ம.நவீன் நவீன இலக்கிய முகாமில் இடம்பெற்ற ஓர் உரைக்கு என்னுடைய புரிதலை எழுதி தர முடியுமா என வினவினார். நான் மறுத்தேன். திரும்பவும் இரண்டாவது முறையாக மதிய அமர்வுக்குக் கேட்கும் பொழுது, மறுக்க முடியாமல் அரை மனத்தோடு சம்மதித்தேன். சம்மதம் தெரிவிக்கும் பொழுது என்ன தலைப்பு? யார் பேச்சாளர்? என எவ்விவரமும் அறியவில்லை. மதிய உணவு உண்டு கொண்டே, யாருடைய உரை என அட்டையில் பார்க்கும் பொழுதுதான், எழுத்தாளர் சு. வேணுகோபல் ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்கிற தலைப்பில் உரையாற்ற உள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். எப்படி பேசுவார் இந்த எழுத்தாளர் என தோழிகளிடம் வினவ, அவரிடம் ஒரு தலைப்பைக் கொடுத்தால், ஆழ் கடலில் முழ்கி முத்தை எடுப்பது போல் ஒரு தலைப்பில் மிக ஆழமாக மூழ்கி கருத்தைக் கொடுப்பதுமட்டுமில்லாமல் உணர்ச்சி ததும்பப் பேசுவார் எனக் கூறினார்கள். அதேபோல, அவ்வுரை என் துருப்பிடித்த அறியாமையைப் போக்கிக்கொள்ளவும் என் தமிழ் மரபை மிக துள்ளியமாகப் புரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
முதலில் சு.வேணுகோபால் அவர்கள், அவரது உரையில் நாட்டார் வழக்காற்றியல் என்ற கலைச்சொல்லின் அர்த்தத்தை முன்வைத்தார். ‘மதங்களுக்கு அப்பால், கிராம மக்களால் உருவாக்கியச் சில சடங்குகளையும் மரபுகளையும்தான் நாட்டார் வழக்காற்றியல் என்று சொல்லப்படுகிறது’ என உரையை ஆரம்பித்தவர் எம்மதத்தின் தழுவலும் சாயலும் தொடர்பும் இல்லாதப் பழக்கம் அவை என்றார். remove the resistance என்று சொல்லுவர். உதராணத்திற்கு பூமிக்குள் இருக்கும் ஒரு இரும்பைத் தோன்றி எடுத்து மண்ணைத் தட்டி பார்த்தால் மேலே துரு பிடித்திருக்கும். எல்லாத் துருவையும் அகற்றி பார்த்தால் அதனுள் இரும்பு ஒன்று இருக்கும். அதுபோல் நம்முடைய வாழ்க்கையில் நாட்டார் வழக்காக சில சடங்குகளை இன்றுவரைக்கும் கடைப்பிடித்து கொண்டே வருகிறோம். அவற்றின் உண்மையான அர்த்தத்தின் மீது துருவேறிக்கிடந்தாலும் வழக்கத்தினால் பழக்கமாக்கிக்கொண்டுள்ளோம்.
சு.வேணுகோபால் அவர்களின் உரை வழி, நாட்டார் மரபு என்பது வேறு; எழுத்து மரபு என்பது வேறு என அறிய முடிந்தது. நாட்டார் மரபு ஒரு முந்தைய தலைமுறையினரிடமிருந்து புதிய தலைமுறைக்கு ஐம்புலன்களின் உதவியோடு வாழையடி வாழையாகத் தொடர்கிறது. கண்கள் வழியாகவோ அல்லது செவிகள் வழியாகவோ அல்லது பேச்சுவழியாகவோ பார்த்தும் அல்லது கேட்டும் அல்லது சொல்லியும் சடங்குளாகவும் ஒரு மரபாகவும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வாழ்வியலிலும், கலாச்சாரத்திலும், கட்டுமானத்திலும் திருவிழாக்களிலும் உறவுமுறையிலும் இது தொடர்கிறது என்பதை அறிய முடிந்தது.
