“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மணி அப்போது 8.50. சை.பீர்முகம்மது வீட்டிலிருந்து பத்துமலை கோயில் அருகில்தான் என்றாலும் தாமதமாகிவிடும் என பதற்றம். அப்படியே தாமதமானாலும் 5 நிமிடத்திற்குக் கூடாது. ஆனால் அதுவும் தாமதம்தான்.
என் நினைவில் கடந்த பத்து ஆண்டுகளில் இருமுறை வல்லினம் நிகழ்ச்சியைத் தாமதமாகத் தொடங்கியுள்ளேன். இரண்டு முறையும் மனதளவில் கடும் அவமானம் அடைந்துள்ளேன். நாம் ஒரு நிகழ்ச்சிக்குச் சிலரை வரச் சொல்கிறோம். அவர்கள் நம் சொல்லைக் கேட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கும் எண்ணற்ற பணிகள் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியைத் தாமதமாகத் தொடங்குவது நேரத்தையும் நம் சொல்லையும் மதித்து வந்தவர்களையும் உதாசினப்படுத்துவதற்கு சமம். எனவே முகாமுக்கு ஏற்பாடு செய்த பேருந்து சரியாக ஒன்பது மணிக்குப் புறப்படும் எனக்கூறிவிட்டு நானே தாமதமாகச் சென்றுவிடுவேனோ என கலக்கம் தொற்றியது.
கார் சரியாக 9.00 மணிக்கு பத்துமலை வளாகத்தில் நுழைந்தது. பேருந்தின் அருகில் நிற்கையில் 9.02. பேருந்துக்கான பொறுப்பை எழுத்தாளர் அர்வின் ஏற்றிருந்தார். ‘இன்னும் இருவர் வரவில்லை’ என்றார். அவர்கள் வர தாமதமாகும்; எனவே பேருந்து புறப்பட தாமதமாகும் என நான் முன்பே அறிந்ததுதான். ஒருவர் விமானத்தில் வந்து இறங்கி அங்கிருந்து பத்துமலை வர வேண்டும். மற்றவர் முதுமையானவர். தனியாக வருகிறார். ஆனாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக நான் சரியான நேரத்தில் இருக்க வேண்டுமென விரும்பினேன்.
பேருந்தில் எல்லோருக்கும் வணக்கம் வைத்துவிட்டு என் காரிலேயே சுங்கை கோப் மலைக்குப் புறப்பட்டேன். உடன் நண்பர்கள் முருகன் மற்றும் சரவணன் இருந்ததால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. நிமலன் காரை ஓட்டினான். பதற்றம் மெல்ல மெல்ல குறைந்து இயல்பான நிலைக்கு வந்தேன். நண்பர்கள் உடன் இருந்தால் இயல்பாகவே பதற்றம் குறைந்துவிடும்.
ஈப்போ பட்டணத்தில் உள்ள திருப்பதி உணவகத்தில் மதிய உணவு. தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஸ்வேதா “தமிழகத்தில திருப்பதி போன்ற ஆலயப் பெயர்கள் இருந்தாலே அது சைவ உணவகம்தான். இங்க அசைவமெல்லாம் கிடைக்குது” என்றார். ஸ்வேதா மற்றும் ஜி.எஸ்.வி நவீன் ஜெயமோகன் நடத்தும் புதிய வாசகர் சந்திப்பின் வழி இலக்கியத்துக்கு அறிமுகமானவர்கள். பெங்களூரில் பணியாற்றுகிறார்கள். அவர்களுடன் ஜெயமோகனின் மகள் சைதன்யாவும் வந்திருந்தார். மெல்லிய குரலில் பேசும்போது ஜெயமோகன் குரலில் இருக்கும் கரகரப்பு; அதே தொணி.
அவர்கள் மூவரையும் நான்தான் 28.12.2019 காலையில் விமான நிலையத்தில் ஏற்றிக்கொண்டேன். இம்முறை நிகழ்ச்சி கூலிமில் உள்ள நவீன இலக்கியக் களத்துடன் இணைந்து நடைபெற்றதால் உணவு, தங்குமிடம், அரங்கம் என பெரும் பொறுப்புகளில் இருந்து விடுபட்டிருந்தேன். வல்லினம் பதிப்பின் வழி, வெளியிட வேண்டிய நான்கு நூல்களும் ஒருமாதத்திற்கு முன்பே கையில் கிடைத்துவிட்டது. எனவே ஊர் சுற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அவர்களை ஜெயமோகன் தளம் வழி அறிவேன். ஸ்வேதா மற்றும் நவீன் ஊட்டி முகாமில் ஒரு அரங்கை வழிநடத்தியுள்ளனர். நடந்து முடிந்த விஷ்ணுபுரம் விழாவில் ஸ்வேதா அபி கவிதைகள் குறித்து அறிமுகம் செய்து உரையாற்றுபவர் பட்டியலில் இருந்தார்.
மலேசியாவுக்கு வருபவர்கள் அதன் இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டுமென நான் விரும்புவேன். முதல் நாள் பயணத்தை தோட்டப்புறம் சார்ந்து அமைத்துக்கொண்டேன். மறுநாள், எழுத்தாளர் சு.வேணுகோபால் வருவதால் மூவரையும் நண்பர் ராவணன் பொறுப்பில் ஒப்படைத்தேன். அவர் ஜெயமோகனின் தீவிர வாசகர். யோகா பயிற்சியாளர்.
திட்டமிட்டபடி மாலை ஐந்து மணிக்குள்ளாக சுங்கை கோப் மலையில் சேர்ந்தோம். சுவாமிதான் எங்களை வரவேற்றார். நெடுநாளைக்குப் பின் நண்பர் மணிஜெகதீசன் அவர்களைப் பார்த்தேன். முதன் முறையாக வந்தவர்கள் மலைமீது அமைந்துள்ள ஆசிரமத்தின் அழகில் வியந்துகொண்டிருந்தனர். நான் என் நண்பர்கள் சரவணன் மற்றும் முருகனுடன் ஓர் அறையில் தங்கிக்கொண்டேன்.
20.12.2019 (வெள்ளிக்கிழமை)
முதல் நாள் பொது நிகழ்ச்சி. சீ.முத்துசாமியின் ‘மலைக்காடு’ மற்றும் என்னுடைய ‘பேய்ச்சி’ நாவல்களின் வெளியீடு அதுகுறித்த உரை இடம்பெற்றது. உரையை முறையே எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் அருண்மொழி நங்கை ஆற்றினர். நானறிந்து இருவருமே தேர்ந்த வாசகர்கள். உலக இலக்கியத்தை அறிந்தவர்கள். அவர்கள் மதிப்பீடுகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் ‘பேய்ச்சி’ நாவல் எழுத அருண்மொழி அக்கா முக்கியக் காரணி. அதற்கு முன்னமே ஜனவரியில் ஆரம்பித்த நாவல் பாதியிலேயே சிக்கிக் கிடந்தது. ஊட்டி முகாமில் அவர் கொடுத்த தூண்டுதல் பதினெட்டு நாட்களில் புதிய நாவலை எழுதி முடிக்க வைத்தது. எனவே அதை மதிப்பீடு செய்ய அவரே பொருத்தமானவர் எனக் கருதினேன். ஊட்டி முகாமில் அவர் ஒரு படைப்பை அணுகிய விதம் என்னைக் கவர்ந்திருந்தது. ஒவ்வொரு அரங்கிலும் பல விமர்சன பூர்வமான கேள்விகளை முன்வைத்தார். நாவல் குறித்த அவரது எண்ணங்கள் நிறைவைக் கொடுத்தன. தேர்ந்த வாசகர் ஒரு நாவலை அங்கீகரிக்கும்போது ஏற்படும் மனநிறைவு அலாதியானது. சு.வேணுகோபால் தனக்கே உரிய பாணியில் ‘மலைக்காடு’ நாவலின் பல்வேறு பகுதிகள் குறித்துப் பேசினார். ஜெயமோகன் உரை, காவியங்களில் தொடங்கி நாவல் எவ்வாறு உருவானது என்றும் நாவலின் பல்வேறு கூறுகள் குறித்தும் விரிவான சித்திரத்தை வழங்கியது.
இரவில் சு.வேணுகோபாலை அழைத்துக்கொண்டு நண்பர்களுடன் வெளியேறினேன். அன்றைய நிகழ்ச்சி குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அருண்மொழி அக்காவின் உரை பலருக்கும் பிடித்திருந்தது. அவர் பேசி முடித்தவுடனேயே ‘பேய்ச்சி’ கடகட வென அறுபது நாவல்களைக் கடந்து விற்றுவிட்டதாக நிமலன் கூறினான். சு.வேணுகோபால் நாவலில் தகவல்கள் கலையாக மாறும் தருணங்கள் பற்றி காரில் சொல்லிக்கொண்டிருந்தார். லுனாஸில் எனக்குப் பிடித்த உணவகம் அழைத்துச்சென்றேன். ஊருக்குப் புதியவர்கள் யாரோ வந்திருப்பதாக ஆங்காங்கு இருந்த இந்திய வாடிக்கையாளர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்தனர். ‘பேய்ச்சி’ வழி லுனாஸ் எனும் சிறுநகரம் பரவலாக அறிமுகமாகியுள்ளதை அவர்கள் யாரும் உணர்ந்திருக்கப்போவதில்லை.
21.12.2019 (சனிக்கிழமை)
காலையில் சு.வேணுகோபாலின் அரங்கு. ‘வல்லினம் பரிசுக்கதைகள்’ நூலை வெளியிட்டு உரையாற்றினார். பவித்திராவின் ‘சிறகு’, எஸ்.பி.பாமாவின் ‘புதிதாக ஒன்று’ ஆகிய சிறுகதைகள் மலேசிய தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்றார். இதுபோன்ற தரமான சிறுகதைகளை வெளிக்கொணர வைத்ததாலேயே வல்லினம் சிறுகதை போட்டியும் அத்தொகுப்பும் முக்கியமானது எனப்பாராட்டினார். எப்போதும்போல ‘சிறகு’ குறித்து சில ஆழமற்ற கேள்விகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. ‘ஏன் அவ அப்படி செஞ்சா?’ என்பதே பல்வேறு பாவனையில் கேட்கப்பட்டன. இதை ஊட்டி முகாமில் ஒப்பிட்டுக்கொண்டேன். அங்கு ‘ஏன் அவள் அப்படி செய்திருப்பாள்’ என்பதற்கான வேறுபட்ட புரிதல் முறையும் அதன் வழி நாம் அறியாத ஆழம் செல்லும் கருத்துகள் வரும். இங்கு இதுதான் நிலை. நூலை பதிப்பித்தவனாய் நான் என்ன பேசினாலும் அது சப்பைக்கட்டுபோல இருக்கும் என்பதால் அமைதியாக நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இரண்டாவது அமர்வு தற்கால உலக இலக்கியம். ஜெயமோகன் தற்கால உலக இலக்கியத்தை ஒருமணி நேரத்தில் அறிமுகப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் கூறி, மலேசியா போன்ற ஒரு தேசத்தில் உலக இலக்கியத்திலிருந்து கற்க வேண்டிய கூறுகளை கலாச்சார பன்முகத் தன்மை (cultural pluralism), பண்பாட்டுச் சிக்கல் (diaspora writing), கூட்டு இடப்பெயர்ச்சி(exodus writing), விளிம்பு நிலை மக்களின் எழுத்து (margalisedwriting) என நான்காக வகுத்துக்கூறினார். அமர்வு முடிந்தபின் சைவ உணவுக்கு கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் லுனாஸ் நோக்கி மீண்டும் புறப்பட்டேன். நண்பர்கள் ஜெயமோகன் உரை குறித்து சிலாகித்தனர். அவர் பேசியது பெரிய இலக்கியப் பரிட்சயம் இல்லாதவர்களும் மனதில் பதிந்துள்ளது ஆச்சரியமாக இருந்தது. அந்த நான்கு கூறுகளையும் மனப்பாடமாக ஒப்புவித்தனர்.
லுனாஸில் வாத்துக்கறி புகழ்பெற்றது. நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே உள்ள உணவகம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்துகூட அங்கு வாத்துகறியைச் சாப்பிடுவார்கள். முன்பு என் நண்பன் அங்குப் பணியாற்றினான். வெளிநாட்டுக்காரர்களும் அதிகம் வருவதாகச் சொல்வான். ஒரு முழு வாத்தை வாங்கி ஐவர் சாப்பிட்டோம். பின்னர் ‘பேய்ச்சி’ நாவலில் வரும் பகுதிகளையும் நான் படித்த பள்ளிக்கூடம், மாரியம்மன் கோயில் ஆகியவற்றையும் நண்பர்களுக்குக் காட்டினேன். அப்படிக் காட்டுவது எனக்கே நான் காட்டிக்கொள்வதுதான். என்னையே நான் பார்த்துக்கொள்வதுதான்.
மதியம் ‘நாட்டார் வழக்காற்றியல்‘ குறித்த உரை. சு.வேணுகோபால் அவர்களுக்கு வாத்துகறி வாங்கிக்கொடுக்காதப் பாவத்தைச் சுமந்துகொண்டு அரங்கில் அமர்ந்திருந்தோம். அதை அவரிடம் சொன்னபோது ‘அடப்பாவிகளா… கூப்பிட்டிருக்கலாமே’ என்றார் அதிர்ச்சியாக. நாட்டார் வழக்காற்றியல் பலரையும் கவர்ந்தது. மிக இயல்பாகத் தங்களை அவ்வுரையுடன் இணைத்துக்கொண்டனர். தங்கள் வாழ்க்கையில் மறந்த – மறக்கடிக்கப்பட்ட தருணங்களை மீட்டெடுக்க அந்த உரை உதவியிருக்கக் கூடும். உரை முடிந்ததும் ஓய்வு நான்கு மணி நேரம் இருந்ததால் சு.வேணுகோபாலுக்குச் செய்த பாவத்தைப் போக்கிக்கொள்ள அருகில் இருந்த உணவகம் ஒன்றுக்குச் சென்றோம். அது ஆற்றோரம் அமைந்த தோப்பு உணவகம். கேட்கும் உணவு அப்போதே சுடச்சுட செய்து கொடுக்கப்பட்டது. தென்னைகள் சூழ, ஆங்சாக்கள் ஆங்காங்கு திரிந்துகொண்டிருக்க, மாலை நேர ஆற்றின் சலனத்தில் உணவு கொண்டாட்டம் இனிதே தொடங்கியது.
இரவு ஜெயமோகனின் மரபிலக்கியம் குறித்த உரை. நவீன தமிழ் இலக்கியத்தின் மேதைகளுக்கு மரபு இலக்கியத்தின் மேல் இருந்த ஒவ்வாமையில் இருந்து அவர் உரை தொடங்கியது. விதிவிலக்காக கு.அழகிரிசாமியைக் குறிப்பிட்டார். (மலேசியாவில் அவர் எவ்வளவு வீணடிக்கப்பட்டுள்ளார் எனத்தோன்றியது) அதற்கான காரணங்களைக் கூறி தனக்கு மரபிலக்கியத்தின் மேல் உள்ள பிடிப்பின் காரணம் குறித்தும் கூறினார். பின்னர், ஒரு நவீன வாசகன் அல்லது எழுத்தாளனுக்கு மரபிலக்கியம் ஏன் அவசியம்? என்ற கேள்வியுடன் அவர் உரையைத் தொடர்ந்தார். மரபிலக்கியம் வழி அறியும் அழகியல், அந்த அழகியல் வழி இயற்கையை இன்னும் ஆழமாக அறியும் தன்மை, மரபிலக்கியத்தில் அறியும் அறவியல், அவ்வறவியலின் நீட்சியின் தொடர்ச்சியை இன்றும் உணரும் தருணம், மரப்பிலக்கியம் வழி சொற்களஞ்சிய பெருக்கம், அதற்கான சங்கப்பாடல்கள், ஆழ்வார் பாடல்களை உதாரணம், மரபிலக்கியம் வழி அறியும் மெய்யியல், அது ஏதோ ஒருவகையில் நம் வாழ்வைப் பின் தொடர்ந்து வரும் கணங்கள் என நான்காகப் பிரித்து விரிவாக அனைவருக்கும் புரியும்படியான உரையமைத்தார்.
இரவில் நான் அவரிடம் அவ்வாறு உரையை வகுத்துக்கொள்ளும் தன்மை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். கல்லூரியில் அவ்வாறுதான் வாசிப்பவற்றை வகுத்து வைத்துக்கொள்வதுண்டு. இப்போது எதுவுமே நினைவில் இல்லை. ஆர்வம் மட்டுமே நினைவடுக்கில் ஒன்றை சேமிக்கிறது. ஜெயமோகன் எதையுமே ஆர்வமாகக் கற்கிறார். அது அவரிடம் என்றுமே சிந்தனையில் நிலைபெறுகிறது. உரையில் அவர் அமைத்துக்கொள்ளும் வடிவத்திற்கேற்ப அது சேமிப்பிலிருந்து வந்து விழுகிறது. பயிற்சிதான் அதற்கு முக்கியம்.
இரவில் நண்பர்கள் மீண்டும் வெளியேறினர். நானும், ஆசிரியர் முருகனும் மட்டும் வெளியேறவில்லை. அதிகாலை இரண்டு மணிக்கு அரங்கில் LED PANEL பொறுத்த வருவதாகக் கூறியிருந்தனர். அப்பணியைச் செய்யும்போது யாராவது உடன் இருக்க வேண்டும். தூங்கினால் எழும்போது தலை வலிக்கும் என்பதால் காத்திருந்தேன். வெளியே பேச்சுக்குரல்கள். எட்டிப்பார்த்தபோது ஐவர் அடங்கிய பெண் குழு ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். கீழே இறங்கினேன்.
யாரோ கல்வியாளர் தனிப்பட்ட முறையில் அவர்களை அழைத்து ‘சிறகு’ சிறுகதை குறித்து பேசி தனிப்பட்ட குணத்தை விமர்சிப்பதுபோல தொடர்ந்திருக்கிறார். இதுபோன்ற கதையால் சமூகத்துக்குக் கேடு எனும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. நான் இதுபோன்ற அரைவேக்காட்டு கூட்டத்தைக் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதால் பெரிதாக ஒன்றும் சலனப்படவில்லை. முதலில் இவர்கள் இலக்கிய வாசகர்கள் இல்லை. பாடத்திட்டத்தில் உள்ளதால் சில இலக்கியப்பகுதிகளைப் படித்து, அதில் ஏதாவது சில சொற்கள் அரங்கில் ஒலித்தால் தலையை வேகமாக ஆட்டுபவர்கள். இவர்களது பெரிய பலமே தங்கள் அரைவேக்காட்டு அறிவின் மீது இருக்கும் அபாரமான தன்னம்பிக்கைதான். மேலும் கல்வி பின்புலம் இருந்தால் தங்களை ஒரு அறிவுஜீவியாகவே எண்ணிவிடுவர். அப்புறம் தங்கள் சொற்களுக்கு வலு சேர்க்க அதுவரை தாங்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணி, தொழில் சூழலில் ஆற்றிய பணி எனப் பட்டியலிடுவார்கள். சில சமயம் விருதுகளையும் அடுக்குவார்கள். மிஞ்சிப்போனால் அனுபவத்தைச் சொல்லி மிரட்டுவார்கள். ஆனால் ஒருபோதும் இவர்களால் விரிவாக இலக்கியத்தைக் கற்க முடியாது. நான் “நாளையே கூட இவர்களிடம் பேசி, சங்கப்பாடல் முதல் உலக இலக்கியம் வரை உதாரணம் காட்டி எவ்வளவு மொண்ணையாகச் சிந்திக்கிறார்கள் என அவர்களிடமே நிரூபிக்க முடியும். ஆனால் இதுபோன்ற அரைவேக்காடுகள் உள்ள பாதையில்தான் ஓர் இலக்கியவாதி பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக வாசிப்பின் வழி அந்தந்தப் படைப்பாளியே தயாராக வேண்டும்” என்றேன். அதற்குள் வெளியே சென்ற நண்பர்கள் திரும்பினர்.
அதிகாலை இரண்டு மணிக்கு LED PANEL பொறுத்துபவர்கள் வரவும் பாண்டியனையும் எழுப்பி அரங்குக்கு அழைத்துச் சென்றேன். தூக்கம் வாட்டியது. LED PANEL எனக்கு அவசியமாகப் பட்டதால்தான் கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் பொறுத்த ஏற்பாடு செய்திருந்தேன். அரங்கு வெளிச்சத்தில் விருது விழாவுக்கென எடுத்த ஆவணப்படம் எடுபடாமல் போய்விடும் என்ற அச்சம் இருந்தது. Projector புற ஒளிகளால் மங்கக்கூடியது. எனவே இம்முடிவு. ஒருவரை கௌரவிக்கிறோம் என முடிவெடுத்தப்பிறகு அதில் முழுமை இருக்க வேண்டும். பொறுத்தி முடிக்க ஒரு மணி நேரமானது. அதற்கு பிறகே நானும் பாண்டியனும் படுக்கச் சென்றோம்.
22.12.2019 (ஞாயிற்றுக்கிழமை)
சாம்ராஜ் மலேசிய கவிதைகள் குறித்து பேச வேண்டுமென முடிவெடுத்தபோது சுமார் 19 கவிதை நூல்களை அவரிடம் சேர்த்திருந்தேன். சிலரது தொகுப்புகளில் உள்ளவற்றை நான் கவிதைகளாகவே கருதவில்லை என்றாலும், வஞ்சகமாக அவர்களைத் தவிர்த்ததாக சொல்லப்படும் வரலாற்றுப்பழி வேண்டாம் என்று தமிழகத்தில் கொண்டுச்சேர்த்தேன். கடந்த 10 ஆண்டுகளில் வந்த கவிதை நூல்கள் அவை. அவற்றை அவர் வாசிப்பில் அளவிடுவது அவசியம் என கருதினேன்.
சிறப்பாகவே தன் பார்வையை முன்வைத்தார். நான்கு பகுப்புகளாகப் பிரித்து அவற்றில் முதல் எட்டு தொகுப்புகளை எழுதிய பச்சைபாலன், ஏ.தேவராஜன், ஜமுனா வேலாயுதம், கருணாகரன், அகிலன், பா.அ.சிவம் ஆகியோரது தொகுப்புகளை முழு முற்றாக நிராகரித்தார்.
அதுபோல அடுத்தடுத்த அடுக்குகளில் உள்ள கவிதைகளிலும் என்ன பலவீனம் உள்ளது எனச் சுட்டிக்காட்டினார். மெல்லிய அங்கதத்துடன் அமைந்த அந்த உரைக்குப் பின்னர் சில கேள்விகள் கேட்கப்பட்டன. மலேசியாவில் தொடர்ந்து ஹைக்கூ என்று பேசிக்கொண்டும் விடாமல் கவிதைகள் எழுதிக்கொண்டும் இருக்கும் பச்சைபாலனை நிராகரித்தது குறித்த சின்ன குழப்பம் அனைவருக்கும் எழுந்தது. எனக்கு அதில் குழப்பமே இல்லை. ஒப்பீட்டளவில் தேவராஜன், சிவம், அகிலன் நல்ல கவிதைகள் எழுதியுள்ளனர் என்றே தோன்றியது. கவிஞர் சாம்ராஜ் கவிதை வாசகர் மட்டுமல்ல. தரமான இலக்கியங்களை தேடி வாசிக்கும் நல்ல வாசகர். நுண்ணிய அவதானிப்பாளர். எனவே அவரது கவிதை குறித்த தர மதிப்பீடு உயர்வானதாகவே இருக்கும். அதில் நாம் கருணையை எதிர்ப்பார்க்க முடியாது.
அரங்கு முடிந்து சாம்ராஜ் அந்த நான்கு பகுதிகளிலும் உள்ள கவிதைகளை ஒப்பீடு காட்டி அவை ஒவ்வொன்றிலும் எவ்வாறான வித்தியாசம் உள்ளது என இன்னும் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் வந்தன. ஞாயமாகவே தோன்றியது. கட்டுரை வடிவில் அதை கொடுப்பார் என சமாதானப்படுத்தினேன்.
வல்லினம் விருது விழா சரியாக காலை 11 மணிக்குத் தொடங்கியது. கங்காதுரை சிறப்பாக வழிநடத்தினார். என் உரைக்குப் பின் சை.பீர்முகம்மதுவின் ஆவணப்பட சுருக்கம் ஒளிபரப்பானது. நடக்கும்போது அவர் தள்ளாடுவதால் ஒரு நாற்காலியில் அமரவைத்து இயக்கியிருந்தோம். அது பார்ப்பவர்களுக்குச் சோர்வளிக்கும் என்பதால் அதிக படங்களை இணைத்தோம். பதினேழு நிமிட சுருக்க வடிவம் ஓரளவு அவரது பங்களிப்பை உணர்த்தியது. ஆவணப்படத்தை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வெளியீடு செய்து ஆசியுரையாற்றினர். இந்த விருது விழாவுக்கென பதிப்பித்த சை.பீரின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலை சு.வேணுகோபால் வெளியிட்டு விமர்சன உரையாற்றினார்.
