மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்

muundru novelகாலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி மறுபடி இலக்கியங்களாகப் பதிவு செய்யப்படுவது இயல்பு. ஆனால், வரலாறுகளை விரிவாகப் பதிவிடுவதால் அவை நாவலாகிவிடுமா, அதற்கு அப்பால் நாவலாசிரியரின் தேடல் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கான பதிலைத்தேடிதான் பேய்ச்சி, அக்கினி வளையங்கள், மலைக்காடு ஆகிய மூன்று நாவல்களையும்  வாசித்தேன்.

இந்த மூன்று நாவல்களின் அடிப்படையான ஒற்றுமை இவற்றுள் தொய்ந்திருக்கும் வரலாற்றுப்பின்புலமாகும்.  வரலாற்று குறிப்புகளைச் சொல்வதால்  நல்ல நாவல்கள் எனப் பட்டியலிட முடியாது. வரலாற்றுத் தெளிவை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய படைப்புகளுக்கான இடம் இலக்கியத்தைவிட்டு வெகுதூரத்தில் உள்ளது. அதைச் சொல்ல வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்றுப் பாட நூல்களும் போதுமானவை. ஒருவகையில் எந்த நாவல் ஆசிரியரைவிடவும் ஒரு வரலாற்று ஆய்வாளர் இன்னும் துல்லியமாக சரித்திர நிகழ்வுகளை விவரிக்க முடியும். நாவல் அதற்கும் அப்பால் சென்று வரலாற்றின் துணையுடன் வாழ்வின் புதிய அனுபவங்களை வாசகனுக்கு வழங்கி அவனது அன்றாடங்களில் எங்கோ எதிலோ தன்னை இருத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய புனைவே இலக்கிய வெளியில் நின்று நிலைக்கக்கூடியது..

நான் வாசித்த இந்த மூன்று நாவல்களிலும் காலப்பின்னணி, இடப்பின்னணி, பாட்டாளி வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள், முதலாளித்துவம், என ஆங்காங்கே ஒற்றுமை சாரல் சிந்திச் சிதறிக்கிடக்கின்றன. இந்தத் தன்மைகளை மலேசிய நாவல்களிலிருந்து பிரிக்க முடியாதுதான்.

மலைக்காடு

indexவறுமையை தூர விரட்ட பெரும் கனவோடு உறவுகளைப் பிரிந்து  தமிழக மக்கள் மலாயாவுக்குப் பயணமாகும் கப்பல் பயணத்திலிருந்து தொடங்குகிறது மலைக்காடு நாவல். மூன்று தலைமுறைக்கு முன் தன் பூட்டன் வாழ்ந்த வாழ்வை தாத்தாவின் வழி அறிந்துகொண்டு அந்த அடிமைத்தனத்திலிருந்து மீள துணிந்து குரல் கொடுக்கும் குட்டி, மர்மமான முறையில் காணாமல் போகிறான். அவனைத் தேடும் ஒரு முயற்சிக்கு மத்தியில் தோட்ட மக்களின் வாழ்க்கை சில கதாபாத்திரங்களின் மூலம் உதிரியாக வந்துபோகிறது. அப்படி வந்து போகும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தோட்ட வாழ்வின் அவலங்களைக் காட்டுகின்றன. பெண்களின் துரோகம் சார்ந்த ஆண்களின் வாழ்வையும் நாவல் சில பாத்திரங்கள் வழி சொல்கிறது. அப்படி வருபவர்களில் கோப்ரல் மணியம் முக்கியமானவர். கோப்ரல் மணியம் காவல்துறை அதிகாரி. ஒரு விதத்தில் அவரும் ஒரு கம்யூனிஸ்ட்டுதான் என்பதை நாவலாசிரியர் குறிப்புகளால் காட்டுகிறார். குட்டியைத் தேடுவதில் மிக ஆர்வம் கொண்டு செயல்படும் அவர், மற்றொரு கம்யூனிஸ்ட்டின் வழிகாட்டலின் பேரில் பாலீங் காட்டுக்குச் செல்கிறார். அங்கே குட்டியை கம்யூனிஸ்ட்டாகப் பார்த்துத் திகைக்கிறார். அவரை பின்தொடர்ந்து சிலர் மோப்பம் பிடித்துவிட்டதால் அவர்களிடமிருந்து தப்பிக்க முழுதுமாக அவரும் கம்யூனிஸ்ட்டாகி காட்டுக்குள் கம்யூனிஸ்ட்டுகளோடு ஓடுவதாக நாவல் முடிகிறது.  இது ஒரு எளிய சம்பவம்தான். ஒரு நாவல் எழுதப்படும் தேவை இந்த எளிய சம்பவமும் அதனூடே தொணிக்கும் சின்னஞ்சிறிய உணர்வெழுச்சிகள் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை வரலாற்றுப் பதிவுகள் அதிகம் காணக்கிடக்கின்றன. பெரும் காடுகளுக்குள் பணையம் வைக்கப்பட்ட பூட்டன் பூட்டிகளின் வாழ்வைக் முன்னோட்டமாக  முதல் பகுதியில் சொல்லி, ஒரு மூன்று தலைமுறைக்கான கால இடைவேளையை விட்டு, தோட்டப்புற வாழ்க்கையிலிருந்து கதை மீண்டும் தொடங்குகிறது. நாவலின் தொடர் நகர்வை சரியாக கட்டமைக்கவும் வாசகர்களின் புரிதலைச் சரியாக வழிநடத்தவும் ஒரு மூன்று தலைமுறைக்கு முன்னான கதை குறிப்பாக அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்தக் குறிப்பு இல்லாமலும் கதை வாசகனுக்கு விளங்கவே செய்கிறது. ஒடுக்கப்பட்ட பாட்டாளிகளின் வாழ்வை, முதலாளித்துவத்தை, பொதுவுடைமைகோரும் கம்யூனிஸத்தை, ஆங்கிலேயர் ஆட்சியை என ஒரே கோட்டில் நகரும்  இணை வரலாறுகளை நோக்கிச் செல்லும் இதன் கதையோட்டம் தனித்த ஒரு வாழ்வில் குவிந்து,  அதிலிருந்து  கிளைகளாக விரியாமல்  ஒரு புள்ளிக்கோடுகளாக விட்டுவிட்டு தொடர்கிறது. வாசிப்பை முடித்த கணம் மனதில் மீளாய்வு செய்யும்போது அதில் பெரும்பாலும் திட்டுத்திட்டான வரலாற்றுச் செய்திகள் தேங்கிக் கிடக்கின்றன. மைய மனிதர்கள் என யாரையுமே என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை. யாருக்கான பாத்திரமும் கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை நின்று நிலைக்கவில்லை. கதையின் இடை இடையே நாவலாசிரியர் வலிந்து வரலாற்றுச் செய்திகளை அடுக்கிச் சொல்ல ஆங்காங்கே கதை மாந்தர்களை உருவாக்கி உருவாக்கி கலைத்துவிட்டிருப்பதாகத்தான் எனது புரிதலுக்கு எட்டுகிறது. இதை சீ.முத்துசாமி அவர்களின் உத்தியாகவும் சொல்லலாம். எந்த உத்தியாக இருந்தாலும் அது புனைவுக்கான தேவையைக் கொண்டுள்ளதா என்பது அடிப்படையான கேள்வி. வாசித்து முடித்தபிறகு ஒரு வாசகியான எனக்கு அது எவ்வித பாதிப்பையும் உருவாக்கவில்லை.

அக்கினி வளையங்கள்

IMG-20191008-WA0037அக்கினி வளையங்களும் மலைக்காடை ஒத்து ஒரே கோட்டில் மைய வரலாற்றை நோக்கி நகரும் நாவல்தான். ஆனால், அந்த நகர்வு சீரான  புனைவுக்குள்ளிருந்து எழுந்து வருகிறது. மலாயாவில் தமிழர்களின் வரவுக்கான இன்னொரு வாசலைக் காட்டுகிறது இந்த நாவல். தமிழக வியாபாரிகளால் (செட்டியார்கள்) மலாயாவுக்கு வந்து தன்னை வியாபாரத்துறையில் வளர்த்துக்கொண்டவர்களையும் தோட்டப்பாட்டாளிகளுக்கு எதிராக மாறும் அவர்களின் ஆதிக்கத்தனத்தையும் ஆளுமையையும் நாவல் முதன்மையாகப் பேசுகிறது. அந்தச் சூழலுக்குள்  இருந்து  தன்னை மீட்டெடுக்கும் ஒரு பாட்டாளியின் விழிப்புநிலையால்  முதலாளி வர்க்கத்தின் ஆணவச் சீண்டலை, மனக் கொந்தளிப்பை நாவல் உடைத்துக் காட்டுகிறது. அதற்குள்ளிருந்து கிளம்பி வரும் கம்யூனிஸப் போராட்டத்தையும் நாவலில் உள்வாங்க முடிந்தது. வட்டித் தொழில் மூலம் மலாயாவுக்கு வந்து தோட்டங்களை மொத்தமாக வாங்கி துண்டு துண்டு நிலங்களாகப் பிரித்து விற்று பெரும் நிலையை அடையும் ஒரு முதலாளியின்  (சண்முகம் பிள்ளை) மூலம் மலேசியாவில் நிகழ்ந்த தோட்டத்துண்டாடலின் மெல்லிய சாயலைக் காட்டுகிறது நாவல்.   ஒரு தோட்ட முதலாளியான அவரிடம் அடிமைத்தனத்தையே விசுவாசமாகக் கருதி இருக்கும் ஒருவன் (முத்து) அதிலிருந்து வெளியே வருகிறான். அடிமையாக வாழ  விரும்பாமல் தோட்டத்திலிருந்து வெளியேறுகிறான். அவனது அந்த மனமாற்றத்திற்கு கம்யூனிஸ சித்தாந்தம் பெரும் காரணமாக அமைகிறது. நாவலில் அவனது தொடர் பயணம் கம்யூனிஸத்தையும் அதன் போராட்டத்தையும் காட்டுகிறது.

இந்த நாவலுக்குள் வரலாற்றைச் சொல்ல சரியாகத் திட்டமிடப்பட்ட ஒரு புனைவு படர்ந்திருக்கிறது.     அதன் செல்திசை வரையறுக்கப்பட்ட எல்லைகளை எந்தப் பகுதியிலும் தாண்டிச் செல்லவே இல்லை.   இது இந்த நாவலின் பலவீனம்தான். இதன் கதையை மனதில் உள்நிறுத்தும் சமயம் அதற்குள்ளிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றையும் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தையும் உணரமுடிகிறது. அது புனைவுக்குள்ளிருந்து காட்டப்படும் ஒரு மண்ணின் வரலாறு மட்டுமே. அதில் உருவாக்கப்பட்டுள்ள மாந்தர்களில் சிலர் மட்டுமே நமக்குள் நின்று நிலைக்கிறார்கள்.  அவர்களின் வாழ்வு குறித்த அத்தனை விவரங்களும் நாவலுக்குள் சொல்லப்பட்டுள்ளது. இடைவிடாத ஒரு நேர்க்கோட்டின் மீது அத்தனை மனிதர்களும் வாழ்வும் வரையறைப்படி வந்து போகிறது. கம்யூனிஸ்டுகளிடம் கீழ்மைகள் என்பதே இல்லையா? முத்துவின் பெற்றோர்களுக்கு எவ்வித சுயமுடிவுகளும் உணர்ச்சிகளும் இல்லையா? ஜெயாவை அழிக்கும்போது சண்முகம் பிள்ளையிடம் துளியளவும் காதல் துளிர்க்கவில்லையா? என அடுக்கடுக்காகக் கேட்டுக்கொண்டே செல்லலாம். கம்யூனிஸ்டுகளின் துப்பாக்கி தோட்டாக்கள்போல சை.பீர்முகம்மது பாத்திரங்களை வடித்துள்ளார். அவர்களிடம் சஞ்சலங்கள் இல்லை. தடுமாற்றங்கள் இல்லை. பாலியல் தொழிலாளியான ஜெயா சில நாட்களில் போராளியாகிறாள். பாலியல் தொழில் செய்த திருநங்கை கம்யூனிஸத்தைப் பின் பற்றுகிறாள். ஊருக்குள் கோயில் கட்டும் சண்முகம் பிள்ளைக்கு விசுவாசமாக தோட்டப்பாட்டாளிகளின் குரலைக் கேட்கவே முடியவில்லை. ஒரு போதை அடிமைக்குத் திருமணம் செய்து வைக்கும் தன் தந்தையான சண்முகம் பிள்ளைமீது மகனுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. எழுத்தாளர் கொள்கையை அல்லது ஒரு நோக்கத்தை நோக்கி புனைவை நகர்த்தும்போது இத்தனை கேள்விகளும் இல்லாமல் போகின்றன. அதுவே புனைவைப் பலவீனமாக்குகிறது.

பேய்ச்சி

பேய்ச்சி 001‘பேய்ச்சி’ நாவல் பெரும்பாலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்து மக்களையும் அவர்கள் வாழ்வையும் பேசக்கூடியதாக அமைகிறது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி ஒரே நேர்க்கோட்டில் நகரும் வரலாறாக  மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி இருக்கும் எல்லா திசைகளிலுமாக கொடிபோல பற்றிப் படர்ந்து தன்  தளங்களை விரித்துக்கொண்டே செல்கிறது பேய்ச்சி. நாவலாசிரியருக்கு வரலாறும் ஒரு துணைப் பாத்திரம்தான். சாராயம் குடித்து இறந்த லுனாஸ் வாட்டார மக்களின் இருண்ட வாழ்வும் ரப்பர் தோட்டங்கள் செம்பனை தோட்டமான வரலாறும் பினாங்கு பாலம் பற்றிய  முன்னோட்டமும் என நாவல் தன்னைச் சுற்றி இருக்கும் ஒரு பெரும் வரலாற்று நிகழ்வுகள் குறித்த அகன்ற அவதானிப்பை வழங்கினாலும் அவை எதுவும் நாவலை ஆக்கிரமிக்கவில்லை. இந்த வரலாற்றுக்கீழ் தமிழக மக்களினூடே மலாயா வந்தடைந்த நாட்டாரியல் தெய்வ வழிபாடும், நாட்டு மருத்துவமும், பெண்ணின் தொல்குணமும் இந்நாவலின் இன்னொரு சரடாக தூக்கி நிறுத்துகிறது. பேய்ச்சியில் மூன்று தலைமுறைக்கான கதை, கொஞ்சமும் அடர்த்தி குறையாமல் சொல்லப்பட்டுள்ளது. மூன்று தலைமுறைக்குண்டான கதைமாந்தர்களின் பயணம் நாவலில் அறுபடாமல் அழுத்தமான புனைவினூடே தொடர்ந்து வாசகனை கூட்டிச்செல்கிறது.

மலாயா நோக்கிய  கப்பல் பயணத்தில் அப்பாவை இழந்து மலாயா வந்திறங்கிய ஓலம்மா பதின்ம வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமாகிறாள். கர்ப்பமாக வந்தவளை அந்த லுனாஸ் ஆயெர் தோட்ட மக்கள் அரவணைக்கின்றனர். சாராயம் குடித்து இறந்த தோட்டத்து மக்களின் துயர் தாங்காமல் அந்த சம்பவத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாகிப் போகும் சீனப்பெண்ணைக் கொன்று நீதியைத் தேடிக்கொள்கிறாள். அது அந்த மக்களின் மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடு. அதற்கு முன்னதாக சீனப்பெண்ணைக் காக்க நினைத்து உறவுகொண்ட  ஓலம்மாவின் கணவன் மணியமும் கொல்லப்படுகிறான். தோட்டத்திலிருந்து வெளியேறி பக்கத்திலிருந்த கம்பத்தில் மகளுடன் தன் வாழ்வை அமைக்கிறாள். இருபது வருடங்கள் தன் வீட்டைச் சுற்றி வாழும் செடிகள் கொடிகள் உயிரினங்களின் மீது தீராத பற்றுக் கொண்ட அவள் அதனை விட்டுப் பிரிய முடியாத நிலையில் தன்னையே தாயென நம்பி இருந்த அத்தனை ஜீவனின் நிலையும் என்னவென பதறுகிறாள். இயலாமையின் உச்சத்தில் அவற்றின் மீது பற்றறுக்க முடியாமல் அவற்றைக் கொன்றுவிட்டு  தற்கொலை செய்துகொள்கிறாள். அவள் செய்த கொலைக்குத் துணைநின்ற வைத்தியர் ராமசாமி சீனப் பெண்ணைக் கொன்று வீசிய அதே அருவியில் விழுந்து இறக்கிறார். பாட்டி, அம்மா ஆகிய இருவரிடமும் எப்போதும் பார்த்த அஞ்சிய அதே உக்கிரத்தை அப்போய் இறுதியில் தன் மனைவியிடமும் காணும் கணகங்கள் பெண்களெல்லாம் பேய்ச்சி என்றென்றும் அவனுக்குள் படிமமாகிறாள்.

பேய்ச்சி நாவலுக்குள் அமைந்திருக்கும் புனைவானது சுருங்கச் சொல்லி விளங்க வைக்கூடிய புனைவல்ல. அது முன்னும் பின்னுமாக மாறி மாறி எல்லாத் திசைகளிலும் ஊடுறுவி நிற்பது. கட்டற்ற எல்லைகளை உடைத்தெரியும் சாதூரியமான புனைவு வெளியைக் கொண்டது. நுண்தகவல்கள் நிரம்பியது. கவித்துவமான உச்சங்களைத் தொடுவது. வாழ்வை காட்சிப்படுத்தி வாசகனுக்கு வாழ்ந்த அனுபவத்தை வழங்குவது. அதன் வழி வாசிப்புத் தருணங்களுக்கு அப்பாலும் வாசகனோடு நின்று நிலைப்பவை. எனவே, புனைவின் அடிப்படையில் இந்த நாவல் தனக்கான ஒரு தனித்த உச்சத்தை கண்டடைந்துள்ளது.

நாவல் ஒரு வாசகனுக்கு வழங்குவது வாழ்வின் தரிசனம் எனலாம். தரிசனம் என்பது நாவலுக்குள் பொதிந்துள்ள தத்துவத்தின் வழி சாத்தியப்படுவது. புனைவால் தன்னை முன்னெடுக்க முடியாத நாவல்கள் தத்துவத்தால்  உச்சத்தை தொடுதல் என்பது சாதியமில்லை. காரணம் தத்துவம் என்பது சொல்லாடல்களோ கருத்துக்குவியல்களோ அல்ல.  அது அந்த புனைவில் காணும் மனிதர்கள் வழி வாசகன் அடையும் புதிய உண்மை.

மலைக்காடு நாவல் தத்துவத்தால் தன்னை முன்னெடுக்கவில்லை. ஆனால், இந்நாவலுக்குள் இயற்கைக்கும், பிராணிகளுக்கும், மனிதனுக்குமான  ஒரு பெரும் பற்றுதலைக் காணமுடிகிறது.  நாய்களோடு பேசும் மக்களின் பேச்சில் திணை வேறுபாடுகளை அரிதாகவே கண்டறிய முடிகிறது.  காடுகள் குறித்தான அவரது வர்ணனை நாவலில் அநேகமான பக்கங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான மிக நெருங்கிய பந்தத்தை அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். இந்த நாவலின் ஊடே நான் மனிதனைக் காட்டிலும் பெரும் காடுகளையும், பிராணிகளையும்தான் அதிகம் அவதானிக்கிறேன். அவ்வகையில் சீ.முத்துசாமியின் பலம் அவர் மனதில் நிலைத்து படர்ந்துள்ள நிலம் எனலாம்.

அக்கினி வளையங்கள் நாவலுக்குள்ளான தத்துவமானது பெரும்பாலும் வாழ்வு குறித்த தனித்த பார்வையாக அல்லாமல் ஒரு ஒட்டு மொத்த சமூகம் சார்ந்த, கம்யூனிஸம் சார்ந்த, முதலாளித்துவம் சார்ந்த தத்துவமாகவே வந்தமைகிறது. அதைத் தாண்டி அது வாசகனிடத்தில் அரூபமான நிலையில் எந்தத் தீண்டலையும் ஏற்படுத்தவில்லை. தோட்டப்பாட்டாளிகளின் வியர்வை வைரமாக மின்னுவதாகச் சொல்வதும் சாதி ஒடுக்குமுறை தொடர்பான சொல்லாடல்களும் தேய்வழக்கானவை. ஆனால் சமூகத்தில் தன்னை பெரிய மனிதனாகவே நிலைநிறுத்திப் பழக்கப்பட்ட ஒரு முதலாளிக்கு சட்டென நேரெதிராக சூழல் திரும்பும் ஒற்றைக் கணம் அவருக்குள் மேலெழும் அகங்காரத்தின் குமுறல் எவ்வாறெல்லாம் வடிவெடுக்கும் என இந்த நாவலில் கண்டடைகிறேன். அதில் தன் பணியாளன் விட்டு விலகியதை எண்ணி வருந்திய அடுத்த நிமிடம்  அடங்க மறுக்கும் ஆணவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமிருக்கும் இன்னொரு முகத்தைக் காட்டக்கூயது. நாவலின் இறுதியில் எல்லாவற்றையும் துறந்து செல்லும் அதே முதலாளி உள்ளூர புகைந்துகொண்டிருந்த வன்மைத்தைத் தீர்த்துக்கொள்ளும் இடமும் அதை உணர்த்திச்செல்கிறது. இன்று நாம் நம்பக்கூடிய முகம் நமது உண்மையா என்பது நமக்கே தெரியாது.   அது நம்மை ஏமாற்றக்கூடிய முகமூடியாக மாறக்கூடும். இவ்வாறு சண்முகத்தின் உளப் போராட்டங்கள் வழி மனிதனின் ஆணவம் எடுக்கும் எண்ணற்ற முகங்களைக் காட்டுவதில் இந்நாவல் மலைக்காட்டைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிறது.

பேய்ச்சி நாவல் வாசிப்பின் கூர்முனையில் அரூபமாக நம்மை ஆட்கொண்டு ஆட்டிப்படைக்கும் புனைவு. அன்பு என்பதும் பேரன்பு என்பதும் எவ்வாறு தங்களுக்கான உருவங்களை எடுத்துக்கொள்கின்றன என பல இடங்களில் நாவல் சிந்திக்க வைக்கிறது. அழித்தல் என்பதும் பேரன்பின் பரிணாமம்தான் என பெண்களைப் பேரன்னையர்களாக உருவாக்கி இருப்பது நாவல் அடைந்துள்ள தனித்துவம். மனிதன் காலங்களால், தேவைகளால், சூழல்களால் என்னென்னவாக மாறுகிறான் என மணியம் மற்றும் சம்பு வழி நுட்பமாகச் சொல்வதும், எந்த அழிவையும் தாங்கிக்கொண்டு அடுத்த நிமிடமே வாழ்வின் இச்சையை மட்டுமே சூடிக்கொண்டு தயாராகும் பெண்களின் தீவிரமான மனநிலையை காத்தாயி, ஓலம்மா, சின்னியின் மூலம் காட்டுவதும், வாழ்வு எவ்வளவு அர்த்தமற்றது என்று ராமசாமி மற்றும் தோக்குரு மூலம் உணர்த்துவம் நாவல் தனக்கே உரிய தனித்த அச்சில் சுழன்று தனித்துவம் கொள்கிறது.

“ஒரு மொழி வடிவம் உருவாக்கப்படுவது ஒரு முனை, வாசிக்கப்பட்டு பொருள் கொள்ளப்படுவது மறுமுனை. இந்த நேர் எதிர் முனைகள் சந்திக்கும் புள்ளியில் இலக்கியத்தின் வடிவம் நிகழ்கிறது” என ஜெயமோகன் கூறுகிறார். இந்த இரு முனைக்கும் நடுவில் நிற்கக்கூடிய ஒரு வாசகன் அதற்குள் இருந்து தனது வாழ்நாள் தேடலாக எதையாவது கண்டடைய முடியுமென்றால், இந்த வாழ்வின் மீதான அவனது பார்வை அசைக்கப்படுமென்றால் அந்த நாவலுக்கான பயண வெளி எல்லையற்றதாக அமையும். மலேசிய நாவல்கள் பெரும்பாலும் அதைநோக்கிச் செல்லவேண்டிய பயணம் வெகு தூரம். விமர்சனங்களின் மீதான ஒவ்வாமை நீங்கும்போது அதை நோக்கிய பயணம்  எளிமையாகவே வசப்படலாம்.

 

2 comments for “மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்

  1. A.Punithawathy
    May 1, 2020 at 4:08 pm

    தெளிவான ஒரு விமர்ச்சனம்

  2. Maygav Nathan
    November 23, 2020 at 10:12 am

    Novels yenge kidaikkum? Mikka nandri

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...