முதலில் அவர், நாட்டார் வழக்காற்றியல் மரபில் முன்வைத்தது பிடிமண் எடுக்கும் மரபைதான். இம்மரபு எல்லா தமிழர் சமூகத்தினராலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு செடி பிடுங்கும்போது, அதைப் பிடி மண்ணோடு பிடிங்குவதைப் போல் ஒரு மனிதன் வேறு எங்கு குடிபெயர்ந்தாலும், அவனோடு கொண்டு செல்வது இந்தப் பூர்வீக பிடிமண்ணைதான். தொடர்ந்து, பூர்வீகக் கோயில் பிடிமண் எடுத்து வந்து, புதிதாகக் குடியேறிய இடத்தில் வைத்து கொள்வதும் அல்லது அதைவைத்து புதுக்கோயில் கட்டவும் பயன்படுத்துவர். பூர்வீகக் கோயில் பிடிமண் எடுத்து வந்து, புதிதாகக் குடியேறிய இடத்துக்கு எடுத்து செல்வதும் அல்லது அதைவைத்து புதுக்கோயில் கட்டவும் பயன்படுத்துவர். அதற்கு ஒரு உதாரணத்தையும் முன்வைத்தார் சு.வேணுகோபால். ‘150 வருடத்திற்கு முன் திண்டுக்கல்லில் குடியேறிய ஒரு சமூகம், 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும்தான் 100 கீலோமீட்டர் தள்ளியுள்ள கோவிலுக்குச் சென்று வணங்குவர். மாமன், மைத்துணன் மற்றும் அக்காளுக்குத் துணிமணி நகைகள் எடுத்து கொடுப்பார்கள். அக்கா முறைக்கெனச் சில சடங்குகளும் உண்டு. போக்குவரத்து வசதி இல்லாத காலகட்டத்தில் மாட்டு வண்டியில் சுமார் 1 மாதம் இவ்விழாவுக்காக ஒதுக்கி வைப்பார்கள். திரும்பி வரும்பொழுது, சில மக்கள் 25 ஆண்டுக்கு ஒரு முறை கோவிலுக்குச் செல்வதால், அக்கோவிலிருந்து பிடிமண் எடுத்து வந்து அவர்கள் வசிக்கும் இடத்தில் வைத்துக்கொள்வர் ‘என்றார்.
சங்க இலக்கியக் காலங்களிலிருந்து இன்றுவரைக்கும் நாட்டார் மரபு கட்டுமானத் துறையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என விரிவாக விளக்கினார் சு.வேணுகோபால். தமிழக மாவட்டங்களில் உள்ள சில கிராம மக்கள், வீடு கட்டுவதற்கு நிலங்களைத் தேர்ந்தெடுக்க இம்மரபைதான் கையாளுகின்றனர். மண்ணின் நிலத் தன்மையையும் உறுதியையும் தெரிந்து கொள்ள இம்மரபு துணைப்புரிகிறது. அதற்கும் உதாரணம் சொன்னார். ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் குழி அல்லது கல் பாவெட்டு 1×1 அடி தோண்டி தண்ணீரை நீரப்புவர். அந்நிரப்பிய நீரில் ரோஜா அல்லது மல்லிகை பூ போடுவர். அப்படி போட்ட ஒரு பூ மையத்தில் நின்றும் ஊற்றிய நீரும் வற்றிப்போகமாலும் இருந்தால் வீடு கட்ட ஏற்புடைய நிலம் என அறிவர். அதற்கு நேர்மறையாக இருந்தால் நிலம் பொதுபொதுவாக இருப்பதாக அர்த்தம். பொதுபொது நிலத்தில் கட்டிய கட்டிடம் மண்ணுக்குள் இறங்கிய சம்பவமும் உண்டு.’ என்றார். சு.வேணுகோபாலின் பலம் சங்க இலக்கிய அறிதல்தான். கால்கோல் விழா என்கிற இம்மரபு சங்க இலக்கியப் பாடல் நற்றிணையில் சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டினார். அரண்மனை கட்டுவதற்குக் கால்கோல் விழா நடத்தப்படுகிறது. 20 அடி நீளமாகவும் நேராகவும் உள்ள முங்கீல் கட்டி, 20 அடி வெட்டுக்கு ஒரு மூங்கில் கயிறு என ஊன்றியிருப்பர். சூரிய ஒளி இரண்டு மூங்கிலின் மேல்பட்டு, ஒரே நேர் கோடாக வரும்பொழுது, குழியைத் தோண்டி, அந்த இடத்தில் அரண்மனைக் கட்டுவதற்குக் கால் கோல் விழா நடத்துவார்களாம். இப்பண்பைதான் தஞ்சாவூர் கிராம மக்கள் இன்றும் குழி தோண்டி வீடு கட்டும் வழக்கமாக வைத்துள்ளனர் என சங்க காலம் முதல் மக்களிடம் தொடர்ந்து வரும் பண்பைச் சுட்டிக்காட்டினார்.
திண்ணையோடு தோன்றிய நாட்டார் மரபைத் தன் வாழ்க்கை அனுபவத்தோடுக் கூறினார் சு.வேணுகோபால். அக்காலத்திலிருந்து இன்று வரைக்கும் திண்ணை முன்பின் அறிமுகமில்லாத நபருக்குத் தற்காலிகமாகத் தங்கும் இருப்பிடமாகவே செயல்பட்டு வந்துள்ளது. பொதுவாக, கிராம வீட்டில் வெளிபுறம் உட்புறம் என இரு திண்ணை இருக்கும். உட்புறம் திண்ணை வீட்டின் உரிமையாளருக்காகக் கட்டப்பட்டது. இரும்பு விற்று வந்தவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் என முன்பின் தெரியாதவர்கள் வெளிபுறத் திண்ணையில் தங்கிவிட்டுச் செல்வர். இரவு நேரத்தில் யாராவது வந்து சாப்பிட்டும் தூங்கியும் செல்வர். இத்திண்ணையின் மூலம் மறைமுகமாக நாம் அறிந்து கொள்வது தமிழர்களின் விருந்தோம்பல் என்ற மரபையும்தான். நன்றி சொல்லும் விதமாக மூன்று வெற்றிலையும் பாக்கையும் வீட்டின் உரிமையாளருக்காக மடக்கி வைத்து செல்லும் திண்ணை நட்பு ஒரு மதிப்பிற்குரிய உறவாகும்.
ஊருணி நீர்நிறைந்த தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
என்ற திருக்குறளில் திருவள்ளுவர் ஊர் குளத்தின் பயன்பாட்டையும் உயர் ஞானம் பெற்றவரையும் ஒப்பிடுவது போல் சு. வேணுகோபல் அவர்கள், ஊர் குளத்தோடு சேர்ந்துள்ள நாட்டார் மரபை தெள்ள தெளிவாக ஒப்புவித்தார். அவரிடம் எல்லாவற்றுக்கும் உதாரணங்கள் இருந்தன. அதுவே ஒரு கூற்றை ஆழமாக உள்வாங்க உதவியது. “சிவகங்கை என்ற மாவட்டத்தில் மூன்று குளம் இருக்கிறது. அம்மூன்று குளத்துக்கும் மூன்று தன்மை உள்ளது. ஒரு குளம் குடிநீருக்கானது. குடிநீருக்கான குளத்தில் யாரும் கால் வைக்க மட்டார். கைக் கால் முகம் கழுவ மாட்டார். குடிநீர் குளத்தை யாருமே அசிங்கம் படுத்த மாட்டார்கள். அடுத்த குளம் ஆடு மாடு அருந்தவும் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது குளம் நீர் நிலை விவசாயத்துக்கும் என மூன்று குளமும் எல்லா ஊரிலும் இருக்கும். ஊர் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உயிரனங்களுக்கும் உருவாக்கப்பட்டதுதான் இக்குளம். அக்காலத்தில் காவலாளிக்கு கல்லும் சோளமும் கொடுப்பார்கள். இக்காலத்தில் மழைக் காலங்கள் குறைவால் குளங்களில் நீர் நிறையாது. காவலாளிகளும் இல்லை. இந்த மரபு நேற்று வரைக்கும் கடைப்பிடிக்கப்பட்டது” என்றார்.
கிராம மக்களின் வாழ்வியல் இயற்கையோடு பின்னப்பட்ட ஒரு நாட்டார் மரபு என அவர் உரையின் வழி அறிய முடிந்தது. அறிவியல் வளர்ச்சி அடையாத காலத்தில் இயற்கையை வைத்து வானிலையைக் கண்டு அறிந்தனர். அவ்வறிவு விவசாயத் துறையிலும் பல விதங்களில் வேரூன்றியிருக்கிறது. அதேசமயம் இந்நாட்டார் மரபு மனிதரையும் மற்ற உயிரனங்களையும் இயற்கையையும் ஓன்றாக ஒத்து வாழ கற்றுக் கொடுக்கிறது. வயலில் நெற்கதிர் அறுக்கும்போது கீழே கொட்டிய நெற்மணிகளை எடுக்காமல் அக்கதிர் குருவிக்கும் எறும்புக்கும் உணவாக விட்டுவிடும் வழக்கமும் உள்ளது. பயிர்களைச் செழிப்பாக வளர செய்த மழைக்கு நன்றி சொல்லும் விதமாகக் கிராம மக்களால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், குப்பைக்கும் விளக்கு வைப்பர். ஏனென்றால் அதை உரமாகவும் மற்றும் அழுக்கு தெய்வமாகவும் நோக்குகின்றனர்.
நாட்டார் வழக்காற்றியல் தலைப்பின்வழி கிராமப் புறங்களின் உறவுமுறை, குறிப்பாக தாய்மாமன் உறவு என்ற ரத்த பந்தத்தை சு.வேணுகோபால் சொன்னது சுவாரசியமானது. தாய்மாமன் என்றொருவர் அக்கா மகளின் வாழ்க்கையோடும் சடங்குகளோடும் இணைந்துள்ளார் என மிக ஆணித்தரமாகக் கூறலாம். அக்கா மகளின் வாழ்க்கைத் தடம் மாறி போகாமல் இருக்க, அவளைச் சார்ந்த எல்லா காரியங்களும் தாய்மாமா சம்மத்தோடும் ஆசீர்வதத்தோடும்தான் முடிவெடுக்கப்படுகிறது. இதன்மூலம், தாய்மாமன் என்ற உறவின் ஆணிவேர் ஆழத்தையும் அதன் பால் உள்ள மதிப்பையும் புரிந்து கொள்ளலாம்.
நடுகல் வைக்கும் முறை, சுமைதாங்கி கல் என அவரது அனுபவமும் அறிவும் விசாலமானது. இறப்புக்கானச் சடங்குகளையும் இந்நாட்டார் மரபு வழி பின்பற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். கொங்கு மண்டலத்தில் வெள்ளாளர் சமூகம் கணவர் இறந்துவிட்டால் பெண்களின் வாழ்க்கை தேவைக்காக ராட்டையைக் கொடுக்கக் கூடிய ஒரு வழக்கம் உள்ளது. ராட்டை ஒரு நூல் கோக்கும் தொழில். பெண்ணின் சகோதரர் அல்லது உறவினரோ அவற்றை விற்று பணம் தருவர். கைம்பெண் நட்ட பயிரைக் குறிப்பாக நிலக்கடலையோ, ராகியோ, சோளத்தையோ யாரும் திருடமாட்டார்கள். கைம்பெண் தோட்டம் என்று தெரியாமல் வெளியூர் திருடன் திருடினால் ஒழிய, உள்ளூர் திருடன் அதை செய்ய மாட்டார்கள் என்றார்.
இவ்வாறாக, சு.வேணுகோபாலின் உரை பல தகவல்களுடன் விரிந்து சென்றது. இவ்வுரையைக் கேட்டப்பின் எனக்குக் கிடைத்தப் படிப்பினைகள் விலை மதிக்கமுடியாதவை. குறிப்பாக, பிடிமண், விவசாய மரபு, கார்த்திகை விழா, தாய்மாமன் உறவு, பிடிக்கயிறு என்கிற மரபின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன்.
நான் பிறந்ததது தோட்டமாக இருந்தாலும் வளர்ந்தது புறநகர் பட்டணத்தில். நவீன வளர்ச்சிகளையும் நிறைய தொழிற்சாலைகளையும் கொண்ட நகராமகவே விளங்கியது. என்னுடைய நண்பர்கள் வட்டாரமும் அண்டை அயலாரும் பிற இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் நண்பர்களை விட, பிற இன நண்பர்கள் அதிகம் எனச் சொல்லலாம். அம்மாதிரியானச் சூழலில் வளர்ந்ததால், நாட்டார் மரபைப் பற்றி தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தவறிவிட்டேன். கண் இருந்தும் ஒரு குருடனைப் போல இம்மரபைப் பெற்றோர் பின்பற்றுவதைப் பார்த்தும், ஓர் அறியாமை நிலையிலேயே இருந்துவிட்டேன். நானும் என் பெற்றோரும் பிறந்த தோட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் பயணப்படகு (Ferry) ஏற வேண்டும். அப்படி பயணப்படகு விட்டு இறங்கி மண்ணைத் தொட்டவுடன், என் பெற்றோர் மண்ணைத் தொட்டு வணங்குவர். தோட்டக் கோயிலிருந்தும் திரும்பி வரும்பொழுதும் கொஞ்சம் கோயில் மண்ணையும் அவ்வூர் மண்ணையும் எடுத்து வருவர். சில நேரங்களில் குறுகியச் சமய அறிவோடு மூட நம்பிக்கை எனவும், கடிந்தும், தள்ளியும் நின்று உள்ளேன்.
