மலைக்காடு: இன்னொரு முகம்

index‘மலைக்காடு’ சீ. முத்துசாமியின் புதிய நாவல். தனது வழக்கமான களமான தோட்டப்புறத்தை மையப்படுத்தி இந்நாவலை அவர் எழுதியிருந்தாலும் அதன் பின்னணியில் தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். மலைக்காடு நாவல் மலேசியாவின் 1940ஆம் ஆண்டு காலகட்டத்தைத் தளமாகக் கொண்டது. புக்கிட் செம்பிலான் என்னும் தோட்டத்தை மையமாகக் கொண்டு சொல்லப்படும் இக்கதை, 1940களின் தோட்டப்புற வாழ்வுடன், மலேசிய வரலாற்றில் இன்றும் பதற்றத்தோடு பேசப்படும் கம்யூனிச போராட்டங்களையும் பேசுகிறது.

மலேசிய வரலாற்றில் மிகவும் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டமாக 1940கள் இருந்தன. இரண்டாம் உலகப் போர்,  ஜப்பானிய ஆக்கிரமிப்பு, மூலப்பொருள் விலை வீழ்ச்சி, கம்யூனிச சித்தாந்த பரவல், தோட்டத் தொழிலாளர் சங்கங்களின் எழுச்சி, மலாய்ப் போராளிகளின் சுதந்திரப் போராட்ட முழக்கங்கள், என அதிகாரத்தில் இருந்த பிரிட்டி‌‌ஷ் அரசு பலமுனை அழுத்தங்களை சந்தித்துக்கொண்டிருந்த காலம். தோட்டப்புற பாட்டாளிகளாகவும், தொழில் முனைவராகவும், சிறு வணிகர்களாகவும் மலாயாவில் குடியேறிய, குடியேற்றப்பட்ட தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழர்களின் அரசியல் வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது அக்காலகட்டத்தில்தான். அரசியல் அமைப்புகளாகவும் போராட்ட அமைப்புகளாகவும் பல இயக்கங்கள் தோன்றின. மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா) போன்ற அரசியல் கட்சிகளும் தோட்டக் தொழிலாளர் சங்கங்களும் இக்காலகட்டத்தில்தான்  தோன்றின.

ஓர் அடிமைப்பட்ட நாட்டில் இருந்து தன் ஆளுமைக்கு கீழ் இருக்கும் மற்றொரு அடிமை பூமிக்கு அடிமைத் தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியத் தோட்ட தொழிலாளர்களின் அரசியல் விழிப்புணர்வின் ஊற்றுக்கண்ணாக இருந்த முக்கிய நிகழ்வு அதே காலகட்டத்தில் உக்கிரமாக வளர்ந்து வந்த இந்திய சுதந்திரப் போராட்டமாகும். இந்திய சுதந்திர போராட்டத்தின் இரண்டு முகங்களாக இருந்த காந்தியின் அகிம்சை வழிப் போராட்டமும் சுபா‌‌ஷ் சந்திரபோஸின் ஆயுதப் போராட்டமும், மலாயா இந்தியர்களை அரசியல் ஆர்வலர்களாகவும், களப்பணியாளர்களாகவும் மாற்றியது. காந்தியின் போராட்டத்திற்கு மலாயா இந்திய மக்கள் காட்டிய ஆதரவில் சற்றும் குறையாத அளவை சுபா‌ஷுக்கும் அவர்கள் கொடுத்துள்ளது முரண். ஆட்சியாளர்கள் மேல் மக்கள் கொண்ட நீண்டகால வெறுப்பின் அடையாளமாக இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சுபா ஷ் சந்திரபோஸ்  இந்திய தேசிய ராணுவத்தை நிர்மாணிக்க மலாயா வந்ததும் உரை நிகழ்த்தியதும், படை அமைத்ததும், பணம் வசூல் செய்ததும் மலாயா இந்தியர்களின் ஒட்டுமொத்த எழுச்சிக்கு வித்திட்டது. ஐஎன்ஏ படையின் முக்கிய பொறுப்புகளில் கல்வி கற்ற நகர்புற இந்தியர்கள்தான் அதிகம் நியமிக்கப்பட்டனர்.  ஆனாலும் தோட்டப்புற பாட்டாளி மக்களின் மனதில் போராட்டப் பொறியை ஐஎன்ஏ தோற்றுவித்தது. 1948ஆம் ஆண்டு சுபா ஷ் சந்திர போஸின் அகால மரணத்திற்குப் பிறகு அப்படையில் பணியாற்றிய முக்கிய பொறுப்பாளர்கள் சிலரும் தொண்டர்களும் தங்களை மக்கள் சேவையில் இணைத்துக்கொண்டு ‘தொண்டர் படை’ என்ற அமைப்பின் வழி செயல்பட்டனர். தொண்டர் படையின் செயல்பாடுகள் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் இருந்தது. அக்காலகட்டத்தில் சமூகச் சீர்கேட்டு எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள்கைகளோடு ஒத்துபோகும் அமைப்பாக கம்யூனிஸ இயக்கம் இருந்தது. ஆகவே ஆங்கிலேய முதலாளிகள் தோட்டப்புறங்களில் இருந்து தொண்டர் படையை முற்றாக ஒழிக்க முடிவெடுத்து புதிய சட்டங்களின் வழி அவ்வமைப்பைத் தடைசெய்தனர்.

மலைக்காடு நாவல் இந்த சிக்கலான காலட்டத்தின் ஊடே பயணிக்கிறது. 1940களில் நாட்டில் நடந்த முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு அக்காலகட்ட தோட்ட மக்களின் சமூகவாழ்வைச் சித்திரிக்கும் நாவல் மலைக்காடு. ஆகவே இந்நாவலில் கதாமாந்தர்களுடன், எஸ்.ஏ.சாமி,  எஸ்.ஏ.கணபதி, காட்டு பெருமாள் போன்ற வரலாற்று மனிதர்களும் கதாபாத்திரங்களாக வருகின்றனர். இந்நாவல் இரண்டு கதைகளைக் கொண்டது. முதலாவது கதை புக்கிட் செம்பிலான் என்னும் ரப்பர் தோட்டமும் அது சார்ந்த வாழ்க்கையையும் சித்தரிக்கிறது. இரண்டாவது கதை காப்ரல் மணியம் பற்றியது. இவ்விரு கதைகளும் ஒரே கதையாக இணைகின்றன.

