இந்த உலகத்தை சாமானியன் காண்பதற்கும், இலக்கிய மனம் கொண்ட படைப்பாளி காண்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ரசனையும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி வெறும் புறவயக் காட்சிகளை மட்டும் காண்பதில்லை. அக்காட்சிகளின் ஊடே அகத்தையும் ஊடுருவியே அவனது அவதானிப்பு அமைகிறது. தான் காணும் காட்சிகளை எதிர்காலவியலோடு நுணுகிப் பார்க்கும் சிந்தனையும் வரமென பெற்றவன் உண்மையான படைப்பாளி.
‘கைதிகள் கண்ட கண்டம்’ எனும் பயணக்கட்டுரையின் வழி சை.பீர் அவர்கள் தான் இலக்கிய மனம் கொண்ட உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்துள்ளார். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் அத்தியாயங்கள் ஆஸ்திரேலிய நாட்டில் அவருக்கு ஏற்பட்ட சுவாரஷ்யமான அனுபவங்களை மையமாக கொண்டு புனையப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் வெறுமனே பயணக்கட்டுரையை வாசிப்பதான அனுபவத்தை இத்தொகுப்பு தரவில்லை என்பது இத்தொகுப்பின் சிறப்பம்சம்.
பெரும்பாலான பயணக்கட்டுரைகள் வெறும் நாட்குறிப்பு பாணியில் செய்தியறிக்கை வாசிப்பது போன்ற அலுப்பைத் தரும் நடையில் அமைந்திருப்பதை சலித்துக்கொண்டே வாசித்திருக்கிறேன். சுவாரஷ்யம் மிகுந்த சில பயணக்கட்டுரைகள் கூட மேலோட்டமான முறையில் குறிப்பிட்ட இடங்களைப் பற்றி சொல்லிவிட்டு, அங்குள்ள உணவுமுறைகள், பழக்கவழக்கம் ஆகியவற்றைப் பிரதானமாக சொல்லிக்கொண்டுபோகும். ஆனால் ‘கைதிகள் கண்ட கண்டம்’ அந்நாட்டு மக்களின் வாழ்வியலை நம் நாட்டு மக்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டும் பேசுகிறது. அந்நாட்டின் இயற்கை அழகை ரசித்துப் பேசும் அதேவேளையில் கைதிகளாக அங்குப் போய் அந்நாட்டைச் செம்மைப்படுத்தி தங்கள் வாழ்க்கையையும் செம்மைப்படுத்திக் கொண்டவர்களோடு சஞ்சிக்கூலிகளாக வந்து எந்த முன்னேற்றமும் இல்லாது வறுமை நிலையில் தேங்கி நிற்கும் நம் நாட்டு இந்திய மக்களின் நிலை குறித்த கோபத்தையும் பதிவு செய்கிறது.
இப்பயணக்கட்டுரையின் வழியே சை.பீர்முகம்மது வாழ்க்கை முறையையும், எண்ணக்கிடக்கையையும், கோபம், சோகம், நகைச்சுவை என நவரசங்களையும் கொட்டித்தீர்த்திருக்கின்றார்.
முதல் அத்தியாயத்திலேயே தன் வாசிப்பு வேட்கையை வெளிப்படுத்தியுள்ளார் சை.பீர். சிட்னியிலிருந்து நண்பர் மாத்தளை சோமுவின் அழைப்பின் பேரில் தனது ‘வெண்மணல்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிடும் முயற்சியில் இவரது ஆஸ்திரேலிய பயணம் தொடங்குகிறது.
மார்ச் 2,-1996ஆம் ஆண்டு கடல் கடந்து சிட்னிக்குச் சென்ற அனுபவத்தை இக்கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக பதிவு செய்துள்ளார். மலேசிய நாட்டில் தனது நூலை விற்க முடியாத அவலமும், மலேசிய எழுத்தாளன் தனது பார்வையை உலகளாவிய நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற ஆதங்கமும் இந்தப் பயணத்திற்கு வித்திட்டிருக்கின்றன.
‘உலகத்தின் எல்லா நாட்டு இமிகிரேஷன் அதிகாரிகளுக்கும் முதல் பயிற்சியே சிரிக்காமல் இருப்பதுதானோ’ என்ற நோகும் மனதில் உருவாகும் மெல்லிய கிண்டல்கள் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்கக்கூடிய உவப்பை ஏற்படுத்துகிறது.
இரண்டாவது அத்தியாயத்தில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் அங்கு தமிழை வளர்த்துவரும் விதம் குறித்தும் அங்குள்ள தமிழ் இயக்கங்கள் குறித்தும் இயம்பியுள்ளார். சொந்த நாட்டில் சில அமைப்புகளிடம் அங்கீகாரம் பெறாத சை.பீருக்கு அந்நிய நாடு சிறு பேட்டியின் மூலம் கொடுத்த அங்கீகாரத்தைச் சிலாகித்துப் பேசியுள்ளார்.
தமிழ் முஸ்லிமாக இருந்ததால் தான் எதிர்கொண்ட அந்நியத் தன்மை, அதை சிட்னியில் ஆற்றிய உரையின் மூலம் தகர்த்தெடுத்தது, தான் பிரமித்துப்பார்த்த எழுத்தாளர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள் ஆகியவை குறித்து இவர் எழுதியவை வாசிப்போருக்கு நேர்மறை சிந்தனையை வெளிப்படுத்த தவறிவிடவில்லை.
சிட்னியிலுள்ள பிச்சைக்காரர்கள், பழங்குடியினர், இலங்கைத்தமிழர்கள், போதைப்பித்தர்கள், போர்வீரர்கள் என பலதட்டுமக்கள் குறித்த பார்வையையும் கட்டுரையின் ஊடே பதிவு செய்தவர் எல்லா அத்தியாயங்களையும் இலக்கியத்தோடு தொடர்புப்படுத்தியே கொண்டு சென்றுள்ளார். ஆளுமை பெற்ற இலக்கியவாதிகளின் கவனிக்கத்தக்க படைப்புகள் குறித்தும் கட்டுரையில் கூறியுள்ளார்.
பிரயாணங்கள் ஒரு மனிதனின் அறிவை விரிவடைய செய்வதாய் ஏழாவது அத்தியாயத்தில் எழுதியுள்ளார். அந்தப் பிரயாணம் குறித்த ஒளிவு மறைவு இல்லாத அவனது பதிவை வாசித்தாலும் அறிவு விரிவடையும் என்பதை இக்கட்டுரை உணர்த்தியது. காரணம், ஆய்வுப்பூர்வமான தகவல்கள் இக்கட்டுரையில் அதிகம். அதோடு ஆஸ்திரேலிய வரலாறு, நிலப்பரப்பு குறித்த தகவல்கள் என இந்நூல் அவரது உழைப்பையும், தனது எழுத்தில் அவர் கொண்டிருக்கும் தீவிரத்தையும் வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.
முதல் ஆஸ்திரேலிய பயணம் தந்த நிறைவு அவரை இரண்டாம் தடவை பயணித்து ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் மாநாட்டில் கட்டுரை படைக்கவும் செய்திருக்கிறது.
ஓர் அனுபவப்படைப்பு சொல்லும் விடயத்தைக் கடந்து அதை எழுதுபவரின் ஆழ்மன உணர்வுகளையும் நுட்மாகச் சித்தரிக்கும் தன்மை கொண்டது. இக்கட்டுரையின் வாயிலாக சை.பீர்முகம்மது என்பவரின் சுறுசுறுப்பு, கோபம், ஆதங்கம், பிரமிப்பு, நெகிழ்ச்சி என பல குணநலன்களைக் கண்ட எனக்கு அவரிடம் எப்போதுமே தாயன்பை தேடி அலையும் சிறுவன் ஒருவன் உயிர்த்திருப்பதையும் காண முடிந்தது. சிறுவனாக இருக்கும்போதே தாயை இழந்த அவரிடம் ஆழத்தில் உள்ள ஏக்கங்கள் இப்பயணக்கட்டுரையில் வெளிப்படுவது அபூர்வமான அனுபவம்.
‘கைதிகள் கண்ட கண்டம்’ வாசித்து முடித்தபிறகு பயணக்கட்டுரையில் கூட இத்தனை விசயங்களை ஒன்றிணைத்து சுவை குன்றாமல் எழுதமுடியுமா என்ற வியப்பு மேலிட்டது. தொடர்ந்து அவரது அனுபவங்களைப் பத்திகளாகப் பதிவு செய்திருக்கும் ‘திசைகள் நோக்கிய பயணம்’ நூலை வாசிக்கவும் அது உந்தியது.
இப்பத்தித் தொகுப்பின் வாயிலாக அவரது மன ஓட்டத்தை மட்டுமல்லாது அவரின் பன்முக ஆற்றல், அவர் எதிர்கொண்ட சவால்கள், சந்தித்த போராட்டங்கள், தோல்விகள், துரோகங்கள் என நமது வாழ்க்கையில் நாம் கடந்து சென்ற, கடக்கவேண்டிய தூரத்தையும் அறிய வைத்துள்ளது.
மொத்தம் 34 அத்தியாயங்களை இலக்கியம், ஆளுமைகள், சமூகம் என மூன்று கூறுகளாக பிரித்து தந்துள்ளார். இவையாவும் முன்பு அவர் பத்திகளாக எழுதியவை என்பதால் ஒவ்வோர் அத்தியாயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கிறது.
இம்மூன்று கூறுகளிலும் சுவாரஷ்யமான எழுத்தைக் கொண்டிருப்பதில் முதன்மை வகிப்பது இலக்கியம் எனும் வகைமையில் எழுதப்பட்ட கட்டுரைகளாகும்.
புதுமைப்பித்தனின் பார்வையில் ஆரம்பித்து, இலக்கிய சிந்தனை அமைப்பு குறித்தும், தமிழ்நேசன் நாளிதழ் குறித்து சுராவின் சில வரிகளைப் பேசி நிறைவடையும் முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சியாக ஏழாவது அத்தியாயத்தில் ‘புதுமைப்பித்தன் ஒரு பார்வை’என்ற தலைப்பில் அவரது படைப்புகளின் மூலம் அவரைப் பிரதானப்படுத்தியிருக்கிறார். உயர்த்தட்டு மக்களைப் பற்றி மட்டுமே கதைகள் எழுதப்பட்டு வந்த நிலையில் அதை உடைத்து, சாதாரண மக்களையும் கதாபாத்திரங்களாக கொண்டு கதை எழுதி சிறுகதை வளர்ச்சிக்கு அதிக பங்காற்றியவர் புதுமைப்பித்தன் என்ற தனது வாசிப்புப் புரிதலை இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
இக்கட்டுரைத் தொகுப்பில் இரண்டாவது அத்தியாயத்தில் பாரதிதாசனைப் பற்றி சில புதிய விசயங்களை எழுதியிருக்கிறார். கரடிக்கறியும்,புலிக்கரடியும் உண்டவர்; கோபக்காரர் போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன.
மௌனி குறித்து இவர் எழுதியிருந்த அத்தியாயமும் குறிப்பிடத்தக்கது. வெறும் 24 கதைகளை மட்டும் எழுதியிருந்தும் கவனிக்கத்தக்க ஆளுமைகளின் பட்டியலில் அவர் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். மௌனி குறித்த அத்தியாயத்தில் கண் தெரியாத,காது கேளாத நிலையிலும் எழுதிவந்த எம்.வி.வெங்கட்ராம் எனும் எழுத்தாளரைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பை ஊட்டின.
‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற படைப்பின் மூலம் ஆப்பிரிக்க மக்களின் படைப்புகள் குறித்து சுட்டியுள்ள இவர், வரிவடிவமில்லாத மொழியில் எழுதி நோபல் பரிசு பெறும் வரையில் அவர்களின் இலக்கிய வளர்ச்சி பரிணாமம் அடையும்போது இந்நாட்டு தமிழ் எழுத்தாளர்கள் ஏன் அந்தளவுக்கு உயரமுடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது சிந்திக்க தூண்டுகிறது.
பிற நாட்டு இலக்கியங்களோகு சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளார். சல்மா, சுகிர்தராணி வரிசையில் நம் நாட்டு பெண் கவிஞர்கள் இன்னமும் வீறு கொண்டு எழவில்லை, அவர்களின் சிந்தனை இன்னும் தூரநோக்கில் பயணிக்கவேண்டும் என ஆதங்கப்படும் இவர், சிங்கப்பூர் கவிஞர் லதாவைப் பாராட்டி எழுதியுள்ளார்.
இந்த அத்தியாயத்தில் நம் நாட்டு தமிழ் இலக்கியத்தில் பின்னடவை ஏற்படுத்தும் அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர்களின் படைப்புகளுக்குச் சன்மானம் கொடுக்காத பத்திரிக்கைகள் தொடங்கி, இலக்கியத்தில் நேர்மையற்று நடந்து கொள்ளும் சில அமைப்புகள், சாதியவேறுபாடு கொண்ட மனிதர்கள், உடனிருந்தே முதுகில் குத்தியவர்கள், நல்ல இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்காத வாசகர்கள் என பலர்மீது இருக்கும் கோபம் இத்தொகுப்பில் பிரதானமாய் இருப்பதை உணரமுடிகிறது. ஆனால் அந்த ஆதங்கம், அந்தக் கோபம் யாவுமே நம் நாட்டில் நல்ல இலக்கியம் வளர வேண்டும். அதற்கு வாசகர்களின் வாசிப்பு ரசனை மாறவேண்டும் என்ற கடப்பாட்டை நோக்கிப் பயணிப்பதை உணர்ந்ததால் அந்தக் கோபத்தில் தார்மீகம் தெரிகிறது.
இக்கட்டுரைத் தொகுப்பின் இரண்டாவது பகுதி ‘ஆளுமைகள்’ என்ற தலைப்பில் தமிழ் சான்றோர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாசிரியர்களைப் பற்றிய பதிவைக் கொண்டுள்ளது. தமிழவேள் கோ.சாரங்கபாணி, அரசியல்வாதி தா.கிருட்டிணன், முருகு சுப்ரமணியம், ஆதி குமணன் என பலரைப் பற்றியும் பகிரும் இக்கட்டுரைகளில் கிளைக்கதைகள் போன்று அவர்களின் ஊடே மற்ற மற்ற எழுத்தாளர்களையும் அறிந்துகொள்ள வகை செய்கின்றன.
இதே பிரிவில் முஸ்லிம் எழுத்தாளர்கள் குறித்த ஒரு சிலரின் பிரிவினை பார்வையும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்கும் இருப்பதைச் சுட்டியுள்ளார். இலக்கியப் போட்டிகளின்போது பாரபட்சமாக நடந்து கொள்ளும் நீதிபதிகள் குறித்த அதிருப்தியும், அவர்களின் அந்தப் போக்கு நம் நாட்டில் நல்ல இலக்கியங்கள் கவனம் பெறாமல் போக செய்யும் அபாயத்தையும் சற்று காட்டமாகவே எழுதியுள்ளார்.
‘வேரும் வாழ்வும்’ தொகுப்பின் மூலம் உயிரோடு இல்லாத பலரின் கதைகளையும் கவனத்தில் கொண்டு வந்ததைப் பற்றியும் எழுதியுள்ளார். பொருளாதாராத்தை உயர்த்தும் கடப்பட்டில் 20 ஆண்டுகாலம் இலக்கியத்தைவிட்டு விலகியிருந்ததையும் பகிர்ந்துள்ளார்.
மூன்றாவது பிரிவில் சமூகம் எனும் பகுதியில் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் பலவும் இவரது மன ஓட்டத்தையும், ஆதங்கத்தையும், கோபத்தையும் கொண்டிருக்கின்றன.
தமிழைப்பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், எழுத்தாளனான கதை, கலையுலக அனுபவம்,ராணுவ அனுபவம், ஞானம்,சித்தன்,புத்தன் என விரியும் இப்பகுதியில் ரசனையான கட்டுரையாக அமைந்தது ‘மெதுவாக செல் மேகமே’ எனும் அத்தியாயமாகும்
இந்த அத்தியாயத்தில் பால்ய வயது காதல் ரசிக்கக்கூடிய வகையில் உயிரோட்டமான உணர்வுகளை ஏற்படுத்தி செல்கிறது.
இளவரசன் பிறந்தால் கொண்டாடப்படும் வானவேடிக்கை போன்று தான் பிறந்தபோது குண்டு மழை பொழியப்பட்டதாய் சொல்லி நகைச்சுவையாய் ஆரம்பிக்கும் அத்தியாயத்தில் பாகிஸ்தானிய சிறுமி பீபியின் நினைவுகள், அவள் மீதான ஈர்ப்பு, அவள் தன் சொந்த ஊருக்குப் போகும்போது ஏற்பட்ட சோகம்,அமனதில் தேங்கிவிட்ட அவளது நினைவுகள் என உணர்ச்சிப்பூர்வமாய் பதிவாகியுள்ளது.
ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்வதே கடினமாக தோன்றும்போது பல்வேறு ஆண்டுகளில், பல்வேறு நாடுகளில், பல்வேறு மனிதர்கள் குறித்த அனைத்து விசயங்களையும் எப்படி இவரால் உள்வாங்கி, நினைவில் வைத்துக்கொண்டு எழுத முடிகிறது என்ற பிரமிப்பை திசைகள் நோக்கிய பயணம் தர தவறவில்லை.
இலக்கிய உலகில் நேர்ந்த, நேர்ந்துகொண்டிருக்கும் சம்பவங்கள், வாசிக்க வேண்டிய படைப்புகள், வாசிக்கவேண்டிய படைப்பாளிகள், உலக இலக்கியம் என பலவற்றையும் இந்த ஒரே கட்டுரைத் தொகுப்பில் இணைத்துள்ளது போற்றத்தக்க முயற்சி.
இக்கட்டுரைத் தொகுப்பில் கொஞ்சம் அயர்ச்சியடைய வைத்த அம்சம் யாதெனில் ஒரு சில அத்தியாயங்கள் கோர்வையாக இல்லாமல் மனம் போன போக்கில் எழுதப்பட்டிருப்பதாக தோன்றியது. ஆயினும் முக்கால் நூற்றாண்டைக் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் படைப்பாளியின் இலக்கிய அறிவை அவரின் எழுத்தின் வாயிலாகவே பெற்றுக்கொள்வதை பெரும் வரமென கருதுகிறேன். இந்நாட்டின் சிறந்த இலக்கியவாதிகளில் சை.பீர்முகம்மது அவர்களுக்கு அ-புனைவுலகத்தில் தனித்த நிரந்தர இடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.