யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்

yavanikaவல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வாக நடந்த எழுத்தாளர் ‘யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்’ எனும் நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் வாசகர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.  தொடக்க அங்கமாக எழுத்தாளர் கே.பாலமுருகன் யவனிகா அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் யவனிகா இன்றைய நவீன இலக்கிய சூழலில் முக்கிய ஆளுமையாக திகழ்கிறார். இவரின் “கடவுளின் நிறுவனம்” மற்றும் “நிறுவனங்களின் கடவுள்” நூல்கள் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான படைப்புகளாகும். நிகழ்வின் தொடர் அங்கமாக சமீபத்தில் வல்லினம் பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவு’ (சிறுகதை தொகுப்பு),  பூங்குழலியின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ (கவிதை தொகுப்பு) மற்றும் செம்பருத்தி பதிப்பகத்தில் வெளியீடான பூங்குழலியின் மற்றுமொரு கவிதை தொகுப்பான ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்  ‘ போன்ற படைப்புகள் மீதுள்ள தனது விமர்சன பார்வையை எழுத்தாளர் யவனிகா பகிர்ந்து கொண்டனர். கே.பாலமுருகனின் சிறுகதைகள் பற்றி பேசிய எழுத்தாளர் யவனிகா ,  இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு சிறுகதை தொகுப்பு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் இயல்பான வாழ்வை மிக துல்லியிதமாக விவரித்துக் செல்கின்றன. மேலும், இவரது படைப்புகள் சமூகத்தின் அரசியலும் பேசுகின்றன. சமுதாயத்தால் கொண்டாடப்படும் போலியான புனிதங்களையும் சம்பிரதாயங்களையும் கட்டுடைப்பு செய்து முதலாளித்துவ  சுரண்டல்களையும் மிக ஆழமாக எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது சிறுகதை தொகுப்பில் பதிவு செய்துள்ளதாக  யவனிகா குறிப்பிட்டார். இவரை தவிர்த்து எழுத்தாளர்  மஹாத்மனின்  சிறுகதைகளையும் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது மிக அவசியம்  எனவும் யவனிகா வலியுறுத்தினார்.

ம.நவீனின் ‘கடக்க முடியாத காலம் ‘ கட்டுரை தொகுப்பைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், பத்திகள்   எழுதுவது  முக்கியம் எனவும் காரணம் அவை வாழ்க்கையோடு   நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த கூடியதுயென குறிப்பிட்டார். தற்கால இலக்கிய சூழலில் பின் தங்கியிருக்கும் படைப்பிலக்கியத்திற்கு விமர்சனங்கள் அவசியம் எனவும் யவனிகா வலியுறுத்தினார். மேலும் பூங்குழலியின் கவிதை தொகுப்பான “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” தொடர்பான விமர்சனங்களும்  முன்வைக்கப்பட்டன. பின்நவீனத்துவ சாயலில் எழுதும், சிந்திக்கும் பூங்குழலியின் சில ஆழமான புனைவுகளை குறிப்பிட்டு பாராட்டினார். பின்பு வாசகர்களுடனான கலந்துரையாடலில் கவிதை புனைதல் குறித்த விவாதங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார்.

நவீன சூழலில் எழுதப்படும் கவிதைகளின் பலவீனங்கள் குறித்தும், கவிதைகளில் காலத்தினையும், திணையையும் இணைத்து புனைதல் கவிதைக்கு  மிக முக்கிய  அம்சம் எனவும் விளக்கினார் . இது போன்ற புனைவுகளே பின் தங்கியிருக்கும் கவிதை சார்ந்த  படைப்பிலக்கியத்திற்கு அனைத்துலக ரீதியில் அதன் தரத்தினை நிர்ணயிக்கவல்லது எனவும் விவாதத்தின் முடிவில்  எழுத்தாளர் யவனிகா தெளிவுப்படுத்தினார்.

படைப்பிலக்கியத்தில் கவிதை மீதான எனக்கிருக்கும் ஆதீத ஈடுபாட்டால் இவ்விவாதத்திற்கு பிறகு நான் வாசித்த புனைவுகளை மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி ஆழமான புரிதலையும், கவிதையின் பின்புலமும் அதன் தன்மையும் அறிந்து கொள்ள முடியுமென நம்புகிறேன்.

எழுத்தாளர் யவனிகாவுடன் மலேசிய வருகை புரிந்த மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீதர் அவர்கள் மொழிபெயர்ப்பு குறித்த அவசியத்தையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இது போன்றே நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம்   தீவிர   வாசிப்பில் ஈடுபடும் அல்லது படைபிலக்கியத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள்  தங்கள் இலக்கிய தளத்தினை  அடுத்த கட்டத்திற்கு கொண்டு  செல்ல முடியும்.

உரையாடல்களும் அதை ஒட்டிய வாசிப்புமே எழுத்தின் சிந்தனையின் ஆற்றலை வளர்க்கும் எனப்புரிந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...