அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை

1.

IMG-20191008-WA0037மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

சிறந்த இலக்கியப் படைப்பு என்பதற்குக் கோட்பாட்டு அளவுகோல் ஏதும் இல்லை. வாழ்க்கையை எதிர்கொண்டவிதத்திலும் உண்மையைக் காணத் துணிந்த விதத்திலும் அதன் இலக்கியத்தரம் முன்வைக்கப்படுகிறது. மற்றொன்று, மேலான படைப்புகள் தந்த இலக்கிய அனுபவத்தின் அருகில் புதிய படைப்புகள் உண்டாக்கும் அனுபவத்தின் புதுமை அதன் இலக்கியத் தகுதியை நிலைநிறுத்துகிறது.

‘அக்கினி வளையங்கள்’ நாவலைப் படித்ததுமே அதன் மெய்மைத்தன்மை சார்ந்த உலகம் என்னை ஈர்த்துவிட்டது. ஒரு புனைகதை வரலாற்று நூலைவிட பலப்பலவிதத்தில் முக்கியமானது என்பது இப்படியான நாவல்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. எழுதாது, மறைக்கப்பட்ட விசயங்களை இந்நாவலும் கலைநயத்தோடு பேசுகின்றது. அந்த வகையில் என்னை ஈர்த்த ‘அக்கினி வளையங்கள்’ நாவல் மலேசிய நாவல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப்பெறும் என்று நம்புகின்றேன்.

இந்நாவலில் மக்களின் வாழிடங்கள், பிரதான சாலைகள், எஸ்டேட்டுகள், சிறுசிறு நகரங்கள், தொழிற்சாலைகள், சிறு நகரப்பெயர்கள், ஊர்கள், மாநிலங்கள், கார் வகைகள், லொடக் சீதாராம் பேருந்து, கட்டை வண்டிகள், இரயில்வே ஸ்டேசன்கள், அதன் கேட்டுகள், செந்தூல் செல்லும் பாதைகள், டீக்கடை, நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதை, சுண்ணாம்பு காளவாயில், காட்டுப்பாதை, டுரியன் பழத்தின் வாசனை, காட்டுப் பன்றியை வாட்டும் பூர்வக்குடிகள், புலிக்கறியின் சுவை, கைவிடப்பட்ட இடத்தில் வளர்ந்திருக்கும் மரவள்ளிக்கிழங்கு செடிகள் என எழும்பிவரும் புறஉலகச் சித்திரிப்புகள், பக்கிரிசாமி, அப்துல்லா, வடிவேல் போன்றோரின் தொழிற்சார்ந்த நடமாட்டங்கள், ஈயலம்பங்கள், குகைப்பாதைகள், புரட்சியாளர்களின் நடமாட்டங்கள், லியூ கோன்சிம்,  ஆ கோக், சர் ஹன் ரி போன்றோர் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள், ஓய்வு நேர சீட்டாட்டங்கள், சுரங்கப்பாதைகள், இதன் நிகழ்வுகளை ஒட்டிய புறஉலகப் பின்னணி கூடுதல் குறைவு இல்லாமல் விவரணையில் அழகாகக் கூடிவந்திருக்கின்றன. அந்தந்த மாந்தர்களின் இயல்பான உளவியல் கண்ணோட்டத்துடன் நிகழ்வுகள் விரிகின்றன. இது இந்நாவலுக்குக் கூடுதல் பலத்தைத் தருகின்றன. இந்த இடங்களும் மனிதர்களும் தமிழர் வாழ்வில் உணர்வுப் பூர்வமான நினைவுகளாகப் படிந்திருக்கின்றன. தங்கள் சொந்தப் பூமியாக உணரத்தலைப்பட்ட மக்கள் எதிர்கொண்ட அரசியல் நெருக்கடியை உள்ளிலிருந்து பேசுகிறது.

இந்நாவலில் வரும் சண்முகம்பிள்ளை கும்பாபிசேகத்தை நடத்தி முடித்ததின் வழி ஒரு எழுச்சியை அடைகிறார். சாரத்தில் அவர் மேலேறுகிறார். ‘தனது ஒவ்வொரு அடியையும் எண்ணியெண்ணி வைத்தார். சாரத்தின்வழி மேலே ஏற ஏற எதிலிருந்தோ விடுபட்டதுபோல் சிறகசைத்துப் பறக்க முயன்றார்! இப்போது மேலே சென்றுவிட்டார். இரவிலும் அகண்ட பிரபஞ்ச வெளியை அடைவதற்கு ஒரு கடல் புறா சிறகசைப்பது போல் அவரின் நினைவுகள் சிறகசைத்தன.’ இப்படியான மனவெழுச்சி அடையும் தருணத்தை எழுதிவிடுகிறார். மற்றோர் இடம் முத்துவின் காட்டுவழிப் பயணத்தில் வரும் காட்டை ‘ஓங்கி வளர்ந்த மரங்கள் ஆகாயத்தில் கைக்கூப்பி ஞானத்தேடல் நடத்திக் கொண்டிருந்தன’ என்று காட்சியைக் கவித்துவ மொழிக்குள் கொண்டு வருகிறார் சை.பீர்முகம்மது.

ஒரு சாதாரண தகவலை அழகாகச் சொல்லிவிட முடிகிறது அவரால். ‘செட்டி நாட்டுக்கே உரிய குழிப்பணியாரமும் அவியலும் தோட்டத்து மக்களுக்குப் புதிதாக இருந்தன. ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் மரவள்ளிக் கிழங்கை அவித்துச் சாப்பிட்டு நாக்கு வறண்டவர்களுக்கு… இந்த விருந்து மனதைக் குளிர்வித்தது’ என்று சஞ்சிக்கூலிகள் முதன்முதல் அடைந்த நாக்கின் சுவையை எழுதுகிறார்.

நாவல் கதாமாந்தர்கள் வழி இயங்கவில்லை. ஆசிரியர் கூறு முறையில் அவரது தலையீடே இல்லாமல் வேகமும் விறுவிறுப்பும் கொண்டதாக இருக்கிறது. சரளமான நடையும் கீழே வைக்கவிடாதபடியான ஒருவித புலனாய்வுத் தன்மை வாசிப்பில் வேகமாக இழுத்துச் செல்கிறது. இந்த இலகுதன்மை ஒருவகையில் வாசிப்பிற்கு நல்ல அம்சம் என்றே கருதுகின்றேன். பாத்திரங்களின் அகத்தின்வழி இயங்கினால் நிதானமும் கொந்தளிப்பின் பின்னலும் வாசிப்பில் தடையை ஏற்படுத்தும். தாஸ்தாவேஸ்கியின் புனைவுலகம் அப்படிப்பட்டது. பொதுவாக கார் ட்ரைவர், பீலி பழுதுபார்ப்பவர் போன்றோர்கள் துப்பறியும் கதைகளுக்குத் திருப்பங்கள் தரும் பாத்திரங்களாக க்ரைம் நாவல்களில் வருவார்கள். இந்நாவலில் இந்தப் பாத்திரங்கள் இலக்கியப் பூர்வமான பாத்திரங்களாக வடிவெடுத்திருக்கின்றனர். காலமும் களமும் சரியான பின்னணியில் வரலாற்றின் தேவையான தகவல்களோடு பின்னிப்பிணைவு கொண்டிருக்கிறது.

இந்நாவலில் முத்து புரட்சிகர இயக்கத்தை நோக்கி செல்லுமிடம் வருகிறது. அதைப் படித்ததும் ஜூலியோ கொத்சாரின் ‘சந்திப்பு’ கதை நினைவிற்கு வந்தது. உலகப்பிரசித்திப் பெற்ற கதை. அமெரிக்க கூட்டப் படைகளை எதிர்த்துத் தன் நாட்டுக்காகப் போராடும் இரு தளபதிகளைப் பற்றிய கதை. அமெரிக்கப் படை இரு போராளிக்குழுக்களை வளைக்கிறது. அவர்கள் அடர்ந்த காட்டின் வழியாகப் பிரிந்து பின்வாங்கி தாக்குகின்றனர். மறைந்து நகர்கின்றனர். மழைக்காலமானதால் சேறும் சகதியும் கால்களைப் புண்ணாக்குகின்றன. கொசுக்கடியில் மலேரியா காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆஸ்துமா நோயால் தலைவன் துன்பப்படுகிறான். பசி தாளாமல் கழுதையைக் கொன்று புசிக்கின்றனர். அந்த மாமிசம் உடலுக்குச் சேராமல் பொத்துக் கொப்பளித்து ரணமாகிவிடுகிறது. ஒரு குழுவில் இருக்கும் தலைவன் மற்றொரு குழுவில் இருக்கும் தலைவன் நிச்சயம் அமெரிக்கப்படையிடம் சிக்கி இறந்திருக்கக் கூடும் என்று நினைக்கின்றனர். பத்துநாள் நகர்விற்குப்பின் காட்டின் ஓரிடத்தில் இரு போராளிக் குழுக்களும் சந்திக்கின்றனர். அதுவரைப் பெயர்கள் தெரியாத தலைவர்கள் இருவரும் ஒரு பெருமரத்தின்கீழ் வருகின்றனர். ஒருவரிடமிருந்து சுருட்டை வாங்கிப் பற்றவைக்கிறார். அப்போது லூயிஸ் என்ற பிடல்காஸ்ட்ரோ சொல்கிறார் “சாதித்து விட்டாய் சே!” பதிலுக்கு “வேறெப்படி நினைத்தாய் காஸ்ட்ரோ?” என்கிறார் சே.குவேரா. கதை முழுக்க கியூபா புரட்சிக்குழுவின் தலைவனின் சண்டை அனுபவங்கள்தான். அதில் வேட்டுச் சத்தங்கள் கேட்கின்றன. இறுதியில் சந்திக்கும் போதுதான் தெரிகிறது. அவர்கள் பிடல்காஸ்ட்ரோவும் சேகுவேராவும் என்று. இப்படியான ஒரு புனைகதையைச் சௌத்சார் எழுதியிருக்கிறார். இக்கதைக்கு நிகரான ஒரு அனுபவத்தை முத்து சின்பெங் சந்திப்பில் பெறமுடிகிறது.

2

‘அக்கினி வளையங்கள்’ நாவலில் இரண்டு பிரதான பகுதிகள் இயங்குகின்றன. ஒன்று கம்யூனிஸ இயக்கத்தின் போராட்ட வாழ்க்கை. இரண்டு சண்முகம்பிள்ளை என்ற பெருமுதலாளியின் குடும்பவாழ்க்கை. வரலாறு தந்த சாராம்சத்தின் அடிப்படையில் இந்த இரண்டு உலகங்களை இப்புனைவின் வழி வெளிப்படுத்துகிறார். மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு பயங்கரவாத இயக்கமாகக் காட்டப்பட்ட கம்யூனிஸ விடுதலை இயக்கம் உண்மையில் இந்த மண்ணிற்காகச் செய்த தியாகங்களை, மக்களுக்கான விடுதலையை எவ்விதம் முன்னெடுத்தது என்பதைச் சொல்கிறது.

கிட்டத்தட்ட ஈழத்து விடுதலைப்புலிகளின் இயக்கம்போல மலேசியாவில் தனித்த செல்வாக்கு செலுத்திய ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம், இந்த கம்யூனிஸ இயக்கம். 1948-லிருந்து 1960 வரையான காலகட்டத்தில் இவ்வியக்கம், ஆங்கில ஆட்சிக்கும், மலேசிய தேசிய அரசியலுக்கும் எதிராக கொரிலா யுத்தமுறையைப் பின்பற்றிப் போராடியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் இவ்வியக்கம் எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்களை இந்நாவல் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பேசுகிறது.  ஜப்பானியர் வெளியேறியபின் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடிய தடை செய்யப்பட்ட காலம்தான் இந்நாவலின் மையம். அவசர காலத்தின் அதன் உச்சபட்ச வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் நாவல் இயங்குகிறது.

சில மலேசிய நாவல்களில் ஏதோ இரண்டு மூன்றுபேர் அங்கிங்கு சிறு குழுவாக இயங்குவதாக (காட்டப்பட்டல்ல) சொல்லப்பட்டிருக்கின்றன. சில வருடம் இயங்கி ஆங்காங்கே எதிர்த்த சில நபர்களை இழுத்துச் சென்று கொலை செய்ததான தோற்றத்தைத் தந்திருக்கின்றன. வேறெதும் செய்யமுடியாது மறைந்து போனதாகக் காட்டப் பட்டிருக்கின்றன. லங்காட் நதிக்கரை போன்ற நாவல்களில் கம்யூனிஸ குழுவினரின் எதிர்முகம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. அது ஒரு பொருட்படுத்தத்தக்க அரசியல் இயக்கம் இல்லை என்பதுபோல ஏனைய சில சித்திரங்கள் அந்நாவல்களில் வந்துபோயின.

300px-Cortázar

ஜூலியோ கொத்சார்

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் கம்யூனிஸ இயக்கத்தின் செயல்பாடு என்னவாக இருந்தது. அதன் அடிப்படைக் கொள்கைகள், தேசம் பற்றிய சித்திரம், மக்கள் என்பவர் யார். வர்க்கப்பிரச்சனை, மதம் குறித்த தனது நிலைப்பாடு என்ற பல்வேறு அம்சங்களில் மானிட சமத்துவம் என்கிற நியதியில் ஆங்கில அரசிற்கு எதிராக இயங்கிய தடை செய்யப்பட்ட இயக்கத்தின் செயல்பாடு இந்நாவல். புதிய தேச கட்டமைப்பை வலியுறுத்திய ஒரு கொரிலா யுத்த இயக்கப் புரட்சி பற்றியும் அதில் இந்தியர்களின் பங்களிப்பு பற்றியும் பேசும் முதல் மலேசிய நாவல். இதனைக் கூடிய மட்டும் உண்மையின் அருகில் கொண்டு சென்று காட்டுகிறது. பொதுமக்களைக் கொன்று குவித்த ஒரு இயக்கமாகக் காட்டப்பட்டு வரும் ஒரு சமூகத்தில் அதன் அரசியல், மானுட விடுதலை பற்றிய கனவாக இருந்தது என்பதை அதன் உள்ளிருந்து பேசுகிறது. பிரிட்டீஸ் அரசு காட்டிய வன்முறைக்கும்பல் என்ற தோற்றத்திற்கு மாறான விடுதலையின் சுயதோற்றத்தை இந்நாவல் காட்டுகிறது.

இந்நாவலில் தேசிங்கு, பாத்திமா, நாகப்பன், முத்து, ஜெயா, இராஜலட்சுமி என்ற சாதாரண உழைப்பாளிகள், உதிரியான வாழ்க்கையில் இருப்பவர்கள். தம் தொழில்சார்ந்து இவர்கள் பெற்ற அவமானங்கள், இயக்கத்தின் பக்கம் நகர்த்துகின்றன. இயக்கத்தில் சேர்வதும் பின் போராட்டக் களத்தில் இணைந்து செயல்படுவதும் அதன்பொருட்டுக் காவல்துறையிடம் சிக்கிக் குரூரமாக மிதிபடுவதும்; உதவி செய்தவர்கள் நாடு கடத்தப்படுவதும்; சிக்காமல் சாவகாசமாகத் தப்பித்து முன்செல்வதுமான பெரிய தியாக வரலாற்றிற்கு இப்பாத்திரங்களை மாதிரிகளாக முன்வைத்துச் சொல்கிறது. பிரஞ்சுப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னணியில் இவ்வித உதிரி மனிதர்களின் பங்களிப்புப் பெரிதாக இருந்தது என்பது ஒரு வரலாறு. அதுபோன்ற உதிரி மனிதர்களை இந்நாவலில் கொண்டு வருகிறார் நூலாசிரியர். எல்லா கரங்களும் லட்சிய நோக்கத்திற்கு இணைகிறபோதுதான் புரட்சி இயக்கத்தின் வெற்றி சாத்தியமாகும் என்பதற்கு ஒப்பானது இப்பாத்திரங்களின் சின்னச் சின்ன செயல்பாடுகள்.

சாதாரண உழைப்பாளி புரட்சி இயக்கத்தின் லட்சிய நோக்கத்திற்குள் வருவதற்கான காரணங்கள் இருக்கின்றன. சொந்த அவமானங்கள், அடிஉதைகள், சாதிய ஒடுக்குமுறைகள், நண்பர்களின் வழிகாட்டுதல்கள், அரசியல் நெருக்கடிகள், சமூகச் சூழல்கள் எல்லாம் காரணிகளாக இருப்பதை ஓட்டுநர் முத்து என்ற இளைஞனை முன்வைத்துக் காட்டுகிறார். தன்னுணர்வும் சுயமரியாதையும் வர்க்கமுரண்பாடும் முத்துவை இயக்கத்திற்குள் வரும்படிச் செய்கிறது. தனிமனிதன் பொது சமூக இயக்கத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொள்வதின் சித்திரத்தை முத்து பாத்திரத்தின் மூலம் காட்டியுள்ளார்.

சையது காக்காவின் மனைவி பாத்திமா பிரதிபலன்பாராது உதவும் மனம் கொண்டவர். கேரளாவில் பிறந்தவர். பெண்களுக்குப் பரிசுப் பணம் தந்து மணக்கும் வழக்கம் போய் வரதட்சணை வாங்கி பெண் எடுக்கும் வழக்கம் நம்பூதிரிகளின் பண்பாட்டால் இஸ்லாம் சமூகத்திற்குள் நுழைந்து பெண்களுக்கு சுமையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியதைச் சொல்வதோடு, இங்கு முக்காடு பெண்களுக்குப் பெரிய சல்லையை உண்டாக்கி விட்டதை மெல்லிய குரலில் சொல்பவள்.

மறைந்து திரியும் இந்தப் புரட்சியாளர்களுடன் கைக்கோர்த்து உணவுப் பொருட்களைக் கடத்திட பாத்திமா தொடர்ந்து உதவுகிறாள். போலிஸ் உளவாளியான வடிவேலுவைத் தேசிங்கு கொலை செய்கிறான். போலிஸ் நெருக்கடி முற்றுகிறது. உணவுப் பொருள் கடத்த இருந்த சமயத்தில் போலிஸிடம் சிக்குகிறாள். விசாரணைக்குப் பின் நாடு கடத்தப்படுகிறாள்.

பாத்திமாவின் உலகம் மிகச்சிறியது. இருபதுக்கு இருபது சதுரஅடியில் ஒரு சாயாக்கடை. பின் பகுதியில் வீடு. அதற்குப் பின் காடு. இந்த வீட்டில் இருந்தபடி உதவுகிறாள். சுற்றிலும் நல்ல மனிதர்களைப் பெற்றிருக்கிறாள். கைது செய்யப்பட்டு விசாரணைக்குச் செல்லும்போது அவளின் தியாக உணர்வு ஒரு நினைவுச்சின்னம்போல அக்கடை இருந்த இடத்தில் கவிகிறது. இயல்பானவிதத்தில் ஒரு புரட்சி காலகட்டத்தில் நம்பகத்தன்மையோடு உருவான பாத்திரம் பாத்திமா. இதை மேலும் அழகூட்டுகிற இடம். பாத்திமா இந்தியாவிற்கு நல்லபடியாகப் போய்ச்சேர ஜெயா தான் வைத்திருந்த நகைகளை அள்ளிக்கொடுத்து அனுப்புகிற இடம்தான். நாவலில் வரும் பாத்திமாவைவிட பீர்முகமது நேரடியாக விவரிக்கும் பாத்திமா இன்னும் அடர்த்தியானவள்.

தேசிங்கு புரட்சி இயக்கத்தின் சரியான பிரதிநிதி. முதலாளி சண்முகம் எஸ்டேட்டில் நீர்மோட்டார் மெக்கானிக் வேலைபார்த்துக் கொண்டு முதலாளிகளை அழித்தொழிக்கும் செயல் திட்டத்தில் தீவிரமாக இயங்குகிறான். வைப்பாட்டி வாழ்க்கை. கோயில் கும்பாபிசேகம் என்ற தர்பார், நகைமோகம், சொத்துகளைக் குவிப்பதில் உள்ள நாட்டம், சாதிய மேலாண்மை, எளியவர்கள் மீதான நிலவுடைமைப் பார்வையின் தன்னகங்காரம் என்று முதலாளியின் ஆடம்பர வாழ்க்கையை ஒருபுறமும். உழைக்கும் வர்க்கத்தின் பசி, பட்டினி, கிழிந்த உடுப்பு, ஓட்டுக்கூரை வாழ்க்கையை ஒருபுறமும் காட்டி முதலாளி கொல்லப்பட வேண்டியவர் என்ற நிலைப்பாட்டில் செயல்படுகிறான். அவனுடைய திட்டத்தில் அதிர்ஷ்டவசமாக முதலாளி சண்முகம் தப்பிக்கிறார். இதைச் செய்தது தேசிங்குதான் எனச் சந்தேகிக்கின்றனர். போலீஸ் கண்காணிப்பிற்கு உள்ளாவதை உணர்ந்து வேறு மாநிலத்திற்குச் சென்று மறைந்து செயல்படுகிறான்.

இந்நாவலில் தேசிங்கு, பாத்திமா, நாகப்பன், மாரி ஆகியோர் வரலாற்றுக் காலகட்டத்திற்குரிய புனைவுப் பாத்திரங்களாக எழுந்து நிற்கிறார்கள். நாயைக் கூட்டிக்கொண்டு அலையும் நாகப்பன், போராட்டக் குழுக்களுக்குத் தகவல்கொண்டு சேர்ப்பவனாகப் பிறர் ஊகிக்காத விதத்தில் செயல்படுகிறான். அவனும் இறுதியில் பிடிப்பட்டு நொறுங்க உதை வாங்குகிறான். மாரி புரட்சியாளர்களை மற்றொரு குழுவில் கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டத்தில் இயங்குகிறான். அவனும் இறுதியில் போலீசிடம் மாட்டிக்கொண்டு ரத்தம் தெறிக்க அடிவாங்குகிறான். தலைவர்களைக் காட்டிக்கொடுக்காத மனஉறுதிமிக்க போராளிகள் இருக்கிறார்கள் என்பது போலவே பணத்திற்கு ஆசைப்பட்டுப் போராளிக் குழுக்களில் காட்டிக் கொடுக்கும் கயவாளிகள் இருப்பதையும் பார்க்கிறோம். லட்சியநோக்கில் கயமையும், சுயநலமும் புகுந்தபின் இயக்கம் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற அபத்த தரிசனத்தை இந்நாவலில் காண்கிறோம். இது முற்று முழுதான இயக்கக் காலத்தை எடுத்துக் கொண்டிருந்தால் நாவல் பெரிய இடத்தைத் தொட்டிருக்கும்.

ஒரு காலத்தின் வரலாற்று வழித்தடங்கள் எப்படி இருந்தது என்பதை நன்றாகவே சொல்கிறது. நேதாஜி போன்ற வரலாற்று மாந்தர்களைப் போலிகள் தங்களுக்குச் சாதகமாக வடிவமைத்துக்கொள்கிற திறமையான கூத்தை வடிவேலு போன்ற உளவாளிகள் வழி சேர்த்துச் சொல்கிறது. தூக்கிலிடப்பட்ட கணபதி, கூர்க்கா படையினரால் கொல்லப்பட்ட வீரசேனன், நாடுகடத்தப்பட்ட குருதேவர், பொறைக்கலம், நேதாஜியின் போராட்ட நடவடிக்கை, கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக இருந்த லைதேக்கின் அந்தரங்க வாழ்க்கை, போராட்டக்களத்தில் நிற்கும் தலைவர் சின்பெங், கட்டுத்திட்டத்தில் காருண்யம் காட்டிய சுதர்மனின் ஏக்கம், என வரலாற்றின் நிஜநாயகர்கள் நாவலில் செய்தியாகவோ புனைவின் நிஜத்திலோ வருகிறார்கள். இவர்கள் நாவலின் ஓட்டத்தில் ஊடாடி வலுவானவிதத்தில் புனைவு இயக்கத்தை மேலெடுக்கிறார்கள். சிலாங்கூர் பகுதியில் இயக்கத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு நபராகப் போலீசார் கண்காணிக்கப்பட்டுக் கைதாகின்றனர். அந்தப்பகுதி முழுக்க தீவிரமாக இயங்கிய அதன் சித்திரம் இல்லாது போகிறது. போராட்ட உணர்வு கலைந்துபோன அரூப சோகத்தின் வாசனைத் தாக்குகிறது. காலத்தின் வெறுமையைச் சொல்லப்படாத விதத்தில் சொல்லியிருக்கிறார் சை.பீர்முகமது. சிலாங்கூர் கம்யூனிஸ்டு கட்சி தலைவரான லீயூ சோன் கிம்மை இயக்க கைக்கூலிகளே (அரசுவைத்த ஏலத்திற்கு ஆசைப்பட்டு) சுட்டுக்கொன்று கழியில் கட்டித் தொங்கவிட்டு வரும் காட்சியைக் காணும்போது ஓர் இயக்கம் அடைந்து கொண்டிருக்கும் வீழ்ச்சியை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

கலவரச்சூழலில் முதலாளிகள் தோட்டங்களை மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிட்டு இங்கிலாந்திற்கோ, சீனாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ ஓட எத்தனிக்கும்போது துணிந்து நிலங்களை வாங்குவோர் புதிய முதலாளிகளாகத் தலையெடுக்கின்றனர். அதில் ஒருவர் சண்முகம்பிள்ளை. தேவகோட்டையைச் சேர்ந்த இராமசாமி செட்டியாரால் தரகு வேலைபார்க்கும் சீனனின் நட்பால் பணத்தை மாற்றிப்போட்டுப் பெரும் முதலாளியாக உருவெடுக்கிறார். பெரிய பெரிய தோட்டங்கள் துண்டாடப்பட்ட காலத்தையும் கலவரச் சூழலையும், ரப்பர் வீழ்ச்சியையும் பயன்படுத்தி எஸ்டேட்டுகளை வாங்கிப்போட்டு உருவெடுக்கிற புதிய முதலாளிகள் பற்றிய சித்திரம் இந்நாவலில் சிறப்பாகக் கூடிவந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் கம்யூனிஸ இயக்கத்திற்குத் துணைபோவதை அறிந்த அரசு, காவலைக் கடுமையாக்குகிறது.   சொந்த விவசாய நிலங்களில் வாழ்ந்த சீனர்களை  வெளியேற்றி புதிய குடியிருப்புகளை உருவாக்கி  சீனர்களைத் தனியாகவும் அடைக்கின்றனர். போராளிகளுக்கு உணவு, துரித பொருட்கள், தகவல் போகாதபடி முடக்கும் செயலாக இது அமைகிறது. ஒடுக்குமுறைக்கு ஏதுவான தந்திரமான இத்திட்டத்தினால் போராளிகளைப் பலவீனமாக்குகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர். இந்நாவலில் காலம் மிக வலுவான ஒரு பாத்திரமாக இயங்குகிறது.

நாவல் நிகழும்காலம் மூன்றாண்டுகள் என்றாலும் இரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமான காலத்தையும் இணைத்தே பேசுகிறது. ஜப்பான்காரன் செய்த கொடுமைகளில் சிதைந்துபோன தமிழர்களின் வாழ்வு பற்றியும் பேசுகிறது.

போராளிகள் மலேசிய காடுகள் வழியாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதும்; அவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் தகவல் தரும் தகவலாளிகள், பாதை காட்டுவோர், பயணத்தைத் திடீரென மாற்றியமைப்போர், எதிர்பாராத விதத்தில் அறிமுகமற்ற புரட்சியாளர் வீட்டில் தங்குவோர், அவர்கள் தரும் ஆலோசனைகள், சுற்றி வளைக்கும் போலீசிடமிருந்து தப்பும் தருணங்கள், பிரிந்தவர்கள் ஒன்றுசேர்தல், சுற்றி வளைப்பில் சிக்கிக்கொள்வோர் இவை போன்ற சந்தர்ப்பங்கள் நாவலில் தற்செயல் நிகழ்வுகளாக உருமாறுவது ஒரு போராட்டக் களத்தை வலுவாக உருவாக்குகிறது. முத்துவின் பயணத்தில் இவ்வம்சம் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.

சஸ்பென்சுகளும், திடீர் திருப்பங்களும் எதிர்பாராத சந்திப்புகளும், காட்டில் கிடைக்கின்ற உணவுகள், புலிவேட்டை, பன்றிக்கறி, நீர்நிலைகள், சுரங்கப்பாதை, ஆதிவாசிகள், ஈயம் எடுக்கும் குழிகள், சின்பெங்கின் போராட்டக்களம் என்ற தன் ஊடான பின்னணி நன்றாகவே கூடி வந்திருக்கிறது. முத்து இந்நாவலின் மையப்பாத்திரம். அவனைவிட அவனைச் சுற்றி இயங்கும் தேசிங்கு, நாகப்பன், மாரி, அலாய் மிகமிக வலுவான உயிரோட்டமுள்ள பாத்திரங்கள்.

புரட்சி இயக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட சுதர்மன் சந்திப்பு நாவலில் நேரவில்லை என்றாலும், அதுவே அப்பாத்திரத்திற்கு ஒரு அழுத்தத்தையும் கொடுக்கிறது. பாராமலேயே செவியில் மட்டும் விழுந்த பெயர் சாத்தியம்தானே.

3

இப்போராட்ட வாழ்க்கையைச் சிறப்பாக வெளிப்படுத்திய புனைவு மாந்தர்களைப் போலவே இப்புனைவிற்குப் பொருந்தாத வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருப்பவர்களைத் தாராளமனதுடன் தியாகவுணர்வுள்ளவர்களாக உலவவிட்டிருக்கிறார்.

சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளியாக இருந்த ஜெயா சண்முகம்பிள்ளைக்கு வைப்பாட்டியாகி, பின் அவரிடமிருந்து விலகி வந்து முத்துவின் ஆதரவில் நடமாடும் டீக்கடை பாத்திரத்தை ஏந்துகிறாள். புரட்சியாளர்களுக்கு உணவு வழங்குதல், தகவல் தருதல், பின் புரட்சிக்களத்திற்குச் செல்லுதல் என்கிற பரிமாணம் நம்பும்படியாக இல்லை. பாலியல் உலகின் அத்தனைக் கசப்புகளிலிருந்தும் மீண்டு, சண்முகம் பிள்ளைக்கு வைப்பாட்டியாக வந்து சுகங்களைப் பாதுகாப்போடு அனுபவிக்கிற பெண் அவரை விட்டுப் புரட்சிக்களத்திற்கு வருகிறாள் என்பது வெற்று லட்சியவாத புனைவாக இருக்கிறது. (லத்தின் அமெரிக்க நாடுகளின் புரட்சி காலகட்டத்தில் அதிபர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து ரகசியங்களைப் பெற்றுத்தந்த பெண்மணிகளுடன் இது ஒப்பிடத்தக்கதல்ல). ஜெயா சண்முகம்பிள்ளையை விட்டு வருவதற்கு வலுவான காரணமில்லை. வந்தபின் சண்முகம்பிள்ளையின் மகன் ராஜசுந்தரம் கேட்டுக் கொண்டதற்காக ஒரு காரணம் வைக்கப்படுகிறது. நா.பார்த்தசாரதி, அகிலன், ரா.சு.நல்லபெருமாள் போன்றோர் நாவலில் வரும் தேவதாசிப் பெண்கள் பெரிய காந்தியவாதிகளாக மாறி போராடுவதைப் போலத்தான் ஜெயாவும் இருக்கிறாள். யதார்த்த வாழ்வு உண்டாக்கும் படிப்பினைக்கு முரணான பாத்திரவளர்ப்பு. ஜெயா சண்முகம் பிள்ளையிடம் இருந்து விலகிய பாலியல் தொழிலாளி. ஆனாலும்  இவளை யாரும் காமக்கண் கொண்டு பார்க்காமல் இருக்கின்றனர்.

‘புத்துயிர்ப்பு’ நாவலில் வரும் நெஹ்லூதவ் தன்னால் ஏமாற்றிக் கெடுக்கப்பட்ட மாஸ்வாலாவை இருபது ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் அடிப்படையில் சந்திக்கிறான். அவளுக்கு ஒருபுதிய வாழ்க்கையை ஏற்படுத்தித்தர பின்தொடர்கிறான். இந்தப் பிரபுவின் குடும்பத்தில் 17வயது பெண்மணியாக வேலை செய்தவளாக இப்போது இல்லை. அவள் தேர்ந்த முரட்டுத்தனமான விபச்சாரியாக இருக்கிறாள். அந்த கன்னியின் மனம் முற்றாக மாறி வேறொரு பெண்ணாக, விபச்சாரியின் சாகசங்களை முழுமையாக வெளிப்படுத்துபவளாக மாறிவிடுகிறாள். இவள் வேறு என்று உணர்கிறான். இப்படி ஆக்கியதற்குத் தான் முதற்காரணம் என்று உணர்கிறான். என்றாலும் மாற்றிவிட பின்தொடர்கிறான். தன் கீழ்மையிலிருந்து அவன் புத்துயிர்ப்பு பெறுகிறான். அவள் நெஹ்லூதவ் காதலையெல்லாம் கடந்து வந்தவள். பல ஆடவர்களின் ஏமாற்றுத்தளங்களை சந்தித்துச் சந்தித்து அவளும் தந்திரசாலியாக மாறிப்போனாள். மாற்றமுடியாத வேறு குணம் படைத்தவள் என்று டால்ஸ்டாய் மாஸ்வெலாவைக் கண்டடைகிறார். இங்கு ஜெயா ஒழுக்கம் மிக்கவளாக மாறுகிறாள். திருநங்கையான ராஜலட்சுமியும் விபச்சார விடுதியில் இருந்து வந்தவள்தான். ரொம்பப் பாதுகாப்பான விதத்தில் வடை காப்பி விற்றுப் புரட்சிபண்ணுகிறாள் என்பதும் நம்பும்படியாக இல்லை.

பேசாபொருளைப் பேசுதல் என்பது பின்நவீனத்துவத்தின் வருகையால் ஏற்பட்டது. இது புனைவுவெளியில் புதிய சாத்தியங்களைக் கொண்டுவந்தது. அதேபோல புனைவு முறைகளிலும் மாற்றங்களுக்கு இடமளித்தது. சமூக யதார்த்தங்களுக்கு நெருக்கமில்லாத விசயங்களைப் புனைவில் கையாள பின் நவீனத்துவம் இடமளித்தது. அதற்குத் தர்க்கம் ஒரு பொருட்டல்ல. புனைவின் மாயங்களை எழுத்துவகைக்காக ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்தக் கோட்பாட்டை ஏற்று எழுதிய எவரும் இன்றளவும் மிகச்சிறந்த படைப்புகளைத் தரமுடிந்ததில்லை. இந்தப் பின் நவீனத்துவத்திற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் இந்தக் கோட்பாடு என்னவென்று தெரியாத, அதுபற்றி பேசப்படாத காலத்தில் எழுதிய ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைத்தான் உதாரணம் சொல்ல முடிகிறது. கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம்’ நகுலனின் ‘நினைவுப் பாதை’ இப்படித்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. பின் நவீனத்துவமோ நவீனத்துவ லட்சியவாதமோ, எதுவாயின் படைப்பின் உண்மை என்ற ஆழ அகலங்களிலிருந்து சிறந்த படைப்பு என்பது நிலைபெறுகிறது. ‘அக்கினி வளைங்கள்’ ஒரு வரலாற்றுக் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட யதார்த்த நாவல். இதில் விளிம்புநிலை மனிதர்கள் புரட்சிக்கு உதவியிருக்கலாம். அந்தந்த நிலையிலிருந்தே செய்வதாக இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஜெயா போன்ற பாலியல் தொழிலாளி புரட்சிக்குச் சென்றிருக்கக்கூடும். அந்த ஜெயா சண்முகம்பிள்ளை போன்ற பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலில் இருப்பவளாக இருக்கமாட்டாள்.

தாழ்த்தப்பட்ட பண்டார குலத்தில் பிறந்த முத்து சண்முகம்பிள்ளையின் கார் ட்ரைவர். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயா அவனது கையைத் தொட்டதைக் காரணமாக வைத்து சண்முகம்பிள்ளை முத்துவை அடி அடி என்று அடிக்கிறார். ஒரு புரட்சி இயக்கத்திற்கு வர கூடுதலான அடி உதைகளையும் அவமானங்களையும் பெற்றவன் என்ற அனுபவத்தை முத்துவிற்கு உண்டாக்குகிறார். முத்துவின் இந்தப் பொறுமைசாலிதனத்தின் வழி சண்முகம்பிள்ளையைப் போராளிகள் கொன்று இருந்தால் அர்த்தப்பூர்வமாக மாறியிருக்கும். ஒரு தொடர்கதையை நகர்த்த முத்து பயன்படுவதால் அந்நிகழ்வு நாவலில் நிகழாமல் தவிர்க்கப்படுகிறது.

001

சை.பீர்முகம்மது

தேசிங்குடனான முத்துவின் நட்பு போராட்டச் சூழலுக்குள் வரநேர்கிறது. கிட்டத்தட்ட முத்துவின் வழிதான் இந்தப் போராட்ட இயக்கமே காட்டப்படுகிறது. இதைக்காட்டத்தான் அவனது பயணங்கள் அமைகின்றன. எந்த இடத்திலும் களத்தில் நின்று போராடாத முத்து நாவலின் இறுதியில் பெரிய பொறுப்பை ஏற்கிறான். அரசுடனான சமாதான உடன்படிக்கைக்கு வரும் தலைவர் சின்பெங்கின் பாதுகாப்புக் குழுவின் உள்வட்டத்தில் இருபதுபேரில் ஒருவனாக நிற்கிறான். இது எப்படி சாத்தியம்? முத்து ஒரு கொரிலா போராளியும் அல்ல. இயக்கப் பயிற்சி பெற்றவனும் அல்ல. களத்தில் நின்றவனும் அல்ல. தேசிங்கோ, சுதர்மனோ அப்படியான பாதுகாப்புப் பணியில் நிற்கிறான் என்றால் நம்பும்படியாக இருக்கும். முத்துவின் வழி உருவாவது ஒரு போராட்ட இயக்கம் எப்படி மறைந்து இயங்குகிறது என்பதுதான். அது நன்றாகவே கூடி வந்திருக்கிறது. ஆனால் துப்பாக்கியையே தொடாதவன் – அதை ஏந்திப் போராடாதவன் எப்படி சின்பெங் பாதுகாப்புக் குழுவில் ஒருவனாக நிற்க முடியும்? இந்த நாவலின் தலைமைப் பாத்திரங்களில் முத்து ஒருவனாக வடிவமைக்கப்படுகிறான். அவனைக் களத்தில் நிற்கும் பெரிய போராளியாக நிறுத்தும்போது வாசகமனம் நிறைவடையும் என்பதுதான். இது தொடர்கதை வாசகர்களுக்காகக் கட்டமைக்கப்படும் இடம். நாவலின் இடம் எப்போதும் வாசகனை நோக்கியது அல்ல. பாத்திரங்களின்மீது துளி பொய்மையையும் ஏற்றவிடாது என்பதுதான் நாவலின் மெய்மை. ஒருவேளை தேசிங்கு, மாரி இருவரில் ஒருவரை நாவலின் மைய மைந்தனாக வளர்த்தெடுத்திருந்தால் அவர்கள் காட்டும் கொரிலா உலகம் வேறாக மாறியிருக்கும். அவர்கள் எப்படி பட்டினிகிடந்தார்கள், உணவிற்காகக் கொள்ளையடித்தார்கள், பெற்றோர்கள், எதிரிகளைச் சுற்றிவளைத்தபோது எப்படித் தப்பித்தார்கள். என்னென்ன இழந்தார்கள், சாதித்தார்கள். மழையில் வெயிலில் என்னவாக இருந்தார்கள். துரோகிகளை என்ன செய்தார்கள். காட்டு வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார்கள். வெற்றி தோல்விகளை எப்படி எதிர்கொண்டார்கள். வெகுஜன மக்களிடம் என்ன பெயர் எடுத்தார்கள், வெகு மக்களின் சிலரை கடத்திச் சென்று கொன்றதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் நாவலில் விரிக்க சாத்தியங்கள் இருக்கும். முத்து சண்முகம்பிள்ளையின் நம்பிக்கையான ஓட்டுநர். அது அவனுக்கும் தெரியும். ஜெயாவும் அவருக்கு நெருக்கமானவள். எனவே இருவராலும் ஆபத்து வராது. அதுதான் நாவலில் நிகழ்கிறது. தேசிங்கு என்றால் நாவல் வேறுமாதிரி திரும்பி இருக்கும்.

முத்து இந்த நாவலில் ஒரு டூரிஸ்ட் புரட்சியாளனைப்போல போராளிகள், செய்தி பரிமாறுபவர்கள், வழிக்காட்டுபவர்கள், காட்டுவழிப் பயணங்கள், அங்கே கிடைக்கும் உணவுவகைகள், மலைமக்கள், தாக்குதலின் கவனங்களை நமக்குக் காட்ட உதவுகிறான். நாவலில் முத்துவிற்கு எந்தச் சிக்கலான பொறுப்பும் இல்லை. ஆயுதமேந்தும் தருணமும் வாய்க்கவில்லை. ஏன் சிகரெட் புட்டியிலிருந்து ஜொகூருக்குப் போகிறான். அங்கிருந்த மற்றொரு இடத்திற்குச் செல்கிறான் என்பதற்கெல்லாம் வலுவான காரணங்கள் இல்லை. ஆனால் முத்து பாத்திரத்தின் வழி போராட்டச் சித்திரம் ஒன்று உருவாகிறது. நாவலின் துவக்கத்திலிருந்து இந்தச் சூழலுக்குள்ளே அவன் நகர்வதால் நமக்கு நெருக்கமான ஒரு மாந்தனாக ஆகிவிடுகிறான். கதையை நகர்த்திச் செல்ல ஏதுவாகிறான். அவனது இருப்பு நாவலில் ஆழமானதல்ல. அதாவது போராட்டப் பின்னணியில் அவன் வெறும் பார்வையாளந்தான்.

இந்த நாவல் அது கையாண்ட பிரச்சனையைப் பரிபூரணமான விதத்தில் அணுகவில்லை. சின்பெங்கின் சமாதான (1955) உடன்படிக்கை தோல்வியும், காட்டிக்கொடுக்கும் செயலால் இயக்கம் நிலைகுலைவதுமாக ஓரிடத்தில் நிற்கிறது. இது ஒரு இயக்கத்தின் தத்தளிப்பான பகுதி. முக்கால்கிணற்றைத் தாண்டியபடி நிற்கிறது. கம்யூனிஸ இயக்கத்தின் காரணமாகக் கொண்டுவரப்பட்ட  அவசர காலம் 1960 வரை நீடிக்கிறது. பின் அழித்தொழிக்கவும் படுகிறது. இந்த வீழ்ச்சி சார்ந்த ஒரு முழுமையை நாவல் அலாவி இருக்கவேண்டும். அப்போதுதான் நாவலுக்குள்ளே இயக்கம் குறித்த பரிசீலனையும் உருவாகும். அது ஒரு மெய்மையை முன்வைக்கும். அபத்த தரிசனமாகக் கூட அது அமையும். அந்த அழிவின் சித்திரம் லட்சியத்தின் தோல்வியாக இருக்கலாம். அது மிகப்பெரிய விவாதமாக அமையும். நாவல் கண்டடையும் இடம் அதுதான். இயக்கத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிப் போட்டு முதலாளிகளாக மாறுகிறார்கள். லட்சிய புருஷர்களின் கனவு இந்தப் பூமியில் ரத்தமாக உறைந்திருக்கிறது. அவர்களது விடுதலை என்ற கனவு கானல் நீரானது என்றார் சை.பீர்முகமது தன் பேச்சிடையே. இந்த எல்லையை இந்த நாவல் தொட்டிருக்க வேண்டும்.

மலேசிய கம்யூனிஸ்டு கட்சி செயலாளராக இருந்த லை தேக்  ஜப்பான் ஆட்சியில் ஜப்பான்காரனுக்கும், பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயனுக்கும் உளவு பார்த்ததோடு கட்சியின் பணத்தைக் கையாடல் செய்து சொத்துகளைக் குவித்தது நாவலில் செய்தியாக வருகிறது. இந்த உள்ளடி வேலைகளோடு அவர் கட்சிக்கும் பணியாற்றியிருக்கிறார் என்பதும் உண்மை. இம்மாதிரி 1955க்குப் பின் இயக்கம் வீழ்ச்சியுற்றத்தில் உள்ளே நிகழ்ந்த குழறுபடிகளைத் தொட்டிருந்தால் முழுமையாக இருக்கும். ஒரு எழுச்சியான உச்சத்தைத்தொட்டு நின்றுவிட்டது என்றாலும் ஒரு காலகட்டத்தில் இயக்கத்தின் தியாகம் இத்தேசத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை ஒரு கோணத்தில் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறது. அதே சமயம் ஒரு அரசியல் நெருக்கடிமிக்க காலத்தில் சண்முகம்பிள்ளை என்ற முதலாளியைச் சுற்றி நடக்கும் கதை என்று கொண்டால் ஒரு முழுமையான நாவல் என்று கொள்ளலாம். என்றாலும் இந்நாவல் போராட்டக் களத்தைத்தான் மையமாகக் கொண்டு இயங்குகிறது.

4

சண்முகம்பிள்ளையின் உலகம் மிகமிக நேர்த்தியாக உருவாகி இருக்கிறது. இராமசாமி செட்டியார் வழியாக மலேசிய வட்டிக்கடைக்கு வந்த விதம்; ஆ சாய்யின் வழிகாட்டுதலில் பெரு முதலாளியாக உயர்ந்தது; அதில் கடைப்பிடிக்கப்பட்ட நேர்மை; காலத்தைப் பயன்படுத்திக் கொண்ட துணிவு; ஜெயாவின் மீதான தீராத மோகம்; அவளது அரவணைப்பு விலக நேரும்போது உண்டாகும் மன தத்தளிப்பு, முத்து மீதான கோபம், அவன் மீதான வன்மம்; அவன் தன் காலடியில் கிடக்கவேண்டும் என்ற குரூர ஆசை, அவன் ஒரு இயக்கவாதி என்று தெரிந்ததும் ஏற்படுகிற பயம்; தோட்டத் துண்டாலில் சேர்த்த செல்வம்; போராளிகள் தன்னைத் கொன்று விடுவார்கள் என்ற அச்சம்; கோயில் கும்பாபிசேகத்தில் காட்டும் அக்கறை; காரைக்குடி சாமியாரின் விருப்பங்களுக்கு வளைந்துபோகும் பொருளாசை; அதன் வீழ்ச்சியில் மகன்படும் வேதனையை உணரும் இடம்; நாடகக் கலைஞர்கள் மீது நேசம்; சிதைந்து கிடக்கும் தமிழ்ப்பள்ளி மீது ஒரு கணம் தோன்றும் பரிவு; பத்து மலை அருவிப்பக்கம் உறவில் இருந்தவர்கள் புரட்சியாளர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் பயம், இவ்விதம் சண்முகம்பிள்ளையின் பாத்திரம் அரசியல் நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையாக உருவாகி உள்ளது. மனஅவஸ்தையும் விருப்பமும் அவரது மனதிலிருந்து முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. முத்து ஒரு லட்சிய மாந்தன் என்று கொண்டால், சண்முகம்பிள்ளை ரத்தமும் சதையுமான நிலவுடைமைச் சமூகத்தின் அசலான பிரதிநிதி. ஒருவகையில் தேசிங்கும் சண்முகம்பிள்ளையும் வர்க்க முரண்பாட்டின் இருவேறு வடிவங்கள். எல்லா மாந்தர்களைவிடவும் முழுமையாக உருவான பாத்திரம் சண்முகம்பிள்ளை பாத்திரம்தான். நீக்கமற நிறைந்திருக்கும் அவரது ஆசை, கனவு, பயம், வன்மம் எதிர்காலத்திட்டம், சாதிய மேலாண்மை எல்லாம் உளவியலின் தத்தளிப்பிலேயே உருவாகி வந்திருப்பதால் உயிரோட்டமுள்ள பாத்திரமாக உருவாகி உள்ளது.

சாமியார், அவரது ஆசிரமத்து வாழ்க்கை, மகாலட்சுமி, வெங்கட்ராமன் இருவரின் வேண்டுதல், சாமியாருக்கும் மகாலட்சுமிக்கும் பிறந்த டாக்டர் விசாலம், தன் பிறப்பு ரகசியம் அறிந்த விசாலம் போதைப் பழக்கத்தில் சிக்கித் துன்பப்படுவது, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத்தர சாமியார் விரும்புவது, சண்முகம்பிள்ளையை அதற்கு உடன்பட வைப்பது, மகாலட்சுமியின் மகனை (சாமியாரின் மகன்) இளையபட்டம் ஆக்குவது இப்படி வெளியில் தெரியாத ஆன்மீகவாதியின் உலகம் துருத்தல் இல்லாமல் இந்நாவலில் பொருந்தி இருக்கிறது. நதி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்பது வழக்கு. பார்ப்பது என்பது நூலாசிரியனின் வேலை. அந்தக் காரியத்தை பீர்முகமது செய்திருக்கிறார். இதில் சாமியார், இராஜசுந்தரம் அளவு மற்ற மாந்தர்கள் மலரவில்லை.

சண்முகம்பிள்ளையின் எழுச்சியும் வீழ்ச்சியும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சண்முகம்பிள்ளை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாமலே வீழ்ச்சியடைகிறார். மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது. சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளானது வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார்.

 

5

இந்நாவலின் செப்பனிடுதல் குறித்து இவ்விடத்தில் பேசவேண்டியதில்லைதான். படைப்பாளிகளுக்கு ஏதேனும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் சிலவற்றைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். இதனைச் சுட்டிக்காட்டுவதால் இந்நாவலின் இலக்கியத்தரம் எந்தவகையிலும் குறைவுபடாது. செப்பனிடப்பட்டிருந்தால் ஒரு துல்லியத்தன்மையும் நம்பகத்தன்மையும் நாவலில் மேவி கலை ஆற்றலின் அழகு கூடியிருக்கும். ‘அக்கினி வளையங்கள்’ மலேசிய தென்றல் வார இதழில் வந்த தொடர்கதை. தொடர்கதைக்கே உரிய அம்சங்கள் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் இருக்கிறது. முன் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட நிகழ்வை இரண்டு மூன்று வரிகளில் நினைவூட்டி எழுதும் வழக்கத்தையும் வாசக நோக்கத்தையும் எடிட் செய்திருக்கலாம்.

கும்பாபிசேகம் முடிந்தபின் பக்கிரிசாமி வெற்றிலை கட்டைக் கொண்டுவரும் காட்சியை முந்தின அத்தியாயத்திலே ஊடாடவிட்டிருக்கலாம். தேசிங்கிற்கு ஒரு கண்ணில் பூ விழுந்த செய்தி ரொம்பப் பின்தள்ளி சொல்லப்படுகிறது. அவர் அறிமுகம் ஆகும் இடத்திலேயே இம்மாதிரி அடையாள தோற்றம் சொல்லப்பட்டிருந்தால் நேர்த்தியாக இருக்கும். வைப்பாட்டியாக இருக்கும் ஜெயா கர்ப்பம் தரித்தல் குழந்தைப்பேறு பற்றி ஏதும் இல்லை.

வர்ணனை செய்யும்போது ‘ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது’; ‘நகைக்கடை பொம்மையின் நகை அலங்காரம் போல’ இவ்விதமான உவமைகள் 1950-ல் எந்த அளவு காலத்தோடு பொருந்தியிருக்கும் என்பது சந்தேகத்தைத் தருகிறது. கே.பி.சுந்தரம்பாளின் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ பாடல் வருகிறது. 1948 – 55 காலகட்டத்தில் அப்பாடல் வரவில்லை என்று நினைக்கிறேன்.

மலேசியா என்பதே மலைகளின் பிரதேசம் என்பதுதான். இதில் மரங்களுக்கா பஞ்சம். நான்கைந்து இடங்களில் அடையாளத்திற்கு தூங்கு மூஞ்சி மரம் மட்டும்தான் வருகிறது.

பாத்திமாவின் குழந்தை, சண்முகம்பிள்ளையின் மனைவி, மருமகள் சற்றே இன்னும் ஊடாடி இருக்கலாம். தனித்தனியாகத் தொடாமல் தன்போக்கில் இயைந்திருக்கவேண்டும்.

இவையெல்லாம் எளிதாகத் திருத்தும் இடங்கள்தான். இதனைச் சுட்டிக்காட்டுவதால் நாவலின் தரம் குறித்து எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை. இவற்றை இங்கு சுட்டிக்காட்டாமலே கூட கட்டுரையை முடித்திருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது. ஏனென்றால் ‘அக்கினி வளையங்கள்’ நல்ல நாவல்.

 

2 comments for “அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை

  1. Punithawathy
    May 1, 2020 at 1:49 pm

    சிற்பத்திற்கு உயிர் கொடுத்ததுப்போல உள்ளது உங்களின் விமர்சனம் சார் .

  2. Inbachudar Muthuchandran
    May 20, 2020 at 11:36 am

    சு.வேணுகோபல் அவர்கள் மிகச்சிறப்பாக இந்த புதினத்தை ஆய்வு செய்துள்ளார். இதில் வரும் கதாப்பாத்திரங்களை அறிந்து குறை நிறைகளை தெளிவாக தெரிவித்துள்ளார். மலேசிய நாட்டின் கம்னீசு பயங்கரவாதிகளையும் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு மிகச்சிறந்த ஆய்வு.

Leave a Reply to Punithawathy Cancel reply