அடித்தூர்

imagesமேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே இருக்கிறது. வீட்டின் பின்புறம் இருக்கும் பப்பாளி மரங்களின் அடர்ந்த பகுதியையே மூன்று நாட்களாய் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். புடைத்திருந்த முன்வயிற்றின் மேல் வழக்கம்போல காற்சட்டையைப் போட்டு வார்ப்பட்டையால் நன்கு இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். மயிர் பரவியிருந்த மார்புக்கூடு வேகமாய் அசைந்தமைய ஏதோ ஒன்று உள்ளே உடற்றிக் கொண்டிருந்தது.

பெரும் நிலத்துடன் கூடிய இந்த வீட்டை நாற்பதாண்டுகளுக்கு முன்னரே தாத்தா சீனன் ஒருவனிடம் இருந்து வாங்கியிருந்தார். வீட்டின் பின்னாலிருக்கும் இந்தப் பள்ளம் பெரும் சரிவாக இருந்ததாம். தாத்தாதான் மண்ணை வெட்டிச் சரிவில் கொட்டினார். நடமாடக்கூடிய மேடாகும்வரை அவர் சோர்வடையவில்லை என்றும் பாட்டி சொல்வார். ‘’எங்க நினைப்பே இல்ல… மனசு பூரா கல்லு மண்ணுதான்’ பின்னாலிருக்கும் நிலத்தைச் சுட்டி ‘இங்க ஆளுசரத்துக்கு லாலான் புல்லு மண்டி கெடந்துச்சு… நெட்டுக் குத்தலா இருக்கும்… வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ரெண்டு ஆளு அணைக்கிற கணக்கா நின்ன கிரவுலு பாறையெல்லாம் உடைச்சுப் போட்டு வண்டியில வந்து கொட்டிக்கிட்டு இருக்கும்… கடக்குற வேல எல்லாத்தயும் செய்யும்’ எனப் பாட்டி எப்பொழுதும் அங்கலாய்ப்பார்.

அம்மா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் எட்டு வயதில் இங்கு வந்தேன். வீட்டிலிருந்த பாட்டி தாத்தாவிடம் இயல்பாகப் பேசி பார்த்ததில்லை. அவரது பேச்சிலும் எப்பொழுதும் கொஞ்சம் சிடுசிடுப்பும் அலட்சியமும் இருக்கும். விடுமுறைக்கு என்னைப் பார்க்க வரும் அம்மாவும் தாத்தாவிடம் பெரியதாக எதும் பேசி நான் பார்த்ததில்லை. ‘போயிட்டு வர்ரேன்’ என்ற ஒற்றை வார்த்தையைக் கூட திரும்பி நின்றவாறே சொல்லிச் செல்வார். அதைத் தவிர வேறு ஏதும் பேசியதாக நினைவு இல்லை. “மாசத்துல பாதி நாளு கித்தா வெட்டுல இருக்குற கொட்டாயிலதான் படுத்துக்குவாரு… வீட்டுக்குச் சாப்பிட மட்டும்தான் வருவாரு. ஒருநாளு வீட்டுக்கு வந்து மீன்கறி பானைய தொறந்து… கறி மட்டும் இருக்குறத பார்த்துப் பானைய கீழ போட்டாரு. எங்க அம்மா பேய் பிடிச்ச மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டாங்க… முடிய விரிச்சுப் போட்டுப் பீங்கான் மங்கு எல்லாம் கீழே போட்டு உடைச்சி கத்துறாங்க… அப்பத்துலுருந்துதான் கோயிலுக்குப் போனா சாமி ஆடுவாங்க” என அம்மா சொல்லியிருக்கிறார்.

ஏதேனும் வேலைகள் இருந்தால் மட்டுமே தாத்தா ‘டேய்…’எனக் கத்தி அழைப்பார். மற்றபடியாக என்றாவது ஒருநாள் கருப்பு டின் தண்ணீரை ஊற்றிக் கொண்டால் தம் சிறுவயது கதைகளை விவரிப்பார். ‘நாகம்டா… இராஜநாகம்… தரயிலிருந்து நாலடியாவது இருக்கும்… தலய மேல நீட்டி விரிச்சுக் கொஞ்சம் கூட ஆடாத அசையாத என்னய பாக்குது… எதோ ரத்தினம் கணக்கா மின்னுது கண்ணு… அப்டியே ஓங்கிட்டேன் உளிய… அந்தக் கண்ணுல தண்ணிடா… என்னமோ சொல்லுற மாதிரி. கைய எடுத்துக் கும்பிட்டேன்…’ எனச் சொல்லி கையை அப்படியே வணங்கியவாக்கில் வைத்திருப்பார். ஒவ்வொரு முறை இந்தக் கதையைச் சொல்லும்போதும் அவர் கைகள் வணங்கிவிடும். இதைத் தவிர கரையில் ஒதுங்கி கிடந்த திமிங்கல மீன், காட்டில் வெறி கொண்டு சுற்றிய யானை என மிருகக்கதைகள், ஊரில் சுற்றிக் கொண்டிருந்த சண்டியர்கள் எனத் தொடங்கும் வீரக் கதைகள் எனத் தாத்தா மாற்றி மாற்றிச் சொல்வார். தாத்தா எப்பொழுதுமே கண்களைப் பார்த்துத்தான் பேசுவார். புதிய ஆட்கள் யாரிடம் பேசினாலும் பேச்சு முடிவில் ‘அவன் கெடக்குறான்… அண்டப்புரட்டன்… கண்ணுல தெரியுதுடா… வெள்ளப் பல்லு சிரிப்புக்காரன நம்பக் கூடாதுடா’ எனச் சொல்வார்.

காலையில் எழுந்ததும் விளக்கெண்ணையை வழுக்கைத் தலையைச் சுற்றித் தடவிக் கொள்வார். வீட்டில் இருந்த பழைய புகைப்படத்தில் கூட முன்மயிர் இல்லாமல் வழுக்கையாகவே இருந்தார். அது கேரித்தீவு கடலில் கரை ஒதுங்கியிருந்த பெரிய மீனொன்று பக்கத்தில் அவர் நிற்கும் படம். தாத்தாவின் தன் இளமை காலத்தை நினைவுறுத்த அந்த ஒரு படம்தான் இருந்தது. தன் அறையை எப்பொழுதும் பூட்டிதான் வைத்திருப்பார். வீட்டுக்கு வலப்புறத்து வெளியில் இருந்த ஜன்னலோரமாக ஒட்டினாற் போலத்தான் அறையிலிருந்த வானொலியை வைத்திருப்பார். வெளியில் இருந்தவாறே உள்ளே இருக்கும் வானொலி பெட்டியை முடுக்கிவிட்டு உட்கார்ந்திருப்பார். வெளிப்புறத்துச் சன்னலில் சாய்ந்து பாடல் கேட்டால் விளக்கெண்ணெய் வாடையும் ‘’பொம்பள சாப்’’ புகையிலை வாடையுமாகச் சேர்ந்து கலவை மணம் எழும்.

               தாத்தா வெளியே செல்வதற்கு முன்பக்கம் வட்ட விளக்கு வைத்த ஒரு பழைய ஹோண்டா ரக மோட்டர் வைத்திருந்தார். முதல் கியரிலே கொஞ்ச தூரம் சென்று மோட்டரில் அடைக்கும் சத்தம் கேட்ட உடனேதான் இரண்டாம் கியரை மாற்றுவார். தாத்தா மோட்டர் எடுத்துக் கிளம்பும்வரை நான் அவர் சொல்லும் வேலைகளைச் செய்வேன். அவர் கிளம்பியப் பின்னர்தான் அருகிலிருக்கும் மலாய்க்கார பையன்கள் உடன் விளையாடச் செல்வேன். மீண்டும் மோட்டர் அடைக்கும் சத்தம் கேட்ட உடனே வேகமாக ஓடி வீட்டினுள் வந்து உட்கார்ந்து கொள்வேன்.  வீட்டிற்குள் நுழைபவர் தொலைக்காட்சியின் மீது கையை வைத்துப் பார்ப்பார். அடுத்ததாக, ‘டேய்…வா…’என அழைத்து மணிக்கட்டைப் பிடித்துப் பார்ப்பார். கையை விட்டுவிட்டு தலையை மட்டும் ஆட்டுவார். சிறிது நேரத்தில் சொல்லி வைத்தாற் போல எதையாவது எடுத்து வரச் சொல்லிக் கத்துவார்.

தாத்தாவுக்கு எந்தப் பொருள் எங்கு இருக்கிறதெனக் கேட்டால் கடுங்கோபம் வரும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஒரு பொருளை வைத்த இடத்திலிருந்து மாற்றவே மாட்டார். “அந்த செவப்பு பெட்டிக்குள்ள தாண்டா வச்சிருக்கேன் எல்லா மயித்தயும்” எனக் கோபத்தில் கொப்பளிப்பார். தாத்தா எல்லாவற்றுக்கும் ஒழுங்கு இருப்பதாக எண்ணுவார். ஒன்றில் ஒழுங்கு இல்லாதபோது அல்லது மீறும்போது பெருங்குரலெடுத்துக் கத்தத் தொடங்குவார். கோழிகளுக்கு இரையைக் கையகல தூரத்தில் இறைப்பது முதலாக கொக்கோ பழத்தின் உள்ளிருக்கும் நரம்பிலிருந்து கொட்டைகளை உறுவி ஈயத்தட்டில் இடைவெளிவிட்டு வெயிலில் காயவைப்பது முதலாக ஒழுங்கு குறையாமல் இருக்க வேண்டும்.

இப்பொழுது பப்பாளி இருக்கும் இந்த இடத்தில் முன்பு யானைவாழை மரங்கள் இருந்தன. ஒவ்வொரு மாதத்திலும் எதாவதொரு மரம் குலை தள்ளியிருக்கும். வாழை மரங்கள் ஒரு முறை குலை தள்ளுவதோடு ஆயுளை முடித்துக் கொள்ளும். காய்ந்த இலையை வெட்டி வீசுவது, இடையில் வளரும் சிறு கன்றுகளைப் பிடுங்குவது என ஒவ்வொரு நாளும் வாழை மரத்தில் வேலை இருக்கும். அதன் பழம் அரை முழங்கை நீளம் இருக்கும். அப்படியாகக் குலை தள்ளியிருந்த மரம் ஒன்று சாய்ந்திருந்தது. சாய்ந்திருந்த மரத்தை நிமிர்த்தி வைக்க காண்டா மரத்தின் கிளை ஒன்றை வெட்டினார். கிளையிலிருந்த இலைகளையும் சிறு கிளைகளையும் கழித்து வீசினார். கிளை, கட்டை கவட்டை வடிவத்தில் இருந்தது. அதை நன்கு அழுத்திச் சீவிக் கொண்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் என்னை நோக்கி நீட்டினார். கத்தியை எடுத்துக் கிளையின் பட்டையில் வைத்து அழுத்திச் சீவும் போது கத்தி மட்டுமே அசைந்தது.

சிறிது நேரம் பார்த்தவர் வாயில் குதப்பியிருந்த புகையிலைச் சாற்றை வாயோரமாக ஒதுக்கி ‘’ஹூம் ஹூம்’’ எனக் கார்வையுடன் ’’டேய்! என்னடா செய்ற… கொடு அத’’ எனக் கத்தியை வெடுக்கென பிடுங்கினார். உட்கார்வதற்குப் பலகைகளால் செய்யப்பட்டிருந்த வாங்கு ஒன்றில் கட்டையைச் சாய்த்து கத்தியின் அடிப்பாகத்தைப் பிடியுடன் சேர்த்துப் பிடித்து இழுத்தார். மரப்பட்டை சுருள் சுருளாகக் கழன்று விழுந்து கொண்டே இருந்தது.  குலை தள்ளி சரிந்திருந்த யானை வாழைக்குப் பின் ஒரு குழியை வெட்டினார். வாயிலிருந்த புகையிலை சாறைத் துப்பி வாயைத் துடைத்துக் கொண்டார். ஹூம்…ஹூம் எனச் செருமிக் கொண்டே குழி பறித்துக் கட்டையை அதில் பக்கவாட்டாகச் செருகினார். சரிந்திருந்த மரத்தின் தண்டைப் பற்றி கட்டையின் மேற்புறமிருந்த கவட்டையில் சாய்த்து வைத்தார்.

இந்த மாதிரியான தருணங்களில் தாத்தா தான் பிடித்திருக்கும் அந்தக் கத்தியுடனோ கட்டையுடனோ ஓர் அரூபமான உரையாடலை நிகழ்த்துகிறாரோ என எண்ணிக் கொள்வேன். தான் செய்யும் பணி தன்னிடம் கோருவதை அறிந்து அதை அளிக்கும் வித்தையைக் கொண்டிருப்பார். எதையாவது செய்யத் தெரியாமல் போனால் ‘அப்பன போலவே இருக்கீங்கடா… கூமுட்டைங்க’ என்பார். அப்படி சொன்னவுடனே கோபத்தில் வீட்டுக்குள் சென்று விடுவேன். அரை நாள் கூட ஆகாது. மறுபடியும் ‘டேய்’ என இரைவார்.

arvin

விடுமுறைக்கு வரும்போதெல்லாம் குலை தள்ளியிருக்கும் யானைவாழைமரத்தில் சாய்ந்திருக்கும் கவட்டைக் கம்பு புதியதாகவே இருக்கும். சென்ற முறை கவட்டைக் கம்பு இற்றுப் போய் குலை கீழே சாயத் தொடங்கியிருந்தது. சுற்றிலும் இடைக்கன்றுகளும் வளர்ந்திருந்தன. கம்பு மாற்றப்படாதிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அருகிலிருந்த ரம்புத்தான் மரத்தின் கிளை ஒன்றை வெட்டிக் கவட்டைக் கம்பைச் செருகியிருந்தேன். மறுநாள் அந்தக் கம்பு பிடுங்கப்பட்டு தூரமாக வீசியெறியப்பட்டிருந்தது. யானைவாழை மரத்தின் அடித்தண்டு வெட்டப்பட்டு மரத்தின் தண்டு பகுதிகள் துண்டம் துண்டமாகச் சிதறி கிடந்தன. அதற்கடுத்த நாள் அடித்தூர் மட்டுமே நின்றிருந்த வாழை மரத்தருகில் சிறிய பப்பாளி மரம் பதியம் செய்யப்பட்டு இருந்தது. மரத்தைத் தாங்கியிருந்த கவட்டைக் கம்பு தாத்தாவின் ஒழுங்கை எந்தவகையிலாவது குலைத்திருக்கக் கூடும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதே நாளில் பாட்டி கேசரி கிண்டியிருந்தார். அடர் மஞ்சள் நிறத்தில் மினுமினுப்புடன் இருந்த அதில் முந்திரிப்பழம் கலந்திருந்தது. தாத்தாவுக்கு இனிப்பு இயல்பாகவே பிடிக்காது. சீனி இல்லாத வரக்கோப்பியைத்தான் விரும்பி குடிப்பார். இது போன்ற பதார்த்தங்களைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வார்.

பாட்டி என்னிடம் சொல்வதாக “இனிப்பு கூட… கொஞ்சமா சாப்பிடு” என்றார். எனக்கும் ‘அதிக இனிப்பு சிறுவயதிலிருந்தே பிடித்ததில்லை. தாத்தா குளித்து முடித்து கைலியை வயிற்றில் கட்டிக் கொண்டு வீட்டின் முன்னறையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். பாட்டி கிண்டியிருந்த கேசரியைக் கிண்ணத்தில் சாமி படத்தின் முன் வைத்துச் சென்றார். எஞ்சியிருந்த ஒரு தட்டுக் கேசரியை உணவு வலையில் மூடி அடுப்பின் பக்கத்திலிருந்த மேசை மீது வைத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் கைலி தரையைச் சரசரக்க இரு கால்களும் தரையைத் தேய்க்க மெல்ல நடந்து பின்பக்கம் சென்றார். சிறிது நேரம் கழித்து விரலை வாயில் சப்பிக் கொண்டே மெல்ல நடந்து வந்தார். கடைவாயிலிருந்த எச்சிலைக் கைலியால் துடைத்துக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தார். கை நிறைய கேசரியைத் தட்டிலிருந்து அள்ளிச் சாப்பிட்டிருக்க வேண்டும். கையையும் கைலியில் துடைத்துக் கொண்டார். சட்டை போடாதிருந்த மார்பு உரோமத்தில் கேசரி பிசிறு பிசிறாக ஒட்டியிருந்தது.

பாட்டியும் தாத்தாவும் சண்டையிட்டு கொள்ளாமல் பேசியதே இல்லை. எப்படியும் பேசத் தொடங்கிய மூன்றாவது வார்த்தையிலே ‘’நாற முண்ட…’’எனத் தலையில் அடித்துக் கொண்டே ஏதேதோ கத்துவார் தாத்தா. ‘உப்புமில்ல உறப்புமில்ல எனச் சமையலில் தொடங்கும் சண்டை ‘வாரி வாரி வீட்டையே வழிச்சுருவா’ என வீட்டுத் தூய்மை வரை நீளும். உச்சக்கட்டமாகக் கையை மடக்கிக் கொண்டு நாக்கைத் துருத்திக் கொண்டு பாட்டியை நோக்கிச் செல்வார். பாட்டி எந்தவிதமான உணர்ச்சியும் இன்றி அவரைக் குறுகுறுவெனப் பார்ப்பார். ஒரு கணத்தில் மடக்கிய கையைப் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டு ‘முருகா முருகா’ எனக் கத்திக்கொண்டு பின் செல்வார். இல்லையென்றால் சுவரில் முட்டிக் கொள்வார். பாட்டியும் “அவர ஏன் கூப்பிடுற… நீ யாரு வந்தாலும் திருந்த மாட்ட… அதான் உன் அம்மாவே கடசி தண்ணி கூட கொடுக்கவேணாம்னு சொல்லி செத்துப் போனாங்க’ என்பார்.

அதற்கெல்லாம் எந்தப் பதிலும் சொல்ல மாட்டார் தாத்தா. சண்டை ஓயும்போது மட்டும் “அது ராக்காச்சிடா… அரிச்சே கொன்னுரும்… சாமி வேற ஆடும்… நான் ரெண்டு மங்கு போட்டு ஒடைச்சா… நாலு மங்கு போட்டு உடைக்கும்… பேய் டா’’ என்பார் தாத்தா. கோவில் திருவிழாக்களில் யாராவது சாமி ஆடி கொண்டு அருகே வந்தால் என் கைகளை இறுகப் பற்றிக் கொள்வார் பாட்டி. கைகள் எல்லாம் நடுங்கத் தொடங்கும். கையை இன்னும் இறுகப் பற்றிக் கொள்வார். ஏதோ ஒன்று விசை கொண்டு இழுப்பது போலப் பற்றியிருந்த கையை உதறிக் கொண்டு என்னைப் பார்க்கத் தொடங்குவார். தாத்தாவைப் பார்க்கும் அதே குறுகுறுப்பு கொஞ்சமும் நீங்காமல் அதில் இருக்கும். வாயில் ஏதேதோ அணத்தத் தொடங்குவார். திடீரென ‘ஹம்…ஹூம்’ என வீரிட்டென அலறி வலக்கால் இடப்புறமும் இடக்கால் வலப்புறமும் ஆட்டிக் கொண்டே ஆடத்தொடங்குவார். உடலே மஞ்சள் நீர் சொட்டி கையில் வேப்பிலைக் கொத்தும் நெற்றில் பெரிதாகக் குங்குமம் வைத்தும் பாட்டியின் வழக்கமான தோற்றம் மறைந்து முற்றிலும் வேறொருவராக எழுந்து நிற்பார்.

திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்தால் இரண்டு நாட்களுக்குப் பாட்டி படுத்தே கிடப்பார். நெஞ்சு இளைத்துக் கொண்டேயிருக்க ஏதேதோ அணத்திக் கொண்டு படுத்திருப்பார். கைத்தாங்கலாகப் பாட்டியின் கைகளைப் பற்றி எழச் செய்வேன். இடுப்பில் சொருகியிருக்கும் பூ போட்ட கைலியைச் சரி செய்து கொண்டு அவிழ்ந்திருக்கும் முடியை ஓரமாக விட்டு மெல்ல நடக்க தொடங்குவார். பாட்டியிடம் எப்பொழுதும் வீசும் தேங்காய்ப்பால் மணம் மாறி மஞ்சளின் கடுநெடி வீசும். கழிப்பறையில் புதிய மஞ்சள் திட்டுகள் அமைந்த சொரசொரப்பான் கல் இரு நாட்களுக்காவது இருக்கும். பாட்டி எழுந்த பிறகும் கொஞ்ச நேரத்துக்காவது கண்களைப் பார்க்கவே பயமா இருக்கும். மஞ்சள் பூசிய முகத்தில் கண்கள் சிவந்து போயிருக்கும். மெல்ல பினாத்தலுடன் நடந்து வேலை செய்ய தொடங்குவார். அந்தச் சமயங்களில் தாத்தா பாட்டியருகில் கூட செல்லமாட்டார்.

மெல்ல அந்த நிலையிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள பாட்டி பழையap_74bea39591da4d72b44db3b6cf638a02-620x370 கதைகளைத்தான் முதலில் சொல்லத் தொடங்குவார். பாட்டி தன் பதினைந்து வயதில் திருமணமாகி வந்தவர். அப்பொழுதுதான் சமைக்கக் கற்றுக் கொண்டார்.  “கேரித்தீவில வாழ பெரட்டுல தான் அவுங்க இருந்தாங்க. அவுங்க அம்மா பேரு வடுவாயி… அங்குள்ளவங்க எல்லாம் புள்ளைங்களுக்குக் காய்ச்சன்னா அங்கத்தான் வந்து விபூதி வச்சிக்கிட்டுப் போவாங்க… இது கூட பொறந்தவங்க நாலு பேரு. எல்லாத்தயும் இதுதான் கர சேர்த்துச்சு… நான் கட்டிக்கிட்டு வந்து கொஞ்ச மாசத்துலதான் அவுங்க அம்மா தவறினாங்க… உங்கம்மா பொறந்தப்பத்தான்… அப்புறம்தான் இங்க வந்து சேர்ந்தோம். கல்யாணம் பண்ண புதுசுலே வெள்ளைக்கார துரை வீட்டுல வேலைக்குச் சேத்துட்டாங்க. மிஸ்டர் பிட்சரே பாத்தாலே பயமா இருக்கும்… அவருக்கு ஒரு பிள்ள…பேரு ஜூலி…ஆறு வயசுதான் இருக்கும்…என்னென்னோமோ கேட்கும்…நானும் கைய கால ஆட்டி எதுனாச்சும் சொல்லிருவேன். ஒரு நா கழுத்துலே என்னான்னு கேட்டுச்சு…அது ‘மேரேஜ்னு’ சொன்னேன். அது என்னான்னு கேட்டுச்சு…எனக்கு ஒன்னும் சொல்ல தெரியல’’ என மீனின் செதிலைக் களைந்து கொண்டோ கீரையின் காம்பை இனுக்கிக் கொண்டோ சொல்லி மீள்வார்.

பள்ளிப் படிப்பு எல்லாம் முடிந்து மேற்கல்வி தொடர பாலிடெக்னிக் சென்றேன். விடுமுறைகளுக்கு வரும் பொழுது தாத்தா மெல்ல ஒவ்வொன்றாக விட்டொழிந்து கொண்டிருந்தார். ஒரு விடுமுறையில் கொக்கோ பழமரங்களின் அடித்தூர் மட்டும் இருந்தது. கோழிகள் ஒழிந்த கூண்டுகள் இருந்தன. பாட்டியிடம் கேட்ட போது எந்தவிதமான சலனமோ அங்கலாய்ப்புமின்றி ‘தெரியாதுப்பா’ என்றார். தாத்தாவின் அந்த மாற்றம் பாட்டிக்குப் பிடித்ததாக இருக்கக்கூடும் என்றே எண்ணினேன். இன்னொரு விடுமுறையில் தாத்தா எப்பொழுதும் உட்காரும் நாற்காலியில் ஆணி ஒன்று துருத்தி வெளி நீட்டிக் கொண்டிருந்தது. அதன் பச்சை சாயம் கூட காரைக் காரையாகப் பெயர்ந்து இருந்தது. அந்த ஆணியை அடிப்பதற்காகச் சுத்தியலைத் தேடியபோது சிவப்புப் பெட்டியில் இல்லை. ‘ஆம்புரு எங்க வைச்சிருக்கீங்க’ என்றேன். ‘ஒன்னும் வேணாம்’ என வாயில் அதக்கி வைத்திருந்த எச்சிலைத் துப்பினார். தாத்தா எப்பொழுதும் பேணி வந்த ஒழுங்குகள் ஒவ்வொன்றும் மெல்ல காணாமற் போய் கொண்டிருந்தது. எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டு எப்பொழுதேனும் காற்றில் கைகளை ஒன்றுமில்லை என்பதுபோல துழாவி கொண்டிருந்தார். அதற்கு நேர்மாறாகக் கழிப்பறையில் சொரசொரப்பான் கல்லில் ஒவ்வொரு நாளும் மஞ்சள் திட்டு ஈரத்துடன் இருந்தது.

பின்வாசலைத் தாண்டி இருந்த பழமரங்களுக்கு வலப்புறம் கழிப்பறை இருந்தது.  அந்தக் கழிப்பறைக்குப் பின்னால்தான் வெற்றிலைக் கொடி பந்தலில் படர்ந்திருக்கும். இற்றுப் போயிருந்த பந்தலில் பெயருக்காக மூன்று இலைகள் மட்டும் பழுத்துத் தொங்கி கொண்டிருந்தன. காலையில் அந்தக் கழிப்பறைக்குப் பின் தாத்தாவின் எச்சில் துப்பும் சத்தமும் தொண்டைக் கார்வையும் சற்று அதிகமாகவே கேட்கவேதான் வந்து பார்த்தேன். பின்னால் எட்டி பார்த்தால் காற்சட்டை எல்லாம் ஈரமாகக் குளிரில் இரு கைகளையும் ஒன்றொடொன்று பற்றிக் கொண்டு நடுங்கி கொண்டிருக்க வாங்கில் உட்கார்ந்திருந்தார். கைகள் மட்டுமே நடுங்கி கொண்டிருக்க கால்கள் ஒரே இடத்தில் இறுத்தி வைக்க முயன்று கொண்டிருந்தார். மெல்ல அருகே சென்று ‘’வாங்க உள்ள போலாம்’’ என்று அழைத்தேன். ‘’இருய்ய்யா’’ என்றார். பத்து நிமிடங்களாகக் கைகள் வெலவெலக்க நடுங்கி கொண்டிருந்தார். அவர் கையை எடுத்துப் பற்றி நடக்க அழைத்தபோது, விருட்டென உதறி ‘என்னா கரிசனையா? மானத்தையே அம்பா வளைச்சவன்டா’’ எனக் கத்தினார். மறுபடியும் கையைப் பற்றி மெல்ல நடக்க வைத்த போது ஹூம் ஹூம் என செருமிக் கொண்டே நடந்து வந்தார். அறைக்கு அழைத்துச் சென்றேன். அறைக்கு நேர் முன்னால் இருந்த கூடத்தில்தான் பாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். பாட்டி மெல்லிய அசைவுடன் திரும்பி படுத்தார். அறைக்குள் நுழைந்தவுடன் நீரில் இற்றுப் போயிருந்த பலகையிலிருந்து எழும் மணம் இருந்தது. அறைக்குள் இருந்த கட்டிலில் உட்கார்ந்தார். கட்டிலுக்கு நேராக இருந்த தன் அம்மா அப்பா படத்தையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் மீண்டும் வெறி வந்தவராய் ஏதேதோ முனகத் தொடங்கினார். காற்சட்டையைக் கழற்றித் துண்டைக் கட்ட வைத்தேன்.

திறந்திருந்த கதவைப் பார்த்து “எல்லாம் பேய்ங்கடா… ரெண்டு நாளா ஒரு வா தண்ணியில்லாம கெடந்தா.. ஆரஞ்சி தண்ணி எடுத்துப் போயி கொடுத்தா ஒரு சொட்டு கூட வாயில எறங்கல… அப்டியே கழுத்துலேயே இறங்கி சட்டைல்லாம் நனைஞ்சு ஓடுது. கண்ணுல தண்ணி மட்டும் நிக்குது. கைய எடுத்துக் கும்பிட்டு வெளியே போயிட்டேன்”. கொஞ்ச நேரம் மூச்சு இரைத்ததை அனுமதித்தார். “மூச்சு எளச்சிக்கிட்டுப் படுத்துக் கெடந்தா… கிட்ட போயி பாத்தேன். முகத்துல மஞ்ச பூசி இருந்தா… கண்ணுல தண்ணி கோத்துகிட்டு நிக்குது” தொண்டையைச் செருமி கொண்டே படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஆவேசம் வந்தவராய் ’ஆங்…ஹூம்’ எனக் குழறிக் குழறிப் பேசத் தொடங்கினார். கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு பொருளில்லாமல் பேசத் தொடங்கினார்.  அந்தப் பேச்சின் பொருள் எனக்குப் புரியவே இல்லை. ஆனால், அது வேண்டுதலாக இருக்கலாம் எனத் தோன்றியது. காற்சட்டையை இடுப்பு வரை இழுத்துப் போட்ட போது பேச்சில்லாமல் மெளனமானார். அப்படியே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சத்தம் இல்லாமல் மார்பு குலுங்க அழுதார். அறையை விட்டு வெளியே சென்ற போது ‘கண்ணுல தெரிஞ்சுச்சு…’ எனப் பெருமூச்சுவிட்டார்.

1 comment for “அடித்தூர்

  1. Segaran
    March 8, 2020 at 1:31 pm

    வெகுநாளுக்குப் பிறகு படித்து மகிழ்ந்த அருமையான சிறுகதை. பாத்திரப் படைப்பில் நம் தாத்தாவைக் கண்முன்னே கொண்டுவந்திருந்தார். வெளிப்படையில் பாசமில்லாதவராக இருக்கும் தாத்தாக்கள் பாட்டியின்மீது காட்டும் பாசத்துக்கு அளவேயில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *