மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 2

பகுதி  2

கேள்வி : பெரும்பாலும் மலேசிய இலக்கியத்தைத் தமிழக அல்லது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் கவனிப்பதில்லை என்ற கூற்று உள்ளது. நீங்கள் எப்படி?

மகேந்திரன், பினாங்கு

பதில் : இக்கேள்வி மிக முக்கியமானது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் எதிர்காலச் செயல்பாடுகளைக் குறித்து  சிந்திக்கத் தூண்டும் கேள்வி. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் மலேசிய இலக்கியவாதிகளின்; கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளைத் தமிழகச் சிறுபத்திரிகைகள் மற்றும் வல்லினத்தின் மூலம் வாசித்து வருகிறேன். புத்தகங்கள் பொதுவாகத் தமிழகத்தில் கிடைப்பதில்லை. நவீனத் தமிழிலக்கியத்துடன் இணைத்து மலேசிய  எழுத்துக்களை வாசிப்பதற்கான இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

  • நவீன மலேசிய இலக்கியத் தொகுப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும்.
  • தமிழக இலக்கிய இதழ்களுக்கு நேரடியாக மலேசிய படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.
  • இதுவரை வெளிவந்துள்ள மலேசிய எழுத்துக்களை மறுபதிப்பு செய்து உரிய மறுவாசிப்பை தொடங்கி வைக்கவேண்டும்.

இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : வெளிப்படையாகச் சொல்லுங்கள். சினிமாவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் போவீர்களா இல்லையா?

மிதுனன், திருச்சி

பதில் : எல்லோரையும் இந்த எளிய சூத்திரத்திற்குள் அடைத்துவிட முடியுமா தோழர். சிலர் முதலில் சினிமாவை, சினிமாக்காரனை திட்டி எழுதுவார்கள். பிறகு, கோடம்பாக்கத்திலிருந்து ஒரு அழைப்பு வந்ததும் இராபகல் பாராமல் தேவ ஊழியம் செய்யக் கிளம்பி விடுவார்கள். ‘நாய் வித்த காசு குரைக்காது’ என்னும் கொள்கையாளர்கள்  இந்த பிழைப்புவாதிகள். 2002-ல்  சில இயக்குநர்கள் அவர்களின்  படங்களில் பணியாற்ற விடுத்த அழைப்பை மறுத்திருக்கிறேன். அப்போது எனக்கு நிலையான வருமானம் கூட கிடையாது.  தமிழில் மாற்றுத்  திரைப்படக் கலாச்சாரம்  உருவாக வேண்டுமென்ற கனவும் பேராசையுமிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்  குறும்படங்கள்  எடுக்கும் தோழர்கள் என்னிடம் கதைகளைச் சொல்லி அவர்களுடன் பணியாற்ற அழைத்தனர்.  திரைப்படத்திற்கான முதலீட்டைத் திரட்ட முடியாமல் இத்திட்டங்கள் நின்றுபோயின. மாற்றுத் திரைபடங்களில்  ஆர்வமுள்ளவர்களிடமிருந்து பங்குகளைத் திரட்ட ஆலோசனை கொடுத்தேன். அதுவும் கைகூடவில்லை. அவர்களும் மாற்றுத் திரைப்படம் உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதாகப் பிறகு கேள்விப்பட்டேன். எல்லோருமே பணத்துக்கும் அர்த்தமற்ற புகழுக்கும்  அடிமையானவர்கள் கிடையாது. என்னைப் போல் ஒரு சிலர் இருக்கிறார்கள்.

கேள்வி : நான் மிகப் புதிய வாசகி. இணையத்தளத்தில் மட்டுமே வாசிக்கிறேன்எனக்கு பெண்ணியம் தொடர்பாக அறிய ஆவல். ஆதை அறிய எந்தத் தளங்களுக்குச் செல்லலாம். எளிய  அறிமுகம் கிடைக்குமா? நீங்கள் விளக்க முடியுமா? ஆர்வத்தில் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்

ரஞ்சனி, நியூயார்க்.

