வலியைப் போக்க கைகளால் நீவிக்கொண்டாள். முன் புறமாக இருந்த நிலைக் கண்ணாடியில் தன் உடல் அங்கங்களைப் பார்த்தாள். அந்தச் சீனப் பெண்ணின் உடல் கவர்ச்சியைத் தன்னோடு ஒப்பிட்டுக் கொண்டாள். இடப் பக்கமாகவும், வலப்பக்கமாகவும் மீண்டும் மீண்டும் உடலைத் திருப்பிப் பார்த்தாள். கழுத்தை முழுதாய் மூடியிருந்த தனது டீ சட்டையைக் கீழே இழுத்து  விட்டாள். சங்கிலி கொஞ்சம் நீளமாக இருந்ததால் சரியாக அந்தப் பள்ளத்தில் பெண்டன் அமரவில்லை என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மீண்டும் சங்கிலியைக் கழுத்தின் பின்புறமாக இழுத்து விட்டாள். இப்பொழுது அந்தப் பளபளப்பான வெள்ளைக் கல் பெண்டன் கச்சிதமாய் அமர்ந்தது. சீனத்திக்கு ஊதா நிறக் கல் கொடுத்த எடுப்பை இந்த வெள்ளைக் கல் இவளுக்குக் கொடுக்கவில்லை என்றாலும், ஏதோ ஓரளவு திருப்தி அடைந்ததற்கான அடையாளம் அவள் முகத்தில் சிறு புன்னைகையாய் வெளிப்பட்டது.

அந்த வெள்ளைக்கல் சங்கிலி அவன் வாங்கிக்கொடுத்ததுதான். அப்போது அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் தவணை விடுமுறைக்குப் பின் ஒரு நாள் முன்னதாகவே அவள் கல்லூரிக்கு வந்துவிட்டாள். அன்றிரவு கல்லூரியில் நண்பர்கள் யாருமே இல்லை. தன் தோழிகளின் அரட்டைச் சத்தத்துடனும், சதா ஆள் நடமாட்டத்துடனேயே பார்த்துப் பழகிய அந்தக் கல்லூரி விடுதி அன்று பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அமைதியும் வெறுமையும். மழை வந்து ஓய்ந்து போனதற்குரிய அடையாளம் இருந்தது. அந்தத் தனிமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முதலில் டைரிதான் எழுதினாள். அதில் மனம் இலயிக்கவில்லை. அறைக் கதைவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள். பனிப் படர்ந்த குளிர் காற்று அவளை மெல்ல வருடிச் சென்றது. சதுர வடிவில் அமைந்த அந்தப் பெண்கள் விடுதியின் நடுப்பகுதியில் வந்து நின்று கொண்டு சுற்றிலும் பார்த்தாள். பார்வையை ஈர்க்கும்படியாக பூச்செடிகள் பராமரிக்கப்படவில்லை என்றாலும் அது காற்றில் அசைந்தது அழகாகத்தான் இருந்தது. கூரைகள் இல்லாத அந்த வெளியில் நின்று ஈரக்காற்றை உணர்ந்து கொண்டே அன்னாந்து பார்த்தாள். விண்மீன்கள் அழகாக சிரித்தன. அவளும் சிரித்தாள். அதுவரை விண்மீன்கள் அவளிடம் சிரித்ததே இல்லை. அவள் காதலில் இருப்பது தெரிந்திருக்கும் போல. குளிரில் உரோமங்கள் நிமிரத் தொடங்கி இருந்தன. அவள் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து சூடேற்றிக் கொண்டே, கழுத்து வலியில் தரையின் பக்கம் திருப்பும்போது வட்சாப் மெசெஜ். அவன்தான். கடவுச் சொல்லைத் தட்டக்கூட விரல்களில் நிதானமில்லை. வட்சாப்பையும் திறந்தபோது கொஞ்ச நேரம் குழம்பினாள். அவளுக்கு அது என்னவென்று தெரியவில்லை. கண்கள் நிதானமானபோது இழுத்த மூச்சு சில கனங்களுக்கு வெளியே வரவில்லை, இமைகளிலும் அசைவுகளில்லை.

