கேலிச் சித்திரக் கலை ஒரு செய்தியை அல்லது தகவலை ஓவியம் வழி நகைச்சுவையுடன் மற்றவர்களுக்குக்கொண்டு செல்வதாகப் புரிந்துகொள்ளலாம். கோமாளி இதழுக்குப் பிறகு மலேசியத் தமிழ் இதழியல், பதிப்புச் சூழலில் கேலிச் சித்திரக் கலைஞர்கள் அரிதாகிவிட்ட சூழலைதான் தற்போது பார்க்கமுடிகிறது. அதிலும், சமூகப் பிரச்சனைகளையும் அரசியல் சிக்கல்களையும் கேலிச் சித்திரம் வழி பேசும் தமிழ்க் கலைஞர்கள் கடந்த சில ஆண்டுகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருக்கும் ஓரிரு கலைஞர்களும் இதழ்களின் தேவைக்கு ஏற்ப நீர்த்துப்போன கிண்டல் வசனங்களுடன் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கின்றனர். இதற்கு முற்றிலும் எதிர்விசையில் மலாய் கேலிச் சித்திர கலைஞர்களுக்கும் அவர்களை முன்னெடுக்கும் இதழ்களுக்கும் இந்நாட்டு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
கேலிச் சித்திரம் நம் மலேசிய நாட்டிற்கு புதிதான ஒன்று அல்ல. 1920-களின் பிற்பகுதி முதல் நம் நாட்டில் கேலிச் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவ்வாண்டில் ராஜா சுலைமான் அவர்கள் வரைந்த கேலிச் சித்திரம் 13-ஆம் திகதி நவம்பர் மாதம் ‘போலீஸ் மலாயா’ எனும் சஞ்சிகையில் வெளிவந்தது. அதன் பிறகு மக்களுடைய சமூகச் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் சார்ந்த கேலிச் சித்திரங்களை நகைச்சுவையாக மக்கள் அதிகம் இரசிக்க ஆரம்பித்தார்கள். 1936-ஆம் ஆண்டில் கேலிச் சித்திரங்கள் ‘வர்தா ஜெனகா’ (Warta Jenaka) போன்ற வாராந்திர நாளிதழின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, 1941-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை கேலிச் சித்திரங்கள் ஜப்பான் ஆட்சியை எதிர்க்கும் பிரச்சாரங்களின் ஊடகமாக அமைந்தது. 1978-ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் கேலிச் சித்திரம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது. 1990-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உஜாங் (Ujang), மீயி (Mie), ஆசா (Aza), சாபாய் (Cabai) மற்றும் ‘போய் பிஜே (Boy Pj) போன்ற கேலிச் சித்திரக் கலைஞர்கள் உருவாகத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து, ரெஜப்ஹட் (Rejabhad), லாட் (Lat), இமுடா (Imuda), நிசாம் ரசாக் (Nizam Razak), இப்ராஹிம் அனான் (Ibrahim Anon), ஃபாமி ரீசா (Fahmi Reza) போன்றவர்கள் கேலிச் சித்திரத் துறையில் முக்கியமானவர்கள். மலேசியாவில் கேலிச் சித்திரங்களால் பல மாற்றங்களும் மக்களிடையே பல விடயங்களில் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் ஜுல்கிஃப்லீ அன்வர் உஹாக் கேலிச்சித்திர உலகில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.
இவரது கேலிச் சித்திரங்கள் அரசாங்கத்தில், அரசியலில் இருக்கும் குளறுபடிகளை எந்தவித அச்சமுமின்றிப் பேசுபவை. ஒவ்வொரு சித்திரமும் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சமகால சிக்கல்களைக் கூறும் வகையிலும் சிந்திக்க வைக்கும் நோக்குடனும் வரையப்படுபவை.
பரவலாக ஸூனார் என்று பொதுவெளியில் அறிமுகமான இவர் இந்நாட்டில் பல சவால்களையும் இன்னல்களையும் கடந்து இன்று வரை சிந்திக்கத் தூண்டும் பல கேலிச் சித்திரப் படைப்புகளை வெளியிட்டு வருபவர். சவால்மிக்க இத்துறையில் அவர் தன் திறமையை வெளிப்படுத்த பல தளங்களில் முயற்சி செய்துள்ளார். பணத்தைப் பெரிதாகக் கருதாமல், தனது சித்தாந்தத்தின் அடிப்படையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால் மட்டும் போதும் என்று இயங்குபவராக இருப்பவர். வேறுபாடுகளின்றி அனைத்து இனத்தவர்களுக்காகவும் தன் படைப்பின் வழி குரல் எழுப்பும் கலைஞராகவும் அறியப்படுகிறார்.
பொது ஒழுங்கிற்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக்கொண்டிருப்பதாகக் கூறி ஐந்து கேலிச் சித்திர புத்தகங்களுக்குத் தடை, புத்தக வெளியீடு நடக்கவிருந்த கடைசி நிமிடத்தில் அதிரடி சோதனையில் கைது, பதிப்பு நிறுவனம் முடக்கப்பட்டது, வேறெந்த பதிப்பகத்திலும் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கப்படக்கூடாது என்று பதிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல், அரசாங்கத்திற்கு எதிராகப் படைப்புகளை வெளியிடுகிறார் என்று பலமுறை கைது, நீதி விசாரணை, வெளிநாட்டுக் கடப்பிதழ் முடக்கம் என அவரது நகர்ச்சிகள் ஒவ்வொன்றும் நெருக்குதலுக்கு உட்படுத்தப்பட்டபோது தனது கொள்கையிலும் சித்தாந்தத்திலும் உறுதியுடன் நின்றவர் ஸூனார். தனது செயல்பாடுகளை ஒட்டி மிகத் தெளிவான பார்வையும் பிடிப்பும் கொண்டவராக ஸூனாரை சொல்லலாம்.
ஸூனார் தன் வாழ்வைப் பற்றி தனது வலைத்தளத்தில் விரிவாகவே பதிவு செய்துள்ளார். அவரை அவரது குரலில் அறிவதன் வழி அவரது கலை உருவான வழித்தடங்களையும் அறிய விளைகிறேன்.
ஸுனார் என்கிற நான்
“நான் கெடா பெண்டாங்கில் உள்ள பாடாங் டுரியான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கேலிச் சித்திரம் வரைய ஆரம்பித்துவிட்டேன். 1973-ஆம் ஆண்டு என்னுடைய முதல் கேலிச் சித்திரம் ‘பம்பினோ’ இதழில் (Bambino Magazine) வெளிவந்தது. அப்பொழுது நான் ஆரம்ப பள்ளியில் பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன். அதன் பின், நான் கேலிச் சித்திரம் வரைவதில் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தேன். ‘அனாக் கிஜாங்’ மற்றும் ‘பாக் அடில்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து என் கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. என்னுடைய படைப்புக்கு பணம் வழங்கப்படவில்லை, மாறாக, இதழின் பிரதிகள் இலவசமாக கொடுக்கப்பட்டது. அவற்றுடன் ‘மனமுவந்து எங்களின் சார்பில் இதனை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்பட்டிருக்கும். அதை முழு ஊருக்கே காண்பித்து மகிழ்ச்சிக்கொண்டேன்.
இடைநிலைப் பள்ளியில் பயிலும் காலத்தில் நான் சுங்காய் டியாங், பெண்டாங் மற்றும் ஜித்ராவில் உள்ள பள்ளிகளுக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் நான் கேலிச் சித்திரம் வரைவதைச் சிறிது காலம் நிறுத்தியிருந்தேன். ஆனால், சில கேலிச் சித்திரங்களை என் சொந்த சேகரிப்புக்காக வரைந்து நண்பர்களிடம் காட்டுவேன். அது மட்டுமின்றி, பள்ளி இதழ்களுக்கும் கேலிச் சித்திரம் வரைந்துள்ளேன். உண்மையில் சொல்வதென்றால் சர்ச்சைகள் எனக்கு புதியவை அல்ல. என் முதல் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் 1980-இல் நகைச்சுவைக்காக ‘தொம்தொம்பாக்’ எனும் தலைப்பில் பள்ளி இதழில் வெளிவந்தது. அக்கேலிச் சித்திரம் பள்ளியையும் ஆசிரியர்களையும் விமர்சிக்கும் வண்ணம் வரையப்பட்டது. உடனடியாக கட்டொழுங்கு குழு என்னை வரச் சொல்லி கட்டளையிட்டது.
என்னுடைய பெற்றோர் நான் அறிவியல் துறையில் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் கலைத் துறையில் படிப்பைத் தொடரத் தடை வந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் கலைத் துறை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்காது என்ற ஒரு சிந்தனையைக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களைக் குறை சொல்லமாட்டேன். காரணம், அக்கால கட்டத்தில் கலைஞர்களின் எண்ணிக்கை குறைவு. முக்கியமாகக் கேலிச் சித்திரம் வரையும் கலைஞர்கள் யாரும் இல்லை. சிறுவயதில் எனக்கென்று ஒரு தெளிவான குறிக்கோளும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற சிந்தனையும் இல்லை. என்னுடைய வாழ்க்கை எந்த ஒரு திட்டமும் வகுக்காமலே இயங்கியது. 1980-ஆம் ஆண்டு, நான் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் (UTM) அறிவியல் கல்வியைத் தொடரச் சென்றேன். ஆனால், ஒரு வருடத்திலேயே படிப்பை முடிக்கத் தவறியதால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டேன். பின், கோலாலம்பூரிலேயே தங்கி தொழிற்சாலைகளிலும் கட்டுமானத் தளங்களிலும் வேலை செய்து வந்தேன். இந்த நேரத்தில்தான், நான் வரைந்த கேலிச் சித்திரங்கள் பிந்தாங் திமூர் (Bintang Timur) நாளிதழ் மற்றும் கிசா சின்தா (Kisah Cinta) பொழுதுபோக்கு இதழில் வெளியிடப்பட்டன. அதற்காக எனக்கு முதலில் காசோலை வடிவில் ரிங்கிட் மலேசியா 4.00 சன்மானமாக வழங்கப்பட்டது.
‘கீலா–கீலா’ இதழ் காலம்
1980-இல் பிப்ரவரி முதல் நாளன்று, என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. ‘கீலா-கீலா’ இதழில் புதிய கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் ‘மெகார் டி ஜீஜீ’ (Mekar di GG) எனும் பெயரில் ஒரு பகுதி தொடங்கப்பட்டது. அப்பகுதியில் என்னுடைய கேலிச் சித்திரம் வெளிவந்தது.
‘கீலா-கீலா’ இதழில் என் கேலிச் சித்திரங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அங்கு நீண்ட காலமாக கேலிச் சித்திரம் வரையும் கலைஞராக இருந்த ரெஜப்ஹட் (Rejabhad) அவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் கேலிச் சித்திரம் வரையும் கலை பற்றி எனக்கு நிறைய வழிகாட்டியுள்ளார். அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டேன். ‘கீலா-கீலா’ இதழில் ‘கெபாங்-கெபாங்’ என்னும் பகுதி நிரந்தரமாக எனக்கு வழங்கப்பட்டது. இதுவே நான் நையாண்டி மற்றும் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதற்கான ஒரு தொடக்கமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, நான் ‘ஹரியான் நேசனல்’ (Harian Nasional) நாளிதழிலும் தொடர்ந்து தினமும் ‘அலி பிஸ்னிஸ்’ (Ali Bisnis) எனும் கதாபத்திரத்தைக் கொண்டு கேலிச் சித்திரம் வரைந்து வந்தேன். ஆனால், அந்த நாளிதழ் சிறிது காலம் மட்டுமே வெளிவந்தது.
