நீரின் மேற்பரப்பு ஓயாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது, நீரின் கீழ்தளத்தில் மேற்பரப்பின் அலைகழிதல்களால் வேறொரு பெளதிக மாற்றம் மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியாகத் தன்னுள் இருந்த படைப்பு மனத்தை அலைகழித்த, சமூகம், ஆளுமைகள், இலக்கியங்கள் சார்ந்த நினைவடுக்குகளை ‘திசைகள் நோக்கிய பயணம்’ எனும் பத்தித்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார் சை.பீர்முகம்மது. சை.பீரின் படைப்பு மனத்தின் செல்திசையையும் இலக்கியச் செயற்பாடுகளைத் தீர்மானித்த சிந்தனைகளையும் ஆளுமைகளின் தாக்குறவுகளையும் இந்தக் கட்டுரைகள் காட்டிச் செல்கின்றன.
காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்த சை.பீர்முகம்மதுவின் திசைகள் நோக்கிப் பயணம் எனும் கட்டுரைத் தொகுப்பில் காலக்கோடாகச் சை.பீரின் வாழ்வில் ஒவ்வொரு வயதிலும் ஏற்பட்ட அனுபவங்கள், சிந்தனைகள் ஆகியவை இந்தக் கட்டுரைகளில் தெரிகிறது. இன்றைய பார்வைக்கு முரணாகக்கூடும் சில கட்டுரைகளும் இதில் இருக்கத்தான் செய்கின்றன. எவையும் புறக்கணிக்கவோ ஒதுக்கிவிட்டுச் செல்லத்தக்கவையாக இல்லை. இரண்டு மூன்று பக்கங்களில் எளிய நடையில் நாளிதழுக்கான கட்டுரைகளாகவே இந்தக் கட்டுரைகளை வரையறை செய்ய முடிகிறது. ஆனால் சை.பீரின் சிந்தனைகளை இந்தக் கட்டுரைத் தொகுப்பை மட்டுமே முன்வைத்து மட்டும் மதிப்பிடுதல் முறையாகாது என்று உணர்ந்தே இத்தொகுப்பு குறித்து பேச முயல்கிறேன்.
ஆசிரியர் கல்லூரியில் நவீனத்தமிழிலக்கிய அறிமுகப் பாடத்தில் ‘பாதுகை’ எனும் சை.பீர் முகம்மது அவர்களின் சிறுகதையைப் படித்த அனுபவத்தைப் பொருத்திப் பார்த்துக் கொண்டுதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பை அணுக முயன்றேன். பாதுகை கதை, புகுமுக வகுப்பு மாணவன் தனது கிழிந்த காலணிக்கு மாற்றாக புதிய காலணியை வீட்டில் கேட்பதிலிருந்து தொடங்குகிறது. வீட்டில் இருக்கும் அப்பா சம்பூர்ண இராமாயணம் வீடியோ கேசட் பார்ப்பதாகவும் அண்ணன் பாட்சா படம் வீடியோ கேசட் வாங்குவதற்குச் செல்வதாகவும் காலணி வாங்க காசில்லை எனக் கைவிரிக்கும் குடும்பச் சூழலை கதையில் அமைத்திருப்பார். வறுமை என்பதோடு அலட்சியமும் அறியாமையும் சேர்ந்து தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழிக்கும் சூழலைக் காட்டியிருப்பார். இப்படியான சிறுகதைகளின் வாயிலாகவே சை.பீர் முகம்மதை அறிந்திருக்கிறேன். அதைத் தவிர வல்லினம் போன்ற இதழ்களில் அவரின் இலக்கிய முயற்சியையும் படைப்பு குறித்தும் தெரிந்து வைத்திருந்தேன். அவரின் படைப்புகளையும் நேர்காணலையும் வாசிக்கின்ற போது மலேசியத் தமிழிலக்கியச் சூழலில் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான நவீனத்துவ காலக்கட்ட படைப்பாளிகளில் சை.பீர் முகம்மது மிக முக்கியமானவர் என்று அறிய முடிந்தது.
