குவர்னிகா: டாக்டர் சண்முகசிவா நேர்க்காணல் குறித்து…

குவர்னிகா தொகுப்பில் உள்ள டாக்டர் சண்முகசிவாவின் “மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று” நேர்காணல் குறித்து நீங்கள் பேச வேண்டும் என நவீன் கேட்டபோது சிறு மௌனத்தை மட்டுமே என்னால் பதிலாக தர முடிந்தது. நீங்கள் அவரது நேர்காணல் குறித்து எதுவும் பேசலாம் என மேலதிகமாக நவீன் சொன்ன பிறகு பேசுவதற்கான வார்த்தைகளுக்காக சில நினைவுகளை முதலில் சேகரிக்கத் தொடங்கினேன்.

சண்முகசிவாவை நான் முதலில் அப்போது ஜாலான் ஈப்போவில் இருந்த செம்பருத்தி அலுவலகத்தில்தான் சந்தித்தேன். அன்றைய செம்பருத்தி ஆசிரியர் மறைந்த கணபதி கணேசனைச் சந்திக்க அங்கு வருவார். அப்போது நான் ஒரு பள்ளி மாணவி. அப்போதெல்லாம் டாக்டரோடு நான் ஒரு சில வார்த்தை பேசுவதோடு சரி.

அடுத்தாக டாக்டரை அதிகம் சந்தித்தது மலாயாப் பல்கலைக்கழகத்தில் தான். இந்த பேட்டியில் கூட பல்கலைக்கழகங்களுக்கான அவரது வருகையை அவர் பதிவு செய்திருக்கிறார்.

“பல்கலைக்கழகங்களில் நடக்கும்பட்டிமன்றம் போன்ற இடங்களில் கூட மாணவர்கள் சுதந்திரமாய் பேச தடைவிதிக்கப்பட்டிருந்தது, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு குறித்தும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும்  ஒரு பய உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அத்தகைய கூட்டங்களில் நான் நடுவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் கூட மிகத் தீவிரமான விமர்சனங்களை முன்வைக்க முயலும் பொழுதெல்லாம்  அங்குள்ள பேராசிரியர்களுக்கு அது பிடிக்கவில்லை”

நான் ஒரு பட்டிமன்ற, சொற்போர் பேச்சாளராக பல்கலைக்கழக காலக்கட்டத்தில் இருந்தபோது பெரும்பாலான பட்டிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதியாக டாக்டர் சண்முகசிவா அமர்ந்திருப்பார். இரவெல்லாம் கண்விழித்து செம்பருத்தி, இணைய பக்கங்கள், ஆய்வு நூல்கள் என ஆய்வு செய்து முன்வைக்கும் புள்ளி விபரங்கள், கருத்துகள், கோபங்கள் என எல்லாவற்றையும் மிக அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார். அவர் மட்டும்தான் நாங்கள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என ஒருபுறம் எண்ணத் தோன்றும்.

நாங்கள் எல்லாரும் பேசிமுடிய டாக்டர் கொஞ்சம் தான் பேசுவார். அந்தப் பேச்சு இப்படித் தொடங்கும். “ நீங்கள் இந்த தலைப்பை இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்திருக்கலாம்.” “தம்பி! என்ன பேசினாலும் பேச்சில் கண்ணியம் காக்கப்பட வேண்டும்” என அவர் பேசி முடிக்கும்போது ஒரு கோபம் எங்களுக்கு வந்திருக்கும். நாங்கள் பார்க்காத ஒரு பார்லையில் சண்முகசிவா அந்த தலைப்பைப் பார்த்திருப்பார். ஆனால் எப்போதும் எந்த ஆழத்தில் இறங்கி அதைப் பார்க்க வேண்டும் என டாக்டர் சொன்னதே இல்லை. அதை எங்களிமே அவர் விட்டு வைத்திருக்கிறார் இந்த நிமிடம் வரை.

ஆனால், அந்த ஆழத்தை ஒரு சில விழுக்காட்டுகள் நான் விளங்கிக் கொண்டபோது சொற்போர்களில் பேசுவதை நான் முற்றாக நிறுத்தியிருந்தேன். நாம் முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் வெறும் எண்கள் எனவும் நான் பேசுவது வெறும் கைத்தட்டலுக்கும் பரிசுக்கும், அதனால் கிடைக்கும் வெறும் சொற்ப புகழுக்காகவும் என அந்த ஆழத்தைக் கண்டடைந்த போது நான் உணர்ந்திருந்தேன். அந்த ஆழம் என்பது மனிதம். அந்த ஆழம் என்பது ஒடுக்கப்பட்ட, பேச முடியாத மனிதன் ஒருவனின் குரலாக ஒலிப்பதன் தேவை. அவனை வெளிக்கொணர்வது அல்லது அவனது பிரச்சனையை சமூகத்தின் முன்வைத்து சமூகத்தைக் கேள்வி எழுப்புவது,  அவன் அவலம் போக்க நான் என்ன செய்தேன் என்ற கேள்வி! இப்படி எதுவாகவும் அந்த ஆழம் இருக்கலாம்.

டாக்டர் சண்முகசிவாவின் பல்வேறு திறன்கள் நமக்கு வியப்பளிக்கின்றன. ஒரு பாடகனாக பயிற்சி எடுத்தது தொடங்கி பின் தன்னிடமிருந்த ஓவியத் திறமையை வளர்த்துக் கொள்ள எடுத்த முயற்சிகளும் வயலின் பழகிய கதையும் பல கதைக் களங்களை நமக்கு தந்து போகின்றன. இசையில் ஈடுபட முடியாவிட்டாலும் சொற்களில் அவருக்கு இருந்த ஆர்வம் எவ்வாறு டாக்டர் சண்முகசிவாவை ஓர் இலக்கியவாதியாக்கியது வரை அவரது நேர்க்காணல் ஒரு சீரிய கதையாக நம்முன் விரிகின்றது. அவரை ஓர் இலக்கியவாதியாக்க ஊக்கபடுத்தியவர்களையும் மறக்காமல் டாக்டர் நினைப்படுத்துகின்றார்.

தொடக்க காலத்தில் ஒரு விலங்கியல் மருத்துவராக இருந்தாலோ என்னவோ மனிதம் குறித்து அதிகம் பேசுகிறார் டாக்டர் மா. சண்முகசிவா. மனிதன் எப்போதும் விலங்குகளை மட்டம் தட்டுகிறான். மனிதத்தைத் துறந்துவிட்டு அவனும் ஒரு விலங்காகவே “ சில வேளைகளில் மனிதனோடு ஒப்பிட வேறு எதையோ ஒன்றை நாம் தேட வேண்டியிருக்கிறது” மாறிப் போகிறான்.

ஆனால், மனிதனை விட அதிக மனிதத்துடன் விலங்குகள் இருக்கின்றன. அந்த மனிதத்தையும் டாக்டர் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அவரை இன்னும் மேம்பட்ட நிலையில் இருத்திப் போகிறது.

தனது நேர்காணலிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனிதம் குறித்தே சண்முகசிவா பேசுகிறார்.

“இலக்கியமும் மருத்துவமும் இரு வேறுபட்டத்துறைகளாகத் தோன்றினாலும் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். இரண்டின் மையப்புள்ளியும் ‘மனிதன்’ அவனது ‘வாழ்வு’ என்பதிலிருந்து தொடங்கி பின் விரிவடைகிறது” என்கிறார் சண்முகசிவா.

யாரைப் பார்த்தாலும் அவரது வருகையை அங்கீகரித்து மெல்லிய புன்னகையோடு தலையாட்டும் கலை இன்றைய நிலையில் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை. டாக்டருக்கு அந்த கலை அவரது அடையாளமாகியிருக்கிறது. டாக்டர் சண்முகசிவா மனிதர்களை அதிகம் கண்காணிப்பவர். அவர்களது நகர்வுகளை அவர் மிக கவனமான அவதானிக்கிறார். அதன்பின்பே தன்னிடம் இருந்து எதை வழங்க வேண்டும் என அவர் முடிவெடுக்கிறார்.

“பதவிகளை ஏற்றுக்கொள்ளும் மனம் உள்ளவர்களுக்குதான் சங்கங்கள் உருவாகின்றன. எனக்கு சங்கங்கள் தேவைப்படுவதில்லை. சங்கங்களுக்கு நான் தேவைப்பட்டால் என்னாலான உதவிகளை செய்துவிட்டு விலகிவிடுகிறேன். சமூகத்தில் நிகழும் அனைத்தின் மேலும் நமக்கு விமர்சனம் இருக்கும்போது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட இயக்கங்களில் இயங்காமல் இருப்பதே நல்லது”

பெரும்பாலும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என் எண்ணத்தோடுதான் பலரும் முன்வருகிறார்கள். ஏதாவதொரு சங்களில் இணைந்தும் கொள்கிறார்கள். ஆனால்> பின் சங்கமே அவர்களின்  செயல்பாடுகளை முடக்கி அவர்களின் உண்மை நோக்கத்தை மறக்கடித்து விடுகிறது. பின் பதவிகளுக்காகவும் அதன் வழி கிடைக்கின்ற அனுகூலங்களுக்காகவும் அடித்து கொள்கின்ற நிலையும் ஏற்பட்டு விடுவது வருத்தமானதொரு நிதர்சனமாகும்.

என்னிடமிருந்து இலக்கியம் வருவதைவிட இளைஞர்களிடமிருந்து வருவதுதான் எனக்கு திருப்தி என டாக்டர் சண்முகசிவா தனது நேர்க்காணலில் குறிப்பிடுகிறார். ஆனால், தனது அடையாளமாக, அனுபவமாக டாக்டர் முன்வைக்கும் அவரது படைப்புகள் மூலமும் அவர் இளைஞர்களிடமிருந்து இன்னும் வலுவான படைப்புகளை வெளிக்கொணரலாம் என்பது என் எண்ணம். டாக்டர் சண்முகசிவாவிடம் நம் மலேசிய சமூகத்திற்குத் தேவையாக நேரடி களப்பதிவுகள் நிறைய இருக்கின்றன. அதனை பதிவாக்கப்பட வேண்டும். கவிதையாக, சிறுகதைகளாக, நாவல்களாக, கட்டுரைகளாக, பத்திகளாக உகந்த வடிவத்தில் அவை பரிணமிக்க வேண்டும். அந்த பதிவிற்காக என்னைப் போன்ற இளைய தலைமுறை எழுத்தாளர்கள் காத்திருக்கின்றனர்.

மருத்துவர் என்ற தொழில் ரீதியிலான, வணிக ரீதியில் கிடைக்கும் மிகப் பெரும் மதிப்பினை மட்டும் கொண்டாடுகின்றவராக சண்முகசிவா எப்போதும் இருந்ததில்லை என்பதற்கு அவரே ஓர் அடையாளமாக இருக்கிறார். ஆனால், ஓர் இலக்கியவாதி என்று அழைக்கப்படுவதைக்கூட அவர் பெரிதாக விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு சக மனிதனின் அவலங்களைக் காது கொடுத்து கேட்கும் இன்னொரு சக மனிதராக இருப்பதையே டாக்டர் சண்முகசிவா அதிகம் விரும்புவார்.

எல்லாருக்கும் நல்லவர்களாய் இருப்பதற்கு ஒருவருக்குத் தேவைப்படுபவை முகமூடிகளாகும். ஆனால், சண்முகசிவாவின் முகமூடிகள் அவரது உண்மை முகத்தினைப் போல அசலானவை. அதில் போலிமை எப்போதும் கிடையாது. எந்த கூட்டத்தில் எந்தவொரு முகமூடி அணிந்தாலும் அவரது நோக்கம் நேர்மையானதாக இருக்கும். அந்த நேர்மையை சண்முகசிவா உணர்ந்திருக்கிறார். அந்த நேர்மைக்காக சில பல வேளைகளில் அந்த முகமூடிகளை நாம் மன்னித்து விடலாம் என நான் நினைக்கிறேன்.

இந்த நிலையில் ஆத்மாநாமின் ஒரு நல்ல கவிதை என் நினைவுக்கு வருகிறது.

என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
அதன் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டடங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை …

இதில் இயற்கை என் நான் நினைப்பது டாக்டர் சண்முகசிவாவிடம் இருக்கும் அந்த நேர்மையும் அந்த மனிதமும். யாரையும் அவர் முகஸ்துதி பாடுவதில்லை. ‘அவ்விடம் எனக்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால் விலகிவிடுவேன்’ என தன்நிலையில் மிகத் தெளிவான ஒருவராகவே டாக்டர் சண்முகசிவா இருக்கிறார்.   அவரின் பாராட்டுக்குப் பின்னால் எல்லாம் வளர்ந்துவருகின்ற ஒருவரின் தொடர் வளர்ச்சி கவனத்தில் கொள்ளப்படுகின்றது. படைப்பாளி ஒருவரின் அடுத்த கட்ட நகர்வு முன்வைக்கப்படுகிறது.  ஆக என்ன நடந்தாலும் டாக்டர் சண்முகசிவாவிடம் இயற்கையாகவே இருக்கின்ற அந்த நேர்மையும் அந்த மனிதமும் எந்தவித அழிவுகளுமின்றி தொடர்ந்தபடியே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...