வல்லினம் பரிசுக் கதைகள்: என் பார்வையில்

சொவெர்திரைப்படங்கள், சீரியல்கள், ஜனரஞ்சக நாவல்கள் என முன்பு ஆர்வம் கொண்டிருந்தாலும் அவ்வார்வமென்பது தற்பொழுது மாறி நல்ல இலக்கியங்களை வாசிப்பதன் மீதிலான ஈடுபாட்டினை மிகைப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுகதைகள். சிறுகதையினை வாசித்து முடிக்கையில் எண்ணக்கிடங்கில் கணக்கற்ற எண்ண அலைகளினை என்னுள் உண்டாக்கி மீள்வாசிப்பிற்குள் என்னை மூழ்கடித்து மிதக்க வைப்பதால் கூட இருக்கலாம்.

வல்லினம் நடத்திய போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற பத்து  சிறுகதைகளினை உள்ளடக்கிய ‘வல்லினம் பரிசுக் கதைகள்’ எனும் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. எஸ்.பி.பாமா,செல்வன் காசிலிங்கம், ஐஸ்வர்யா, உதயகுமாரி கிருஷ்ணன், கலைசேகர், பவித்திரா, கி.இளம்பூரணன், திலிப்குமார்  அகிலன் மற்றும் அரவின்குமார்  என மலேசியாவுக்கு நன்கு அறிமுகமான படைப்பாளிகளும் புதியவர்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களின் மொழி வாசிப்பவர் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையிலேயே அமையப்பெற்றுள்ளது. இவர்களின் கதையின் கரு முற்றிலும் மாறுபட்ட தளத்தினுள் பயணிப்பது மட்டுமின்றி வாசித்து முடிக்கையில் வாசகனாகிய நம்முன் பற்பல எண்ணத்தினை விதைத்து செல்கிறது. இத்தொகுப்பினில் இடம்பெற்ற படைப்புகள் கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமூகத்தின் விழுமியங்களை கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளன. மொத்தம் பத்து சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த ஏழு கதைகள் குறித்து வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

செல்வன் காசிலிங்கத்தின் ‘வலி அறிதல்’ தோட்டத்து நெடியுடன் உருவாகியுள்ளது. நுணுக்கமான தகவல்கள் பல அப்பா தெரிந்து வைத்திருப்பதால் எஸ்டேட்டில் அப்பாவிற்கு தனி மரியாதை எனவும், இதனால் சிலர் தன் அப்பாவை வாத்தியார் என அழைப்பதும் உண்டு என்பதும், தன் அப்பா எஸ்டேட் பகுதில் நல்ல மரியாதைக்குரிவர் என்றும், நீச்சலடிக்க கற்றுக்கொடுக்கும் இடத்தில் கண்டிப்போடு கூடிய தந்தையாகவும் கதைசொல்லியால் அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு லெட்சுமி ஆண்ட்டி தன் அம்மா, சின்னம்மா, அத்தை இவர்களை காட்டிலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக கூறும் கதைசொல்லி தன் அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உறவு குறித்தும் நுட்பமாக விவரிக்கிறார். தன் தந்தை வீட்டில் உணவுண்ணுவதும் குறைவு, அம்மாவுடன் சிரித்து பேசியதையும் கண்டதில்லை அதற்கு அம்மா இடமளித்ததுமில்லை; மேலும் அம்மாவோடு கதைசொல்லி உறங்கும் அறையினுள் அப்பா உறங்கியதில்லை. இவ்வாறு அப்பாவையும் அம்மாவையும் அவரவர் அந்தரங்க உலகத்தையும் விவரிக்கும் ஆசிரியர் அதன் முடிச்சை இறுதியாக கண்ட காட்சியின் வழி விடையாகச் சொல்கிறார். லெட்சுமி ஆண்ட்டி அலங்கோலமாக அப்பாவின் உடலினை ஏந்தி வந்த வண்டியின் முன் ஓலமிட்டழுததும், அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த அம்மா ஆண்ட்டியின் தலை கோதிவிட்டு வீட்டினுள்ளே அழைத்து சென்றதும் அற்புதமான சித்தரிப்பு. இக்கதை திட்டவட்டமான கருத்து என ஒன்றையும் சொல்லாமல் ஒரு பெண் அதுவரை தன்னுள்ளே அழுத்தி வைத்திருக்கும் கோபம் எப்படி பேரன்பாக உருமாறுகிறது எனச் சித்தரிக்கும் இடத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தனக்கு வாழ்நாள் முழுவதும் போட்டியாக இருந்த பெண்ணை அரவணைக்கும் இடம் அபாரமான அனுபவத்தைக் கொடுக்கிறது.

கி.இ.உதயகுமாரி எழுதிய ‘சாம்ராஜ்யம்’ சிறுகதை வேறு உலகத்தை வாசகனுக்குத் திறந்து காட்டுகிறது. பாட்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிம்பத்தை கொண்டு ஆட்சி நடத்துபவள். பாட்டி என்றாலே எது கேட்டாலும் கிடைத்துவிடும். செல்லம் கொஞ்சுபவள், கதைசொல்பவள் என ஏராளம். பாட்டியின் பிம்பத்தை இப்படியே பார்த்து பழகிவிட்டோம். ‘சாம்ராஜ்யம்’ சிறுகதையில் வரும் பேத்திக்குப் பாட்டியின் மீது பெரும் வெறுப்பு. பாட்டி தன் அறையினுள் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறாள்; அதற்கு அவளே ராணியாக இருக்கிறாள். இன்னும் தன் அம்மா பாட்டியின் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பதும், சிறுமியாக இருக்கும்போதே வீட்டுவேலை, சமையல் என கற்றுக்கொள்ள வேண்டும் என பாட்டியின் எதிர்பார்ப்பு போன்றவற்றால் பாட்டி என்பவள் அதிகாரத் தோரணையின் படிமமாகக் காட்சி தருகிறாள் பேத்திக்கு. கொம்புமானை துரத்தி வரும் சிறுத்தை புலியாகவே பாட்டியை உருவகப்படுத்துகிறாள் பேத்தி. அதே பாட்டி உடல் தளர்ந்து இளமையை தின்றுவிட்ட முதுமையின் பிடியில் நினைவு பிறழ்ந்து ஒடுங்கி படுத்தப்படுக்கையாக இருக்கையில் பேத்திக்கு வாஞ்சையாக அரவணைக்கும் பிம்பமாக எவ்வாறு மாற்றம் காண்கிறாள் என்பதே கதை. நாட்டில் சிறுகதை வழி நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் கி.இ.உதயகுமாரி. அதனால் இயல்பாக அவருக்கு கதைச் சொல்லலின் மொழி அமைந்துள்ளது. அந்த மொழி வாசிக்கச் சுவையைக் கூட்டுகிறது.

புதிய தலைமுறை எழுத்தாளர்களில் கவனிக்கப்பட்டவர் ஐஸ்வரியா. ஆனால் அதிகம் எழுதுவதில்லை. இவர் எழுதிய ‘நுரை’ சிறுகதையும் இவரது புனைவுலகின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு செயலை செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்தப்படும்போது அப்படி என்னதான் இருக்கிறதென அச்செயலை செய்து பார்த்திட மனமானது ஏக்கம் கொள்கிறது. ஒரு சமூகத்தினரால் மது அருந்துதல் என்பது கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக பார்க்கப்படும் வேளையில் அதே இன்னொரு சமூகத்தினரால் இச்செயல் தவறாக நோக்கப்படுவதும், இவ்விரு சூழலில் சிக்குண்ட அடுத்த தலைமுறை இதனை எப்படி, எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது, இத்தகு சூழலை எதிர்கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டிய சூழலில் ஏற்படும் மன உளைச்சல்களினையும் ஜான்சி எனும் கதாபாத்திரம் வழி சொல்லப்படுகிறது. தன் நட்பு வட்டத்தில் மது அருந்துவதும், காதலன் கொண்டிருப்பதும் ஒரு அந்தஸ்தாக கருத்துகையில் தான் மேற்சொன்ன இரு விசயங்களும் இல்லாதிருப்பதால் சிறந்த மாணவியாகினும் தோழிகளால் ஒதுக்கப்பட்டிருப்பதை எண்ணிப்பார்க்கிறாள் ஜான்சி. தோழிகளான ரோஸி, கேத்தி இருவர் வீட்டிலும் அவரவர் குடும்பத்துடன் பியர் அருந்துவது சர்வசாதாரணமாக கருதப்படுகையில் தன்னுடைய வீட்டிலோ இது செய்ய தகாத ஒரு செயலாக பெற்றோரால் அறிவுறுத்தப்படுகிறது. மதுபான விடுதிற்கு சென்று பியர் அருந்துவது போல் ஒரு படம் க்ளிக் செய்ய அவள் மெனக்கெடுவதும் நட்பு வட்டத்தில் தானும் ஒதுக்கப்படாமலிருக்க இத்தகையதொரு படம் தனக்கு தேவையானதாக இருப்பதால் மனதளவில் தைரியம் இல்லாதிருப்பினும் அவள் மனதை எதிர்கொண்டு படத்தினை கிளிக் செய்கிறாள். இக்கதையில் இரு வேறு சமூக அடுக்கில் உள்ளவர்கள் வீட்டில் மது வகைகள் எவ்வாறு கையாளப்படுகிறது எனச் சித்தரிக்கப்படுகிறது. உயர்த்தட்டு மக்களின் வீட்டில் பொதுவில் பந்திவைக்கப்படும் மது, அவள் வீட்டில் அப்பாவின் வழி ரகசியமாக நடக்கிறது. இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒரு எளிய பெண் மனம் என்னவாக உருகொள்கிறது எனச் சொல்வதால் இக்கதை முக்கியமாகிறது.

‘புதிதாக ஒன்று’ என்ற எஸ்.பி.பாமாவின் இக்கதை அது வெளிவந்த காலத்திலேயே அதிகம் பேசப்பட்டது. அம்மாவிற்கு மார்பக புற்றுநோய் காரணமாக மார்பகத்தை அகற்ற வேண்டியுள்ளதையும் இதுநாள்வரை தன் வனப்பு மிக்க மார்பகத்தை கர்வமாக எண்ணிக்கொண்டிருந்த தன் அம்மாவின் நிலைக்கண்டு மகள் படும் துயரத்தினையும் மன உளைச்சலையும் அவருக்கே உரிய எளிய நடையில் விரசமில்லாது இயல்பாக கொடுத்திருக்கிறார் எஸ்.பி பாமா அவர்கள். நோய் கண்டிருப்பதென்னவோ அம்மாவிற்கு ஆனால் இதனால் அம்மாவின் மனநிலை என்னவாக இருக்கக்கூடும் என்றெண்ணுவதும் ஓரிடத்தில் தனக்கென்று (அம்மா) வாங்கி வைத்திருந்த உள்ளாடையை மகளிடம் கொடுப்பதும் வீட்டிற்கு எடுத்து வந்து அழுகையினூடே முகர்களில் அம்மாவின் மணம் அதில் வீசுவதாக குறிப்பிடுவதும் மகளின் பாசத்தினை எழுத்தின் வழியாக நமக்குள்ளும் கடத்திச் சென்றிருப்பதாகவே கருதுகிறேன். இக்கதை வெறுமனே அம்மா மகள் உறவை மட்டும் கூறவில்லை. பெண் தனக்குள் தன்னை என்னவாக உணர்கிறாள் என துழைத்துச்செல்ல அம்மாவின் பாத்திரம் பல கதவுகளைத் திறந்துவிடுகிறது.

‘இடமுலை கையால் திருகி மதுரை

வலமுறை மும்முறை வாரா அலமந்து’ எனத்தொடங்கும் பாடலில் கண்ணகி மார்பை திருகி எரியும் காட்சி சட்டென மனதில் மோதுகிறது. ஏதோ ஒரு வகையில் சங்க காலம் தொட்டு வரும் பாடல்களில் பெண் தன் கொங்கையை உருவகப்படுத்தும் தருணத்தோடு இக்கதை இணைவதால் கவனம் பெற்ற கதையாக மாறியுள்ளதாக உணர்கிறேன்.

எஸ்.பி.பாமாவைப் போலவே மலேசிய இலக்கியச் சூழலுக்கு நன்கு அறிமுகமானவர் கி.இளம்பூரணன். இத்தொகுப்பில் இடம்பெற்ற அவரது ‘அழகியும் அப்பா சொன்ன கதையும்’ எளிய ஆனால் ஆழமான சிந்தனைக்கு உரியது. சிறுவயதில் கேட்ட பக்தி கதைகளுள் ஒன்றான விநாயகரின் சிரசினை சிவ பெருமான் துண்டாக்கும் கதைதான் இது. சிறுமிக்கு அப்பா இக்கதையை சொல்ல, சிறுமியானவள் அக்கதையில் பொதிந்துள்ள வன்மத்தைக் கண்டு அஞ்சுகிறாள். ஆகவே தன் குழந்தை மனத்தினுள் தனக்கு பிடித்தது போன்று கற்பனை செய்து சடை முடியானுக்கும் விநாயகருக்கும் நடக்கவிருக்கும் சண்டையினை தடுத்து நிறுத்துவதாக சிறுமியினின் கள்ளம் கபடற்ற வெகுளித்தனதோடு அழகு குழையாமல் புதியதாய் காட்சிப்படுத்தி கொடுத்திருக்கிறார். சடைமுடியானின் ஆவேசம் மறைந்து சிறுமியின்பால் அன்பு கொண்டு அவளின் விருப்பமான இரு எலிகளினை தேடி செல்வதாகவும் அதற்குள் குளிக்க சென்ற பார்வதிதேவி வந்துவிட வேண்டுமென சிறுமி மனதிற்குள் வேண்டுவதுமாக சடைமுடியான் கையில் இரு எலிகளோடு வந்து சிறுமிக்கு எலியைக் கொடுக்கையில் பார்வதிதேவியும் பூங்காவிற்கு நுழையவும் தாமதிக்காது எலிகளை வாங்கி கொண்டு சிறுமி கதையில் இருந்து வெளிவருவதாக எவ்வித வன்முறையுமின்றி சிறுவர் சிறுமியரின் உள்ளத்திற்கு ஏற்ப முடித்திருக்கிறார். ஆனால் அவர்கள் விரும்பும் உலகமாக இது இருப்பதில்லை என்பதை அப்பா நிஜ எலிகளைக் கொல்லும் காட்சியின் வழி இளம்பூரணன் சித்திரப்படுத்தியுள்ளார். மலேசியாவில் குழந்தைகளின் உளவியலை வைத்து உருவாக்கப்படும் கதைகள் மிகக் குறைவு. இளம்பூரணின் இக்கதை அவ்வகையில் ஒரு சிறந்த முயற்சி.

ஒரே பாலின ஈர்ப்பு கொண்ட மகன், தான் விரும்பிய ஒருவன் தன்னை வேண்டாமென ஒதுக்கியதற்கு மனமுடைந்து அறையின் கதவினை தாழிட்டு கொண்டு வெளியே வராதிருந்ததை கண்டு பெற்றோர்கள் சந்தேகம் கொள்கின்றனர். மகனை விசாரிக்க தான் ஒரு “கே” என கூறுகிறான். அதனை கேட்ட மறுகணம் அடித்து உதைக்கும் அவனின் அப்பா, அவனை கொலையும் செய்து அதை தற்கொலையாக நம்ப வைப்பதே கதை.  ‘ரப்பியா கயிறு’ எனத் தலைப்பிட்டு திலிப்குமார் எழுதியுள்ள இக்கதையின் நுட்பமே அவன் எப்படிக் கொல்லப்படுகிறான் என்பதில் உள்ளது. அறையில் அடைந்துகிடைக்கும் மகன் மிக வைராக்கியமாக தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். தான் தற்கொலையெல்லாம் செய்துக்கொள்ள மாட்டேன் என்கிறான். பின்னர் அவன் ரப்பியா கயிற்றால் கழுத்தை இறுக்கி தரையில் கால் முட்டியை ஊன்றி செத்துக்கிடக்கிறான். கதையை வாசிக்கும் வாசகன் அப்படி ஒருவன் இறக்க வாய்ப்பில்லையே என குழம்பும் போது அப்பாவின் கையில் கயிற்றை பிடித்து இழுத்த வலி இருந்தது என மிக நுணுக்கமாகக் கதையை முடிக்கிறார் திலிப். இக்கதை எளிய சிறு தருணத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லிய விதத்தில் மனதைக் கவர்ந்தது.

பவித்தாரா எழுதிய ‘சிறகு’ சிறுகதை சர்ச்சையாக கவனிக்கப்பட்ட ஒன்று. ஒரு வாசகியாக எனக்கு விருப்பமான கதைகளில் ஒன்றாக உள்ளது. இக்கதை ஒரு பெண் தன் காதலனை பார்க்க விடுதி அறைக்கு சென்று காத்திருப்பதாக ஆரம்பிக்கிறது. அங்கு அவள் காத்திருக்கையில் ஏற்படும் பதற்றமும் நொடிக்கொருமுறை அவனின் தொலைபேசிக்கு அழைப்பது என நேரம் செல்கிறது. கூடவே கல்லூரியில் படித்தபோது மலர்ந்த காதலும் சொல்லப்பட்டு, அவன்தான் விடுதிக்கு வருபவன் என வாசகன் எண்ணியிருக்கையில் கதையில் ஒரு திருப்பம், அவன் இவனல்ல! இவன் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டவன். காதலிக்கையில் காதலன் ஒருமுறை பேச விடுதிக்கு அழைக்கையில் அங்கே அவன் பேச நேரம் ஒதுக்காது அவளை அணைக்கையில் அவனின் மேல் சந்தேகம் கொண்டு உறவை முறித்து கொள்கிறாள். ஆனால் நிச்சயிக்கப்பட்டவனுக்காக அவள் விடுதி அறையில் காத்திருந்ததும் அவன் அவளிடம் சந்தேக பார்வை கொண்டு கேட்கும் கேள்வியால் நிலைகுழைந்து போகிறாள்.  பெண் தன்னை எப்போதும் எச்சரித்தபடியே இருப்பவள். முதல் காதலனில் பதற்றமற்ற இயல்பான காமம் அவன் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது. அவனுக்கு அது புதிதில்லை என நினைக்கிறாள். ஆனால் இரண்டாவதாக நிச்சயிக்கப்பட்டவனோடு வருகையில் அவளுக்கு இருப்பதும் எச்சரிக்கை உணர்வுதான். தன் வருங்கால கணவனை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அவன் கேட்பவற்றுக்கு மேலும் மேலும் கொடுத்து அவனை தன்னுடன் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறாள். அதனால்தான் அவன் சொல்லாமலேயே கூடலுக்குத் தயாராகிறாள். உண்மையில் முதல் முறையும் இரண்டாம் முறையும் அவளுக்கு இருந்தது காமமல்ல. காமம் எல்லா உயிர்களைப் போல பெண்ணுகும் இருந்தாலும் அதையும் தாண்டி எச்சரிக்கை உணர்வே மேலோங்கி இருக்கும். இந்த எச்சரிக்கை உணர்வே பெண்ணை நுட்பமானவளாக்குகிறது. இக்கதை அந்த எச்சரிக்கை உணர்வின் இன்னொரு திசையைக் காட்ட முயல்வதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

நவீன இலக்கிய முகாம் நிகழ்ச்சியில் சு.வேணுகோபால் இத்தொகுப்பில் என்றென்றும் முக்கியத்துவம் வாய்ந்த சிறுகதைகளாக இரண்டு சிறுகதைகளைச் சுட்டினார். (புதிதாக ஒன்று, சிறகு) நான் தொடர்ந்து பல நல்ல கதைகளை வாசிக்க பயின்று வருகிறேன். அவ்வகையில் இத்தொகுப்பில் இத்தொகுப்பில் இந்த ஏழு கதைகளும் என்னை அதிகம் கவர்ந்த கதைகளாக என்றென்றும் திகழும்.

1 comment for “வல்லினம் பரிசுக் கதைகள்: என் பார்வையில்

  1. Punithawathy
    January 8, 2020 at 12:01 am

    சுருங்கக்கூறி கதையில் அசலினை ஆழமாக எடுத்துரைத்துள்ளீர்கள் .சிறப்பாக உள்ளது .

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...