இலக்கியம்
ஜெயமோகன் நவீனத்துவ காலக்கட்ட இலக்கியங்களின் பொதுத்தன்மையைப் பற்றி சொல்லும்போது 20 ஆம் நூற்றாண்டில் உருவாகி வந்த சமூக அமைப்புகள் பண்பாட்டு மாற்றங்களால் சமூக அமைப்புகள் சார்ந்த நம்பிக்கையற்று விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் விழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம், ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது என்கிறார். அதன் விளைவாகச் சமூகத்தில் நிலவி வந்த போலிப்பாவனைகளைப் படைப்பாளிகள் விமர்சனம் செய்தனர். அப்படியாக நவீனத்தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளியான பாரதி சமூகத்தின் மீது தன் விமர்சனக் கணைகளைத் தம் எழுத்துகளின் வாயிலாக முன்வைத்து வந்தார். சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனும் எள்ளல், பகடியாகச் சமூகத்தைத் தம் கதைகளில் விமர்சனம் செய்திருக்கிறார். பின்னர், ஜெயகாந்தன் சமூகத்தின் போலி முற்போக்கு முகங்களையும் விதிகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
இந்தப் பின்புலத்தில் இவர்களின் இலக்கியம் அளித்த தாக்கமே சை.பீரின் எழுத்துகளில் வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக அறிய இயன்றது. தன்னுடைய ஞானசிரியராகப் பாரதியைச் சை.பீர் குறிப்பிடுகிறார். தன் இலக்கிய உலகின் ஆதர்சமாகக் கொள்ளும் வகையில் புதுமைப்பித்தனைப் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறார். சமூகத்தில் நிலவி வந்த அவலங்களையும் மிகைப்பாவனைகளையும் எள்ளல் நடையில் பகடி செய்து எழுதும் புதுமைப்பித்தனின் எழுத்து முறையில் தான் கொண்டுள்ள ஈடுபாட்டைக் குறிப்பிடுகிறார். ‘என் கதவுகளைத் திறக்கிறேன்’ எனும் கட்டுரையில் தம் இலக்கிய வாசிப்பையும் தம் எழுத்துக்கான துவக்கப்புள்ளிகளைக் குறிப்பிடுகிறார். புதுமைப்பித்தன், பாரதியார், ஜெயகாந்தன் ஆகிய ஆளுமைகளின் தாக்கத்தையும் அவர்களின் மீதான தரிசனத்தையும் சை.பீரின் கட்டுரைகளில் காண முடிகின்றது. குறிப்பாக, பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவே தன்னை சை.பீர் முகம்மது அடையாளப்படுத்திக் கொள்கிறார். இன்னொருபுறத்தில் தமிழ்ச்சிறுகதை தளத்தின் மிக முக்கியமான முன்னோடியான புதுமைப்பித்தனையும் அடையாளம் கண்டு போற்றுகிறார்.
இருப்பினும், எந்த இலக்கியத்தையும் வகைமை, கோட்பாடு சார்ந்தும் முன்வரைவு செய்யும் எண்ணமும் அவரிடம் இல்லை என்பது தெளிவு. பெரும்பாலும் பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, நா.பார்த்தசாரதி என அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த சிலாகிப்பு இந்நூலில் இருக்கிறது. சமூகத்தில் முன்வைக்கப்படும் போலிப்பாவனைகள், மிகையுணர்ச்சிகள் ஆகியவற்றை மீறல் தன்மையுடனும் விலகல் தன்மையுடனும் சீண்டும் இலக்கிய படைப்புகளை தமக்கு உவப்பானவையாக முன்னிறுத்துகிறார். அக்காலக்கட்ட இலக்கிய ஆளுமைகளான ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாரதியார் ஆகியோரை தம் ஆசிரிய நிரையில் வைக்கும் மனப்பாங்கு இதனைக் காட்டுகிறது.
1950-1960 களில் மலேசியாவில் திராவிட கருத்தாக்கம், பெரியாரியச் சிந்தனைகள் ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. இக்கட்டுரைத் தொகுப்பில் கூட பெரியார், கோ.சாரங்கபாணி ஆகிய ஆளுமைகளின் சிந்தனைகள் மலேசிய சூழலிலும் தனக்கும் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறார். இந்த அலைகளுக்கிடையிலும் திராவிட மரபு எழுத்தாளர்களும் ஒழுக்க விதிகள் மரபு சார்ந்த கருத்தாக்கங்களைத் தூக்கிப் பிடிக்கும் மு.வரதராசனார், அகிலன் ஆகிய எழுத்தாளர்களே மலேசிய முன்னோடி எழுத்தாளர்களின் ஆதர்ச எழுத்தாளர்களாக அமைந்திருந்தனர். சை.பீர் முகம்மது அவர்களும் தமிழ்வாணன், கல்கி, மு.வரதராசனார், அகிலன் எனத் தான் வாசிப்புப் பரப்பை இந்த அலைகளுக்கு இடையில் பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன் ஆகிய நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகளைத் தன் வாசிப்பில் கண்டடைந்து விரிவுபடுத்தியிருக்கிறார்.
தம்முடைய வாசிப்பின் வாயிலாகக் கண்டடைந்தை சை.பீர் முகம்மது, மலேசியத் தமிழ் இலக்கியச்சூழலோடு பொறுத்திப்பார்க்கிறார். ஆகவே, இங்கு இலக்கியம் மேலும் முன்னகர வேண்டிய தூரத்தையும் புதிய எல்லைகளையும் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் வெளிபடுத்துகிறார். ‘சிதைவுகளைக் கொண்டுவரும் இலக்கியப் பிற்போக்கு எனும் கட்டுரையில் ‘மனிதக் குல விடுதலைக்கு வித்திடும் அடுத்தக் கட்ட எழுத்துகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லை’ என பழகிய வாழ்வு, சமூகம் எனச் சட்டகம் அமைத்து எழுதப்படும் மலேசிய படைப்புகளையும் படைப்பாளர்களையும் சாடுகிறார். சை.பீர் முகம்மது தம் கவிதை சார்ந்த விமர்சனத்தையும் முன்வைக்கிறார். ‘காலந்தோறும் பெண் கவிஞர்கள்’ எனும் கட்டுரையில் ‘ஆண்கள் வர்ணித்த உடலுறுப்புகளைக் கூர்தீட்டி புதிய மொழியில் பேச ஆரம்பித்துள்ளனர்’, ‘புதிய பார்வை, சொல் என்ற வகையில்தான் இந்தச சமூகத்தைப் பெண்களின் கவிதைகளைத் திரும்பி பார்க்கச் செய்ய இயலும்’ என்று குறிப்பிடுகிறார். சை.பீர் புனைவுகளில் தொடர்ந்து உடனடி கவனக் கோரலை நிகழ்த்தும் மீறல் தன்மையும் புரட்சியும் மிக்க படைப்புகளைச் சிறந்தவை என முன்வைக்கிறார் என்பதையே மேற்கண்ட வரிகளின் வாயிலாக அறிய முடிகிறது. சை.பீர் முகம்மது முன்வைக்கும் கவிதைகளானது வாசகன் தன் வாசிப்பின் வழி கண்டடையும் புதிய பொருள் தேடலுக்கான குறைந்த சாத்தியத்தை வழங்குகிறது. சான்றாக, கொக்கரிப்புகளில் கும்பல் சேர்க்கும் கோழி அல்ல; சத்தமின்றி கொத்தித் தின்னும் கழுகு நான் எனும் சிங்கை கனகலதாவின் வரியென்பது சமூகத்தின் மீதான கலகக்குரலாகவே எஞ்சுகிறது. கவித்துவம் கூடிய கவிதைகளாக இருப்பினும் குறைந்த வாசிப்பு சாத்தியத்தை இம்மாதிரியான கவிதைகள் கொடுக்கின்றன என எண்ணுகிறேன். காலந்தோறும் பெண் கவிஞர்கள் எனும் கவிதையில் பெண்களின் விடுதலையையும் சமூகத்தில் தனக்களிக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கவிதை வாயிலாக மறுகட்டுமானம் செய்யவேண்டுமென்கிறார். இம்மாதிரியான ஒரே மாதிரியான உத்திமுறையில் எழுதப்படும் கவிதைகள் பழகிய அச்சில் மீள வார்க்கும் சொல் விளையாட்டாகவே எஞ்சக்கூடும். வாசகனுக்கான இடைவெளியுடன் படைப்பு அமைந்திருத்தல் அவசியம் என்றே எண்ணுகிறேன். வாசகன் தன் வாசிப்பின் வாயிலாக புதிய திறப்புகளைக் கண்டடையும் வாசக இடைவெளி அவசியம். அவ்வாறான வாசக இடைவெளியைப் பழகிய உத்திமுறை, சொற் சரடுகளை இணைத்து உருவாக்கும் தொடர்கள் மட்டுப்படுத்த கூடும். இருப்பினும், சை.பீர் முன்வைக்கும் அந்தப் புனைவு கூறுமுறைகளும் விமர்சனங்களும் நிச்சயமாகக் கவனிக்கப்படவேண்டியவை. தமிழ் புனைவுப் பரப்பில் புதிய சாத்தியங்களைக் கண்டடைந்து எழுத தமிழில் வேரோடி போயிருக்கின்ற முன்னோடிகளின் முயற்சிகளை அறிவது அவசியமே.
