மலையும் மனிதர்களும்

[ 1 ]index

எண்ணி எண்ணிக் குழி வெட்டி

இடுப்பொடிஞ்ச பின்னாலும்

இன்னும் வெட்டு  என்கிறானே

வேலையத்த கங்காணி.

உதையும் பட்டோம் மிதியும் பட்டோம்

இங்க வந்து மானம் கெட்டோம்

முட்ட முழிச் சாமி கையால்

மூங்கில் கழி அடியும் பட்டோம்…

[மலையகக் கூலித்தொழிலாளர்கள் நாட்டுப் பாடலொன்றின் சில வரிகள்.]

பாரத நிலத்தை ஆண்டு சுரண்டிச் சென்ற வந்தேறிகளில்,  அடிமை கொண்ட மண்ணைச் சேர்ந்த, அடிமை மக்களைப் ‘பிடித்துச் சென்று’ தனது வேறு நிலங்களில், தனக்குத் தேவையானதை விளைவிக்க வேண்டி, கொத்தடிமைக் கூலிகளாக பணியில் அமர்த்தும், பெருந்தன்மை முதன் முதலில் பிரெஞ்சு காரர்களுக்குத்தான் உதித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது.

இந்துமகா சமுத்திரத்தில் தான் கைப்பற்றிய  ரீயூனியன் தீவுகளில் வேலை செய்ய ஐந்து வருட ஒப்பந்தத்தில் [மாதக் கூலி எட்டு ரூபாய்] கடலூர் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலிருந்து 1826 இல் துவங்கி அடுத்த நான்காண்டுகளில் நான்காயிரம் தமிழர்களை ஒப்பந்த கூலிகளாக, கொத்தடிமைகளாக பிடித்துச் சென்றது பிரெஞ்சு அரசு.

இந்தப் பிரெஞ்சு சுடர் வந்தேறியைப் பின்பற்றியது ஊழித்தீ வந்தேறியான பிரிட்டன் அரியணை.  பிரிட்டன் அரியணை பாரத நிலத்தைச் சுரண்டிய வரலாற்றை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதி உள்ளே நுழைந்தது துவங்கி, சிப்பாய் கலகம் முடிந்து மாட்சிமை தாங்கிய மகாராணி கரங்களில் ஆட்சியை ஒப்படைக்கும்  கிழக்கிந்தியக் கம்பனி தலைமை வகித்த சுரண்டல்கள். இரண்டாம் பகுதி  சிப்பாய் கலகம் முதல் இந்தியச் சுதந்திரம் வரை பிரிட்டன் அரியணை நேரடியாக நிகழ்த்தியது.

முதல் பகுதியின் பெரும் சுரண்டலின் வரலாற்று சித்திரத்தின் ஒரு இழையை, தனது உப்பு வேலி நூலில் பிரிட்டன் ஆய்வாளர் ராய் மாக்ஸம் திரை விலக்கிக் காட்டி இருக்கிறார் [எழுத்து பதிப்பக வெளியீடு தமிழில் சிரில் அலெக்ஸ்].  அந்த நூலைக் கொண்டு இருநூறு ஆண்டுகள் ஒரு பிரம்மாண்டமான ஊழல் அமைப்பு, ஈவு இரக்கமே இன்றி, இந்திய நிலத்தை சுரண்டி, மக்களை ஓட்டாண்டி ஆக்கி, செயற்கைப் பஞ்சங்கள் வழியே எளியோரைக் கொன்று குவித்த வரலாறை ஒரு வாசகன் அணுகி அறிய இயலும்.

இரண்டாம் பகுதியில் அரியணை அதிகாரத்தால் இந்திய  நில மானிய முறைகள், வரி முறைகள் எல்லாம் திருத்தி அமைக்கப்பட்டு,  அதுவரை பாரம்பரியமாக நிலம் வைத்து விவசாயம் செய்தோர், இன்று அந்த நிலத்தின் கூலிகளாக மட்டுமே எஞ்சும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சாதி பேதமின்றி  நிலத்தை விட்டு அந்நியப்பட்ட வாழ்வு, பஞ்சம்.  ஆட்சி  புறக்காலனி நிலங்களில்,காடழித்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பணப்பயிர் நிலங்கள், இவை சூழ, பஞ்சம் பிழைக்க ‘வெளியேறும்’ கலாச்சாரம் முடுக்கம் பெறுகிறது.