தோட்டத்திற்குப் போகும் வழியில் செக்கின்சான்(sekinchan), சுங்கைப் பெசார் (Sungai Besar) உள்ள வயல்வெளியைக் காட்டும்போதும், நான் வியப்பாகப் பார்த்தேனே ஒழிய, அது என் மூத்தோர் நாட்டாரின் மரபு என்பதனை உணர்ந்துகொள்ளவில்லை. என் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் 3 பேருக்குத் தேவையானக் காய்கறிகளை நட்டு வைத்துள்ளனர். அவப்போது, செழிப்பாக இருக்கும் மிளகாய், கத்திரிக்காய், வெண்டை போன்றவற்றை விதைக்காக விட்டு வைத்து இருப்பர். அப்பொழுது அதைக் கிண்டல் செய்தேனே தவிர, அம்மரபைப் புரிந்து கொள்ள தவறி விட்டேன். கார்த்திகை சமயத்தில் கொல்லையிலும் குப்பையிலும் விளக்கு வைக்கனும் எனச் சொல்லும்போதும் தடுத்தும் கேலியும் செய்துள்ளேன். என் வீட்டில் பெண் பிள்ளைக்குப் பெயர் வைப்பதும் முதல் எல்லா சடங்குகளையும் செய்வது தாய்மாமன்தான். பெற்றவர்கள் நீங்கள் இருக்கும் பொழுது ஏன் மாமாவை பெயர் வைக்கச் சொன்னீர்கள் என நொந்தும் உள்ளேன். ஆனால் சு.வேணுகோபால் மிகத் தெளிவாக தாய்மாமன் மதிப்பையும் உரிமையும் பற்றி விளக்கினார்.
என் பெற்றோர் மலேசியாவில் பிறந்தவர்கள், தமிழ்நாட்டுக்குச் சென்றதுமில்லை; எந்தவொரு தொடர்பும் இல்லை. தோட்டத்தில் கற்றுக் கொண்ட இம்மரபுகளைப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் அச்சூழல்கேற்ப இன்னும் பின்பற்றுகின்றனர். பேருந்து பயணத்தின் போது பின் இருக்கையில் அமர்ந்த ஒரு தோழியைப் போல, ஒருவேளை நானும் தோட்டத்தில் பெற்றோரோடு பால்மரம் சீவ போயிருந்தால், தோட்டக் குட்டையில் மீன் பிடித்திருந்தால்; கருநாகப் பாம்பு விரட்ட ஓடியிருந்தால் அத்தோட்டத்தோடு காற்றோடுக் காற்றாகக் கலந்திருக்கும் இம்மரபைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமைந்திருக்கும்.
இவ்வுரை என்னுடைய அறியாமை நீக்கி, பெற்றோரின் நம்பிக்கையின் மேல் ஒரு தனி மரியாதையும் மதிப்பும் கூட்டியுள்ளது. படிக்காவிட்டாலும் பட்டம் பெறாவிட்டாலும் நாட்டார் மரபைப் புரிந்து கொண்டதிலும் கடைப்பிடிப்பதிலும் என்னைவிட அவர்கள் அறிவுஜீவிகளே. அடுத்த கார்த்திகைக்கு அம்மா விளக்கு கொல்லையிலும் குப்பைத்தொட்டி அருகிலும் வைக்கலாமா எனக் கேட்க ஆவலாக உள்ளேன்.
மிகவும் தெளிவான பதிவு
வாழ்த்துகள், மிக நேர்த்தியாக உங்களின் உள்வாங்களைப் பதிவு செய்துள்ளீர்கள். தொடருங்கள்..
Valthukkal. Sirappaana, thelivaana pathivu.