வீண்மீன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உமிழ்ந்த உஷ்ணத்தின் உச்சத்தில் அவள் உடல் தகித்தது. இப்போது அவள் தன் முகத்தை சுழித்து, கண்களைச் சுருக்குகிறாள். முகத்தில் சுருக்கங்கள் ரேகைப்போல படர்ந்தது. தீப்பொறி தெரித்து விழுந்தது போலொரு அவஸ்தை. முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு கண்களை இருக்க மூடிக் கொண்டாள். போதுமான அவகாசத்திற்குப்  பிறகு கண்களை லேசாகத் திறந்து அந்தப் படத்தை அடுத்து அவன் அனுப்பிய தகவலைப் படித்தாள். “எனக்கு இதப் பார்க்கறப்போ நீதான் ஞாபகத்துக்கு வந்த. நான் இந்த நிமிஷத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன்.  ஐ லவ் யூ…”. மீண்டும் பார்த்தாள். எது ஆண் உடல்? எது பெண் உடல்? சுற்றி யாரும் இருக்கிறார்களா எனப்பார்த்தாள். மீண்டும் படத்தைப் பார்த்தபோது அவன் அழைப்பு. நிராகரித்தாள். அப்படி செய்தால் இன்னும் அதிக அழைப்பு வரும் என அறிவாள். அதை செய்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு முறை அழைப்பை நிராகரிக்கும்போதும் அப்படம் திரையில் தோன்றியது.

அதன் பிறகு  அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அவனது எண்ணை அழைப்புப் பட்டியலில் தடை செய்திருந்தாள். அவனை நேரெதிரே எங்காவது பார்த்தால் அவளது உடலில் ஒரு வித நடுக்கம் கலந்த பதற்றம் தொற்றிக்கொள்ளும். நேரெதிரான அவனது சந்திப்பைத்  தவிர்க்க கல்லூரியில் வேறு சில பாதைகள் இருந்தாலும் அதையெல்லாம் தேர்ந்தெடுக்கவில்லை.  அவன் அவளைப் பார்க்கவோ அவளிடம் பேசவோ முயற்சி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தாள். அன்று வேறொரு எண்ணிலிருந்து அவன் அழைத்திருந்தான். அவளுக்குச் சிந்திக்க இடைவெளி கொடுக்காமல் பேச நினைத்ததையெல்லாம் பேசி விட்டுதான் மூச்சையே விட்டான். அவள் மௌனமாகவே இருந்தாள். அவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே அந்த தொடர்பைத் துண்டித்தாள். அவள் அவனை வெறுக்க காரணமாக இருந்த அந்தப் படத்தை அப்போதும்கூட அவளது கைபேசியில் பத்திரமாகத்தான் இருந்தது. அவன் அழைப்பைத் துண்டித்தவள்  அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தாள். அதுவரையிலும் நூறு முறையாவது அப்படத்தைப் பார்த்திருப்பாள். இப்போதெல்லாம் பார்க்கும்போது அவள் முகத்தில் ஒரு வித புன்னகை தோன்றி மறைந்தது. பின்னர் இந்த வெள்ளைக்கல் சங்கிலியைப் பரிசளித்தபோது கோவமெல்லாம் வற்றிப்போனது.

புன்னகைத்தபடியே இப்போதும் அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துக்கொண்டாள். அதற்குத் தோதாக இருக்கும்படி அதன் எதிர் புறமாகவே  மெத்தையில் உட்கார்ந்து கொண்டாள். ‘என்ன இவர இன்னமும் காணோம்.’ எரிச்சலாக இருந்தது. மீண்டும் அழைத்தாள்.  “ஹலோ என்னா ஆச்சு… இன்னும் லேட் ஆகுமா? நான் வேணா வேற எங்கையாவது வரவா? ம் சரி வெய்ட் பன்றேன் வாங்க…” கொஞ்சம் எரிச்சலுடன் கைபேசியை மெத்தையில் தூக்கி எரிந்தவள் எதார்த்தமாக தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே எரிச்சல் படிந்த முகத்தை விரும்பாதவள் போல் அதை அப்போது அவசியப்படாத சின்ன சிரிப்பில் ஈடுகட்டிக் கொண்டாள். பக்கத்து அறையில் சில நிமிடங்களுக்கு முன் வரை கேட்டுக் கொண்டிருந்த பேச்சு சத்தம் நிசப்தமானது. ஒரு சத்தம் நிசப்தமாகும்போதும் நிசப்தம் சத்தமாகும்போது கவனம் அதன் வயப்படுவது இயல்புதான். இருந்து இல்லாமல் போன அந்தச் சத்ததின்பால் தனது சிந்தனையைப் படரவிடுகிறாள். “இப்போ பேச்சு சத்தமில்லை, அப்படியென்றால் இருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள். ஒரு வேளை தூங்கி இருப்பார்களோ. இல்லை இருக்க வாய்ப்பில்லை. தூங்கரதுன்னா ஏன் இங்க வரனும்.” இப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போது விசித்திரமான சத்தங்கள் கேட்கத்தொடங்கின. தெளிவாகக் கேட்காததால் சுவரோடு தன் காதுகளை ஒட்டி கேட்டாள். அது முத்தச் சத்தமாக இருக்கக் கூடுமென அனுமானிக்கும் முன்னமே இல்லையென முடிவானது. அது ஒரு வண்ணத்துப்பூச்சி இறக்கைகளின் அசைப்புச் சத்தம். அந்தச் சத்ததுக்குரிய காட்சிகளைக் கற்பனை செய்யும்போது முகத்தில் வெட்கம் இலையோடியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த அறையில் இருப்பவர்களுக்கு இதே போலொரு பிரதிச் சத்தம் இங்கிருந்து பரிமாரப்படுமோ, அவர்களும் இதுபோல சுவரோரம் நின்று கேட்கக் கூடுமோ என்று நினைத்தவள் தன் செயலெண்ணி வெட்கம் கொண்டாள். மீண்டும் மெத்தையில் அமர்ந்தாள். அவளது காதுகள் மட்டும் சத்தத்தின் மீது இன்னமும் கவனமாகவே இருந்தன.

கல்லூரிக்குப் பக்கத்தில் இருக்கும் அழகான பூங்காவிற்கு அன்று  இரண்டாவது முறையாகச் சென்றிருந்தனர். அவன் விரல்களின் இடுக்குகளில் அவளது விரல்கள் கோர்க்கப்பட்டிருந்தன. நடக்கும்போது இருவருக்குமிடையில் இடைவெளிகள் இல்லை. எனவே அவ்வபோது உடல்கள் இடித்தும் உரசியும் கொண்டன. அவளும் அவனும் கருப்பு நிற டீ சட்டையில் அழகான ஜோடிகளாகவே கடந்து செல்பவர்களின் பார்வையை உறுத்தினர்.  அன்று வெள்ளிக்கிழமை. வாரநாள் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. காலார நடப்பதற்கும் கால் வலித்தால் காலாட்டுவதற்கும் வசதியாக நடைபாதைகளும், கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இளம் தென்றல்  இதமாக வீசிக்கொண்டிருந்த அழகான மாலைப் பொழுது. சுற்றிலும் முறையாகப் பராமரிக்கப்பட்டிருந்த பூந்தோட்டம். நடுவில் ஓர் ஏரி. இவர்களைப் போல இன்னும் சில ஜோடிகள். அவர்களின் அந்தப் பொழுதோடு இணைந்திருந்தன. வெகு தூரம் நடந்ததில் சலிப்படைந்த அவன் “ஹேய் இப்படியே நடந்துக்கிட்டெ இருந்தா என்னாகுறது. வா… அங்க போய் உக்காரலாம்… என்று அவன் இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சின்னக் கூடாரத்தைக் காட்டினான். அது சட்டென யாரின் பார்வைக்கும் சிக்காதபடி மறைவாக இருந்தது.  அவன் அவள் பக்கத்தில் நெருக்கமாகவே உட்கார்ந்தான். இப்போது விரல் கோர்க்கப்பட்ட இருவரது கைகளும் அவளது மடிமேல்.  பிறகு அவளாகவே தொடங்கினாள். மடியிலிருந்த அவனது உள்ளங்கையில் தனது விரல்களால் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். “அன்று… அன்று… நீங்கள் அனுப்பின அந்த படம்… அது அதுல அந்த ஆணுக்கும் பொண்ணுக்கும் இறக்கை இருந்துச்சுல… அதோ அந்தப் பறவைகளைப் போல” வாக்கியத்தை முடிப்பதற்குள் ஏற்பட்ட மூச்சுத் திணறலை மறைக்க நிதானமாகவே சுவாசித்தாள். தூரத்து மரக்கிளையில் அமர்ந்திருந்த சில பறவைகளைக் காட்டினாள். உள்ளுக்குள் பேச்சைத் தொடர வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.

“ஆமா…”

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு  “ஏன் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறகு இருந்தது அந்தப் படத்துல. அது எப்படி சாத்தியம்? அது பறவைகளுக்கு மட்டும்தானே இருக்கும்?” இப்போது அவன் முகத்தைச் சில நொடிகள் பார்த்துவிட்டு மீண்டும் பறவைகளையே பார்க்கிறாள். அப்போது அவனது கண்கள் அவளது கழுத்துப் பகுதியின் மீது படிந்திருந்தது. அந்தப் பார்வையைத் தடுக்க மனமில்லாமல் அதை அனுமதிப்பதற்காகவே பறவைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றோடு கதை பேசிக்கொண்டிருந்த அவளது முடியப்படாத அலைபோன்ற கூந்தல் அவன் முகத்தை அவ்வப்போது வருடிக்கொண்டே இருந்தது. கூந்தலை விளக்காமல் இயல்பாகவே அவள் இருந்தாள். அவனும் கூந்தலின் வாசம் நுகர… அதை விளக்காமல் அப்படியே அனுபவித்துக் கொண்டிருந்தான்.

“யார் சொன்னா பறவைகளுக்கு மட்டும்தான் இறக்கை முளைக்கும்னு” என்றவன் அவளை அனைத்து முத்தமிட்டான். அவளுக்கு இறக்கைகள் முளைத்தது. அது பூமியை விட்டு அவளை ஆகாயத்துக்குக் கொண்டு சென்றது. விழிகள் அவனைப் பார்க்க வலுவற்றதாய் மாறியது. அப்போது மரக்கிளைகளில் பறவைகள் சில வந்தமர்ந்தன.

அந்த முதல் முத்தத்தை நினைத்துக் கொண்ட அவள் தன் உதடுகளை கண்ணாடியில் பார்த்தபடியே எச்சிலால் ஈரப்படுத்திக்கொண்டாள். அந்த முதல் முத்தம் தந்த சிறகுகள் ஒரு நாள் அவளை அவனோடு தங்கும் விடுதி வரை அழைத்துச் சென்றது. அன்று அவன்தான் அவளுக்காக காத்திருந்தான். அது அவளுக்கு இன்றைவிடவும் மிக அந்நியப்பட்ட சூழல். பயத்தைத் தந்தது.

“சோரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தவளிடம் சாக்லேட்டை நீட்டி சமாதானப் படுத்தினான். “இட்ஸ் ஓக்கே” சாக்லேட்டை அவன் கைகளிலிருந்து பொய்யான சிரிப்புடன் வாங்கினாள். அவள் வாங்கும்போதே அவள் கைகளைப் அவன் பற்றிக்கொண்டான். கல்லூரியில் பார்ப்பதுபோலவே நிதானமாக இருந்தான். அந்த அறையில் மெதுவாகப் பேச வேண்டும் என்பது முதல் எந்த வாசல்வழியாக வெளியேற வேண்டும் என்பதுவரை நிதானமாகச் சொன்னான். சாக்லேட்டுகள் கை நழுவி கீழே சிதறின. அதை கவனிக்காதது போலவே மெல்ல அவளை தன் உடலோடு அணைத்தும்கொண்டான். அவன் அணைப்பில் அவள் நெருடலுக்குறிய சந்தேகங்கள் அணைந்து போயின. பாரம் தொலைந்து  மீண்டும் சிறகுகள் முளைத்தன. எல்லாம் கொஞ்ச நேரம்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நெறுடல் அவளை உந்திக் கொண்டே வந்தது. முளைத்த சிறகுகளை முறித்துப்போட்டவள் “நீங்க இதுக்கு முன்னாடி இந்த மாதிரி இங்க வந்திருக்கீங்களா…” என்றாள்.

அவன் பேசும் முன்னமே “இல்ல நீங்க செய்யுறதெல்லாம் உங்களுக்கு ரொம்ப அனுபவமுள்ளதா காட்டுது. கொஞ்சம் கூட நடுக்கம் இல்ல. ஆன்லைன்ல இவ்வளவு  அழகா எனக்கு ரூம் புக் செஞ்சி வர சொல்லிட்டு பதற்றம் இல்லாம சாக்லேட்டெல்லாம்  தர முடியுமா?” அவன் பார்வையில் உடலின் மொத்த நடுக்கமும் தெரிந்தது. “ரூமுக்கு வந்தவுடனேயே என்கூட பேச கூட நேரம் ஒதுக்காம இவ்வளவு அழகா காரியம் சாதிச்சுக்க துடிக்கிறீங்க. ஏன் ஆம்பளைக்கு வெக்கம் இருக்காதா? இப்படி சட்டுனு டிரசை உருவி போடுறீங்க? இது உங்களுக்கு புதுசு இல்ல… யெஸ் ஒர் நோ?” குரலில் அழுத்தம் வந்திருந்தது. பார்வையில் வெப்பம் தெரித்தது.

அவனின் பதிலை எதிர்பார்க்காமலேயே அங்கிருந்து புறப்பட்டுப் போனாள். “ஓகே பாய்” என்ற இரண்டே சொற்களில் அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றாள். அவன் ஒன்றும் பேசாமல் இருந்தான். தன் நிர்வாணத்தை எதைக்கொண்டு மறைப்பது எனத்தெரியாமல் அவமானத்தில் குறுகி நின்றான்.

