(2018இல், சென்னையில் மீண்டும் நிலைத்த நிழல்கள் நூலை வெளியிட்டு ஜெயமோகன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.)
சுந்தரராமசாமியை நினைவுக்கூர்ந்து இந்த உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் ஒரு பேராசிரியர் நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்பொழுது சுந்தரராமசாமி சொன்னார்: “பந்திப்பாய் விரித்திருக்கிறார்” என்று. அது குமரி மாவட்டத்தில் உபயோகப்படுத்தக்கூடிய பிரயோகம். பந்தி பாய் என்றால், அது பத்த மடையிலிருந்து வரக்கூடிய பாய். சிறிய அளவில் இருக்கக்கூடிய அந்தப் பாயை சுருட்டிக்கொண்டு வருவார்கள், அதை, நீண்ட கூடம் அளவிற்கு விரிக்கமுடியும். அந்த பேராசிரியர் கிட்டத்தட்ட தமிழில் கையெழுத்து போடத்தெரிந்த அனைவரையுமே பந்தி பாயில் உட்கார வைத்துவிட்டார். எனக்குத் தெரிந்து தமிழில் எழுதக்கூடிய அனைவரும் இடம்பெறக்கூடிய ஆய்வு கட்டுரை அது. அந்தப் பந்திபாய் விரித்தல் என்பது ஒரு பண்பாக, பெரிய மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக கருதப்பட்டது.
அதேசமயம் விமர்சனம் என்பது ஒருவகையான அத்துமீறலாக, ஒரு துடுக்குத்தனமாக, யாரோ சிலரை புண்படுத்துக்கூடியக் காரியமாக கருதப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பிறகும் ஒரு கருத்து வெளிபடும். ‘நம்ம எதுக்கு மத்தவங்கள புண் படுத்தனும், அவர்கள் வருத்தப்படமட்டார்களா’ என்று. அவர்கள் கதையைப் படித்துவிட்டு அவர்களைவிட அதிகமாக வருத்தமடைந்துதானே நான் என்னுடைய விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். என்னுடைய வருத்தத்தை நீங்கள் கணக்கில் கொள்ளமாட்டீர்களா? என்பேன்.
மற்றொரு கருத்து ‘நாம யாருங்க இதெல்லாம் சொல்றதுக்கு? அவ அவனுக்கு அவனவன் புடிச்சத எழுதுறான்.’ என்பார்கள். அவர்களிடம் நாகர்கோவிலில் ஐந்து உணவகங்களில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தால், “பிரபு ஹோட்டலுக்கு போங்க… அங்கு சைவம் சூப்பரா இருக்கும். பக்கத்துல இருக்குற ஹோட்டலுக்கு போகதீங்க… கொன்னுடுவான்” என்று அவரே சொல்வார்.
சாப்பாட்டில் நல்லதுகெட்டது உண்டு. நல்ல உணவு எங்கு கிடைக்கும் எங்கு கிடைக்காது என்று சொல்லத்தெரியும். சாப்பாட்டில் தரம் உண்டு. ஏன் சாமிகளில் தரம் உண்டு. உடம்பு சரியில்லையென்றால் திருச்சி சமயபுரம் போங்க ஆனால் பக்கத்தில் உள்ள இன்னொரு அம்மன்கிட்ட போகாதீங்கன்னு சொல்லத்தெரியும். ஆனால் இலக்கியத்தில் மட்டும் எந்த தரமும் இருக்கக்கூடாது. அது எல்லாமே ஒன்று தான்.
ஓடும் செம்பொன்னும் ஒப்பவை நோக்கக்கூடிய ஒரு பரிபக்குவ நிலையில் இருக்க கூடியவர்கள்.
ஆனால் இலக்கியம் அப்படிப்பட்டதில்லை.
இலக்கியம் எப்போதும் ஒரு கறாரான விமர்சனத்தின் அடிப்படையில்தான் செயல்படக்கூடியவை. விமர்சனம் இல்லாத துறை எங்குமே வளர்ச்சியடைந்தது கிடையாது. அறிவார்ந்த துறைகளில் விமர்சனம் என்பது அடிப்படையாக, ஒரு மெளன செயல்பாடாகத்தான் இருக்கும். மிக அபூர்வமாகத்தான் இலக்கிய விமர்சனம் எழுதப்படுகிறது. நீங்கள் தமிழில் ஒரு விஷயத்தை கவனித்தால் தெரியும். பெரிய டாமாரங்களோடு ஒரு நாவல் வெளிவருகிறது. ஆஹா, பிரமாதம் என்று அந்நாவல் வெளிவருவதற்குமுன் அனைத்து பத்திரிகையிலும் வெளிவந்துவிடும். பின்பு நாவல் வெளிவருகிறது. ஒரு மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் அந்நாவல் அவ்வளவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு கட்டுரைக்கூட அந்நாவலை பற்றி எழுதப்படவில்லை. யார் இதை முடிவெடுத்தார்கள், ஒட்டுமொத்த சமூகமும் நாவலை சரியில்லை என்று எப்படி சொல்கிறார்கள்?
ஏனென்றால் எழுதப்படாத ஒரு விமர்சனம், ஒரு மெளன விமர்சனம் மக்களிடையே பரவிக்கொண்டே இருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் 2016ல் நான் சிங்கப்பூர்க்குச் செல்கிறேன். சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள இலக்கியச் சூழலை பார்வையிடுகிறேன். நான் சென்றது கல்வித்துறை சார்ந்த பணிக்காக; இலக்கியப்பணிக்காக அல்ல. ஆனால் அங்கிருக்கும்போது முறையாக சிங்கப்பூர் இலக்கியங்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மிகச் சிறந்த நூலகம் ஒன்று அங்கு இருக்கிறது. அதிலிருந்து நான் எடுத்து படிக்கிறேன். படிக்கும்போதே 1940, 50களில் அதாவது சிங்கப்பூர் உருவாவதற்குமுன்பே சிங்கப்பூரின் இலக்கிய வேர் உருவாகியிருப்பது தெரியவருகிறது. வெவ்வேறு மனிதர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 50 வருட காலத்தில் அவற்றைத் தொகுத்து மதிப்பிட்டு யார் எங்கு இருக்கிறார்கள் என்ற வரிசை உருவாக்கப்படவில்லை. அந்த வரிசை உருவாக்கப்படக்கூடாது என்று சொல்பவர்கள் யார் என்று பார்த்தால், அந்த வரிசையில் எப்போதும் இடம்பெற தகுதியில்லாதவர்களால்தான். ஏனென்றால் வரிசை என்று வந்தால் முதலில் கழுத்தைப்பிடித்து தன்னைத்தான் வெளியில் தள்ளுவார்கள் என்று அவர்களுக்கு முன்பே தெரியும்.
ஆகவே எழுதுபவர்கள் எல்லாம் சிங்கையில் எழுத்தாளர்கள். அங்கு வெறும் சப்தங்கள்தான் அதிகம் உள்ளது. இலக்கியம் என்பது ஒருவகையான அதிகாரத்தின் தரகு செயலாக மாற்றக்கூடிய இயல்புகள். கல்வித்துறை சார்ந்த கலைக்கூத்தாட்டங்களாகத்தான் அங்கு இருந்தது. அதைவிட முக்கியமாக ஒன்று சொன்னார்கள். அதாவது 15, 20 வருடங்களாக இதையெல்லாம் பேசக்கூடாது இப்படியெல்லாம் பேசக்கூடாது, இப்படித்தான் பேசணும் என்று பேசிப்பேசி, ஒரு பேசமுடியாத சூழலை உருவாக்கி வைத்துள்ளார்கள். வெளியிலிருந்து ஒருவன் வந்து மட்டும்தான் ஏதாவது பேச முடியும்.
என்னுடைய பணிகளுக்கு மேலதிகமாக, அதாவது வெண்முரசு எழுதும் பணிகள், சில கட்டுரைகளை, சில சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டிருப்பதற்கு மத்தியில், மேலதிகமாக ஒரு கட்டுரை தொடர் எழுதினேன்.
அந்த கட்டுரை தொடர் அவ்வளவு பெரிய சீண்டலை, ஒரு கசப்பை, இவ்வளவு காலம் நீண்டு நிற்கக்கூடிய ஒரு பொருமளை அங்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 20,30 நாட்களாக இங்கு அது தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவ்வளவிற்கும் முதன்மையான அங்கிருக்கும் போலியான உள்ளீடற்ற போலியான எழுத்துகளை சுட்டிக்காட்டி இது போலியானது, இது பொய்யானது, இது இலக்கியம் மதிப்பு கிடையாது என்று சொன்னேன். அதேசமயம் சிங்கப்பூரின் முக்கியமான முன்னோடிகளை அடையாளப்படுத்தி இவர்கள்தான் முக்கியமானவர்கள், இவர்களிடமிருந்துதான் அவர்களது மரபு தொடங்குகிறது என்றும் சுட்டிக்காட்டினேன். புதுமைதாசன், இளங்கண்ணன் போன்றோரை அடையாளப்படுத்தி ஒரு மரபையும் உருவாக்குகிறேன். அந்த மரபை நான் உருவாக்கி கொடுக்கிறேன் என்பதை அவர்கள் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் கண்ணிற்கு நிராகரிப்புகள் மட்டும்தான் தெரிகிறது. சிங்கப்பூர் இலக்கியத்தை நிராகரித்துவிட்டார் என்று அந்த விஷயத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்குள்ள முன்னோடிகளுக்கு தெரியும், வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டிலிருந்து ஒருவன் கிளம்பிவந்து சிங்கப்பூரைப் பற்றி அவர்களது முன்னோடிகளைப் பற்றி அவர்களிடமே சொல்கிறான் என.