ஆளுமைகள்
இந்த நூலில் இலக்கியம் சமூகம் சார்ந்து பணியாற்றிய ஆளுமைகள் பற்றியும் சை.பீர் அவர்கள் எழுதியுள்ளார். இவற்றில் முருகு.சுப்பிரமணியன், கோ.சாரங்கபாணி ஆகியோர் குறித்த கட்டுரைகள் 1960-1970 களில் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் இதழியல் சூழலையும் அறிவதற்கான சாளரமாக விளங்குகிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தோற்றம் காணவும் அதன் அமைப்புத் தலைவராகவும் பணியாற்றியவர் முருகு.சுப்பிரமணியன். அவரைக் குறித்த இந்தக் கட்டுரை முழுமைப் பெறாத மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு சிறு பகுதியை நிறைவு செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது. தேசிய எழுத்தாளர் சங்கத்துடனான ஒத்துழைப்பு, பவுன் பரிசுத் திட்டம் ஆகிய இலக்கியச் செயற்பாடுகளை முருகு.சுப்பிரமணியன் குறித்த பங்களிப்புகளைக் குறிப்பிடுகிறார். முருகு. சுப்பிரமணியன் குறித்த கட்டுரை என்பதும் சை.பீரின் நினைவு வளையங்களிலிருந்தே எழுவதால் அவரின் பங்களிப்பும் அதனூடாகவே வருகிறது. சை.பீரும் எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும் செயலவையிலும் ஆற்றியுள்ள பங்களிப்பைக் குறிப்பிடுகிறார். அதன் அமைப்புக்குழுவில் துணைச் செயலாளராக இருந்தவர் பின்னாளில் துணைத் தலைவராகவும் பணியாற்றியதையும் குறிப்பிடுகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்கக் காலக்கட்டத்தில் நாடு முழுதும் சிறுகதை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து படைப்புகள் குறித்த உரையாடலை உருவாக்க முனைந்திருக்கிறார். இருப்பினும், அவ்வுரையாடல் குறித்து எழுந்த சர்ச்சைகளால் அம்முயற்சி கைவிடப்பட்டதையும் அறியமுடிகிறது.
கோ.சாரங்கபாணி, ஆதி குமணன் பற்றிய அவரின் கட்டுரை அவர்களுடனான தனது தனிப்பட்ட உறவை விவரிப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கிறது. கோ.சாரங்கபாணி, ஆதி குமணன் போன்றோர் மலேசியத் தமிழ் இதழியல் துறையில் செலுத்திய ஆளுமையும் பதிவு செய்திருக்கிறார். கோ.சாரங்கபாணி அவர்களின் முயற்சியால் 1950களில் தமிழர் திருநாள் விழாக்கள் மலேசியா முழுதும் நிகழ்ந்திருக்கின்றன. தனிநபர் இயக்கமாக அதனை முன்னெடுத்து மாணவர் மணிமன்றத்தைத் தோற்றுவித்து தமிழர் திருநாள் விழாக்கள் நடத்தியிருக்கிறார். தமிழர் திருநாள் விழாக்கள் இளையோர்கள் இடையே தமிழ் மரபு முன்னெடுப்பில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அங்காங்கே தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் தக்கக் களமாக அமைந்தது. அவ்வகையில் சை.பீர் முகம்மது மாணவர் மணிமன்றம், தமிழ் இளைஞர் மணிமன்றம், முத்தமிழ் படிப்பகம் ஆகிய அமைப்புகளில் முன்னோடியாகவும் களப்பணியாளராகவும் ஆற்றியுள்ள பங்களிப்பு கவனிக்கத்தக்கது. 1960-1970 களில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களில் தமிழ் மரபு பேணுவதற்குச் செய்யப்பட்ட பங்களிப்பு மகத்தானது. சை.பீர் முகம்மது சிலகாலம் மணிமன்ற பொறுப்புகளில் இருந்து செய்திருக்கும் தமிழர் திருநாள், மணிமன்ற செய்ற்பாட்டின் முன்னெடுப்பும் குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழ் இதழியல் துறையில் தீவிரமாக இயங்கிய ஆதி.குமணன், கோ.சாரங்கபாணி, முருகு.சுப்பிரமணியன் ஆகியோர் குறித்த கட்டுரைகளில் இலக்கியத்தை இதழியல் துறை எவ்வாறு அணுகியது என்பது குறித்த தன் பதிவைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, சிறுகதைகள், கவிதை முதலிய படைப்பை எழுதி அனுப்பும் படைப்பாளர்களுக்கு எந்தவிதமான சன்மானம் கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதனுடன் தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளில் இலக்கிய ஆளுமையற்றவர்கள் நீதிபதிகளாகப் பணியாற்றுவதையும் போட்டி ஏற்பாட்டாளர்களின் தலையீடையும் இலக்கிய பரிசுகளும் நீதிபதிகளும் எனும் கட்டுரையில் சாடுகிறார். மூத்த எழுத்தாளர்கள், தம் படைப்புகளை முன்னமே பதிப்பித்தவர்கள் போட்டிகளில் பங்குகொள்ளும் போது ஏற்படும் முன்முடிவுகளைச் சுட்டுகிறார். அவ்வாறு போட்டிகளில் பங்கு கொள்ளும் படைப்பாளர்களின் படைப்புகள் பல காரணங்களினால் பரிசுக்குத் தகுதியல்லாமல் ஆகிறது என்கிற ஆதங்கத்தையும் சேர்த்தே முன்வைக்கிறார். சன்மானம், பரிசு முதலியவற்றை ஊக்குவிப்பு, அங்கீகாரம் ஆகியனவாக வரையறுக்கலாம். எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் அங்கீகாரம் ஊக்குவிப்பு ஆகியவை இலக்கியத்தில் தொடர்ந்து எழுதுவதற்கும் இயங்குவதற்கும் ஊக்கிகளாக அமையலாம். ஆனால், எழுத்தாளன் தான் எழுதுவதற்கான படைப்பூக்கத்தையும் படைப்பு விசையையும் தானேதான் கண்டடைய வேண்டும். அவற்றை ஊக்குவிப்புகள், பரிசுகளிலிருந்து மட்டுமே கண்டடைவானெனில் தொழிற்முறை எழுத்தாகவே அது நீடிக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். இருப்பினும், சமுதாயத்தில் படைப்பாளர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சை.பீர்முகம்மது மலேசிய நவீன இலக்கிய உலகில் இருக்கும் ஒரு சாட்சி என அவர் பத்திகளை வாசிக்கையில் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆளுமைகளுடனும் அவர் கண்டடைவது தன்னையே. ஒரு வரலாற்று நிகழ்வில் அவர் கவனித்துப் பார்க்கும் நபராவும் தன்னையே வைத்துள்ளார். அதன் வாயிலாகவே அவர் அந்நிகழ்வை அணுகுகிறார். அது நம்பகத்தன்மையானதாக அமைய அவர் நேரடி சாட்சியாக இருப்பதும் காரணம் எனலாம்.
சமூகம்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமூகம், இலக்கிய சார்ந்த மாற்றங்கள் மலேசியாவில் அப்படியே பிரதிபலித்திருக்கிறது என்பதை இவரின் கட்டுரைகளின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் திராவிட இயக்க தாக்குறவு இங்கு பெரும் தீவிரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1954 ஆம் ஆண்டு பெரியார் வருகை, தமிழ்முரசில் வெளிவந்த பகுத்தறிவு சிந்தனைகள் ஆகியவை மலேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது என்பதை சை.பீர் முகம்மது தன்னுடைய நேரடி அனுபவத்தின் பகிர்வாக இக்கட்டுரையில் முன்வைக்கிறார். அதே காலக்கட்டத்தில் மாணவர் மணிமன்றங்கள் வாயிலாகப் பரவலாக நடத்தப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் தமிழ் பேச்சு, எழுத்து, கலைகளின் பரவலாக்கத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ஆனால், கொள்கை சார்ந்த ஈடுபாடு இல்லாமல் ஆளுமை சார்ந்ததாகவே அது சுருங்கி போயிருக்கிறது. சான்றாக, தமிழ் மணிமன்றம் முதலியவை தொடர்ச்சியான தமிழர் திருநாள் போன்ற தொடக்கக்காலச் செயற்பாடுகளிலிருந்து விலகி சென்றதைக் குறிப்பிடலாம். தொடக்கத்தில் இருந்த கொள்கை பிடிப்பு அல்லது செயற்பாடுகள் பின்னாளில் தலைவர்களின் மாற்றத்தினாலும் மறைவினாலும் மெல்ல நீர்த்துப்போய் வெறும் அரசு சாரா இயக்கம் என்ற அளவில் நீடிப்பதைக் குறிப்பிடலாம். இன்றைய சூழலோடு ஒப்பிட்டால் திராவிட, பகுத்தறிவுச் சிந்தனைகள் அறிவுத்தளத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பேச்சு, செயற்பாடுகள், சினிமா பின்புலம் என சோபிக்காமல் போயிருக்கிறது என்பதை உணர முடியும்.
இந்தக் கட்டுரைகளில் சை.பீர் முகம்மது அவர்களின் எழுத்துகளில் மெல்லிய விலகல் தன்மையுடன் நின்று அனைத்தையும் சலிப்பு மேலிட விவரிப்பதைக் காணமுடிகிறது. எழுத்தாளர்களை மதியாத நாளிதழ்கள், இயக்கங்கள் பழகிய கூறுமுறைகளிலிருந்து வெளிப்பட மறுக்கும் எழுத்தாளர்கள், போட்டிக்கான படைப்புகளைத் தெரிவு செய்வதில் இருக்கும் முறையின்மை என அனைத்தையும் சலிப்புடனே அணுகுகிறார். இந்தச் சலிப்பு அவரது எழுத்தில் தொற்றிக்கொள்வதற்குச் சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட அல்லது முழுமையாக புரிந்துகொள்ளப்படாத ஆளுமைகளின் நிலையே உந்தியிருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. தமிழ் முரசு நாளேடு நின்று ‘’லெப்டினன்ட், இது நன்றி கொன்ற சமூகம், எனக்கே இந்த நிலை…எனச் சொல்லும் தமிழ்முரசு, மணிமன்றம் தொடங்கிய கோ.சாரங்கபாணி அவர்களின் சோகம் தொடங்கி எழுத்தாளர் சங்கம் தோற்றத்துக்கும் பவுன் பரிசுத் திட்ட அறிமுகம் என வரலாற்றில் பெயராக நீடிக்கும் முருகு.சுப்பிரமணியனின் பிற்கால மனச்சோர்வு ஆகியவையே காரணமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய எழுத்துகளில் அவர் பெற்றுக் கொள்ளும் இந்த விலகல் தன்மை ஒன்றைச் சலிப்புடன் அணுகுவதற்கும் சமூகத்தின் போலித்தன்மைகளையும் போதாமைகளையும் சீண்டவும் செய்கிறது.
தன்னை அலைகழித்த உளைத்த சமூக நிலை உள்ளிட்டவற்றை சற்றே உணர்ச்சி மேலிட கட்டுரைகளாக அமைத்திருப்பதே இந்தக் கட்டுரைகளின் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்திருக்கிறது எனலாம். இந்த உணர்ச்சி சமநிலையின்மையே முன்முடிவுகளுடன் கூடியதான கட்டுரைகள் அமைந்திருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. சான்றாக, தமிழ்த்தேசியமா திராவிடத்தேசியமா எனும் கட்டுரையில் திராவிடத்தேசியம் எனும் கருத்துருவாக்கத்துக்கு வலு சேர்க்கத் தன்னுள் இருக்கும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சித்திரமே போதுமானதாகக் கட்டுரையாளருக்கு இருக்கிறது. திராவிடக் கருத்துருவாக்கம், தமிழ்த்தேசிய கருத்துருவாக்கம் ஆகியன குறித்த பின்புலத்துடனும் அதன் தேவையையும் தமிழ்நாட்டுடன் நேரடி தொடர்பு இருக்கிற தனது சுய அனுபவங்கள் வாயிலாகவும் அளித்திருந்தால் அந்தக் கட்டுரை இன்னும் செறிவானதாக அமைந்திருக்கும். சமூகத்தில் எழுத்தாளனின் பார்வைக்கு அளிக்கப்படும் மதிப்பு என்பது நாமறியாத சமூகப்போக்குகளையும் பார்வையையும் முன்வைப்பதில்தான் அமைந்திருக்கிறது. கருத்துரைத்தல் என்பது அனைவரும் செய்யக்கூடியதே. இருப்பினும், திராவிடத்தேசியம், தமிழ்த்தேசியம் ஆகியன குறித்த புரிதலும் அறிமுகமும் குறைவானதாகவே இருக்கும் மலேசியச் சூழலில் அவரின் இக்கட்டுரைகள மலேசியத் தமிழ் அறிவுலகச் சூழல் மேலும் முன்னகர்வதற்கான சாத்தியமாக இருந்திருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க இந்த அலைகழிதல்களுக்கு நடுவில் சை.பீர் முகம்மதுவின் அடியாழத்தில் ஓயாத ஆன்மீகத் தேடல் ஒன்று உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. பாரதியாரின் கவிதைகளில் கண்டடைந்த அந்த ஆன்மீகத்தரிசனம் பிறகு சித்தர் பாடல்கள், சூபிகளின் பாடல்கள், புத்தர் சிந்தனை என விரிந்து செல்வதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இந்த ஆன்மீகத்தேடல் குறித்த கட்டுரைகள் சாக்ரடிஸ், சித்தர் கதைகள், என ஒற்றை வரி மேற்கோள்களால் நிறைந்திருக்கிறது. இந்த ஒற்றை வரி மேற்கோள்கள் இந்தக் கட்டுரைகளை அழுத்தமற்றதாக தொனிக்கச் செய்கின்றன. அவரது ஆன்மீக நம்பிக்கைகள், தேடல் குறித்த கட்டுரைகள் தொடர்ந்து வாழ்வு நிலையாமை, ஆசை துறவு தொடங்கி மூடநம்பிக்கை சாடல் என்றே விரிகிறது. அவரின் இந்த ஆன்மீக நம்பிக்கையின் நீட்சியே பெரியாரின் மீதான பற்றுக்கும் காரணமாக அமைவதை ஊகிக்கலாம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை தவிர சமயத்தில் நிலவும் சாதி வேற்றுமை, பெண்ணடிமைத்தனம் முதலியவை களைந்து சுயமரியாதையுடன் வாழ்தல் வேண்டும் ஆகிய கொள்கைகளுடன் உடன்பாடு உடையவராகவே இருக்கிறார். தொடர்ந்து, கடவுள் நம்பிக்கையும் கொண்டு சமூகத்தில் நிலவும் சில மூடப்பழக்கங்களைக் களைய வேண்டுமென்கிற சை.பீரின் சித்திரமே பெரியாரியச் சிந்தனை மலேசியாவில் உள்வாங்கப்பட்டிருக்கும் பிரதிபலிப்பு எனக்கொள்ளலாம்.
சை.பீர் முகம்மது மிகக் காத்திரமாக இயங்கிய வந்த 1960, 1970, 1990 ஆண்டு முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் மலேசிய இலக்கியத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நிகழ்ந்து வந்த மாற்றங்கள், தேக்கச்சூழல், வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு இந்நூல் நிச்சயமாக துணைபுரியும். கட்டுரை முழுதும் இருக்கிற விலகல் தன்மையும் சலிப்புத் தன்மையுமே இலக்கியம், சமூகம் இந்த ஒற்றை நீர்மேற்பரப்பு உருவாக்கிய அலைவுகள் வெறும் மணற்படிவுகளாகவே எஞ்சின எனும் தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.