கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

64309800_2278342312202499_3587259038984830976_nஅன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கும் பழகியவர்களது குரல்களும் இப்பொழுதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

திடீரென நான் விளையாடுவதை நிறுத்தினேன். குடிசையினருகே நிலத்தில் ஊர்ந்து செல்லும் நாகப் பாம்பொன்று என் கண்ணில்பட்டது. அப் பாம்பு குடிசையைச் சுற்றி சவாரி கிளம்பியிருக்க் இருக்கக்கூடும். கண நேரத்துக்குப் பிறகு நான் பாம்பினருகில் சென்றேன். எங்கள் தோட்டத்து வேலியில் நடப்பட்டிருந்த செடிகளின் சருகுகள் எப்போதும் நிலத்தில் பரவியிருக்கும். அவ்வாறு நிலத்தில் வீழ்ந்திருந்த குச்சியொன்றையெடுத்து பாம்பின் வாயருகே கொண்டு சென்றேன். பாம்பு விலகிச்செல்ல முயற்சிக்கவில்லை. அந்தச் சிறிய விளையாட்டில் மகிழபாம்பு எண்ணியிருக்கக்கூடும். அது,நான் நீட்டிய குச்சியை மெதுவாக தனது வாய்க்குள் வாங்கியது. அழகிய சிறிய விலங்குகளைப்போல அதுவும்அத் தடியை உணவாகக்கொள்வதாக இருக்குமென நான் எண்ணினேன். அதன் கண்கள் மகிழ்ச்சியால் பளிச்சிட்டன. அங்குலம் அங்குலமாக அதன் தலை, எனது கைக்கருகே வந்து விட்டிருந்தது. குச்சியை முழுமையாக அது விழுங்கியிருந்தது. அதன் வாய் எனது விரல்களினருகே வந்து விட்டிருந்தது.

நான் புன்னகைத்தேன். எனக்கு எவ்வித அச்சமும் தோன்றவில்லை. இந்த நாகம், அதன் பற்களால் எனது விரல்களைத் தீண்டப் போவதை உணர்ந்தேன். எனது தந்தையின் மாணவனான டெமானி பட்டறையை விட்டு வெளியே வந்தது அந்தக் கணத்தில்தான். டெமானி எனது தந்தையைக் கூப்பிட்டுக் கத்திய உடனேயே நான் எழுந்துகொண்டேன். உடனடியாக நான் எனது தந்தையின் நண்பரொருவரின் கரங்களில் பாதுகாப்பாக இருந்தேன்.

என்னைச் சுற்றி பெரிய கலவரமே நடந்துகொண்டிருந்தது. எல்லோரை விடவும் சத்தமாக எனது தாய் அலறிக்கொண்டிருந்தார். அத்தோடு நின்றுவிடாமல் என்னை கைகளால் பலமாக அடித்தார். அடியின் வலியை விடவும், திடீரென எழுந்த கூக்குரல்களால் குழப்பத்துக்குள்ளாகியிருந்த நான் அழ ஆரம்பித்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னைச் சூழ்ந்திருந்த ஓசைகள் மெதுமெதுவாக மறைந்து போயின. எல்லாமும் முடிந்துபோனதன் பிற்பாடு எனது தாய் என்னைக் கடுமையாக எச்சரித்தாள். அந்த விளையாட்டை மீண்டும் விளையாடக்கூடாது எனக் கூறினாள். அதன் அபாயம் உண்மையிலேயே எனக்குப் புரியாவிடினும் கூட நான் அதற்கு இசைந்தேன்.

எனது தந்தையின் குடிலானது, பட்டறையின் அருகிலேயே அமைந்திருந்தது. அக்குடிலின் சுவருக்கு வெளியே நீண்டிருந்த கூரையின் நிழலில் எப்போதுமே நான் விளையாடிக்கொண்டிருப்பேன். எனது தந்தைக்கு மட்டுமே உரித்தான அந்தக் குடிலானது, ஏனைய குடில்களைப் போல களிமண்ணும் தண்ணீரும் கலந்து கட்டப்பட்டதல்ல. அது செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. வட்டமாகக் கட்டப்பட்டிருந்த குடிலின் கூரை வைக்கோலினால் வேயப்பட்டிருந்தது. குடிலுக்குள் செல்ல செவ்வக வடிவில் கதவொன்று வைக்கப்பட்டிருந்தது. குடிலினுள்ளே வெளிச்சம் வருவதற்காக சிறிய ஜன்னலொன்றும் பதிக்கப்பட்டிருந்தது.

குடிலினுள்ளே வலப்பக்கமாக களிமண்ணால் கட்டப்பட்டிருந்த சிறிய கட்டிலின் மீது நார்ப் பாயொன்றும், தலையணையொன்றும் வைக்கப்பட்டிருந்தன. குடிலினுள்ளே பின்புறமாக, ஜன்னலிலிருந்து வரும் வெளிச்சம் மிக அதிகமாகக் கிடைக்குமிடத்தில் உபகரணப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பிரார்த்தனை நேரத்தில் உடுத்தும் ஆடை வைக்கப்பட்டிருந்தது. மூலிகைச்செடிகளும்,கொடிகளும் அடங்கிய மண் பாத்திரங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. கட்டிலில் தலையணை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேர்மேலாகத் தொங்க விடப்பட்டிருந்தவை எனது தந்தையின் உறக்கத்தைக் காத்தன.

உலோகத்தால் மூடப்பட்டிருந்த மண் பாத்திரங்களைச் சுற்றி வர தடித்த நூலால் சிப்பிகள் பிணைக்கப்பட்டிருந்தன. அதனால் அப் பாத்திரங்கள் மிகவும் அழகாக இருந்தன. குடிசைக்குள்ளிருந்தவற்றிலேயே அப்பாத்திரங்கள்தான் பெறுமதி வாய்ந்தவையென நான்புரிந்து கொண்டேன். அவற்றுள் மாயாஜால சக்தி வாய்ந்த பொருட்கள் அடங்கியிருந்தன. பாவகரமான அனைத்துத் தீங்குகளையும் துரத்தியடிக்கும் மருந்துகள் அப்பாத்திரங்களுக்குள் இருந்தன. அம் மருந்துகளை உடல் முழுவதும் தடவிக்கொள்வதன் மூலம் தீயவை அனைத்திலிருந்தும் காவல் பெறலாம். உறங்கச் செல்லும் முன்பு எனது தந்தை, அம்மருந்துகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்து தனது உடலில் தடவிக்கொள்வார்.  ஒவ்வொரு மருந்துக்கும் தனிப்பட்ட சக்திகள் இருந்தன. அந்தச் சக்திகள் என்னென்னவென்று எனக்கு சரியாகத் தெரியாது. ஆகையால் எப்போதும் நான் விரைவாக தந்தையின் குடிசையை விட்டும் வெளியே வந்துவிடுவேன்.

நான் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு எதிர்ப்புறத்தில் பட்டறை அமைந்திருந்தது. அதனால் எனக்கு எப்போதுமே பட்டறையைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. அவ்வாறே எனது பெற்றோருக்கும் என்னைக் கண்காணிப்பது இலகுவாக இருந்தது. அப்பிரதேசத்திலிருந்த கட்டடங்களிடையே பிரதானமான கட்டடமாக இருந்தது இந்தப் பட்டறைதான். எனது தந்தை எப்போதும் பட்டறைக்குள்ளிருந்து வேலை நடக்கும் விதத்தை கண்காணித்துக்கொண்டிருப்பார். மிகவும் முக்கியமான அல்லது திருத்துவதற்குக் கடினமான வேலையெனில் தந்தையே அதைச் செய்து முடிப்பார். இந்த இடத்தில்தான்அவர் தனது நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திப்பார். அதனால் இந்தப் பட்டறையானது,காலை தொடக்கம் இரவு வரை ஓலிகளால் நிறைந்திருக்கும்.

எங்கள் பிரதேசத்துக்குள் நுழையும் அல்லது வெளியே செல்லும் எவருமே பட்டறையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதனால் எப்போதுமே இந்த இடம் பயணிகளாலும் நிறைந்திருக்கும். இந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் எவருமே எனது தந்தையுடன் சில வார்த்தைகளில் உரையாடியபடி, பட்டறைக்குள் வேலை நடைபெறும் விதத்தை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருப்பர். சிலவேளைகளில் நான் பட்டறை வாசலருகே போய் நின்றுகொள்வேன். உள்ளே செல்வது அபூர்வம். உள்ளேயிருக்கும் எல்லோருமே என்னை அச்சுறுத்துவார்கள். எவரேனும் என்னைப் பிடிக்கப் பார்த்தால் நான் ஓடி வந்துவிடுவேன்.

எனினும் பல காலம் கழிந்த பிறகு நான் பட்டறையின் ஒரு மூலையிலிருந்து எரியும் நெருப்பைப் பார்த்துக்கொண்டிருக்கப் பழகியிருந்தேன். அக் லங்களில் நான் விளையாடும் இடமாக எனது தந்தையின் குடிலுக்கு வெளியேயிருந்த நிழல் இருந்தது. எமது காணியில் வளர்ந்துகொண்டிருந்த தோடம்பழ மரத்தினடியிலும் விளையாடப் பழகியிருந்தேன்.

பட்டறையைக் கடந்துசென்று அதன் பின்புற வாசலருகே போனால் தோடம்பழ மரத்தைக் காண முடியும். எங்கள் காடுகளில் வளரும் விசாலமான மரங்களைப் போன்றதல்ல இந்த தோடம்பழ மரம். ஆனாலும் இதன் பளபளப்பான அடர்ந்த இலைகளால் இருண்ட நிழல் அங்கு வீழ்ந்து கிடந்தது. தோடம்பழ மர நிழலானது, வெப்பமான சூரியக் கீற்றுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவான குளிர்ந்த இடமாக ஆகியிருந்தது. அதில் பூக்கள் பூக்கும் காலத்தில் மென்மையான நறுமணம் அப்பகுதி முழுவதும் பரவியிருக்கும்.  காய்கள் காய்க்கும் என்றாலும் அவற்றை எங்களால் பார்க்க மாத்திரமே முடிந்தது.

அந்தக் காய்கள் முற்றிக் கனியும்வரை எங்களது பேராவலை  அடக்கியபடி காத்திருக்க வேண்டியிருக்கும். பிறகு எனது தந்தை, குடும்பத் தலைவர் என்ற ரீதியில் தோடம்பழங்களைப் பறிக்கும்படி கட்டளையிடுவார். அவற்றைப் பறிப்பவர், பைகளை நிரப்பி ஒவ்வொன்றாக தந்தையின் கைகளில் தருவார். எனது தந்தை,அப் பழங்களை அக்கம்பக்கத்தாருக்கும், ஊர் மக்களுக்கும், தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பார். அதன்பிறகுதான் எங்களுகுத் தேவையான அளவு தோடம்பழங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனது தந்தை கஞ்சத்தனம் பார்க்காது வாரி வழங்குவார். எங்கள் வீட்டுக்கு வரும் எந்த விருந்தினரும்எங்களுடன் உணவு உட்கொள்ளலாம். எனினும் விருந்தினர்கள் சாப்பிடும் வேகத்தில் என்னால் சாப்பிட முடியாது. எனது பாகத்தை எடுத்து வைக்க எனது தாய் மறந்து விட்டால்ல் நான் பசியோடுதான் இருக்கவேண்டும்.

‘உட்காரு… சாப்பிடு..உன்னோட அப்பாவுக்குப் புத்தியில்ல’ என அவர் வழமைபோலவே கூறுவார்.

உண்மையில் விருந்தினர் வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் சமைக்கும் உணவால் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்பவர்க பலர்.எனினும் எனது தந்தை கொஞ்சமாகத்தான் சாப்பிடுவார். அவர் உணவுப் பிரியராக இருக்கவில்லை.

நாங்கள் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தோம். எங்கள் காணியின் எல்லையாக இருந்த மர வேலிக்கு மறுபுறமாக ரயில் தண்டவாளம் அமைந்திருந்தது. உண்மையில் ரயிலானது, எங்கள் வேலிக்கு எவ்வளவு அருகாமையில் பயணிக்குமெனக் கூறுவதென்றால், சில சந்தர்ப்பங்களில் ரயில் எஞ்ஜினிலிருந்து வரும் தீ, தாக்கி எங்கள் வேலி பற்றியெரியும். அனைத்தும் நெருப்பில் பற்றியெரிவதைக் காண அவசியமில்லையென்றால் உடனடியாக தண்ணீரை ஊற்றி வேலியை அணைக்க வேண்டியிருக்கும். இது ஒரு வகையில் பயங்கரமானதாகவும்,திகிலூட்டும் செயலாகவும் இருக்கும்.

அதனால் அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் எல்லாப் ரயில்களையும் நான் கண்காணிக்க வேண்டியிருந்தது. கண்ணெட்டும் தூரம் வரைக்கும் ரயில் இல்லையென்றாலும் கூட அதன் பளபளப்பான தண்டவாளங்களை பல மணி நேரமாக வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க நான் பழகியிருந்தேன். நிழல் தர மரமோ செடியோ அருகே இல்லாததன் காரணமாக ரயில் பாதை அதிக சூரிய வெப்பத்தால் மிகவும் சூடாகும். தண்டவாளங்கள் எந்தளவு வெப்பமாக இருக்குமென்றால், ரயில் எஞ்ஜினிலிருந்து எண்ணெய் சிந்தினால், அது உடனே காணாமல் போய்விடும். எண்ணெய் விழுந்த தடயமே எஞ்சியிருக்காது.

பாம்பை குடிசைக்கருகில் அழைத்து வந்தது இந்த உஷ்ணம்தானோ? இல்லாவிட்டால் எண்ணெய்யோ? எனக்குத் தெரியவில்லை. காய வைக்கப்பட்டிருக்கும் செம்மரங்களிடையே சர்ப்பங்கள் ஊர்வதை நான் கண்டிருக்கிறேன். வேலி தாண்டி எமது தோட்டத்துக்குள் வர அவ் விலங்குகள் பழகியிருந்தன.

பாம்புகளோடு விளையாடக்கூடாதென எனது தாய் எச்சரித்த தினம் எனக்கு நினைவு வந்தது. பாம்பொன்றைக் கண்டதுமே நான் அம்மாவிடம் ஓடினேன்.

“அங்கே பாம்பு” என்று கத்தினேன்.

“என்ன? இன்னொன்றா?” என அம்மாவும் கத்தினாள்.

உடனே அவள் அந்தப் பாம்பு எந்த வர்க்கத்தைச் சேர்ந்ததெனப் பார்க்க வெளியே ஓடிவந்தாள். அந்தப் பாம்பும், ஏனைய எல்லாப் பாம்பு வகைகளையும் சேர்ந்ததென்றால் அது இறக்கும்வரைக்கும் தாக்கப்படும். எங்கள் பிரதேசத்திலுள்ள ஏனைய பெண்களைப்போலவே, அம்மாவும் பாம்பு முழுமையாக அமைதியடையும் வரை தாக்குவாள். அதுவே தாக்குவது ஆணாக இருப்பின், சரியாகக் குறிபார்த்து ஒரேயடியில் பாம்பைக் கொல்வான்.

ஒருநாள், சரீரத்தில் வைரம் பாய்ந்த சிறிய நாகப்பாம்பொன்றை நான் கண்டேன். அது எவ்வித அவசரமுமில்லாது பட்டறையை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் வழமைபோலவே அம்மாவிடம் அதைத் தெரிவிக்க ஓடினேன். கறுப்பு நிறப் பாம்பினைக் கண்டதுமே எனது தாய் கனத்த குரலில் கூறினாள்.

“இந்தப் பாம்பைக் கொல்லக்கூடாது மகனே. இந்தப் பாம்பு, மற்றப் பாம்புகளைப்போல இல்ல. உனக்கு இந்தப் பாம்பினால எந்த ஆபத்தும் வராது. இந்தப் பாம்புக்கு நீயும் எப்போதும்எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது.”

இந்தப் பாம்பு, கொல்லப்பட வேண்டிய வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல என்பதைப் பற்றி நானும், எனக்குத் தெரிந்த அளவில் எனது நண்பர்களும் தவிர்த்து ஏனைய அனைவரும் அறிந்திருந்தனர். நாங்கள் இன்னும் சிந்திக்கும் பருவமடையாத குழந்தைகளாக இருந்தோம்.

“இந்தப் பாம்புதான் உன் அப்பாவோட குலதெய்வம்” என்றும் அம்மா கூறினாள்.

நான் அச் சிறிய பாம்பினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது அமைதியாக,eastern-indigo-snake-anna-bronwyn-foley சத்தமேயெழுப்பாது பட்டறை நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எவராலும் தனக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது என அறிந்திருந்ததைப்போல அமைதியாகப் பயணித்தது. சூரிய ஒளியில் அதனது கரு நிற உடல் பளபளத்தது. அது பட்டறையை நெருங்கியதும்தான் பட்டறைச் சுவற்றிலிருந்த சிறிய ஓட்டையை முதன்முதலாக நான் கண்டேன். அந்த ஓட்டை நிலத்தோடு ஒட்டி அமைந்திருந்தது. ஓட்டைக்குள் நுழைந்த பாம்பு காணாமல் போனது.

“பார்த்தியா? அந்தப் பாம்பு உன் அப்பாவைப் பார்க்க வருது” என அம்மா கூறினாள்.

நான் தெய்வங்களைப் பற்றி அறிவேன். ஆனால் இந்தக் காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக இருந்தது. என்னால் பேச முடியவில்லை. பாம்புக்கு எனது தந்தையோடுள்ள சம்பந்தம் என்ன? அதுவுமல்லாது இந்தப் பாம்பு மாத்திரம் ஏன்? இந்தப் பாம்புயாராலும் கொல்லப்படப்போவதில்லை. ஏனெனில் இது எனது தந்தையின் கடவுள். எனது தாய் அவ்வாறுதான் கூறியயிருந்தாள். அவ்வாறெனில் ஒருவரது இறைவன் உண்மையிலேயே யார்? தெய்வங்கள் எனப்படுபவை யாவை? நான் அவற்றை எல்லா இடங்களிலும் காண்கிறேன். அவை ஒரு செயலைத் தடுப்பதோடு இன்னொரு செயலை ஊக்குவிப்பவை. எனக்கு இவையெதுவும் விளங்கவில்லை. நல்ல தெய்வங்களைப்போல மோசமான தெய்வங்களும் இருந்தன. எனக்குத் தெரிந்தளவில் நல்ல தெய்வங்களை விடவும் மோசமான தெய்வங்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் பாம்பு என்னை எதுவும் செய்யாது என அறிந்துகொண்டது எவ்வாறு? இந்த விலங்கும் இதே வர்க்கத்தைச் சேர்ந்த ஏனைய இதே போன்ற விலங்குகளையொத்ததுதான். உண்மையில் இந்தக் கருநாகம் விசித்திரமான விலங்குதான் என்றாலும் இதுவும் ஒரு பாம்புதான். எனக்கு இவையெதுவுமே விளங்கவில்லை. எனினும், இது பற்றிப் பேச வேண்டியது ஆண்களுடன் மாத்திரமே என எண்ணிய நான் இரவாகும்வரை காத்திருக்கத் தீர்மானித்தேன்.

இரவுணவின் பின்னர்,தனது நண்பர்களுடனான கலந்துரையாடல் நிறைவு பெற்றதும் எனது தந்தை அவர்களுக்கு விடைகொடுத்தார். பிறகு அவர் தனது குடிலுக்கு வெளியே சென்றமர்ந்தார். நான் அவருக்கருகே போய் அமர்ந்துகொண்டேன். முதன்முறையாக நான் சுற்றிவளைத்து கேள்விக்குள் நுழைந்தேன். ஏனைய எல்லாச் சிறுவர்களையும்போல சூரியனுக்குக் கீழேயிருக்கும் அனைத்தையும் குறித்து அவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

“அப்பா, உங்களைப் பார்க்க வர்ற அந்தச் சின்னப் பாம்பு யாரு?”

“எந்தப் பாம்பைப் பத்திக் கேட்குறே?”

“அந்தச் சின்னப் பாம்பு. அதைக் கொல்ல வேண்டாமென்று அம்மா சொன்னார்.”

“ஓஹ் !” என்ற சொல் மட்டும்தான் அவர் வாயிலிருந்து வந்தது. சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பதில் சொல்ல வேண்டுமா? கூடாதா? எனத் தீர்மானிக்க யோசிப்பதாக எனக்குத் தோன்றியது. சில வேளை அவர் எனது  வயது குறித்து சிந்திப்பதாக இருக்கக்கூடும். இவ்வாறான இரகசியங்களை பன்னிரண்டு வயதுச் சிறுவனிடம் கூறுமளவிற்கு இந்தப் பிள்ளை வளர்ந்திருப்பானா? எனினும் திடீரென அவர் தனது முடிவினை மாற்றிக்கொண்டார்.

“அந்தப் பாம்பு எங்கள் மக்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களில் ஒன்று. இப்போது புரிகிறதா?” என்று கேட்டார்.

“ஆமாம்” சரியாக விளங்கவில்லையென்ற போதிலும் நான் கூறினேன்.

“அந்தப் பாம்பு எப்பவும் எங்கள் கூடவே இருக்கும்… எங்களோட ஒருத்தர் மாதிரி” என அவர் கூறிக்கொண்டே போனார்.

“அது உண்மைதான்” என முழு மனதோடு கூறினேன். ஏனைய எல்லோரையும் தாண்டி,எனது தந்தையின் முன்னால் பாம்பு தோன்றியதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது. எங்கள் குடும்பத் தலைவர் அப்பா அல்லவா? எங்கள்பிராந்தியத்தின் அனைத்துப் பட்டறைகளினதும் தலைவர் எனது தந்தை அல்லவா? நல்ல பட்டறைக்காரர் எனது தந்தை அல்லவா?

“அது எப்படி வருகிறது?” என நான் கேட்டேன்.

“தொடக்கத்தில் நானதைக் கனவில் கண்டேன். நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது பல தடவை கண்டிருக்கிறேன். அதன்பிறகு நான் விழித்துக்கொண்டிருக்கும்போது அது வரும் நேரத்தை அது சொன்னது. அது,இடத்தையும் நேரத்தையும் சரியாகச் சொன்னது. ஆனால், நெஜமா சொல்றதுன்னா அதை முதல்முறையாக் கண்டபோது நானும் பயந்துவிட்டேன். அதுவும் மற்றப் பாம்புகளைப் போலத்தான் என்று நானும்நினைத்தேன். அதனால என்னைக் கட்டுப்படுத்திக்க வேண்டியிருந்தது. இல்லையென்றான் நான் அதைக் கொன்றிருப்பேன். நானதை அன்போட வரவேற்கவில்லை என்பதைக் கண்ட பாம்பு,வந்த வழியிலேயே திரும்பிவிட்டது. நான் அங்கிருந்து பாம்பு போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதை அந்த இடத்துலேயே கொன்றுவிடுவோ என்ற சந்தேகத்திலேயே இருந்தேன். ஆனால் ஏதோவொரு பலமான கையொன்று என்னைத் தடுத்தது. பாம்பைத் தொடர்ந்து போகவிருந்த என் பயணத்தையும் நிறுத்தியது. பாம்பு காணாமல்போகும் வரைக்கும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அப்போதுகூட பாம்பை நான் இலகுவில் பிடித்திருக்கலாம். வேகமா அடி வைத்திருந்தால்கூடப் போதும். ஆனால், என்னால என் கை, கால்களையே அசைக்க முடியாமல் இருந்தது. அதுதான் கறுப்பு நாகத்தை நான் சந்தித்தி முதல் அனுபவம்.”

ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு அவர் சொல்லிக்கொண்டே போனார்.

“அடுத்த நாள் ராத்திரி எனக்கு திரும்பவும் அந்தப் பாம்பு கனவில் வந்தது. ‘நீ சொன்ன மாதிரியே நான் வந்தேன். ஆனா நீ என்னை அன்பா வரவேற்கவில்லை. அதுக்குப் பதிலாக மோசமான முறையில் என்னை வரவேற்க நினைத்தாய். உன் கண்களில் அதைப் பார்க்க முடிந்தது. நான் மக்களுக்கு வழி காட்டும் தெய்வம். நீ குடும்பத் தலைவன் என்பதால்தான் நான் உன் முன்னால் வந்தேன். அதனால என்னை நீ பயத்தோடு பார்க்கவும்,திரும்பிப் போகவும் வேண்டாம்… நான் உனக்கு நல்லதைக் கொண்டு வருவேன்’ என்று பாம்பு சொன்னது. அதற்கப்புறம் நான் பாம்பைக் கண்டதுமே வரவேற்றேன். அதேபோல பாம்பு எனக்கு அதிர்ஷ்டத்தைத் தவிர வேறெதையும் கொண்டு வந்ததில்லை,”என்றார்

பிறகு எனது தந்தை ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் கதையைத் தொடர்ந்தார்.

“அடுத்தவர்களைவிட நானொன்றும்ம் பெரிய கெட்டிக்காரனில்லை என்பது உனக்கு இப்போது விளங்கும். மற்றவர்களிடம் இருப்பதுபோன்ற சொத்தும் என்னிடமில்லை. அடுத்தவர்களிடம் இருப்பதைவிடவும் ரொம்பக் குறைவான சொத்துதான் என்னிடம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும்மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். என்சட்டையைக் கூடக் கழட்டிக் கொடுத்து விடுகிறேன். அதனால் நான் அடுத்தவர்களைவிட அதிகமாக அறியப்படுகிறேன். என் பெயர் எல்லாருடைய நாக்கு நுனியிலும் இருக்கிறது. இந்த வட்டாரத்தில் உள்ள எல்லாப் பட்டறைக்காரர்களுக்கும் தலைவன் நான். அதெல்லாம் நடந்தது இந்தக் கறுப்பு நாகத்தினால்தான். அதுதான் நம் மக்களுக்கு வழிகாட்டும் தெய்வம். நான் இந்தப் பாம்புக்குக் கடன்பட்டிருக்கிறேன். நடக்கப் போவதை எல்லாவற்றையும் அது என்னிடம் சொல்லும். அதனால் விடிந்து எழும்பிப் பார்க்கும்போது என் பட்டறையின் முன்னால் யார் நின்றாலும் நான் ஆச்சரியப்படுவதில்லை. அவர்களின் சைக்கிளையோ, மோட்டார் சைக்கிளையோ, கடிகாரத்தையோ திருத்தித்தரச் சொன்னால் நான் ஆச்சரியப்படுவதில்லை. அடுத்த நாள் நடக்கப் போவது முதல் நாள் ராத்திரி எனக்குத் தெரிய வரும். அதனால என்னிடம் கொண்டுவரப்படும் எதையும் விரைவாகத் திருத்திக் கொடுக்க என்னால் முடிகிறது. அந்த வேலையைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. அதனால நான் திறமையான பட்டறைக்காரன் என்று பெயரெடுத்தேன். அதனால்தான்  என்னால் பாம்பை மறக்க முடியாது. நான் பாம்புக்குக் கடன்பட்டிருக்கிறேன். எங்கள் மக்களுக்கு வழிகாட்டும் தெய்வத்துக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.”

அவர் மௌனமானார். இப்பொழுது எனக்கு எல்லாமும் புரிந்தது. எனது தந்தை எங்காவது பயணம் போய்விட்டு வந்தால் தனது தொழிலாளர்களிடம் இவ்வாறு கூறுவார்.

“நான் வெளியே போயிருந்தபோது அவர் வந்தார்தானே? அவர் இந்த மாதிரி வேலைதானே கொண்டு வந்தார்?”

அப்பொழுது எல்லோருமே ஆச்சரியப்படுவார்கள். அனைத்து விடயங்களையுமே அவர் தெரிந்துகொண்டது பாம்பிடமிருந்துதான் என்பது இப்போது எனக்கு விளங்கியது. அப்போதெல்லாம் நான் தலையை உயர்த்திப் பார்க்கும்போது எனது தந்தை என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் காண்பேன்.

images“சின்னவனே, இன்றுநான் ஏன் இதையெல்லாம் உன்னிடம் சொன்னேன் என்றால்நீ என் மூத்த மகன் என்பதால்தான். நான் உன்னிடம் இருந்து எதையுமே மறைக்க மாட்டேன். உன்னிடமும் தெய்வம் வரும். உன் அப்பா எப்பவுமே நல்லது மாத்திரமே செய்ததால்தான் தெய்வத்தையே தனக்கிட்ட கொண்டு வர முடிந்தது. சில நேரம் எனக்கது தெரியாமல் கூட இருந்திருக்கலாம். நம் மக்களுடைய தெய்வத்தை உன்னிடமும் வரவழைக்க வேண்டுமென்றால் நீயும் என்னைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இப்போதிலிருந்து நீ என் கூடவே இருக்க வேண்டும்.”

அவர் பளிச்சிடும் விழிகளால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென அவரது முகம் வாடியது.

“சின்னவனே, எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. நீ எப்பவுமே என்கூட இருப்பதில்லை. நீ நாள் முழுக்க பள்ளிக்கூடத்தில் இருப்பாய்.  ஒருநாள் நீ இந்தப் பள்ளிக்கூடத்தை  விட்டுப் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போவாய். நீ என்னையும் விட்டுட்டுப் போய் விடுவாய் சின்னவனே.”

இதைச் சொல்லும்போது அவரது முகம் கவலை கொண்டதாக இருந்தது. அவரது இதயம் கனத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. குடிசைக்குள் எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கிலிருந்து அவரது முகத்தில் மெல்லிய வெளிச்சம் விழுந்தது. திடீரென முதியவராகி விட்டவரைப்போல அவர் தெரிந்தார்.

“அப்பா” என நான் முனகினேன்.

“மகனே” அவர் உதடுகளை அசைத்தார்.

நான் தொடர்ந்தும் பள்ளிக்கூடம் போக வேண்டுமா? இல்லையெனில் பட்டறைக்குப்போக வேண்டுமா?என என்னுள்ளே நிலையான தீர்மானமொன்று இருக்கவில்லை. என்னால் எதையும் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

“இப்ப போ” என எனது தந்தை கூறினார்.

நான் எழுந்து, எனது தாயின் குடிலுக்குப் போனேன். இரவு வானம் தங்கத் தாரகைகளால் பூரித்திருந்தது. இராப் பட்சிகளின் நாதம் கேட்டது. நான் பின்பற்ற வேண்டிய உண்மையான மார்க்கம் எது? அதற்கான வழி எங்கேயிருக்கிறது? எனது குழப்பம், ஆகாயத்தைப் போலவே விசாலமாகப் பரந்திருந்தது. ஆனால் அந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களில்லை. நான் எனது தாயின் குடிலுக்குள்ளேயே இருந்தேன். அப்போது அந்தக் குடில் எனது குடிலாகவும் இருந்தது. நான் உறங்கச் சென்றேன். தூக்கம் வராததால் நான் அசௌகரியத்தோடு கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடியிருந்தேன்.

“என்னாச்சு மகனே உனக்கு?” என எனது தாய் என்னிடம் கேட்டார்.

“ஒன்றுமில்லை,”என்றேன். என்னிடம் கூறுவதற்கு ஏதுமில்லை.

“நீ ஏன் தூங்க மாட்டேங்குற?” என எனது தாய் மீண்டும் கேட்டார்.

“எனக்குத் தெரியல.”

“சரி தூங்கு,” என்றார்.

“சரி” என்றேன்.

“தூங்கு..எப்போதும் தூக்கம்தான் ஜெயிக்கும்” எனக் கவலையோடு அவர் கூறினார். அவர் கவலையோடு இருப்பது ஏன்? நான் மகிழ்ச்சியற்றிருப்பதாக அவர் அனுமானித்திருப்பாரோ? எனது உணர்வுகள் என்னவென்று அவர் எப்போதும் அறிவார்.

நான் உறங்க முயற்சித்தேன். கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அதற்கும் பலனற்றிருந்தது. எண்ணெய் விளக்கின் மந்த ஒளி விழுந்த எனது தந்தையின் முகத்தை என்னால் மறக்க முடியாது. அவர் திடீரென முதியவராகிப் போனார். அவ்வளவு யௌவனம் மிக்க, அவ்வளவு உற்சாகமுள்ள ,எமது எல்லோரை விடவும் நல்ல குணங்கள் நிறைந்த அவர் சடுதியாக முதியவராகி விட்டாரென்பதை நான் உணர்ந்தேன்.

அவர் ஒருபோதும் போட்டியில் தன்னை முந்திச் செல்ல யாருக்கும் இடமளித்ததில்லை. அவரது உடல், எமது இளைஞர்கள் எல்லோரினதும் உடல்களை விடவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. ‘அப்பா… அப்பா’ நான் தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டேயிருந்தேன். ‘அப்பா நான் என்ன செய்யணும்? சரியானது எது?’ நான் ஓசையெழுப்பாது அழுதேன். அழுதவாறே உறங்கிப்போனேன்.

அதன்பிறகு ஒருபோதும் நாங்கள் கருநாகம் குறித்து பேசிக் கொள்ளவில்லை. எனது தந்தை முதலும் கடைசியுமாக அன்று பேசியிருந்தார். அதற்குப் பிறகு கருநாகத்தைக் கண்டதுமே நான் ஓடிப் போய் பட்டறைக்குள் அமர்ந்துகொள்வேன்.

சுவர் ஓட்டையில் வழுக்கியபடி செல்லும் அந்தப் பாம்பைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அக்கணத்தில் பாம்பு வந்திருப்பதை எனது தந்தை அறிந்திருந்தால் அவரது பார்வை ஓட்டையை நோக்கிச் செல்லும். உடனே புன்னகைப்பார். பாம்பு நேராக எனது தந்தையினருகே சென்று வாயைத் திறக்கும். தனக்கருகே பாம்பு வந்ததுமே எனது தந்தை அதன் வாலில் செல்லமாகத் தட்டுவார். அந்தக் கருநாகம் எனது தந்தைக்கு சிறிதளவுகூட தீங்கு விளைவிக்க முயற்சிப்பதை ஒருபோதும் நான் கண்டதில்லை. எனது தந்தை பாம்பின் வால்நுனியைத் தடவிக் கொடுப்பதுவும், பாம்பு உடலை அசைப்பதுவும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைப் போலவே இருக்கும். இந்த எண்ணங்கள் எனது மனதை சஞ்சலப்படுத்திற்று. இது மிகவும் விசித்திரமான கலந்துரையாடலென எனக்குத் தோன்றியது. எனது தந்தை கையை வைத்துக் கேள்வி கேட்பதோடு, பாம்பு உடலசைப்பதன் மூலம் பதில் தந்தது.

ஆமாம். அது கலந்துரையாடல் போன்றதுதான். நானும் என்றாவது ஒருநாள் இப்படித்தான் செய்ய வேண்டியிருக்குமா? இல்லை. நான் இன்னும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவன். ஆனாலும் எனது கையை பாம்பின் மீது வைக்கவும், அப்போது அது உடலை அசைக்கும் விதத்தை உணர்ந்துகொள்ளவும் நான் மிகவும் ஆசைப்பட்டேன். எனினும் பாம்பு எனது கையின் ஸ்பரிசத்துக்கு எவ்வாறு பதிலளிக்கும்? அதற்கு என்னிடம் கூற ஏதுமில்லாமல் இருக்கலாம். என்னிடம் கூற எதுவுமே இல்லாமல் போகும் என எண்ணி நான் அச்சமுற்றேன்.

பாம்பின் உடலைத் தடவிக் கொடுத்தது போதுமென எனது தந்தைக்குத் தோன்றியது. அவர் அதற்கு தனியாக இருக்க இடமளித்தார். பிறகு இரும்பைத் தகர்க்கும் இடத்துக்கு முன்பாக ஆட்டுத் தோலை விரித்து அதன் மீது அமர்ந்து எனது தந்தை வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஆட்டுத் தோலின் கீழால் வந்த பாம்பு அவரைத் தீண்டியது.

எழுத்து: கமாரா லயே

தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

 

1 comment for “கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

  1. ஸ்ரீவிஜி
    September 10, 2019 at 4:21 pm

    மூட நம்பிக்கையின் விளைவை, இறுதி ஒரே வரியில் முடித்துள்ளார் படைப்பாளி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...