தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய நாயகன் சி.சு.செல்லப்பா

சி.சுசெல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற பெருங்கனவுதான் ‘எழுத்து’ இதழ். 1933-ல் தொடங்கப்பட்ட ‘மணிக்கொடி’ சிற்றிதழ் அல்ல. இலக்கிய இதழ். அதில் எழுதிய நான்கைந்து சிறுகதை ஜாம்பவான்களால் அதற்கொரு அந்தஸ்த்து உருவாகியது. நவீன தீவிர செயல்பாட்டால் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த ஜாம்பாவான்கள் கூட்டத்தின் மேல் செல்லப்பாவிற்கு அலாதியான மதிப்பு இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய அவர்களது கூர்மையான பார்வையால் அவர்கள் சூடிக்கொண்ட கிரீடம் என்பதை செல்லப்பா அறிந்திருந்தார்.

மணிக்கொடிக்குப் பின்னர் இருபதாண்டுகளில் ஏன் நல்ல படைப்பாளிகள், நல்ல படைப்புகள், நல்ல கவிதைகள், நல்ல படைப்புச்சிந்தனைகள் தீவிரமாக உருவாகவில்லை என்ற கேள்வியை செல்லப்பா தனக்குள்ளே கேட்டுக்கொண்டார். வியாபாரநோக்கும் பிடித்ததைக் கொடுப்பது என்ற விற்பனைத் தந்திரத்திலும் கரைந்திருந்தவர்கள் உண்டாக்கிய வெற்றிடத்தை உயிர்ப்புடையதாக்கவேண்டும் என்ற வேட்கையுடன் செல்லப்பா ‘எழுத்து’ இதழைக் கொண்டுவந்தார்.

அவ்விதழுக்கு இது 60பதாவது ஆண்டு. பாதையற்ற கரடுமுரடான பிரதேசத்தில் செல்லப்பா என்ற தனிமனிதன் இலக்கிய வறட்சியே எங்கும் வியாபித்திருந்த சூழலில் வறுமை தன்னைப் பிடுங்கிக்கொண்டிருந்த போதிலும் அதனைப் பொறுட்படுத்தாது லட்சியவேட்கையோடு எளிய வழிமுறைகளில் அழகிய மாற்றுச்சூழலை உண்டாக்கிய கனவின் வடிவத்தை மட்டும் இங்குச் சொல்ல முயல்கிறேன். செல்லப்பாவை சுதந்திரப் போராட்ட வீரராக, நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக கைவினைக் கலைஞராக, மொழிபெயர்ப்பாளராக, விமர்சகராக, கவிஞராக, இதழாசிரியராக எத்தனையோ விதங்களில் பங்களிப்பைச் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பி., வரிசையில் செல்லப்பாவை சிறுகதையாசிரியராக விமர்சகர்கள் முன்வைப்பதில்லை. எனது ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இவர்கள் எழுத முடியாத உலகின் பல உச்சமான கதைகளை எழுதியிருப்பதாக எடுத்து வைத்து விவாதித்திருக்கிறேன். விமர்சனத்துறையில் ஒரு ஆளுமையாளராக உருவெடுத்த க.நா.சு.க்கு செல்லப்பாவின் கதை உலகம் குறித்து நல்ல அபிப்பிராயம் கிடையாது. செல்லப்பா எடுத்துக்கொண்ட உலகை அணுகி அதன் நுட்பங்களை உணர்ந்து கொள்ள முயன்றதில்லை. ‘வாடிவாசல்’ கதை உலகிற்கு நிகராக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். விமர்சகர்கள் அந்த உலகை பொருட்படுத்தவில்லை. அறியக்கூடவும் இல்லை. என்னைப் பொறுத்தளவில் ந.பி., மௌனி, கு.ப.ரா. போன்றவர்கள் எழுதமுடியாத நல்ல கதைகள் செல்லப்பா எழுதியிருக்கிறார் என்பது என் வாசிப்பின் வழி நான் பெற்றுக்கொண்ட உண்மை. க.நா.சு., வெங்கட்சாமிநாதன், சுந்தரராமசாமி முதலியோருக்கு செல்லப்பா காட்டிய குடியானவர்களின் உலகம் தெரியாததாலே அக்கதைகள் முன்வைத்த தனித்துவ பண்பாட்டு இழைகளும் நுட்பங்களும் இவர்களது ரசனைக்கு ஒத்துவராமல் போய்விட்டன என்பது என் எண்ணம். செல்லப்பா முக்கியமான படைப்பாளியாக இருந்தும் அவரது தலையாய பணி ‘எழுத்து’ என்ற இதழ்வழி அவர் உருவாக்கிய இலக்கிய இயக்கத்தில் அமைந்துவிட்டது.

1959 ஜனவரியில் ‘எழுத்து’ முதல் இதழைக்கொண்டு வந்தார். இதற்கு முன் ஜனரஞ்சகத்தோடு கூடிய இலக்கிய இதழ்கள் வந்திருந்தாலும், சிற்றிதழ் என்ற இலக்கியப்பூர்வமான மரபு செல்லப்பாவின் இதழ்வழி தோன்றியது. இக்காலத்தில் ‘சரஸ்வதி’ ‘தாமரை’ இதழ்கள் வந்தன என்றாலும் முற்போக்கு சிந்தனைகளை மட்டுமே இலக்கியத்தின் வழி கொண்டுசெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கின. மானிட பிரச்சனைகளுக்கான விடைகளை, ஆசாபாசங்களை சகல திசைகளிலும் சென்று தேடுவதை படைப்புச் சுதந்திரமாகக்கொண்டு மேடைகளை ஏற்படுத்தித்தந்த இதழ்களைத்தான் சிற்றிதழ் மரபு என்கிறோம். ஒன்றின் போதாமையிலிருந்து மற்றொரு இதழ் உருவெடுக்கிறது. தமிழ்ச் சிற்றிதழ் வரலாறு இப்படியானதுதான். அதன் தலைவாசலாக உருவெடுத்தது எழுத்து இதழ்.

செல்லப்பா நவீன இலக்கியத்தில் ஒரு விமர்சன மரபைத் தோற்றுவித்து எதிர்கால இலக்கியத்தைச் செழுமைப்படுத்தவேண்டும் என்ற திட்டத்தோடு எழுத்து இதழைத் தொடங்கினாலும் இலக்கியப் படைப்புகளுக்கான களமாகவும் விரிந்தது. 2000 பேரை எட்டினாலே போதும். அதிலிருந்து விழுதுகள் தோன்றி தமிழ்ப்பரப்பெங்கும் வேர் ஊன்றும் என்றுதான் 50 நையா பைசாவிற்கு மாத இதழாகக் கொண்டுவந்தார். பத்தாண்டுகள் தொய்வு இல்லாமல் கொண்டு வந்தார்.

என்றாலும் ஆரம்பத்தில் 300 சந்தாதாரர்களைத் தாண்டவில்லை. இந்த 300 பேர் சந்தாவும் குறைந்து வந்ததும் ஒரு வரலாறு. கிட்டத்தட்ட 3000 பக்கங்களில் அதுவும் A4 தாள் அளவில் இலக்கிய விசாரம் செய்யமுடிந்திருக்கிறது. விளம்பரம் இல்லாமல் முழுக்க முழுக்க செல்லப்பா என்ற தனிமனிதன் உழைப்பால் நவீன தமிழ் இலக்கியத்திற்கு செய்திருக்கும் கொடை இது. இந்த எழுத்து பணிக்காக செல்லப்பா தன் துணைவியாரின் மூக்கில் இருந்த கடைசி குண்டுமணியையும் பறித்தவர் என்று சொல்வதில்கூட தவறு இருக்காது. முழுக்க 11 ஆண்டுகள் 12ஆம் ஆண்டில் ஒரு இதழுமாக கொண்டுவர முடிந்தது. இந்த இதழ்களில் நவீன இலக்கியத்தின் பன்முகமான படைப்புகள், செய்திகள், வரலாறுகள், முன்னோடிகளின் சாதனைகள் என கொட்டிவைத்திருக்கிறார். இது பற்றியெல்லாம் பகுத்துக்கொண்டு விலாவாரியாக இப்போதைக்குச் சொல்லப்போவதில்லை.

செல்லப்பா என்ற படைப்பாளி ‘எழுத்து’ என்ற இதழ் மூலம்சி.சு 04 நவீனத் தமிழ் இலக்கியச் சூழலை மேன்மையான திசையில் மாற்றியமைத்த மகத்தான காரியம் குறித்து மட்டுமே இதில் சொல்ல நினைக்கிறேன். எழுத்து நின்று போயிருக்கலாம், ‘இலக்கிய வட்டம்’ ‘நடை’ ‘பிரக்ஞை’ ‘ஞானரதம்’ ‘வானம்பாடி’ ‘அஃ’ ‘ழ’ ‘யாத்ரா’ ‘வனமாலிகை’ ‘இலக்கிய வெளிவட்டம்’ ‘மனிதன்’ ‘சிகரம்’ என்று ஒரு சிற்றிதழ் சூழல், ஐம்பதாண்டு காலம் தமிழில் கோலாச்சியதற்கு எழுத்து இதழ்தான் காரணம். இச்சிற்றிதழ்கள் நீண்ட இலக்கியப்பயணம் கொள்ள முடியாமல் சில ஆண்டுகளிலேயே பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து போய்விட்டாலும் அவை இலக்கியத்திற்கு ஆற்றியிருக்கும் காரியங்கள் அளப்பரியவை. இவை ஒவ்வொன்றும் செல்லப்பாவின் ‘எழுத்து’ இயக்கத்திற்கு மரபு அறாமல் செய்திருக்கும் காணிக்கைகளாகத்தான் எனக்குத் தெரிகின்றன. எழுத்து உண்டாக்கிய கனவின் பொறியில் தொற்றி சுடர்ந்தவை இச்சிற்றிதழ்கள். வெல்ல முடியாத ராட்சசத்தனமான இலக்கிய வியாபாரச்சூழலைத் தனிமனிதனாக நின்று எழுத்து என்ற இதழ் மூலம் வீழ்த்தி மகத்தான இலக்கிய திருப்பு மையத்தை ஏற்படுத்திய செல்லப்பாவை, சிற்றிதழாளர்கள் தங்கள் படையின் மாவீரனாகவே காண்கின்றனர்.

எழுத்து இதழின் முதல் சந்தாதாரர்தான் பின்னாளில் – தமிழ் இலக்கிய சிற்றிதழ் குழுச்சூழலிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டுந்த ‘சுபமங்களா’ இதழின் ஆசிரியர் கோமல்சுவாமிநாதன். செல்லப்பா இந்த முதல் சந்தாதாரருக்குத் தன் நன்றியையும் தெரிவித்திருக்கிறார். ஒரு புனைகதையாளராக நிலைபெற்ற சுந்தர ராமசாமிக்கு அவருள் இருந்த கவிதை ஆற்றலுக்கு வழி அமைத்துத்தந்தது எழுத்து இதழ். தருமு.சிவராமு என்ற கவியாளுமையை தமிழகத்தில் வேரூன்றச் செய்தது. சி.மணியைக் கவிஞனாக வளர்த்தெடுத்தது. கல்விப்புலத்தில் இருந்து வந்த சி.கனகசபாபதியைத் தேர்ந்த திறனாய்வாளர் ஆக்கியது. வெங்கட்சாமிநாதன், ந.முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தன், தி.சோ.வேணுகோபால் என வீரியம்மிக்க புதியவர்கள் எழுத்துவழிதான் தோன்றினார்கள். மணிக்கொடி எழுத்தாளரான ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்ய இடமளித்தது. புதுக்கவிதை என்ற இயக்கமும் புதிய விமர்சன மரபும் எழுத்து இதழினாலே உருவானது. ‘எழுத்து’ இதழ் தமிழ்ச்சூழலில் தோன்றாமல் இருந்திருந்தால் இம்மாதிரியான காரியங்கள் தோன்றாமலே போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.

பெரும் விவாதத்தை உருவாக்கிய க.நா.சுப்பிரமணியத்தின் ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ கட்டுரையில்தான் இரு இளைஞர்களை மிக முக்கியமான வருகையாகக் குறிப்பிட்டார். எழுதிக்கொண்டிருந்த பலருக்கும் ஆதங்கம், பலரை படைப்பாளிகள் அல்ல என்று நிராகரித்ததன் கோவம்; மொத்தமே சிறுகதைத்துறையில் எட்டுப்பேர்தானா? அதில் இப்பொழுதுதான் எழுத வந்திருக்கும் சுந்தரராமசாமியும் ஜெயகாந்தனும் முக்கியமானவர்களா? இப்படியான விவாதம் எல்லாம் எழுத்துவில் நடந்தேறியது. க.நா.சு. 1959-ல் குறிப்பிட்ட இரு இளைஞர்கள் பிற்காலத்தில் பெரும் ஆளுமையாளர்களாக உருவெடுத்தார்கள். இந்த விவாதத்தில் பங்கெடுத்தவர்களுள் ஒருவர் கஸ்தூரிரங்கன். அவரே பின்னாளில் ‘கணையாழி’ இதழைக்கொண்டு வந்தார். இப்படி பல காரியங்கள் நிகழ ‘எழுத்து’ காரணமாகியது.

இதேபோன்று நாவல் விவகாரத்தில் மூவரை மட்டும் நாவலாசிரியர்கள் என்று சொல்லி கல்கி முதல் மாயாவி வரை அனைவரையும் நிராகரித்த கட்டுரைக்கு நிரம்ப எதிர் விமர்சனங்கள் வந்தன. அதேசமயம் இவ்விமர்சனத்தைத் தொடர்ந்து நாவல் போக்கில் பெரிய மாற்றங்களும் நிகழ்ந்தன. ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘தலைமுறைகள்’, ‘புத்ர’, ‘அம்மா வந்தாள்’, ‘வேள்வித் தீ’, ‘வாசவேச்வரம்’, ‘பசித்தமானுடம்’ நாவல்களை எழுதிய நாவலாசிரியர்கள் க.நா.சு.வின் சவாலை ஏற்று புதிய போக்கை உருவாக்கினர். இந்த விவாத சூட்டில் கிட்டவும் எட்டவும் நின்று கவனித்தவர்கள்தாம் இவர்கள்.

செல்லப்பா, ஒரு காலத்தில் வீரியத்தோடு எழுதிய மணிக்கொடி படைப்பாளிகளுக்கு ஒரு களம் அமைத்துத் தந்த மணிக்கொடியாளர்களின் இரண்டாம்கட்ட சாதனை என்ற ஒரு வரலாற்று நிகழ்வை உண்டாக்கிக்காட்ட விரும்பினார். இதற்காக வ.ரா. கு.ப.ரா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, பி.எஸ்.ராமையா, சங்கு சுப்ரமண்யம் இவர்களின் அபூர்வமான படைப்புகளைத் தேடி கண்டடைந்து மறு வெளியீடு செய்தார். இவர்களுக்கு சிறப்பு மலர்களைக்கொண்டு வந்தார். இவர்களின் சாரமான இலக்கிய நோக்கங்களை வெளியிட்டு அடுத்தத் தலைமுறையினருக்கு உரமாக முன் வைத்தார். எழுத்து வழி மணிக்கொடிக்காரர்களின் புதிய சாதனைகளுக்கான இடமாக அமையும் என்றிருந்த ஆசை நிறைவேறவில்லை. நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டதாகவே நினைத்தார். அவர்களிடம் படைப்புக்கனவு மங்கிப்போய்விட்டிருந்தது. ந.பி.; ந.சிதம்பர சுப்பிரமணியன், க.நா.சு. மட்டுமே அதிக பங்களிப்பு செய்தனர். இதில் ந.பி. மட்டும் கவிதையில் சாதித்தார். பின்பு க.நா.சு. எழுத்து இதழிலிருந்து ஒதுங்கி செயல்பட்டார். தி.ஜ.ரா., சிட்டி, பாராங்குசம், பி.எஸ்.ராமையா இப்படி சிலர் எழுத்துவில் தலைகாட்டினர். ஆனால் யாரும் சோபிக்கவில்லை. இதனை சுயமதிப்பீட்டிற்கும் உள்ளாக்கினார். லா.ச.ராமசாமிருதம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், கிருத்திகா, ஆர்.சூடாமணி, ரகுநாதன், ஜ.தியாகராஜன் (அசோகமித்திரன்) என நன்றாக எழுதிக்கொண்டிருந்தவர்கள் ஓரோர் படைப்புகளைத் தந்து ஒதுங்கி வேறு இதழ்களில் தீவிரமாக இயங்கினர். ஆனால் செல்லப்பாவே எதிர்பாராத வகையில் புதிய இளைஞர் பட்டாளம் எழுத்து என்ற ஒரு புள்ளியில் சங்கமமாகி கைகோர்த்தது. காலம் வேறொரு பாய்ச்சலுக்கு எழுத்துவின் வழி தயாராகிவிட்டிருந்தது.

நகுலன், வைதீஸ்வரன், தருமுசிவராமு, வெங்கட் சாமிநாதன், சி.மணி தி.சோ.வேணுகோபாலன், ஹரிசீனிவாசகன் (சார்வாகன்) சி.கனகசபாபதி, எம்.பழனிசாமி, ந.முத்துசாமி இப்படியொரு புத்தம் புதிய இளைஞர் பட்டாளம் புகுந்து எழுத்துவில் கோலோச்சினர். செல்லப்பா விரும்பியது மீண்டும் ஒரு மணிக்கொடி சகாப்தம். நிகழ்ந்தது எழுத்துவின் இளைஞர் சகாப்தம். பின்னாளில் ‘எழுத்து கோஷ்டி’ என்று இடதுசாரிகளால் விமர்சிக்கவும் பட்டனர்.

நகுலனின் ‘மாதவையா காட்டும் யதாத்த உலகு’, தருமுசிவராமுவின் ‘சொல்லும் நடையும்’, வெங்கட்சாமிநாதனின் ‘பாழையும் வாழையும்’, முருகையனின் ‘கவிதைக்கலை’ என புதியவர்களின் கட்டுரைகள் வரத் தொடங்கியதும் எழுத்துவின் பாணியே மாறியது. காலம் எழுத்துவை தனக்கானதாக வடிவமைத்துக்கொண்டது. புதுக்கவிதையும் விமர்சனத்துறையும் இதழுக்கு இதழ் சூடுபிடிக்கத் தொடங்கியது.

என்றாலும் செல்லப்பாவின் ஏக்கப்பெருமூச்சு எழுத்துக்காலம் முழுக்கவே இருந்தது. பாரதி, உ.வே.சாமிநாதையர், டி.கே.சி., ஆ.மாதவையா, பி.ஆர்.ராஜமய்யர், வையாபுரிபிள்ளை போன்ற எண்ணற்றோரின் சாதனைகளை எழுத்துவில் விவாதப் பொருளாக்கினார். சுதேசமித்திரன், மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கலைமகள் என 25 ஆண்டுகளுக்கு முன் வந்த இதழ்களில் பலரால் எழுதப்பட்ட இலக்கியம் சார்ந்த அழகியல் பார்வைகளைத் தேடித்தேடி எழுத்துவில் தந்திருக்கிறார். பெரிய அளவில் பேசப்படாத தி.ஜ.ரா. போன்றோரின் கட்டுரைகளில் வெளிப்பட்ட அழகியல்பார்வை இன்றும் புதிதாக இருக்கின்றன. பாரதி, மணிக்கொடி கால படைப்பாளிகள், தமிழறிஞர்களின் பணிகளை மெச்சத்தக்க விதத்தில் தொடர்ந்து எழுத்துவில் வெளியிட்டார். இதை தனது கடமைகளில் ஒன்றாகக் கருதினார். எழுத்துவில் எழுதாமல் அறுபதுகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் இதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவர்களது பேச்சு எழுத்துவில் அடிபட்டுக்கொண்டே இருந்தன. இந்தப் பேச்சுக்கு இடம் கொடுத்தார். இவர்களது படைப்புகள் மீதான விமர்சனங்களை எழுத்துவில் வெளியிட்டார்.

ஒவ்வொரு இதழிலும் செல்லப்பாவின் பங்கும் உழைப்பும் அலாதியான விதத்தில் வெளிப்பட்டன. ‘ராமாமிருதத்தின் கலைத்திறன்’, ‘மௌனியின் மணக்கோலம்’ இப்படியான கனமான கட்டுரைகளையும் புரூக்ஸ்மித், ஜேம்ஸ்ஜாய்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே என பலரின் கதைகளை மொழி பெயர்த்தும், எஸ்ரா பௌண்டு, செகாவ், ஆஸ்டஸ் ஹக்ஸ்லி மோரியாக், டி.எஸ்.எலியட், ஜோசப் கான்ராடு, ரேமாண்ட் ஷுமி, க.நா.சு, கு.ப.ரா, ந.பி என கவிதை, கதை குறித்தான இவர்களின் படைப்புச் சிந்தனைகளை இதழுக்கு இதழ் மொழிபெயர்த்தோ தேடி எடுத்தோ தந்தார். சில புனைப்பெயர்களில் இதுபோன்ற காரியங்களைச் செய்தார். வானா, கானா, என்ற புனைப்பெயரில் இலக்கிய சர்ச்சைகள் செய்தார். தனித்தமிழில்தான் எழுதவேண்டும் என்று கிளம்பிய புலவர் கூட்டத்திற்கும், எழுத்துவில் வருவன புதுக்கவிதைகள் அல்ல வக்கிரக் கவிதைகள் என்று தூற்றியவர்களுக்கெல்லாம் சமராடி தன் கருத்துக்களை எழுத்து வழி முன்வைத்தார் .

பழகிய தடத்தில் செல்லாமல் புதிய தடத்தை, புதிய இலக்கியப் பாதையை உண்டாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செல்லப்பா செய்த மகத்தான காரியம் ‘எழுத்து’ இதழை நடத்தியதுதான். சந்தாதாரர்களுக்கு இதழ் சேரவில்லை என்றால் மறுபடி தபாலில் சளைக்காமல் அனுப்பிய கைகள் அவருடையவை. ‘மாதத்தின் முதல் தேதியிலே வரும்’ என்ற அறிவிப்பு, அதற்கான இடையறாத உழைப்பு, தானியமணிகளை எறும்பு தூக்கிச்சென்று சேர்ப்பதுபோல சந்தாதாரர்களைத் தேடிச் சேர்த்தார். தீபாவளி, பொங்கல் பரிசாக ‘எழுத்து’ இதழைத் தந்து புதியவர்களை இலக்கியத்திற்குள் கொண்டு வாருங்கள் என ஓயாமல் சந்தாதாரர்களிடம் கூவித்தான் இதழை நடத்தினார்.

எழுத்தாளர்களிடையே நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களை எழுத்துவில் வெளியிட்டார். 1930களில் சாதாரண வாசகர்களின் வாசிப்பு மனநிலை அல்ல; தமிழ்ப்படித்தவரின் மனநிலையே எப்படி இருந்தது என்பதற்கு ஒரு தகவலைத் தருகிறார்.

“ ‘மின்னக்கலை’ என்ற சிறுகதையை கு.ப.ரா. கலைமகள் பத்திரிகையில் எழுதி இருந்தார். டிராமில் அவர் போய்க் கொண்டிருந்தபோது முறையாக தமிழ்ப் படித்த ஒருவர், அந்தக்கதை வெகு நன்றாக இருப்பதாக பாராட்டிப் பேசினாராம். அந்தக் காலத்தில் கதைகளை ரசித்து சொல்பவர்களே அபூர்வம். கு.ப.ரா.வுக்கு திருப்தியாக இருந்தது. டிராமிலிருந்து இறங்க வேண்டிய சமயம் வந்ததும் அவர் எழுந்து போகையில் கு.ப.ரா.விடம் “ஆமாம்சார் அந்தக்கதை அடுத்த இதழில் தொடருமோ இல்லையோ” என்று கேட்டாராம். கு.ப.ரா. அப்படியே அயர்ந்து உட்கார்ந்து விட்டார். இதை பிறகு கு.ப.ரா. தன் நண்பர்களிடம் சொல்லி சிரித்தார். சிறுகதையின் வடிவப்பிரக்ஞை குறித்து அக்கறை அற்ற வாசக உலகமும் தொடர்கதை மோகமும் பண்ணிய வேலையும் இப்படியான பாமரத்தன்மை நிலவிய சூழலில்தான் மணிக்கொடிக்காரர்களின் சாதனையை மெச்சும்படியாக்குகிறது. இப்படி புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா., பாரதி என்று பல இலக்கியவாதிகளின் எதிர்கொள்ளலையும் எதிர்வினைகளையும் தேடித் தந்திருக்கிறார்.

சி.சு 02தமிழில் எழுதவரும் புதிய படைப்பாளி அல்லது ஒரு வாசகன் இலக்கியக் கற்பை ஏற்றவனாக இருக்கவேண்டும் என்று உருவகப்படுத்துகிறார். இலக்கியத் தகுதியைத் தனக்குள் ஏற்றியவனாக, இலக்கியத்தின் தரம் அறிந்தவனாக தமிழின் செழுமையை அறிந்தவனாக லட்சியக்கனவை ஏந்தியவனாக இருப்பவனைத்தான் அவ்விதம் கூறுகிறார். “இன்றைய படைப்பாளி தனக்குமுன் சென்றுள்ள அத்தனை பேருக்கும் வாரிசுதான் என்பதில் சந்தேகமில்லை. அப்படி வாரிசாக இருப்பவன் அந்தச் சொத்தை எப்படி அனுபவிக்கிறான். பெருக்குகிறான் என்பதுதான் கேள்வி. ஆனால் இன்றைய படைப்பாளிக்கு அனுபவிக்கவும் தெரியவில்லை. பெருக்கவும் தெரியவில்லை என்பதுதான் நாம் காண்பது. நூற்றாண்டுகள் கணக்கான இந்திய வளம் இருக்கட்டும். முப்பது அல்லது இந்த நூற்றாண்டு அறுபது வருஷ காலத்து இலக்கியத்தையாவது அவன் முழுக்க அல்லது பெரும்பங்கு அறிந்தவனாக இன்று படைக்க முன் வருகிறானா என்று பார்க்கப்போனால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. இன்றைய படைப்பாளிக்கு ‘பாரதிகாலம்’ ஒரு மரபு. அதற்குப்பின் வந்த ‘மணிக்கொடிக்காலம்’ ஒரு மரபு. இந்த இரண்டும் அன்று புரட்சிக்கு உள்ளானவை; பாரதி கவிதைக்கும், மணிக்கொடி கதைக்கும் இலக்கியத்தில் இந்த மாதிரியான கலகங்கள் ஏற்பட்டுத்தான் போக்குகள் மாறுகின்றன. திருப்பங்கள் ஏற்படுகின்றன. கம்பனும் இளங்கோவும் ஒருவருக்கு ஒருவர் முன்னேற்றம் அல்ல. திருப்பம். இலக்கிய வளர்ச்சி என்பது வேறு; இலக்கிய வரலாற்றில் உச்சம் என்பது வேறு. “பாரதி, கம்பன், இளங்கோ அவர்கள் காலத்தின் உச்சம். இலக்கியச் சோதனையில் மகத்தான வெற்றி. எனவே புதிய பார்வையில் புதிய உத்திகளைக் கையாண்டு மரபை அறிந்து மரபிலிருந்து திமிறி எழும் ஆற்றல் உள்ளவர்கள் எழுத வாருங்கள்” என்று அறைகூவல் விடுத்தவர் இப்படிச் சொல்கிறார். “இந்த திருப்பத்தையும் போக்கையும் இன்றைய படைப்பாளிகளுக்கு விளைவிக்க இயலுகிறதா என்று பார்க்கப்போனால் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. உண்மையில் அவன் பாரதிக்கும் மணிக்கொடிக்கும் வாரீசாக நடந்துகொள்ளவில்லை என்கிற மாதிரிதான் தோன்றுகிறது. செயலீட்டுச் சாதனை காணப்படவில்லை. நான் சொல்ல வருவது பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒரு தடவை பலகீனமான முறையில் முயன்று பார்ப்பதோ அல்ல. தனக்கென ஒரு புது பார்வை இருந்து கலைமனம் இருந்து, இலக்கியத்தில் ஒரு நோக்கத்தை விளைவிக்க முடியுமானால் பேனாவை கையில் பிடிக்கவேண்டும். பேனா பிடிக்கவேண்டும் என்பதற்காக பேனாபிடிப்பது இப்போது சகஜமாகி இருக்கிறது. ‘இலக்கியத்தரம்’ என்பதற்குரிய அர்த்தம் உணரப்படவில்லை.

“ ‘இலக்கியத்தரம்’ என்ற உணர்வு சிறந்த இலக்கியங்களைப் படித்ததின் விளைவாக உருவாகும் ஒரு மனப்பக்குவம். படைப்பாளி படிப்பாளியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் தனக்கு முன் செய்யப்பட்டிருப்பதை முழுக்க உணர்ந்தவனாக இருந்தால்தான் செய்யக் கூடியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை நிதானித்துக்கொள்ளமுடியும். தமிழில் ஒருவரி எழுதுமுன் இன்றுவரை எழுதப்பட்டிருப்பதை மனதில் கொணர்ந்து அதைத்தான் திரும்பச் சொல்கிறோமா என்று பார்த்து, பட்டால் விலக்கிவிட வேண்டும். தொகை கணக்கிற்கு ஆசை இன்று நிறைய இருக்கிறது. இது அபாயகரமானது. புதுமை, தன் தனிப்பார்வை தொனிக்காத எழுத்துக்குப் பிற்கால மதிப்பீட்டில் இடம் கிடைக்காது. இன்று சூடாக விலைபோவதை எண்ணி மகிழ்ந்து திருப்திப்பட்டுக் கொண்டுவிடக்கூடாது. இன்று தரமற்ற எழுத்து பரவிக்கிடப்பதற்கு பத்திரிகை தேவைகளை சம்பந்தப்படுத்தி எழுத்தாளன் பேசுவதில் அர்த்தம் இல்லை. ஒரு ‘கற்புள்ள’ எழுத்தாளன் இந்தவித மோகவலை விளிப்பில் சிக்கிக்கொள்ளாதவன். அத்தகைய எழுத்தாளர்களால்தான் இலக்கியப் பெருக்கு சாத்தியமாகிறது. தொகைக்கணக்கால் அல்ல. தரமான இலக்கியப் பெருக்கைத்தான் வளம் என்று சொல்கிறேன்.” இதுதான் செல்லப்பா. செல்லப்பாவின் இந்த லட்சிய கனவிற்கு வடிவம் கொடுத்தவராக சுந்தரராமசாமி, பிரமிள் இருவரையும் சொல்ல முடியும். யோசித்துப் பாருங்கள். இந்த அறைகூவலை நீண்ட நாள் மனதில் கிடத்தி அதற்கொரு வடிவம் கொடுக்க முயன்றதின் விளைவால்தான் ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள்’ நாவல்களுக்குப் பின்னணியாக இருந்து தொழிலாற்றியிருக்கிறது என்று சொல்ல ஏதுவாகத் தென்படுகிறது. பிரமிளின் கவிதை இயக்கத்திற்கும் இந்த அறைகூவல்தான் மூல சக்தியாக நின்றிருந்திருக்கிறது என்று சொல்ல இடம் இருக்கிறது.

முன்னோடிகளின் சாதனைகளை அறிந்து சுயமான பார்வை வழி செயல்படுகிறவனைத்தான் செல்லப்பா படைப்பாளி என்கிறார். கு.ப.ரா.வின் கதை சாயலில் எழுதி முடிவை மட்டும் மாற்றிவிட்ட ‘சுகி’ சுப்ரமண்யத்தின் கதையை மாரீச எழுத்து என்று விமர்சித்திருக்கிறார். இரண்டு கதைகளையும் ‘எழுத்து’ இதழில் எடுத்து வைத்தார். இதற்கு வந்த ஏகப்பட்ட விவாதங்களையும் எழுத்துவில் பிரசுரித்தார்.

