சரவாக் பல இரகசியங்களைத் தன்னகத்தே வைத்து அங்கு வாழ்வோருக்கும் வருகை தரும் பயணிகளுக்கும் ஒரு விந்தையான நிலமாகவே இருந்து வருகிறது. சரவாக், சரவாக் என அடையாளம் பெறுவதற்கு முன்னர், அதாவது 1963 மலேசிய ஒப்பந்தத்திற்கு முன்பு (Perjanjian Malysia 1963) முன் போர்னியோ நிலப்பரப்பாக இருந்தது. இன்றும் உலகின் பல மூலைகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள் போர்னியோ என்றே இப்பிரதேசத்தை விளிக்கின்றனர். போர்னியோ பிரதேசத்தில் சபா, சரவாக், புருணை ஆகியவற்றுடன் இந்தோனேசியாவின் கலிமந்தானும் அடக்கம். சபா, புருணை இரண்டும் போர்னியோவின் வடக்கேயும் மேற்கேயும் உள்ளன. அங்கே பிடாயு (Bidayuh) இன மக்களைக் காண்பது அரிது. அவர்களின் பிரதான இடம் போர்னியோவின் தென்கிழக்குப் பகுதிகள்.
போர்னியோவின் வடக்கேயும் புங் (Bung), ஜாகோய் (Jagoi) ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமானவை. புங் என்றால் மலையுச்சி. ஜாகோய் என்பது இடத்தின் பெயர். ஜாகோய் என்ற இடத்தில் உள்ள மலையுச்சியை புங் ஜாகோய் (Bung Jagoi) என அழைப்பர். எனக்கு இந்த சொற்றொடரின் அறிமுகம் ஒரு வேன் பயணத்தின்போது ஏற்பட்டது. சில மாணவர்களை லுண்டுவில் (Lundu) நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டிக்கு மாணவர்களை ஒரு வேனில் அழைத்துச் சென்றேன். வேன் ஓட்டுனரான சீனர், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தபோது அதை ஜாகோய் என அறிமுகப்படுத்தினார். அந்த இடத்தில் வாழ்பவர்கள் பிடாயு இன மக்கள் என்றும் அவர்களை ஜாகோய் பிடாயு எனவும் அழைப்பார்கள் என்றும் சொன்னார். நான் அழைத்துச் சென்ற மாணவர்களில் ஒரு மாணவன் தானும் அந்த இனத்தை சார்ந்தவன்தான் எனக் கூறினான்.
அடிப்படையில் பிடாயு மக்களின் பிரதான அடையாளம் அவர்களின் மொழிதான் என்றாலும் அது அவர்களின் இருப்பிடத்தை ஒத்தே அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அதாவது பிடாயு செலாக்காவ் (Bidayuh Selako) பேசும் பிடாயு படாவான் (Bidayuh Padawan) எனும் மொழியைப் புரிந்துகொள்ள முடியாது, அதுபோல பிடாயு ஜாகோய் பேசும் பிடாயு பாவு (Bidayuh Bau) மொழியையும் புரிந்துகொள்ள முடியாது. ஆயினும் இவர்களின் பிரதான வசிப்பிடம் ஜாகோய்தான் என அம்மாணவன் கூறினான்.
பிடாயுக்கள் மொழி தவிர்த்து பிடாயு ஜாகோய் வேறு எந்த நிலையில் மாறுப்படுகின்றனர் என்று அங்கிருந்த பலரிடம் கேட்டேன். அவர்கள் கூறிய பதில்கள் பலவாறாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை புலப்படுத்தின.
அதாவது பிடாயு ஜாகோய் மக்களின் ஆகப்பழமையான இருப்பிடம் இந்த புங் ஜாகோய். பாவு மாவட்டத்தில் இன்னும் பல ‘புங்’கள் உள்ளன. அவை புங் ப்ராதாக் (Bung Bratak), புங் ஆவுப் (Bung Aup), புங் திராஆன் (Bung Tiraan) மற்றும் புங் ஓராட் (Bung Orad) என எண்ணிலடங்காதவை. ஆயினும் இவற்றில் புங் ப்ராதாக், புங் ஜாகோய் இரண்டும் பிரபலமாக இருப்பவை.
இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள முகநூலில் பலரிடம் உரையாடினேன். அதன்மூலம் பலர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களில் சிலர் புங் ஜாகோய் பற்றிய பல செய்திகளையும் அவற்றை மேலும் ஆழமாக அறிந்துகொள்ள உதவக்கூடியவர்களையும் அறிமுகப்படுத்தினர். அவர்களில் சிலரை நேரில் சந்தித்தேன். மேலும் சிலரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டேன். அவர்களுள் ஒருவர் மலேசியா சரவாக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முனைவர் அஹி சிரொக் (Prof. Ahi Sirok). அவர் புங் ஜாகோய் பற்றி பல விவரங்களைக் கொடுத்து உதவினார். டிரேப் (Direp), ரீகன் (Reagen), இக் வாடேல் (Ik Wadell), அஹ்மியேன் (Ahmien), லென்டீ (Lendy) என மேலும் பலரும் பல விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது சரவாக், கலிமந்தான் எல்லைகள் தீர்மானிக்கப்படுவதற்கு முன்பே இந்த புங் ஜாகோய் பிடாயு மக்களின் அடைக்கல முகாமாக இருந்துள்ளது. இதன் வரலாறு ஜப்பானிய காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது. பிடாயுக்கள் முதன்முதலாக மேற்கு கலிமந்தானிலுள்ள சுங்குங் (Sungkung) பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து சேர்ந்த இடம் ஜாகோய். பிடாயு மக்கள் அமைதி விரும்பிகள். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், உழைப்பாளிகள். இவர்களின் உணவு வகைகள் பெரும்பாலும் சைவ உணவாகவே இருந்துள்ளது. அமைதி விரும்பிகளாக இருப்பதால் கலிமந்தான் பகுதியிலிருந்து வரும் ஈபானியர்களின் (Iban) தொந்தரவுக்கு அதிகம் ஆளாகினார். ஈபானியர்களோடு ஆற்றோரம் வாழும் மலாய்கார்களும் சேர்ந்து கொண்டு பிடாயுக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். இவர்கள் அனைவரும் பிடாயுக்களின் முதன்மை எதிரிகளாகவே அறியப்பட்டனர். அவர்களை ஸ்கோராங் (Skorang) என அழைத்தனர் அக்கால பிடாயுக்கள்.
அந்தக் காலத்தில் எதிரிகளின் தலைகளைச் சீவும் போர் வழக்கம் பரவலாகவே போர்னியோ நிலப்பரப்பில் இருந்து வந்தது. ஈபானியர்கள் பிடாயு இளைஞர்களையும் பெண்களையும் கவர்ந்து செல்ல அவர்களின் இருப்பிடங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் ஈபானியர்களின் கப்பல்களில் வேலையாட்களாக அடிமைப்படுத்தப்பட்டனர். பெண்கள் அவர்களின் குடும்பங்களில் வேலைக்காரிகளாக நடத்தப்பட்டனர். தங்கள் இன இளைஞர்களையும் பெண்களையும் தங்கள் இனத்தையும் காப்பாற்ற பிடாயு இனத் தலைவர்கள் மலையுச்சியில் வீடுகள் அமைக்கத் தொடங்கினர். அவர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தது புங் ப்ராதாக்.
புங் ப்ராதாக் புங் ஜாகோயைவிட உயரம் குறைந்தது. அங்கே சில காலம் வாழ்ந்த பிடாயு மக்களை ஸ்கோராங் நிம்மதியாக விடவில்லை. புங் அடிவாரத்தில் இருக்கும் கம்பங்களை ஜாகோய்-டாயோஹ் (Jagui-Dayoh) என அழைப்பார்கள். அதேபோல் மலையுச்சியில் உள்ள கிராமங்களை ஜாகோய்-குனோங் (Jagoi-Gunong) என்று அழைப்பார்கள். டாயோஹ் என்றால் கிராமம். தரையாக இருந்ததால் எதிரிகளின் தாக்குதல் மிகவும் அபாயகரமாக இருந்தது. அக்காலக்கட்டத்தில் எல்லைகள் ஏற்படுத்தப்படவில்லை. அத்துடன் ஜேம்ஸ் ப்ரூக் ராஜாவின் (Rajah James Brooke) ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டிருக்கவில்லை. மக்கள் கலிமந்தானுக்கும் பாவுக்கும் போக வர இருந்தனர். கலிமந்தானில் இன்றும் பிஜாகோய் (BiJagoi) எனப்படும் பிடாயு ஜாகோய் மக்களுக்கு உறவுகள் உண்டு.
எதிரிகளின் தாக்குதலால் புங் ப்ராதாக் முற்றிலுமாக அழியும் தறுவாயில் பலரது தலைகள் சீவப்பட்டன. பலர் கலிமந்தானுக்கு அடைக்கலம் தேடிச் சென்றனர். பல குடும்பங்கள் புங் ஜாகோயை வந்தடைந்தனர். கலிமந்தானுக்கு ஓடியவர்கள் தங்களை பிடாயு ஜாகோய் என அழைப்பதில்லை. புங் ஜாகோயில் தஞ்சம் புகுந்த அந்தக் குடும்பங்களின் தலைமுறைகள் இன்றுவரை தங்களை பிடாயு ஜாகோய் என மார்தட்டிக் கொள்கின்றனர். இதற்குப் பின்னணியில் சில விஷயங்கள் மறைந்துள்ளன. அதில் ஒன்று எதிரிகளிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் சாதூர்யமாக காப்பாற்றிக்கொண்டதுடன் நுணுக்கமான போர் வியூகங்களை கையாண்டதும் இவர்களை மற்றவர்களிடமிருந்து மாறுபடுத்திக் காட்டுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஜாகோய் பிடாயுக்கள் எனும் தனித்தன்மையை அவர்கள் இந்நாள் வரை பாதுகாத்து வருவதோடு புங் ஜாகோய் என்னும் கலாசார நிலப்பரப்புக்கு தொடர்ந்து உயிரூட்டி வருகிறார்கள்.
இவர்கள் கையாண்ட போர் உத்திகள் நுட்பமானவை. புங் ஜாகோய் அடிவாரத்திலிருந்து மலையுச்சிக்குப் போக ஒரு கட்டுமஸ்தான போர் வீரனுக்கு எப்படியும் 45 நிமிடங்கள் பிடிக்கும். பிடாயு போர் வீரர்கள் ஏற்கனவே மலையுச்சிக்குப் போகும் பாதையைச் செப்பனிட்டுதான் வைத்திருப்பர். பலர் நடந்துபோன தடங்கள் எதிரிகள் ஊடுருவ ஏதுவாகவே அமைக்கப்பட்டிருக்கும். அந்த நடைபாதைகளுக்கு அருகாமையிலேயே பல குழிகளும் மூங்கில் புதர்களும் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இந்த மூங்கில்கள் சிறிய வகையிலானவை. அதாவது அம்புகளாக பாவிக்கக்கூடியவை. அவை மாந்ரீக கேடயத்தன்மையயும் உடைக்கும் என்பதில் பொதுவாகவே இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை அதிகம். மேல் நோக்கி வரும் எல்லா எதிரிகளுக்கும் மலையுச்சியை நெருங்க நெருங்க அலுப்புத் தட்டும். அந்த நூலிழை தருணம் வரை காத்திருந்து குழிகளில் பதுக்கி இருக்கும் பிடாயு வீரர்கள் எதிரிகளின் நெஞ்சை மூங்கில் அம்புகளால் பதம் பார்ப்பார்கள். அதோடு அவர்களின் தலைகளைச் சீவி தங்களின் வீரச் சின்னமாக மலையுச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பாரோக்கில் வைப்பார்கள். பாரோக் (Barok) என்பது எதிரிகளின் தலைகளை சேகரிக்கும் ஒரு கூடாரமாகும். இந்த உத்தியாலேயே ஜாகோய் பிடாயு மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடிந்தது.
பாரோக்கில் சேகரிக்கப்பட்ட மண்டையோடுகள் பாகான்களாக (Pagan) இருக்கும் பிடாயுக்கள் இன்னும் காலங்காலமாக அனுசரித்து வரும் முன்னோர் வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாகான் என்றால் இயற்கையாக நடைபெறும் அனைத்துக்கும் பின்னால் மனிதத்தை மீறிய சக்திகள் என்று நம்புவதும் அதனோடு மூதாதையர்களின் ஆத்மாக்களின் மீதுள்ள நம்பிக்கையுமாகும். தற்போது பெரும்பாலான ஜாகோய் பிடாயுக்கள் கிறிஸ்துவர்களாக மதமாறிய பின்னரும் முன்னோர் வழிபாட்டை அனுசரித்து வருகின்றனர். இந்த வழிபாட்டை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை. ஆயினும் புங் ஜாகோயில் நான் சென்று தங்கிய அந்த இரவில் சில கதைகளின் வழி அறிந்துகொண்டேன். புங் ஜாகோய் மலையுச்சி கிராமத்தை சில ஆத்மாக்கள் பாதுகாக்கின்றன என ஆஹ்மியன் அக்கா சொன்னார். எல்லாக் காலங்களிலும் அவற்றின் இருப்பை உணரமுடியாது எனவும் காவாய் காலம் வரும்போது மிகவும் அணுக்கமாக உணரமுடியும் எனவும் கூறினார். பொதுவாக ஜாகோய் பிடாயுக்களின் பிரதான தொழில், மலை நெல் (Padi Huma) விவசாயம் ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாத ஆரம்பத்தில் அறுவடை நடக்கும். அறுவடைக் காலத்தில் காவாய்/காவியா (Gawai/ Gawea) கொண்டாடப்படும். காவியா (Gawea) என்றால் மனிதர்களும் அரூபமாக உள்ள ஆத்மாக்களும் கொண்டாடும் திருவிழா என பொருள்படும். இங்கே முக்தி பெறாத முன்னோர்களின் ஆத்மாக்கள் தங்களோடு இணைந்து விழாக் கொண்டாடும் என்பதன் அடையாளமாக ஜாகோய் பிடாயுக்கள் காவியா சோவா (Gawea Sowa) எனும் முன்னோர் வழிபாட்டை அனுசரிக்கிறார்கள்.
இந்த வழிபாட்டின் சடங்குகளை எல்லாரும் செய்துவிட முடியாது. அதற்கான பிங்கூகுவா (Pinguguah) என விளிக்கப்படும் பூசாரி ஒருவரும் டாயூங் போரிஹ் (Dayung Borih) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களும் டாயோங் (Dayong) என அழைக்கப்படும் துணைப் பெண்களும் மட்டுமே செய்ய முடியும். இந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பற்றி ஆஹ்மியன் அக்கா சில விவரங்களை சொன்னார்.
முன்னோர்களின் ஆத்மாக்களே சில பெண்களைத் தேர்ந்தெடுக்குமாம். குறிப்பிட்ட பெண்களின் கனவுகளில் வந்து சில அறிகுறிகளைக் காட்டுவார்களாம். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுமாம். அதோடு தங்கள் கனவுகளை மந்திரவாதிகளிடம் கூறி தெளிவுபடுத்திக்கொள்வார்களாம். அவர்கள்தான் டாயூங் போரிஹ் என தெரிந்த பின் ஒரு வருட காலத்திற்கு அப்பெண்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. திருமணமான பெண்ணாக இருந்தால் கணவனோடு தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது. காரணம் இவர்களுக்கு ஒரு ஆத்மா கணவனாக இருக்குமாம். அந்த ஆத்மா சொல்லுவதை இவர்கள் மக்களிடம் சொல்லுவார்களாம். இவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பிடாயுக்கள் மத்தியிலேயே வேறொரு பெண் டாயோங் ஆக இருப்பார்.
அந்தத் தேர்வு நடைபெறும் ஒரு வருட காலக்கட்டத்தில் டாயூங் போரிஹ் யாரிடமும் பேசக்கூடாது; கோபப்படக்கூடாது; சைவமாக இருக்க வேண்டும்; பன்றி உண்ணக்கூடாது; கைலிதான் அணிய வேண்டும் என இப்படி பல கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உண்டு. இப்படிப் பல கெடுபிடிகள் இருப்பதால் பெரும்பாலும் எல்லா டாயூங் போரிஹ் பரிபூரணமாக இருக்க முடிவதில்லையாம். ஏதாவது ஒன்றை அவர்கள் தவறுதலாக மீறிவிடுவதால் சாபத்துக்கு ஆளாகின்றார்களாம். தற்போது மிஞ்சியிருக்கும் அந்தக் குறிப்பிட்ட ஏழெட்டு டாயூங் போரிஹ்களுக்கு ஏதாவது ஓர் உடற்குறை இருக்கிறது என ஆஹ்மியன் அக்கா குறிப்பிட்டார். கண்தெரியாமல், காதுகேட்காமல், பேசமுடியாமல், நடக்கமுடியாமல் ஏதாவது ஒரு குறையுடன் அவர்கள் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தில் அவரின் அம்மா வழி பாட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட டாயூங் போரிஹ் எனவும் அதை நேரில் பார்த்த அனுபவம் உண்டு எனவும் பகிர்ந்துகொண்டார். அவரின் பாட்டி பன்றி சமைத்து பரிமாறப்பட்ட தட்டைக் கழுவிய சில தினங்களிலேயே செவிடாகிப் போனார் எனவும் அவர் இறக்க மிகவும் சிரமப்பட்டார் எனவும் கூறினார். பூசாரி வந்து சில சடங்குகளைச் செய்த பின்னரே அவரின் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததாம். அதன்பின் அவர் குடும்பத்தில் அவர் அம்மா, பத்து வருடங்களுக்கு முன் இறந்துபோன அவரின் அப்பா ஆகியோரைத் தவிர வேறு யாரும் காவலாக இல்லை எனச் சொன்னார். அதனால் மேலும் அவரின் குடும்பத்தில் விரும்பி எந்தப் பெண்ணும் டாயூங் போரிஹ்யாக இருக்கவில்லை எனவும் கூறினார்.
அப்படியானால் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுமா என வினவியபோது, இந்த வருடம் அதாவது 2019ஆம் ஆண்டு நடைபெறும் காவியா சோவா ஒருவேளை இறுதியானதாக இருக்கலாம். அதுவும் இந்த மலையுச்சி கிராமத்தில் நடைபெறுவது இதுதான் கடைசி. எஞ்சியிருக்கும் டாயூங் போரிஹ்கள் இனித் தாங்கமாட்டார்கள் எனக்கூறினார். அதனால் இதன் வரலாற்றைப் பாதுகாக்கும் பொருட்டு புங் ஜாகோய் தலைமை பொறுப்பாளரான இக் வாடேல் தலைமையிலான குழு ஒன்று இவ்வாண்டில் இறுதியாக நடைபெறும் வழிபாட்டுக் காட்சிகளைக் காணொளியாகப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது எனவும் கூறினார். பாரம்பரியமாக நடைபெறும் இந்த ஆத்மா வழிபாடுகள் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும் என கேட்டதற்கு இறைவன் விட்டவழி என முடித்துக்கொண்டார்.
ஓரிரவு அவரின் வீட்டில் தங்கியபோது அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். அங்கிருந்த ஐந்து வீடுகளில் ஓரமாக இருந்த குறிப்பிட்ட இந்த வீட்டைத் தேர்தெடுக்க சில காரணங்கள் இருந்தன. இந்த வீட்டில் மட்டுமே மனித நடமாட்டம் உண்டு. ஆஹ்மியன் அக்காவின் அம்மா அவ்வப்போது வந்து அந்த வீட்டில் தங்குவார். அவரின் கணவர் புங் ஜாகோய் கிராமத் தலைவராகவே இறந்தார். நான்கு மாடி வீடு அதுவும் நாற்பது வருடங்களுக்கு முன் கட்டியது. ஆஹ்மியன் அக்காவின் அப்பாவுக்கு ஏறக்குறைய 26 வயது இருக்கும்போது கட்டியதாம். தற்போது இருக்கும் பாரோக் முழுவதுமாக இவரால் கட்டப்பட்டது. கட்டிடப் பணி மிகவும் நுணுக்கமானதாகவும் திடமாகவும் இருப்பதைக் கண்டு மிகவும் வியந்து போனேன்.
அவர் குடும்பத்தாரால் மலை நெல் பயிரிடப்பட்டதாம். அந்த நெல்மணிகள் இன்னுமும் நல்ல நிலையில் இருப்பதை கண்கூடாகப் பார்த்தேன். அந்த நெல்மணிகளின் வயது அறுபதை கடந்திருக்கும் என ஆஹ்மியன் அக்காவின் அம்மா தெரிவித்தார்.
பிடாயு இனப் பெண்கள் மணிவேலைகளில் கைதேர்ந்தவர்கள். ஆஹ்மியன் அக்கா உட்பட. காதணிகள், கழுத்தணிகள், ஜெபமாலைகள், பலதரப்பட்ட மணி கீச்செயின்கள் என அவர்கள் தயாரித்த பல அழகுப் பொருட்கள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வரவேற்பறையில் சீனர்களின் பெரிய பெரிய ஜாடிகள் இருந்தன. மலையில் விளையும் நெல்மணிகளை கீழே எடுத்து சென்று தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் உட்பட மற்றப் பொருட்களையும் குன்றிமணிகளையும் பண்டமாற்று முறைப்படி மாற்றிக்கொள்வார்களாம். அப்படியென்றால் மலையுச்சியில் கோழி, ஆடு, பன்றி போன்றவற்றை வளர்க்கவே முடியாதா என்று கேட்டேன்.
கால்நடைகளை வளர்த்த அனுபவம் உண்டு எனவும் பருந்து பறக்கும் உயரம் வெகு அருகாமையில் உள்ளதால் வளர்ப்புப் பிராணிகள் பருந்து முதலிய ஊனுண்ணிப் பறவைகளுக்கு உணவாகிவிடுகின்றன என்றும் சொன்னார். அதனால் பெரும்பாலும் காய்கறிகளையே உணவாகக் கொள்வோம் எனச் சொன்னார். எப்போதாவது மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ பண்டமாற்று முறைப்படி அவரின் அப்பா கொண்டு வரும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவார்களாம். காலத்தின் கட்டாயமாகவும் இருப்பிட உயரத்தின் காரணமாகவும் பண்டமாற்று முறை இங்கே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக புங் ஜாகோய் சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. இங்கே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்க முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே கீழிருந்து மேலே செல்ல முடியும். அவ்வப்போது வாரம் ஒருமுறை வீட்டையும் வீட்டைச் சுற்றி இருக்கும் பயிர்களையும் பாதுகாக்கும் பொருட்டு வீட்டின் உரிமையாளர்கள் சென்று வருகிறார்கள். அங்கிருக்கும் ஐந்து வீடுகளில் மூன்றே வீடுகள்தான் தங்குவதற்கு பாதுகாப்பான நிலையில் உள்ளன. மின்சார வசதி இல்லை. காட்டு மரங்களை விறகுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். முடிந்த வரை எல்லா வேலைகளையும் நாள் வெளிச்சமாக இருக்கும்போதே முடித்துக்கொண்டு மண்ணெண்ணெய் அல்லது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை உண்கிறார்கள். இரவு எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறார்கள். சீக்கிரம் தூங்கி விடுவதால் விடியற்காலை நான்கு மணிகெல்லாம் எழுந்துவிடுவார்கள்.
சரியாக எட்டு மணி நேர உறக்கம். குளிர்ந்த காற்று. இரவு முழுதும் எரிந்துகொண்டே இருக்கும் பரண். முன்பு ஒரு காலத்தில் ஜாகோய் பிடாயுக்களின் வாழ்வுக்கு சிகரமாக இருந்த இந்த குன்று அதன் அந்தஸ்த்தை இழக்காமல் ஏதோ ஒருவகையில் ஒரு படி மேல் போய் சுற்றுலாத் தளமாக உருவெடுத்து வருகிறது. அதன் பின்னணியில் இங்கு வாழ்ந்து மடிந்த மக்களின் வாரிசுகளின் முயற்சியும் பெரும் பங்காற்றுகிறது என இக் வாடேல் உடனான உரையாடலில் புரிந்து கொண்டேன்.
இக் வாடேலின் தந்தை புங் ஜாகோய் வழிவந்தவராதலால் தனது செல்வச் செழிப்பை சரியான முறையில் பயன்படுத்தி தான் வாழ்ந்த புங் ஜாகோயை செப்பனிட்டு வைத்திருக்கிறார். அதன் வழி புங் ஜாகோய் செழிக்க அதைச் சார்ந்து உள்ள காட்டு வளங்களையும் பாதுகாக்க இக் வாடேலை பயிற்றுவித்து இருக்கிறார். இக் வாடேல் மூலம் மலேசிய சரவாக் பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுசூழல், பல்லுயிரினப்பெருக்கம் (Environment and Biodiversity) சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இங்கு ஈடுபடவும் வழியமைத்திருக்கிறார். மேலும், ஒவ்வொரு வருடமும் இங்கே காவாய் நேரத்தில் போட்டி விளையாட்டுக்கள், பொதுவரவேற்பு நிகழ்ச்சி, மலையுச்சி குறுக்கோட்டம் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தங்களின் பாரம்பரிய உணவு வகைகளான மீடீன் கோரேங் (Midin goreng), ஆயாம் பன்சுஹ் (Ayam Pansuh) போன்றவற்றை மறக்காமல் பரிமாறுகின்றனர். மீடீன் என்பது ஒருவகை பெரணி. ஆயாம் என்றால் கோழி. இதனை மூங்கிலில் வைத்து சமைத்தால் பன்சுஹ் என்பார்கள்.
ஆஹ்மியன் அக்காவும் தனக்கு தெரிந்த மணிவேலைகளை இரவு தங்க வரும் பயணிகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறார். அங்கே தங்கிய ஓரிரவு, இரு பகல்களில் கிராம வாழ்க்கையை அனுபவித்தேன். இடையிடையே அவரின் அம்மாவிடம் சில கேள்விகளின் வழி உரையாடல் தொடர்ந்தது. அவரின் ஏழு குழந்தைகளையும் இதே மலையுச்சியில்தான் பெற்றதாகக் கூறினார். சொந்தமாகவே தொப்புள் கொடியை துண்டித்து பின்பு குழந்தையைத் தூக்கிக்கொண்டு பாவு மாவட்ட மருத்துவமனைக்கு நடந்து செல்வாராம். மலையிறங்கும்போது ஆயேர் பிகுபு (Ayer Bikubu) என்ற இடத்தில் சற்று இளைப்பாறுவாராம். இப்பெண்கள் உடல்வலிமை மிக்கவர்கள் எனப் புரிந்துகொண்டேன்.
ஆஹ்மியன் அக்காவும் தனது குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போதெல்லாம் விடியற்காலை ஐந்து மணியளவில் மலையுச்சியில் இருந்து ஏழு வயதிலிருந்து ஒன்பது வயது வரையிலான சிறுவர்கள் தங்கள் பைகளில் அரிசியையும் காய்கறிகளையும் புத்தகத்தோடு சேர்த்து தூக்கிக்கொண்டு இறங்குவார்களாம். ஆனால் பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதிலான பிள்ளைகள் அடிவாரத்தில் இருக்கும் பள்ளியிலேயே தங்கிப் படிப்பார்களாம். சிறுபிள்ளைகள் கொண்டு வந்த உணவை பள்ளியில் சமைத்து உண்டு பின்னர் மலையுச்சியில் இருக்கும் வீட்டுக்குச் செல்ல இரவாகி விடுமாம். இப்படித்தான் நாங்கள் படித்து வந்தோம். பழங்களின் பருவ காலமானால் வழியிலேயே வயிறு நிறைந்துவிடும் என்றார்.
புங் ஜாகோயை சுற்றி காடு இருப்பதால் மேலே வாழும் மக்கள் தன்னிச்சையாக வாழும் திறனை சிறுவயதிலேயே பெறுகிறார்கள். முன்னாளில் வாழ்ந்த மக்களும் இந்நாளில் வாழும் மக்களும் பின்னாளில் வாழப்போகும் மக்களுக்காக இந்தக் குன்றின் வாழ்வியலைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த பிஜாகோய் மக்கள் இப்பொழுது மலையுச்சியில் தாங்காவிட்டாலும், இன்னும் பண்பாடுகளைப் பேணி, வழி தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதைப் பார்த்தால் சிறிது பொறாமையாகத்தான் இருக்கிறது. பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்கும் பிஜாகோய் இளவட்டங்களின் முயற்சி பெருமைக்குரியது.
கீழே இறங்கும்போது ஆஹ்மியன் அம்மா நின்று ஓய்வெடுப்பதாகச் சொல்லும் ஆயேர் பிகுபு அருகில் நின்றேன். அது மலையுச்சியிலிருந்து புறப்படும் நீரோடை. கையில் அள்ளிக் குடித்துப் பார்த்தேன். சுவை அசாதாரணமாக இருந்தது. அது அவர்களின் வாழ்வின் சுவையாகவும் இருக்கலாம்.