கடந்த தடவை வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது, அவ்வறையின் ஒரு பகுதியில் விற்பனைக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் சிலவற்றை வாங்கியும் கொண்டேன். வாங்கிய புத்தகங்களில் நான் விரும்பி வாசித்து என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தியபுத்தகமாக குறிப்பிட விரும்புவது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பாகிய ‘அம்பு படுக்கை’ எனும் நூலாகும்.
அத்தொகுப்பில் இடம்பெற்ற கதையினை வசித்த பின் அவரின் சிறுகதைகள் மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமான வாசிப்பனுவத்தினை கொடுத்ததுடன் வாசகனுக்கான இடைவெளியினை ஏற்படுத்துவதை உணர்ந்தேன். ஒரு நல்ல தரமான படைப்பானது தானே முன்வந்து அதன் கருத்தினையோ அல்லது பதிவினையோ முன்வைப்பதற்கு மாறாக வாசகனின் சிந்தைதனில் இடைவெளியினை ஏற்படுத்துவதுடன் அதன் தாக்கமானது வாசகனாலேயே கண்டுணரப்படுவதாகும். அத்தகைய தாக்கமானது சுனில் கிருஷ்ணன் அவர்களின் எழுத்தில் உள்ளதை அம்பு படுக்கை நூலை வாசிக்கையில் கண்டடைந்தேன். இந்த நூல்வழி நான் கண்டடைந்த வாசிப்பனுபவம் ஒன்றே வல்லினத்தின் அடுத்த நிகழ்வாகிய சுனில் கிருஷ்ணன் அவர்கள் பங்குபெறும் ‘சமகால சிறுகதைகளின் செல்நெறிகள்’ என்னும் நிகழ்வினில் கலந்து கொள்ள என்னை உந்தித்தள்ளியது.
இந்நிகழ்வானது ஞாயிறு (12/5/2019) திகதி மதியம் இரண்டுக்கு (2:00pm) தொடங்கியது. சுனில் கிருஷ்ணன் அவர்களை பேச அழைப்பதற்கு முன்னர் ம.நவீன், சசுனில் கிருஷ்ணன் அவர்களை அறிமுகம் செய்தார். ‘காந்தி இன்று’, ’பதாகை’ இணையத்தளங்களினை வழி நடத்திவருவதோடல்லாது பதாகையின் வழி சில எழுத்தாளர்களின் (சு.வேணுகோபால் நாஞ்சில் நாடான்) சிறப்பிதழ்களினை வெளியீடு செய்திருப்பதுடன் காந்தி இன்று இணையதளம் வழியும் தரமான கட்டுரைகளை பதிவேற்றம் செய்திருப்பதையும் குறிப்பிட்டார். இப்படியாக இலக்கிய சூழலில் தீவிரமாக இயங்கிவரும் சுனில் கிருஷ்ணன் சமகாலத்தில் எவ்வாறு சிறுகதைகளில் போக்கு மாறியுள்ளது என்பதனை புனைவுகளின் வழி அறிமுகப்படுத்த தகுந்தவர் என்று அவரை பற்றிய எளிய அறிமுகத்தினை முன்வைத்தார்.
என்னை போன்று அவரின் நூல்களில் ஒன்றினை மட்டும் வாசித்துவிட்டு இந்நிகழ்வுதனில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு அவரை பற்றிய எளிய அறிமுகமானது அவசியமே. இவ்வெளிய அறிமுகமானது எனக்கு இவ்வாழுமை மிக்க சமகால படைப்பாளியான சுனில் கிருஷ்ணன் அவர்களில்பால் இரட்டிப்பான மரியாதையினை உண்டாக்கியது.
அடுத்த அங்கமாக சுனில் கிருஷ்ணன் அவர்கள் சமகால சிறுகதைகளின் செல்நெறிகள் பற்றி பேச தொடங்கினார். அவர் சமகாலம் என்பது என்ன? இளம் படைப்பாளி என்று வரையறுப்பது முறையானதா என்பதனைபற்றி அவரின் கருத்தினை முன்வைத்தார். சமகாலம் என்பதினை 2010-ஆம்ஆண்டு தொடங்கி அல்லது அதற்கு சிறிது முன்னகர்ந்து எழுத வந்த எழுத்தாளர்களினையும் சேர்த்து கணக்கில் கொள்வதாகக் குறிப்பிட்டார். அடுத்து அவர் தெளிவுப்படுத்தியது சமகாலம் என்பது வயது சார்ந்ததா மற்றும் இளம் எழுத்தாளர் எனும் சொல்லாடல் பொருந்துமா என்பதே. போகன் ஷங்கர் மற்றும் சிவா கிருஷ்ணா மூர்த்தி இவ்விரு எழுத்தாளர்களும் தங்களின் நாற்பத்தைந்து வயதில்தான் தங்களுடைய படைப்பினை அல்லது தொகுப்பினை வெளியிட்டு உள்ளதாகவும் “பாக்யஸ்ரீ” என்னும் முதல் தொகுப்பினை வெளியிட்ட எஸ்.சுரேஷ் என்பவர் ஐம்பதாவது வயதில்தான் அதனை வெளியிட்டிருப்பதாகவும் அத்தொகுப்பிற்காக அவருக்கு இவ்வருடம் சுஜாதா விருது கிடைத்திருப்பாகவும் தெரிவித்தார். ஆக சமகாலம் என்பது வயது சார்ந்தது என்று வரையறுப்பது தவறென்று தெளிவுபடுத்தியதோடு இளம் படைப்பாளர் / மூத்த படைப்பாளர் என்னும் சொல்லாடல் இவ்விடம் தகர்தெறியப்படுவதாக கூறி வளர்ந்து வரும் எழுத்தாளர் அல்லது நிறுவப்பட்ட எழுத்தாளர் என்னும் சொல்லாடல் இதற்கு பொருத்தமாக அமையும் என்று உரிய காரணிகளினை மேற்கோள் காட்டி தெளிவுபடுத்தினார்.
இதுநாள் வரை இளம் படைப்பாளர்கள் மற்றும் மூத்த படைப்பாளர் என்பதனை வயதோடு ஒப்பிட்டு வந்த எனக்குள் இது புதிய பார்வையினை படைப்பாளர்கள் மீது கொண்டு வந்தது.
மாய எதார்த்தவாத எழுத்தாகட்டும், சமூக எழுத்தாகட்டும், தொன்ம உருவாக்கம் என்று எந்தவிதமான எழுத்துக்களினையும் கதைகளினையும் எடுத்துக்கொண்டாலும் அதற்கான விதையானது ஏற்கனவே தூவப்பட்டிருக்கிறது. நம்மை தொந்தரவு செய்ய கூடிய அறம் சார்ந்த கேள்வியை முன்வைக்க கூடிய கதையினை எழுதும் தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் முதல் ஜெயமோகன் வரை இத்தகைய பெரிய மரபானது இன்றைக்கு புதிதாக எழுதவரும் எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சவாலாகவே உள்ளது. இதிலிருந்து இன்றைய காலக்கட்டத்தில் எழுதவருபவர்கள் புதிதாய் எத்திசை நோக்கி முன்னகர்தல் அல்லது பயணித்தல்வேண்டும் மற்றும் என்ன விதமான விஷயங்களினை செய்ய இயலும் என்பதனை அறிதல் குறித்து அவர் உரை தொடங்கியது.
இதில் பின்நவீனத்துவ போக்கில் தலித்திய எழுத்து மற்றும் எதார்த்தபாணியில் இருந்து விலகிய கதைகள் என பிரிக்கலாமென்றார். இவற்றில் என்ன விதமான களங்களினை கொண்டு கதைகளானது புனையப்பட்டிருக்கிறது என்று காண்கையில் அவை பாலியல், உளவியல் மற்றும் அரசியல் என இப்படி குறிப்பிட்ட சில களங்களினை சார்ந்திருப்பதை காணலாம். மற்றொன்றானது எழுதுபவர் சார்ந்தது என்று எடுத்திக்கொள்ளலாம், அவை புலம்பெயர் எழுத்து, உலகளாவிய எழுத்து மற்றும் பெண் எழுத்து என்று மூன்று பிரிவினையினை கொள்ளலாம் என்று வகைப்படுத்தியதுடன்இவற்றில் இருந்து நாம் சில பொதுவான அவதானிப்புகளினையும் முன்னகர அல்லது பயணிக்க வேண்டிய திசைகளினையும் காணலாம் என்று கூறினார்.
வல்லினம் நடத்தும் இம்மாதிரியான நிகழ்வுதனில் கலந்து கொள்கையில்தான் எழுத்தப்பட்ட முறை என்கிற வகையில் எதார்த்தவாதம், பின் நவீனத்துவம் என்பதுஒரு பகுப்பு, மற்றொன்று எழுத்து களம் சார்ந்து, அது பேசக்கூடிய பொருள் சார்ந்து என்பது ஒரு பகுப்பு, அடுத்தாக எழுதுபவர் சார்ந்தது என்பது ஒரு பகுப்பு என்று மூவகை பகுப்பினைஅறிந்து கொள்ள முடிந்தது.எழுதவேண்டும் என்கின்ற வேட்கை மட்டுமே ஒருவரை சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர் என்பதை உறுதிப்படுவதில்லை மாறாக எழுவதற்குரிய அதன் வகைகள், களங்கள், எழுதுபவர் எல்லாம் சேர்ந்தே அதனை உறுதிப்படுத்துகிறது என்பதனை அன்றைய நிகழ்வு எனக்கு தெளிவாக உணர்த்தியது
அடுத்ததாக அவர் சிறுகதை பற்றிய பொதுவாக மூவகையான எதிர்பார்ப்புகள் உள்ளதாகவும் அவை ஒரு சிறுகதையானது குறிப்பிட்ட காலகட்டத்தினை கொண்டிருக்க வேண்டும், ஒரு படிமம் மட்டுமே ஒரு சிறுகதையினை வார்த்தெடுக்க வேண்டும் மற்றொன்று குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்கள் மட்டுமே அதனில் உள்ளடக்கி இருத்தல் வேண்டும் என்றார். குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களினை கொண்டிருத்தல் ஏற்புடையதே என்றதுடன் ஒரு சிறுகதையினை திறந்தவுடன் ஐந்து அல்லது ஆறு கதாபாத்திரங்களினை உள்நுழைத்தல் என்பது அங்கே அக்கதாபாத்திரங்களின் யார் என்ன என்ன உறவென்று தீர்மானிக்கபடவில்லை என்றாகிறது என்றதுடன் மற்ற ஏனைய இரு எதிர்பார்ப்புகளானது கடந்த இருபத்தைந்து வருட காலமாக மாற்றம் கண்டுவருவதாக குறிப்பிட்டார்.
குறிப்பிட்டு கூற வேண்டுமாயின் ஜெயமோகன் வருகையின் காலகட்டத்தில் ஒரு கதையானது ஓர் குறிப்பிட்ட காலட்டத்தில்தான் நிகழ வேண்டும் என்னும் வரையறையானது தகர்க்கப்பட்டுள்ளது என்றார். தாம் எழுதிய குருதிசோறு என்னும் கதையுனுள் முந்நூறு வருட கதையினை செருகியிருப்பதாக குறிப்பிட்டார். மொத்தத்தில் ஒரு சிறுகதையானது காலைமுதல் மாலை வரை நடைபெறுகிற சம்பவத்தினை மட்டுமே சொல்வதில்லை, எக்காலகட்டத்தினையும் அல்லது விரிஞ்ச காலத்தினையும் கூட ஒரு சிறுகதையுனுள் கொடுக்கமுடியும்என்கின்ற அளவுக்கு இன்றைய காலகட்டமானது மாற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒரு படிமம் மட்டுமே ஒரு சிறுகதையினை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதும் இவ்விடம் தகர்த்தெறியப்பட்டுள்ளதாக ம.நவீன் அவர்களின் போயாக் சிறுகதையுனுள் “முதலை” என்பது ஒரு படிமமாகவும் “நெற்றிக்குறி” என்பது இன்னொரு படிமமாகவும் “ஓராங் ஹுதான்” என்பது மற்றொரு படிமமாகவும் இருப்பதாக பார்வையாளர்களுக்கு புரியும் வண்ணம் குறிப்பிட்டார். ஒரு எழுத்தாளர் படிமம் சார்ந்து பெயரினை வைப்பதினால் அதற்கொரு வாசிப்பு திசையினை கொடுப்பதோடு அதனை வாசிக்கும் ஒரு வாசகனாக அவ்வாசகனுக்கு இடைவெளியும் சுதந்திரமும் பல படிமங்கள் வளர்த்து கொள்வதினால் கிடைப்பதாக குறிப்பிட்டார்.
தமிழில் உள்ள பெரும் போக்கு எழுத்தானது தற்பொழுது நாவலாகட்டும் சிறுகதையாகட்டும் எழுபது சதவிகிதம் (70%) எதார்த்தவாத எழுத்துதான் இருப்பதாகவும் இதில் எம்மாதிரியான மாற்றங்களானது எற்பட்டுள்ளது என்பதனை கவனிக்கவேண்டியுள்ளது என்றதுடன் எதார்த்தவாத எழுத்து எழுதப்படும்போது அக்கதையுனுள் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைசொல்லிகள் வரக்கூடிய வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.
ஒரு சிறுகதையினை பல பேரின் பார்வையின் வாயிலாக நகர்த்தி செல்லலாம் என்னும் புதிய அணுகுமுறை அல்லது கதை சொல்லல் முறையினை இதன் வழி வாசகனுக்கு கிடைக்க கூடிய இடைவெளியினையும் அவர் விளக்கிய விதமும், சிறுகதைகள் மீதான மேம்போக்கான எண்ணத்தினை மாற்றியதோடல்லாது அதிகமான சிறுகதையினை தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தினைஎன்னுள் தூண்டி சென்றது.
நவீன வாழ்க்கையின் சிக்கலை சொல்லும் எழுத்து மற்றும் மண் சார்ந்த எழுத்து என்று இருவகையான பகுப்பினை எதார்த்தவாத எழுத்தினில் கொள்ளலாம் என்றதுடன் மண்சார்ந்த எழுத்தென்றால் அக்கதையினுள் மண்ணானது பண்பாட்டு காரணியாக அல்லது ஒருபாத்திரமாக இருப்பதே என்றதுடன் நவீன வாழ்க்கை சிக்கல் சார்ந்த கதைகளினைக் குறிக்கையில் அவர் பேசாபொருளை பேசதுணிந்த கதைகளாக குணாகந்தசாமி அவர்கள் எழுதிய “கற்றாழைபச்சை” என்னும் தொகுப்பில் அமையப்பெற்ற “சுக்கிலம்” என்னும் ஆண்மை குறைவு பிள்ளைபேறு சார்ந்த பிரச்சனையினை பேசக்கூடிய சிறுகதையினை குறிப்பிட்டதுடன் மற்றொருகதையான “நாயகன்” சிறுகதையானது இன்றைய இணைய உகத்தில் சமூக ஊடகத்தில் வழி தன்னை ஒருவன் எவ்வாறு ஒரு ஆளுமைமிக்கவனாக அடையாளப்படுத்த முனைகிறான் என்பதை சொல்லும் தற்கால நவீன வாழ்வின் சிக்கலை பேசியகதையாக முன்வைத்தார்.
இதுகாறும் அவரவர் நாட்டினில் நான்கு சுவருக்குள்ளும் வீட்டிற்குள்ளும் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி எழுதுவதே மண் சார்ந்த கதையென எண்ணியிருந்த எனக்கு வல்லினம் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டதன் வழி நீங்கியதாகவே கருதுகிறேன். மண் சார்ந்த எழுத்தின் மீதான என் புரிதலை, அவர் விளக்கிய விதமானது தெளிவான புரிதலைகொண்டு வந்தது.
அடுத்து உளவியல் கதை தொட்டு பேசிய சுனில் கிருஷ்ணன் அவர்கள் உளவியல் கதைகளான துபாலியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகவும் இது குற்ற உளவியல் மற்றும் வன்முறை உளவியல் சார்ந்ததென்றார். தன்னைமீறியவன் முறை என்பது சமகாலத்தின் படைப்பில் பெரிய விஷயமாகயிருப்பதாகக் குறிப்பிட்டார். பாலியல் கதையின் மொத்தவடிவமைப்பானது காமம் அதனால் ஏற்படுகின்ற அகங்காரம் மற்றும் வன்மம் இந்த வரையறைக்குள்தான் பெரும்பாலான கதைகள் வருவதாக குறிப்பிட்டதுடன் பாலியல் தொழிலாளி கதையானது ஒரே பிம்பத்தினை கொடுப்பதாகவே இருப்பதாகக் கூறினார்.
இன்னொரு தலமாக ஒரு பால் ஈர்ப்பு சமீபகால கதைகளில் அதிகம் காணப்படுவதாகவும் இன்றைய எழுத்தாளர்களிடம் இல்லாதக் கூறாக தாம் அதனை காண்பதாககூறி ஒருபால் ஈர்ப்பானது சமூக தளமானது அறிவுத்தளம் நோக்கி பயணிப்பதை காட்டுவதாகக் கூறினார். பாலியல் எழுத்தில் அண்மையகால கட்டத்தில் ரமேஷ் ரக்சன் அவர்களை குறிப்பிட்டார்.
ஒரு எழுத்தாளர் காட்சியுலக சித்திரத்தில் இருந்து காட்சிகளால் கொடுக்கமுடியாத அனுபவத்தை நோக்கி செல்லவேண்டும் என்பதே சிறுகதையின் பெரும் சவாலாக தான் பார்ப்பதாகக்கூறினார். இன்றைய ஒருசமகால எழுத்தாளர்/ படைப்பாளி காட்சிகளால் சொல்ல முடியாததை ஒரு படிமதிசையை நோக்கி அல்லது ஒருவித கவித்துவத்துக்கு நெருக்கமான ஓரிடத்தினை நோக்கி முன்னகர்தல்அவசியமாகிறது. இதுவே இன்றைய எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பெரும்சவாலாக தான் கருதுவதாக குறிப்பிட்டார். மாயஎதார்த்த பாணியில் இருந்து விலகிய கதைகளானது அல்லது இவ்வெழுத்தை தமிழருடைய வளரும் நுனியாக குறிப்பிட்டதுடன் இதில் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக பாலாசுப்ரமணிய பொன்ராஜ் அவரகளைக் குறிப்பிட்டார்.
மாய எதார்த்த பாணியை மீறிய கதைகள் அதாவது கட்டமைப்பு உடைதல் பற்றி பேசியதுடன் அவற்றில் இருவகையுண்டு, வருங்காலத்தை பற்றிய நேர்மறை கற்பனை அதாவது அனைத்தும் அனைவரும் நல்லவராக வலம் வருதல் மற்றொன்று நேர்எதிர்மறை கற்பனை அனைத்தும் சீரழிந்து போகுதல் என கூறினார். இம்மாதிரியான கதையினை எழுதிய ஒரு சில பெயர் அவர்கள் எழுதிய கதைகள் தொட்டுபேசினார். நவீனத்துவம் எழுத்து பாணி அல்லது யுக்தி என்று சொல்வதை காட்டிலும் அதனை நவீனத்துவ மனநிலை என குறிப்பிடலாம் என்றார். நவீனத்துவ மனநிலை முடிவற்றது என்றதுடன் நவீனத்துவம் என்பதே ஒரு பெரிய வெறுமையை தொடுதலே என்றார். இன்றைய எழுத்தாளர்களில் இருவரை தலைசிறந்த நவீனத்துவ எழுத்தாளர்களாக குறிப்பிட்டதுடன் (கார்த்திகைபாண்டியன்,போகன்சங்கர்) அவர்கள் எழுத்தின் வழி வெறுமையைச் சொல்வதாகக் கூறினார்.
அடுத்து சுனில் கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடல் அங்கம் தொடங்கியது. வந்திருந்தோர் பலர் அவரவர் கேட்க வேண்டிய கேள்வர்களினை முன் வைத்ததும், கேள்விக்கான பதில்களினை எளியவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் பதிலுரைத்ததும் இந்நிகழ்வினை பயனுள்ளதாக்கியது. இந்நிகழ்வானது மலை மணி ஐந்துக்கு நிறைவடைந்தது.
நீரானது தேங்கி சாக்கடையாவதோ அல்லது அதன் போக்கில் சென்று தெளிந்த நீரோடையாவதோ அதன் ஓட்டம்தான் தீர்மானிக்கிறது. அதுபோலவே எழுதவேண்டும் என்கின்ற வேட்கை மட்டுமே ஒருவரை சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர் என்பதை உறுதிப்படுவதில்லை. நான் இந்நாள் வரை எழுத வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே எழுதுவதற்கு போதும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வெண்ணம் ஒன்றே வழிநடத்திட போதாதென்பதை வல்லினம் நடத்திய அன்றைய நிகழ்வானது சம்மட்டியால் அடித்து தெளிவுப்படுத்தியது. நீரானது அதன் போக்கில் சென்று தெளிந்த நீரோடையாவது இம்மாதிரியான வல்லினம் நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் சாத்தியப்படும் என்பதனை அன்றைய நிகழ்வில் சுனில் கிருஷ்ணன் அவர்கள் கூறிய அரிய தகவல்கள் வழி எனக்கு தெளிவுபட புரிந்தது.
அருமையான பதிவு. பயனுள்ள நல் அனுபவம்.