“இன்றைய எழுத்தாளர்களுக்குப் பார்வை என்று ஒன்று இல்லாததால்தான் இம்மாதிரி ஒரே ரகமாகவோ, அல்லது ஒருவர் முன் எழுதின போக்கிலேயோ எழுதத் தோன்றுகிறது. ஒரு சம்பவம் அல்லது ஒரு கதைக்கரு தங்களுக்குப் பட்டால், அது இதற்கு முன் கையாளப்பட்டிருக்கிறதா, எப்படி எந்த அளவுக்கு எந்த தரத்துக்கு என்று பார்க்கிறதே இல்லை. தெரிந்து தொழிலாக செய்கிற மாரீசத்தைப் பற்றி இங்கு பேச்சே இல்லை. ஒரு கதையை எடுத்துக்கொண்டால் படைப்பாளர்கள் அதன் தூலத் தோற்றத்தை மட்டும் மனதில் வாங்கிக்கொள்ளாமல் அதன் ஜீவனை முழுக்க அறிய முயல வேண்டும். அப்போது அந்தக் கதையின் ஜீவனுக்கு தாங்களும் திரும்ப மற்றொரு உருவம் கொடுக்கத் தோன்றாது. அந்தக் கதையின் ஜீவன் அவர்களுக்குள் உணர்ந்து கொண்டிருந்தாலும் அது அவர்களுக்குள் வேறு ஜீவன்களுக்குத் தாயாக இருக்குமே அன்றி தாயின் நகலாக இருக்காது. இன்றைய படைப்பாளி எவைகளைக் கையாளுவது என்பதைவிட எவைகளைத் தள்ளிவிடுவது என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் அவனது முன்னோடிகளுக்கு இல்லாத வாய்ப்பாக ஒரு அகண்ட இலக்கியப்பரப்பு அவன் முன் விரிந்துகிடக்கிறது. எனவே அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் கொஞ்சமாக எழுதினாலும் பார்வையுடன் சுயமாக, திறமையாக எழுத முற்படவேண்டும். அப்போதுதான் அவனுக்கு மாரீசப்பட்டம் வருவதற்கு இடம் இருக்காது” மணிக்கொடி காலத்தவர்கள் பலர் இன்று சிறுகதைகளே எழுவதில்லை. எழுதினாலும் அபூர்வமாக, என்று இருப்பதை நாம் கவனிக்கவேண்டும். புதுமை, தன் தனிப்பார்வை தொனிக்காத எழுத்துக்கு பிற்கால மதிப்பீட்டில் இடம் இருக்காது. என்று இளம் படைப்பாளி கொள்ளவேண்டிய கவனம் குறித்து அவ்வப்போது குறிப்பிட்டு வந்துள்ளார்.

விமர்சகன் என்பவன் முதலில் நல்லவாசகனாக இருக்கவேண்டும். அம்மொழியில் அரைநூற்றாண்டுகால போக்குகளையேனும் அறிந்திருக்க வேண்டும். “ஆழ்ந்து படிக்கிற மனப்பான்மை கொண்ட விமர்சகர்கள் குறைவு. கவிதைக்கு குறைந்தபட்சம் பாரதியிலிருந்தும், கட்டுரைக்கு வ.ரா, திரு.வி.கவிலிருந்தும் ஆரம்பித்து இன்றுவரை எழுதப்பட்டிருப்பவைகளைப் படிக்க முற்படும் ஒரு வாசகனே இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் பற்றி சிந்திக்கும் தகுதி பெற முடியும்.” இப்படிப்பட்ட நவீன இலக்கியத்தின் பால் விரிவும் ஆழமும் கொண்டவன் விமர்சனம் செய்கிறபோது அப்படைப்பின் தராதரத்தைத் துல்லியமாக மதிப்பிடுவான். அம்மட்டுமில்லாமல் பல்வேறு விமர்சன போக்குகளை உள்வாங்கி சுயாதீனமான பார்வை கொண்டவனாக இருக்கவேண்டும் என்றும் எழுதினார்.

“விமர்சனப் பார்வையிலே, அளவுகோலிலே சுதேசியம், விதேசியம் என்று அர்த்தமற்று பாகுபடுத்திக் கொள்ளாமல் அதே சமயம் எந்த தனி ஒருமுறைப் பார்வைதான் சரி என்று, புறம் நீங்கலாக இருக்கும் தன்மையை விரித்துக்கொள்ளாமல், ஒரு படைப்பின் பலமுக நயங்களை அறிய உதவும் எந்தவிதமான பிரமாணங்களையும் அளவை விதிகளையும் பிரயோகித்துப் பார்த்து ஏற்கப்பட்ட பிரமாணங்களைவிட்டால் வேறில்லை. அவைகளுக்குப் பொருந்தாவிட்டால் படைப்பு சத்தானது இல்லையென்று முடிவுகட்டாமல், காலப்போக்கில் புதுப்புதுவிதமான படைப்புகள் என்ன புதிய அம்சங்களை அடக்கி புதிய அளவுகோள்களை நிதானிக்கச் செய்கின்றன என்றெல்லாம் பார்ப்பது ஒரு லட்சிய விமர்சனப்பார்வை ஆகும்” என்றார். இன்று இந்தத் துறையில் எவ்வளவோ நகர்ந்து வந்துள்ளோம். ஆனால் அறுபதுகளின் துவக்கத்திலேயே இவ்வகையான சிந்தனைகள் தீவிரம் கொள்ளாத நிலையில் அவற்றைப் பயின்று விமர்சனத்துறைகளையும், விமர்சகனையும் வளப்படுத்தும் நோக்கோடு எழுத்துவில் முன்வைத்தது மட்டுமல்லாமல், திறனாய்வு முறைமைகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார். கல்விப்புலம் செய்திருக்க வேண்டிய காரியத்தை செல்லப்பா முதன்முதல் செய்தார்.

கல்விப்புலம் சார்ந்த ஆய்வுலகின் அன்றைய தன்மை குறித்து “எழுதப்பட்டிருக்கிற இலக்கிய சரித்திரங்களை எடுத்துப்பார்த்தவர்களுக்கு தெரியும். முன்னூறு, நானூறு பக்க ஆராய்ச்சி நூலில் கடைசி ஏழெட்டுப்பக்க சின்ன அத்தியாயம் ஒன்றிலே, இந்த கால் நூற்றாண்டுகால இலக்கிய சரித்திரம் அடங்கியிருக்கும். சிறுகதைக்கு ஒரு நாலைந்து – அதிலே இறந்தவர்கள் – முக்கியமான நாவலுக்கு இரண்டு மூன்று, கவிதைக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருக்கும். அவர்களின் எழுத்து போக்குபற்றி எதுவும் இருக்காது. இந்தப் பெயர்கள் பற்றி எதுவும் இருக்காது. இந்தப் பெயர்களைச் சொல்லி விட்டால் பூர்த்தியான தகவல் இன்றைய இலக்கியம்பற்றி கொடுத்துவிட்டதாக திருப்தி. பேராசிரியர் பதவியோ டாக்டர் பட்டமோ பெற்றவர்கள் செய்திருக்கிற காரியம் எல்லாம் இதுதான். சர்வகலா சாலையிலும் கலாசாலைகளிலும் இந்தப் பழம் பண்டிதப்போக்கு நாற்காலிகளை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற வரையிலும் இதற்குமேல் எதிர்பார்ப்பதற்க்கு இல்லை.” பாரதியை முழுமையாகப் படிக்காமலே பாரதி பற்றிய ஆய்வு வந்துவிடுகின்றன. கம்பனைப் பற்றி முழுமையாகப் படிக்காமலே கம்பனைப் பற்றிய ஆய்வுகள் வந்துவிடுகின்றன என்று நம் அன்றைய ஆய்வுலகின் பொய்மையை விமர்சனம் செய்தார். இன்றைய ஆய்வு அதைவிட அயோக்கியத்தனங்கள் அங்கீகரிக்கப்பட்ட உலகமாக மாறிவிட்டிருக்கின்றன. ஆய்வாளர்களும் சரி பல நெறியாளர்களும் சரி திருட்டு ஆய்வையும், விற்பனை ஆய்வையும் அங்கீகரித்துள்ளனர். நல்லவேளை செல்லப்பா போன்ற லட்சியவாதிகள் முன்கூட்டியே போய்ச்சேர்ந்தார்கள்.

படைப்பாக்க செயல்பாட்டில் தோல்வி ஏற்பட்டதால்தான் சி.சு.செல்லப்பா போன்றவர்கள் விமர்சனத்துறையில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட உள்நுழைகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுத்து இதழின் செயல்பாட்டை ஒட்டி பேச்சுகள் எழுந்தன. இதற்கெல்லாம் நீண்ட பதில்களைச் சொல்லி இருக்கிறார். “ஒரு விமர்சகனைவிட ஒரு படைப்பாளி விமர்சனம் செய்கிறபோது மற்றொரு படைப்பின் ஊடுபாவுகளையும் கோளாறுகளையும், சிறப்புகளையும், படைப்பின் சாரத்தையும் கூடுதலாகக் கண்டு சொல்ல முடியும். குறை கூறுதலோ, நுண்ணிய வேற்றுமைகளைக் கற்பிக்கிற சாமர்த்தியங்களோ மட்டும் ஆகாது. ஏன் சிலவற்றை மேலாக ரசிக்கிறோம், சிலவற்றை குறையுடன் பார்க்கிறோம், என்று கண்டறியும் ருசி சம்பந்தப்பட்டது. புத்திக்கூர்மையாலும் இலக்கியப் பயிற்சியினாலும் எழுத்தாளனிடம் உருவாகி வந்த பார்வையைக்கொண்டு படைப்பு கொண்டிருக்கும் சொல்முறை விசயங்களை ஆராய்ந்து அதன் அந்தஸ்த்தைத் தீர்மானிக்கிறான். வாசகர்களுக்குத் தேர்வு செய்து தருகிறான்.” என்கிற விதத்தில் பதில் தந்திருக்கிறார். இம்மாதிரியான விமர்சனம் வந்த காலத்திலேயே ‘ஜீவனாம்சம்’ என்ற நாவலையும் ‘மூணுலாந்தல்’ ‘பெண்டிழந்தான்’ போன்ற சிறந்த சிறுகதைகளையும் தந்திருக்கிறார். பிற்காலத்தில் ‘சுதந்திர தாகம்’ என்ற பெருநாவலைத் தந்திருக்கிறார். எழுத்து இதழை ‘இலக்கியத்தின் விமர்சனக்குரல்’ என்று ஒலிக்கச் செய்வதற்கு படைப்புகளுக்காக உழைத்தார்.

இலக்கியத்தில் சக பயணியாக இயங்கிக்கொண்டிருந்த க.நா.சு. எழுத்துவின் துவக்ககால இதழ்களுக்கு அதிகமான பங்களிப்பினைச் செய்தார். ஒருவகையில் நவீன தமிழ் இலக்கியத்தின் மதிக்கத்தக்க விமர்சகராக உருவெடுத்தார்.  செல்லப்பாவும் விமர்சனத்துறைக்குள் நுழைந்தார். இருவரின் அணுகுமுறைகளும் வெவ்வேறான பாதைகளைக் கொண்டிருந்தன. 1964 வாக்கில் இலக்கிய வட்டத்தை துவக்கிய க.நா.சு., செல்லப்பாவின் விமர்சன முறையை இலக்கியத்திற்கு உபயோகமற்றது என்று சொன்னார். இது நிமித்தம் இருவரும் கருத்தியல் ரீதியாக மோதிக்கொண்டனர். இந்த மோதல் திறனாய்வு துறைக்கு மறைமுகமாக ஏற்றத்தை ஏற்படுத்தியது.

க.நா.சு.வின் ரசனைமுறைத் திறனாய்வு என்பது பேரிலக்கியங்களைக் கற்றதன் வழி உருவாகி வந்த ஒன்று. இலக்கியத்தின் சாரத்தை நோக்கிய பார்வை இது என்றும் சொல்லலாம். செல்லப்பா இலக்கியத்தின் உடலான பல இணைவுகளை ஆராயும் பகுப்புமுறைத் திறனாய்வை – ஒரு முழுமையான ஆய்வு முறையாகக் கொண்டார். ஐம்பதுகளில் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த இலக்கியக் காலாண்டிதழ்களான ‘சீவான் ரிவ்யூ’, ‘ஹைட்ஸன்ரிவ்யூ’, ‘பார்ட்டியன் ரிவ்யூ’, ‘யேல் ரிவ்யூ’, பிரிட்டிஸ் விமர்சகர் எஃப்.ஆர்.லெவிஸ் நடத்தி மறைந்த ‘ஸ்குரூடினி’ ஐஃபர் இவான்ஸ் நடத்திய ‘அடல்ஃபி’ அதனைத் தொடர்ந்து வரும் ‘எஸ்ஸேஸ் இன் கிரிடிஸம்’ ‘ரிவ்யூ ஆஃ லிட்டரேச்சர்’ ‘செண்டன்மேகஸென்’ போன்ற திறனாய்வு இதழ்களை விரும்பி படித்ததினால் பகுப்புமுறை திறனாய்வில் செல்லப்பாவிற்கு ஆர்வம் சென்றது.

செல்லப்பாவின் அலசல்முறைத் திறனாய்வு இலக்கிய வளர்ச்சிக்குப் பயன் ஏதும் இல்லை என்று குற்றச்சாட்டுகளை க.நா.சு. தொடர்ந்து இலக்கிய வட்டத்தில் வைத்தார். இலக்கியத்தரம் உயர பயிற்சிவேண்டும். உலக இலக்கியப்பரப்பை அறியவேண்டும். இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் வேண்டும். விமர்சனம் இலக்கியச் சாதனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். விமர்சனத்தின் நோக்கம் இலக்கிய அனுபவத்தைச் சாத்தியமாக்குவதுதான். என்றெல்லாம் சொல்லி வந்த க.நா.சு,

“ 1. வரிவரியாக எடுத்து கதாகாலட்சேபம் முறையில் வியாக்கியானமோ அலசலோ செய்து கொண்டிருந்தால் விமர்சனம் பிறந்துவிடாது.

  1. இலக்கிய விமர்சனத்தின் பயன் ஒரு நூலை நுணுகி நுணுகி அலசி அதன் அம்சங்களை அறிந்து கொள்வது அல்ல.
  2. அலசல் விமர்சனம் விமர்சகனின் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது. அனுபவத்தை ரசனையைப் பொறுத்தது அல்ல.
  3. அலசல் விமர்சனம், எப்போதும் பூரணமற்றதாகத்தான் இருக்க முடியும் பூர்த்தியேயாகாது.
  4. அலசல் விமர்சனத்துக்கு ஒரு அடிப்படை நோக்கம் அவசியமில்லை. வார்த்தைப் பந்தல் போதுமானது.
  5. ஒரு குறிப்பிட்ட நூலில் நான் இன்னின்னது கண்டேன் என்று சொல்வது இரண்டாம் பட்சம்.”

இவ்விதமான விமர்சனத்தை அலசல்விமர்சனத்தின் மீது க.நா.சு., வைத்தார். (Point Point) டாக வகை படுத்திக்கொண்டவர் சி.சு.செல்லப்பாதான்)

க.நா.சு.வின் கருத்திற்கான செல்லப்பாவின் எதிர்வினை

“நான் இந்த நூலில் இன்னின்னது கண்டேன் என்பது, அத்தோடு இந்த விதமாக நான் காண முடிந்தது என்பதும்கூட இலக்கிய ருசியைப் பொறுத்தது. ரசனைக்குரிய பொருள் என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, அதில் ரசிக்கக் கூடியவைகள் இவை, இவை; நான் ரசித்தவிதம் இப்படி; இவைகள் ரசனைக்கு உதவின. உதவவில்லை; வழிசெய்கின்றன. செய்யவில்லை என்று பார்ப்பதுதான் ஒரு ரசிகன் வந்த முடிவுக்குப்பின் நிற்பவை. அவைகளை அவன் எடுத்துச்சொல்கிறபோதுதான் அவன் சொல்லியதை வைத்து, அவன் தகுதியைக்கொண்டு நாம் அவனை ஏற்பதும் மறுப்பதும் ஏற்படுகிறது. அதில்லாமல் ‘நான் நன்றாக இருக்கிறது என்கிறேன். நீ ஒப்புக்கொள்ள வேண்டும். என்றால் இலக்கிய வட்டம், தனக்கு முன்னே பலர் அடித்துச் சொல்லிவிட்டுப் போயிருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கவேண்டுமே”

“ஒரு படைப்பைத் தனக்குள் ஆராய்ந்து பார்க்காமல் எப்படி ஒருசி.சு 01 விமர்சகன் எப்படி இதை ரசித்தேன் என்ற முடிவுக்கு வர முடியும்? இலக்கிய விமர்சனம் என்பது ஒரு பெரிய படைப்பு நூலுக்குள்ளே ஒரு ரசிகன் செய்யும் யாத்திரை, அதிலே ஏற்படுகின்ற அனுபவம்தான் ரசனை. இந்த ரசனையைக் காட்டிக்கொள்வதுதான் விமர்சனம். தான் அதில் கண்டதை வெளியிட்டு பிறரும் காணச்செய்வது அவன் வேலை” என்றவிதமாய் பகுப்பாய்வு விமர்சனத்தின் (அலசல்) முக்கியத்துவத்தை செல்லப்பா முன்வைத்துப் பேசியிருக்கிறார்.

க.நா.வின் விமர்சன தொடர்ச்சி படைப்பாளர்கள் மத்தியிலும், செல்லப்பாவின் விமர்சன முறை கல்விப்புலம் சார்ந்தோர் மத்தியிலும் இன்று கோலோச்சுகிறது. கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு படைப்பு மனோநிலை கூடி வருவதில்லை என்று க.நா.சு. நம்பினார். இலக்கிய உணர்ச்சி அற்ற கல்விப்புலத்தவர்களின் கட்டுரைகளுக்குப் படைப்பாக்கத்தில் எவ்வித பங்களிப்பும் இல்லை என்று சொல்லி வந்தார். அக்காலத்தில் நிலமை அப்படித்தான் இருந்தது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை க.நா.சு. எடுத்துக்கொள்ளவில்லை. சி.சு.செல்லப்பா, ஆய்வுத்துறையைக் கல்வியாளர்களால் செழுமை செய்ய முடியும் என்று நம்பினார். ‘எழுத்து’வின் பயணத்தில் இரண்டாம் ஆண்டின் இறுதியிலிருந்தே நிறைய கல்விப்புலம் சார்ந்தவர்களின் விமர்சனங்களுக்கு இடம் தந்தார். எழுத்துவின் நான்காம் ஆண்டிலிருந்து கல்விப்புலத்தவர்களின் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் இடம்பிடித்தன. ‘தீபம்’, ‘தாமரை’ எழுத்துவின் புதுக்கவிதை இயக்கத்தைச் சாடின. ‘இலக்கிய வட்டம்’ எழுத்து கையிலெடுத்த ஆய்வு அணுகுமுறையைச் சாடியது. க.நா.சு. இதை அலசல் முறை என்றே சொன்னார். இந்தச் சாடல்களை எல்லாம் மீறி எழுத்து முன்னெடுத்த காரியமே இலக்கியப் போக்காக மாறியது. இதில் செல்லப்பாவிற்கு உள்ளபடியே பெருமைதான்.

கே.எஸ்.சிவக்குமார், முருகையன் போன்ற ஈழத்து கல்விப்புலம் சார்ந்தவர்களும், எம்.பழனிச்சாமி, ரா.ஸ்ரீ.தேசிகன், சி.கனகசபாபதி, வி.து.சீனிவாசன், இரா.அருள், போன்ற தமிழகத்துக் கல்விப்புலமையாளர்களும் எழுத்துவில் திறனாய்வு – விமர்சனம், துறை சார்ந்து மாற்றத்தைக் கொண்டு வந்ததால் கருத்து மோதல் உருவானது. இது மிக ஆரோக்கியமான கருத்துமோதலாக மாறியது. (கல்விப்புல ஆய்வறிஞர்களுக்கு இலக்கியத்தின் நுண் அழகியலோ, இலக்கிய ரசனையோ தான் அறிந்தவரையில் இல்லை என்ற கருத்தை க.நா.சு. முன் வைத்தார்) இதன் விளைவாக ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்புகளை எடுத்து ஆய்வு செய்கிற அல்லது ஒரு நாவலை எடுத்து ஆய்வு செய்கிற, போக்கு ‘எழுத்து’வின் வழி நிகழ்ந்தது. விமர்சனத்துறையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் இது.

இப்படி விமர்சன அணுகுமுறை சார்ந்து இருவரும் மோதிக்கொண்டாலும் ஆங்கில இதழ் ஒன்றில் “Ezhuthu and Chellappa tend to make of new verse a coteric and a camp. Best of tac attempts at new verse were published by chellappa in Ezhuthu. He trics to import into Tamil Literary criticism the analytical methods of texctual criticism popular now in united stats” என்று எழுத்துவின் சாதனை பற்றி அந்த சமயத்திலேயே எழுதினார். இதை நினைவுகூறுகிற செல்லப்பா அடுத்த இதழில், க.நா.சு., தீபம் இதழில் சிறுகதை ஆளுமைகள் குறித்து எழுதிய கட்டுரையைக் கடுமையாக விமர்சித்து (ந.பி., பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியன் முதலானோரை விட்டுவிட்டதால்,) எழுதினார். இலக்கியத்திற்காக சண்டை போட்டார்கள். ஆழத்தில் ஒருவரை ஒருவர் மதித்தார்கள். இலக்கியம் குறித்த க.நா.சு.வின் ஆழமான கருத்துக்களை அழகியலின் சாராம்சங்களை எழுத்துவின் பக்கங்களில் மேலுயர்த்தி வெளியிட்டார் என்பதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும்.

பாரதி, புதுமைப்பித்தன் வழி வந்த இலக்கியப்போக்கு மெலிந்து நகர்ந்தபோது கல்வி வழிவந்த ஜனரஞ்சக எழுத்துப்போக்கு அகன்று பெரும்பிரவாகம் எடுத்து ஓடத் தொடங்கியது அறுபதுகளில், எழுத்தின் வீச்சை மீட்டெடுக்கும் முயற்சியில் மெலிந்து சிறுத்து வந்த அவ்விலக்கியப் பாதையை அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் முனைந்த செல்லப்பாவின் எழுத்து வழி செயல்பாட்டை பிரபல எழுத்தாளர்கள் கேலி செய்ததும் உண்டு. 1960 நவம்பர் மாதம் இலங்கை சென்ற நா.பார்த்தசாரதி, ‘தமிழ்நாட்டில்தான் மணிக்கொடி மணிக்கொடி என்று முட்டாள்தனமாக உடுக்கு அடிக்கிறார்கள் என்றால் இங்கும் அதுமாதிரி இருக்கிறார்களே, செல்லப்பா பத்திரிக்கையா நடத்துகிறார்? ஏதோ வயிற்றுப்பிழைப்புக்காக கிழிந்த பையும் குடையுமாக சந்தாவுக்காக வீடு வீடாக ஏறிக்கொண்டிருப்பார். எனக்கே அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். நான் சந்தாதாரராக இருந்தேன்; நிறுத்திவிட்டேன்.’ என்று கேலி பேசியதை மனவருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் செல்லப்பா. ‘மேலான இலக்கிய கனவை பிற தேசங்களில் இவர்கள் தம் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்திப் பேசினால் எப்படி உயரும்; மணிக்கொடியாளரின் எழுத்தியக்கத்தைத் தாழ்த்திப்பேச இவர்களுக்கு உண்மையில் தகுதியிருக்கிறதா?’ என்று வெகுண்டிருக்கிறார். ‘உண்மையில் நான் எழுத்து நடத்துகிற விதம் இதுதான். இதற்காக ஒருபோதும் அவமானம் கொள்ளப்போவதில்லை’ என்றிருக்கிறார்.

செல்லப்பா குறித்து சுந்தரராமசாமி சொன்ன சித்திரம் ஒன்று ஞாபகம் வருகிறது. “செல்லப்பாவின் கதராடை பளிச்சென இருக்காது. வெள்ளாவிக்குப் போடாமல் தானே துவைத்து துவைத்து கட்டிய சட்டையும் வேட்டியும் வெள்ளையாக இருக்காது. அழுக்குநிறத்தில் மங்கிப்போய் இருக்கும். ஒரு சோப்பு வாங்கி துவைத்து நன்றாக உடுத்தவேண்டும் என்ற அக்கறை இருக்காது எனக்கு இது சங்கடமாக இருக்கும். ஏழெட்டாண்டுகள் செல்லப்பாவை பார்க்க சந்தர்ப்பமில்லாமல் போய்விட்டது. மெலிந்த உருவம் கூன்விழுந்திருப்பதைப் பார்த்து என்ன சார் இப்படி என்று கேட்டபோது, “அந்த நாற்காலியில் அமர்ந்த குனிந்தபடியே எழுதுகிறேனா இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லி இருக்கிறார். சாய்ந்து உடலை அலுப்பாற்றிக்கொள்ள நல்ல சாய்வு நாற்காலி கூட இல்லாமல், ஒடுக்கமான அந்தப் பழங்காலத்து மர நாற்காலியில், ஒண்டிக்குடித்தனவீட்டில் இருந்தபடிதான் ‘எழுத்து’ என்ற இதழை வைராக்கியமாக நடத்தியிருக்கிறார்.

நா.பா. போன்றோர்கள் எழுதிய எழுத்து வகைகளும், பத்திரிகைகளும் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை. செல்லப்பபாவின் ‘எழுத்து’ செய்த இலக்கியப் பணி வரலாற்றில் மகத்தான இடத்தை வகிக்கிறது. தரம் வாய்ந்த எழுத்துக்கள் வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தும், அது பணத்தின் மதிப்பை எட்டி உதைக்கும் என்ற நிலைப்பாடு தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருப்பதால் ஜனரஞ்சக இலக்கிய அரசியலுக்கு ஆபத்து வராமல் இன்றளவும் செயல்படுகின்றனர்.

புரியாத விசயங்களை வெளியிட்டு பக்கங்களை ஏன் பாழ்படுத்துகிறீர்கள் என்று வாசகர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். “இந்தப் புதுமைப்பித்தன் இலக்கியத்தில் மட்டும் அன்று. மற்ற கலைகளுக்கும்கூட தாவிப்படர்ந்திருக்கிறார். பிக்காஸோவின் படங்களை ரசிப்பவர்கள் ரவிவர்மாவின் படங்கள்கூட நன்றாக இல்லை என்று சொல்கிறார்கள். ‘ஸர்ரியலிஸம்’ என்று இந்தப் புதுமைக்குப் பெயர் கூறுகிறார்கள். அதாவது மனதுக்கு அடித்தளத்திலே இருக்கும் உள் மனதிலிருப்பதை அப்படியே கலைபிரதிபலிக்க வேண்டும் என்கிறார்கள். உள் மனதில் அலங்கோலமான நிலையில் இருப்பது அப்படியே வெளிப்படையாக கலையுருவம் பெறவேண்டும் என்கிறார்கள். இந்தக் கவிதையை எழுதியபோது இரண்டு பேருக்கே அதைப் பற்றித் தெரியும். ஒருவர் கடவுள், இன்னொருவர் நான், கடவுள் எங்கிருக்கிறாரோ தெரியாது. எனக்கே அதன் பொருள் மறந்து போய்விட்டது. இந்தக் கவிதா ரசத்தைப் பருகக்கூடியவர் வேறு யார் இருக்கிறார்” என்று ராபர்ட் பிரௌனிங் தமது கவிதை ஒன்றிற்குத் தந்த விளக்கத்தை ஆணை.ஸு.குஞ்சிபாதத்தின் கடிதம் வழி முன்வைத்தார். படைப்பின் கொதிப்பை வாசகர்கள் உணர முன்வரவேண்டுமே அல்லாது பட்டவர்த்தமான விளக்கஉரையில் எதிர்பார்ப்பது கூடாது என்று விளக்கமளித்தார்.

இலக்கியம் பற்றிய புரிதலை பல்வேறு துருவங்களிலிருந்து பல்வேறு முகாம்களிலிருந்து வெளியிட்டு விவாதத்திற்கு இடமளித்தார். ஈழத்தில் நடைபெற்று வந்த முற்போக்கு நற்போக்கு விவாதங்களுக்கு ஒட்டிய எதிர் கருத்துக்களை வெளியிட்டார். குழுமனப்பான்மையின் கோபதாபங்களுக்கு அப்பால் இலக்கியக் கதையாடலை நகர்த்த முனைந்தார். இலக்கிய உணர்வை வளர்ப்பதற்கும் இலக்கியச் சூழலை மாற்றியமைப்பதற்கும் எழுத்து இதழ் பெரும் பங்காற்றியது.

உருவம் உள்ளடக்கம் சார்ந்த விவாதத்தில் தி.க.சி.யும் க.கைலாசபதியும் உருவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்பாளிகளைக் கடுமையாக விமர்சித்தனர். தி.க.சி. கொஞ்சம் தறிகெட்டு முன்னுக்கும் பின்னுக்கும் முரணான கருத்துக்களைச் சொல்லி வருவதை செல்லப்பா எடுத்து வைத்தார். ‘புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, சிதம்பரசுப்ரமண்யம் போன்றோரை பழமைவாதிகள் என்றும் காலத்திற்கு ஒவ்வாத கருத்தோட்டம் கொண்டவர்கள் என்றும், சமூகப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் தராத இவ்வகை எழுத்தாளர்கள் இருப்பதைவிட தூக்குப்போட்டுச் சாகலாம்” என்று சாடிய தி.க.சி, இரண்டாண்டிற்குமுன் இவர்களைப் புகழ்ந்ததை எடுத்துக்காட்டி தனது நற்பெயரை கைலாசபதி முகாமிற்கு காட்டிய சாதுர்யத்தை ஒப்பிட்டுக் காட்டினார்.

“இலக்கியத்தில் வடிவம் முக்கியம் என்றால் பொருளுக்கு முக்கியத்துவம் இல்லை. அதனால் பொருள் இன்றியமையாததன்று என்று ஆகிறது. அதனால் இலக்கியத்தில் அதை இனம் கண்டுகொள்ளும் ஆசை இல்லாமல் போகிறது. அதனாலே அலட்சிய மனோபாவம், அதனாலே அலட்சியக் குரல்” என்று ஒரு விசயத்தைத் தனக்கான விதத்தில் பேசிய கைலாசபதிக்கு, முகத்தில் கண்கள் முக்கியம் என்றால் மூக்கு, காது இன்றியமையாததன்று என்று முடிவுகட்டுவது போல இருப்பதைச் சுட்டிக்காட்டி,

“பொருள் இல்லாமல் வெறுமையில் இலக்கியப்படைப்பு உருவாகவே முடியாது. இலக்கியம் மட்டும் என்ன! எந்தத்துறையிலுமேதான். ஆனால் பொருளுக்கு உரிய இடம் துறைக்குத்துறை அந்தஸ்து வித்தியாசம் உண்டு. விஞ்ஞானம், தத்துவம் இவைகளில் முழு அளவுக்கு. கலையில் குறைந்த அளவுக்கு. ஏனென்றால் அங்கே அறிவு ரீதியாக கொள்ளப்படும் பொருள் மட்டும் இன்றி, உணர்ச்சி ரீதியாக கொள்ளப்படும் எழுச்சி நிலைகளை எழுப்ப ஏதுவாக உள்ள பல்வேறு சாதனங்கள் கலக்கின்றன. அவை தமக்கு உரிய தனித்தனி இயல்புகளை இணையவிக்கின்றன. இந்த இயைவால் உருவாகிற கோவைதான் இலக்கியம்”  என்று படைப்பாக்க செயல்பாட்டின் முக்கியத்துவத்தை முன்வைத்து பதில் சொல்லியிருக்கிறார்.

எழுத்து புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் முனைந்த போது, ‘இது முதலாளித்தவ மனநிலைக்கான வடிவம். அவர்களின் சொகுசை வெளிப்படுத்துவதற்காக எழுதப்படுவது, முற்போக்கு படைப்பாளிகள் இதனைக் கைக்கொள்ள வேண்டாம். நாவல், சிறுகதை என்கிற பயனுள்ள இலக்கிய வகையில் ஈடுபடுங்கள் என்றார் கைலாசபதி. நா.வானமாமலை எழுத்துவில் வந்த கவிதைகளை மனவக்கிர கவிதைகள் என்று திட்டினார். இந்த விமர்சனங்களையும் மீறி புதுக்கவிதை முற்போக்குவாதிகளையும் வசீகரித்து, அவர்களைப் பெரிய பாய்ச்சலுக்கு உள்ளாக்கினார். நா.வானமாமலைக்கு பதில் தரும் விதத்தில் நீண்ட கட்டுரையை அப்போது செல்லப்பபா எழுதினார். ஒரு புதிய இலக்கிய வகை வந்தபோது அதன் மீது காழ்ப்புணர்வு கொண்டு தாக்கிய வேடிக்கையும் நடந்தது.

இலக்கிய சர்ச்சைகள் ‘எழுத்து மேடை’யில் ஓங்கி ஒலிக்காவிட்டாலும் வரத்தான் செய்தன. செல்லப்பா இது பற்றி ஒரு சமயம் சுய பரிசீலனை செய்து பார்த்ததும் உண்டு. இலக்கிய இதழ்களில் நடந்து வந்த விவாதங்கள் இன்று முகநூலில் தீவிரமாக கிழிபடுகின்றன. இலக்கிய விவாதம் மணிக்கொடிக்காலத்திலும் அதன் பின்னான காலத்திலும் நடந்தது. இந்த ‘சர்ச்சை’யின் தாரதம்மியம் எப்படி இருக்கிறது என்று எழுத்து 34-ல் செல்லப்பா குறிப்பிட்டிருப்பது இன்றைக்குக் கூடுதல் பொருத்தமாக இருக்கிறது.

“இந்த இலக்கிய சர்ச்சைகளைப் பற்றி இன்று நினைத்துப் பார்க்கிறபோது விறுவிறுப்பாகவும் ரசமாகவும் அவை இருப்பதாகத்தான் சொல்லத்தோன்றுகிறதே தவிர அவ்வளவு சத்தானதாக, வாசகர்களுக்கு லாபகரமானதாக இருப்பதாகச் சொல்லத் தோன்றவில்லை. வாசகனுக்கு ‘லாபகரமாக’ என்கிறபோது, அடிப்படைகளை அற்பமாக இல்லாத சத்தான ஆதாரங்களைப் பிரஸ்தாப விஷயத்துக்குப் பொருத்தம் இல்லாதவைகளைத் தள்ளிவிட்டு பொருத்தமானவைகளை மட்டும் பிரஸ்தாபித்து அந்த விஷயம் பற்றிய தெளிந்த கருத்துக்கள் வாசகனுக்குக் கிடைப்பதைத்தான் குறிப்பிட வேண்டும். இந்த லாபம் வாசகனுக்குக் கிடைக்க நேராததுக்குக் காரணம் சர்ச்சைகளில் கலந்து கொண்டவர்களில் (ஒரு சிலரைத் தவிர) அடிப்படைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தங்கள் உணர்ச்சிகளை முன் வைத்து கட்சிகட்டினதன். ஒன்றைப்பற்றி ஆரம்பித்த விவகாரம் கிளைவிட்டு வேறு ஏதெதிலோ போய் முடிந்துவிட்டிருக்கின்றன. வாதிட்டவர்களில் பெரும்பாலோர் அடித்துச் சொல்லிவிட்டதிற்குமேல் நியாயப்பூர்வம் காட்டி போதிய ஆதாரங்களைக்கொண்டு தங்கள் கட்சியை நாட்ட முயலவில்லை.

அப்போதைக்கு சுவாரஸ்யமாக உள்ள தனிநபர் பரஸ்பரத்தாக்குதலில் வந்து முடிகிறதுக்கு மேல் ஒரு மதிப்பும் பெறாமல் போய்விட்ட இந்த இலக்கிய சர்ச்சைகளுக்குப் பிறகு இப்போது நம்மிடையே இலக்கிய சர்ச்சைகள் நடப்பதே நின்றுவிட்டது. நடந்தால் இப்படி, இல்லையானால் சுரணையே இல்லை என்று படும்படியாக விவகாரத்துக்கு இடமான இலக்கிய கட்டுரை என்றாலே வம்பு எதுக்கு என்று இலக்கியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவை கூட ஒதுங்கிப் போய்விடுகின்றன”

“ ‘வீரகேசரி’ பத்திரிகையின் ‘இலக்கிய சர்ச்சை’ களத்தைப் பார்வையிடுகிறபோது இவ்வளவு சண்டும் பதரும் ஏன் அந்த இடத்தில் தூவப்பட வேண்டும் என்று கேட்கத் தூண்டுகிறது. முற்போக்கு, பிற்போக்கு, அந்தக் கட்சி, இந்தக்கட்சி அவர் பட்டியல், இவர் பட்டியல், அவருக்கு என்ன தெரியும் இத்யாதி ஏசல்கள் இலக்கிய வளர்ச்சிக்கு இம்மியும் பயன்படாது. அது மட்டுமல்ல, கடிகார முள்ளை பின்னுக்குத் தள்ளி வைப்பதாகும். ஈழத்து விமர்சகர் கனக-செந்திநாதன் உருப்படியான இலக்கிய முயற்சிக்கு வழி பிறக்க வேண்டுமானால் தனிப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளனின் முழு படைப்புக்களுக்கும் நுணுக்கமாக விமர்சனத்தைப் பெரிய அளவில் செய்ய வேண்டும். போனது போகட்டும் இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுபவர்கள் இதை மனதில் கொண்டு இனியாவது ஆக்கப்பூர்வமாக செய்ய முன் வருவார்களா?” என்று செல்லப்பபா எழுதி அறுபது வருடங்களைத் தொடப்போகிறது. இன்று நிலமை அதைவிட மோசமாகிக்கிடக்கிறது. முக்கியமாக முகநூலில்.

‘எழுத்து’வில் நடையைப்பற்றி பொதுவாசகர்களும் தமிழ் அறிஞர்களும் மிகப்பெரிய அதிருப்தியைத் தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளனர். நவீன இலக்கியத்துறையில் புதிய தடம் பதிக்கமுயன்ற எழுத்து, எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் இதுவும் ஒன்று. பழக்கப்படாத இலக்கிய உலகை பழக்கவும் வசப்படுத்தவும் பெரிய சவாலை எழுத்து இதழ் எதிர்கொண்டு, செயலாற்ற வேண்டிய சூழலில் இயங்கியது. எல்லா வகையில் புதுசான மரபை தோற்றுவிக்க ஊக்கத்துடன் போராடியது. இந்த நடைமுறை விவகாரத்தில் செல்லப்பா தொடர்ந்து பதில் எதிர்வினையாற்றினார்.

ஜனரஞ்சக இதழ்களை வாசித்துவந்த வாசகர்கள் கடினப்படுத்தாத வெளிப்படையான, விளக்கத்தன்மை வாய்ந்த, பொழுதுபோக்கு சார்ந்த மகிழ்ச்சியை முதன்மையாகக் கொண்ட எழுத்துக்களை வாசித்து வந்த வாசகர்களுக்கு எழுத்து நடை வாசிப்பிற்குப் பெருந்தடையாக இருந்திருக்கிறது. அத்தோடு அதன் நுட்பமும்; வாழ்க்கை பற்றிய கூடுதல் உண்மைகளை, தேடுதலைப் பார்வையாகவும் கொண்ட இலக்கிய இதழின் புதிய வரவை அவர்கள் முன்பு வாரததால் அவர்களுக்குக் கடினமாகத் தோன்றியதாக அறியமுடிகிறது. தமிழ்ச்சூழலில் கனமான சிற்றிதழ் வாசிப்புதளத்தில் முதன்முதல் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஒரு வரலாறாகப் பதிவாகி இருக்கிறது. தமிழ்ச்சிற்றிதழ்களின் தனித்துவ நடையை அல்லது கனத்தை முதன்முதல் தோற்றுவித்தது எழுத்து இதழ்தான் என்பதை அறிய முடிகிறது. தமிழை ஒழுங்காக எழுதத்தெரியாதவர்களின் கூடாரம்போல ‘எழுத்து’ இதழ் இருப்பதாக தமிழறிஞர்கள், பண்டிதர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு செல்லப்பா பதில் அளித்து வந்துள்ளார்.

“கவிதைக்கு ஒற்றின் உபயோகம், சொற்களைப்பிணைத்து உறவு உண்டாக்கி அந்த உறவால் ஒரு ஓசை நயமும் தாளக்ககட்டும் ஏற்பட்டு, கவிதைக்கு சப்த அழகு ஏற உதவி இருக்கிறது. ‘ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன்’ என்று படிக்கிறபோது தனி இன்பம் கிடைக்கிறது. உரைநடையில் ‘ஆங்குச் (அங்குச்) சென்று பார்த்தான்” என்று எழுதினால்? கவிதையில் இறுக்கம் நெருக்கம் தேவை. வசனத்தில் நெகிழ்ச்சி வீச்சு தேவை. இரண்டிற்கும் தனித்தனி ஓசை நயம். அழுத்த தோரணை, நோக்கப்போக்கு, காரிய விளைவு, உணர்த்தல் பாங்கு” என உரைநடையின் தன்மை வேறாக இருக்கிறது என்று பல்வேறு உதாரணங்களையும் சாமி சிதம்பரனாரின் புதிய உரைநடை கருத்துக்களையும் எடுத்து வைத்து விவாதித்தார். இன்று சிற்றிதழ் நடை சகஜப்பட்டு எல்லா மக்ககளும் ஏற்றுக்கொண்டனர் என்பதும் ஒரு வரலாறு. அந்தவரலாற்றைத் துவக்கி வைத்தது எழுத்து.

பொதுவாக அக்காலத்தில் பண்டிதர்கள் படைப்புமொழி குறித்து ஆழமாகச் சிந்திக்கவில்லை என்றுதான் உணரமுடிகிறது. மரபின் செழுமையைப் போற்றினர். மற்றொரு காரணம் அவர்களிடம் இருந்த மொழிப்பற்று புதிய படைப்பு வடிவங்கள் தமிழுக்கு எதிரானவை என்று நம்பினார்கள். புனைவுமொழியில் மொழித்தூய்மை பேணவேண்டும் என்று வற்புறுத்தினர். “பேசுவது போல எழுதவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களிடம் யார் பேசுவதுபோல எழுதவேண்டும் என்று கேளுங்கள் ‘இஸ்துக்கினு’ என்கிறார்களே அந்த பேச்சுப் போக்கிலா, இல்லை அம்மாமி அத்திம்பேர் பேசுகிற மாதிரியா என்று கேளுங்கள், பதில் பேசாமல் ஓடியே போய்விடுவார்கள்’ என்று கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூறி கரகோஷம் பெற்றார். தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில், அவரைத் தொடர்ந்து பேசிய மகாவித்துவான் திரு.வேணுகோபால் பிள்ளை ஒரு படி முன்ன சென்று, “பேசுவது போல எழுத வேண்டும் என்கிறார்கள். அது சரியல்ல எழுதுவதுபோல பேசவேண்டும்” என்று கூறினார்.

செல்லப்பா இந்த மனப்போக்கை “பேசுவதுபோல எழுதவேண்டும் என்றால் அது கொச்சைப் பேச்சுப் போக்கில்தான் எழுதவேண்டும் என்று எப்படி இவர்கள் முடிவுக்கு வந்தார்கள். கொச்சைக்கு உபயோகம் எந்த இடத்தில் உண்டு என்பதைப் படைப்பாளிக்குத் தெரியும். கதைகளில் வரும் சம்பாஷணையில், கதாப்பாத்திரம் தன் மனப்போக்கில் அகப்பார்வையில் சிந்திக்கையில், ஏன் பிறரிடம் தான் கதை சொல்லும் போது கூட கொச்சை நடையில் அதையும் தேவைக்கு ஏற்ப அளவாகப் பயன்படுத்தியும் மெருகிட்டும் உபயோகிக்கும் பழக்கம் அவனுக்கு உண்டு. ‘குளத்தங்கரை அரசமரம்’ முதல் அவன் தெரிந்து உபயோகிப்பது, முழு எழுத்துப்போக்கையும் கொச்சையாக அடிக்கவேண்டும்’ என்று யாரும் சொன்னதில்லையே. ஆனால் பேசுகிறபடி எழுத வேண்டும் என்று சொல்லப்பட்டு வருவது உண்மைதான். அது இவர்கள் புரிந்துகொள்கிற ‘கொச்சை’ என்ற அர்த்தத்தில் அல்ல. இந்த புலமை வாய்ந்தவர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதுகிறார்களே வாக்கியங்களை அந்த மாதிரியான எழுத்து வழியான அமைப்புப்படி இல்லாமல் பேச்சு அமைதிப்போக்கில் வாக்கியங்களை அமைத்து எழுதவேண்டும் என்பதுதான் பேசுகிறமாதிரி எழுத வேண்டும்’ என்பது. தங்கள் புலமையை வெளிக்காட்டும்படியான பழைய, பழக்கத்தில் இல்லாத சொற்களையும் சொற்றொடர்களையும் வினைமுற்றுக்களையும் உபயோகித்து செயற்கையாக ஒலிக்கும்படி இல்லாமல் எழுதுவது, நாம் சகஜமாகப் பேசுகிற சொற்களையும் அழுத்தம், உறுத்தல், வேகம் இந்தத் தன்மைகளை வெளிக்காட்டும்படியாக நாம் வாக்கியங்களைத் திருத்தி அமைத்து இயல்பான பேச்சுக் குரலின் தொனி வெளிப்படும்படி எழுதுவதுதான் பேசுவது போல எழுதுவது என்பது என்று பதில் தந்தார்.

மேலும், “படைப்பாளி இலக்கணத்தை உடைக்கப் புறப்பட்டவன் அல்ல. அனுபவத்தை, கற்பனையை உணர்ச்சியை வெளியிட முன்வருபவன். இதுவும் தன் ரத்தத்தில் ஓடும் மொழி இயல்பின் பலத்தில் சொல், வாக்கியம், அமைக்க முற்படுபவன். அந்தச் சொல்லும் வாக்கியமும் தேவைக்கு ஏற்ப, உந்துதலுக்கு ஏற்ப சக்திக்கு ஏற்ப அந்தக்காலத்தில் வந்துவிழும். வாக்கியம் உருவாகும். அதில் சொல் பிரயோகம் விதவிதமாய்ப் பிறக்கும். வாக்கியம் தினசுதினுசாக அமையும். சொல்லுக்கு அகராதியும் வாக்கியத்திற்கு இலக்கணம் பிறக்கும். “இதுதான் மொழிவளர்ச்சிப்பாதை” என்று அக்காலத்தில் எதிர்வினையாற்றி யிருக்கிறார்.

தன்னுடைய திறனாய்வுக் கட்டுரைகளிலும், தலையங்கக் கட்டரைகளிலும் செல்லப்பா மதுரையின் வடமேற்கு வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஒரு புனைகதையாளன் மனப்போக்கில் பயன்படுத்தினார். அச்சொற்கள் விசயத்திற்குக் கூடுதல் நெருக்கத்தைத் தந்தன. ‘முறண்டுவதாக’, ‘தாக்காக’, ‘தோரணை’, ‘கற்பனை முறுக்கு’, ‘சரக்கு முறுக்கு’, ‘தினசு’, ‘அதைப்பு’ ‘ஏற்கையான’ ‘சத்தான’ ‘சட்டடியாக’. ‘சண்டும் பதரும்’ போன்ற பல சொற்கள் விமர்சன தொனியை மண்ணோடு பிணைத்தன. இந்தச் சொல்முறை அழகியல் செல்லப்பா தவிர பிற விமர்சகர்களிடம் கூடிவரவில்லை.

பாரதிதாசன் பரம்பரையும் சைவ-வைண பரம்பரையும் மரபுக்கவிதையில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் எழுத்து அடி எடுத்து வைக்கிறது. தமிழ்த்திரையிசையிலும் சந்தக நயங்கள் கண்ணதாசனால் ஒரு உயரத்திற்கு மேலெடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக புதுக்கவிதை எழுத்து இதழ்வழி அரும்புகட்ட துவங்கியபோது கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க  நேர்ந்தது. வாழ்வைப் புதிதான கோணத்தில் வளப்படுத்த முனைந்த ஜெயகாந்தன் ‘அவை தட்டச்சுப் பொறிகவிதைகள்’ என்றார். கண்ணதாசன் ‘தலையற்ற முண்டங்கள்’ என்றார். தமிழர் வாழ்வின் ஆன்மா என்று சொல்லத்தக்க கதைகளை எழுதிய கு.அழகிரிசாமி ‘கவி மரபு தெரியாதவர்களின் கிறுக்கல்’ என்றார். எழுத்து 36வது இதழில் (டிசம்பர் 1961) அதுவரை வந்த புதுக்கவிதைகளைக் கணக்கில் கொண்டு புதுக்கவிதையின் பயணம் குறித்து எழுதினார்.

“எழுத்துவில் சுமார் 90 கவிதைகள் வந்திருக்கின்றன. ‘எழுத்துவில் வெளியான கவிதைகள் பொருள் விளங்காத சொற்கள் பலவற்றால் பிணைத்துக்கட்டப்பபட்ட கரடு முரடான கதம்பமாலைகளாக உள்ளவை’ என்ற ஒரு வாசகரின் கருத்தை புதக்கவிதை பற்றி ஓங்கியடித்துச் சொல்லும் பாதகமான ஒரு வாசகரின் கருத்தை புதுக்கவிதை பற்றி ஓங்கியடித்துச் சொல்லும் படியான ஒரு அபிப்பிராயத்தின் பிரதிநிதித்துவக்குரலாக கருதுகிறோம். இந்த மாதிரிக் கருத்துக்கள் கிணற்றுத்தவளை வாழ்வினால் ஏற்படுவது உலகத்து பல்வேறு மொழிகளிலும் தற்கால கவிதை நிலை எப்படி இருக்கிறது என்பதை உணரமுடிந்தவர்கள் தான் இந்தப் புதுக்கவிதை வளர்ச்சியைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். அன்றைய பாரதியையே கவியாக இன்னும் உணர முடியாத சூழ்நிலையில் இன்றைய புதுக்கவிதை சோதனைக்கார முதல்வன் பிச்சமூர்த்தியையும் எழுத்து மூலம் முளைவிட்டு வளரும் இளம் கொழுந்துகளையும் புரிந்துகொள்ள புதுக்கவிதையின் தன்மைகளை உணரக் கொஞ்சம் போகவேண்டும். எழுத்து மூன்று ஆண்டுகளாக, சலிக்கும்படி கேட்க ஏற்பட்ட இதுபோன்ற கருத்துக்களைக் கண்டு ஆத்திரப்படாது, இந்தக் கருத்து மாறச் செய்யும் முயற்சியாக வழிவகைகளை ஆராய்ந்து செல்வது மூலம்தான் பாரதிக்குப்பின் இந்த புதுக்கவிதை பிறப்பு காலக்கட்டத்தை செழிப்பாக்க முடியும்,” என்று நம்பிக்கையோடு மேடை அமைத்துத் தந்தார்.

சி.மணியின் நீண்ட நகரம் கவிதையை ‘புதுக்கவிதையில் ஒரு மைல்கல்’ என்று தலையங்கத்தில் குறிப்பிட்டு வெளியிட்டார். ந.பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ வந்தபோது புதுக்கவிதையில் இன்னொரு மைல்கல் என்று குறிப்பிட்டார். எழுத்து இதழுக்கு நிரம்ப சிறுகதைகளைச் செல்லப்பா மொழிபெயர்த்தது போலவே ஜான் ஹீத், வால்ட்விட்மன் போன்றோரின் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, மாநாடு, பிறந்தநாள் விழா என வரும் நாட்களில் செய்தித்தாள் வானொலி என அனைத்து சாதனங்களிலும் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த வழக்கமான பட்டிமன்ற கவியரங்க ஜால அரங்குகளுக்கு மாற்றாக அதே கவியரங்கப் பாணியில் ஐந்தாமாண்டு 50ஆம் இதழில் ஒவ்வொரு புதுக்கவிஞரையும் அறிமுகப்படுத்தி கவிதையை வெளியிட்டார். ‘சிறகைவிரி, வாழ்வும் வேடந்தாங்கலாகும்’ என்று கவிதை எழுதிய ந.பிச்சமூர்த்தி ‘கொக்கு’ கவிதை மூலம் ‘செயலும் கலை வாழ்வும் குளம்’ என்று சொல்ல வருவதாக அறிமுகப்படுத்துகிறார். ‘துருப்பிடித்த இதயத்தை துடைக்க வந்த நேரத்தில் துருவேற்றுவோர் எத்தனை’ என்று நகரம் கவிதை மூலம் இன்றைய சமூகத்தின் அவலநிலையைப் பாடிய சி.மணி ஆண்டவனின் இன்றைய வருத்தத்தை ‘பாவம்’ கவிதையில் காட்டுகிறார். இவ்விதம் தி.சோ.வேணுகோபால், டி.கே.துரைசாமி, எஸ்.வைதீஸ்வரன், க.ச.ராமமூர்த்தி என புதுக்கவிதைக்குத் தனித்த பக்கங்களை ஒதுக்கி வெளியிட்டார். ஒரு வகையில் இந்த இதழில் இருந்துதான் புதுக்கவிதை என்ற இயக்கம் தெளிவான அறிதலோடும் பிடிமானத்தோடும் காலூன்றி நின்றுவிட்டதைத் தெளிவுபடுத்தினார். ‘இரண்டாயிரம் ஆண்டு தமிழின் கவிமரபை கெடுக்க வந்திருக்கிறான்.’ என்றெல்லாம் வசைமாறி பொழிந்து கொண்டிருந்த சூழலில், வசைமொழியால் நொந்து பின்னடிக்காமல் தன் நோக்கத்தில் இம்மியளவும் பிசகாமல் புதுக்கவிதை இயக்கம் பெருக்கெடுக்க எழுத்துவின் பக்கங்களை ஒப்புக்கொடுத்து வளர்த்தார்.

செல்லப்பா ஒவ்வோராண்டும் எழுத்து இதுவரை என்ன சாதித்தது என்ற சுயமதிப்பீட்டை, வாசகர்களின் விமர்சன மதிப்பீட்டை வெளிப்படையாக முன்வைத்தே வந்துள்ளார். 1964-ல் ஐந்தாண்டு பயணத்தை முடித்து ஆறாம் ஆண்டில் எட்டு வைக்கும்போது அவர் வைத்த சுயமதிப்பீடு இது: “…… இலக்கியப் படைப்பைப் பார்க்க, குணம் காண, மதிப்பை அறிய எங்கெல்லாமே என்ன அறிவு அளவுகோல்களை ஓரளவுக்குக் கையாண்டு செயல்முறை விமர்சன கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறது. இது போதாது. இன்னும் ஆழ்ந்து பார்த்து, செய்ய வேண்டும்…”

“…. எழுத்து, சிறுகதைக்கு ஏதோ செய்யப்போகிறது என்று எதிர்பார்த்த வாசகர்களைப் போலவே நாமும் நினைத்தோம். ஆனால் இது இந்த ஐந்தாண்டுக் காலத்தில் நிறைவேறாத காரியம். காரணத்தை ஆராய வேண்டியதில்லை. நடந்தது அது. இந்த நிறைவேறாமையை மனதில்கொண்டு, சிறுகதைத்துறையில் இந்த ஆண்டில் (1964) ஏதாவது செய்ய முயன்று சாதிக்க முடிகிறதா, பார்ப்போம்.”

“ஆனால் இந்த ஐந்தாண்டு காலத்தில் எதிர்பாராத வெற்றி எழுத்துக்கு கிடைத்திருக்கிறது – கவிதைத்துறையில். புதுக்கவிதை – அப்படி இனி சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. தற்கால கவிதை என்று சொல்ல வேண்டும். நயாபைசா இனி பைசாவாக மாறப்போவது போல, ஐந்து வருசமாக பெருகி ஒரு மரபுக்கு வகை செய்துவிட்டது. இதை, எழுத்து சாதித்திருப்பதாக வாசகர்கள் பாராட்டுகிறார்கள். டெல்லியில் இருந்து வரும் ‘தாட்’ பத்திரிக்கையில் தமிழில் புதுக்கவிதை (நியூஸாயட்ரின் தமிழ்) என்ற கட்டுரை வருமளவு தற்கால கவிதைக்கு மதிப்பு கிடைத்துவிட்டது”

“இந்த ஐந்தாண்டு காலத்தில் நுண்ணுணர்வோடு இலக்கியங்களைப் படித்து ரசிக்க ஏதுவாக எழுத்து தன் வாசகர்களை இம்மி அளவுக்காவது தயார்படுத்தி இருக்குமானால் அதுபோதும் இந்த ஐந்தாண்டுகால எழுத்து வாழ்வுக்கு” என்று தன் உழைப்பை கண்ணியத்தோடு முன்வைத்தார் செல்லப்பா. புதுவெள்ளமென புதுக்கவிதை பெருக்கெடுக்கத் தொடங்கியபோது தடைபோட்ட அணைபோட்ட க.கைலாசபதியும், நா.வானமாமலையும், தி.க.சியும் கைமீறி முற்போக்கு படைப்பாளிகளிடம் வெளிப்பட்டபோது வரவேற்புரைகளோடு இவர்களின் கவிதைகளுக்கு உயர்மதிப்பீட்டையும் வழங்கினர். புதுக்கவிதையின் வளர்ச்சியை வேறு முகாம்களும் ஏற்றுக்கொள்ளும்படி ஆயிற்று. இது செல்லப்பாவின் சாதனை.

செல்லப்பா சிறுகதை ஆசிரியர். அவ்வடிவத்தின் மீது அவருக்கு அளவு கடந்த காதலும் உண்டு. சிறுகதையை பெரிய வீச்சுள்ள சக்தியாக மாற்றிய மணிக்கொடிக்காரர்கள் மீது அபரிதமான மதிப்புண்டு. சிறுகதையாளர்கள் குறித்தும் சிறுகதை குறித்தும் தரமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். எழுத்து இதழில் தரமான புதிய சிறுகதைப் படைப்புகள் வருவதற்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்தார். தரத்தைப் பேணியதால் குறைவான கதைகளே இடம்பிடித்தன. ஆனால் மூத்தப் படைப்பாளிகளின் மிகச்சிறந்த கதைகளைத் தேடி கண்டுபிடித்து மறுபிரசுரம் செய்தார். எழுத்துவிற்காக மேலைநாட்டுக்கதைகளை ஆவேசத்தோடு மொழிபெயர்த்து வெளியிட்டார். சிறுகதைத்துறையை வளப்படுத்த இவ்வித பணிகளைத் தீவிரத்தோடு செய்தார். ஆரம்பத்தில் ஆர்.சூடாமணி, த.ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ரா. ஒவ்வொரு கதை தந்ததோடு சரி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், பங்களிப்பு செய்யவில்லை. விகடன், கல்கி, தினமணிக்கதிர், கலைமகள், குமுதம் போன்ற இதழ்களில்தான் இவர்களின் கதைகள் வெளிவந்தன. இது விசயத்தில் செல்லப்பாவின் விருப்பம் நிறைவேறவில்லை. இந்த விருப்பத்தை மிகச்சிறந்த மேலைநாட்டுக்கதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்துத் தணித்துக் கொண்டார்.

எழுத்துவைத் தொடர்ந்து கொண்டுவர செல்லப்பா செய்திருக்கும் தியாகம் ஒப்பிட முடியாதது. தன் முழு உழைப்பையும் சந்தாதாரர்களின் உதவியையும் மட்டுமே மூலதானமாகக்கொண்டு நடத்திய எழுத்துவிற்கு சோதனைகள் திடீர் திடீர் என வந்தன. செல்லப்பா அதை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு நடத்தினார். எழுத்து 60பதாவது இதழைத் தொடும்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்ததை செல்லப்பா குறிப்பிடுகிறார். “சந்தாதாரர்களை மட்டுமே நம்பி வளர்ந்து வரும் எழுத்துவிற்கு இலங்கையில் உள்ள வாசகர்கள் நூற்றி இருபத்தைந்து பேர்களது சந்தாப்பணம் கிடைக்க வகையில்லாமல் போய்விட்டது. வி.பி.பி.மூலம் தனிப்பட்டவர்கள் எழுத்துக்கு சந்தா கட்ட இயலாத ஒரு நிலையை சர்க்கார் ஏற்படுத்திவிட்டது. ஏஜென்ஸி வழியும் சரிப்பட்டு வரவில்லை. இலங்கை ஆதரவு இந்த ஆண்டு கிடைக்காமல் போய்விட்டது.” சிரமத்தோடுதான் கடைசிவரை வெளிவந்திருக்கிறது. இதற்கு செல்லப்பா செய்து கொண்ட சமாதானம் முக்கியமானது.

“நூற்றி இருபத்தைந்து இலங்கை சந்தாதாரர்கள் நின்று போய்விட்ட நிலையில் எழுத்துக்கு இப்போது இருநூற்று இருபத்தைந்து சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இதைவிட குறைந்த சந்தாதாரர்தொகை எந்த பத்திரிக்கைக்கும் இருக்க முடியாது. இலக்கியப் பத்திரிக்கைகளின் அதுவும் எழுத்து போன்ற தனிவழி பத்திரிகையின் சரித்திரம் இப்படித்தான். இலக்கிய விழிப்பு ஆழமாகவும், அதிகமாகவும் உள்ள மேல்நாடுகளிலேயே இது மாதிரியான பத்திரிக்கைகளின் சரித்திரம் இப்படித்தான் இருக்கிறது. இது நமக்கு ஆறுதல் கொள்வதற்கான தகவல் அல்ல. ஊக்கம் அளிப்பதான தகவல்.

ஆகவே ஊக்கத்துடன் எழுத்து தன் ஆறாவது ஆண்டிற்குள் நுழையும். அறுபத்தோராவது ஏட்டுடன் விரியும். அந்த உறுதியை வாசகர்களுக்கு அளிக்கும் அதே வாயால் இதையும் சொல்கிறேன். கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆண்டுக்கு சந்தா அனுப்புகிறபோது ஒவ்வொருவரும் அவசியம் ஒரு அன்பளிப்பு சந்தாவும் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்தால் இரண்டுவிதமாக உதவும். இந்த ஆண்டு கைக்கடிப்பை சரிகட்டவும், அதே சமயம் சந்தாதாரர் தொகையை பெருக்கவும் உதவும். இந்த அன்பளிப்பு சந்தா ரூ.4 தான். ஒவ்வொரு அன்பரிடமிருந்தும் ஒன்பது ரூபாய்தான் நான் எதிர்பார்க்கிறேன். எழுத்துவின் ஆறாம் ஆண்டு வளர்ச்சி உங்கள் கையில்தான் இருக்கிறது.” என்று அறிக்கை வெளியிட்டு விடாபிடியாக மறுபடி ஆறு ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். ஆனால் செல்லப்பா எதிர்பார்த்தபடி சந்தாதாரர்கள் கை ஓங்காமலேத்தான் இருப்பவர்களை வைத்துக்கொண்டு வைராக்கியமாக நடத்தியுள்ளார்.

சந்தாதாரர்களாக இரண்டாயிரம் பேரை சேர்த்து விட்டால் எழுத்துவை இன்னும் கனமாக, அதிகப்பக்கங்களுடன் கொண்டு வந்துவிடலாம், என்று சந்ததாரர்களைத் தேடித்தேடி அலைந்தார். வாசகர்கள் தங்கள் ஊர்க்கடைகளில் பத்து பத்துப் பிரதிகளைக் கடைகளில் வாங்கிப்போட்டு பரவலாக்க முடியும் என்று யோசனை வைத்தார். அவரே சில கடைகளில் போட்டு நடையாக நடந்தார். ஒவ்வொரு ஊரிலும் நேசத்திற்குரிய எழுத்து வாசகரை அழைத்துக்கொண்டு வீதிகள்தோறும் நடந்தார். என் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த கி.அ.சச்சிதானந்தன் மௌனி பற்றியும், செல்லப்பா பற்றியும் நிரம்ப பேசினார். “கூன் விழுந்த முதுகுடன் நிறம்மங்கி குருட்டழுக்குப் பட்ட கதராடையில் தோள்நோக புத்தகப்பைகளைச் சுமந்தே வாசகர்களை நோக்கி நடந்த கால்கள் அவருடையவை. கை மாற்றிக் கொள்ள கொஞ்சம் வலி குறைய பைகளைக் கேட்டால் தரமாட்டார். வந்ததால நீ கேட்கிற வரலையன்னா நான்தானே சுமக்கணும்.” என்றவர், “பயங்கரமாகக் கத்திப் பேசுவார். கோபப்படமாட்டோம். அது அன்பின் மிகுதி என்று தெரியும். அதனால் நானும் முத்துசாமியும் செல்லப்பாவின் பின்னால் எழுத்து இதழ்களைச் சுமந்தபடி சென்னையில் உள்ள சிறு சிறு கடைகளுக்குப் போட நடந்தே வெயிலில் செல்வோம். தாகம் நாக்கை வறட்டி எடுக்கும். ஒரு காபியோ, ஒரு கோலிசோடாவோ வாங்கித் தரமாட்டார். ஏனென்றால் அவரிடம் துட்டு இருக்காது. கேட்கவும் மாட்டோம். இதழ் நடத்துவதற்கான எந்த வலுவான பின்னணியும் இல்லாமல் தன் ஓயாத உழைப்பினாலே எழுத்துவைத் தொடர்ந்து நடத்தினார்” என்றார். மதுரையில் கர்ணன் என்கிற மூத்த எழுத்தாளர் இருக்கிறார். மாற்றுத் திறனாளியும் கூட. அவரை அழைத்துக்கொண்ட சந்தாவிற்காக கடைகளுக்கும் புதிய வாசகர்களின் வீடுகளுக்கும் அலைந்தார். இது கர்ணன் என்னிடம் நேர்பேச்சில் சொன்னது.

பின்னாளில் நடந்தது என்னவென்றால் எழுத்து இதழ் ஒருமாதம்விட்டு ஒரு மாதம் வரத்தொடங்கியது. எழுத்துவை கடைகளுக்குப் போட ஆசைப்பட்டு பக்கங்களை அதிகப்படுத்தி பிரதிகளையும் அதிகப்படுத்தினார். இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ‘கடைகளின் பத்திரிகை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் வெற்றிலைப் பாக்கு, சிகரெட் பழக்கத்தால் வாங்க வருவதுபோல குமுதம், விகடன், கல்கி வாங்கும் பழக்கத்தால் வருகிறார்கள். அவர்கள் சுத்த இலக்கியத்தை முன்வைக்கும் எழுத்துவை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.” நேரடி கடை விற்பனை பெரும் நஷ்டத்தைத் தொடங்கிவைத்தது. என்றாலும் செல்லப்பா பழைய சந்தாதாரர்களிடம் இரண்டு இரண்டு புதிய சந்தாதாரர்களைக் கொண்டு வாருங்கள் எழுத்துவைச் சிறப்பாகக் கொண்டு வருவேன் என்றார். இந்தக் கனவு இறுதிவரையிலும் கனன்று கொண்டுதான் இருந்தது. அச்சடித்து தயாரான இதழில் பிழைகளைக் கண்டபோது அனுப்ப வைத்திருந்த அத்தனை இதழ்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு இதழை செம்மையாக்கி திரும்ப அச்சடித்து அனுப்பிய சலிக்காத உழைப்பாளி செல்லப்பா என்று சு.ரா.குறிப்பிடுகின்றார்.

எழுத்து 100வது இதழில் செல்லப்பா, “முப்பதுகள் கால இலக்கியச் சூழலை மணிக்கொடி இதழ் தீர்மானித்து, ‘மணிக்கொடிக்காலம்’ என்ற காலவரலாற்றை உருவாக்கியது போல இந்த அறுபதுகள் காலத்தை ‘எழுத்து’ என்ற இதழ் தீர்மானித்தது என்று பின்னாளில் எவரேனும் எழுதக் கூடுமானால் என் பாடுபொருளுள்ளதாக ஆகும். இப்போதைக்கு இது தற்பெருமையாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். எழுத்து ஒரு செஞ்சுரி போட்டிருக்கிறது. இரட்டைச் செஞ்சுரி போடவேண்டும் என்று இந்த கணத்தில் தோன்றுகிறது. அது இலக்கியத்திற்கு எழுத்து என்ற அணில்பிள்ளை செய்த சிறுபங்காக அமையும். ‘ஸிக்ஸர்’, ‘பவுண்டரி’ போட்டு வேகமாக எட்டிப் பார்க்க முடியாது. ஒவ்வொரு ரன்னாகத்தான் எடுக்க வேண்டி இருக்கிறது. நடுவில் பெளல் ஆகாமல் லட்சியத்தை அடைய எழுத்து வாசகர்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று தன் மகிழ்வான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பத்தாண்டு தாக்குப்பிடித்து நின்ற எழுத்துவின் 112 ஆவது இதழில் இப்படி எழுதினார். “தன்னைத்தானே பார்த்துக்கொள்ளக்கூட முடியவில்லை. கையைக் கடித்தது. சந்தா மெலிவால் எழுத்து ஈசலிறகுபோல் வந்தது. சென்ற ஆண்டு தடுமாறி வந்தது. இனி காலாண்டு இதழாக இதைவிட கனமாக கொண்டுவருகிறேன். நிச்சயம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்படி தரமான படைப்புகள், மதிப்புரைகள், கட்டுரைகள், சிறுகதைகள் இடம்பெறும், நாம் விரும்பும் வண்ணம் படைப்புகள் கிடைக்கவேண்டும். இந்த புதுமுயற்சியின்படி தடுமாறாமல் கொண்டுவர முயல்கிறேன். எழுத்து நண்பர்கள், புது சந்தாதாரர்களை இதில் இணைத்துவிடுங்கள் போதும்” என்று எழுதினார்.

சொன்னபடி சிற்றிதழ் வரலாற்றிலேயே முதன்முதல் மிக கனமான இதழ்களாகக் கொண்டுவந்தார். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் செல்வம் என்ற பெயரில் சி.மணி எழுதிய ‘இலக்கியத்தில் கண் வர்ணனை’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 20 பக்க அளவில் வெளியிட்டார். மிகச்சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை அது.

இன்றும் இந்த விதத்தில் ஒரு சிற்றிதழ் அப்படியான ஒரு கட்டுரையை வெளியிடாது. எட்டுப்பக்க அளவில் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவல் பற்றிய ஆய்வுக் கட்டுரையும் வெளிவந்தது. நாவல் இலக்கியத்தையே பெரும் மதிப்பிற்குரியதாக அக்கட்டுரை மாற்றியது. இந்த இரு கட்டுரையை மட்டும் இன்று நூல் வடிவில் கொண்டு வரவேண்டுமென்றால் 80 பக்கங்கள் வரை வரும். காலாண்டிதழ்கள் ஒவ்வொன்றும் அடர்த்தியாக வந்தன. முழுக்க முழுக்க கனமான ஆய்விதழாக மாற்றம் கண்டது. இந்த சமயத்தில் கல்லூரிகளுக்கு எழுத்து வெளியீடுகளை விற்பனை செய்ய நடையாக நடந்தார். பேராசிரியர்களை சந்தாதாரர்களாக்குவது எளிது என்ற நம்பிக்கை; தமிழகத்தில் 100 தமிழ்ப் பேராசிரியர்களைச் சந்தாதாரர்களாக்கிவிட்டால் எழுத்துவை ஜாம்ஜாம் என்று நடத்தலாம் என்ற வேகம். பேராசிரியர்கள் இதழை வாங்கிப் புகழ்ந்தார்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் கதர்துணி விற்கும் காந்தியவாதிபோல தோன்றுவதாகச் சொன்னார்கள். சந்தாதாரர்களாக மட்டும் ஆகவில்லை. கவிப்பரம்பரையில் மூழ்கி இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு இலக்கிய விமர்சனத்திற்கான இதழ் தேவையில்லை என்று விட்டுவிட்டனர். செல்லப்பாவுடன் அடிக்கடி இலக்கிய சமர்புரிந்த க.நா.சு. பல்கலைக்கழக பேராசிரியர்களும் பண்டிதர்களும் நவீன இலக்கியத்திற்குச் செய்திருக்கும் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டுமானால் ‘எழுத்து’ போன்று ஒரு இதழை நடத்துவதுதான் வழி” என்றார் பின்னாளில்.

செல்லப்பா இளம்படைப்பாளியாக இருந்தபோது அக்காலத்தில் வந்த இதழ்களைப் பற்றிய நினைவை இப்படிப் பகிர்கிறார். ‘மணிக்கொடி’ மரபில் வந்த கடைக்குட்டிக்கு முந்தினது ‘எழுத்து’. மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், தேனி, சக்தி, சிந்தனை, சந்ரோதயம், சரஸ்வதி, இலக்கியவட்டம், இதெல்லாம் சென்ற சுமார் முப்பத்தைந்து ஆண்டுக்காலத்தில் இன்றைய இலக்கியம் வளர்த்த சின்னப் பத்திரிகைகள். அத்தனை சின்னப் பத்திரிகைகளும் அதனதன் தனித்தன்மையான உத்தேசங்களுடன் சோதனைகளுடன் சாதனைகளுடன் இன்றும் தொடர்ந்து நடமாடிக் கொண்டிருக்குமானால்? இவை மீண்டும் வெளிவந்து தங்களைப் பெற்றெடுத்தவர்கள் கையிலேயே வளர்ந்து இன்று தமிழ்மனம் பரப்பக்கூடுமானால்? கனவுதான் இது. நனவாகக்கூடாது என்பதில்லையோ?”

இப்படியொரு எண்ணத்தை எழுத்துவின் தீவிர பங்களிப்புக் காலத்தில் செல்லப்பா வெளியிட்டிருக்கிறார். இன்று ‘எழுத்து’ வால்யூம்களைத் தொட்டுத் தடவிப்பார்க்கும் போது கடைசி இரண்டு ஆண்டுகளில் வெறும் 100 சந்தாதாரர்களுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்த எழுத்து நின்றபோது அந்த இழப்பை எப்படி எதிர்கொண்டிருப்பார். நின்றுபோன மகத்தான மானுடக் கனவுதான் மற்றொருவரின் உள்ளத்தில் சுடர் ஏற்றி ஒருசிறு பத்திரிகையைத் தோற்றுவிக்கிறது. செல்லப்பா என்ற கனவுதான் சிறுபத்திரிகை இயக்கமாக 50 ஆண்டுகள் தமிழ்ச்சூழலில் கோலோச்சியது. எழுத்து என்ற இதழ் தோன்றாமல் இருந்திருக்குமானால் இது நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே. நவீன இலக்கியத்திற்கு செழுமையான மரபை தோற்றுவித்த செல்லப்பாவின் பணி மகத்தானது.

119 இதழ்களுடன் நின்றுவிடும் என்று செல்லப்பாவே நினைத்திருக்கமாட்டார். அதற்கு முந்திய 118 இதழ்களில்தான் எவ்வளவு உற்சாகம்! எவ்வளவு தன்னம்பிக்கை! லட்சியக்கனவு! வெளிப்பட்டிருக்கிறது. “சென்ற ஐம்பது வருஷ காலத்தில் தமிழ் இலக்கியப் பத்திரிகை உலகில் ஒரு சின்ன பத்திரிகைக்குக் கிடைத்திருக்கும் ஒரு தனித்த வாய்ப்பு. ஒரு சாதனை என்றுகூட சொல்லலாம். ஆனால் இந்தச் சாதனையைப் பெற எழுத்து அதிகவிலை கொடுக்கத்தான் இருந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக எழுத்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை இன்றும். என் கையை நிறைய கடித்திருக்கிறது. லட்சியவேகத்தில் அதைப் பிடிவாதமாக நடத்திக்கொண்டு வந்திருக்கிறேன். அந்த வேகம் இன்றும் எனக்குத் தனியவில்லை; குறையவில்லை. நான் சந்திக்கும் யார் யாரோ எழுத்துவைப் பார்த்ததாக படித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் என் சந்தா பட்டியலில் இல்லை.

மறைந்துவிட்ட இலக்கிய சாதனை பத்திரிகைகளைப் பற்றிப் புகழ்வதும் வியப்பதும் மணிக்கொடி மரபாகவே தொடர்கிறது.

எழுத்தும் நானும் ஒன்றுசேர்ந்து எழுபதில் தொடர் நடைபோட இருக்கிறோம். நான் வேறு எதுவும் கேட்கவில்லை. ஒவ்வொருவரும் எழுத்துக்கு சந்தாதாரராகச் சேரவேண்டும் என்பதுதான் நான் கேட்பது. சந்தா ஆதரவிலேயே எழுத்துவும் நானும் வளர முடியும். வாழ முடியும்” என்றார்.

கைகொடுக்க சந்தாதாரர்கள் இல்லை. செல்லப்பா தான் வளர்த்த 12 வயது எழுத்துக் குழந்தையைத் தன் கையால் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தனியனாகப் புதைத்து ஒதுங்கிக்கொண்டார். செல்லப்பாவைப் போல அவர்தம் இலக்கிய முன்னோடிகளைக் கொண்டாடியவர்கள் எவரும் இல்லை. முன்னோடி இதழ்களைப் போற்றியவரும் இல்லை. செல்லப்பாவையும் அவரது அசாத்தியமான இலக்கியப் பணிகளையும் கொண்டாடத்தான் ஆள் இல்லை. ஒவ்வொரு சிற்றிதழின் மறைவிற்குப் பின்னும் செல்லப்பாக்களின் சொல்லப்படாத கதைகள் உண்டு. எப்படியேனும் இதழைக்கொண்டு வந்துவிட அவர்கள் பட்ட பாடுகள், கனவுகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், தன் படைப்பாற்றலைத் தீய்த்துக்கொண்டு உழைத்த உழைப்புகள் எல்லாம் அவ்விதழ்களின் அடியில் எழுதப்படாமல் விட்டுச் சென்றுள்ளதாகவே தோன்றுகிறது.

119 இதழ்கள்; 520க்கும் மேற்பட்ட கட்டுரைகள்; 750க்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள், 20 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (பெரும்பாலும் செல்லப்பா மொழிபெயர்த்தவை) 100க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு கவிதைகள். பல நாடகங்கள், இலக்கிய ஆளுமைகள் குறித்த பல நினைவு சிறப்பிதழ்கள்; இலக்கியத் துணுக்குகள்; விவாத அரங்கக் கடிதங்கள்; புதுக்கவிதை குறுங்காவியங்கள்; ஏராளமான மதிப்புரைகள். இதழுக்கு இதழ் இலக்கியத் தலையங்கங்கள்; முன்னோடிகளின் பேட்டிகள்; எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் படிக்கும் வாசகர்கள் பாக்கியவான்கள். எழுத்துவின் பக்கங்கள் ஏ4 வடிவில் 3500க்கு மேல். இன்று புத்தக வடிவில் யோசித்தால் 6000 பக்கங்கள் வரலாம். செல்லப்பா என்ற தனிமனிதனின் இடையறாத உழைப்பு இது. மகத்தான சாதனை.

இந்த எழுத்துவின் வழி தருமு சிவராமு, வெங்கட்சாமிநாதன், சி.மணி, ந.முத்துசாமி, நகுலன், சுந்தரராமசாமி, எஸ்.வைதீஸ்வரன், கி.அ.சச்சிதானந்தன், சி.கனகசபாபதி, எம்.பழனிச்சாமி என்று புத்தம் புதிய இளந்தலைமுறை தோன்றிப் பின்னாளில் பெரும் ஆளுமையாளர்களாகத் தோன்றி மிளிர்ந்தார்கள். இவர்களுக்குப் பாலூற்றி வளர்த்ததாய் எழுத்து. திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள 19ஏ வீட்டில் ஒரே ஒருமுறையேனும் காலடி வைத்துவிட்டுவர மனம் உந்துகிறது. எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், செல்லப்பாவைச் சந்திக்க வைத்த வீதி. எழுத்து வாழ்ந்த வீடு அங்குதான் இருந்தது.

எழுத்துவை, செல்லாப்பா எப்படி நேசித்தார் என்பதற்கு ஒரு சம்பவம். எழுத்து இதழ்களை மொத்தமாக மறுபிரசுரம் செய்யும் நோக்கத்துடன் காவ்யா சண்முகசுந்தரம் செல்லப்பாவை அணுகி இருக்கிறார். கொஞ்சம் தயங்கியவர் ‘சரி கொண்டுவா’ என்று ஐந்து வால்யூம்களையும் தூக்கிக் கொடுத்திருக்கிறார். வாங்கிச் சென்ற சண்முகசுந்தரம், அவரது நண்பர் படித்துவிட்டுத்தரவோ, பார்த்துவிட்டுத் தரவோ வாங்கிச் சென்றிருக்கிறார். வாங்கிச் சென்றவரிடமிருந்து எழுத்து திரும்பி வரவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் காவ்யா சண்முக சுந்தரம் செல்லப்பாவை சந்தித்தபோது, ‘எழுத்து’ பதிப்பு என்ன ஆயிற்று என்று கேட்டிருக்கிறார். “நண்பருக்குக் கொடுத்தேன் தொலைத்து விட்டான்” என்றிருக்கிறார். கடுங்கோபத்துடன் “என்னப்பா என்மகளை உனக்குத் தந்தேன். அவளை ஊரானுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டாயே” என்றிருக்கிறார். செல்லப்பாவின் லட்சியக்கனவைத் தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சண்முக சுந்தரம் சொல்லியிருக்கிறார்.

செல்லப்பா, தனக்குள் இருந்த இயல்பான மனப்போக்கை யதார்த்தத்தின் உண்மை நிலையைக் கண்டு மாற்றிக்கொண்டு செயல்பட்டவர் என்பதற்கு எழுத்துவின் இயக்க ஆண்டுகளில் பார்க்க முடியும். இரண்டாண்டிற்கு ஒருமுறை புதிய அணுகுமுறை, புதிய படைப்பு முயற்சியோடு வருபவர்களுக்கு இடம் அளித்து பார்வையை விசாலப்படுத்தியுள்ளமையை எழுத்து இதழ்களைப் புரட்டுகிறவர்களுக்குத் தெரியவரும். எழுத்து இதழைக் கொண்டு வருவதில் அவர் கடைசிவரையில் ஆவேசத்துடனும் வெறித்தனமாகவும் செயல்பட்டார். தமிழ்ச் சூழலில் எழுத்து ஓர் அபூர்வமான வரலாற்று நிகழ்வாகிப்போன தருணத்தில் அது நின்றுபோகும்படியாக ஏற்பட்ட நிலையை அதன் இறுதி ஆண்டுகளில் எழுதிவந்த இளைஞர் வி.து.சீனிவாசன் “நூறு அடிக்கம்பத்தின் உச்சியில் மாட்டிக் கொண்டார்” என்று குறிப்பிட்டார். இறங்கவும் வழியில்லாமல் ஏறவும் வழியில்லாமல் இலக்கிய சாதனையை நிகழ்த்திய செல்லப்பாவின் நிலையைப் படிமமாக்கியுள்ளார்.

தீராத வறுமை; இனிமேலும் முதல் போட முடியாத நிலைமை செல்லப்பாவை ஒரு கட்டத்தில் இயங்கவிடாமல் முடக்கியது. எழுத்து நின்றது. ஆனால் அதன் பின்புதான் தமிழகத்தின் மூலைமுடக்கிலிருந்தெல்லாம் சிற்றிதழ்கள் கிளம்பின. அவற்றின் வருகையும், மறைவும் சிற்றிதழ் வரலாற்றில் இயல்பாயின. ஒரே ஒரு இதழோ, ஏழு இதழ்களோ, 15 இதழ்களோ ஆவேசத்தோடு எழுத்துவின் புதைகுழியிலிருந்து காலடி மண் எடுத்து பூசிக்கொண்டு வந்தன. நம் கண்முன் அண்மைக்காலங்களில் வந்து நின்றவைதான் எத்தனை! ‘வைகை’ ‘நிகழ்’ ‘இன்று’ ‘திசைகள்’ ‘ங்’ ‘புது யுகம் பிறக்கிறது’ ‘அன்னம் விடுதூது’ ‘நாவாவின் ஆராய்ச்சி’ ‘மீட்சி’ ‘கொல்லிப்பாவை’ ‘புதிய நம்பிக்கை’ ‘நிறப்பிரிகை’ ‘பறை’ ‘களம் புதிது’ ‘கோடாங்கி’ ‘கல்வெட்டுச்சோழன்’ ‘குதிரை வீரன் பயணம்’ ‘கவிதாசரண்’ ‘அட்சரம்’ ‘மழை’ ‘தமிழினி’ ‘பன்முகம்’ ‘சதுரம்’ ‘வேர்கள்’ ‘சொல்புதிது’ ‘நாடகவெளி’ ‘லயம்’ ‘சிலேட்’ ‘வேர்கள்’ ‘புனைகளம்’ ‘வித்யாசம்’ ‘ஆரண்யம்’ ‘361’ ‘பனிக்குடம்’ ‘அணங்கு’ என 2000 வரைக்குமாக சிற்றிதழ்களின் ஆதிக்கம் ஓங்கி வெளிப்பட்டது. ‘விசை’ ‘கதைசொல்லி’ என வருவதும் நிற்பதுமாக எத்தனையோ இதழ்கள். இடைநிலை இதழ்களின் வருகையும், இணையத்தின் வரவும் சிற்றிதழ் இயக்கத்தை மட்டுப்படுத்தியது. என்றாலும் ‘மணல்வீடு’ ‘கல்குதிரை’ போன்ற இதழ்கள் இன்னும் கனமான விசயங்களோடு வருகின்றன. எழுத்திற்கு நிகராக ஒன்றை இப்போதைக்கு சொல்ல வேண்டுமென்றால் கோணங்கியின் ‘கல்குதிரை’யைச் சொல்லவேண்டும். செல்லப்பாவின் மறு உருவமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கோணங்கி. அவர் எழுத்தின் மீது விமர்சனங்கள் இருக்கலாம். அவர் இழுத்து வந்த கல்குதிரை என்ற பெருந்தேரின் இலக்கிய பணி குறித்து மாற்றுக்கருத்து இல்லை. ‘காலச்சுவடு’ இதழின் பணி தனியானது. ‘உயிர்மை’ ‘உயிரெழுத்து’ ‘காக்கை சிறகினிலே’ ‘புதுப்புனல்’ ‘செம்மலர்’ ‘தாமரை’ ‘புத்தகம் பேசுகிறது’ என்றொரு வரிசையும் இலக்கிய செயல்பாடுகளில் தொடர்கின்றன. இணையத்தின் வருகை செல்லப்பா உருவாக்கி விட்டுச்சென்ற சூழலை ஸ்தம்பிக்கச் செய்கிறது. ஜனரஞ்சக அச்சுச்சூழலில் உருவான ஜனரஞ்சக எழுத்துப் பெருக்கத்திலிருந்து க.நா.சு, சி.சு.செல்லப்பா இலக்கியத்தை மீட்டெடுத்ததுபோல இன்றைய இணையச் சூழலில் கொட்டப்படுவனவற்றையெல்லாம் இலக்கியம் என்று கொண்டாடப்படும் போலிகளிலிருந்து எந்த ரட்சகன் ஒருவன் வந்து உன்னதமான இலக்கியத்தை மீட்டெடுத்து இயக்கமாக மாற்ற இருக்கிறான் என்பதைத்தான் எதிர்பார்க்க வேண்டிய சூழலாக இருக்கிறது.

அட்டைப்படம் இல்லாமல் புகைப்படங்கள் இல்லாமல் ஆழமான விசயங்களை மட்டுமே முன்வைத்து முழுக்க 11 ஆண்டுகளுக்கும் மேல் எளிய வடிவில் எழுத்துவைக் கொண்டுவந்தது ஒரு வரலாற்றுச் சாதனை. ஒரு சிற்றிதழ் ஆசிரியராக செல்லப்பாவின் பணி அளப்பரியது. அதே சமயம் லட்சிய மனம் கொண்ட படைப்பாளியாக இறுதிவரை இயங்கியபடி வாழ்ந்து மடிந்ததும் இங்கு அபூர்வமானதாகவே இருக்கிறது.

***

வாழ்வதற்கு செல்லப்பா தனக்குத் தெரிந்த தொழில்கள் வழி எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் செய்தார். கையால் காகிதம் செய்வதோ, ‘தக்ளி’யில் நூல் நூற்பதோ, பஞ்சினால் அழகான பொம்மைகள், பறவைகள், முயல், நாய் செய்து கூடையில் அடுக்கித் தெரு வழியாக விற்பதோ, வீட்டுத் தோட்டத்தில் பாடுபடுவதோ எதையும் விரும்பி தீவிரமாகச் செய்தார். பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். காந்தியின் கொள்கை அவரை ஒரு லட்சியவாதியாக உருவாக்கியது. அந்த லட்சிய குணம் இலக்கியத்தில் மடைமாறியதும் இலக்கியத்திற்கு தன் தியாகத்தை கடைசி துளிவரைக்கும் அர்ப்பணித்தார்.

இலக்கணம் தெரியாது என்பதால்தான் புதுக்கவிதை என்கிறார் என்று கேலி பேசியபோது தமிழ்ச் செய்யுள் இலக்கணங்களை விடாப்பிடியாகக் கற்று, அப்படி சொல்பவர்களைத் தன்னுடன் விவாதிக்க வரமுடியுமா என்று சவால்விட்டார். தமிழ் சூழலில் புதிய விமர்சன மரபை உண்டாக்க வேண்டும் என்ற வேட்கையில் மேலைநாட்டுத் திறனாய்வு நூல்களைத் தேடித்தேடிப் பார்த்தார். விமர்சகராகவும் ஆனார்.

தன் சொந்த ஊர் எழுத்தாளர்கள் மீது செல்லப்பாவிற்குக் கூடுதல் பிரியம் இருந்தது. ராஜம் ஐயரின் நூற்றாண்டு விழா (1972) வந்தபோது, தனிமனிதனாக நின்று வத்தலக்குண்டில் விழா எடுத்தார். ஐயர் வாழ்ந்த வீட்டின் முன் ‘ராஜம் ஐயர் வாழ்ந்த வீடு’ என்ற வாசகத்துடன் நடுகல் ஒன்றை நண்பர்களோடு சேர்ந்து நட்டார். விழாவை ஒட்டி ராஜம் ஐயரின் ‘ரேம்பிள்ஸ் இன் வேதாந்தா’ என்ற ஆங்கில நூலை உயர்ரக பதிப்பாகக் கொண்டு வந்தார்.

தன் எழுத்தை இளம் வயதில் செம்மைப்படுத்தி வெளியிட்ட பி.எஸ்.ராமையாவை குருவிற்கு மேலாக மதித்தார். ராமையா சிறுகதைக் கலைஞன் அல்ல அவர் ஒரு கதை சொல்லி என்பதை ஏற்க மறுத்து, உலகின் மேலான சிறுகதையாசிரியர்களுடன் ஒருவர் என்று நம்பியதோடு அல்லாமல் அவரே உழைத்து ‘பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். எல்லோரையும் விமர்சன கண் கொண்டு பார்த்த செல்லப்பா, ராமையா மீது அளவில்லா நேசம்கொண்டு படைப்புகளைப் பார்த்தார். ராமையா மீதான பாதகமான விமர்சனத்தைச் செல்லப்பாவால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இது ஒருவகையான நேசிப்பு மனம். உணவுக்கடை ஒன்றில் மணிக்கொடி சிறுகதையாளர்கள் பற்றி சி.கனகசபாபதி விவாதித்தபோது, ‘ஆய்வு முறை விமர்சனம் தேவை என்று ஓயாமல் வலியுறுத்துகிற நீங்கள், மிகச் சாதாரணமான கதைகளை எழுதிய ராமையாவை சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பது சரியா’ என்று கேட்டதும் சட்டென எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டார். கடையின் வெளியில் கூட நிற்கவில்லை. என்ன சார் இப்படி வந்துவிட்டீரே என்று கேட்டபோது “ராமையா சிறுகதைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுகிற ஒருவரோடு எனக்கு நட்பு தேவையில்லை” என்றார். இதே போன்று ஒரு சந்தர்ப்பத்தை திருப்பூர் கிருஷ்ணனும் எதிர்கொண்டிருக்கிறார். “ராமையா சில நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். ‘குங்குமப்பொட்டு குமாரசாமி போல உப்புசப்பில்லாத கதைகளும் பத்திரிக்கைக்கு பண்ணியிருக்கிறார். என்ற போது, செல்லப்பா சட்டென திரும்பி சுவரைப் பார்த்து அமர்ந்து கொண்டாராம். அறையில் கனத்த அமைதி நிலவ, கிருஷ்ணன், “சரிங்க சார் இராமயாவைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம்” என்று சமாதானம் சொல்ல “அப்ப சரி” என்று திரும்பி அமர்ந்திருக்கிறார். “என்னடா செய்ய, ராமையாவை குறை கூறினால் என் மனசு ஏற்க மறுக்கிறது.” என்றிருக்கிறார்.

கோவை ஞானிக்கு செல்லப்பா மீது அளவுகடந்த மரியாதை உண்டு. எழுத்து இதழ்தான் ‘நிகழ்’ என்ற சிற்றிதழைக் கொண்டுவரத் தூண்டியது என்று சொல்லி இருக்கிறார். ஒரு சமயம் செல்லப்பா உடல் நலம் குன்றி வறுமையில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதைக் கேள்வியுற்ற ஞானி 1000 ரூபாய் மணியாடர் செய்துள்ளார். செல்லப்பா அப்பணத்தைத் திருப்பி அனுப்பிவைத்து விட்டாராம். “இந்த சமயத்தில் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். உடனே திருப்பி அனுப்பிவிட்டார். என் மீது அவருக்கு அன்பு உண்டு. என் விசயத்தில் அவர் அப்படி செய்திருக்க வேண்டியதில்லை. இப்படி செய்வார் என்று நினைக்கவும் இல்லை. என் மனதிற்கு அப்போது வருத்தமாக இருந்தது” என்றார். இதே விசயத்தை வல்லிக்கண்ணனும் பதிவிட்டிருக்கிறார்.

தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை நீண்ட காலம் வாங்காது இருந்த செல்லப்பா நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கியும், பிற்காலத்தில் செல்லப்பாவின் துணைவியார் மீனாட்சி அம்மாளுக்கு அது பயன்படுமே என்பதால் வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

சிறிய பெரிய இலக்கிய அமைப்புகள் செல்லப்பாவை கௌரவிக்க வந்தன. கோவை ஈ.எஸ்.தேவசிகாமணி, முதுபெரும் எழுத்தாளருக்கான பாராட்டுப்பணம் தர முன்வந்தபோதும், சென்னை அக்னி அட்சர, சிந்து அறக்கட்டளை, இலக்கியச் சிந்தனை என அமைப்புகள் விருது அளிக்க முன்வந்தபோது அனைத்தையும் நிராகரித்தார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு ஒரு லட்சம் தொகை கொண்ட இராஜராஜன் விருது வழங்கப்பட்டது. துவக்கக் காலத்தில் ஜெயகாந்தன், சுத்தானந்த பாரதி போன்றோர்கள் பெற்றனர். சி.சு.செல்லப்பாவிற்கு ராஜராஜன் விருது வழங்க அரசு முன்வந்தபோது அதனை வாங்க மறுத்துவிட்டார். 1 லட்ச பரிசுத்தொகையை இரண்டு பேருக்குப் பிரித்து தலா 50 ஆயிரம் என்று தகுதி இறக்கம் செய்ததும் காரணமாக இருக்கலாம். பொதுவாக செல்லப்பா இவ்விதமான அங்கிகாரத்தையும் தூசென தட்டி விடுவதை அவரது மகனார் விரும்பவில்லை என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. குடும்பத்தில் கசப்பு வந்தபோதும் இவ்விதமே நடந்து கொண்டார்.

செல்லப்பாவின் இறுதிகாலத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் ‘விளக்கு விருது’, அளிக்க வந்தபோது மறுத்தார். அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வெளி ரெங்கராஜன் கையில் பணமாக வாங்க வேண்டாம் வேறு வகையில் உங்களுக்கு உதவுகிறோம். என்று வற்புறுத்தியபோது, அவர் எழுதிய ‘என் சிறுகதைப்பாணி’ நூலுக்கு மூலதனமாக்கி வெளியிட்டனர். செல்லப்பா இவ்விதமாக இதற்கு உடன்பட்டார்.

வயது முதிர்ந்த காலத்தில் கைவலிக்க வலிக்க ‘சுதந்திர தாகம்’ என்ற பெருநாவலை எழுதி வெளியிட்டார். இது பற்றி விமர்சகனமாக வரட்டும் என அவரே ஆனந்தவிகடன், கல்கி இதழ் அலுவலகங்களுக்குக் கட்டுக்களைத் தூக்கி அலைந்தார். ‘எந்த வயதிலும் எந்த வேலையையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடமாட்டார்’ என்கிறார் டீக்கடை தொழிலாளி ஏ.என்.எஸ்.மணியன். சுதந்திரதாகம் நாவலை நூலக ஆணைக்குழு ஏற்றதும் அதற்கு வரும் பணத்தை தன் அன்பு மனைவி மீனாட்சி அம்மாள் கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ளும்படி செய்தார். முதிய வயதிலும் தன் உழைப்பாலே உண்ண வேண்டும் என்று போராடியவர் செல்லப்பா.

செல்லப்பா மரணமுறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக லலிதா ஜீவல்லரி உரிமையாளர் செல்லப்பாவை கௌரவிக்க வீடு தேடி வந்தார். சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். செல்லப்பா மறுத்தும் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டனர். குறிப்பிட்ட நாளில் அவர்கள் இல்லத்தில் நல்விருந்து வைத்து ஒரு தாம்பாலத்தட்டில் பட்டுசீலை, வேட்டி சட்டையும், ஒரு தட்டில் மீனாட்சி அம்மாளுக்கு விதவிதமான நகைகளையும் வைத்து தந்திருக்கின்றனர். வேட்டி, சீலையை மட்டும் காணிக்கையாக ஏற்றுக்கொண்டு நகைகளை மீனாட்சி அம்மாள் மறுத்துவிட்டு வந்திருக்கிறார். மீனாட்சி அம்மாளின் நகைகளை அடமானம் வைத்து எழுத்தைத் தொடங்கிய செல்லப்பா கடைசி குண்டுமணிவரையும் விற்று எழுத்து இதழுக்காக பணையம் வைத்து தோற்றார். இளமையிலேயே 100பவுணை தன் கழுத்தில் பார்த்துவிட்ட மீனாட்சி அம்மாள் செல்லப்பாவைப் போலவே அந்த விருந்தில் தந்ததை மறுத்துவிட்டு வந்தார். இது பற்றியெல்லாம்  இட்லிகடை ஏ.எஸ்.மணியன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். காந்தியுகத்து லட்சிய வித்து செல்லப்பா. இன்று இப்படியான மனிதர்களும் இலக்கியவாதிகளும் இல்லை என்று சொல்லிவிடலாம்.

 

3 comments for “தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய நாயகன் சி.சு.செல்லப்பா

  1. Saravanan M
    January 15, 2020 at 2:28 pm

    நல்ல, ஆழ்ந்த, பல்லாண்டுகளாக தமிழ் விமர்சனப்போக்கின் நாடித்துடிப்பை அறிந்த ஒருவரின் விமர்சனம். முழுதும் படித்து மகிழ்ந்தேன்

  2. R NARASIMHAN
    January 29, 2020 at 9:06 pm

    அருமையான கட்டுரை

    • R NARASIMHAN
      January 29, 2020 at 9:15 pm

      எழுத்துவின் மூன்றாம் ஆண்டிலிருந்து நான் அதன் சந்தாதாரன். எழுத்துப் பிரசுரம் நூல்கள் பலவும் வாங்கிப் படித்திருக்கிறேன். ஓரிரண்டு என்னிடம் இப்போது உள்ளன. இதழ்களை யாருக்கோ கொடுத்தேன். 1960 வாக்கில் அவரை வீட்டில் சந்தித்தேன். அக்காலத்தில் நான் மும்பையில் இருந்தேன். மயிலை சாஸ்திரி அரங்கில் அவருக்குப் பாராட்டும் பணமுடிப்பும் கொடுத்த விழாவிலும் நான் இருந்தேன். நினைத்தால் பிரமிப்பும் துயரும் மேலிடுகிறது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...