வைகாசி

IMG-20190427-WA0033வைகாசி பாட்டி என்னமோ  சாதிப் பார்ப்பவள்தான். ஆயினும் எல்லோரிடமும் சகசமாய் பழகும் குணம் அவளுக்கு இருந்தது. யார் வீட்டுக்குப்  போனாலும் சாப்பிடவோ குடிக்கவோ அவளுக்கு மனத்தடை இருந்ததில்லை. அவளைப் பொருத்தவரை திருமணத்திற்கு மட்டும்தான்  சாதிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடிருந்தாள். தான் என்ன சாதி என்று தெரிந்த அவளுக்கு  ‘சாதி’ என்றால் என்னவென்று தெரியாது.

வைகாசிப் பாட்டிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் குமார் மாற்று சாதிப் பெண்ணைக் காதலித்திருந்தான். இறுதிவரை  வைகாசிப் பாட்டி காதலுக்குச் சம்மதிக்கவே இல்லை. குமாரின் சில நண்பர்கள் அவனைத் தங்களின் மார்க்கத்திற்கு மாறிவிடும்படி மார்க்கம் கூறினர். அதனால், அவர்களே தடையின்றி அவனுக்குத் திருமணம் செய்து வைத்து விடவும் முடியும். காதல் கண்களை மறைக்க அப்படியே ஆயிற்று.

திரைப்படங்களில் வருவது போல் புதுமணத் தம்பதியினர் திருமண அலங்காரத்தோடு வாசலில் வந்து நிற்க, தான்  உயிருடன் இருக்கும் வரை தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று நிதானமாகத் துரத்தி விட்டாள் வைகாசி பாட்டி. அதனால்  நேற்று காலையில்தான் குமாருக்கு அழைத்து தகவல் சொல்ல வேண்டியதாய் போயிற்று. ஒரு நண்பனின் உதவியோடு குமாருக்கு அழைத்தபோது ஆம் ஊம் சொல்லவில்லை அவன். “பக்கத்தில அவள் இருந்திருப்பாள்!” என்றார் ஒரு பெருசு. “வாய மூடுங்கண்ணே !” என்றேன் நான்.

வைகாசி பாட்டி சாகும் வரை எந்த நோயும் கிடையாது. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வேல் உடைந்த முருகன் கோயிலுக்கு அன்றாடம் நடந்தே போவாள்; நடந்தே வருவாள். அவள் பக்தியில் முருகனே அவளுக்கு பக்தனாகியிருந்தான். அந்தக் காலத்தில் எங்கள் ஊரிலேயே முதன்முதலாக பழனி முருகன் கோயிலுக்குப் போயிருந்த சாமானியத்தி வைகாசி பாட்டிதான். இரண்டே ஆண்டுகளில் இந்தியா போகப் பணம் சேர்த்திருந்தாள். இரண்டு  தைப்பூசங்கள், இரண்டு பங்குனி உத்திரங்கள், சுற்று வட்டாரத்தில் நடந்த எல்லா திருவிழாக்கள் ஒன்றையும் விடவில்லை. மடிப்பிச்சையில் பணம் பாதி உண்டியலுக்குப் பாதி அவளுக்கு.

வேல் உடைந்த முருகன் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டு ஊரே வைகாசி பாட்டியைப் பழனிக்கு வழியனுப்ப வந்திருந்தது. வைகாசி பாட்டியின் பக்தி யாத்திரையைக் குறித்து கோயில் சுவரில் எழுதப்படும் என பூசாரி வாக்களித்தார். இரண்டு வாரங்கள் கழித்து மொட்டைத் தலையுடன் ஊர் திரும்பிய வைகாசி பாட்டியின் கழுத்தில் கொட்டைகள் அதிகரித்திருந்தன. பினாங்கு விமான நிலையத்திலிருந்து நேராக கோயிலில்தான்  கால் வைத்தாள். பழனி முருகன் ஆசியைப் பெற்று திரும்பியவளைக் கோயிலே வணங்கியது. சமையல்காரார் பிள்ளைக்கனியின் இரண்டு மனைவியரும்    “அம்மா… தாயே… ஆசிர்வாதம் பண்ணுமா” என படாரெனக் காலில் விழுந்தனர்.

வைகாசி பாட்டியிடம் இறையருள் இருப்பதாக ஊர் பேசிக் கொண்டது. பற்பல குறைகளோடு அவளைப் பார்க்க பலர் அவள் வீடு தேடி வந்தனர். வைகாசி பாட்டி மந்திரித்து தரும் பூவோ, கனியோ, கயிரோ, தீர்த்தமோ மகா நிவாரணமாக இருப்பதாய்ச் சொல்லி வீட்டில் கூட்டம் அலை மோதும். அப்படி வந்து போகும் பக்தர்களின் கைகளில் உள்ள பைகளில் வைகாசி பாட்டி கொடுத்து அனுப்புவதின் கனத்தை வைத்துச் சிலர் தங்களின் சாதிக்காரர்களைக் கண்டுக் கொண்டனர்.  “முருகா !” எனத் திருநீர் பூசினால் அவனைச் சேர்ந்தவர்கள், “பழனி முருகா”  எனத் திருநீர்  பூசினால் இவனைச் சேர்ந்தவர்கள். வைகாசி பாட்டி கைலியை விடக் காவியில் இருப்பது அதிகமானது.

பின்நாளில் மொட்டைத் தலையில் முடிகள் வளர அவை சடை விழுந்த முடிகளாக ஆகியிருக்க வைகாசி பாட்டியை ‘சடைப் பாட்டி’ என சிலர் அடையாளங் கண்டனர். ஆயினும் ஊர் பொடுசுகளுக்கு அவள் மொட்டைப்  பாட்டிதான்.

ஊருக்குப் பொதுவாக ஒரே ஒரு குப்பைத்தொட்டிதான். ஒன்றே ஒன்று என்பதால் அகலமானதாய் கொடுத்திருந்தது அரசு. வைகாசி பாட்டியின் சாவுக்குக் காரணம் ஒரு விநோத நோய்  எனவும், அந்த நோயிற்குக் காரணம் அந்தக் குப்பைத்தொட்டியே  எனத் தெரிய வந்ததும்,  அரசு அப்புறப்படுத்தும் முன்பே யாரோ அதனைக் கொழுத்திவிட்டிருந்தனர். சீனர் கோயில் வரை அதன் துர்நாற்றம் புறப்பட்டு வந்து இனி ஊதுபத்தியின் வாசனையை வெட்டுப்படச் செய்யாது.

வீட்டு பின்புறத்தில் இருந்த அங்சாக்கள் எல்லாம் அன்று முழுக்க மௌன அஞ்சலி செலுத்தின.  ஆட்டுக்குட்டிகள் மாத்திரம் அழுதுகொண்டே இருந்தன. தேவர்மணிக்கு அங்சாவிடமிருந்தும், ஆடுகளிடமிருந்தும் பெரிய மரியாதை கிடையாது. சிறுவயதில் தன்னைத் துரத்தும் அங்சாக்களின் முட்டைகளை வைகாசி பாட்டி இருக்கும் போது அவைகளின் முன்னிலையிலேயே எடுத்து உடைத்துக் குடித்து விடுவான். பழிதீர்த்த வெறி கண்களில் பறக்கும் தேவர்மணிக்கு. கடைக்குட்டியின் செயல் தட்டிக் கேட்கப்படாது. அவன் வருகையின் போதெல்லாம் பின்நாளில் அங்சாக்கள் சுதாகரிக்கத் துவங்கியிருந்தன.

கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்ததால் இன்னும் ஒரு கூடாரம் போட ஆட்கள் வந்திருந்தனர். உள்ளூர் சமூகத் தலைவர்கள் இருவர் சீக்கிரமாக வந்துவிட்டுப் போயிருந்தனர். அவர்களது மலர் வளையங்கள் தனித்துத் தெரியும்படி வைக்கச் சொல்லப்பட்டிருந்தது.

“டேய்! சீட்டாடுர நாய்கள் எல்லாம் ஓரமா போ! அந்தச் சாவு சூராவ கொண்டாந்து முன்னாடி வை” என்றபடி கள்ளுக்கடை சாகாவரன் என்னைத் தேடினார்.  கள் எடுக்கையில் எத்தனையோ தடவை கீழே விழுந்தும் உயிருக்குச் சேதம் வரவில்லை. எவனோ ஒருவன் அவருக்கு கள் குடித்த போதையில் இப்படி ஒரு  பெயரை வைத்து விட்டான். இது  அவன் அப்பா காலத்துப் பெயர். இப்பெயரை அவரும் பெருமையாக எண்ணினார். தவிர, அவரின் உண்மையானப் பெயர்   பலருக்கும் தெரியாது.

தேவர்மணி மரணச் சான்றிதழ் செய்துவிட்டு , அதனை நகல் எடுத்து வந்தான் சான்றழில்104895734-stock-illustration-indian-old-woman-elderly-woman-in-a-bright-yellow-orange-colored-national-traditional-sari-dress-wit வைகாசி பாட்டியின் பெயரை  பார்த்த போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை  நான் தான் கேட்டுவிட்டேன் “யார் பாட்டி உனக்கு இப்படி ஓரு பேரு வெச்சா? சித்திரை, வைகாசி, இதெல்லாம் தமிழ் மாசங்களோடப் பேருங்க இல்லியா?”. “அடப்போடா, மொட்ட வெய்யில்ல படம் ஓட்டினவனே! அந்தக் காலத்தில எனக்குப் பொறந்தச்சூரா எடுக்க என் அப்பாரு பட்டரோட்டுக்குப் போயிருந்தாங்க.  பொறந்தசூரா ஆபிசுல நம்ப ஆளுங்களுக்காக ஒரு   ஆள போட்டிருந்தாங்க. அவன் ஒரு  கருப்பு தொர.  வேணும்னே எம்பேர இப்படி மாத்தி  எழுதிட்டான். அவன் வெரல்ல வெட்டுக்கிளி ஒன்னுக்கு அடிக்க!” என்றாள் வைகாசி பாட்டி. விரலில் வெட்டுக்கிளி மூத்திரம் பெய்தால் என்ன ஆகும்?தவிர, வெட்டுக்கிளி மூத்திரம் பெய்யுமா? அப்போது எனக்கு அறிவியல் புரியாத அகவைதான். “அப்போ உம்மியா உம் பேருதான் என்னா?” என்றேன். “அது உன் அப்பத்தாவுக்குக் கூட தெரியாது. என் உம்மியானப்  பேரு வைதேகி” என்றவளிடம் வெட்கம் புறப்பட்டது. “உம்மியாவா”  என்றேன். “நம்பாட்டி உன் தாத்தாகிட்ட போய் கேளு சொல்லுவாரு” என்றாள். என்  அப்பத்தாவுக்குத் தெரியாதப் பெயர் தாத்தாவுக்கு எப்படி? என் தாத்தா வயதுக்குப் பொருந்தாத “இராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலை இரசித்து இரசித்துக் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். புத்தி, தாத்தாவைச் சந்தேகித்தது.

தேவர்மணியின் வங்கிக்கு நேற்றே குமாரிடமிருந்து ஆயிரம் வெள்ளி வந்திருந்தது. குமார்தான் இன்னும் வரவில்லை. அவன்தான் கொள்ளி வைக்க வேண்டியவன். இருந்தாலும் அவன்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்றில்லை. “ நான் அங்கு வரப்போவதில்லை. எதிலும் கலந்து கொள்ள முடியாது. எந்தச் சடங்கையும் செய்யக் கூடாது. எங்களுக்கு அது புறம்பானது. மன்னிக்கவும்”. காலையில் குமார் அனுப்பியப் புலனச் செய்தி தேவர்மணியால் இன்னும் படிக்கப் படவில்லை. இதேதும் தெரியாமல் எல்லோரும் குமாரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மூன்று சாடிகளில் தேனீரும் ஒரு பெரிய தட்டில் அம்பாட் செகி ரொட்டியும் கொண்டு போய் வைத்துவிட்டு உள்ளே நுழையும் போது என்னிடம் தப்பு அடிப்பவர்கள் வந்துவிட்டதை சொல்லிவிட்டுப் பின் பக்கம் போனாள் என் மனைவி கமலம்.

தேவர்மணியின் முதலாளி வந்திருந்தார். எழுந்து நின்று எதிர்க்கொண்டவன் வாய்த் தவறி ‘வாங்க’ என்றுவிட்டதைப் பற்றி எந்தச் சலனமும் இல்லாமல் அவர் பக்கத்தில் போய் மரியாதைக்கு நின்றுக்கொண்டான். நாற்பது வயது, ஒண்டிக்கட்டை. அவன் முதலாளி அவன் காதுகளில் எதையோ குசுகுசுத்துக் கொண்டிருந்தார். இவனும் தலையைச் சற்று தாழ்த்தி நுணுக்கமாய்க் கேட்பது போன்ற பாவணையில் தலையசைத்துக் கொண்டிருந்தான். முதலாளி கிளம்புவதற்கு முன் அவனிடம் கைக்குலுக்கும்போது கையில் ஒரு  உறையினைத் திணித்துவிட்டுக் கிளம்பினார்.

வீட்டிலே அழுகுரல் குறைவாக இருந்ததற்கு அங்கு ஆண்கள் அதிகாமாய் இருந்தது காரணமாய் இருக்கலாம். அவ்வளவு நேரம் நானும் பூசாரியை மறந்திருந்தேன். வந்தவர்கள் முன்னிலையில் அறிவிப்பு செய்தார் ; “சீக்கு அடிச்ச ஒடம்பு. அதிக நேரம் கெடத்தப்படாது. குமாரு வந்தாலும் வராட்டாலும் பதினொரு மணி, தூக்கிடனும்”.

அப்போதுதான், காற்றில் அடிப்பட்டக் கோரைப் புற்கள் எழுப்பும் ஓசை போன்று  கூட்டம் சலசலத்தது. சலசலப்பு சில வினாடிகள் நீடித்தது. தனது சொகுசு மகிழுந்தினை அன்று  சோகவுந்தாகப் பாவித்து வீட்டின் வெளிப்புற ஓரத்தில் நிறுத்திய  அவர், இதுவரை வந்திருந்த மலர் வளையத்தைக் காட்டிலும் பெரிய மலர் வளையத்துடன்  சவப்பெட்டியை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அவரது அழுதக் கண்கள் வீங்கியிருந்தன. அல்லது  முகம் பூராகவும் வீங்கின மாதிரிதான் இருந்தது. யாருக்கும் பரிச்சையமில்லாதவர் தேவர்மணியை மட்டும் திடுக்கிட வைத்தார். நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன். இருபது வருடங்கள் நொடியில் என் கண் முன் வந்து போயின. தேவர்மணியின் இளமையான முகம் ஞாபகத்திற்கு வந்தது.

“நீங்கள் உயிரோடு இருக்கற வரைக்கும் உங்க மகனுக்கு என் மகளை ஏத்துக்கல. நீங்கள் சொன்னக் காரணங்களும் எனக்குப் புரியவுமில்லை புடிக்கவுமில்லை. அவசரக்காரி, என் மகள் இப்போது இருந்திருந்தால்? அதை எண்ணி ஆகப் போவது ஒன்னுமில்லை. உங்கள் ஆன்மா அமைதிப் பெறட்டும்.” ஒட்டோ உறவோ இல்லாத அவர் அமைதியாகப் பிரார்த்தனைச் செய்துவிட்டுத் திரும்புகையில் தேவர்மணியை… “தம்பி” என்று மட்டும் சொல்லி தோளைக் தட்டிக் கொடுத்தார். ஆண்மைச் சரிந்தவன் அப்போதுக் கூட அழவில்லை.

தேவர்மணியே கொள்ளி போட முடிவாகி விட்டது. பிணத்தைத் தூக்குவதற்கு முன்னரே சில தலைகளைக் காணவில்லை.   பக்கத்தில் இன்னொரு சாவு.  கைக் குழந்தை, பாவம். எத்தனை முறை சாவு அணுகி,  எத்தனைப் பேர் மரணித்தாலும் என்ன? தேவர்மணி கொள்ளிச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறும்போது அவன்  அழாமலே இருப்பது பற்றி மட்டுமே நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...