பெண்ணியம் ஒரு அரசியல் வாழ்வியல் தேர்ந்தெடுப்பு முறை. பெண்ணிய தத்துவத்துக்கு அர்த்தப்பூர்வமான பங்களிப்பை எல்லாத் தளங்களிலும் சமரசமில்லாமல் போராடுவதன் மூலமே அளிக்க முடியும். குடும்பம், சாதி, சமூகம், சமயம், பொருளாதாரம், அரசியல், போன்ற நிறுவனக் கட்டுமானங்களில் மட்டுமில்லாமல் காலம், வெளி, மொழி, கலாச்சாரம், படைப்பு, கருத்து வெளிப்பாடு என அனைத்துத் தளங்களிலும் ஒடுக்கப்படும் பெண் தன்னிலை சுதந்திரமாக வாழும் உரிமைக்காகப் போராடுவதுதான் பெண்ணியம் என்று எளிமைப்படுத்திக் கூறிவிடலாம். பால் அடையாளத்தைக் கொண்டோ உடல் அடையாளத்தைக்  கொண்டோ பெண்ணை ஆணுக்குக் கீழாகவோ, இரண்டாம் நிலையிலோ, அடிமை நிலையிலோ  வைப்பதை நியாயப்படுத்தும் கருத்துக்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள், மன அமைப்புகள் அனைத்தையும் மாற்றியமைப்பதற்கான தத்துவம் மற்றும் நடைமுறை இரண்டும் இணைந்ததுதான்  பெண்ணியம்.  இது  ஒரே போன்று இருப்பதும் இல்லை.   பெண்ணியம் தேசம் மற்றும் தேசிய அரசியல் சார்ந்தும் நாட்டுக்கு நாடு  வேறுபாடுகளுடனும் செயல்பட்டு வருகிறது.  கருப்பு பெண்ணியம், தலித் பெண்ணியம், மேற்குலகப் பெண்ணியம், மார்க்சியப் பெண்ணியம், வலதுசாரி பெண்ணியம், அரபு பெண்ணியம்,  புரட்சிகர பெண்ணியம், மிதவாத பெண்ணியம், பின் காலனியப் பெண்ணியம், பசுமைப் பெண்ணியம் இப்படியாக  வர்க்க,  இனத் தன்மைகள் சார்ந்து பெண்ணியச் செயல்பாட்டாளர்கள்  உலக அரசியலைத் தங்கள் வாழ்நிலை மற்றும் வரலாறு சார்ந்து பகுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு,  போர் எதிர்ப்பு, அடிப்படை மனிதவுரிமை,  நிலவுரிமை, அம்பேத்கரியம், மார்க்சியம் மற்றும் இயற்கை வளங்களை மீட்கும் சுற்றுச்சூழலியல் இவைகளை உள்ளடக்கிய பசுமைப் பெண்ணியம் என்னுடையது.  கென்யாவின் வாங்கரி மாத்தாய் மற்றும் வந்தனா சிவாவை போன்றோரை நான் பசுமைப் பெண்ணியியக்கத்தின் முன்னோடிகளாகப் பார்க்கிறேன். இந்தியாவில் உத்திரகண்ட ; மாநிலத்தில்  ‘நவதான்யா’ அமைப்பை உருவாக்கிய வந்தனா சிவா, காந்தியத்தை அடிப்படையாக வைத்து பசுமைப் பெண்ணியத்தை கட்டமைக்கிறார். நான் அம்பேத்கரியத்தையும் இணைத்து பசுமைப் பெண்ணியத்தை உருவாக்குகிறேன். கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடுமையான அடக்குமுறைகளுக்கு முகம்கொடுத்து வல்லரசுகளை எதிர்த்துக் கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களை நான் பசுமைப் பெண்ணியப் போராளிகளாகவே காண்கிறேன். தலித், பழங்குடி, விளிம்பநிலை மற்றும் சிறுபான்மையினப் பெண்களின் விடுதலையில்தான் இந்தியச் சமூக விடுதலை அடங்கியுள்ளது. இவர்களை வெளியேற்றிவிடும் கோட்பாடுகள், செயல்பாடுகள் எந்தக் காலத்திலும் சமூக விடுதலையைக் கொண்டுவர முடியாது.

தமிழில் பெண்ணியம் தொடர்பாக இணையத்தில் வாசிக்க சில வலைதளங்களே உள்ளன. நான் நடத்திய பெண்ணிய இதழான ‘அணங்கு’ ஆறு இதழ்கள் கீற்று.காம் தொகுப்பில் உள்ளது (http://www.keetru.com/index.php?option=com_content&view=section&id=33&layout=blog&Itemid=215) அந்த பக்கத்திற்கு சென்று நீங்கள் படிக்கலாம். நாங்கள் தற்போது தொடங்கியுள்ள  ‘பன்மெய்’ வலைதளத்திலும் (http://www.panmey.com) கட்டுரைகள் உள்ளன. தொடர்ந்து பெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் வெளிவர இருக்கின்றன. ‘பெண்ணியம்’ வலைதளத்தில் (http://www.penniyam.com) பெண்ணிய ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருகின்றன. நீங்கள் ஆங்கிலத்தில் படிப்பவராக இருந்தால் ஏராளமான ஆக்கங்கள் தகவல்கள் இணையத்தில்  கிடைக்கின்றன.

கேள்விஉங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்பவர்களை எவ்வாறு அணுகுவீர்கள்?

மதன் & சிவா, சென்னை.

பதில் : என் எழுத்தை மீறி என்னை  விமர்சித்து எழுதினால்,  சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்வேன். என்னை மட்டுமின்றி பிற பெண் படைப்பாளிகளையும் தனிப்பட்டமுறையில் விமர்சித்த ஊடகங்கள் மற்றும் நபர்களின் மீது  சட்டபடி  நடவடிக்கை எடுத்திருக்கிறேன், கண்டனம் தெரிவித்திருக்கிறேன்.   தற்போதுள்ள இந்தியச் சட்டப்படி பெண்களை இழிவுபடுத்தும்  செயல்கள் மட்டுமின்றி  சொற்களும்,  சைகைகளும் தண்டனைக்குரியவை.

1 comment for “மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 2

  1. param
    October 21, 2013 at 12:51 pm

    மாலதியின் பதில்கள் அருமை. மார்க்ஸ் மீது அவருக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை…:(

    பரம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...