குவர்னிகா: மலேசியக் கவிதைகள் ஒரு பார்வை

தமிழ் இலக்கியத்தின் தொன்மத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக உடனே அதன் நீண்ட நெடிய 2000 வருடக் கவிதை தொடர்பை அடையாளப்படுத்துவது தமிழ் இலக்கியச் சூழலின் கட்டாய / அபாயப் பணியாகிவிட்டது. ஆயிரம்கால பெருமையைப் பேசியே கவிதை நகர்ச்சியைச் சாகடித்துவிட்டோமோ என்றுகூட தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து சமக்காலக் கவிதைகளைப் பற்றி பேசத் துவங்கும் ஒருவன் தனது விமர்சனத்தைக் கவனமாக முன்வைக்க வேண்டியிருக்கிறது. சமூகத்தில் கொசு தொல்லையைவிட கவிஞர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களின் பிரவேசம் பயங்கர சவாலாக மாறிவிட்டது.

தடுக்கி விழுந்தால் எங்கே யாராவது கவிஞர்கள் மேல் விழுந்துவிடுவேன் என்கிற அச்சமும் ஒவ்வொரு விமர்சகனுக்கும் இருக்கின்றது. மிகச் சுலபமாக வாக்கியங்களை உடைத்துப் போட்டு அதைக் கவிதை எனச் சொல்ல முடிகின்ற ஒரு வசதி இருப்பதால் பார்ப்பவர்களெல்லாம் ஒரு கவிதை நூலுடன் இருக்கிறார்கள். நான் இந்தியாவில் 10 நாட்கள் இருந்தபோது பார்ப்பவர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் ஒரு கவிதை நூலை எழுதிக் கையில் வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே என்னிடம் கவிதை நூலை நீட்டாத குறை மட்டுமே.

எது கவிதை என்கிற மிகப்பரிய விவாதத்தை நோக்கி இந்தச் சமூகத்தை ஒரு விமர்சகன் நகர்த்த வேண்டியக் கடப்பாட்டில் இருக்கின்றான். சங்கக் கால இலக்கியத்திற்குப் பிறகு அறம் தொடர்பான முன்னெடுப்புகள் நடந்த சமயங்களில் கவிதையின் போக்கும் மாறத்துவங்கியதை நாம் கவனிக்க வேண்டும். எப்பொழுது மனிதர்களுக்குச் சமூக அக்கறைகள் தோன்றியதோ அப்பொழுதே அவர்கள் கவிதை என்கிற வடிவத்தைக் கதற கதற கற்பழிக்கத் துவங்கிவிட்டார்கள். மேடையில் ஆக்ரோஷமாகத் தன் சமூகக் கருத்தை முழங்குவதற்கும், தலைவர்களைப் புகழ்ந்து துதிப்பாடவும் தொடர்ந்து கவிதைகள் எழுதப்பட்டன. பிறந்தநாளுக்கு, வெள்ளி விழாவிற்கு, சுதந்திரத் தினத்திற்கு, இறப்பிற்கு எனத் தொடர்ந்து கூர்மை என நம்பப்பட்ட கவிதை மிகவும் மொக்கையாகப் பார்க்கப்படத் துவங்கியது. சமூக அறநெறி தொட்டிக்குள் வைத்துக் கவிதை என்கிற வடிவம் கூர் மழுங்க காயடிக்கப்பட்டது.

மலேசிய வானொலியைச் சேர்ந்த ஒருவர் கவிதை எழுதுவதற்கு மிகச் சிறந்த ஆலோசனை ஒன்றைக் கூறியிருக்கிறார். இதயம் பலவீனமான வாசகர்கள் தயவு செய்து இந்த வரிகளைப் படிக்க வேண்டாம். கவிஞர் ஒருவரை அழைத்துச் சென்று, ஒரு மரத்தின் கீழ் அமர வைத்து அங்கே உதிரும் ஓர் இலையை வைத்துக் கவிதை எழுதச் சொல்லலாமாம். ஒருவேளை அன்று காற்றுக் காலமாக இருந்து நிறைய இலைகள் கொட்டிவிட்டால் சமூகத்தின் நிலையை நினைத்துப் பாருங்களேன். ஒரு சொல்லில் ஒரு கவிதை, திடீர் கவிதை, ஒரு படத்தை வைத்துக் கவிதை எனக் கவிதைகள் மேடை சடங்குகளுக்குள் சிக்கி நாசமாக்கப்பட்டது. படைப்பாளர் சங்கங்களும் எழுத்தாளர் இயக்கங்களும் எழுத்தாளர்களின் தொண்டைக்குள் கையைவிட்டு கவிதைகளாக உருவி உருவி எடுக்கத் தொடங்கினார்கள். வந்ததெல்லாம் வாந்தி எனத் தெரியாமல் அதையும் பாயாசம் என எல்லோருக்கும் பறிமாறி மகிழ்ந்தார்கள். கடந்த சில வருடங்களில் கவிதைக்கு நிகழ்ந்த மிக மோசமான வன்முறையை நினைவில் வைத்துக் கொண்டே எது கவிதை என்ற விவாதத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