சை.பீர்முகம்மது அவர்களிடம் நான் இரு வேண்டுகோள் இட்டிருந்தேன். ஆவணப்படத்தில் முழுமையாக அவரைப் பற்றி சொல்லியுள்ளதால் மீண்டும் அது மேடையில் பேசப்படக்கூடாது. சரியாக 20 நிமிடத்தில் உரை முடியவேண்டும். அன்று சை.பீர் அவர்களின் உரை சிறப்பாகவே இருந்தது. மிக கச்சிதமாக ஆவணப்படத்தில் இல்லாத தன் குறித்த தகவல்களைச் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார்.
இறுதியாக, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் விமர்சனத்தின் தேவை என்ற உரையுடன் மூன்று நாள் முகாம் நிறைவு கண்டது.
நண்பர்கள் அனைவரையும் பேருந்திலும் காரிலும் அனுப்பிவிட்டப்பின் சட்டென தனிமையானதுபோல இருந்தது. பேருந்துக்குச் சென்று அனைவரையும் வழியனுப்பி வைத்தேன். பலரது முகத்தில் நிறைவு. அடுத்த முறையும் தங்களை அழைக்கும்படி கேட்டுக்கொண்டனர். பேருந்து புறப்பட்டதும் என்னால் அதற்கு மேல் அங்கு இருக்கமுடியாதென தோன்றியது. கெடாவில் உள்ள நண்பர்களைக் காணவும் அவர்கள் என்னை வந்து சந்திக்கவும் வசதியாக கூலிமில் உள்ள ‘Sri Malaysia’ விடுதியை எடுத்தேன். அநேகமாக கெடாவில் ஆக மோசமான விடுதியாக அது இருக்கலாம். மூன்று நட்சத்திர விடுதிக்கான வெளியில் தெரியும் பிரமாண்டம் உள்ளே இல்லை. நீச்சல் குளத்தை மட்டும் ஓரளவு பராமரிக்கிறார்கள்.
23.12.2019 – 24.12.2019 (திங்கள் – செவ்வாய்)
தொடர்ந்து இருநாள் அருள் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சு.வேணுகோபால் ஆற்றிய உரைகளின் போது பங்கெடுத்தேன். லுனாஸ் நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் வீடுகளுக்குச் சென்றேன்.
இடைவெளி கிடைத்த ஒரு மதியம் சு.வேணுகோபால் அவர்களை அழைத்துச் சென்று லுனாஸ் வட்டாரத்தைச் சுற்றிக்காட்டினேன். பேய்ச்சி நாவலில் குமரன் மாலை வேளையில் சுற்றும் ஆலக்கரை, நான் படித்த வெல்லஸ்லி தமிழ்ப்பள்ளி, மாரியம்மன் கோயில், முன்பு கம்பம் இருந்த இடம் எனச்சுற்றி வந்தோம். கம்பத்தில் எஞ்சியிருந்த சிறு பகுதியைக் கொண்டு அவர் அதன் தன்மையை அவதானித்துக்கொண்டார். “நாவலில் கம்பத்திலிருந்து தோட்டத்துக்குப் போகும் பாதை ஒன்று தொப்புள்கொடிபோல வருமே அது இங்கதானே இருக்கு” என அவர் சொல்லியபோது நாவலில் காட்டும் பூகோள பரப்பு முழுக்க அவர் மனதில் படிந்துள்ளது சந்தோசத்தைக் கொடுத்தது.
மாலையில் ஸ்வேதா, நவீன், சைதன்யாவுக்கு ‘பூலூட் ஊடாங்’ வாங்கி கொடுத்தேன். அது மலாய்க்காரர்களின் பிரபலமான உணவு. சுங்கை கோப்பில் அதுதான் பிரபலம். முன்பு அதை தயாரிக்க தினமும் வயது முதிர்ந்த அக்கடைக்காரர் நூறுக்கும் குறையாத தேங்காய் வாங்குவார். இப்போது அவருக்கு பக்கவாதம் வந்து அவரது பிள்ளைகள் தொடர்கின்றனர். மதியம் 2 மணிக்கு கடை திறந்ததும் கூட்டம் அலைமோதும். முன்பெல்லாம் நானும் அந்தக்கூட்டத்தில் இருப்பேன். உடனடியாக புறப்படாமல் கடையோரமாக அமர்ந்து பூலோட் ஊடாங் சாப்பிட்டுக்கொண்டு கொஞ்சம் கதை பேசுவேன். மாலையில் கூட்டம் இல்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். என்னை அடையாளம் தெரியவில்லை. கடை அடைக்கும் நேரம் கடைசி பூலோட் ஊடாங் இருந்தது. அதே சுவை.
ஜெயமோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக ‘அருளாளர் விருது’ 24ஆம் திகதி இரவு வழங்கப்பட்டதுடன் பயணம் நிறைவு கண்டதாக உணர்ந்தேன். மறுநாள் அதிகாலையில் புறப்பாடு என்பதால் அனைவரிடமும் விடைபெற்றேன்.
25.12.2019 (புதன்)
அதிகாலையிலேயே பிரம்ம வித்யாரண்யத்திலிருந்து நானும் சு.வேணுகோபால் அவர்களும் புறப்பட்டோம். போகும் வழியில் தைப்பிங் நகரம் இறங்கி மிகப்பிரபலமான பூங்காவைச் சுற்றிக்காட்டினேன். அப்படியே பத்துகாஜா நகரில் callie’s castle கோட்டைக்கு ஒரு பயணம்.
‘பேய்ச்சி’ நாவலின் பிரதான பலவீனமென ஏதும் உள்ளதா எனக்கேட்டேன். “திரைப்படம் பார்ப்பது, சாராயம் அருந்துவதைத் தாண்டி மக்கள் ஒன்றாக ஈடுபடும் இன்னும் சில பகுதிகளைச் சொல்லியிருக்கலாம்” என்றார். சரிதான். வழிநெடுகிலும் பல விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். எல்லாமே கற்பதற்கான வழிகள்தான்.
வீட்டுக்கு வந்ததும் கடும் சோர்வு. அம்மா சமைத்து வைத்திருந்தார். அது மதிய உறக்கத்துக்கு நல்ல வழி செய்தது. பள்ளி விடுமுறை நிறைவாக இருந்ததாக உணர்ந்தேன்.
Katturai migavum sirappu. Nigalvil kalanthu kondathaal kaatchigal kanmun thoondri niraivai alithathana. Vaalthukkal.
அர்த்தமுள்ள பதிவு. உங்களது தார்மீக கோபத்தை நான் என்றும் வரவேற்பேன். அவை பல வினா முடிச்சுகளை அவிழ்க்கும் தன்மை கொண்டது. போகிற போக்கில் சொல்வதல்ல. ஆழமாக உள்வாங்கினால் அதன் உட்பொருள் விளங்கும். தங்களின் நட்பு சுற்றமே தங்கள் இலக்கிய முனைப்பின் அடையாளமாகப் பார்க்கிறேன். வாத்துக்கறி நல்லா இருக்குமா.? கோழிமாதிரியா இருக்கும்.!? நான் சாப்பிட்டதே இல்லை. 🙁 அடுத்தமுறை செல்வேன், அதைச் சாப்பிட.
இம்முறை அனைத்து காணொளிகளையும் மிக நேர்த்தியாக இத்துடன் இணைத்திருப்பது மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. வந்து சென்றதிற்கு அடையாளமாக எதுவும் மிஞ்சவில்லையே என்கிற வருத்தம் என்னை குடைந்தது. நிச்சயமாக ஒவ்வொன்றாகப் பார்த்து முடிப்பேன். நன்றி வல்லினம் குழுவினருக்கு.
இக்கட்டுரையைப் படித்து என் ஜீவன் மீண்டும் நவீன முகாமில் ஊடுருவி வாழ்ந்து வந்தது ..
வாய்பளித்த நவீன் அவர்களுக்கு நன்றி கூறினால்.
அணுவை விட நுட்பமாகி விடும் . அதிக வாசிக்க வேண்டும் . இதுதான் சரியான முறை . நேரந்தவறாமையின் அர்பணிப்பு பொது நலம் . எல்லா வேலைகளை நேர்த்தியாக செய்து விட்டு .
தன்னடக்கமாகச் சோர்வின்றி உற்சாகமாக இருப்பது ஒரு படைப்பாளின் இன்னொரு சாதனை .
எனக்கும் பூலூட் ஊடாங் சாப்பிட ஆசையாக உள்ளது .
இயற்கை எனும் பிரமாண்டத்தில் நனி சிறந்த நவீன் இலக்கிய விழா