மலைக்காடு: மலைமேட்டு முனியின் கனவுகாடு

indexஇரு நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு  குமுகாயத்தின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாய், வாய்ப்பொத்திக் கைக்கட்டி ஏவிய வேலைகளைச் செய்ய உலகம் முழுதும் தேடித் திரிந்து வெள்ளையர்கள் அள்ளிக் கொண்டு வந்த பேரினம்தான் தென்னிந்தியத் தமிழர்கள். கப்பல்களில் அடித்தட்டு மக்கள் பயணிக்கக் கூடிய அந்தப் பகுதியில், மனித மலமும் மூத்திரமும் ஒருங்கே காய்ந்து நாறும் பராமரிப்பு அற்ற மோசமான சூழலில் பல நாள் பயணித்த அனுபவம் நினைத்துப் பார்த்தால் நம் முன்னோர்கள் மீது கழிவிரக்கம் ஏற்பட்டு விடும். அப்படியான ஒரு சூழலில் வந்திறங்கிய தமிழர்கள், மதுவுக்கும் சாதிக்கும் அடிமையாக்கப்பட்டு வாழ்ந்து மறைந்த கொடூர வாழ்க்கை, புனைவாகும்போது, எதிர்கால தலைமுறையினருக்கு அது நுண்தகவல்கள் கொண்ட இணை வரலாற்று ஆவணமாகிறது. மைய வரலாற்றில் சொல்லப்படாத எளிய மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்வதால் இந்த இணை வரலாறுகள் அவசியமாகின்றன. சில சமயம் அது ஒரு குறுங்குழுவுக்கு மட்டுமே அறிமுகமான வாழ்வாக இருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு குமுகாயத்திற்கு அவசியமானதே. அவ்வகையில் இந்த இணை வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ள ‘மலைக்காடு’ நாவல் மலேசிய இலக்கியத்திற்கு ஏற்புடையதே.

நாவலாசிரியன் என்பவன் வழக்குச் சொற்களையும் கொச்சை மொழிகளையும் படரவிடுவது இயல்பானதே. அது எதிர்கால தலைமுறையினருக்குத் தம் முன்னோர்களின், வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு, சாதிய தீண்டாமை உயிர்ப்போராட்டம், உணர்வியல் போராட்டம், மற்றும் உரிமை போராட்டத்தைப் பற்றிய எதார்த்த நிலையை, உணர்ச்சியோடு புனைந்து காட்டும் கலைநுட்பத்தின் வழிமுறை. நாவல் வாசகனைத் தன்னுள்ளே இழுத்து அதனுடன் பயணிக்க வைக்கும் சாத்தியங்களை உருவாக்க வேண்டியுள்ளது. வரலாற்றில் நிகழ்ந்த ஆற்றொண்ணா துயரங்களைக் கடந்து வந்த சோகக் கதைகளை மறுநிகழ்வின் மூலம் உருவாக்கிக் கலைப்படைப்பாக்க வேண்டும். அவ்வகையில் கடார மாநிலத்தில் அமைந்துள்ள புக்கிட் செம்பிலான் எனும் பகுதியில் நடந்த உரிமைப் போராட்டத்தைக் கதையின் கருவாக வைத்து எழுத்தாளர் சீ.முத்துசாமி தற்குறிப்பேற்றல் உத்தி, கனவு உத்தி, நனவு உத்தி, கதைக்குள் கதை உத்தி, பின்நோக்கு உத்தி என கதைச் சொல்வதற்கான பல்வேறு சாத்தியங்களைக்  கையிலெடுத்துள்ளார்.

பொங்கிவரும் அந்த நீலக் கடலுக்குள் பயணப்படுவது என்பது சிலருக்குக் கனவாக இருக்கலாம். சிலருக்குச் சாகசமாகக் கூட இருக்கலாம். ஆனால், சஞ்சிக்கூலிகளாக மலாயா மண்ணில் வந்து இறங்கியவர்கள் கதை அப்படி அல்ல. நரக வாசலுக்குள் நுழைந்து பயணப்படுவது போல என்கிறார் நாவலாசிரியர் சீ. முத்துசாமி. மூன்று தலைமுறையினருக்கு முன்பு தென்னிந்திய தமிழர்கள், நாகப்பட்டணத்தில் இருந்து கப்பலேறி, பினாங்கு துறைமுகத்தில் வந்திறங்கிய அந்த மோசமானதொரு பயணத்தைப் பற்றி பேசி நாவல் தொடங்குகிறது. கப்பலில் பயணித்தவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைப் பற்றி சொல்லும்போது கண்கள் கலங்குகின்றன. ‘மதிய உணவாக தினமும் கொடுக்கப்படும் அதே செத்த புழுக்கள் மிதக்கும் புழுத்த நொய்யரிசிக் கஞ்சி’ என ஆசிரியர் அப்போது கொடுக்கப்பட்ட உணவின் தரத்தைப் பதிவும் செய்கிறார். காலரா நோய் வாட்டி வைத்த காலகட்டம் அது. யாரோ ஒருவருக்குக் காலரா தொற்று இருந்தமையால் கப்பலில் பயணித்தவர்களுக்கும் தொற்றிக் கொண்டு பரவ பத்து நாள்களில் பதினைந்து பேர் மாண்டுப் போன பதிவுகளால் சில மணிநேரம் அந்தக் கப்பலுக்குள் நம்மை இழுத்துப் போட்டு அவர்களின் அரற்றலைக் கேட்க வைக்கிறார். இறந்து போனவர்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் கடலில் தூக்கி எறிந்த காட்சிகளும், அந்த பிணங்கள் கடல் சுறாக்களுக்கு இரையானதும் மேலும் நம்மை உலுக்கி விடுகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவரைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் வீசும் அந்தக் கொடூர சம்பவங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

மாரிமுத்து உண்ணாமலை என்கிற அப்பன் மகன் இருவரை கொண்டு கதையைத் தொடங்கும் நாவலாசிரியர், வாசகனுக்கு உண்ணாமலைதான் கதைக்கு நாயகன் என்பது போல கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ஆனால் உண்ணாமலையின் கதை ஒரு கட்டத்தில் நின்று போகின்றது. பினாங்கு துறைமுகத்தில் வந்திறங்கிய சஞ்சிக்கூலிகளான தமிழர்கள், தென்னிந்தியாவில் அதாவது தமிழ் நாட்டில் கண்டு, விளையாடிய, உறவாடிய பசுமை காடுகள் போல் மலாயா காடு இருக்கவில்லை. உயர்ந்து ஓங்கி பல்கி பரவி நிற்கும் மலாயா காடுகளைக் கண்டு பயப்படுகின்றனர். கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, மூன்றே ஆண்டுகளில் கைநிறைய சம்பாதித்து சொந்த நாட்டிற்குத் திரும்பி விடலாம் எனும் நம்பிக்கையில், ஏதோ மாயா ஜால வித்தையுள்ள பூமி எனும் கனவில் கப்பலேறிய இனம் புக்கிட் செம்பிலான் தோட்டத்து மூங்கில் குடிசை லயங்களில் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

பதினைந்து வயதில் தன் தகப்பனின் கைப்பற்றி வந்து புக்கிட் செம்பிலான் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்த உண்ணாமலையின் மகள் வயிற்றுப் பேரனாகிய குட்டியப்பன் என்கிற குட்டியை, கதைக்கு நாயகனாக்கி நாவலின் அடுத்த கட்ட ஓட்டத்தில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார் சீ.முத்துசாமி. நாவலின் கருவை, குட்டியப்பன் அறிமுகம் ஆகும் போதே மெல்ல சொல்லத் தயாராகிறார். குட்டியப்பன் தன் நண்பர்களோடு, டிரசர் பாலையா வழிக்காட்ட வெள்ளைகார துரை பங்களாவுக்குப் போகும் குடிநீர் லாரியை மடக்கி அமீட் எனும் மலாய்க்காரனை அடித்து மிரட்டி தோட்டத்து மாரியம்மன் கோயில் முன்பு கொண்டு நிறுத்தும்போது குடிக்க சுத்தமான நீர் கூட இல்லாத அந்தப் பாமர மக்களின் உரிமைப் போராட்டம் நமக்குப் புரியத் தொடங்குகிறது.

கொத்தடிமைகள் என்றும் கொத்தடிமைகளாகவே இருந்து விட வேண்டும் என்பது வெள்ளைக்காரர்களின் அதிகார வர்க்கத்தின் தலைகனம். அதற்கு ஓர் இடையூறாக எவன் வந்தாலும் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்கிற வெறி அவர்களிடம் இருந்தது. அதை உடைத்து நின்றனர் பெண்கள். பெண்ணியத்திற்கு எதிராக எவ்வளவோ அடக்கு முறைகள் இருந்தாலும், சரியான நேரத்தில் பெண்கள் தங்கள் பலத்தையும் வலிமையையும் காட்ட தவறியதில்லை. அதற்கொப்ப அதிகார வர்க்கத்தையும், காவலையும் மீறி பெண்கள் குழு, குட்டியப்பன் அவர்தம் நண்பர்களையும் காப்பாற்ற சங்கிலி வளையம் அமைத்து எதிர்த்து நின்ற வீரமிக்கச் செயலை நாவலாசிரியர் வர்ணிக்கிறார். ஒரு நிலத்தில் நிலைத்து இன்றுவரை நீடிக்க  மலேசியத் தமிழர்கள் எவ்வளவு போராடியுள்ளனர் என்றும் ஒரு போராட்டம் பாலின வேறுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்து எவ்வாறு இயங்க வைத்துள்ளது என்றும் நாவலில் அறிய இதுபோல பல காட்சிகள் உண்டு.

நாவலாசிரியர் பிராணிகள் மீது அலாதி அன்பு கொண்டவர் என்பதை, “பிளேக் பியூட்டி’ எனும் வெள்ளைக்காரனின் கறுப்புக் குதிரையை வர்ணிக்கும் போது வெளிப்பட்டு விடுகிறது. குதிரையைப் பராமரிக்கும் குதுரக்கார குருசாமியின் மிடுக்கேறிய நடையில் இருந்து தெரிந்து விடும் நம்மவர்களின் சிலரின் பதவி ஆசை. மற்ற உயர் பதவிகளில் இருந்தவர்களின் குணங்களை விவரிக்க வேண்டுமா? கைக்கலப்பிலும் காவலாளர்களின் தடுப்பு வேட்டையும் சண்டையாகி கதையின் நாயகன் உட்பட பலர் கைதாகி, ஆறுமாத கால சிறைதண்டனைக்கு ஆளாகிறார்கள். இதுமாதிரியான உரிமைப் போராட்டம் நடக்க காரணமாய் இருந்தது, இந்தியாவில் காந்தி நடத்திய உரிமைப் போராட்டங்கள்தான் என்கிற செய்தியையும் நாவலாசிரியர் சொல்ல தவறவில்லை. இதுமாதிரியான பாடத்தைக் கற்றுக் கொண்ட வெள்ளைகார துரையின் அடுத்த தடுப்பு நடவடிக்கை எதுவாக இருக்கும். கண்டிப்பாகக் கழுத்தை முறிக்கும் வேட்டையாகத்தான் அமையும். விடுதலையாகி வரும் அவர்களைத் தீர்த்துக் கட்டவும் திட்டம் அன்றைய இரவு தீட்டுவதும், வாசகனை இன்னும் தொடர்ந்து நாவலை படிக்க ஆர்வமூட்டுகிறது.

