விலங்குகள் சொல்லும் கதைகள்

kancil1_1‘Folklore’ எனும் சொல் 1864 ஆம் ஆண்டு ஜான் வில்லியம் தாமஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழில் நாட்டுப்புறவியல் என்பது இதன் சொல்லாட்சியாக இருக்கிறது.நாட்டுப்புறவியலில் பல வகைமைகள் இருந்தாலும் அதில் நமக்கு மிகவும் பரீட்சயமானது நாட்டுப்புறக் கதைகளாகும்.

நாட்டுப்புறக் கதைகள்(Folktales) அநாமதேயமாக உருவாக்கப்பட்டவை.அவை வாய்மொழியாக தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் மக்களால் பாதுகாக்கப்படுகின்றன.அவை ஒரு சமூகத்தின் கதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் காலங்கள் கடந்து வாழும் இயல்புடையவை. சூழலுக்கேற்ப மாறும் தன்மையுடையவை. ஆகவேதான், ஒரு நிலப்பரப்பிலிருந்து ஒரு சமூகத்தின் பண்பாட்டு கூறுகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் சமகால சமூகத்தினால் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாக மீள்உருவாக்கம் பெற்று உயிர்ப்புடன் விளங்குகின்றன., அநாமதேயமாக உருவாக்கப்படும் நாட்டுப்புறக் கதைகளின் அசல் பதிப்பைத் தீர்மானிக்க இயலாது.நாட்டுப்புறக் கதைகள்வாய்மொழியாகவும் எழுத்துப்படிவமாகவும் மட்டுமல்லாது கலை வடிவங்களாகவும் உலகம் முழுவதும் பரவியுள்ளன.

நாட்டுப்புறக் கதைகளின் முக்கிய குணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது அக்கதையின் மாறுபட்ட பதிப்புகள்.கதைகள்பகிரப்பட்ட அல்லது பரப்பப்பட்ட செயல்முறையின் விளைவாக மாறுபட்ட பதிப்புகள் உருவாகின. இத்தகைய மாறுபாடுகள் அக்கதைகளில் இருந்தாலும், அதன் உள்கட்டமைப்பு நிலையானது.  இந்த அம்சம்தான் நாட்டுப்புறக் கதைநிகழ்வுகளின் நியாயத்தை விளக்குகிறது.  பெரும்பாலும், இந்தக் கதைகள் ஒரே கலாச்சாரத்திற்குள் எவ்வாறு உருவாகின்றன அல்லது காலப்போக்கில் எப்படி நுட்பமாக மாறுகின்றன என்பதையும், சூழல்களினால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வேறுபட்ட கலாச்சாரத்திற்கு பரவும்போது நாட்டுப்புறக் கதைகளின் வடிவம் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் அறிவது மிகவும் சுவாரஸ்யமானது.

‘நரியும் காக்கையும்’ எனும் கதை இன்றும் நம் வழக்கில் இருக்கின்ற  புகழ்பெற்ற கதைகளில் ஒன்று. இக்கதையின் அசல் கிரேக்கத்திலிருந்து துவங்கியிருக்ககூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.மிருகங்களுக்கு மனிதத்தன்மை சேர்த்து சொல்லப்பட்ட புகழ் பெற்ற ஈசாப் கதைகளில் இக்கதையும் அடங்கும். ஆனால் இக்கதை நிலங்களின் தன்மைக்கு ஏற்ப பல வடிவங்களில் சொல்லப்படுகின்றது. கிரேக்கக் கதையில் நரியும் காக்கையும் மட்டுமே கதையில் வரக்கூடிய பாத்திரங்கள். ஒரு காக்கை தனக்கு கிடைத்த பாலாடைக்கட்டியை சாப்பிட மரக்கிளையில் அமர்கிறது. அதைப் பார்த்த நரி ஒன்று காக்கையிடம் அதன் அழகை வர்ணிக்கிறது. காக்கையின் குரல் அதன் அழகுக்கு பொருந்தக்கூடிய அளவுக்கு இனிமையானதா என்று கேட்கிறது.காகம் கரைந்தது.பாலாடைக்கட்டி கீழே விழ அது நரியால் விழுங்கப்படுகிறது. இக்கதையானது அரபு நாடுகளுக்கு வந்தடைந்தபோது பாலாடைக்கட்டி இறைச்சித்துண்டாக மாற்றம் காண்கிறது. பல நிலப்பரப்புகள் பல மாற்றங்கள் என தாண்டி தமிழ்ச்சூழலில் இக்கதை மாறுபட்ட பதிப்பைப் பெறுகின்றது. நரியும் காக்கையும் கதை ஓர் ஊரிலிருந்து தொடங்குகிறது. அதில் பாட்டி வந்து சேர்கிறாள். அவள் வடை சுடுகிறாள்.காக்கை, பாட்டி சுட்ட வடையை திருடி கொண்டு போய் மரக்கிளையில் அமர்கிறது.நரி வருகிறது. காக்கையைப் பார்த்து நீ அழகாக இருக்கிறாய், உன் குரலை கேட்க ஆசையாய் இருக்கிறது, ஒரு பாட்டு பாட சொல்லி கேட்கிறது. காக்கை கரைகிறது.வடை கீழே விழ நரி அதை விழுங்குகிறது. இக்கதை பல பதிப்புகளாக இருந்தாலும் அதன் உள்கட்டமைப்பு இக்கதையின் நிகழ்வு நம்மை வஞ்சப் புகழ்ச்சிக்கு மயங்கிவிடக்கூடாது என்பதை நிறுவுகிறது.

மலேசியச் சூழலில் நாட்டுப்புற கதைகள் மீதான தேடல் மிகவும் சுவாரஸ்யமானது. தந்திரக் கதைகள் அடிப்படையில் ஒரு வகை நாட்டுப்புறக் கதைகளாகும். 2010 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு பூர்வக்குடி மக்களின் நாட்டுப்புறக் கதைகளை மட்டும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது. தமிழ்ச்சூழலில் பஞ்சதந்திர கதைகளின் பங்களிப்பு பற்றி நாம் அறிந்திருப்போம்.பல்வேறு விலக்குகளை கதாப்பாத்திரமாக்கிய அக்கதைகள் பழமையான நீதிக்கதைகளாக நிலைபெற்றவை.

மலாய், சீனம், தமிழ், பூர்வக்குடி என வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட சமூகங்கள் வாழும் நிலப்பரப்பில் அவர்களுடைய நாட்டுப்புறக் கதைகள் மூலமாக அவர்களுக்கிடையிலான சமூக, கலாச்சார ஒற்றுமையும் வேற்றுமையும் கண்டறிய இயலும். ஆனாலும் அதையொட்டிய ஒப்பீட்டு ஆய்வுகள் அவ்வளவாக மேற்கொள்ளப்படவில்லை.

ஒவ்வொரு நாட்டுப்புறக் கதையும் அதன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடியவை. உதாரணமாக, நாட்டுப்புறக் கதைகள் மூலமாக மலாய்க்காரர்களும் சீன மக்களும் வாழ்க்கையில் சவால்களை எவ்வாறு உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதை வெளிக்கொணர முடியும். ஆனாலும் இந்த இரு இனங்களுக்கிடையே பொதுவான தத்துவங்களையும் உலகக் கண்ணோட்டங்களையும் நாட்டுப்புறக் கதைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பது பற்றிய ஆய்வுகள் குறைவு என ஆய்வாளர் சீ ஹூன் பியோவ் கருதுகிறார். பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளே நாட்டுப்புறக் கதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மலேசியாவில் சீனமொழி பாடப்புத்தகங்கள் மூலமாக நாட்டுப்புற இலக்கியம் எவ்வாறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது வாழ்வியல் நெறிகளை எவ்வாறு பெறுகின்றனர் என்பது விளக்கப்பட்டுள்ளது. மலேசியப் பாடத்திடத்தில் நாட்டுப்புறக் கதைகளை ஒரு கருவியாக்கி அதன் மூலமாக மாணவர்களிடத்தில் நற்பண்புகளை எப்படி விதைக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் முத்தாலிப், யூசோப், அலி போன்றவர்கள் ஆய்வுகள் நடத்தியுள்ளனர்.  ஆயினும், நாட்டுப்புறக் கதைகள் வாயிலாக கலாச்சார ஒப்பீட்டு ஆய்வுக்கு தொடக்கமாக, ஆய்வாளரும் விரிவிரையாளருமான சீ ஹூன் பியோவின் மலாய் சீன நாட்டுப்புறக் கதைகள் தொடர்பானஒப்பீட்டு ஆய்வு முக்கியமானதாக அமைகிறது.

மலேசியாவில் புகழ்பெற்றநாட்டுப்புறக் கதையாக ‘சாங் கன்ச்சில் கதைகள்’ திகழ்கிறன.சாங் கன்ச்சில் என்பது சருகு மானாகும். அது தென்கிழக்காசிய காடுகளில் காணப்படும் மிகச் சிறிய வகையிலான மான். சாங் கன்ச்சில் எனும் தந்திரக் கதைகள் அடிப்படையில் ‘ஜதாகா’ (Jataka) கதைகளிலிருந்து தோன்றியதாக மெக்கென் (Mckean) எனும் ஆய்வாளர் கருதுகிறார்.‘ஜதாகா’ என்பது பௌத்தத்தில் சொல்லப்படும் கதை மரபாகும்.

மலேசிய நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பிரிவாக தந்திரக் கதைகள் அமைந்துள்ளன. தந்திரக் கதைகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று, மனிதர்களின் தந்திரக் கதைகள். மற்றொன்று, மிருகங்களின் தந்திரக் கதைகள். தந்திரக் கதைகள், முதன்மை கதாபாத்திரத்தைமையப்படுத்தி அதன் தந்திரத்தால் எதிரியை எப்படி வீழ்த்துகிறது என்பது பற்றிய கதைகள். மலாய் மக்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘சாங் கன்ச்சில்’ தந்திரக் கதைகள் அறியப்படுகின்றன. மலாய் நாட்டுப்புறக் கதைகளில் சருகு மான் புத்திக்கூர்மையுடையதாகவும் கருணை கொண்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. அவர்களுடைய கதைகளில் சருகு மான் தன்னைவிட வலுவான பெரிய விலங்குகளை வீழ்த்தியுள்ளதோடு அவற்றிடமிருந்து பிற உயிரினங்களையும் காப்பாற்றியுள்ளதாக கதைகள் உண்டு. மலாக்கா சாம்ராஜ்ய உருவாக்கத்தின் அடிப்படையில் ஒரு மதிகூர்மையுடைய சாங் கன்ச்சில் இருப்பதை அளவுகோலாக வைத்து மலாய்காரர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் சாங் கன்ச்சில் என்னும் சருகு மானின் இடத்தைப் புரிந்து கொள்ளலாம்.

சருகுமான் தந்திரக் கதைகளைப் போல சீனத்திலும் தந்திரக் கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் கதைக்களம் ஒரே மாதிரியாகவும் மலாய் சீன கலாச்சாரத்திற்குள் இருக்கும் பொதுவான ஒற்றுமைகளை பிரதிபலிக்கக்கூடியவையாக இருக்கின்றன. ஆயினும், மலாய் தந்திரக் கதைகளின் சாயல் அல்லாத மற்ற தந்திரக் கதைகளும் சீனத்தில் மாற்று கதாபாத்திரங்களுடன் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சீன சமூகம் அதன் மனித தந்திரக் கதைகளுக்காக அறியப்படுகிறது. உதாரணமாக ‘Ah Fan Ti’ கதைகளைக் குறிப்பிடலாம். இதன் அசல் துருக்கியிலிருந்து சீனாவிற்கு பரவியது. இக்கதை சீன முஸ்லீம்களிடையே புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதையாக மாறியுள்ளது. அதுபோல ஹான் சீனர்களது (Han Chinese) தந்திரக் கதைகள் பிராணிகளை மையப்படுத்தியது. குறிப்பாக அவர்களுடைய முயல், எலி போன்ற கதைகள் சருகுமானுக்கு ஈடாக கருதப்படுகிறது.

சருகுமான், முயல், எலி இவை அடிப்படையில் சிறிய உயிரினங்கள், ஒப்பீட்டளவில் பலவீனமானவை.பிற விலங்குகளுக்கு மிக எளிதில் உணவாகக்கூடியவை. தந்திரக் கதைகளில் வரும் இச்சிறு பிராணிகள் மனிதனுக்கு ஓர் முன்மாதிரியாக திகழ்கின்றன. சிறிய உடலமைப்பும் பலவீனமும் கொண்ட ஒரு மனிதன் தன் அறிவாற்றலால் வலுவான, ஆற்றல்மிக்க எதிரிகளை வீழ்த்த முடியும் என நம்பிக்கையளிக்கிறது.

இனி தொடர்ந்து சருகுமான், முயல், எலி கதைகளை கவனிப்போம்.

சருகுமான் தந்திரக் கதைகளில் சாங் புவாயா(முதலை) மற்றும் சாங் ஹரிமாவ் (புலி) ஆகியவை எதிர்மறை கதாப்பாத்திரங்களாக இடம்பெருகின்றன. அவை பொதுவாக தென்கிழக்காசிய மழைக்காடுகளில் உள்ள மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன. சருகுமானை விட அவை வலிமையானவையாக சித்தரிக்கப்பட்டாலும் பெரும்பாலும்சாங் கன்ச்சிலின் தந்திரங்களில் வீழ்கின்றன. கதையின் ஆரம்பத்தில் சாங் கன்ச்சில் முதலைக்கும் புலிக்கும் இரையாகப் போவதாக காட்டப்பட்டாலும் பின்னர் அது தன் அறிவுக்கூர்மையால் தந்திரமாக தம்பித்து எவ்வித பாதிப்புமில்லாமல் சுதந்திரமாக திரிகிறது.

ஒரு கதையில், சருகுமானின் கவனக்குறைவால், முதலையின் வாயில்  அதன் கால் அகப்பட்டுக் கொள்கிறது. பதட்டமடையாத அது அமைதியாக இருந்து, தனது காலுக்கு பதிலாக ஒரு குச்சியை கவ்விவிட்டதாக முதலையைக் கிண்டல் செய்கிறது. முட்டாளாக்கப்பட்ட முதலை, அது உண்மையென நம்பிவாயைத் திறக்க, சருகுமான் விரைவாக முதலையின் பிடியிலிருந்து தம்பித்துக்கொள்கிறது. தப்பித்துக்கொண்ட பிறகும், ஆற்றின் மறுபுறத்திலுள்ள மரங்களில் பழங்களை சாப்பிட முதலைகள் நிறைந்த ஒரு நதியைக் கடக்க சாங் கன்ச்சில் விரும்புகிறது.  அது, ஆற்றிலுள்ல முதலைகளின் எண்ணிக்கையை எண்ணும்படி அரசன் சுலைமான் தனக்கு கட்டளையிட்டதாக முதலைகளுக்குச் சொல்கிறது.  அது முதலைகளை ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கறைக்கு வரிசைப்படுத்த சொல்கிறது.முதலைகள் அதனை நம்பி வரிசைகட்டி நிற்க சருகுமான் முதலைகளை கணக்கிட்டவாறே ஆற்றைக் கடந்துவிட்டு பின் திரும்பி முட்டாள்களை ஏமாற்றியதாக சொல்லிச் சிரிக்கிறது.

சருகுமானிடம் பாதிக்கப்படும் மற்றொரு வழக்கமான விலங்காக புலி இருக்கிறது.ஒரு நாள், சருகுமான் தான் பல முறை ஏமாற்றிய ஒரு புலியை வழியில் சந்தித்து விடுகின்றது.  புலி மிகவும் கோபத்தில் இருப்பதால் கன்ச்சிலை சாப்பிட விரும்புகிறது.  இருப்பினும், சாங் கன்ச்சில்  சுல்தான் சுலைமானின் கோங்கைக் (Gong)பாதுகாத்துக்கொண்டிருப்பதால், இப்போது தன்னைச்சாப்பிடக்கூடாது என்கிறது. அந்த கோங்கை அடிக்கும்போது இனிமையான ஒலியை ஏற்படுத்தும் என்கிறது. புலி, சுல்தான் சுலைமானின் பிரமாண்ட கோங்கில் இருந்து வரும் ஒலியைக் கேட்க விரும்புகிறது. ஆனால் சருகுமான் அதைஅடிக்க மறுக்கிறது.அவ்வாறு செய்வது, சுலைமான் அரசனின் நம்பிக்கையை மீறிவிடுவதாகும் என்று கூறுகிறது. வேண்டுமானால் புலி கோங்கை அடித்துப் பார்க்கலாம் என சொல்லிபுலிக்கு ஒரு குச்சியைக் கொடுக்கிறது.  புலி கோங்கை அடிக்கிறது. உண்மையில் அது குளவிக்கூடு.புலி குளவிகளின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்து மடிகிறது.

மற்றொரு கதையில், சருகுமான் புலியை மூங்கில்களுக்கு இடையில் அதன் வாலைkancil_2gif வைக்கும்படி வற்புறுத்துகிறது. அப்படி செய்தால் காற்று வீசும்போது அழகான வயலின் இசையைக் கேட்க முடியும் என்கிறது. புலி இசைக்கு மயங்கிய வேளையில், அதன் வால் மூங்கிலால் வெட்டப்படுகிறது. வலியால் பொங்கி எழும் புலியிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் சருகுமான் குழியில் விழுந்து விடுகிறது.  குழிக்கு மேலிருக்கும் புலியைப் பார்த்து வானம் உன்னை நசுக்கப் போகிறது என்று சொல்ல, புலி குழிக்குள் குதித்து சாங் கன்ச்சிலை வெளியேவீசி முட்டாளாகிறது.  இந்தக் கதையின் பதிப்புவியட்நாமிய நாட்டுப்புறக் கதையிலும் உள்ளது, ஆனால் புத்திக்கூர்மையுடைய சாங் கன்ச்சிலுக்குப் பதிலாகவியட்நாமிய கதையில் முயல் வருகிறது. இந்த கதையின் மையக்கரு லாவோஸ் நாட்டின் நாட்டுப்புற இலக்கியத்திலும் பொதுவானதாக இருக்கிறது.  இது இக்கதை மற்ற நிலப்பரப்பிற்கும் பரவியதற்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம்.

சில கதைகளில் சருகுமான் கொடிய விலங்குகளிடமிருந்து மற்ற விலங்குகளை காப்பாற்றி உதவும் தருணங்கள் இருந்தன. ஒரு கதையில், வேட்டைக்காரனின் கூண்டில் ஓநாய் சிக்கிக்கொள்ள ஓர் ஆடு அதனை விடுவிக்க உதவுகிறது.  அதற்கு பதிலாக, ஓநாய் ஆட்டைச் சாப்பிட விரும்புகிறது. இரண்டுக்கும் வாதம் நடந்த பிறகு, சரியான முடிவை வழங்குவதற்கு மூன்று நண்பர்களை தேட இரண்டும் ஒப்புக்கொள்கின்றன.  முதலில், அவை நரியை சந்திக்கின்றன. அவற்றின் தர்க்கத்தை கேட்டு நரி, ஆடு ஓநாய்க்கு இரையாக வேண்டும் என்று தன் முடிவை சொல்கிறது.அடுத்ததாக பாம்பிடம் செல்கின்றன. பாம்பும் ஆட்டை ஓநாய்க்கு இரையாக வேண்டும் என சொல்கிறது.இறுதியாக, சருகுமானிடம் முறையிடுகின்றன. சருகுமான் தனக்கு புரியவில்லை என்றும், மீண்டும் நடந்ததை செய்து காட்டும்படி சொன்னது.ஓநாய் மறுபடியும் கூண்டுக்குள் செல்ல சருகுமான் அதனை சாதுரியமாக கூண்டுக்குள் பூட்டிவிட்டு ஆட்டைக் காப்பாற்றுகிறது.

இதைப்போலவே இன்னொரு கதையும் உண்டு. ஓர் எருமை மரக்கட்டையின் அடியில் சிக்குண்ட முதலையைக் காப்பாற்றுகிறது. நன்றி மறந்த முதலை எருமையின் காலைப் பிடித்துக்கொண்டு தனக்கு இரையாக்க முயற்சிக்கிறது. அதிர்ஷ்டவசமாக சருகுமான் அதை கவனிக்கிறது. எருமை மரக்கட்டையைத் தூக்கி முதலையைக் காப்பாற்றியதாக சொல்வதை தன்னால் நம்பமுடியவில்லை என அவநம்பிக்கையாக சொல்கிறது சருகுமான். மீண்டும் செய்து காட்டும்படி சொல்கிறது. எருமை மீண்டும் மரக்கட்டையை தூக்கிக்காட்ட அதன் காலை தன் வாயிலிருந்து விடுவிக்கிறது முதலை.எருமை மீண்டும் மரக்கட்டையை தூக்கி முதலையின் மேல் போட்டுவிடும்படி சாங் கன்ச்சில் செய்கைகாட்டுகிறது.சாங் கன்ச்சில் சொன்னதுபோலவே செய்து எருமை தன்னை காப்பாற்றிக் கொள்கிறது.

சீனத்திலும் இதைப்போன்று ஒரு கதை இருக்கிறது. அக்கதையில் ஒரு விலங்கு ஆபத்தில் சிக்கிக்கொண்ட கொடிய விலங்கை காப்பாற்றுகிறது. ஆனால் கொடிய விலங்கு அதற்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.இரண்டுக்கும் தர்க்கம் ஏற்படுகிறது. அவற்றின் தர்க்கத்தை தீர்த்து வைப்பதற்கு ஒரு வயோதிக நபரை தேடிச் செல்கிறன. அந்நபர் கொடிய விலங்கை மீண்டும் ஆபத்தில் சிக்க வைத்து உதவிய விலங்கை காப்பாற்றுகிறார்.

திபெத்திய நாட்டுப்புறக் கதையில் ஓர் ஓநாய் கழுதையைத் தனக்கு இரையாக்க விரும்புகிறது. ஆனாலும் கழுதை உடல் எடை பெருக்கும் வரை காத்திருப்பதாக ஓநாய் ஒத்துக்கொள்கிறது. தகுந்த நேரம் வந்தபோது ஓநாய் கழுதையை தின்பதற்கு செல்லும் வழியில் உடன் முயலையும் நரியையும் சேர்த்துக்கொள்கிறது. பாவப்பட்ட கழுதையும் வந்து சேர்ந்தது. கழுதையின் கழுத்தை கடித்து குதறும்போது இரத்தம் தெறிக்கும் என்பதால் அதனை கழுத்து நெரித்து கொல்லலாம் என முயல் திட்டம் கொடுக்கிறது. நரியும் ஓநாயும் அதற்கு சம்மதம் தெரிவிக்க கயிற்றில் மூன்று சுருக்குகளை உருவாக்குகிறது முயல். கயிற்றின் இரண்டுமுனைகளிலும் போடப்பட்ட சுருக்கில் நரியும் ஓநாயும் தலையை உள்ளே விட கயிற்றின் நடுவே போடப்பட்ட பெரிய சுருக்கில் கழுதை தலையை விடுகிறது. கழுதைக்கு போடப்பட்ட பெரிய சுருக்கு முடுச்சுப்போடப்பட்டது. அது கழுதையின் கழுத்தை இறுக்கவில்லை. மாறாக, நரியும் ஓநாயும் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு கழுத்து இறுக்கி மடிந்தன.முயலின் தந்திரத்தால் பாவப்பட்ட கழுதை உயிர் தப்பித்துக்கொள்கிறது.

விலங்குகளின் ராஜ்ஜியத்தில் நீதிமானாக வரும் சருகுமான் மனிதர்களுக்கிடையே ஏற்படும் சர்ச்சைகளுக்கும் தீர்வு காணும் நீதிமானாகவும் வருகிறது. ஒரு கதையில் ஹசான் தன் நண்பனான ஙா அலியிடம் நெல் தானியத்தையும் சோள விதையும் கடனான வாங்குகிறார். இரண்டு மாதங்களில் (மலாய்மொழியில்: பூலான்) திரும்பி கொடுத்துவிடுவதாக உறுதியளிக்கிறார். ஆனால் நாட்கள் கடந்தும் ஹசான் கடனை செலுத்தவில்லை.தாம் இரண்டு நிலவுகள் (மலாய்மொழியில் பூலான் என்பது மாதத்தையும் நிலவையும் குறிக்கும் சொல்லாகும்) தெரியும்போது கொடுப்பதாகவே சொல்லியிருந்தேன் என்கிறார். ஙா அலி சாங் கன்ச்சிலின் உதவியை நாடுகிறார். சாங் கன்ச்சில் இருவரையும் அழைத்துக்கொண்டு ஒரு குளத்திற்கு சென்று வானிலும் குளத்திலும் தெரியும் நிலவுகளை காட்டி ஹசான் பெற்ற கடனை திரும்ப செலுத்த வைக்கிறது. சீனத்தில் இம்மாதிரியான கதை இல்லை. இருந்தாலும் மலாய்மொழியிலும் சீனத்திலும் நிலவையும் மாதத்தையும் குறிப்பதற்கு ஒரே சொல் பயன்படுத்தப்படுவது ஆச்சரியம்தான். தமிழில் திங்கள் போல. ஒரு பெளர்ணமியில் இருந்து அடுத்த பெளர்ணமி  வரையிலான காலம்தான் ஒரு மாதமாக குறிக்கப்படுகின்றது. இக்கணிதத்தை அறிந்த மனிதன் ஒரு மாத கால அளவுக்கு நிலவையே அடையாளமாக சூட்டிக்கொண்டான்.ஆகவே நிலவையே மாதமாக குறிக்கும் சொற்களைப் பயன்படுத்துவது இனங்களிடையே பொதுவான பழக்கமாக இருந்துள்ளது.

சீனக் கதைகளில் முயல் முதன்மையானதாக இருக்கின்றது. ‘தந்திரமான முயல் மூன்று பொந்துகள்வைத்திருக்கும்’ என்பது சீன பழமொழி. இப்பழமொழியானது சீன பெருநிலத்தில் (Qi) சீ எனும் மாநிலத்தின் அறிவார்ந்த பிரதம மந்திரி போர்க்காலங்களின் போது தனது மன்னன் சிக்கலில்லாமல் தப்பிக்க பல மாற்றுவழிகளை உருவாக்கிய கதையிலிருந்து உருவாகியது. அதைப்போல மற்றொரு சீன பழமொழியானது ”தந்திரமான முயல் அதன் பொந்துக்கு அருகில் புல் தின்னாது” ஆகும். இதன் மூலமாக பல நூற்றாண்டுகளாக சீனர்கள் முயல்களை தந்திரமானவை என நம்புகின்றனர் என்பதை உணரலாம்.

சீனர்களின் கலாச்சாரத்தில் முயல் சார்ந்த கதைகள் நிறைய உள்ளன.அக்கதைகள் பெரும்பாலும் முயலின் வெவ்வேறு அம்சங்களைக் கூறுகின்றன. அக்கதைகளில் முயல் மென்மையானதாகவும், அழகானதாகவும் அப்பாவியானதாகவும் காட்டப்படுகின்றன.இது தந்திரமாக இருப்பதற்கு முற்றிலும் எதிரானது.சீன கலாச்சாரத்தில் இரண்டு வகையான முயல்கள் உள்ளன.ஒன்று புனிதமானது.மற்றொன்று மதச்சார்பற்றது. புனிதமான முயல் நல்லதாகவும் மதச்சார்பற்ற முயல் தந்திரமானதாகவும் கருதப்படுகிறது.

சீன நாட்டுப்புறக் கதைகளில் வருகின்ற முயலும் சருகுமானைப் போலவே தன்னைவிட பெரிய வலுவான விலங்குகளை வீழ்த்தக்கூடியதாக உள்ளது.ஒரு கதையில் பலம் பொருந்திய சிங்கமொன்று மலைக்காட்டில் சோம்பேறியாக இருக்கிறது.அது உணவுக்காக வேட்டைக்கு செல்லாமல் முயலிடம் அதுபோன்ற சிறிய விலங்குகளை தனக்கு உணவாக கொண்டு வரவேண்டுமென கட்டளையிடுகிறது.ஒருநாள் முயல் சிங்கத்திற்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிடுகிறது.சிங்கம் முயலிடம் கர்ஜிக்கிறது. முயல் சினம் கொண்ட சிங்கத்திடம், இக்காட்டில் அதனைக் காட்டிலும் பெரிய பலம் கொண்ட மற்றொரு சிங்கம் வாழ்வதாகவும், இப்போது அதற்கு உணவு கொண்டு செல்வதாகவும் கூறுகிறது.ஆத்திரமடைந்த சிங்கம் தன்னிடம் அச்சிங்கத்தை காட்டும்படி கேட்கிறது.முயல் அச்சிங்கத்தை அழைத்துக்கொண்டு ஒரு நீர்க்குட்டைக்கு செல்கிறது.நீரில் தனது உருவம் பிரதிபலிக்க சிங்கம் ஆவேசமாக பாய்ந்து மூழ்கி மடிகிறது. சீன நிலப்பரப்பில் சிங்கம் இல்லாத சூழலில் இக்கதை அயல்நாட்டு கதையின் பதிப்பாக இருக்கிறது.சிங்கம் ஆப்பிரிக்க பாலைவனங்களை ஒட்டிய சவானா காடுகளில் வாழும் விலங்காகும். ஆயினும் சிங்கம் பற்றிய கதைகள் பண்டைய கிரேக்கம் ,  மத்திய தரைகடல் நாடுகள், வட இந்தியா போன்ற நிலங்களில் பிரபலமானவையாக இருந்தன. ஆகவே சீனாவுக்கு சிங்கம் தொடர்பான கதைகள் இந்தியாவிலிருந்து பெளத்தமதம் பரவிய காலத்தில் சென்றிருக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.வேறு சில கதைகளிலும் இவ்வகை அன்னிய பாதிப்புகளைக் காணமுடிகின்றது.

சில கதைகளில் சிங்கத்திற்கு பதிலாக புலி இடம்பெற்றிருந்தாலும் அக்கதைகள் ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் சிங்கத்தைக் காட்டிலும் புலி நன்றாக நீந்தக்கூடியது.இதில் ஆச்சரியமானது என்னவெனில் இக்கதையைப் போன்று சாங் கன்ச்சில் கதையும் ஊன்டு.அதில் சாங் கன்ச்சில் புலிக்கு இரையாவதிலிருந்து தப்பிக்க ஒரு நீர்க்குட்டையில் புலியின் நிழலின் பிரதிபலிப்பைக் காட்டி அதை ஏமாற்றி குதிக்க வைக்கிறது.

kancilசீன நாட்டு நாட்டுபுறக் கதையொன்றில், முயல் வழிப்போக்கர்களின் கவனத்தைப் பெறுவதற்கு இறந்ததைப் போன்று நடிக்கிறது அல்லது பாட்டு பாடுகிறது.வழிப்போக்கர்களின் கவனம் முயல் பக்கம் திசைதிரும்பும்போது லாவகமாக ஏமாற்றி அவர்களின் பொருட்களையோ அல்லது உணவுகளையோ திருடக்கூடியதாக இருக்கிறது.சாங் கன்ச்சில் கதையொன்றும் இதேபோல இருக்கிறது.வேட்டைக்காரனின் பொறியில் சிக்கக்கொள்ளும் சாங் கன்ச்சில் அவன் திரும்பி வரும்போது இறந்ததைப்போல நடித்து கைப்பிடியிலிருந்து தப்பிக்கிறது.

சில சமயங்களில் முயல் மற்றவற்றை ஏமாற்றுவதில் முட்டாள்தனமாக நடந்துக்கொள்ளக்கூடியது.ஒரு கதையில் அது மற்ற விலங்குகளுடன் வேட்டையாட செல்கிறது.வேட்டையாடிய பின்னர் மற்ற விலங்குகளுக்கு உணவாக விரும்பத்தகாத பாகங்களைக் கொடுத்து ஏமாற்றுகிறது.இதனால் சிக்கல் ஏற்படுகிறது.தன்னை எதிர்க்க வரும் விலங்குகளிடம் தன் வாயைப் பிளந்துக் காட்டி பயமுறுத்துகிறது.தாம் உண்ணும் உணவை உண்டால் அவற்றின் வாயும் தன் வாயைப் போலவே பிளந்துக்கொள்ளும் என பொய் சொல்கிறது.இதனால்தான் முயலுக்கு பிளவு உதடு அமைந்தது என்பது சீனர்களின் நம்பிக்கை.

முயல் தனது தந்திரத்தினால் கொல்லப்படுவதுமுண்டு. ஒருசீனக் கதையில் முயல் கழுகை வம்புக்கு இழுக்கிறது. முயல் கழுகைப் பார்த்து அவ்வளவாக திறனில்லாதது என்று சொல்கிறது. தன்னைவிட கழுகு சிறப்பாக செய்வது பறப்பது மட்டும்தான் என கேலி செய்கிறது. தன்னோடு தரையில் ஓட்டப்போட்டி வைத்தால் கழுகு தோற்றுவிடுமென வெற்று ஆரவாரம் செய்கிறது. கழுகு அதனைக் கண்டுகொள்ளாமல் பறக்கிறது.முயல் கழுகை நோக்கி, முட்டாள் உனக்கு ஒரு கூடு மட்டுமே கட்டத் தெரியுமெனவும் தனக்கு மூன்று பொந்துகள் இருப்பதாகவும் கத்துகிறது.ஆத்திரமடைந்த கழுகு முயலை நோக்கி வேகமாக பறந்து வர, முயல் தன் பொந்துக்கு வேகமாக ஓடினாலும் இறுதியில் அது கழுகிடம் மாட்டிக்கொண்டு இறந்து போகிறது.

சீன நாட்டுப்புறக் கதைகளில் முயலுக்கு இணையானதாக எலி திகழ்கிறது.எலியும் முயலைப் போன்று இரட்டை ஆளுமை கொண்டது. சீன கலாச்சாரத்தில் எலியைக் குறித்து சில பழமொழிகள் உண்டு. ‘எலியைப்போல பயப்படு’, ‘சாலையைக் கடக்கும் எலி எல்லோராலும் கொல்லப்படும்’, ‘எலித்தலையும் அதன் மூளையும் ஒன்று’ ஆகிய பழமொழிகள் எலியை துச்சமாக மதிப்பீடு செய்துள்ளதை காட்டுகிறது. சீனத்தில் ஒரு நபரைப் பார்த்து எலியைப் போல இருக்கிறார் என்பது அந்நபரை அவமதிக்கும் செயலாகும். சீனத்தில் எலி பெரும்பாலும் பிரச்சனைக்குரியதாக பார்க்கப்படுகிறது.எலியைக் கொல்வதற்காக பூனைகள் கொண்டு வரப்பட்ட கதையும் எலித்தொல்லைக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையும் சீனத்தில் உண்டு.

ஒரு கதையில் எலி தனது தந்திரத்தால் பூனையைக் கழுத்தில் மணி அணிய வைக்கிறது. அதன் மூலமாக பூனையின் நடமாட்டத்தை அறிந்து வைத்துக்கொள்கிறது. அக்கதையில் எலி மிகவும் புத்திக்கூர்மையுடைதாக சித்தரிக்கப்படுகிறது. கிழக்குப் பகுதிகளில் எலி அநுகூலத்தை தரக்கூடிய ஜீவராசியாக பார்க்கப்படுகிறது. எலி செழிப்புக்கான அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதெல்லாம் எலியை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொருத்து அமைகிறது.சீனத்தில் எலி ஆண்டில் பிறந்தவர்கள் நல்ல தகுதிகளை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.அவர்கள் துடிப்புமிக்கவர்களாகவும் வாழ்க்கையில் விடாமுயற்சியால் நிலையான இடத்தைப் பெற்றவர்களாகவும் இருப்பர் என்பது நம்பிக்கை.

எலியைப் பற்றிய கதைகள் நிறைய இருந்தாலும் அவையெல்லாம் தந்திரக் கதைகளாக இல்லை. அவற்றில் மிகவும் பிரபலமான கதை, ஒரு எலி தனக்கு ஒரு மருமகன் வேண்டி ஒருவலிமையான எலியைத் தேடுகிறது. தேடலின் இறுதியில் எலி படைப்பிலேயே வலிமையானதுதான் என்பது அந்த எலிக்கு புரிகிறது.சில கதைகள் எலியின் புத்திசாலித்தனத்தை சித்தரிக்கக்கூடிய கதைகளாக இருக்கின்றன. எலிகள் எண்ணெயை திருடக்கூடிய கதையில், கொள்கலனின் உள்ள எண்ணெயை அடைவதற்கு எலிகள் ஒன்றின் ஒன்றை வாலைப் பிடித்துக்கொண்டு வெற்றிகரமாக அதனை திருடுகின்றன.இக்கதையின் வெறொரு பதிப்பில் முடிவில் எலிகள் கொள்கலனைக் கவிழ்த்துவிட்டு விருந்து கொண்டாடுகின்றன.இன்னொரு பதிப்பின் முடிவில் எலிகள் கொள்கலனின் தவறி விழுந்து மூழ்கி மடிவதாக இருக்கும்.

சீனர்களின் ராசி மண்டலம் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரில் அமைந்தது. ஆகவே அந்த ராசி மண்டல அமைவு பற்றியும் அதில் இருக்கும் விலங்குகள் பற்றியும் பல கதைகள் உள்ளன. இக்கதைகளில் விலங்குகளின் தனித்த குண இயல்புகளும் சீனர்களிடையே நிலவும் நம்பிக்கைகளும் அதன் சாராம்சமாக உள்ளன.மேலும் இப்புனைக்கதைகள் சுவாரஸ்யம் குறையாதனவாக உள்ளன.

சீனர்களின் இராசி மண்டலத்தில் எலி முதலிடத்தில் இருப்பதால் பெரும்பாலான தந்திரக் கதைகளில் எலி இடம்பெற்றிருக்கிறது. சீனர்களின் இராசி மண்டலத்தில் எலி எப்படி முதலிடம் பெற்றது தொடர்பான கதை பல பதிப்புகளாக இருக்கிறது. முதல் பதிப்பில் கடவுள் தேர்ந்தடுத்த விலங்குகளை வரிசைப்படுத்த எண்ணுகிறார். கடவுளிடம் எலி தன்னை பெரிய விலங்கு என்கிறது. கடவுள் எலியை நம்பவில்லை. எலி கடவுளை மக்களிடம் முடிவு  கேட்க சொல்கிறது.கடவுள் எருதுக்கு முதலிடம் வழங்க எண்ணம் கொண்டிருந்தாலும் எலியின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறார்.மக்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. உடனே எலி எருது தலை மேல் குதித்ததும் மக்கள் அனைவரும் ”பாருங்கள், எவ்வளவு பெரிய எலி” என கூச்சலிடுகின்றனர். ஆக, கடவுளும் எலிக்கு முதலிடம் வழங்கி எருதுக்கு இரண்டாம் இடம் வழங்கினார்.

இன்னொரு பதிப்பில், பன்றி கடவுளிடம் தானாகவே முன்வந்து தேர்தெடுக்கப்பட்ட விலங்குகளை வரிசைப்படுத்துவதாகசொல்கிறது.சில காரணங்களுக்காக கடவுளும் அதற்கு சம்மதிக்கிறார். பன்றி விலங்குகளை வரிசைப்படுத்துவதாக சொல்லி குளறுபடியை ஏற்படுத்திவிடுகிறது.அதற்கு தண்டனையாக கடவுள் பன்றியை தன் பட்டியலில் இறுதி விலங்காக வரிசைப்படுத்துகிறார்.

மற்றுமொரு பதிப்பில், விலங்குகளுக்கு ஓட்டப்போட்டி நடைபெறுகிறது.போட்டியின் இறுதிகட்டமாக விலங்குகள் ஆற்றைக் கடக்க வேண்டும். எலிக்கு  அவ்வளவாக நீந்தத் தெரியாது. எருதுக்கு நீந்த முடியும்.ஆக, எலி எருதுவிடம் தன்னை அதன்மேல் சுமந்துகொள்ள சொல்லி உதவி கேட்கிறது. எருதுவும் அதற்கு சம்மதிக்கிறது. எருது ஆற்றின் கரையை நெருங்கும் போது எலி எருதுவின் முன் பாய்ந்து வெற்றிக்கோட்டையை அடைகிறது.

பௌத்த பதிப்பில், புத்தர் ஜீவசமாதி அடைவதற்குள் அவரை சந்திக்க வேண்டி விலங்குகளுக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது.எலி எருதுவை அழைக்கிறது. நல்ல மனம் கொண்ட எருது எலியை தன்மீது சுமந்து கொண்டு புத்தரை காண செல்கிறது.எருது புத்தரை நெருங்குவதற்கு முன்னதாக எலி எருதுவின் மேலிருந்து பாய்ந்து முதல் விலங்காக போய் புத்தரை சந்திக்கிறது. எருது இரண்டாவதாக வருகிறது.

எலி முதலிடம் பெற்றது தொடர்பான மற்றொரு கதையில் எலியும் பூனையும் நல்ல நண்பர்கள். கடவுள் நடத்திய விலங்குகளுக்கான தேர்வில் பூனைக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.தேர்வு நாளன்று காலையில் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக பூனை எலியிடம் எழுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறது. பூனை தேர்வுக்கு வராமால் போனால் பங்கேற்கும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என நினைத்த எலி வேண்டுமென்ற பூனையை எழுப்பிவிடவில்லை. தூங்கிப்போன பூனை தேர்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது.இன்னொரு பதிப்பில் எலி பூனையை எழுப்பிவிட மறந்துவிட்டதாக இருக்கும்.இதன் காரணமாகவே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூனைக்கு எலியைப் பிடிக்காமல் துரத்துகிறது. சீனர்களின் இராசி மண்டலத்தில் பூனை இடம்பெறாமல் போனதற்கு இதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆக, மலாய், சீன கலாச்சாரத்தில் இருக்கின்ற நாட்டுப்புறக் கதைகளில் ஒரேமாதிரியான தந்திரக் கதைகள் இருப்பது சுவாரஸ்யமானதாக இருக்கின்றது.அக்கதைகளில் வரக்கூடிய விலங்குகளும் அதன் நோக்கமும் வேறாக இருந்தாலும் கதைக்களம் ஒரே மாதிரியாக இருக்கின்றது.குறிப்பாக நாட்டுப்புறக் கதைகளின் கட்டமைப்பும் அதன் உள்ளடக்கமும் உலகளாவிய தன்மையைக் காட்டுகின்றன.

அடிப்படையில் நாட்டுப்புறக் கதைகள் ஒரு சமூகத்தின் கலாச்சார பிரதிபலிப்பாக இருக்கிறது.குறிப்பாக மலாய், சீன நாட்டுப்புறக் கதைகள் தத்தம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டுக்குமான கலாச்சார ஒற்றுமை வேற்றுமைகளை அறிய முடிகிறது. மலாய் கதையில் வரக்கூடிய சாங் கன்ச்சிலின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும் கவலையற்றதாகவும் தோன்றுகிறது. அது செய்யக்கூடிய தந்திரங்கள் வேடிக்கையானவை. அதில் பெரும் தீமைகள் இல்லை. ஒரு சிறிய விலங்கு உயிர்வாழ போராட்டம் நடத்த வேண்டியுள்ளதால் அது தப்பிப்பிழைக்க பெரிய எதிரிகளை தந்திரமாக ஏமாற்ற வேண்டியுள்ளது.விலங்குகளின் ராஜ்ஜியமான காட்டில் சாங் கன்ச்சில் ஒரு குறும்புத்தனத்துடன் திரிகிறது.மலாய் நாட்டுப்புறக் கதைகளில் ‘சாங் கன்ச்சில்’ சிறந்த வகையாக எடுத்துக்கொள்ளலாம்.

சீன நாட்டுப்புறக் கதையில் வரக்கூடிய முயலும் எலியும் ஒரு பெரிய நோக்கத்துடன் தந்திரமாக செயல்படுகின்றன. சீன ராசி மண்டலத்தில் முதலிடத்தை அடைவதற்காகவும் தன் நிலையை தற்காத்துக் கொள்வதற்காகவும் தன் அதிகாரத்தை பிறரிடமிருந்து அபகரிக்கவும் தந்திரத்தை கையாளுகின்றன. ஆனாலும் இந்தக் கதைகள் சீன நிலப்பரப்பில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் அதிகாரப் போராட்டங்களுடன் இணைந்து கூறப்பட்டதாகக் கூறப்படுகின்றன.  அடிப்படையில் சீன நாடுப்புற கதைகள் மனிதன் இயற்கையுடன் போராடுவதைக் காட்டிலும்  நாகரிக மனித சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டுபோராடுவது பற்றி அதிகம் கவனப்படுத்துகின்றது. எனவேதான், சீன தந்திரக் கதைகளைமனிதர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக்கொள்ள எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை விலங்குகளின் வழி பிரதிபலிக்கிறது.

முடிவாக, மலாய் சீன இனங்களின் தந்திரக்கதைகளின் வழி, அவ்வினங்களின் பண்பாடுகளையும் வாழ்வியல் பிடிமானங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.மேலும் பண்பாட்டு கலப்பும் இக்கதைகளின் வழி அறியக்கிடைக்கின்றன. இந்திய துணைகண்டத்தில் இருந்து பரவிய பெளத்த இந்து மதங்களின் போதனைகளோடு இஸ்லாமிய கோட்பாடுகளும் இந்த எளிய கதைகளின் உள்ளீடாகின்றன. அறம் பிறழா, தந்திரங்களின் வழி வாழ்வாதார சிக்கல்களில் இருந்து தப்பிக்கும் கலையை இக்கதைகள் நகைச்சுவையாக சொல்லிச்செல்கின்றன. அதே நேரம் வலிமையை விட அறிவுக்கூர்மையை முன்னிறுத்தும் சமூகங்களாக அவை திகழ்கின்றன என்பதற்கு இக்கதைகளை ஆதாரமாக்கலாம்.

மேற்கோள்கள்

  • See Hoon Peow : 2015, Malaysian Chinese Stories of Hard Work: Folklore and Chinese Work Values, by (Vol. 11, No. 2 (2015), 1–16)
  • See Hoon Peow : 2016, A COMPARATIVE STUDY OF MALAY AND CHINESE TRICKSTER TALES: SANG KANCIL, THE RABBIT AND THE RAT1Penerbit Universiti Sains Malaysia
  • https://en.wikipedia.org/wiki/Aesop%27s_Fables

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...