ஏன் இது? ஏன் இந்த விமர்சனம் தேவைப்படுகிறது. இன்றைக்குக்கூட அங்கிருக்கக்கூடிய முக்கிய இலக்கிய எழுத்தாளர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை. இங்கும்கூட அது தெரியவில்லை.
முகநூல் வந்த பிறகு, சுந்தர ராமசாமி அதற்கு முன்பு கா.ந.சு அதற்கு முன்பு ராசிக தேசிகன் காலத்திலிருந்து இலக்கிய விமர்சனங்கள் சொல்லக்கூடிய அனைத்து விமர்சனங்களையும் திரும்பவும் முதலிலிருந்து சொல்ல வேண்டியுள்ளது. ‘ஏன் இதையெல்லாம் சொல்லணும். நல்லது கெட்டது எல்லாம் வாசகனே முடிவு பண்ணட்டுமே எதற்கு விமர்சனம். நல்லது கெட்டது எல்லாம் அவனவனுக்கு பொருத்துதானே, எல்லாருக்கும் பொதுவாக நல்லதுன்னு ஒன்று இருக்க முடியாதே.’ இப்படியாக புதுமைப்பித்தனுக்கு முன்பாக பேசிய அனைத்து வரிகளும் முகநூலில் திரும்ப எழுதப்படுகிற காலம் இது. ஆகவே அதை திரும்பவும் சொல்லவேண்டிய தேவையுள்ளது.
முக்கியமாக, ஏன் நாம் ஒரு வரலாறை உருவாக்குகிறோம். வரலாறு என்பது தன்னிசையான ஒரு போக்கல்ல. வரலாற்றில் ஒரு தெரிவு இருக்கிறது. சென்று மறைந்த அனைவரையும் சேர்ந்து ஒரு வரலாற்றை நாம் உருவாக்கவில்லை. ராஜ ராஜ சோழனை ஏன் வரலாற்றில் நிறுத்துகிறீர்கள்? அதுவரை உங்களுக்கு எத்தனை சோழ மன்னர்களை தெரியும்? அதி ராஜேந்திரன் தெரியுமா? முகுந்தா ராஜேந்திரன் தெரியுமா? தெரியாது. அப்போ வரலாற்றில் நீங்கள் ஒரு தெரிவை உருவாக்குகிறீர்கள். வரலாற்றில் பெரிய புள்ளியை நீங்கள் போடுகிறீர்கள். அந்த புள்ளிகளை இணைத்து ஒரு வரலாற்றை உருவாக்குகிறீர்கள்.
அனைத்து துறைகளிலும் தெரிவு வழியாகத்தான் ஒரு வரலாற்றை உருவாக்கியிருப்பீர்களேயொழிய வெறும் வரிசைபடி உருவாக்கியிருக்கமாட்டீர்கள். அப்படி ஒரு வரலாறே கிடையாது. நீங்கள் கற்பனை முறையில் ஒரு வரிசையை உருவாக்குகிறீர்கள். அதில் முக்கிய புள்ளிகளில் தொடர்ச்சியே வரலாறு. இந்த வரலாற்றில் ஒரு வரிசை, ஒரு தரப்படுத்தல், ஒரு நிலைப்புத்தன்மை உள்ளது. இலக்கியத்திற்கு அப்படியொரு வரலாறு தேவைப்படுகிறது.
திரும்பி பார்க்குபோது நம்முடைய வரலாறு நமக்கு தெரியவேண்டும். எந்த மரபில் நான் வந்து நிற்கிறேன் என்று தெரியவேண்டும். நான் எழுத ஆரம்பிக்கும்போது யாரை படித்துவிட்டு வரவேண்டும் என்று தெரியவேண்டும். ஒரு சிறுகதை எழுத்தாளனாக நான் இங்கு வந்து நிற்கும்போது யாருடைய தொடர்ச்சியாக நான் இங்கு வந்து நிற்கிறேன் என்று தெரியவேண்டும். யாருடைய தொடர்ச்சியாக நான் இன்னும் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பது முக்கியமானது. அதற்குதான் ஒரு வரலாறு ஒன்றை உருவாக்கி நிறுத்துகிறோம். அந்த வரலாறு என்பது தெரிவுகளாலானது. அந்த தெரிவுகள் விழுமியங்களால் உருவாகிறது. அந்த விழுமியங்கள்தான் எது இலக்கியம் எது மேலான இலக்கியம் எது இலக்கியத்தின் சிகரம் என்று கூறக்கூடியது. அதன் அடிப்படையில் தான் தெரிவுகள் வருகின்றன.
எல்லா காலக்கட்டத்திலுமே ஓவியத்தை தடவி பார்க்கக்கூடிய ஒரு கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு அதற்குமேல் ருசி கிடையாது. அவர்களுக்கு இந்த தெரிவுதான் மிகப்பெரிய பதட்டத்தை கொடுக்கக்கூடியது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் ரசனைக்கு எதிராகத்தான் போர் நடந்திருக்கிறது.
சுந்தரராமசாமி சொல்வார், உலகத்தில் எங்கு இலக்கிய கோட்பாடு அறிமுகமானாலும் அதை உடனடியாக கற்றுக்கொண்டு வந்து ‘இனிமே இலக்கிய ரசனைக் கிடையாது’ என்று சொல்லக்கூடிய ஒரு கூட்டம் தமிழில் இருந்திருக்கிறது. மார்க்சிய சிந்தனை வந்தபிறகு அவ்வளவுதான் முற்போக்கு வந்தாயிற்று இனிமே இலக்கிய ரசனை கிடையாது என்றார்கள். பின்நவீனத்துவம் வந்தபிறகு அவ்வளவுதான் இனிமே இலக்கிய ரசனை கிடையாது என்றார்கள். ஆகவே இலக்கிய ரசனைக்கெதிராகத்தான் அந்த அறிவு இயக்கம் இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அந்த ரசனைதான் அவனை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த தெரிவு அடிப்படையில் ரசனை ஒன்றை உருவாக்கவேண்டியுள்ளது. அந்த ரசனையுடைய அந்த விழுமியங்களுடைய விவாதங்களால்தான் அது உருவாகி வருகிறது.
இங்கு பல்வேறு காலங்களில் அதற்கெதிரான குரல்கள் உருவாகியுள்ளது. மார்க்சீய காலகட்டத்தில் என்ன குரல் உருவாகியது என்றால், இந்த விழுமியங்கள் அனைத்துமே ஆளும் வர்க்கத்தினருடைய மேல் வர்க்கதினருடைய குரலாகதான் உள்ளது. ஆகவே அடித்தளத்திலிருந்து நாங்கள் வேறொன்றை உருவாக்குவோம். உங்கள் மதிப்பீடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றது.
அடுத்து பின்நவீனத்துவம் காலகட்டத்தில் என்ன சொன்னார்கள் என்றால், தரப்படுத்துதல் என்பதே அதிகாரம். அதற்கு எதிராகத்தான் எங்களுடைய இலக்கியம் செயல் படவேண்டும். இலக்கியத்தில் தரப்படுத்துதல் கிடையாது என்றும் கூறினர்.
நானும் பின்நவீனத்துவம் வாசித்திருக்கிறேன். இந்த வரி பின்நவீனத்துவத்தில் எவ்வாறு எடுத்தார்கள் என்பதே எனக்கு புரியாத விஷயமாக உள்ளது. நம்முடைய ஆட்கள் காளைமாட்டில் பால் கறக்க கூடியவர்கள், பேராசிரியர்களை சொல்கிறேன். பின்நவீனத்துவத்தில் அவ்வாறு சொல்லவில்லை. தரப்படுத்துதலில் உள்ள அதிகாரத்தை பார்க்க வேண்டுமே தவிர, தரப்படுத்தல் கூடாது என்பது கிடையாது. தரப்படுத்தலில் உள்ள அதிகாரம் என்ன? அது வாசகனின் கூட்டான அதிகாரம். ஒரு தனி மனிதனின் அதிகாரம் கிடையாது. ‘தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார் அவர்தான் எது இலக்கியம், எது இலக்கியமில்லை? என்பதை சொல்லுவார், அவருக்கு அந்த அதிகாரம் எழுதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றால் அது அதிகாரம். அது எதிர்க்கபடவேண்டிய அதிகாரம். அப்படி ஒருத்தருக்கு கொடுக்க முடியாது. ஆனால் இங்குள்ள அதிகாரம் அப்படியா கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியில்லை. இங்கு ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் சொல்வதால் அந்த முக்கியத்துவம் வரவில்லை, அந்த ஏற்பினால்தான் அந்த முக்கியத்துவம் வருகிறது.
