பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சஞ்சிக்கூலிகளாக மலேசியாவிற்கு வந்திறங்கிய இந்தியர்களின் வாழ்வியலையும் உளவியலையும் அலசும் இந்நாவல் அதனூடே பல்வேறு அரசியலையும் பேசுகிறது. தர்மபுரி பக்கத்தில் இருக்கும் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பஞ்சத்தில் வாடிய கிராமத்திலிருந்து தன் 15 வயது மகன் உண்ணாமலையுடன் மலாயா புறப்படுகிறார். வளமான வாழ்வாதாரத்திற்காக அயலகம் புறப்படும் மாரிமுத்துவின் வாழ்க்கை என்னவானது? மூன்று தலைமுறை கடந்தபின் என்ன நடந்தது என்பதை கதைக்களமாக்கியுள்ளார் நாவலாசிரியர்.
முதல் அத்தியாயத்தில், அந்தக் கப்பல் பயணம் நம் மனதைப் பிழிவதுடன் அக்காலத்தில் நம் முன்னோர்கள் இப்படித்தானே சிரமப்பட்டு வந்திருப்பார்கள் என்பதையும் நினைவூட்டுகிறது. மாரிமுத்துவையும் அக்கம்பக்கத்து மக்களையும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரும் தண்டல், கப்பலில் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அடிமை சாசனத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்த பத்திரங்கள் அவர் கையில். அந்தத் தைரியத்தில் அவரின் அதிகாரம் வெளிப்படுகிறது. சஞ்சிக் கூலிகளாகப் பயணத்தைத் தொடங்கிய அவர்களின் அல்லல் வாழ்வு சுகாதாரமற்ற அந்தக் கப்பலிலேயே தொடங்கி விட்டது.
கொட்டகையில் அடைக்கப்பட்ட ஆடுமாடுகள் போல் அந்தத் தளத்தில் நெரிசலான மக்கள் கூட்டம்; செத்த புழுக்கள் மிதக்கும் கஞ்சிதான் உணவு; மலம் மூத்திர வாடைகளோடு பயணம். அதற்கும் மேல் காலரா தொற்றுநோயால் தொடர்ந்துகொண்டிருந்த மரணங்கள். நோயால் இறந்தவர்களின் பிணங்கள் கடலில் வீசி எறியப்படுகின்றன. கொடூரத்தின் உச்சக்கட்டமாய் காலரா தொற்றுக்கு ஆளானவர்கள் இறக்கும் முன்னரே ஈவு இரக்கமின்றி கடலில் வீசி எறியப்படுகின்றனர்.
இந்த அவலங்களுக்குச் சாட்சியாக இருபது முப்பது நாட்களுக்குப் பயணம் செய்ய வேண்டுமே என்ற பயம் அனைவருக்கும் உண்டாகிறது. ஒருவழியாகக் கப்பல் துறைமுகத்தை வந்தடைகிறது. பினாங்கிலிருந்து அனைவரும் படகில் பட்டர்வொர்த் வந்து சேர்கின்றனர். பயண அலுப்புத் தீரும் முன் மாட்டுவண்டியில் அடுத்த பயணம். புக்கிட் செம்பிலான் தோட்டத்தை நோக்கி நான்கு நாள் பயணம்.
பயணத்தின் இடையே உண்ணாமலை சிறுநீர்க் கழிக்கச் சென்றவேளையில் அங்கிருந்த காடும் புலியின் உறுமல் சத்தமும் மாரிமுத்துவிற்குப் பயத்தை வரவழைத்தது. தான் நினைத்து வந்ததுபோல் மலாயா அழகான காடுகளைக் கொண்டிருக்கவில்லை. உயிரைக்குடிக்கும் ரத்தக்காட்டேரி போன்று அடர்ந்து பயமுறுத்தும் காட்டில் நிறைய பயங்கரங்கள் காத்திருக்கின்றன. இப்பயணத்தில் சிறுவன் உண்ணாமலையையும் அழைத்துவந்தது மாபெரும் முட்டாள்தனம் என குமைந்தார். முறையான உணவும் வழங்கப்படவில்லை. அசௌகரியத்தாலும், பசியாலும் உண்ணாமலை சோர்ந்து போயிருந்தான். மாரிமுத்துவின் உறவுக்காரர்கள் அவன் அவசரப்பட்டுவிட்டதாய் குறை கூறினார்கள். எல்லாமும் சேர்ந்து மாரிமுத்துவைத் துவள செய்தது.
நான்காம் நாள் புக்கிட் செம்பிலான் தோட்டத்தை வந்தடைகின்றனர். அடர் காட்டின் நடுவே மூங்கில் வேலி. “திங்க சோறு இருக்கு, தின்னுட்டு தூங்குங்க; காலையில அஞ்சு மணிக்கு மணி அடிப்பாங்க; காப்பி குடிச்சிட்டு பெரட்டுக்கு போங்க,” தண்டலின் அதிகாரத் தொனி இன்னும் மேலோங்கியது.
இந்நாவலில் மாரிமுத்து, உண்ணாமலையின் வாழ்க்கை போராட்டத்தைதான் பார்க்கப்போகிறோம் என நினைக்கையில் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து கதை வேறு தளத்தில் பயணிக்கிறது.
மாரிமுத்துத் தொடங்கி நான்காவது தலைமுறையில் வந்து நிற்கிறது கதை. உண்ணாமலையின் மகள் வயிற்றுப் பேரன் குட்டியப்பன் என்ற குட்டி பிரதான பாத்திரமாக இருக்கிறான். உண்ணாமலையும் மாரிமுத்துவும் இதன் பிறகு நினைவுப் பாத்திரங்களாகவே நாவலில் ஒரு சில இடங்களில் வந்து போகிறார்கள்.
புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் போது பாம்பு தீண்டி துடிதுடித்து மரித்துப்போன தன் பாட்டன் மாரிமுத்து இந்த மண்ணில் பட்ட கஷ்டத்தைக் கேட்டு வளர்ந்ததால் குட்டியின் மனதில் எப்போதும் ஒரு கோபம் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு வந்த தன் பாட்டனுக்கு இந்த மண் துரோகம் இழைத்துவிட்டதாய் எண்ணுகிறான். அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு போராட்ட குணத்தை விதைத்துச் செல்கிறது.
அத்தோட்டத்தில் வெள்ளைக்கார துரை ஜேம்ஸ் கோனல்லி, சின்னதுரை வர்கீஸ் பொன்னம்பலம் ஆகியோரின் ஆட்சியில் அவர்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுத் தொழிலாளிகளை அதிகாரம் செய்யும் பெரிய தண்டல் சுப்பராயன் ஆகியோரின் ஒடுக்குமுறையில் மக்கள் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். சுத்தமான தண்ணீர் கூட மறுக்கப்பட்டு வருகிறது. தொண்டர் படையைச் சேர்ந்த டிரசர் பாலையாவின் தலைமையில் குட்டி தண்ணீர் லாரியை ஓட்டிவந்த அமீட்டை மடக்குகிறான்.
அமிட் தோட்டத்திலுள்ள மலாய்க்காரர்களை விட பெரிய உடல்வாகு கொண்டவன். இந்தோனேசியா சுலாவாசியிலிருந்து வந்த பூகிஸ் பரம்பரையைச் சேர்ந்தவன். தானும் அவனுக்குச் சளைத்தவனல்ல, உருட்டுக்கட்டையும் வீச்சரிவாளும் பிடித்த வீரப்பரம்பரை என மார்த்தட்டி சண்டையிட்டு அமிட்டை தரையில் சாய்த்து நெஞ்சில் ஏறி அமர்கிறான் குட்டி.
துரை பங்களாவுக்கு வழக்கமாகப் போய்வரும் சுத்தமான தண்ணீர் நிரம்பியிருக்கும் லாரியைக் கோவிலுக்குக் கொண்டு போக சொல்கிறான். தன் தாத்தாவைப் போன்று உயரமும், நீண்ட கைகால்களைக் கொண்டவனுமான குட்டியை ஊர்மக்கள் வியந்து பார்க்கிறார்கள். குட்டியைத் தேடி குடியிருப்புக்குள் நுழையும் காவல் துறை அதிகாரிகளைத் தோட்டத்திலுள்ள ஆண்களோடு பெண்களும் எதிர்த்து நிற்கிறார்கள். குட்டியையும் அவனது இரண்டு நண்பர்கள் மற்றும் டிரசர் பாலையாவையும் போலீசார் பிடித்துச் செல்கின்றனர். தங்களுக்கு எப்போதும் அடிமையாகவே இருக்கக்கூடிய எளிய சமுதாயம் என நினைத்துக்கொண்டிருந்த வர்க்கத்தின் போராட்டம் துரைக்குக் கலக்கத்தை உண்டு பண்ணியது. அவர்களை கிள்ளி எறிய திட்டம் போடுகிறார்.
அவர்கள் கைதானதும், தொண்டர் படை தடை செய்யப்பட்டதும் வெள்ளைக்கார துரையை மகிழ்ச்சிப்படுத்துகிறது. கோடை விடுமுறைக்கு லண்டனுக்குப் போவதற்கு முன்பாக அந்த வெற்றியை கொண்டாடும் விதமாகப் பங்களாவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்.
குட்டி விடுதலையாகி மூன்று மாதம் கழித்து விடுதலையான டிரசர் பாலையா காணாமல் போகிறார். அதன் பின்னர் குட்டியின் நண்பர்கள் இருவர் வேறு காணாமல் போனதால் தோட்ட மக்கள் கலக்கமடைகிறார்கள். அவர்கள் பாலிங் காட்டுக்குப் போகப்போவதாய் அறிந்தபோது மக்கள் கட்சித் தலைவர் இங்கிலீஸ் மணியத்துக்கு கலக்கம் உண்டாகிறது. வேட்டைக்காரரை அழைத்துக்கொண்டு குட்டியின் வீட்டுக்குப் போகிறார்.
தைரியசாலியான குட்டியை நெட்டமணியின் துணையோடு காட்டுக்கு அனுப்பி காணாமல்போன இருவரையும் கண்டுபிடிக்கச் சொல்லலாம் என்ற திட்டத்தைச் சொல்கிறார்கள். குட்டியின் அப்பா கோபாலு சம்மதிக்கிறார். குட்டியின் அம்மாவின் எதிர்ப்பை மீறி குட்டியும் நெட்டை மணியும் புறப்படுகிறார்கள். வழியில் சுடுகாட்டைக் கடக்கும்போது தாத்தாவின் நினைவு வருகிறது குட்டிக்கு. புற்றுநோய்க்கு ஆளாகி,வலியோடு இறந்தவருடனான நினைவுகளை மீட்டெடுக்கிறான். சாமியாடி வேறு அவர்களை தத்தம் வீட்டுக்குத் திரும்பி போகச்சொல்கிறார். சட்டென எழுந்த சுதாகரிப்பில் அது முனியாண்டி சாமியென சொல்லி நெட்டைமணி தயங்குகிறான். ஆனாலும் தயக்கத்தை மீறி குட்டி புறப்படுகிறான். சைக்கிள் எதிலோ மோதி கீழே விழுகிறார்கள். ஏதோ வெளிச்சம் அவர்களை நெருங்கி வருகிறது.
மறுநாள் விடிந்ததும் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட இரு பையன்களும் தோட்டத்திற்குத் திரும்புகின்றனர். ஆனால் குட்டியையும், நெட்டைமணியையும் காணவில்லை. கதையின் மையம் இங்குதான் இருப்பதாய் என் பார்வையில் உணர்கிறேன். குட்டிக்கு என்னவாகியிருக்கும்? துரையின் ஆட்கள் கொன்றிருப்பார்களா?இல்லை வேட்டைக்காரன் அந்தக் காட்டில் பார்த்த ஆக்ரோஷமான புலி கொன்றிருக்குமா?
அந்தப் பல்வேறு யூகங்களுக்கு இடையில் வெவ்வேறு பாத்திரங்களோடும், அவர்களைத் தொடர்புப்படுத்திய கிளைக்கதைகளோடும் கதை தொடர்ந்து பயணிக்கிறது. குட்டியைத் தேடும் பணியில் கோப்பரல் மணியம் அறிமுகமாகிறார்.
குட்டிதான் நாவலின் முக்கிய கதாபாத்திரம் என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், கோப்பரல் மணியம் நாவலின் கதாபாத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகன் தோற்றத்தைக் கொடுக்கிறார்.
மாரிமுத்து, உண்ணாமலை, குட்டி, நெட்டமணி, டிரசர் பாலையா, கோப்பரல் மணியத்தை அடுத்து, நாவலின் இதர பாத்திரங்களாக இங்லீஸ் மணியம், குதிரைக்காரன் குருசாமி, வேட்டைக்காரர் சங்கிலிமுருகன், வர்கீஸ் பொன்னம்பலம், லச்சுமி, பெரிய தண்டல் சுப்பராயன், நொண்டி கிருஷ்ணன், சாமியாடி, முனியம்மா கிழவி, கண்ணம்மா , அவள் கணவன் கேப்டன் கணபதி சுதேந்திரன் குட்டியின் காதலி பவானி, சுவான் லீ என பலர் உள்ளனர்.
நாவலில் உள்ள கதாபாத்திரங்களில் என் நினைவில் இருப்பவர்களை நான் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறேன். முதலாம் தரப்பு அடக்கி ஆளும் அதிகார எண்ணம் கொண்டவர்கள். பிரிட்டிஷ் துரை மற்றும் சின்ன துரை போன்றோரை இதில் சேர்க்கலாம். இரண்டாம் வகையினர் அவர்களை எதிர்த்து நிற்பவர்கள். காட்டாக குட்டி, நெட்டமணி, டிரசர் பாலையா, வீரம்மா மற்றும் தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள்.
மூன்றாம் வகையினர் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள். அவர்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளுக்காகவும், பதவியைத் தற்காத்துக்கொள்ளவும் அதிகாரத்திற்கு உடன்படுகிறவர்கள். தண்டல் சுப்பராயன், சின்னக்கிராணி குட்டக்கால் சுந்தரம் ஆகியோரை அதில் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டாம் வகையினர் தங்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்ற பயத்தில் அடங்கிப்போகிறவர்கள். கோபாலு, முத்தாயி, கண்ணம்மா, முனியம்மா, பவானியம்மாள், சின்னத்தாயி, வேட்டைக்காரர், இங்கிலீஷ் மணியம் ஆகியோரை அந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
இங்கிலீஷ் மணியம், வேட்டைக்காரர், கோப்பரல் மணியம் ஆகியோர் மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துக்கொண்டாலும், அதிகார வர்க்கத்தை எதிர்ப்பவர்களாக இல்லை.
என் புரிதலில் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களில் பெரும்பாலோர் இழப்பையும், நிராகரிப்பையும் சந்தித்தவர்களாகவே இருக்கின்றனர். அந்த இழப்பின் காரணமாகவே அவர்களின் பாத்திரப்படைப்பில் முரண்கள் தோன்றுகின்றன. குட்டியின் அம்மா முத்தாயி தாய்மையுணர்வு நிரம்பியவர். தாயில்லாத நாய்கள் என்றாலும் மனிதக்குழந்தையைப்போல் கொஞ்சி, பாசம் காட்டுபவர். தெருநாய்களுக்கும் உணவிடுபவர். எல்லாரிடமும் அன்பு முகத்தைக் காட்டுபவர். ஆனால் மகன் காணாமல் போன பிறகு மூர்க்க குணமும், எடுத்தெறிந்து பேசுவதும் என வேறுமாதிரி இருக்கிறாள். தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியவர் என இங்கிலீஷ் மணியத்தைத் திட்டுபவள் தன் கணவரையும் கண்டமேனிக்குத் திட்டுகிறாள்.
அடுத்ததாக இங்கிலீஷ் மணியம். வாசகர்களுக்குக் கோமாளி போல் அறிமுகமாகிறார். ஆனால் தன் மகனை அனுப்பாமல் குட்டியைக் காட்டுக்கு அனுப்புகிறார். முத்தாயியிடம் திட்டு வாங்கினாலும் தன் மகனைக் கண்டத்திலிருந்து காப்பாற்றிவிட்ட திருப்தியில் நெகிழும்போது பாசமிக்க தந்தை என்பதைக் காட்டிலும் சுயநலமிக்க மனிதராகவே தெரிகிறார்.
குட்டியின் தந்தையாக வரும் கோபாலு, மனைவி ஏசும்போது சோகமாகி, தனியாய் அமர்ந்து புலம்பும்போது பரிதாபத்துக்குறியவராய் தெரிகிறார். ஆனால் தன் முன்னாள் மனைவியையும், அவளது கள்ளக்காதலனான தன் நண்பனையும் கொன்று காட்டுக்குள் புதைத்தது வெளிவரும்போது அவருக்குள் இருந்த குரூர புத்தி வெளிப்படுகிறது. பின்னர் இங்கிலீஷ் மணியத்தையும் கொடூரமாய் கொல்கிறார். ஆரம்பத்தில் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பிராணிகளின் இரை வேட்டையை அவர் ரசிப்பதாக நாவலாசிரியர் எழுதியது அவருக்குள் வேட்டையாடும் குணம் இருந்ததை உணர்த்துவதற்காகவோ என்ற எண்ணம் தோன்றியது.
கதையில் போராளி குணத்தைக் கொண்டிருக்கும் டிரசர் பாலையா பல போராட்டங்களுக்குத் துணை நிற்கிறார். ஆனால் தன்னைப் போன்று கருத்திருந்தாலும், கருப்புக் குதிரையைக் கொண்டாடும் மக்களில் அடங்கியுள்ள பெண்கள் தன்னைக் கண்டால் முகம் திருப்பிக்கொள்வதையும், திருஷ்டி பொட்டாய் இட்டுக்கொள்ளலாம் எனவும் கேலி செய்வது குறித்த ஆற்றாமை அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது. அது குறித்து குட்டியிடம் முறையிடும் காட்சியில் தங்கள் இனத்தைச் சேர்ந்த உள்ளூர்க்காரன் என்பதால் அவன் நிறம் கேலிக்குள்ளாகிறது, மேலை நாட்டிலிருந்து வந்த காரணத்தினால் அது குதிரையாய் இருந்தாலும், கருப்பாய் இருந்தாலும் தோட்டத்திலிருப்பவர்களுக்கு உசத்தியாகத்தான் தெரிகிறது என்ற உண்மையை உணரமுடிகிறது.
நாவலில் ஆறாவது அத்தியாயம் தொடங்கி பயணிக்கும் கோப்பரல் மணியம் ஆரம்பத்தில் அரசுக்கு ஆதரவானவராக இருந்தாலும் கடைசி அத்தியாயத்தில் அரசுக்கு எதிரான காரியத்தில் இறங்குகிறார். நாய்களிடத்தில் பரிவுடனும், தந்தையுள்ளத்தோடும் பழகும் அவரிடத்தில் போராட்ட குணமும் நிறைந்திருக்கிறது. அவரின் மனைவி இன்னொருவனோடு ஓடிப்போகிறாள்.
நிஜமாகவே இழப்புகளால்தான் இந்தப் பாத்திரங்கள் இயல்பு தன்மையிலிருந்து முரண்பட்டு நிற்கிறார்களா? ஒருவேளை மனித மனங்களின் இடுக்கில் புதைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஏதோவொரு காலக்கட்டத்தில் வெளிப்பட்டு விடுகின்றது என்றும் எடுத்துக்கொள்ளலாமா அல்லது வாசிப்பின் தொடக்கத்தில் அவர்களின் குணநலன்களைத் தவறுதலாக எடைபோட்டுவிட்டேனா என்ற கேள்விகள் இரண்டாவது வாசிப்பில் எனக்குள் எழவே செய்கின்றது.
அடிமை சுபாவத்தை இயல்பாய் கொண்ட மக்களைத் தேடிக் கொண்டுவந்து தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு சுயநலமாய் வாழும் வெள்ளைக்கார துரை ஜேம்ஸ் கோனல்லி பல நாடுகளையும் ஆக்கிரமிக்க எண்ணிய ஆண்ட பரம்பரையின் அடையாளம். தங்களுக்கிருக்கும் செல்வாக்கைக் கொண்டு ஆங்கில துரைக்கு ஈடாக, அவர்களைப் பின்பற்றி வாழும் சின்ன துரை சாதிய வேறுபாடு கொண்ட வர்க்கத்தினரின் அடையாளம்.
குதிரைக்கார குருசாமி துரையின் குதிரைக்குச் சேவகம் செய்வதையும், அதனால் கிடைக்கும் கவனிப்பையும் மட்டுமே தன் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக எண்ணும் அல்ப மனம் கொண்டவர். லண்டனிலிருந்து வந்த வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாய் இருக்கும் மக்களைப் போன்று லண்டலிருந்து வந்த குதிரைக்குச் சேவகனாய் இருக்கிறான் அவன். கதைகளை இட்டுக்கட்டி சிலரின் ஏளனத்திற்கும் ஆளாகும்போது கொஞ்சம் இரக்கம் வரவே செய்கிறது.
தங்களுக்குச் சலுகைகள் கிடைக்கும், மக்கள் பயந்து நடப்பார்கள் என்ற ஆசையால் துரைகள் ஏவும் எல்லா கட்டளைகளுக்கும் அடிப்பணிந்து அவர்கள் செய்யும் பாவங்களிலும் பங்கு கொள்ளும் சுப்பராயன் தண்டலும், கட்சிக்காக ராணுவ கணவனை இழந்த கண்ணம்மாவுக்கு உதவுவதை விளம்பரப்படுத்திக்கொண்ட மலாயா இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சந்தர்ப்பவாதிகளின் பிரதிநிதிகள்.
நாவலில் வேட்டைக்காரரின் பாத்திரம் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல என தோன்றியது. மிருகங்களைப் பயமின்றி வேட்டையாடிய அவர் வெள்ளைக்கார துரையை எதுவும் செய்யவில்லை. அவர் முதன்முதலில் வேட்டையாடிய சரித்திரமும், மலைக்காட்டில் பார்த்த கொடிய புலியும், பன்றியின் உயிர்த்துடிப்பில் அவருக்குள் ஏற்பட்ட மனமாற்றமும் படிப்பதற்குச் சுவையாக இருந்தபோதிலும் கதையோடு சம்பந்தப்படவில்லை.
நாவலில் தேவையற்ற இன்னொரு பாத்திரமாக நான் உணர்ந்தது பவானியம்மாளையும், அவள் தாய் சின்னத்தாயையும். குட்டிக்கு என்னவானதோ என்ற பதைபதைப்பில் கதையை வாசித்துக்கொண்டு சென்றதால் குட்டியின் காதலியாக வரும் பவானியம்மாள் மீது எந்தப் பரிவும் வரவில்லை. சாண்டில்யன் கதையில் வரும் வர்ணனை போன்று அறிமுகமாகும் பவானியம்மாள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சாதிய வேறுபாட்டின் துயரத்தைக் கடத்துவதற்கென படைக்கப்பட்ட கதாபாத்திரம். வள்ளித்திருமணத்தைக் கூத்தில் கண்டபோது குட்டி வந்ததால், அவனைத் தாழ்ந்த சாதியில் பிறந்த வள்ளியை விரும்பி மணமுடிக்கும் முருகன் சாமியாகப் பார்க்கிறாள் போலும்.
அவளைப் போன்றுதான் கண்ணம்மாவும். கதையில் அவளின் பாத்திரப்படைப்பு இரு விசயங்களைச் சொல்லும் கருவியாகத்தான் எனக்குள் பதிவானது. முதலாவது அவள் கணவன். இந்த மண் நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்களின் மத்தியில் இந்நாட்டை தங்கள் சொந்தமென கருதி நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர்களும் உண்டு. அதை அவளுடைய கணவன் வாயிலாக புனைந்துள்ளார். அதேமாதிரி அவள் கணவன் அவளுக்காக விரும்பிக்கேட்ட பாடல், அது ஒலியேறிய வானொலியின் ஊடே கதை நடக்கும் காலத்தை வாசகனுக்கு உறுதிப்படுத்தியதாய் உணர்ந்தேன். (ஆனால் இக்கதை நடைபெறுவதாகக் கூறப்பட்ட காலத்தில் அந்த வானொலி சேவையும், அப்பாடலும் இருந்ததா என்பதில் சிறு குழப்பம்.)
நாவலில் பரிதாபத்தை அள்ளிச் செல்லும் முனியம்மாள் கிழவி கதைக்குச் சம்பந்தமில்லாதவர் போல் தோன்றுவார். ஆனாலும் கதை நடப்பதாகச் சொல்லப்படும் மலைக்காட்டில் அந்தப் பாத்திரங்கள் அனைத்துமே அடங்கும். மேலும் அதிகாரமும், நிராகரிப்பும் அதிகார வர்க்கத்திலும், வேற்றுச்சாதியிலும் மட்டுமல்ல சொந்த வீட்டிற்குள்ளும் இருந்தது என்ற குறியீடாக முனியம்மா கிழவியைப் பார்க்கிறேன். வெளிநாட்டவன் வந்து நாட்டைவிட்டு துரத்துவது மட்டுமல்ல,சொந்த மகனே வீட்டைவிட்டுத் துரத்துவதும் ஓர் அவலம்தான்.
தோட்டத்தில் பல்வேறு குணநலன்கள் கொண்ட பெண்கள் இருந்ததன் குறியீடாக வீரம்மா,லெட்சுமி மற்றும் தண்டலின் மனைவி ஆகியோரைக் குறிப்பிடலாம். வீரம்மா துணிச்சல்மிக்க பெண்ணின் பிரதிநிதி. லெட்சுமி சுகபோக வாழ்வுக்காகவும், கணவனின் பெருமையைக் காக்கவும் வெள்ளையனிடம் உறவு கொள்வதை மறுத்து உயிர்துறக்கிறாள். தண்டலின் மனைவி. கற்பை உயிருக்கும் மேலானதாய் மதித்த சராசரி பெண்ணின் பிரதிநிதி அவள். லெட்சுமியோ கற்புக்கு வேறு நிலைப்பாடு கொண்டிருப்பவள். கணவன் இறந்துவிட்டாலும், மகள் இருந்தாலும் தனக்குப் பிடித்தவனோடு உறவு கொள்பவள் விருப்பமில்லாதவனோடு உறவுக்கு மசியவில்லை.
கதையில் தேவையில்லாது வந்துபோன சித்திரக்காரன், கோபாலு இருந்த கோயிலில் ராமாயண கதையை வரைந்து போவது அவசியமில்லாத காட்சியோ என நினைத்தேன். ஆனால் மகனை இழந்து முனியின் முன் நிற்கும்போது அந்த ஓவியம் சாமி காட்டிய குறியீடு என முனி பார்வையிலேயே சொல்வதாய் அமைந்த காட்சி, கோபாலுவின் மகனும் அதே மாதிரி காட்டிற்குப் போகப்போகிறான் என்ற குறியீட்டை வழங்குவதற்காக இருக்கக்கூடும் என்பதை இரண்டாவது முறை வாசித்தபோது உணர்ந்தேன்.
இவர்களுக்கு மத்தியில் நாட்டில் என்ன நடந்தாலும் தெரியாததுபோல் இருந்துகொண்டு வியாபார நோக்கோடு மட்டும் செயல்படும் சீன சமூகத்தின் பிரதியாக சுவான் லீ, சின் தியோங் கடை முதலாளி மற்றும் சுவான் கோப்பிக்கடை உரிமையாளர் ஆகியோர்.வணிக நோக்கம் கொண்ட சீன சமூகத்தில் யாருக்கும் கட்டுப்பட்டு இருக்கவிரும்பாத போராளி குணம் கொண்ட கம்யூனிஸ்டுகளும் இருக்கவே செய்கிறார்கள்.
மலேசிய நாட்டின் வாழ்வியலைப் பேசும் இக்கதையில் மலாய்க்கார பாத்திரங்கள் ஓரிரண்டு பேர்தான் தென்படுகிறார்கள். காவல் துறையினராகவும். முத்தாயியின் தங்கை பாத்திரத்தினூடே வந்துபோகும் மலாய்க்கார போமோ பாத்திரம் வாயிலாகவும் அவர்கள் வந்துபோகிறார்கள். பெரும்பாலான மலாய்க்காரர்கள் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது இரண்டாவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது.
கதையில் கோட்டான், சேவல், பல்லி, புலி, முதலை, பன்றி உள்ளிட்ட பிராணிகளின் ஊடே அதிகம் வர்ணிக்கப்பட்ட பாத்திரப்படைப்பாக பிளேக் பியூட்டி என்ற துரையின் குதிரையும், நிறைய நாய்களும் வந்து போகின்றன. பாம்பு ஒன்றும் சில காட்சிகளில் வந்துபோகிறது. பாம்பு வந்துபோவது அச்சத்தின் வெளிப்பாடு என என் புரிதலில் உணர்கிறேன்.
தோட்டத்து மக்களுக்கு காவலாய் இருக்கும் முனியோடு சீன மாரியம்மன் போன்ற சாமியும் வந்துபோகிறது. அவர்களில் முனி மட்டும் மனிதர்களின் உருவில் வந்துபோகிறது. இம்மண்ணில் தனக்கே பாதுகாப்பு இல்லையென பேசுகிறது. மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் அச்சத்தை முனியின் பாத்திரத்தில் தாங்களே கற்பனை செய்துகொள்கிறார்களோ என தோன்றியது. முனியும் தங்களின் பிரதிநிதி என அவர்கள் நினைத்திருக்கலாம்.
தமிழகத்திலிருந்து வந்த சஞ்சிக்கூலிகளின் பார்வையில் படுபயங்கரமானதாக, ரத்தக்காட்டேரியாய் காட்டப்படும் மலைக்காட்டின் இயற்கை அழகும், ரசிக்கத்தக்க காட்சிகளும் கதையில் ஆங்காங்கே வர்ணிக்கப்படுவதன் வழி மலைக்காடு வெறும் பயங்கர தோற்றம் மாத்திரம் கொண்டுள்ள இடம் அல்ல என்பதைக் காட்டியுள்ளார்.
கதையின் பலமாக நான் கருதுவது காட்சிக்குள் நம்மை இட்டுச்செல்லும் வர்ணனை. தோட்டப்புற வாசனையே இல்லாத என்னைப் போன்றவனுக்கு அந்த வர்ணனைகள் அந்தக் காலக்கட்ட வாழ்வியலை அறிந்து கொள்ள துணையாக இருந்தன. மொழியின் பயன்பாடும், கதையை நகர்த்திச்சென்ற விதமும் சுவாரஷ்யமாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற காலம் ஆகியவற்றை நாவலில் இணைத்திருப்பது கதையின் எதார்த்தத்தைப் புரிய வைத்தன.
இருப்பினும் சில இடங்களில் அந்த வர்ணனைகளே கதையின் பலவீனமானதாகவும் மாறிவிட்டன. போராளிகளுடன் இணையப்போகும் நாயகன் அந்தப் பரபரப்பான வேளையிலும் இயற்கையின் அழகை ரசித்து மகிழ்வது சாத்தியம்தானா என தோன்றியது. சுவான் லீ கொடுத்த குறிப்புகளைப் பின்பற்றி செல்பவனின் கண்களில் குட்டி தென்படுவானா? அவனுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற பதைபதைப்பில் வாசிக்கும்போது அந்த வர்ணனைகள் கதையோட்டத்தைக் குறைக்கும் வகையில் இருந்தன.
கதையில் இடையிடையே உண்மைச் சம்பவங்களை அவை நடைபெற்ற திகதியோடு சேர்த்து சொன்னவிதம் கட்டுரைத்தன்மையாகக் கதையின் நடையைச் சற்று மந்தமாக்கின.
அடுத்ததாகக் கதையில் சில பாத்திரங்களின் பெயர்களில் இருந்த ஒற்றுமை. முனியம்மா, மணியம், சுவான் கோப்பிக்கடை, சுவான் லீ போன்ற பெயர்கள். ஒரே வகையான மரணம் ஆகியவையாகும். கோப்பரல் மணியத்தின் அம்மாவும், உண்ணாமலை மாதிரி வாய்ப்புற்றுக்கு ஆளாகி, இறக்கிறார். கோப்பரல் மணியத்துக்கும் குழந்தையில்லை, அம்மாவூட்டு கோபாலுக்கும் குழந்தையில்லை. அவரது மனைவியும் வேறொருவனோடு கள்ளக்காதல் கொண்டுள்ளார்; கோபாலுவின் மனைவியும் கள்ளக்காதல் கொள்கிறார்.
இவற்றிற்கெல்லாம் உச்சமாய் கதையின் பெரும்பகுதியில் வந்துபோகும் நாய்கள். எல்லா நாய்களின் பின்னணியும் ஒரே மாதிரி இருந்ததாலும், அவை தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாலும் வாசிக்கும்போது சோர்வு தட்டியது. ஆனாலும் கதையின் பலவீனமாய் நான் உணர்ந்த ஒரே மாதிரியான மரணங்கள், கள்ளாக்காதல், குழந்தையின்மை, மற்றும் கைவிடப்பட்ட நாய்களின் கதையாவும் ஒரே மாதிரி பலருக்கும் நடப்பது சாத்தியமில்லாத ஒன்றும் அல்ல. ஆனாலும் தவிர்த்திருக்கலாம்.
நாய்களை மனிதர்கள் மாதிரி பெயரிட்டு, கொஞ்சுவதைக் கேட்டிருக்கிறேன். என்றபோதிலும் இக்கதையில் நாயை மகள் போன்று மா போட்டு அழைத்து, அப்பா என சொல்லிக்கொள்ளும் போக்கினை இக்கதையில்தான் முதன்முதலாய் படித்தேன். மனதைக் கவர்ந்த அக்காட்சியில் நான் நாவலாசிரியரைதான் நினைத்துக்கொண்டேன். அக்காட்சியில் அவரது மனம் வெளிப்பட்டதாய் உணர்ந்தேன். காரணம் ஒரு நிகழ்ச்சியில் நாவலாசிரியர் முத்துசாமி ஐயா தனக்கு நாய்களின் மீது இருக்கும் பிரியத்தைக் குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன்.
எது எப்படியிருப்பினும் பல நிறைகளைக் கொண்டிருப்பதால் தொடர்ந்து முத்துசாமி ஐயாவின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை இந்நாவல் தூண்டியுள்ளது என்றால் பொய்யாகாது. இந்நாவல் மலேசிய இந்தியர்களின் வாழ்வியலைச் சொன்ன சிறந்த நாவலாக என் மனதில் நிலைத்திருக்கும்.