கழுகு

“மொதல்ல அத நுப்பாட்டு!”navin 01

நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன்.

“அங்க என்னா தேடுற… நுப்பாட்டுனு சொன்னா நுப்பாட்டு” என அழுத்தமாகக் கூறவும் படப்பிடிப்புக்குப் பொருத்தப்பட்ட விளக்கை முதலில் அணைத்தேன். பொறி பறக்கும் சாம்பல் படர்ந்தபோது காமிராவின் திரையில் அமிர்தலிங்கம் ஐயா ஒரு பிணந்தின்னிக் கழுகுபோல தெரிந்தார். காமிராவைப் பதற்றமாக அடைத்தேன். திடீர் இருள் கண்களுக்குப் பழகத் தாமதமானது. துருவேறி திறக்க முடியாமல் இருந்த கண்ணாடி சன்னலின் வழி பிதுங்கி வந்த ஒளியில் தலையைத் தொங்கப்போட்டிருக்கும் அவர் நிழல் வடிவம் தெரிந்தது. கழுத்து எலும்பு வளைந்து, தாடை நெஞ்சுவரை இறக்கி இருந்தது.

மும்பையில் பார்சியர்களின் மரணச் சடங்கை ஆவணப்படம் இயக்கும் குழுவில் இருந்தபோதுதான் பிணந்தின்னி கழுகுகளைப் பார்த்திருக்கிறேன். டவர் ஆஃப் சைலன்ஸில் வைக்கப்படும் பிணத்தைத் தின்ன முதலில் பறந்து வந்த கழுகைப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது. பிணத்தின் அருகில் அமர்ந்து வெடுக் வெடுக்கன முப்புறமும் கழுத்தை அசைத்தபடி தன்னைச் சுற்றியுள்ள அத்தனையையும் அற்பமாகப் பார்த்தது. அதன் இறகு காற்றில் அசைவதுகூட அத்தனை கம்பீரம். உடலைச் சிலுப்பி மயில் தோகையை விரிப்பதுபோல இறக்கையை விரித்து காட்டியபோது படக்குழுவினர் தங்களை மறந்து அறிய காட்சியென கைத்தட்டினர். நான் கேமராவின் வழி அதன் முகத்தை நெருங்கிப்பார்த்தேன். மொத்த ஆகாயத்தையும் தன்னால் வசப்படுத்தமுடியும் என்பதுபோன்ற கர்வம்.

கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் எண்ணிக்கை பெருகத்தொடங்கவும் சட்டென ஓர் அருவருப்பு தொற்றிக்கொண்டது. பிணத்தின் குடலுக்கும் ஈரலுக்கு அவை போட்டி போட்டுக்கொண்டன.  கொத்தித்தின்று எலும்புக்கூடாகிவிட்டபின் வழுக்கை மண்டையும் கூரிய மூக்குமாக கழுத்தை மடக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் இவரைப்போலதான் அமர்ந்திருந்தன. நேரம் ஆக ஆக அவற்றைப் படம் எடுக்கும் சுவாரசியம் குறைந்து போனது. அதுவும் சாதாரண இரை தேடும் ஜீவராசியாக, வயிற்றை நிரப்ப தினம் தினம் அழையும் அற்ப உயிராகத் தெரிந்தது.

கண்களுக்கு அவ்வறையின் சாம்பல் இருள் பழகிய பின் அவர் முகத்தில் கண் எங்கு உள்ளது எனத் தேடினேன். அவை என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன. எனக்கு ஒரு பிணந்தின்னிக் கழுகின் அருகில் நிற்க என்னவோபோல் இருந்தது. காயத்திரியைக் கூப்பிடலாமா என மீண்டும் ஒரு தரம் அவள் சென்ற குசினியைத் தேடினேன். அது கண்ணுக்குத் தட்டுப்படாமல் எங்கோ நீண்டுபோகும் இருளில் மறைந்திருந்தது.

அது காயத்திரியின் சொந்த நிலத்தில் தாத்தாவினால் கட்டப்பட்ட பலகை வீடு. இருந்தவரை வீட்டைப் புதுப்பிக்க அனுமதி கொடுக்காததால் இறந்த பிறகும் பேயாக வந்து தொந்தரவு செய்வார் என பயந்து வீட்டை இடிக்காமல் நாற்புறமும் திறந்து இஷ்டப்படி அகலமாக்கிக் கட்டியிருந்தனர். மேலிருந்து பார்த்தால் ஒரு ‘மாத்தா கூச்சிங்’  பழத்தை அழுத்தி மிதித்ததுபோல தெரியலாம். நடுவில் கருப்பாகச் சிதைந்திருக்கும் கொட்டைதான் தாத்தா காலத்து வீடு. அதில்தான் நான் அமிர்தலிங்கம் ஐயாவுடன் இருந்தேன். புத்தகங்கள் நிறைந்த பழைய மர அலமாரி பின்புலத்திலும் மூங்கிலில் செய்யப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியும் அமிர்தலிங்கம் ஐயா படமாக்கப்பட வேண்டும் என்பது காயத்திரியின் ஆசை.

“இன்னும் ஆரம்பிக்கலயா?” கையில் இரண்டு கண்ணாடி டம்ளர்களுடன் வந்தவள் அவள் அப்பாவிடம் ஒன்றை நீட்டினாள். பின் கட்டுக்குச் சென்றவள் இடப்பக்கம் இருந்த அறையில் இருந்து வெளியேறியது திடுக்கிட வைத்தது. கால்களைப் பார்த்தேன்.

“வேணுமுன்னா ஒரு உதை கொடுக்கவா?” என்றாள். கூர்மையானவள். என் சந்தேகத்தை அறிந்திருந்தாள்.

“வீட்ட இழுத்துக்கட்டும்போது எல்லா அறைக்கும் ரெண்டு டோர் வச்சாங்க. எப்படியும் பூந்து வெளியாகலாம்,” என்றாள்.

அவள் அப்பா காமிராவில் பதிவு செய்ய அனுமதிக்காததை சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் கூறினேன். அசிங்கப்பட்டதை ஆங்கிலத்தில் சொல்லும்போது ஒரு கௌரவம் வந்துவிடவே செய்கிறது.

“நான்தான் அவருக்கு மனக்கோளாறு உண்டு என முன்பே சொன்னேனே,” என ஆங்கிலத்திலேயே பதில் கூறினாள். அமிர்தலிங்கம் ஐயா நல்லப்பிள்ளையாக அவள் கொடுத்த தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தார். பால் புட்டியில் ஊற்றிக்கொடுத்தாலும் சப்பிக் குடிப்பேன் என்பதுபோன்ற சமத்து முகம்.

“ஏதோ ஒயர் ஷாட். எந்த விளக்கும் எரியல. பிளாக் பயிண்டுல பிரச்சன இல்லை. நல்லவேளை நீ வெளக்க கொண்டு வந்த,” என்றவளிடம் “நீ கூடவே இரேன்,” என்றேன் ஆங்கிலத்தில்.

“பக்கத்துல இருந்தா என்னையவே கொஞ்சிக்கிட்டு இருப்பார். அப்பாவுக்கு நான் இன்னும் குழந்தைதானே. அம்மாவுக்கு ஒடம்பு முடியலன்னு ஏழு நாள் பர்மிஷன் கேட்டு வரேன்னு சொன்னதும் சந்தோசமா ஆயிட்டாரு. இனி திரும்ப போனேன்னா புரொஜெக்ட் முடியற வரைக்கும் அசையமுடியாது. இதுல போக வரவே ரெண்டு நாள் கழிஞ்சிடும். ஏங்கிப்போயிடுவாரு,” என்றவள் அவள் கன்னத்தில் ஊர்ந்த அமிர்ந்தலிங்கம் ஐயாவின் கைகளை எடுத்து முத்தமிட்டு தன் தோளில் போட்டுக்கொண்டாள்.

“அப்பா… அவரு ஒங்கள பாக்கதான் வெளிநாட்டுலேருந்து வந்திருக்காரு. நெறைய வேலைகள விட்டுட்டு வந்திருக்காரு. நீங்கதான் பினேங் பாலம் போடும்போது அங்க வேல செஞ்சீங்கல்ல. அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…” என்றாள் கொஞ்சலாக.

அமிர்தலிங்கம் ஐயா எதையோ சிந்தித்தார். முன்பு முகத்தில் இருந்த கடுமை முற்றிலுமாக அகன்று அபோத நிலையில் இருந்தார். குரலைச் செருமி,  “அப்போ… ஆயிரத்து தொளாயிரத்து எம்பத்து ரெண்டு,” என ஆரம்பித்தவரை நிறுத்தினாள்.

“கேமரா முன்னுக்கு சொல்லுங்கப்பா,” என்றவள் என்னைப் பார்த்து கண் ஜாடை காட்டினாள். நான் கொஞ்சம் நடுக்கத்துடன் முதலில் விளக்கைத் தட்டினேன். குனிந்திருந்த முகத்தில் நெற்றிச் சுருக்கம் தெரிந்தது. அவர் கருவிழிகளை மேலே உயர்த்தி என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார். எச்சரிக்கிறார். உடனே அணைத்தேன்.

“ஏய் என்னாச்சி” என்ற காயத்திரிக்கு ‘பளார்’ என ஒன்றைக் கொடுத்து ‘உனக்கு நான் என்ன செய்கிறேன் என்பது மட்டும்தான் தெரியுமா?’ எனக்கத்த வேண்டும்போல இருந்தது.

“மொதல்ல சொல்லிச் சொல்லி பாத்துக்கவா?” என்றார் அமிர்தலிங்க ஐயா.

“ஓ அப்படியும் செய்யலாமே. என்ன சிவா?” என்றாள். குத்துமதிப்பாகத் தலையை ஆட்டினேன்.

“நீ உக்காரு. அம்மா குளிச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்களும் வந்துடுவாங்க. அப்பாவ பாலம்போடுற எடத்துல பாத்துதான் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அவங்களுக்கும் பாலம் போட்ட கதை கொஞ்சம் தெரியலாம்,” என்றவள் அம்மாவைக் கூப்பிடப் போய்விட்டாள். எனக்கு வியர்த்தது. அவர் முகத்தைப் பார்க்காமல் தேநீரை எடுத்துப் பருகியவுடன் நிதானமானேன். என் உடல் வலிமையில் பாதி கூட இல்லாத எண்பது வயது எலும்புகள் வளைந்த கிழவனைக் கண்டு நான் பயப்படுவதே வேடிக்கையாக இருந்தது. நிமிர்ந்து அமர்ந்தபடி அவரைப் பார்த்தேன். கழுத்து முன்பைவிட இறங்கியிருந்தது. வினோதமாகத் தெரிந்தார்.

“நீங்க பினேங் பாலம் போடுற வேல செஞ்சிங்களா ஐயா? அப்போ உங்களுக்கு எத்தன வயசு?” என்றேன். சற்று முன் நடந்த எதுவும் என்னை பாதிக்கவில்லை எனக் காட்ட நினைத்தவனாய் முடியை வாரி அள்ளி கட்டினேன். நான்கு வருடமாகப் பேணி வளர்க்கும் கூந்தல்.

“இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியுமா?”

“எண்பத்து நாலுன்னு காயத்திரி சொன்னாங்க.”

“நூத்தி இருபத்து எட்டு வயசு ஆவுது இந்த நவம்பர் முடிஞ்சா.”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் என்னை வைத்து விளையாடுகிறார். பேசாமல் தேநீரைக் குடித்துவிட்டு புறப்பட்டுவிடலாம் என நினைத்தேன்.

“என்னா முழிக்கிற? என்னைய பைத்தியமுன்னு சொல்லியிருப்பாளே எம்மவ. நல்லா கேட்டுக்க… பெரிய வேலைகள செஞ்சிமுடிக்க பைத்தியமாதான் இருக்கனும். புரிஞ்சதா?” என்றார்.

மெதுவாக நகர்ந்து சென்று காமிராவை ஆன் செய்துவிடலாம் என நினைத்தேன். காலர் மைக்கை மாட்ட மறந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. கழுத்தை நெஞ்சு வரை இறக்கி வைத்துள்ளவரிடம் எங்கே அதை மாட்டுவது எனக் குழப்பம் அடைந்தேன். படப்பிடிப்புக்காக காயத்திரி புதிதாக வாங்கி அணிவித்திருந்த நீல நிற பாத்தேக் சட்டை தொளதொளவென அவர் உடலில் அலைந்துகொண்டிருந்தது.

“நான் பாலம் போட்ட வேலைய தெரிஞ்சிக்கிட்டு நீ என்னா செய்யப்போற?” என்றார்.

“நா நிறைய டாக்குமன்டரி புரொஜெக்டில வேல பாத்துருக்கேன் ஐயா. பெரும்பாலும் வெளிநாட்டு புரொஜெக்ட். பாலிய ஒட்டி இருக்குற ஒரு தீவுல திமிங்கலத்த வேட்டையாடி, அதை கருவாடாக்கி ஆறு மாசம் வச்சி சாப்பிடுற பூர்வகுடி மக்கள பத்தி செஞ்ச டாக்குமன்டரிக்கு அவார்டெல்லாம் கெடச்சது,” என ஃபோனின் திரையைத் தள்ளி சில படங்களைக் காட்ட முயன்றேன். அவர் திரையைப் பார்க்காமல் என்னையே கூர்மையாக முறைத்தபோதுதான் அவர் கேட்ட கேள்விக்கு அது பதில் இல்லை என உரைத்தது.

“அவார்ட்டு…” என்றவர் சிரித்தார்.

“வரலாற பதிவு செய்யலாமுன்னு காயத்திரி சொன்னாங்க… காயத்திரி… எங்க காயத்திரி” என எழுந்தபோது “உட்கார்” என அதட்டலாகக் கூறவும் சோபாவில் சரிந்து அமர்ந்தேன்.

“வரலாற பதிவு செஞ்சி?”

“பதிவு செஞ்சி… பதிவு செஞ்சி…” எனக்குத் தாகம் எடுத்தது. தேநீரில் இனிப்பு அதிகம் சேர்த்தால் எனக்கு அவ்வாறு தாகம் எடுப்பதுண்டு. என்னிடம் எல்லாவற்றுக்கும் பதில் இருந்தது. ஆனால் அவருக்கு விளக்குவது என்னை நானே முட்டாளாக நினைக்க வைத்துவிடும் எனத் தயங்கினேன். என் மனம் அவரை ஒரு பைத்தியக்காரன் என நம்பத் தொடங்கிவிட்டதால் பைத்தியக்காரனிடம் விளக்கம் கொடுத்த நிகழ்வு என் வாழ்க்கை வரலாற்றில் பதியக்கூடாது என நினைத்துக்கொண்டேன். சாய்ந்து அமர்ந்தபோது சோபாவின் ‘கிரிச்’ எனச் சத்தம் வந்தது.

“நீ ஒக்காந்துருக்கிற நாக்காலிய துன் சம்பந்தன் வீட்டுல இருந்து எடுத்து வந்தேன். ஒடச்சிடாத…” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடலெல்லாம் சிலிர்த்தது. ‘உண்மையாகவா?’ என அதன் பிடியைத் தொட்டுப் பார்த்தேன். துன் சம்பந்தன் அமர்ந்திருந்த, அவரது கை பட்ட ஒரு நாற்காலியின் என் உடல் பதிந்துள்ளது உடலின் கனத்தை மெல்லக் குறைந்து சோபாவின் நுனி வரை நகர வைத்தது.

“பொய். ஆனா இந்த பொய்ய சொன்னப்ப ஒனக்கு ஏதோ செஞ்சிச்சில்ல. அந்த மப்புக்குதான இந்த வரலாறு கிரலாறெல்லாம்?” என்றபோது அவரை அவ்வளவு எளிதான மனிதராகக் கருதக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.

“காயத்திரிய ஒரு டாக்குமென்டரி ஷூட்டிங்கிலதான் பார்த்தேன். சர்பாத் குலான்னு ஒரு ஆப்கான் அகதி பெண்ணோட படம் 1984லுல டைம்ஸ் மெகஸீன்ல வந்துச்சி. நீங்க பாத்திருக்கலாம். அப்ப ஒங்களுக்கு முப்பது முப்பத்தஞ்சி வயசு இருக்குமுல்ல” என்றபோது முறைத்தார்.

“இல்லை… ஒரு தொண்ணூறு வயசாவது இருக்கும்.” என்றேன் அசடாகச் சிரித்தபடி. எனக்கே அப்படிச் சொல்ல வெட்கமாக இருந்தது. “அது பாக்கிஸ்தானுல எடுத்த படம். அப்போ அவளோட பச்சை நிற கண்ணப்பத்தி பேசாத ஆள் இல்லை. அந்தப் பொண்ணு இப்ப எப்படி இருக்கானு தேடி படம் எடுக்க ஆப்கான் போனப்பதான் உங்க பொண்ண பாத்தேன்.”

“ஊர் ஊரா பொண்ணுங்கள தேடுற வேலையா?”

அவருக்குப் புரிந்தும் கேலி செய்வதாகத் தோன்றியது. நான் அவரிடம் எதைச் சொல்ல வருகிறேன் என்பதில் எனக்கே தெளிவில்லை. எதைச் சொல்லி அவரை என் வசம் வரவழைக்க விரும்புகிறேன். நான் உலக விருதுகள் பெற்ற ஒரு ஆவணப்படக் கலைஞன் என்றா, உலகில் நான் போகாத நாடுகள் இல்லை என்றா, அவர் மகள் என் ஆவணப் படத்தால் ஈர்க்கப்பட்டு மலேசியாவிலும் தமிழர்கள் வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்காக நான் பெரிய மனது வைத்து சிங்கப்பூரின் சில ஆயிரம் டாலர் புரொஜெக்டை அப்படியே போட்டுவிட்டு வந்தேன் என்பதையா, அவர் மகள் அழகாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டு எட்டு மாதங்களுக்குப் பின் நாடு திரும்பியது பற்றியா? நான் இந்த ‘மாத்தா கூச்சிங்’  நசுங்கிய வீட்டில் இருப்பதால் அப்படி ஒன்றும் சாதாரணமானவன் இல்லை… நான் பெரிய இவன் என்றா… எதைத்தான் சொல்ல நினைக்கிறேன்.

“இங்க நம்ம தமிழங்க வரலாற ஆவணப்படம் செய்யலாமுன்னு வந்தேங்க ஐயா. அது அடுத்தடுத்த தலைமுறைக்கு செய்திய சொல்லும். அதாங்க ஐயா,” ஏதோ சொல்லிவிட்டதாகத் தோன்றியது. அதை சொல்லி முடிக்கும் வரை மூச்சை தம் கட்டியிருந்தேன் என்பது சொல்லி முடித்த பிறகு குப்பென மூச்சு வாங்கியபோதுதான் புரிந்தது.

“இதுவரைக்கும் என்ன விவரம் சேத்திருக்க?”

“எதுவும் பெருசா இல்லைங்கய்யா. நல்ல கூலி கெடச்சதால தோட்டத்துல வேலைய விட்டுட்டு நிறைய தமிழவுங்க இங்க வேலைக்கு வந்தாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்படி வந்த பல பேரு காணாம போயிட்டாங்கன்னும் சில பேரு சொன்னாங்கய்யா…”

“காணாம போவல… சாகடிக்கப்பட்டாங்க,” சொல்லிவிட்டு அமிர்தலிங்கம் ஐயா சிரித்தார்.

“அப்படியும் சொல்லுறாங்க.”

“அத்தாதண்டி பாலம் போடுறதுன்னா சும்மாவா? கடலாத்தாவுக்கு பலி வேணாம்? எல்லாமே பலி. செல சமயம் அவளா எடுத்துக்குவா. செல சமயம் கட்டுன பாலம் இடிஞ்சி விழும். அப்ப நாமலா ஆத்தாளோட பசி புரிஞ்சி பலி கொடுத்து சாந்தப்படுத்தனும்.”

அவரது விழிப்படலம் பழுப்பு நிறத்தில் இருந்தது. ஒருவேளை விளக்கை எரியவிட்டால் வெண்மை அதிகம் தெரியலாம். பேசும்போது ரகசியத்தன்மையுடன் அருகில் வருவதால் அவரது நீண்ட நாசி முகத்தில் உரசிவிடுமோ என்ற பயம் வந்தது.

“ஆனா அவ்வளவு சாவையும் ஒரே ஒரு பாலம் மறக்க வச்சிருசில்ல. இப்ப நீ சொல்லு ஒரு பாலம் அங்க நிக்கிறது வரலாறா? இல்ல அத்தன பேரு செத்துப்போனது வரலாறா?”

“எல்லாமே சேந்ததுதானே ஐயா. அந்த வேல எப்படி தொடங்குனுச்சிங்கய்யா? பாலம் போட ஆரம்பிச்ச மொத நாள்ள இருந்து நீங்க வேல பாத்ததா காயத்திரி சொன்னாங்க,” ஓரளவுக்கு பேசும்நிலைக்கு வந்துவிட்டார் என்றே சகஜமாகக் கேட்டேன்.

“ஒனக்கு பாலம் உருவான வரலாறு வேணுமா? பாலம் அழியப்போற வரலாறு வேணுமா?”

எனக்கு அவர் இப்படிப் பேசுவது சங்கடமாக இருந்தது. இவ்வளவு அபத்தமான கேள்விகளுக்குப் பதில் சொல்லியெல்லாம் இந்தப்பிழைப்பை ஓட்ட வேண்டுமா என நினைத்துக்கொண்டேன். காயத்திரியின் கெஞ்சும் கண்கள் நினைவுக்கு வந்ததும் காலின் கட்டைவிரலை மடக்கி பூமியில் பதித்துக்கொள்ள முயன்றேன்.

சுற்றிலும் ஒருதரம் நோட்டம் விட்டவர், “எல்லாருக்கும் தெரிஞ்ச கதைய படமாக்கி என்னா செய்யப்போற. யாருக்கும் தெரியாத கதை இருக்கு. ஆனா அத நீ இப்ப படமாக்க முடியாது,” என்றவர் என்னைக் கூர்ந்து நோக்கினார்.

“பயமா இருக்கா? பயப்படாத. நீ இங்க இப்ப வர போறன்னு எம்மவ சொல்லல. எனக்கு போன வருஷமே தெரியும். நா ஒனக்காக ஒரு வருசமா காத்திருக்கேன் தெரியுமா?” என்றவர் கழுத்தை மீண்டும் தொங்கப்போட்டுக்கொண்டார். “நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்.” என்ற குரல் மட்டும் ரகசியம்போல கேட்டது.

