யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று
அப்பா சொல்லிக் கொண்டிருந்த கதைக்கு ‘ஊங்’ கொட்டியவாறே கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அழகி. அவளின் கைகால்கள் தன்னைச் சுற்றி இருந்த விளையாட்டுப் பொருள்களில் பரபரத்துக் கொண்டிருந்தாலும் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் கதையைக் காதுகள் மட்டும் மிகத் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அழகி, தான் சொல்லும் கதையைவிட விளையாடுவதில் மும்முரம் காட்டுகிறாள் என்று அவ்வப்போது அப்பா கதையை நிறுத்தினாலோ அல்லது அவரின் குரல் மங்கினாலோ, அவளிடமிருந்து “ஆஆஆ…” என்ற அலாரம் அப்பாவைத் தட்டி எழுப்பிவிடும். ண்டும் விட்ட இடத்திலிருந்தே தொடர்வார். இப்படியே கதை வளர-வளர அழகியின் தீவிரம் விளையாடுவதிலிருந்து மீண்டு அப்பாவின் மடியில் தலை சாய்த்து கதையைக் கேட்பதில் ஆர்வம் செலுத்தி இருந்தாள்.
அந்தக் கதையின் இறுதி வார்த்தை அப்பாவின் வாயிலிருந்து உதிர்ந்து காதுகளுக்குள் நுழையும் வரை விழிப்போடு இருந்த அழகி அடுத்த கணம் அப்பாவின் மடியிலேயே தன் கைகளைக் கன்னத்தோடு சேர்த்து உறக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். கண்கள் செருக ஆரம்பித்தன. ஆனால் ஆழ்ந்த உறக்கத்திற்குள் நுழைய முடியவில்லை. கண்களைக் கசக்கியும் திரும்பிப் படுத்தும் உறங்க முயற்சித்தாள். சற்றுமுன் அப்பா சொன்ன கதை திட்டுத் திட்டாக அழகியின் நினைவைத் தொட ஆரம்பித்தது.
இதற்கு முன்னும் அப்பாவிடம் எத்தனையோ கதைகள் கேட்டிருக்கிறாள். ஆனால் இதுபோல் அவளைத் தூங்கவிடாமல் அலைக்கழித்த இதுபோன்றதொரு கதை இதுவரையில் கிடையாது.
சில கணம் கண்களை மூடியவாறே அப்பா சொன்ன கதையில் வரும் பிம்பங்களை அசைபோட தொடங்கியிருந்தாள் அழகி. அரை விழிப்பில் நினைவு, கீறல் விழுந்த குறுவட்டாக முக்கித் திக்கிப் பயணிக்கத் தொடங்கியிருந்தது. அப்பா சொன்ன கதையைத் தன் மனக்கண்ணில் படச்சுருளாக ஓட்டிப் பார்த்தாள். கதையில் வரும் கதைமாந்தர்கள் மட்டும் திட்டுத் திட்டாக அழகியின் கண்களுக்குள் தோன்றினார்கள். அப்பா சொன்ன கதை நிரல்படி அழகியின் நினைவடுக்குகள் மனதில் தோன்றிய கதைமாந்தர்களை அடுக்கத் தொடங்கியது. யானைதான் அதில் முக்கிய பாத்திரமாக அவளுக்குப் பட்டது. எனவே யானையைக் கொண்டே கதைக்குள் நுழைய முயற்சித்தாள்.
கரிய நிறத்தில் பருத்த உடலோடு யானை தோன்றுகிறது. அந்த யானை மெல்ல ஆடி அசைந்து. தனக்கு நேர் எதிராகவே வருகிறது; வந்து கொண்டே இருக்கிறது. அழகியின் மனதிலும் பய உணர்வு பரவத் தொடங்கியிருந்தது. தன் அகக்கண்ணில் ஒளிர்ந்து மிக நெருக்கத்தில் வந்த யானையின் பிம்பத்தை விலக்க எத்தனித்த வேளை, சற்றே அதன் கரிய நிறத்தில் அப்பியிருந்த வன்மையும் மிருகத்தன்மையும் விலகுவதுபோல் உணர்ந்தாள். மீண்டும் அந்த யானையின் மீதே பார்வையைக் குவியமாக்கினாள். நான்கு கால்களில் வந்து கொண்டிருந்த அந்த யானையின் முன் கால்கள் இரண்டும் கைகளாகின. மெல்ல மெல்ல யானை மனிதனைப்போல் நிமிர்ந்து நடக்கத் தொடங்கியது.