பிரிட்டன் அரியணையின் நேரடி ஆட்சியின் கீழ் பாரதம் வந்த பிறகு, அதன் ஆட்சியில் முதல் இருபது ஆண்டுகளுக்குள், அதன் காலனி நிலங்களில் உழைத்து சாக, ஒப்பந்தக் கூலிகளாக பிடித்து செல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை நான்கு லட்சம் . இந்த ‘ஒப்பந்தம்’ எனும் சொல் இருக்கிறதே அது மிக முக்கியமானது. 1834 இல் மாட்சிமை தாங்கிய மகாராணி, தனது செங்கோலின் அதிகாரம் பாயும் பகுதிகளில், அடிமை வணிகத்தை ஒழித்திருந்த காரணத்தால், இந்த ‘ஒப்பந்தம்’ எனும் சொல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. ஒப்பந்தத்தின் படி இந்தியர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரில்தான், அந்நிய நிலங்களில்,  தலைமுறை தலைமுறைகளாக குருதி சிந்தி உழைத்து செத்தார்களே அன்றி, அதில் அரியணையின் சதி ஏதுமில்லை என்பதை வரலாறு நினைவு வைத்துக்கொள்ளவே அந்தச் சொல்.

இந்த ஒப்பந்தக் கூலி முறையில் ஆங்கிலேய முதலாளிகளின் வேகத்துக்கும் பேராசைக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம் தொழிலாளிகள் சேரும் எண்ணிக்கையும், அவர்கள் வேலைக்கு சேரும் முதலாளி முதலைகளின் இடங்களும், இவற்றுக்கு இடையேயான ஒத்திசைவு குறையத் துவங்க, தோட்ட முதலாளிகள் ‘கங்காணி’ முறையை அமல்படுத்துகின்றனர். கங்காணி மலாயா இலங்கை போன்ற தோட்டங்களில் இருந்து வந்து, பெரும்பாலும் தான் விட்டு சென்ற சொந்த ஊர், தெரிந்த ஊர்களில் வந்திறங்கி, அந்த ஊரில் யாரை ஆசைகாட்டி மயக்கினால் ஊரில் பெரும்பாலானோர் அவனைத் தொடர்வார்களோ, பெரும்பாலும் அந்த ஒருவனை ஆசை காட்டி ஊரில் பெரும்பாலானோரை ஏமாற்றி, ‘ஒப்பந்தம்’ போட்டு  அவர்கள் வேலைக்குப் போகும் தோட்டப் பெயர் குறித்த பட்டயத்தை அவர்கள் கழுத்தில் மாட்டி, கப்பலில் ஏற்றி விடுவான்.

இந்தக் கங்காணிகளுக்கும், கஞ்சிக் கூலிகளுக்கும் பயணமார்க்கமாக பிரிட்டனின் காலனி நாடுகளில் சுற்றி இயங்கிக் கொண்டிருந்ததன எஸ் எஸ் ரஜூலா எனும் கப்பலும் ஸ்டேட் ஆப் மெட்ராஸ் நிறுவனத்தின் கப்பல்களும். அந்தக் கப்பல்கள் இந்தக் கூலிகளை நாயினும் கடையர்களாக நடத்தி, அவர்களின் பயண இலக்கின் முடிவில் கொண்டு சேர்க்கும். அங்கே கூலிகளின் கழுத்துப் பட்டைகள் வழியே, அவர்கள் சேர வேண்டிய காட்டுக்கு, நோய்த் தொற்று ஏதேனும் இருக்கிறதா என்ற பரிசோதனைக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படுவார்கள். வேலி கட்டப்பட்ட எல்லைக்குள் லயன்களில் விதிக்கப்பட்ட வாழ்வு. அவர்களின் சாமி, பேய், பிறப்பு, இறப்பு எல்லாமே அந்த வேலிக்குள்தான். கொடுமை தாளாமல் தப்புவோர்க்கு, அங்குள்ள எஞ்சியோர் பயம் கொள்ளும் வகையில், ‘ஒப்பந்தத்தை’ மீறியமைக்காக கடும் தண்டனை வழங்கப்படும்.

