பெண் குதிரை: வாசிப்பு அனுபவம்

VB0001128எண்பதுகளில் தமிழ் இலக்கியம் பல்வேறு நவீன தாக்கங்களால் கவரப்பட்டு மாற்றங்களையும் தீவிரத்தையும் பெற்றபோதும் மலேசிய படைப்புகள் அதிகமும் மதியுரை கதைகளாகவே படைக்கப்பட்டன. எளிய குடும்பக் கதைகளாக அவை இருந்தன. வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே எதார்த்தவியல் தாக்கங்களையும் முற்போக்கு இலக்கியப் பாதிப்புகளையும் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தினர். தீவிர இலக்கிய உந்துசக்தியாக அவர்கள் இருந்தனர்.  அவர்களில் சை.பீர்முகமது முற்போக்கு அணியில் நின்று உரத்த குரலில் தன் படைப்புகளை வழங்கியவர். அவரின் சிறுகதைகள் அத்தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.  அதிகமான சிறுகதைகளை எழுதி மலேசிய எழுத்துலகில் தன் நிலையை உறுதிபடுத்திக் கொண்ட சை.பீர்முகமது, 1996-ல் முதல் முயற்சியாக ‘பெண் குதிரை’ என்னும் நாவலை எழுதியுள்ளார். மலேசிய நண்பன் நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்து அதிக வாசகர்களை எதிர்வினையாற்றவைத்த நாவல் இது.

அடிப்படையில் இந்நாவல் இரண்டு உதாரண பெண்களை முன்நிறுத்தி சமூகம் ஏற்றுக் கொண்டு வலியுறுத்தும் ஒழுக்கவியலை ஏற்றும் மறுத்தும் தன் போக்கில் அணுகிப் பார்க்கிறது.  நாகலெச்சுமி, கமலவேணி என்னும் இருதோழிகளின் அவரவர் ஒழுக்கம் சார்ந்த பிடிமானங்களையும் அதற்காக அவர்கள் முன்நிறுத்தும் ஞாயங்களையுமே வாதங்களாக்கி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.  இந்நாவலின் முதன்மை கதாப்பாத்திரமாக கமலவேணி படைக்கப்பட்டுள்ளாள். ஆனால் அவள் பல எதிர்மறை குணங்கள் கொண்டவள். கதை சொல்லியாக வரும் நாகலெச்சுமி கமலவேணிக்கு தோழியாகவும் நன்னெறிகள் கூறுபவளாகவும் இருக்கிறாள். கமலவேணியால் சொந்த வாழ்க்கையில் பாதிப்புகளை சந்தித்தாலும் அவளை நெறிப்படுத்த முயல்பவளாகவும் இருக்கிறாள். ஆயினும் அவள் அதில் இறுதிவரை தோல்விகளையே சந்திக்கிறாள்.

ஆணின் காமமும் அதன் சிக்கல்களும் இலக்கியத்தில் வெளிப்படையாக பேசப்படுவது போல் பெண்ணின் காமம் பேசப்படுவதில்லை. ஆயினும் ஆணைப் போன்றே பெண்ணுக்கும் உடல் இன்பம் வாழ்வை முழுமைபடுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காமத்தில் ஏற்படும் குறைபாடுகள் அவள் குணத்தையும் மாற்றிவிடும்.  சங்கப் பாடல்களும் மரபு இலக்கியங்களும் பெண்ணின் காமத்தை முதன்மைபடுத்திப் பாடுவதைக் காணமுடிகின்றது. ஆனால் பின்னர் கட்டமைக்கப்பட்ட சமூக ஒழுங்கு முறைகள் பெண்ணின் காமத்தை பொதுவில் பேசுவதை அநாகரிகமானதாக மாற்றியுள்ளன. பெண்ணின் காமத்தை மையமாக கொண்ட படைப்புகளுக்கு அறிவிக்கப்படாத தடையை சமூகம் விதித்துள்ளது.

பொதுவாக மலேசிய இலக்கியத்தில் காமம் பற்றி எழுதப்படும் படைப்புகள் மிகக்குறைவு. அதிலும் பெண்ணின் காமம் பற்றி எழுதுவதை பலரும் தவிர்த்துவிடுவது இயல்பு. ஆனால் சை. பீர் சற்றே துணிச்சலாக பெண்ணின் காமம் பற்றி இந்நாவலில் எழுத முயன்றுள்ளார். ஆனால் மிக நுட்பமாக எழுத வேண்டிய இப்பாடுபொருள், அதற்கான பொருத்தமான கலைநயம் இன்றி சமூக அக்கறையைக் காட்டும் கதையாக சறுக்கியுள்ளது.

அடிப்படையில் இந்நாவல், நாவலாசிரியர் நன்கு திட்டமிட்டுக் கொண்ட சில கருத்துகளை சொல்லும் முன்முடிவோடு எழுதப்பட்டுள்ளது தெளிவாகின்றது.    தமிழ்ச்சூழலில் ஒருபால் ஈர்ப்புப் பற்றிய புனைவு ஒன்றை தர்க்க ரீதியாக எழுதி ஞாயப்படுத்தும் முன்முடிவுக்கு ஏற்ப இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.  “லெஸ்பியன்” என்னும் ஒருபால் ஈர்ப்பானது பரபரப்புக்கு தீனி போடும் ஒரு பண்பாடாக புரிந்துகொண்டதன் விளைவை இந்நாவலின் முடிவு காட்டுகின்றது.  பெண்ணியம் என்ற உரிமை போராட்டத்தில் தனிமனித ஒழுக்கம் குறித்த விவாதத்தை புகுத்தி அதை முழுமை படுத்த முடியாத நிலையில் இந்நாவல் திசைமாறிச் செல்கிறது.  நாளிதழில் தொடர்கதையாக எழுதப்பட்டதன் பாதிப்பால் வாசக பொறுமையை சோதித்து அவர்களை தொடர்ந்து கதையை வாசிக்கச்செய்யும் முனைப்பு பல இடங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக நாகலெச்சுமியின் கணவன் கமலவேணியின் வலையில் சிக்கக்கூடிய காட்சிகளைக் குறிப்பிடலாம்.

கமலவேணி என்னும் கதைப்பாத்திரம் மலேசிய இலக்கியத்துக்கு புதிய முயற்சி. திரைப்படத்தில் இரவு விடுதியில் நடனமாடும் பெண்ணை சினிமா ரசிகர்கள் தூற்றிக் கொண்டே உள்ளூர ரசிப்பது போல, நாளிதழில் தொடராக வாசிக்கையில் கமலவேணி பல வாசகர்களின் வசைக்கும் உள்ளூர திரளும் ரசிப்புக்கும் ஆளாகியிருப்பாள். ஆனால் அந்தப் பாத்திரம் பல்வேறு குழப்பங்களுடன் நேர்த்தியற்று படைக்கப்பட்டுள்ளதால் செயற்கைதன்மை மிக்கதாக அமைந்துள்ளது.

சமூகம் கடிந்து ஒதுக்கும் பல தீய குணங்கள் உள்ள பெண்ணாக கமலவேணி சித்தரிக்கப்படுகிறாள். அவளே தன்னை கருநாகப் பாம்பு என்று சொல்லிக் கொள்கிறாள். தோற்றம் மினுமினுப்பாக இருந்தாலும் தான் நேரம் பார்த்து விஷத்தை பாய்ச்ச தயங்க மாட்டேன் என்று தன் சுபாவத்தை மிகத் தெளிவாக தன் தோழியிடம் கூறுகின்றாள்.

கமலவேணி தன் ஆண் துணைகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளின் மேல் மோகம் கொள்ளும் ஆண்கள் படித்த திருமணமான பணக்காரர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  சமூகம் தூற்றும் குணங்கள் கொண்ட கமலவேணி தீவிர பெண்ணியம் பேசுபவளாகவும் இருக்கிறாள்.  அவளை பெண்ணிய புரட்சியாளராகவே வெளிப்படுத்திக் கொள்கிறாள். இது அந்தக் கதாபாத்திரத்தின் அறிவு குறைபாடாகச் சித்தரிக்கப்படவில்லை. கதாசிரியரே அவளைக் கருத்துப்பிரதிநிதியாக மாற்றுகையில் பாத்திர வார்ப்பில் பெரும் குழப்பம் உண்டாகியுள்ளது.

தன் கணவன் உட்பட தன்னை பாலியலில் நிறைவு செய்ய முடியாத ஆண்களை ‘பெண் குதிரை’ என்ற சொல்லாடலில் வெறுப்பை உமிழ்கிறாள். அவள் தன்னை நிறைவு செய்ய தோதான ஆண் துணையைத் தேடி தன் தேடலில் தோல்வி அடைபவளாக இருக்கிறாள். இறுதியில் தன்னை லெஸ்பியனாக மாற்றிக் கொண்டு பாலியல் விடுதலை பெரும் எண்ணத்தோடு புதிதாக கிடைத்த ஐரோப்பிய லெஸ்பியன் நண்பிகளோடு அவர்கள் நாட்டுக்குச் செல்கிறாள்.

இந்நாவலின் முரண்களும் பொருந்தாத்தன்மையும் அதன் கலையமைதியைக் குழைத்துவிடுகின்றன. கூர்ந்து நோக்கும்போது இந்நாவல் பேச வந்த மையமான விடையம் ஒரு பெண் அந்தரங்க வாழ்வில் எதிர்நோக்கும் பாலியல் வரட்சியும் அதை எதிர்கொள்வதில் அவள் எதிர்நோக்கும் சிக்கல்களுமாகத்தான் உள்ளது.  ஆகவே இது முழுதும் அகம் சார்ந்த படைப்பாக மிளிர்ந்திருக்க வேண்டும். பெண்ணின் உடல் மனதை அசைக்கும் இடங்களில் அவளின் வெற்றி தோல்விகளின் வழி நாவல் பயணித்திருக்க வேண்டும்.  அந்த அளவில் அது நவீன இலக்கியத்தில் பேசப்பட வேண்டிய ஒரு முக்கிய மனோவியல் விடையம்.

‘பெண் குதிரை’ என்னும் தலைப்பே கமலவேணியின் குணத்தை குறியீடாக நமக்கு காட்டி விடுகின்றனது.  அவள் ஆண்மையற்ற ஆண்களை பெண் குதிரை என்று ஏளனம் செய்தாலும் பெண் குதிரை என்பது கமலவேணிக்கே பொருந்தும் குறியீடாகும்.  கட்டற்ற சுதந்திரத்தை விரும்புபவளும் அதே நேரம் பெரும் உடல் ஆற்றலையும் கொண்டவள் கமலவேணி. உண்மையில் செல்வமும் வசதியான வாழ்வும் அவளது தேடல் அல்ல.  அவளது போராட்டம் முழுதும் அவளது உடலைக் கையாள்வதில் இருந்து வெளிப்படுகின்றது.  அழகும் இளமையும் ஆசையும் நிரம்பி வழியும் தன் உடலை திருப்தி படுத்த முடியாதவளாக அவள் இருக்கிறாள். ஆண்களின் துணை அதற்கு தேவை என்று முயன்று அதன் விளைவாக பல சிக்கல்களை சந்திக்கிறாள்.  பல்வேறு நீதி நெறிகளும், சமூக கட்டுப்பாடுகளும் உள்ள சமூகத்தில் கமலவேணி தனக்கான வழியைத் தேடி தோற்பவளாகவே இருக்கிறாள். அவளை இச்சமூகம் ஆபத்தானவளாகவும் அருவருக்கத்தக்கவளாகவும் பார்க்கும் நிலையை அவள் தோழியின் உரையாடல்கள் காட்டுகின்றன.

ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்பதை பெண்ணின் காம வரட்சிக்கான தீர்வாக இந்நாவல் காட்டுவது ஓரினச்சேர்க்கை பற்றிய தவறான புரிதலாக அமைந்துள்ளது.  காமத்தில் தன்னை நிறைவு செய்யும் ஆண்களை அடையமுடியாத விரக்தியில் ஒரு பெண் லெஸ்பியனாக தன்னை மாற்றிக் கொள்ள முடியாது.  அதிலும் லெஸ்பியனாக தான் மாறுவது தனது பெண்ணிய எழுச்சியின் ஒரு பகுதியாக கமலவேணி புரிந்து கொள்கிறாள்.  ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து மீளும் விதமாகவே ஓரினச்சேர்க்கையை தேர்வுசெய்கிறாள். ஆனால், அவளின் உள்ளார்ந்த சிக்கலுக்கான தீர்வாக இது அமையவில்லை என்பதோடு அவளின் சிக்கலுக்கு சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க போக்கு காரணமாகவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பாலியல் தேர்வு என்பதை இவ்வாறு எளிமைபடுத்தி புரிந்து கொள்ள முடியாது என்பதே என் எண்ணம்.

‘பெண் குதிரை’ மலேசியாவில் பரபரப்பாக பேசப்பட்டு பல சர்ச்சைகளையும் உருவாக்கிய நாவல். அதற்கு காரணம் பெண்ணியம் சார்ந்து இந்த நாவலில் முன்வைக்கைப்படும் விவாதங்களாக இருக்கலாம். குறிப்பாக ஒழுக்கம் சார்ந்து ஆண் பெண் பலகீனங்களின் மீது எடுக்கப்படும் மாறுபாடான நிலைபாடுகளை ‘பெண் குதிரை’ வெளிப்படையாக சாடுகின்றது. ஆயினும், பெண்ணின் மனம் சார்ந்த மென் உணர்வு ஒன்றை உரத்த குரலில் முரட்டுத்தனமாக ஆராய முற்படும் அசட்டு வேகத்தையே இந்நாவல் கொடுக்கின்றது.

1 comment for “பெண் குதிரை: வாசிப்பு அனுபவம்

  1. யமுனா. மு
    November 5, 2019 at 10:44 pm

    இப்போது நடக்கும் சம்பவங்களை ஆசிரியர் அழகான முறையில் கூறியுள்ளார் . கமலவேணி கதாபாத்திரம் மிக அருமையாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...