ரப்பியா கயிறு

003யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று.

வாளியில் தண்ணீர் மொண்டு ஒரு தடவை ஊற்றிவிட்டு, விளக்கமாறைக் கடைசியாய் இரண்டு தடவை தரையில் அடித்து நீரை வழித்து விட்டு செல்வி நிமிரவும், அவர்கள் வரவும் சரியாயிருந்தது. “சுடுகாட்டுக்குப் போனவங்க வந்துட்டாங்க”, தெண்டிற்குக் கீழ் அமர்ந்திருந்த சுப்பையாதான் சட்டென எழுந்து தகவல் சொன்னார். வாயைத் திறந்த வேகத்தில் அவரின் முன் பல்வரிசையில் அப்பியிருந்த அந்தக் கொக்கோ நிறக்கறை அப்பட்டமாய் தெரிந்தது. “வந்துட்டாங்களா!”, விளக்கமாறை இரும்பு கேட்டுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, வாசலில் குறுக்கே ஒரு இரும்பையும் டம்ளரில் உப்பையும் கொஞ்சம் திருநீறையும் கொண்டு வந்து வைத்தாள் செல்வி. அப்படி செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.

இறந்தவனின் படத்தை வேட்டியால் சுற்றியப்படி ரங்கன்தான் முன்னே நடந்து வந்தார். அழுது அழுது முகம் வீங்கியிருந்தது. கண்ணீரின் பிசுபிசுப்பும், வழிந்த வியர்வையும் அவரின் முகத்தை இன்னும் கருமையாய் காட்டின. துவண்டு போயிருந்தார். வேகமாய் சென்று தோளோடு அவரை அணைத்துக் கொண்டார் சுப்பையா. மீண்டும் சிணுங்கியவருக்குக்  கண்ணீர் வரவில்லை. “தின்னூற வச்சிக்கிட்டு உப்ப வாயில போட்டுகிட்டு இரும்பத் தாண்டி உள்ளே போங்கப்பா”, சுப்பையாதான் சடங்கின் செயல்முறையை உரக்கச் சொன்னார். குடம் தூக்கி சுடுகாடு வரை சென்று வந்த ஐந்து பேரும் தலையை ஆட்டிக் கொண்டனர். இரும்பைத் தாண்டினால் பேய் வராதாம். யாருடைய காலோ இடறி இரும்பு சத்தமிட்டு அடங்கியது. மேசையின் மீது படம் வைக்கப்பட்டுச் சாம்பிராணி காட்டப்பட்டது. எரிந்து கொண்டிருந்த விளக்கில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றிவிட்டுச் சுவற்றை உரசியப்படி அமர்ந்தார் ரங்கன்.

அந்த வியாழக்கிழமை மாலைதான் எல்லாம் ஆரம்பித்தது. இரவின் தொடக்கத்தோடு சாரல் மழையும் சேர்ந்து கொண்டதால் தெருவிளக்கின் ஒளிக்கூட மங்கலாய் இருந்தது.  மகனின் அறையின் கதவைத் தட்டிவிட்டு ரங்கனின் அருகில் வந்து அமர்ந்தாள் காமாட்சி. “என்னங்க”, அவளின் குரலில் சுரமில்லை. “என்னங்க” மீண்டும் அழைத்தாள். “என்ன” என்றதோடு ரங்கன் வேறெதுவும் கேட்கவில்லை. அவரின் கவனமெல்லாம்  தன் பிட்டத்தை அடுத்தவர் முகத்தில் தேய்க்கும் ‘ரெஸ்லிங்’ வீரரின் அடுத்தக்கட்ட நகர்விலேயே குத்தி இருந்தது. எதிராளி தள்ளிவிட்டால் அவரின் பின்மண்டை நேராக மூலையிலிருக்கும் கம்பியில் போய் அடிக்கலாம். இல்லை இவர் சுதாரித்து அவன் மாட்டினால் பிட்ட தரிசனம் உறுதி. பெருத்த சதை ரசிப்பதாய் இல்லை.

“நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க” காமாட்சி விடுவதாய் இல்லை. “என்ன சொல்லித் தொல” அவள் அழைத்ததில் எதிராளியின் தாக்குதலிலிருந்து அந்தப் பிட்டக்காரர் தப்பித்த லாவகத்தை அவர் கவனிக்காமல் விட்டுவிட்ட எரிச்சல் குரலில் தெரிந்தது. “உங்க மகன் மத்தியானத்திலிருந்து ரூம விட்டு வெளிய வரல. மொத கொஞ்சம் யாரு கூடயோ சண்ட போடற சத்தம் கேட்டிச்சு. அப்புறம் சத்தமே இல்லை. ரூம் சாவியும் அவன்கிட்டயே இருக்கு. மொத கேட்டப்ப தூங்கப் போறேனு சொன்னான். நீங்க கொஞ்சம் என்னானு பாருங்க”, காமாட்சி முடித்துவிட்டாள். “கோலேஜுல எதாவது பிரச்சனையா இருக்கும். நாளைக்குக் கேக்குறேன்”, எதிராளி அந்தப் பிட்டக்காரர் முகத்தில் குத்திவிட்டார். தரையோடு அவர் விழுந்தது ராமாயணம் தெரிந்தவருக்குத் தாடகையைத் தான் நினைவுப்படுத்தியிருக்கும். ரங்கன் அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்டார்.

“வந்து சாப்பிடுங்கப் பா”, செல்வி ரங்கனின் தோளைக் குலுக்கிச் சொன்னாள். “அம்மாcoral-raffia-bow-isolated-on-260nw-1345081700 சாப்பிட்டாங்களா?”, செல்வி இல்லை என்று தலையை ஆட்டிவிட்டுப் பின்கட்டிற்குப் போய்விட்டாள். பன்னிரெண்டு வயது பெண் வேறு என்னதான் செய்ய முடியும். எல்லாரும் மூலைக்கு மூலை அமர்ந்திருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அடுத்த வீட்டில் இறப்பாயிருந்தாலும் அங்கே வந்திருக்கும் பிள்ளைகளோடு சிரித்துச் சிரித்துக் கதையாவது பேசிக் கொண்டிருந்தவளுக்கு இந்தச் சூழல் மனதோடு ஒட்ட மறுத்தது. அவள் இன்னும் குழந்தை மனதோடுதான் இருக்கிறாள். ரங்கனுக்கு எழுந்திருக்க மனமில்லை. காமாட்சி யாருடனோ மகன் இறந்ததை மூக்கை உறிஞ்சியப்படி சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் அதில் ஆறுதல் தேடிக் கொண்டிருக்கலாம். கிறாள். மூத்தப் பிள்ளை இறந்துவிட்டப் பின்பு அவளுக்கு அந்த ஆறுதல் தேவையானதாக இருந்தது. இல்லையென்றால் அவள் பைத்தியமாகி விடக்கூடும்.

மறுநாள் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே  அவன் அறையை விட்டு இன்னும் வெளியே வராததை உச்சக்கட்டப் பரபரப்பில் காமாட்சி ரங்கனிடம் கூறி முடித்தாள். அவன் உள்ளிருந்தப்படியே அறைக்கதவை மூன்று முறை எட்டி உதைத்ததும், பலமுறைக் கத்தியதும் அவளின் பயத்தை இன்னும் கூட்டியிருந்தன. “என்னடா பண்ணுற?”, அவள் அதட்டிக் கேட்டும்  பதிலில்லை. “நான் செத்துற மாட்டேன்மா!”, என்று அவன் கத்தியதும் அவள் அதன்பின் அறைக் கதவின் பக்கம் போகவில்லை. அவன் நடமாட்டம் இருப்பதை மட்டும் அறையின் கீழ் இடுக்கின் வழியே கவனித்துக் கொண்டே இருந்தாள். அது குறையும் வேளையில் மீண்டும் அவனின் உச்சத்தொனி பதிலை எதிர்க்கொள்ள அவள் தயங்கவில்லை. ரங்கனுக்கு அவனின் செய்கை வியப்பை உண்டாக்கியது. “சாப்பிட கூட வெளிய வரலையா?”, தண்ணீர் பாட்டிலை மேசையின்மீது வைத்துக்கொண்டே கேட்டார். கை அடுத்து கைக்கடிகாரத்தைக் கழற்ற ஆரம்பித்தது. “இல்லங்க! கேட்டா கத்தறான். யாரு கூடயோ சண்டப் போடறான். எனக்குப் பயமா இருக்குங்க”, காமாட்சி இன்னும் பதற்றத்தில்தான் இருக்கிறாள். அறைக்கதவை ஓங்கித் தட்டி அவனை வெளியே வரச் சொன்னார். அழுகிறான் போல. இன்னும் வேகமாகத் தட்டி “இப்போ நீ வெளியே வர போறியா இல்லையா?”, என்று அதட்டியவரின் தோள் கதவை உடைக்க இருமுறை இடிக்கவும் அவன் திறக்கவும் சரியாயிருந்தது.

“கெளம்பறோம் அண்ண. நாளைக்கு அவருக்கு வேல. இப்போ கெளம்புனாதான் செரெம்பானுக்கு வெள்ளனே போய் சேர முடியும்”, ரங்கனுக்குப் பெரியப்பா மகள் சொல்லிவிட்டுப் போக வந்தாள். “ஹ்ம்ம் சரிம்மா. பாத்துப் போங்க”, ரங்கனால் வேறெதுவும் பேச முடியவில்லை. தோன்றவில்லை என்பதே சரியாயிருக்கும். பெரும்பாலும் இழவு வீட்டில் சொல்லிக்கொண்டு போக கூடாது என்பார்கள். ஆனால், நெருங்கிய உறவுகள் எப்பொழுதும் அந்தச் சம்பிரதாயத்தின் எதிர்திசையிலே நின்று பழித்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன.  வேட்டியைப் பிடித்து முகத்தில் அழுத்தித் தேய்த்துக் கொண்டார்.

மெல்ல எழுந்து அவன் அறைக்குள் நுழைந்தார். அவன் கவிழ்ந்து விட்டிருந்த புட்டாமாவு டப்பா கீழே விழுந்து கிடக்கிறது. அதிலிருந்து பறந்த வெள்ளைத் துகள்கள் இன்னும் திட்டுத் திட்டாய் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அந்த வெள்ளைப் பரப்பில் யாருடைய கால் அச்சோ பதிந்து இருக்கிறது. அது அவனுடையதாக இருக்கலாம். அல்லது யாராவது அறைக்குள் வந்து உளவு விசாரணை நடத்திவிட்டுப் போயிருக்கலாம். ரங்கன் தொண்டையைச் செருமிக் கொண்டார்.

“என்னதாண்டா உன் பெரச்சன?”, அவனை நாற்காலியில் அமர்த்தி விட்டுக் கேட்டார். அம்மா அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டார். செல்விக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை மட்டும் உணர்ந்திருந்தாள். கண்ணில் பயம் இருந்தது. தன் சடையின் நுனியைச் சுருட்டியவாறே சாப்பாட்டு மேசைக்கு அருகே சுவற்றில் சாய்ந்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். “சொல்லுடா! அப்பா கேக்குறாருல”,காமாட்சி அவனைப் பேச வைப்பதில் குறியாய் இருந்தாள். நிறைய அழுதிருப்பான் போல. கன்னம் இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறது. கண்களின் ஓரத்தில் இமை முடிகளில் கண்ணீர் துளிகள் சில ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. தலை கலைந்திருக்கிறது. சளி வருகிறது போலும். மூக்கை அழுத்தி புறங்கையால் தேய்த்துக் கொண்டு உறிஞ்சியும் கொண்டான். “எங்கயாவது பேசுறானானு பாரு”, ரங்கன் கோபமாகி விட்டார்.

அவனின் அந்தப் பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. காமாட்சி இன்னும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறாள். அவன் உண்மையிலேயே அப்படிதான் சொன்னானா?

“நான் ஒரு கே பா”, யாருக்கும் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. “அப்படின்னா?”, அப்பாவுக்கு ஏதோ விபரீதத்தை உணர்ந்தவர் போல் கேட்டார். “அது… அப்படின்னா… எனக்குப் பையன்களத்தான் புடிச்சிருக்குப் பா. எனக்குக் கெர்ல்ஸ புடிக்கல. பழக முடியுது ஆனா லவ் பண்ண முடியல. நான் ஒருத்தன லவ் பண்ணேன். அவன் என்ன வேணாம்னு சொல்லிட்டான்”, அவன் முடிக்கவில்லை மண்டையில் விழுந்தது ஒரு அடி. சுருண்டு போய் கீழே விழுந்தான். சோபாவின் முன் விளிம்பில் அமர்ந்திருந்தவன் அந்த அடியில் அப்படி விழுவது நியாயம்தான். “இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல. ஆம்பிளையாடா நீ? இல்ல ஒம்போதா மாறிட்டியா?”, இடையிடையே சில கெட்ட வார்த்தைகளும் பறந்தன. வயிற்றில் ஒரு மிதி மிதித்தவர், குனிந்து தலை முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கி முகத்திலேயே குத்தினார். செல்வியால் அழுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. காமாட்சியால் தடுக்க முடியவில்லை. “பிள்ளை வளர்த்திருக்கா பாரு. ஆம்பிள புள்ளைய பெத்துத் தாடினா, பொட்டையா பெத்துத் தந்திருக்கா. இவனுக்கு ஆம்பிள வேணுமால”, என்று அவளுக்கும் தொடையில் ஒரு உதை விழுந்தது.  செல்வி ஓடி வந்து காமாட்சியைக் கட்டிக் கொண்டாள்.

வீட்டில் அரவமில்லை. யாரும் யாருடனும் பேச முன்வரவில்லை. காமாட்சி அவனைச் சாப்பிட பலமுறை அழைத்தும் அவன் வராததினால் சமைத்த எல்லாவற்றையும் மேசை கூடைக் கீழே வைத்துவிட்டுப் படுக்கப் போய்விட்டாள். “பசிச்சா கண்டிப்பா வந்து சாப்பிடுவான். ஐஸ்பெட்டில வச்சுட்டா சில்லுனு ஆயிரும்”, தாயின் மனம் அதன் அசல்தன்மையிலிருந்து பிரளவே இல்லை. செல்வியும் போய்ப் படுத்துக்கொண்டாள். ரங்கன் ஏற்கனவே அறைக்குள்ளே போய்விட்டார். கீழே விழுந்தவனைச் சாப்பாட்டு மேசை நாற்காலியைத் தூக்கி அடிக்க வந்தவரை காமாட்சிதான் தடுத்து உள்ளே அனுப்பியிருந்தாள். அடுத்த வீட்டு விமலா இவர்களின் கூச்சலால் எட்டிப் பார்த்ததுதான் அவரின் அந்த உச்சக்கட்ட நடவடிக்கைக்குக் காரணமானது. அவமானப்பட்டு விட்டாராம்.

“அம்மா அண்ணன வந்துப் பாருங்கமா!”, அவனின் அறைக்கு ஏதோ எடுக்கச் சென்ற செல்வியின் அலறல் கேட்டு ஓடி வந்த காமாட்சி மூர்ச்சையாகிவிட்டாள். “டேய் சிவா!”, ரங்கன் கீழே சரிந்து விட்டார். செல்வி பேயறைந்தார் போல் நின்று கொண்டிருந்தாளே தவிர அவள் அழவோ அசையவோ இல்லை. முகம் வெளுத்துப் போயிருந்தது. அவனின் நாக்கு வெளியே சற்றுத் தள்ளியிருந்தது. கண்கள் சிவந்திருந்தன. வாயின் ஓரத்தில் எச்சில் வழிந்திருந்தது. காற்றாடி இணைப்புக் கம்பியில் ‘ரப்பியா’ கயிறால் கட்டி சுருக்குப் போட்டுக் கொண்டிருந்தான். தொங்கவெல்லாம் இல்லை. அமர்ந்த வாக்கில்தான் இருந்தான். தலை மட்டும் சாய்ந்திருந்தது. நீல வண்ண “ரப்பியா” கயிறு ஆங்காங்கே பிய்ந்து விறைத்திருந்தது. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டானா? இல்லை அடுத்தப் பிறவியில்

“ஆம்பிளையாய்” பிறக்கலாம் என்று இறந்து போனானா என்பது மட்டும் கேள்வியாய் தொக்கி நிற்கிறது.

ரங்கன் அவனுடைய கட்டிலில் மெல்லச் சாய்ந்தார். மீசையில் ஒழுகிய வியர்வையை அழுத்தித் துடைத்தப்போது கயிற்றை இழுத்தபோது நெறித்த காயம் சிராய்ப்பாய் மணிக்கட்டில் உறைத்தது.

1 comment for “ரப்பியா கயிறு

  1. muthu
    June 18, 2019 at 1:02 pm

    பாலின வேறுபாடு இயற்கையானது. அதனை மறுதளிக்க நினைப்பது மானுட மடமை. அதன் விளைவுதான் ரப்பியா கயிறு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...