நான் முகத்தை எப்படி வைத்துக்கொள்வது எனத் தெரியாமல் எந்த அதிர்ச்சியும் அடையாதவன் போல “ஓ” என்றபடி கிளாஸை மேசையில் வைத்து சுற்றிலும் நோட்டமிட்டேன். அங்கு இருந்த பல பொருள்களும் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டவையாக இருக்கலாம். உறுதியான மர அலமாரியில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அருகில் அழகிய வேலைபாடுடன் அமைந்த மரச்சட்டகத்தில் பெரிய நிலைக்காண்ணாடி. அதில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சாந்தமான சிரிப்புடைய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சுவரில் நிறைய திருமண படங்கள் வரிசையாக இருந்தன. காயத்திரி சாடையில் இருந்த ஒரு பெண் அவளது அம்மாவாக இருக்கும் என உணர்ந்துக்கொண்டேன். பக்கத்தில் இருக்கும் அந்த மனிதர்தான் அமிர்தலிங்கம் ஐயா. நல்ல தேஜஸான முகம்.

“உங்கிட்ட செல சங்கதிகள் சொல்லனும். நீ அதுக்காகதான் அனுப்பிவைக்கப்பட்டிருக்க,” கழுத்தை மட்டும் திருப்பினார்.

நான் அவரை நேராக எதிர்கொண்டேன். அவர் கண்களில் பொய்யில்லை. நான் ஆயிரம் ஆயிரம் கண்களைப் பார்த்தவன். உலகம்  முழுவதும் பல நூறு மனிதர்களுடன் புழங்கியவன். காமிரா இருக்கும்போதும் இல்லாதபோதும் மனிதர்கள் அசைவுகளில் உள்ள துல்லிய பேதங்களை அறிந்தவன்.

“சொல்லுங்கய்யா!” என்றேன்.

“இன்னும் ஆறு மாசத்துல இந்த நாட்டுல பேரழிவு நடக்கப் போகுது. நாடு போற போக்கு சரியில்ல. எதுவுமே சரியில்ல. மனுசன் ஆணவத்துல தரிகெட்டு ஓடுறான். நிலமெல்லாம் அவனுக்கு மட்டுமேன்னு நெனப்போட சுத்துறான். அவன நிறுத்தனும். அதுக்கு ஒரு பேரழிவு நடத்தனும். நடக்கும்,” அவர் கண்கள் உறுதியாக என்னை நோக்கின.

“எப்படி… எப்போ?” என் குரலில் எழுந்த பதற்றம் நான் அவர் சொல்வதையெல்லாம் நம்பத்தொடங்கிவிட்டேன் என்பதை உணர்த்தவும் செருமிக்கொண்டேன்.

“என்னையப்போல இந்த உலகத்துல நெறைய பேரு இருக்காங்க. நாங்க கடவுளோட கட்டளைக்காக காத்திருக்கிறோம். எனக்கு அப்படி ஒரு கட்டளை வந்திருக்கு,” அவர் மெல்ல அன்னாந்து மேலே பார்த்தார். பின் கழுத்தின் தசை பிதுங்கி குவிந்து கட்டியைப் போல காட்சியளித்தது.

ம.நவீன்

“பெரிய அழிவு நடக்கப்போவுது. நான்தான் அந்த அழிவ உண்டாக்கப் போறேன். உன்னை சந்திச்சு இந்த சேதிய சொன்ன அடுத்த ஆறு மாசத்துல அத நான் செஞ்சாகனும். இது கட்டளை.”

சற்று முன் பதற்றமானதை எண்ணி நானே சிரித்துக்கொண்டேன். ஒரு பைத்தியக்காரக் கிழவன் சொல்லும் சொல் எப்படியெல்லாம் என்னை அலைக்கழிக்கிறது என நினைக்க வேடிக்கையாக இருந்தது. நான் இதுபோன்ற ஒரு மனிதரைச் சந்தித்துள்ளேன். 2001இல் நேபாளத்தில் நடந்த அரசு விருந்தொன்றில் இளவரசர் திபெந்திரா மது அருந்திவிட்டு தன் குடும்பத்தினரைச் சுட்டுக்கொன்றான். அந்த விருந்தில் கலந்துகொண்ட இளைஞன் ஒருவன் அதைத் தானே செய்ததாக பல ஆண்டுகளாகக் கூறித் திரிவதை இமயமலைத் தொடர்கள் குறித்த ஆவணப்படம் எடுக்கச் சென்றபோது கேள்விப்பட்டு தனிப்பதிவாகச் செய்து வைத்தேன். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் தப்பியோட முயன்றவனை வளைத்துப்பிடித்தபோது தானே அவர்களைச் சுட்டதாக மன்னிப்புக்கோரி அழத்தொடங்கியபோது எல்லோருக்கும் அதிர்ச்சி. போலிஸ் விசாரணைக்குப் பின்னர்தான் அவன் மனம் பிறழ்ந்துள்ளது தெரியவந்தது. நான் அவனைத் தேடி சந்தித்தபோது முடியும் தாடியும் நரைத்து துறவிபோலக் காட்சி தந்தான். முதுமை நெருங்கியிருந்தது. கண்களில் கலவரம்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் எப்படித் திட்டமிட்டு அரச குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான் என விளக்கமாகக் கூறினான். குற்ற உணர்ச்சியால் கண்ணீர் விட்டு அழுதான். அரச குடும்பம் தனக்குச் செய்த தீங்குகளைப் பட்டியலிட்டான். ஆனாலும் அதற்கு அத்தனை கொலைகள் செய்திருக்கக்கூடாது என்றான். அவனிடம் பேசி முடித்தபோது என் கண்களில் கண்ணீர் வழிந்தது. சட்டம் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்லாமல் இருந்தால் நான் நிச்சயம் அவன் சொல்லும் அனைத்தையும் உண்மையென்றே நம்பியிருப்பேன். அந்தக் கண்களுக்குள் அத்தனை இருள். மன்னிப்பு வேண்டி வேண்டி மன்றாடித் தோற்ற இயலாமையின் இருள். நான் அவனை மன்னித்துவிட்டதாகக் கூறியதும் கதறி அழுதான். அந்த வார்த்தைக்கு பல ஆண்டுகள் காத்திருந்தவன்போலவும் கடவுளே தன்னை மன்னித்ததுபோலவும் என் காலில் விழுந்தான். ஆனால் அது சுழற்சியின் ஒரு கணம் மட்டும்தான். சில நிமிடங்களுக்குப்பின் மீண்டும் அவன் அதே குற்ற உணர்ச்சிக்குத் திரும்பியிருந்தான். முதலில் இருந்து அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்.

“நீ நம்பல. தெரியும். இதுக்கு முன்னாடி ரெண்டாயிரத்து நாளுல இப்படி ஒரு அழிவ வரவழைச்சேன்.”

கொஞ்ச நேரம் யோசித்து “சுனாமி” என்றேன். அவர் கண்கள் மின்னின. பின்னர் இமைகளை மெல்ல மூடி ‘ஆம்’ என தலையை மட்டும் அசைத்தார்.

“அதுவும் ஆண்டவன் எனக்கிட்ட கட்டளைதான்,” என்றார் நிதானமாக.

“எப்படி?” இதை கேலியாகத்தான் கேட்டேன். அது அவருக்குக் கேலியாகப் படவெண்டுமென வலிந்து குரலில் சிரிப்பை உண்டாக்கினேன். அருகில் வருமாறு அழைத்தார். ஏதோ ரகசியம் சொல்லப்போவதாகக் காதுகளைக் காட்டவும் காதின் மடலுக்குப் பின்புறம் உள்ள மெல்லிய பகுதியில் ஆள்காட்டிவிரலை வைத்து அழுத்த ஒரு நிமிடம் தலைச் சுற்றியது. வாய் கோணியது. சத்தம் எழுப்ப முடியவில்லை. கையைத் தலையில் வைத்து அதிர்ந்த உடலுடன் அமர்ந்தபோது என் கூந்தலை அவிழ்த்தவர் பின் கழுத்தில் அழுத்தமாக நீவிவிட்டார். நான் தடுக்கவில்லை.

