சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)

sunat 02இந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று  அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த  சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது.

எங்கள் பின் வீட்டில் வசிக்கும் பாங் ஜாப்பாரிடம் அம்மா, ஹபிப் நொஹ் கல்லறைக்கு என்னை அழைத்துச் சென்று எல்லாம் நல்லபடியாக நடந்தேற அந்த புனிதத்திடமிருந்து நல்லாசி பெற்று வருமாறு கேட்டுக்கொண்டார். பூக்கள், சாம்பிரானி,ஒருசீப்புவாழை, கொஞ்சம் மஞ்சள் பூலூர் கொண்டு சென்று அங்கு படைத்தேன். அதற்கு பதிலாக, கையில் காப்பும்,இடைவார்செய்து போட்டுக்கொள்ள மெல்லிய மஞ்சள் துணியும்அங்கு கிடைத்தது.

இன்ஷா அல்லாஹ், உனக்கு வலிக்காது!” அம்மா சொன்னார்.

நான் சுன்னத் செய்துகொள்ளப் போவதை அறிந்த எனது மாமா வந்தார். நான் அவரிடம் கேட்டேன்.

“மாமா,சுன்னத் செய்தால் வலிக்குமா?”

மாமா அதற்கு மிகவும் உற்சாகமாகப் பதில் அளித்தார்.

“வலிக்காது, எறும்புக் கடிபோல்தான் இருக்கும்!”

நானும் அவர் சொன்னதை நம்பினேன். அவர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் ஒப்புவித்தேன். எனக்கு இனி பயம் இல்லை என்றேன். ஆனால் அம்மா மீண்டும் அழுததைப் பார்த்து, மீண்டும் எனக்குப் பயம் ஏற்பட்டது.

“சின்னப்பையனாக இருக்கிறான், சுன்னத் செய்யத்தான் வேண்டுமா?” அம்மா என்  அடர்ந்தமுடியை கோதியவாரே மாமாவிடம் முறையிட்டார். மாமாவும் தலையாட்டி தன் கவலையை வெளிப்படுத்தினார். ஆனால் அம்மாவின் புலம்பலைக் கேட்ட அப்பாஉடனே குறுக்கிட்டார்.

“டீனின் குரல், பெரிய ஆள் குரல்போல மாறிவிட்டது!”

அம்மா அந்த விளக்கத்தால் திருப்தியடையவில்லை. நான் இப்போதுதான் மலாய்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கின்றேன். ஒவ்வொரு காலையும் என் அத்தைதான் என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். இல்லாவிட்டால், மதியம் வரை வீட்டில் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன். என்வெள்ளைச் சட்டையும் வெள்ளை முழுக்கால் சிலுவாரும் கொஞ்சம் அழுக்காக இருந்தாலும் நான் பள்ளிக்குப் போகமாட்டேன். என் சப்பாத்து மழைப் பட்டு அழுக்காகியிருந்தாலும்போதும், அதுவே நான் பள்ளிக்கு மட்டம் போட போதுமான காரணமாகிவிடும்

சுன்னத் செய்து  கொள்ள நாள் நெருங்க நெருங்க, நான் விளையாடுவதை அம்மா தடுத்தார். ஏன்?

“அங்கும் இங்கும் ஓடாதே, ஆட்டம் போடாதே, டீன்!” அம்மா சொன்னார்.

அதனால் நான் வீட்டிலியே விளையாடினேன். வீட்டின் அடிப் பகுதியில் பேடாவுடன்“கூட்டாஞ்சோறு”  விளையாடினேன். பேடா, மான் காலில் வீட்டில் என்னுடன் குர் ஆன்படிப்பவள், என் வயதை ஒத்தவள்.

“நீ சுன்னத் செய்துகொள்ளப் போகிறாயா?” ஒன்றாக விளையாடும்போது பேடா கேட்டாள்.

“ஆம்,” என்றேன்.

சுன்னத் எப்படிச் செய்வார்கள்?” பேடா கேட்டாள்.

“தெரியவில்லை. கத்தி பாவிப்பார்கள்போல!” என்றேன்.

பேடா நடுங்குவது போன்று பாசாங்கு செய்தாள்.

“வலிக்குமா?”என்று கேட்டாள்.

“நிச்சயம் வலிக்கும்தான்!” என்றேன். நாங்கள் விளையாட்டைத் தொடர்ந்தோம், இலைகளை வெட்டினோம்,சிகரெட் டின்னைசட்டியாக்கி அதில் ‘சாயுர் லோடேகுழம்பு‘சமைத்தோம்’.

“டீன், நீ சுன்னத் செய்த பிறகு நாம் ஒன்றாகக் கூட்டாஞ்சோறு  விளையாட்டு விளையாட முடியாதா?” பேடா கேட்டாள்.

“முடியும்,” நம்பிக்கையுடன்நான்கூறினேன். “ஏன் முடியாது? கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!” என்றேன் மேலும்.

பேடா பேசாமல் இருந்தாள், ஆனால் அவள் முகம் நான் சொன்னதை நம்பவில்லை என்று காட்டியது.

“ஏன் கேட்கிறாய்?”

“போடீனால் ஒரு மாதத்திற்கு பிறகுதான்நடக்கமுடிந்தது,” பேடாவின் குரலில் கவலை தொனித்தது.

நான் சிரித்தேன்.

“போடீன் பொட்டையன்!” என்றேன், பேடாகலகலவென்றுசிரித்தாள். நாங்கள் வாழை இலைகளை சின்ன சின்னதாக நறுக்கி சாயுர் லோடே குழம்பு வைக்கும் வேலையைத் தொடர்ந்தோம்.

போடீனின் சம்பவம் எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றது. ஒரு வருடத்திற்கு முன்பு அவனுக்கு சுன்னத் செய்த பிறகு, அவன் கால்களை அகட்டிவாத்துபோல் நடந்தான். ஒரு கையால் கைலியைத் தூக்கிக்கொண்டு, இன்னொருகையில் விசிறியைப் பிடித்திருந்தான். நடக்கும்போது கால்களுக்கு இடையில் அவ்வப்போது விசிறிக்கொண்டான்.

நான் கேட்டபோது“காற்றோட்டமாக இருந்தால், எரிச்சல் குறையும்,”என்றான். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நான் அவனது மஞ்சள் கைலியைத் தூக்க முயன்றேன். போடீன் கத்தினான். நான் அவனது கைலியை வேக வேகமாக கீழே விட்டேன்.

“வலிக்குதா?”

“எரியுது.”  வலியை உறுதிப்படுத்திக்கொள்ள முகத்தைச்சுளித்தான்.

போடீன் இப்போது பெரியவனாகிவிட்டான், எங்கள் வீட்டு முச்சந்தி வரை சைக்கிள் மிதிக்கிறான், தென்னை மரம் ஏறுகிறான். அவனது தலைமுடி ஹிமாலயா எண்ணெய்யினால் மின்னுகிறது. விசிலடிக்கிறான், சமயங்களில் சிகரெட்டும் பிடிக்கின்றான்.

“நானும் போடீன்  போலஆகப்போகிறேன்,” திடீரென்று பேடாவிடம் கூறினேன்.

பேடா ‘மீன்’ ஆய்வதை நிறுத்தினாள். மீனாகபு பாவித்த செடுடுக் மரக்கட்டையை ஓரமாக நகர்த்திவிட்டு  என் முகத்தைப் பார்த்தாள்.

“போடீன் குறும்புகாரன்!” பேடா தன் உதட்டைப் பிதுக்கினாள்.

“ஏன்?” நான் கேட்டேன்.

“என்னைத் தினமும் தொந்திரவு செய்கிறான். நேற்று  என்னைத் துரத்தினான். நான் மாமாககடைக்குப்போகும்போது  விசில் அடித்தான்.”

“அவன் சிகரெட் பிடிக்கிறான்,” நான் தெரிவித்தேன்.

“சிகரெட் பிடிச்சாநல்லாருக்குமா?”பேடா கேட்டாள்.

“தெரியவில்லை. இன்னும் புகைக்க முயற்சிக்கவில்லை,” சிரித்துக்கொண்டே கூறினேன்.

“நீ நிஜமாகவே போடீன்போல ஆகப்போகிறாயா?” பேடா மேலும் கேட்டாள்.

நான் தலையாட்டினேன். ஆம், நான் அவன் போன்றுதான் ஆகப் போகின்றேன். சைக்கிள் விடலாம்,சிகரெட் பிடிக்கலாம், தலைக்கு எண்ணெய் வைக்கலாம், விசில் அடிக்கலாம், இரவில் வெளியே போகலாம், பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. பிறகு மான் காலில் வீட்டில் குர் ஆன் வகுப்புக்கும் போக வேண்டியதில்லை.

“நீ போடீன் போன்று ஆகிவிட்டால், நாம் இருவரும் கூட்டாஞ்சோறு  விளையாட முடியாது.”

பேடாவின் அச்சுறுத்தலைக்கேட்டு சிறிது நேரம் மௌனமானேன். பேடா என்னுடன் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடாவிட்டால், சிரமம்தான்.

என்னுடைய அக்காள்கள் யாவரும் பெரியவர்களாகிவிட்டனர். அம்மாவிற்கு சமையற்கட்டில் உதவி செய்து கொண்டுகாலையிலிருந்து சாயங்காலம் வரை வீட்டுக்குள்தான் அடைந்து கிடப்பார்கள். என் தம்பி, தங்கைகளோ மிகவும் சிறு பிள்ளைகள். பேடாவைத் தவிற வேறு இரண்டு, மூன்று நண்பர்கள்எனக்குஉண்டு. எனக்கு நண்பர்கள் குறைவுதான். அம்மாவிற்கு நான் தூரமாகச் சென்று விளையாடுவது பிடிக்காது. கண்ட கண்ட பிள்ளைகளுடன் நான் பழகுவதும் பிடிக்காது. கடலோரத்திற்கு அல்லதுகம்பத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்கு சென்று விடுவேன் என்றும் அவருக்குப் பயம். பேடா ஒருத்திதான் என்னுடன் நட்பாக நம்பிக்கையான ஆள். சமயங்களில் நான்தைரியத்தை வரவைத்துக்கொண்டு முச்சந்தியைத் தாண்டி மிட்டாய் அல்லதுஐஸ் கெப்பால் வாங்கச் சென்றால், என்னைத் தேடுவார். நான் பேடா வீட்டிற்கு சென்றேன் என்பேன். அம்மா அதற்கு மேல் ஒன்றும் கேட்கமாட்டார்.

“உனக்கு போடீனைப் பிடிக்காதா?” நான் மீண்டும் பேடாவிடம் கேட்டேன்.

பேடா முகத்தை சுளித்து உதட்டைப் பிதுக்கினாள்.

“அவன் என்னுடன் நன்றாக பழகுகின்றான்!” நான் போடீனுக்குஆதரவாகப் பேசினேன்.

“அவன் கெட்டவன். நேற்று மக்ரிப் நேரத்தில்வீட்டு முன் குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தேன்.அவன்ஒரு வாளி நிறையத் தண்ணீரைஅள்ளி என் மேல் கொட்டினான். எனக்கு மூச்சடைத்து!” பேடா வருத்தமாகச் சொன்னாள்.

“எனக்கும் உன் மீது தண்ணீர் ஊற்றப் பிடிக்கும்,”சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“நீ பரவாயில்லை.”

நான் மீண்டும் சிரித்தேன். ஆனால் என் உள் மனம்,சுன்னத் முடிந்ததும் போடீன் போல ஆக வேண்டும் என்று தூண்டியது.

இரவு உணவின்போது,  என் அம்மாவிடம் ஒரு கேள்வியை வைத்தேன்.

சுன்னத்திற்கு பிறகு நான் சைக்கிள் மிதிக்கப் பழகலாமா, மா?”

“நீ ஏன் சைக்கிள்  பழகஆசைப்படுகிறாய்?” அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“நான் போடீன் போன்று ஆகப் போகிறேன்!”

“நீ இன்னும் சின்னப் பையன். உன் அப்பா போன்று பெரியவனானதும், சைக்கிள் விடலாம்,” சிரித்தவாரே அம்மா பதில் அளித்தார்.

“நான்தான் சுன்னத் செய்த பிறகு பெரியவனா ஆகிவிடுவேனே?”

அம்மா சிரித்தார். என் அக்காள்களும் உடன்சேர்ந்து சிரித்தனர். நான் பெரியவனாகிவிட்டதாக நினைத்தால் இனிமேல் அத்தை என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தேவை இல்லை என்று கிண்டலடித்தனர்.

“பள்ளியில் கொண்டுவிடவேண்டும், வரும்போது அழைத்துவர ஆள்வேண்டும்,” என்று கூறினார்கள்.

சுன்னத் முடிந்த பின் நான் சைக்கிள் விடப் பழகுவதைப் பற்றி அம்மா உறுதியளிக்காதது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

“மூன்று சக்கர சைக்கிள்,” அக்கா சொன்னாள். அது என் தம்பி, தங்கைகள் வீட்டைச் சுற்றி மிதிக்கும் சிறு பிள்ளைகளுக்கான சைக்கிள்.

“அந்த சைக்கிள் இல்லை,போடீன் பாவிக்கும்சைக்கிள்மாதிரி,”என்றேன்.

அவர்கள் சிரித்தனர். அவர்கள் ஏன் அதற்கு அவ்வளவு சத்தமாய் சிரித்தனர் அன்று எனக்கு புரியவில்லை.

பள்ளிவிடுமுறை இன்னும் சிறிது நாட்களில் தொடங்கி விடும். அம்மா எனது ‘பெரிய’ நாளுக்காக தயார்நிலையில் இருந்தார். ஒவ்வொரு இரவும் அதைப் பற்றிய விசயங்களை என் அப்பாவுடன் கலந்தோசித்துக் கொண்டிருந்தார் .எங்கள் உறவுக்காரர்கள் யாரையெல்லாம்அழைப்பது, அதேநாளில் எனது குர்ஆன் பாடநிறைவு விழாவையும் வைக்கலாமா (நான்மான் காலிட் வகுப்பில் 30 ஜூஸ்களை ஓரளவு மனனம் செய்திருந்தேன்). விருந்தில் நெய்ச் சோறு அல்லது வெள்ளைச் சோறு பரிமாறுவது போன்ற விபரங்கள் பேசினர்.

எனக்கு சந்தோசமாக இருந்தாலும், நான் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளவில்லை.(அவர்கள் பேசிக்கொள்ளுவது சரியாகப் புரியவும் இல்லை) அம்மா அடிக்கடி எனக்கு சுன்னத்தன்று என்னவிதமான ஆடை வேண்டும் என்றும் அன்றைய தினம் காலையில் என்ன உணவு வேண்டும் என்றும் கேட்டவண்ணமிருந்தார். எனக்குஇளநீல நிற பட்டுத் துணியிலான பாஜூ குரொங் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்.

“சுன்னத் செய்வதற்கு முன் நீ அழகாக உடுத்த வேண்டும்.” என்றார்அம்மா.

எனக்கு எந்த மாதிரியான சொங்கோக் வேண்டுமென்றும் கேட்டார்.sunat 04 கறுப்புவெல்வெட்துணியில் செய்தது வேண்டுமா, நீலவெல்வெட்துணியில் வேண்டுமா என்று கேட்டார். என்னுடைய உணவு முறைகளிலும் அக்கறை எடுத்துக்கொண்டார். இறால், நண்டு வகைகள் சாப்பிடக்கூடாதாம். மீன் கிச்சாப் மட்டும் சாப்பிடலாமாம். முட்டையும் நான் தொடக்கூடாதாம், இல்லாவிட்டால் சுன்னத் அன்று உடம்பு அரிக்குமாம்.

அம்மா சொன்னதையெல்லாம் கடைப்பிடித்தேன். மேலும் எனக்கு அதில் சந்தோசம்தான். ஏனென்றால் ஹரி ராயா தொலைவில் இருக்கும் போதே எனக்கு புதிய ஆடைகள் கிடைக்கும். அப்பா இளநீல நிற பட்டுத் துணி வாங்கிவந்த அன்று, அம்மா அதனை வெட்டும் வரையில் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மாமாவும் அடிக்கடி எனக்கு சாக்லேட்,மிட்டாய்,  பலகாரங்கள் வாங்கிக்கொடுத்தார். அவை எனக்கானசன்மானமாம்.

“நீ தைரியசாலி, அதற்குதான்  உனக்கு இதையெல்லாம் மாமா வாங்கி வந்தேன்.”

“எறும்புக்கடி போலத்தான் இருக்கும். யாராக இருந்தாலும் தைரியமாக இருப்பார்கள்,” சிரித்துக் கொண்டே சொன்னேன். மாமாவும் சிரித்தார் ஆனால் முந்தைய அளவுக்கு இல்லை.

நான் இன்னமும் பேடாவுடன் சமையல் விளையாட்டு விளையாடுகின்றேன். சமயங்களில் வீட்டின் முன் இருக்கும் புதர்களில் குருவிக் கூடு தேடுவோம். அம்மா தூரமாக எங்களைப் போகவிடமாட்டார். காத்துக் கறுப்பு பிடித்திடுமாம்.

“நீ சுன்னத் செய்துகொள்ளப் போகிறாய். உடல்நலமாக இருக்க வேண்டும்!” அம்மா அறிவுறுத்தினார்.

ஆனால் நான் பேடாவுடன் இருப்பதால் அம்மா தடுக்கவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் கைகோர்த்து லாலாங் காட்டிலும் புதர்களிலும் குருவிக் கூடு தேடுவோம். அன்றைய நாளிலேயே என் குர்ஆன் பாட நிறைவையும் செய்துவிடலாம் என்று அப்பா முடிவு செய்துவிட்டதால் நான் மான் கலீல் வீட்டுக்குச் செல்வதில்லை. மான்கலீல் வீட்டில் செலவிடும் நேரத்தையும் புதர்களில் சுற்றச் செலவிட்டோம். அல்லதுமரவள்ளிக் கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு தேட கம்பத்து விளிம்பில் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்குச் சென்று விடுவோம்.

 திரும்பி வரும்பொழுது சூரியன் மறைந்திருக்கும். அம்மாவும்  வாசற்படியில் கவலையுடன் காத்திருப்பார். நாங்கள் இருவரும் எங்கள் அழுக்கேறிய உடைகளுடனும், சேற்றுக் கால்களுடனும், வியர்வையுடன் மூச்சுவாங்க சமைற்கட்டுக்குள் ஓடிவிடுவோம். ஆனால் நாங்கள் அம்மாவின் ஏச்சுக்களை கேட்டபடி, சிரித்துக்கொண்டே துண்டையும் வாளியையும் சமையல்கட்டிலிருந்து எடுத்துக்கொண்டு,பேடா வீட்டின் முன் இருக்கும் குழாய் அடியில் குளிக்கச் செல்வோம்.

ஒரு ள் வாரக் கடைசியில், நாங்கள் இருவரும் பசியாறலுக்குப்பின் வெளியே சென்றோம். நாங்கள் வெளியே சென்றது அம்மாவுக்குத் தெரியாது. அவர் நாங்கள் வீட்டின் கீழ் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடுவதாய் நினைத்துக்கொண்டார். நாங்கள் இருவரும் மரவள்ளிக்கிழங்கு வாங்க காய்கறித் தோட்டத்திற்குச் சென்றோம். பேடாதான், பொய்யாக “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றாள்.

“நாம் உண்மையாகவே சமைக்க வேண்டும்,” என்று கூறியபின் என்னைக் காய்கறித் தோட்டத்திற்கு அழைத்தாள். எங்களிடம் இருந்த காசைக் கணக்கிட்டோம். ஐந்து காசு இருந்தது.

“போதும்,” என்ற பேடா என் கையை இழுத்தாள், பிறகு அம்மாவிற்கு தெரிவதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

எங்களுக்கு அந்த சீனக் காய்கறித் தோட்டக்காரர்களின் பிள்ளைகளை நன்கு தெரியும். ஐந்து காசு கொடுத்து ஒரு கூடை மரவள்ளிக்கிழங்கு வாங்கினோம். கிளம்புவதற்கு ஆயுத்தமானபோது, அந்த சீனப் பிள்ளைகள் எங்களைத் தடுத்தனர்.

“இங்கேயே சமைத்துக்கொள்ளுங்களேன்,” என்றனர். “வீட்டுக்குக்கொண்டு போக வேறு தருகின்றோம்!” அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தினர். நாங்களும் அந்த காய்கறி கொல்லையிலேயேகிழங்குகளைஅவித்து  அவர்களுடன் ஒன்றாக சாப்பிட்டோம்.

ஏறக்குறைய மூன்று மணி போலத்தான் நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம். எங்கள் முகம் அவ்வளவு நேரம் வெய்யிலில் காய்ந்ததால் வறுத்த இரால் போன்று சிவந்துஇருந்தது. எங்களது உடைகள் மண்ணும் சகதியும் பட்டு அழுக்கேறி கிடந்தன.

அம்மாவும், அக்காள்களும் மதியம் நான் சாப்பாடிற்கு வராததால் கலவரமாகிப் போயிருந்தனர். அம்மா என்னை பேடா வீடு வரைக்கும் சென்று தேடியிருக்கின்றார்.  அங்கே நான் இல்லை. அக்காள்களையும் அண்டை வீடுகளில் தேடிப் பார்க்க சொல்லியிருக்கின்றார். அங்கேயும் நான் இல்லை.

நாங்கள் வீடு வந்தபோது, அம்மா பைத்தியம் பிடித்தவர்போல் இருந்தார்.

“டீன், நீ எங்கே போனாய்? டீன், நீ எங்கே போனாய்?” அம்மா கத்தினார். பிறகுஅழுதார். நானும்அம்மாவுடன்சேர்ந்துஅழுதேன்.பேடாவுக்கும்முகம்கோணிப் போனது.

“உனக்குசுன்னத்ஆகப்போவது, தெரியுமா தெரியாதா?” அம்மா மீண்டும் கேட்டார்.

“நான் மரவள்ளிக்கிழங்குவாங்கப்போனேன்,” என் மனம் சாந்தம் அடைந்தபின் வாய்த்திறந்தேன். ஆனால் அம்மா இன்னும் வேகமாக ஒப்பாரி வைத்தார்.

“உனக்கு சுன்னத் ஆகப்போறது தெரியுமா, தெரியாதா?” அதே கேள்வியை பலதடவை கேட்டார்.

எனக்கு அவ்வளவாக புரியவில்லை. நான் பேடாவுடன் காய்கறித் தோட்டத்திற்குச் சென்று மரவள்ளிக்கிழங்கு வாங்கியதில் என்ன தவறு?அந்த சீன விவசாயின் குடிசைக்கு வெளியே காலியான மண்ணெண்ணெய்டின்னில் மரவள்ளிக்கிழங்குகளை நாங்களேஅவித்து  சமைத்ததில் நாங்கள் மிகவும் சந்தோசம் அடைந்தோம். ஒன்றுகூட கடினமாக இல்லை. எல்லாமே சாப்பிட மிகவும் மிருதுவாக இருந்தன. அந்த சீனப் பிள்ளைகள் மரவள்ளிக்கிழங்கில் சிறிது உப்புச் சேர்க்கச் சொன்னார்கள், அப்போதுதான் சுவை கூடுமாம். நான்தான் குடிசைக்கு பின்னால் இருந்த காய்ந்தகுச்சிகளைக் கொண்டு நெருப்பைமூட்டினேன், தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் அளவுக்கு எரிய வைத்து விசிறியும் விட்டேன்

பேடாவையும் அம்மா ஏசினார்.

“பேடா, டீனுக்கு சுன்னத் ஆக போகிற விசயம் உனக்கு தெரியாதா?” அம்மா சலித்துக்கொண்டார், பல தடவை பெருமூச்சு விட்டார்.

பாவம் பேடா. அவள் பார்க்கப் பரிதாபமாக இருந்தாள்.   நான் சுன்னத் செய்துகொள்ளப் போவதால், அம்மா என்னை ஏன் காய்கறித் தோட்டத்திற்கு போவதை தடுக்கின்றார்என்பதுஅவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை காய்கறித் தோட்டத்தில் பன்றியோ அல்லது காத்துக் கருப்போ என்னைச் சீண்டிவிடும் என்று அம்மாகூறியிருந்தால் பேடா புரிந்துக்கொள்வாள். பிறகு அழுதாள்.

பேடா சென்ற பிறகு, அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார்,“நீ இனிமேல் வெளியே போகாதே. அப்படி விளையாடுவதாக இருந்தால், வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாடு.” ஆனால் அம்மா அன்று என்னை அடிக்கவில்லை.

எப்போது எனக்கு சுன்னத் செய்வது முடிவாகியதோ, அன்றிலிருந்து அம்மா என்னை அடிப்பதே இல்லை. இல்லாவிட்டால், இதுபோன்ற தவறுகளுக்கு என் தொடைகள் வீங்கும் அளவிற்குக் கிள்ளுவார். இப்போது என்னவென்றால் அழுகிறார், என் கைபிடித்து வீட்டினுள் அழைத்துச்சென்று சுத்தமான மாற்றுத் துணிகளைப்போட வைக்கிறார்.

அப்பாவும் என்னிடம் சத்தம் போடுவது இல்லை. அவருக்குத் தெரியும் நான் காய்கறித் தோட்டத்தில் சுற்றினேன் என்று. ஆனால் ஒன்றாக இரவு உணவுக்கு அமரும்போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதைவிட ஆச்சர்யம் என்னையும் பேடாவையும் அடுத்த வாரம் சினிமாவிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார்.

ஒரு வாரத்திற்கு பிறகு அம்மாவின் கட்டளையை மறந்துவிட்டேன். எவ்வளவு கெஞ்சிக் கூப்பிட்டும்பேடாமுதலில் காய்கறித் தோட்டத்திற்கு வர மறுத்துவிட்டாள்.

“கொஞ்ச நேரம்தான்’” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கிளம்பினேன். “நாம் மரவள்ளிக்கிழங்கை வாங்கி வந்து வீட்டில் சமைப்போம்,” என்றபடியே அவளை இழுத்துக்கொண்டுசென்றேன். சற்றுநேரத்தில் நாங்கள்காணாமல் போய்விட்டோம்.

ஆனால் அங்கு சென்றதும் சந்தோசத்தில்நேரம் போனதே தெரியாமல் அம்மாவின் தடைகளை மறந்தேன். பேடாவும் அவ்வாறே என்னுடன் சந்தோசத்தில்சேர்ந்துகொண்டாள். சீனப் பிள்ளைகளுடன் சேர்ந்து நாங்களும் மண்வெட்டியால்  மரவள்ளிக்கிழங்கு செடியைக் கொத்தினோம்.தழைத்துவளர்ந்தசெடிகளாகத் தேர்த்தெடுத்துப் பிடிங்கினோம். நன்கு கொழுத்த கிழங்குகளாய்ப் பார்த்து கூடையில் போட்டோம்.

“வாங்க கிழங்குகளைஅவிக்கலாம்,” என்றேன்.

பேடா நான் சொல்வதைக் கேட்டுத் தயங்கினாள். ஆனால் அதை  நான்பொருட்படுத்தவில்லை. நான் குடிசைக்குப் பின்னால் கிடந்த காய்ந்த குச்சிகளைப் பொறுக்கி வந்து நெருப்புப் பற்ற வைத்தேன். அன்று போன்றே கிழங்குகளைஅவித்துச் சாப்பிட்டோம்.

ஆனாலும்இந்தத் தடவை மதியத்துக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டோம். ஆனால் நாங்கள் காலையிலிருந்தே வீட்டில் இல்லை என்பது அம்மாவிற்குத் தெரிந்துவிட்டது. நாங்கள் மூச்சிரைக்க வந்தோம் எங்கள் முகங்களும் சிவந்திருந்தன.

“எங்கிருந்து வருகிறாய்?” அம்மா கேட்டார். அவர் முகம்காட்டமாயிருந்தது

“சும்மா காத்து வாங்கப் போனோம்,” பேடா சொன்னாள்.

அம்மா நம்பவில்லை. நாங்கள் இதுவரையில் அம்மாவிடமும் வேறு யாரிடமும் பொய் சொன்னதில்லை. அதனால் காய்கறித் தோட்டத்திற்கு சென்று மரவள்ளிக்கிழங்கு வாங்கியதை ஒப்புக் கொண்டேன்.

அம்மா விரைந்து வீட்டிற்குள் சென்று, அவரது அறையிலிருந்து சிறிய பிரம்பை எடுத்துக்கொண்டு வந்தார்.

எனது பிட்டத்தில் மூன்று முறை அடித்தார். வேகமாக அல்ல. ஆனால் ஏதோதிருக்கைவால் சவுக்கால்அடித்தது போன்று நான்அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அம்மாவும் சேர்ந்து அழுதார். என் அக்காள்கள் என்னைத் தூக்கி பிட்டத்தில் தட்டிக் கொடுத்தனர். சமையற்கட்டே அல்லோலகல்லோலப்பட்டது. நான் கத்தினேன்.

“நான் சுன்னத் செய்துகொள்ள மாட்டேன்! எனக்கு சுன்னத் வேண்டாம்!”

அம்மா மேலும் கத்தி அழுதார். நான் அழுவதைப் பார்த்து அழுதாரா அல்லது நான் சுன்னத் செய்து கொள்ள மறுத்ததை கேட்டு அழுதாரா தெரியவில்லை.

சற்று அமைதியான பின், அம்மா மீண்டும் என்னிடம் கேட்டார்.

“டீன், நீஉண்மையிலேயேசுன்னத் செய்துகொள்ளமாட்டாயா?”

நான் கண்களைத் துடைத்தேன். என முகம் சோர்ந்திருந்தது.

“நான் சுன்னத்செய்துகொள்ள மாட்டேன்!” நான் வேண்டுமென்றே என் பிட்டத்தைத் தடவினேன்.

“அப்படி சொல்லாதே டீன். நான் சும்மாதான் அடித்தேன்,” அம்மாவின் குரலில் கவலை தெரிந்தது.

“நீங்கள் வேகமாய் அடித்தீர்கள்!” நான் முனகிக்கொண்டே பிட்டத்தைத் தடவினேன்.

sunat 01“நீ குறும்பு செய்கிறாய், நான்தான் உன்னை வீட்டை விட்டு தூரத்தில் போய் விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேனே? உனக்கு சுன்னத் ஆகப்போகிறது. நீ உடம்பை பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்ற அவரது குரல் கவலையில் தொனித்தது. பிறகு அன்போடு என்னை அணைத்து என் கன்னங்களைத் தடவினார்.

அதனால் நான் ஆனந்தம் அடையவில்லை. சுன்னத் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

“நீ சுன்னத் செய்துகொள்ளாவிட்டால் அப்பா ஏசுவார்.” அம்மா பயமுறுத்தினார்.

நான் பேசாமல் இருந்தேன். அப்பா ஏசினால் நான் எப்படியும் சுன்னத் செய்யத்தான் வேண்டும்.

“நான் போடீன் போன்று சைக்கிள விட வேண்டும்,” என்றேன்.

அம்மா தலையசைத்தார். புன்னகைத்தார். என்னை இறுக அணைத்துக்கொண்டார்.

“எனக்கு போடீன் வைத்திருப்பது போன்று சைக்கிள் வாங்கிக் கொடுப்பீர்களா?” நான் கட்டாயப் படுத்தினேன்.

அம்மா உண்மையாகத் தலையாட்டினாள், தன் சிவந்த கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“நீ போடீன் மாதிரி சைக்கிளில் சென்றால் அப்போ பேடாஎன்னசெய்வாள்? நீ அவளுடன்கூட்டாஞ்சோறு  விளயாட்டை விளையாட முடியாதே?” அம்மா கேட்டார்.

நான் பேசாமல் இருந்தேன். பேடாவிற்கு நான் போடீன் போன்று ஆவது பிடிக்காது. எனக்கும் அது மாதிரி சைக்கிள் இருந்தால், நிச்சயம் நான் அவனுடன்தான் நெருக்கமாக சந்து பொந்துகளில் கடைத்தெருவிற்கு சைக்கிளை மிதித்து செல்வேன்.

என்னால் பேடாவை விட்டுப் பிரிய இயலாது. நாங்கள் ஒரு தடவை கூட விளையாட்டின் போது சண்டையிட்டுக் கொண்டதில்லை. ‘கீரை’ நறுக்கும்போதும் ‘மீன்’ ஆயும்போதும் ‘சோறு’ சமைக்கும்போதும் எங்களுக்குள் பிணக்குவந்ததே இல்லை. ஆனால், குர்ஆன் வகுப்பில் மட்டும் சமயங்களில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வோம். நான் தட்டுத்தடுமாறி வாசிக்கையில் மான் காலில் அதட்டியதைப் பார்த்து பேடா என்னைக் கிண்டலடித்தாள். சில சமயங்களில் பேசிக்கொள்ளமாட்டோம், ஆனால் சிறிது நேரத்திற்குத்தான். காரணம் என்னால் தனியாக விளையாட முடியாது. பிறகு நானே போய் அவளிடம் பேசுவேன்.

“உனக்குக் கட்டாயம் போடீன் பாவிக்கும் சைக்கிள் போன்றதொன்றுதான் வேண்டுமா?” நான் பேசாமல் இருப்பதைப் பார்த்த  அம்மா மீண்டும் வினவினார்.

நான் தலையாட்டினேன். பேடாவிற்கு போடீன் மீது கோபம். அவன் எப்போதும் அவளைத் தொந்தரவு செய்கிறான். நான் சைக்கிள் ஓட்டிப் பழகிய பின் பேடாவிற்கும் கற்றுக்கொடுப்பேன். மேலும்நாங்கள் இருவரும் ஒன்றாக அந்த சைக்கிளில் வலம் வரலாம்.

மறுநாள் நான் பேடாவை சந்தித்தபோது, அம்மா எனக்கு சைக்கிள் வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று கூறினேன்.

“அப்படிவாங்கித்தராவிட்டால்  நான் சுன்னத் செய்து கொள்ளப்போவது இல்லை,” என்றேன்.

“நீயும் போடீன் போலத்தான் ஆகப் போகிறாயா?” முகத்தை சுருக்கிக கொண்டு கேட்டாள் பேடா.

“இல்லை,” என்றேன். “நாம் இருவரும் ஒன்றாகவே சைக்கிளில் பயணிக்கலாம்!” மேலும் கூறினேன்.

“ஆனால் எனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்காது. பையன்கள்தான் சைக்கிளில் ஏறுவார்கள்,” என்றாள் பேடா. “பெண்கள் சைக்கிள் விட மாட்டார்கள். நீ எங்காவது பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்திருக்கிறாயா?” என்னைக் கேட்டாள்.

அதுவும் ஒரு வகையில் உண்மைதான். எங்கள் கம்பத்தில் ஒரு தடவைகூட பெண்கள் சைக்கிள் மிதித்து நான் பார்த்ததில்லை.

“உனக்கு சைக்கிள்விட வெட்கமா?” நான் கேட்டேன்.

“இல்லை,”என்றாள் பேடா. “ஆனால் நான் போடீன் போன்று ஆக விரும்பவில்லை!” மேலும் சொன்னாள்.

“ஆனால் நீ போடீன் இல்லையே!” என்றேன்.

“ஆண்பிள்ளைகள்தான் சைக்கிள் மிதிப்பார்கள்!” பேடா முனகினாள்.

அன்றுமாலை நாங்கள் இருவரும் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடவில்லை. பேடாவும்  எப்போதும் போல் என்னுடன் சேர்ந்து குழாய் அடியில் குளிக்க வரவில்லை.அவள் விரைவாகவே வீட்டிற்குச் சென்றுவிட்டாள். வயிற்று வலியாம்.

சுன்னத் செய்யும் நாள் நெருங்க நெருங்க, அம்மா நான் வெளியில் சென்று விளையாடுவதைக் கடுமையாகத் தடுத்தார். நான் சமையற்கட்டு பக்கமே பெரும்பாலான நேரத்தில் விளையாடினேன். வீட்டின் கீழே கூட விளையாட அனுமதிப்பதில்லை.

“இனிமேல்நீகூட்டாஞ்சோறுவிளையாட்டை விளையாடதே,பொட்டச்சிங்கமாதிரி!” என்றார் அம்மா ஒருநாள்.

“ஆனால் நான் பேடாவுடன்தானே விளையாடினேன்,” என்றேன் ஆச்சர்யமாக.

இதற்கு முன்பு நான் பேடாவுடன் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடும்போது அம்மா தடுத்ததில்லை, ஆனால் இப்போது மட்டும் ஏன் தடுக்கின்றார்? அது மட்டுமல்லாமல் என்னை வீட்டிலியே குளிக்கச் சொல்லிஎன்சந்தேகத்தைஅதிகமாக்கினார்.

“ஆனால்எனக்குகுழாய் அடியில்தான் குளிக்கப் பிடிக்கும்,” என்றேன்.

“நீ குழாய் அடியில் பல மணி நேரம் குளிக்கிறாய். மக்ரீப்புக்கும் நீ வந்தபாட்டைக் காணாம்.” அம்மா சொன்னார்.

“நிறைய பேர் … ம்மா!”

“மக்ரீப் சமயத்தில் குளிப்பது நல்லதல்ல,” அம்மா மேலும் சொன்னார்.

ஆக, அன்று சாயங்காலம் நான் குழாய் அடியில் குளிக்கவில்லை. அம்மா என்னை வீட்டிலியே குளிப்பாட்டிவிட்டார். பாவம் பேடா, நிச்சயம் அவள் குழாய் அடியில் காத்திருப்பாள். என் மனம் பல தடவை இதை நினைத்தது.

நான் நினைத்த மாதிரியே மறுநாள் பேடா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

“நேற்று நான் குழாய் அடியில் உனக்காக காத்திருந்தேன். ஆனால் நீ வரவில்லை!” அவள் கடுகடுப்புடன் சொன்னாள்.

நான் பேசாமலே இருந்தேன். என் தவறுதான்.

“வா,கூட்டாஞ்சோறு விளையாடலாம்!” என்னை அழைத்தாள்.

“எனக்குக் களைப்பாக உள்ளது,” என்றேன், சோம்பல் முறிப்பது போன்று பாவனை செய்தேன்.

“நான் சமைப்பதை பார்த்தால் மட்டும்போதும். நீ ஒன்றும் செய்யவேண்டாம். நானே சமையல் செய்கிறேன்!” பேடா என்னை வற்புறுத்தி என் கையைப் பிடித்து இழுத்தாள்.

நான் அக்கம் பக்கம் பார்த்தேன். அம்மா பார்த்து விடப்போகிறார் என்ற பயம்தான். ஆனால் அம்மா வீட்டினுள் இருந்தார்.

“வீட்டுக்குக் கீழே விளையாட வேண்டாம்,” என்றேன்.

“வேறு நல்ல இடம்?”

“சமையல் அறைக்குப் பின்னால்,” என்றவாறே நான் சமையற்கட்டுப் பின்னால் ஓடினேன்.

நாங்கள் அங்கு சற்றுத்தள்ளி மறைந்துகொண்டோம். எனக்கு பயம்தான். எங்கே அக்காள்கள் நான் பேடாவுடன் “கூட்டாஞ்சோறு”விளையாடும்போது பார்த்து விடுவார்களோ என்று. ஆனால் பேடாவின் வாய் தொனதொனத்துக்கொண்டே இருந்தது. வாழைஇலைகொண்டுவா, தண்ணீர்கொண்டுவாஎன்றுதொடரும்அவள்ஆணைகளைசெய்துகொண்டிருப்பதால்எங்கேஅம்மாவுக்குத் தெரிந்துவிடுமோஎன்றுபதற்றமாகவேஇருந்தது.

அரை மணி நேரத்திற்குப்பின், எனக்கு வயிற்றுவலி வந்தது போன்று நடித்தேன்.

“நீ பொய் சொல்கிறாய்!” என்றாள் பேடா.

“நான்தான்அப்பவே சொன்னேனே எனக்கு வயிற்ற வலி என்று. நீ என்னை வேலை வாங்காமல் இருந்தால்,இப்போது வலிபோயிருக்கும்!” நான் சலித்துக்கொண்டேன்.

“நீ சரியான சோம்பேறி!”

“நான் ஒரு ஆண்பிள்ளை!” என் குரலை கடுமையாக்கிக் கூறினேன்.

“ஆண்பிள்ளை சமைக்கமாட்டான்!”என்றேன்.

“நாம் சும்மாதானே விளையாடுகிறோம்,” பேடா சிரித்துக்கொண்டே சொன்னாள்.

நாங்கள் “சமைத்த” பண்டங்களை அவளைச் “சாப்பிடச்” சொன்னேன்.

“பசிஎடுத்திடுச்சி,” என்றவாறு நாங்கள் “சமைத்த” பண்டங்களைஅள்ளிஅள்ளிச் சாப்பிடுவதுபோலபாவனைசெய்தேன். பிறகுசிரித்துக்கொண்டே“சாப்பிட்டோம்”.

“குளிக்க குழாய் அடிக்கு வர மறந்திடாதே!” “சாப்பிட்ட” பின் பேடா சொன்னாள்.

“எனக்கு வயிற்றுவலி, குழாய்த் தண்ணீரில் குளிக்க முடியாது,” அவளுக்கு பதில் அளித்தேன்.

பேடா என்னையே உற்றுப் பார்த்தாள், அவளது பெரிய கண்கள் சந்தேகத்துடன் பிதுங்கின.

“நீ நம்பவில்லையா?”

நம்பவில்லை என்பதற்கான அடையாளமாகத் தலையாட்டினாள்.

“எனக்கு உண்மையாகவேவலிவந்துவிட்டால், உன்னால் என்ன செய்ய முடியும்!”

“சாயங்காலம் குழாயடியில் நீ குளிக்க வராவிட்டால், நான் இனிமேல் உன்னிடம் பேசமாட்டேன்!”

சில விநாடிகள் பேசாமல் இருந்தேன். “எனக்கு வலி இல்லாவிட்டால், குழாயில் குளிக்க வருவேன்,” என்றேன்.

சாயங்காலம் அம்மா குளிக்கச் சொன்னபோது, நான் கேட்காதது போன்று இருந்தேன். என் அக்காள்கள் என்னைக் குளிக்க அழைத்தபோது நான் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டேன். பிறகு துண்டு, சுத்தமான ஆடைகளை அக்குளில் அமுக்கிகொண்டு சமையல் அறை வழியாக வெளியேறினேன்.

என்னைப் பார்த்ததும் பேடா சிரித்தாள்.

“எங்கே உன் வாளி?” என்று கேட்டாள்.

“வீட்டில் இருக்கு. நான் கொஞ்ச நேரம் தான் குளிப்பேன். எனக்கு இன்னும் வயிறு வலிக்கிறது!”

இருந்தாலும் நான் எப்போதும் போலத்தான் குளித்தேன். பேடாவுடன் சிரித்து விளையாடினேன். அவள் மேல் நான் தண்ணிர் ஊற்ற, அவள் என் மீது ஊற்ற, சத்தம் போட்டு, பாட்டுப் பாடினோம், அம்மாவுடைய தடையை மறந்தேன். மக்ரீப்புக்கு பிறகுதான் வீட்டிற்குச் சென்றேன். உடல் காயும் வரைக்கும் நன்றாக துவட்டினேன், அப்போதுதானே நான் குழாய் அடியில் குளித்தது அம்மாவுக்கு தெரியாது.

நான் வீடு வந்த சமயம், அம்மாதொழுதுகொண்டிருந்தார், பிறகு உணவருந்தினோம். அம்மா, அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் சில மணி நேரம் காணாமல் போனதை பற்றி மறந்துவிட்டார் போலும். அவருக்கும் அக்காள்களுக்கும் நான் குழாயடியில் குளித்த விசயம் தெரிந்திருக்கக்கூடும், நான் வீட்டினுள் புகும்போது என் தலைமுடி ஈரமாகவே இருந்தது.

