SAKA: பழிவாங்கும் குலதெய்வங்கள்

sakaசில வருடங்களுக்கு முன்னர் நான் பணியாற்றிய பள்ளிக்கு புதிதாக ஓர் ஆசிரியர் மாற்றலாகி வந்தார். கம்பீரமான தோற்றத்துடன் இனிமையாகப் பழகக்கூடியவர். அவர் மாநில சுல்தானின் தூரத்து உறவினர் என்று நண்பர்கள் கூறினர். அவரின் தோற்றம் அரசகுலத்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இருந்தது. சில ஆண்டுகள் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டார். தொடர்ந்து நீண்ட விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. சில வாரங்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்தும் பெரிய பலன் இல்லை. நாங்கள் அவரை பார்க்க மருத்துவமனை சென்றபோது ஆளே மாறியிருந்தார். உடல் இளைத்து கண்கள் இருண்டிருந்தன. முகத்தில் வெறுமையும் விரக்தியும் சூழ்ந்திருந்தன. அவர் யாருடனும் பேசவில்லை. இறுக்கமான மெளனத்துடன் ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருந்தது எங்களுக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது.

அவர் நிலை குறித்து மற்ற நண்பர்களிடம் பேசியபோது, அவருக்கு இன்னது என்று குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய நோய் என்று  எதுவும் இல்லை என்பதை அறிந்தேன். தூக்கமின்மை அல்லது மிக நீண்ட நேரம் உணர்வற்றுத் தூங்குதல், பசியின்மை, அதிகம் தனிமையை நாடுதல், தொடர்பில்லாமல் பேசுதல் அல்லது பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுவது, உடல் வலி, காதில் சத்தங்கள் கேட்பது என மிகவும் குழப்பமான நிலையில் இருந்தார். மருத்துவமனையில் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வேறு சில மனநலம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம் என்றும் கூறினர். சிகிச்சையின் ஒரு பகுதியாக மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் பின்பற்றப்பட்டன.

ஆனால் மலாய் நண்பர்கள் அவரின் நிலையைப் பற்றி பேசும்போது அவருக்கு சாக்கா(Saka)வின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். முன்பே அவரின் குடும்பத்தில் வேறு சிலருக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டு பல வழிமுறைகளைக் கையாண்டு தேறி வந்த தகவலையும் கூறினர். ஆகவே இஸ்லாமிய வழியில் மாற்று மருத்துவம் செய்யப்படுவதாக் கூறினர். அந்த ஆசிரியர் நீண்டகாலம் அந்த தொல்லைகளில் இருந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நலம் பெற்று வந்தார். ஆனாலும் பழைய சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் அவரிடம் இல்லாமல் போனது. சின்ன தடுமாற்றத்துடனேயே எப்போதும் இருந்தார். சில மாதங்கள் சென்று அவர் வேலை மாற்றலாகிச் சென்றுவிட்டார்.

ஜின்னாகிய சாக்கா

சாக்கா (Saka) என்பது மலாய் மக்களிடம் புழங்கும் அமானுஷ்யம் சார்ந்த ஒரு வழக்குச் சொல். அது இன்றைய நிலையில் இஸ்லாம் மத கண்ணோட்டத்தில் ஜின் அல்லது சாத்தானின் தாக்கமாக விளக்கப்படுகிறது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எல்லாவகை அமானுஷ்ய சக்திகளையும் ஜின் (genie)  என்றே குறிப்பிடுகின்றனர். ஆகவே சாக்கா என்னும் மலாய் மரபு சார்ந்த அமானுஷ்யத்தையும் அவ்வாறே வகைப்படுத்தியுள்ளனர்.  சாக்காவின் தோற்றம், பாதிப்புகள் தீர்வுக்கான வழிகள் குறித்து பல அனுமானங்கள் உலவுகின்றன. போமோக்களின் உதவியுடன்தான் சாக்காவின் தாக்கத்தை அகற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பல்வேறு பழங்குடிகளின் தாந்திரீகங்கள் போலவே சாக்கா குறித்த பல போலிக் கருத்தாக்கங்களும் வியாபாரத் தந்திரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

சாக்கா என்னும் மரபு சார்ந்த நம்பிக்கையைப் புரிந்துகொள்ள அதன் தொடக்கத்தை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். சாக்காவின் தொடக்கம் குறித்த தெளிவான வரலாறுகள் இல்லை என்றாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சில குறிப்புகள் கிடைக்கின்றன.

மிகப்பழங்காலத்தில் முன்னோர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதியும் வேளாண்மை, மீன்பிடித்தல், காட்டை ஆக்கிரமித்தல் போன்ற வேலைகளைச் சுலபத்தில் முடிக்கும் பொருட்டும் தங்களுக்கு உதவியாக மாந்திரீக வழிகளில் ஜின்களை கட்டுப்படுத்தி தங்கள் ஏவல் அடிமைகளாகப் பயன்படுத்தி வந்தனர்.

ஜின்களைக் கட்டுப்படுத்தும்போது அதை முதன்முதலில் அடிமைப்படுத்தியவர் அதனுடன் சில ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது வழக்கம். குறிப்பிட்ட தினத்தில், ஆச்சாக்(achak) எனப்படும் படையலையும் பொருட்களையும் (வறுத்த கோழி, அவித்த அல்லது பச்சை முட்டை, அவல், பொரி, மஞ்சள் சேர்த்த புலுட் பொங்கல் போன்றவை)  படைக்கவும் அந்த கடமையில் தங்கள் பரம்பரை தொடர்ந்து ஈடுபடவும் ஜின்களுடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்படும். அதன்படி ஜின் அந்த மூதாதையின் உடலில் புகுந்து வாழக்கூடும். தேவையானபோது வெளிப்பட்டு உதவிகள் செய்யும். அல்லது வனத்தில் புலியாகவோ, ஆற்றில் முதலையாகவோ அது மறைந்து வாழும். பெரிய மரங்களிலோ, புற்றுகளிலோ, கிரிஸ் குறுவாளிலோகூட அதை மறைத்து வைக்கமுடியும். குடியின் மூத்தவர் முதுமையெய்தி மரணிக்கும் முன்பு தன் நண்பனாக இருந்து ஏவல் செய்த ஜின்னை, தனது வாரிசிடம் (பெரும்பாலும் முத்த பிள்ளை அல்லது தங்களுக்கு பிடித்தமான பிள்ளை) ஒப்படைத்துவிட்டுச் செல்லவேண்டும். ஜின்னைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்பவர் தன் மூதாதையர் செய்த படையல்களையும் சடங்குகளையும் தவறாமல் செய்து வரவேண்டும். அதன்வழி அந்த ஜின், அவர்கள் குடும்பத்திற்கு துணையாக இருக்கும். தலைமுறைகள் கடந்தும் ஜின் ஒரு குடும்பச் சொத்தாகப் பாதுகாக்கப்படும். ஒரு ஜின் குறைந்தது ஏழு தலைமுறைகள் ஒரு குடும்பத்துக்கு ஏவல் செய்து வாழக்கூடியது. ஜின்னின் உதவியுடன் பாவாங் (pawang) டுக்குன் (dukun) போமோ (bomoh) எனப்படும் நாட்டு மருத்துவர்களும் பூசாரிகளும் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். மேலும் வயல் வேலைகள், கூத்துகலைகள், போர், போன்ற பல செயல்பாடுகளை முன்னெடுக்கவும் சாக்காவின் உதவி தேவைப்பட்டது.

ஆனால், மூத்தவர் வாரிசை நியமிக்காமல் இறந்துவிட்டாலோ, அல்லது வாரிசாக வந்தவர் ஜின்னை முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டாலோ, ஜின்னோடு அந்த மூதாதையர் செய்துகொண்ட ஒப்பந்தம் மீறப்பட்டதாகிவிடும். அதன் காரணமாக அந்த ஜின் குடியிருக்க இடம் இல்லாமல் கோபத்தோடு அலையக்கூடும். அல்லது அந்தக் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவரைத் தானே தேடிச்சென்று அவருடன் தங்க முயற்சிக்கும். இதன் காரணமாக அந்த நபர் உடல்நலம், மனநலம் சார்ந்த பல பாதிப்புகளை அடைவார். முற்றிய நிலையில் மரணமும் நிகழும் வாய்ப்புள்ளது. இந்தப் பாதிப்புகளில் இருந்து விலகுவது சுலபமல்ல. அதற்கான தொழில்நுட்பம் தெரிந்த போமோக்களாலேயே அந்த ஜின்னை விரட்டியடிக்க முடியும். இஸ்லாமிய முறையில் பயிற்சி பெற்ற போமோக்களால்தான் மத மீறல்களோ, முரண்களோ ஏற்படாதவகையில் இந்தக் கழிப்புக் கழித்தலைச் செய்ய முடியும் என்பது சாக்கா குறித்த எளிய விளக்கம்.

சாக்கா (Saka) என்பது புசாக்கா (pusaka) என்னும் சொல்லின் சுருக்கம். புசாக்கா என்றால் பூர்வீகச் சொத்து என்று பொருள். அதிலும் தந்தை வழி வரும் சொத்தை பாக்கா (baka) என்றும் தாய்வழி வரும் சொத்தை சாக்கா (Saka) என்றும் சொல்வது மலாய்ச் சமூகத்தின் வழக்கம். சாக்கா என்பதை ‘பரம்பரையாகப் பெறும் ஞானம்’ என்றே சில மலாய் குறிப்புகள் சுட்டுகின்றன. ஆகவே பெண்வழிச் சமூகமாக இருந்த பழங்குடி மலாய்ச் சமூகம் தங்கள் குடும்பச் சொத்தாகக் கொண்டிருந்த ‘அமானுஷ்ய ஆற்றலை’ பரம்பரையாகத் தொடர்ந்து பெற்ற தடம் சாக்காவின் வழி புலனாகிறது. அதோடு இன்று இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சாக்கா என்பதை தீய சக்தியான ஜின் அல்லது சைத்தானின் செயல் என்று கூறினாலும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சாக்காவை நாம் ஆழ்ந்து ஆராயும்போது அதில் மறைந்து கிடக்கும் பல பண்பாட்டு உண்மைகள் வெளிப்படுகின்றன. மேலும், மலாய் இன மக்களிடம் புழங்கிய, தொல் சமயம் (Primitive Religion) என்று மானுடவியலாளர் குறிப்பிடும் சமயத்தின் தொடக்கநிலை குறித்த செய்திகளும் அவற்றின் இன்றைய நிலையும் அறியக் கிடைக்கின்றன.

சாக்கா எனும் பழமை வழிபாடு

இன்றைய மலேசிய மலாய் இன மக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான குடிகளின் வழிவந்தவர்கள். சாக்கா என்னும் பழமையான வழிபாட்டு முறையை ஆராயுங்கால் மலாய் இனத்தின் தொன்மை மேலும் வெளிப்படுகிறது. இன்றைய தீபகற்ப மலேசியாவின் மலாய்காரர்களில் பெரும்பகுதி மக்கள் நுசாந்தாரா என்று குறிப்பிடப்படும் மலாய்த் தீவுக்கூட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வழி வந்தவர்களாவர். போர்களாலும், தொழில், வியாபாரம் போன்ற பொருளாதாரத் தேடல் காரணமாகவும் மக்கள் தீபகற்ப மலேசியாவின் நிலப்பகுதிக்கு வந்தனர். தீபகற்ப மலேசியாவின் கெடா, மலாக்கா, புருவாஸ் போன்ற கடற்கரைகள் உலகறிந்த துறைமுகங்களாக இருந்ததால், அவை தொழில்துறையிலும் வியாபாரத்திலும் முன்னேறி இருந்தன. உள்ளூர் மக்களும் வெளிநாட்டவர் பலரும் வந்து வியாபாரம் செய்யும் மையங்களாக அப்பட்டிணங்கள் திகழ்ந்துள்ளன. ஆகவே அண்டைத் தீவுகளில் இருந்து மக்கள் அதிகமாக மலாயா தீபகற்பத்தில் குடியேறினர். குறிப்பாக அச்சே, பலேம்பாங், ஜாவா போன்ற பல பகுதிகளில் இருந்து வந்த பல்வேறு குடியினர் மலாய்க்காரர்களாக அறியப்படுகிறார்கள். மிக நீண்டகாலமாக நடந்த குடிப்பெயர்வுகள் இவை. வரலாற்றுத்துறை கல்வியாளர் பிலிப் என் நசரெத் (Philip N. Nazareth) 1958ஆம் ஆண்டு எழுதிய The Malayan Story என்னும் நூலில் மலாய் மக்களின் தோற்றுவாய் குறித்து ‘ஸ்ரீவிஜயப் பேரரசு 11ஆம் நூற்றாண்டில் தன் தலைநகரை பலேம்பாங்கில் இருந்து ஜம்பி ஆற்றங்கரையில் இருந்த மலையு(மலையூர்) என்னும் புதிய இடத்திற்கு மாற்றியது. அந்த ஊரின் பெயரை மையமாகக்கொண்டே அங்கு வாழ்ந்த மக்களை மலையர்கள் என்றும் பின்னர் மருவி மலாயர்கள் என்றும் குறிப்பிடப்படுவதாக மலாய் இனத்தின் தோற்றுவாயை விளக்குகிறார். அதன் காரணமாகவே ஸ்ரீவிஜய அரசு மலாய் சாம்ராஜியம் (Malay kingdom) என்றானது.  ஆயினும் 12ஆம் நூற்றாண்டில் ஜாவா தீவில் வலிமையோடு இருந்த மஜாபாஜிட் அரசு ஸ்ரீவிஜய அரசின் மேல் பல முறை போர்களைத் தொடுத்து கைப்பற்றத் தொடங்கியது. போரின் காரணமாக மலாயர்கள் என்று அறியப்பட்ட ஸ்ரீவிஜய மக்கள் மலேசியத் தீபகற்பத்திற்குள் அதிகமாக குடியேறினர். மேலும் பலர் சுமத்திராவின் உட்பகுதிக்கு நகர்ந்து மினாங்கபாவ் என்ற அரசை அமைத்தனர். காலப்போக்கில் இங்கு வாழ்ந்த பல்வேறு குடிகளும் மலாய் இனமக்களாக அடையாளம் பெற்றனர்.

தொடக்கத்தில், மலாய் இன மக்கள் பல்வேறு தொன்மையான வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்ட குடிகளாக வாழ்ந்தனர்.  மதங்கள் மலாய்ச் சமூகத்தின் வாழ்வியலில் பங்கேற்பதற்கு முன்னர் அவர்கள் தங்களுக்கான ஆதி வழிபாடுகளையும் சடங்குகளையும் கொண்டிருந்தனர். மலாய் மக்களின் பண்பாடுகளை ஆய்வுசெய்த பேராசிரியர் முஹமட் தைப் (1972) பிற்கால மலாய் சமூகத்தின் நம்பிக்கைகள் மூன்று மூலங்களின் ஊடாட்டங்களில் இருந்து வருபவை என்று குறிப்பிடுகின்றார். அவை, இஸ்லாமிய மத மேன்மைகள், மரபான பண்பாட்டு நம்பிக்கைகள், நவீன அறிவியல் கூறுகள் என்பது அவர் கூற்று. இந்த மூன்று தளங்களின் மேல்தான் இன்றைய மலாய் மக்களின் பண்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இம்மூன்று தளங்களும் முழுமையாக இணைந்து செல்வன அல்ல. அவை தங்களுக்குள் முரண்படும் இடங்கள் அதிகம். ஆயினும் காலச்சூழல்களுக்கு ஏற்ப அவற்றின் சமநிலை குலையாமல் பாதுகாக்கப்படுகின்றது.

முகமட் தைப் குறிப்பிடும் மலாய் மக்களின் மரபான பண்பாடு என்பது ஆதிகாலம் தொட்டு மலாய் மக்கள் புழங்கிவரும் வழிபாட்டுச் சடங்குகளையும் இந்து, பெளத்த மதங்களின் வருகையினால் ஏற்பட்ட மாற்றங்களையும் உட்படுத்தியது. மலாய்த் தீவுக்கூட்டம் இந்து, பெளத்த மதங்களின் ஆக்கிரமிப்புக்குள் வரும் முன்னர் மலாய் இன மக்கள் மதம் என்ற நிறுவன அமைப்பு இல்லாத தொல்குடி மக்களாக வாழ்ந்தனர். குடிப் பெயர்வுகளின்போது தங்கள் மரபான நம்பிக்கை சார்ந்த சடங்குகளையும் வழிபாடுகளையும் உடன் எடுத்துச் சென்றனர். அவர்கள் முற்றிலும் இயற்கை சார்ந்து வாழ்ந்த மக்கள் என்பதால் அவர்களின் நம்பிக்கைகளும் தெய்வங்களும் இயற்கை சக்திகள் சார்ந்தே உள்ளன. மலாய் இன மரபு வழக்கங்களையும் வாழ்வியலையும் ஆராய்ந்த Zawiah Hj. Mat,  Mohd Taib   போன்ற பலரும் மலாய் இன மக்களின் பழமையான நம்பிக்கைகளை animism (ஆன்ம வாதம்) மற்றும் dynamis (இயற்கை வாதம்) ஆகிய இருவகை தொன்ம நம்பிக்கைகளில் இருந்து தொடங்குகின்றனர்.

அனிமிசம் (ஆன்ம வாதம்) என்பது ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆன்மா உள்ளது  என்றுsaka1 நம்பப்படுவதாகும். மலைகள், பெரிய மரங்கள், பாறைகள் போன்றவற்றுக்கு ஆன்மா உள்ளதாக நம்பி அதை வணங்குவதே ஆன்ம வாதம். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் இதனை ‘அணங்கு’ என்று குறிப்பிடுகின்றார்,  இதன் தொடர்ச்சியாக Animatism  எனப்படும் உயிர்ப்பாற்றல் வழிபாடும் மூத்தோர் வழிபாடும் அமைகின்றன. எல்லாப் பொருட்களுக்கும் உயிர் உள்ளது என்பதோடு குடியின் மூத்தவர்கள் இறந்த பிறகும் குடியைக் காக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்னும் பழங்கால மனித நம்பிக்கைகள் பிற தொல்இனங்களைப் போன்றே மலாய் இனத்திடமும் இருந்தன. அவை பல்வேறு பிரிவுகளுடனும் மாற்றங்களுடனும் அவர்களால் அனுசரிக்கப்பட்டன.

Mohd Zohdi Mohd Amin(2014) மலாய் மக்களிடம் வழக்கத்தில் இருந்த அமானுஷ்ய ஆற்றல்களை, (அவற்றை மாய உலக ஜீவிகள் என்பது இஸ்லாமிய வழக்கம்) ஐந்து வகையாகப் பிரிக்கிறார். அவை செமாங்காட், பெனுங்கு, ஒராங் புனியான், ஜின் அல்லது சைத்தான், பேய்கள் ஆகியன. இவற்றுள் பல உட்பிரிவுகள் உண்டு. ஆயினும் அவர் இந்த ஐந்து வகை அமானுஷ்ய சக்திகளையும் சைத்தான்களின் தோற்றமாகக் குறிப்பிடுவது இஸ்லாமிய நோக்குடன் ஒத்துப்போகக் கூடிய கருத்தாகும். மானுடவியல் ஆய்வாளர்கள் இவற்றை தொல் சமயமாகவே (Primitive Religion) குறிப்பிடுவர். Tylor (1871) அனிமிசம் என்னும் ஆன்ம வாதத்தை ஒரு மதமாகவே குறிப்பிடுகின்றார்.

தொல்குடிகள் வழிபாட்டில் முதன்மை அடையாளமாக, அவர்களின் தெய்வங்கள் அச்சமூட்டும் ஆங்காரமும் தன் பக்தனின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவனது குறைகளைப் போக்கும் அன்பையும் ஒருங்கே கொண்டிருக்கும். கோபம், பசி, மகிழ்ச்சி போன்ற மனிதத் தன்மை உடையனவாகவும் இருக்கும். நோய்தீர்த்தல், எதிர்காலநிலை குறி உரைத்தல் போன்ற சேவைகளை பூசாரிகளின் வழியும் முதுவாய்ப் பெண்கள் வழியும் செய்வதாக நம்பினர். மக்கள் அத்தெய்வங்களிடம் வேண்டுதல்கள் வைப்பதும், விழா எடுப்பதும் வழக்கம். குறிப்பிட்ட தினத்தில், மலை அடிவாரங்கள், கடற்கரை, வயல் வெளி, போன்ற இடங்களில் கூடி உயிர்ப் பலி கொடுத்தும், பிற படையல் பொருட்களை வைத்தும் தங்களைக் காப்பதாக நம்பும் காவல் தெய்வங்களை வணங்குவர். அச்சடங்குகள் அந்தத் தெய்வத்தைச் சாந்தப்படுத்துதல், நன்றி பாராட்டுதல் ஆகிய இரண்டு நோக்கங்களும் அடங்கிய விழாக்களாக இருக்கும். விழாவின்போது இசைக்கருவிகள் இசைத்தல், மருள்கொண்டு ஆடுதல், போன்றவை இயல்பானவை.

Mohd Zohdi Mohd Amin  வகுத்த ஐவகை மலாய் இன மக்களின் அமானுஷ்ய ஆற்றல்களும் தொல் சமய தெய்வங்களின் கோட்பாடுகளோடு ஒத்துபோவன. செமாங்காட்,  பெனுங்கு என்பன முனி, சுடலைமாடன் போன்ற காவல் தெய்வங்களை ஒத்தவை. பலவகையான பெனுங்குகள் அன்று வழிபாட்டுக்குரியனவாக இருந்துள்ளன. ஆற்றங்கரை, காடுகள், வீடுகள், இடுகாடுகள், குகைகள் போன்ற பல இடங்களுக்கும் அவற்றுக்கேற்ற செமாங்காட் எனப்படும் காவல்கள் இருப்பதாக நம்பினர். ஓராங் புனியான் என்பது அணங்குகள் அல்லது யட்சிகளாகும். அவை வனங்களிலும் நீர் நிலைகளிலும் கூட்டமாக வாழக்கூடியன. மனிதர்களை மயக்கக்கூடிய சக்தி அவற்றுக்கு உண்டு என்று நம்பப்படுகின்றது.

முற்காலத்தில் இவ்வகை அமானுஷ்ய ஆற்றல்களுக்கு மலாய் இனத்தவர் பல்வேறு விழாக்களை எடுத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.  மலாய் பாரம்பரிய மருத்துவ முறையில் அவற்றின் தடயங்களைக் காணமுடிகின்றது. மலாய்ப் பாரம்பரிய மருத்துவம் குலதெய்வங்களின் உதவியுடன் செய்யப்படுபவை. அக்கலையை முறையாக கற்ற ஒருவரே அதைச் செய்ய முடியும். இசை, பாடல், நடனம், மந்திர உச்சாடனம், படையல் வைத்தல் ஆகியவற்றின் கலவையாகவே மலாய்ப் பாரம்பரிய மருத்துவம் செயல்படுகின்றது. இசை நாட்டியத்தின் உச்சத்தில் போமோ அல்லது பாவாங் எனப்படும் பாரம்பரிய மருத்துவருக்கு  சன்னதம் வந்த நிலையிலேயே மருத்துவத் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. மருளாக ஆஞ்சனேயர், ஸ்ரீராமர், டேவா முடா, அரச உதவியாளன் என பல ஆற்றல்கள் வருவதுண்டு. மருள் கொண்டவர் தனக்குள் வந்திருக்கும் ஆற்றலுக்கேற்ற உடல்மொழிகளில் இயங்குவார். ஓலே மாயாங் (Ulek mayang), மாக்யோங் (Makyong),  வாயங் கூலிட்(Wayang Kulit),  மெனோர  (Menora). மெக் முலுங்(Mek Mulung) போன்ற கலைகளும் கூத்துகளும் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளன. அந்தப் படைப்புகளின் உச்சத்தில் மைன் புத்திரி (main puteri) எனப்படும் மருள் நிலையில் பல தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நம்பிக்கைகளை ஆதிகால மலாய் இன மக்களின், நாட்டார் வழிபாடுகளாகவே நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வகைத் தெய்வங்களை தாய்வழியில் தன் பரம்பரைக்கு கடத்தும்போது அவை குலதெய்வங்களாக மாறுகின்றன. இதுவே சாக்கா(saka) எனப்படுகின்றது. அந்தக் குல தெய்வங்கள் இன்றைய பொதுவான கண்ணோட்டத்தில் கூறப்படுவதுபோல் தீமை செய்வன அல்ல.  அவை ஒரு குடியைக் காத்து நிற்பதாக முன்னோர் நம்பினர். ஆனாலும் நாட்டார் வழிபாட்டின் இயல்புப்படி அந்தத் தெய்வங்கள் சினம் கொண்டு தண்டிக்கக்கூடியன என்ற அச்சமும் இருந்தது. பயமும் பக்தியும் கலந்தே பயபக்தியானது. தாயத்துக் கட்டுதல், சக்திவாய்ந்த கற்கள் பதித்த மோதிரங்களை அணிதல், மத்திரிக்கப்பட்ட வாள் அல்லது ஆயுதங்களை வைத்திருத்தல் போன்றவை குலதெய்வ வழிபாட்டில் இருந்து தொடரும் வழக்கங்கள் ஆகும். 2007ஆம் ஆண்டு வெளிவந்த waris jari hantu ஏனும் மலாய் திரைப்படம் சாக்காவின் நல்லனவற்றை விளக்குகிறது. சாக்காவின் துணையுடன்(புலி வடிவில் தோன்றும் காவல் தெய்வம்) ஒரு பாவாங் தன் மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் பாங்கையும் தன் முதுமையில் அந்த சாக்காவை தன் பேரக்குழந்தை ஒன்றிடம் ஒப்படைக்க முனையும்போது ஏற்படும் சிக்கலையும் இப்படம் சிறப்பாக சித்தரிக்கிறது.

குடிகளின் மூத்தவர்கள் இறப்புக்குப் பின் காவல் தெய்வமாக  நின்று குடும்பத்தைக் காப்பதாகவும் மலாய்ப் பழங்குடிகள் நம்பி வழிபட்டனர். இதனை ‘ரோஹ்’ (Roh)  என்று அழைப்பர். தங்கள் தொழிலுக்கும் கலைகளுக்கும் முன்னோர்களின் ஆவி உதவுவதாக நம்பினர். பாவாங், டுக்கூன், போமோ எனப்படும் மாந்திரீக நாட்டுவைத்தியர்கள் பலர் இன்றும் சாக்காவின் உதவியுடன் பல சிகிச்சைகளைச் செய்வதாகக் கூறுகின்றனர்.  போமோ, பாவாங், டுக்கூன் போன்ற மலாய்ப் பாரம்பரிய மருத்துவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களையும் ஜபங்களையும் (Mentera dan jampi) பற்றிய ஆய்வுக் கட்டுரையில் Noorhayati binti Shafie போமோக்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக விளக்குகிறார். அவர்கள் அக்கலையைக் கற்பதிலும் பயன்படுத்துவதிலும் மாய உலக அமானுஷ்யங்களின் பங்களிப்பு இருப்பதாகவே அவர்கள் நம்புவதாகக் குறிப்பிடுகின்றார். முன்னோரின் ஆவி, ஜின்கள், மத குருமார்களின் ஆவி போன்றவை தங்கள் உடலில் இறங்கிய நிலையில் (menurun) தாங்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதாக அவர்கள்  குறிப்பிடுகின்றனர். அவ்வகைச் சிகிச்சை நேரத்தில் அந்த போமோக்களின் செயல்பாடுகள் வினோதமாக இருக்கும். சிகிச்சைக்கு பின்னர் அவர்களால் தங்கள் செயலை ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாது. அதாவது போமோ அல்லது பாவாங்கின் உடலைப் பயன்படுத்திக்கொண்டு அமானுஷ்ய சக்தியே அச்சிகிச்சையை செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்றைய நிலையில்  அவற்றில் இஸ்லாமிய விதிகள் மீறப்படாமல் இருக்கவும் முயல்கின்றனர்.

சாக்கா எனும் தொல்குடிகளின் குலதெய்வ நம்பிக்கை மலாய்த் தீவுகளில் இந்து மதமும் பெளத்த மதமும் பரவியபோது அதிகம் பாதிப்புக்குள்ளாகவில்லை. அவற்றுக்கு இரண்டு காரணங்களை நாம் கூறலாம். முதலாவது, இந்து மதம் அடிப்படையில் தொல்குடி வழிபாடுகளைத் தங்கள் மதக் கட்டமைப்புக்குள் கொண்டுவரும் விரிந்த சுதந்திரத்தைக் கொண்டிருந்தது.  பெளத்தமும் இந்துமதமும் வெவ்வேறு கொள்கைகள் உடையன என்றாலும் தென்கிழக்காசியாவில் பௌத்தம் விரிவாக்கம் கண்டபோது அங்குள்ள பண்பாட்டுக்கு ஏற்ற தளர்வுகளுடன் உருக்கொண்டது. அவ்விரு மதங்களுக்குள்ளும் அதிகம் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்தன. ஆகவே தென்கிழக்காசியாவிலும் மலாய் தீவுக் கூட்டங்களிலும் அவ்விரு மதங்களின் தாக்கங்களும் ஒத்தே இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.  “inclined to question the validity of some current designations [such] as ‘Hinduism’ and ‘Buddhism’ and to wonder whether these terms do full justice to the ideas of the Javanese of the times…Both early Hinduism and Buddhism were flexible enough to accommodate and utilize each other’s icons…” (Jordaan and Wessing 1996: 65)

ஆகவே மலாய்த் தீவுகளில் வழங்கிவந்த பாரம்பரிய வழிபாடுகளுக்குள் தங்கள் மதங்களின் கொடையாக பெளத்தமும் இந்துமதமும் தீப தூப ஆராதனைகள், மந்திர உச்சாடனங்களில் ‘மகா தேவா’, ‘பூர்வரூபா’, ‘சம்பூர்ணா’ போன்ற பல சமஸ்கிருத சொற்களைக் கொடுத்து அந்த ஆதிமதங்களை தங்கள் மதத்தின் ஒரு பகுதியாக்கிக்கொண்டன. ஆனால் முழுமையான நிறுவன சமயங்களாக அவை எழவில்லை. அதன் காரணமாகவே அந்த தெய்வங்களுக்கான தனித்த கோயில்கள் அமைக்கப்படவில்லை. மேலும்  இந்து மதம், உருவ வழிபாட்டைக் கொண்டது என்பதால் மலாய் மக்கள் அந்த தெய்வ உருவங்களைத் தங்கள் நம்பிக்கைகளுடன் பிணைத்துக்கொண்டனர். புத்தமதம் அடிப்படையில் தெய்வ உருவங்களை கொண்ட மதம் அல்ல என்றாலும் தென்கிழக்காசியாவில் அதிகம் பரவிய தேராவாத பெளத்தமதம் புத்தரின் உருவத்தை வழிபாட்டுக்குப் பயன்படுத்தியதோடு புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக உருமாற்றம் அடைந்திருந்தது. அடுத்து, இந்து-பெளத்த மதங்கள் மலாய்த் தீவுகளில் பெருமதமாக பரவிய காலத்தில் அவை அரண்மனைகளையும் மேட்டுக்குடி மக்களையும் அதிகம் ஆட்படுத்தின. சாமானிய மக்கள் தங்கள் மரபான நம்பிக்கைகளை தடையின்றித் தொடர்ந்தனர்.

இஸ்லாத்தில் சாக்கா

ஆனால், இஸ்லாமிய சமயம் மலாய் தீவுகளில் 11ஆம் நூற்றாண்டில் பரவத் தொடங்கிய பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டன. நேரடியாக அரபியில் இருந்தும், சீனாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இங்கு இஸ்லாம் பரவியதாக மூன்று கோட்பாடுகள் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை இங்கு வாழ்ந்த மலாய் இன மக்களின் வாழ்வியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.

saka2சாக்கா(Saka) என்னும் நம்பிக்கை இஸ்லாமிய மறைநூல்களிலோ இலக்கியங்களிலோ குறிப்பிடப்படவில்லை என்பதை Dr Mahyuddin bin Ismail தம் ஆய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்துகின்றார். அல்-குர்ஆனிலும் நபிகளின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய ஹதீஸிலும் மாய உலக ஜீவிகள் பற்றிய தகவல்கள் உள்ளன.  சைத்தானைப் பற்றியும் ஜின்களைப் பற்றியும் வானவர்கள் பற்றியும் விரிவான தகவல்கள் கிடைக்கின்றன. அந்த ஜீவிகள் அனைத்தையும் அல்லாவே படைத்தார் என்பது மறை கூறும் தகவல். அதில் அல்லாவாகிய ஆண்டவன் ஜின்களை கடும் நெருப்பில் இருந்து உருவாக்கிய தகவலோடு அவற்றின் மாயத்தோற்றங்கள், கீழ்மைகள் போன்றவை பற்றிய விளக்கங்களும் உள்ளன. அவை மனிதனால் தொழத் தக்கன அல்ல என்பதோடு தோழமை கொள்ளவும் கூடாதவை என்பது இஸ்லாமிய மறையின் முடிவு. காரணம் அவை சைத்தானிய வம்சமாகையால் மனிதனைத் தீய வழிக்கு கொண்டுசெல்லும் என குர்ஆன் விளக்கிறது. ஏக இறைவனான அல்லா மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டிய பேராற்றல் என்று குர்ஆன் விளக்கப்படுத்துகின்றது. மேலும் ஜின்களை மனிதர்கள் தங்கள் அபூர்வ ஆற்றலைக்கொண்டு அடக்கி, அடிமைப்படுத்தி பல வேலைகளைச் செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதையும் நபி தூதர் சுலைமானின் கதை காட்டுகிறது. நபி சுலைமான் பிறவியிலேயே தனக்கிருந்த ஆற்றலால் ஜின்களை தனக்கு அடிமைகளாக்கி அவற்றைக்கொண்டே கற்பனைக்கு எட்டாத தனது கனவு நகரை உருவாக்கினார் என்று கூறப்படுகின்றது.

ஆகவே, ஜின் அல்லது சைத்தான் என்னும் கோட்பாடு மலாய்ப் பாரம்பரிய சிந்தனையில் இல்லாதவை. அவை இஸ்லாமிய சமய வருகைக்குப் பின்தான் மலாய் தீவுக்கூட்டங்களில் பரவியது. சாக்கா என்னும் பழங்குடி தெய்வ நம்பிக்கையை ஜின் அல்லது சாத்தானின் தீவிணையாகக் கொள்வதும் இஸ்லாமிய வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம்தான்.

இஸ்லாமிய மத விதிகளுக்கு ஏற்ப இங்கு பழங்காலத்தில் இருந்துவந்த வழிபாடுகளையும் சடங்குகளையும் தொகுத்தும் நீக்கியும் செய்யப்பட்ட கலாச்சார மாற்றங்களின்போது இங்கிருந்த பல பாரம்பரிய வழிபாடுகள் இறைவனுக்கு எதிரானவை என்று ஒதுக்கப்பட்டன. அவை ‘ஷிர்க்’ (shirk) எனும் பெரும்பாவச்செயல் என இஸ்லாம் தடுக்கின்றது. படிப்படியான இஸ்லாமியமயமாக்களின் காரணமாக பல மலாய் இன பண்பாடுகள் இஸ்லாத்துக்கு ஏற்ப மாற்றம் அடைந்துள்ளன. உதாரணத்திற்கு போமோக்கள் சொல்லும் மந்திரங்கள் ‘பிஸ்மில்லா’ என்று தொடங்குவதோடு தங்கள் வேண்டுதல்களை அல்லாவிடமே விண்ணபிக்கும் விதமாக உள்ளன. அரசு ‘உலே மாயாங்’, ‘மைன் புத்திரி’, ‘லெபாஸ் ஆச்சாக்’, பெஸ்தா பந்தாய், போன்ற விழாக்களையும் சடங்குகளையும் அவற்றோடு தொடர்புடைய நிகழ் கலைகளையும்  இஸ்லாதுக்கு விரோதமானவை என்று தடைசெய்துள்ளது.

மலாய் மக்களின் தொல்மத நம்பிக்கைகளை இஸ்லாமிய மார்க்கத்துக்குள் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல் புரிந்துகொள்ளக் கூடியதே. இஸ்லாம், இறைவனுக்கு எதிர் சக்தியாக சைத்தானையும் அதன் பரம்பரையில் வரும் ஜின்களையும் கூறுகின்றது. ஏக இறையை வழிபடுவோர் வேறு எந்த சக்தியையையும் வழிபடுவதை இஸ்லாம் தடுக்கின்றது. மேலும், இஸ்லாமிய மதம் ‘ஜின்’  என்னும் மாய உலக தீயசக்திக்கு  கூறும் அளவுகோல்களை மலாய் மக்களின் ஆதி தெய்வங்களுக்கும் பொருத்திப் பார்ப்பதால் அவையும் தீயசக்திகளாக மற்றங் காண்கின்றன. எனவே, அவற்றை நிராகரிக்கும் நிலைபாட்டையே மார்க்க அறிஞர்கள் எடுத்துள்ளனர்.

இதன்வழி மலாய்க்காரர்களின் பாரம்பரிய வழிபாடுகளும் சடங்குகளும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரானதாக மாற்றங்கண்டன. மலாய் மக்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால், இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப, அவர்கள் தங்கள் பாரம்பரிய வழிபாடுகளைப் பேய் அல்லது சைத்தானிய வழிபாடாகவே இன்று கருதுகின்றனர். இதன் விளைவாகவே சாக்காவை ஜின்னின் தாக்கமாக கருதி மார்க்கவழியில் தீர்வுகள் காண முயலுகின்றனர்.

ஆயினும் சங்கிலித் தொடர்போல மரபாக தொடரப்பட்ட பல வழக்கங்கள் இடையில் அறுபட்டுவிட்டதை நாம் காணமுடிகின்றது. புறத்தே விழுதுகள் துண்டிக்கப்பட்டாலும் கண்ணுக்குப் புலப்படாத வேர்கள் மனித மனங்களை தங்களின்  தொன்ம வரலாறு நோக்கி இழுத்துச்செல்கிறது.   அவர்களின் ஆழ்மனத் தொடர்புகள் வரலாற்றை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. மலாய் மக்கள், பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் தொல்மரபு  வழக்கங்களில் இருந்து தங்களை முற்றாக வெளியேற்றிக்கொள்ள முடியாத நிலையையே சாக்கா என்னும் ஆதிநம்பிக்கைகள் மீதான தாக்கம் காட்டுகின்றது. பல தலைமுறைகளுக்கு முன் முடியப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டதால் ஏற்படும் தாக்கங்களின் அச்சம் அவர்களை சில நேரங்களில் தடுமாறவைக்கின்றது. அந்த நடுக்கும் அவர்களின் மன சமநிலையை குலைத்துவிடுனின்றது. நாம் இதை ‘தெய்வக்குற்றம்’, ‘நேர்த்திக்கடன்’ போன்ற நாட்டாரியல் சொற்களின் வழி புரிந்துகொள்ள முடியும். ஆயினும் அத்தாக்கம் இன்று ஜின்களின் தாக்கமாகப் புரிந்துகொள்ளப்பட்டு இஸ்லாமிய முறையில் தீர்வுகள் சொல்லப்படுகின்றன.

 

உதவிய ஆக்கங்கள்

 

1 comment for “SAKA: பழிவாங்கும் குலதெய்வங்கள்

  1. July 3, 2019 at 1:25 am

    கலாச்சார இடைவெளிகளை விளங்கிக்கொள்வதற்கான பல திறப்புகளை தரக்கூடிய மிக முக்கியமான கட்டுரை. .

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...