க.நா.சு ஒரு பட்டியல் போட்டார். தமிழ் இலக்கியத்தில், மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கிய பட்டியல் அது. க.நா.சுவால்தான் நாம் இன்றைக்கு சொல்லக்கூடிய அந்த நவீன இலக்கியத்துடைய வரிசை உருவாயிற்று. தலைமகனாக அவர் புதுமைப்பித்தனை கொண்டு வைக்கிறார். இருபக்கமும் பிச்சமுர்த்தியையும் கு.ப.ராவையும் வைக்கிறார். கொஞ்சம் தள்ளி தனி அடையாளமாக மெளனியை வைக்கிறார். அதற்கடுத்து அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தரராமசாமி என்று நாம் இன்று சொல்லக்கூடிய அந்தப் பட்டியல் அவர் உருவாக்கியதுதான்.
அந்தப் பட்டியலுக்கெதிராக ஒரு பெரும் கொந்தளிப்பு இருந்தது. அந்தப் பட்டியலை உருவாக்குவதற்கான எதாவது ஒரு அதிகாரம் அவரிடம் இருந்ததா? அவர் எந்த நிறுவனத்திலாவது தலைமையில் இருந்தாரா? யாருக்காவது ஐந்து பைசா விருது கொடுக்கும் இடத்தில் இருந்தாரா? ஒன்றுமே இல்லை. அப்படியென்றால் அந்தக் குரலுக்கு என்ன அதிகாரம் வருகிறது? அந்தக் குரல் பிரதிநிதித்துவ அதிகாரம் கொண்டது. அந்தக் குரலை கேட்டு, ‘ஆமாம்’ என்று சொல்லக்கூடிய வாசகர்கள் இருக்கிறார்கள். வாசகர்கள் கொடுக்கும் ஒரு ஏற்பினால் அந்தக் குரலுக்கு அந்த அதிகாரம் கிடைக்கிறது. அந்தக் குரலுக்கு எதிராக பேசப்பட்டதெல்லாம் இந்த தலைமுறைக்கு சொல்லவேண்டும்.
அந்த குரலுக்கு எதிராக பேசிய குரல், பூவை எஸ். ஆறுமுகம். யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா? அவர் அந்தக் காலத்தினுடைய புகழ்பெற்ற எழுத்தாளர். க.நா.சுவை நிராகரித்து எழுதினார். அவரும் ஒரு பட்டியல் போட்டார். அந்தப் பட்டியலில் இருந்த சில எழுத்தாளர்கள் யாரென்றால் கு.ராஜவேலு ‘அழகு ஆடுகிறது’ என்ற அவர் நாவல் அந்தக் காலத்தில் பிரபலமானது. அதேபோல ய.லட்சுமிநாராயணன், வே.கபிலன், என சிலரை இணைத்தார். இவர்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிறகு எப்படி? க.நா.சு ஒரு பட்டியல் போட்டார் மாற்று பட்டியல் போடப்பட்டன. மார்க்சீய பட்டியல் ஒன்று போடப்பட்டது. தமிழில் எழுதபட்ட தலைசிறந்த நாவல் ‘செவ்வானம்’ என்று செ.கணேசலிங்கம் எழுதிய நாவல் என்று சைலபதி ஒரு பட்டியல் போட்டார். செவ்வானத்தை படித்த ஒரு வாசகனவாது இந்த அரங்கில் இருக்கிறீர்களா? இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அதை படித்திருந்தால் இலக்கியத்தில் தொடர்ந்து வந்திருக்கமாட்டீர்கள்.
ஒரு பட்டியல் வரலாற்றைத் தாண்டி நிற்கிறது, ஏனென்றால் அது ரசனையின் அடிப்படையில் உருவான பட்டியல். அதில் உண்மை இருக்கிறது. வாசகனின் ஏற்பு இருக்கிறது. அந்த ஏற்புதான் அந்த அதிகாரத்தை உருவாக்குகிறது. அது வாசகனின் பட்டியல். வாசகனின் குரலாக நின்றுதான் விமர்சகன் அந்தப் பட்டியலை தயாரிக்கிறான். ஆகவே அது தரப்படுத்தல் இல்லை. அதனிடம்தான் நீங்கள் சண்டையிட்டு கொண்டுள்ளீர்கள். “ஏண்டா என்னை படிக்கல” என்று திட்டுகிறீர்கள், “ஏண்டா என்னை பாராட்டல” என்று அதனிடம் கோவித்துகொள்கிறீர்கள். நீங்கள் கோபித்துக்கொள்ளுங்கள். அவன் ஒரு இரக்கமற்றவனாகத்தான் இருப்பான். காலம் கடந்துசெல்ல அவன் கணிசமான ஆட்களை அள்ளி வெளியில் வீசிவிடுகிறான்.
உண்மையில் க.நா.சு ஒரு பட்டியல் போட்டார் அல்லவா? அதில் தலையாய கவிஞராக சண்முக சுப்பைய்யா என்பவரைக் குறிப்பிடுகிறார். அவரது ஒரு கவிதையைகூட இங்கு யாரும் படித்திருக்கமாட்டீர்கள். க.நா.சு அவர்கள், புதுமைபித்தனுக்கு சமானமாக ஆர்.சண்முக சுந்தரத்தை வைக்கிறார். சண்முக சுந்தரத்திற்காக கண்ணீர்வடிய வாதிடுகிறார். பரவாயில்லை ‘நாகாம்மாள் வரைக்கும்’ படித்துப் பார்க்கலாம். ‘சட்டி சுட்டது’ எல்லாம் சரிபட்டு வரவில்லை என்று வாசகன் சொல்லிவிட்டான். அவர் சொன்னதை அனைத்துமே எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘சிதம்பர சுப்ரமணியத்தை’ யாரும் படிக்கவில்லை. வேறொரு பட்டியலை வாசகன் வைத்திருக்கிறான், அதில் க.நா.சுவால் போடப்பட்ட அப்பட்டியல் வாசகனின் பட்டியலோடு 90% ஒத்துபோவதாலேயே அதை அவன் ஏற்றுக்கொள்கிறான். இதனால்தான் அவருக்கு (அந்தக் குரலுக்கு) அந்த அதிகாரம் ஏற்படுகிறது. இப்படிதான் இலக்கிய வரலாறு உருவாகிறது.
விமர்சனரீதியாக ஒரு வரலாறு உருவாக்கபடும்போதுதான் அந்த எழுத்து அதுவரைக்கும் என்ன எழுதிக்கொண்டிருந்தது என்பது தொகுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் அடுத்தக் காலகட்டத்தினுடைய விமர்சன அளவுகோல் உருவாகிறது.
தமிழில் ஒரு நன்னூலாக க.நா.சு நமக்கு வாய்த்தார். நாம் அனைவருமே அப்பாவிடம் சிறுசிறு முரண்பட்டிருப்போம். அதுபோல க.நா.சுவோடு அனைவருமே முரண்பட்டிருப்பார்கள். பா. சிங்காரத்தை சேர்த்திருக்கலாமே சார் என்பார்கள். இல்லை அவர் சேர்க்கவில்லை. எதுக்கு சண்முக சுப்பையாவை சேர்க்கிறீர்கள் என நானே அவரிடம் நேரில் கேட்டேன். என் தோளின்மேல் கை வைத்துவிட்டு புன்னகைத்தபடி போனார். அவரின் இயல்பே அதுதான். க.நா.சுவின் அதை இனிமையானதடித்தனம் என்பார். மிக எளிமையாக எடுத்துக்கொள்ளகூடிய இயல்புடையவர்.
நான் க.நா.சுவை சென்னையில் சந்தித்த காட்சியை நினைவுபடுத்துகிறேன். நான் ‘சக்கரவர்த்தியின் வருகை’ என்றொரு கட்டுரை எழுதியிருப்பேன். அவரை சுற்றி பெரும் பணக்காரர்கள் செல்கிறார்கள். அவர் சக்கரவர்த்தி போலவும் அந்தப் பணக்கார்கள் அவருடைய சேவகர்கள் போலவும் நீண்ட முடியுடன் அவர் போவதை பார்த்து அவருடைய அந்த விந்தை எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.
அவர் சி.ஐ யுடைய காசை வாங்கிக்கொண்டுதான் இந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. க.நா.சு, தட்டச்சு வைத்து டைப் செய்வார். அது ஒரு போர்டபுல் டைப் ரைட்டர். அது தம்புச் செட்டி தெருவில் ஒரு வழக்கறிஞர் ஆபீஸில் இரண்டாம் தரமாக வாங்கியது. அதுமட்டும்தான் அவருடைய சொத்து. ஒரு பையில் ஒரு சட்டை ஒரு ஜிப்பா, இந்த டைப் ரைட்டர் அதுமட்டும்தான் அவர் வைத்திருப்பார். இவர் தட்டச்சில் டைப் செய்வதால் இவர் ஒரு பெரும் பணக்காரர் பெரும் பூர்ஷ்வா என்றும் சைலபதி எழுதியுள்ளார். தட்டச்சு அவரை அமெரிக்க ஏகாதிபதியத்துக்கு கொண்டுபோய் விட்டது. “காபி சாப்பிடலாம்?” என்று யாராவது கேட்டால் “பணம் என்னிடம் இல்லை, எனக்கு இன்னும் சி.ஐ லிருந்து மணி ஆர்டர் வரவில்லை” என்று சொல்வார் விளையாட்டாக.
இலங்கை எழுத்தை நாம் திரும்பி பார்ப்போம். இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படுகிறது. இலங்கேஸ்வரனில் ஆரம்பித்து அ.முத்துலிங்கம், ஷோபசக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் வரை அங்கு மரபு உள்ளது. இன்றுவரை அங்கு ஒரு விமர்சன வரிசை உருவாகவில்லை. நான் இலங்கை கலைஞர்களைப் பற்றி இந்த எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள் என்று ஒரு சிறு குறிப்பு இலக்கியக் கட்டுரையின் முன்பகுதியில் எழுதியிருந்தேன். அது காலம் இதழில் வெளிவந்தது. அதற்கு மு.பொன்னம்பலம் ஒரு பதில் போடுகிறார். இந்த கட்டுரை உள்நோக்கம் கொண்டது. இதில் ஈழக் கவிஞர்களை இன்று எழுதக்கூடியவர்கள் அத்தனை பேரையும் பொருட்படுத்தவில்லை. கீழ்கண்டவர்கள்தான் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று எழுதியிருந்தார். அதை பார்த்து நானே பயந்தேன். கிட்டத்தட்ட வோட்டார் பட்டியலையே கொடுத்துள்ளார். 200க்கு மேற்பட்ட பெயர்கள் என்று நினைக்கிறேன். நான் அதற்கு ஒரு பதில் எழுதினேன். 200க்கு மேற்பட்ட உண்மையான கவிஞர்கள் ஈழத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏதாவது பூச்சி மருந்து கண்டுபிடித்து அவர்களை அழிக்கத்தான் வேண்டும். நாட்டிற்கு அவ்வளவு தேவை இல்லை. ஒரு நகரத்தில் 200 கவிஞர்கள் அலைந்தால் நாட்டில் சட்ட ஒழுங்கு என்ன ஆவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஆக இந்த பாய் விரித்தல்தான் அங்கும் இருக்கிறது. அந்த பாய் விரித்தல் இருப்பதலால்தான் செங்கை ஆழியானும் அ.முத்துலிங்கமும் ஒரே வரிசையில் அமரக் கூடிய மரபு இருப்பதால்தான் அங்கு எதுமே எழுதப்படவில்லை. திருப்பி தமிழ்நாட்டை பார்த்துதான் அவர்கள் எழுத வேண்டியுள்ளது.
அங்கு ரசனை விமர்சனம் என்பதே கிடையாது. கட்சி விமர்சனம் தான் இருக்கிறது. நல்ல இலக்கியம் என்று அங்கீகாரம் எடுப்பதற்கு அந்தக் கட்சியில் கார்ட் எடுத்தால் போதுமானது. இன்றைக்கு அங்குள்ள முக்கியமான எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தோமானால் இங்குள்ள விமர்சகனால் கண்டுக்கொள்ளபட்டவன்தான். இங்கிருந்து நாம் ஒன்று சொல்கிறோம் முத்துலிங்கம், ஷோபாசக்தி என்று. அவர்களும் அதை சொல்கிறார்கள். அங்குள்ள வாசகர்களிடம் சென்று பார்த்தால் அந்த மானசீகமான ஓர் உணர்வு இருப்பதில்லை. ஏனென்றால் நேற்று அவர்களால் வகைபடுத்தவில்லை. எனவே இன்றும் அவர்கள் வகைபடுத்த முடியாமல் இருக்கிறார்கள்.
அதேதான் சிங்கப்பூரிலும். ‘எனவேதான் நான் சிங்கப்பூரில் ஒரு மரபை உருவாக்கி, ஒரு பட்டியலைப் போட்டு கொடுத்தேன். இதோ பட்டியல் ஆகவே நாளையிலிருந்து உங்களுக்காக 10 பேர் அருளப்பட்டுள்ளார்கள் நான்தான் மோசஸ்’ என்று சொல்லவில்லை. நீங்கள் சண்டை போடுங்கள் என்னிடம். இரண்டு பேரை வெளியில் எடுத்து போடுங்கள், இரண்டு பேரை உள்ள போடுங்கள், அப்படி ஒரு சண்டையின் விளைவாக ஒரு காலத்தில் ஒரு பட்டியல் உருவாகி வரும். அதுதான் உங்களுடைய பட்டியல். ஆனால் அவர்கள் அந்த விவாதத்திற்குள் வரவில்லை. இவர்கள் நான் கொடுத்த பட்டியலில் இரண்டு பேரை சேருங்கள் இரண்டு பேரை நீக்குங்கள் என்று சொல்லவே இல்லை. அதில் அத்தனை பேரையும் சேருங்கள் என்று சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் இந்த குறிப்பிட்ட நூலின் முக்கியத்துவம் மலேசியாவில் உருவாகிறது.
மலேசியாவின் இலக்கியத்தை மலேசியாவின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் உண்டு. மலேசிய இலக்கியக் களத்தை ஒரு பிரம்மாண்ட வெளியில் வைத்து பார்த்தால் மூன்று காலகட்டங்களாக பிரிக்கலாம்.
முதல் காலகட்டம் அங்குள்ள குடியேற்ற இலக்கியம். அது திராவிடம் செல்வாக்கால் உண்டான ஒரு இலக்கியப் பண்பாடு. இடதுசாரியும் திராவிடமும் ஒன்றாகதான் அங்குப் போகிறது. தமிழர் தனித்துவம், தமிழ் பண்பாட்டு பெருமிதம், தொழிலாளர் உரிமை இது மூன்றும் கலந்த ஒரு இலக்கியம். இதற்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இடதுசாரிகள் பேசும்போது தமிழ் பெருமிதம், தமிழ் பண்பாட்டு அடையாளங்கள், தமிழ் தனித்துவம் இதையெல்லாம் சேர்க்கவில்லை. இது வேறுவேறாகதான் இருக்கிறது இங்கு. இடதுசாரி எழுத்தும் திராவிட எழுத்தும் வேறுவேறாகதான் இருக்கிறது இங்கு.
என்னுடைய பார்வையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் திராவிட செல்வாக்கிற்கு மிக ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கிறது. அது என்னவென்று பார்த்தால், இங்கிருந்து அடிமட்ட தொழிலாளர்களாக அங்கு செல்லக்கூடியவர்கள் கிட்டத்தட்ட மிருகங்களைபோல கொண்டுசென்று தோட்டங்களில் பணியமர்த்தும்போது சிறை கூட்டங்களில் லயத்தில் வேலைபார்க்குபோது, ‘நான் பஞ்சத்தில் இங்கு வந்திருக்கலாம் ஆனால் நான் ராஜராஜ சோழனுடைய வாரிசு. எனக்கு ஆயிரம் வருட பண்பாடு இருக்கிறது. என்னுடைய மொழி மிகவும் பழமையானது.’ என்ற பெருமிதங்களின் ஒரு பகுதியாகத்தான் தன்னுடைய உரிமைகளை அவன் பேச முடியும். ஆகவே ஆரம்பகாலங்களில் தமிழ் பெருமித பண்பு திராவிட கொள்கைக்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தொடக்க கால இலக்கியம் உண்மையிலேயே ஒரு தீவிரமான காலகட்டம்.
இந்த நூல் கோ.சாரங்கபாணி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அவர் பெரியாருடைய அணுக்கமான நண்பர். பெரியாரை மலேசியாவிற்கு அழைத்து வந்தவர். பெரியாருடைய பக்தராகவும் பெரியாருடைய பிரச்சாரகராவும் செயல்பட்டவர். அவர்தான் ஒருங்கிணைந்த மலேயாவுடைய முன்னோடி என்று சொல்லலாம். அங்கிருக்கக்கூடிய இலக்கிய மரபை தொடங்கிவைத்தவர். இன்றும் சிங்கையில் இருக்கும் தமிழ்முரசு நாளிதழின் தோற்றுவாய் அவர்தான். இன்றைக்கு பல இடங்களில் அவருக்கு நினைவிடங்கள் உண்டு. தமிழர் கல்விக்காகவும் தமிழர் கல்வி நிறுவனங்களுக்காகவும் உருவாக்க பெரும் முயற்சி எடுத்தார். அவரில் இருந்து ஆரம்பமாகிறது. இது ஒரு தொடக்கால வீச்சுள்ள வலுவான ஒரு அடித்தளம்.
முதல் காலகட்டத்தினுடைய தேக்க நிலை ஒன்று வருகிறது. திரும்பத் திரும்ப புறத்தே பார்த்து, புற அரசியலை எழுதக்கூடிய ஒரு விஷயம். அதுதான் அந்தக் காலகட்டம். தொழிலாளர் ஒற்றுமையின்மை, சுரண்டல், அடிமை என்று இதுதான் அந்தக் காலகட்டத்தில் எழுதுகிறார்கள். அகம் என்பது எடுத்து பார்த்தோமென்றால் திராவிட இலக்கியம் ஒரு ரெகுலேட்டர் காதல் வாழ்க்கையை உருவாக்கியுள்ளது. அது தலைவன் தலைவி என்று கொள்கை அடிப்படையிலான ஒன்று. ஆகவே உயர்ந்த மதிப்பீடுகளில் அளவீட்டில் நாம் இருவரும் காதலிப்போமாக என்று சொல்லக்கூடிய ஒரு காதல் வாழ்க்கை. எஸ்.எஸ். தென்னரசு கதைகளில் வரக்கூடிய காதல் வாழ்க்கை மாதிரி. மு.க உடைய காதல் கதைகள் மாதிரி. இந்த அகம்தான் அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது எழுதி எழுதி அவர்கள் சலிப்படையும்போதுதான் கு. அழகிரிசாமி அங்கு செல்கிறார். வேலைக்காக செல்கிறார். தமிழ் நேசன் பத்திரிகையில் அவர் வேலை பார்க்கிறார். கு.அழகிரிசாமி இன்றைக்கு நான் சிங்கப்பூர் சென்று செய்ததை அன்று அவர் அங்கு உருவாக்குகிறார்.
‘நீங்கள் எழுதிகொண்டிருப்பது இலக்கியம் அல்ல. வெறும் பிரச்சாரம். உங்களிலிருந்து எழுத்து வரவில்லை. கற்றுக்கொண்டதை திரும்பி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று சொல்கிறார். அது பெரும் அதிர்ச்சி அலைகள் உருவாகிறது. உடனே பாதி பேர் அவரை திட்டுகிறார்கள். இலக்கியம் குறித்து அக்கறை இருந்த கொஞ்சம் பேர் அங்கு அவரை சந்திக்கிறார்கள். அவருடைய வீட்டில் அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள் அவரிடமிருந்து நேரடியான பாதிப்புகளை பெற்றுக்கொள்கிறார்கள். அப்படி பெற்றுக்கொண்டு இரண்டாம் இலக்கிய அலை உருவாகிவருகிறது. அதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியவர் கு.அழகிரிசாமி.
அவர் நவீன தமிழ் இலக்கியத்தின் விழுமியங்களை அங்கு கொண்டு செல்கிறார். எது க.நா.சுவிலிருந்து புதுமைபித்தனிலிருந்து இங்கு நிலைப்பெற்றதோ அதைச் கொண்டுசெல்கிறார். சிற்றிதழ் சார்ந்த மதிப்பீடுகளை மலேசியாவிற்கு கொண்டு செல்கிறார். அப்போது அவர் சில மதிப்பீடுகளை உருவாக்குகிறார். ‘இலக்கியம் என்பது பொது சிந்தனையில் உருவாவது இல்லை. அனைவரும் நம்பி ஒன்றை பொதுவாக பேசுவது இலக்கியம் இல்லை. இலக்கியம் உன்னுடைய தனி அனுபவத்திலிருந்து வாசகனுடைய தனி அனுபத்திற்கு போகவேண்டுமே தவிர ஒரு பொது அனுவபவத்திலிருந்து ஒரு பொது அனுபத்திற்கு செல்வது இலக்கியம் அல்ல. உன்னுடைய அகத்தை எழுது. உன்னுடைய மொழி தனித்துவமாக இருக்க வேண்டும். உன்னுடைய கூர்முனை உனக்குமட்டும் உரித்தாக இருக்கவேண்டும்’ என அவர் குறிப்பிடுகிறார். இது வலுவற்ற ஒரு அசைவை உருவாக்கிற்று.
இந்தப் புத்தகத்தில் பல்வேறு ஆட்கள் அழகிரிசாமியை நினைவுகூறுகிறார். ஆனால் அவர்கள் யாருமே தொடர்ந்து செயல்படவில்லை. இந்த நூலை படிக்கும்போது வந்த மனச்சித்திரமே என்னவென்றால் நான் அழகிரிசாமியால் பாதிக்கப்பட்டு ஆகவே நான் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டேன் என்று சொல்லக்கூடிய ஒரு ஆள்கூட இல்லை. எழுதினேன்… அலைச்சல்கள்… வேலை… என்று ஏதோ ஒன்று சொல்கிறார்கள். ஒரு ஆரம்பம் வருகிறது அது நீடிக்கவில்லை. அந்த அலையின் தொடர்ச்சி என்று சீ. முத்துசாமியை இன்று நாம் சொல்லலாம். இந்தக் காலக்கட்டம் தொடங்கி எழுதியவர்தான் லங்காட் நதிக்கரை, இமையத்தியாகம் போன்ற நாவல்களை எழுதிய அ.ரெங்கசாமி. அழகிரிசாமியின் உருவாக்கிய மாற்றம் எனும் அந்த அலை கரைந்து மாபெரும் தேக்கநிலை உருவாகிறது. பெரிய அசைவின்மை ஏற்படுகிறது.
பெரும்பாலும் மலேசிய இலக்கியம் அரசால் எத்தி பிழைக்கின்ற நத்தி பிழைக்கின்ற ஒரு சின்ன வட்டத்திற்குள் அடங்குகிறது. அது இலக்கியமே கிடையாது. அரசாங்கத்திலிருந்து பணம் வாங்குகிறார்கள். இலக்கிய விழாக்கள் நடத்துகிறார்கள். சோறு போட்டால் புகழக்கூடியவர்களை அங்கு அழைக்கிறார்கள். அந்தந்த ஊரினை புகழக்கூடிய ஆட்களை அழைக்கிறார்கள். அவர்களும் புகழ்கிறார்கள். ‘அற்புதமாக எழுதுகிறீர்கள்? எனகெல்லாம் வெட்கமாக இருக்கிறது’ என்று புகழக்கூடியவர்களை அழைத்து அவர்கள் சொல்வதை கேட்டு இன்பமாக இருக்கிறார்கள்.
இங்கிருந்து பார்க்கும்போது சொல்கிறேன், இந்தக் காலகட்டத்தில் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் பெரிதாக மாறுதல் அடையவில்லை. பெரிய அளவில் நெருக்கடிகள் இல்லாத ஒரு வாழ்க்கை அமைகிறது. வீடு, வாகனங்கள், என்று நடுத்தர வர்க்கம் தமிழர் வட்டத்தில் மிக வலுவாக உருவாகிறது. அது காலுன்றி கொள்வதற்கும் வெவ்வேறு வசதிகள் அவர்களுக்கு கிடைக்கவும் ஒரு சமரசத்தில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். அது பெரும்பாலும் அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துபோவதற்கான மனநிலையை உருவாக்குகிறது. அதற்கான இலக்கியம் உருவாகிறது. ஒரு நீண்ட தேக்க நிலை. அதில் ஆங்காங்கு விதிவிலக்காக சிலர் எழுதுகிறார்கள். அவர்களும் பெரிய தொகுப்பை உருவாக்கி நத்தி பிழைப்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
உதாரணமாக, அதிகமாக இங்கு மலேசிய இலக்கியம் என்று சொன்னாளே ரெ. காத்திகேசு பெயரை சொல்லுவார்கள். நான் படித்தவரை ரெ. கார்த்திகேசுவை தமிழில் கு.ராஜவேலுவுடன் ஒப்பிடவேண்டும். கு.ராஜவேலுவுக்கு நாம் மண்ணுக்கடியில் ஒரு 8 அடி ஆழத்தில் அடையாளம் கொடுத்திருக்கிறோம் அல்லவா. அதுபோல அந்த இடத்தைதான் அவருக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து மேடைகளிலும் அவர்தான் இருப்பார். ஏனென்றால் அவர் பேராசிரியராக இருந்தார். அனைத்து அரசியல் மேடைகளிலும் இருந்தார். எல்லா சங்கத்திலும் இருப்பார். நல்ல மனுஷன். எனவே எந்த பிரச்னையும் பண்ணமாட்டார் அன்பானவர். எதும் திட்டமாட்டார். என்னையே பாராட்டி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனாலும் என்ன? அவர் கதை எழுதவில்லை.
அவருடைய நாவலை எனக்கு அனுப்பியிருந்தார். ‘அந்திம காலம்’ என்றொரு நாவல். பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாவலை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் என்று கேட்டார். நான் “இதை ஏதாவது உயர்நிலை பள்ளியில் நான் டீ டைலிங் உரைநடையில் வைக்க வேண்டியது. அதற்குமேல் இதற்கு தகுதியில்லை. இதை ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் எழுதும்போது பொதுவாக வெள்ளாவி வைத்த கருத்துகளைக் கொண்டு வெளுத்தெடுத்ததுபோல் நாவல் அமைப்பது என்பது இலக்கியத்தில் கிடையாது. இலக்கியம் என்பது உங்களுடைய அந்தரங்க உண்மைக்கு வந்தடைய வேண்டும்” என்றேன். என்னுடைய உறவை முறித்துக்கொண்டார். ஆனால் நேரில் சந்தித்தால் கட்டித்தழுவி அன்பாய் இருப்போம். இவர்தான் அங்கு முன்னால் நிறுத்தப்படுகிறார்.
இன்னொரு பக்கம் சில விதிவிலக்குகள் இருந்தனர். அவர்களின் ஒருவர்தான் சை.பீர்.முகம்மது. அவர் ஜெயகாந்தனுடைய நண்பர். ஆகவே இலக்கியத்தை பற்றி அறிதல் உடையவர். இந்தச் சூழலில்தான் நவீன் எழுந்துவருகிறார். இந்த மாதிரியான சூழலிலிருந்து ஒருவன் வரும்போது ஏற்படுகின்ற கசப்புகளும் ஆத்திரங்களும் ஒரு வகையான தொந்தரவு பண்ணக்கூடிய சுட்டி பயலாகத்தான் இருக்கிறார்.
நான் 2006ல் நவீனை முதல்முறையாகப் பார்க்கிறேன். சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு என்னை அழைத்திருந்தார். மலேசியாவில் இறங்கியவுடன் இவர்தான் நவீன் என்று அறிமுகமாகிறார். அந்தக் காலகட்டத்தில் ‘காதல்’ என்றொரு பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அந்த வயதிற்குரிய பத்திரிகை. உண்மையிலேயே அது ஒரு நல்ல பத்திரிகை.
அன்று ஒருநாள் பேசுகையில் கிட்டத்தட்ட மலேசியாவின் இலக்கியச் சூழலைப் பற்றி பேசி கிழித்துத் தொங்கவிட்டார். அதேசமயம் மிகத் தெளிவான ஒரு வரையறையை அவரால் கொடுக்கமுடிந்தது. யார் முக்கியம்? யார் முக்கியமில்லை? என்று. அன்று சீ.முத்துசுவாமியின் பெயரை நவீன்தான் முதன்முதலாக சொல்கிறார். அன்றைக்கு யார்யார் முக்கியம் என்று கூறுகிறார். தொடர்ந்து கூர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார். அன்றைக்கு ஒரு சின்னப் பையன் மாதிரி, அழகாக இளம்வயது விஜயகாந்த் மாதிரி இருந்தார். சின்னத் திக்கலுடன் சின்னப்பையன் தன்மை இருந்ததால் அங்கும் மன்னித்து விட்டுக்கொண்டிருந்தர்கள். கொஞ்சம் முதிர்ந்த பிறகுதான் எதிர்ப்புகள் இன்னும் வேகமாக அவரை நோக்கி வருகிறது.
சரி பார்ப்போம் என்று ஒரு சந்தேகத்துடன்தான் நவீனின் எதிர்காலத்தை பார்த்தேன். பிறகு இவரது ஆசிரியரும் நண்பருமான சண்முக சிவா இவரை பல்வேறு பிரச்சனைகளிலிருந்து இவரை வெளியில் எடுத்தவர். பிறகு சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்கள் இன்னொரு பாதுகாவலராக இருப்பவர். இரண்டு பாதுகாப்பு தேவதைகளால் தாங்கப்பட்டு தொடர்ந்து ஒரு விமர்சன மரபை முன்னெடுக்கிறார்.
இந்த நூலை அந்த விமர்சன நூலுக்கு முன்னால் அமையக்கூடிய வரலாற்று நூல் என சொல்லலாம். இதுதான் முக்கியமானது. இந்த நூலிலிருந்துதான் விமர்சனங்களை உருவாக்கவேண்டும். இந்த நூலின் முக்கியத்துவம் என்னவென்றால் இவர் வரும்போது வரலாற்றில் கிட்டத்தட்ட மறைந்துவிட்டிருந்த, பேசப்படாமல் இருந்த, எழுத்தை விட்டு 15-20 வருடங்கள் ஆகியிருந்த பலரை விலாசங்கள் தேடி பிடித்து அவர்களது நூல்களை, பழைய சேகரிப்பில் இருந்து படித்து, நேரில் சந்தித்து பேட்டி எடுக்கிறார். அந்த காலகட்டத்தைப் பற்றி எப்படி எழுத வந்தார்கள் என்று அவர்களுடைய இலக்கியப்பார்வை பற்றி பெரும்பாலும் சோர்வூட்டக்கூடிய பேட்டிகள்தான்.
ஏனென்றால் எழுதுபவர்கள் நிறுத்திவிட்டார்கள். முத்துசாமியே கூட நீண்ட காலமாக நிறுத்திவிட்டு பிறகு நவீன் தலைக்காட்டிய பிறகுதான் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் படிக்கிறார்கள் என்று மீண்டும் எழுத ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகாலம் அவருக்கு எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆகவே இப்படிபட்ட எழுத்தாளர்கள் அத்தனை பேர்களையும் புதைவிலிருந்து மீட்டெடுத்து அவர்களை ஆவணப்படுத்துகிறார். யார் யார் என்ன என்ன எழுதுயிருக்கிறார்கள்? வரிசையில் முண்டியடிக்க தெரிந்தவர்களின் மட்டுமான வரலாற்றிலிருந்து ஒதுங்கி நிற்பவர்களையும் ஏற்றுக்கொண்டு அனைவரையும் சேர்த்து ஒரு வரலாறை இவர் உருவாக்குகிறார். இது ஒரு அடிப்படை தரவுகளாலான ஒரு புத்தகம். பெரும்பாலும் பேட்டிகள்தான். அனைத்து பேட்டிகளிலுமே திரும்பத் திரும்ப வரக்கூடிய தன்மை இருக்கிறது. நம்மைபோல் ஒருவர் இதை படிக்கும்போது நிறைய விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. மலேசியாவின் சமகால அரசியல் மாற்றங்கள், குறிப்பாக ஜனநாயகத்தன்மையிலிருந்து ஒரு சர்வதிகாரத்தை நோக்கி நகரக்கூடிய தன்மை. இப்போது ஒரு மதவாத சாயலை நோக்கி செல்லக்கூடியத் தன்மை. இவை சிறுபான்மையினருக்கு உருவாகும் அச்சுறுத்தல், இதனால் அவர்கள் வாழ்வு, சூழல் தொடர்ந்து மாற்றமடைவது. தோட்டத்திலிருந்து அவர்கள் நகரங்களை நோக்கி விரட்டப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய தனிமை உணர்வு. பிறகு அவர்களது நாடு இது இல்லை என்ற உணர்வு. நமக்கு போதுமான அளவு இங்கு நிலம் இல்லை. நாம் இங்கு மூன்றாமானவர் என்ற தனிமைபடுத்தல் உணர்வுவேறு.
அனைத்திற்கும்மேல் நீங்கள் அங்கு ஆச்சரியமாக அங்கு பார்க்கக்கூடியது. இவர்கள் மிகச் சிலரே சீனமொழி மற்றும் மலாய் மொழி இலக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள். பெரும்பாலனோர் தமிழகத்தை நோக்கியே அவர்களது பார்வை இருந்திருக்கிறது. தமிழகத்தின் நீட்சியாகதான் தங்களை அவர்கள் உணருகிறார்கள். ஆகவே ஆக்கப்பூர்வமான கலாச்சார உரையாடல்கள் சீன மொழிக்கு மலாய் மொழிக்கும் இடையே நிகழவில்லை. இன்னும் சொல்லப்போனால் மலாய் கலாச்சாரத்தையோ மலாய் வாழ்க்கையையோ எழுதியவர்கள் மிகக் குறைவு.
இதை சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றி நான் எழுதியபோது எழுதியிருப்பேன். சிங்கப்பூரின் ஐம்பதாண்டுகால வாழ்க்கைமுறையில் மலாய் மக்களின் வாழ்க்கைமுறையை பெரிதாக தெரிந்துகொள்ளமுடியாது. அவர்கள் ‘மீ கோரேங்’ சாப்பிடுவார்கள் என்பதை தவிர சீனமொழியை கலாசாரங்களை பற்றி எதுவுமே சிங்கப்பூர் இலக்கியத்தில் இல்லை. இதுதான் தமிழனின் இயல்பாககூட இருக்கலாம். ஒரு உள் சுருங்கும் தன்மை, அந்த பெருமிதம் ஒருவேளை இப்படி மாறியிருக்கலாம். அதற்குள் ஒரு தாழ்வுணர்ச்சி இருந்திருக்கலாம். எதோவொரு வகையில் முன்னெடுத்து செல்லமுடியாத தன்மையும் இதில் இருக்கிறது. அந்தச் சோர்வில் இருந்து மீளக்கூடிய ஒரு அடையாளங்களை சிலர் வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே இந்தப் பேட்டிகள் வழியாக நவீன் மலேசிய இலக்கியத்தின் வரலாற்றை விமர்சனப்பூர்வமாக இனிமேல் எழுதுவதற்கான ஒரு தரவுப் பிண்ணனியை உருவாக்குகிறார். இதில்கூட அனைவரும் முக்கியமான எழுத்தாளர்கள் இல்லை. பலருடைய கதைகள் நான் படித்தது இல்லை. இலக்கியத்தைப் பற்றி அவர்கள் சொல்லும்போது அவர்களுக்கு பெரியபுரிதல் இல்லை என்ற எண்ணம் தோன்றுகிறது.
இதன் நீட்சியாக நவீன் இதில் பலரையும் ஆவணப்படமும் அவர்கள் புகைப்படங்களைச் சேகரிக்கும் பணியையும் நண்பர்களுடன் செய்துள்ளார். தமிழில் இன்றுவரை இப்படி ஒரு பணி நடக்கவில்லை. தமிழ் எழுத்தாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது வாரிசுகளைச் சந்தித்து அவர்கள் சேமித்து வைத்துள்ள படங்களின் நகல்களை எடுத்து அனைத்தையும் சேர்த்து ஒரு தொகுதியாக ஒரு இணையதளத்தில் வெளியிடக்கூடிய முயற்சி இன்னும் நடக்கவில்லை. இன்றைக்கு லா.ச.ராவின் மகனிடம் அவரது புகைப்படங்கள் இருக்க வாய்ப்புண்டு. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜானகிராமன் இவர்களது புகைப்படங்களெல்லாம் தொகுக்கப்படலாம். ஆனால் அது நடக்கவில்லை. மலேசியாவின் அது நடந்துள்ளது. அது நவீனால் சாத்தியாமாகியுள்ளது. நவீன் ஒரு தனிமனிதர் அவருடன் சேர்ந்து ஒரு ஆறோ ஏழோ நபர்கள் இருக்கிறார்கள். அந்த நண்பர்கள் உதவியுடன் தொடர்ந்து தீவிரத்தோடு இந்தப் பணியை செய்துகொண்டிருக்கிறார். அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இந்த நூல் வெளிவந்துள்ளது.
இந்தப் புத்தகத்தில் உள்ள சில பேட்டிகளை எதிர்காலத்தில்தான் நான் விரிவாக படிப்பேன். இந்தப் புத்தகத்தை படித்துவிட்டு இலக்கிய விமர்சன அளவுகோல் அடிப்படையில் ஒரு வரலாறு இனி எழுதவேண்டியுள்ளது. அதில் யார் முக்கியமானவர். யார் எங்கு இருக்கிறார்கள் என வகுக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்தப் புத்தகத்தின்மேல் பல விமர்சனங்கள் மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் வர வேண்டியுள்ளது. அதன்பிறகு நவீனே அதையும் செய்யலாம். ஒரு விமர்சன மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு வரிசை அமைக்கலாம். அதற்கொருவேளை நானோ இல்லை பல நண்பர்களோ எதிர்வினை ஆற்றலாம். இப்படி விவாதங்கள் வழியாக வாசக எதிர்வினைகள் வழியாக வாசகன் உருவாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு தர மதிப்பு வரும் காலத்தில் உருவாகும் போதுதான், நிகழ்காலத்தில் அந்த மதிப்பீடு உருவாக முடியும். அப்பொழுதுதான் இன்றைக்குள்ள படைப்பாளனுக்கு தான் எங்கே இருக்கிறேன் என்று தெரியும். நான் யாரை நோக்கி எழுத வேண்டும் என்று தெரியும்.
சு.வேணுகோபால், நவீன் ஒரு எழுத்தாளர். அது பிரதான பணியாக இருக்க வேண்டுமென சொன்னார். ஏறக்குறைய நானும் அதேதான் சொன்னேன். சிறுகதை எழுதுதல், நாவல் எழுதுதல் போன்ற பணிகள் நீங்கள் செய்வதை நிறுத்திவிட்டு இந்தப் பணிகள் செய்தால் இந்தப் பணிகளுக்கான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்றேன்.
நீ எழுதி காண்பித்தபிறகுதான் உன் சொல் அங்கீகரிக்கப்படும். என்னுடைய விமர்சனத்திற்கு பின்னால் இருப்பது நான் எழுதி நிரூபித்திருக்கிறேன் என்பதுதான். நான் வெறுமனே சத்தம் போடவில்லை. என்னுடைய குரோதமோ, நட்போ அடிப்படையில் நான் இங்கு விமர்சனம் வைக்கவில்லை. நான் எது சொன்னாலும் அதற்கு பின்னால் என்னுடைய எழுத்து இருக்கிறது. அதேபோல நீங்கள் எழுத வேண்டும், உங்களது படைப்புகள் முன்பு வைக்க வேண்டும்.
ஆனால் ஒரு எழுத்தாளன் செய்யக்கூடிய பணிகள் எது என்பதை அவனே தீர்மானிப்பவை அல்ல. அதை வரலாறுதான் தீர்மானிக்கிறது. நீங்கள் ஒரு பெரும் பரப்புகளில் பொருந்துகிறீர்கள் ஏனென்றால் அங்குதான் இடைவெளி இருக்கிறது. அந்தப் பணியைதான் நீங்கள் செய்யமுடியும்.
உதாரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள கல்லூரியில் ஒன்றில் என்னிடம் நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்று நான் எழுதியிருந்த புத்தகத்தைப் பற்றி கேட்டார்கள். அதை ஏன் ஒரு எழுத்தாளர் எழுத வேண்டும்? ஒரு எழுத்தாளன் செய்யக்கூடிய வேலையா இது. கண்டிப்பாக இல்லை என்றேன். நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் ஒரு கல்லூரி பேராசிரியரால் எழுதபட வேண்டிய புத்தகம். ஆனால் எந்தப் பேராசிரியர் எழுத முடியும்? எந்தப் பேராசிரியர் அதை எழுதக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்? இப்போது யார் இருக்கிறார்கள்? வேறு வழியில்லை. அதனால்தான் நான் எழுதுகிறேன். ஒரு எழுத்தாளன் எழுதக்கூடிய புத்தகம் அது இல்லை.
இலக்கிய விமர்சனத்தை எழுத்தாளர்கள் செய்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் தலைசிறந்த விமர்சகர்கள் அனைவருமே பெரும்பாலும் எழுத்தாளர்கள்தான். இலக்கிய விமர்சகர்களும் இருக்கிறார்கள் ஆனால் எழுத்தாளர்களுடைய விமர்சங்களுக்கு மேலதிக முக்கியத்துவம் இருக்கிறது. தமிழில் நல்ல விமர்சனங்களை க.நா.சு, செல்லப்பா, சுந்தர ராமசாமி என்று பெரிய விமர்சகராக செயல்பட்டவர்கள் எழுத்தாளர்கள்தான். ஆனாலும்கூட ஒட்டுமொத்தமாக தமிழ் விமர்சனம் எழுதக்கூடிய நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகள் போன்ற பெரிய புத்தகங்களை ஒரு எழுத்தாளன் எழுதவேண்டிய அவசியம் கிடையாது. அவன் தன்னுடைய கண்டடைதலை வெளிப்படுத்துவதற்கு இலக்கிய விமர்சனத்தை ஒரு கருவியாக கொண்டான் என்றால் தன்னுடைய மரபிலிருந்து சில விஷயங்களை அவன் எழுதலாம். ஆனால் இலக்கிய விமர்சனம் அனைத்தும் தொகுத்து 20 ஜாம்பாவான்கள் என்று ஒரு புத்தகத்தை எழுதுவது அவனுடைய வேலை கிடையாது. ஆனால் அப்படி ஒரு விஷயத்தை எழுதவேண்டியுள்ளது. இந்தத் தலைமுறையில் யாராவது அதை எழுத வேண்டியுள்ளது. அந்தப் பணி இருக்கும்போது அதை செய்துதான் ஆக வேண்டும்.
ஆகவே நண்பர் நவீன் அவர்களை பொறுத்தவரையில் இலக்கியப் பணியும் முக்கியம்தான், இவ்வளவு பெரிய பணியை அவரைத் தவிர வேறு யாரும் செய்யமுடியாது. இன்னொரு அறிவுத்துறையில் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு ஆட்கள் இருக்கிறார்கள். வெவ்வேறு திறனுடையவர்கள் வெவ்வேறு இளைஞர்கள் வருவார்கள். ஆனால் தமிழ் இலக்கியத்தில் அப்படி இல்லை. எல்லாமே சிறுபான்மையான ஆட்கள்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் வரப்போவதில்லை. அவர்கள் பணக்காரர்களோ செல்வாக்கானவர்களோ ஆகப்போறதில்லை.
ஆனால் அறிவு என்பது தன்னளவில் ஒரு சக்தி. அது தன்னுடைய உபாசகர்களை கண்டடையும். தெய்வங்கள் சாமியாடிகளைக் கண்டடைவதுபோல. சாமியாடிக்கு வேறு வாய்ப்பு கிடையாது. இல்லீங்க எனக்கு சுடலை மாடன் வேண்டாம் இசக்கி தான் வேண்டுமென அவன் சொல்லமாட்டான். அதுபோல மலேசியத் தமிழ் இலக்கியம் கண்டைந்த ஓர் ஆளுமையாக நவீனை நான் நினைக்கிறேன்.
இந்த நூல் ஒரு பெரிய வரலாற்று பணியுடன் கூடிய முதல் நூல் ஒரு தொடக்க நூல் என்ற வகையில் முக்கியமானது. இந்தப் படைப்புகளில் அனைத்து படைப்பாளர்களின் கட்டுரைகளும் அதன் அடிப்படையில் தரவரிசைபடுத்தப்பட்ட மலேசிய இலக்கிய வரலாறு என்கிற ஒரு தரமான ஒரு பொதுவான ஏற்பை உருவாக்கக்கூடிய நூலும் தொடர்ந்து வரவேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி வணக்கம்.
ஒரு மகத்தான எழுத்தாளனுக்கு ஓர் அற்புத ஆழ்ந்த ஆளுமையின் நேர்மையான புகழாரம் .
எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்களில் விமர்சனம் கலந்த பிரியம் உண்டு.ஆனாலும் நாம் வேறு நாடுகளுக்கு போகிற போது அந்த நாட்டின் அடிப்படை வரலாறுகளை நாம் தரித்து நிற்கிற ஒரு வார காலத்தில் அறிந்து விட முடியாது.அளந்து விடவும் முடியாது.இவ்வாறு தான் முண்டியடிக்கிற முந்திரி விதைகளாக பல வரலாறுகள் போன்றவர்களால் எழுதப்பட்டு திரிபுகளாக முடிந்திருக்கின்றன.இப்போ சிங்கையின் இலக்கிய தடத்தை சிங்கைவாழ் மக்கள் அல்லது அங்குள்ளபல்கலை கழகங்கள் ஆய்வுகள் செய்வது நம்பகமானது.நாங்கள் எமக்குத் தெரிந்தவர்களைத்தான் வார்த்தைக்கு வார்த்தை எழுதுவோம்.இலங்கைக்குச் சென்ற வேளை நான் ஈழ வரலாறு எழுதுவேன் என்றார் கவிஞர் வைரமுத்து.அது போலத் தான் ஜெயமோகனும் சொல்கிறார் சிங்கை இலக்கிய வரலாற்றை.உண்மையில் இது துயரம் தருகிற செய்தி!!
அப்படி சொன்னதாகத் தெரியவில்லை. மீண்டும் ஒருதரம் வாசிக்கவும்
வல்லினம் தோழமைக்கு வாழ்த்துக்கள்.ஜெயமோகன் அப்படித்தான் சொன்னார் என்று நான் சொல்லவில்லை. அவருடைய விமர்சனத்தை ஆளப் புரிந்து கொண்டால் அது புரியும்.விமர்சனம் இல்லாத துறை எங்குமே வளர்ச்சியடைந்தது கிடையாது என்கிற யதார்த்தத்தை இன்றைக்கு பலரும் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இதனையும் ஒரு விமர்சனமாக்கலாம்.இலக்கிய கர்த்தாக்களுக்கு பட்டியல் போடுவது எப்படி? என்பதை பேராசிரியர்களை விடவும் தானே அதிகம் அறிந்து வைத்திருப்பதாக அவர் வாதிட முனைகிறார்.அதை விடவும் எழுத்தாளர் பட்டியல் 200 பேரையும் தாண்டி இருக்கக் கூடாது என்பதிலும் அவர் கறாராக இருக்கிறார்.சிங்கையில் மலேசியாவில் அப் பட்டியலுக்கு அவரே ஆள் தேர்கிறார்.இவையெல்லாம் ஜெயமோகனின் ஆளுமையாகவும் கொள்ளலாம். அடாவடித்தனமாகவும் கொள்ளலாம்.ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.இப்புவியில் எழுதப்பட்ட அனைத்து வரலாறுகளும் அடக்கு முறையாளர்களாலும் வல்லாண்மைமிக்கவர்களாலும் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்.அவை ஒட்டுமொத்த மானிட குலத்தின் வரலாறுகளல்ல.இலக்கிய வரலாறுகளும் இதற்கு விதிவிலக்கல்ல…
// இலக்கிய கர்த்தாக்களுக்கு பட்டியல் போடுவது எப்படி? என்பதை பேராசிரியர்களை விடவும் தானே அதிகம் அறிந்து வைத்திருப்பதாக அவர் வாதிட முனைகிறார் //
வாதிட முனையவெல்லாம் செய்யவில்லை. நேரடியாகவே அப்படித்தான் சொல்கிறார். மிகத்தெளிவாகவே சொல்கிறாரே, ‘நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம்’ நூல் கல்விப்புலத்திலிருந்து வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை. ஏன் என்பதை கேட்டுக்கொள்ளுங்கள், அவர் சொல்லவருவதென்ன என்பது தெரியவரும். தமிழ்ப்பேராசிரியர்கள் அத்தனைபேரையும் ஒரு அவையில் அமரவைத்து ஒவ்வொருவரிடமும், அவர்களது ரசனையில் நவீனத்தமிழ் இலக்கியப்படைப்பாளிகளின் ஒரு வரிசையை உருவாக்கச்சொல்லிப்பார்த்தால் அப்போது இன்னமும் தெளிவாகப்புரியும் ஜெயமோகன் என்ன சொல்ல வருகிறார் என்று.
சில ஆண்டுகள் முன்பு நீயா நானா பேட்டியில் முதுநிலை தமிழிலக்கியம் பயிலும் மாணவன் ‘உங்களுக்குப்பிடித்த நவீனத்தமிழிலக்கியவாதி யார்’ என்ற கேள்விக்கு மு.வ என்றானாம். நாஞ்சில் நாடன் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கும் நோக்கில் அவரைச்சந்திக்கும் ஒரு மாணவனிடம் தன்னைவிட தகுதியானவர்கள் என்று அவர் எண்ணும் சில எழுத்தாளர்கள் பெயர்களைச்சொல்லி, ‘அவர்களை எல்லாம் படித்திருக்கிறீர்களா ?’ என்று கேட்க ஆய்வு மாணவரது எதிர்கேள்வி இது : ‘ஐயா, அந்த பேரிலெல்லாம் நீங்க எழுதியிருக்கீங்களா ?’
// அதை விடவும் எழுத்தாளர் பட்டியல் 200 பேரையும் தாண்டி இருக்கக் கூடாது என்பதிலும் அவர் கறாராக இருக்கிறார். //
ஒரு நகைச்சுவைக்காகச் சொன்னதை அப்பட்டமாக சொல்லுக்குச்சொல் என்று புரிந்துகொள்ளுமளவுக்கு நகைச்சுவை உணர்வுள்ளவரா நீங்கள் ? அவர் சொன்னதன் நோக்கம், விமர்சனப்படுத்தப்படாமல், தரப்படுத்தப்படாமல் எழுதும் எல்லோரையும் பட்டியலில் வைக்கும் பந்திப்பாய் விரிக்கும் தன்மையை கண்டிப்பது.
// சிங்கையில் மலேசியாவில் அப் பட்டியலுக்கு அவரே ஆள் தேர்கிறார். //
ஆமாம், அதற்கான காரணத்தையும்தான் தெளிவாக எழுதியிருக்கிறாரே ஐயா.
// ஆனால் அங்கிருக்கும்போது முறையாக சிங்கப்பூர் இலக்கியங்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன். …. ஏனென்றால் வரிசை என்று வந்தால் முதலில் கழுத்தைப்பிடித்து தன்னைத்தான் வெளியில் தள்ளுவார்கள் என்று அவர்களுக்கு முன்பே தெரியும். //
ஆக, சிங்கையிலுள்ள இலக்கியங்களை படித்துப்பார்க்கிறார், விமர்சனம், தரப்படுத்தல் என்று ஏதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கிறார். தான் பார்த்தவரை இல்லை என்று உணர்கிறார், இல்லை என்பதோடு, அப்படி ஒன்று உருவாகிவிடாமல் தடுக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறார், எனவே அவர் அப்படி ஒரு வரிசையை தெரிவு செய்கிறார்.
// இவையெல்லாம் ஜெயமோகனின் ஆளுமையாகவும் கொள்ளலாம். அடாவடித்தனமாகவும் கொள்ளலாம். //
இலக்கிய வாசகனுக்கு, இலக்கியத்தின்மேல் அக்கறையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு, இலக்கிய அரசியலை இடக்கையால் புறமொதுக்கத்தெரிந்தவர்களுக்கு, இது அடாவடியாகத்தெரியாது.
வெள்ளத்தனைய மலர்நீட்டம்.