“எழுத்தென்பது பொழுதுபோக்கு அல்ல” – சை.பீர்முகம்மது

001மலேசிய நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளில் பலராலும் அறியப்பட்ட பெயர் சை.பீர்முகம்மது. 1961இல் சிங்கப்பூரில் வெளிவந்த ‘மாணவன்’ இதழில் முதல் சிறுகதையை எழுதினார். அப்போது தொடங்கி இன்றுவரை சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை, விமர்சனம், நாவல் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார். மலேசிய இலக்கியத்தை தமிழ் பேசும் நிலங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனியாத தாகம் கொண்ட இவர் அதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை முன்னெடுத்தவர். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மூத்தத் தலைவர்களில் ஒருவராகவும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து இயங்கி கலையும் இலக்கியமும் வளர உதவியவர். மலேசியாவில் சிறுகதை கருத்தரங்குகள் நடைபெறுவதற்கு முதன்மை காரணிகளில் ஒருவர். பல அண்டுகள் மலேசிய இராணுவத் துறையில் பணியாற்றிய இவர் அதன் பின் அப்பணியிலிருந்து விலகி சொந்தமாகக் குத்தகைத் தொழிலில் ஈடுபட்டார். இதுவரை ‘வெண்மணல்’ என்ற இவரது சிறுகதை தொகுப்பும், ‘பெண் குதிரை’ என்ற நாவலும் ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற பயணக் கட்டுரையும் ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற வரலாற்று ஆய்வு நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பல நூல்களை வெளிக்கொணர அதற்கான அடித்தளத்தையும் உருவாக்கிக்கொண்டு வருகின்றார்.

உங்களது தொடக்க கால வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

சை.பீர்முகம்மது: நான் பிறந்து இரண்டாண்டுகளில், அதாவது 1944ஆம் அல்லது 1945ஆம் காலகட்டத்தில் இங்கு ஜப்பானிய ஆட்சி வந்தது. அப்போது எனது தந்தையை சயாம் மரண இரயில் தண்டவாள பணிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். எனது பெரியப்பா ஜப்பானியர்களின் கூடாரத்தில் உதவியாளராக வேலைசெய்துகொண்டிருந்தார். அங்கு ஜப்பானிய வீரர்களுக்கான உணவுப் பொருட்கள் எங்களுக்கும் கிடைக்கும். இதன் காரணமாக வறுமையில் மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடும்படியான நிலைக்கு நான் பெரிய வறுமையில் சிக்கவில்லை. தினமும் வீட்டிற்கு அரிசி கிடைத்துவிடும். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்களின் வருகைக்குப்பின் சூழல் பலருக்குச் சாதகமாக அமைந்தது. எங்கள் வியாபாரமும் விருத்தியடைந்தது. நான் வீட்டின் ஒரே ஆண் வாரிசு. எனக்கு ஒரு தங்கை உண்டு. குறைவில்லாத செல்வாக்கு எனக்கு கிடைத்தது. குடும்பம் நல்ல நிலையில் இருந்து கொண்டிருந்த போதுதான் என் தாயார் காலமானார்கள். என் தாய்க்கு சூலை நோய் இருந்தது. எங்கள் பாட்டியின் மருத்துவம் குறித்த அறியாமையால், மருத்துவமனையில் மகளுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடலாம் என்று பயந்த பாட்டி ஒரு முறைகூட மருத்துவமனைக்கு அம்மாவை அழைத்துச்செல்லவில்லை. ஆகக்கடைசியாக அந்த வயிற்றுக் கட்டி வெடிக்கின்ற நிலையில்தான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றார். காலம் தாழ்த்திவிட்டதால் அம்மாவை மருத்துவர்களால் காப்பாற்ற இயலாமல்போனது. எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மாவை இழந்தேன்.

என் தாயார் என் மீது அதிக அன்பு வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் என் சூழல் நிச்சயமற்றதானது. ஏழு வயதிலேயே தந்தையார் பழைய சென்ட்ரல் திரையரங்கிற்கு முன் இருக்கும் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்த்துவிட்டார். அங்கு நான் ஏறக்குறைய ஓராண்டு காலம் இருந்தேன். படிப்பின் மீதான ஆர்வம் எனக்குள்ளேயே இருந்தது.

ஒரு திரைப்படம்போல உள்ளது உங்கள் தொடக்கக்கால வாழ்க்கை. கல்வி மீது இருந்த ஆர்வத்தை எப்படித் தீர்த்துக்கொண்டீர்கள்?

சை.பீர்முகம்மது: வீட்டுக்குப் பக்கத்தில் ஓரு கிருஸ்துவக் குடும்பம் இருந்தது. அதில் ஒருவர் எனக்கு நண்பரானார். அவர் பெயர் ஹிருதயம். இன்றளவும் எனது நினைவில் இருக்கிறது. அவருடைய உணவில் இருந்து கொஞ்சம் எனக்குக் கொடுப்பார். அவர் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். அவரும் அவரது அக்காவும் எனக்கு கணக்குகற்றுக்கொடுத்தார்கள். அவர்கள் தமிழ் படித்தவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர்கள். அவர்கள் சொல்லிக்கொடுத்த கணிதம் எனக்குப் பிடிபட்டுப்போனது. படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வத்தையும் எனது திறமையையும் பார்த்த பலரும் என்னைப் படிக்க வைக்காததைக் குறித்து பேச ஆரம்பித்தார்கள். இது எப்படியோ எனது சின்னம்மாவின் காதுகளுக்கு எட்டியது.  பின்னர் அவர் என்னை பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் பள்ளியில் சேர்த்துவிட அழைத்துச் சென்றார். வெ.காசிநாதன் அங்கு தலைமையாசிரியராக இருந்தார். எனக்கு பத்து வயது ஆகிவிட்டிருந்ததால் பள்ளியில் சேர்க்க இயலாது என்றார். செய்வதறியாது நானும் சின்னம்மாவும் பள்ளியை விட்டு வெளிவரும் நேரம், எங்களை கவனித்த ஓர் ஆசிரியை எங்களை அழைத்தார். அவரிடம் நாங்கள் வந்திருந்த விபரத்தை என் சின்னம்மா கூறினார்.

உடனே அந்த ஆசிரியை என் பெயரைப் பதிவு பாரத்தில் எழுதிவிட்டு பள்ளியில் சேர்த்துவிட்டார். அப்போது தலைமையாசிரியரிடம் அனுமதிகூட அவர் வாங்கியிருக்கவில்லை. இன்றளவும் அவரை நான் தெய்வமாக மதிக்கின்றேன். உமா பதிப்பகம் நடத்திக்கொண்டிருக்கும் டத்தோ சோதிநாதனின் அக்காதான் அந்த ஆசிரியை என பின்னர் தெரிந்தது.

நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது, சிறுவர் தமிழ் வாசகம் என்ற நூலில் இருந்த கதையை தேர்ந்தெடுத்து என்னை பேச்சுப் போட்டிக்கு தயார் செய்தார் பொன்னுசாமி எனும் ஆசிரியர். நவராத்திரியில் அந்தப் பேச்சுப் போட்டி நடந்தது. எனக்கும் முதல் பரிசு கிடைத்தது. பரிசாக எனக்கு வினோத இரச மஞ்சரி என்ற பெரிய புத்தகத்தைக் கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய புத்தகத்தை அப்போதுதான் நான் பார்த்தேன். கம்பனைக் குறித்தும் ஒட்டக்கூத்தனைக் குறித்தும் காளமேகப் புலவர் குறித்தும் அதில்  பல செய்திகள் இருந்தன. அவை எதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து புத்தகத்தைப் புரட்டியபோது ஒன்று எனக்கு இலகுவாகவும் தெளிவாகவும் இருந்தது. அது பரமார்த்த குரு கதைகள். அக்கதைகளை நான் திரும்பத் திரும்ப ரசித்து வாசித்தேன். எனக்குப் புரியும்படியாக அக்கதைகள் இருந்ததும் ஒரு காரணம். சொல்லப்பட்ட விதமும் சொல்லப்பட்டவையும் ஒரு காரணமாக இருக்கலாம். குருவையும் அவருக்கு சீடர்களாக இருந்த மூடர்களையும் மையப்படுத்தி அக்கதைகள் எழுதப்பட்டிருந்தன.

சரியான ஆசிரியர்கள் உங்களுக்கு வாய்த்திருந்திருக்கின்றனர். அப்படியானால் பள்ளிச்சூழல் உங்களை வாசகனாக மாற்றியது எனலாமா?

சை.பீர்முகம்மது: ஆமாம். ஆனால் என் பள்ளி வாழ்வைத் தொடர முடியாமல் பல சிக்கல்கள் ஏற்பட்டன. மூன்றாம் ஆண்டிலேயே எனது தந்தையார் என்னை பள்ளிக்கூடத்திற்குச் செல்லவேண்டாம் எனக் கூறிவிட்டார். பிள்ளைகள் அதிகமாகிவிட்டதை ஒரு காரணமாகக் காட்டினார். என்னால் அதனைத் தாங்க இயலாது வீட்டைவிட்டு ஓடிவிட்டேன். ஸ்தாபாக்கில் இருக்கும் பஞ்சாபி குடும்பத்தில் அடைக்கலமானேன். அவரது பிள்ளைகள் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர் குடும்பத்தின் மூத்த மகன் அப்போது சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்தார். காலையில் பள்ளிக்குச் செல்லவும் மாலையில் அவர்களின்  மாடுகளைப் பார்த்துக்கொள்ளும்படியும் யோசனை கூறினார். அப்போது அவர்களிடத்தில் நாற்பது மாடுகள் வரை இருந்தன. பிறகு அவரே அவரது தந்தையாரிடம் பேசி எனக்கு முப்பது வெள்ளி சம்பளம் வாங்கிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் அது பெரிய தொகையாக இருந்தது. சம்பளம் போக அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டேன், தூங்கினேன். இதைவிட வேறென்ன வேண்டுமென அங்கேயே தங்கிப் படித்தேன்.

நான் தேர்வில் நல்ல தேர்ச்சியையே பெற்று வந்தேன். படிப்பேன்; படித்ததை, புரிந்து கொண்டதை தேர்வில் எழுதுவேன். இப்படித்தான் ஒரு முறை தேர்ச்சி அறிக்கையைக் கொண்டு வந்திருந்தேன். பஞ்சாபி நண்பனின் அப்பாவிடம் காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர் குதூகலமானார். தன்னிடம் எவ்வளவோ பணமிருந்தும் அவர் பிள்ளைகள் சரியாகப் படிக்காததையும் நான் முதல் மாணவனாக வந்தது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் கூறினார். படிப்பிற்காக நான் வெளிநாடு சென்றாலும் தாம் செலவு செய்வதாகச் சொன்னார். அதனையெல்லாம் ஓர் அங்கீகாரமாக ஏற்று நான் அங்கேயே இருந்தேன். இச்சமயத்தில்தான் நான் மாடு மேய்த்துக்கொண்டு படிப்பதைத் தெரிந்துகொண்ட பெரியப்பா என்னை வந்து அழைத்துச்சென்றார். அவரது பொறுப்பில் என்னை வைத்துக்கொண்டார்.

அடர்த்தியான அனுபவங்கள்தான். வாசகனாக மாறிய நீங்கள் இலக்கிய வாசகனாக எப்படி உருமாறினீர்கள்?

சை.பீர்முகம்மது: அன்றையசூழலில் எனது பெரியப்பா சாப்பிடாமல்கூட இருந்து விடுவார், ஆனால் ‘தமிழ் முரசு’ பத்திரிகையை வாங்காமல் இருக்கமாட்டார். வேலை முடிந்து திரும்பியதும் முதல் வேலையாக தமிழ் முரசு பத்திரிகையைத்தான் எடுப்பார். காலையிலேயே பத்திரிகையை வீட்டில் கொடுத்துவிடுவார்கள். அதனால், நானும் நாளிதழ் படிக்க ஆரம்பித்தேன். அதில் வெளிவரும் சிறுகதைகள், தொடர்கதை போன்றவற்றை வாசிப்பேன்.

அச்சூழலில்தான் ஜே.பி.சேவியர் எனக்கு நெருங்கிய நண்பர் ஆனார். நாங்கள் எங்கும் ஒன்றாகவே சென்று வந்தோம். சண்டையிட்டாலும் நாங்கள் இருவரும்தான் சண்டையிட்டுக்கொள்வோம். அவரிடமிருந்து மர்ம நாவல்களை இரவல் வாங்கிப் படித்தேன். பணம் கொடுத்த புத்தகங்கள் வாங்கும் நிலையின் நான் அப்போதிருக்கவில்லை. முத்தமிழ் படிப்பகம் ஆரம்பித்த காலகட்டம். ஜெ.பி.சேவியர் என்னை முத்தமிழ் படிப்பகத்தில் சேர்த்துவிட்டார். அங்குதான் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையைப் படித்தேன். அதுவரை வாசித்த மர்மக் கதைகளில் இருந்து இங்கு வாசிக்கத்தொடங்கியவை வேறு மாதிரியாக இருந்தன. அன்றைய தினத்தில் முத்தமிழ் படிப்பகத்தில் இருந்த புத்தங்கள் எனக்கு தங்கச்சுரங்கமாகத் தெரிந்தன.

பிறகு இந்திய கைத்தறி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அது தமிழ் நேசன் அலுவலத்துக்கு அருகில் இருந்தது. அது தீபாவளி காலகட்டம். தற்காலிகமாக ஐம்பது வெள்ளி மாத சம்பளத்திற்கு அப்பணியில் சேர்ந்தேன். அங்கு திருஞானம் என்பருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் பரபரப்பாக ஆகிவிடுவார். வழக்கத்திற்கு மாறாக வெள்ளிக்கிழமை மட்டும் சீக்கிரமே உணவுக்குச் சென்றுவிடுவார். கேட்டுப்பார்க்கலாம் என தோன்றவே அதற்கான காரணத்தைக் கேட்டேன். எறக்குறைய பன்னிரெண்டு அல்லது ஒரு மணிக்கு இந்திய தூதரகத்துக்கு இந்திய பத்திரிகைகள் கப்பலில் வந்திறங்கும். அதில் கல்கி இதழும் அடக்கம். கப்பலில் வரும் இதழை முன்கூட்டியே பேசிவைத்து இவர் எடுத்துக்கொள்ளச் செல்வதாக கூறினார். ஒருநாள் தாமதித்தாலும் புத்தகம் கிடைக்காமல் போகும்படியான சூழலையும் சொன்னார். ந.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ அப்போது கல்கியில் தொடராக வந்துகொண்டிருந்தது. அதனை படித்துக் கொண்டிருந்த திருஞானம் அத்தொடர் குறித்து சிலாகித்து பேசிக்கொண்டேயிருந்தார். எனக்கும் அத்தொடரைப் படிக்கும் ஆவல் எழுந்தது. ஆனால், எங்கள் இருவரில் ஒருவர்தான் உணவு நேரத்திற்கு முதலில் செல்லவேண்டும். அவர் திரும்பியதும் இரண்டாமவர் செல்ல வேண்டும். அவர் முதலில் சென்று கல்கி இதழை இந்தியத் தூதரகத்திலேயே எங்காவது மறைத்து வைத்துவிடுவார். என்னிடம் வந்து அவ்விடத்தைச் சொல்லுவார். நான் உணவுக்கு செல்லும்போது, அங்கு சென்று மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கல்கி இதழை எடுத்துப்படிப்பேன். அப்படி வாசிக்க வாசிக்க என்னுள் இலக்கிய தாகம் அதிகரித்ததை நான் அறிந்துகொண்டேன்.

அப்போது கவிஞர் சங்கு சண்முகம் எங்களுக்கு நண்பரானார். எங்கள் பணியிடத்துக்கு அருகிலிருந்த தமிழ் நேசன் அலுவலகத்தில் அச்சுக்கோர்க்கும் வேலை செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் செந்தூலில் அவர் எங்களுக்கு இலக்கியத்தையும் மரபுக் கவிதைகளையும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அச்சூழல்தான் உங்களை எழுத்தாளராக மாற்றியதா?

சை.பீர்முகம்மது: அப்படிச் சொல்லலாம். கவிஞர் சங்கு சண்முகம் நடத்திய வகுப்பில் 002என்னுடன், பாதாசன், நகைச்சுவைப்பித்தன், செல்வநாதன் போன்றவர்கள் இருந்தனர். நகைச்சுவைப்பித்தன் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார். நாங்கள் எல்லோரும் அங்குதான் இருப்போம். நாங்களெல்லோரும் அங்கு இலக்கியம் படித்தோம். இலக்கியம் குறித்துப் பேசுவோம். முத்தமிழ் படிப்பகமும் பக்கத்திலேயே இருந்துவிட்டதால் புத்தகங்களும் இலகுவாகக் கிடைத்தன.

என் ஆருயிர் நண்பனான ஜே.பி.சேவியர், ந.சுப்பையா ஆகியோரின் தூண்டுதலில் செந்துல் தமிழர் திருநாள் கதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டேன். எனக்கு தெரிந்ததை முயற்சித்தேன். சிறுகதைப் பிரிவில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை, கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசு கிடைத்தது. அது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று. அன்று கிடைத்த மூன்றாம் பரிசு, என்னாலும் எழுதமுடியும் என்பதையும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்பதையும் எனக்கு உணர்த்தியது.

செந்துலில் இருந்து ராஜமாணிக்கம் என்பவர் சங்கமணி பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தார். ஆலிவர் குணசேகர் அப்போது அதன் ஆசிரியராக இருந்தார். எனது பரிசு வாங்காத சிறுகதையை ராஜமாணிக்கம் சங்கமணி பத்திரிகைக்குக் கேட்டு வாங்கிச் சென்றார். மறுவாரமே அக்கதை பிரசுரமானது. அதுவரை ‘சங்கமணி’ பத்திரிகை ஆசிரியர் ஆலிவர் குணசேகரனை நான் பார்த்ததில்லை. இருந்தும் எனது சிறுகதையைப் படித்துப் பார்த்து என்னால் இன்னும் நன்றாக எழுத முடியும் என்றும் தொடர்ந்து எழுதச்சொல்லியும் அனுப்பினார். அதேவேளையில் ‘மலை நாடு’ என்னும் பத்திரிகைக்கு சிறு கட்டுரைகளை எழுதிகொண்டிருந்தேன். எழுதி அனுப்பினால் மறு வாரமே பிரசுரமாகினது.

ஒரு சமயம் எம்.துரைராஜ் அவர்கள் தமிழ் நேசன் பத்திரிகையில் ஞாயிறு பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றிருந்தார். அச்சமயம் நான் தமிழ் நேசனுக்கு அனுப்பியிருந்த சிறுகதை, தலைப்பு திருத்தப்பட்டு இரு வாரங்களுக்குப் பின் பிரசுரமானது. அக்கதை பிரசுரமாவதற்கு ஜெ.பி.சேவியரும் ஒரு காரணமாக இருந்தார். ஏனெனில், அப்போது அவரும் தமிழ் நேசனில் வேலை செய்துகொண்டிருந்தார்.

சாதகமான சூழல்தான். தொடர்ந்து எப்படி உங்கள் எழுத்தார்வத்தை வளர்த்துக்கொண்டீர்கள்?

சை.பீர்முகம்மது: இலக்கியத்துறையில் எனது முழுக் கவனமும் வருவதற்கான இன்னொரு காரணமாக இருந்தவர் பா.சந்திரகாந்தம். பத்து எஸ்டேட் தமிழ்ப்பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த சமயம், பயிற்சிக்காக பா.சந்திரகாந்தம் பள்ளிக்கு வந்திருந்தார். ஆசிரியராகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். பின்னர் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அச்சமயம் சி.பி.லுயிஸ் எனும் அதிகாரி எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடிவந்தார். திராவிடக் கழகத்தில் அதிக பற்றுதல் உள்ளவராக இருந்தார். கோலாலம்பூர் திராவிடக் கழகத்தில் பொருளாளராக இருந்தார். அவ்வப்போது என் தந்தையிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார். அவர் வீட்டில் அறிஞர் அண்ணா, மதியழகன், நெடுஞ்செழியன் போன்றவர்களின் திராவிடக் கழக புத்தகங்கள் நிறைந்திருந்தன. முரசொலி, திராவிட நாடு போன்ற இதழ்களை தவறாது வாங்குபவராக இருந்தார். திராவிட இலக்கியங்கள் எனும் தளம் அவர் மூலமாக எனக்கு அறிமுகமானது. திராவிட இலக்கியம் மட்டுமல்லாமல் சில ஆய்வு நூல்களையும் அவர் வாங்குவார். அவரது நூல்நிலையத்தில் இருக்கும் புத்தகங்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது அவரும் வாசிக்கச்சொல்லி சில புத்தகங்களைக் கொடுப்பார். வாசிக்க வாசிக்க எனக்குள் பகுத்தறிவுச் சிந்தனை ஆழமானது.

திராவிட இலக்கியங்களை வாசிக்கும் முன்னரே எனக்கு பெரியார் அறிமுகமாகியிருந்தார். அப்போது 1954ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போது தந்தை பெரியார் மலேசியாவிற்கு வந்திருந்தார். பெரியார் வந்திருந்தபோது எனது பெரியப்பா குதுகலமாகக் காணப்பட்டார். ஒரு முஸ்லிம், தந்தை பெரியாரை விரும்புகிறார் என்பது அக்காலத்தில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. பெரியார் மீது பெரியப்பாவிற்கு மிகுந்த பற்று இருந்தது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள், ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை பாராட்டுதல் போன்றவை பெரியப்பாவை ஈர்த்திருக்க வேண்டும். சில சமயங்களில் நண்பர்களுடன் பெரியப்பா இவை குறித்தெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். பெரியப்பாவும் சுயமரியாதையைப் பேணுபவர். யாராவது சீண்டிவிட்டால் சட்டெனக் கோபத்தைக் காட்டுவார்.

பெரியப்பா, என்னை தனது மிதிவண்டி பின்னிருக்கையில் அமரவைத்து பெரியாரை பார்க்க செந்தூலுக்கு அழைத்துச் சென்றார். அந்த வயதில் தந்தை பெரியாரின் உரையை எப்படி உள்வாங்கினேன் எனத் தெரியவில்லை. ஆனால் அவரது தாடி, அவரது கைத்தடி, கறுப்புச்சட்டை, தீர்க்கமான அவரது கருத்துகள், அவரது மேடைப் பேச்சு போன்றவை என்னைக் கவர்ந்தன. மனதிற்கு உத்வேகம் கொடுத்தன. அன்றைய உரை முடிந்தது நானும் பெரியப்பாவும் வீடு திரும்பியபோது, வழியெல்லாம் தந்தை பெரியார் பற்றி பல விபரங்களை பெரியப்பா என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

ஆரம்பத்தில் தந்தை பெரியார் மீது இருந்த ஆர்வம் அவர் கருத்துகள் மீது சென்றது. தந்தை பெரியார் எனக்கு பிரம்மாண்டமானவராகத் தெரிந்தார். பிறகு அறிஞர் அண்ணா, அதனைத் தொடர்ந்து கலைஞர் மு,கருணாநிதி என வாசிக்க ஆரம்பித்தேன்.

மலேசிய இலக்கியத்திலிருந்து திராவிட இலக்கியத்தில் நுழைந்த நீங்கள் எப்படி நவீன இலக்கியத்தில் நுழைந்தீர்கள்?

சை.பீர்முகம்மது: ஒருமுறை கவிஞர் சங்கு சண்முகம் ஆனந்த விகடன் இதழை பதற்றத்துடன் கொண்டு வந்து கொடுத்தார். அதிலுள்ள ஒரு கதையை வாசிக்கும்படி சொன்னார். அதில் ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ எனும் கதை வெளியாகியிருந்தது. அக்கதையை வாசிக்கையில் இது இன்னொரு தளம் என்கிற முடிவுக்கு வந்தேன். தொடர்ந்து ஜெயகாந்தனின் எழுத்துகளை வாசிக்க வாசிக்க திராவிட இலக்கியங்கள் எனக்கு வெறும் பிரச்சாரமாகத் தோன்றத் தொடங்கின. அடுக்குமொழியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தேன். என்னை விடுவித்ததில் புதுமைப்பித்தனுக்கும் பங்குண்டு. பிறகு ந.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

ஜெயகாந்தன் எனக்குள் மிகப்பெரிய பிரம்மாண்டமாக உருவானார். வாராவாரம் அவரது முத்திரைக்கதை பிரசுரமாகும். அக்கதைகளை ஆர்வமாக வாசிக்கலானேன். எனது வாசிப்பு மாறுபட்டதைப்போல எழுத்தைக் குறித்த என் சிந்தனையும் மாறுபட்டது. போட்டிக்குச் சிறுகதையை எழுதிய பின் நான் அதிகமாக சிறுகதைகளை எழுதாமல் சிறுகதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ் நேசன், முரசு, மலை நாடு போன்ற பத்திரிகைகளுக்கு எழுதும்போது ஓரளவிற்கு பெயர் தெரிந்த எழுத்தாளராக நான் உருவாகிக்கொண்டிருந்தேன்.

எழுத்தாளர் சங்கம் தன் ஆண்டுக்கூட்டத்திற்கு ந.பார்த்தசாரதியை மலாயாவிற்கு அழைத்திருந்தது. அவருடன் ஒரு மாத காலம் தங்கியிருக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலிருந்து, எனக்கு சிந்தனை மாற்றம், வாசிப்பு மாற்றம், எழுத்து மாற்றம் உருவாகின. எனக்குள்ளே முற்றிலும் புதிய விதையொன்றை அவர் விதைத்தார்.

எழுத்தாளர்களில் மிகக்குறைவானவர்களுக்கே பேச்சு ஆற்றல் இருக்கும். நீங்கள் சிறந்த பேச்சாளர். அதுவும் இளமைக் காலத்திலேயே வளர்ந்ததா?

சை.பீர்முகம்மது: ஆமாம். முத்தமிழ் படிப்பகம் பற்றி முன்பு சொன்னேன் அல்லவா. காலஓட்டத்தில் நண்பர்களுடன் சந்திப்பு நடக்கும் இடமாக முத்தமிழ் படிப்பகம் இருந்தது. சீனி.நைனா முகம்மது, புலவர் பா.மு.அன்வர், தக்களை பஷீர் கூடி நிறைய இலக்கியம் பேசுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்கள். அவர் பேசுவதையெல்லாம் நான் உள்வாங்கிக்கொண்டே இருந்தேன். ந.சுப்பையா சொற்பயிற்சி ஆசிரியராக இருந்தார். வாரந்தோரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முத்தமிழ் படிப்பகத்தில் பேச்சுப் பயிற்சி கொடுத்தவர்களில் முதல் ஆசான் அவர்தான். பல தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளுக்கு என்னை அவர் அழைத்துச்சென்றார். அப்போது செந்தூல் தமிழர் திருநாளில் நான் பேசி, உரையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு தொடர்ந்து பேச முடியாமல் இறங்கினேன். பின்னர் அதே செந்தூலில் ம.இ.கா நடத்திய கலை, கலாச்சார விழாவில் பல பேச்சாளர்களுடன் நானும் எனது நண்பர் சேவியரும் கலந்துகொண்டோம்.

அப்போட்டியில் நான் வெற்றிபெற வேண்டும் என்பதில் நண்பர் சேவியர் மிகவும் மும்முரமாக இருந்தார். உண்மையில் இப்படியொரு நண்பர் கிடைப்பது அரிது. அவரது ஊக்கத்தினால் நான் முதல் பரிசைப் பெற்றேன். அவர் இரண்டாவது பரிசு பெற்றார். பிறகு பல கூட்டங்களுக்கு பேசச் சென்றிருக்கிறேன். பல பரிசுகளையும் பெற்றிருக்கின்றேன். பெரும்பாலும் தமிழர் திருநாளுக்குப் போட்டிகளை அறிவிப்பார்கள். அந்தப் போட்டிகளுக்கு நிறைய கதை, கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். புத்தகங்களைப் பரிசாக அனுப்பி வைப்பார்கள். கிடைக்கும் புத்தகங்களெல்லாம் பெரிய பொக்கிஷங்களாகத் தெரிந்தன.

அக்காலக்கட்டத்தில் முத்தமிழ் படிப்பகம் அப்போது முக்கியமான இயக்கமாகவே செயல்பட்டுள்ளது. அதில் உங்கள் பங்களிப்பு என்ன?

சை.பீர்முகம்மது: உண்மைதான். கால ஓட்டத்தில் முத்தமிழ் படிப்பகத்தில் இலக்கிய பிரிவுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அப்போது நான் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தேன். எழுத்தாளர் ந.பார்த்தசாரதியிடம் நான் கற்றுக்கொண்டது என்னவெனில், நாம் பார்த்தவற்றை எழுதுவதைவிட அவற்றில் நாம் எந்த அளவுக்கு  சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதனைக் கதைகளில் கொண்டுவரும்போது, கதைகளில் ஓர் உயிர்ப்பு இருக்கும், அவை நம் உணர்வோடு கலந்த கதைகளாக இருக்கும் எனச் சொன்னார். இதன் காரணமாக நான் அப்படிப்பட்ட கதைகளை எழுத ஆரம்பித்தேன். அப்போதுதான், ‘சிவப்பு விளக்கு’, ‘அதனால் என்ன’, ‘உண்டியல்’ போன்ற சிறுகதைகளை எழுதினேன். அவை கவனம் பெற்றன.

அதேபோல மணிமன்றத்திலும் உங்கள் ஈடுபாடு இருந்துள்ளது. அதில் ஈடுபட்டு உழைத்த நீங்கள் ஏன் விலகினீர்கள்?

சை.பீர்முகம்மது: பா.சந்திரகாந்தம் அழைத்ததின் பெயரிலேயே மணிமன்றத்திற்குச் சென்றேன். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பர் தமிழ்ப்பள்ளியில் ஒன்று கூடி இலக்கியம் பேசுகின்றார்கள் எனவும் மிகவும் பயனாக இருக்கும் எனவும் என்னை வரும்படி அழைத்திருந்தார். பா.சந்திரகாந்தத்தின் நண்பர் கிருஷ்ணசாமி அங்கிருந்தார். ச.ஆ.அன்பானதன் அதற்கு தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருந்தார். குறைந்தது நாற்பது, ஐம்பது பேர் வருவார்கள். முதலில் நான் ஒரு பார்வையாளானாக மட்டுமே சில கூட்டங்களில் கலந்துகொண்டேன். பிறகு மன்றக் கூட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தேன்.

மணிமன்றத்திற்கு சென்ற பிறகு, முத்தமிழ் படிப்பகத்தில் வாசகனாக மட்டும் இருந்தேன். மணிமன்றத்திற்குபோன பிறகு செயல்பாடுமிக்க எழுத்தும் இயக்கமுமாகவும் உணர்வுபூர்வமாகவும் மணிமன்றத்தில் செயல்பட ஆரம்பித்தேன்.

அன்றைய காலகட்டத்தில் இலக்கியம், தமிழர்களின் பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் ஒவ்வொரு மாத மணிமன்றச் சந்திப்பிலும் இளைஞர்கள் பேசுவார்கள்.  மணிமன்றத்தில் சேர்ந்த பின்னர், எனக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்தது. இன்னொரு உலகம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அப்போது நான் பிரதேச இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரத்திற்கு மூன்று நாட்கள் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை இருபத்தி நான்கு மணி நேர பயிற்சிக்குச் செல்ல வேண்டும். வருடத்திற்கு இரண்டு வாரம், எங்காவது ஓர் ஊருக்கோ அல்லது காடுகளுக்கோ பயிற்சிக்குச் செல்லவேண்டும். அது சம்பளத்துடன் கூடிய பயிற்சி.

அப்போது ஏழு மணிமன்றங்கள் இருந்தன. பினாங்கில் முதல் மன்றம், கோலாலும்பூரில் இரண்டாவது மன்றம், மூன்றாவது மன்றம் தெலுக் இந்தானிலும், ஈப்போ, பத்தாங் பெர்ஜுந்தை, கோலா கங்சார், சுங்கை சிப்புட்டில் என மற்றவையும் இருந்தன. ஆனால் இந்த ஏழு மணிமன்றங்களும் தனித்தனியே இயங்கிக் கொண்டிருந்தன.

1964ஆம் ஆண்டு, மணிமன்றங்கள் அனைத்தையும் இணைக்கவெண்டுமென பினாங்கு மன்றம் மாநாடு ஒன்றைக் கூட்டியது. நானும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளத் தயாரானபோது, பிரதேச இராணுவப் பயிற்சிக்கு இரண்டு வார காலம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நாட்டில் இருந்த சூழல் காரணமாக அதனைத் தவிர்க்க முடியவில்லை. அந்த மாநாட்டில் சா.ஆ.அன்பானந்தன், கிருஷ்ணசாமி, பாதாசன் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். அதில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அமைக்கப்பட்டது. முதலாவது அமைப்புக் கூட்டம் கோலாலும்பூரில் உள்ள கம்போங் பண்டானில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இளைஞர் அமைச்சின் ஆதரவுடன் நடந்தது. சா.ஆ.அன்பானந்தன் தலைவராகவும், துணைத்தலைவராக கிருஷ்ணசாமியும் துணைச்செயலாளராக நானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். பிறகு அது பதிவுபெற்றது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் தோட்டம் தோட்டமாகச் சென்று நடவடிக்கைளை ஏற்பாடு செய்வோம். இளைஞர்களிடம் மிகப்பெரிய எழுச்சி உண்டானது. தமிழ் மொழி, இனம், பொருளாதாரம் போன்ற சிந்தனைகளைக் கூட்டங்களில் பேசி மக்களை சிந்திக்கச் செய்தோம். அதனையொட்டி பட்டிதொட்டிகளிலெல்லாம் மணிமன்றங்கள் உருவாகத்தொடங்கின.

அப்போது தமிழ் நேசனில் இருந்த முருகு.சுப்ரமணியம் எங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார். மணிமன்றங்கள் குறித்து தலையங்கம் எழுதினார். மணிமன்றச் செய்திகளைப் பிரசுரித்தார். தமிழ் முரசிலும் சாரங்கபாணி எங்களுக்கு ஆதரவு கொடுத்தார். மாணவர் மணிமன்றம்தானே தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையானது, எனவே எங்கள் மீது அவர் தனி அன்பு வைத்திருந்தார்.

சைக்கிளில் சென்றுதான் மணிமன்றத்தை வளர்க்கவேண்டிய ஏழ்மை நிலையில்தான் நாங்கள் இருந்தோம். இச்சூழலிலும் நாட்டில் பல பகுதிகளில் அமைந்த மணிமன்றங்களுக்கு சா.ஆ.அன்பானந்தனுடன் நானும் சென்றிருக்கின்றேன்.

நாங்கள் எதிர்பார்க்காதபடி மணிமன்றப் பேரவை வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. இப்போதிருக்கும் மணிமன்றத்தினரிடம் இருக்கும் தமிழ் உணர்வைவிட அப்போதிருந்த மணிமன்றத்தில் தமிழ் உணர்வு அதிகமாகவே இருந்தது. தோட்டங்களிலும் பல ஒதுக்குப்புற இடங்களிலும் இருந்த இளைஞர்களின் ஆதரவு பெருகி ஏழு மன்றங்களாக இருந்த மணிமன்றம் நூற்றுக்கணக்கில் வளர்ந்தது. ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் ஒன்றுபடுத்தி ஆண்டுக்கொருமுறை ஒவ்வோர் இடத்திலும் மாநாடு நடத்தினோம். முன்று நாட்களுக்கு பெரிய விழாவாக அது இருக்கும். மாநாடு முடிந்து பிரிகின்றபோது பலரும் அழுவது உண்டு. குடும்ப உறவுகள் பிரிவதுபோல மனதை அது கஷ்டப்படுத்தும். அவ்வளவு இணைப்பாக இருந்தோம்.

நாங்கள் எங்களுக்குள் ஒரு முடிவு வைத்திருந்தோம். நான், சா.ஆ.அம்பானந்தன், கிருஷ்ணசாமி இன்னும் அந்த நேரத்தில் இருந்த பொறுப்பாளர்கள் எல்லோரும் அரசாங்கம் தரும் எந்த விருதையும் வாங்குவதில்லை என்கிற முடிவை வைத்திருந்தோம். மணிமன்றத்தின் அடுத்தடுத்த வளர்ச்சியைக் கண்ட ம.இ.காவினர் எங்கள் தோள் மீது கைபோட ஆரம்பித்தனர். மணிமன்றத்திற்கு அப்போதுதான் தரித்திரியம் பிடித்தது. நாம், நமது என்பதெல்லாம் அதன்பிறகு நான், எனது, எனக்கு என்றாகிப்போனது.

இந்நேரத்தில்தான் மணிமன்றச் சட்டங்களுக்கு மாறானவை நடந்தன. பத்து மைல் சுற்றுவட்டாரத்தில் இன்னொரு மணிமன்றத்தை அமைக்கவேண்டாம் என்பதுபோல சில நிலையான கட்டளைகள் வைத்திருந்தோம் ஆனால் அதெல்லாம் தகர்க்கப்பட்டு மன்றங்கள் உருவாகின.

நீங்கள் பொது வாழ்விலிருந்தும் விலகியிருந்தது அப்போதுதான் என வாசித்துள்ளேன்.

சை.பீர்முகம்மது: ஆமாம். சா.ஆ.அன்பானந்தன் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, வேறு எவரும் நுழைந்துவிடுவார்களோ என்கிற பயம் கிருஷ்ணசாமிக்கு வந்தது. பயத்தின் காரணமாக, இரண்டு மைல், மூன்று மைல் சுற்றுவட்டாரத்தில் எல்லாம் மணிமன்றத்தை ஆரம்பித்துவிட்டார். அதன்பிறகு மணிமன்றத்தில் இருந்தும், இதர எல்லா பொறுப்புகளில் இருந்தும் நான் வெளியேறிவிட்டேன். அதோடு எழுத்து, இலக்கியம், பேச்சு என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 14 ஆண்டுகள் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்தேன்.

அந்த 14 ஆண்டுகளில் குடும்பம், குடும்பத்தின் பொருளாதாரம், தொழில் போன்றவற்றில் கவனம் செலுத்தி எழுதாமல் இருந்தேனே தவிர வாசிக்காமல் இருக்கவில்லை. அதிகம் வாசித்தேன். தொடர்ந்து சோர்ந்துவிடாத வாசிப்பால், 14 ஆண்டுகளுக்கு பிறகு முன்பு இருந்ததைவிட மிக வேகமாகச் செயல்பட ஆரம்பித்தேன்.

கோ.சாரங்கபாணி கொடுத்த ஆதரவு பற்றி கூறினீர்கள். அவர் முன்னெடுத்த தமிழ் முரசு பற்றி சொல்லுங்கள்.

003சை.பீர்முகம்மது: அக்காலத்தில் எல்லா வகையான இலக்கிய முயற்சிகளையும் தமிழ் முரசில்தான் நாம் பாக்கலாம். சங்க இலக்கியங்களில் இருந்து சாதாரண இலக்கியங்கள் வரை முரசு முன்னெடுத்தது. பகுத்தறிவுக் கொள்கைகள் பற்றிய கட்டுரைகள், செய்திகள், இலக்கியப்படைப்புகள் அதிகம் முரசில் வெளிவரும். மக்களின் மனமறிந்து பத்திரிகை நடத்துவதில் கோ.சாரங்கபாணி மிகவும் கெட்டிக்காரர். தந்தை பெரியார் வந்திருந்த 1954-ஆம் தொடங்கி முரசின் இயங்கு தளம் அதிகம் பகுத்தறிவு கொள்கைகள் சார்ந்து இருந்தது. பெரியாரின் செய்திகளையும் பிரமாதமாக வெளியிடுவார்கள். தமிழ் முரசில் ஞாயிறு பதிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த முருகு.சுப்ரமணியம் தமிழ் நேசன் பத்திரிகைக்கு 1960இல் வந்தார். அதன் பிறகு தமிழ் முரசிலும் சில இலக்கிய முயற்சிகள் நடக்கத்தொடங்கின.

1962-ல் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதில் முருகு.சுப்ரமணியம் தலைவராகவும் எம்.துரைராஜ் செயலாளராகவும் இருந்தார்கள். நான் செயலவையில் இருந்தேன். முருகு.சுப்ரமணியம் தமிழ் நேசனுக்குப் பொறுப்பாளராக வந்த பிறகு சிறுகதைகளும் கவிதைகளும் நம் நாட்டைப் பொருத்தவரை உச்சத்தைத் தொட்டது என்றே சொல்லலாம். அறுபதுகளில் எழுதினோம், ரெ.கார்த்திகேசு, எம்.ஏ.இளஞ்செல்வன், கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி. மா.இராமையா, மா.செ.மாயத்தேவன், சா.ஆ.அன்பானந்தன், கிருஷ்ணசாமி, பகுரூதின், பா.சந்திரகாந்தம், உஷா நாயர், பாவை, சாரதா கண்ணன், ந.மகேஸ்வரி, மலபார் குமரன் (எம்.குமரன்), ஐ.இளவழகு, ஐ.உலகநாதன், கரு.திருவரசு, என பலரும் உத்வேகத்துடன் எழுதினோம். அவர்களின் எழுத்தும் தரமாக இருந்தது. தேடுதலும் அதிகமாக வைத்திருந்தார்கள்.

1960-களில் இருந்து 1975-வரையில் உள்ள பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த  கதைகளை பார்த்தீர்களேயேனால் அந்த கதைகளின் வளர்ச்சியை அதன் பிந்திய ஆண்டுகளில் தொட முடியவில்லை என்றே சொல்லலாம். மிகச்சிறந்த கதைகள், கவிதைகள் அப்போது எழுதப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எழுதிய ‘அக்கினி வளையங்கள்’ என்ற தொடர்கதையை குறித்து சொல்லுங்கள். அது பாதியிலேயே ஏன் நிறுத்தப்பட்டது?

சை.பீர்முகம்மது: 1952ஆம் ஆண்டை நிலக்களனாகக்கொண்டு சிகாம்புட், பத்து தோட்டப்பகுதிகளைக் களமாகக்கொண்டு, இந்தத் தொடர் ‘தென்றல்’ இதழில் வெளிவந்தது. மிக நீண்ட காலமாகவே என் மனதில் வளர்ந்த நாவல் அது. பத்திரிகைகளில் பத்து வாரம் எழுதி விட்டாலே ‘எப்ப முடிக்கறிங்க?’ எனக் கேட்பதால் தொடர் எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன். ரொம்பவும் வெறுத்துப் போய் முடங்கிக் கிடந்தபோதுதான் ‘தென்றல்’ இதழ் ஆசிரியர் தொடர்கதை வேண்டுமெனப் பிடிவாதமாகக் கேட்டார்.

நானும் எழுத ஆரம்பித்தேன். அது மலேசியாவில் தமிழில் இதுவரை யாரும் தொடாத ‘மார்க்சிய’ சிந்தனைகளை மையமாகக்கொண்டு வெளிவந்தது. அதை நேரடியாக இந்நாட்டில் பேச முடியாது. ஒன்பது வாரங்கள் எழுதிக் கொடுத்தேன். பிறகுதான் அதன் சிரமம் புரிந்தது. மிக வெளிப்படையாகப் பேசவும் முடியாமல் உண்மைகளை உறுத்தல்களை அடக்கி வைக்கவும் முடியாமல் தவித்தேன். அந்தத் தவிப்பினால், அது என்னிலிருந்து வெளிவராமல் அப்படியே நின்றுவிட்டது.

உங்களின் ‘அந்த மரங்களும் பூப்பதுண்டு’ என்ற சிறுகதை ஆபாசமென முன்பு சர்ச்சைகள் உருவாயின.  இப்படிப் புனைவில் ஒழுக்கநெறிகளைச் சோதிக்கும் வாசக மனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சை.பீர்முகம்மது: அந்தக் கதையில் நானும் ஒரு பாத்திரமாக இருக்கின்றேன். மற்றப் பாத்திரங்கள் அனைத்தும் உண்மையானவை. வயதிற்கு வராத அந்த பெண்ணின் பாத்திரமும் வயித்துமுட்டி கதாபாத்திரமும்கூட உண்மையானவைதான். முப்பது ஆண்டுகளாக அந்தத் தலைப்பை ஒரு நாவலுக்காக வைத்திருந்து, இந்தச் சிறுகதைக்குப் பயன்படுத்தினேன். வயதிற்கு வராமல் இருந்த பெண்ணுடன் எனக்கு நன்கு பழக்கமுண்டு. முன்பு விறகு பொறுக்க அந்தப் பெண்மணிதான் அழைத்துச் செல்வார்.  வயித்துமுட்டியும் எனது நண்பன். மிகப் பெரிய வயிரோடு என்னையே சுற்றிச் சுற்றி வருவான். காய்ச்சல் கட்டி எனும் நோயினால் அவனின் உருவ அமைப்பு சிதைந்திருந்தது. ஆக, இரு பலவீனமான நண்பர்களைச் சேர்த்துப் பார்க்க நினைத்தது என் கற்பனை. வயதுக்கு வராத அந்தப் பெண், பணம், அழகு, எதுவும் இல்லாத வயித்துமுட்டியை விரும்புகிறாள். இடையில் அவள் பருவம் எய்திய பின் யாரிடமாவது கூறினால் தொடர்ந்து வயித்துமுட்டியை விரும்பமுடியா வண்ணம் திருமணம் நடத்தி விடுவார்களோ என்று பயந்து, தான் பருவம் எய்தியதை மறைக்கிறாள். அதற்கு குறியீடாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் அங்கி அசுத்தப்பட்டிருந்தது என எழுதியிருந்தேன். அந்த அசுத்தத்திற்குள் உள்ள அன்பைப் பார்க்க முடியவில்லை இந்த மடையர்களால். இலக்கிய வாசிப்பு இல்லாதவர்களால் இப்படியான மேம்போக்கான வாசிப்பைத்தான் மேற்கொள்ள முடியும்.

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் மறுபிரவேசம் பற்றி முன்பு கூறினீர்கள். அதற்குப் பின்பான உங்கள் செயல்பாடுகள் குறித்துக்கூறுங்கள்.

சை.பீர்முகம்மது: 14 ஆண்டுகளுக்கு பிறகு என் எழுத்து வீறுகொண்டு எழுந்தது. அதற்கு என் வாசிப்பும் ஒரு காரணம். இன்னொரு காரணமாக இருந்தது எனது பயணங்கள். பல ஊர்களுக்கு பயணிக்கவேண்டியதாக இருந்தது. தமிழ் சார்ந்த தமிழ் இயக்கங்கள் சார்ந்து குறிப்பாக ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்றேன். அங்கு என்னைச் சந்தித்தவர்கள் பலருக்கும் மலேசியாவில் தமிழர்கள் இருப்பதும் தமிழ் பேசப்படுவதும் தமிழில் எழுதப்படுவதும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இது எனக்கு உறுத்தலாக இருந்தது. அது நான் தீவிரமாக எழுத ஆரம்பித்த காலகட்டம். அதற்கு முன்னரே எனது சிறுகதைத் தொகுப்பை அஸ்திரேலியாவில் மாத்தளை சோமு வெளியிட்டார். அப்போது இலக்கியத் துறையில் மும்முரமாக ஈடுபட்டு சில தொடர்களையும் எழுதிக்கொண்டிருந்தேன். எனது செயல்பாடுகள் வேகம் கொண்டன. இந்தக் காலகட்டத்தில் இங்குள்ள எந்த இயக்கத்திலும் சாராமல் நான் தனியாக இயங்கினேன். இதற்கான முதல் காரணம் எனது சுதந்திரம். ஓர் இயக்கத்தில் இருக்கும் போது தலைவருக்கு ஏற்றார்போலத்தான் நாம் செயல்பட முடியும்; தனியாக செயல்பட முடியாது. நாமே முடிவெடுத்து நாமே செய்கிற காரியங்கள் வெற்றி பெறாது. ஆக எதனையும் எதிர்பார்க்காமல் நானே தனியாக, தனி இயக்கமாக செயல்பட்டேன். தொடர்ந்து நானே ஒரு பதிப்பகம் ஆரம்பித்தேன். முனைவர் ரெ.கார்த்திகேசு, டாக்டர் சண்முக சிவா போன்றவர்களுடன் இணைந்து முகில் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்தோம்.

அப்போது நான் எழுதிகொண்டிருந்த தொடரான ‘கைதிகள் கண்ட கண்டம்’ மற்றும் ‘பெண் குதிரை’ என்ற நாவலையும் அப்பதிப்பகம் மூலம் வெளியிட்டேன். அதே போல ரெ.கார்த்திகேசுவின் பழைய நாவலொன்றையும் மீண்டும் பதிப்பித்து வெளியிட்டோம். இப்படி அடுத்தடுத்து ஆண்டுக்கு மூன்று புத்தகங்கள் என முகில் மூலம் வெளிவந்தது. வெளிநாட்டு வாசகர்களுக்கு மலேசியப் படைப்புகளை அறிமுகப்படுத்த முகில் மூலம் உழைத்தேன். அதன் தொடர் முயற்சியாக ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மலேசியாவிலிருந்து 50 கதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக்கினேன். யாரிடமும் கதைகள் குறித்துக் கேட்கவில்லை. கதைகளைப் படித்து நானே முடிவெடுத்து தொகுப்பிற்குப் பயன்படுத்தினேன். அதில் 43 கதைகளை மட்டுமே சேர்க்க முடிந்தது. நான் நினைத்த மீதி ஏழு கதைகளைச் சேர்க்க முடியவில்லை. காலதாமதமாகிவிட்டது. மேலும் தாமதப்படுத்த விரும்பாது அந்தத் தொகுப்பை முகில் பதிப்பகத்தின் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து அச்சிட்டு இங்கு கொண்டு வந்தேன். இந்த நூலை வெளியிட எழுத்தாளர் ஜெயகாந்தனை அழைத்து வந்தேன். இதற்கு முன்னர் எனது மண்ணும் மனிதர்களும் நூல் வெளியீட்டுக்கு எழுத்தாளர் வாஸந்தி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஆகியோரை வரவழைத்து நாடு முழுவதும் அழைத்துச்சென்றேன்.

இம்முறை எழுத்தாளர் ஜெயகாந்தனை அழைத்ததன் காரணம், மலேசியாவில் எழுபதுகளில் உச்சத்தைத் தொட்ட சிறுகதைகள் மீண்டும் அவ்விடத்தை அடைய வேண்டும் என்பதால்தான். தொகுப்பில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர்களில் சிலர் அப்போது இல்லை. இருப்பவர்களாவது மீண்டும் புத்துயிர்ப்போடு எழுத வேண்டும், என்பதுதான் என் நோக்கம். பெரும் செலவுகளையும் பொருட்படுத்தாது எழுத்தாளர் ஜெயகாந்தனை நாடு முழுவதும் அழைத்துச்சென்றேன். அதன்பிறகு ‘வேரும் வாழ்வும்’ இரண்டாம், மூன்றாம் தொகுதிகளைக் கொண்டுவந்தேன். மூன்று தொகுப்பிலும் மொத்தம் 93-கதைகள் வெளிவந்திருந்தன. இதன் வழி உலகம் முழுக்க ஓரளவேனும் வாசிக்கின்றவர்கள் மத்தியில் நமக்கு அறிமுகம் கிடைத்திருப்பதாக நான் நம்புகின்றேன்.

இன்று அவ்வாறான அறிமுகம் பரவலாக உள்ளதல்லவா?

சை.பீர்முகம்மது: என்னைத்தொடர்ந்து இளம் தலைமுறையினர் எடுத்த முயற்சி அதற்குக் காரணம். நான் பதினான்கு ஆண்டுகளாக எழுதாமல், வாசிப்பிலேயே இயங்கிக்கொண்டிருந்த சமயம் நமக்கு அடுத்து நம் நாட்டில் இலக்கியம் படைக்க யாரும் வருவார்களோ, மாட்டார்களோ என்ற கவலையிலும் குழப்பத்திலுமே இருந்தேன். ஆனால் அந்த இடைவெளியை கடந்து நான் வந்தபோது இளம் தலைமுறை எழுத்தாளர்களான ம.நவீன், க.யுவராஜன், கே.பாலமுருகன் போன்ற எழுத்தாளர்களுடனும் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. என் வயதுக்கும் அவர்களின் வயதிற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. இருந்தும் ஒரே மாதிரியான சிந்தனைகள், ஒரே மாதிரியான கொள்கைகள், நாம் எதை முன்னெடுத்துச் செல்கிறோம் போன்றவற்றால் ஒத்த கருத்துகள் உள்ளவர்கள் ஆனோம். இவர்கள் பத்திரிகைகளை மட்டும் நம்புவதில்லை. இணையம் மூலம் எல்லா வகையிலும் மலேசிய இலக்கியத்தை கொனண்டு செல்கிறார்கள். பெரும்பாலும் நான் செல்கின்ற இடங்களிலெல்லாம் வல்லினம் என்ற ஓர் இதழ் வருகிறது அதன் வழி மலேசிய இலக்கியங்களை நாங்கள் தெரிந்துகொள்கிறோம் என்று சொல்கிறார்கள்.

அண்மையில் பாரிஸில், தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு என்னைப் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள்.  தொடர்ந்து லண்டனுக்கு சில நாட்களுக்குச் சென்றிருந்தேன். அங்கு, நமது மலேசிய இளம் எழுத்தாளர்களின் பெயர்கள் என் காதுகளில் விழுந்தன. வல்லினம் இணையப் பக்கம் மூலமாக மலேசிய இலக்கியம் வாசிக்கின்றோம் என்று தெரிவித்தார்கள். அதோடு அவர்கள் வாசித்த மிக அண்மைய கால விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

மலேசியாவில் தமிழில் எழுதுகிறார்களா என அப்போது கேட்டவர்கள், இப்போது விரல் நுனியில் விவரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். எங்களால் செய்ய முடியாததை இன்றைய இளம் தலைமுறை செய்துகொண்டிருக்கிறது. அதற்கேற்ற இணைய வசதியும் இவர்களுக்கு இருக்கிறது. இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள். காலப்போகில் இது இன்னமும் பெரிய வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்.

மலேசியாவில் இஸ்லாம் அதிகாரபூர்வ மதமாக இருந்தாலும் தமிழுக்கு அரசு அங்கீகாரங்கள் இல்லை. இந்நிலையில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நீங்கள் தமிழ் இலக்கியத்தில் இயங்கும்போது மத அடையாளம் உங்களுக்கு ஏதேனும் தடையாக இருந்துள்ளதா?

சை.பீர்முகம்மது: இது பெரிய கேள்விதான். தந்தை பெரியார், அண்ணா என இப்படி வளர்ந்த காரணத்தால் மதத்தை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. என் வரையில், நான் முதலில் ஒரு மனிதன், இனத்தாலும் மொழியாலும் தமிழன், அதற்கு பிறகுதான் நான் ஒரு முஸ்லிம்.

ஒருமுறை குமுதம் வார இதழில் அரசு கேள்வி பதிலில் என்னைப் பற்றி எழுதியிருந்தார்கள். அண்மையில் படித்த நூல்களில் சிறந்தது எதுவென்ற கேள்விக்கு, சை.பீமுகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற நூல்தான் என்றும் எழுத்தாளர் தன் மதம் சார்ந்து தூக்கலாக எழுதியிருந்தாலும்கூட நமக்கு தெரியாத பல சரித்திர உண்மைகளை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறார் என அரசு பதிலில் எழுதியிருந்தார்கள். குமுதத்தில் ஒரு கேள்வி பதிலில், என் பெயரும் என் புத்தகம் குறித்தும் வந்திருந்தது பலருக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், எனக்கு அவ்வாறாக இல்லை. தன் மதம் சார்ந்து தூக்கலாக எழுதியிருக்கின்றார் என்கிற அந்த ஒரு வரி என்னை மிகவும் பாதித்தது.

நான் முஸ்லிம் என்பதால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளேன். ஒருமுறை தீராநதி இதழில் எனது ‘வெளியேற்றம்’ என்கிற கதை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கதையை குறித்து ‘இன்று ஒரு சொல்’ சுப.வீரப்பாண்டியன் தொலைக்காட்சியில் பேசியிருகின்றார். இதனை இங்குள்ள நிகழ்ச்சியில் நான் பகிர்ந்துகொண்டபோது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன் இக்கூற்று உண்மையோ பொய்யோ என்பதை அறிய நாம் தொலைக்காட்சிக்குத்தான் தொடர்புகொண்டு கேட்க வேண்டும் என்றார். மலேசியப் படைப்பாளி, ராமசாமியோ, குப்புசாமியோ அது சை.பீரோ யாராய் இருந்தால் என்ன? நம் படைப்பு அயலகத்தில் பேசப்படுகிறதென்றால் நாம் பெருமைப்பட வேண்டாமா? அதைவிடுத்து அது உண்மையோ, பொய்யோ எனப் பேசுவது எந்த வகையில் நியாயம். இப்படியாக பல முறை பாதிக்கப்பட்டுள்ளேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இரண்டு முறை டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் பரிசை நான் வாங்கியுள்ளேன். அந்த நேரத்தில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு என்றால் அது டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் பரிசுதான். ஏழாயிரம் வெள்ளி கொடுப்பார்கள். சாகத்திய அகாடமிகூட ஐம்பதாயிரம்தான் கொடுக்கின்றார்கள். முதலில் எனது சிறுகதைத் தொகுப்பிற்குப் பரிசு கிடைத்தது. இரண்டாவதாக எனது கவிதைத் தொகுப்பிற்கு பரிசு கிடைத்தது. அச்சமயம்தான் மலேசிய எழுத்தாளர் சங்கம் தனது ஆண்டுக்கூட்டத்தில் ஆண்டு மலரை வெளியிட்டது. அந்த ஆண்டு மலரில் நான் பரிசு வாங்கிய புகைப்படம் இல்லை. ஆனால் சங்கத் தலைவரின் புகைப்படங்கள் 38 இடங்களில் அச்சாகியுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் அவரது புகைப்படங்கள் இருந்தன. நான் என்றில்லாமல் இவ்வாறு யாருக்கு நடந்திருந்தாலும் அது குறித்துக் கேள்வி கேட்டிருப்பேன். ஏனெனில், டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் பரிசு எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் முக்கியமான நிகழ்ச்சியல்லவா. எங்குதேடியும் எனது பரிசு வாங்கிய புகைப்படம் கிடைக்கவில்லயென்று தலைவர் கூறுகிறார். தேடித்தேடிப் பார்த்தாக சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பரிசை வாங்கிய முட்டாள் கவிஞன் நான், என்னிடம் கேட்டிருக்கலாமே? அப்படம் என்னிடம் இருக்கும்தானே.  அவர்களுக்கு மனமில்லை. எது அவர்களைத் தடுத்தது எனத் தெரியவில்லை, ஆனால் மதம்தான் காரணம் என நான் நினைக்கின்றேன். பல இடங்களில் மத அடையாளக் காரணத்தால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் எந்த இடத்திலும் நான் இந்த மதத்தைச் சார்ந்தவன் என நினைத்ததே இல்லை.

இளம் படைப்பாளிகளோடு உங்கள் தொடர்பு எப்படி உள்ளது?

சை.பீர்முகம்மது: மிக நன்றாகவே உள்ளது. ஆனால், நான் நன்கு வளர்வார்கள் என எதிர்பார்த்த பலர் திடீரெனக் காணாமல் போய்விடுவது கவலையாக உள்ளது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்வரை ரொம்பவும் உரத்துப் பேசுகிறார்கள். இலக்கியம் வளர்க்க உழைக்கிறார்கள். பிறகு அங்கே ஒரு பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்து, காணாமல் போய்விடுகிறார்கள். ஆனாலும் ஒரு சிலரை இன்னமும் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர்களோடு எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சாதனைகளை மனம் திறந்து பாராட்டுகிறேன். எழுத்து என்பது போராட்டம். சுவாசம்போல இயல்பாய் இருக்கவேண்டும். நான் ஏன் இத்தனை வருடம் எழுதுகிறேன்? பணமா கொட்டுகிறது? எழுத்தென்பது பொழுதுபோக்கு அல்ல.

தொடர்ந்து பல ஆண்டுகாலமாய் மலேசிய இலக்கிய உலகில் இயங்கி வந்த நீங்கள், தற்கால மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்.

சை.பீர்முகம்மது: இடைப்பட்ட காலத்தில்; முன்பு சொன்னதுபோல 1960ஆம் ஆண்டு முதல்004 1975ஆம் ஆண்டு வரை அந்த பதினைந்து ஆண்டுகால எழுச்சியைக் காண முடியவில்லை. அதற்கான காரணம் என்னவெனில், அப்போது குழுவாக இருந்தார்கள். வடக்கில் இருந்து தெற்கு வரைக்கும் எல்லா இடத்திலும் இலக்கியம் குறித்த ஓர் எழுச்சி இருந்தது. அது ஒரு புதிய அலையாக உருவானது. பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்த எழுச்சியை அதற்கு பிறகு வந்த எழுத்தாளர்களிடம் என்னால் காண முடியவில்லை. இன்னும் சிலர் சோர்ந்து போய்விட்டார்கள். ஆனால் இன்றைய காலகட்ட எழுத்தாளர்களான ம. நவீன், கே. பாலமுருகன். க. யுவராஜன் போன்றர்களிடம் துடிப்பு உண்டு. நான் இன்னமும் எதிர்பார்க்கின்றேன். என் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இன்னும் இவர்கள் அதிகமாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

எந்தச் சமூகத்திலும் மாற்றுக்கருத்து உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. புதுக்கவிதை வந்தபோது நீங்கள் கவனிக்கலாம். மரபுக்கவிஞர்கள் அவ்வளவு மோசமாக எதிர்த்தார்கள்; புறந்தள்ளினார்கள். ஆனால் இன்றைக்கு புத்துக்கவிதை தமிழ் இலக்கியத்தில் ஓர் அங்கமாக வந்துவிட்டது. அதேபோலத்தான் மாற்றுக் கருத்து உள்ள புதிய எழுத்தாளர்களை உடனே அங்கிகரித்துவிடமாட்டார்கள். இருந்தபோதிலும் இவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது. இவர்கள் புதியவைகளை தமிழுக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும். நான் இன்னமும் இலக்கியத்தில் இருக்கின்றேன். நான் எந்தக் காலத்திலும் இலக்கியத்தில் இருந்து மற்றவர்போல விடுபடவில்லை. குறைந்தது 56 ஆண்டுகளாக இலக்கியத்தில் இருக்கிறேன். பதினான்கு ஆண்டுகள் எழுதாமல் இருந்திருந்தாலும் வாசிக்காமல் இருக்கவில்லை தமிழ் இலக்கியத்தொடர்பு இல்லாமல் இருக்கவில்லை.

இன்று இவ்விளைஞர்களால் மலேசியாவில் குறிப்பிடத்தக்க திடீர் மாற்றங்களை பார்க்கிறேன். அது ஆக்ககரமான மாற்றம்.

உங்கள் சம கால எழுத்தாளர்களுடனான நட்பு எப்படி உள்ளது? ஏன் உங்களால் குழு முறையில் இலக்கியத்தை வளர்க்க முடியவில்லை ?

சை.பீர்முகம்மது: முன்பு எங்களுக்கு கடமைகள் குறைவு. அடிக்கடி முத்தமிழ் படிப்பகத்தில் சந்தித்துக் கொள்வோம். சைக்கிளில் பயணம் செய்து எங்காவது கூடி இலக்கியம் பேசுவோம். பிறகு குடும்பம், வாழ்வு, வேலை என வந்தவுடன் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்தது. ஆனாலும் திட்டமிடாமல் தொடர்பு கொண்டவுடன் இன்று   வரையிலும் ஏதாவது ஓர் இடத்தில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளோம்.

எழுதி என்ன பயன் என்று எப்போதாவது விரக்தி அடைந்ததுண்டா?

சை.பீர்முகம்மது: நிறைய முறை. சை.பீர்முகம்மது என்ற எழுத்தாளர் இருக்கிறார் என உணர்ந்ததைத் தவிர வேறென்ன சாதித்தேன் என யோசித்திருக்கிறேன். என்ன சமுதாய மாற்றம் செய்தேன் என விரக்தியின் விளிம்புக்குச் சென்றுள்ளேன். ஆனாலும் காலம் என்னைப் பக்குவப்படுத்தியுள்ளது. இந்த உலகை இலக்கியம் புரட்டிபோடும் என்றால் திருக்குறளும் கொன்றை வேந்தனும் அதைச்செய்திருக்க வேண்டும். ஆனால் எங்கோ ஒரு மனிதருக்கு யாராவது ஒருவருக்கு அல்லது சிலருக்கு அது தன் பயனைப் புகுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, இலக்கியம் வேண்டுபவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து சரியான பலனைத் தருகிறது.

வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் தமிழக எழுத்தாளர்கள் பல சமயங்களில் சிறுபத்திரிகை உருவாக்கத்தில் முயற்சி செய்துள்ளனர். அந்நிலை ஏன் நம் நாட்டில் இல்லை?

சை.பீர்முகம்மது:  இப்போதுதான் அந்நிலை தோன்றியுள்ளது. இணைய பலத்தால் உங்களைப் போன்றவர்கள் அதைத் தொடர்கிறீர்கள். தொடக்கத்தில் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ‘பொன்னி’ என்ற சிறுபத்திரிகை வந்தது. நா.தியாகராஜன் பல இன்னல்களுக்கிடையே அதை நடத்தி தோல்விகண்டார். அதன் பிறகு ‘மலைமகள்’, ‘மலைநாடு’, ‘குங்குமம்’ என சிறுபத்திரிகைகள் வந்து நிலைக்காமல் போனது.

உங்கள் சமகால இலக்கிய முயற்சிகள் குறித்துக்கூறுங்கள்

சை.பீர்முகம்மது: டாக்டர் மு.வ என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன். கூட்டங்களுக்குச் செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள். கூட்டங்களில் பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரத்தை அவை எடுத்துக்கொள்கின்றன. அந்நேரத்தை எழுத்திலும் சிந்தனையிலும் செலுத்துங்கள் என்றார். ஆனால் அதனை நான் இந்த எழுபத்து இரண்டாவது வயதில்தான் செயல்படுத்த ஆரம்பித்திருக்கின்றேன். நினைக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. மிகவும் தாமதமாக செயல்படுத்துகின்றேன். நாளை நான் இல்லாதபோது எனது படைப்புகள்தான் பேசப்படும். ஆகவே என் படைப்புகளின் நான் இப்போது கவனம் செலுத்துகின்றேன். அண்மையில்கூட எனக்கு மனச்சங்கடமான நிலை உண்டானது. நான் எழுதியிருந்த ஒரே நாவல் ‘பெண் குதிரை’. டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பேராசிரியர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். நான் இந்தியில் அறிமுகமான எழுத்தாளன் அல்ல. ஆனால் நாவலை மொழிபெயர்த்தவர் முக்கியமான ஆள் என்பதால் புத்தக விற்பனையும் சிறப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்தச் செய்தியை இங்குள்ள பத்திரிகைகளுக்கு கொடுத்தபோது ஒரு பொறுப்பாசிரியர், பிரசுரிக்கவிடாமல் நிறுத்திவிட்டார். இதெல்லாம் மன வருத்தத்தைத் தருகின்றன. ஆனாலும் இப்படியான சின்னச்சின்ன சங்கடங்களால் உங்களுடைய ஆளுமையை யாரும் பறித்துவிட முடியாது. உங்களுக்கென்று ஒரு திறமை இருக்கிறது. உங்களுக்கென்று ஓர் ஆளுமை இருக்கின்றது அதனை இன்னொருவர் பறித்துவிட முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆக இப்பொழுது எனது முழு நோக்கமெல்லாம், பொது இயக்கங்களுக்கு போவதோ, தலைவராவதோ இல்லை. காலந்தாழ்த்தி வந்தாலும் எழுத்தில் நான் முழுக் கவனம் செலுத்துகின்றேன். ஏற்கனவே நான் எழுதி ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வந்த நாவலை மீண்டும் விரிவாக்கி எழுதுகிறேன். அது விரைவில் நூலாக வருகிறது. அதற்கடுத்து ‘ஓர் முட்டாளின் கதை’ என்று ஒரு நாவலுக்கான குறிப்புகளை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் பத்திரிகைக்காக தொடர் ஒன்றைக் கேட்டிருக்கிறார்கள். இந்நாவலை தொடராக முதலில் எழுதுவதா அல்லது நேரடியாக நாவலாக எழுதிவிடுவதா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றேன். இப்போதுள்ள வாசகர்களை நம்பி எழுதுவது சங்கடமாக இருக்கிறது. எனக்கு பரந்த வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாம் எழுதுவதைப் புரிந்துகொள்கிறார்களா என்பது ஜீரணிக்க முடியாத ஓர் உண்மை. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வட்டம் அதனைப் புரிந்து கொள்கிறது. அவர்களுக்காகவாவது இந்நாவலை நூலாகவோ தொடராகவோ எழுதவுள்ளேன். உடல் நலமில்லாமலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கின்றேன். ஆனாலும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றேன். வாய்ப்பு வசதி இருக்குமானால் அந்நாவலை எழுதி முடித்துவிடுவேன்.

நேர்காணல் / புகைப்படம் : ம.நவீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *