சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

100-00-0001-448-5_bஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.


மேற்சொன்ன நான்கு எழுத்தாளர்களுமே தங்கள் சிறுகதையின் கருவை ஜெயகாந்தனின் பிரபலமான புனைவிலக்கியங்களைக் கொண்டு அமைத்துக்கொண்டவர்கள் என ஊகிக்க எல்லாவித சாத்தியங்களும் உள்ளன. பொருளியல் அடிப்படையில் சமூகத்தில் நிகழும் மாற்றங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சொல்லும் படைப்புகள், இருக்கும் நிலையில் இருந்து மேம்பட, சிந்தனையை முதன்மை கருவியாகப் பயன்படுத்தும் கதாமாந்தர்கள், எந்தப் புதுமையையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பண்புக்கொண்ட மனிதர்கள் என ஜெயகாந்தன் புனைவுகளின் கூறுகள் இவர்கள் சிறுகதைகளில் எளிதாகக் காணக்கிடைக்கின்றன. ஆனால் அவை எவ்வாறு கலையாகப் பரிணமித்துள்ளன என்பது குறித்துதான் இங்கு மறுவாசிப்பு தேவைப்படுகிறது.

சை.பீர்முகம்மது எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது சிறுகதைகள் ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ எனும் தலைப்பில் தங்கமீன்கள் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. அவரது முதல் தொகுப்பான வெண்மணலில் (1984) இருந்தும் பல கதைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் சை.பீர்முகம்மதுவின் 25 ஆண்டுகால சிறுகதைகள் உலகை இத்தொகுப்பின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

இத்தொகுப்பில் இணைக்க அவசியம் இல்லாத கதைகளாக உக்கிர பாம்பு, உண்டியல், நெஞ்சின் நிறம், அதனால் என்ன? ஆகிய சிறுகதைகளைக் குறிப்பிடலாம். இந்தக் கதைகளின் கட்டுமானம் அடிப்படையில் ஒன்றுதான். இரு எதிர்நிலை கதாபாத்திரங்கள். அதில் ஒரு கதாபாத்திரம் மற்றொன்றைவிட ஏதோ ஒருவகையில் பலகீனமாக இருக்கிறது. ஓர் இக்கட்டான சூழலில் அந்த பலகீனமான கதாபாத்திரம் தன் மேன்மையான குணத்தால் மேம்பட்ட செயலைச் செய்து மற்றொரு கதாபாத்திரத்தின் மனதை அவமானத்தால் கூச வைக்கிறது. அதன் மூலம் சிறிய திருப்பம் உருவாகிறது. பொதுவாகவே இந்தக் கட்டுமானம் பள்ளிக்கூடங்களில் பிரபலமானவை. இதில் உருவாகும் சிற்றுணர்ச்சிகள் [sentiments] வணிக சினிமாவிலும் சீரியல்களிலும் கூட மலிந்து கிடக்கின்றன.

இந்த வரிசையில் ‘வெடித்த துப்பாக்கிகள்‘ சிறுகதையையும் வைக்கலாம்தான். அசாதாரண சம்பவத்தால் மனம் கூசி தவறுகளை உணர்வதும்; அபார குணத்தால் மேம்பட்டு நிற்கும் மனிதனாவதுமான கதைதான் இதுவும். ஆனால் கதை நிகழும் களத்தால் மட்டுமே கவனித்து வாசிக்க வைக்கிறது.

சை.பீர்முகம்மதுவின் பலம் அவர் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம்தான் என்று இக்கதையை வாசிக்கும்போது தோன்றியது. இன்றுவரை வேறெந்த மலேசியத் தமிழ் எழுத்தாளனுக்கும் கிடைக்காத அனுபவம் அது. இராணுவத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் நடக்கும் சண்டையையும் அதனுள் தத்தளிக்கும் மனித உணர்வுகளையும் சித்தரிக்கும் கதையின் நம்பகத்தன்மை அதன் சொல்லாடல்களிலும் வர்ணனைகளிலும் திரண்டுள்ளது. துப்பாக்கிகளின் வகைகளையும் அதன் பயன்பாட்டை விளக்குவதும், எதிரிகளைத் தாக்க மறைகுழிகளைத் தோண்டும் பாங்கை விவரிப்பதும், கையெறி குண்டுக்கும் அடையாள எண்கள் உள்ளதைக் கூறுவதும், அடிபட்டவர்களைச் சுமக்கும் விதத்தை வர்ணிப்பதும் என ஓர் இராணுவ களத்துக்கான நுண்தகவல்கள் ஏராளமாகவே இடம்பெற்றுள்ள கதை இது. ஆனால் நுண்தகவல்களும் புதிய களமும் கலைக்கான புறத்தேவைகள் மட்டுமே. இக்கதை அடிப்படையில் மனமாற்றத்திற்காக நிகழும் சிறு திடுக்கிடும் சூழலை மட்டுமே நிகழ்த்திக்காட்டுகிறது. இந்தக் கதையில் உள்ள அதே பலவீனம் ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழியும்’ சிறுகதையிலும் தொடர்கிறது.

சை.பீர்முகம்மது தியாகம், மிகை உணர்ச்சிகளால் திருப்பங்களை உருவாக்கும் உத்திகளையே திரும்ப திரும்ப தன் புனைவுகளில் செய்து பார்க்க முயல்கிறார். மானுடத்தின் மேன்மையான கணங்கள் பல தரமான சிறுகதைகளில் எழுதப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் ஒரு மனுஷி, அப்பாவு கணக்கில் 35 ரூபாய், சுந்தர ராமசாமியின் பிரசாதம், சீதை மார்க் சீயக்காய் தூள் என சிலவற்றை நினைவுப்படுத்தலாம். இக்கதைகளில் ஏற்படும் மனமாற்றமும் அதன் வழி கூறப்படும் மானுடமும் சூழல்கள் மனிதனை இயக்கும் சந்தர்ப்பங்களை நுண்மையாகச் சித்தரிப்பவை. வாசகனை அந்த மெல்லிய ஒளிகொண்ட தருணத்தை நோக்கி நகர்த்திச் செல்பவை. சை.பீர்முகம்மது சிறுகதைகளில் அது நிகழ்வதில்லை என்பதுதான் வருத்தமானது.

மாரிக்கு நண்பன் ஒருவன் மூலமாக பயாஸ்கோப் அறிமுகமாகிறது. செல்லம்மா மாரியின் பயாஸ்கோப் பாடலுக்கும் அபிநயத்துக்கும் மனதைப் பறிகொடுக்கிறாள். இருவரும் மலாயாவிலுள்ள ஒவ்வொரு தோட்டப்புறத் திருவிழாக்களுக்கும் பயாஸ்கோப்பை சைக்கிளில் கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். வீடு வாசல் இல்லை. கோயில் குளத்தில் குடித்தனம். பயாஸ்கோப் மூலம் சம்பாத்தியம். பிள்ளைச் செல்வம் இல்லை. புரூவாஸில் இவர்களுக்கு நெருக்கமான நண்பர் கோபால் கங்காணி. 55 வயதில் இ.பி.எப் பணத்தை எடுத்ததும் கோபால் சாலைபோடும் தொழிலில் பணம்போட்டு முன்னேறி தனக்கு மிகவும் பிடித்தமான வான்கோழிப் பண்ணையை உருவாக்கிக்கொண்டவர். மாரிக்கு தன் சொந்த ஊரான மதுரையில் தன்னுடல் எரிக்கப்படவும் உறவுகளோடு கலந்திருக்கவும் திட்டம். செல்லம்மாவிற்கோ மதுரை மீனாட்சியம்மனை ஒருமுறையாவது தரிசித்துவிட ஏக்கம். பயாஸ்கோப் பெட்டியின் அடிப்பாகத்தில் பல சேமிப்புப்பண சுருக்குப் பைகளின் முடிச்சுகள் உள்ளன. சிகாம்புட் திருவிழா முடிந்ததும் இவர்களுக்கு வேண்டிய பணம் சேர்ந்திடும். அடுத்து, ராஜூலா கப்பல் பயணம் என்று திளைத்திருக்கையில் தங்களின் அருமை நண்பர் கோபாலுக்குப் பண நெருக்கடியும் வீடு ஏலம் போவதின் நிலையும். தாங்கள் சேமித்து வைத்திருந்த அத்துணை பணத்தையும் தானமாகத் தந்துவிட்டு செல்கின்றனர்.

மனித மனம் மாறக்கூடியதுதான். அது சிறுமையிலும் மேன்மையிலும் மாறி மாறி தோயக்கூடியதுதான். ஆனால் அது நிகழும் அந்த கணம் உருவாகும் நுட்பமான உணர்வு மாற்றங்களை சை.பீர் தவறவிடுவதே இக்கதைகளைச் சாதாரணமாக்குகிறது. அனைத்தும் சட்டென நிகழ்கிறது. ஒரே நிமிடத்தில் மனிதன் வேறொன்றாக மாறிவிடுகிறான். அது முழுக்க புறவயமாக மட்டுமே நிகழ்வதாக உள்ளது. இதனால் எளிய திருப்பங்கள் நிறைந்த கதையாகவே இவை மிஞ்சுகின்றன.

அந்த மரங்களும் பூப்பதுண்டு, எலும்புக்கூடு, குருதி கசிந்த கேமரா, அக்கினி ஸ்தம்பனம் ஆகிய சிறுகதைகள் சமூகப் பிரச்சனையைச் சொல்ல முயலும் புனைவுகள். இதில் ‘அந்த மரங்கள் பூப்பதுண்டு’ எனும் சிறுகதையைத் தவிர ஏனைய மூன்று கவனிக்கப்பட வேண்டிய கதைகளே.

‘குருதி கசிந்த கேமரா‘ கதையிலும் ஒரு பெண் வருகிறாள். இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாய். கணவன் போதைப்பித்தன். எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. நட்சத்திர விடுதியின் சமையல் பிரிவில் இவளுக்கு வேலை. சம்பளப் பற்றாக்குறை. இரண்டு பெண் பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இருக்கும் இடமோ விலைமாதர்களும் கூலித்தொழிலாளர்களான வெளிநாட்டு ஆண்களும் நிறைந்திருக்கும் கடைமாடி அறைகள். பிள்ளைகளுக்கு இது ஒவ்வாத இடமென நினைக்கிறாள். பதினெட்டு மாதங்களாக ஒரு மலிவுவிலை வீடு கிடைக்க மாநகராட்சி மன்றத்திற்கு நாயாய் பேயாய் அலைகிறாள். தனித்திருக்கும் தாய் என்று நிரூபிக்க விவாகரத்து சான்றிதழ் இல்லை. சமூக நலத்துறை அமைச்சரின் சிபாரிசுக் கடிதத்தையும் சத்தியப் பிரமாணப் பத்திரத்தையும் கொண்டுபோய் கொடுத்தும்கூட காரியம் ஆகவில்லை. காரியம் ஆகவேண்டும் என்றால் முதலில் அவனோடும் பிறகு இவனோடும் படுக்கையறைக்குப் போகவேண்டும். போகிறாள். வீடு கிடைத்துவிடுகிறது.

‘அக்கினி ஸ்தம்பனம்’ முதியோர் இல்லத்தில் நடக்கும் கதை. அஞ்சலை புதிதாக வந்தடைந்திருக்கும் முனியம்மாவிடம் ராமாயிப் பாட்டியைப் பற்றிச் சொல்லுகிறாள். அந்தப் பாட்டியின் மூலமாக அக்கினி ஸ்தம்பனம் என்ற சொல் அறிமுகமாகிறது. இதன் அர்த்தம் நெருப்பு சுடாமல் இருக்கச் செய்யும் வித்தை. தன் மகன் தன்னுடைய சவ உடலுக்கு நெருப்பு வைத்தாலும் அந்த நெருப்பு தன் சவ உடலைச் சுட்டெரிக்கக் கூடாது என்ற மன வைராக்கியம் ராமாயி பாட்டிக்கு. ராமாயி மூலமாக அஞ்சலைக்கும் அஞ்சலை மூலமாக முனியம்மாவிற்கும் கடத்திச்சென்று உள்அமர்ந்த சொல்லாக அது மாறுகிறது. மந்திரமாக உச்சரிக்கப்படுவதின் மூலம் சொல் வீரியம் பெறுகிறது. உயிர்த்தெழுந்து அதிசயிக்க வைக்கின்றது.

‘எலும்புக்கூடு’ என்ற கதையில் கலியமூர்த்தியின் பாட்டன் சஞ்சிக்கூலியாக சுங்கைப்பட்டாணித் தோட்டத்திற்குப் பால்மரம் வெட்டும் தொழிலாளியாக வந்தவன். பாட்டன் காலத்திலிருந்து கலியமூர்த்தி காலம்வரை தொழிலாளர் என்ற முறையிலும் தாழ்ந்த சாதி என்ற வகையிலும் ஒடுக்கப்படுகிறார்கள். கலியமூர்த்தி ஆறாம் வகுப்பு வரை படித்தவன். கிராணியிடம் வேலை கேட்கப் போகும்போது உயர்சாதி அடையாளம் கொண்டதால் ‘மூர்த்தி’ என்ற பெயரை எடுத்துவிடும்படி சொல்ல இவன் மறுப்பேதும் சொல்லாமல் கலியன் என்ற பெயரில் வாழ்கிறான். பிற்பாடு தொழிற்சங்கத் தலைவனாகிறான். செய்யும் வேலைக்குச் சரியான கூலி தரப்படாததால் நிர்வாகத்தை எதிர்க்கிறான். சகாக்கள் தன்பக்கம் இருக்கும் தைரியத்தில் மேலும் மேலும் கலகம் செய்ய நிர்வாகம் ஆள் வைத்து இவனை கண்டந்துண்டமாக வெட்டிச் சாகடிக்கிறது. தோட்டத்தில் மேல்சாதிக்கு மற்றும் கீழ்ச்சாதிக்கு என இரண்டு இடுகாடுகள். கலியனின் பிணம் சகாக்களின் ‘ஆர்வக்கோளாறில்’ மேல்சாதி இடுகாட்டில் புதைக்கப்பட அதை எதிர்த்த மேல்சாதியினர் புதைகுழியைத் தோண்டியெடுத்து கீழ்சாதி இடுகாட்டில் புதைக்க இதுவே இருதரப்புக்கும் பெரிய பிரச்னையாகிறது. பிரச்னை நீதிமன்றம் செல்கிறது. கோர்ட்டின் தீர்ப்புப்படி கலியமூர்த்தியை மீண்டும் உயர்சாதி இடுகாட்டில் புதைக்கிறார்கள். மூன்று முறை புதைக்கப்பட்டதால் அந்த எலும்புக்கூடு அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. அங்கிருந்து ‘சாந்தி’ அடையாத அதன் ஆவி எலும்புக்கூட்டில் புகுந்து வாழ்ந்த தோட்டத்தைப் பார்க்கப்போவதாகவும் அதன் மூலம் சாதியக் கொடுமை உலகுக்குத் தெரியவரும் என்றும் அது நம்புகிறது.

இந்த மூன்று சிறுகதைகளிலும் சை.பீர்முகம்மது கையாண்டுள்ள உத்திகளுக்காகவே கவனிக்கத் தக்கதாய் உள்ளது. பெரும்பாலும் சை.பீர் தலைமுறையில் உள்ள படைப்பாளிகள் நேர்க்கோட்டு முறையில் கதைச்சொல்ல பழகியவர்கள். சில சமயம் சமூகச் சிக்கலைச் சொல்ல பிரச்சாரத்தைக் கையில் எடுப்பவர்கள்.  சை.பீர் கருத்துப்பிரதிநிதிகளை உருவாக்காமல் கதைச் சொல்லும் மாறுபட்ட முறையால் சிக்கலை அணுகிப்பார்க்கிறார்.

‘குருதி கசிந்த கேமரா‘ சிறுகதையை முழுக்க திரைப்பட இயக்கமாகவே கதையை நகர்த்துகிறார். ஓர் ஒளிப்பதிவாளர் நடக்கும் அத்தனையையும் பதிவு செய்துக்கொண்டிருப்பதாகக் கதையை நகர்த்துகையில் மிகையுணர்ச்சி இல்லாமல் ஒவ்வொரு காட்சியாக மாறுகிறது. இக்கதையின் மற்றுமொரு பலம் அதன் வசனம். அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் எவ்வளவு மந்தமானவர்கள் என கிண்டலான வசனங்கள் மூலமே காட்ட முனைகிறார். ‘அக்கினி ஸ்தம்பனம்’ சிறுகதையும் வசனங்களால் உயிர்பெறும் சிறுகதை. கதை முழுக்கவே அஞ்சலை மட்டுமே பேசுகிறாள். எதிரில் உள்ள முனியம்மாவின் அசைவுகள், தயக்கங்கள், கேள்விகள் எல்லாமே அஞ்சலை மூலமே உரையாடலாக வெளிப்படுகிறது. ஒரு முதியோர் இல்லத்தில் உருவாகும் வாழ்வின் கசகசப்பு சலிப்படைந்த தகவலாக இக்கதையில் கச்சிதமான வசனங்களால் பகிரப்படுகிறது. ‘எலும்புக்கூடு’ சிறுகதையும் இவ்வாறு ஆவி சொல்வதாக சை.பீர் சித்தரித்துள்ளார். இந்த மூன்று சிறுகதைகளையும் சை.பீர் எழுதிய சுவாரசியமான கதைகள் எனலாம். ஒரு தருணத்தை சுவையாகச் சொல்லியுள்ளார்.

‘அசுணப் பறவை’, ‘பொற்காசுகள்’, ‘தேவத் தேர்’ ஆகிய கதைகளைப்போல மலேசியாவில் மூத்தப்படைப்பாளிகள் எழுதியது குறைவு. கதைக்கருவே மொழியையும் திணையையும் காலத்தையும் முடிவு செய்திருக்கிறது. இவையனைத்தும் சை.பீர் அவர்களும் மிக இயல்பாகக் கைக்கூடி வந்துள்ளது.

மகாபாரத்தில் மகாபிரஸ்தானிக பருவம் தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி. தருமரை மட்டும் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவேந்திரனே தேவ விமானத்துடன் வந்தார். தன் சகோதரர்களும், திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர இயலாது என தருமர் பதில் உரைத்த போது, விமானத்தில் நாய் ஏற முற்பட்டது. அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை என்று கூறித் தடுத்தான் இந்திரன். என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு சுவர்க்கலோகம் வர மாட்டேன் என்றார் தருமர். அப்போது நாய் வடிவத்தில் இருந்த தர்மதேவதை, தருமருக்கு காட்சியளித்து மறைந்தது என்பது புராணம். இதை சை.பீர்முகம்மது ‘தேவத் தேர்‘என்ற சிறுகதையில் மீள் புனைவாக்கியுள்ளார். மனதளவிலும் உடலளவிலும் திரும்பிப்பார்க்காதே என்ற கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போன அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன் மற்றும் திரௌபதி ஒருவர் பின் ஒருவராக இறக்க நாய் மட்டும் தர்மருடன் சென்று சேர்கிறது. அதற்கு அதர்க்க புத்தியில்லை. தருமனும் ஒருவகையில் வாழ்வைத் திரும்பிப்பார்க்காமல் செல்கிறான். கடந்தகாலம் என்பது எவ்வளவு சுமை என இக்கதை தத்துவார்த்தமாகவே விவரிக்கின்றது. தத்துவங்களை மையமாகக்கொண்ட கதைகள் மலேசியாவில் எழுதப்பட்டது குறைவு. அதேபோல காப்பியங்களின் கிளைக்கதைகளை மீள்புனைவாக்குவதை புதுமைப்பித்தன் முதல் ஜெயமோகன் வரை பல படைப்பாளிகளும் செய்துவர அதுபோன்றதொரு உத்தியை சை.பீர்முகம்மது கலைவடிவத்துடன் கையாண்டுள்ளார்.

பொற்காசுகள்’ சிறுகதையின் கதைக்களம் புதிது. பொறாமையால் ஒருவரின் திறமை நசுக்கப்படப் பார்ப்பதும் பின்னர் நசுக்கப்படுபவர் தன் திறனால் வெளிவருவதும் என எளிய திருப்பங்கள் உள்ள கதை. ஆனால் இதில் வரும் கவிஞர் பிர்தௌஸின் கலை மனமும் அதை அங்கீகரிக்காத அதிகாரத்தின் ‘குறைந்தபட்ச’ பரிசை ஏற்க முடியாத தவிப்பும் அதன் தொடர்ச்சியில் நிகழும் இறப்பும் என கதையின் இன்னொரு பகுதி முக்கியமானது. அதாவது இந்தக் கதைக்குள் இருக்கும் இன்னொரு கதை என் வாசிப்பில் நுட்பமான சித்தரிப்பாக உள்ளது. ஆனால் நேரடியான கதை சொல்லல் முறை கதையை மேலெழ முடியாதவையாக்கிவிடுகிறது. சை.பீர்முகம்மது சிறுகதைக்குத் தேவையான நுட்பமான விவரணைகளைச் சொல்வதில் திறமையானவர். அவர் வர்ணனையில் சுல்தான் மற்றும் புலவர்களின் தோற்றத்தைக் கண்முன் காணமுடிகிறது. தொகுப்பை வாசிக்கும்போது சை.பீர்முகம்மது முற்றிலும் புதிய கருவையும் களத்தையும் உத்தியையும் கையாண்டே தனது சிறுகதையில் சோதனை முயற்சிகள் செய்துள்ளார் என தோன்றுகிறது. ஆனால் சிறுகதை என்பது கரு, உத்தி, களம் மட்டும் அல்ல; அதைச் சொல்லும் விதமும்தான். கலைஞன் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் அவதியுறும் நிலையைப் புரிந்துகொள்வது சிரமமானது. ஒருவகையில் நுட்பமானதும் கூட. அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதை இவ்வேளையில் நினைவுக்கு வருகிறது. கலைஞன் அவனுக்குரிய கலையின் பீடத்தில் ஏறும் கணம் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். “நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்” என டகர்பாயிட் காதர் சொல்லுமிடத்தில் அந்த நுட்பம் உண்டு.
சை.பீர்முகம்மது கலைஞனின் இந்த மனநிலையைப் ‘பொற்காசு’களில் சொல்வதில் பின்வாங்கியிருந்தாலும் ‘அசுணப்பறவை’ சிறுகதையில் வென்றெடுத்து விடுகிறார்.

‘சரஸ்வதி சபதத்தில்’ வருவதுபோல ஒரு கலைஞன் இறைவன் முன் அன்றி வேறெங்கும் தன் நாதஸ்வரத்தை வாசிக்கமாட்டேன் என்கிறான். அதனால் வரும் இடையூறுகளால் ஊரைவிட்டுப்போகவும் முடிவு செய்கிறான். ஆனால் அவனுக்கு அழுத்தம் கொடுக்கும் கோயில் தலைவர் அவன் இசையில் மயங்கி அவனை வணங்குகிறார். சங்கரன் நாதஸ்வரத்தை வாசிக்கும்போது அவன் மனதில் உருவாகும் காட்சிகளும், அதன் முடிவில் தான் அடைந்தது என்ன என சொல்லத்தெரியாமல் கலங்கி நிற்கும் கோயில் தலைவரின் சூழலும் கதைக்குத் தேவையான மௌனத்தைக் கொடுக்கிறது. சை.பீர்முகம்மது நுட்பமான உணர்வுகளை அடையாளம் காண்கிறார். அதைக் கதையாக்க முயல்கிறார். நவீன இலக்கியத்தின் முக்கியமான குணம் இது. மலேசிய இலக்கியச்சூழலில் இதைப் புதுமை என்றும் சொல்லலாம். ஆனால் ‘அசுணப்பறவை’ கோயில் தலைவரின் மௌனத்திலேயே அத்தனை உணர்வுகளையும் சொல்லிவிட, மேற்கொண்டு அவரைப் பேசவிடுவது கதையின் உச்சத்தன்மையிலிருந்து கீழே இறக்கும் முயற்சியாகவே படுகிறது. இந்தப் பலவீனத்தை சை.பீர்முகம்மதுவின் பல கதைகளிலும் காண முடிகிறது. கதையைச் சரியான இடத்தில் முடிக்கும்போதுதான் அதை வாசித்த முழு திருப்தி கிடைக்கும்.

‘சிவப்பு விளக்கு’ மற்றும் ‘பாதுகை’ சை.பீர்முகம்மது சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படும் கதைகள். கல்விக்கூடங்களில் முன்வைத்து பேசப்படும் கதைகளும் இவைதான். கல்விக்கூடங்களுக்குக் கலை அவசியமில்லை. அவர்களுக்கு ஒரு சிறுகதை சமூகத்தின் சிக்கலைச் சொல்ல வேண்டும். கதையில் உள்ள சிறு சிறு சம்பவங்களைக் கொண்டு சமகால சமூகப் பிரச்சனையைச் சொல்ல முடியவேண்டும். என் வாசிப்பில் சை.பீர் சிறுகதை புனைவுகளில் இவ்விரு சிறுகதைகளும் சாதாரணமானவை.

‘சிவப்பு விளக்கு’ சிறுகதையில் அமீது, ஆபெங், காளிமுத்து ஆகியோர் பிச்சைக்காரர்கள். அமீது அரசாங்க ஆதரவில் தஞ்சம் பெற்றுவிட்டான். ஆபெங் நாடகமாடிப் பிச்சை எடுத்தாலும் ஒருகட்டத்தில் அதை நிறுத்திவிட்டு கார் கழுவும் பணிக்குச் சென்று நாளடைவில் ஐஸ்கிரிம் விற்கும் அளவுக்கு முன்னேறி விடுகிறான். காளிமுத்து வாழ்க்கையில் மாற்றமில்லை. இறுதியில் ஆபெங்கின் சவ ஊர்வலம் படு அமர்களமாக இருந்ததையும் மூன்று மாதம் கழித்து அனாதைப் பிணமாக காளிமுத்து கிடந்ததையும் கதாசிரியர் விவரிக்கிறார். பிணமான பின்பும் காளிமுத்துவின் கண்கள் சிவப்பு விளக்கையே நிலைகுத்தி இருந்தன என வாக்கியம் முடிகிறது. அது வாசகனுக்கு எழுத்தாளர் வழங்கும் ஒருவகைக் குறியீடுதான். ‘காளிமுத்து பச்சைவிளக்கு எரியும்போது கவனப் பிசகாக இருந்துவிடுகிறான். அதனால் ‘ஒரு நாளாவது அவன் கண்ணில் அந்தப் பச்சை விளக்குத் தெரியவில்லை’ என்ற கதையின் இடையில் வரும் வாக்கியங்கள் காளிமுத்துவின் பலவீனத்தையும் முன்னேற்ற முயற்சிகள் எதுவும் மனதில் தோன்றாமல் இருக்கிறது என்பதையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. மலாய்க்காரர்களுக்கு அரசியல் பலம் இருப்பதையும் சீனர்களுக்கு வணிகம் கைகொடுப்பதையும் தமிழர்கள் இவை இரண்டும் இல்லாமல் அனாதைகளாகி இருப்பதாலும் இக்கதை முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. இது அரசியல்வாதிகளாலும் பிரச்சாரகர்களாலும் பலகாலமாகச் சொல்லப்படும் விடயம்தான். ஏற்கனவே சமூகத்தில் நிலவும் கருத்தாக்கத்தைக் கதாபாத்திரங்கள் மேல் ஏற்றி அதைப் புனைவாக்குவது பல வாசகர்களுக்கும் உவப்பானதாகவே இருக்கும். ஆனால் சிறுகதையின் பணி ஏற்கனவே உள்ள கருத்தாக்கத்தை பிரச்சாரம் செய்வதல்ல. அச்சிக்கலைப் புதிய முறையில் அணுகிப்பார்ப்பதுதான்.

பாதுகை’ சிறுகதையில் பள்ளிக் காலணியைப் புதிதாக வாங்க தனலட்சுமி வீட்டில் போராடுகிறாள். தாயிடம் தந்தையிடம் அண்ணனிடம் என கெஞ்சி நிற்கிறாள். பணம் இருக்கிறது. ஆனால் அவர்கள் வீடியோ பார்ப்பது போன்ற கேளிக்கைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை கல்விக்குத் தர மறுக்கின்றனர். ஒரு சிறுமி தனது தேவையை எவ்வாறு தானே தீர்த்துக்கொள்ளப் போராடுகிறாள் என்றும் இறுதியில் அதில் நிகழும் தோல்விகளையும் சை.பீர் இக்கதையில் சித்தரிக்கிறார். அவளது காலணியைப் பற்றிக் கவலையில்லாமல் சம்பூர்ண ராமாயணத்தில் ராமனின் பாதங்களில் இருந்த பாதுகையைப் பரதன் எடுத்துச்செல்லும் காட்சியை வீடியோவில் பார்த்து மனம் உருகும் குடும்பத்தாரின் மூலம் கதாசிரியர் இச்சமூகத்தின் போலி முகத்தை நுட்பமாகப் பகடி செய்கிறார். சை.பீர்முகம்மது இவ்வாறு குறியீடுகள் மூலம் உணர்வு நிலைகளை விளக்க, கையாளத் தெரிந்துள்ளார்.

குறியீடுகள் மூலம் சொல்வதாலேயே இக்கதைகள் வாசக பங்கெடுப்பு நிகழ்வதாக ஒரு மாயத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதுவே இக்கதை சிறந்ததாக கற்பிதம் செய்ய போதுமானதாக உள்ளது அபத்தமானது. என் வாசிப்பில் இத்தொகுப்பில் சிறந்த கதைகளாக ‘ஆண்டவனுக்கு ஆண்டவன்’ மற்றும் ‘வெண்மணல்’ ஆகிய சிறுகதைகளைச் சொல்வேன்.

ஆண்டவனுக்கு ஆண்டவன்’ (‘வாள்’ எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது) என்ற சிறுகதை இராணுவம், வனம் மற்றும் மனித உணர்வுகள் தொடர்பான சூழலையே சித்தரிக்கிறது. கதையில் கர்னல் இம்மாசகி என்பவன் ஜப்பானியக் கொடுங்கோலனாக வருகிறான். சயாம் மரண இரயில் வேலை செய்பவர்களை வதைக்கிறான். பழிபாவங்களுக்கு அஞ்சாத அவன் அவ்விடத்திலிருந்து தன் குடும்பத்தைக் காண தப்பித்து ஓடும் சந்தனத்தைப் பிடித்துவந்து வதைக்கிறான். பின்னர் அவனே சந்தனைத்தைத் தப்பிக்க வைப்பதாகக் கதை முடிகிறது. இதுவும் ஒரு மனிதனின் திடீர் மனமாற்றத்தைச் சொல்லும் கதைதான். ஆனால் முந்தைய சிறுகதைகளில் தவறவிட்டதை சை.பீர் இதில் செய்யவில்லை. சிறந்த சிறுகதைக்குத் தேவையான வாசக இடைவெளியை அறிந்து சை.பீர்முகம்மது இக்கதையைப் புனைந்துள்ளார். மனிதன் ஏன் ஒரு சமயம் மிருகமாகவும் மற்றுமொரு சமயம் மனிதத்தன்மை மிளிரவும் இருக்கிறான் என மீண்டும் வாசகனை சிந்திக்க வைக்கிறார் சை.பீர்முகம்மது. கதையின் இறுதியில் இம்மாசகி அழுகிறான். சந்தனத்தை அங்கு பிடித்துவந்தபோது அவன் மனைவியின் குழந்தைப்பேறு காலம் எனும் உண்மை நிலவரம் இம்மாசகியை குழைத்துள்ளது என்பதை ஆசிரியர் மிக நாசூக்காகக் கதையில் சொல்லிச்செல்கிறார். அல்லது அதை வாசகனின் ஊகத்துக்கே விடுகிறார். அவ்வுண்மையை எதிர்கொள்ள முடியாமலேயே அவனைக் கடுமையாகத் தாக்குகிறான் என கதை வாசித்து முடித்தபோது வாசகனால் அறிய முடியும். புதிராக உள்ள மானிட மனதை மீண்டும் மீண்டும் இலக்கியம் கூறுபோட்டு அறிய முயல்கிறது. ‘ஆண்டவனுக்கு ஆண்டவன்’ (வாள்) அவ்வாறு முயலும் மிக முக்கியமான சிறுகதை. சை.பீர்முகம்மது இராணுவத்தில் பணியாற்றியதற்கான மொத்த நன்மையையும் இச்சிறுகதையின்வழி தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார்.

வெண்மணல்‘ என்ற கதை தனித்தன்மையோடு கவனஈர்ப்பைப் பெறுகிறது. மிகு கற்பனையான வரிகள் கிடையாது. அலங்காரச் சொற்களும் போலிமையும் கிடையாது. நச்சென்ற கதை. இன்னும் சொல்லப்போனால் நவீனச் சிறுகதையின் தன்மை சை.பீர்முகம்மதுவுக்கு முழுமையாகக் கைகூடிய கதை. எழுபது வயதை தாண்டிவிட்ட பெருமாள் கிழவனுக்கு யாருமில்லை. தனித்தவன். கார், லாரி இல்லாத அந்தக்காலத்தில் தன் தகப்பன் வைரக்கடுக்கன் காதில் மின்ன இரண்டு குதிரை பூட்டிய வண்டியில் கம்பீரத்தோடு வரும் காட்சியைக் கண்டு மனதில் வைக்கிறான். திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு எல்லாம் கைவிட்டுப் போனபிறகு தகப்பன் காணாமல் போகிறான். மலாயாவிற்குப் போய் இருக்கக்கூடும் என்று வதந்தியை நம்பி பெருமாளும் தாயும் மலாயாவிற்கு வருகிறார்கள். தாய், புருஷன் ஏக்கத்தில் இறக்கிறாள். பெருமாள் இங்கேயே தங்கி, வயதானபின் தன்னிடமுள்ள சேமிப்பைக் கொண்டு வட்டிக்கு கொடுத்து வசூல் வருவாயில் காலங்கடத்துகிறான். பெருமாள் கிழவன் உரலில் வெற்றிலையைப் போட்டு இடிக்கும் ஓயாத சத்தத்தோடு தன் தகப்பனின் புகழ்பாடும் புலம்பலும் ஓயாத சத்தமாக ஒலிக்கிறது. பக்கத்துவீட்டு சாமிக்கண்ணு கிழவனின் ஊர்ப்புகையிலைக்காகவும் வெற்றிலைக்காகவும் அந்தப் புலம்பலை பொறுத்துக்கொள்கிறார். ஆனால் அவரின் மகன் சுப்ரமணியமோ பொறுமை இழந்தவனாய் அடிக்கடி வாய்ச்சண்டையிடுகிறார். ஒருநாள் சண்டை முற்றி அவரது பழம்பெருமையை நகைக்கிறான். அவரை அனைத்தும் கழுவப்பட்ட எதற்கும் உதவாத வெள்ளை மணல் என்கிறான். ஆனால் கிழவன் உரலை இடிப்பதை நிறுத்தவில்லை. அது உரல் இடிக்கும் ஒலியல்ல. அவர் அப்பா குதிரைக்குளம்பின் சத்தம் என சை.பீர் வாசகனுக்குச் சொல்லாமல் சொல்கிறார்.

நம்மிடையே பலரும் அந்தக்காலத்துப் புகழ்பாடிகள்தான். கடாரம் கண்ட சோழன் தொடங்கி உலகின் மூத்தக்குடிகள் தமிழன் எனச்சொல்வதுவரை நாம் இந்தப் புகழ்பாடலை நிறுத்துவதில்லை. நமது நிகழ்காலம் கேலிக்குரியது. ஆனால் எங்கோ ஓர் மூலையில் நமக்குள் உறைந்திருக்கும் இந்தப் பழம்பெருமை ஒன்றுமில்லாத வெண்மணலாகிவிட்ட வாழ்வை கொஞ்சமேனும் உயிர்ப்புற செய்கிறது.

சை.பீர்முகம்மது மலேசிய இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை என்பதில் சந்தேகம் இல்லை. மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுக்க அவரது களப்பணிகளோடு எழுத்துப்பணியும் இன்றியமையாததே என அவரது கதைகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதிய கதை சொல்லலுக்காக அவர் தொடர்ந்து முயன்றுள்ளதை அறியவும் முடிகிறது. தொன்மங்களிலிருந்து கதையை உருவாக்குதல், வரலாற்றிலிருந்து கதையைப் புனைதல், மாய எதார்த்த உத்தியில் சூழலைச் சொல்ல முனைதல், காமிரா காட்சிப்படுத்தலில் கதையை விவரித்தல் என தன் காலத்தில் அவர் புனைவின் புதிய சாத்தியங்களைத் தேடிச்சென்றுள்ளார். அதில் அவர் எவ்வளவு வெற்றியடைந்துள்ளார் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் அவ்வாறான முயற்சிகளுக்கு அவர் மலேசியத் தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை.

1 comment for “சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

  1. Venugopal
    November 5, 2019 at 10:05 am

    நல்ல கட்டுரை. இலக்கிய வளர்ச்சிக்கு இம்மாதிரியான கட்டுரைகளே பயன் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *