எள்ளலும், பகடியும், தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட பிரளயன், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழின் தொன்ம ஞானமும் நிகழ்வாழ்வின் மீதான கூரிய பார்வையும் ஆற்றல் மிக்க படைப்புச் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நாடகத்துக்கான பயிற்சி வழங்கும் இவரை அடையாளம் கண்டு மலேசிய மண்ணுக்கும் அவர் திறமை பயன் தர வேண்டும் என மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் முனைந்துள்ளன.
தமிழில் பொதுபுத்தியில் நம்பப்படும் விடயங்களைக் கேள்வி எழுப்புபவர் பிரளயன். படைப்பாளிக்கு இருக்க வேண்டிய கூர்மையான சமூக நோக்கும் மார்க்ஸியத் தத்துவ சிந்தனை மரபும் கொண்ட இவரின் இயக்கத்தில் மலேசியாவில் முதன்முறையாக நவீன வீதி நாடகம் நடைப்பெற உள்ளது.
கற்றல் என்பது இறுக்கமாகிவிட்ட சூழலில் மாணவர்கள் பள்ளியைப் புறக்கணிப்பது இயல்பாக நடக்கும் செயலாகிவிட்டது. பள்ளி தங்களுக்கு எதையும் தரவில்லை என குறைபடும் கூட்டம் விரிவடைந்து வருகிறது. மொழி, கணிதம் அறிவியலோடு கற்பித்தல் தன்னை நிறுத்திக்கொள்கிறது. தேர்வுகளும் அதை மட்டுமே மையப்படுத்துகின்றன. இச்சூழலில் மாற்று முறையிலான கல்வி அவசியமாகிறது. இதை நன்கு அறிந்த அமைப்பு ‘மை ஸ்கீல்’ அறவாரியம்.
கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியில் பாதியில் படிப்பைத் தொடராமல் விட்டவர்களை அரவணைத்து, கல்வி வழங்கி, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி இன்று தமிழ்ச்சமுதாயத்தின் மிக முக்கிய மாற்றத்திற்கு வித்திடும் அவ்வறவாரியம் தனது பிரிமுஸ் (PRIMUS) கல்லூரி மாணவர்களுக்கு நாடகப்பட்டறை ஒன்றினையும் கடந்த சில நாட்களாக நடத்திவருகிறது. இந்த நாடகப் பட்டறைய வழி நடத்துபவர் பிரளயன் என்பதுதான் அதன் சிறப்பு. அதோடு இத்திட்டத்தில் வல்லினம் இயக்கமும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
கடந்த காலங்களில் வல்லினம் இயக்கம் மலேசியாவில் பல கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது பலரும் அறிந்த தகவல். அவ்வகையில் மை ஸ்கீல் அறவாரியத்தில் இம்முன்னெடுப்பில் வல்லினம் இயக்கமும் இணைந்து நல்லதொரு மாற்று முயற்சியை ஏற்படுத்த முனைந்துள்ளது.
வீதி நாடகம் என்பது அரங்கை எதிர்ப்பார்க்காதது. மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்திக்காட்டப்படுவது. மேடையில் பார்வையாளனிடம் தனித்து நிற்காமல் மக்கள் கலையாக விளங்கும் இம்முறை மலேசியாவுக்குப் புதிது எனலாம். நவீன வாழ்வில் கல்வி மாணவனின் மேல் திணிக்கும் அதிகாரத்தைக் கேள்வி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதி நாடகத்தில் முழுக்க முழுக்க மை ஸ்கீல் மாணவர்கள் நடித்துள்ளனர். பின்தங்கிய மாணவன் என்பது பள்ளியால் உருவாவதே தவிர அனைத்து மாணவர்களுமே தன்னளவில் திறன் மிக்கவர்கள்தான். அத்திறன் மாறுபடுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நாடகம் அமைக்கப்படுகிறது.
முற்றிலும் இலவசமாக பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்படும் இந்த வீதி நாடகம் 13.10.2013 (ஞாயிறு) பத்துமலை பொது மண்டபம் அருகாமையில் நடைபெறும். பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மை ஸ்கீல் அறவாரியம் மற்றும் வல்லினம் கேட்டுக்கொள்கிறது.
மேல் விபரங்களுக்கு:
ம.நவீன் 0163194522 |திரு தேவா 0123465212
நல்ல முயற்சி!