“நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.”
“ஏனது?”
“இஞ்ச பார். உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.”
“அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.”
அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல் செய்வார். என்னைக் கண்டால் எப்போதும் அப்படித்தான். கழுத்தைக் குனித்தவாறே சமையலறையிலிருந்து வெளியே வரும் அம்மா பூ அலங்காரமிட்ட பெரிய கிமோனா கவுணின் இரு புறத்திலும் கைகளைத் துடைத்துக் கொண்டே சிரிப்பார். அம்மா சிரிக்கும்போது காதுகளில் மின்னும் பெரிய அருங்கல்கள் இரண்டும், மூக்கின் இரு புறத்திலும் இருக்கும் சிறிய அருங்கல்கள் இரண்டும், நெற்றியின் நடுவேயிருக்கும் பெரிய பொட்டும் சேர்ந்து சிரிக்கும். அப்பா கள்ளக் கண்ணால் அம்மாவையும் பார்ப்பார். அம்மா அதைக் காணாதது போல கழுத்திலிருந்து மின்னும் மஞ்சள் கயிறிலிருந்து சட்டை ஊக்கொன்றைக் கழற்றி பல்லை நோண்டத் தொடங்குவாள்.
அது 98, 99 காலப் பகுதி. அப்போது அவர்கள் சிங்கள மகா வித்தியாலயத்துக்கு முன்பிருந்த வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள். (அக்காலகட்டத்தில் அங்கு சிங்களமும் இருக்கவில்லை. மகா வித்தியாலயமும் இருக்கவில்லை). வீடென்று சொன்னாலும் கூட அது நடுவில் ஒரு சுவரால் இணைக்கப்பட்ட திண்ணையோடு சேர்ந்த அறைகளிரண்டு. வீடு முழுமையாக ஆக, ஒரு புறத்தில் குட்டையான சமையலறையொன்றும் மறுபுறத்தில் கிணறொன்றும் காணப்பட்டன. சமையலறையைத் தாண்டி சற்றுத் தொலைவில் கழிவறை காணப்பட்டது. அது பொதுவான ஒன்று. சுற்றி வர இருந்த சில வீட்டார்களும் அதைப் பயன்படுத்தி வந்தார்கள்.
அப்பாவின் வீட்டிலென்றால் எல்லாமே பொதுச் சொத்துகள்தான். ஒரு அறை பூஜையறையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் சுவரின் ஒரு புறமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த கேபினெட்டின் மேலே வரிசையாக இன மத பேதமின்றி தெய்வங்கள், துறவிகள் என அனைத்தும் புகைப்படங்களாக வீற்றிருந்தன. காலையில் முகம் கழுவியதுமே அம்மாவின் முதல் வேலை கடவுளைக் கும்பிடுவது. அதன் ஒரு பகுதியாக அந்த அனைத்துப் படங்களின் முன்பும் புதிய சிவப்பு நிறச் செம்பருத்திப் பூவும், விபூதியும், குங்குமமும் வைக்கப்பட்டிருக்கும். பூ விழாதிருக்க புகைப்படங்களின் குறுக்கே மாட்டப்பட்டிருக்கும் கம்பியில் அப்பூக்கள் சொருகப்பட்டிருக்கும். புகைப்படங்களில் கண்ணாடியின் மேற்புறத்தில் பழைய, புதிய, சாம்பல், மஞ்சள், சிவப்பு நிறப் பொட்டுகள் ஒட்டப்பட்டிருக்கும்.
அம்மா, அதாவது அப்பாவின் இரண்டாவது மனைவி, அப்போதும் சுறுசுறுப்பாக இளம்பெண்ணைப் போலிருப்பாள். அவள் மட்டக்களப்பு. அப்பாவின் முதல் திருமணத்தின் பிள்ளைகளும் எப்போதாவது அப்பாவையும், இந்த அம்மாவையும், தங்கையையும், தம்பியையும் பார்த்துப் போக வந்து செல்வார்கள். அவர்கள் சற்று வசதியானவர்கள். யாழ்ப்பாணத்து அம்மாவுக்கு என்ன நடந்ததென நாங்கள் ஒருபோதும் அப்பாவைக் கேட்டதில்லை. அப்பா மட்டக்களப்புக்கு வந்த போது அந்தப் பழைய மொரிஸ் மைனர் காரையும், அப்பா மிகவும் நேசிக்கும் சங்கீத உபகரணங்களையும் மாத்திரமே கொண்டு வந்திருந்தார். போரின் காரணமாக இடம்பெயரச் சொன்னதாலோ, ஷெல்லடிக்கும்போது தப்பித்து வந்ததாலோ அல்ல. தனது வாழ்க்கைக்கு அவற்றை விடவும் தேவையானவை எதுவுமில்லை என்பதால். அப்பாவின் ஜீவிதம் அவ்வளவு எளிமையானது என்பதால்.
ஆகவே, தெய்வங்களின் முன்னிலையில் அந்த அறையில் அடுத்து பிரதானமாக இருந்தவை சங்கீத உபகரணங்கள்தான். அவற்றுக்கு மேலதிகமாக சமையலறைக்குரிய பீங்கான் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் சிலவும், சமையலுக்குப் பிறகு எஞ்சியிருப்பின் அரிசி, மசாலா சாமான்களும் அங்கே இருப்பதைக் காண முடியும். சிறப்பு விருந்தினரொருவரின் பயணப் பை அங்கே வைக்கப்படவும், அவருக்கு அங்கேயே உறங்கிக் கொள்ளவும் அம்மாவிடமிருந்து அனுமதி கிடைப்பதுவும் அவர் அந்தக் குடும்பத்தின் உறுப்பினராக ஆக விரும்பாவிட்டால் மாத்திரமே. பொதுவாகவே இந்த வீட்டுக்கு விருந்தினராக வருவது சிவாவுடன் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அவர் தெருவில் சந்திக்கும் என்னைப் போன்ற சிநேகிதர்கள், இல்லாவிட்டால் திருவுடன் கல்வி கற்கும் மாணவிகள். ஓரிரவுக்கு மேலே அந்த வீட்டில் தங்கும் அனைவருமே அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள்தான். விருந்தினர் விரும்பினால் முதல் நாளே அவ்வாறு ஆகி விட முடியும்.
இரவில் அக்குடும்பத்தில் அனைவருமே திண்ணையில் பாயை விரித்துப் படுத்துக்கொள்வார்கள். திண்ணையின் கூரையான தென்னோலையிடையே அம்மாவின் சீப்பு, சுருக்குப் பை, காது குடையும் கோழியிறகு, கடதாசிப் பைகள், இன்னும் அம்மாவுக்கு அவசரத்துக்குத் தேவையான அனைத்தும் அங்கு காணப்படும். தீப்பெட்டி, நுளம்புச் சுருள், அடையாள அட்டை என எதையும் பாதுகாப்பாக எம்மாலும் அங்கு வைக்க முடியும்.
இது இவ்வாறென்றால் மற்ற அறையில் இருப்பவை துணிமணிகள். அவையோடு திருவினதும், சிவாவினதும் புத்தகங்கள். சமையலறைப் பக்கமாகத் திறந்திருக்கும் ஜன்னலோரத்தில் இடப்பட்டிருக்கும் மேசையருகே அமர்ந்து சில நாட்கள் திரு படித்துக் கொண்டிருப்பாள்.
குடும்பத்தினர் அல்லாமல், நிரந்தர உறுப்பினர்கள் இருவர் அந்த வீட்டில் எப்போதும் தங்கியிருப்பார்கள். ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் தொடர்ச்சியாகத் தங்கியிருக்கும் இவர்கள் அப்பாவின் சிஷ்யர்கள் அல்லது உதவியாளர்கள். நாட்கணக்கில், வாரக் கணக்கில் தொடர்ச்சியாக அப்பா வீட்டிலில்லாத காலங்களில் அவர்களையும் வீட்டில் காணக் கிடைக்காது. அதுதான் ஒவ்வொரு பகுதியிலும் கோயில் திருவிழாக் காலம். மொத்தக் குழுவினரும் தமக்குப் பரிசுகளாகக் கிடைத்த பலவித வர்ணங்களிலான வேட்டி, சால்வைகளை சுமந்து கொண்டு வீட்டுக்கு வருவார்கள். அந்தச் சமயத்தில் அவ்வீட்டில் நானிருந்தால் எனக்கும் ஒரு வேட்டி கிடைக்கும்.
ஏனைய காலங்களில் பகல் வேளையை அப்பா அதிகமாக உறக்கத்திலேயே கழிப்பார். திண்ணையில் அல்லது வாசலிலிருந்த தென்னங்கன்றின் கீழ் மணற் தரையில் பாயில் படுத்துக் கொண்டிருப்பார். திருமணம் முடித்து பிரிந்திருக்கும் சிவாவின் தம்பியின் சிறு குழந்தையும் சில சமயம் நிர்வாணமாக அப்பாவுடன் சுருண்டு கிடக்கும். தென்னோலைக் கூரையில் கரைந்து திரியும் காகங்கள், சுற்றி வர எச்சமிட்டுத் திரியும் கோழிகள், எப்போதும் ஒரு காலால் காதைச் சொறிந்தவாறு அருகிலேயே இருக்கும் தோலுரிந்த நாய் ஜிம்… அவர்களால் இவற்றுக்கு ஒரு தொந்தரவும் இல்லை. காலையிலேயே சிறு குழந்தை வந்திருந்தால் அப்பா அதன் தலையிலிருந்து கால் விரல்கள் வரை நல்லெண்ணெய் தடவுவார்.
அப்பா வீட்டிலிருக்கும் காலங்களில் சிஷ்யர்கள், உதவியாளர்கள் திண்ணையின் ஒரு புறத்தில் அமர்ந்திருந்து சங்கீத உபகரணங்களைத் துடைத்துக் கொண்டிருப்பார்கள். அதைச் சற்று நேரம் தட்டிப் பார்ப்பார்கள். இல்லாவிட்டால் ஊதிப் பார்ப்பார்கள். நல்லதொரு சிஷ்யனென்றால் மத்தளமொன்றைச் சற்று நேரம் தட்டிக் கொண்டிருப்பார். அப்பாவின் வெற்றிலை பாக்கை இடித்துக் கொடுப்பதுவும், அம்மாவுக்காகக் கடைக்குப் போய் வருவதுவும் அந்த சிஷ்யப் பயிற்சியின் ஓர் அங்கம். ஆனால் அம்மா அங்கிங்கு நகரும் வரை காத்திருந்து ஒரு வாய் ஊற்றிக் கொள்ள இல்லாவிட்டால் கால் போத்தல் வாங்கி வர திருட்டுத்தனமாக கள்ளுக் கடைக்கு ஓடுவது அப்பாவேதான்.
வீட்டுக்கு யாராவது வருவதை அப்பாவுக்கு அறியத் தருவது திண்ணையின் ஒரு ஓரமாக கூட்டுக்குள்ளிருக்கும் கிளிதான். அது சில சமயங்களில் ஓய்வேயில்லாமல் கதைத்துக் கொண்டிருக்கும். அம்மா அருகில் வந்து ‘என்ன?’ என்று கடுமையாகக் கேட்டவுடனே அப்பாவைப் போலவே வாயை மூடிக் கொள்ளும். அப்பா எழுந்து நின்று வெற்றிலையைக் குதப்பியவாறே வந்திருக்கும் விருந்தினர்களோடு கதைத்துக் கொண்டிருப்பார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமானவரென்றால் மாத்திரமே என்னைக் கிண்டல் செய்ததுபோலச் செய்வார்.
ஒரு காலத்தில் அப்பாவுக்குச் சாமி என்றொரு உதவியாளர் இருந்தார். அவருடைய வேலையே எங்காவது ஓடிக் கொண்டிருப்பதுதான். பூப்பறிக்க, தகவல் சொல்ல, கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வர என எதற்காவது அழுக்கு வேட்டியொன்றை அணிந்து கொண்டு ஓடிக் கொண்டேயிருப்பார். அப்பா வேட்டியுடுத்தி, சால்வையைத் தோளிலிட்டு அந்தப் பழைய மொரிஸ் மைனரில் ஆமை வேகத்தில் நகரத்துக்குப் போகும் வேளையில் இவரும் பின்னாலேயே ஓடுவார். ஒரு நாள் ஏதோ சில தாள்களைப் பிரதியெடுக்க அப்பா காரில் நகரத்துக்குப் போனார். சாமியும் பின்னாலேயே ஓடிப் போனார். சற்று நேரத்தில் சாமி திரும்பவும் வீட்டுக்கு ஓடி வந்தார். அப்பாவின் கார் வரவில்லை. என்னவென்று அம்மா கேட்டாள். அப்பா தாள்களை மறந்து வைத்து விட்டுப் போய் விட்டார். அவற்றைக் கொண்டு செல்ல அப்பாவைக் காரிலேயே அமர்ந்திருக்கச் செய்து விட்டு சாமி ஓடி வந்திருந்தார்.
அப்பாவுக்கு அப்போதே நல்ல வயது. எண்பது கடந்து தொண்ணூறை நெருங்கியிருந்தார். அப்பாவின் வேலைகளைச் செய்து கொடுக்க எம்மைப் போன்ற சினேகிதர்கள் மிகுந்த விருப்பதோடுதான் எப்போதும் முன் வருவோம். ஒருவர் அப்பாவின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை புதிதாக்கிக் கொண்டு வருவதாகக் கூறி விட்டு கொழும்புக்குக் கொண்டு சென்றிருந்தார். கொழும்பில் மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அதைப் பார்த்து விட்டு ‘இவர் இப்பவும் வாகனம் ஓட்டுகிறாரா? பரவாயில்ல. இதை வைத்துக் கொண்டே இன்னும் மிச்ச காலத்தையும் ஓட்டச் சொல்லுங்கோ’ என்றார்களாம்.
அப்பா அந்தக் காலத்தில் இடைக்கிடையே பிள்ளைகளைப் பார்த்துப் போகவென்று கொழும்புக்குப் போய் வருவார். அம்மாவிடம் ஏச்சு வாங்காமல் ஒரு வாய் ஊற்றிக் கொள்ளவும் முடியும் அல்லவா! அவ்வாறு ஒரு தடவை கொழும்புக்குப் போய் விட்டு வரும்போது மட்டக்களப்புக்கு அருகிலிருந்த காவலரணில், பேரூந்திலிருந்த அனைவரையும் இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். பரிசோதனை முடியும் வரை அப்பா தரையில் ஒரு ஓரமாக வெற்றிலைப் பெட்டியை வைத்துக் கொண்டு வெற்றிலை பாக்கை இடித்திருக்கிறார். வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருக்கும்போதே சோதனை நடவடிக்கை முடிந்து போனதால் அவசரத்தில் பெட்டியை அந்த இடத்தில் விட்டுவிட்டு பேருந்திலேறி வந்து விட்டார். வீட்டுக்கு வந்து குளித்து விட்டு வெற்றிலை பாக்குச் சாப்பிடப் போன பிறகுதான் பெட்டி நினைவுக்கு வந்திருக்கிறது. அப்போதே வாகனமொன்றில் ஏறி திரும்ப அந்த இடத்துக்குப் போகும்போது தொலைவில் ‘டோம்’ என்றொரு சத்தம் கேட்டிருக்கிறது. அப்பா சத்தங்களுக்குப் பயப்படுகிற ஆளில்லை. அருகில் போன பிறகுதான் சத்தம் வந்தது எங்கேயிருந்து என்பது அவருக்குத் தெரிய வந்தது. வெற்றிலைப் பெட்டி குறித்து சந்தேகம் கொண்டவர்கள் குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினரை அழைத்து வெடிக்கச் செய்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த அப்பா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீரும் எட்டிப் பார்த்தது. “இனி இன்னொரு சின்ன உரலைத் தேடுங்கோவன்” என்று அம்மாதான் புறுபுறுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பா அவரது பிள்ளைகளையும் கூட பொதுச் சொத்துக்களாகவேதான் கருதினார். சிவா பாடசாலையில் உயர்தரம் கற்கும் காலப்பகுதியில் அப்போது அதிகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த ஆயுதப் படை – எந்த ஆயுதப் படையென்று எனக்கு சரியாக நினைவில்லை – பிள்ளைகளை பலவந்தமாக ஆயுதப் பயிற்சிக்குப் பிடித்துக் கொண்டு போனது. அப்பாவிடம் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால் சிவாவே யோசித்து அந்தச் சிறிய சமையலறையின் புகைக் கூண்டுக்குள் சுருண்டு கொண்டு பல தினங்களாக ஒளிந்துக் கொண்டிருந்திருக்கிறான், பிடித்துக் கொண்டு போவார்களென்ற பயத்தில். ஒரே விதமாக இருந்திருந்து சலித்துப் போனதால் அதிலிருந்து இறங்கி சமையலறையிலிருந்து வெளியே வரும்போதே ஆயுதப் படை வந்து விட்டதாம். அவர்கள் சிவாவைப் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். தென்னை மரத்தடியில் மணலில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்த அப்பாவைத் தாண்டிச் செல்கையில் சிவா அப்பாவை ‘என்னைக் காப்பாற்றுங்கள் அப்பா’ என வேண்டுகோள் விடுக்கும் விதமாகப் பார்த்திருக்கிறான். அப்பா தலையசைத்தாராம். வேறு எதுவும் செய்யவுமில்லை. யாரிடமும் சொல்லவுமில்லை. பல நாட்களுக்குப் பிறகு, அறிந்த வித்தையெல்லாம் காட்டி சிவாவே ஒரு நாள் தப்பித்து வந்திருந்தான்.