மாரியும் அவன் மகன் உண்ணாமலையும் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்கு வந்து காடுகளை அழித்து இங்கேயே மாண்டுபோன முதல் தலைமுறையினர். அவர்களது கதை பின்னர் கூறப்படும் மூன்றாம் தலைமுறையின் கதைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. குட்டியப்பன் தோட்டப் பாட்டாளி சமூகத்தின் மூன்றாம் தலைமுறை நாயகன். உண்ணாமலையின் மகள் வழி பேரன். குட்டியப்பன் இந்நாவலின் சாகச நாயகன். அவன் போராட்ட குணங்கள் கொண்டவன் என்பதோடு அநீதிக்கு எதிராக துணிந்து குரல்கொடுக்கத் தயங்காதவன். அவனது வீரதீரச் செயல்கள் கதையின் தொடக்கத்தில் விரிவாக சொல்லப்படுகின்றன. குட்டியப்பன் தொண்டர் படையின் இளைஞர் பிரிவுத் தலைவன் என்பதற்கு வலுச் சேர்க்கும் விதமாக அவனது செயல்பாடுகள் உள்ளன.

தோட்டத்தில் ஆங்கிலேய முதலாளிகளும் கருப்புத் துரைகள் என்று அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தோட்ட மேலாளர்களும் மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனிக்க மறுக்கும்போது குட்டியப்பன் தன் நண்பர்களுடன் இணைந்து தோட்ட நிர்வாகி வீட்டுக்குச் செல்லும் குடிநீர் லாரியை வழிமறித்து தோட்டத்திற்கு கொண்டு வருவதில் இருந்து அவன் தோட்ட நிர்வாகிகளுக்கு முக்கிய எதிரியாகிறான். பின்னர் ஒருநாள் தோட்டத்தில் இருந்து காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் இரண்டு விடலைகளைத் தேடிக் கொண்டு மலைக்காட்டுக்கு தன் நண்பனோடு சென்றவன் காணாமல் போய்விடுகிறான். குட்டியப்பனின் தொலைதலும் தேடலுமே இந்நாவலின் பிரதான கதையாக வளர்கின்றது. குட்டியப்பனின் திடீர் மறைவால் அவன் தந்தை அம்மா வீடு கோபால், அவன் தாய் முத்தாயி, அவள் தோழி கண்ணம்மா, அவனைக் காட்டுக்கு அனுப்பிய தமிழர் சங்க தலைவர் இங்லீஸ் மணியம் ஆகியோர் அடையும் மனக்குழப்பங்களும் பதற்றங்களும் அவர்கள் வாழ்வில் மறைந்து கிடந்த ரகசியங்களும் இந்நாவல் வாசிப்பை சுவையாக்குகின்றன.  கூடுதலாக குட்டியப்பனின் காதலி பவானியம்மாள், தனித்து வாழும் தாய் லச்சுமி, லச்சுமியோடு உறவு வைத்திருக்கும் கிரு‌‌ஷ்ணன், பெரிய தண்டல், போன்ற பல பாத்திரங்களும், குடும்ப உறுப்பினர்களாக வர்ணிக்கப்படும் நாய்களும், மலைக்காட்டு முனியும் இப்புனைவை அழுத்தமான சமூக வரலாற்று நாவலாக்குகின்றது.

காட்டில் காணாமல் போன குட்டியப்பனைத் தேடிக் கண்டுபிடிக்க பணிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியான காப்ரல் மணியம் இந்நாவலில் தனித்து உலவுகிறார். அவரது பூர்வீக வாழ்க்கை தோட்டம் சாராத ஆனால் தமிழர்கள் அதிகம் புழங்கிய ரயில் நிலையத்துறை சார்ந்தது. காப்ரல் மணியத்தின் மூலம் அதே காலகட்டத்தில் மலாயாத் தமிழர்கள் வாழ்ந்த தோட்டம் சாராத இன்னொரு வாழ்க்கையை அடையாளப்படுத்த முடிகிறது. காப்ரல் மணியத்தின் குடும்ப வாழ்க்கையின்  சிக்கல்களும், ரகசிய வாழ்க்கையின் தர்க்கங்களும், அவற்றை சமன் செய்ய அவரது முன்னெடுப்புகளும் தனிக் கதையாக விரிகின்றன. குட்டியப்பனைத் தேடும் தனது கடமையில் இருந்து அவர் விலகாவிட்டாலும் அரசின் கொள்கையை விட்டு அவர் வெகுதூரம் விலகிவிடுகிறார். குட்டியப்பனை தேடிய அவரது பயணம் அரசுக்கு எதிர்திசையில் அவரைப் பயணிக்க வைக்கிறது. அவரது விலகலுக்கு உந்துதலாக இருந்தது எது என்பதில் இருந்து இந்நாவலின் அரசியல் சார்பை புரிந்துகொள்ள முடியும். காப்ரல் மணியத்தின் ஆதர்ச நாயகனாக வரும் எஸ். ஏ கணபதியின் ஆதிக்கம் இந்நாவலின் அரசியல் சார்பை முடிவுசெய்கிறது.

இந்நாவல் வாசிப்புக்கு சற்றே கூடுதல் கவனம் தேவையாகிறது. நாவலின் பிரதான கதைபோக்கில் இருந்து எந்த நேரத்திலும் சட்டென்று திறந்து கொண்டு புதிய கதையொன்று கிளையாக வளர்கிறது. இது சீ.முத்துசாமியின் எழுத்துமுறை என்பதை அறிந்த வாசகர்கள் மலைக்காட்டில் மறைந்தும் வெளிப்பட்டும் தெரியும் எல்லா கதைகளையும் அள்ளி எடுத்து புதிய அனுபவம் பெறலாம்.

நாவலில் ஆங்காங்கே துண்டு துண்டாக புகுந்து விரிவடையும் கதைகள் பல. இங்லீஸ் மணியத்தின் கதை,  டிவுரசர் பாலையாவின் கதை,  குதிரைக்காரன் குருசாமியின் கதை, கோயிலில் ஓவியம் வரைந்த மர்ம மனிதனின் கதை, வேட்டைக்காரர் சங்கிலியின் கடைசிப் பன்றி வேட்டை அனுபவக்கதை, வர்கீஸ் பொன்னம்பலத்தின் கதை, லச்சுமியின் கதை, பெரிய தண்டலின் கதை, நொண்டி கிருஷ்ணன் கதை, மலைமேடு முனியின் கதை, சாமியாடியின் கதை, காப்ரல் மணியத்தின் கதை, மணியத்தின் அப்பா திருச்சங்கோடு ராமசாமியின் கதை, முனியம்மா கிழவியின் கதை,  கண்ணம்மாவின் கதை, அவள் கணவன் கேப்டன் கனபதி சுதேந்திரனின் கதை, குட்டியின் காதலி பவானியின் கதை, சுவான் லீயின் கதை என மலைக்காட்டில் பல கதைகள் உயிர்ப்புடன் பின்னப்பட்டுள்ளன. இத்துண்டுக் கதையாடல்கள் எல்லாம் சேர்ந்து மொத்தமாக மலைக்காடாக வளர்ந்துள்ளது. வெளித்தோற்றத்தில் அவை ஒன்றை ஒன்று சாராதது என்றாலும் ஒரு வனத்தில் வளர்ந்த பல்வேறு மரங்களும் சேர்ந்து அந்த வனத்தை உருவாக்குவது போல் இக்கதைகள் மலைக்காட்டைச் செறிவாக்கியுள்ளன. இந்தக் கதைகளின் வாயிலாக, மனித மனங்களின் அபத்தங்களையும், ஆணவத்தையும்,  பாவனைகளையும் ரகசிய மன இடுக்குகளுக்குள் பதுங்கிக் கிடக்கும் வன்மங்களையும் இந்நாவல் தொட்டுச் செல்கிறது. உதாரணத்திற்கு தொடக்கத்தில் மிக அமைதியான குணத்துடன் அறிமுகமாகும் அம்மாவூடு கோபாலின் மன இருட்டுகளும் அதில் பதுங்கிக் கிடக்கும் கோரமுகங்களும் அச்சமூட்டுபவை.

இவற்றோடு இந்நாவலில் மொத்தமாக பதினோரு நாய்களின் கதைகளும் வெவ்வேறு சூழாலில் சித்திரிக்கப்படுகின்றன. சீசர், மணி, டைகர், பீட்டர், முனியின் பின்னே செல்லும் பைரவர், பிச்சாண்டி, வெள்ளச்சி என்று பல பெயர்களில் அவை வருகின்றன. மலைக்காட்டில் நாய்களின் இருப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. சீ.முத்துசாமி எல்லா நாய்களையும் உயர்திணைச் சொற்களினாலேயே விவரிக்கிறார். நாய்களைப் பற்றிய விவரிப்புகள், சுயநலத்தின் மேல் நிறுவப்படும் மனித அன்புக்கு விடுக்கப்படும் சவாலாகவும், எதிர்பார்பில்லா அன்புக்கும் காருண்யத்துக்குமான எடுத்துக்காட்டாகவும், அடிமை வாழ்வின் குறியீடாகவும் பல இடங்களில் வெளிப்படுகின்றன. ‘நான்கு சுவர்களுக்குள் சில ஆண்டுகள் பாதுகாப்பாய் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்தவனை யாரோவால், ஏதேதோ ஆசை வார்த்தைகள் சொல்லித் தந்திரமாக அழைத்து வரப்பட்டு, அன்று புதிதாக நடுரோட்டில் கைவிடப்பட்டிருப்பவன் என்பது புரிந்தது’ என பிச்சாண்டி என்று பெயரிடப்பட்ட நாயைப் பற்றிய விவரிப்பு, தர்மபுரி என்னும் சொந்த ஊரில் இருந்து தண்டலின் ஏமாற்று பேச்சில் மதி மயங்கி, பிழைப்புத் தேடி மலாயாவுக்கு கப்பல் ஏறி வந்து புக்கிட் செம்பிலான் காட்டில் அடைக்கப்பட்ட மாரி, உண்ணாமலை வாழ்க்கையோடு ஒத்துபோகின்றது.

காப்ரல் மணியம் தன் குடும்ப வாழ்க்கையில் தோல்வியுற்றவர். குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால், அவரின் மனைவி வேறு ஆடவனுடன் சென்றுவிட்ட அவமானமும் அலைக்கழிப்பும் அவரைத் துரத்துகின்றன. அவருக்குத் துணையாக இருப்பது நாய்களின் அருகாமையே. போலீஸ் பணியில் ஈடுபடும் டைகர் என்ற மோப்ப நாய், வீட்டில் வளரும் ஜிம்மி, மேலும் தெருவில் சுற்றித்திரியும் பல நாய்களையும் தேடிச்சென்று உணவளிக்கும் பழக்கத்தை அவர் கொண்டுள்ளார். அவரது இப்பழக்கம் அவரது அப்பா ராமசாமியிடம் இருந்து வந்ததாகும். அவர் தெருநாய்களின் நலனுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து பல சூழல்களில் கலகங்களைச் செய்தவர். காப்ரல் மணியம் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆங்கில அரசுடன் பணியில் இருப்பதை வெறுக்கிறார். அப்பாவி மக்களுக்கெதிரான போலீஸ் வன்முறைகளில் தானும் பங்குபெரும் சூழல்களை நினைத்து மனம் கொதிக்கிறார். அவர் மனம் மக்களின் குரலுக்குச் செவி கொடுக்கிறது. தான் நிற்க வேண்டிய அறம் எது என்பதை முடிவுசெய்து ரகசியமாக செயலாற்றுகிறார். அதன் காரணமாகவே தன்னை கம்யூனிச சித்தாந்தத்துக்கு ஒப்புகொடுத்து அரசுக்கு எதிரான சதிகாரனாக மாறுகிறார்.  காப்ரல் மணியத்தின் இந்த மனமாற்றத்தை அவர் தெருநாய்களின் மேல் காட்டும் வாஞ்சையின் வழிதான் புரிந்துகொள்ள முடியும். திக்கற்று நிற்கும் உயிர்களின் மேல் காட்டும் பிரதிபலன்பாரா பரிவின் வழி தன் மனத்தின் ஆழத்தில் தேங்கிக்கிடக்கும் வலியை அவர் ஆற்றிக்கொள்ள முயல்கிறார். அதன் நீட்சியாகவே அப்பாவி மக்களின் துயர்களின் மீதான அவரின் கவனம் விழுகிறது. தான் குடும்ப வாழ்க்கைக்குப் பயனற்றவன் என்கிற அவச்சொல்லின் சூடு தாங்காமல் தனக்கான பயன் ஒன்றை அவரே உருவாக்கும் முகமாகவே அவரின் மலாயா கணபதி மீதான ஈர்ப்பும் கம்யூனிச ஆதரவு செயல்பாடுகளும் அமைகின்றன.

ஆயினும் கம்யூனிச ரகசிய ஆதரவாளனாக இருக்கும் காப்ரல் மணியத்துக்கும் மற்றொரு கம்யூனிஸ்டு ரகசிய உளவாளியான சுவான் லீக்கும் இடையிலான சந்திப்பும் உரையாடல்களும் அழுத்தமின்றி அமைந்திருக்கிறன. ரகசியங்கள் எளிதாக உடைபடுகின்றன. அச்சந்திப்பும் உரையாடல்கலும் கனவு உலக காட்சிகள்போல் மிதந்தபடி உள்ளன. சுவான் லீ வளர்க்கும் அபூர்வ மீன், கடைக்கு பின்புறம் வழிபாட்டுக்குரியதாக இருக்கும் புற்று, அதில் வாழ்வதாக சுவான் லீ கூறும் நாகம் ஆகியன மாயத்தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஆனால் கதையோட்டத்திற்கு அவை பயன்படவில்லை.

பொதுவாக மலைக்காடு நாவலில் ஆங்காங்கே சில கவனக்குறைகள் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு இங்லீஸ் மணியத்தின் தலைமைத் பொறுப்பு, தமிழர் சங்கத் தலைவர் என்று தொடக்கத்தில் கூறப்பட்டாலும் பின்னர் பல இடங்களில் கோயில் தலைவர் என்றும் யூனியன் தலைவர் என்றும் மாறி மாறி வருகிறது. இந்நாவலில் ஓரிடத்தில் ‘வழக்கமாக இரவு நேரக் கித்தாக்காட்டின் அமைதியில் கண்மூடி மெளனித்துக் கிடக்கும் கோட்டானொன்று திடுக்கிட்டு விழித்து கூச்சலிட்டு அவர்களின் தலைக்கு மேல் பறந்தது..’ என்று இரவு நேரக்காட்சி ஒன்று சித்திரிக்கப்படுகிறது. அதேபோல் மற்றோரு இடத்தில் பகல் நேரத்தில் ‘உணவு தேடிப் பெரும் ஓசையுடன் நூற்றுக் கணக்கான பழந்தின்னி வெளவால் கூட்டமொன்று மேற்கு திசை நோக்கி பறந்தது’ என்று முரணாக காட்சிப்படுத்தப்படுகின்றது. கோட்டானும் வெளவாலும் பகலில் தூங்கி இரவில் உணவு தேடி வெளியே வரும் விலங்கினங்கள். பகலில் அவற்றுக்கு பார்வை கிடையாது. ஆனால் இரவில் கூரிய பார்வையுடன் வேட்டையாடும் விலங்குகள். ஆகவே இவை பிழையான சித்திரிப்புகள் என்றாலும் பொருட்படுத்தத்தக்க விடயங்கள் அல்ல. வாசகன் அவற்றை வெறுமனே கடந்து செல்வது இயல்பானது. ஆனால் இந்நாவலில் எளிதில் கடந்து செல்ல முடியாத தடையாக இருப்பது அதில் மறைந்து கிடக்கும் மேட்டிமை மனப்பான்மையாகும். இந்நாவல் வரலாற்றின் பெருமிதத்தில் நின்று தன் கதையாடலை நிகழ்த்துகிறது. அதில் சாதிப் பெருமிதமும் சேர்ந்து வந்துள்ளது ஆபத்தானது.

சஞ்சிக்கூலிகளாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மக்களின் வாழ்வாதார சிக்கல்களையும் அரசியல் போராட்டங்களையும் சமரசமின்றி விவரிக்க முயலும் இந்நாவலின் இன்னொரு முகமாக, நிஜத்தில் போராட்டங்களை முன்னெடுத்த வரலாற்று மனிதர்களை நாயக வழிபாட்டுக்குரியவர்களாக காட்டுவதோடு அவர்களின் சாதிய அடையாளத்தையும் பெருமைக்குரிய அடையாளமாக முன்வைக்கிறது. இது சீ.முத்துசாமியின் திட்டமிட்ட செயல் என்று கூறுவதற்கில்லை என்றாலும்  அப்படியான வாசிப்புக்கு இந்நாவலில் போதுமான சாத்தியங்கள் உள்ளன. அது ஆபத்தானது.

இந்நாவலின் நாயகன் குட்டியப்பன் உண்மையில் தொழிற்சங்க போராட்டவாதியும் ஆங்கில அரசால் அநீதியாக தூக்கிலிடப்பட்டவருமான  எஸ்.ஏ (மலாயா)கணபதியின் நகல் என்பதை அவர்களுக்குள்ளான பல ஒற்றுமைகளின் வழி அறியலாம். சீ. முத்துசாமி தன் கதை நாயகனை நிஜத்தில் வாழ்ந்து மறைந்த எஸ்.ஏ கணபதியின் சாயலை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறார். எஸ்.ஏ கணபதி தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னிலை வகித்தவர். இந்நாவலின் குட்டியப்பன் ‘தொண்டர் படை’யின் வழி போராட்டங்களில் ஈடுபடுகிறான்.  மலாயா கணபதியின் மேல் ஏற்பட்ட அதீத ஈர்ப்பால் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபடும் காப்ரல் மணியம் கதையின் இறுதியில் குட்டியப்பனை மலாயா கணபதியாகவே பார்க்கிறார். உடல் அமைப்பு விவரிப்புகள் கூட ஒத்துவருகின்றன.

கூடுதலாக கதையின் தொடக்கத்தில் மலாய் முரடனோடு சண்டையிடும் குட்டியப்பன் ‘கடல்ல கொள்ள அடிச்சி திருட்டு பொழப்பு நடத்தன பூகீஸ்கார கூட்டந்தானடா நீ? தோ வராண்டா தேவன்… ஒங்க பாட்டனுக்கு பாட்டண்டா? பொறக்கும்போதே உருட்டுக் கட்டையும் வீச்சருவாளும் கைல புடிச்சிக்கிட்டு பொறந்த வம்சம்டா என்னோட வம்சம்…. தேவண்டா…. தோ வர்ராண்டா தேவன்…..” என்று சீறிக்கொண்டு சென்று சண்டையிடுகிறான். குட்டியப்பனின் காதலி பவானியம்மாள் தன்னை ஒரு பரச்சி என்பதை உணர்ந்து, தன்னைத் துணிந்து காதலிக்க முன்வந்த குட்டியப்பனை கடவுளாக உயர்ந்த இடத்தில் வைத்து மானசீகமாக வணங்கி நெக்குருகுகிறாள்.

இதில் வெளிப்படும் சாதி வன்மமும் பெருமிதமும் குட்டியப்பனுக்கானது மட்டும் அல்ல அது எஸ்.ஏ கணபதிக்கும் சேர வேண்டியதே என்பதை உணர்த்தும் விதமாக பக்கம் 142ல் எஸ். ஏ கணபதியின் பூர்வீகம் சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘அன்று தூக்கிலிடப்பட்ட எஸ்.ஏ. கணபதி என்ற, தஞ்சாவூர் தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912 ஆம் ஆண்டு ஆறுமுகத் தேவர் வைரம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த அவரை, அந்தத் தலைவனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார் காப்ரல் மணியம்..’ என்னும் வரிகளின் வழி குட்டியப்பனுக்கும் எஸ்.ஏ கணபதிக்கும் இருக்கும் சாதிய ஒற்றுமை விளக்கப்படுகின்றது. ஆகவே எஸ்.ஏ கணபதி என்னும் வரலாற்று மனிதரின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் மலைக்காட்டு குட்டியப்பனின் வழி குறிப்பிட்ட சாதி பெருமிதத்துக்குள் அடக்கிவிடும் ஆபத்தான தோற்றத்தை இது கொடுக்கிறது. இது மிகப்பெரிய நெருடலை உருவாக்குகிறது.

நாட்டின் பூர்வீக மலாய்காரர்களை மலாயாவில் குடியேறிய பூகீஸ்காரர்கள் என்றும் கடல் கொள்ளையர்கள் என்றும் சாடும் தமிழன், கடும் பஞ்சத்தில் அடிபட்டு பல அவலங்களுக்குப் பின் மலாயாவில் சஞ்சிக்கூலிகளாக குடியேறி மூன்று தலைமுறை கடந்தும் தன்னை சாதியின் அடிப்படையிலேயே பிரித்து உணர்வதும் தன் சாதிப் பெருமையை தனது சிறப்புத் தகுதியாக முன்னிறுத்திப் பேசுவதும் எத்தனை முரணானது. கம்யூனிஸ்டு சுவான் லீயின் தாய் தன் மகனிடம் கூறும் “மனுசாலு எல்லாம் ஒண்ணுதான்டா. தோலு நெறந்தாண்டா வேற” என்னும் வரிகள் குட்டியப்பன் போன்ற மனிதர்களின்  காதுகளுக்கு எட்டுவதே இல்லை. ஆனால் இந்தப் போலி பெருமிதங்களை வரலாற்றில் வாழும் ஆளுமைகளின் தலையிலும் ஏற்றுவது அவர்களுக்கு ஏற்படுத்தும் அவமரியாதையாகும்.

 

6 comments for “மலைக்காடு: இன்னொரு முகம்

 1. Selva Ramasami
  June 30, 2019 at 4:47 pm

  தன்னை சாதியின் அடிப்படையிலேயே பிரித்து உணர்வதும் தன் சாதிப் பெருமையை தனது சிறப்புத் தகுதியாக முன்னிறுத்திப் பேசுவதும் எத்தனை முரணானது.***

  எழபதாம் ஆண்டுகளின் இறுதியில் கூட, மின் வசதி, போக்குவரத்து வசதியுடன் முன்னேறிய தோட்டங்களில் கூட இந்த சாதிய பெருமை மிக நிதர்சனமான உண்மை.
  நாவலில் வரும் பாத்திரம் அந்த பெருமையை பேசியது ஆச்சரியம் இல்லை. நாவலின் களமும் காலமும் இதை அனுமதிக்கிறது என்பது என் கருத்து.

 2. June 30, 2019 at 10:38 pm

  அ.பாண்டியனின் ‘மலைக்காடு’ விமர்சனத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள சாதிப்பெருமிதம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

  1. சாதியைப் பெயருடன் சேர்த்து எழுதுவது அன்றைய வழக்கம். ஆகவே நாவலில் மலாயா கணபதியின் தந்தைபெயரை வரலாற்றுக்காகக் குறிப்பிடும்போது அவருடைய அன்றைய பெயரிலேயே குறிப்பிடுவதுதான் சரி. சமீபத்தில் ‘மலாயா மான்மியம்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். ச.முத்துத்தம்பிள்ளை 1930களில் வெளியிட்டது. நூற்றுக்குமேற்பட்ட அன்றைய மலாயாத் தமிழர்களைக் குறித்த குறிப்புகொண்ட அந்த நூலில் அனேகமாக அனைவர் பெயரிலுமே சாதிப்பின்னொட்டு இருக்கிறது. உவே சாமிநாதய்யர் என்றுதான் இன்றும் குறிப்பிடவேண்டும். அதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தல் தகாது.

  2. புனைவில் ‘சீறிக்கொண்டு’ சண்டையிடும் இடத்தில் ஆக்ரோஷத்தில் தன்னிலை மறந்தவன் குட்டியப்பன். அப்போது அவன் பேசுபவைகள் அவன் அறிவின் எல்லைகளுக்கு வெளிப்பட்டவை என்பதை விமர்சகர் மனதிற்கொள்ளவேண்டும். ஒருவர் அவராக இருக்கும்போது பேசுவதும் செய்வதும்தான் கணக்கேயொழிய ஆத்திரத்திலோ மற்ற எதிர்மறை உணர்ச்சிகளாலோ ஆட்கொள்ளப்பட்டிருக்கும்போது பேசுபவை அல்ல. அந்த இடத்தில் வாசகர் சொற்களைத்தாண்டித்தான் பார்க்கவேண்டும். அந்தச் சுதந்திரம் இல்லாவிடில் புனைவாசிரியர்கள் எது சரி எது தவறு என்று வார்த்தைக்குவார்த்தை யோசித்துத்தான் எழுதவேண்டிவரும். பிறகு அது உயிருள்ள புனைவாக இராது.

  3. ஒருவர் சாதிப்பெருமை பேசிவிட்டார் என்பதாலேயே அவர்க்கு அல்லது அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாது. ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சி, கேவலம் கோமாமிசம் தின்னும் ஜார்ஜ் பஞ்சமனுடைய ஆட்சியை ஏற்கமுடியாது என்று தன்னுடைய கடிதத்தில் எழுதிவைத்திருந்ததாலும் அடியில் வாஞ்சி ஐயர் என்று கையொப்பமிட்டிருந்ததாலும் இன்றும் சிலர் வாஞ்சியின் கொலை தேசபக்திக் கணக்கில்வராது, அது சாதி மேட்டிமைத்தனத்தினால் செய்யப்பட்டது என்று வாதிடுவதைப் பார்க்கமுடிகிறது. இது பிழையாகும். எத்தனையோ ஐயர்கள் வெள்ளைக்காரனுக்கு அடிமையானபோது வாஞ்சி ஐயர் அவனை அகற்றமுயன்றான் என்பதுதான் முக்கியம். அதுபோலவேதான் மலாயா கணபதி விஷயமும்.

  4. ‘மலைக்காடு’ எந்த இடத்திலும் போலிப்பெருமிதங்களை வரலாற்று ஆளுமைகளின்மேல் ஏற்றுவதாக வாசிக்க இடமில்லை. அப்படி வாசிப்பவர் ஒன்று வரலாற்றை இன்றைய கண்ணோட்டத்தில் பிழையாகப் பார்க்கிறார் அல்லது விஷமத்தனமான வியாக்கியானம் அளிக்கிறார் எனலாம். மேலும் ‘இன்னொரு முகம்’ என்று புனைவாசிரியரின் இன்னொரு முகம் என்று புரிந்துகொள்ள இடம்விட்டு அளிக்கப்பட்டிருக்கும் கட்டுரைத்தலைப்பும் தவிர்க்கப்படவேண்டியது.

 3. ஸ்ரீவிஜி
  July 1, 2019 at 4:15 pm

  முடிந்த வல்லின இலக்கிய நிகழ்வின்போது, இந்நாவலுக்கு எழுத்தாளர் இமையம் வைத்த விமர்சனத்தை நான் மறவேன். அவரின் விமர்சனத்தில் நாவலில் வரும் சில முரண்களை எடுத்தியம்பி பல கேள்விகளை மலேசியர்களின் முன் வைத்தார். அதாகப்பட்டது, தமிழ்நாட்டில் கூட இல்லாத சில சாதிப்பாகுபாடு சொல்லாடல்கள் இங்கே வழக்கத்திற்கு மாறாக இருப்பதை இக்கதையின் வழி சுட்டிக்காட்டினார். அது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.
  பாண்டியன் சார் அவர்களின் விமர்சனம் நன்று.

 4. July 3, 2019 at 5:37 pm

  நண்பர் சிவானந்தம் நீலகண்டனுக்கு வணக்கம்.

  தங்கள் எதிர்வினையில் குறிப்பிடப்படும் வரலாற்று தகவல்களோடு நான் முழுதும் ஒத்துபோகிறேன். தமிழர்களின் வரலாற்றில் சாதியின் இடம் எதுவென்று நான் நன்கு அறிவேன். இனக்குழுவின் அடையாளப்பெயராகவும் சமூக அடுக்குகளைக் கட்டியமைக்கும் கருவியாகவும் அது வரலாற்றில் பயன்பட்டுள்ளதை மறுக்க முடியாது. மலேசிய தமிழர்களின் வாழ்வில் தோட்டபுறங்களில் மட்டுமல்லாது நகர்புறங்களிலும் சாதியின் இருப்பு உறுதியாகவே இருந்துள்ளது. இன்றைய சாதி சங்க வரலாறுகளே அதற்கான ஆதாரங்கள். மலேசிய பின்புலத்தில் சாதியின் இருப்பு குறித்த தெளிவு இல்லாமல் யாரும் உருப்படியான ஒரு பத்தி கூட எழுதிவிட முடியாது. ஆகவே ஒரு புனைவில் சமூகத்தில் நிலைபெற்றிருந்த சாதிய உணர்வை ஒரு படைப்பாளி புறக்கணிப்பதில் அர்த்தம் இல்லை. அது படைப்பாளியின் எழுத்து சுதந்திரத்துக்கு உட்பட்டதும் கூட. ஆனால் என் விமர்சனங்கள் இந்த வரலாறு பற்றியதன்று.

  நான், மலைக்காடு நாவலில் சொல்லப்பட்ட தகவல்களைக் கொண்டு என் விமர்சனத்தை எழுதவில்லை. நான் எழுதியது அந்த நாவல் வாசகனுக்கு அளிக்கக் கூடிய புரிதலைவைத்து என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் நான் சொல்லும் விமர்சனத்தை அந்த நாவலின் போக்கில் வாசித்து கண்டடைய முடியாது. ஒரு படைப்பு அதில் கூறப்பட்ட தகவல்களால் முக்கியத்துவம் பெருவதில்லை மாறாக அது மொத்தமாக உணர்த்தும் மேலதிக விடையங்களாலேயே சிறப்பு பெருகிறது. அந்த மேலதிக விடையங்களைத் தேடிக்கண்டடைபவனே இலக்கிய வாசகன்.

  மலைக்காடு நாவலில் குட்டியப்பனை புனைவு கதாப்பாத்திரமாக மட்டுமே கொண்டு அந்த நாவலை வாசித்து முடிக்கலாம். அது ஒருவகை வாசிப்புதான். என்னைப் பொருத்தவரை அதனை தட்டையான வாசிப்பு என்பேன். ஆனால் மேலான வாசிப்பு என்பது குடியப்பனை வரலாற்று மனிதன் எஸ்.ஏ கணபதியின் நகலாக புரிந்து கொள்வது. காரணம் அப்படியான ஒரு புரிதலுக்கு இட்டுச் செல்லும் குறியீடுகள் இந்நாவலில் உள்ளன என்பதே இந்நாவலின் சிறப்பு. இதை எளியமையாக புரிந்துகொள்ள இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தை எடுத்துக்காட்டாக்கலாம். அப்படத்தை எளிய ரசிகன் அல்லது தமிழ்ச்சூழலுக்கு வெளியே இருப்பவன், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு நண்பர்களின் கதையாகப் பார்த்து புரிந்து கொள்வான். அவர்களின் நட்பு அதில் ஏற்படும் பிரிவு, பகை போன்ற பல கூறுகளுடன் அக்கதையை முழுமையாக உள்வாங்கி ரசிக்க முடியும். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழக அரசியல் வரலாறு அறிந்த ஒரு ரசிகன் அப்பட கதாப்பாத்திரங்களை நிஜ வரலாற்று மனிதர்களுடன் பொருத்திதான் பார்ப்பான். அதற்கான போதுமான தடயங்களும் குறியீடுகளும் அப்படத்தில் வைக்கப்பட்டுள்ளன. அப்படம் பற்றிய அவனது விமர்சனம் ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்னும் புனைவு கதாப்பாத்திரங்களின் ஊடாக முன்னிருத்தப்படும் நிஜ வரலாறு குறித்ததாக இருக்கும். ஆகவே ஆனந்தன், தமிழ்ச்செல்வன் ஆகிய கதாப்பாத்திரங்களின் பன்புநலன்களில் நிகழும் ஏற்றதாழ்வுகளை அவன் நிஜ வரலாற்று நாயகர்கள்மேல் ஏற்படுத்தும் தாக்கமாகவே கவனப்படுத்துவான்.

  இங்கு ஒரு வாசகர் தான் அதனை அவ்வாறு புரிந்துகொள்ள விரும்பவில்லை எனக்கூறவும் எல்லா உரிமையும் உண்டு. ஒரு பனுவலை எவ்வாறு அணுகுகிறோம் என்பது அந்தந்த வாசகனின் உரிமை. ஆனால் அவ்வாறு ஒன்றைப் புரிந்துகொள்ள அந்தப் பனுபவலில் நியாயமான தடயங்கள் இருக்க வேண்டும். உண்மையில் இதுபோன்ற புரிதல்களுக்கான தடயம், சுயமாக படைப்புகளில் இருந்து எழுந்து வருபவை. படைப்பாளனுக்கு அதில் அதிகம் பங்கிருப்பதில்லை. அல்லது படைப்பாளனே அறியாத ஒன்றாக அது இருக்கக்கூடும். ஆனால் வாசகனுக்கான இடைவெளியாக அவை உள்ளன. ஆகவேதான், என் கண்டடைதலை ‘சி.முத்துசாமியின் திட்டம் அல்ல’ என்று நான் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.

  குட்டியப்பனையும் எஸ்.ஏ கணபதியையும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாத வாசிப்பு மிகவும் மேம்போக்கான வாசிப்பாகவே இருக்கும். இந்நாவலின் சிறந்த கண்ணி ஒன்றை கைநழுவ விட்ட வாசிப்பாகவே அதைக் கூறலாம். அப்படியான தட்டையான புரிதலோடு வைக்கப்படும் விமர்சனங்கள் எளிய வாசகனுக்கானது. வரலாற்று தகவல்களை மட்டும் கூர்ந்து நோக்கி சரிதவறுகளை சுட்டும் விமர்சனங்கள் அவை.
  நான் என் அவதானிப்பில் குட்டியப்பன் எஸ்.ஏ கணபதியாக உருகொள்ளும் நிலையில் ஏற்பட்ட நெருடலைதான் விமர்சித்துள்ளேன். குட்டியப்பனை குட்டியப்பனாகவே வைத்து வாசித்தால் அவனின் சாதிய பேச்சு புனைவின் ஒரு பகுதி மட்டுமே. அதில் விமர்சனத்துக்கு இடம் இல்லை. நீங்கள் குறிப்பிடும் வரலாற்று தெளிவு அங்கு வாசகனுக்கு உதவும். அதேப்போல் எஸ்.ஏ கணபதியைப் பற்றிய சாதிய தகவலும் இந்நாவலில் பொருளற்றதாகிவிடும். அதையும் விமர்சிக்க ஒன்றும் இல்லை.

  ஆனால், குட்டியப்பன் என்னும் கதாப்பாத்திரம் எஸ்.ஏ கணபதியின் நகலாக நாவலில் வருவதை உணர்ந்து வாசிக்கும் போது சாதிய தகவல்கள் புதிய பரிணாமம் கொள்கின்றன. அந்த பரிணாமத்தை உள்வாங்கியதே என் விமர்சனம்.

  குட்டியப்பனின் சாதிய பெருமிதம் சற்றே மிகையானது. பொதுவாக தமிழர்தம் சாதிய உணர்வு இன்னோர் தமிழரை எதிர்கொள்ளும் போதுதான் வெளிப்படும். பிற நேரங்களில் அது தமிழனாக அல்லது இந்தியனாக அல்லது இந்துவாகத்தான் வெளிப்படும். அல்லது வர்க போராட்டமாக வடிவங்கொள்ளும். ஆனால் குட்டியப்பன் பூகிஸ்(மலாய்) இனத்தவனை எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியின் போது தன் சாதிய உணர்வை வெளிப்படுத்துகிறான். ஆகவே குட்டியப்பன் வெளிப்படுத்தும் சாதிய உணர்வு, தமிழ்ச்சூழலில் வழக்கமாக புழங்கும் மேட்டிமை நிலையில் இருந்து வேறுபட்டு போராட்ட ஆயுதமாக செயல்படுகிறது.
  குட்டியப்பன் சாதிய உணர்வை போராட்ட கருவியாக பயன்படுத்துகிறான் என்பதோடு அக்கதாப்பாத்திரம் வரலாற்று போராட்ட மனிதர் ஒருவரை வரித்துக் கொண்ட வடிவம் என்ற தெளிவும் கிடைக்கும் போது வாசகனின் பார்வை மேலும் கூர்மை கொள்வதை தவிர்க்க முடியாது. ஆகவே, குட்டியப்பனின் சாதிய உணர்வின் தாக்கம் அவன் ஏற்ற நிஜ மனிதனின் மேல் விழக்கூடிய சாத்தியங்களை இந்நாவல் கொண்டுள்ளது. அதை வலுப்படுத்தும் தன்மையுடன்தான் எஸ். ஏ கணபதியின் பெற்றோர் பெயரில் வரும் சாதி அடையாளம் அமைந்துள்ளது.

  முன்பே நான் குறிப்பிட்ட வகையில் குட்டியப்பனை எஸ். ஏ கணபதியுடன் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் வாசிப்போருக்கு அப்பெயர்கள் வெறும் தகவல்களாக மட்டுமே இருக்கும். ஆனால் என் வாசிப்பில் அவை குறியீடுகளாக அமையப்பெற்றுள்ளன. குறியீடுகள் படைப்பை வேறு நிலைக்கு நகர்த்தவல்லன. நான் மலைக்காடு நாவலின் குறியீட்டு தன்மையை கவனத்தில் கொண்டு என் விமர்சனத்தை முன்வைக்கிறேன். குட்டியப்பனின் சாதிய உணர்வு வெளிப்பாடானது எஸ் ஏ. கணபதியின் ஆளுமையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அக்குறியீடுகள் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்.

  தங்கள் பெயரோடு சாதி அடையாளத்தை இணைத்துக் கொள்வது கடந்த கால உயர் சாதி தமிழர் வழக்கமாக இருந்தது உண்மை. ஆனால் எஸ். ஏ கணபதி அவ்வழக்கத்தை பின்பற்றியதற்கான தடைய இல்லை. தொழிற்சங்க போராட்டவாதியான அவர் ஒரு பொது மனிதனாகவே அறியப்படுகிறார். ஆகவே அவர் மீது குறிப்பிட்ட சாதிய நிழல் விழுவது அவரின் ஆளுமையை குறைத்துவிடும் என்பதே என் கருத்து.
  இந்த கண்ணோட்டத்தை மறுத்து வேறு விமர்சனம் வைக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. எனக்கு முன் இந்நூலுக்கு விமர்சனம் எழுதிய மற்ற படைப்புகளில் சொல்லப்படாத தகவல்களைத்தான் நான் முன் வைக்கிறேன். அதேப் போல் இதிலிருந்து இன்னும் மேல் சென்று வேறு தகவல்களை மற்றவர்கள் தேடலாம். ஆனால் இது பிழையான வரலாற்று கண்ணோட்டம் என்பதோ விஷமனத்தனம் என்பதோ இலக்கிய விவாதத்திற்குள் வராத பார்வையாகும்.

  மேலும், ‘இன்னொரு முகம்’ என்பது படைப்பாளரை குறிப்பதல்ல. அது படைப்பைக் குறிப்பது. படைப்பில் இருந்து வாசகன் பெரும் அரிதான பெருதலைக் குறிப்பது. அது விமர்சனத்தின் முகம். கூரிய பார்வையையும் ஆழ்ந்த வாசிப்பையும் முன்னெடுக்கும் விமர்சன முகம். வழக்கமானதல்ல என்பதால் இன்னொரு முகமானது. நன்றி

  • July 3, 2019 at 9:51 pm

   நன்றி பாண்டியன்! உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக மற்ற இனத்தவரிடம் சாதிப்பெருமை பேசுவது இயல்புக்கு மாறானது என்ற கருத்து ஏற்கும்படியாக உள்ளது. தொடரட்டும் கூரிய விமர்சனங்கள்!

 5. சீ.முத்துசாமி
  July 9, 2019 at 3:14 pm

  வணக்கம் அ.பாண்டியன்.சிவானந்தன் நீலகண்டன் அவர்களுக்கு நீங்கள் அளித்த பதிலில், தொழிற்சங்க போராட்டவாதியான எஸ்.எ.கணபதி ஒரு பொது மனிதனாகவே அறியப்படுகிறார். ஆகவே அவர் மீது குறிப்பிட்ட சாதி நிழல் விழுவது அவரின் ஆளுமையை குறைத்துவிடும் என்கிறீர்கள்.

  நாவலில்,எவ்வித்த்தில் அந்த நிழல் அவர் மேல் கவிந்தது என்பதைப் பொறுத்தே, உங்கள் கூற்றிலுள்ள ,அவரின் ஆளுமையை குறைத்துவிடும் என்கிற முன்னெடுப்பு ஏற்புக்கும் நிராகரிப்புக்கும் உட்படுத்தப்படும்.

  நாவலில் அந்த நிழல் அவர் மேல் எவ்விதத்தில் விழுந்தது?

  ஒரு வரலாற்று நாயகனின் வாழ்க்கைக் குறிப்பில் வரும் அவனது தந்தையரின் பெயரை முன்னிறுத்தி ( ஆறுமுக தேவர்) அந்த நிழல் அவர் ஆளுமையில் விழுமெனில் – அது தவறுதான்- அவரது தந்தையின் பெயரையே அந்த வாழ்க்கை குறிப்பிலிருந்தே முழுமையாய் நீக்கியிருக்க வேண்டும் அல்லது அவரது சாதிய அடையாளம் வராதபடி சாதியை நீக்கிவிட்டு, ‘ ஆறுமுகம்’ என்பதாக பெயருக்கு அரை மொட்டை போட்டு,அதாவது, வரலாற்றுக் குறிப்பை நமது நுண் அரசியலுக்கு ஏற்ப ‘ திருத்தி’ அமைத்திருக்க வேண்டும் என்பது உங்கள் தரப்பா?

  தந்தையின் பெயர் வழி, கணபதி அவர்களின் சாதி ( தேவர்) என்கிற நிழல் முன்னமேயே அவர் மேல் கவிந்துவிட்டிருந்த நிலையில் – ஓரளவு உருவ ஒற்றுமை இருக்கிறது என்கிற நாவல் தரும் குறிப்பை கையில் இறுகப் பற்றிக் கொண்டு, எஸ்.எ.கணபதியை குட்டியப்பனோடு சாதிய ரீதியில் பிணைத்து முடிச்சுப் போட வேண்டிய உங்களுக்கான நிர்ப்பந்தம் என்ன?

  அப்பட்டியொரு நிர்ப்பந்தம் உண்டெனில்,அதற்கான காரணம் – ஏறக்குறைய ஒத்த உருவ அமைப்பும், ஒத்த சாதியும் உடைய இரு வேறு மனிதர்களிடையே, அந்த இருவரில் ஒருவரின் செயல்பாட்டின் விளைவு இன்னொருவரின் ‘ ஆளுமையில்’ ஆதிக்கம் செலுத்தும் என்கிற உங்களின் விஞ்ஞானபூர்வமான புத்தம்புதிய உளவியல் கண்டுபிடிப்பா?

  உங்கள் பார்வையில், சாதிய பெருமையும் வன்மமும் கொண்ட ஒரு குட்டி அரக்கனாக சித்தரிக்கப்படும் குட்டியப்பன் – தாழ்ந்த சாதி பெண் என்று அறியப்பட்ட பவானியை (அதனை முன்னிட்டு ஆணவக் கொலைகள் நடக்கிற சூழலில்) தனது சாதிய மேட்டிமை மனப்பாங்கை கடந்து,
  எவ்வாறு காதலித்தான்?

  நன்றி.மேலும் சில கேள்விகள் பிறகு.

  சீ.முத்துசாமி

Leave a Reply to சீ.முத்துசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *