காற்றே சற்று கனத்துடனும் கொஞ்சம் சோம்பலாகவும் இருக்கும் அகாலமான நேரத்தில் எழுந்திருப்பதும் இங்கு நிற்பதும் பழகிப் போய் சில வருடங்கள் ஆகிவிட்டன. வாய் பிளந்து காத்துக் கொண்டிருந்த சுரங்கக் குழியின் தலை இந்த நிறுத்தத்தில்தான் இருக்கிறது. சட்டென்று திறந்த கதவுகளில் பலர் முண்டியடித்து ஏறி உட்கார்ந்தனர். உள்ளிருந்து சிலர் வெகு அவசரமாக நடந்தனர். சிலர் இடமில்லாமல் கையில் வழவழப்பான இரும்புத் தூண்களில் இருந்த நெகிழிப்பிடிகளை இறுகப் பிடித்து மறு கையைக் கைப்பேசித் திரையை நகர்த்திக் கொண்டிருந்தனர். எப்பொழுதும் தண்டவாளத்தை ஒட்டிய மஞ்சள் கோட்டில் முதல் ஆளாய் நின்றிருப்பதால் எந்தவிதமான நெருக்கடிகளும் இல்லாமல் தோள் பையை இரு கைகளிலும் மாட்டிக் கொண்டு இறுதி இருக்கையில் உட்கார்ந்தேன்.
அடுத்த நிறுத்ததிற்கு முன் இரண்டு சுரங்கக்குழிகளில் ஏறி இறங்கி கதவுகளைத் திறந்து நின்றது. இந்த நிறுத்தத்தில் எப்பொழுதும் ஏறும் அந்த நீண்ட மூக்கும் பழுப்பு நிறக் கண்களும் உடைய அந்தப் பெண் எப்பொழுதும் போல வேகமாக ஏறி பின்னால் சென்று சாய்ந்து கொண்டாள். சரியாக மூடப்படாதக் கதவிடுக்கில் தெரியும் வெளிச்சக் கீற்றுகள் எட்டிப்பார்த்தன. அடுத்த நிறுத்தத்தில் ஆறு முறை ஒலியெழுப்பி கதவுகள் திறந்தன. கதவின் அருகிலே எப்பொழுதும் காத்திருந்து முதல் ஆளாக ஏறும் அந்த மீசையைத் தொடும் அளவுக்கு மூக்குடையவர் ஏறவில்லை. சிறிது நேரம் பார்வையை இங்குமங்கும் ஓட்டிப் பார்த்தேன். மீண்டும் மூன்று முறை சிவப்பு விளக்கு எரிந்து ஆறு முறை ‘பீம்..பீம்’என ஒலியெழுப்பிக் கதவுகளை மூடிக் கொண்டு எதிரிலிருந்த இருளுக்குள் இறங்கியது.
இந்த ஆறு மாதத்தில் இதுதான் அவர் ஏறாமல் இருந்த முதல் நாள். எவ்வளவு கூட்டம் நிரம்பினாலும் சமயங்களில் ஒரு சில இருக்கைகள் காலியாக இருக்கும். அப்படி காலியாக இருந்த இருக்கையில் ஒரு நாள் அமர்ந்தவர் புதியவரிடம் பேசும் எவ்வித தயக்கமும் இன்றி ‘கோயிலுக்கு வருவீங்களா’ ன்னு கேட்டார். ‘இல்லைங்க நாளாச்சு’ என்றேன். ‘வரணும்…அதெல்லாம்’ என்றார். மெல்ல சிரிக்க மட்டும் செய்தேன். இன்னொருநாள் ‘இப்ப எல்லாம் போச்சுங்க… எல்லாம் சுழி மாறி இருக்கு… என்ன பண்றது’ எனத் தனக்குத் தானே சொல்வதைப் போன்று சொன்னார். அருகில் உட்கார இடம் கிடைத்த போதெல்லாம் ஏதாவது புலம்பிக் கொண்டு இருப்பார். எதற்கும் நான் பெரிதாக ஒன்றும் சொன்னதில்லை. சமயத்தில் தலையாட்டுவேன். இல்லையென்றால் ‘ஆமா.. அதான்’ இப்படி ஏதாவது சொல்வேன்.
நேற்று பிரயாணிகள் நெருக்கி அழுத்துவதைப் பார்த்துச் ‘இதையெல்லாம் என்னான்னு சொல்லுறது?’ என்றார் எரிச்சலாக. நான் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரிடம் “என்னோட எடம் இந்த 7 ஸ்டேசனுக்குள்ளதான். எடம் வந்தா இறங்கி நடக்க ஆரம்பிச்சுருவேன். அவ்ளத்தான்’ என்றேன். புருவத்தை உயர்த்தி “மேல போனதும் இது எல்லாம் ஒனக்கு சரியான்னு எமன் கேட்பான். அன்னிக்கு நம்ம காரணம் சொல்லனும்” என்றார். எவ்வித ஒழுங்கும் இல்லாத கூட்டத்தைப் பார்த்து எரிச்சல் அடைந்தவராய் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தவர் இடையில் வந்த இரண்டு வளைவுகளிலும் கூட தன் பக்கம் இருந்த இரும்புத் தூணை நன்கு பிடித்துக் கொண்டு சாயாமல் உட்கார்ந்திருந்தார். அவர் நிறுத்தம் வந்ததும் ஒரு கையில் பையை மட்டும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையை மெல்ல அசைத்துக் காட்டி விட்டுச் சென்றார். சரியாக இந்த வளைவைத் தாண்டி அந்த சிறிய வெளிச்சம் புள்ளியாகத் தெரியத் தொடங்கியதும் எழுந்து நின்றேன். நிறுத்தத்தின் பெயரைச் சொல்லிக் கதவு திறந்தது. பின்னாலிருந்த கூட்டம் முன்னால் உந்த வெளியேறி நடக்க ஆரம்பித்தேன்.
படிகளில் இறங்கி வெளியே நீண்டிருந்த சாலையின் வலப்புறம் நடக்க ஆரம்பித்தேன். காற்று இப்போது கனம் குறைந்து இருந்தது. கொஞ்ச நேரம் நடந்ததும் எப்பொழுதும் திறந்திருக்கும் அந்த ஒற்றை இரும்புக் கதவின் உள்ளே நுழைந்தேன். துர்வாடை வீசியது. அருகிலிருந்த கால்வாயில் தேங்கியிருந்த வெள்ளைத் தீட்டுகளுடன் கூடிய மஞ்சள் நீரையும் அதில் மிதந்து கொண்டிருந்த பூக்களையும் குச்சியொன்றால் தள்ளிவிட்டேன். கரும் நிறத்தில் ஓடிய சாக்கடை நீருடன் கலந்து பக்கத்திலிருந்த பெரிய கால்வாய்க்கு சென்று கொண்டிருந்தது. நேராகச் சென்று உள்ளே இருக்கும் இழுப்பறையில் பையை வைத்துக் கைகளைக் கழுவி கையுறையை அணிந்து கொண்டேன். ‘வேகம் கெடுத்தாண்ட’ மெல்ல ஈனஸ்வரத்தில் இழுத்துப் பாடிக் கொண்டிருந்தது மூலையிலிருந்த அந்த வானொலி. வேன் வந்து வாசலில் நின்றவுடன் இரும்புக் கதவை முழுமையாகத் திறந்தான் பற்களில் புகையிலைக் கறை படிந்து சிவப்புக் கண்களுடன் இருக்கும் அந்த ஆள்.
வேனின் கதவை முழுமையாகத் திறந்து மூவரும் மூன்று மூலைகளில் நின்று கொண்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து இரும்பு மேசையில் வைத்தோம். வேனின் கதவைத் திறந்தவுடன் ‘இத புடிங்க’ என்று வேனின் கதவைத் திறந்து வேட்டியையும் கொஞ்சம் திருநீறு,குங்குமம், சந்தனம், ஜவ்வாது கொண்ட பெட்டியைத் திணித்துச் சென்றான், நெற்றியில் கீறல் விழுந்திருக்கும் புதிதாய் வேலைக்கு வந்தவன். நான் கொண்டு வந்திருந்த பெட்டியை மேசையின் ஓரம் வைத்தேன். புதிதாக வேலைக்கு வந்தவன் பிணப்பெட்டியின் கதவைத் திறந்து கீழே படாரென்று வைத்தான். உள்ளே கைகளின் பெருவிரலை இணைத்துத் துணியால் கட்டிக் கால்களையும் சேர்க்கப்பட்டு இருந்தார். எப்பொழுதும் காலைத்தான் முதலில் பார்ப்போம். கால்கள் கட்டப்படவில்லையென்றால் கழுவ தோதுபடாது. எனவே, கால்களின் துணியை இறுக்கி விட்டு முகத்தைப் பார்த்தேன்.
எப்பொழுதும் முகத்தசைகளில் இருக்கும் எந்தவிதமான இறுக்கமும் இல்லாமல் மிக மென்மையாகத் தளர்ந்து இருக்க அந்த பெயர் தெரியாத மீசைக்காரார்தான் அதற்குள் இருந்தார். கண்களின் மேலிருந்த புருவச்சுழிப்பும் சுருக்கமின்றி இமைகள் கண்களை முழுமையாக மூடியிருக்க உறங்குவதாகவே இருந்தார். மெல்ல இருவரும் சேர்ந்து தூக்கி அருகிருந்த பிறிதொரு இரும்பு மேசையில் கிடத்தி வைத்தோம். மெல்லிய பிசுபிசுப்புடன் தைல மணம் வீசிக் கொண்டிருந்த ஆடைகளைக் களைந்து உடலை நீரில் கழுவி விட்டோம். வேட்டியைக் கட்டிவிட்டு ஜிப்பாவைப் போட்டு உடலின் மேல் அத்தரையும் பன்னீரையும் தெளித்து விட்டேன். முகத்தைச் சுற்றி பவுடரைக் கொட்டிப் பூசி விட்டேன். நெற்றியில் திருநீறைத் தடவி சந்தனத்தையும் குங்குமத்தையும் தண்ணீரில் குழைத்து கெட்டிப்படச் செய்தேன். மெல்ல உருட்டி வட்டமாகத் தட்டி பொட்டையும் இட்டேன். நீண்டிருந்த மீசையைச் சரி செய்த பின் வாயை நோக்கிய போது ஏதோ ஒன்று சொல்வதற்குச் சித்தமாக இருப்பதைப் போன்று உதடுகள் குவிந்து முன்பல் லேசாகத் தெரிந்தது. கீழிருந்த கதவை எடுத்துப் பெட்டியை மேலே மூடிவிட்டேன்.