வல்லினத்தின் நாவல் இலக்கிய நிகழ்ச்சி அனுபவம்

0008வல்லினத்தை முகநூல் வாயிலாகவே அறிவேன். அதன் இணைய இதழ்களை தவறாது வாசிப்பதுடன் வல்லினத்தின் தரம் வாய்ந்த இலக்கிய செயல்பாடுகளினாலும் நேர்மையான விமர்சன தன்மையினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவள் நான்.

வல்லினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவிற்கு பலமுறை அழைப்பு வந்தும் அலுவல் காரணமாக செல்ல இயலவில்லை. ஆனால் இம்முறை வல்லினத்தின் “நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

இந்நிகழ்ச்சி 31.3.19 ஞாயிறு பிற்பகல் 1:55 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. அறிவிப்பின் படி0001 இரண்டுக்குத் தொடங்க வேண்டும். நான் சில சமூக சேவை கழகங்களிலும் சங்கங்களிலும் பொறுப்பு வகிக்கிறேன். இதுதான் முதன்முறை குறித்த நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகும். ஆடல், பாடல்,  இசை என்று கலந்து கொண்டவர்களின் செவிகளுக்கு இசை விருந்தளிக்கிறோம் என்கின்ற போர்வையில் செவிகளுக்கு ஒலி வன்முறை செய்யாது, நிகழ்ச்சி சரவணதீர்த்தாவின் வரவேற்புரையுடனும் ம.நவீனின் சிறப்புரையோடும் அமைதியாய் தொடங்கியது.

நாவல் இலக்கியம் நிகழ்ச்சியில் முதல் அங்கமாக ‘நாவல் அறிமுகமும் விமர்சனமும்’ நடைபெற்றது. வல்லினம் பதிப்பில் வெளிவந்த செல்வன் காசிலிங்கம் எழுதிய ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவலைத் தொட்டு கலைசேகர் அவர்களும், அ.பாண்டியன் எழுதிய ‘ரிங்கிட்’ நாவலைக் குறித்து ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்களும், கிழக்கு பதிப்பில் வெளிவந்த மூத்த படைப்பாளியான சீ.முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மழைக்காடு’ நாவலை எழுத்தாளர் இமையம் அவர்களும் தத்தம் பார்வையில் விமர்சனத்தை முன்வைத்தனர்.

0002

கலைசேகர்

‘மிச்சமிருப்பவர்கள்’ நாவல் ஹிண்ட்ராப் பேரணியைப் பற்றிய தழுவல் எனவும் இந்நாவலை எழுதிய செல்வன் காசிலிங்கம் சிக்கலினை நேரடி பார்வை வைக்காமல் / உட்புகாமல் ஒரு தனிமனிதன் எத்தகையிலான தூண்டுதலின் பேரில் பேரணியில் கலந்துகொள்கிறான் என்பதினை தற்கால மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையின் வாயிலாக நகர்த்தியுள்ளதாகவும், ஹிண்ட்ராப் பேரணி சம்பந்தப்பட்ட புனைவு வாசிப்பவரின் மனதினில் காட்சிகளாக விரியும் வண்ணம் சிறப்பாக உள்ளதாக கலைசேகர் பாராட்டினார்.

0003

ஶ்ரீதர் ரங்கராஜ்

மலாய் இனத்தவர்கள் சீன இனத்தவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் நடந்த பினாங்கு கலவரத்தை ஒட்டிய நாவல் ‘ரிங்கிட்’ என புரிந்துகொண்டேன். சமகால நிகழ்வினை எழுதுவது சுலபம், மூவின மனிதர்கள் வாழும் நிலத்தினில் அவர்களின் அன்றைய மனநிலையைச் சிறப்பாக அ.பாண்டியன் விவரித்துள்ளதாக தன் பார்வையை முன்வைத்தார் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்கள். மேலும் கட்டமைப்பு என்று காண்கையில் மொழி சிந்தனை இருக்கிறது ஆனால் புனைவிற்கான மொழி போதவில்லை என்றார். மொழியால் அகச்சிக்கலை மற்றும் கதாபாத்திரம் பற்றியும் சரிவர விவரிக்க தவறியதால் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மனதினில் பதியவில்லை எனவும் சாண்டில்யன் போல நிறைய இடங்களில் தேவையற்ற வர்ணனை கதையோட்டத்தைப் பாதிப்புள்ளாகியதாக தன் விமர்சனப் பார்வையைப் பதிவு செய்தார்.

0004

இமையம்

செம்பிலான் தோட்ட மக்கள் வாழ்ந்த வாழ்வியல் சித்திரத்தை கொண்ட படைப்பு ‘மலைக்காடு’ எனும் நாவல் என்றார் இமையம் அவர்கள். இந்நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள் பிராணிகள், மரங்கள், காற்று, நிலம் தொட்டு பேசிய அவர் தாம் இயற்கை வாயிலாக மனிதர்களை உணர்ந்து கொள்வதாக கூறியதோடு தாம் பொறாமை கொள்ளும் எழுத்தாளர் சீ.முத்துசாமி காரணம் தனி மனித நாவல் எழுதாது சமூக நாவல் எழுதியதையே காரணமென்றார்.

மூன்று வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய படைப்பினை மேற்சொன்ன எழுத்தாளர்கள் அவரவர் பார்வையில் தங்களுக்கே உரிய பாணியில் விமர்சித்த தன்மை என்னை பெரிதும் கவர்ந்தது. ஓர் அரங்கில் எழுத்தாளர்களின் நூல்களினை வெளியீடு செய்து அதனை சகப்படைப்பாளியைக் கொண்டே அவ்வெழுத்தாளர்களின் முன்னிலையில் தரமான, நேர்மையான விமர்சனத்தினை முன்வைப்பதென்பது வல்லினம் நடத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும் என்பது மறுப்பதற்கில்லை.

தொடர்ந்து ‘எழுத்தாளர்களும் கேள்வி பதில்’ அங்கமும் நடைபெற்றது. செல்வன் காசிலிங்கம்,0005 சீ.முத்துசாமி மற்றும் அ.பாண்டியன் அவர்களிடம் ம.நவீன் அவர்கள் கேள்விகளை முன்வைத்தார். மேற்சொன்ன “நாவல் அறிமுகமும் விமர்சனமும்”  அங்கத்தில் நூல்களினை விமர்சித்த பின் அதை தொட்டு எழுந்த கேள்விகளைப் பார்வையாளர்கள் முன்நிலையில் கேள்விகளாய் கேட்கப்பட்டதுடன் அதற்கான பதில்களை மூன்று எழுத்தாளர்களும் பார்வையாளர்கள் முன்நிலையில் பதிலுரைத்ததும் சிறந்ததொரு அங்கமாக அமைந்தது. எனக்கு இது புதுவித அனுபவமாக இருந்தது,  காரணம் ஒரு நூலினை/ நாவலை வாசித்தபின் அதை குறித்த சில கேள்விகள் எழுவது இயல்பென்றிருந்தேன். ஆனால் நாம் ஒரு நூலினை/ நாவலை உள்வாங்கியே பின் எழும் கேள்விகளை எழுத்தாளர்களிடமே முன் வைக்கலாம் என்பதனை அன்று தெரிந்து கொண்டேன். கேள்விக்கான பதில்களைப் பார்வையாளர்கள் திருப்திப்படும் வண்ணம் எழுத்தாளர்கள் அளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்த அங்கமாக ‘உலக இலக்கியம்’ தொடர்ந்தது. இவ்வங்கத்தில் உலக இலக்கியமான இரு நாவல்கள் தொட்டு ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் பேசினார். செர்பியா க்ரோவோஷிய மொழி இலக்கியமான மிலோராத் பாவிச் எழுதிய ‘கசார்களின் அகராதி’ மற்றும் லத்தீன் அமெரிக்கா இலக்கியமான கார்லோஸ் ஃபுயந்தஸ் எழுதிய ‘ஆர்த்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ இவ்விரண்டு நாவலையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார் ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்கள்.

0009‘கசார்களின் அகராதி’ எனும் செர்பியா க்ரோஷியா மொழி நாவலானது இரண்டு ஆண்டுகளிலேயே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளிவந்தது எனவும் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்ய ஆங்கில வாசிப்பு மிக்கவர்கள் ஏனோ முனைப்பு காட்டவில்லை என்றார். இந்நாவலானது மூன்று பெரும் மதங்களான கிருஸ்து, இஸ்லாம், யூதம் என்று அந்தந்த மதம் சார்ந்து பேசும் மூன்று நாவல்களாகும். கசார்கள் இனம் எவ்வாறு தங்களுடைய மதங்களுக்குள் நுழைந்தனர் என்று இம்மூன்று நாவல்களும் பேசுகிறது.  ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கசார் என்றொரு இனம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னர் தங்களுடைய எண்ணூறு வருட தொன்மையான பண்பாடு, அரசியலினை விட்டு வேறு மதத்தினை ஏற்றுக்கொண்டது.  அதுவும் அரசியல் சம்பந்ததுடன் எவ்வாறு மாற்றம்  நிகழ எத்தகைய காரணிகள் உந்து செய்ய வைத்தது என்பதை பேசும் நாவல் இதுவென்றார். அடுத்து அவர் சொன்னது என்னை பிரம்மிக்க வைத்தது. இந்நாவலை எப்பக்கமிருந்தும் வாசிக்க தொடங்கலாம்; புரிந்தும் கொள்ளலாம்; அனைத்து ரீதியிலும் வாசிக்கலாம், முழுவதும் படித்து முடிக்க வேண்டிய அவசியமில்லை இதுவே இந்நாவலின் சிறப்பம்சம் என்றார். சரி, தவறு என்று யோசித்து பேச வேண்டியுள்ள சூழலில் இந்நாவலில் கதைகள் புனைந்து அதனை தொன்மமாக மாற்றி பெரும் மதங்கள் அவை நடத்தும் அரசியலைக் கொண்டு வெளிப்படைக்காக கூறியுள்ளார். நடுநிலைவாதிகள் சுதந்திரமாக மதம் போன்றவற்றை பேசுவதில்லை, சிறுபான்மை இனத்தின் மதத்தினை வெளிப்படையாக பேசவே யோசிக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட இனத்தவரின் வாழ்வியல், உலக அரசியல், மதமாற்றம் போன்றவற்றை அரசியல் கொண்டு இந்நாவலில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய மொழிகளிலேயே முதலில் தமிழ்மொழியில்தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் ஶ்ரீதர் ரங்கராஜ்.

அடுத்தது லத்தீன் அமெரிக்கா இலக்கியமான கார்லோஸ் ஃபுயந்தஸ் எழுதிய “ஆர்த்தேமியோ க்ரூஸ்சின் மரணம்” எனும் நாவலானது அமெரிக்கா பயங்கரவாதத்தையும், அரசியலையும் பேசும் நாவலாகும். இந்நாவலில் வாழ்வியல் முறை, போதைப்பொருள் விநியோகம்,  அரசியல்வாதி பெயர் போன்றவற்றை தைரியமுடன் குறிப்பிட்டுள்ளார் இந்நாவலை எழுதிய  கார்லோஸ் ஃபுயந்தஸ். இந்த நாவலில் பேசப்படுகிற அரசியலானது எக்காலத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதாலேயே இது உலக இலக்கியங்களுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் கூறினார்.

உலக இலக்கியம் என்பதை கேட்டிருக்கின்றேனே ஒழிய அதனை எவ்வாறு, ஏன் உலக இலக்கியங்களுள் ஒன்றாக குறிப்பிடுகிறார்கள் என்பதனை நான் இன்றுவரை அறியேன். அன்றைய நிகழ்வில் தான் அவற்றினை அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் தரம், கட்டமைப்பு, வடிவ நேர்த்தி, யுத்தி பற்றி கூறி முடிக்கையில் எப்படியேனும் இவ்விரு இந்நாவலை வாங்கி வாசித்தறிந்திட வேண்டும் என்கிற அறிவு தாபம் மேலோங்கியது. இவ்விரு நூல்கள் மட்டுமின்றி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட ஏனைய எழுத்தாளர்களில் நாவல்களையும் வாங்கிக் கொண்டேன்.

இறுதியாக ‘யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி பரிசளிப்பு’ நிகழ்ச்சி நடந்தது.0006 இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களில் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.  இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு தலா மலேசியா ரிங்கிட் ஆயிரம் பரிசாக அளிக்கப்பட்டது. வெற்றியாளர்களாக அறிவிக்கப்பப்பட்டவர்கள் எழுதிய சிறுகதைகள் குறித்த விமர்சனத்தினை முன்வைத்தார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.  ஒவ்வொரு சிறுகதைகள் தொட்டும் அவர் வைத்த பார்வையும், விமர்சனமும் நேரம் கடந்து செல்வதை கூட உணர வைக்கவில்லை. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் எழுதிய சிறுகதைகள் ஒரு புத்தகமாக பதிக்கப்பட்டு வெளிவரும் எனவும் அதனை எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் வெளியீடு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

0007

சு.வேணுகோபால்

இந்நிகழ்வானது மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது. இம்மாதிரியான தரமான நிகழ்ச்சிக்காக நேரத்தினை சிறிது அதிகரித்திருக்கலாமோ என்றே தோன்றியது. நான் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளில் நல்ல தரமான மனமும் நிறைவான நிகழ்வாக இந்நிகழ்வினை கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். என் போன்ற இனிவரும் இளைய சமுதாயத்திற்கும், இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கும் இத்தகைய நிகழ்ச்சி நல்வழி காட்டும். ஆகவே வல்லினத்தின் இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் மேலும் தொடர வேண்டுகிறேன். தரமான நிகழ்ச்சிகள் அதாவது அரசியல், சினிமா, கேளிக்கை சம்பந்தமின்றி நடைபெறுவதென்பது அரிதாகி விட்டது. வீணே ஒப்புக்கு இலக்கியம் நிகழ்ச்சியென்று கூறி அரசியல் சாயம் பூசி தகவல் ஊடகங்களின் புகைப்படத்தினை பெரிதாக வெளியிட்டு தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் உள்ளோர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இம்மாதிரியான தரமான புரிதலோடு கூடிய இலக்கிய நிகழ்ச்சியை நடத்தும் வல்லினம் குழுவை மனமானது வாழ்த்தவும் பாராட்டவும் செய்தது. இனிவரும் வல்லினம் நடத்தும் அடுத்தடுத்த சிறுகதை எழுதும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கனவோடு அன்றைய நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இல்லம் வந்தடைந்தேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...