“ஒரே விரல்தானே. ஒரே இடம்தானே. ஏன் ஒனக்கு ஒடம்பு முழுக்க முறுக்கிடுச்சி. எல்லாமே ஒரு முடிச்சில வேலை செய்யுது. மொத்த ஒலகமும் முடிச்சிகளால வேல பாக்குது. கடலோட முடிச்சி உன் காலுக்கு அடியில இருக்கலாம். எங்க எதோட முடிச்சி இருக்கோ அந்த முடிச்ச சீண்டனும். நா கடலையும் நெலத்தையும் படிச்சவன்,” என்றவர் நிறுத்தினார். என் காதுகளை பலம்கொண்டு இழுத்து உள்ளிருந்து எதையோ உடைத்தார். மூளைக்குள் காற்று புகுவதுபோல இருந்தது. “குருவிங்க ஆகாயத்தோட முடிச்சுகள படிச்சிருக்குல்ல அப்படி. அதனாலதான் அதுங்களால மாசக்கணக்கா பறந்து ஊர விட்டு ஊர் போக முடியுது. எல்லாமே ஒரு கணக்கு. முடிச்சிகளோட கணக்கு,” என்றார்.

எனக்கு கழுத்தை நிமிர்த்த பயமாக இருந்தது. மீண்டும் தலைச்சுற்றி வாய் கோணுமோ என நிமிராமல் இருந்தேன். என் வலது கால் வளைந்து முறுக்கியிருப்பதை அப்போதுதான் உணர்ந்து நேராக்கினேன். உடல் முறையாக இயங்குவது தெரிந்தபோது எழுந்து நடக்க வேண்டும்போல இருந்தது. வியர்த்த முகத்தில் தலைமுடி ஒட்டிக்கொண்டிருந்தது. மெல்லா முதுகெலும்பை நேராக்கி நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். தொடர்ந்து என்ன பேசுவதென தெரியவில்லை. கூந்தலை அள்ளி மீண்டும் கட்டத்தொடங்கினேன். இதுவரை யாரையும் தொட விட்டதில்லை. கூந்தல் வைத்தபோது எனக்கு கேமராமேன் பாவனை வந்துவிட்டதாகப் பாராட்டியவர்கள் ஏராளம். அமிர்தலிங்கம் ஐயா அதைத் தொட்டது கடுப்பை உண்டாக்கியது.

கைகளில் மரப்பு தட்டியிருந்தது. இடது கையில் மொத்தக் கூந்தலுக்கும் பிடி கிடைத்தபோது ஒரு தடிமனான பெண் எதிரில் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அந்த இருட்டிலும் கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தார்.

“வணக்கம் தம்பி. காயத்திரி நேத்துலேருந்து நீங்க வருவீங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தா,” என்றவர் அமிர்ந்தலிங்க ஐயாவை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.

“என்ன சொல்லுது,” என்றார்.

“எது?” என்றபடி நான் அமிர்ந்தலிங்க ஐயாவைப் பார்த்தேன். தலையைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தார். சற்றுமுன்பு என் முகத்தருகில் தன் நாசி உரச பேசியவர் இவர்தானா எனச் சந்தேகப்படும்படியான மாற்றம்.

“இன்னும் ஒன்னும் சரியா பேச ஆரம்பிக்கல,” என்றேன்.

“பேசாது… பேசுனா முத்து கொட்டிருமுல்ல,” என்றவர் “கண்ணுல சின்ன ஆப்பிரேஷன் தம்பி. அது தெரிஞ்சிதான் என்னாத்த புதுசா பாத்துட போறேன். படிப்பு முடிஞ்சே வாம்மான்னு சொன்னேன். கேக்காம லீவு போட்டு வந்திருக்கா. டாக்டரு வெளிச்சத்த கொஞ்ச நாளைக்கு பாக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. இந்த லைட்டு ரொம்ப பவருன்னு சொன்னா மவ. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க,” என்றார்.

நான் சிரித்துவைத்தேன். கொஞ்ச நேரம் சுவரில் இருந்த திருமணப் படங்களில் உள்ளவர்கள் யார் யாரென விளக்கினார். அவர்களுக்கு காயத்திரி ஒரே குழந்தை. மற்ற அனைவரும் அந்த அம்மாவின் தம்பிகள். எல்லாருமே அந்த அம்மாவைப்போல விஸ்தாரமாக இருப்பார்கள் எனப் படங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. அவர்கள் அனைவரும் அந்த வீட்டில்தான் வசிப்பதை காயத்திரி சொல்லியிருக்கிறாள். திசைக்கு ஒருவர் என பிரித்துக்கொண்டு தத்தம் வசதிக்கு ஏற்ப வீட்டை விரிவாக்கி தங்கள் ராஜ்யத்தை அமைத்துக்கொண்டனர். சமையல் கூடம் மட்டும் பொது என காயத்திரியின் அம்மா மிச்சக் கதைகளைச் சொன்னார்.

“நீங்க பினேங் பாலம் போடும்போது அங்க வேல செஞ்சீங்களா?” என்றேன்.

“இல்ல தம்பி. அங்கேருந்து பத்து பதினைச்சு கிலோ மீட்டர் தள்ளி ஒரு எஸ்டேட்டுல இருந்தோம். இது அந்தத் தோட்டம்தான். சம்பளம் கொஞ்சம் அதிகமா கெடைக்குமுன்னு பாலம் கட்டுற வேலைக்கு போயிடுச்சி. அப்ப அப்ப வந்து பாக்கும். என்னையவிட பத்து பதினஞ்சி வயசு மூப்பு. என்னா அழுது அடம்பிடிச்சும் மொறப் பையன்னு பேசி முடிச்சிட்டாங்க. எம்பத்து அஞ்சில பாலம் கட்டி முடிச்சதும் நாங்க கல்யாணம் கட்டிக்கிட்டோம். ரொம்ப காலம் புள்ள இல்ல…” என நிறுத்தியவர் “அப்புறமா காயத்திரி  பொறந்தா,” என்றார். முகத்தில் வெளிப்பட இருந்த உணர்ச்சியை அவசரமாக மறைப்பதாகத் தோன்றியது. கண்ணாடி இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாகத் தெரிந்திருக்கும்.

எனக்கு சோர்வாக இருந்தது. எதற்காக இவ்வளவு தூரம் வந்தேன் என்பதை நினைத்து ஏமாற்றமாக உணர்ந்தேன். காயத்திரிக்காகத்தான் வந்தேன் என்றாலும் அவளுக்காக மட்டுமே நாடு விட்டு நாடு வர நான் இன்னும் இளைஞன் இல்லை.

2001இல் ஆப்கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை என்ன என்று ஆய்வு செய்யவே காயத்திரி அங்கு வந்திருந்தாள். தற்செயலாக ஒரு உணவகத்தில் சந்தித்துக்கொண்டோம். தோழிகளுடன் மலாயில் அவள் பேசிக்கொண்டிருந்ததை வைத்துதான் அவள் ஒரு மலேசியத் தமிழச்சி என அடையாளம் கண்டுக்கொண்டு நானே சென்று பேசினேன். அவளைவிட அவளது மலாய்த் தோழிகள் உற்சாகமாகப் பேசினார்கள். மறுநாள் அதே உணவகத்தில் இரவு உணவுக்குச் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டு சந்தித்தோம். வரலாற்றுத்துறை மாணவியான அவள் கல்லூரியின் இறுதி ஆண்டு குழுமுறை ஆய்வுக்காக வந்திருந்தாள். ஆறுமாதப் பணி. தனது கல்லூரியில் பெரும்பாலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயில்வதால் தமிழகத்துக்குச் சென்று பௌத்த தலங்களை ஆய்வு செய்யும் தனது எண்ணம் ஈடேறவில்லை என்பதில் அவளுக்கு வருத்தம் இருந்தது.

நான் அவளிடம் தென்கிழக்காசியாவில் உள்ள பௌத்த தடயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது என்னிடம் வெகு எளிதில் ஒட்டிக்கொண்டாள். எஸ்.பி.எம் தேர்வில் ஒழுங்காகப் புள்ளிகள் பெறாமல், ஆவணப்பட இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பல்வேறு குழுவினருடன் எடுபிடியாகத் தொடங்கி இப்போது கேமராமேனாக திறனை வளர்த்துக்கொண்டு பல்வேறு நாடுகளில் சுற்றிய அனுபவங்களை அவளிடம் பகிர்ந்துகொண்டபோதுதான் எனக்கே என் வாழ்வின் குறுவரலாற்றுச் சித்திரம் மனதில் உருவானது.

அப்போதுதான் அவள் மலேசியாவில் பதிவு செய்யப்படவேண்டிய வாய்மொழி வரலாறு குறித்துக் கூறினாள். ‘தமிழர்கள் தமிழர்கள்’ என உயிரை எடுத்தாள். “அந்த நாட்டுல பொறந்துட்டு ஊரு முழுக்க நீங்க எதை டாக்குமன்டரி செஞ்சாலும் அது உங்க ஆன்மாவ திருப்திப்படுத்துமா?” எனக்கேட்டபோது எனக்கே வெட்கமாக இருந்தது. பூஜாங் பள்ளத்தாக்கை ஆவணப்படம் எடுக்க நான் பட்ட பாட்டைச் சொன்னேன். மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தவள் “ப்ச்… எல்லாம் அரசியல்,” என்றாள்.

“கேக் கொடுக்கல அதனால சோறு சாப்பிடமாட்டேன்னு சொல்றதெல்லாம்navin 02 ஸ்டுப்பிட்டான ஸ்டேட்மண்ட்,” என அடுத்த நிமிடமே மட்டம் தட்டினாள். எனக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளது நோக்கத்தில் எந்த சுயநலமும் இல்லை. என்னைப் போல வருடம் ஒரு அவார்ட் எடுக்க வேண்டும் என்றோ, திரட்டிய தகவல்களை வெளிநாட்டுத் தொலைகாட்சி நிறுவனங்களிடம்  விற்று பணமாக்க வேண்டுமென்றோ எந்த ஆசையும் அவளிடம் இல்லை. அவளுக்கு அவள் அப்பாவைப் பிடித்திருந்தது. அவள் சின்ன வயதில் பினாங்கு பாலம் கட்டியதையே கதையாகச் சொல்லி தூங்க வைத்திருக்கிறார். அந்தக் கனவுக்கு ஒரு உருவம் தர நினைத்தாள்.

“பாலம் போட ஆரம்பிச்ச மொத நாள்ல இருந்தே இது அங்கதான் வேல செஞ்சது. நெனச்சி நெனச்சி அப்பப்ப ஒரு கதை சொல்லும். ஞ்ச… அததான் கொஞ்சம் சொல்லேன்,” என்றார்.

அமிர்தலிங்கம் ஐயா மௌனமாக உடலைக் குறுகிக்கொண்டார். கைகளைத் தொடைகளுக்கு இடுக்கில் இன்னும் இறுக்கிக்கொண்டார். அந்த அம்மாவின் கருப்புக் கண்ணாடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. நல்ல அகலமான தடிப்பான அந்தக் கண்ணாடிக்குள் இரு கொதிக்கும் கண்கள் இருக்கும் என யூகித்துக்கொண்டேன்.

“தெண்டச்சோறு. ஏதும் கொஞ்சம் சொன்னா தம்பி காசு கீசு கொடுத்துட்டு போவுமுல்ல,” என்றவர் அணிந்திருந்த நைட்டியை ஒழுங்குபடுத்திக்கொண்டார். நான் பணம் எதுவும் கொடுப்பதாகச் சொல்லியிருக்கவில்லை என்பதால் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனேன். ஒருவேளை பணம் கொடுக்காமல் போனால் அந்த அம்மாவும் அவரது அகலமான தம்பிகளும் என்ன செய்வார் என யோசிக்கவே பயமாக இருந்தது.

“இப்படித்தான் தம்பி… ஒரு பொடியன் வர்மம் பழக இதுக்கிட்ட வந்தான். இதுக்கு அதெல்லாம் அத்துப்படி. நரம்பு கிரம்பு சுத்திக்கிட்டா வெரலால நீவியே எடுத்துடும். மாசம் முப்பது வெள்ளி தரேன்னு சொன்னவன் மூனாவது நாளே ஓடிட்டான். இன்னும் இந்தப் பக்கம் வந்தபாடில்ல. என்னாத்த சொல்லி வெரட்டிச்சோ,” என்றவர் அமிர்தலிங்கம் ஐயாவைப் பார்த்து வாய்க்குள் முணுமுணுத்தார். அவர் எதுவும் நடக்காததுபோலவே உடலைச் சுருக்கி வைத்திருந்தார்.

“இப்ப நீ சொல்லலன்னு வச்சிக்குவோமே தம்பிங்க வந்ததும் மூஞ்சிய காட்டி மிதிக்க சொல்லுவேன்,” என்றவுடன் “அப்போ… ஆயிரத்து தொளாயிரத்து எம்பத்து ரெண்டு,” என ஆரம்பித்தார்.

“நிப்பாட்டு. தம்பி வெளைக்கு கிளக்கு ஒன்னும் போடல. கேமரா தொறந்திருக்கா?” என்றார் ஆர்வமாக.

“மொதல்ல ஒருதரம் சொல்லிச் சொல்லி பாத்துக்கவா?” என்றார் அமிர்தலிங்க ஐயா.

“தம்பி அது சொல்லிப் பாத்துகுதாம். நான் கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வரேன். ஏதும் ஈக்குபூக்கு செஞ்சா ஒரு சத்தம் கொடுங்க. ஒன்னு போட்டா எல்லாத்தையும் கக்கும்,” என்றவர் எழுந்தபோது சோபாவும் அமுங்கியிருந்து மேலே எழுவதுபோல இருந்தது. அமிர்தலிங்கம் ஐயாவை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு வலது பக்க கதவைத் திறந்து உள்ளே சென்றார்.

அமிர்தலிங்கம் ஐயா உடல் சன்னமாகக் குலுங்குவது தெரிந்தது. அவமானத்தில் அழுகிறாரோ எனச் சங்கடமாக திரும்பிப்பார்த்தேன். சிரித்துக்கொண்டிருந்தார்.

“பெரிய வேலைகள செஞ்சி முடிக்க பைத்தியமாதான் இருக்கனும். இல்லனா செஞ்ச வேலைக்கு மாட்டிக்குவோம்,” என்றார். அவர் கண்கள் ஒளிர்வதுபோல தோன்றியது என் பிரம்மையா என நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் அந்த அறையில் நாங்கள் மட்டுமே இருந்தோம். சமையல் அறையில் ஏதோ பொரித்துக்கொண்டிருக்க வேண்டும். நல்ல மணம் வந்தது.

“தவுக்கான்,” என்றார். நான் நினைப்பதையெல்லாம் அவரால் ஊகிக்க முடிந்தது. அவர் பைத்தியமல்ல என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

“கொஞ்சம் நல்லா யோசன செய்யி. எங்கயோ ஒரு நாட்டுல இருந்த நீ ஏன் என்னைப் பார்க்க வரணும்? ஒருநாளைக்கு எத்தனைப் பேர பாக்குற. ஏன் என் மவ சொன்ன சொல்லுக்கு எல்லாத்தையும் போட்டுட்டு கூட வந்த? எல்லாமே முன்னமே திட்டமிட்டது. அந்த பேரழிவ நீதான் படம் எடுக்கனும். ஒலகத்துக்குப் போட்டுக்காட்டனும். மனுசன் எவ்வளோ சின்னவன்… எவ்வளவு அற்பம்… எவ்வளோ கண்ராவி. சின்னதா பொங்குற அலைக்கு முன்ன அவனால என்னா செய்ய முடியும்? ரொம்பவும் ஆடாதடான்னு மறுபடி மறுபடி சொல்லனும்,” அவர் பேசும்போது குரல் விரிந்தும் சுருங்கியும் கூர்மையாகியும் விசித்திர ராகம்போல அச்சமூட்டியது.

“என்ன அழிவு?” அவர் அவ்வளவு பேசிய பிறகு இதை மட்டும்தான் கேட்க முடிந்தது.

“இன்னும் ஆறு மாசத்துல மறுபடியும் சுனாமி வரும். பெனாங்கு பாலம் கட்டுனத பத்தி கேட்டில்ல… பெரிய கடல் அலையால பாலம் தரமட்டமாகும். கடலாத்தா தின்னு தீர்த்த படையலெல்லாம் செரிச்சிடுச்சி. இனி அவள கட்டிப்போட முடியாது. மொத்த பாலமும் கடலுக்குள்ள நொறுங்கி போகும். அப்போ நீ கொம்தார் கட்டடத்து மேல நென்னு காத்திருக்கனும். இந்த வாய்ப்பு வேற யாருக்கும் கிடைக்காது. மொத்தமா கடலு ஒரு தீவ தின்னப்போறத நீ பதிவு செய்ய போற.”

எனக்கு வியர்த்திருந்ததை உணர்ந்தபோது அவர் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்.

“இப்ப சொல்லு. யாராலையும் பாலம் கட்டுன வரலாற படமாக்க முடியும். பாலம் அழியிற வரலாற நீ மட்டும்தான் படமாக்க போற,” முகத்தருகில் நீட்டிய அவர் விரலை கவனித்தேன். நல்ல தடிமனான நீளமான விரல். ஒரு காலத்தில் நல்ல கட்டுமஸ்தான உடலுக்குச் சொந்தமானது என்ற தடயம் விரலில் தெரிந்தது. எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மௌனம் இறுகிப்போன முகத்துடன் அந்த அறையில் உலாவிக்கொண்டிருந்தது. காயத்திரி அந்த அறையையே குளிர்ச்சியாக்குவதுபோல ஜில்லென நுழைந்தபோது அது மெல்ல வெளியேறியது.

குளியல் அவள் முகத்திலும் உடலிலும் புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது. அது என்னையும் தொற்றிக்கொண்டது. குளிக்கவேண்டும்போல உணர்ந்தேன். இப்போது அவளைக் கட்டிப்பிடித்தால் அந்த உடலில் குளிர் எப்படி இருக்கும் என நினைக்கவே சந்தோசமாக இருந்தது. வாயில் தவுக்கானை மென்று கொண்டிருந்தவள் அமிர்தலிங்கம் ஐயாவின் அருகில் அமர்ந்து அவருக்கும் கொஞ்சம் ஊட்டிவிட்டாள். என்னைப் பார்த்து வேண்டுமா எனக் கண்ணடித்தவள் “ஷூட்டிஙெல்லாம் முடிஞ்சதா?” எனச் சாதாரணமாகக் கேட்டாள்.

“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல,” என்றதும் “வாட்?” என எழுந்தாள். என்னையும் அமிர்தலிங்கம் ஐயாவையும் மாறி மாறி பார்த்தாள். “அப்பா…” என அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் அமர்ந்தாள்.

“அவருக்கு சரியா நினைவில்ல விட்டுடு!” என ஆங்கிலத்தில் சொன்னேன். ஒரு பெருமூச்சு விட்டவள் தன்னை மன்னித்துவிடும்படி பலமுறை பல தொணிகளில் கேட்டாள். அமிர்தலிங்கம் தலையைத் தொங்கபோட்டபடி அமர்ந்திருந்தார். எனக்கென்னவோ அவர் எங்களைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென தோன்றியதால் இயல்பாக அவள் மன்னிப்பை ஏற்க முடியவில்லை. சடங்காகத் தலையாட்டினேன்.

“நாம வேற யாரையாவது தேடலாம்!” என்றாள்.

“நாளைக்கு ஃபிளைட்டு. கஷ்டம்!” என்றேன்.

“இதோட எப்ப வருவ…?” அவள் குரலில் கெஞ்சல் இருந்தது.

“ஆப்கானுக்கா?”

“இங்கதான்.”

“ஆறு மாசம் ஆகும். நாளைக்கு சிங்கப்பூர். அங்கேருந்து தமிழ்நாடு போறேன். விஷ்ணுபுரமுன்னு ஒரு லிட்டரரி குரூப். சமண தடங்கள தேடி போறாங்களாம். கூட போக அனுமதி கேட்டிருக்கேன்,” சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தேன். குனிந்திருக்கும் முகத்தின் கன்னம் அசைந்தது.

ஒவ்வொரு பொருள்களையும் கவனமாகக் கழற்றி பத்திரமாக வைக்க வேண்டும் என்பதால் காயத்திரி கேட்ட அனைத்திற்கும் பெரும்பாலும் ‘உம்’ கொட்டிக்கொண்டேன். அவள் நான் கோவமாக இருப்பதாக நினைத்து ஒவ்வொரு வாக்கியத்திற்குப் பின்பும் மன்னிப்பைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் ‘ப்ளீஸ்’ எனும்போது ‘ஸ்’இன் மாத்திரை அளவு நீண்டு ஒரு பாம்பு நாக்கை நீட்டி உள்ளே ஊடுறுவிச் செல்வதுபோல ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். முகத்தின் ஒவ்வொரு அங்கமும் மன்னிப்பைச் சொன்னது. இந்த வனப்பெல்லாம் மறைந்து வெகு காலத்திற்குப் பின் அவள் அம்மாவைப்போல தோற்றம் கொடுப்பாளா என நினைத்துப்பார்த்தேன். சுதாகரித்துக்கொண்டு அமிர்தலிங்கம் ஐயாவின் முகத்தை நோக்கினேன். அவருக்கு நான் என்ன நினைக்கிறேன் எனத் தெரிந்திருக்கக்கூடும் என்றே தோன்றியது.

“நீ பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வந்ததே எனக்கு சந்தோசம்தான்!” என்றேன். பெண்கள் எப்போதும் இதுபோன்ற சடங்கான வார்த்தைகளை விரும்புகிறார்கள் என அறிவேன். அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். இனி நிம்மதியாக வேலையைச் செய்யலாம் என அனைத்து மின்கம்பிகளையும் முறையாகச் சுருட்டி பெட்டியில் வைத்து அடைத்தேன். விளக்கின் இரும்புத்தூணை மடக்கி வைத்ததும் புறப்படும் நிம்மதி வந்தது. தவக்கானை பல்லில்லாத வாயில் மென்றுகொண்டிருந்தார் அமிர்தலிங்கம் ஐயா.

“ஏதும் சொன்னுச்சா?” என அவர் மனைவியின் குரல் கேட்டபோது மகளைப் பரிதாபமாகப் பார்த்தார். வாயும் கையும் அசையாமல் இருந்தன. நான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு “சொன்னாருங்க,” என்றேன். பணப்பையில் இருந்து ஐம்பது ரிங்கிட்டை எடுத்தபோது “என்ன இது?” என காயத்திரி கையைப் பிடித்தாள். “நம்ம அம்மாவுக்குத்தானே,” என்று அவள் கையை விலக்கி நீட்டினேன். வணங்கி பெற்றுக்கொண்டார்.

அமிர்தலிங்கம் ஐயாவைப் பார்த்து புறப்படுவதாகச் சொன்னேன். அவர் தவக்கானை சப்புவதில் மும்முரமாக இருந்ததால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காயத்திரி “அப்பா அவர் புறப்படுறார்,” என்றபோதும் கண் தவக்கானில் இருந்து விலகாமல் இருந்தது.

“நீ பொறப்படு தம்பி. அது கெடக்குது தெண்டச்சோறு,” என அம்மா சொன்னபோது காயத்திரி முறைத்தாள். அமிர்தலிங்கம் ஐயா தவக்கானை வாயில் இருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர் கடைசியாக எதுவும் சொல்லக்கூடும் எனக் காத்திருந்தேன். எல்லாமே அவர் கற்பனை என்பதாக சிறிய அறிகுறி தெரிந்தாலும் நிம்மதியாக இருக்குமென தோன்றியது. இதை காயத்திரி குடும்பத்தை அறிய உருவான ஒரு நல்ல சந்தர்ப்பமாக மனதைத் தேற்றிக்கொள்ள என்னால் முடியும். இனிச் சொல்ல எதுவும் இல்லையென அவர் கழுத்து முன்பிலும் அதிகமாக இறங்கியிருப்பதில் தெரிந்தது.

வெளியே வந்தேன். காயத்திரி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். எனது இந்த நாளை எப்படியும் முழுமைப்படுத்திவிட வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு. நாசி கண்டார் சாப்பிடப்போகலாம் என்றாள். பட்டர்வோர்த்தில் அது பிரபலம். நான் மென்மையாகப் புன்னகைத்து சம்மதித்தேன். காரில் பொருள்களை ஏற்ற உதவியவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். சந்திரிகா சோப்பின் மணம். குறுகலான சாலையில் காரை விட்டபோதுதான் நினைவுக்கு வந்தது. காலர் மைக்கை வீட்டிலேயே விட்டிருந்தேன். ஐந்நூறு டாலருக்கு சிங்கப்பூரில் வாங்கியது. காரை வளைக்க இடமில்லாததால்  அங்கேயே நிறுத்திவிட்டு நான் வீட்டை நோக்கி ஓடுவதை காயத்திரி அதிர்ச்சியோடு பார்த்தாள்.

காயத்திரி அம்மா அமிர்தலிங்கத்தை முழுமையாக மறைத்தபடி நின்றுகொண்டிருந்தார். “இருவது வருசத்துல ஒன்னால தோ இந்த அம்பது வெள்ளிதான் லாவம். உன் சூத்துக்கு பெம்பஸ் வாங்ககூட இது பத்தாது. வந்து வாச்சிருக்கு பாரு எனக்குன்னு.”

“மைக்கு” என்றவுடன் திரும்பினார். அமிர்தலிங்கம் ஐயா தரையில் மலம் கழிப்பதுபோல குந்தியிருந்தார். கைகள் கால் முட்டியை இறுக்கிப்பிடித்திருந்தன. முண்டா பனியனுடன் எலும்புகள் துருத்திய உடல் குவிந்து கிடந்தது. “மைக்க விட்டுட்டேன்,” என்றவுடன் “எடுத்துக்கோங்க தம்பி,” என்ற அம்மா இயல்பாக வழிவிட்டார். எந்தப் பதற்றமும் இல்லை. இருளில் அது எங்கோ மறைந்து கிடந்தது. குனிந்து சோபாவுக்கு அடியில் தேடி நிமிரும்போது அமிர்தலிங்க ஐயாவின் கண்களைத் தற்செயலாகச் சந்தித்தேன். முகத்தில் அடங்காத சிரிப்பு.

“பெரிய வேலைகள செஞ்சிமுடிக்க பைத்தியமாதான் இருக்கனும். புரிஞ்சதா?” எனச்சொல்வதுபோல இருந்தது.

2 comments for “கழுகு

  1. மகிழம்பூ கலைசேகர்
    March 2, 2020 at 1:55 am

    கழுகு: என்னுள் பறந்ததில்…

    தலைப்பை வாசித்ததும் செயல்பாட்டிலிருக்கும் ‘பேய்ச்சி’ சர்ச்சைகள் தொடர்பாக மறைமுகமான சாடல்கள் நிறைந்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. கதையை வாசித்து முடிக்கையில் மனுசனால் எப்படித்தான் இந்நேரத்தில் இப்படியொரு கதையை யோசிக்க நேர்ந்தது என வியந்து போனேன்.

    நவீனின் எழுத்தில் என்னை மிகவும் கவர்வது அவருடைய நகைச்சுவை உணர்வே. இதுவரை அவர் தந்துள்ளவற்றுள் அதிகமாக சிரிக்கவைத்த கதையாக கழுகை முதன்மைப் படுத்தலாம். சத்தமிட்டு சிரித்துவிட்டேன் போங்க.

    ஓர் ஆவணப்படம் என்பது போரடிக்கும் சரித்திர செய்திகளை சொல்வதை விட…சஸ்பென்ஸான சமாச்சரங்களை சொல்வதே சிறப்பு என்ற கூரிய சிந்தனையுடைய முதியவர் ஒருவர் தனது உடல் ரீதியான பலவீனங்களை உணர்ந்து அதனை மறைக்க, இல்லாத வேறொரு குறையை முன்வைத்து கடைசி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

    சுயமாக எழுந்து மலக்கூடம் கூட செல்லமுடியாதவர் அறிவார்ந்த முறையில் பேசினாலோ நடந்துகொண்டாலோ யாருமே ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. மாறாக எடுத்தெறிந்து பேசி மனதை புண்படுத்தி விடலாம். பிறகு அச்செயலை நினைத்து அவர்களும் மன உளைச்சலடையாம் என்பதற்காக தான் ஒரு மனநோயாளி என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார் போலும் (முதிர் கழுகு) அமிர்தலிங்கம்.

    நான்கே கதாபாத்திரங்கள். நம்பகமான இணை தகவல்கள்/கூற்றுகள். கதைக்களமான அவ்வீட்டை நாமும் பார்க்க இயலும்படியான காட்சியமைப்பு. எதிர்பாராததொரு முடிவு. கதையை வலுப்படுத்திய இடமும் அம்முடிவுதான்.

    சிகரம் அவர்களின் ‘கொலைச்செவல்’ சிறுகதை தொகுப்பின் ஒரு கதையில் வரும் ஸ்ரீஸ்ரீ என்ற நிருபரை இக்கதை சற்றே நினைவூட்டினாலும் முற்றிலும் வேறொரு பாணியில் ஒரு நல்ல கதை கழுகு என்பதில் ஐயமில்லை.

    வாழ்த்துகள் நவீன். தொடரட்டும் கதைகள்.

    ‘மகிழம்பூ’ கலைசேகர்

  2. sriviji
    March 21, 2020 at 2:33 pm

    வரிக்குவரி யோசிக்கவைத்த கதை. சரியாக அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.. ஆனாலும் எதோ புரிகிறது அதை வெளியே சொல்ல முடியவில்லை… தவ்கான் என்றால் என்ன.?

    ஸ்ரீவிஜி

Leave a Reply to sriviji Cancel reply