மண்ணும் மனிதர்களும்: வரலாற்றில் பயணம்

150px-4546ஒரு கலைஞனுக்கான உலகம் நிச்சயம் சராசரியர்களிடமிருந்து மாறுபட்டவை. தான் கடந்து போகும் ஒவ்வொன்றையும் வரலாறாக்க தெரிந்தவர்கள் அவர்கள். நமக்கு முன் வாழ்ந்த பல தலைமுறைகளின் வரலாற்றை படைப்பாக்கவும் அறிந்தவர். ஓர் இனத்தை, ஒரு மதத்தை, ஓர் ஆட்சியை, ஒரு மண்ணை அதன் மக்களை, அவர்களின் பின்புலத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அறிய மட்டுமே வரலாறு பயன்படும் என்ற எனது புரிதலை இந்த ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற கட்டுரை கொஞ்சம் மாற்றியமைத்துள்ளது. காலங்களைக் கடந்தும் உணர்வுகளை உயிர்ப்பிக்கக்கூடியவை என நான் அறிந்துகொண்ட முதல் படைப்பாகவே ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற பயணக் கட்டுரைத் தொகுப்பு அமைகிறது. அதே போல சை.பீர்முகம்மது அவர்களின் எழுத்துகளில் நான் வாசிக்கும் முதல் படைப்பும் இதுவே.

இந்த மண்ணும் மனிதர்களும் பயணக்கட்டுரையில் சை.பீர்முகம்மது அவர்கள் தன் பயண அனுபவத்தோடு இணைத்துப் பேசி இருக்கும் வரலாறுகளில் பல பகுதிகள் என்னைக் கவர்ந்தது. தான் செல்லக்கூடிய ஒவ்வொரு இடங்களுக்குமான காட்சிகளையும் அனுபவங்களையும் பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களையும், அவர்களின் வாழ்க்கையும் மீட்டுப் பார்த்துக் கொண்டே கடக்கும் ஒரு பயணம் மாறுபட்ட இரசனையை ஏற்படுத்தியது. அவர் தன் கண் முன்னே படர்ந்து கிடக்கும் நிலங்களையும், மரங்களையும், மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் தாண்டி தன் பார்வையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று ஊடுறுவவிட்டிருக்கிறார். எனவேதான் மண்ணும் மனிதர்களும் என்ற அவரது இந்தப் பயணக்கட்டுரையில் அதிகமாக வரலாறு ஆக்கிரமித்திருக்கிறது. அவர் அறிந்ததை அறிந்தபடியே சொல்லாமல் ஒரு ஆழமான ஆய்வுக்கும் ஒப்பீடுகளுக்கும் உட்படுத்தியப்பின் சரியானதை மட்டுமே நம் அறிதலுக்கு அளித்துள்ளார்.

ஒரு சரித்திர புத்தகத்தில் நாம் அறியக்கூடிய வரலாறுக்கும் ஒரு படைப்பாளர் தன்னுடைய அனுபவத்தோடு இணைத்துச் சொல்லும் வரலாறுக்கும் மிக பெரிய வேறுபாடு உள்ளது. எதையும் ஒப்புவிக்காமல் அனைத்தையும் தன் அனுபவமாக்கித் தந்திருக்கிறார் சை.பீர்முகமது. எனவே அவர் எழுத்து சரித்திரச்சுவடுகள் என்ற எண்ணத்துக்கு அப்பால் சென்று கதையாகவோ, உணர்வாகவோ நம்மை கடக்கிறது.

சை.பீர்முகம்மது அவர்களின் இந்தக் கட்டுரை நூல் வட நாடு மற்றும் தென்னாடு ஆகிய இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட நாட்டுப் பயணத்தைப் பெரும்பாலும் சை.பீர் அவர்கள் அந்த மண்ணை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்களின் ஆட்சியைப் பற்றியும் அவர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுத் தடங்கள் பற்றிய சிந்தனையோடுமே நகர்த்தியுள்ளார். நாம் முன்னமே அறிந்து வைத்திருக்கும் வரலாற்றில் இருக்கும் பிழையான தகவல்களைத் திருத்திக்கொள்ளவும் இன்னும் முழுமையாக அறியாத வரலாற்றின் மறைவுப்பகுதியை அறிந்துக்கொள்ளவும் இக்கட்டுரை களம் அமைத்துக் கொடுத்துள்ளது. நான் அந்தப் படர்வெளிகளில் தீவுகளாக எனக்கு தென்பட்ட மதங்கள், சடங்குகள் மன்னர்கள் என சிலவற்றை மட்டும் முன்வைத்து என் பார்வை எழுதுகிறேன்.

அஜ்மீர் பிருத்திவிராஜனின் கோட்டை வாயிலில் அவர் நின்றுகொண்டிருந்த தருணத்தைத் தொட்டுப் பேசி இருக்கும் ஒரு மதச் சடங்கு என்னை அதிகம் இத்தொகுப்பில் பாதித்தது.

பலரால் பல முறை சொல்லி சொல்லி கேட்டுப் பழகிவிட்டதால் என்னவோ உடன் கட்டை ஏறிய பெண்களின் தீக்காயமும், அலறலும் என்னை இப்பொழுதெல்லாம் அதிகம் தாக்குவதில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உடன்கட்டை ஏறிய பெண்களின் அந்த அலறல் சத்தத்தையும் அவர்களின் அபயக் குரலையும் சை.பீர் அவர்களால் அந்தக் கோட்டை வாயிலில் அதன் உக்கிரத்தோடு கேட்க முடிந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அந்தச் சத்தங்களை அதே வலிகளுடன் கேட்டுணர அதன் வலிகளையும் துயரையும் மீட்டுப் பார்க்க சை.பீர் அவர்களுக்கு இருந்த சரித்திரப் பார்வை உந்தியுள்ளது.

ராஜபுத்திரர்களின் பாரம்பரிய வழக்கத்தில் இருக்கக்கூடிய நீதியின்மையை அதன் அரக்கத்தன்மையை நமக்கு உணர்த்த அஜ்மீர் நாயகத்தின் வரலாறும் கட்டுரையில் மிக சுறுக்கமாக வந்துபோகிறது.  ஓர் இளம் பெண்ணின் கையையும் காலையும் கட்டி உடன் கட்டை ஏற்ற முயற்சிக்கும் வீரர்களிடமிருந்து அஜ்மீர் நாயகம் காப்பாற்றுகின்ற வரலாறு அது. காப்பாற்றியவர் ஓர் உயிரைப் படைக்க எப்படி உனக்கு சக்தியில்லையோ அப்படியே அழிக்கவும் உனக்கு உரிமையில்லை எனக் கூறுகிறார். வரலாற்றில் இருக்கக்கூடிய இந்த வரியை தேடிப் பிடித்து சொல்வதன் வழியாக மத நம்பிக்கைகளுக்குள் மலிந்து போன மனிதத்தை சை.பீர் அவர்கள் ஒரு சக மனிதனாக அடையாளம் காட்டுகிறார். முஸ்லீம்கள் நிறைந்து வாழும் அஜ்மீரில் அஜ்மீர் நாயகத்தின் அடக்க இடத்திற்குப் பக்கத்தில் கிருஷ்ணர் ஆலயமும் இருக்கிறது என்று தன்னுடைய பயணக்கால அறிதலையும் கட்டுரையில் இணைத்துச் சொல்லி அஜ்மீர் நாயகத்தின்  மத பேதமற்ற பண்பையே நிறுவியுள்ளார்.

முகலாய மன்னர் ஆட்சியையும் ராஜபுத்திரர்களின் ஆட்சியையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதன் முக்கியமான பகுதிகளை வாசகர்களுக்குத் தந்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் பயன்மிக்கதுதான். இதில் வந்து போகும் சில மன்னர்கள் என்னை அதிகம் கவர்கின்றனர். அதில் சிலர் முற்றிலும் நான் முன்னமே அறிந்திடாத புதிய புரட்சிகரமான வழக்கங்களையுடையவர்களாக இருக்கின்றனர். பாபர், ஹுமாயும் ஆகியோருக்கு அடுத்து  வரலாற்றில் மூன்றாம் முகலாய பேரரசராக அறியப்படும் அக்பர் கவனிக்கப்பட வேண்டியவர். 1556 முதல் தன் வாழ்வின் இறுதி நாள் வரை பதவியில் இருந்தவர் அவர். 14 ஆவது வயதில் பதவியேற்ற அக்பருக்கு பக்கபலமாக பிரதம தளபதியான பைராம்கான் இருந்துள்ளார். அவரே ஆரம்பத்தில் அக்பரை வழிநடத்தியுமுள்ளார்.  தனது ஆட்சி காலத்தில் இந்து மனைவியைக் கட்டிக்கொண்ட அக்பர் நிச்சயமாக என்னுடைய பார்வையில் புரட்சிகரமானவர்தான். அவர் இந்துப் பெண்ணை மணந்ததால் மட்டும் அப்படிக் கூறவில்லை. அதன் பின் சில இந்து சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்த வரலாறும், அந்தப்புரங்களில் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு அனுமதி கொடுத்த வரலாறும், நெற்றியில் சந்தனப்பொட்டோடு வந்து சமயவாதிகளுக்கு சங்கடம் தந்த வரலாறுமே அவரின் முற்போக்குச் சிந்தனையை எனக்கு அறிமுகம் செய்கிறது.

மத அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்காத அக்பரின் ஆட்சியில் பெருந்தளபதிகள் முதல் சாதாரண சிப்பாய்கள் வரை பெரும்பான்மையாக இந்துக்களே இருந்துள்ளனர். முகலாய சாம்ராஜியத்தில் மூத்த அமைச்சராக இருந்த தோடர் மாலும் ஓர் இந்து என சை.பீர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இப்படி மத பேதமின்றி ஆட்சி செய்ய அவர் திறமை உள்ள அனைவரையும் தட்டிக் கொடுக்க அறிந்த மன்னராகவும் வரலாற்றில் அறியப்படுகிறார். அரண்மனையில் குப்பை கூட்டும் பணியில் இருந்த ஒருவரின் மகன் ஓவியம் வரைவதைக் கண்டு கைத்தேர்ந்த ஓவியரிடம் பயிற்சி பெற வைத்து சிறந்த ஓவியனாக்கியதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஆப்கானிய மன்னர்களிடமும் இப்படி திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பு இருந்துள்ளது.

தனது இறுதி காலகட்டத்தில் விலங்குகள் புதைக்கும் இடுகாடாக தன் வயிற்றை மாற்ற விரும்பாத அவர் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்துக்களின் வழக்கத்தை மதிக்கவும் அதை பின்பற்றவும் முடிந்த அவரே உடன் கட்டை ஏறுவதைக் கடுமையான சட்டதால் தடை செய்தும் உள்ளார். அதைக் காட்டு மிராண்டித்தனம் எனவும் கூறியுள்ளார். ஆனால், அப்படி நீதியற்ற ஒரு பாரம்பரிய வழக்கத்தை எதிர்த்து வேற்று மதத்தவர்கள் போராடிய அதே அளவுக்கு இந்து மதத்துக்குள் உள்ளவர்களும் போராடி இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

மேலும், ஜவஹார் (jauhar) என்றழைக்கப்பட்ட கூட்டமாக உடன்கட்டை ஏறும் பழக்கமும் ராஜபுத்திர வம்சத்தில் இருந்துள்ளது. இது ராஜபுத்திரர்கள் முகலாய மன்னர்களோடு போர் புரிந்த காலகட்டத்தில்தான் வளர்ச்சிக் கண்டுள்ளது. ராஜப்புத்திர படை போரில் தோல்வியடைந்த செய்தி அறிந்து அரசிகள் கூட்டமாக அரண்மனையில் தீக்குளிக்கும் பழக்கமிருந்துள்ளது. கோரியுடன் செய்த போரில் பிருதிவிராஜனின் படை தோற்றதை அறிந்தபோது ராணி சம்யுத்தை உட்பட அரண்மனையில் இருந்த அனைத்து ராஜபுத்திரப் பெண்களும் தீயில் கருகி மாண்டுள்ள வரலாறும் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

போர்க்கருவிகளை கலை நுணுக்கத்துடன்  சேமித்து அதனைக் கையாளத் தெரிந்த சிறந்த போர் வீரராகவும் அக்பர் அறியப்படுகிறார்.  எனவே, ஒரு போர் வீரனுக்கு இருக்க வேண்டிய திடமான போர்  குணமும் அவருக்கு இருந்துள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற எதிராளியைக் கொள்ளத் துணிகின்ற மன்னர்தான் அவரும். சிறந்த போர் வீரரான அவருக்குள் கலைஞானமும் குடிகொள்ளவே செய்துள்ளது. எனவேதான், பல இலக்கியங்களை ஒரு சேர தொகுப்பதற்கு வழி வகை செய்துள்ளார்.

மற்ற மன்னர்களிடம் இல்லாத கலைரசனையும்  அக்பரிடம் இருந்துள்ளது. அவர்  சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லீம் அறிஞர்களும், இந்து மதத்தினருக்குமிடையே வாதங்கள் நடத்திப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். மேலும், அக்பர் ‘தீன் இலாஹி’ என்ற புதிய மதக் கொள்கையையும் கடைப்பிடித்துள்ளார். தீன் இலாஹி  என்பதற்கு தெய்வீக நம்பிக்கை என்பதே பொருள். இது தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தாலும்  அவருக்குப் பிறகு அவை மறைந்து போயின.

இந்தப் புத்தகத்தில் சை.பீர் அவர்கள் தொகுத்திருக்கும் முகலாய மன்னர்களின் வரலாற்றில் எல்லா நிலையிலும் நடுநிலையாக இயங்கவும் சிந்திக்கவும்கூடிய சில மன்னர்களை என்னால் பார்க்க முடிந்தது. போர்க்களத்தையும் அரசவையையும் மட்டுமே மன்னர்களை அறியும் களமாகக் காட்டிய பல வரலாற்றுக்கு மத்தியில் ஒரு மன்னனின் கனிவான முகத்தையும் கவனிக்கக் கற்றுக்கொடுக்கிறது இந்தத் தொகுப்பு. அதுபோல அக்பரின் அரசியல் முகமும் அவசியம் அறியப்பட வேண்டியதே. இந்து பெண்களை அவர் மணந்ததற்குப் பின்னால் அவரது மத பேதமற்ற குணம்தான் இருக்கிறது என்பதைவிட அதற்குள் ஒரு அரசியல் சிந்தனையும் இருந்திருக்கவே செய்துள்ளது. அதன் வழி அவர் ராஜபுத்திரர்களுடன் அனுக்கமான நட்பை வளப்படுத்தியுள்ளார்.

அக்பர் போரின் போது முழுக்கவே போர் வீரனாக மாறுவதும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது பானிபாட் போரில் தோற்கடிக்கப்பட்ட ஹெமு கொலை அவ்வளவு சாதாரணமானதல்ல. சந்தர்ப்பவசத்தால் கண்களில் அம்பு பட்டு சுயநினைவுத் தப்பிய நிலையில் அவரது தலை கொய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் துண்டு துண்டாக்கவும்பட்டு தலை டெல்லியின் டர்வாஷாவிற்கு வெளியே தொங்கவிடப்பட்டுமுள்ளது. அக்பரே தன் வாளால் ஹெமுவின் தலையைத் துண்டாக்கிய வரலாறையும் பின் அதை மறுக்கின்றவேறு சில வரலாறையும் சை.பீர் அவர்கள் கட்டுரையில் முன்வைத்துள்ளார். அக்பர் ஹெமுவின் கழுத்தில் சம்பிரதாயமாக வாளை வைத்து எடுத்தபின் பைராம்கானின் வாளே ஹெமுவின் தலையைத் துண்டித்ததாக மாற்று வரலாறுகள் கூறுகின்றன.

வரலாறு ராஜபுத்திரர்களின் தோல்விக்குக் காரணமாக அவர்களின் சில அலட்சியங்களை, ஒற்றுமையின்மையையும்  முன்வைத்துள்ளது. முக்கியமாக ஆப்கானிய மன்னர்கள் ஒவ்வொரு முறை டெல்லியை நோக்கி படையெடுக்கும் போதும் அதற்கு நுழைவாயிலாக இருக்கும் கைபர் கணவாயையும்  கோமால் கணவாயையும் காக்க  அவர்கள் ஒரு சிறு கோட்டையைக் கூட எழுப்பவில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. ஆனால்,  இவற்றைத் தாண்டி போரின்போது அவர்கள் கடைப்பிடித்து வந்த போர் தர்மமும் அவர்களின் தோல்விக்குக்  காரணமாகவே அமைந்துள்ளது. போரில் தோற்ற மன்னனைக் கொல்லாமல் விடுவதும் அவர்களின் போர் தர்மம்தான். அப்படி  பிருதிவிராஜ் மன்னனால் மன்னித்து விடப்பவன்தான் கோரி. ஆனால் பின்னாட்களின் நடந்து மற்றொரு போரில் பிருதிவிராஜ் மன்னரின் சாம்ராஜியத்தைக் கைப்பற்றி அவரது கண்களையும் தோண்டி எடுத்துக் கைது செய்தது மன்னித்து விடப்பட்ட அதே கோரிதான் என்கிறது வரலாறு.

எனவே,  எதிரிகளை மன்னித்து விடும் பெரும்பிழையை ஒரு போதும் செய்யாத அக்பர் போன்ற சில முகலாய மன்னர்களின் ஆட்சியே நிலைத்துள்ளது.  நாம் இப்படி அக்பரின் இன்னொரு அரசியல் முகத்தையும் அதன் வழி நம் ராஜபுத்திரர்களின் பெரும்பிழைகளையும் ஒப்பீடாக்கி அறிய முடிகிறது.

அக்பருக்குப் பிறகு முகலாயர் ஆடிசியில் கொஞ்சம் ஈர்க்கவும் அதே அளவு அதிசயிக்கவும் வைத்த மன்னனாக அவரது மகன் ஜஹாங்கீரை சொல்ல வேண்டும். ஜஹாங்கீர் ஒரு மன்னராக நம்மைக் கவரக்கூடியவரல்ல. 800 மனைவிகளை உடைய அவர் மதுப்பழக்கதிற்கு அடிமையாகவே இருந்திருக்கிறார். தனது மணிமகுடத்திற்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்ற சந்தேகத்தில் தன் மகனைப் பழிவாங்கும் ஜஹாங்கீர் மிகவும் குரூரமாக நமக்கு அறிமுகமாகிறார். தன் மகனை தனியறையில் வைத்து பூட்டிய அவர் பின் ஒருநாள் புத்திர பாசத்தில் அவனை விடுவித்து அவனைத் தன்னோடு வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார். ஜஹாங்கிரின் மகன் குஸ்ரு தளபதிகளின் துணையுடன் ஜஹாங்கீரின் தலையைச் சீவ திட்டமிட்டதை அறிந்து அவனது இரு கண்களை பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்திக் குருடனாக்கச் சொல்லுக்கிறார். அது நிறைவேற்றவும்படுகிறது. ஆனால் கருணையின் பேரில் ஒரு கண்ணை முழுமையாகவும் மறுகண்னை பாதியாகவும் குருடாக்கினர் பணியாட்கள். இப்படி தந்தை மகன் என்ற பேதமில்லால் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் போகத் துணியும் ஒரு மன்னராக ஜஹாங்கீரை அறிய முடிகிறது.

ஆனால் அந்தக் குரூரத்திற்குப் பின்னால் இருக்கும் அவரது இன்னொரு நியாயம் அழகானது. ஒரு மன்னனாக தன் ஆட்சிக்குத் தடையாக வருபவன் எதிரியாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் ஒரே நீதி என்பதுதான் அது.  கலையின் மீது அவர் காட்டிய நாட்டம் கொஞ்சம் ஆச்சரியமானது. இவரின் காலகட்டத்தில் அக்பரின் காலத்தில் இல்லாத அளவு கலை வளர்ந்ததாக சை.பீர் அவர்கள் கூறியுள்ளார். துளசிதாஸரின் மிகச் சிறந்த இந்துக் காவியமான இராமயணம் இவரது காலத்தில் தோன்றியுள்ளது. மேலும் இயற்கையையும் அதன் அழகையும் நுணுகி நுணுகி ரசிக்கவும் செய்துள்ளார். அவருக்கு பறவைகள் மீது தனி ஈர்ப்பும் இருந்துள்ளது. எனவேதான் அவர் பறவைகளின் வாழ்க்கை முறை அதன் இனப்பெருக்கம், அவற்றின் காதல் காமம் பற்றி தனது வாழ்க்கை குறிப்பில் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். தனது பராமரிப்பில் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலையையும் இவர் அமைத்துள்ளார். உண்மையில் ஜஹாங்கிர் மன்னர் என்னை அதிகம் கவர்ந்தது இந்த கலைமனத்தாலும் இயற்கை விரும்பியாகவும்தான். தன் மகனைக் குருடனாக்க முடிந்த ஒரு மன்னரால் இயற்கையையும் மிருகங்களையும் கலையையும் இரசிக்க முடியுமா என்ற கேள்விகளை எனக்குள் எழுப்புகின்ற வரலாறு அவருடையது.

இந்தத் தொகுப்பில் அடுத்தபடியாக நான் கவனப்படுத்த விரும்புவது சாஜஹானைத்தான். சாஜகான் மும்தாஜ் பற்றி ஏற்கனவே கொஞ்சம் அறிதல் இருந்தாலுமே அந்த அறிதல் அவர்களுக்குள்ளான காதலை இவ்வளவு பக்கத்தில் சென்று நெறுங்க உதவவில்லை. காதலைப் பற்றியும் அன்பைப் பற்றியும் போதுமான தெளிவு இல்லாத பருவத்தில் தாஜ்மகால் காதலின் சின்னம் என அறிந்ததாலோ என்னவோ அதை சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை. எனவே, சை.பீர் அவர்கள் தாஜ்மாகாலைப் பார்ப்பதில் காட்டிய ஆர்வம் எனக்கு முதலில் மிகையாக இருந்தது. ஆனால், அந்த தாஜ்மகாலுக்குப் பின்னால் இருக்கும் சாஜஹான் மும்தாஜ் சரித்தரத்தை சை.பீரின் பார்வையில் படித்த பிறகு அவரது ஆர்வத்தில் இருந்த நியாயம் எனக்குப் ஓரளவு புரிந்தது.

தாஜ்மாகாலுக்கு வெளியே நின்று கொண்டு அவர் மீட்டுப் பார்த்த சாஜஹான் வரலாற்றில் அவர் 14 பிள்ளைகளைப் பெற்ற பிறகும் தன் மனைவி மும்தாஜின் மீது காட்டிய அன்பு பிரம்மிப்பாகவே இருந்தது. மும்தாஜ் ஒரு பேரழகியல்ல என்பதும் அந்த பிரம்மிப்பிற்கு ஒரு காரணம்தான். சை.பீர் கூறியுள்ள மன்னர்கள்  பலரின் வரலாற்றிலும் இப்படி ஒரு காதல் இருந்தததை அறிய முடியவில்லை. ஆனால். அதுவே சில குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. சாஜஹான் மும்தாஜை திருமணம் செய்த  பிறகும் வேறு திருமணம் செய்து கொண்ட வரலாற்றைப் பற்றி சை.பீர் அவர்கள் குறிப்பிடாதது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. உண்மையில் அப்படி ஒரு வரலாற்றுக்கான விளக்கத்தை சை.பீர் அவர்களின் பார்வையில் அறியவே இந்தப் பகுதியை நான் ஆவலுடன் வாசித்தேன். தனது ஏழு மனைவிகளில் 4-ஆவது மனைவிதான் மும்தாஜ். மும்தாஜுக்குப் பின்னரும் அவர் 3 திருமணங்களை செய்திருக்கிறார். ஆனால், மும்தாஜுடன் இருந்த அளவுக்கு நெருக்கமும் நட்பும் வேறு யாரிடத்திலும் அவருக்கு இல்லையெனவும் அதே வரலாறுதான் குறிப்பிடுகிறது. எனவே, சாஜஹான் மும்தாஜின் மீதுகொண்ட  தூயகாதல் வரலாறு அவரது திருமண வரலாறுடன் கொஞ்சம் முரண் பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

உண்மையில் சாஜகான் தன்னுடைய காதலால் மட்டுமே என்னைக் கவர்ந்து விடவில்லை. தன் மனைவிக்கு அவர் வழங்கிய முதன்மை, உரிமை எல்லாமும்தான் அதற்குக் காரணம். பெண்களை வெறும் அரச பதுமையாக மட்டுமே பார்க்கக்கூடிய சமூகபின்னணியையும் காலப்பின்னணியையும் உடைய அவர் இவ்வளவு முற்போக்குச் சிந்தனையோடு வாழ்ந்திருப்பது ஆச்சரியம்தான். அதேபோல மும்தாஜும் சளைத்தவரல்ல. இதற்கு முன்னர் அரசவைப் பதுமைகளாக வாழ்ந்துவிட்டுப் போன பல ராணிகள் உருவாக்கி வைத்திருந்த ஒரு சராசரி ராணிகளுக்கான பிம்பத்தை உடைக்கவே செய்கிறார். அழகில் வெல்ல முடியாத கணவனின் அன்பை தன்னுடைய அன்பால் மட்டுமே வெல்ல அவரால் முடிந்துள்ளது. அதுபோலவே தனது கொடையுள்ளத்தால் மக்கள் மனதையும் வென்றிருக்கிறார். “அரண்மனை கஜானாவில் இருந்து அரசர் வழங்கினார் என்றால் மும்தாஜ் தனது சொந்த இருப்பில் இருந்து வாரி வாரி வழங்கிய இந்த மாதரசியை எப்படிப் புகழ்வது?” என்ற கேள்வியை முன் வைத்து சை.பீர் அவர்கள் மும்தாஜுக்கான பிம்பத்தை நமக்குள் மிக உயர்ந்த இடத்தில் ஏற்றி வைக்கிறார்.  14 ஆவது பிரசவத்தின் போது ஒரு போர்க்களத்தில் மும்தாஜின் உயிர் பிரிந்துள்ளது. தனது  பிரசவ காலத்திலும் சாஜஹானோடு போர்க்களம் செல்லக்கூடிய பெண்ணாக அவர் இருந்துள்ளார். மும்தாஜின் மரணத்திற்குப் பிறகு சாஜஹான் வேறு திருமணம் செய்துக்கொள்ளாமல் அதிகமான நேரத்தில் தனிமையிலேயே செலவு செய்துள்ளார். இயல்பாகவே கட்டிடக் கலையில் ஆர்வம் உள்ள அவர் தன்னுடைய ஆசை மனைவிக்குக் கல்லறையாக கட்டியதுதான் அதிசய தாஜ்மஹால். உண்மையில் பெரும்பால முகலாய மன்னர்களும் தங்களது ஆட்சி காலத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, நான் தாஜ்மஹாலை அப்படிதான் பார்க்கிறேன். இதன் காரணமாகவே முகலாய ஆட்சி காலத்தின் போது இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. ஃபத்தேப்பூர் சிக்ரி, புலாண்ட் தர்வாசா சிக்க்ந்தாரா, ஹுமாயுனின் சமாதி,  ஜாமா மஸ்ஜிட் இப்படி இன்றும் முகலாய மன்னர்களின் நினைவுச்சின்னங்களாக நிற்கும் கட்டிடங்களின் வரிசையில் தாஜ்மகால் முக்கியமானது.

இறுதியாக, என்னை மிகக் கவர்ந்த ஓர் அடிமை அரசனைப் பற்றிய கதை. அடிமைக் கட்டிய கோபுரம் என்ற தலைப்பின் கீழ் சை.பீர் அவர்களின் சொல்லியிருக்கும் குத்புதீன் ஐபெக் என்ற அடிமை அரசனான வரலாறும் அவன் அரசாண்ட வரலாறும் நிச்சயம் இத்தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பகுதியே. துருக்கிய இளைஞனான குத்புதீனை ஆப்கானிஸ்தான் கடைத்தெருவில் ஏலதுக்கு பேராசிரியர் ஒருவர் வாங்குகிறார். மனிதர்கள் அடிமைகளாக ஏலத்துக்கு விற்கப்படுகிறார்கள் என்பதே புதிய தகவல் எனக்கு. அப்படி ஓர் அடிமை அரசாண்ட கதை நிச்சயம் மிக முக்கியமான சரித்திரம். குத்புதீன் ஐபெக்கை வாங்கிய பேராசிரியர் இறந்த பிறகு அவர் மீண்டும் சந்தையில் விற்பனைப் பொருளாகி கோரி முகம்மது என்ற மன்னரால் வாங்கப்படுகிறார். இங்கிருந்துதான் இவரது வாழ்க்கையில் அதிஷ்ட திசை தொடங்கியுள்ளது. குத்புதீன் ஐபெக்கின் நேர்மை, தொழில் பக்தி, கடுமையான உழைப்பு கோரி மன்னரை அதிகம் கவர்ந்தது. அந்த உண்மை உழைப்பின் காரணமாக கோரி மன்னன் அவரை குதிரைப் படைத் தலைவனாக நியமித்தார். பின்னர் நாளடைவில் இன்னும் மேலான பிரதம தளபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில்தான் குத்புதீன் ஐபெக் கோரி மன்னரோடு போருக்குச் சென்று தனது முழு வீரத்தையும் அங்கே காட்டி அந்தப் போர்களத்தில் கதாநாயகனாகியுமுள்ளார். அதற்குப் பின்னரும் நடந்த பல போர்களில் கோரி மன்னருக்கு வெற்றிகளையே தேடித்தந்துள்ளார் குத்புதீன் அய்பெக்.

இதற்குப் பின்னர்தான் கோரி மன்னன் தன்னிடம் அடிமையாக  வந்த அவரை ஆண்டானாக்கிய செயல் வரலாற்றில் இடம்பெறுகிறது. மன்னர் குத்புதினை டில்லியில் தனது பிரதிநிதியாக முடிசூட்டினார். உழைப்பால், நேர்மையால், திறமையால் குத்புதீன் உயர்ந்திருந்தாலும், அந்தத் திறமையை அடையாளம் கண்டும் அதனை அங்கீகரிக்கத் தெரிந்த கோரியும் ஒரு சிறந்த மன்னராக அறிமுகமாகிறார்.

அடிமையாக இருந்த குத்புதீன் மன்னரான பிறகும் அதே உழைப்பையும் உண்மையையும் கைவிடாமல் ஆட்சி செய்தமையை வரலாற்றாசிரியர்கள் போலித்தனமற்ற ஆட்சி என குறிப்பிட்டுமுள்ளனர். அடிமையாக வாழ்ந்த காலத்தில் பசியும் ஏழ்மையையும் அறிந்திருந்த மன்னராக அவர் ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாகவும் வாழ்ந்துள்ளார்.

இன்றும் டில்லியில் உயர்ந்து நிற்கும் உலகில் புகழ்பெற்ற கோபுரங்களில் ஒன்றான குதுப்மினார் கோபுரத்தின் முதல் மாடியைக் கட்டிய குத்புதின் ஐபெக் அவர்களின் தொடக்க கால வரலாறு நிச்சயம் எல்லாராலும் அறியப்பட வேண்டியதே.

ஆனால் எல்லா விதத்திலும் நல்லாட்சி புரிந்த குத்புதீன் இஸ்லாமிய மதத்தவர்களுக்கும் அதனைப் பரப்புவதற்குமே அதிக நாட்டம் கொண்டிருந்திருக்கிறார். எனவேதான், அவர் ஆட்சிகாலத்தில் மற்ற மதத்தவர்கள் நிம்மதியாக வாழவில்லையென்ற தகவலும் இடம்பெற்றிருக்கவே செய்கிறது. இது குத்புதீனுக்குள்ளான இன்னொரு முகத்தையும் நமக்குக் காட்டக்கூடிய வரலாறாகிறது. கோயில்கள் பல இடிக்கப்பட்டும் இருக்கின்றன. அதே போல இந்துக் கலாச்சார சாயல் கொண்ட அதே சிற்ப கலையுடன் கூடிய பள்ளிவாசல்கள் அவரது காலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. சிலர் பள்ளிவாசலையே கோயிலாக மாற்றியதாகவும் வேறு சில வரலாறாசிரியர்கள்  கோயில்களை உடைத்து அதில் இருக்கும் அதே சிற்ப வேலை பாடுகளுடன் பள்ளி வாசல் கட்டப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர். ஆனால், சை.பீர் இந்த இரு வேறு தகவல் தாண்டி யோசித்துள்ளார். விஷ்ணு மதச் சாயலும் சிவ மதச் சாயலும் ஜைன மதச் சாயலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ள சிற்பக்கலை  வேறுபாடுகளும் உள்ளன. எனவே, வெவ்வேறு இடங்களில் உடைக்கப்பட்ட கோயில்களின் ஒரு மொத்த உருவமாக இந்தப் பள்ளி வாசல் இருக்கலாம் என கருத்தை கட்டுரையில் முன்வைத்துள்ளார். வேறு சில வரலாற்று நூல்களும் இதையே குறிப்பிடுகின்றன. இது அவருக்கு வரலாற்றின்பால் இருக்கும் மிக ஆழ்ந்த படர்ந்த அறிதலையும் ஈர்ப்பையும் காட்டுகிறது.

குத்புதீனின் மருமகனான இல்துட்மிஸ் சூல்தானும் வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியவரே. அவரும் அடிமையாக இருந்து அரசரானவர்தான். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அவர் தனக்குப் பின்னால் அந்த ஆட்சியைக் கையிலெடுக்கும் தகுதி தன் மகன்களுக்கு இல்லையென வருத்தம் கொண்டார். ஆனால், தன் மகள் ரஷியாவுக்கு அந்தத் தகுதி இருப்பதைப் பலமுறை பலரிடம் சொல்லியுள்ளார். தன் பெண் மகளுக்கு முடி சூட்டி ஆட்சியை ஒப்படைக்க நினைத்த முதல் இஸ்லாமிய மன்னர் அவராகவே இருந்திருக்கிறார். அது பல சமய போதகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின் சில காரணங்களால் அது அப்பொழுது நடைபெறவில்லை என்றாலும் அவரது மரணத்துக்குப் பிறகு பல போராட்டங்களுக்குப் பின்னர் அவரது மகள் ரஷியா ஆட்சியைக் கையிலெடுத்துள்ளார்.  ஒரு பெண்ணை அரசால வைக்கும் சிந்தனை முதன் முதலில் இவருக்கே தோன்றியுள்ளது.

இந்தப் பயணக்கட்டுரையின் முதல் பாகத்தில் என்னை ஈர்த்த வரலாறுகளைப் போலவே என்னை முகம் சுழிக்க வைத்த வரலாறும் இருக்கவே செய்தது. அது தைமூருக்கானது. டில்லியை நோக்கிய தைமூரின் படையெடுப்பு என்பது அவ்வளவு எளிதாகக் கடந்து வந்துவிட முடியாத ஒன்று. தைமூர் துருக்கிய மங்கோலிய கலப்பு இனத்தவன். அவனின் அந்தப் படையெடுப்பில் நிகழ்ந்த கொடூரங்களையும், வழிந்தோடிய ரத்த வெள்ளத்தை சை.பீர்  அவர்கள் இன்னும்கூட ஆழமாக சொல்லியிருக்கலாம். பாரசீகத்தில் மட்டும் சுமார் 70,000 மனிதத் தலைகளைப் பந்தாடிய தைமூர்தான் இந்தியாவில் பின்னாட்களின் அமைந்த முகலாய ஆட்சிக்கு காரணமும் ஆகிறான். எனவே, அது அவ்வளவு சுருக்கமாகச் சொல்லக்கூடுய வரலாறு அல்ல.  தைமூரின் கொலை வெறியை அருகில் இருந்துக் காண நெஞ்சுறுதி தேவை என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவனது படையெடுப்பின் நோக்கம் சூரையாடுதல் மட்டுமே. அவனது இளம் வயதில் போர்களத்தில் கால் தொடைப்பகுதில்  எதிரியின் அம்பு பாய்ந்ததன் விளைவாக அவன் சற்று தாங்கி தாங்கியே நடப்பதால் அவனுக்கு நொண்டி மன்னர் என பெயரும் உண்டு.

சிந்து நதியை வந்தடைந்து பஞ்சாப்பை சூரையாடியதில்  சுமார் ஒரு இலட்சம் பேர் அடிமைகளாக சிக்குண்டார்கள். டில்லியை அடைந்த போது மங்கோலிய படையின் மொத்த எண்ணிக்கை 90,000. இந்தியாவைச் சேர்ந்த ஒரு இலட்சம் அடிமைகளை உடன் வைத்திருப்பது ஆபத்து என சில தளபதிகள் அறிவுரைக்கூறி கலவரம் நிகழ்ந்தால் தப்பித்து எதிர்களோடு சேரக்கூடும் என எச்சரித்தனர். எனவே,  தேர்ந்த சில ஆயிரத்தைத் தவிர மற்றவர்களைக் கொல்ல திட்டம் சொன்னார்கள். ஆனால் அதில் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை தைமூர். சில நூறு அடிமைகளை மட்டும் நட்ட நடுவில் வைத்து துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தின அவனது வீரர்களின் வாள். இதே நிலைதான் மற்றவர்களுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்த செய்த காரியம்தான் அது. இதன் வழி அவன் மிச்சப்படுத்த நினைத்தது பலியாகும் உயிர்களை அல்ல நேரத்தை மட்டும்தான்.  அதனையடுத்து டில்லி மன்னனால் நடந்த ஒரு சின்ன அவமானத்தைத் துடைத்துக்கொள்ள மிச்சமிருந்த அத்தனை அடிமைகளும் கொல்லப்பட்டார்கள்.  டில்லியில் தைமூரின் வெறியாட்டத்தைக் அறிய என்னால் கொடுக்க முடிந்த ஒரு சிறிய மிக மிக சிறிய அறிமுகம் மட்டும்தான் இது. இந்த ஒரு வரலாற்றைக் கொண்டு அவனது ஒட்டுமொத்த வெறித்தனத்தையும் நாம் அளந்துகொள்ளலாம்.

இந்தத் தொகுப்பின் முதல் பகுதி நிச்சயம் வரலாற்றைச் சொல்வதற்கான புதிய வழிமுறையைக் கற்றுக்கொடுப்பவை. முதல் பகுதி இஸ்லாம் சார்பு நிலை அதிகம் இருப்பதாக இந்நூல் குறித்து விமர்சனம் உள்ளது. என் வாசிப்பில் அப்படி எண்ண வேண்டியதில்லை. சை.பீர் வரலாற்றில் தேர்ந்தெடுத்தப் பகுதிகளையே பேசுகிறார். இவ்வாறு இந்து மதம் சார்ந்த போற்றத்தக்க விடயங்களை மட்டுமே முன்வைப்பதுண்டு. அது எழுத்தாளரின் தேர்வு. மேலும், இரண்டாம் பகுதியில் மருது பாண்டியர்கள் பற்றி எழுதியிருப்பதால அப்படி நினைக்க அவசியமில்லாமல் போகிறது.

மருது பாண்டியர்கள்  எனப்படுவது மருது சகோதரர்கள். இவர்கள் தமிழ் நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்தியவர்கள் ஆவர்.  1785 முதல் 1801 வரை  ஆயுதம் ஏந்திய இவர்களின் போராட்டம் தொடர்ந்தது.  பெரிய மருது சின்ன மருது என்ற பெயர்களையுடைய அவர்கள்  ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான்  ஆங்கிலேயரின் அதிருப்திக்கு ஆளானாகள். சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவிலே இவர்களின்  களமாக அமைந்துள்ளது.  இவ்விருவரும் 1801 ஆண்டு ஆங்கிலேயர்களால் துக்கிலிடப்பட்டார்கள்.  இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.  ஆனால் இந்த தொடக்கத்துக்கும் முடிவுக்குமான இடைப்பட்ட காலத்தில்  அவர்களின் போராட்டத்தில் நிகழ்ந்த  எந்தத் தோல்வியுமே அவர்களை தளர்த்தவே இல்லை. மீண்டும் மீண்டும் எழுந்து நின்று படையைப் பல வழியில் திரட்டி ஆங்கிலேயர்களை எதிர்த்த  வரலாறு நெகிழச் செய்தது.

முன்னம் முதல் பகுதியில் ராஜபுத்திரர்கள்  போரில் காட்டிய  அலட்சியத்தை இவர்கள் முற்றிலுமாக தவிர்த்துள்ளனர். அதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது இவர்களின் மதச் சார்பின்மை கொள்கையைதான். மருது பாண்டியர்களின் சொந்த சாதியினர் முஸ்லீம் மதத்திற்கு மாறிய பொழுதுகூட அவர்கள் அதற்குத் தடைவிதிக்கவில்லை என சை.பீர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே அவர்கள் மதத்தின் அடிப்படையில் தாராள மனப்பான்மையுடன் வாழ்ந்துள்ளனர்.

மருது பாண்டியகளின் ஆட்சி காலத்தில் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத வண்ணம் போர்கள் நடந்த போதிலும்  மக்களின் மத ஒற்றுமையைப் பலப்படுத்த  அவர்கள்  பல நல்ல காரியங்களை செய்து வந்துள்ளனர். பல கோயில்களில் மண்டபங்கள் கட்டியுள்ளனர். அதேபோல பள்ளிவாசல் கட்ட கிராமத்தை மான்யமாகவும் வழங்கி, பள்ளிவாசலையும் கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்தாலும் அவர்களின் மதத்தை ஒரு போதும் எதிர்த்ததே இல்லை என்பது வரலாற்றில் மிக முக்கியமான பகுதி. எனவேதான் அவர்களால் சருகனி மாதா கோயிலுக்கு ஒரு பெரிய தேரையே பரிசாக தர முடிந்ததுள்ளது.   தமிழகத்தின் பல இடங்களுக்கும் பயணம் செய்ததில் மத இணக்கத்துக்கு தென்பாண்டிச் சீமையைப் போல ஓர் இடத்தைக் காண முடியாததாக சை.பீர் அவர்கள் தனது கட்டுரையில் கூறியுமிருக்கிறார்.  தேரோட்டத்தன்று  ஒரு வடம் முஸ்லீம்களுக்கென இன்றும் தனியாக விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் இருந்த ஆயுத பலத்தை இந்திய மண்ணில் உள்ளவர்களால் சமாளிக்க முடியாது என்பதை அறிந்து ஒரு சர்வதேச பார்வைக்கு இந்திய விடுதலையை எடுத்துச் சென்று தனது தூதுவர்களை பல நாடுகளுக்கும் அனுப்பி உதவிகள் வேண்டினர். இந்த நிலையில் என்னால் பிருதிவிராஜ் மன்னர் தனது போர் காலங்களில் செய்யத் தவறிய உதவி கோரலையே நினைவுக்கூற முடிகிறது. மருது பாண்டியர்களின் தூதனுப்பும் முயற்சி தோல்வியடையவில்லை. ஐரோப்பியாவின் மாவீரனாகக் கருதப்பட்ட  நெப்போலியனுக்கும் தூது அனுப்பி பெரும் படையுடன் ஆங்கில ஆதிக்கத்தை அடக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.  அவரும் 60,000 படைகளுடன் கைபர் கணவாய் வழியாக இந்திய மண்ணுக்கு வந்து உதவுவதாகப் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அக்கடிதம்  ஆங்கிலேயர்களின் கையில் கையில் சிக்கிய பின்னரே இந்தியா வந்தடைதுள்ளது. இப்படி மேலும் சில தூதுகளுக்கு உதவுவதாக அனுப்பட்ட பதில்கள் இந்தியாவை வந்தடையவில்லை. இதன் காரணமாகவும் போர்கள் பல தோல்வியில் முடிந்துள்ளன.

இத்தனைத் தோல்விகளையும் கடந்து போராடிய மருது பாண்டியர்களை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு பக்கபலமாக இருந்தது புதுக்கோட்டை தொண்டைமானும்  வாத நோய் கண்டு மறைந்து வாழ்ந்த பெரிய மருதுவின்  கையுதவியாளனும்தான் காரணம். இதன் விளைவாக அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.  ‘அமுதும் விஷமும் ஒரே இடத்தில்தான் பிறக்கிறது’ என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனத்தை இச்சூழலில் சை.பீர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்காகப் போர் புரிந்த மருது பாண்டியர்களையும்  அவர்களை வெள்ளையர்களிடம் சிக்க வைத்த தொண்டை மானுக்குமான உவமை அது. ஒரு போராளியாக செயல்படும் மன்னர்களின் தரத்தை நிர்ணயிப்பது போரின் வெற்றி தோல்விகளல்ல.  தன் மக்களைத் தன் நிலத்தைக் காக்க வாழ்வின் இறுதி  விநாடிவரை பின் வாங்காமல் எந்த எல்லைக்கும் செல்லத் துணியும்  வீரத்தில் உள்ளதென அறியமுடிகிறது. உண்மையில் மருது பாண்டியர்கள் ஒரு மன்னராக வென்றவர்கள்தான்.

ஒரு வரலாற்றை வாசித்து அப்படியே ஒப்பிவிப்பது என்பது யாவருக்குமே சலிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அதே வரலாற்றை தன் பார்வையில் ஆராய்ந்து மிகச் சரியாக அடுக்கி தொகுத்து அதன் மீதான தன் கருத்துகளையும் யூகங்களையும் முன் வைத்து எழுதியிருக்கும் இந்த முயற்சி  வரலாற்றைச் சொல்வதற்கான புதிய வழிமுறையைக் கற்றுக்கொடுப்பவை. போராட்டத்தையும் போர்க்களத்தையும் இதுவரை வெறும் பாடமாக மட்டுமே பார்க்கத் தெரிந்த எனக்கு அதற்குள் இருக்கும் ரத்ததுளிகளை, மரணபயத்தை, கதறலை  போராட்ட குணத்தை இலக்கியப் பார்வையோடு அறியவும் கற்றுக்கொடுக்கிறது.
.

1 comment for “மண்ணும் மனிதர்களும்: வரலாற்றில் பயணம்

  1. Inbachudar Muthuchandran
    November 2, 2019 at 3:25 pm

    சை.பீர்,முகம்மதுவை மலேசிய எழுத்துலகில் தெரியாதவர்கள் மிகச்சிலரே எனலாம்.அயலகத்திலும் தமிழகம்,அவுசுதிரேலியா,இலங்கை,சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் தனது தனித்திறமையால் பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்து பலருக்கு உறவுப்பாலம் அமைத்துதந்துள்ளார்.அவரின் முகில் பதிப்பகத்தில் பல புத்தகங்களை பல நாடுகளில் வெளியீடு செய்துள்ளார்

    மலேசிய .இலக்கிய வானில் பல்லாண்டு காலம் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் சுதந்திர பறவை தான். நம் சை பீர் முகம்மது அவர்கள்.எழுத்துலகில் மற்றவர்களைப்போல் அல்லாமல் அவருக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து கொண்டு எழுதி வாசகர்களை கவர்ந்துள்ளார்.

    சீங்கப்பூரில் இவரது நூல் வெளியீட்டினை காலம் சென்ற தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் மகளும் தற்பொழுது தூத்துக்குடி நாடாளு மன்ற உறுப்பின்ருமான கனிமொழி அவர்கள் செய்து வைதுள்ளார் என்பதை நினக்கும் போது மலேசியர்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

    நான் அவர் புதினங்களை வெளியீடும் போது இரண்டு புத்தகங்கள் வாங்கியிருந்தேன் ஒன்று பெண் குதிரை என்ற புதினம், மற்றது கைதிகள் கண்ட கண்டம் என்ற பயணக்கட்டுரை தொகுப்பு அதை நான் படித்து முடிக்கும் போது என்னை அவுசுதிரேலியாவுக்கே கொண்டு சென்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்ப்பட்டது.

    தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் மூத்த எழுத்தாளவாரான இவரை வல்லினம் விருது வழங்க தேர்ந்தெடுத்தற்கு வல்லினம் குழு வினருக்கு இந்த தருணத்தில் அடியேன் மனமுவந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...