எவ்வாறாயினும் சித்தாண்டியில்தான் அழகான பெண்கள் இருப்பதாக அப்பா சொல்கிறார். பார்ப்போமே…! எனக்கும்தான் எப்போதாவது அங்கே போகக் கிடைக்குமே.
சித்தாண்டி II
அப்பா சித்தாண்டிப் பெண்கள் அழகிகளென்று என்னிடம் சொல்லி ஒன்பது வருடங்களுக்குப் பிறகுதான் – இன்று – அதாவது 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி எனக்கு சித்தாண்டி கிராமத்துக்குள் போகக் கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் சித்தாண்டியைச் சேர்ந்த எவரையாவது சந்திக்க நேர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் – குறிப்பாக அவர் பெண்ணென்றால் – நான் கூர்ந்து கவனித்தேன். அது அப்பாவின் கூற்றால்தான். ஆனால் இன்று, நான் இங்கு வந்திருப்பது அப்பாவின் கூற்றினாலோ அதன் உண்மைத் தன்மையை அறியவோ அல்ல.
கடந்த திங்கட்கிழமை, நகரத்தில் ஒரு குழுவினர் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இல்லை, உண்மையில் அது கலந்துரையாடலொன்று. மனித உரிமைகளைப் பற்றிச் சொல்லித் தர வந்திருந்தவர் கழுத்திலிருந்த டையைத் தடவித் தடவி கதைக்கக் கூடிய அதிகாரி ஒருவர். கலந்துரையாடல் தொடங்கும்போதே “மனித உரிமைகள் என்றால் என்னவென்று தெரியுமா?” எனக் கேட்டார்.
யாரும் பதிலளிக்கவில்லை. சற்று நேரம் சென்றது. ஒரு தாய் எழுந்து நின்று சொன்னாள்.
“ஐயோ ஐயா…! அதெண்டால் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு இஞ்ச எல்லா நாளும் பிரச்சினைகள்தான். இதெல்லாம் கஷ்டங்களெண்டு எங்களுக்குத் தெரியும். இதுகளுக்கு என்ன செய்றதெண்டு தெரிஞ்சு கொள்ளத்தான் நாங்க வந்திருக்கிறம்.”
அவர் சித்தாண்டியிலிருந்து வந்திருந்தார். அந்தக் கலந்துரையாடலுக்கு சித்தாண்டியிலிருந்து இரண்டு, மூன்று பேர் வந்திருந்தார்கள். ‘சித்தாண்டி’ என்றதுமே நான் அவர்களைக் கூர்ந்து கவனித்தேன்.
இருபத்தெட்டாம் திகதி ஒரு பையன் தெருவில் வைத்து வேட்டுப்பட்டுச் செத்ததாக ஒருவர் கூறினார். அன்று கோயில் திருவிழாவின் கடைசி நாளாக இருந்ததாம்.
“யார் வேட்டு வச்சது?”
“தெரியாது.”
“எல்.டீ.டீ.ஈ. யா?”
“இல்லை”
“கருணா குழுவா?”
“இல்லை”
“வேறு படையா?”
“இல்லை”
“இராணுவமா?”
“தெரியாது.”
இது விந்தையான விடயம்தானே?! உடனடியாக சித்தாண்டிக்குப் போக எனக்கு மிகுந்த ஆர்வம் வந்து விட்டது. அழகிகளைப் பார்க்கவா? அந்தப் பையனுக்கு வேட்டு வைத்தது யாரென்பதை அறிந்து கொள்ளவா? இரண்டுமாக இருக்கலாம். அங்கு வேறேதும் பிரச்சினையோ தெரியவில்லை. எவ்வாறாயினும் அனைத்து ஆர்வங்களும் என்னை உசுப்பி விட்டிருந்தன.
தார் வீதியில் இறங்கி வீட்டைத் தேடியபோது இதோ என்று வழிகாட்ட ஒருவரும் முன் வரவில்லை. பொதுவாக கிராமங்களில் சாவு வீடொன்றைக் குறித்துக் கேட்டால் எத்தனை பேர் உதவிக்கு வருவார்கள், விசாரிப்பார்கள், குறைந்தது கையை நீட்டிக் காட்டவாவது ஓரிரு வினாடிகளைச் செலவழிப்பார்கள்தானே? இன்று நடந்தது அதற்கு முற்றிலும் மாற்றமான ஒன்று. ‘ஐயோ எமக்கென்றால் தெரியாது’ போன்ற ஒன்று. இந்தப் பக்கத்து ஆண்களிடம் ஏதேனும் பிரச்சினை இருக்குமோ? ஏனென்றால் வழி கேட்க தெருவில் அகப்பட்டவர்கள் அனைவருமே ஆண்கள்தான். பெண்கள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?
ஆமாம். ஆண்களுக்கு ஏதோ பிரச்சினைதான் போலிருக்கிறது. கடைசியில் எமக்கு உதவியது தெருவில் சென்ற முதிய தாயொருத்தி.
“அதோ அந்தச் சந்தியில.”
அப்பாடா… எப்படியோ நெருங்கி வந்து விட்டிருந்தோம்.
“அதோ இருக்கு… அந்தப் பக்கமா” எனக் கூறியவாறு அவர் கை நீட்டிய திசையிலேயே நடந்தோம்.
“இதோ இங்க” என ஒட்டுப் போட்ட பன்னோலைப் பெட்டியை தரையில் வைத்த அம்மூதாட்டி அங்கேயே அமர்ந்து கொண்டாள். வர்ணங்களை அடையாளம் காண இயலாத அளவுக்கு தோய்க்கப்பட்டிருந்த நூல் சேலையின் முந்தானையை இடுப்பிலிருந்து கழற்றி முகத்தின் சுருக்கங்களைத் துடைத்துக் கொண்டாள். அந்தச் சுருக்கங்களிடையே சிறிய கோடுகளில் எஞ்சியிருந்த வியர்வை மின்னியது. பிறகுதான் அவர் தலையை உயர்த்தி எம்மைப் பார்த்தார்.
‘இந்தப் பிள்ளைகளெல்லாம் யார்? எதற்கு இங்கே வந்திருக்கிறீர்கள்? இவற்றையெல்லாம் ஏன் தேடுகிறீர்கள்?’ கிணற்றைப் போல குழி விழுந்திருந்தும் இப்போதும் கூர்மை மிச்சமிருந்த கண்களிலிருந்து வெளிப்பட்ட பார்வையில் பல கேள்விகள்… அவை எனக்கு மாத்திரமல்லாது என்னுடன் போயிருந்த ஏனையவர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்.
கேள்விகளுக்குப் பதிலளிக்க நாம் முடிவெடுத்த சமயத்தில் அவள் ஆர்வத்தைக் கை விட்டுவிட்டு மறு புறம் திரும்பி தனது பொருட்களைக் குடைந்து கொண்டிருந்தாள். எனில்… பதில்கள் வேண்டாமா? குழப்பத்தோடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பொருட்களிடையே தேடிக் கண்டுபிடித்த வெற்றிலைத் துண்டொன்றை தனது சேலையிலேயே துடைத்து விட்டு வாய்க்குள் ஒதுக்கிக் கொண்டாள். அப்பாவென்றால் வெற்றிலை பாக்கு போடுவதை ஓர் ஒழுங்கில் நேர்த்தியாகச் செய்வார் என்பது எனக்கு நினைவு வந்தது. அந்த மூதாட்டியிடமிருந்து ஒரு வார்த்தையாவது வராதா என்றுதான் நாங்கள் அனைவரும் அந்த இடத்திலேயே சிலையாகச் சமைந்து நின்றிருந்திருக்கக் கூடும். எனினும் அவளுக்கு அதைப் பற்றி ஆர்வம் இருக்கவில்லை. எல்லை தென்படாத முடிவிலியை நோக்கி அவளது கண்கள் நிலைத்திருந்தன.
“அன்றைக்கு அம்மா எங்கிருந்தீங்க?” என அமைதியை அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாத எம்மில் ஒருவர் கேட்டார்.
“கோயிலில்” என தலையை அசைக்காது, பார்வையை மாற்றாது, அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தாதவள் போல இரகசியமாகப் பதிலளித்தாள்.
“எங்களுக்கு அந்தப் பிள்ளையோட வீட்டைக் காட்டுங்கோ” பொறுமை எல்லை மீற ஒருவர் கேட்டார். மூதாட்டி அசையவேயில்லை. குறைந்தபட்சம் எவருமே அசையவில்லை.
“வாங்கோ… நான் வீட்டக் காட்டுறன்”
அந்தப் பதில் மட்டும் வரவில்லையானால் நாங்களும் அவ்விடத்திலேயே சிலையாகச் சமைந்து போயிருக்கக் கூடும். அச்சமயத்தில் எம்மைச் சூழ்ந்திருந்த பெண்களில் ஒருத்தியே அந்த நேரத்தில் எமக்கு வழி காட்ட முன்வந்திருந்தாள்.
“நீங்கள்லாம் யாரு? எதுக்கு இதையெல்லாம் தேடுற நீங்கள்?”
“நாங்க… வந்து… இல்ல… இங்க ஒரு பிரச்சினை நடந்ததென்று கேள்விப்பட்டு பார்க்க வந்தோம்.”
“பிரச்சினையா? யார் சொன்னவங்கள்?”
“???”
“சரி, சரி, ஆனா… ஏன் இது…. இதுக்கு மட்டும் இவ்வளவு கெதியா?”
“???”
“நேத்துத்தான் ஏழு நாள் முடிஞ்சது, வாங்கோ நான் வீட்டக் காட்டுறன்”
“இல்ல… வீட்டுக்குப் போகலன்னாலும் பரவாயில்ல… உங்க சொந்தக்காரங்களா? நாங்க இப்படி வந்தது சரியில்லையோ?”
“இஞ்ச எல்லாருமே சொந்தங்கள்தான். ஏன் பயந்து போயிட்டனீங்கள்?” என அவள் சிரித்தாள். அல்லது சிரிக்க வைக்க முயற்சித்தாள்.
“சொந்தக்காரங்களைப் பார்க்க வர்றது எவ்வளவு நல்லது” எனக் கூறியவாறே அருகில் வந்த அவள் எமது கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“வாங்கோ… அங்க போய்க் கதைப்பம்” என்ற அவளிடம் இளமை இப்போதும் மிச்சமிருந்தது.
“அண்டைக்கு கோயில்ல கடைசிப் பூஜை. ஊரைச் சுத்தி சாமி ஊர்வலம் போகுமே. இந்த வழியாலதான் போனது.”
“யார் துப்பாக்கியால சுட்டதென்று காணலையா?”
பற்றிக் கொண்டிருந்த கை அவளறியாமலே விடுபட்டது.
“இல்ல, இல்ல, நாங்கள் ஆருமே காணேல்ல”
“ஏன்? உங்கள்ல யாருமே… தெருவுல வேறொருத்தருமே இருக்கலையா?”
“இஞ்ச வீடுகள்ல எல்லாருமே அண்டைக்கு தெருவுலதான் இருந்தம். சாமி இந்த வழியாப் போற வரைக்கும். ஆனா… இல்ல, நாங்க யாருமே காணேல்ல.”
தரையில் அமர்ந்திருந்த மூதாட்டி எழுந்து கொள்ள முயற்சிப்பதை விழிகளின் ஓரத்தால் கண்டேன். இரண்டு கைகளாலும் பெட்டியைத் தூக்கியவாறு எழுந்து கொள்ள முற்பட்ட போது அவள் விழப் போனாள். பெட்டியை நிலத்தில் போட்டவள், ஒரு கையை மதிலில் ஊன்றிக் கொண்டாள்.
“அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும்” என்றாள்.
பிறகு பெட்டியைத் தலையில் வைத்துக் கொண்டவள் எம்மைக் கடந்து நடந்து போனாள். இளமைக் காலத்தில் அழகியாக இருந்திருப்பாள்.
“நிஜமா என்ன நடந்தது? நாங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்.”
சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன. சுற்றிவரப் பார்த்து தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டோ என்னவோ அவள் திரும்பக் கதைக்க முன் வந்தாள்.
“சிவக்குமாருக்கு அண்டைக்கு ராத்திரி வெளியே வர விருப்பமே இருக்கேல்ல. கூட்டாளிகள்தான் எட்டு மணி போல வீட்ட வந்து தூங்கிக் கொண்டிருந்த பெடியனைக் கூட்டிக் கொண்டு வெளிய வந்திருக்கினம்”
“எதுக்கு?”
“சாமி பார்க்க. இந்த மதிலோரத்துல… இதோ இந்த இடத்துலதான் அவங்க எல்லாரும் வரிசையா உட்காந்திருந்தவங்கள்…”
“பிறகு?”
“திடீரெண்டு அவங்க முன்னால, இந்த முன் தெருவால (அவள் சுட்டிக் காட்டிய திசையில் மதிலோடு ஒட்டி மற்றுமொரு தெருவிருந்தது) துவக்கேந்தி ஒரு படை வந்தது. சிவக்குமார் பதறிப் போய் மதிலிருந்து குதிக்கப் பார்த்தவன்.”
“ஐயோ!”
“அந்தப் படை ஓடி வந்து கொண்டே சுட்டது. சிவக்குமார் மதிலிண்ட உள்ளுக்க விழுந்தான். சுட்டவன் உள்ள போய் திரும்பச் சுட்டான்.”
“அவர் ஏன் பதறிப் போனார்?”
“ரெண்டு மாசத்துக்கு முந்தித்தான் அவனை ரவுண்ட் அப் சமயத்துல பிடிச்சுக் கொண்டு போயிருந்தவங்கள். கன நாட்கள் உள்ள இருந்துட்டு வீட்டுக்கு வந்தவன். அண்டைல இருந்து சரியான பயம் அவனுக்கு. வீட்ட இருந்து வெளிய வராததற்குக் காரணமும் அதுதான். அடுத்தது, அவனுக்கு காலொண்டும் விளங்கேல்ல.”
“வீட்டுல வேற யார் இருக்காங்க?”
பெண்கள் சிலர் எம்மை முந்திக் கொண்டார்கள். ஒற்றையடிப் பாதையில் திரும்பி வரிசையாக நடந்தார்கள். அந்த ஒற்றையடிப் பாதையில் இருவருக்கு சரிக்குச் சமமாக நடந்து போக இட வசதி இருக்கவில்லை. நான் கடந்து போகும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தனித் தனியாக நடந்து போகும், இளைய, முதிய, மணமுடித்த, மணமுடிக்காத, பிள்ளைகளுள்ள, பிள்ளைகள் மரித்துப் போன, கணவன் மரித்துப் போன… பொதுவாகக் கண்டுகொள்ள முடியுமான அடையாளங்கள் அனைத்தும் இங்கு கலந்திருந்தன, அல்லது குழம்பிப் போயிருந்தன. நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறார்களா, இல்லையா? வைத்தவை அழிந்தனவா அல்லது அழிக்கப்பட்டனவா? வைத்தது கறுப்புப் பொட்டா அல்லது குங்குமமா?… அந்த நெற்றிகளில் எனக்கு எதுவுமே தெளிவாகவில்லை.
சில பெண்கள் சிறிய குழந்தைகளைத் தமது இடுப்பில் சுமந்து கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு பூரித்த மார்புகள் காணப்படவில்லை. பிள்ளைகளைக் கையில் பிடித்திருந்த போதிலும், மேலும் பிள்ளைகள் பின் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், பிள்ளைகள் சுகமாகப் படுத்துறங்கிய செழிப்பான மடிகளைக் கண்டுகொள்ள முடியவில்லை. வெளித்தள்ளிய வயிறுகளைக் கொண்ட யௌவனம் இன்னும் விட்டுப் போகாத மேனிகள் சிலவற்றையென்றால் தெளிவாக அடையாளம் காண முடிந்தது. ஆகவே இங்கிருப்பவர்கள் இரண்டு வகையான பெண்களென நான் தீர்மானித்து விட்டிருந்தேன். இன்னும் சிறுமியென்பதால் பெண்ணாகாத பெண்கள் மற்றும் பெண்ணானதால் பெண்ணான பெண்கள். ஏனைய அனைத்துக் காரணங்களையும் நிரூபிக்க முடியாததால் அவை சந்தேகத்துக்குரியனவாகவே இருந்தன.
எம்மிடமிருந்து விலகிப் போன மூதாட்டியைத் தவிர வேறு முதிய பெண்கள் எவரும் அந்த வரிசையில் இணைந்திருக்கவில்லை. நாங்களும் அந்த வரிசையில் அவர்களுக்குப் பின்னாலேயே இணைந்து கொண்டோம். பதினைந்து அல்லது இருபது வருடங்கள் பழமையானது போலத் தென்பட்ட அத்திவாரமொன்றின் மேலால் கூடாரமொன்று கட்டப்பட்டிருந்தது. உயரமான பையனொருவன், ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிறம் மங்கிப் போயிருந்த பிளாஸ்டிக் கதிரைகள் அடுக்கிலிருந்து எமது ஆட்களின் எண்ணிக்கைக்குச் சமமான கதிரைகளையெடுத்து சமதளமான தரையில் வைத்தான். வயதான தாய்மார் சிலர், காய்ந்த வெற்றிலைகள் சில இருந்த வெற்றிலைத் தட்டைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். (அங்கிருந்து புறப்பட்ட வேளையில், சும்மா வயதைக் கேட்டுப் பார்த்த நான், அந்த வயதான தாய்மாரின் வயதுகள் 45க்கும் 50க்கும் இடைப்பட்டவை என அறிந்து கொண்டேன்).
சுண்ணாம்பு பூசப்பட்ட நான்கு சுவர்களும், திண்ணையுமிருந்த வீட்டிலிருந்து பருத்த வயிறொன்று வெளியே வந்தது.
“இது சிவக்குமார்ட அக்கா. அந்தச் சின்னவன் தம்பி”
பருத்த வயிற்றைக் கொண்டிருந்த பெண்பிள்ளையின் முகத்தில் கண்ணீர் இன்னும் காய்ந்திருக்கவில்லை.
“யார் சிவகுமாரைச் சுட்டது?”
“எங்களுக்குத் தெரியாது.”
“அம்மா எங்க?”
“அம்மாவும் அப்பாவும் காலையிலேயே போலிஸுக்குப் போனவங்கள். இன்னும் வரேல்ல.”
“எதுக்கு?”
“மரணச் சான்றிதழை எடுக்கப் போக வேணுமெண்டு சொன்னவங்கள்”
“மரணம் எப்படி நிகழ்ந்தது, யார் சுட்டதென்றெல்லாம் சொல்ல வேண்டியிருக்குமே அப்ப?”
எவருமே பேசவில்லை. தெருவில் வைத்து எம்மோடு கதைத்த அந்த இளம்பெண், ஒரேஞ்ச் பார்லி நிரப்பப்பட்ட கண்ணாடிக் குவளைகள் வைக்கப்பட்டிருந்த தட்டை ஏந்தியவாறு அருகில் வந்தாள்.
“குடியுங்கோ, நல்ல தாகமிருக்கும். இஞ்ச சரியான சூடு எரிக்குது.”
நாங்கள் ஒரேஞ்ச் பார்லியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையில், சிவகுமாரின் தம்பியும், தாய்மாரோடு இருந்த சிறுவர்களும் தவிர அங்கேயிருந்த ஒரேயொரு இளைஞனான அந்த உயர்ந்த பையன் எங்களைக் கடந்து நடந்து சென்றான். அவனது ஒரு காலில் முழங்காலுக்குக் கீழே பெரியதொரு துணியால் கட்டுப் போடப்பட்டிருந்தது. நடக்கும்போது அந்தக் காலை விந்தி நொண்டி நடந்தான்.
“அவரோட காலுக்கு என்ன நடந்திருக்கு?”
“ஷெல்லொண்டு பட்டுட்டுது.”
“காலுக்கா? எப்படித் தப்பினார்? அவரெங்கே இருந்தார் அப்போது?”
“போன வருஷம் மார்ச் மாசத்துல ஊர்ல ரெண்டு ஷெல் விழுந்தது. எட்டுப் பேர் செத்துப் போனாங்கள். அதோ அந்த வீட்டுல இருந்த பிள்ளைகள் மூண்டு பேருமே செத்துப் போனாங்கள். இவன்ட கால்ல ஒரு துண்டு பட்டுச்சு. அந்தக் காயம் இன்னமும் ஆறவேயில்ல.”
“இராணுவமோ, போலிஸோ வரலையா சிவகுமாரோட சாவுக்கு?”
“அடுத்த நாள் வந்தவங்கள்.”
“வந்து?”
“யார் வேட்டு வச்சதெண்டு கேட்டாங்கள். எங்களுக்குத் தெரியாதெண்டு சொன்னம்.”
“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”
“‘ஓம், உங்களுக்குத் தெரியாது இல்லையா? எல்.டீ.டீ.ஈ யா இருக்கும்’ எண்டாங்க.”
“நீங்க இல்லைன்னு சொல்லலையா?”
“‘உடுத்தியிருந்த உடுப்பெண்டால் உங்கட மாதிரிதான். கையில நெடிய துப்பாக்கியும் இருந்துச்சுது’ எண்டு ஒரு மாமி சொன்னவ.”
அப்பா இந்தக் காலத்தில் சித்தாண்டிக்கு வராமலிருப்பது நல்லதே. இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளால் அவரது தலை குழம்பிப் போயிருக்கும். நான் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
“இங்க இருக்குறவங்க எப்படி வாழுறீங்க?”
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது முகத்தையும் பார்த்துக் கொண்டார்கள்.
“முந்தியெண்டால் விவசாயம் செஞ்சம்.”
“இப்ப?”
இந்தத் தடவை எல்லோரும் தரையைப் பார்த்திருந்தார்கள்.
“ஏன் வயல் இல்லாமப் போச்சோ?”
“வயலிருக்கு. ஆனா போகேலாதே”
“ஏன்? தூரமா?”
“இல்ல. இதோ பக்கத்திலதானிருக்கு.”
“அப்ப சாப்பாட்டுக்கு என்ன வழி? ஏதாவது உதவிகள் கிடைக்குதா?”
“இல்ல. அறுநூத்தம்பது குடும்பங்கள் போல இஞ்ச இருக்குறம். எல்லாருமே அப்படித்தான். போன மார்ச் மாசத்துலருந்து ஒண்டுமேயில்ல.”
நாங்கள் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. ஆழப் புதைந்த விழிகள், உள்ளொடுங்கிய கன்னங்கள், வரண்ட கை கால்கள், வாடிய முகங்கள் கேட்கப்படாத எமது கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தன.
நாங்கள் புறப்பட்டோம்.
“யார் ஊருக்கு ஷெல்லடிச்சாங்க?” என கதைக்காமல் இருக்கவே முடியாத எம்மில் ஒருவர் கேட்டார்.
“தெரியாது”
“ஏன்? யாராவது வந்து உங்கக்கிட்ட சொன்னாங்களா உங்களுக்கு எதுவுமே தெரியாதென்று?”
“ஓம்….”
எமக்குப் பின்னால் நீண்ட வரிசை எதுவும் வரவில்லை. திரும்பி வரப் புறப்பட்ட எமக்குப் பின்னால் ஒற்றையடிப் பாதை முடிவு வரை, இளமை இன்னும் மிச்சமிருந்த, எமக்கு பதிலளிக்க முன் வந்த பெண் மாத்திரம் எம்முடனே வந்தாள்.
“இவங்க ஒருக்கிலும் ஒன்றையும் தெரிஞ்சு கொள்ள மாட்டாங்களா?” என இரகசியமாக அவளிடம் கேட்டேன். குழப்பத்திலிருந்து விடுபட ஏதாவதொரு வழியைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் முயற்சித்தேன்.
“தமிழனாப் பொறந்த எங்களுக்கு எதையும் தெரிஞ்சு கொள்ளவோ, எதிர்பார்ப்புகளை வச்சுக் கொள்ளவோ இடமொண்டு எஞ்சியில்ல அக்கா…”
எதிர்பார்ப்பொன்றை வழங்கக் கூடிய எதுவுமே எம்மிடமும் எஞ்சியிருக்கவில்லை என்பது புரிந்ததாலோ என்னவோ நாங்கள் எவருமே எதுவும் கதைக்கவில்லை.
அப்பாவிடம் இவை எதையும் கூறத் தேவையில்லை. அப்பா இந்தக் காலத்தில் அதிகம் நடமாடுவதில்லை. ஆகவே சித்தாண்டிக்கென்றால் ஒருபோதும் அவர் வரப் போவதில்லை.
சிங்களம்: குமாரி
தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்
எழுத்தாளர் பற்றிய விபரம்
குமாரி
இலங்கையில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி வரும் சிங்களப் பெண் எழுத்தாளர் குமாரி, கவிஞர், பத்திக் கட்டுரையாளர், தெரு நாடகக் கலைஞர் என பன்முகம் கொண்ட கலைஞரும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவரது தெரு நாடகங்களும், நூல்களும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றவை. இச்சிறுகதையானது, சிங்கள மொழியில் வெளியாகியுள்ள இவரது சிறுகதைத் தொகுப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.