அன்று அவனை அப்படி செய்திருக்க வேண்டாமோ என இப்போது தோன்றியது. இப்போது பக்கத்து அறையில் ஏதோ பேச்சு சத்தம். அது அவ்வளவொன்றும் அவளை ஈர்க்கவில்லை என்பதால்  கைபேசியை எடுக்கிறாள்.  “ஹலோ… மணி 10.00 ஆச்சு. எப்ப வருவீங்க? இரிடேட் ஆகுது. நான் போறேன். சரி ஐந்து நிமிடம்தான்” கைபேசியைக் கீழே வைத்தவள் ஏதோ புலம்பிக்கொண்டே தன் உதட்டுச் சாயம் குறைந்திருப்பதை கவனித்தாள். கைப்பையிலிருந்த லிப் ஸ்டிக்கை எடுத்து பூசிக்கொண்டிருக்கிறாள்.  கதைவைத் தட்டும் சத்தம் கேட்கவே ஞாபகம் வந்ததுபோல் மீண்டும் கண்ணாடியின் முன் வந்து அதி வேகமாக தன் டீசட்டையைக் கொஞ்சம் கீழே இழுத்து பின் சங்கிலியையும் கழுத்தின் பின் புறமாக மீண்டும் இழுத்துவிட்டு கண்ணாடியைப் பார்த்தாள். எல்லாம் சரியான இடத்தில் கட்சிதமாக இருந்தது. பிறகு அவளது அழகான ஒற்றைக் குழி புன்னகையுடன் கதவைத் திறந்தாள்.

அவன் டை கட்டிய  சிவப்பு  சட்டையுடன் கம்பீரமாக, குவிந்த உதடுகளால் சீட்டி அடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். அவளை ஓரமாகப் பார்த்து கண்ணடித்தான். அவனை விடவும் இவன் கொஞ்சம் உயரம். எனவே, கொஞ்சமாய் அன்னாந்துதான் பார்த்தாள். அவனது சிவந்த மேனிக்கு சிவப்பு சட்டை மிக பொருத்தமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒருவனை வீட்டில் பார்த்து நிச்சயம் செய்ததில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பார்த்த உடனே பிடித்தும் போனது. அவள் தலைகுனிந்து தன் வெட்கத்தை அளந்துதான் வெளிக்காட்டினாள். அடக்கமாக அவனைப் பார்த்தாள்.  அவன் டையைக் கழற்றினான். காலையிலேருந்து ரொம்ப “வர்க்… செம்ம டையர்டா இருக்கு. நான் கொஞ்சம் ப்ரெஷ் ஆயிட்டு வரேன்” என்று குளியளறைக்குள் சென்றான். அவள் அமைதியாகவே தலையாட்டினாள். குளித்து முடித்து தலை துவட்டிக் கொண்டே வெளியே வந்தபோது அவனது  சுருண்ட முடி மண்டையோடு ஒட்டிய  சுருள் கம்பிகள் போல இருந்தன. அதிலிருந்து வழிந்த நீர் துளிகள்  கீழே சொட்டிக் கொண்டிருந்தன. அவனை உற்சாகப்படுத்த வேண்டும் என மார்புவரை துண்டைக் கட்டிக்கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்தவனின் பக்கத்தில் வந்து நின்றாள். அவளது இடுப்பளவில் அவனது பார்வை இருந்தது. அப்போது அவளுக்குக் கூச்சமாக இருந்தது.

மெத்தையில் நிதானமாக அமர்ந்தாள். “தனியாவே வந்துட்ட…குட்” என்றான். அது அவளுக்குப் பாராட்டு போலவே இல்லை.

“பயமே இல்லையா? ரொம்ப நிதானமா இருக்க. லிப்ஸ்டிக் இப்பதான் அடிச்சிருக்க. உன் வீட்டுல இருக்குற மாதிரி இருக்க…” மீண்டும் அவனது கேள்வி அவளுக்கு ஏதோ செய்தது.

“நீங்க இருக்கீங்கல்ல” என்றாள் தடுமாறி.

“ஒரு மணி நேரமா தனியாத்தான இருந்த.. அப்ப நான் இல்லையே…” என்றான். அவன் கண்கள் கூர்மையாகின.

“உங்கிட்ட ஒன்னு கேட்கனும்…” என்றான். அவள் தனது துண்டை இறுக்கக் கட்டிக்கொண்டாள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...