கேரளத்தின் இடுக்கி, இலங்கையின் மலையகம், மலாயாவின் ரப்பர் தோட்டங்கள், பிஜி தீவுகள்,  என யாவும் இந்தச் சூழலின் பின்புலத்தில்  அந்நியமண்ணில் அர்த்தமின்றி உழைத்து செத்த தலைமுறைகளை உண்டு செரித்து வளர்ந்தவைதான்.  இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, இலங்கை, கேரளா இந்த நிலங்களில் காடழித்து தோட்டம் சமைத்தவர்களின் நிலை வேறு, மலாயா போன்ற நிலத்தில் இவர்களின் நிலை முற்றிலும் வேறு. இந்த அடிப்படை வரலாற்று ஓட்டத்தின் பகைப்புலத்தில் நிறுத்தி வாசிக்கப்பட வேண்டிய புனைவு சீ.முத்துசாமி அவர்கள் எழுதிய [கிழக்கு பதிப்பகம்] மலைக்காடு (புக்கிட் செம்பிலான்) நாவல்.

[ 2 ]

மலாயா நிலத்தில் புக்கிட் செம்பிலான் என்ற [ஒன்பது மலை] மலைக்காட்டில் இப்படிப் பிடித்துக் கொண்டு வந்து அடைக்கப்பட்ட, தர்மபுரி பள்ளப்பட்டியை சேர்ந்த மாரியின் கொள்ளுப்பேரன் குட்டியை மையம் கொள்ளும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிகழும்  நாவல்.  தொண்டர் படைத் தலைவர் ட்ரஸர் பாலைய்யா, நண்பன் நெட்டை மணி, காதலி பவானியம்மா அப்பா கோபால், அம்மா முத்தாயி, கட்சித் தலைவர் இங்கிலீஸ் மணியம், சாமியாடி, வேட்டைக்கார சங்கிலி, கங்காணி சுப்பராயன், பெரிய துரை, சின்ன துரை, மலை முனிசாமி  இவர்கள் மத்தியில், எல்லைகட்டப்பட்ட தனது வாழ்வுக்குள், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் நிலையை எதிர்த்து முதல் உரிமைப் பிரச்னையைப் பாலையா தலைமையில் நெட்டை மணியுடன் இணைந்து மணி மேற்கொள்கிறான்.

பிடிபடும் மூவரும் சிலமாத கடுங்காவல் தண்டனை அடைந்து மீள்கிறார்கள். வெளியே அரசியல் சூழலும் போர் சூழலும் கலந்து கொந்தளிக்கும் சூழலில், உள்ளே இத்தகு எதிர்ப்புகளை ஆரம்பத்திலேயே துடைத்தெறிய விரும்புகிறார் பெரிய துரை. சிறை மீண்ட மூவரும் அந்தத் தோட்டத்திலிருந்து காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள், என்ன ஆனார்கள் விசாரிக்க உள்ளே நுழைகிறார் காவலதிகாரி கோப்ரல் மணியம். முடிவு?  ஒரு துப்பறியும் நாவலைப் போன்ற விறுவிறுப்பான வாசிப்பு சுவாரஸ்யம் கொண்ட இந்த நாவல் இந்த சுவாரஸ்யத்தை தக்கவைத்த படியே இந்தக் கதைக்களம் புறவயமாக செல்லவேண்டிய வீச்சையும், அகவயமாகக் கொள்ளவேண்டிய   ஆழத்தையும் வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறது.

புக்கிட் செம்பிலான் மலைக்காடு, பேயாக தெய்வமாக, மழைக்காலத்தில், இலையுதிர் காலத்தில், என புறவயமாக பருவகால சூழலிலும், அகவயமாக அந்தக் காட்டின் மடியில் வாழும் மனிதர்களின் ஆழத்து இருப்பாகவும் வித விதமான தோற்றங்களின் வழியே உயிர் கொண்டு இயங்குகிறது. குறிப்பாக நாவலுக்குள் வரும் ராஜநாகம் எனும் படிமத்தை சொல்லலாம். எழுத்துக்களிலிருந்து சித்தரிப்புகள் வழியே  உயிர்க்கொண்டு  எழுந்து வரும் இந்தக் காட்டில், அதன் மனிதர்களும் அதனளவே உயிர்ப்புடன் துலங்கி வருகிறார்கள். குறிப்பாக கோவிலுக்குள் ராமகாதையை ஓவியங்களாக வரைந்து விட்டு மறைந்து போகும் அந்தப் பித்தனை சொல்லலாம். இந்த நாவலின் எந்த அலகுக்குள்ளும் பொருந்தாத அவன்,  எத்தகையதொரு வாழ்விலும், வரையறைகளுக்குள்  பொருந்தாமல் திமிறி நிற்கும் கலையின் கலைஞனின் பிரதிநிதியாக அவன் இந்த நாவலுக்குள் வந்து போகிறான்.

நாவலின் தனித்துவமான ஆளுமை வேட்டைக்காரர். தன்னை ஒரு வேட்டைக்காரனாக உணர்ந்து அந்தக் காட்டுக்குள் திரியும் அவர், ஒரு வேட்டையைக் கண்முன்னால் கண்டு வேட்டை என்றால் என்ன என்பதை உணர்ந்து, அந்த வன ஆற்றலின் முன் பணியும் சித்திரம் மிக முக்கியமானது. அந்த வேட்டைத் தெய்வத்தை காலடியில் போட்டு அதை மிதித்து நின்று, ஓவியத்தில் காட்சி அளிக்கிறார்கள் சின்னத் துரையும் பெரிய துரையும். என் கைல வெறும் அருவாள்தான் இருக்கு. அவங்க கைல பணம் இருக்கு, ஜெயிக்க முடியாத ஆயுதம். முனி சொல்லும் இந்தச் சொல் மேற்கண்ட ஓவியத்துடன் அந்த ஓவியம் இருக்கும் மலை பங்களாவுடன் இணையும் போது, முனியின் சொல் மேலும் ஆழம் கொள்கிறது.

மலை மேலிருக்கும் அந்தப் பங்களா எனும் சித்திரமே தன்னளவில் அந்த மலைக்காட்டில் அதிகார அடுக்குகள் என்னவகையில் நிலைபெற்றிருக்கிறதோ அதை ஒரே சித்திரத்தில் சுட்டிவிடும் படிமமாக இருக்கிறது. பெரிய துரை, அவரின் கீழ் சின்ன துரை, காவல் துறை, அவர் கீழே கங்காணி,  யூனியன் தலைவர் எனும் வரிசை அந்த வரிசையின் ஒவ்வொரு கண்ணியும் கீழிருப்பவரை ஒடுக்கியும், மேலிருப்பவர் இடத்தை எடுத்துக்கொள்ள நிகழ்த்தும் பிரயத்தனமும் நாவலின் உட்கூறுகளுக்கு வலிமை செய்கிறது. உதாரணமாக சின்னதுரை திருப்திக்காக கங்காணி தனது மனைவியை துரையின் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள கெஞ்சும் சித்திரம். ‘கண்டு கொள்ளாமல்’ ‘பெரிதாக்கி விடாமலிருக்க’ தலைவருக்கு துரை வழியே கிடைக்கும் கங்காணி எனும் பதவி உயர்வு இப்படி பலவற்றை சுட்டலாம்.

அனைத்தையும் இழந்து தலைமுறைகளாக அடிமை வாழ்வு வாழும் மனிதன் வசம் இறுதியாக என்ன எஞ்சும்? இறுதியாக எஞ்சும் அதிலிருந்தே தனது பாதையில் தான் செல்வதற்கான ஆற்றலை திரட்டிக் கொள்கிறான் குட்டி. மீண்டும் மீண்டும் தனது சாதி வன்மையை சொல்லி தன்னை உருவேற்றிக் கொண்டே, அமீட் மீது பாய்ந்து தாக்குகிறான் குட்டி.  தன்னில் இறுதியாக எஞ்சி நிற்கும் குரல் எதுவோ அதைக் கேட்டே, தலைவரின் தலையை வெட்டி சின்ன துரை பங்களா வாசலில் நட்டு வைக்கிறான் குட்டியின் அப்பா கோபால்.

கோபால் தனது மகனுக்காவும் [தான் பெறாத மகன்] மாரி தனது மகன் உண்ணாமலைக்காகவும், கோப்ரல் மணியம் மகன் போன்ற தனது நாய்க்காகவும், கட்சித் தலைவர் தனது மகனின் மரண கண்டம் மீதும்  என மைந்தத் துயர் கொண்ட தந்தையர்களின் தவிப்பால் நிறைந்த காடு. ”உண்ணாமல அப்பா உன்ன இந்த காட்ல அனாதையா விட்டுட்டுப் போறேண்டா” என்று புலம்பியபடியே செத்துப் போகும் மாரி துவங்கி, அனாதையாகி நிற்கப்போகும் ஜிம்மி குறித்த பதற்றத்துடன் வனத்துள் பதுங்கும் கோப்ரல் மணியம் வரை.

மறுபுறம் இதற்கு இணையாக அல்லது ஒரு படி மேலாக அன்னையர்களின் தவிப்பால் நிறைகிறது இந்தக் களம். கப்பலில் குற்றுயிறாய் இருக்கும் கணவன் கடலுக்குள் வீசப்படுவதை எதிர்த்து ஈனக்குரல் எழுப்பும் அவனது மனைவி துவங்கி, மகனைக் காணாமல் மனநலம் தவறிப் போகும் அம்மா முத்தாயி, காதலி பவானியம்மா, தற்கொலை செய்துகொள்ளும் கங்காணி மனைவி ரெங்கு என அன்னையர் நிறை. இவர்களுக்கு இணையாக இவர்களுடன் வாழ்ந்து சாகும் நாய்கள். பொய்யாமொழியால் விஷமிடப்படும் மணி முதல் இறுதியாக மணியம் கண்டெடுக்கும் ஜிம்மி வரை, நம்பிக்கைத் துரோகங்களால் அலைக்கழியும் இக்களத்து மனிதர்களின் ஒரே நம்பிக்கையாக கிட்டத்தட்ட ஒரு மீட்சியைப் போல வருகின்றன இப்புனைவின் இந்த ஜீவன்கள்.

புனைவு செல்லும் அகவய ஆழத்தில், காமம் குரோதம் என அடிப்படை இச்சைகள் கொண்டு அலைக்கழியும் இந்தக் கதைமாந்தர்கள் மேல் எழுகிறது

”உம் புள்ள வேற,எம் புள்ள வேறயா எல்லாம் புள்ளைகதானே ”

எனும் முத்தாயியின் சொல். நாயையும் மகனென பாவிக்கும் குணம் கொண்ட முத்தாயியின் சொல். பெண்மையின் சொல். தாய்மையின் சொல். அனைத்தையும் தனது காலின் கீழ் போட்டு மிதித்து அதன்மேல்  செறுக்கி  நிற்கிறது, இந்த உலகையே கொள்ளப் புறப்பட்டு விட்ட மோகம். வெள்ளைத்தோல் பெருமித ஆண்டைகளின் மோகம்.

இதற்கு இணையாக புறவயமாக இந்த நாவல் செல்லும் வீச்சு இதனினும் முக்கியமானது .

”தோலு நிறம் என்னவா இருந்தா என்ன? மனுஷங்க எல்லாம் ஒண்ணுதானே”

எனும் சுவாங் லீ குரலில் எழுவது அது. கோடி கோடி கீழ்மை அலைகள் காலம்தோறும் வந்தரைந்தாலும் அனைத்தயும் துமிகளாகச் சிதறிப் பறக்க விடும் நிலைத்த பேராற்றலான ஒரு சொல்.  மனுஷங்க எல்லாம் ஒண்ணுதானே.

ஆதிக்கம் எல்லை கட்டிய வேலிக்குள், பிறப்பு முதல் இறப்பு வரை, அவர்களின் தெய்வம் வரை  தலைமுறைகளாக மட்கிச் சாக விதிப்பட அந்த வெளிக்குள் அந்த வேலிக்கு வெளியிலான சமூக வாழ்வு,  அவர்களை வந்து தீண்ட, அந்த அடிமை வாழ்வில் எந்த வழியும் இல்லை. அந்த வேலியிலிருந்து திமிறி வெளியேற விரும்புகிறான் ஒருவன். அப்படி வெளியேறுபவனை வந்து ஏந்திக் கொள்கிறது ஓருலகக் கனவை முன்னெடுக்கும் ஒரு கை.

புலம்பெயர்ந்த மண்ணில் அனாதையாக செத்த மாரியின் நான்காம் தலைமுறை இனி அநாதை இல்லை. அவனுக்கு இனி தோழர்களுண்டு. அவனுக்கு இனி ஒரு கனவு உண்டு. இந்த சித்திரத்தை அளித்தமை கொண்டே இந்த நாவல் தனித்துவம் கொண்டதாகிறது.

”ஒரு காலக்கட்டத்தின், மனிதர்களின், வாழ்வின் உரைகல் இலக்கியம்” என்ற தனிகரற்ற இலக்கிய ஆசான் ஜெயகாந்தனின் சொல்லை,  தனது களத்தின் வழியே, அந்த நிலத்தின் மனிதர்கள் வழியே, அவர்களின் பாடுகள், மேன்மைகள் வழியே  ஆம் ஆம் என அடிக்கோடிடும் முக்கிய நாவலே இந்த மலைக்காடு.

1 comment for “மலையும் மனிதர்களும்

  1. Sunthari Mahalingam
    May 12, 2019 at 11:31 pm

    Vaaltthukkal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *