இயல்வாகை

suneel 02கருக்கிருட்டில் தெருவிளக்குகள் எரிந்துக்கொண்டிருக்கும் விடிகாலையில் கல்லூரி சாலையைக் காண சத்தியனுக்குப் பிடிக்கும். அடர் கருமையிலிருந்து சாம்பல் மலரும் புலரிப் பொழுது அவருக்கு அணுக்கமானது. பல்கலைக்கழக தபால் அலுவலகத்தின் அருகே அவருடைய வெண்ணிற ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு காலை நடைக்கு தயாரானார். காலை நடையின்போது கைப்பேசியை அணைத்து விடுவார். அதற்காகப் பையிலிருந்து எடுத்தபோதுதான் ஓசையணைத்துக் கிடந்த கைபேசியில் ராஜசேகரின் அழைப்பை இரவில் நான்குமுறை தவறவிட்டிருந்ததை கவனித்தார். இத்தனை சீக்கிரம் அழைக்கலாமா என்றொரு தயக்கம் இருந்தாலும், அக்காவின் உடல்நிலை பற்றியதாக இருக்குமோ எனும் அச்சம் ஆட்கொண்டதால் அப்போதே திரும்ப அழைத்தார்.

“மாமா எத்தனவாட்டி கூப்புட்டேன், எல்லாம் நல்ல செய்திதான், திருச்சிக்கு வந்து மூணு நாள் ஆச்சு,  சாயங்காலம் பொண்ணு பாக்க நடுவிக்கோட்டை வரச் சொல்லியிருக்காக. பாலையூர் சம்பவத்திற்கு பொறவு நாம போதும்டா சாமின்னு இருக்கப்போக, இப்ப அதுவா தெகஞ்சி வருது. நேர்ல சம்பிரதாயத்துக்கு பாத்து பேசிட்டோம்னா பேசி முடிச்சிடலாம், இங்கேந்து ஒரு மணி வாக்குக்கு நானும் அம்மாவும் கெளம்பி சாயங்காலம் நாலு மணிக்கு அங்க வந்துருவோம். அங்கேந்து சேந்து நடுவிக்கோட்டை போவோம்” எனச் சொல்லி விட்டு வைத்தான். கைப்பேசியை அணைத்துவிட்டு சேகர் சொன்ன பாலையூர் சம்பவத்தை நினைத்தபடி நடக்கத் தொடங்கினார்.

ஆறு மாதங்களுக்கு முன் ஜாதகம் பொருந்தி, வந்தது எனச் சொன்னதன் பேரில் பாலையூருக்கு பெண் பார்க்க மூவரும் சென்றார்கள். “பாத்தா 28 வயசு மாதிரியே தெரியல, சின்ன பொண்ணாட்டம் அழகாத்தான் இருக்கா” என்றார் அக்கா. இருவரும் பேசி திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தார்கள். எல்.எஸ். வித்யாலயாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக இருக்கிறாள்.  எண்களைப் பரிமாறிக்கொண்டு உரையாடத் தொடங்கினார்கள். வாரம் ஒருமுறை சத்தியனுடன் பேசுவான் அதுவும் கூட அந்தக் காலக்கட்டத்தில் நின்று போயிருந்தது. ஒருமாத காலம் கடந்திருக்கலாம். ஒருநாள் பெண்ணுடைய தந்தை சத்தியனை அழைத்து, தயங்கித்தயங்கி பெண்ணுக்கு விருப்பமில்லை, திருமண திட்டத்தை முறித்து கொள்ளலாம் என்றார். ஒரு முறை பெண்ணிடம் பேசிப் பாருங்கள் என்றார். ஆனால் அவர் பிடிகொடுக்கவில்லை. மன்னிப்பு கோரி அழைப்பைத் துண்டித்தார். சேகருக்கு அவர்களின் முடிவை சொன்னபோது அவனுக்கு காரண காரியத்தை விளக்கிக்கொள்ள முடியவில்லை. “நேத்து ராத்திரி கூட வீடியோ கால்ல நல்லாத்தான மாமா பேசுனா” என தழுத்தழுத்தான். ஒருவார காலம் அரற்றியபடி இருந்தான். திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவைக்க சங்கத்து பெரியவர்கள் எடுத்த முயற்சிகள் கூட தோற்றன. “இனி எனக்கு கல்யாணம்னு ஒன்னு இல்ல மாமா, எழுதி வெச்சுக்க, இனியும் அங்க பொண்ணு இருக்கு இங்க பொண்ணு இருக்குன்னு சொல்லிட்டு என்னைய கூப்புட வேணாம்.” என்று தீர்மானமாக சொல்லிவிட்டான். இப்போது அவனே ஒப்புக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது.

2

வெள்ளையில்  டீ ஷர்ட்டும் ட்ராக் சூட்டும் கறுப்பு நிறத்தில் ஷூக்களும், கண்ணாடியும் அணிந்தபடி கல்லூரி சாலையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நடப்பார். பிறகு கலைக்கல்லூரி மைதானத்தில் உள்ள பவநகர் விளையாட்டரங்கின் படிகளில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். புலரி ஒளி மெல்ல படிகளில் ஏறி அவரைத் தீண்டி கடக்கும்போது முப்பட்டகக் கண்ணாடியாக தன்னை கற்பனை செய்துகொள்வார். ஒளி உள்ளுக்குள் முடுக்குகளில் பதுங்கியிருக்கும் இருளையும் அழுக்குகளையும் ஊடுருவி தூயவனாக்கி கடப்பதாக அவருக்குத் தோன்றும். கண்ணை மூடி கதிரொளியை உடலின் வெம்மையாக உணர்ந்தபடி அமர்ந்திருப்பார். தன்னுடலும் மனமும் மாசுமருவற்ற தூய வெள்ளொளியில் சுடர்விடுவதாக உருவகித்துக் கொள்வார். இதுதான் அவருடைய அன்றாட தியானம். கண் மூடி அமர்ந்த நிலையில் முந்தைய நாளின் காட்சிகள் தடையின்றி மனத்திரையில் ஓடும். தனது அறையில் சந்தித்த நோயாளிகளின் பதட்டம் மிகுந்த, சோர்வான, வலிமிகுந்த, குழப்பமான முகங்களும் பெயர்களும் ஸ்கேனில் பார்த்த கறுப்புவெள்ளை உறுப்புக்களும் அதன் மாறுபாடுகளும் துல்லியமாக தெரியும். கண் திறக்கும்போது எக்களிப்பின், காரணமற்ற நன்றியறிதலின் கண்ணீர் துளிகள் திரண்டு நுனியில் நிற்கும். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தொடர்ந்துவரும் வழக்கம். அவருடைய ஆசிரியரிடமிருந்து தொற்றிக்கொண்டது. நோயாளிகளை நினைவில் நிறுத்திக் கொள்வது தொழில் வெற்றிக்கு முக்கியமானது எனச் சொல்லிதான் இரவு உறங்கும் முன் அன்றைய நாளை மனதில் ஓட்டிப்பார்ப்பது வழக்கம் என்றார். சத்தியன் அதே பயிற்சியைக் காலையில் செய்தார்.

தினமும் மைதானத்தில் நடை பயிலும் டாக்டர். சாமிக்கண்ணு கல்லூரி சாலையில் சத்தியன் நடப்பதை பார்த்ததும், “சத்தியா வாய்யா கிரவுண்டுல நடக்கலாம்” என பிடித்து இழுத்து வந்தார். வயது எழுபதுக்கு மேலிருக்கும்.  “நம்ம பயலுவ எவனும் வரல, அதான் உன்ன பாத்ததும் சரி சேந்து நடக்கலாமேன்னு உள்ள கூப்புட்டேன்” என கைகுலுக்கினார். சாமிக்கண்ணுவின் மருத்துவமனைக்குச் சிலமுறை ஐ.எம்.எ கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். எப்போதும் கூட்டம் அலைமோதும். பழைய பாணியிலான மருத்துவர் என சத்தியனுக்கு அவரைப்பற்றி ஓர் எண்ணம் உண்டு. பரிசோதனைகளை விடவும் நோயை நோயாளியிடமிருந்து அறிந்துகொள்ளவேண்டும் எனும் வினோத நம்பிக்கை உடையவர். மைதானத்து விளிம்புகளில் வான் நோக்கி நிமிர்ந்திருந்த இயல்வாகை மரங்களைச் சுற்றி விரவிக் கிடந்த அதன் மஞ்சள் பூக்கள் திடலின் செம்மண் பரப்பில் தனித்தீவுகளை போல் காட்சியளித்தன.  சாமிக்கண்ணு அவற்றை நிதானமாக பார்த்தார். பிறகு இருவரும் நடக்கத் தொடங்கினர். பொதுவான மருத்துவ சங்கதிகள்தான் பேச்சு. ஐ.எம்.எ தேர்தல், ஆசுபத்திரி சூறையாடப்படுவது, மருத்துவமனை மரணங்கள அதன் பொருட்டு நிகழும் பேரங்கள் என சாமிக்கண்ணு பேசுவதை வெறுமே உம் கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார் சத்தியன். “ஜூன்ல ரிட்டையர் ஆனதும் நம்ம ஹாஸ்பிட்டல் வந்துருய்யா” என்றார். “உங்களுக்குத்தான் ஸ்கேன் எழுதவே பிடிக்காதே சார்” என்றார் சத்தியன் சிரித்துக்கொண்டே. “எனக்கு பிடிக்கலைன்ன என்ன? இப்ப மகன் தானே முழுசா பாக்குறான், அவன் பாணியே வேற, யாரும் நாளைக்கு கேஸ் கொடுத்துற கூடாது. நாம பத்திரமா இருக்கணும்னு சொல்றான்.” என சொன்னபோது அவருக்கு மூச்சு வாங்கியது.  “ஆமா நீ ஏன் ரேடியாலஜி எடுத்த? நல்ல கூருள்ள பயலாத்தான இருக்க.” என்று அவரை சீண்டினார் சாமிக்கண்ணு. நமுட்டுச் சிரிப்புடன் “பொய் சொல்ல வேணாம், முகதாட்சண்யம் பாக்க வேணாம்,  அனாவசியமா பேச வேணாம், நடிப்புகளை சகிச்சுக்க வேணாம், உங்களுக்குள்ள என்ன இருக்குன்னு உங்களுக்கே சொல்வேன். எல்லாத்துக்கும் மேல என் உலகத்தில் ரெண்டே ரெண்டு நிறம் மட்டும்தான். கறுப்பு இல்லைனா வெள்ளை. மத்தது எல்லாமே இந்த ரெண்டுக்கும் நடக்குற வெளையாட்டுதான். இந்த அறிவு எவ்வளவு ஆசுவாசத்த கொடுக்குது.” என்றார். “சர்தான்யா, நீங்க என்னத்தையாவது கண்டுபிடிச்சு வாரவன பயமுறுத்தி விடுறீகளே” எனச் சொல்லி சிரித்தார்.

மூன்றாவது சுற்று முடியும் தருவாயில்  இயல்வாகை நிழலில் நின்று எப்போதும் செய்யும் சிறு உடல் பயிற்சிகளை இருவரும் செய்தார்கள். “தினமும் இங்க என் கூட நடக்க வாய்யா, நா மத்த நாள் நடக்குறேனோ இல்லையோ பூக்குற மாசி சித்திரை வைகாசில இங்கதான் நடப்பேன், பூவெல்லாம் உதிர்ந்து கிடக்கும், நம்ம முத்துமாரி பூ பாவாட மாதிரி, காலேல சூரிய வெளிச்சம் பட்டதும் மின்னும். பிரமாதமா இருக்கும்” என்றார்.

இருவரும் பயிற்சியை முடித்துக்கொண்டு விளையாட்டு அரங்கின் மூன்றாம் படிக்கட்டில் சென்று அமர்ந்து கொண்டார்கள். சத்தியன் தன்னை ஒளிக்காக பரத்தி வைத்தபோது சாமிக்கண்ணு வெயில் பட்டு பூக்கள் பொன்மஞ்சளாக ஒளிர்வதை காண காத்திருந்தார். ஒளி ஒவ்வொரு படியாக தவழ்ந்து அவரை தீண்டியது. முந்தைய நாளின் காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தபோது சட்டென ஒரு காட்சி நிரடி ஓட்டம் தடைப்பட்டு நின்றது. வியர்வை உள்ளிருந்து பொங்கியது.

அணைத்து வைத்திருந்த கைபேசியை உயிர்ப்பித்து இரவுப்பணியில் இருக்கும் செவிலியை அழைத்தார். எடுக்கவில்லை என்றதும் பிறரை அழைத்தார். எவருமே எடுக்கவில்லை என்றதும் ‘அவசரம் – அழைக்கவும்’ என குறுஞ்செய்திகளை எல்லோருக்கும் அனுப்பினார். செவிலிகள் சத்தியனின் அழைப்புக்களை ஏற்பதில்லை. கைபேசியில் டாக்டர் எக்ஸ் எனும் அவர் பெயரைப் பார்த்ததுமே வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். சத்தியனின் நினைவுக்கூர்மை பல தருணங்களில் உடனிருப்பவர்களுக்கு பெரும் இக்கட்டை தருவிப்பது. பூர்வ ஜென்ம நினைவுகள் கூட அவருக்கு அப்படியே இருக்கும் என ஒருமுறை கேலியாக எவரோ சொல்லப்போக அதுவே அவருக்கு “ஜென்மம் எக்ஸ்” என்று பெயர்வர காரணமானது. காலப்போக்கில் அது ‘எக்ஸ் டாக்டர்’ என்பதாக மருவியது. தனிவாழ்வு குறித்து யாருக்கும் எதுவும் தெரியாத மர்ம மனிதர், குடும்பமற்றவர், எவரையும் வீட்டிற்கு அழைக்காதவர், வயிற்றுப் பிள்ளைகளின் பாலினத்தை கோடி காசு கொடுத்தாலும் xx, xy போன்ற குறிச்சொற்களை எழுதி வெளிப்படுத்தாதவர், எக்ஸ்ரே அறிக்கை எழுதுபவர் என பல்வேறு காரணிகள் பொருந்தி வந்ததால் அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. செவிலிகள் மட்டுமின்றி மருத்துவர்களும் அப்படியே அழைத்தார்கள். அவர்களுக்குள்ளாக புழங்கிய பெயர் முதன்மை மருத்துவ அதிகாரி வாயிலாக “எக்ஸ் சார்… வவுச்சர்ல கையெழுத்து போட்டு அனுப்புங்க” என பொதுவில் சொல்லப்பட்டபோது லேசான முகச் சுருக்கத்திற்கு அப்பால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் எல்லோரும் வெளிப்படையாக அவரை அழைக்கும் பெயராக மாறிப்போனது.

