மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

64659026_2277118272324903_6984702659747905536_nஎல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த எழுத்து அறிமுகம் பாமரர்களை எட்டாத வரை அவர்கள் மத்தியில் பலநூறு கதைகள் தங்களின் அடுத்தத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாகவே கடத்தப்பட்டன.

இவ்வாறு வாய்மொழியாக உலவிய மலாய் நாட்டாரியல் இலக்கியங்களை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது, உரைநடையில் கதைகளைச் சொல்வது. வரலாற்றுக்குள் விசித்திரங்கள் நிறைந்த ஒரு கிளைக் கதையை உருவாக்குவது (legend), தேவதைகளும் அமானுஷ்யங்களும் ஆக்கிரமித்த கதைகள் (myth), நாட்டுப்புறக் கதைகள் (folklore) என இவற்றின் உள்ளடக்கம் இருக்கும். இரண்டாவது வகை, உரைநடையில் இல்லாமல் பாடல் வடிவில் இருக்கும். கவிதைகள், செய்வினை ஸ்லோகங்கள், விடுகதைகள் என இவற்றின் உள்ளடக்கத்தை வகைப்படுத்தலாம்.

தன் அறிவுக்குப் புலப்படாத பிரபஞ்சம் உள்ளிட்ட அனைத்தையும் எளிய கேள்விகளுக்கு உட்படுத்தி அதற்கான பதில்களை தன் அறிவுக்கு எட்டிய உண்மையிலிருந்து கண்டடையும் கதைகள் உலகில் உள்ள பழங்குடிகளிடமிருந்து கிடைப்பதுபோலவே மலாய்க் கதைகளிலும் நிரம்பியுள்ளன. நட்சத்திரங்கள் எப்படி உருவாகின? மழை எவ்வாறு பொழிகிறது? நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது? என்பதற்கான பதில்களை எளிய கதைகளாக மலாய் சமூகத்திடம் காணமுடிகிறது (cerita asal-usul). அதேபோல விலங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைகளும் மலாய் மொழியில் ஏராளம் (cerita binatang). சருகுமான் எப்போதுமே மலாய் கதைகளின் கதாநாயகன்தான். அது எவ்விதச் சிக்கலையும் தன் புத்திக்கூர்மையால் சமாளிக்கும் விலங்காகவே மலாய் கதைகளில் காட்டப்படுகிறது.

மனிதனின் முட்டாள்தனங்களையும் அல்லது அதிமேதாவித்தனத்தினால் நிகழும் சிக்கல்களையும் நகைச்சுவையாகச் சொல்லும் மலாய் கதைகளும் ஏராளமாக உள்ளன. அவை கதாபாத்திரங்கள் வழியும் சம்பவங்கள் வழியும் நகைச்சுவை உணர்வை மேலோங்கச் செய்யும் கதைகளாகப் புழக்கத்தில் உள்ளன. தங்கள் வாழ்வின் அனுபவத்தில் நிகழ்ந்தவற்றை கதைகளாக மாற்றி ஓய்வு நேரத்தில் சொல்லி மகிழும் போக்கிலிருந்து இவை இன்னமும் நிலைபெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

இவை அனைத்தையும்விட மலாய்ச் சமூகத்தில் பேய்க் கதைகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன.  இன்று திரைப்படங்கள் வழியும் மலிவுப் பதிப்பு நூல்கள் வழியும் பிரமாண்டமாக்கப்பட்டுள்ளவை பேய்க் கதைகள்தான். மலாய்க்காரர்களுக்கென்றே பிரத்தியேகமான சில பேய்கள் பூமியில் உலாவவே செய்கின்றன. அவை பெரும்பாலும் மலாய்த் தீவு கூட்டங்களில் உள்ள பிற பேய்க் கதைகளை மூலமாகக் கொண்டவை. தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பிரபலமாகப் பேசப்படும் பேய்களைச்  சுற்றி உருவாக்கப்பட்ட கதைகள் ஏராளமாக உள்ளன. பேய் மனிதனைத் திருமணம் செய்து வாழ்வது, மனிதனுக்கு பேய் அடிமையாக இருந்து சேவகம் செய்வது, குழந்தைகளைத் திருடும் பேய், என மனிதனுடைய தினசரி வாழ்வில் அங்கம் வகிக்கும் பேய்கள் குறித்த கதைகள் மலாய்க் கதை பரப்பில் அதிகம்.

இவையனைத்துமே உலகம் முழுவதும் மனிதனின் கதைசொல்லும் ஆர்வத்தால் உருவானவை. தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தின் மீதும் கேள்விகளை வைப்பதால் கிடைக்கும் பதில்களும், பதில் தெரியாதபோது தெரியாதவற்றிலிருந்தே மேலும் பல கேள்விகளை உருவாக்குவதும், அன்றைய பொழுதுகளை மகிழ்ச்சிப்படுத்த சம்பவங்களில் சுவாரசியங்களை சேர்த்து புனைவதும் தன்னுடன் ஒன்றித்து வாழும் சக உயிரினங்களையும் அதில் மையமாக்குவதும் பல்வேறு பழங்குடிகளின் வாய்மொழிக்கதைகளில் காணக்கிடைப்பவையே. முழுக்கவும் கற்பனையாகச் சொல்லப்படும் இவ்வகை புனைக்கதைகளினூடே வரலாற்றை தளமாகக் கொண்டு சொல்லப்படும் கதைகள் சிறப்பு கவனம் பெருகின்றன. இவை புராணக் கதைகள் (Cerita legenda) என்று குறிக்கப்படுகின்றன.

புராணக் கதைகள்

புராணக் கதைகள் (Cerita legenda) இவற்றில் சற்று வித்தியாசமானவை. ‘Legend’ என்னும் ஆங்கிலச் சொல்லில் இருந்து லெஜென்டா என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இக்கதைகளின் மையம் தீரம்மிக்க நாயக நாயகியர் ஆவர். வரலாற்றுடன் ஒன்றித்து அதிலிருந்து புறப்பட்டு எழுந்து தனித்து வளர்ந்திருக்கும் இதுபோன்ற கதைகள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களென்றே மலாய் சமூகத்தால் நம்பப்படுகிறது. இவை நிகழ்ந்ததாக நம்பப்படும் காலமும் சூழலும் அதிக தூரம் இல்லையென்றாலும் கால ஓட்டத்தில் இக்கதைகளுக்குள் பல்வேறு இணைப்புகள் புகுந்து பெரும்புனைவாக இன்று மலாய் சமூகத்திடம் திகழ்கிறது. இவ்வகைக் கதைகளில் மத அடையாளங்களைவிட இனப் பண்பாட்டு அடையாளங்கள் மிகுந்து காணப்படுவது தனிச்சிறப்பு. இதில் வரும் மையமான பாத்திரங்களும் மலாய் சமூகத்தின் நாயக நாயகியர்களாக போற்றப்படுகிறார்கள். வரலாற்றின் பின்புலத்தில் புனையப்படுவதால் இயல்பாகவே இக்கதைகள் தனித்துவமான குணத்தைப் பெற்றுவிடுகின்றன. வரலாறே இக்கதைகள் நிலத்தில் ஊன்றி நிற்கவும் காரணமாக உள்ளது. கால மாற்றங்களுக்கு ஏற்பவும் நவீன வரலாற்று ஆய்வுகளுக்கு ஏற்பவும் இக்கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன. ஆயினும் மூலக்கதையில் பெரும் மாற்றங்கள் இருப்பதில்லை. சில கதைகள் திரைப்படங்களாக விரிந்த தளத்திலும் பதிவாகியுள்ளன.

பால்பேதமின்றி இத்தொன்ம கதைகள் சிறப்பு பெருகின்றன. ஆண்களை மட்டும் முதன்மைப்படுத்தாமல் பெண் பாத்திரங்களையும் முதன்மைப்படுத்தும் கதைகள் இவை. மேலும் அரச குடும்பக் கதைகளாக மட்டும் இல்லாமல் சாமானிய மக்களில் இருந்தும் இக்கதைகளின் நாயகர்கள் வந்துள்ளது மக்கள் கதைகளாக இவை நிலைபெறக் காரணமாகின்றன. மசூரி, ஹங் துவா, சாடோங் இளவரசி, லேடாங் மலை இளவரசி, போன்ற பல கதைகளும் மலாய் நாட்டாரியல் கதை உலகில் என்றும் நிலையான இடம்பெற்றவை.

மசூரி

தாய்லாந்தின் புக்கெட் தீவிலிருந்து பண்டாக் மாயா அவரது மனைவி அலாங்குடன்01A94F5B-C780-4B1F-84FD-66FF9BD4C04A-2100-00000279A395F303 லங்காவித் தீவுக்குத் தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வருகின்றனர். அவர்கள் விவசாயம் செய்கின்றனர். மூங்கில்களை காடுகளில் சேமித்து வந்து விற்பனையும் செய்கின்றனர். குங்கிலியம் மற்றும் லாயாங் லாயாங் பறவைக்கூடுகளை விற்பனை செய்ததால் மேலும் வளம் பெற்றனர். பரந்த நிலத்துக்கு உரிமையாளர்களாகிவிட்ட அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் மசூரி. பிறக்கும்போதே செல்வச்செழிப்புடன் பிறந்தவள். பண்பானவளாக வளர்ந்தவள், வழக்கமான குழந்தைகளிலிருந்து மாறுபட்டிருந்தாள். அவளுக்குப் பிடித்தமான கறுப்பு நிற உடையுடன் எப்போதும் இருப்பதால் பிறரிடமிருந்து தனித்துத் தெரிவாள். வளர வளர எல்லாவித நல்லம்சங்களுடன் அழகும் அவளிடம் அதிகமாகக் குடிகொண்டது. அழகு உள்ள பெண் என்றால் ஆளும் வர்க்கத்திற்குத் தெரியாமல் இருக்குமா? சுல்தானின் பிரதிநிதியாக லங்காவியை ஆட்சி செய்த வான் யாஹ்யா காதுகளுக்கு அவள் பெயர் எட்டியது. ஒரு வீரனான டெருஸ் என்ற தனது தம்பிக்கு அவளை மணமுடித்தார்.

மசூரி கர்ப்பவதியானாள். அக்காலத்தில் (1800களில்) கெடாவுக்கும் தாய்லாந்துக்கும் போர் மூண்டிருந்தது.  டெருஸ் அதில் பங்கேற்கச் சென்றுவிட்டான். மசூரி தன் பெற்றோருடன் தங்கிவிட்டாள். அப்போதுதான் சுமத்திரா தீவிலிருந்து வந்த டெராமாங் என்ற நாடோடிப் பாடகனின் அறிமுகம் கிடைக்கிறது. (பாணர்கள் என வைத்துக்கொள்ளலாம்) பெற்றோரின் அனுமதியோடு மசூரி அவனைத் தன் வீட்டிலேயே தங்க வைத்து பாடல் பழகுகிறாள். அதில் திறமையானவளாகவும் மாறுகிறாள். மசூரியின் புகழ் அவ்வூரில் மேலும் மேலும் பரவ அது வான் யாஹ்யா மனைவியின் பொறாமைக்குக் காரணமாகி அவளுக்கும் நாடோடிப் பாடகனுக்கும் கள்ள உறவு இருப்பதாக குற்றம் சாட்ட வைக்கிறது. தனது மனைவியின் வற்புறுத்தலால் வான் யாஹ்யா மசூரிக்கும் டெராமாங்கிற்கும் மரண தண்டனை விதிக்கிறார்.

அவளது கணவன் போர்க்களத்திலிருந்து திரும்புவதற்கு முன்பாக பாடாங் மட்சிராட் என்னும் இடத்துக்கு அவர்கள் கூட்டிச் செல்லப்படுகின்றனர். மசூரியை ஒரு மரத்தில் கட்டிவைத்து ஈட்டியால் குத்துகின்றனர். அவளது பெற்றோர் எவ்வளவு கெஞ்சியும் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் சேவகர்கள் பலமுறை முயன்றும் ஈட்டி அவளது உடலைத் துளைக்கவில்லை. பின்னர் அவளை அவர்கள் குடும்ப பாரம்பரியத்தில் வந்த அபூர்வ ஈட்டியால் மட்டும் கொல்ல முடியும் என அறிந்து அதனை எடுத்துவந்து குத்திக்கொல்கின்றனர். இறக்கும் முன்பு மசூரி லங்காவித் தீவு ஏழு தலைமுறைக்கு அமைதியும் முன்னேற்றமும் இன்றி முடங்கும் எனச் சபிக்கிறாள். அவள் ரத்தம் வெண்குருதியாக வெளிப்படுகிறது.

டெருஸ் போரில் தோற்று நாடு திரும்புகிறான். மனைவிக்கு நடந்த கொடுமை தெரிந்து தன் குழந்தையுடன் தீவை விட்டு வெளியேறுகிறான். லங்காவி தாய்லாந்தினால் நாசம் செய்யப்படுகிறது. வான் யாஹ்யா சயாமிய அரசால் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறான். அவரது மகன் பினாங்குத் தீவிலிருந்து லங்காவிக்கு வந்து எவ்வளவு முயன்றும் அந்நிலத்தை வளப்படுத்த முடியவில்லை. கடற்கொள்ளையர்களாலும் கடும் வன்முறைகளாலும் லங்காவி இருண்ட தீவானது.

1980வரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் மனிதர்களைவிட எருமைகள் அதிகம் உள்ள தீவாகவே கருதப்பட்டது லங்காவி. துங்கு அப்துல் ரஹ்மான் அங்கு மாவட்ட அதிகாரியாக இருந்தபோது அவர் கண்டெடுத்த ஒரு சமாதி மசூரியுடையது என அடையாளம் கண்டு அதற்கு கல்லறை அமைத்தார். அப்போது மசூரியின் ஏழாவது தலைமுறையும் உருவாகிவிட்டதால் சாபம் நீங்கி லங்காவி எழுச்சி பெறத் தொடங்கியது. பின்னர் சுங்கம் இல்லாத தீவாக அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று பெரும் சுற்றுப்பயணத் தீவாக மாறிவிட்டது. மசூரியின் பரம்பரையில் வந்த ஏழாவது தலைமுறை என்ற பெருமையுடன் 1990-ஆம் ஆண்டு  Wan Aishah Nawawi என்னும் 12 வயது சிறுமியை கெடா மாநில வரலாற்றுக் கழகம் ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தியது. ஆயினும் அப்பெண் தற்போது தாய்லாந்து பிரஜையாக புக்கேட் தீவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

1821 முதல் 1842 வரை சியாம் (தாய்லாந்தின் பழைய பெயர்) மற்றும் கெடாவுக்கு நடந்த போரிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்து அதோடு ஒட்டிய இன்னுமொரு வரலாற்றை உருவாக்கிக்கொண்டதாலேயே இன்னமும் மசூரியின் கதை நிலைத்துள்ளது. அத்தனை காலம் கெடாவுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் திடீரென சயாமுக்கு ஆதரவாக மாறி வீழ்த்துவதும், தோற்ற மன்னர் பினாங்கு தீவில் தஞ்சம் அடைவதும் என வரலாற்றில் நிகழ்ந்த தகவல்களை மசூரி கதையுடன் அவ்வளவு கச்சிதமாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது.

மசூரியின் வாழ்வு அனேகமான தமிழர்கள் மத்தியில் பிரபலமான கதை. தமிழர்களிடம் ஒரு நாட்டாரியல் தெய்வம் உருவாவதற்கான அனைத்துக் கூறுகளையும் கொண்ட கதையாகவும் இது உள்ளது. பெண்ணின் கற்பை மிக வலிமையானதாகச் சித்தரிக்கும் இந்துக் காவியங்களின் சாரத்தையும் மசூரி கதை கொண்டுள்ளது. அறம் அற்ற முறையில் தண்டனை விதித்த அரசனைச் சினந்து, கண்ணகி இட்ட சாபத்தால் அழிந்த  மதுரையை, மசூரியின் சாபத்தால் அழிந்த லங்காவியோடு நாம் பொருத்திப் பார்க்கமுடியும்.

சாடோங் இளவரசி

puterisaadongஇதேபோன்று மற்றுமொரு பெண்ணின் கதையும் Cerita legenda வகையில் கிடைக்கிறது. கிளந்தான் மாநிலத்தில் உள்ள ஜெம்பால் எனும் அரசினை லோயார் எனும் அரசன் ஆழ்கிறான். நட்பின் பொருட்டு அம்மன்னன் தனது மகளான இளவரசி சாடோங்கை, சிந்தா வங்கா எனும் அரசனுக்கு தத்துக் கொடுக்கிறான். அவள் வளர்ந்தபோது வெளிப்பட்ட அழகின் வர்ணனைகள் அப்போதிருந்த சயாம் மன்னன் காதுகளில் விழுகிறது. அவன் அவளை மணமுடிக்க விரும்புகிறான். மன்னர்கள் இருவரும் மறுக்கவே சயாம் மன்னன் இரு அரசுகள் மீதும் போர் தொடுக்க முனைகிறான்.

தங்கள் மகளைக் காக்க உடனடியாக தங்கள் உறவினர் மகனான அப்துல்லாவிற்கு இளவரசி சாடோங்கை மணமுடித்து அவர்களுக்கென தனி அரசை உருவாக்கியும் தருகின்றனர். இதுவெல்லாம் சயாம் மன்னனுக்கு ஒரு தடையாகவே இல்லை. சாடோங்கை அடைவதென படை திரட்டி வந்து போர் தொடுக்கிறான். சாடோங் தன் கண்முன்னால் கொல்லப்படும் மனிதர்களைப் பார்க்கிறாள். அன்புக்குரியவர்களை இழந்து அழும் உறவுகளைப் பார்க்கிறாள். தன் கணவனையும் மக்களையும் இனி துன்புறுத்தக்கூடாது என வாக்குறுதி பெற்று சயாம் மன்னனுடன் செல்கிறாள். வேறு வழியில்லாத அப்துல்லாவும் சம்மதிக்கிறான்.

இளவரசி சாடோங் சயாமில் காலடி வைத்தபோது சயாம் மன்னனுக்கு உடலில் சொறி சிரங்குகள் வரத் தொடங்குகின்றன. அவர் சாடோங்கை நெருங்க முயலும்போதெல்லாம் அதன் தீவிரம் அதிகரிக்கிறது. மருத்துவம் பலிக்காததால் மாந்திரீகம் தொடங்குகிறது. அனைத்திற்கும் காரணம் சாடோங் இளவரசியை விருப்பம் இன்றி அழைத்து வந்ததுதான் என போமோக்கள் சொல்கிறார்கள். மீண்டும் இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் நிகழ்கிறது. அந்தச் சிரங்குகளை தான் குணப்படுத்தினால் மீண்டும் தன்னை கிளந்தானுக்கே அனுப்பிவிட வேண்டும் எனக் கேட்கிறாள். ஒப்புதலுக்குப் பின் சாடோங் உடனிருந்து மருத்துவம் செய்கிறாள். அவனைத் தூய்மைப்படுத்தி குணமாக்குகிறாள். வாக்களித்தபடி இளவரசியை மீண்டும் கிளாந்தானுக்கு அனுப்புகிறான் சயாம் மன்னன்.

கிளந்தான் சென்றவுடன் அவளுக்கு மீண்டும் சிக்கல் தொடங்குகிறது. அப்துல்லா அவள் கலங்கப்பட்டவள் எனக் குற்றம் சாட்டுகிறான். அவள் புனிதமாக இருந்தால் அவளது இரத்தம் வெள்ளை நிறத்தில் வர வேண்டும். அப்படி வந்தால் தான் இறக்கத் தயாராக இருப்பதாகவும் வராவிட்டால் அவளுக்கு அங்கேயே மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் சொல்கிறான். ரத்தம் சோதிக்கப்படுகிறது. வெண் ரத்தம் வெளிப்படுகிறது. தன்னை சந்தேகப்பட்டதற்காக இளவரசி சாடோங் அப்துல்லாவைக் குத்திக் கொல்கிறாள். பின்னர் கோழி மலைக்குள் சென்றவளை அதன் பின்னர் யாரும் பார்க்கவில்லை எனக் கதை முடிகிறது.

இக்கதையும் மரபாக நாம் அறிந்த பெண்ணின் புனிதத்தன்மையின் வலிமை பற்றியதாக இருப்பதோடு, ராமாயணக் கதையில் சீதை ராமனால் அக்கினிப் பிரவேசத்துக்கு உட்படுத்தப்படுவதை நினைவுபடுத்துகிறது. ஆயினும் இளவரசி சாடோங் ஒரு படி மேலே சென்று தன் மேல் சந்தேகப்பட்டு அவமானப்படுத்தியவன் கணவனேயானாலும் அவனுக்குத் தண்டனை வழங்குகிறாள். புத்திக்கூர்மை, துணிவு, மக்கள் மேலான கனிவு, ஒழுக்கநெறியில் நிற்கும் வாழ்வு போன்ற உன்னத குணங்களின் பெண்ணிய உதாரணமாக புத்திரி சாடோங்கின் கதை மாலாய் மக்களிடையே வழங்கி வருகிறது.

வரங்களும் சாபங்களும் மனிதர்களின் மனதை அலைக்கழிக்கக் கூடியவை. பழங்குடி தமிழர்களின் நாட்டார் தெய்வங்கள் கருணையும் அன்பும் மிக்கதுமாக மட்டும் இருந்ததில்லை அவற்றுக்கு இணையாக கீழ்மையையும், கோரத்தையும் வழிபடுவதும் ஒரு வழக்கமே. மலாய் புராணங்களில் இதுபோன்ற சாபங்களின் விளைவுகள் மனிதர்களைத் தொடர்ந்து பாதிப்பதை காண முடிகிறது.

சிங்கையை தாக்கிய மூக்குமீன்கள்

SINGAPURA DILANGGAR TODAK13 ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் அமைந்திருந்த பாசாய் எனும் நாட்டிலிருந்து துன் ஜனா கத்திப் என்பவர் சிங்கப்பூருக்கு வணிகம் செய்ய வந்தார். பாசாய் சுமத்திராவில் உருவான முதல் இஸ்லாமிய நாடு. துன் ஜனா கத்திப் இஸ்லாமிய மதபோதகராக இருந்ததுடன் வணிகராகவும் திகழ்ந்தார். சிங்கப்பூரில் வணிகம் செய்வதே அவர் நோக்கமாக இருந்தது. அவரது எளிமையான அடக்கமான அணுகுமுறை அவ்வூர் மக்களைக் கவர்ந்தது.

மாந்திரீக ஞானமும் பெற்றிருந்த ஜனா கத்திப் ஒரு சமயம் தற்செயலாக பாக்கு மரத்தை தனது மாந்திரீக ஞானத்தால் இரண்டாகப் பிளந்தார். இதைக் கண்டு மகாராணி அரசரிடம் தான் கண்ட காட்சியைத் தெரிவிக்கிறார். இப்படி சக்திகொண்ட ஒருவன் தன் அரசுக்கு எப்படியும் சேதாரத்தை ஏற்படுத்துவான் என மந்திரி சபை முடிவெடுத்து அவனைக் கொல்ல முடிவெடுக்கிறது.

இறக்கும் முன் இந்தக் கொடுங்கோல் அரசு தனக்கு நிகழ்த்தும் மரண தண்டனையால் கடும் வீழ்ச்சிக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகும் என சபிக்கிறான். அவன் மார்பில் கெரிஸ் கத்தி பாய்கிறது. இறந்து மண்ணில் சரிகிறார் துன் ஜனா கத்திப். புராணத்தின் அடிப்படையில் ஜனா கத்திப் சடலம் மறைந்துவிட்டதாகவும் அவரது ரத்தத் துளிகளை மட்டுமே ஆங்காங்கு சொட்டியிருந்ததைக் காண முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படி உதிர்ந்து கிடந்த ரத்தத் துளிகள் கற்களாக மாறின. சற்று நேரத்திற்கெல்லாம் பெரும் புயலுடன் இடி மின்னல் வானில் தோன்றியதால் மக்கள் அவரைத் தேடுவதை விடுத்து வீடுகளுக்குள் ஓடி மறைந்தனர்.

அதே காலக்கட்டத்தில் லங்காவி தீவின் கரையோரம் ஒதுங்கிய பிணம் ஒன்று துன் ஜனா கத்திபுடையது என சொல்லப்பட்டது. அவரது பிணம் ‘பண்டைய கல்லறை’ (makam purba) எனப் பெயரிட்டு அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அக்கல்லறை லங்காவி தீவில் உள்ளது.

இது நடந்த சில காலங்களில் சாபத்தின் உக்கிரம் தொடங்குகிறது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூக்கு மீன் தாக்கி இறக்கின்றனர். மன்னன் பலவிதமாகத் திட்டம் வகுக்கிறான். மக்களைத் தற்காப்பு வளையமாக நிறுத்தி மீன்கள் வருவதை தடுக்க நினைக்கிறான். அரணிலிருந்து மீனுக்குப் பயந்து ஓடுபவர்கள் அரச விரோதிகள் எனவும் அறிவிக்கிறான். ஆனால் மீனின் உக்கிரமான தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. மூக்கு மீனின் கூரிய மூக்குகள் குத்தி மக்கள் தொடர்ந்து மடிகிறார்கள். சூழலை மேலும் மோசம் அடைந்தபோது நடீம் எனும் ஏழும் வயதே ஆன சிறுவன் அரசனுக்கு ஒரு ஆலோசனை கூறினான்.

அச்சிறுவன் யோசனையின் அடிப்படையில் வாழைத் தண்டுகளைக் கொண்டு அரண் அமைக்கப்பட்டது. அவற்றின் மூக்குகள் வாழைத் தண்டுகளில் சிக்கி விடுபட முடியாமல் மாட்டிக்கொண்டன. மன்னன் நடீமின் அறிவுத்திறனைப் பாராட்டி அவனுக்கான தக்க வெகுமதி அளிக்க அரண்மனைக்கு வரச்சொன்னார். இது அரண்மனையின் முக்கியஸ்தர்களின் பொறாமையைத் தூண்டியது. சிறிய வயதில் இவ்வளவு அறிவுடன் இருக்கும் சிறுவன் வளர்ந்தால் மன்னனையே கவிழ்த்து அவனது ஆட்சியை அபகரிக்கும் ஆற்றல் கொண்டிருப்பான் என மன்னனின் எண்ணத்தில் விஷம் ஏற்றினர்.

மன்னனிடம் பரிசு வாங்கி வருவதாக தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிச் சென்ற சிறுவன் கெரிஸ் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறான். அவன் உயிருடன் நடுக்கடலில் விடப்பட்டு மூழ்கிச் செத்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாறான புராணக்கதைகளின் காட்சிகள் பின்னர் படிமங்களாக மாற்றப்பட்டு அவரவர் சிந்தனைக்கு ஏற்ப புதிய அர்த்தங்களைக் கொடுப்பதாக உள்ளது. இக்கதையைப் பொறுத்தவரை பாசாயிலிருந்து வந்த வணிகன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவன். அதேபோல சிங்கப்பூரில் இஸ்லாம் வருவதற்கு முன்னர் மக்கள் நீதியற்று இருந்ததாகவே இக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்பீட்டுப் பார்வையில் பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் உயர் சாதியினரால் தண்டிக்கப்பட்ட எளியவர்களின் மரணத்திலிருந்தே முளைக்கிறது. 14ஆம் நூற்றாண்டில் மலாக்காவை ஆண்ட பரமேஸ்வரா எனும் மன்னன் பாசாய் இளவரசியை மணந்து இப்பிரதேசம் முழுக்க இஸ்லாம் பரவ வழியமைத்ததை இந்த மரணம் வழி காலம் தொடக்கி வைத்ததென ஒரு பார்வை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மலாக்காவை ஆண்ட பரமேஸ்வராவைவிட அங்கு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஹங் துவாவை மையப்படுத்திய கதைகள் ஏராளம். ஹங் துவா கதைகள் எனும் தொகுப்பும் மலாய் இலக்கியத்தில் உண்டு.

ஹங் துவா

acb2fc58a0d7bd726b156c766d01876015ஆம் நூற்றாண்டில் மலாக்காவில் வாழ்ந்த வீரனாகக் கருதப்படும் ஹங் துவா குறித்து அண்மையில்கூட சர்ச்சைகள் எழுந்தன. அப்படி ஒருவர் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சீன வம்சாவழி என்றும் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இன்றும் நிலவுகின்றன. எப்படியாயினும் ஹங் துவா எனும் வீரனின் கதை சுவாரசியமானது.

Adiputra (அதிபுத்திரன்) என்ற குருவிடம் சீலாட் (மலாய் தற்காப்பு கலை) கலையைக் கற்றவர் ஹங் துவா. துரோணர் போல இந்தக் குருவும் தற்காப்புக்கலையில் நிபுணர். லேடாங் மலைக்குச் சென்று அங்கு வாழும் அவரிடம் ஹங் துவா தற்காப்புக் கலையைப் பயின்றார். இவர் தன் சகாக்களாக ஹங் ஜெபாத், ஹங் கஸ்தூரி, ஹங் லெகிர் மற்றும் ஹங் லெகியு ஆகியோரை இணைத்துக்கொண்டார். இவர்கள் அனைவரும் பஞ்சபாண்டவர் போன்ற வீரர்களே. ஒரு சமயத்தில் ஆபத்தில் இருந்த மலாக்காவின் அமைச்சரைக் காப்பாற்ற அமைச்சர் இவர்களை அரண்மனையிலேயே வேலைக்குச் சேர்க்கிறார். இவர்கள் வீரத்தால் கவரப்பட்ட மன்னன் ஹங் துவாவை கடற்படைக்கு தளபதியாக நியமிக்கிறார். அப்போது மலாக்கா முக்கிய துறைமுகமாக விளங்கிய சமயம். ஹங் துவா போன்ற வீரனின் இருப்பு நாட்டுக்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.

மலாக்கா சுல்தான் ஒரு சமயம் ஜாவா தீவுக்கு செல்லும்போது ஹங் துவாவும் அரசனின் மெய்க்காப்பாளனாக உடன் செல்ல நேர்ந்தது. அங்கு மஜாபாகிட் அரசு வலுவான ஆட்சி புரிந்து வந்தது. அந்த அரசின் பெரிய வீரனான தாமிங் சாரி என்பவனுடன் ஹங் துவாவிற்கு கைகலப்பு ஏற்படுகிறது. அவனது பலம் அவன் கையில் இருக்கும் கிரிஸில் (மலாய் தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களின் பாரம்பரியக் கத்தி) உள்ளது என்பதை அறிந்துகொண்ட ஹங் துவா அதனைக் கைப்பற்றிய பிறகு அவனைக் கொல்கிறார்.

ஒரு சமயத்தில் மலாக்கா மன்னனுக்கு மணமுடிக்க துன் தெஜா எனும் இளவரசியை அழைத்துவர ஹங் துவா பகாங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அப்போது மெலோர் எனும் பெண் ஹங் துவாவைக் காண மலாக்காவுக்கு வருகிறாள். அலி எனும் அரண்மனை விசுவாசி அவளைக் கைப்பற்றி மன்னனுக்கு ஆசை நாயகியாக இருக்க வற்புறுத்துகிறான். அதே சமயத்தில் தந்திரமாக ஹங் துவாவிற்கும் அழைப்பனுப்பி வர வழைக்கிறான். ஹங் துவாவும் மெலோரும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த மன்னன் அது அரச துரோகம் எனக்கூறி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கிறான். ஆனால் அமைச்சர் ரகசியமாக விடுவிக்க ஹங் துவா தப்பி மலாக்காவின் காட்டுப் பகுதியில் தஞ்சம் புகுகிறார்.

ஹங் துவாவிற்கு பதில் அவரது தோழன் ஹாங் ஜெபாத் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு அவன் கையில் தாமிங் சாரியின் கிரிஸ் வழங்கப்படுகிறது. ஹங் ஜெபாட் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் அவனால் தன் நண்பனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பொறுக்க முடியவில்லை. அதற்கு எதிர்வினையாக அதிகாரம் தன் கைக்குக் கிடைத்த பிறகு ஹங் ஜெபாத் தன் பிற நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து மலாக்கா அரசைக் கைப்பற்ற முயல்கிறான். அவனிடம் இருந்த சக்தி மிக்க கத்தியால் யாராலும் அவனை எதிர்க்க முடியவில்லை. மன்னன் பயந்துபோய் அமைச்சர் வீட்டில் ஒளிந்துகொள்கிறார். அவருக்கு ஹங் துவா இன்னும் இறக்கவில்லை என்ற உண்மை தெரியவருகிறது. மீண்டும் ஹங் துவா அழைக்கப்படுகிறார். தன் நண்பனுடன் ஏழு நாட்கள் சண்டையிட்டு கிரிஸ் கத்தியைக் கைப்பற்றி ஹங் ஜெபாட்டை கொல்கிறார்.

தனக்காக நீதி கேட்ட நண்பனை ஹங் துவா கொன்றது சரியா தவறா என்ற விவாதம் மலாய் வாசகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. ஆட்சியைக் கைப்பற்ற அரண்மனை ஊழியர்களைக் காரணமின்றி கொன்றதற்கான மரண தண்டனையாக அதை ஏற்கலாம் என்று கூறும் தரப்பும் உண்டு.

மலாக்காவில் ஹங் துவா கல்லறை, ஹங் துவா கிணறு என பல தடையங்களை சுற்றுத்துறை பராமரிக்கிறது. ‘செஜாரா மெலாயு’ என்னும் அரச பரம்பரை நூலில் ஹங் துவாவின் சாதனைகள் விளக்கப்படுகின்றன. அவை வாய்மொழிக் கதைகளின் தொகுப்பாகவும் இருக்க வாய்பிருக்கின்றது. ஆயினும் ஹங் துவா வாழ்ந்ததற்கான போதுமான வரலாற்று ஆதரங்கள் இல்லை என்றும் அவர் ஒரு கற்பனை கதாபாத்திரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எவ்வாராயினும், மலாய் மக்களிடையே வரலாற்று அதிவீரனாக போற்றப்படும் ஹங் துவா மலாக்கா வரலாற்றிலும் மலாக்கா அரசவை வரலாற்றிலும் இடம் பெரும் முக்கிய கதாப்பாத்திரமாகும். மிகச்சிறந்த அரச விசுவாசியான ஹங்துவா தன் வீரத்தாலும், மதிநுட்பத்தாலும், மலாக்கா அரசுக்கும் அரசர்களுக்கும் பல்வேறு வகையில் அரணாக இருந்து காத்துள்ளார். தன் உயிரைப் பற்றிய கவலையற்று கடமையாற்றும் ஹங் துவாவின் பங்களிப்பிற்கு அடையாளமாக விளங்கும் மற்றொரு தொன்மக் கதை லேடாங் மலை இளவரசி எனும் முக்கியமான கதை.

லேடாங் மலை இளவரசி

மலாக்காவின் எட்டாவது சுல்தான் மஹ்முட் ஷாவின் மனைவி இறக்கிறாள். அவள்001 ராணியாக அரியணையில் அமர்ந்திருந்தவள். மன்னனுக்கு மேலும் சில மனைவியர்கள் உண்டு. ஆனாலும் சிறு குழந்தைகளை அனாதையாக  விட்டுச் சென்ற அவளை எண்ணி வருந்துகிறார். வெறுமையை உணர்கிறார். ஆட்சியில் கவனம் செல்லவில்லை. அப்போது அவருக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் அவர் கண்ட விசித்திரம் நிறைந்த அழகிய பெண் லேடாங் மலையில் வாழும் இளவரசி என ஜோதிடர் ஒருவர் சொல்ல அவளை திருமணம் புரிய ஆசை எழுகிறது. அவள் பலநூறு வருடங்களாக அந்த மலையைக் காப்பவள் என அறிகிறார். அப்படி ஒருத்தி தனக்கு மனைவியாக வந்தால் நாடு செழிக்கும் என்றும் நம்புகிறார்.

அவளை மணமுடிக்க சம்மந்தம் பேச ஹங் துவா அனுப்பி வைக்கப்படுகிறார். ஹங் துவாவுக்கு அப்போது வயது முதிர்ந்திருந்தது. தன்னுடைய இறுதி காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். மன்னனின் ஆணைக்கு ஏற்ப சங் செத்தியா மற்றும் காட்டில் வழித்தடங்கள் தெரிந்த இந்திரகிரி மக்களின் தலைவனாக விளங்கிய துன் மாமாட் ஆகியோருடனும் சில அரண்மனை பணியாளர்களுடனும் பயணம் தொடங்குகிறது. சவாலான மலைப்பயணம் அது. உச்சியை அடைவதற்கு முன் புயல் காற்று வீசத்தொடங்கியது. அதன்பின்னர், ஹங் துவா, சாங் செத்தியா ஆகிய இருவராலும் தொடர்ந்து மலை ஏற முடியவில்லை. துன் மாமாட் மட்டும் தனி ஒருவராக மலை உச்சியை அடைந்தார்.

மலையுச்சியில் ஓர் அழகிய பூங்காவனம் இருப்பதைக் கண்டு துன் மாமாட் பிரமித்துப் போனார். ஆங்காங்கு சில பெண்களின் சிரிப்பொலிகளுக்கு மத்தியில் ஒரு மூதாட்டி அவன் முன் தோன்றினாள். துன் மாமாட் தான் வந்த நோக்கத்தைக் கூறவும் தகவலைப் பெற்றுக்கொண்டு மூதாட்டி இளவரசியிடம் கோரிக்கையை தெரிவிக்கச் சென்று மீண்டும் திரும்பி வந்தாள். இளவரசியின் நிபந்தனையை நிறைவேற்றினால் திருமணம் சாத்தியம் என்றவள் இளவரசியின் நிபந்தனையைத் தெரிவித்தாள். அவை விசித்திரமான நிபந்தனைகள்.

லேடாங் மலையில் இருந்து மலாக்காவிற்கு நடந்து செல்ல தங்கத்திலான ஒரு பாலமும் மலாக்காவில் இருந்து லேடாங் மலைக்குத் திரும்பிவர வெள்ளியிலான ஒரு பாலமும் ஏழு மண் ஜாடிகளில் ஒரு கன்னிப் பெண்ணின் கண்ணீரும் ஏழு மண் ஜாடிகளில் பாக்குச் சாறும் ஏழு தட்டுகளில் கொசுக்களின் இருதயங்களும் ஒரு கிண்ணத்தில் சுல்தானின் இளைய மகனின் இரத்தமும் கொடுத்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதாக அந்த நிபந்தனைப் பட்டியல் இருந்தது.

ஹங் துவா இளவரசியின் நிபந்தனைகள் நிறைவேற்றக்கூடியதில்லை என்பதை உணர்ந்தார். தான் வைத்திருந்த சக்திமிக்க கிரிஸ் கத்தியை மாமாட்டிடம் கொடுத்து மன்னனிடம் ஒப்படைக்கச் சொல்லி தன்னால் நிறைவேற்ற முடியாத கட்டளைக்கு மன்னிப்பும்கோரச் சொல்லி மலாக்கா நதியில் இறங்கினார் என கதை முடிகிறது.

நிறைவாக

மலாய் தொன்ம கதைகள் (cerita legenda) மலாய் நாட்டாரியல் கதைகளை செறிவாக்கும் படைப்புகளாகும்.  அரச விசுவாசம், அறம் பிழைப்பதன் தீய விளைவு, நட்பின் மகத்துவம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் போன்ற நீதிகளையும் வீரம், மதிநுட்பம், அன்பு போன்ற மேன்மை குணங்களையும் அடிப்படையாகக்கொண்டவை இக்கதைகள். சுவையான கற்பனைகளின் வழி மாய உலக சித்தரிப்புகளால் நிறைந்த இக்கதைகள் அவற்றினூடே மலாய் மக்களின் பழமை பண்பாட்டுச் சிறப்புகளையும் வாழ்வியலையும் பதிவு செய்திருக்கின்றன. வாய்மொழி கதையாக இருந்த இக்கதைகள் இன்று பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் கலைவடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. இக்கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல நவீன படைப்புகளும் தொடர்ந்து படைக்கப்படுகின்றன.

மனிதர்கள் கதைகளால் வாழ்கின்றனர். கதைகள் வழியே பிறர் வாழ்வை அறிவதுபோலவே தங்களைத் தாங்களே கண்டடையவும் செய்கின்றனர். எவ்வளவு மீறிச்சென்றாலும் மீண்டும் வாழ்வின் மைய மனிதன் அறத்தை விடாமல் பிடித்திருப்பதை இக்கதைகள் நிரூபித்த வண்ணமே உள்ளன. எளியவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி தொல் தெய்வங்களாக பல பழங்குடிகள் வணங்குவதுபோல இஸ்லாம் மதம் செய்ய முடியாது. எனவே அவை கதைகளாக மாறி இன்னமும் காப்பாற்றப்படுகின்றன.

உதவிய நூல்கள்

  • perkembangan kesultanan melayu lama (Dr.Ismail Hamid)
  • Malaysian Fables Folk Tales & Legends

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...