‘அழகான மெளனம்’ : பதுக்கப்பட்ட உண்மைகள்

azakana maunamமலேசிய இலக்கியத்தில் நீங்கா இடம்பிடித்தக் களம் என்றால் அது தோட்ட புறம்தான். தோட்ட புற வாழ்க்கையை எத்தனை பக்கங்களுக்கு எழுதினாலும், எத்தனை பேர் வந்து எழுதினாலும் அது நிறைவடையாமல் நீண்டு கொண்டே செல்லக் கூடியதாக மலேசிய எழுத்தாளர்கள் மனதில் பதிந்து போய் கிடக்கின்றது. தோட்ட புறவாழ்வென்பது இரு வேறு காலகட்டங்களைக் கொண்டதாக வகுத்துக் கொள்ளலாம். முதலாவது ரப்பர் தோட்ட வாழ்க்கை. இரண்டாவது செம்பனை தோட்ட வாழ்க்கை. இரண்டும் பெருமுதலாளிகளின் நிர்வாகத்தின் கீழ் மலேசிய தமிழர்களுக்கு அமைந்த வாழ்க்கையாக இருந்தாலும், அவ்விரு அனுவங்களில் பெரும் வேறுபாடு உள்ளது. பயிர் வகையாலும் அதன் பராமரிப்பு முறையாலும் மக்களின் அடிப்படை தொழில் முறைகள் மாற்றங்கண்டன.

ரப்பர் தோட்டங்கள் காலத்தால் மூத்தவை. கரும்பு தோட்டங்களில் தொடங்கிய மலேசிய விவசாய உற்பத்தியானது, ரப்பர், செம்பனை, கொக்கோ என கால மாற்றத்திற்கு ஏற்பவும் உலக பொருளாதார சூழல்களுக்கு ஏற்பவும்  மாறியுள்ளது. மலேசிய தமிழ் இலக்கியங்களில் பெரிதும் ஆதிக்கம் செய்வது ரப்பர் தோட்டங்கள்தான்.

தோட்ட புற வாழ்க்கை பல கோணங்களில் இலக்கியமாகியுள்ளது.  பல எழுத்தாளர்கள் அழுத்தமாக தோட்டபுற வாழ்வை எழுதிக் காட்டியுள்ளனர். சீ.முத்துசாமி, கோ. புண்ணியவான், சை.பீர்முகமது, எம்.குமரன், ஐ.இளவழகு என பலர் தோட்டபுற வாழ்வை குறிப்பாக அவர்கள் காலத்தில் முக்கிய பங்காற்றிய ரப்பர் தோட்ட மக்களின் வாழ்க்கையைப் பல படைப்புகளில் சித்தரித்துக் காட்டியுள்ளனர். எத்தனை படைப்புகள் தோட்ட புறத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டாலும் நிறைவின்மை தொடர்ந்து கொண்டே இருப்பது தவிர்க்கவியலாது. இன்னும் எழுத ஏதோ ஒன்று மிச்சம் இருக்கின்றது என்ற ஏக்கத்தைத் தோட்ட வாழ்க்கை எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

அந்த வகையில் ‘அழகான மெளனம்’ மீண்டும் ஒரு தோட்ட வாழ்க்கையை மையமாக கொண்டு எழுத்தாளர் நிலாவண்ணன் எழுதிய நாவல். 2014-ல்  எழுதப்பட்ட இந்நாவல் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க அறவாரியத்தின் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாவலின்  களம் பழகிப்போன தோட்டபுறம் என்றாலும் அது எடுத்துக் கொண்ட வரலாற்றுக் கோணமும் காலமும் முக்கியமானவை. மலேசிய இந்தியர்களின் வரலாறு என்பது ரப்பர் தோட்டத்தோடு  நெருங்கிய    தொடர்புடையது. தமிழ் நாட்டில் இருந்து உடல் உழைப்புத் தொழிலாளிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட முதல் தலைமுறை தமிழர்கள் காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். அவர்களைத் தொடர்ந்து ஒப்பந்தக் கூலிகளாகவும்,  கங்காணி முறை கூலிகளாகவும் தென்நாட்டில் இருந்து வந்திறங்கிய பல லச்சம் தோட்ட தொழிலாளர்கள் நேர்த்தியான ரப்பர் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து அதை நாட்டின் முதன்மை பொருளாதார மூலதனமாக்கிக் கொடுத்தனர். மலாயா காடுகள் பல்லாயிரம் ஏக்கர் ரப்பர் தோட்டங்களாக மாறின.

அந்த மக்களால் ஆங்கிலேய முதலாளிகள் பெரும் செல்வந்தர்களானார்கள். சிறந்த உடல் உழைப்பாளிகளாக இருந்த தோட்ட பாட்டாளி மக்கள் பெரிய எதிர்கால கனவுகளும் திட்டங்களும் இல்லாமல் அன்றாடங்களில் சிக்குண்ட மக்களாக வாழ்ந்து மடிந்தனர். அவர்கள் வேலை செய்த தோட்டம் நிரந்தரமானது என்ற நம்பிக்கையில் சந்ததிகளைப் பெருக்கி வாழ்ந்தனர். லயம் வீடுகள், பள்ளிக் கூடம் (நாடக மேடைகள்), ஆலக்கரை, எஸ்டேட் பங்களா, தோட்ட ஆப்பீஸ்,  ‘டிஸ்பென்சிரி’ ஆயக்கொட்டாய், கள்ளுக் கடை, மலிகைக்கடை, மாரியம்மன் கோயில், திடல், திறந்த வெளி திரைப்படம், கோயில் திருவிழா கொண்டாட்டம்  என கையகல உலகில் உழன்று வாழ்க்கையில் நிறைவு கண்ட மக்கள் பலர்.  இந்நாட்டுக்கு உழைக்க வந்தோம்; ஓரளவு பணம் சேர்த்தோம்; பிறந்த ஊருக்குச் சென்று சேர்வோம், என்ற திட்டத்துடன் தமிழகம் சென்று விட்டவர்களும் பலர்.

பின்னர், காலம் மெல்ல மாறியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மலாயாவின் வரலாற்றில் பல்வேறு திருப்பங்கள் நடந்தன. பெரும் தோட்டங்களை விற்று விட்டு ஆங்கிலேய முதலாளிகள் பிரிட்டன் செல்ல வேண்டிய நெருக்கடிகள் தோன்றின. அதற்கு,  நாடு சுதந்திரம் பெற்றது முதன்மை காரணம். ரப்பர் விலையில் நிலையில்லாமை ஏற்பட்டதும் மலாயாவில் கம்யூனிஸ்டு தீவிரவாதம் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்ததும் பிற காரணங்கள்.

மலேசியாவில் பரந்து விரிந்து கிடந்த ரப்பர் தோட்டங்களைச் சுலபமாக விற்கும் பொருட்டுத் தோட்டங்கள் சிறு நிலப்பரப்புகளாகத் துண்டாடப்பட்டு விற்கப்பட்டன. ஆகவே தோட்டங்களை வாங்க உள்ளூரில் இருந்த குட்டி பணக்காரர்களும் முன்வந்தனர். சீன முதலாளிகளும் செட்டியார்களும் பிற செல்வந்தர்களும் துண்டாடப்பட்ட நிலங்களை வாங்கினர். அதே காலகட்டத்தில்  ரப்பர் விலை இறக்கத்தால் பல தோட்டங்கள் அழிக்கப்பட்டு செம்பனை மரங்கள் நடப்பட்டன.

ரப்பர் மர பராமரிப்பும் செம்பனை மர பராமரிப்பும் வெவ்வேறு வகையானவை. அந்த மரங்களின் தன்மையும் முற்றிலும் முரணானவை. ஆகவே பழைய ரப்பர் தோட்ட தொழிலாளிகள், செம்பனை தோட்ட தொழிலாளிகளாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல சிறுதோட்ட முதலாளிகள் ரப்பர் மரத்தை நீக்கிவிட்டுப் புதிய பயிரை நட்டது போலவே அங்கு உழைத்துக் கொண்டிருந்த மக்களையும் நோட்டீஸ் கொடுத்து நீக்கிவிட்டு இந்தோனேசியர்களைக் கொண்டுரத் தொடங்கினர்.

மலேசிய இந்தியர் வரலாற்றில் ரப்பர் செம்பனையான காலகட்டம் என்பது மிக முக்கியமான காலகட்டமாகும். தோட்ட துண்டாடல், பயிர் வகை மாற்றம், அடையாள அட்டை சிக்கல், போன்ற எதிர்ப்பாரா தாக்குதல்களால், 60ஆம் ஆண்டுகளில் தோட்டங்களை நம்பி வாழ்ந்த மக்கள் நகரங்களையும் புறநகரங்களையும் தேடிச் செல்ல வேண்டிய நிலை வந்தது. இது மிக முக்கியமான மலேசிய இந்தியர்களின் இடப்பெயர்வு.  தோட்டத்தில் அப்போது இருந்த தோட்ட தொழிலாளர் சங்கங்களாலோ, மத்திய அரசாலோ இந்த மக்கள் பிரச்சனை முறையாக தீர்வுகாணப்படவில்லை. தக்க வழி காட்டுதல் இல்லாத அடிதட்டு வர்கமாக, வெறுங்கையுடன் கைவிடப்பட்ட மக்களாகத் தோட்டத்தை விட்டு வெளியே வந்தவர்கள் மலேசிய நகர உடல் உழைப்புச் சமூகமாக இன்னொரு வரலாற்றுப் பகுதியில் நுழைந்தனர்.

‘அழகான மெளனம்’ நாவல், மலாயா காட்டுக்குள் உடல் உழைப்புத் தொழிலாளியாகப் பெருமாள் தன் சகோதரர்களுடன் வந்ததில் இருந்து ஒரு பின்கதையைச் சொன்னாலும் இந்த நாவல் முழுமையாக கவனம் செலுத்துவது தோட்ட துண்டாடலுக்குப் பிறகான சிறு தோட்ட மக்களின் வாழ்க்கையைத்தான். தோட்ட துண்டாடலால் மலேசிய இந்தியர்கள் வாழ்க்கை திசை மாறிப் போனது. சிலர் செம்பனை தோட்ட வேலையைப் பழகிக் கொண்டு வேறு தோட்டங்களில் வாழ்ந்தனர். பலர் தோட்டங்களை விட்டு நகர்புரங்களுக்கு வேலை தேடிச் சென்றனர். பெண்கள் தொழிற்சாலை வேலைக்குச் சென்றனர். புதிய இடமும் புதிய வாழ்க்கை முறையும் புதிய சிக்கல்களையும் சமூக சீர்கேடுகளையும் கொண்டுவந்தது. ஆகவே அழகிய மெளனம் கவனப்படுத்தும் களமும் காலமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு ரப்பர் மரங்களைக் பயிராகக் கொண்டு பரந்து கிடந்த தோட்டங்கள் பின்னர் சிறுதோட்டங்களானதோடு  செம்பனை மரங்களுக்குக் கட்டம்கட்டமாக மாற்றிக் கொண்ட நிகழ்வுகளும் இந்நாவலில் விவரிக்கப்படுகின்றன. செலாமாட் மாலாம் தோட்டம் பின்னர் செலாமாட் மாலாம் கம்பமாக உருமாற்றம் கொள்கிறது.

கதை களத்திலும் காலத்திலும் வரலாற்று முக்கியத்துவம் இருந்தாலும்,  இந்நாவல் முன்வைக்கும் அரசியல் நீக்க தன்மையாலும்,  கலைநுட்பமற்ற, முதிர்ச்சியற்ற எழுத்து முறையாலும் மிக பலகீனமான நாவலாக உருவாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் அழகும் அமைதியான குணமும் கொண்ட பெண்ணான அழகம்மாள் எப்படிப் பல்வேறு சவால்களைக் கணவன் துணை இன்றி வென்று பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரியானாள் என்பதை விவரிக்கும்  கதைச் சுருக்கத்தைக் கொண்டது  ‘அழகிய மெளனம்’ நாவல்

அழகம்மாள் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டு மலாயா வந்து செலாமாட் மாலாம் எஸ்டேட் (தைப்பிங் அருகில்) என்னும் தோட்டத்தில் வாழ்கிறாள். அவளின் கணவன் நல்ல குணம் கொண்டவன் என்றாலும் கள்ளுக்கும் சம்சுவிற்கும் அடிமையாகி நாளடைவில் காசநோயில் வீழ்கிறான். தமிழ் நாட்டில் தன் பூர்வீக கிராமத்துக்குச் சென்று அங்கேயே செத்தும் போகிறான். அழகம்மாளும் எல்லா நல்ல குணங்களும் வாய்த்த பெண். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள். ஆனாலும் கடுமையான உழைப்பாளி. தன் மூத்த மகன் முனியாண்டியின் துணையுடன் தோட்டத்தில் பால்மரம் சீவும் வேலையோடு மாடு வளர்ப்பு, வெற்றிலை நடவு, காய்கறி தோட்டம் என உழைக்கிறாள். இரண்டாம் மகன் சுப்ரமணியம் கல்வியில் சிறந்தவன். ஆனால் மூத்தவன் முனியாண்டி படிப்பு வராமல் பள்ளியில் இருந்து நின்று கொள்கிறான். அம்மாவுக்குத் துணையாக இருக்கிறான். அடுத்த இரண்டு பிள்ளைகளால் (தங்கராசு, சரசு) பல குடும்ப சிக்கல்கள் எழுகின்றன.

பெருமாள் தமிழகம் சென்று அங்கேயே இறந்த சில வருடங்கள் சென்று பலரின் வற்புறுத்தலால் அழகம்மாள், சாமிக்கண்ணு என்பவனை மறுமணம் செய்து கொண்டு அவனால் வேறு பல சிரமங்களை அனுபவிக்கிறாள்.

தோட்டத்தில் வாழும் மாரி, கோதண்டம் என்னும் தண்டல் குடும்பம் அழகம்மாளைப் பல்வேறு காழ்ப்புகளால் பழிவாங்கவும் அழிக்கவும் தொடர்ந்து சதி செய்கின்றனர்.  அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.  நாவல் முடிவு வரை அவர்கள் தங்கள் முயற்சியில் மனம்தளரவில்லை.   ஆசிரியர் முத்தண்ணனும் அவர் மனைவியும் நல்ல மனிதர்கள். அழகம்மாவுக்கு ஆலோசனைகளும் உதவிகளும் செய்பவர். ஒரு கட்டத்தில் தோட்டத் துண்டாடலை எதிர்நோக்கும் போது ஆசிரியர் முத்தண்ணனின் ஆலோசனை படி  வங்காளியிடம் கடன் பெற்று ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி அதில் தாயும் மகனும் கடினமாக உழைகின்றனர். இடையே இரண்டாவது மகன் சுப்ரமணியத்தையும் இந்தியா அனுப்பி மருத்துவம் படிக்க வைத்து டாக்டராக்கி விடுகின்றாள். ஆயினும் மூன்றாவது மகனும் ஒரே மகளும் தீய சேர்கையால் குடுப்பத்தில் இருந்து பிரிந்து சென்று அழகம்மாளுக்கே எதிரியாகி விடுகின்றனர். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் தன் கடின முயற்சியால் அழகம்மாள் படிப்படியாக உயர்ந்து பத்து ஏக்கர் நிலத்துக்குச் சிறுதோட்ட முதலாளியாகி விடுகின்றாள்.

ஆசிரியர் சாரம்சமாக இக்கதையின் வழி சொல்லும் கருத்து மலேசிய தோட்ட துண்டாடலால் தோட்ட மக்கள் அவதிப்பட்ட காலத்தில் கொஞ்சம் முயன்று துணிச்சலாக அதே தோட்டத்தில் சில ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் உழைத்திருந்தால் இன்று பலரும் சிறுதோட்ட முதலாளிகளாக, நில உடமையாளர்களாக ஆகியிருக்க முடியும் என்பதே. இக்கருத்தை அவர் மிக தெளிவாகவே பல இடங்களில் சொல்வதோடு, நகர்புறங்களுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் பின்நாளில் புறம்போக்கு வாசிகளாகி கீழான வாழ்க்கை வாழ்வதாகவும் சுட்டியுள்ளார்.  மேலும் இங்கு சம்பாதித்த பணத்தை தமிழ்நாட்டுக்கு அனுப்பி அங்கு வீடும் நிலமும் வாங்கும் போக்குகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒரு இலக்கியப்படைப்பில் ஆசிரியர் தன் மன ஓட்டத்தை, தன் அவதானங்களை அல்லது நிலைபாட்டை எவ்வகையிலும் சொல்ல எல்லா உரிமையும் உண்டு.  எழுத்தாளர் நிலாவண்ணன் தோட்ட மக்களின் அன்றைய போக்குகளையும் குணங்களையும் இன்றைய நிலைகளையும் ஒப்பிட்டுத் தோட்ட துண்டாடல் காலத்தில் மக்கள் கொஞ்சமாவது சாமர்த்தியமாகச் சிந்தித்து, கிடைத்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி,  செயல்பட்டிருந்தால் இன்று சொத்துடமையோடு வாழக் கூடிய சாத்தியம் இருக்கும் என்று சொல்வது ஒரு தரப்புக் கருத்து என்றே நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் அப்படி சொல்வதற்கு முன், அக்காலம் முதல் இன்றுவரை நம்மை சூழ்ந்துள்ள அதிகார தரப்புகளின் செயல்பாடுகள், திட்டங்கள், வழிகாட்டல்கள், சாத்திய எல்லைகள் என பல்வேறு கோணங்களிலும் ஆய்ந்த பின்னர்,  உதிரி மனிதனின் சிக்கலுக்குச் சுய ஊக்கத்தின் வழியான தீர்வுகளை முன்வைப்பதே ஒரு படைப்பாளனின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், இந்நாவலில் அதிகார தரப்பு என்ற ஒன்று எங்குமே இல்லை. மேம்போக்காகத் தோட்ட நிர்வாகம் என்ற ஒன்று காட்டப்படுகின்றது.  மலேசியாவில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்த அக்கால அரசியலில் சிறு தூசு கூட படாமல் கதையை நகர்த்தியுள்ளார் எழுத்தாளர். அக்கால கட்ட மலேசிய இந்தியர்களின் பெரும்பான்மை சிக்கல்களுக்கும் தோட்ட நிர்வாகமோ, பாட்டாளிகளின் குரலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலோடு இருந்த தோட்ட தொழிலாளர் சங்கமோ, அரசியல் கட்சிகளோ பொறுப்பல்ல, மாறாக அந்த மக்களே காரணம் என்னும் புரிதலைத்தான் இந்த நாவல் உருவாக்குகின்றது.   இவ்வாறான மெத்தனமான நிலைபாட்டுடன் தோட்ட மக்களின் அன்றைய செயலை விமர்சிக்க ஆசிரியருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுதான் உண்மை.

நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுடன் பேசுகையில் எப்போதும்  எனக்கு ஒரு  வருத்தம் வரும். அவர் தன் இளமைகாலத்தில் தங்கம் பத்து வெள்ளியாக இருந்தது என்றும் நிலமும் வீடும் ஐந்நூறு வெள்ளிக்குள் வாங்க முடியும் என்றும் கூறுவார். இலைச்சாப்பாடு ஒரு வெள்ளி என்றும் திரைப்பட சிறப்பு டிக்கெட் 10 காசு என்றும் சொல்வார். எனக்கு மலைப்பாகவும் ஆயாசமாகவும் இருக்கும். அடடா அந்தக் கால மக்கள் எவ்வளவு ஊதாரிகளாக இருந்துள்ளார்கள். அவ்வளவு குறைந்த விலையில் எவ்வளவு தங்கமும் சொத்தும் வாங்கியிருக்கலாம். அப்பா கூட பொறுப்பில்லாமல் இருந்துவிட்டாரே என்று எண்ணங்கள் ஓடும். “நீங்கள் அன்றே சொத்து வாங்கியிருந்தால் இன்று நாம் வசதியாக வாழலாமே” என்று என் அப்பாவிடம் கேட்பது எளிதுதான். ஆனால் அது இன்றைய கண்ணோட்டத்தில் வரலாற்றை வாசிக்கும் சிறுபிள்ளை ஊகம் மட்டுமே. அக்கால கட்டத்தில் சொத்து வாங்க தடையாக இருந்தது மக்களின் மெத்தன போக்கு மட்டும் அல்ல. மிகக் குறைவான வருமானம், சேமிப்புக்கு வாய்ப்பற்ற தினக்கூலி வாழ்க்கை, பெரிய கடன்களில் சிக்கிக் கொள்ள தயங்கும் இயல்பான சாமானியர் மனோவியல்,  குடியுரிமை பிரச்சனைகள், அதிகாரத்தில் இருந்தவர்களின் மெத்தனப் போக்கு, அலோசனை சொல்லி வழிகாட்ட வேண்டிய தலைவர்களின் பிழையான முடிவுகள், சுயநல அரசியல்,  கம்யூனிஸ் அச்சம் – மே கலவரம் போன்ற பதற்றமான சூழல்கள் என பல கோணங்களில் அலசலாம்.  குறிப்பாக, ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் சொத்துடமையிலும் அதைச் சுற்றியுள்ள அதிகார தரப்புக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிகார தரப்பு என்பது அரசாங்கம் மட்டும் அல்ல. நாம் நம்பிக்கை வைத்துப் பொறுப்புகளைக் கொடுத்திருக்கும் சமூக தலைமைகளும், இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் கூடத்தான். ஆனால், எழுத்தாளர் நிலாவண்ணன் ‘அழகான மெளனம்’ நாவலின் வழி மூத்த தலைமுறை தோட்ட துண்டாடலின் போது நிலம் வாங்காமல் போனதற்கு அவர்களின் மெத்தன போக்கை ஒரே காரணமாக்கியுள்ளார்  அது சிறுபிள்ளை ஊகத்தையும் அயற்சியையும்தான் வெளிப்படுத்துகின்றது.

செலாமாட் மாலாம் தோட்ட நிர்வாகம் காதும் காதும் வைத்தது போல் தோட்டத்தை மூன்று நான்கு பேருக்கு விற்றுவிட்ட பின், தொழிற்சங்க காரியதரிசியும் தலைமையாசிரியரும் வேறு சிலரும் தலையிட்டுத் தோட்ட மக்கள் நிலத்தையும் குடியிருந்த வீடுகளையும் வாங்க முன்னுரிமையும் சலுகை விலையும்  பெறுகின்றனர். அதோடு அவர்கள் கடமை முடிந்தது. பணத்துக்கு வங்காளியிடம் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலை. அல்லது நகை நட்டுகளை அடகுவைக்க வேண்டும். கூட்டுப் பிடித்த பணத்தைத் திரட்ட வேண்டும். நடைமுறையில், சாமானிய மக்களின் வாழ்வாதார சிக்கல்களை அறிந்த நிலையில் இப்படியான ஆலோசனைகள் எவ்வளவு அபத்தமானது. சினிமாத்தனமானது. மாறாக அந்தச் சிறப்புச் சலுகையானது அதே தோட்டத்தில் வாழ்ந்த பண வசதி உள்ள அந்தத் தலைமையாசிரியர், தோட்ட கிராணிகள் போன்றவர்களுக்கு மட்டுமே நன்மை தரக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. நாவலிலும் அப்படியே அவர்கள்தான் எந்தச் சிக்கலும் இல்லாமல் பத்து ஏக்கர் நிலம் வாங்கிக் கொள்கின்றனர்.

நாவலில், காரியதரிசி கோபால் தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதி. செலாமாட் மாலாம் தோட்ட தொழிற்சங்கவாதி. தோட்ட துண்டாடல் பிரச்சனை வெடித்ததும் அவர் மக்களிடம் பேசுகின்றார். “இந்த தோட்டத்த விக்காம இருக்கிறதுக்காக எவ்வளவோ முயற்சி செஞ்சிட்டேன். இப்படி ஒரு சிலர் வாங்கி கூறு போட்டு விக்கிறதுக்கு துண்டாடல்னு சொல்வாங்க. இத தடுக்கிறதுக்கு இப்போது சட்டத்தில் இடம் இல்லையாம். அதோட, தோட்டத்த மொத்தமா வாங்குறதுக்கு நம்மவர்களே ஒரு கூட்டுறவு கழகம் ஆரம்பிச்சிருக்காங்களாம்!. அவர்களைப் போய்ப் பார்த்தப்போ இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு ன்னுமே செய்ய முடியாதுன்னிட்டாங்க! நம்ம தொழிற்சங்கத்தாலையும் ஒன்னும் செய்ய முடியாம போச்சு! இந்த தோட்டத்த வாங்குனவங்களும் வித்தவங்களும் காதும் காதும் வெச்சமாதிரி ரகசியமா முடிச்சிட்டாங்க! என விளக்கம் அளிக்கிறார்.

இதே போன்று , இந்நாவலில் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் பற்றியும் அதன் தலைவர் பி.பி நாராயாணன் பற்றியும் வேறு சில மேன்மையான விவரிப்புகளும் உள்ளன. அவை முழுதும் தே. தோ. தொழிலாளர் சங்க ஆதரவு கருத்துகள் மட்டுமே. ஆசிரியரின் தனிப்பட்ட அபிமானத்தை வாசகர் மேல் நயமாக ஏற்றுகிறார். ஆனால் ஆய்வு உண்மைகள் வேறு விதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

42 ஆண்டுகளாகத் தோட்ட தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பில் இருந்தும் தோட்ட தொழிலாளர்களின் ஒரு சிக்கலுக்குக் கூட நிரந்தர தீர்வு காணமுடியாத தலைவர் பி.பி நாராயணன்,  தோட்ட துண்டாடல் சிக்கல் உச்சத்தில் இருந்த போது அதைத் தீர்க்கும் முகமாகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஒரு ஆக்ககரமான திட்டம் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க முயற்சிகள் மட்டும்தான். பாட்டாளிகளின் பத்து வெள்ளி நிதியில் தொடங்கிய அந்த முயற்சியைப் பல இடையூறுகளுக்கிடையே முன்னெடுத்தவர் துன் வீ. தி. சம்பந்தன். அவர் அப்போதைய  ம. இ.கா தலைவராகவும் ஆளும் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்ததால், தம் செல்வாக்கை முழுவீச்சில் தேசிய நிலநிதி திட்டத்தில் செலுத்தி வெற்றி பெற்றார்.

ஆனால் அதே கால கட்டத்தில் தோட்ட பாட்டாளிகளின் ஒருமித்த ஆதரவு பெற்ற தொழிற்சங்கமாக இருந்த தே. தோ. தொ. சங்கம் துன். வீ.தி.சம்பந்தனின் நிலநிதி கூட்டுறவு திட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதே வரலாறு உண்மை. அதற்கு அவர்கள் பல சமாலிப்புகளைச் சொன்னார்கள்.  பி.பி. நாராயணனுக்கு,  அத்திட்டம் வெற்றி பெற்றால்,  மக்களிடம் தான் செல்வாக்கை இழக்க நேரும் என்ற கவலை மட்டுமே இருந்துள்ளது. ஆகவே அவர்கள்  தோட்ட துண்டாலை தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை வைப்பதோடு தங்கள் எதிர்வினையை நிறுத்திக் கொண்டனர். மிதவாத போக்குடைய தே. தோ. தொ. சங்கத்தின் கோரிக்கைகளை அரசு சுலபமாக கடந்து சென்றது. அதேநேரம், அரசுக்குத் தோட்ட துண்டாடலை நிறுத்தும் எண்ணம் கொஞ்சமும் இல்லை என்பதை பி.பி நாராயணன் நன்கு அறிந்தே இருந்தார். அரசாங்கத்தின் பார்வையில் தோட்ட துண்டாடலின் வழி ஆங்கில முதலாளிகள் கைவசம் இருந்த நிலங்கள் மலேசிய முதலாளிகளுக்கு மாற்றம் காண்பது ஆக்ககரமானது என்பதாகவே இருந்தது. அச்சமயத்தில் தே.தோ.தொ. சங்கம் துன் வீ.தி சம்பதனுக்கு ஆதரவு கொடுத்துத் தன் மக்கள் செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால்  நிலநிதி திட்டம் இன்னும் பிரமாண்ட வெற்றிக் கண்டு பல தோட்டங்கள் இந்தியர்கள் வசமாகியிருக்கும். ஆனால், தே. தோ. தொ. சங்கம் துன் வீ. தி சம்பந்தனுக்கு இடையூறு செய்வதிலேயே குறியாக இருந்தது. தே. நி. நிதி கூட்டுறவுக்குப் போட்டியாக தே. தோ. தொ. சங்கம், ‘கெட்கோ’ என்ற நிருவனத்தையும் தேசிய பல்நோக்குக் கூட்டுறவு கழகத்தையும் அமைத்து சில தோட்டங்களை வாங்க முயற்சிகள் எடுத்தது. ஆனால் அவை பிற்காலத்தில் பெரும் சிக்கல்களை மட்டுமே கொண்டுவந்தன. இந்த வரலாற்றுத் தகவல்களை மா. ஜானகிராமன் ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை  நூலில் விரிவாகவே எழுதியுள்ளார்.

ஒரு ம. இ. கா கிளை தலைவராகவும் இருந்துள்ள எழுத்தாளர் நிலாவண்ணன் அன்று மிக காத்திரமாகச் செயல்பட்ட தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க முயற்சிகளை எழுத வேண்டிய தேவை இந்த நாவலில் அதிகம் இருந்தும் மொத்தமாக மறைத்துவிட்டது வியப்பாகவே உள்ளது.

நாவலாசிரியர் தன் மனதில் உள்ள ஒரு கதையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் முடிவோடு இக்கதையை எழுதியுள்ளார். வாசகனுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் அவர் சொல்லும் முழுக் கதையையும் விசாரணை இன்றி கேட்க வேண்டிய நிலை. வாசிப்பு சாத்தியம் என்ற விவாதங்களுக்கு வாய்ப்பே இல்லை.  அவரின் கதாபாத்திரங்களும் ஆசிரியரின் கருத்துகளைச் சொல்ல படைக்கப்பட்ட கருத்து பிம்பங்களே. மிக நல்லவர்கள் அல்லது மிக கெட்டவர்கள் என்ற இரு நிலை மனிதர்களே ‘அழகிய மெளனம்’ நாவலின் கதை மாந்தர்கள். எல்லா கதை மாந்தர்களின் குணங்களையும் ஆசிரியரே மிக தெளிவாகக் காதாபாத்திர அறிமுகத்தில் சொல்லி விடுகின்றார்.

//காரியதரிசி கோபால் நல்லவர். சக தொழிலாளர்களின்….// ப.38

//இந்த சொக்கன் ஒரு ஓணான் பிறவி//….ப.40

//மாரி தண்டல்….. கோள் சொல்வதும் வத்தி வைப்பதும் புறம் பேசுவதும் எப்படி என அவர் ஓர் ஆய்வு நூலே எழுதலாம்… அந்த அளவு திறமையும் பயிற்சியும் பெற்றவர்// ப. 35

//உறுப்படாத குப்புசாமி முதன் முறையாக வாய் திறந்தான்//. ப.31

//சின்ன கிராணி பணிக்கர் தங்கமான மனிதர்//… ப. 104

//மாரி ஒரு வீட்டுப் படி மிதிக்கிறாரென்றால் அந்த வீட்டுக்குள் வில்லங்கம் சொல்லிக் கொள்ளாமலே படையெடுக்கிறதென அர்த்தமாகும்.// ப. 112

//வாசல் வரை வந்த ஓநாய்க்குண மனிதரை// ப.112

//சிந்தாமணி ஒரு வீட்டுக்குள் காலயெடுத்து வைக்கிறாளென்றால், அந்த வீட்டில் ஏதோ சிந்தப் போகிறதென்று பொருள்//…. ப. 126

// இந்த காந்தன் ஒரு முந்திரிக் கொட்டை பேர்வழி. எதிலும் அவசரக் குடுக்கை தனம் கொண்டவன்// ப. 67

//வடிவேலு… இவன் மாரி தண்டலின் கையாள். அவர் ஏவி விடுவதை அப்படியே பேசும் ஒரு ஐந்தாம் கூலிப்படை//ப.68

இப்படி எல்லா கதாபாத்திரங்களின் குணங்களையும் இயல்புகளையும்  ஆசிரியர் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுவதால் அவர்களின் செயல்களோ உரையாடல்களோ  வாசகருக்கு எந்த உணர்வையும் கொடுப்பதில்லை.

அழகம்மாள் மிகவும் நல்லவளாக இருப்பதால் அவள் தன் எதிரிகளையும் திட்டுவதோ எச்சரிப்பதோ இல்லை. அவள் காப்பி குடிப்பதையும் விரும்பாதவள்.  தலைமையாசிரியர் முத்தண்ணனை அப்பா என்றே அழைக்கிறாள்.  ஆனாலும் அவர் வீட்டில் தண்ணீர் கொடுத்து உபசரிக்கப்படும் போது தண்ணீர் கிண்ணத்தை வாங்கி ‘எச்சில் படாமல் அண்ணாந்து’ குடிப்பவள். அமைதியாக இருந்தே சாதிக்கும் குணம் இயல்பாகவே அமைந்தவள். அவளின் வளர்ப்பு மகளான ரஞ்சனியும் அழகம்மாள் போன்றே அதிர்ந்து பேசாத நல்லவளாக அமைவது வியப்பு.   ஆகவே, ஒவ்வொரு இக்கட்டு நேரத்திலும் ‘அழகம்மாள் மெளனியானாள்…’ என்று ஆசிரியர் அவள் வாயைப் பொத்திவிடுகிறார். அழகம்மாள் என்னும் பொம்மையும் கதையில் ஆசிரியரின் மனதில் ஊறும் எல்லா  நல்கருத்துகளையும் செயல் வடிவாக்கிக் காட்டுகிறது.

அழகம்மாளின் மூத்த மகன் முனியாண்டி இந்நாவலின் முக்கியமான கதாமாந்தன். கல்வி அறிவு இல்லாவிட்டாலும் தாயுடன் சேர்ந்து தோட்டத்தில் உழைத்துத் தம்பியை மருத்துவம் படிக்க வைக்கின்றான். குடும்ப சொத்தை பெருக்குகிறான். அவன் மணந்த பெண்ணும் அவள் குடும்பமும் ஆடம்பர விரும்பிகள் என்பதோடு பந்தா பேர்வழிகள் என்பதால் அவர்களின் திருமண உறவு முறிந்துவிடுகிறது. பின்னர் கணவனை இழந்து ஒரு குழந்தையோடு வாழும் மோகனாவை மறுமணம் செய்து கொள்கிறான். அவளும் அவனுக்கும் அழகம்மாவுக்கும் ஏற்ற பெண்ணாக வாழ்கிறாள். முனியாண்டியின் வாழ்க்கை இவ்வளவு திருப்பங்களும் போராட்டங்களும் நிறைந்து இருந்தாலும் அவனின் உள்ளம் வெளிப்படும் ஓர் இடமும் நாவலில் இல்லை. தன்னைப் பற்றிக் கூட அவன் சிந்திப்பதே இல்லை. அவனின் வாழ்க்கையே மிக செயற்கையான நாடகமாகப் படைக்கப்படுள்ளது.

நாவலின் மொழியும் கதை சொல்லும் உத்தியும் நாளிதழ்களின் தேவைக்கு ஏற்ற மிக எளிய நடையில் உள்ளன. பல இடங்களில் பொருத்தமில்லாத வர்ணனைகளும் உவமைகளும் உள்ளன.  உதாரணமாக

//என்னமோ நடக்கிறது. நான் ஊருக்கு போனால் போதும் எனும் குரங்கு தனமான உடும்புப் பிடித்த பிடியாக வெளவாளாகத் தொங்கிக் கொண்டிருந்தான் பெருமாள்// ப.71

போன்ற வேடிக்கையான வரிகளைச் சொல்லலாம். ஆயினும்  எழுத்தாளர்  நிலாவண்ணன் உரையாடல்களை இயல்பு நிலை குறையாமல் சிறப்பாக  வெளிப்படுத்துகிறார். .

எடுத்துக்காட்டாக, மோகனாம்பாளின் பாட்டி தாயம்மாள்,  ஒரே ஒரு காட்சியில் அழகம்மாவைச் சந்தித்து பேசும் உரையாடல், வாழ்ந்து சலித்து,  முதுமையும் இயலாமையும் கூடிப்போன ஒரு கிழவியின் அசல் குரலாக ஒலிகிறது.

இந்நாவல் மலேசிய நண்பன் நாளிதழில் தொடர்கதையாக வந்தது. நாவலாக தொகுக்கும் போது தொடர்கதையில் இருந்த அனாவசிய முடிச்சுகளையும் திருப்பங்களையும் நீக்கியிருக்க வேண்டும். பல அத்தியாயங்களின் முடிவில் ஒரு அதிர்ச்சியை வைத்துச் செல்வது தொடர்கதைகளின் வழக்கம். நாவலுக்கு அது தேவை இல்லை. அதே போல் பல இடங்களில் முன் அத்தியாங்களில் சொல்லப்பட்ட தகவல் மீண்டும் சொல்லப்படுகின்றது. நாளிதழில்களில் பக்க அளவு கட்டுப்பாடு கதை விரிவாக்கத்தை அனுமதிப்பதில்லை. ஆகவே விவரணைகளைச் சுருக்கமாகச் சொல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஆனால் நாவல் நூலாகும் போது அந்தக் கட்டுப்பாடு இல்லை. இந்நாவலில் தைப்பிங் நகரம் குறித்துச் சொல்லப்படும் வரலாற்றுத் தகவல்களை மேலும் விரிவாக்கி இருக்கலாம்.  காலனித்துவ மலாயாவில் நிர்வாக முக்கியத்துவம் மிக்க நகரங்களில் தைப்பிங்கும் ஒன்று. ஆகவே,  செம்மையாக்கம் இல்லாத தொடர்கதையை மீள் பிரசுரம் செய்த நூலாக இது இருக்கின்றது.

நாவல் தன்னளவில் முரண்படும் இடம் ஒன்று உண்டு. அது கடைசி அத்தியாத்தில் அழகம்மாள் தன் முதிய வயதில் டாக்டர் சுப்ரமணியத்துடன் கோலாலம்பூரைச் சுற்றிப் பார்க்கும் தருணமாகும். டாக்டர் சுப்ரமணியம், கம்போங் செலாமாட் மாலாமிலேயே வாழ்நாளைக் கழித்துவிட்ட தன் தாயைக் கோலாலம்பூரைச் சுற்றிக்காட்ட அழைத்துச் செல்கிறார். அழகம்மாவுக்கு அந்தப் பயணம் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. கோலாலம்பூரின் நவீன வளர்ச்சி, உயர்ந்த கோபுரங்கள், கட்டிடங்கள், நகரத்தின் பரபரப்பு, புத்ரா ஜெயா, செப்பாங் விமான நிலையம் என பல இடங்களையும் கண்டு அவள் இவை ‘சொர்கமோ!’  என மனதுக்குள் வியந்து போகிறாள். பின்னர் தன் பழைய தோழி அனுமியைத் தேடிச் சென்று நட்போடு பேசுகின்றாள்.

பேச்சின் முடிவில், அனுமி தனது அப்போதைய வாழ்க்கையின் அவலங்களைத் தனது கடந்த கால தவறுகளோடு இணைத்துப் பேசுகிறாள். தோட்டம் துண்டாடப்பட்ட போது அழகம்மாள் போல் முயன்று நிலம் வாங்காமல், தோட்டத்தை விட்டு வெளியேறிய அவளைப் போன்ற பலரின் வாழ்க்கை நகர்புறத்தில் மிகப்பெரிய சரிவையும் ஆதரவற்ற நிலையையும் அடைந்து விட்டதைக் கூறுகின்றாள். தகுந்த முன்னேற்பாடுகள் இன்றி தோட்டபுறங்களை விட்டு வெளியேறியவர்களின் வாழ்க்கை சந்திக்கும் பொருளாதார சிக்கல்களையும் சமூக சீரழிவுகளையும் அவள் அனுபவத்தில் இருந்து கூறுகின்றாள். ஆயினும் அழகம்மாள் சற்று முன் கண்டு ‘சொர்கமோ’ என வியந்த, கோலாலம்பூரும், புத்ரா ஜெயாவும் செப்பாங் விமான நிலையமும் எத்தனை எத்தனை தோட்ட மக்களை வெளியேற்றிய பின் அமைக்கப்பட்ட நவீன கட்டுமானங்கள்? அந்த மக்களில் பலரும் நகர புறம்போக்கு வாசியாக்கப்பட்டவர்கள்தான். ஆனால் அது அவர்களின் தேர்வு அல்ல.  தோட்டத்தில் நிலம் வாங்கியிருந்தால் நகரில் புறம்போக்கு வாசியாகியிருக்க வேண்டியதில்லை என்ற தர்கத்தை முன்வைக்கும் போது,  அரசாங்கம்  புத்ரா ஜெயா, சைபர் ஜெயா, செப்பாங் விமான நிலையம் போன்ற நவீன நகர உருவாக்கத்தில் காலி செய்த தோட்ட மக்களின் நியங்களையும் அவலங்களையும் முன் வைத்துப் பேச வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால் அழகான மெளனம் தன் வட்டத்தை விட்டு தாண்டாத படைப்பு. அது எளியவர்களை நோக்கி மட்டுமே தன் ஆலோசனைகளையும், நையாண்டிகளையும்,  கோபத்தையும் காட்டுகின்றது. அதிகார தரப்புக்கு அதனால் கொடுக்க முடிந்தது அழகான மெளனத்தை மட்டுமே.

1 comment for “‘அழகான மெளனம்’ : பதுக்கப்பட்ட உண்மைகள்

  1. sriviji
    May 8, 2020 at 2:15 pm

    எனக்கு என்றுமே புரியாத ஒரு இயக்கம் உண்டு என்றால் அது தே.தோ.தொ.சங்கமும் அதன் தலைவர் பி.பி.நாராயணனும் தான். இன்னமும் ஆளுங்கட்சியின் பின் நின்றுகொண்டு சுயவிளம்பர தேவைக்காக செயல்பட்டுவரும் இந்தச் சங்கம் எதற்கு.? அரசியல் இலாபத்திற்காக, நாங்கள் அடிப்பதைப்போல் அடிப்போம் நீங்கள் அழுவதைப்போல் அழுங்கள் என்பதற்காகவா.! தோட்ட மக்கள் பட்ட இன்னல்களுக்கு இந்தச் சங்கத்தின் சேவை என்ன என்பதனை நான் இன்னமும் அறிந்துகொள்ள்வில்லை. இது எனது அறியாமையே என்றாலும், எதாவது செய்திருந்தால், இரப்பர் செம்பனைத் தோட்டங்களின் அடிமட்ட பாட்டாளிகளில் பலர் இன்று ஓரளவு நிலவசதியுடன் இருந்திருக்கின்ற சாத்தியம் இருந்திருக்குமே.. இல்லையே. !!

    தோட்டங்களைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்றபோதிலும், இக்கட்டுரை அதையொட்டிய சில தெளிவை நம்மிடம் விட்டுச்சென்றுள்ளது.

    நன்றி பாண்டியன் சார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...