1986-இல் அரசாங்க வேலையில் இருந்து என்னை நிரந்தரமாக விடுவித்துக்கொண்டு முழு நேர கேலிச் சித்திர கலைஞராகச் செயல்பட்டேன். எனக்கு ‘ஆபிஸ் கார்னர் அண்ட் லிசா’ (Ofis Korner and Liza) என்று கூடுதல் பகுதி கொடுக்கப்பட்டது. அப்போது நான் மிகவும் அதிஷ்டசாலியாக உணர்ந்தேன். காரணம் அக்காலப்பகுதியில் புகழ்பெற்று விளங்கிய கேலிச் சித்திர கலைஞர்களாக இருந்த ஜாஃபர் தைப்(Jaafar Taib), அஸ்மான் யுசொஃப்(Azman Yusof), ஜைனால் புஹங் ஹுசேய்ன்(Zainal Buang Hussien), டொன்(Don), தசிடி(Tazidi), லோங்(Long), கெரெங்கே(Kerengge), ரெக்கிய் லீ(Reggie Lee), ஊஜங்(Ujang) மற்றும் பலருடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு விமர்சகர் ‘கீலா-கீலா’ இதழில் வெளிவந்துகொண்டிருந்த என் கேலிச் சித்திரம் மற்றவர்களைப் போல் சூடாக இல்லை என்றாலும் இதமாக இருக்கிறது என்றார். அக்கருத்துக்கு நானும் உடன்பட்டேன்.
கீலா-கீலா இதழில் என்னுடைய அரசியல் கேலிச் சித்திரத்திற்காக ‘பனௌராமா’(Panaurama) என்ற புதிய பகுதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பனௌராமா பகுதியில் வரைந்த பிறகு, அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தனிப்பட்ட முறையில் நான் உணர்ந்தேன்; காரணம் இந்த பகுதியைப் படிக்கும் பெரும்பான்மையான கீலா-கீலா வாசகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டாத இளைஞர்களாக இருந்தனர். அரசியல் கேலிச் சித்திரம் வரைய பொருத்தமான நாளிதழ்களில் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.
‘பெரித்தா ஹரியான்’(Berita Harian) காலம்
அதனை தொடர்ந்து, நான் விரும்பியது போலவே என்னுடைய அரசியல் கேலிச் சித்திர துண்டு ‘பாபா’ (Papa) என்னும் பகுதியை பெரித்தா ஹரியான் நாளிதழில் வெளியிட ஒப்புக் கொண்டார்கள் 1990-இல் ‘சென்டவாரா’ (Sendawara) என்ற தலையங்கக் கேலிச் சித்திரம் வரைய தனியாக ஒரு பகுதி கிடைத்தது. 1959ஆம் ஆண்டு தொடங்கி அரச மலேசியா வான்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் உலங்கு வானூர்தியான ‘ஹெலிகாப்டர்’ நூரி (Nuri Helicopter) தொடர்ந்து விபத்துக்குள்ளாவது, உயிர்ச்சேதங்களை விழைவிப்பது ஆகிய சம்பவங்களை ஒட்டி நான் வரைந்த கேலிச் சித்திரம் இக்காலப்பகுதியில்தான் சர்ச்சைக்குரியதானது. எனது கேலிச் சித்திரத்தில் நீதிமன்ற வழக்காடு நடப்பதுபோல் ஒரு காட்சி வரும். ‘நூரி உலங்கு வானூர்தி ’(Nuri Helicopter) துயரத்தைப் பற்றி நான் வரைந்த கேலிச் சித்திரத்தில் நீதி மன்ற சூழலில் நீதிபதி குற்றவாளியிடம் “உங்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நூரியில் பயணம் செய்ததற்காக நாங்கள் உங்களைத் தண்டிக்கிறோம்,” என்பதாக அந்த கேலிச் சித்திரம் அமைந்தது.
இது அரசாங்கத்திற்கு ஒவ்வாமையைத் தந்தது. இதற்காகப் பத்திரிகையின் ஆசிரியர் பாதுகாப்பு அமைச்சிடம் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதனுடைய நகலை என்னுடனே வைத்திருக்க விரும்பினேன். 1991இன்போது பெரித்தா ஹரியானில் முழு நேரமாக வேலை செய்ய கீலா-கீலா இதழில் இருந்து வெளியேறினேன். பெரித்தா ஹரியானில் கேலிச் சித்திரம் வரைவது தவிர்த்து, வரைகலை (graphics) செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இந்த வேலை எனக்கு பொருத்தமில்லாத ஒன்றாக இருந்தது. ஆறு மாதங்கள் கழித்து நான் ராஜினாமா செய்தேன். ஆனாலும் தொடர்ந்து என் கேலிச் சித்திரங்களை பெரித்தா ஹரியனுக்கு வழங்கிக்கொண்டுதான் இருந்தேன். இந்தக் காலகட்டத்தில், கார்ட்டுனிஸ்ட் லாட்(Lat) ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’(New Straits Times) பத்திரிகையிலிருந்து ஓய்வு பெற்றார் (sabbatical leave). அவரைப்போன்ற புகழ்பெற்ற கேலிச் சித்திரக் கலைஞரின் பகுதியை நிரப்ப என்எஸ்டி(NST) ஆசிரியர் என்னை நாடினார்.
நான் அதை செய்ய முயற்சித்தேன்; அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. காரணம் லாட் அளவுக்கு நான் தகுதியானவனா என்று எனக்குத் தெரியவில்லை. நானும் லாட்டும் வெவ்வேறான கேலிச் சித்திரக் கலைஞர்கள். இந்தக் காலக்கட்டத்தில், சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பகுதி கேலிச் சித்திரக் கலைஞர்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தலைவராக இருந்த முலியடி மஹமுட் (Muliyadi Mahmood) (UiTM பேராசிரியர்) மற்றும் புரவலரான லாட் அவர்களால் செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1993-ல் டோக்கியோ ஷிபியாவில் (Shibuya, Tokyo) உள்ள ஆசியான் கேலிச் சித்திர கண்காட்சியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பெரித்தா ஹரியானில் வெளிவந்த என் கேலிச் சித்திரங்கள் நான் விரும்பிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது மட்டுமின்றி என்னுடைய பல படைப்புகள் ஆசிரியரால் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. என்னைப் பொறுத்தமட்டில், நான் என் கேலிச் சித்திரத்திற்கான சரியான சூத்திரத்தைக் கையாளவில்லை. என் வாழ்க்கை இன்னும் நிச்சயமற்றதாக இருந்தது. என் படைப்புகள் ‘தி மலாய் மெயில்’ (The Malay Mail) நாளிதழிலும் வெளியானது. ஆனால் அது சிறிது காலத்திற்கே. அந்த நேரத்தில், நான் என் படைப்புகளை ‘தி ஸ்டார்’ (The Star) நாளிதழுக்கு அனுப்பினேன், ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. அப்போது நான் எதையோ இழந்தது போலவும் மனம் தளர்ந்தும் உணர்ந்தேன். ஏதோ ஒழுங்கற்று இருப்பதுபோல் தோன்றியது. அது என்னவென்று என்னால் அறிய முடியவில்லை. இந்தநிலையில், விமர்சன அரசியல் கேலிச் சித்திரக் கலைஞர்களுக்கும் கலைக்கும் மலேசியாவில் இடமும் எதிர்காலமும் இல்லை என்று உணர்ந்து இத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தேன்.
நான் இறுதியாக 1996ஆம் ஆண்டில் பெரித்தா ஹரியானை விட்டு வெளியேறினேன். வரைவதையும் நிறுத்தியிருந்தேன். அந்த நேரத்தில், நானே சுயமாக தனித்து செயல்படத் தொடங்கினேன். கேலிச் சித்திரங்கள் வரைவது, அதை சுயமாக சந்தைப்படுத்துவது, கேலிச் சித்திரப் பட்டறை நடத்துவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வகையான வேலைகளைச் செய்து வந்தேன்.
‘ஹராக்கா’(Harakah) காலம்
1998ஆம் ஆண்டு செப்டம்பரில் அன்வார் இப்ராஹிம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு நான் மீண்டும் அரசியல் கேலிச் சித்திர உலகினுள் வருவதற்குத் தூண்டியது. ஒரு மனிதனாக மட்டுமின்றி ஒரு கலைஞன் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட் ஆட்சியின்கீழ் இயங்கிய தேசிய முன்னணிக் கட்சியின் (Barisan Nasional) அநீதிக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராகப் போராடுவது எனது கடமை என்று உணர்ந்தேன். முதலில், என் படைப்புகளின் சில பிரதிகளை அன்வார் வீட்டிற்கும் (அவரது கைதுக்கு முன்னர் ஒவ்வொரு இரவும் தொடர்ச்சியாக பேரணிகள், பொதுமேடைப் பேச்சுகள் இடம்பெற்றன) நீதிமன்றத்திற்கும் இலவசமாக விநியோகம் செய்தேன்.
ஒருநாள் என்னுடைய நண்பர் ஹராக்காவிற்கு என் படைப்புகளை அனுப்பச் சொல்லிப் பரிந்துரைத்தார். நான் சில கேலிச் சித்திரங்களை வரைந்து முடித்து, ஹராக்காவின் ஆசிரியரான ‘சுல்கிஃப்ளி சூலொங்’ (Zulkifli Sulong) என்பவரை தொடர்புகொண்டேன். அவர் என் படைப்புகளைப் பற்றி முன்பே அறிந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 1999 பிப்ரவரியில் என் அரசியல் கேலிச் சித்திரம் ஹராக்காவில் வெளிவந்தது. எதிர்பாராதவிதமாக, வாசகர்களிடமிருந்து நல்ல கருத்துகளே கிடைத்தன. என் மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஹராக்கா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. ஹராக்காவும் நானும் ஒருவருக்கொருவர் இட்டு நிரப்பி திருப்திப்பட்டுக்கொண்டோம். இறுதியாக, புதிருக்குள் மூழ்கிக் கிடந்த எனக்கான பதிலைக் கட்டுபிடித்தேன். எனக்கு கிடைத்த சம்பளம், பிரதான செய்தித்தாள்களிலிருந்து கிடைத்த சம்பளத்தைவிட மிகக் குறைவாக இருந்தாலும், இப்போது நான் செய்யும் வேலையில் எனக்கு நிரம்ப திருப்தி இருந்தது. அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லை.
வாசகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டுகள் விலையுயர்ந்தது. அதேசமயம், இந்த மரியாதை எனக்கு மிக பெரிய பொறுப்பையும் வழங்கியது என்பதை உணர்ந்தேன். பிரதமரின் மூக்கை பெரியதாக வரைந்திருந்த கேலிச் சித்திரங்கள் வாசகர்களை வெகுவாக ஈர்த்தது. நான் ஹராக்காவில் இருந்தபோது, பிரதமரின் மூக்கை ஒரு பன்றியின் மூக்குடன் ஒப்பிட்டு வரைந்த கேலிச் சித்திரம் புதிய சர்ச்சை உருவாக்கியது. இதையொட்டி எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன. ஆனால் என்னுடைய படைப்பு என் சொந்தக் கருத்து என்று உறுதியாகக் கூறினேன்.
ஹமட் லுட்ஃபி ஒத்மான் (Ahmad Lutfi Othman) அவர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகைக்கும் என் பங்களிப்பை வழங்கினேன். ஹராக்காவுடன் இணைந்து ‘பாரி கெரன மாத’(Dari Kerana Mata), ‘க்ரொனி மனியா’(Kroni Mania), ‘லாவான் டெடாப் லாவான்’(Lawan Tetap Lawan), ‘லகாக் பாக் மஹட்’(Lagak Pak Mahat), ‘கெரன மு ஹிடுங்’(Kerana Mu Hidung), ‘மலேசியா போலே’ (Malaysia Boleh) ஆகிய என்னுடைய ஐந்து கேலிச் சித்திரத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
‘மலேசியாகினி’ காலம்
எதிர்பாராதவிதமாக 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் மலேசியாகினியில் சேர்ந்தேன். மகாதீர் தனது பதவி விலகை அறிவித்தபோது, அவருடைய பிரபலமான சொற்றொடரான ‘dah lama dah’வை அடிப்படையாகக்கொண்ட ஒரு கேலிச் சித்திரம் வரைய யோசனை வந்தது. மலேசியாகினிக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன். மின்னஞ்சல் வழி அதன் ஆசிரியர் ஸ்டீவன் கானிடம் (Steven Gan) என் யோசனையைச் சொன்னேன். அவரும் ஏற்றுக்கொண்டார். அதற்கு பிறகு, மலேசியாகினியில் ‘கார்ட்டூன் கினி’ என்று ஒரு பகுதியை எனக்கு ஒதுக்கினார்.
மலேசியாகினியுடன் இணைந்து பணியாற்றியபோது, அதிக வரவேற்பும் எதிர்விமர்சனங்களும் வந்தன. அவை எனக்கு ஒரு உந்துதலைத் தந்தன. பல்வேறு இனங்கள், பின்புலங்கள், வயதுடையவர்களிடம் இருந்து பலதரப்பட்ட கருத்துகள் கிடைக்கப்பெற்றேன். மாணவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பலரும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி தங்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். என்னுடைய கார்ட்டூன் கினியின் படைப்பில் இருந்து நான் ‘கார்ட்டூன் ஓன் துன் அண்ட் அதெர்ஸ்’ (Cartoon On Tun and Others), ‘1 ஃபனி மலேசியா’ (1 Funny Malaysia), ‘கார்ட்டூ-ஓ-ஃபோபியா’ (Cartoon-O-Phobia) என சில தொகுப்புகளைத் தயாரித்துள்ளேன்.
‘கெடுங் கார்டுன்’ (Gedung Kartun) காலம்
ஆகஸ்ட் 2009-ஆம் ஆண்டு, இளம் கேலிச் சித்திர கலைஞர்களான ஜோனொஸ் (Jonos), ரோனாசினா (Ronasina), நாசா (Naza), ஆர்ட் (Art), லான் (Lan), ஓலி (Oly), எனுட் (Enot) போன்ற பலரோடு சேர்ந்து மலேசியாவில் கெடுங் கார்டுன் என்ற முதல் அரசியல் கேலிச் சித்திர பத்திரிகையை தயாரிக்க ‘செபகட் எஃபெக்டிஃப்’ எனும் தனியார் நிறுவனத்தை (Sepakat Efektif Sdn Bhd) உருவாக்கினேன். அப்பத்திரிகையில் சமகாலப் பிரச்சனைகளை மையமாகக்கொண்ட விமர்சனங்கள், கடுமையாகவும் நகைச்சுவை வடிவிலும் சொல்லப்பட்டது. அதனுடைய முதல் பக்கத்தில் மலேசியத் தலைவர் ஒருவர் மங்கோலியன் கொடியை அசைத்தபடி ‘மெர்டேகா!’ என்று முழக்கமிடுவதுபோல் அமைந்திருக்கும். அரசாங்கம் இந்த வகையான நகைச்சுவைகளை விரும்பவில்லை. இதன்விளைவாக, இச்செய்திகள் பரவலாகிய சில நாட்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சிலிருந்து (Ministry of Home Affairs) எட்டு அதிகாரிகள் பிரிக்பீல்ட்சில் அமைந்திருந்த என் அலுவலகத்தைச் சோதனைச் செய்ததுடன் 408 ‘கெடுங் கார்டுன்’ பிரதிகளைக் கையகப்படுத்தினார்கள்.
அதே நேரத்தில், அச்சிடும் நிறுவனத்தையும் சோதனை செய்ததோடு, அச்சிடும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. என்னுடைய படைப்புகளை வரும் காலங்களில் அச்சிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இறுதியில், ‘கெடுங் கார்டுன்’ தடை செய்யப்பட்டது. அச்சம், வெளியீட்டுச் சட்டம் 1984ன் (Printing Presses and Publications Act 1984) கீழ் நான் விசாரிக்கப்பட்டேன். ஆனால் இதுவரை எனக்கு எதிராக எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் 2009-இல் பேராக் அரசியல் நெருக்கடியைப் பற்றி ‘பேராக் டாரூல் கார்டுன்’ என்ற தலைப்பில் இன்னொரு புத்தகத்தைத் தயாரித்தோம். அதற்கு பேராதரவு கிடைத்தது; மூன்று மறுபதிப்புகள் வரை வெளிவந்தது. மார்ச் 2010-ஆம் ஆண்டு மற்றொரு நிறுவனம் மூலம், ‘இசு டலாம் கார்டுன்’ (Isu Dalam Kartun) என்ற மாதாந்திர கேலிச் சித்திர பத்திரிக்கையை வெளியிட அனுமதி பெற்றோம்.
2010ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மூன்று ‘ஈசு டலாம் கார்டுன்’ (Isu Dalam Kartun) தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ள. அரசாங்கத்திடம் இருந்து எதிர்மறையான கருத்துகள் வந்தாலும்கூட மற்றவர்களிடமிருந்து நல்ல ஆதரவே கிடைத்தது. உள்துறை அமைச்சு நாடெங்கிலும் விநியோகிப்பாளர்களிடமிருந்து வெளியீடுகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசாங்கம் ‘பேராக் டாரூல் கார்டுன்’, ‘ஸ்சு டலாம் கார்டுன்’(Isu Dalam Kartun), ‘1 ஃபனி மலேசியா’(1 Funny Malaysia) ஆகிய பிரதிகளைத் தடைசெய்தது. இதற்கு உள்துறை அமைச்சு வழங்கிய காரணம், ‘புத்தகங்கள், பத்திரிகைகளின் உள்ளடக்கம் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதாலும் இது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் மக்களைப் பாதகமான எண்ணத்துக்கு இட்டுச்செல்லும்’ என்பதாகும். தடை உத்தரவு வந்ததால், வெளியிடப்பட்ட பிரதிகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. ‘பேராக் டாரூல் கார்டுன்’ மற்றும் ‘1 ஃபனி மலேசியா’(1 Funny Malaysia) ஆகியவற்றுக்கான தடையை எதிர்த்து நானும் ‘மலேசியாகினி’ (Malaysiakini) பத்திரிகையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.
வழக்கு விசாரனைக்கு வந்தது. அரசாங்கம் தனது வாக்குமூலத்தில் (affidavit) கேலிச் சித்திரங்கள் நாட்டின் தலைவர்களை, குறிப்பாக சில பக்கங்களில் பிரதமரை விமர்சனம் செய்ததுதான் அதனைத் தடை செய்ததற்கு காரணம் என்று குறிப்பிட்டது. ஆனால், என்னுடைய பதில் வாக்குமூலத்தில் நான் இதுபற்றி குறிப்பிடவில்லை, மாறாக அரசியல் கேலிச் சித்திரம் என்றால் என்ன என்று விளக்கமாக சுட்டிக்காட்டியிருந்தேன். விக்கிபீடியாவை மேற்கோளிட்டு “வரலாற்று நிகழ்வுகளைக் குறித்துக் கேலிச் சித்திர கலைஞர்கள் தங்களின் சுயகருத்துகளை ஓவியங்களாக வரைபவை” என்ற விளக்கமாக கூறியிருந்தேன். ‘பேராக் டாரூல் கார்டுன்’ (Perak Darul Kartun) மற்றும் ‘1 ஃபனி மலேசியா’ (1 Funny Malaysia) படைப்புகளும் அதுபோலவே என்னுடைய பார்வையில் மலேசிய வரலாற்றை மையப்படுத்தி வரையப்பட்ட படைப்புகளே என்று குறிப்பிட்டிருந்தேன்.
‘கார்டுன்–ஒ–ப்ஹொபியா’(Cartoon-O-Phobia)
2010ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னுடைய மூன்றாவது கேலிச் சித்திர தொகுதியான ‘கார்டுன்-ஒ-போபியா’ (Cartoon-O-Phobia) என்ற படைப்பு ‘மலேசியாகினி’யுடன் சேர்ந்து வெளியீடு கண்டது. என்னுடைய முந்தைய இதழ்கள், புத்தகங்களை உள்துறை அமைச்சு தடை செய்த நிகழ்வின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டே இத்தலைப்பு உருவானது. 2010ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் திகதி இத்தொகுப்பு கோலாலம்பூர். சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது. மாலை 4.00 மணி அளவில், வெளியீட்டு நிகழ்வுக்காக என்னுடைய உரையைத் தயார்படுத்திக்கொண்டிருந்தபோது, 10 காவல்துறை அதிகாரிகள் வந்து என்னுடைய அலுவலகத்தைச் சோதனையிட்டார்கள். ‘கார்டுன்-ஒ-போபியா’வின் (Cartoon-O-Phobia) 66 பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு மணி நேரத்தில் நான் ஏழு காவல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டேன். இறுதியாக, ‘கெ.எல்.ஐ’(KLIA) காவல் நிலையத்தில் தேச நிந்தனைச் சட்டம் 1948ன் (Sedition Act 1948) கீழ் கைது செய்யப்பட்டேன்.
காவல்துறையினர் அச்சகத்தையும் சோதனையிட்டார்கள். அதிர்ச்சியூட்டும் வகையில், என்னுடைய முந்தைய கேலிச் சித்திரப் புத்தகங்களை அச்சிட்ட நிறுவனத்தையும் சோதனைச செய்ததுடன் இனிமேல் கேலிச் சித்திரப் புத்தகங்களை அச்சிடக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தனர். கோலாலம்பூரில் திட்டமிட்டபடி ‘கார்டுன்-ஒ-போபியாவின்’ (Cartoon-O-Phobia) வெளியீடு நடந்தது. ஆனால், காவல்துறையினர் அங்கு சூழ்ந்திருந்ததால் ஒரு பிரதிகூட விற்க முடியாமல் போனது. என்னுடைய மனைவி திருமதி ஃபாஸ்லினா (Fazlina) என் சார்பாக அந்நிகழ்ச்சியில் பேசினார். புத்தகம் இல்லாமல், எழுத்தாளர் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது என்பது வரலாற்றில் புதிய பதிவு.
அதற்கு அடுத்த நாள் காலையில், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது நீதிபதி என்னை விடுதலை செய்ய உத்தரவிட்டார். நான் கைது செய்யப்பட்ட செய்தி உலகளவில் பரவலாக சர்வதேச செய்தி ஊடகம் வரை பரவியது. சர்வதேச கேலிச் சித்திர உரிமைகள் கட்டமைப்பு (Cartoonist Rights Network International (CRNI)) என்னும் சுயாதீன அமைப்பு, என்னைக் கைது செய்ததற்காக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. கார்டுன்-ஒ-போபியா’வால் (Cartoon-O-Phobia) ஈர்க்கப்பட்ட அமெரிக்க கேலிச் சித்திரக் கலைஞர்கள் 2010ஆம் ஆண்டு அக்டோபரில் வாஷிங்டனில் ‘23வது கார்டுன்ஸ் அண்ட் கொக்டெய்ல்ஸ்’ (The 23rd Cartoons and Cocktails) என்ற விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். உலகெங்கும் இருந்தும் 150 கேலிச் சித்திரக் கலைஞர்களோடு சேர்ந்து ‘கார்டுன்-ஒ-போபியாவின்’(Cartoon-O-Phobia) பிரதிகளை அறப்பணிக்காக ஏலம் விட கேட்டுக்கொள்ளப்பட்டது.
தலையங்க கேலிச் சித்திரத்திற்காக 2010-ஆம் ஆண்டு ‘புலிட்செர்’ பரிசு வென்ற ‘மார்க் ஃபியோர்’ (Mark Fiore) என்னுடைய புத்தகத்தையொட்டி அந்நிகழ்ச்சியில் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது. பிறகு, மே மாதத்தில் ‘CRNI’ 2011-ஆம் ஆண்டிற்கான ‘துணிவுமிகு கேலிச் சித்திரக் கலையாக்கம்’ (Courage in Editorial Cartooning) விருது எனக்கு வழங்கப்பட்டது.
எண்ணமும் தத்துவமும்
எப்படி எனக்கு இப்படியொரு எண்ணம் உருவாகியது என்று பலர் கேட்டார்கள். எண்ணம் அல்லது தேடல் என்பதே சிக்கலானது என்பதால் இந்தக் கேள்விக்கும் பதில் சொல்வது கடினமானதாக இருந்தது. இது எனக்குச் சில நொடிகளில் தோன்றிய விடயமாகவும் இருக்கலாம். அல்லது நீண்ட காலமாக எனக்குள் இருந்த ஒன்றாகவும் இருக்கலாம். ஓர் எண்ணம் உதயமாக நான் காத்திருக்க வேண்டுமா அல்லது அதை தேடிச் செல்ல வேண்டுமா? என் பள்ளிப் பருவத்தின்போது என்னுடைய பொழுதுபோக்கு ஓவியம் வரைவதாக இருந்தது. அப்போதெல்லாம் நான் புதிய புதிய தேடல்களுக்காக காத்திருப்பேன். ஒரு பண்பட்ட கலைஞன் என்ற முறையில் இப்போது நான் சுயமாக தேடல்களைத் தேடிச் செல்ல வேண்டும். ஆனால், நான் முன்பு சொன்னது போல தேடல்கள், எண்ணங்கள் எப்போதுமே சிக்கலானவை. சில சமயங்களில் அது தானாகத் தோன்றும்.
என்னுடைய கேலிச் சித்திரங்கள் துரிகை கொண்டு வரையப்படுபவை அல்ல மூளையைப் பயன்படுத்தி உருவாக்கியவை. என் பேனாவுக்கே ஒரு நிலைப்பாடு இருக்கும்போது எப்படி நான் நடுநிலை வகிக்க முடியும்? எனது தத்துவத்தைச் சாரமாக கொண்டிருக்கும் நான் எப்படி என் கேலிச் சித்திரங்களை வரைவேன்? நான் கேலிச் சித்திரம் வரைதல் என்பதற்கு பதிலாக கேலிச் சித்திரத்தை இயற்றுதல் என்று சொல்லவே விரும்புகிறேன், காரணம் அது பல படிநிலைகளை உள்ளடக்கியது. பொதுவாக, என்னுடைய பெரும்பாலான கருத்தாக்கம்/ தத்துவப் பார்வை தற்போதைய சிக்கல்களை, மிக முக்கியமாக அரசியல் சார்ந்ததாகவும் இருக்கும். ஒரு பிரச்சனை தலையெடுக்கும் போது முதலில் நான் அப்பிரச்சனையைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதனை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பேன்.
நாளிதழ், இணையச் செய்திகளுடன் வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்பேன். அப்பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர் எனக்கு பரிட்சயமானவராக இருந்தால், உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள நேரடியாக அழைத்து விசாரிப்பேன். சில சமயங்களில் ஒரு பிரச்சனையைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்வதற்கு நீதிமன்றம், போராட்டம் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று சூழ்நிலையைப் பார்க்க வேண்டிய தேவை இருக்கும். அனைத்துத் தகவல்களையும் சேகரித்த பிறகு, அச்சிக்கலை ஒட்டி ஒரு நிலைப்பாடு எடுப்பது இரண்டாவது படிநிலையாகும். இதுவே என் கேலிச் சித்திரம் சொல்ல வரும் கருத்தைத் தீர்மானிக்கும் என்பதால் முக்கியமான படிநிலையாகவும் இது அமைகிறது. சரியான நிலைப்பாடு சரியான செய்தியைக் கொண்டு சேர்க்கும். மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக தவறான செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மூன்றாவது படி என்னவென்றால், ஒரு கேலிச் சித்திரத்தை எப்படி மேலும் நகைச்சுவையாக படைப்பது என்பதை ஆராய்தல். வேறுவிதமாக கூறினால், முதலில் ஒரு நிலைப்பாட்டை தேர்ந்தெடுத்து, பின்னர் நகைச்சுவையை உருவாக்க வேண்டும். சொல்லப்படும் நகைச்சுவையும், எண்ணக் கருவும் என் நிலைப்பாட்டோடு ஒத்திருக்க வேண்டும். என் நிலைப்பாட்டிற்கு மாறாக இருக்கும் எந்த நகைச்சுவையையும் என் கேலிச் சித்திரத்தில் வரைய மாட்டேன். அதேபோல என்னுடைய நிலைப்பாட்டில் கடைசிவரை உறுதியாக நிற்பேன். இந்த அணுகுமுறை சில நேரங்களில் என்னை முழுவதுமாகப் பாதிக்கும். குறிப்பாக தேடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கிறது போன்ற தருணங்களிலும்கூட நான் இவ்வழிமுறையையே கையாளுகிறேன் என்பதில் மகிழ்ச்சியை உணர்கிறேன்.
மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர்களும் புதிய கருத்துகளை, தேடல்களை நான் கண்டடைய எனக்கு உதவி புரிந்தார்கள். ஒவ்வொரு நாளும் வேடிக்கையான அறிக்கைகளை வெளியிடும் அமைச்சர்கள் இருப்பார்கள். இது என் படைப்புகளுக்கு மூலப்பொருள்களாக அமைந்தன. என்னைப் போன்ற கலைஞர்கள் புதிய கருத்துகளை, தேடல்களைப் பெற நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி இல்லை – நான் பயணம் செய்ய விரும்புவதில்லை, ஆனால் நிறைய சிந்திக்க நினைக்கிறேன். மற்றவர்களிடமிருந்து கருத்துகளை ஏற்றுக்கொள்வேனா? ஆம், என்னுடைய கருத்துடன் ஒத்துபோகும் வகையில் அமையும் அனைத்துக் கருத்துகளையும் வரவேற்கிறேன். என்னுடைய படைப்புகள் என் சுய கருத்தை மட்டும் கொண்டிருப்பது கிடையாது.
மற்றவர்களின் பேச்சைக் கேட்டு ஒரு செய்தியைப் பற்றி நன்கு அறியாமலும் அதனுடன் ஒத்து போகாமலும் இருக்கும் கேலிச் சித்திரக் கலைஞர்கள் சிலர் பணத்திற்காக வேலை செய்வதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் ஏற்படும். நான் என்எஸ்ட்டியில் (NST) இருந்தபோது, பிரதமரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சில கார்ட்டூன்களை வரைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நான் ஒரு கேலிச் சித்திரக் கலைஞன், விளக்கம் அளிப்பவன் அல்ல என்று கண்டிப்புடன் மறுத்துவிட்டேன். தொடக்கத்தில் தேர்தலின்போது சில அரசியல்வாதிகள் எதிர் கட்சிகளை விமர்சித்து கேலிச் சித்திரம் வரைந்தால் எனக்கு நிறைய சலுகைகளை வழங்குவதாக கூறினார்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
ஓவியக் கலையின் நுட்பத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால் என்னுடைய ஓவியங்கள் அவ்வளவு சிறப்பானதாக எனக்குத் தோன்றுவதில்லை. அதனால்தான் எப்போதும் மற்றவர்கள் பயன்படுத்தும் அரிதான புதிய அணுகுமுறைகளைக் கையாளப் பழகிக்கொண்டே இருப்பேன். எளிய ஓவியங்களின் மூலம் மிக பெரிய கருத்தை விளக்குவதற்கு முற்படுவேன். எளிமையானது, சிறந்ததாக அமையும். பொதுவாக, தலையங்க கேலிச் சித்திரங்கள் பொருளும் கருத்தும் கொண்டதாக இருக்கும். பொருள் (Object) கதாபாத்திரமாகவும், கருத்து (Subject) உள்ளடக்கமாகவும் செய்தியாகவும் அமையும். இருப்பினும் என் சித்திரங்களில் பொருள்தான் வழக்கமாக கருத்தாக பயன்படுத்தப்படுகிறது.
என் கேலிச் சித்திரங்களில் கதாபத்திரங்கள் பல வழிகளில் உருவாகலாம். மனித பாத்திரங்கள், விலங்கு பாத்திரங்கள், சின்னங்கள், குறியீடுகள், உருமாற்றுகை, சுலோகம் போன்றவை கதாபாத்திரங்களாகின்றன. பொருள் எப்பொழுதும் செய்தியாக, கருத்தாக அமையும்.
ஒருதலையாக விமர்சித்தல்
“ஏன் என்னுடைய கேலிச் சித்திரங்கள் தேசிய முன்னணியை மட்டும் விமர்சிப்பதாக இருக்கின்றது? எனும் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். மலேசியா போன்ற தார்மீக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், விமர்சனம் செய்வது என்பது ஒரு செயற்பாடல்ல, மாறாக அது ஒரு பொறுப்பு. ‘உயர்ந்த தேசப்பற்று என்பது அறமற்ற ஆட்சியாளர் முன் எதிர்நின்று உண்மையைச் சொல்வதே ஆகும்’ என்று கலிப் அலி (Caliph Ali) சொல்கிறார். குறிப்பிட்ட சூழ்நிலையில் தேசிய முன்னணிக் கட்சி அதிகாரத்தில் இருந்தது. மேலும் அவர்களே அநீதி இழைப்பவர்களாகவும் ஊழல் செய்பவர்களாகவும் இருந்ததால் எனது விமர்சனம் அவர்களைப் பற்றியதாக அமைந்தது. நான் மக்கள் கூட்டணியை விமர்சிப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் அப்போது அதிகாரத்தில் இல்லை. அவர்கள் புத்ராஜெயாவைக் கைப்பற்றி இதுவரை உறுதியளித்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கபட வேண்டும் என்பதற்காகவே அந்த மெளனம். மக்கள் கூட்டணி இந்நாட்டை ஆளும் நிலையில், தேசிய முன்னனி செய்ததையே அவர்களும் செய்தார்கள் என்றால் அவர்களும் என்னுடைய பேனாவின் கூர்மையான, கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வார்கள்.
நிறைவாக
ஒட்டுமொத்தமாக காணும்போது இவர் போன்ற கலைஞர்களுக்கு என்று தனித்த குணம் இருப்பதை அனுமானிக்கிறேன். தனது சித்தாந்தத்திற்காக தன்னையே காவு கொடுக்கத் தயாராகவும் சிறிதளவும் சமரசமின்றி இயங்கவும் இவர்போன்ற கலைஞர்களால் மட்டுமே சாத்தியமாகிறது. கலை என்பது பொழுதுபோக்கல்ல; கலை சமகால வாழ்வையும் மனிதனையும் அவனைச் சுற்றி வட்டமிட்டிருக்கும் அரசியலையும் பேச வேண்டிய – பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு கொண்டிருக்கிறது என்பதற்கு ஸூனார் மற்றுமொரு சான்று.
உதவிய தளம்:
வணக்கம் அபிராமி. ஸுனார் எனும் கலைஞரை பற்றி ஓர் எளிய அறிமுகமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். தொடரவும்