ஓவ்வொரு சாயங்காலமும் நான் முதலில் ஒளிந்துகொண்டு பிறகு பேடாவுடன் குழாயடியில் குளிக்க ஓடிவிடுவேன். அதே போன்றுதான் “கூட்டாஞ்சோறு” விளையாடவும் மறைவான இடம் தேடித்தான் என் தோழியுடன் விளையாடுவேன்.

எனினும், அம்மா முன்புபோல என்னைத் திட்டுவதில்லை. களைப்பாக ஆகும் வரை பேடாவுடன் ஓடி விளையாடாதே,காய்கறித்தோட்டம் வரைக்கும் போகாதே, என்பார்.

நான் சுன்னத் செய்துகொள்ளும் நாளும் வந்தது.விருந்தாளிகள்பலர் வந்தனர். மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே எங்கள் சொந்தபந்தங்கள் வரத்தொடங்கி விட்டனர்.  எல்லோரும் என் பெற்றோருக்கு அன்பளிப்பு கொண்டு வந்தனர். என் மாமாவும்அத்தையும்மற்றசொந்தங்களுடன்இரவுவீட்டில்தங்கினர்.விடியற்காலை வரை சமையற்கட்டில்உறவினர்கள் வேலைசெய்துகொண்டிருந்ததால்என்னால் தூங்கக்கூட முடியவில்லை.

எனக்குமுடீம் அவர்கள் சுன்னத் செய்தார். வயதானவர், பேசும்போது திக்கித் திக்கி தடித்த ஜாவா நடையில் பேசினார். வெள்ளை சொங்கொக் அணிந்திருந்தார். சுன்னத் செய்வதற்கு முதல்நாள் இரவுஎன்னைத் தண்ணீரில் உட்கார்ந்து ஊறச் சொன்னார். அப்படிச் செய்தால் “சதை” இளகுவாகுமாம், எனக்கு மிகவும் குளிர்ந்தது. மறுநாள் காலையில்எழுப்பிமீண்டும் ஒர முறை பேசினில் தண்ணீர் ஊற்றி என்னை அதில் ஊற வைத்தார் அம்மா. இன்னும் எத்தனை மணி நேரத்திற்கு என்று தெரியவில்லை.

சுன்னத் செய்யும் அறையில் அப்பாவும் மாமாமார்களும் இருந்தனர். அம்மா சமையற்கட்டில் அழுது கொண்டிருந்தார், அக்காள்களும் அவருடன் சேர்ந்து அழுதனர். ஆனால் நான் அழுவில்லை. என் மாமா தொடர்ந்து என்னைப் புனித வசனங்களை வாசிக்கச் சொன்னார். நான் அந்த வசனங்களை  மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். சுன்னத் ஆகும் பொது மூடிம் அவர்கள் என் காதுக்கு அருகில் துவா ஓதினார், நானும் என் கண்களை இறுக மூடிக்கொண்டு நான் மனப்பாடம் செய்த வசனங்களை ஒப்புவித்தேன்.

“எறும்புக்கடி போலத்தான் இருக்கும்!” மாமா என் தோள்களை இறுக அழுத்தியவாறு சொன்னார்.

சுன்னத் முடிந்தவுடன் எனக்கு மிகுந்த களைப்பாக இருந்தது. ஆனாலும் தூங்க முடியவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்தே இருந்தேன்.  இரண்டு கால்களை பரப்பி விட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். சாம்பிரானிப் புகையும், ஊதுவர்த்திப் புகையும் நாற்காலியின் அடியிலிருந்து எழும்பி பரவி அறையை வாசமாக்கிக்கொண்டிருந்தன. வந்த விருந்தாளிகள் இடைவிடாது என் அறைக்குள் வந்து என்னைத் தட்டிக்கொடுத்து, தெம்பான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுச் சென்றனர். அதில் சிலர் நாற்காலிக்கு அடியில் குனிந்து பார்க்க முயன்று, சாம்பல் நிரம்பிய பேசினில் ரத்தம் சொட்டுவதைப் பார்த்துச் சிலிர்த்துக்கொண்டனர்.

அந்த சமயத்தில் என்னால் பேடாவை பார்க்க இயலவில்லை. உண்மையில் சுன்னத் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவளை நான் பார்க்கவில்லை. என்னைத்தான் அறையிலேயே அடைத்துவிட்டார்களே. வெளியே எங்கும் விடவில்லை. புது மாப்பிள்ளைபோல.

நான் அம்மாவிடம் கேட்டபோது, அவர் காதில் விழாததுபோல் பாசாங்கு செய்தார். பேடாவும் என்னைத் தேடி வரவில்லை. அவளது தாயார் மட்டுமே என் அறைக்குள் வந்து விசாரித்தார்.

“பேடா எங்கே?” என்று கேட்டேன்.

“அவள் வீட்டில் இருக்கிறாள்,” அவளது தாயார் பதிலளித்தார்.

அசதியால், என்னால் மேலும் பேச இயலவில்லை. அவரும் பேடாவைப்பற்றி அதிகம் ஏதும் சொல்லவில்லை.

சுன்னத் முடிந்து ஒரு வாரம் சென்ற பிறகு, என்னால் வீட்டினுள் நடக்க முடிந்தது. நான் விளையாடுவதற்கு மிகவும் ஏங்கினேன்.

என் நிலைமையை பற்றி அதிகம் நினைத்ததால், பேடாவை மறந்திருந்தேன்.சுன்னத் செய்தசதைப்பகுதியில்  ஒட்டியிருந்த வெள்ளைக்கட்டை கழற்ற, காலையிலேயே பல மணி நேரம் அந்த  பெரிய பேசின் நிறைய தண்ணீரில் ஊற வேண்டும். சமயங்களில் நான் சத்தம் போட்டுக் கதறி அழுவேன். அப்படி வலிக்கும். எரிச்சலில் நான் கதறும்போது அம்மா சொல்வார், “அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அந்த பேடா பொண்ணு காதில்விழப்போகிறது!”

நானும் அழுகையை நிறுத்தி விடுவேன். அந்தச் சமயத்தில்தான் எனக்கு பேடாவின் நினைவு வரும். ஆனால் சிறிது நேரத்திலேயே அழுது ஆர்ப்பாட்டம் செய்வேன். அப்போது அவளை மறந்து விடுவேன்.நீரில் ஊறிய பிறகு, பல மணி நேரம் நாற்காலியின்கீழே அந்த நீரு பூத்த நெருப்பில்இருந்துகிளம்பும்சாம்பிரானிப் புகை, ஊதுவர்த்திப் புகையின் மேல் உட்கார்ந்து காயத்தை ஆறவைக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்குப்பின்தான் என்னால் முன்புபோல காற்சட்டைபோட முடிந்தது. என்னால் நடக்க முடிந்தாலும், பார்த்துதான் நடக்க வேண்டும். அங்கும் இங்கும் ஓடமுடியாது.

அப்பா எனக்கு ஒரு சிறிய சைக்கிள் வாங்கினார். அது போடீன் சைக்கிள் போன்று இல்லாவிட்டாலும், புதிதாகவும் நன்றாகவும் இருந்தது. அப்போதுஎனக்குபேடாவின்ஞாபகம்வந்தது. அவளிடம் என் சைக்கிளைக் காண்பிக்க வேண்டும்.

நான் அம்மாவிடம் கேட்டேன், ஆனால் அம்மா தெரியாது என்றார்.

“ரொம்ப நாளாச்சு பார்த்து,” என்றார்.

நானும் பேடா வீட்டிற்குச் சென்று, படியிலிருந்து உரக்க கூப்பிட்டேன்.

“பேடா! பேடா! எனக்கு இப்போ சைக்கிள் இருக்கு.” நான் அவளை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று சைக்கிளைக் காட்ட ஆயுத்தமானேன்.

ஆனால் அவளுடைய தாயார்தான் தாழ்வாரம் வரை வந்தார்.

“டீன், உனக்கு என்ன வேண்டும்?” அவளுடைய தாயார் கேட்டார்.

“எங்கே பேடா?” சந்தோசமாக என் முகம் பூக்கக் கேட்டேன்.

“பேடா சமையற்கட்டில் இருக்கிறாள்.”

“நான் அவளுடன் விளயாடப் போகிறேன்,” என்றேன்.

அவளது தாயார் பேசாமல் இருந்தார்.

“கொஞ்ச நேரம் அவளைக் கூப்பிடுங்களேன்!” நான் உரக்க சொன்னேன்.

“அவள் சமையற்கட்டில் இருக்கிறாள், அவளுக்குஉடம்புக்கு முடியவில்லை,” கதவு நடுவே நின்றுகொண்டு கூறினார், பேடாவின் தாயார்.

நான் வாசற்கதவிலேயே நின்றேன். பேடாவின் தாயார் அசையாமல் அங்கேயே நின்றார். என்னை உள்ளே செல்லவிடாமல் தடுப்பது போன்று  அது இருந்தது.

“எங்கே பேடா,வாக்?’ நான் மீண்டும் கேட்டேன்.

பேடாவின் தாயார் சற்று நகர்ந்து, நான் உள்ளேசெல்லஇடம்விட்டார். எப்போதுமே நான் சமையற்கட்டுக்குள்தான் ஓடுவேன்.பேடாவுக்குஎன்வீடுபழக்கமானதுபோலவே பேடாவின் வீடும் எனக்கு என் வீடு போன்றுதான்.

ஆனால்ஏனோ தெரியவில்லை, இந்த தடவை நான்அந்தவீட்டினுள்ஒட்டம் பிடிக்கவில்லை.

“உனக்கு சுன்னத் சரியாகிவிட்டதா?” பேடாவின் தாயார் கேட்டார்.

“சரியாகிவிட்டது,வாக்!” என்றேன்.

பேடாவின் தாயாரும் உரக்க பேடாவின் பெயரைச் சொல்லி அழைத்தார். சிறிது நேரத்தில் பேடா வந்தாள்.

“வா நாம் சைக்கிள் விடலாம்!” அவளிடம் ஒடினேன்.

ஆனால் அவள் அசையாமல், வீட்டின் நடுக் கதவின் பின் நின்றுகொண்டிருந்தாள்.

“வா, சைக்கிள் விடலாம், அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக கொடுத்தார். ரொம்ப அழகு. போடீன் சைக்கிள் தோற்றுவிடும்!” என்றேன்.

பேடா என்னையே உற்று நோக்கினாள், பிறகு தன் தாயாரை நோக்கினாள்.

“டீன், அவள் உடம்புக்கு முடியவில்லை!” எனறார் அவளது தாயார்.

“ஓ!எப்போதிருந்துவாக்’ நான்கேட்டேன்

“நீசுன்னத்செய்தசமயத்தில்இருந்து…”

நான் பேடாவைப் பார்த்தேன். அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.

“சரி, பரவாயில்லை. உனக்கு சரியான பிறகு நான் என் சைக்கிளை காண்பிக்கின்றேன்!” என்றேன்.

“எங்கிருந்து வருகிறாய், டீன்?” என் அம்மா கேட்டார்.

“பேடா வீட்டிலிருந்து,” என்றேன்.

“உனக்கு இன்னும் சரியாகவில்லை. வீட்ட விட்டு வெளியாகாதே!”

“நான் பேடா வீட்டிற்குத்தான் சென்றேன், மா,” பதிலளித்தேன். “அவளுக்கு உடல் சரியில்லை,” மேலும் சொன்னேன்.

“நீ இனிமேல் பேடா வீட்டிற்கு போகக்கூடாது!அம்மா மீண்டும் சொன்னார்.

“என்னால் இப்போது நடக்க முடியும்,” என்றேன்.

“நீ இப்போது பெரியவனாகிவிட்டாய். இனிமேல் பேடா வீட்டிற்குப் போகாதே,” அம்மா சொன்னார்.

“நான் என்னுடைய சைக்கிளை அவளுக்குக் காட்ட வேண்டும்,” பதிலளித்தேன்.

“டீன், நீ பெரியவனாகிவிட்டாய். உன் அப்பா போன்று, உன் மாமா போன்று, போடீன் போன்று ஆகி விட்டாய். பேடா வீட்டிற்கு இனிமேல் போகாதே!” அம்மா திட்டவட்டமாகக் கூறினார்.

அம்மா ஏன் அப்படி கூறினார் என்று எனக்குப் புரியவில்லை. நான் கீழே சென்று என் சைக்கிளைத் தேடினேன், மிதித்துப் பழக வேண்டும்.

பேடா சுகமாகி வந்தபின், அவளுக்கு  என் சைக்கிளை விடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முற்றும் 

மஸ்தூரா 1967

எழுத்து: ஏ. சாமாட் இஸ்மாயில்

மொழி பெயர்ப்பு: எம். பிரபு, பெந்தோங்

KAU MESTI SUNAT, KATA BAPA

(INGIN JADI PUJANGGA, KUMPULAN CERPEN 1944-1991, A. SAMAD ISMAIL. DISELENGGARAKAN OLEH: A. KARIM HAJI ABDULLAH. DBP 1994)

5 comments for “சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)

  1. மு.அனீஸ்
    July 16, 2019 at 2:12 pm

    மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும் முஸ்லிம். பெயர்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கின்றன. ‘தீன்’ என்பதை ‘டீன்’ என்றும், ‘முஅத்தின்’ என்பதை ‘முடீன்’ என்றும் இது போல அநேகமாக எல்லாப் பெயர்களும் பிழையாக உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற கதைகளை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர் ஒரு முஸ்லிம் அணுகி பெயர்களைச் சரிபார்ப்பது நலம். முஸ்லிம்களுக்கா பஞ்சம்?

    எழுத்தாளர் பெயரே பிழை. சமத் இஸ்மாயில், சமாட் இஸ்மாயில் அல்ல.

    • M. MAHENDRAN @ M. PRABHU BENTONG
      July 28, 2019 at 11:40 am

      மலாய் மொழியில் வாசிக்கும் போது மலாய்க்காரர்களின் பெயர்கள்,நான் எழுதிய விதமே உச்சரிக்கப்படுகின்றன. பெயர்களை தமிழ்ப் படுத்த விரும்பவில்லை. -எம். பிரபு.

      • Rv
        September 5, 2019 at 1:54 am

        Greetings MP, You selected the best story for translation. I like the story very much. For non Muslims, like me, the short story reveals basic answers. Thanks for sharing with us. Rv chennai.

      • Jagur
        October 3, 2019 at 4:00 pm

        உண்மை

  2. Jagur
    October 3, 2019 at 3:59 pm

    அற்புதம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...