எவரும் அழைப்பை ஏற்கவில்லை என்பது அவருடைய பதட்டத்தை அதிகரித்தது. முந்தைய நாளின் நினைவுகளை மீண்டும் மீண்டும் நுணுக்கமாக அசைபோட்டபடி இருந்தார். எப்படி தவறவிட்டோம்? மனம் குடைந்துகொண்டே இருந்தது. குளித்து தயாராகி அவர் பணியாற்றும் அரசு மருத்துவமனைக்கு வழக்கத்தை விடவும் அரைமணி முன்பாக சென்றடைந்தார். பழைய ஆங்கிலேய பாணி கட்டிடம். பிரம்மாண்டமான சாளரங்கள், அகன்ற தூண்கள். மருத்துவமனையில் கூட்டம் எப்போதும் ஓய்வதில்லை. வளாகத்தில் பூத்திருந்த இயல்வாகையின் கீழிருந்த மலர்களைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். மரத்தடியில் நெஞ்சுமுடி நரைத்த பழுப்பு வேட்டி கட்டிய ஒரு கிழவர் சாய்ந்து படுத்திருந்தார். கால்களில் ஊறிக்கொண்டிருந்த கறுப்பு எறும்புகளை உதறிவிட முயன்றுக் கொண்டிருந்தார். முழங்கால் புண்ணைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அருகே நாய் ஒன்று படுத்திருந்தது. வயிறு உப்பிய பிள்ளைகளுக்கு தேநீர் கோப்பையில் ரொட்டியை முக்கி செம்பட்டை தலை அம்மாக்கள் ஊட்டிக் கொண்டிருந்தார்கள். வராண்டாவில் பிரசவிப்பதற்காக அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருக்கும் நிறைமாத கர்ப்பிணிகள். வலியில் ஓலமிடுபவர்கள். காய்ச்சலில் முனகுபவர்கள். எல்லோரையும் கடந்து சத்தியன் தன் அறைக்குச் சென்றார்.

சத்தியனின் மூக்கும் கன்னங்களும் சூடேறி சிவப்பதை செவிலியால் உணர முடிந்தது. தலைக்கேறிய கோபத்தை மட்டுப்படுத்திக்கொண்டு நிதானமான குரலில் சொன்னார்.

“ஃபோன் எடுக்க  முடியல இல்லையா? மெசேஜுக்கும் பதில் போட்டிருக்கலாம். இல்ல திருப்பி கூப்பிட்டுருக்கலாம். போகட்டும். நேத்து ஸ்கேனுக்கு வந்தவுங்க லிஸ்ட கொண்டுகிட்டு ரூமுக்கு வாங்க”

“சாரி சார். ஒரு ஆர்.டி.ஏ கேஸ், ஹெட் இஞ்சுரி… அதான் அங்கன நின்னோம்.”

தனது நாற்காலியில் அமர்ந்த சத்தியன் முந்தைய நாள் நோயாளி பட்டியலை வேகமாக பார்த்தார். அதிலிருந்து ஒரு எண்ணை குறித்து கொடுத்து, செவிலியிடம் “இந்த சாந்தகுமாரிக்கு ஃபோன் பண்ணி நாளைக்கு திரும்ப வரச்சொல்லுங்க. பயப்பட வேண்டாம் ஸ்கேன் சரியா எடுக்க முடியலன்னு சொல்லி கூப்புடுங்க” எனச் சொன்னபிறகுதான் முகத்தசைகள் இளகி மூச்சு சீரானது.

3

நோயாளிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வழக்கம்போல் வெள்ளை சட்டை வெள்ளை காற்சட்டை அணிந்து நாற்காலியில் அமர்ந்திருந்தார் சத்தியன். அவருடைய அறை சுவர் அரசு மருத்துவமனை சுவருக்கான எவ்வித அடையாளமும் கொண்டிருக்கவில்லை. முற்காலத்து ஆணிச் சுவடுகளைத் தவிர ஏதுமற்ற நிர்மலமான சுவர். அவருடைய உலகம் என்பது அந்த அறையோடு முடிந்துவிடுவது. திரையில் கறுப்பு வெள்ளையின் வெவ்வேறு அடர்த்திகளில் துடிக்கும் அசையும் உறுப்புகள் அவருக்கு பலவற்றை அறிவிக்கும். ஒவ்வொருமுறையும் திரையில் உள்ளுறுப்புகள் தெரியும்போது பரவசம் தொற்றிக்கொள்ளும். உள்ளுக்குள் இருப்பதை காட்டும் ஞானக் கண் என எண்ணிக்கொள்வார். ஆனால் உண்மையில் இது ஒரு கண் அல்ல, ஒரு செவி. கேட்க முடியாத ஒலியை அனுப்பி காண  முடியாததை திரையில் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என என்னும்போதே அவர் உடல் பரவசம் கொள்ளும்.

suneel 03

பெரும்பாலும் அவர் நோயாளியிடம் சுருக்கமாக ஓரிரு வரிகளுக்கு மேல் எதுவும் பேசுவதில்லை. சரியாக சொல்வதானால் அவர்கள் சொல்வதை விடவும் அதிகம் அவர்களிடமிருந்து அவர்களைப்பற்றி அறிந்து கொள்வார். புதியவர்கள் என்றால் அவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ள தேவையான சில தகவல்கள். முன்னர் வந்தவர்கள் எனில் தனக்கு நினைவிருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்த உரையாடல் நிகழும்.

நான்கு வருடங்களுக்கு முன் ஒருமுறை வந்த சென்ற ஐம்பது வயது மரகதத்தைப் பார்த்ததும், “கர்ப்பப்பை கட்டிக்கு ஆப்ரேஷன் செஞ்சுக்கிட்டிங்க போல” என்றார்.

அடிவயிறு வலிக்காக முதன்முறையாக வந்த மணம் முடிக்காத பத்தொன்பது வயது சுப்புலட்சுமியிடம் “வயித்துல குழந்த இருக்கு. இப்ப எட்டு வாரம் ஆகுது. ஸ்கேன் எடுக்க முடியல, ப்ளாடர் ஃபுல்லா இல்லைன்னு எழுதி அனுப்பிடுறேன். உங்க தோத பாத்துக்குங்க” என்றார்.

மூன்று வருடங்களுக்கு முன் வந்த அறுபத்தி நான்கு வயது நாச்சியப்பனிடம், “உங்க ப்ரோஸ்ட்ரெட்ல தான் இப்ப சிக்கல். பித்தப்பை கல் முன்ன இருந்த அதே நிலையிலதான் இருக்கு” என்றார்.

பேறு காலத்தில் ஐந்தாம் மாதம் ஸ்கேன் எடுக்க வந்த இருபத்தி நான்கு வயது சாந்தியிடம் “கொழந்த ஆரோக்கியமா இருக்கு.” என்றார்.

அஞ்சி நடுங்கும் செவிலியிடமும் அரிதாகவே பேசுவார். அவருக்கு என்ன தேவை, எப்படி செய்வார் எனப் பழகியவர்கள் என்பதால் அதே வரிசையில் அவர்களும் இயங்குவார்கள். அவர்களை கடிந்து கொள்வது கூட யாருமற்ற சமயங்களில்தான். ஆகவே தனியாக அவர் முன் நிற்கவே அஞ்சுவார்கள்.

“ஃபீட்டல் ஹார்ட் ரேட்” “நா சொன்னது இது இல்லையே. நார்மல் வேல்யு உங்களுக்கு தெரியும்னு தெரிஞ்சிகிட்டேன். நன்றி. நான் என்ன சொன்னேனோ அதப் போடணும்” என நிதானமாக ஆனால் தீர்மானமாக அவர் பேசுவது  எரிச்சலை கிளப்பும். அவர் சொல்லச்சொல்ல எழுதும் அறிக்கையில் ஏதேனும் சிறு கவனப்பிழை இருந்தால்கூட அவரால் அதைத்தாங்கிக்கொள்ள முடியாது. அன்றைய நாளின் பணி முடிவில் அன்று பணியாற்றும் செவிலியை அழைத்து எதிரே இருக்கையில் அமரச் சொல்லி கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து அனுப்புவார். ஒருவழியாக அன்றைய பணி முடிந்து அக்காவையும் மருமகனையும் சந்திக்க வீட்டிற்கு விரைந்தார்.

4

நடுவிக்கோட்டையை நோக்கி சத்தியனின் வெள்ளைநிற காரில் புறப்பட்டார்கள். பெண்வீட்டைப் பற்றி விசாரித்தார். “அப்பா எம்.பி.டி.சில செக்கரா இருந்து ரிட்டையர் ஆனவரு. போன வருஷம் போய் சேந்துட்டாரு. ரெண்டு அக்காளுக. நல்லபடியா கட்டிக்கொடுத்துட்டாங்க. ஒருத்தி சென்னையில, இன்னொருத்தி பரமக்குடில.  அம்மாக்காரி வீட்டுலதான் இருக்கா. வாசல்லையே பெட்டிக்கட இருக்கு, பாத்துக்கிறாங்க” என்றார் அக்கா.

“பொண்ணு பேரு என்ன? என்ன படிச்சிருக்கு?” அக்காவை முந்திக்கொண்டு சேகர் பதிலுரைத்தான்.

“அல்லி. அழகப்பாலதான் பி.எ இங்க்லீஷ் படிச்சிருக்கு எம்.எஸ்.எம் சூப்பர் மார்கெட்டுல பில்லிங்ல இருக்கா”

“உனக்கு பிடிச்சிருக்கா?”

“போட்டோ பாத்தேன் நல்லாத்தான் இருக்கா. ஆத்தாவுக்கும் பிடிச்சிருக்கு. வயசு வித்தியாசம் தான் கொஞ்சம் கூட. அவளுக்கு இருவத்தி மூணு, நம்மளவிட பன்னெண்டு வயசு கொறவு. அவுகளுக்கு சரின்னா, நமக்கென்ன வந்துச்சு?”

“உன்கூட சிங்கப்பூர் வருமாமா? பொண்ணு கிட்ட பேசுனியா?”

“தெரியல மாமா. பொண்ணு கூட பேசல. வந்தா வரட்டும் இல்லேன்னா இங்கனயே இருக்கட்டும். நா வரப்போவ இருந்துக்குவேன்” கம்மிய குரலில் நிதானமாக அவன் சொன்னது சத்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “பாலையூர்ல இதுதான் மாமா பிரச்சனை ஆச்சு. அப்ப சொல்ல முடியல இப்ப சொல்றேன். அதுலேந்து முழுசா வெளிய வந்துட்டேன்” என்றான் ஜன்னல் வழியாக சிதறலாக வானில் மிதக்கும் வெள்ளை மேகங்களை பார்த்தபடி. நெடுநாட்களாக அறியமுடியாத ஒரு குழப்பத்திற்கு அப்போது விடை கிட்டியது.

ஒருவழியாக அவர்களின் வீட்டைத் தேடி அடைந்தார்கள். கல்லுக்காலில் முள்வேலி எல்லை வகுத்த பெரிய மனையில் நால்பக்கமும் தோட்டம் சூழ  இருந்தது அவர்களுடைய சிறிய வீடு. மாட்டின் கழுத்துமணி ஓசை கேட்டது. பக்கவாட்டு சுவர்களில் வரட்டித்தடம் தென்பட்டன. வாசலிலேயே பெண் வீட்டார் வரவேற்று அழைத்து சென்றார்கள். கூடத்தில் லவ்பர்ட்ஸ் கூண்டுக்குள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. பச்சை நிற சுவரில் திருமணப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இதழ்களில் வந்த ராதா கிருஷ்ணர், வெண்ணெய் தின்னும் கிருஷ்ணன், பிள்ளையார் ஓவியங்களைக் கத்தரித்து சுவற்றில் ஒட்டியிருந்தார்கள். இறந்துபோன தந்தையின் புகைப்படம் சந்தனப் பொட்டுடன் சட்டமடிக்கப்பட்டு ஆணியில் மாட்டப்பட்டிருந்தது. தலைசாயும் உயரத்தில் எண்ணெய் பிசுக்கின் சுவடுகள் நான்கைந்து இடங்களில் தென்பட்டன. அதற்கும் கீழே வண்ண மெழுகுக் கிறுக்கல்கள். மூலையில் தையல் மிஷின் ஒன்று போர்வைக்குள் ஒளிந்துக் கிடந்தது.

“தம்பிதான் எல்லாத்தையும் எடுத்து செய்யிறது. வீட்ல அவரு போய் சேந்த பொறவு அவரு இடத்துல இருந்து முழுக்க நின்னு, சேகர பாலிடெக்கினிக் வர படிக்க வெச்சு சிங்கப்பூருல வேல வாங்கிக் கொடுத்து கரையேத்தினது அவன்தான். நல்லது கெட்டதுன்ன அவனும் இருக்கணும். தம்பிய தெரியும்ல பெரியாஸ்பத்திரிலதான் டாக்டரா இருக்காப்ல”

“சாரத் தெரியாமலா… ஆனா அவருக்கு நீங்க உறவுன்னு இப்பத்தான் தெரியும்.” என்றார் பெண் வீட்டு உறவினர் ஒருவர்.

அல்லி மஞ்சள் நிறப் புடவையில் உள் அறையிலிருந்து வெளியே வந்தாள். அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்துவிட்டு அமர்ந்தாள். அவளை கண்டதும் சத்தியனுக்கு நா வறண்டு வியர்த்து இதயம் வேகமெடுக்கத் தொடங்கியது. அவருடைய மனதில் தன்னிச்சையாக நினைவுச்சுருள்கள் விரிந்தன. அவள் தன்னை இன்னும் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தார். “இவள் தானா” என மனம் அரற்றிக் கொண்டிருந்தது. நான்கு மாதங்களுக்கு முன் இவளும் இவள் வயதுடைய வேறொருத்தியும் ஸ்கேனுக்கு வந்தபோது இவள் வயிற்றில் ஆறுவார சிசு இருந்ததை தான் அறிவித்ததை அவரால் எவ்வித குழப்பமும் இன்றி துல்லியமாக நினைவுகூர முடிந்தது. ஆனால் அன்று அவள் பெயர் அல்லி அல்ல. மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்பதற்காக ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டிருந்த சீட்டில் மேரி என்றே எழுதப்பட்டிருந்தது. அவள் அணிந்திருந்த மயில் கழுத்துநிற சுடிதார், உடன் வந்த தோழியின் முகம் முதற்கொண்டு துலக்கமாக கண்முன் எழுந்துவந்தது.

அல்லியை ஒவ்வொருவருக்காக அறிமுகம் செய்து வைத்தார்கள். சத்தியனை நோக்கி கரம் குவித்து வணக்கம் வைத்தபோது அவள் கண்களில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என உற்று கவனித்தார். ஆனால் அப்படி எதையும் கணிக்க முடியவில்லை. சேகர் அல்லியிடம் தனியாக பேசவேண்டும் என்றான். “இப்புடி தோட்டத்துல காத்தாட உக்காந்து பேசிக்குங்க” என்று பக்கவாட்டு வாசலுக்கு வெளியே இரு நாற்காலிகளை கொண்டு போய் போட்டார்கள். சத்தியனின் புடரியிலும் நெற்றியிலும் நரம்புகள் துடித்து வலி மேவியது.

நாற்காலியில் அவர்கள் எதிரெதிர் அமர்ந்திருக்க வீட்டிலிருந்த அனைவரின் பார்வையும் அவர்களின் மீது இருந்தது. பெண் வீட்டார் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தார்கள். தானாகவே திருமணம் இந்த நிலையிலேயே முறிந்துவிட வேண்டும் என உளமுருக வேண்டினார். சற்று நேரத்திற்கு எல்லாம் இருவரும் உள்ளே வந்து திருமணத்திற்கு தங்கள் சம்மதத்தை அறிவித்தார்கள். பேசி முடிக்க நாள் குறிக்கப்பட்டது. அல்லி மாப்பிள்ளை வீட்டார் காலில் விழுந்து எழுந்தாள். செய்முறைகள் பற்றி ஏதேதோ பேசியபடி ஊர் திரும்பினார்கள் சத்தியன் தன் நினைவாற்றலுக்காக முதன்முறையாக வாழ்க்கையில் வருந்தினார்.

5

திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. ஆனால் அவரால் இயல்பாக முழு suneel 01மனதுடன் அதில் பங்கெடுக்க முடியவில்லை. ஜவுளிக் கடைக்கு நகைக்கடைக்கு என எங்கு அக்கா அழைத்தாலும் செல்வதை தவிர்த்தார். ஆனால் காரையும் வாகன ஒட்டியையும் அனுப்பிவைத்து, எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். சேகருடன் நேரிலும் தொலைபேசியிலும் பேசும் போதெல்லாம் சத்தியனுக்கு பதட்டம் ஏற்பட்டது. சேகர் அல்லியுடன் தினமும் பேசிக்கொண்டு இருப்பதாக சொன்னான். “நல்ல கூருள்ள புள்ளையாத்தான் இருக்கா” என்றான். சத்தியன் அழைப்பதாகத்தான் அழைப்பிதழ் அச்சிடப்பட வேண்டும் என அக்கா பிடிவாதமாக இருந்தார். சத்தியனின் மறுப்பை அவர் பொருட்படுத்தவில்லை. “அவன் தான உனக்கு கொள்ளி வைக்கணும்” என சொல்லி அவர் வாயை அடைத்துவிட்டார்.

இரவெல்லாம் விழித்துக் கிடந்தார். காரணமற்ற எரிச்சல் அவருக்குள் குமைந்தது. ராஜசேகரிடம் அல்லி தனது கடந்த காலத்தைப் பற்றி சொல்லி இருப்பாளா? சொல்லத்தான் வேண்டுமா? ஒருவேளை திருமணத்திற்கு பின் ராஜசேகருக்கு இது தெரியவந்தால் என்ன ஆகும்? தனக்கு தெரிந்ததை மகனுடைய இடத்தில் இருப்பவனுக்கு, அதுவும் அவனுடைய வாழ்க்கை தொடர்பானதை சொல்லவேண்டுமா இல்லையா? மருத்துவனாக அறிந்து கொண்ட ரகசியத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்துவது சரியா? சேகர் தன் சொந்த மகனாக இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை நடத்த அனுமதித்திருப்பேனா? சொன்னாலும் சேகருக்கு இதை ஏற்கும் பக்குவம் இருக்குமா? எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேவையற்ற சுமையை தான் சுமக்கத்தான் வேண்டுமா? இரண்டாக கிழிபட்டு மாறி மாறி தனக்குள் தர்க்கித்து ஓய்ந்து போனார். கவனப்பிழைகள் நினைவுப்பிழைகள் அவரிடமும் மலிந்தன. திரையில் தென்படும் உறுப்புகள் துல்லியமற்று குழப்பின. தவறுகள் வழியாக அவருடைய அதிமானுட பிம்பம் சிதைந்து கையாளத்தக்க சாமானியராக குறுகினார். காலை நடைக்கு பின் கண்மூடி அமர்ந்திருப்பது பெரும் வேதனையாக ஆனது. அதற்கு அஞ்சியே நடைக்கு செல்வதை தவிர்த்தார். வீட்டிலிருக்கும் நேரங்களில் கூடத்தில் அலங்காரமற்று கிடக்கும் வெற்று வெள்ளைச்சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தார். குழப்பங்கள் தன்னை அணுவணுவாக அரிப்பதை உணர்ந்தார்.

“மாமா இன்னிக்கு மதியத்துக்கு மேல அல்லி வீட்டுல அழைக்க வாராக”, என தொலைபேசியில் அழைத்து சொன்னான்.  நெஞ்சுக் கூடுக்குள் அழுத்தம் பெருகியது. “உனக்கு இதுல சம்மதம் இல்லியா? அம்மா சொன்னுச்சு கடக்கன்னிக்கு எல்லாம் வரவே இல்லியாம். எதாவது பிரச்சனையா?” என கேட்டபோது அவன் குரல் இரைஞ்சுவதை போல் ஒலித்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சேகரு” என்றார் தருவித்துக்கொண்ட உறுதியுடன். சற்றே தயங்கிய பின் சேகர் “பாலையூருலேந்து கார்டு எதுவும் வந்துச்சா? எனக்கு வந்துச்சு. இத்தன மாசம் கழிச்சு வாட்சப்புல அனுப்புனா. அவளுக்கு ஒரு வாழ்த்த சொல்லிட்டுதான் நடுவிக்கோட்டைக்கே வந்தேன். நல்லா இருக்கட்டும். சொமந்துகிட்டே திரிய முடியாது பாரு” என்றான். சத்தியனுக்கு சொற்கள் சிக்கிக்கொண்டு வெளிவர மறுத்தன. அத்தருணத்தில் சேகர் அவரருகே இருக்க வேண்டும் என்பதைத்தவிர வேறெதுவும் விழையவில்லை.

அல்லி, அல்லியின் அம்மா, தாய்மாமா மற்றும் மூவராக வரக்கூடாது என்பதற்காக அழைத்துவரப்பட்ட ஒரு பொடியன் என நால்வரும் அவருடைய வீட்டை விசாரித்து வந்து சேர்ந்தார்கள். அன்றணிந்த அதே மயில் கழுத்துநிற சுடிதாரில் அல்லி வந்திருந்தாள். அமிலம் சுரந்து எழுந்த காந்தளை அடிநாக்கில் உணர்ந்தார். அவர்கள் ஒப்புக்கொண்ட செய்முறைகள் பற்றி பேசினார்கள். “அல்லிக்கு பதினஞ்சு போடுறோம், மாப்பிளைக்கு கைச்செயின் மோதிரம் உள்கழுத்து செயின் எல்லாம் சேத்து ஒரு அஞ்சு போடலாம்னு இருக்கோம்” என அடுக்கிக்கொண்டிருந்தார் அல்லியின் மாமா. உரையாடிக் கொண்டிருந்தபோதும் சத்தியனின் கவனம் முழுவதும் அல்லியின் மீதே இருந்தது. அவள் இவரைக் கண்கொண்டு பார்க்கவில்லை. புகைப்படங்கள், தொலைக்காட்சி, நாட்காட்டி, கடிகாரம், ஓவியம் என ஒன்று கூட இல்லாத வெண்ணிற வெற்றுச் சுவரை சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். சத்தியன் சமயலறைக்கு சென்று குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பவண்டோவை லோட்டாவில் ஊற்றி அவர்களுக்குப் பரிமாறினார். தேங்காய் பூ பழத்தை தட்டில் வைத்து அழைப்பிதழை அவருக்கு அளித்தார்கள். “தகப்பன் இல்லாத புள்ள, செய்முறையில கொத்தம் கொற இருந்தா பொறுத்துக்கிடணும். நீங்கதான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என அல்லியின் அம்மா கைக்கூப்பி தழுதழுத்தார். “சித்தப்பா மொற உனக்கு, விழுந்து கும்புடுக்கம்மா” என்றதும் அல்லியும் வணங்கி நிமிர்ந்தாள். கிளம்புவதற்கு முன் “எங்கிட்டு பாத்தாலும் வெத்து வெள்ளச்சுவரா இருக்கே உங்களுக்கு போர் அடிக்காதா” எனக் குறும்பு மின்னும் கண்களுடன் சத்தியனிடம் கேட்டாள். அவளுடைய குரலை அதுவரை கேட்டிராத சத்தியன் சில நொடிகள் திகைத்து நின்றார். அவரையும் மீறி புன்னகை அரும்பியது அவளும் புன்னகைத்தாள். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகும் கூட தன்னிச்சையாக முகத்தில் புன்னகை உறைந்திருந்தது அவருக்கே விநோதமாக இருந்தது. நெஞ்சை கவ்வியிருந்த இறுக்கம் முழுக்க கரைந்திருந்தது. நாற்காலியில் தன்னைப் புதைத்துக்கொண்டபோது எடையற்று மிதப்பதாக தோன்றியது. புன்னகை சூடிய முகத்துடன் நாற்காலியில் சாய்ந்து கண் மூடியபோது இயல்வாகையின் பொன் மஞ்சள் பூக்கள் நினைவில் எழுந்தன. நாளை முதல் மைதானத்தில் அவருடன் சேர்ந்து நடக்கலாம் என முடிவு செய்திருப்பதை சாமிக்கண்ணுவிடம் சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டார்.

3 comments for “இயல்வாகை

  1. Aravindan k
    March 3, 2020 at 1:56 pm

    நேர்மையும்,அறமும் வாழும் வழியாக கொண்ட ஒருவனி(சத்தியனி)ன் ஊடுருவிப்பார்கும் திறனும்,திராணியும் அவன் முடிவெடுப்பதையும் உணர்த்துவதாக உணர்கிறேன்.

    கருப்பு ,வெள்ளை மட்டும் தான் வண்ணமாக கருதியவனுக்கு மஞ்சள் எவ்வாறாக இருக்கிறது? என்ற கேள்வி என்னுள்ளே.

    சாமி(யின்)கண்ணு (ஸ்கேன் பிடிக்காது ,ஊடுருவ வேண்டாம்)அவன் கை பற்றி ஒரு வெளியை அறிமுகம் செய்கிறது.அறம் ,நேர்மை அதற்கு அப்பார்பட்ட ஒரு உணர்ச்சி.கருப்பு ,வெள்ளைக்கு மேலாக ஒரு மஞ்சள். பெருங்கொற்றையின் அழகு ஒளிக்கும் மேலாக அவனின் நினைவில் நிற்கிறது.

    அருமை…👌 (இருப்பினும் குருதிசோறு வேற லெவல் தான்)

  2. Natarajan G
    March 10, 2020 at 3:27 pm

    Wonderful story,thanks

  3. March 14, 2020 at 12:13 pm

    இயல்வாகை ஒரு அற்புதமான கதை.கதைக்குள் சொல்லக் கூடாத ஒன்றை கதாசிரியர் தன் கைக்குள் இறுக்கமாகப் பிடித்தவாறு கதையை மென்மையாக நகர்த்துகிறார். கதை முடிவுறும் போது சத்யனின் பிடிவாதம் தளர்ந்து உடைகிறது. கதையின் மையச் சரடு கதை நெடுக்க தூவியுள்ள கதை சொல்லலில் அமுங்கி பின் இறுதியில் மொட்டவிழ்ந்து மஞ்சள் மலாராக வெடித்து வருகிறது. கருப்பு வெள்ளை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த டாக்டர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்.வாசகன் சிரமமில்லாமல் உள் நுழைந்து அவதானிக்கும் கதை இது.

Leave a Reply to Aravindan k Cancel reply