கறை நதி

story 03படிப்பதற்கு அமைதியான சூழலுடன் இனிமையான அயலவர்களும் கொண்ட தங்குமிடமொன்று அமையவேண்டும் என்று தேடித்திரிந்தபோது மெல்பேர்ன் நகரிலிருந்து நாற்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த வீட்டு உரிமையாளர்களின் அறிமுகம் கிடைத்தது.

நன்கு உயர்ந்து படர்ந்து வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் தெருவெங்கும் மொய்த்து கிடக்கும் ரம்யமான பிரதேசத்தில் நான்கு அறைகள்கொண்ட அந்த இத்தாலிய முதியவர்களின் வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள் மூவரும் திருமணமாகி தனித்தனியாக போய்விட, முதுமையையும் அழகான பொசு பொசுவென்று அடர்த்தியான முடிகொண்ட “ஜுடோ” என்ற நாய் குட்டியையும் அந்த வயதான தம்பதியர்கள் வளர்த்துவந்தார்கள். இருவரும் கண்ணாடி அணிந்தவர்கள். இரண்டாம் உலகப்போருடன் சொந்த நாட்டிலிருந்து குடிப்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்துவிட்டதாக சொன்னார்கள்.

விசாலமான வீட்டின் பின்புறமாக உள்ள பெரிய அறையை எனக்கு தங்குமிடமாக தருவதற்கு அவர்கள் பேசியபோது, தாங்கள் வாடகையை எதிர்பார்த்து யாரையும் குடியமர்த்தும் நோக்கமில்லை என்றும் தங்களின் பேச்சுத்துணைக்கு உரியவர்களாகவும் அவ்வப்போது தங்களது வீட்டுக்குரிய பொருட்களை வெளியில் சென்று வாங்கித்தரக்கூடிய தயாள உள்ளம் கொண்டவர்களாகவும் இருந்தால் நல்லது என்றும் சொன்னார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதைவிடவும் கூடுதலான தகுதி எனக்குள்ளது என்று அவர்களது நான்கு கைளையும் குலுக்கி உறுதிசெய்துகொண்ட அடுத்தவாரமே அந்த அறையை எனக்கு தந்திருந்தார்கள்.

“ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கப்டன் குக் வந்த கப்பலிலேயே ஒரு இத்தாலியன் இங்கு வந்திருந்தான், உங்களுக்கு தெரியுமோ” – என்று தொடங்கி அவர்கள் எதிர்பார்த்த பேச்சுக்குத்துணையாக தொடங்கினேன். இரண்டொரு நாட்களிலேயே அவர்களது வயோதிப நேசம் என்னை நெருக்கத்தோடு ஈர்த்துக்கொண்டுவிட்டது. நான் எதைப்போசினாலும் “அப்படியா” என்று கேட்கும் அவர்களது வழிகள் எனக்கு அவர்களின் மீது குடும்பத்தவர்கள்போன்ற பிரியத்தை ஏற்படுத்தத்தொடங்கியது.

பெரியவர் எதைச் சாப்பிட்டாலும் கீழ்தாடையில் அந்தச் சாப்பாட்டின் ஏதாவதொரு மிச்சம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை தன்கையால் துடைத்துவிடுவதிலும் பிறகு நீரில் கை அலம்பி, இன்னும் பக்குவமாக ஒத்தியெடுத்துவிடுவதிலும் அவரது மனைவிக்கு அப்படியொரு விருப்பம். எப்போது அதைச்செய்யும்போதும் “அல்லோக்கா” என்று திட்டுவார். அப்படித்துடைத்துவிடுவது அவருக்குப் பிடிக்கும். அப்படி திட்டுவது இவருக்குப் பிடிக்கும். நாள் போகப்போக இருவருக்கும் என்னை நன்றாக பிடித்துப்போனது. ஒருநாள் நான் பரோட்டா செய்து கொடுத்தேன். அந்த மூதாட்டி நன்றியுணர்வோடு “பாஸ்டா” செய்து தந்தார்.

அப்பாவுக்கு அழைப்பெடுத்து தனியறை கிடைத்துவிட்டதையும் எனது வீட்டுக்கார்களையும் பற்றி கூறினேன். அடுத்தநாளே அம்மா மருதடி விநாயகர் கோவிலில் அர்ச்சனை செய்து பிள்ளைக்கு உதவியதற்காக பிள்ளையாருக்கு நன்றி சொன்னார். தொலைபேசியில் அழைத்து “வீட்டு அன்ரிக்கு தோசை செய்து குடுங்கோ” – என்று சொல்லி செய்முறையையும் விளங்கப்படுத்தினார்.

இரண்டாவது வாரம் என்று நினைக்கிறேன், நான் இருந்த வீட்டின் அயல் வீட்டுக்காரரான மாரியோ என்ற இன்னொரு இத்தாலியர், சொந்த நாட்டில் நான்கு கொலைகளை செய்துவிட்டு முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு தப்பிவந்தவர் என்ற தகவலை அறிந்துகொண்டேன்.

மாரியோவுக்கு நானிருக்கும் வீட்டுக்காரர்கள் வளர்க்கும் நாயைப்போல நல்ல பொசுபொசுவென்ற வெள்ளை முடி. வைன் குடித்துக் குடித்து சிவந்த கன்னங்கள், இனிமேல் எந்தக் கொலையும் செய்யமாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளுவதுபோன்ற கருணை வடியும் கண்கள். ஆள் குள்ளமென்றாலும் எப்போதும் தலா நான்கு கிலோ எடையுள்ள சப்பாத்துக்களை அணிந்துகொண்டு இரண்டு கால்களையும் விசுக் விசுக்கென்று நடக்கின்ற எகத்தாளமான உருவம்.

story 01ஒருநாள் முற்றத்தில் புல் வெட்டிக்கொண்டு நின்றபோது முதன்முதலாக அவரைக் கண்டேன். அதன் பிறகு, தனது நாபொலிட்டன் நாயை வெளியில் அழைத்துச்செல்லும்போது இன்னொரு தடவை பார்க்க கிடைத்தார். அப்போதுதான், இந்த வீட்டுக்கு நான் புதிதாக குடிவந்திருப்பதை அவர் அறிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். என்னைப்பார்த்து சாதுவாக சிரித்தார். ஆனால், தாடை தொங்கிய அவரது நாய் என்னைப்பார்த்து முறைத்தது. அதனால், அவரைப்பார்த்து போதுமானளவு சிரிப்பதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. குப்பை வாளியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். அவருடன் சரியாக பேசாத குறை எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

அதற்கு அடுத்தவாரம் ஒருநாளிரவு அவரது வீட்டில் பெரிய சண்டை நடந்தது. அப்போது அவர்கள் பேசிக்கொண்ட சண்டைமொழியோ எதற்காக சண்டை பிடிக்கிறார்கள் என்றோ எனக்கு புரியவில்லை. ஆனால், அதுதான் இத்தாலிய மொழியாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. சண்டையின் நடுவில் தடித்த பெண்குரலொன்றும் கேட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தமானவர் நிச்சயம் வயதானவர்தான். இருந்தாலும் அவர் அடிக்கடி சண்டையிட்டு பயிற்றப்பட்ட குரலுக்கு உரியவராக தெரிந்தார். சண்டையின்போது அந்த ஒலி சுளீர் சுளீர் என்று ஆண்குரலை அடக்கியபடியே இருந்தது. கூடவே, கட்டிவைத்திருந்த நாபொலிட்டன் நாய்வேறு அடிக்குரலில் விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. எனது அறை அவர்களது வீட்டோடு அருகாமையில் அமைந்திருந்த காரணத்தினால் சண்டையின் அத்தனை ஆரோகண அவரோகணங்களும் மிகத்தெளிவாக கேட்டது.

சிறிது நேரத்தில் ஜன்னலின் வழியாக எட்டிப்பார்த்தபோது, அவர்களது வீட்டின் முன்பாக நான்கு பொலீஸ் வாகனங்கள் வந்து நின்றன. பொலீஸ் அதிகாரிகள் மாரியோவின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாகவிருந்தனர். எப்படியும் ஆளைக்கொண்டுபோய்விடுவார்கள் என்று எண்ணினேன். ஆஸ்திரேலியா வந்து முதன் முதலாக இவ்வாறானதொரு வீட்டுச்சண்டடையை கேட்டது மாத்திரமல்லாமல் அதற்கு பொலீஸார் வந்திருப்பதையும் பார்க்க புதுமையாக இருந்தது. நான்கு கொலைகளை செய்த ஒருவர் தனது தகுதிக்கு குறைந்த இப்படியான சண்டைகளிலெல்லாம் ஈடுபடுவதற்கு எப்படி முடிகிறது என்பதை கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை. நான்கு வாகனங்களில் வந்திறங்கிய பொலீஸாருக்கும்கூட அதே குழப்பம்தானிருக்கவேண்டும்.

இந்தச் சம்பவம் நடைபெற்று அடுத்தடுத்தநாளே மாரியோ தனது நாபொலிட்டன் நாயோடு நடைப்பயிற்சிக்கு கிளம்பிக்கொண்டிருப்பதை கண்டபோது எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இவர் போட்ட சண்டை, வந்துபோன பொலீஸ் எல்லாவற்றுக்கும் என்ன நடந்தது?

“குட் மோர்னிங்”

தைரியமாக பேச்சுக்கொடுத்தேன்.

“குட் மோர்னிங்”

சிரிக்கும்போது சுருங்கும் கண்கள். அதே சிவந்த கன்னங்கள். நல்ல செழிப்பாகத்தானிருந்தது அவரது முகம்.

“இந்த வீட்டில்தான் நான் குடிவந்திருக்கிறேன்”

இப்போது அவரது கண்கள் முழுதாகவே மறையும்படியாக சிரித்தார்.

தாங்கள் அந்த வீட்டுக்கு வந்து இருபது வருடங்களாகிறதாக கூறி முகமன் செய்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் கேட்ட சத்தத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல பேசினார். நன்றி மறவாத நாய் அந்த வீட்டில் நடைபெற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரது காலடியில் ஒழுக்கத்தோடு நின்றுகொண்டிருந்தது.

“வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வேலைக்கு ஆள் தேடினால்; சொல்லுங்களேன்”

“அப்படியா” – என்பதுபோல முகத்தில் உணர்வுகளை காண்பிக்கத்தொடங்கியவர், என்ன மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறேன், படிப்பது போக எவ்வளவு நேரம் வேலைக்கு ஒதுக்கமுடியும் போன்ற மிகப்பொருத்தமான கேள்விகளை கேட்டுக்கொண்டார். அவருக்குள் ஒரு பொறுப்பான மனிதனிருப்பதை அவரது கேள்விகள் புலப்படுத்தின. அது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.

சரியாக மூன்று நாட்களின் பின்னர், நாயின் கக்கூசை அள்ளி வீட்டின் முன்பாகவிருந்த குப்பை வாளிக்குள் மாரியோ போட்டுக்கொண்டிருந்தபோது, பல்கலைக்கழகம் முடிந்து நான் வீட்டுக்குள் வந்துகொண்டிருப்பதை கண்டு, கை காட்டி அழைத்தார்.

பொக்கெட்டில் ஏற்கனவே எனக்காக எழுதி வைத்திருந்த பேப்பர் துண்டொன்றை எடுத்து தனது நண்பரது களியாட்ட விடுதியொன்றில் வேலையிருப்பதாக சொல்லி அதிலுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கச்சொன்னார். தான் ஏற்கனவே பேசி என்னைப்பற்றி சொல்லியிருப்பதாக கூறினார்.

அப்போது அவர் கன்னங்களைவிட எனது கன்னங்கள் வெட்கத்தால் அதிகம் சிவந்துவிட்டன.

கொலைகாரர் சகவாசம் இவ்வளவு ஆரோக்கியமானதாக அமையும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. அப்போது திடீரென்று அவரது வீட்டுக்குள்ளிருந்த அவரது நாபொலிட்டன் நாய் ஓடி வந்து அவர்மீது தாவிக்கொண்டது.

“நான் வருகிறேன். மறக்கவேண்டாம்” – என்று கூறிக்கொண்டு அவர் நாயை அழைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டார்.

அன்றைய தினமே அப்பாவுக்கு அழைப்பெடுத்து விஷயத்தை சொன்னேன்.

“இஞ்ச வேலையெடுக்கிறதொன்றும் அவ்வளவு கஷ்டமில்லை அப்பா. எல்லாம் நாங்கள் பழகுறத பொறுத்துத்தான் இருக்கு” – என்று ஒரு ராகத்தோடு இழத்துச்சொல்லிமுடித்தேன். முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பா –

“தெரியாத இடத்தில கவனமாக இருக்கவேணும் அப்பு. போற வாற இடங்களில புலனடக்கம் முக்கியம். சகவாசமெல்லாம் நல்ல மனுசரோட இருக்கவேணும்”

சொல்லிக்கொண்டிருக்கும்போது அம்மா பின்னாலிருந்து ஏதோ சொல்ல

“அம்மாவும் இதை சொல்லுறதா சொல்லுறா” – என்றார்.

ஆனால், இருவருக்கும் நல்ல சந்தோஷம்.

வேலை கிடைக்கவேணும் என்று பிள்ளையார் கோவிலில் செய்த நேர்த்திக்கடன் விபூதியை அடுத்தகிழமை அம்மா அனுப்பிவைத்திருந்தர். கூடவே, சின்ன சரை ஒன்றுக்குள் சிவப்பு நூலையும் வைத்து அனுப்பி இடக்கையில் கட்டச்சொல்லியிருந்தார்.

(2)

கைகளை இறுக்கும் கறுப்பு நிற டீசேர்ட்டின் கலருக்கு கொஞ்சமும் பிசகாத கறுப்பு நிறுத்தில் பாண்ட்ஸ் அணிந்து என்னுடைய முதல்நாள் வேலைக்கு போயிருந்தேன்.

மெல்பேர்ன் நகரின் மையம் என்று சொல்லக்கூடியதொரு இருளின் நாடி – நரம்புகளை நன்கறிந்த இடத்தில் அந்தக் களியாட்ட விடுதி அமைந்திருந்தது. வெள்ளி முதல் ஞாயிறு வரையான நாட்களில் மாத்திரம் போதையில் எழுந்துநின்றாடிவிட்டு மிகுதி நான்கு நாட்களும் தூங்கச்சென்றுவிடுகின்ற இடம் அது. உள்ளே சொர்க்கத்தை காண்பிக்கின்ற சொட்டுமருந்து போத்தல்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். இரவு உயிர்த்தவுடன் வண்ண விளக்குகள் அனைவரது மேனிகளிலும் பொட்டு பொட்டாக விழுந்து ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தக் களியாட்ட விடுதியின் உரிமையாளன் கலியா என்ற தொங்கோ தீவுக்காரன். அங்கு வேலைக்குப்போகும்வரைக்கும் அப்படியொரு தீவு உலக வரைப்படத்தில் எங்குள்ளது என்றுகூட எனக்குத் தெரியாது.

அவனது தலை உரிக்காத தேங்காய் மாதிரி மொழு மொழுவென்று நீளமான கோளவடிவத்திலிருக்கும். அவன் இரண்டு தடவைகள் கலியாணம் செய்திருந்தான். நான்கு தடவைகள் ஜெயிலுக்குப் போயிருந்தான். இப்போது தனியன். நான் வேலைக்குப்போவதற்கு நான்கைந்து வருடங்களுக்கு முன்னர்தான் அந்த விடுதியை எடுத்து நடத்த தொடங்கியிருந்தான்.

வெள்ளி – சனி நாட்களில்தான் அந்த விடுதியின் மொத்த வருமானமும் அள்ளிக்கொழிக்கும். நூற்றுக்கணக்கில் இளைஞர் – யுவதிகள் முன்னிரவு தாண்டும்போது குபுகுபுவென்று உள்ளே நுழைவர். அர்த்தமே விளங்காத பாட்டுக்கள் அந்த விடுதியே இடிந்து விழுவதுபோன்ற சத்தத்தில் வரிசையாக ஒலித்துக்கொண்டிருக்கும். சத்தத்துக்கு ஏற்றவாறு ஒரு கையில் மதுக்கோப்பையோடு பெண்களும் ஆண்களும் துள்ளித்துள்ளி ஆடுவார். தங்களது காதலர்களுக்கு மாத்திரமல்லாமல் பால் பாரபட்சமின்றி எல்லோரையும இழுத்து முத்தமிட்டுக்கொள்வார். அங்கு வருகின்ற பெண்கள் முக்கால்வாசிப்பேர் முழங்காலுக்கு மேல்தான் சட்டை அணிந்திருப்பார்கள். தலையணை உறையைவிட சற்றுப்பெரிதான இறுக்கமான அந்த ஆடைக்குள் தங்களையும் தங்களது மானத்தையும் மறைக்கவேண்டும் என்று சாமம் பன்னிரண்டு ஒருமணிவரைக்கும் படாத பாடுபடுவார்கள். அதற்கு பின்னர் அந்த முயற்சியில் அதிகம் ஈடுபடமாட்டார்கள்.

இத்தனையையும் பார்த்தும் பாராததுபோல அவர்கள் குடித்து வைக்கின்றன குவளைகளை மின்னல் வேகத்தில் பொறுக்கிக்கொண்டுவந்து கழுவித்துடைக்கவேண்டும். இதுதான் எனது வேலை.

நான் மாரியோவின் ஆள் என்று அந்த விடுதி உரிமையாளன் கலியா என்னை மிகுந்த மதிப்போடு நடத்தினான். தன்னால் கூடுதல் பணமெல்லாம் தரமுடியாது. ஆனால், மற்றையவர்களைவிட கூடுதலான வேலை நேரத்தை தருவதாகக் கூறி சம்மதம் கேட்டான். அவன் தரப்பிலிருந்து அவனது நேர்மையான அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிரித்தபடி தலையசைத்தேன். அப்போது எனக்கு இத்தாலி, கொங்கோ என்ற இரண்டு நாடுகளின் மீதும் நல்ல மரியாதை எழுந்திருந்தது.

ஒரு வெள்ளியன்று இரவு அந்த விடுதியில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வெள்ளை நிறப்பெண்ணொருத்தி தனது தோழிகள் பட்டாளத்துடன் வந்திருந்தாள். அவள் நீண்ட வெள்ளை ஆடை உடுத்திருந்தாள். பிறந்தநாள் கேக்கை வெட்டி ஆளுக்காள் ஊட்டிவிட்டு வாழ்த்துச்சொன்னார்கள். நடுநிசி தாண்டியவுடன் மெல்லிய பாடலொன்றை போட்டுக்கொண்டு ஆடினார்கள். பிறந்தநாள் பெண் அந்த ஆடையோடு ஆடுவதற்கு சிரமப்பட்டாலும் இரண்டு கைகளாலும் அந்த ஆடையையும் உள்பாவாடையையும் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடினாள். அப்போது அங்கு வந்த கலியா, விடுதியின் உடைமாற்றும் அறையில சென்று வேறுடை அணிந்துவந்து நடனத்தில் கலந்துகொள்ளலாம் என்று அவளுக்கு ஆலோசனை கூறினான். அவளும் “அதுதானே” – என்றவாறு சிரித்துக்கொண்டு அவன் பின்னாலேயே போனாள்.

தெய்வீகன்

அதற்குப்பிறகு இடியோசையில் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கியது. நான் வழக்கம்போல மிகவேகமாக குவளைகளை கழுவி கழுவி அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னோடு வேலை செய்கின்ற எனக்குப்பொறுப்பானவளும் கலியாவின் முதலாவது மனைவியுமான லாரா என்னிடம் வந்தாள். கீழே போய் ஐந்து ஐஸ் பைகளை எடுத்துவரும்படி கட்டளையிட்டாள்.

எப்போதும் கவலை படிந்த கண்கள். பரந்து சிவந்த முகம். அதுதான் அவளது இயல்பான அழகுபோல தெரிபவள்தான் லாரா. கலியாவுடனான திருமணம் முறிந்த பின்னரும் தொடர்ந்தும் அவனது களியாட்ட விடுதியில் பணிபுரிபவள். இருவரும் வேலை சம்பந்தமாக மாத்திரம் பேசிக்கொள்வார்கள். அதை பார்ப்பதற்கு நான் எப்போதுமே தவறுதில்லை. எந்த உணர்வுமே இல்லாமல் முகத்தை ரெஜிபோம் போல வைத்துக்கொண்டு கதைப்பார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

லாரா ஐஸ் பைகளை கேட்டவுடன், உடனடியாகவே அங்கிருந்த துணியொன்றில் கைகளை துடைத்துவிட்டு மரத்தினாலான படிகளால் குடுகுடுவென்று ஒடிச்சென்று குடிவகைகள் மற்றும் ஐஸ் பைகள் அடுக்கிவைத்திருக்கும் அந்த நீண்ட குளிர்சாதன அறைக்கு சென்றேன்.

“பகீர்” என்றிருந்தது.

போனவேகத்தில் அந்த அறையிலிருந்து வெளியில் பாய்ந்து வந்துவிட்டேன்.

குளிர்சாதன அறையின் பின் மூலையிலிருந்த பெரிய பெட்டியில் கலியா மல்லாக்க கிடக்க, உடைமாற்றுவதற்காக சென்ற பிறந்தநாள்காரி அவன் மீது வேகமாக இயங்கியபடியிருந்தாள். நான் கதவு திறந்த காரணத்தினால் உள்ளே பாய்ந்த வெளிச்சத்தை பற்றி அவர்கள் எதுவுமே அலட்டிக்கொள்ளவில்லை. தங்களது வேலையில் லயித்திருந்தார்கள்.

வெளியே ஓடிவந்த எனக்கு உள்ளே பார்த்த காட்சி உண்மைதானா என்று மனசுக்குள் குளிர் மின்னலாக வெட்டியது. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டேன். சிலவேளைகளில் கொங்கோ நாட்டவர்கள் இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வார்களோ?

மேலே ஓடிவந்துவிட்டேன்.

நான் ஓடி வந்த வேகத்தையம் என் முகத்தையும் உற்றுப்பார்த்துவிட்டு, கீழே நடைபெற்றுக்கொண்டிருப்பதை உறுதியாக ஊகித்துக்கொண்டவள் போல –

“ஐஸ் பைகள் எங்கே” என்றாள் லாரா.

“எடுத்துவரும்போது காலில் அடிபட்டுவிட்டது. அங்கேயே வைத்து வந்துவிட்டேன்” – என்று தயக்கமே இல்லாமல் ஒரு பொய்யை சொன்னேன். எனது ஞாபகத்துக்குட்பட்டவரையில் அதுதான் இந்த நாட்டில் நான் சொன்ன முதலாவது பொய் என்று நினைக்கிறேன்.

உடனேயே நான் கைகளை துடைத்த அதே துவாயில் தனது கைகளை துடைத்துக்கொண்டு அவள் கீழே குடுகுடுவென்று ஓடிப்போனாள்.

குளிர்சாதன அறையில் அவர்கள் என்னை காணவில்லைத்தான். ஆனால், கண்டிருந்தால் நான்தான் மேலே வந்து விஷயத்தை சொல்லியிருப்பதாக நிச்சயம் நம்பிவிடப்போகிறார்கள். லாரா போனதும் அங்கே என்ன நடைபெறப்போகிறதோ. கலியாவின் முகம் எனக்கு முன்பாக வந்து நின்று மிரட்டியது.

எதற்கும் கீழே சென்று பார்த்துவிடுவது நல்லது என்று நானும் கீழே போனேன். குளிர்சாதன அறை திறந்து கிடந்தது. உள்ளே பெரிய சத்தங்கள் கேட்டன. மாரியோவின் வீட்டில் கேட்ட சண்டையிலும் பார்க்க உக்கிரமான சண்டை. கூடவே, போத்தல்கள் உடைந்து சிதறுவதுபோலவும் சத்தங்கள் வந்துகொண்டிருந்தன.

எனக்கு இப்போது இதயம் இன்னும் வேகமாக அடித்தது. கைகள் சாதுவாக நடுக்கம் கண்டது. தேவையில்லாத ஒரு சிக்கலுக்குள் நான் மாட்டியிருப்பது உறுதியாகிவிட்டது.

இனிமேல், எந்தவகையிலும் அந்த விடுதிக்குள் நின்றுகொண்டிருப்பது சரியென்று படவில்லை. கலியாவை இனி என்னால் முகம்கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.

நாங்கள் நேர்மையானவர்கள் என்று திடமாக நம்பும் மனிதர்கள் குற்றம் இழைத்துவிடுகின்றபோது அவர்களைவிட எங்களுக்குத்தான் அதிகம் குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. அது எப்படியென்று தெரியவில்லை.

குதூகலமாக கும்மாளமடித்துக்கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தை விலத்திக்கொண்டு விடுதியின் வாசலுக்குப் போனேன்.

வேகமாக ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.

ஏதாவதொரு வால் நட்சத்திரம் வேகமாக எனது தலையில் வந்துவிடப்போகிறது என்ற அச்சத்தில் நடப்பவன் போல வேக வேகமாக ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

என்னைத்தாண்டி சில பெண்கள் புகைத்தபடி அந்த விடுதியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். புகையை இழுத்து வெளியில் விட்ட இடைவெளியில் சிரித்தார்கள். அந்தப் புகை வளையங்களின் நடுவில் எந்தப்பெண்ணை பார்த்தாலும் குளிர்சாதனப்பெட்டிக்கு மேல் கண்டவள்போலவே தெரிந்தாள்.

ஆஸ்திரேலியா ஜனநாயக நாடுதான். அதற்காக, முதல் மனைவிக்கு தனது வேலைத்தளத்திலேயே ஒருவன் வேலை போட்டுக்கொடுக்குமளவுக்கு தாராள குணம் கொண்டவர்களாக இருக்கவேண்டுமா? அவ்வளவொரு ஜனநாயக உணர்வு கலியாவுக்கு வந்திராவிட்டால், அவன் மாத்திரமல்ல நானும் தப்பியிருக்கலாம்.

எதிர்ப்படும் யாரிடமாவது ஒரு சிகரெட்டை வாங்கி வேகமாக புகையை இழுத்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது.

வழக்கமாக வேலை முடிந்து அதிகாலைதான் ரயில் எடுத்து வீட்டுக்குப் போவதால், இரவு நேர கடைசி ரயில் எப்போதென்று தெரியவில்லை. வேகமான நடையை ஓட்டமாக்கினேன். நானும் ரயில் நிலையத்திற்குள் நுழைய எனக்கான ரயிலும் வந்தது.

வீட்டுக்கு அருகாமையிலுள்ள ரயில் நிலையத்தில் போய் இறங்கி, வீட்டுக்கு நடந்துபோய் கொண்டிருக்கும்போது நேரே எரிபொருள் நிலையம் ஒன்றினுள் நுழைந்து குளிர்நீர் போத்தலொன்றை வாங்கி முழுவதையும் குடித்துமுடித்தேன். அந்தநேரத்தில் அதுவொன்றுதான் எனக்கு ஆதரவாக உள்ளே இறங்கியது. மணி இரண்டை தாண்டியிருந்தது. வீட்டுக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, அப்போதுதான் மாரியோ தனது காரில் கோர்ட் சூட்டோடு வந்திறங்கினார். வீட்டின் முன்பாக வெள்ளொளி பாய்ச்சிக்கொண்டிருந்த மின்கம்பத்தின் வெளிச்சத்தில் அழகாகவும் மிடுக்காகவும் கொஞ்சம் உயரமாகவும் தெரிந்தார்.

அவரை கண்டவுடன், அதுவரை குறைந்து சீராகிக்கொண்டிருந்த இதயத்துடிப்பு இன்னும் வேகமாக தொடங்கியது. என்னைப்பார்த்துவிடப்போகிறாரே என்று எண்ணியவாறு இருட்டுக்குள் ஒளிவதற்குள் –

“இன்று நீ வேலைக்கு போகவில்லையா. எனது மகள் தனது பிறந்த தினத்தை கலியாவின் விடுதியில்தானே கொண்டாடுகிறாள்”

அவரது நாபொலிட்டன் நாயின் தாடைபோல எனது வாய் விழுந்தது. விறைத்தபடி நின்றேன்.

“எனக்கு உடல்நிலை அவ்வளவு சரியில்லை. அதுதான் வந்துவிட்டேன்”

பொருந்தப்போவதில்லை என்று தெரிந்தும் அந்தப்பொய்யை சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் நடத்தேன். எனக்கு மனசுக்குள் அந்த நாபொலிட்டன் நாய் குரைக்கும் சத்தம் கேட்டபடியிருந்தது.

மேசை விளக்கின் வெளிச்சத்தில் அம்மா அனுப்பிய அந்த விபூதிச்சரையும் சிவப்பு நிற நூலும் புத்தக அலுமாரியின் கீழ் தட்டில் கிடப்பது தெரிந்தது.

நித்திரை வரவில்லை. ஜன்னலை சாதுவாக திறந்துவிட்டேன். மெல்லிய காற்று உள்ளே வந்தது. மாரியோ வீட்டுக்கு முன்னாலுள்ள மின்கம்ப வெளிச்சம் வீட்டுக்குள்ளேயும் விழுந்தது. கட்டிலில் சாய்ந்து கிடந்து இருளைப்பார்த்தபடி யோசித்தேன். விடுதியிலேயே நின்றிருக்கலாமோ? இங்கே இப்படியிருந்து பதறுவதைவிட, எதுவேண்டுமென்றாலும் முகங்கொடுத்திருக்கலாம் என்றிருந்தது.

கலியாவிடம் இப்போது என்ன பேசுவது? மாரியோவிடம் அவன் ஏதாவது சொல்வானா? எனக்கு மீண்டும் வேலை இருக்குமா?

மனம் தத்தளித்தபடியே இருந்தது.

எழுந்து மேசையிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து திறந்து ஒரு மிடறு குடித்தேன். மனதிற்குள் உருத்தெரியாத ஒரு பறவை ஓயாமல் பறந்துகொண்டிருப்பதுபோலிருந்தது.

அம்மா நேர்ந்து அனுப்பிய மருதடிப்பிள்ளையாரின் கயிறை எடுத்து கையில் கட்டிக்கொண்டேன். பகலை காணுவதற்கு வெகு நேரம் விழித்திருக்கவேண்டியதுபோலிருந்தது.

அப்படியே கண்ணயர்ந்து திடுக்குற்று எழுந்தபோது கொஞ்சம் விடிந்திருந்தது. ஜன்னலுக்கு அருகில் சென்று வெளியே பார்த்தேன். மாரியோ அதிகாலையிலேயே எழுந்து நாயோடு வெளியில் நடக்கப்போவது தெரிந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் தெரிந்தது. பகலை சிப் போட்டு திறப்பதுபோல தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளொன்றின் சத்தம் நீளமாக கேட்டு அடங்கியது. அறைக்குள்ளிருக்காமல் நானும் கொஞ்சத்தூரம் நடந்துவிட்டு வந்தால் என்ன என்று எழுந்து வெளியில் போக ஆயத்தமானேன்.

(3)

அப்போது இரண்டு பொலீஸ் வாகனங்கள் வீட்டுக்கு வெளியே வந்து நின்றன. யூக்கலிப்டஸ் மரங்களின் கீழ் அவை வந்து நிற்கும்போதே ஜன்னலின் வழியாக கண்டுகொண்ட நான், வெளியே எழுந்து சென்றேன். அவர்கள் என்னைத்தேடித்தான் வருகிறார்கள் என்ற முன்முடிவுக்கு நான் ஏன் வந்தேன் என்று தெரியவில்லை.

நன்கு உயரமான மீசை கத்தரித்த பொலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டு வளாகத்திற்குள் வந்த மாத்திரத்திலேயே கையில் கொண்டுவந்து கோப்பொன்றை பார்த்து எனது பெயரை உச்சரித்தார். பெயர் அதுதானே என்பதுபோல என்னைப்பார்த்தார்.

“ஆம்”

“நீ வேலை செய்கின்ற விடுதியின் உரிமையாளன் கலியா மரணம் தொடர்பாக உன்னை விசாரிக்கவேண்டியிருக்கிறது. பொலீஸ் நிலையம்வரைக்கும் வரமுடியுமா” – என்றார்.

நான் நின்றுகொண்டிருந்த நிலம் இரண்டாக பிளந்து அப்படியே என்னை உள்ளேstory 02 இழுத்துக்கொள்வதுபோலிருந்தது. கண்கள் இரண்டும் இருண்டு வெளித்தன. அப்போது நித்திரையால் விழிந்த பிஞ்சு இதயம் வேகமாக உதறத்தொடங்கியது.

அதற்குப்பிறகு அந்த அதிகாரி பேசியது எதுவும் கேட்கவில்லை. வீட்டிற்கு வெளியிலும் பலர் சீருடையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

நான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவர்கள் பொலீஸாரின் வாகனச்சத்தம் கேட்டு எழுந்துவிடுவதற்கு முன்னர் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று பொலீஸாருடன் வெளியில் வந்தேன்.

“தெரியாத இடத்தில கவனமாக இருக்கவேணும் அப்பு. போற வாற இடங்களில புலனடக்கம் முக்கியம். சகவாசமெல்லாம் நல்ல மனுசரோட இருக்கவேணும்”

அப்பாவின் குரல் உள்ளுக்குள் கேட்டபடியிருந்தது.

ஆனால், எல்லாம் காலம் பிந்திவிட்டதைப்போல ஏதோ ஒரு விசை என்னை இழுத்துச்செல்வதுபோலவுமிருந்தது.

நீலமும் வெள்ளையுமாக பெட்டி பெட்டியாக வரையப்பட்ட அந்த பொலீஸ் வாகனத்தின் பின் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டேன். அதனை ஓட்டுவதற்காக உள்ளே வந்து ஏறிய பொலீஸ் அதிகாரி இருக்கைப்பட்டியை அணிந்திருக்கிறேனா என்று பின்னால் எட்டிப்பார்த்தார். அந்தப்பார்வை சாதாரணமாக சட்டத்தை மதிப்பதற்கானது என்ற போதிலும் நான் தப்பியோடிவிடப்போகிறானா என்று சோதித்தபதாகவே எனக்கு விளங்கியது.

பதினைந்து நிமிடங்களில் பொலீஸ் நிலையத்தை சென்றடைந்த வாகனத்திலிருந்து என்னை இறக்கி விசாரணை அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு சற்று நேரம் இருக்குமாறு கூறிவிட்டு அந்தப் பொலீஸ் அதிகாரி வெளியே போனார்.

எனக்கு அந்நியமான விடயங்கள் அனைத்தும் என்னைச்சுற்றி அவசர அவசரமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவை எதையுமே ஆழ்ந்து சிந்திப்பதற்கு அவகாசம் போதவில்லை. ஆனால், கலியா இறந்துவிட்டான் என்ற தகவல்தான் அதிர்ச்சி அலையாக மனதில் நெளிந்துகொண்டிருந்தது.

மீண்டும் கதவைத்திறந்துகொண்டு உள்ளே வந்த பொலீஸ் அதிகாரியுடன் இன்னொரு பெண் அதிகாரியும் குறிப்பெடுப்பதற்காக வந்தாள். அவர் அந்த அதிகாரிக்கு சற்று பின்னால் இருந்துகொண்டாள். எனக்கு அருகிலிருந்து சுவரிலிருந்து சிறிய துவாரத்தை திறந்து அதிலிருந்த உபகரணத்தை காண்பித்து எங்களது உரையாடல் முழுவதும் இதில் பதிவு செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறிவிட்டு விசாரணையை தொடங்கினார்.

(4)

ஒரு மணிநேர விசாரணையின் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான் முற்றுமுழுதாகவே ஒரு கொலையாளி போல உணரத்தொடங்கினேன். உடல் முழுவதும் விறைத்தபடியிருந்தது. என்னை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு சக்திக்கு எதிராக நான் ஒவ்வொரு செக்கனும் போராடி வெளியேறவேண்டியிருந்தது.

விடுதியின் குளிர்சாதன அறை வாசலிலும் கதவிலும் எனது கை ரேகைகள் பதிந்திருப்பதும் அன்று இரவு யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்ததும் பொலீஸாருக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனது இந்த நடவடிக்கைகள் அவ்வளவும் விடுதி வாசலிலும் ரயில் நிலைங்களிலும் உள்ள கேமராக்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் என்னை சந்தேகிப்பதற்கான காரணங்கள் என்று அந்த அதிகாரி நேரடியாக சொல்லவில்லையே தவிர –

அவர் திரும்ப திரும்ப குடைந்து குடைந்து கேட்ட கேள்விகள் என்னை ஏதோ ஒன்றை நோக்கி தள்ளுவதுபோலிருந்தது.

தேவையேற்பட்டால் மீண்டும் அழைப்பதாக கூறி டக்ஸி ஒன்றை அழைத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.

இவ்வளவுக்கும் மாரடைப்பினால்தான் கலியா இறந்திருக்கிறான் என்கிறார்கள். அப்படியானால், மாரியோவின் மகளும் லாராவும் இதில் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அவர்கள் இப்போது எங்கே?

அம்மா நேர்த்திக்கடன் வைத்து அனுப்பிய சிவப்பு நிற கயிறை மணிக்கட்டில் மெதுவாக வருடிப்பார்த்தேன்.

நேரம் மதியமாகியிருந்தது.

டக்ஸியை வீட்டுக்கு வந்துசேர்ந்தது. இறங்கி வீட்டிற்குள் சென்றபோது, மாரியோ முன் முற்றத்தில் புல் வெட்டிக்கொண்டிருந்தார். டக்ஸி வந்து நின்றதும் இறங்கியதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், நிமிர்ந்து பார்க்காமலேயே புல்வெட்டிக்கொண்டிருந்தார். அருகில் அவரது நாபொலிட்டன் நாய் தாடையை தொங்கப்போட்டவாறு என்னை பார்த்துக்கொண்டிருந்தது.

என் வீட்டு முதியவர்கள் இருவரும் வெளியில் எனக்காக காத்துக்கொண்டு நின்றார்கள் அதே ஆச்சரியம் வழியும் கண்களோடு. பெரியவரின் தாடையில் சாப்பிட்ட மிச்சம் ஏதோ ஒட்டிக்கிடந்தது. அருகில் அவரது மனைவி விறைத்தபடி நின்றுகொண்டிருந்தார். அவர்களில் எந்த உணர்வையும் காணவில்லை. அவர்களின் உதடுகள்கூட எனக்கான எந்தச்சொல்லுக்காகவும் அசையவில்லை. நான் பிணமாக வந்துசேர்ந்திருந்தால்கூட அவர்கள் அழுவதை பார்த்து திருப்தியடைந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படி நின்றுகொண்டிருக்கிறார்கள். எனக்கு அந்த இடத்திலேயே குழறி அழவேண்டும் போல இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...