ஆகவே, சமக்காலத்தில் கவனிக்கத்தக்க முக்கியமான கவிதைகளைப் பற்றி உரையாடுவதன் மூலமே கவிதை பற்றிய பிரக்ஞையை வளர்க்க முடியும் என நம்புகின்றேன். அதுவும் கவிதையை வெறுமனே புகழ்வதையும் நான் அபத்தம் எனக் கருதுகிறேன். ஒருவேளை ஒரு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் புகழப்படுவதால் அதுவே கவிதைக்கான வரையறைகளாக மாறிவிடும் அபாயாம் இருக்கிறது. கவிதையை அதீதமாகப் புகழ்வதைவிட அதன் தேவையை அது கொண்டு வரும் அழுத்தங்களை, அதன் ஆழங்களை உரையாடுவதே விமர்சனம் என நினைக்கிறேன்.

குவர்னிகா இலக்கியத் தொகுப்பில் முதன் முறையாக நம் மலேசிய நவீன கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விசயமாகும். 2000களின் ஆரம்பம் தொடங்கி மலேசியாவில் கவனித்தக்க முறையில் கவிதையில் இயங்கி வரும் ம.நவீன், பூங்குழலி மற்றும் யோகி ஆகிய மூவரின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ம. நவீன் கவிதைகள்

குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் என மட்டுமல்லாமல் நவீன் எழுதும் பெரும்பான்மையான கவிதைகள் சமூகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கிவிடுகின்றன. குறிப்பாக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தூக்கமில்லாமல் நவீன் கவிதைகளை மனனம் செய்து மனனம் செய்து பார்ப்பவர்களிடமெல்லாம் ஒப்புவிக்கின்றார்கள். அவர் கவிதைகள் இவ்வளவு நாட்களாகச் சமூகம் காப்பாற்றி வந்த அறங்களையும் நீதியையும் அழித்துவிடும் எனப் பதறுகிறார்கள். இதன் விளைவு என்ன? நவீன் அக்கவிதைகளை எழுதியதற்காக அவர் கையைத் துண்டாக வெட்ட வேண்டும் என்றெல்லாம் மாணவர்களின் முன்னிலையில் முழங்கியுள்ளார்கள். இதைவிட கவிதை குறித்த வாசகன் எவ்வளவு பலவீனமாகிவிட்டான் என்பதற்கான உதாரணங்கள் கிடைக்காது.

‘கடவுளின் மலம்’ என்கிற அவருடைய கவிதை நகலெடுக்கப்பட்டு தொடர்ந்து பலரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் விவாதம் என்னவாக இருக்கிறது? எப்படி கடவுளையும் மலத்தையும் நவீன் கவிதைக்குள் வைத்துப் புனைய முடியும் என்பதே. இந்தச் சமூக மிகவும் புனிதமாகப் பார்க்கும் ‘கடவுளை’யும் மிக அசிங்கமாகப் பார்க்கும் ‘மலத்தையும்’ நவீன் தன் கவிதைக்குள் வைத்து உடைத்து அச்சொற்களை அக்குறீயிடுகளைத் திறந்துவிட்டுள்ளார். முதலில் கவிதைக்குள் பயன்படுத்தப்படும் சொற்கள் அம்மொழியில் அச்சொல் வழங்குகின்ற அர்த்தங்களைத் தாண்டி சுதந்திரமாக்கப்படுகின்றது. பறவை எனும் சொல் விடுதலையின் குறியீடாக மாறியதைப் போல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சொற்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன. இதுதான் கவிதை வாசிப்பின் சவாலும்கூட. பாட்டன் முப்பாட்டன், மூதாதையர்கள் ஒரு சொல்லை எப்படி அர்த்தப்படுத்திப் புரிந்து கொண்டோர்களோ அதே போலத்தான் இன்று நவீன கவிதைகளில் வைத்துப் புனையப்படும் சொற்களையும் புரிந்து கொள்வேன் என்றால் அப்படிப்பட்ட வாசகனின் மூளை காலாவதியாகிவிட்டது என்று அர்த்தம்.

என் வாசிப்பின் வரையில் அவர் கடவுள் என முதலாம் உலக நாடுகளின் முதலாளிகளையும் மலம் என்பதை அவர்கள் மூன்றாம் உலக நாடுகளுக்குள் தள்ளும் தரமற்ற உற்பத்திகளையும் குறிக்கின்றது என்றே அர்த்தப்படுத்துக் கொண்டேன். இதே கடவுள், மலம் என்கிற குறியீடுகளை வேறொரு வாசகன் வேறு முறையில் நியாயப்படுத்தவும் செய்வான். ஆனால், கவிதை என்பதே அதன் மீமொழியில் எழுதப்படும் இலக்கிய வடிவம் என்பதைப் புரிந்து கொள்ளாத ஒருவன்தான் மலத்தை நாம் முக்கி வெளியாக்கும் மலமாகவும், கடவுளை நாம் வணங்கும் தெய்வம் என்றும் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் அர்த்தங்களோடு பார்ப்பான். இது மிகவும் மொண்ணைத்தனமான வாசிப்பாகும். இவர்களுக்கும் எழுத்துக்கூட்டில் ஒரு சொல்லை வாசிக்கும் பாலர் பள்ளி மாணவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரு கவிதையின் அரசியல் என்ன? சமக்கால அரசியல் பிரக்ஞை இல்லாமல் ஒரு கவிதையை எழுதிவிட முடியுமா? நவீனின் ‘கடவுளின் மலம்’ என்கிற கவிதை உலகமயமாக்கல் என்கிற அரசியலையும் முதலாளிய நிறுவனங்களின் ஊடுருவல்களைப் பேசும் மிகக் காத்திரமான கவிதையாகும். அதை அசிங்கமாக்கி அதைப் பற்றி ஆழமாகப் பேச முடியாதது குறிப்பிட்ட அவர்களின் மேலோட்ட வாசிப்பின் பிரச்சனை . இதுபோன்ற இன்னும் முக்கியமான இரண்டு கவிதைகளை நவீன் அத்தொகுப்பில் எழுதியுள்ளார். நவீன் தொடர்ந்து அரசியல் பின்புலத்துடன் இச்சமூகத்தின் எல்லாம் அடுக்குகளையும் கூர்மையாகக் கவனிப்பதன் மூலம் அவருக்கு எழும் விமர்சனமும் எதிர்வினைகளும்தான் அவருடைய கவிதைகள் என நினைக்கின்றேன்.

பூங்குழலி வீரன்

அடுத்ததாக, மலேசியப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரும் கவிதையில் தொடர்ந்து அயராது இயங்கி வருபவருமான பூங்குழலி வீரனின் கவிதைகள். மலேசிய நவீன கவிதைகளைத் தொகுத்தால் அதில் கட்டாயம் மிக முக்கியமான கவிதைகளாகப் பூங்குழலியின் கவிதைகளைக் குறிப்பிடலாம். அது ஒரு தற்கொலை, மரணத்தின் கோப்பை, நிர்வாணம் என மூன்று கவிதைகள் எழுதியுள்ளார். மூன்றுமே தன்னிலையிலிருந்து இந்த உலகத்தை, இந்தச் சமூகத்தை, மரணத்தை, இழப்பைப் பேசுபவையாக இருக்கின்றன. தன்னிலை நோக்கு என்பது கவிதையின் ஒரு நடைமுறை. உலகின் எல்லாம் விசயங்களையும் தன் நிலையிலிருந்து முதலில் சொல்லி பிறகு அதை ஒரு பொது அனுபவமாக்குவதாகும். இந்த முறை கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாக மாறிவிடும். ஆனால், பூங்குழலி அதனை மிகவும் கூர்மையாகத் தன் ஆழங்களிருந்து விமர்சிப்பதன் மூலம் அக்கவிதைகள் முக்கியமாகின்றன.

‘நிர்வாணம்’ எனும் கவிதையின் மூலம் பூங்குழலி மொத்த சமூகமும் காலம் காலமாக பெண்களை ஒடுக்கும் நிறுவனமாக மாறியிருப்பதை விமர்சிக்கிறார் என்றே தோன்றியது. இச்சமூகத்தில் பெண்களுக்கென்றே பிரத்தியேகமான நடத்தைகள் உண்டு. இதைக் குடும்பங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இதனையே நாம் self discipline என்கிறோம். பெண்களே குடும்ப கௌரவத்தையும், குடும்ப தன்மானத்தையும் காக்கக்கூடியவர்கள் எனச் சொல்லி அவர்களின் நடத்தைகள் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கின்றன எனும் ஒட்டுக்குமுறையையே பூழங்குழலி தன்னுடைய ‘நிர்வாணம்’ என்ற கவிதையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் என்று நினைக்கின்றேன். அப்படி அது வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கும் சாத்தியம் இருந்தாலும் நான் கவலைப்படப்போவதில்லை. விமர்சனமும்கூட தன்னிலையிலிருந்து புறப்பட்டு பொதுவாக்கப்படுகின்றது.

பூங்குழலி எப்பொழுதுமே சொற்களுக்குள் தன் உலகைப் பூட்டி வைக்கும் சாமர்த்தியம் படைத்தவர். அதனைத் திறக்க முற்படும் வாசகர்களின் கண்களுக்கு அது ஒரு மாயமாக ஒரு அதிசயமாக இருக்கக்கூடும். அது கொடுக்கும் அனுபவம் அலாதியானது. குழலியின் வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் அவரின் கவிதைக்குள் இருக்கும் சில உண்மை அனுபவங்களை ஒரு வரலாறாக மட்டுமே பார்க்கக்கூடிய பலவீனமும் இருக்கின்றது. ஒருவேளை அவர் எந்த மரணத்தைப் பற்றி எழுதினாலும் அவருடன் நெருக்கமாக இருக்கக்கூடிய வாசகன் அவர் தன் அப்பாவின் மரணத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என நினைக்கக்கூடும். இது அந்த வாசகனுக்கு மிகப்பெரிய தடை, மேலும் தன்னிலையிலிருந்து முதலில் தன் அனுபவங்களை நேரிடையாகக் கவிதையாக்கிவிடும் கவிஞர்களுக்கும் பிரச்சனையாகிவிடுகின்றது. அவர்களின் மீது விழுந்துவிடும் நீக்க முடியாத லேபலாகிவிடுகின்றது. அதைக் கடந்து மேலும் ஒரு கவிஞர் தன் கவிதை அரசியலைக் கூர்மையாக்க வேண்டிய சூழலும் உள்ளது.

யோகி கவிதைகள்

இந்தத் தொகுப்பில் வந்த யோகியின் கவிதைகளில் முக்கியமானதாக ‘லாஹாட் டத்து’ வரலாற்றை அவர் விமர்சிக்கும் கவிதை என்றே கருதுகிறேன். நான் முதலில் சொன்னது போலவே பழம்காலத்தின் புகழைப் பாடிக்கொண்டிருப்பது கவிதையின் செயல்பாடு கிடையாது. அது சமக்காலத்தின் அரசியலையும் சமக்காலத்து நிலத்தின் அனைத்துப் புரிதல்களுடனும் சர்வதேசத்தை நோக்கி நகரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கவிதையை யோகி படைத்துள்ளார்.

‘லஹாட் டத்து’ சபா மாநிலத்தில் ஒரு பகுதியாகும். பல மலேசியப் பழங்குடி மக்கள் அங்கு வாழ்கிறார்கள். பல காலமாக அங்கே நீர்வழி ஊடுருவல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட வேளையில் இவ்வருடம் தேர்தலுக்கும் முன்பாக லஹாட் டத்துவில் சூலு தீவிரவாதிகள் நுழைந்தது சர்ச்சையாகிவிட்டதோடு மட்டுமல்லாமல் அரசுக்கும் சவாலாக அமைந்தது எனச் சொல்லப்படுகின்றது.6 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் பத்திரிகைகள் கூறின. இது ஊடகங்கள் நமக்குக் கொடுத்த தகவலின் அடிப்படையில் உருவான புரிதல். ஆனால், யோகி தன் சமக்காலத்தில் நிகழ்ந்த ஒரு அரசியல் பிரச்சனையை எப்படி விமர்சிக்கின்றார் என்பதே இக்கவிதை பேசும் அரசியலாகும். அதை ஓர் அரசியல் நாடகம் என அவர் சித்தரிப்பது அக்கவிதை நமக்கு வழங்கும் சவாலாகும். அதனை நெருங்கக்கூட பாதுகாப்பான சூழலில் வாழ நினைப்பவர்கள் அஞ்சக்கூடும். ஆனால், அக்கவிதை உரையாடியே தீரும்.

அதே சமயம் ஒரு வரலாற்றை அதன் சம்பவங்களுடன் கவிதையாக்கும்போது மிகவும் வரட்சியான ஒரு வாசிப்பிற்கும் உள்ளாகும் சூழல் இருக்கின்றதி. அக்கவிதைக்குள் இருக்கும் வரலாற்றைத் தகர்த்தெடுத்தால் மிஞ்சுவது என்ன என்கிற ஒரு கட்டாயத் தேடல் வாசகனின் ஒரு மனநிலையாக மாறிவிடக்கூடும். அதனையும் ஒரு கவிஞன் சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை சவால்களைச் சமாளிப்பது? இது என்ன சவாலே சமாளி புரட்சிக்கரமான பந்தயமா என ஒருவன் கேட்கக்கூடும். மொன்னைத்தனமான வாசிப்புச் சூழல் இச்சமூகத்தில் இருக்கும்வரை இதுபோன்ற கேள்விகளும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

இப்படி, குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசியக் கவிஞர்களின் கவிதைகள் கவனத்திற்குரிய வகையில் சமூகம் கவனிக்கத் தவறிய அரசியலைப் பேசியிருக்கின்றன. இத்தொகுப்பு உலகத்தமிழர்கள் கவனத்துக்குப் போவதால் அதன் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது என்றே கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...