அழகியின் விழிப்படலத்தில் திரை விழுந்தது. மெல்ல யானையின் பிம்பமும் மறைந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலெல்லாம் முழுமையாக இருள் சூழ்ந்து அவளின் மூச்சுக்காற்று சத்தம் மட்டும் மென்மையாக ஒலித்தது. அந்த மூச்சுக் காற்றின் வெப்பம் அவளின் கன்னத்தை அணைத்தபடி வைத்திருந்த உள்ளங்கையில் பட்டு மெல்லிய ஈரம் படர ஆரம்பித்தது. கையில் நசநசத்த ஈரம் கன்னத்தைக் கிள்ளியபோது அசௌகரியம் தோன்ற சற்றே கண்கள் விழித்துப் பார்க்கிறாள். யானை முற்றிலும் அகன்றிருந்தது. அப்பாவின் பிம்பமும் உடன் இணைந்து அவள் விழிப்படலத்தில் தேங்கி நின்றது.
அப்பாவின் வாய் மட்டும் அசைந்து கொண்டிருந்தது. பேச்சு ஒலி இல்லாமல் கதை நகர ஆரம்பித்தது. அப்பாவின் பிம்பம் காற்றோடு கரைந்து மீண்டும் அந்த யானை மனிதரைப்போல் நடந்து வந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய யானையைப் போலத்தான் வந்து கொண்டிருக்கும் யானைமனிதனின் உருவமும் இருந்தது. ஆனால் அந்த பருத்த யானை அழகியை நெருங்க-நெருங்க சிறுத்து ஏழு வயது சிறுவன்போல் ஆனது.
அந்தச் சிறுவனைக் கண்டதும் அழகியின் உதடுகள் மேலும் கீழும் அசைய ஆரம்பித்தன. மெல்லிய சிரிப்பொலியும் உடன் கேட்டது. அழகியின் சிரிப்பொலி காதில் விழ அப்பாவும் சுதாகரித்துக் கொண்டார். அழகியைக் காண்கிறார். உறக்கத்திலும் சிரித்து மகிழும் தன் மகளின் அந்தச் செயலை ஒரு சில நொடிகள் இமைக்காது இரசித்தார். “குழந்தைகள் உறக்கத்தில் சிரித்தால் கடவுளோடு பேசுவதாகப் பொருள்” என்று யாரோ எப்போதோ சொன்னது அவரின் நினைவுக்கு வர, அவளின் அந்த ஆனந்தத்திற்கு வழிவிட்டு ஒதுங்கினார்.
அழகிக்குள் கதை ஓட்டம் தொடர்ந்தது. தன் ஈடு சிறுவனாக இருப்பதால் அவனோடு ஓடி ஆடி விளையாட மனம் குதூகளித்தது. அந்தச் சிறுவனைப் பார்த்துச் சிரித்தாள். ஓங்கி உயர்த்திக் கையசைத்து அவன் பார்வை தன் மீது படும்படி செய்தாள். அப்போதுகூட எந்தச் சலனமுமின்றி குத்துக் கல்லாகவே ஒரு மண் மேட்டின்மீது அமர்ந்து கொண்டு ஏதோ சிந்தித்தவனாக இருந்தான். அவன் அருகில் சென்றாள். அந்தச் சிறுவனின் கவனத்தைப் பெற அவன் தோள்களில் கைவைத்தாள்.
அப்போது கிடுகிடுவென நெடுமரமாக ஓர் உருவம் அவள் முன்னே வளரத் தொடங்கியது. பயந்து நிலைத்தடுமாறிய அவள் சட்டென அங்கிருந்து ஓடி கதை ஓட்டத்திற்கு வெளியே வந்து விழுந்தாள். அழகியின் உடல் முற்றிலும் வியர்வையால் நனைந்திருந்தது. மூச்சும் பலமாகவே வீசியது. ஆனால் அழகியின் எண்ண ஓட்டத்திலிருந்து அப்பா சொன்ன கதை மட்டும் தடைப்படவில்லை.
நெடுமரமாக நின்ற அந்த உருவம் கருநீல நிறத்தில் சடைமுடியுடன் தோன்றியது. மண்மேட்டில் அமர்ந்திருந்த அந்தச் சிறுவனையும் பொருட்படுத்தாமல் அருகில் இருந்த பூங்காவிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது அந்தச் சிறுவன் அவ்வுருவத்தைத் தடுத்து நிறுத்தினான். அவர்களுக்கிடையே விவாதம் வலுக்க ஆரம்பித்தது.
“நில்லுங்கள்! உங்களுக்கு இந்தப் பூங்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை!”
மேலும் கீழும் பார்த்து… “அடேய் பாலகனே! யார் நீ? உனக்கு இங்கு என்ன வேலை? சடைமுடியான் குரலில் கடுமை தொனித்தது.
“நான் அன்னைப் பார்வதியின் திருமகன். என் அன்னை என்னைக் காவலுக்கு வைத்து உள்ளே நீராடி கொண்டிருக்கிறார். யாரையும் உள்ளே விடக் கூடாது என கட்டளையும் இட்டுயிருக்கிறார்”.
“அடேய் சிறுவனே! நான் யாரென்று தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறாய்! என் வழியில் குறுக்கிடாதே!” முக்கண்ணும் சிவக்க எச்சரித்தான் சடைமுடியான்.
அடுத்தடுத்துக் கதையில் நடக்கப்போவதையெல்லாம் அப்பா சொன்னதை வைத்துச் சற்று விரைவாக கடத்திப் பார்த்தாள் அழகி.
அந்தச் சிறுவனின் தலை இரத்தக் கறை பரவ தரையில் வீழ்கிறது. சடைமுடியானின் திரிசூலத்தில் இரத்தம் சொட்டுகிறது. மூன்றாவது கண்ணில் கனல் தெரிக்கின்றது. அருகே பெண்ணின் அழுகுரல் ஓங்கி ஒலிக்கிறது. தடுமாறி நிற்கின்றான் சடைமுடியான். பணியாட்கள் ஆயுதங்களோடு புறப்படுகின்றனர். காடு, மலை, ஆறு என அனைத்தும் கடந்து செல்கின்றனர். யானை ஒன்று எதிரே வருகிறது. கூர் மழுங்காத வாள் யானையின் கழுத்தில் பாய்கிறது. காடே அதிரும்படியாக யானையின் பிளிறலைத் தொடர்ந்து தலை ஒரு பக்கமும் முண்டம் மறுபக்கமும் சாய்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட யானைத் தலை எடுத்துச் செல்லப்படுகிறது. அன்னை பார்வதியின் மடியில் உயிரற்றுக் கிடந்த உடலில் அந்த யானைத் தலை பொருத்தப்படுகின்றது. சடைமுடியான் ஏதோ உச்சரிக்க யானைத் தலையோடு அச்சிறுவன் உயிர்பெற்று எழுகின்றான்.
அழகியும் திடுக்கிட்டு எழுந்தாள். பறந்து செல்வதுபோல் தோன்றியது அவளுக்கு. அப்பா அவளைத் தோளிலிட்டுத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார். தலை தரையை நோக்கி இருந்தது. தரையில் அங்கங்குத் தலைகளும் முண்டங்களும் தனித்தனியே கிடந்தன. இரத்த வாடையின் வீச்சமும் பலமாக வீச அழகிக்கு குமட்டலை ஏற்படுத்தி இருந்தது. “ம்ம்ம்… ஆங்ங்…” அசௌகரிய சத்தமும் ஒலிக்க தூக்கத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.
அப்பா அழகியைப் படுக்கையிலிட்டுப் போர்வை போர்த்திச் சென்றார். அப்பா சொன்ன கதை முடிந்திருந்தாலும் அதன் தாக்கத்திலிருந்து அழகியால் மீள முடியவில்லை. கதையில் வந்த கொலை, வன்மம், தலை, முண்டம் போன்றவற்றை எல்லாம் அழகியால் சகிக்க முடியவில்லை. அவளின் சிந்தனையும் கதையில் அவள் கண்ட முரண்பாடுகளும் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொள்வதாக உணர்ந்தாள். புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறாள். அழகியால் எதையுமே தன் கட்டுக்குள் நிறுத்த முடியவில்லை. கதையில் முரணாகத் தோன்றிய அனைத்தும் மெல்ல ஊர்ந்து கதைக் களத்திலிருந்து மீண்டு அழகியின் மீது அப்பிக் கொள்ள தொடங்கின. முன்பைவிட மிக வேகமாக கைகால்களை உதறிப் புரண்டு படுக்கிறாள்.
அழகியின் விழித்திரையில் வெளிச்சம். கொலை, வன்மம், தலை, முண்டம் என அனைத்தும் ஒரு நொடியில் மறைந்தன. மீண்டும் அப்பா சொன்ன அதே கதைக் களம் தோன்றுகிறது.
கரிய நிறத்தில் பருத்த உடலோடு யானை மீண்டும் தோன்றுகிறது. அந்த யானை மெல்ல ஆடி அசைந்து நடந்து தனக்கு நேர் எதிராகவே வருகிறது; வந்து கொண்டே இருக்கிறது. இம்முறை அழகியின் மனதில் பய உணர்வு சற்றே குறைந்திருந்தது. தன் அகக்கண்ணில் ஒளிர்ந்து மிக நெருக்கத்தில் வந்த யானையின் பிம்பத்தை அவள் விலக்க எண்ணவில்லை. தன் பார்வையை மேலும் கூர்மையாக்கி நோக்கினாள் அழகி. கரிய நிறத்தில் அப்பியிருந்த வன்மையும் மிருகத்தன்மையும் விலகுவதை ஆவலோடு பார்த்திருந்தாள்.
நான்கு கால்களில் வந்து கொண்டிருந்த அந்த யானையின் முன் கால்கள் இரண்டும் கைகளாகின. யானை மனிதனைப்போல் நிமிர்ந்து நடக்கத் தொடங்கியது. அழகியை நெருங்க-நெருங்க அந்தப் பருத்த யானை சிறுத்து ஏழு வயது சிறுவன்போல் ஆனது.
சட்டென கதைக் களத்திற்குள் பாய்ந்து அந்தச் சிறுவனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் அழகி. திடுக்கிட்ட சிறுவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தாள். பதிலுக்கு அவன் சிரிக்கத் தெரியாதவனைப் போல சிரித்து வைத்தான்.
“இங்க உனக்கு என்ன வேலை?” சிறுவனின் கேள்வி எளிமையானதாக இருந்தாலும் அழகிக்கு உடனே பதில் சொல்ல வரவில்லை.
“ம்ம்ம்… ஓ…அதுவா… இந்தப் பக்கம்… நா… நா…” சிந்தனை குழம்பி நின்றதை அழகியின் குளறிய வார்த்தைகள் உணர்த்தின. தட்டுத் தடுமாறி…
“இல்ல… நா… நா… என்னோட குட்டி யான இந்தப் பக்கமாதான் வந்திச்சி, அத தேடித்தான் வந்தேன்” என்றாள்.
“குட்டி யானையா?”.
“ஆமா… ஆமா… யானை தலையோட… மனித உடலோட குட்டி யானை” மனதில் உள்ளதை மறைத்து வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வைத்தாள்.
“மனித உடலோட குட்டி யானையா?” அழகியை மேலும் கீழும் பார்த்தான். இருமுறை தலையசைத்துத் திரும்பி அமர்ந்து கொண்டான்.
“ஆமா.. குட்டி யானதான்”. சொல்லி முடிப்பதற்குள் சிறுவன் சட்டென எழுந்து கொண்டான். சற்றுத் தூரத்தில் சடைமுடியான் வருவது தெரிந்தது. நுழைவாயிலின் முன்னே வந்து நின்று கொண்டான் சிறுவன். அழகி நடக்கப்போவதை நினைவுக்கூர்ந்தவளாய் “பதட்டத்துடன் ஏதாவது செய்தாக வேண்டுமே என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
சடைமுடியான் நேரே பூங்காவின் நுழைவாயிலின் முன்னே வந்து நின்றான். அச்சிறுவனின் வலது கை சடைமுடியான் தொடர்ந்து முன்செல்வதைத் தடுத்திருந்தது.
“நில்லுங்கள்! உங்களுக்கு இந்தப் பூங்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை!”
மேலும் கீழும் பார்த்து… “அடேய் பாலகனே! யார் நீ? உனக்கு இங்கு என்ன வேலை? சடைமுடியான் குரலில் கடுமை தொனித்தது.
“நான் அன்னைப் பார்வதியின் திருமகன். என் அன்னை என்னைக் காவலுக்கு வைத்து உள்ளே நீராடி கொண்டிருக்கிறார். யாரையும் உள்ளே விடக் கூடாது எனக் கட்டளையும் இட்டிருக்கிறார்”.
“அடேய் சிறுவனே! நான் யாரென்று தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறாய்! என் வழியில் குறுக்கிடாதே!” முக்கண்ணும் சிவக்க எச்சரித்தான் சடைமுடியான்.
இதற்கு முன் அழகி கண்ட அதே உரையாடல்கள். சிறுவனுக்கும் சடைமுடியானுக்கும் விவாதங்கள் வலுத்தன. சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த அழகிக்குச் சிறுவனின் தலை துண்டிக்கப்படும் காட்சி கண்முன் தோன்றி மறைந்தது.
உரையாடலில் அழகி இடைமறித்தாள். எதிரும் புதிருமாக நின்றிருந்த அவர்களுக்கிடையில் ஓடி வந்து அரை மயக்கத்தில் மயங்குவதுபோல் விழுந்தாள். அவர்கள் இருவரும் திடுக்கிட்டனர்.
சடைமுடியான் சட்டென முட்டிக்காலிட்டு அமர்ந்து அழகியைத் தூக்கி மடியில் கிடத்தினார். அரை மயக்கத்தில் வாய் குளறிக் கொண்டிருந்த அழகியின் கன்னத்தில் தட்டி “குழந்தாய்..!. குழந்தாய்..! என்னமா ஆயிற்று உனக்கு?” என்றபோது “என்.. என்.. யானைக் குட்டி… வேணும்… அது.. அது.. இல்லனா?”…
“ஆமாம், இவள் இங்கு வந்தவுடன் யானைக் குட்டி என என்னிடமும் புலம்பினாள்” சிறுவனும் அழகியோடு சேர்ந்து கொண்டான்.
“நான் பல மணி நேரமாக அந்த யானைக் குட்டியைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். காடு, மலை, எனப் பல இடங்களிலும் தேடி அலுத்து விட்டேன். என்னால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.” எனச் சடைமுடியானிடமும் அச்சிறுவனிடமும் மன்றாடினாள் அழகி.
“சரி குழந்தாய் நான் தேடித் தருகிறேன்… கொஞ்சம் இந்தத் தண்ணீரைப் பருகு” என அருகில் கமண்டலத்தில் இருந்த நீரை அழகியைப் குடிக்கச் செய்தார் சடைமுடியான். சற்றே நிதானத்திற்குள் வந்தவள்போல் அழகி பாசங்கு தொடர்ந்திருந்தது.
“என் குட்டி யானை…! என் குட்டி யானை…!” என்ற அழகியின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது.
“சரி… சரி… குழந்தாய் கொஞ்சம் அமைதியாக இரு. இப்பொழுதே சென்று உன் யானையை நான் கொண்டு வருகிறேன்” என்றதோடு அருகில் இருந்த சிறுவனையும் நோக்கி “பாலகனே…! நான் வரும் வரை இந்தக் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று கட்டளையிட்டுக் கிளம்பினார்.
தான் வந்த நோக்கத்தையும் சிறுவனுடன் எழுந்த விவாதத்தையும் மறந்து விரைந்து காட்டிற்குள் புகுந்தார் சடைமுடியான்.
அதுவரை மயக்கத்தில் இருந்தவள்போல் நடித்த அழகி சற்றே நிதானம் பெற்றவள்போல் எழுந்து அமர்ந்து கொண்டாள். தன் அருகிலேயே அமர்ந்திருந்த சிறுவனை ஓரக் கண்ணால் நோக்கினாள். எழுந்து அமர்ந்த அழகியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். கமண்டலத்தில் இருந்த நீரை மீண்டும் அழகியைப் பருகச் செய்தான்.
அழகிக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பா சொன்ன கதையை மீண்டும் தன் நினைவில் ஓட்டிப் பார்கிறாள். கதையை முன்னுக்கும் பின்னுக்கும் நகர்த்தி அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை ஊகித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
“அன்னை பார்வதி சடைமுடியான் வருவதற்குள் குளித்து வரவேண்டும். இல்லையென்றால் மீண்டும் சிறுவனுக்கும் சடைமுடியானுக்கும் விவாதம் தொடங்கிவிடும்”. அமர்ந்த இடத்தில் இருந்தே அன்னை பார்வதியின் வருகையின் மீது ஒரு கண்ணும் சடைமுடியான் வரும் வழியின்மீது ஒரு கண்ணும் வைத்தாள்.
மனம் சத்தமில்லாமல் அன்னை பார்வதியை விரைந்து வர அழைத்துக் கொண்டே இருந்தது. அன்னை முதலில் வந்தால்தான் அழகி தனக்குள் கலைத்துப் போட்ட கதையில் தான் விரும்பியது நடக்கும்.
அன்னை பார்வதியின் வரவு தாமதமாகிக் கொண்டே சென்றது. மூக்கு, கண், காது என அழகியின் அனைத்துப் புலன்களும் தன்னைச் சுற்றி நடப்பவற்றையின்மேல் மிகத் தீவிரமாக இருந்தன. அப்போது தூரத்தில் மணியோசை கேட்டது. கண்களைக் குவியமாக்கி மணியோசை வந்த தூரத்தை அளந்து பார்க்கிறாள். சடைமுடியான் குட்டி யானையோடு வந்து கொண்டிருக்கின்றான்.
அன்னை பார்வதி இன்னும் வெளியில் வராதது அழகிக்குப் பெருஞ்சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்னும் பத்து பதினைந்தே அடிகளில் சடைமுடியான் யானையோடு வந்து விடுவார். மனம் பதைத்தது அவளுக்கு. இரு கண்களையும் இருக மூடிக் கொண்டாள். கதையிலிருந்து வெளியாகவும் தயாரானாள்.
இன்னும் ஒரு சில அடிகளே மிஞ்சியிருந்தன. அழகிக்கு நிலை கொள்ளவில்லை. கண்களிலும் நீர் தழும்ப நின்றது. சடைமுடியான் “குழந்தாய் இதோ பார்…” என்பதற்குள் அன்னை பார்வதியும் பூங்காவின் நுழைவாயிலில் தோன்றினாள். அடுத்த நொடி எதையும் பொருட்படுத்தாமல் அழகி கதையிலிருந்து வெளியேறினாள்.