ஒரு குமுகாயத்தை அடிமையாக வைத்திருக்க வெள்ளைகாரன் கையாண்ட மிக நேர்த்தியான உத்தி மதுபோதை. அதற்காக ஆங்காங்கே உருவாக்கியவைதான் கள்ளுக்கடைகள். இந்த கள்ளுக்கடைகளை அகற்ற வேண்டி, போராட்டம் நடத்தியவர்கள் ஏராளம். தொண்டர் படை அமைத்து இதுமாதிரியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தோட்டத்துத் தொண்டர்ப்படைக்கு வித்திட்டவர் மாநில தொண்டர் படைத் தலைவர் ஏ. எம். சாமி என்கிற வரலாற்றுச் செய்தியைத் தோட்டத்துத் தமிழர் கட்சி தலைவர் ‘இங்கிலீஸ்’ மணியம் மூலமாக நினைவு கூறுகிறார். இப்பகுதியில் ஆசிரியர் சீ. முத்துசாமி, பின்னோக்கு உத்தியின் மூலமாகப் பல போராட்ட முன்னெடுப்புகள் பற்றியும், வீரச் சாதனைகள் பற்றியும் பதிவு செய்கிறார். ‘புக்கிட் செம்பிலான்  தோட்டப்புறம் இந்தப் போராட்ட உணர்வுக்கு மிக முக்கிய உந்து விசையாக இருந்தது, கோலாலம்பூருக்குப் பக்கமுள்ள கடலோரக் கிள்ளான் பட்டணத்துக்கு அருகிலிருக்கும் ரந்தௌ பாஞ்சாங் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் சுங்கைதிங்கி தோட்டத்தைச் சார்ந்த 1500 தெலுங்கு மக்களால் 1912லியே முன்னெடுக்கப்பட்டப் போராட்ட வரலாற்றைத் தொண்டர் படையின் தலைவர்களில் ஒருவரான டிரசர் பாலையா பலமுறை அவர்களிடம் திரும்பத் திரும்ப சொல்கிறார். வெறும் மணியம் ‘இங்கிலீஸ்’ மணியம் ஆனதற்கு அவர் சொல்லும் நகைச்சுவையானது சிறிது நேரம் புன்முறுவலிட செய்கிறது. ஆங்கில மோகம் ஒருபுறம் இருந்தாலும் சினிமா மோகம் சிலரை எந்த அளவுக்கு மாற்றி இருந்தது என்பது புரிகிறது.

முன்பே சொன்னதுபோல பிராணி பிரியரான நாவலாசிரியர், அதிகம் நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கதைக்குள் கதை எனும் உத்தி மூலமாகக் குட்டியப்பன் வீட்டிற்கு வந்த மணி எனும் செவல நாய் பற்றிய கதையின் மூலமாக  வெளிப்படுகிறது. நாய் தமிழர்களின் வீட்டில் இன்னொரு பிள்ளையாக மதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தருணங்களும் உண்டு. அது பாதுகாவலனாகச் சுற்றி வந்தது, விசம் வைத்து கொள்ளப்பட்டதனால், மகன் செத்துப்போனால் ஏற்படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் பேதலித்து நிற்கிறார் ஆசிரியர். வேட்டைகாரர், மற்றும் கட்சித் தலைவர் பேச்சுக்கு மதிப்பளித்து, காணாமல் போன இருவரைத் தேடச் சென்ற குட்டியப்பனும் நெட்டமணியும் இருண்ட காட்டுக்குள் சென்று தொலைகிறார்கள். குச்சிக்காட்டுக்குள் தொலைந்து போன குட்டியப்பைனைத் தேடும் வேட்டை தொடர்வதாக அடுத்தடுத்த பாகங்கள் விறுவிறுக்கிறது. அதே தருணத்தில் மலை பங்களாவில் டிரசர் பாலையாவை அடித்துத் துரத்துகிறார் சின்னதுரை. தொடர்ந்து, தமது காம பசிக்கு இரையாக்க அதிகார வர்க்கம், அடிமைகளின் சிண்டைப் பிடித்து உளுக்கிய காட்சிகள் மிகவும் சினத்தைத் தூண்டும். தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஊரார் முன்னால் கௌரவம் மாறாமல் நடக்கவும், தண்டல் சுப்பராயன் லட்சுமி காலில் விழும் காட்சிகள் அருவருப்பை ஏற்படுத்தி நிற்கிறது. அவள் அதற்கு ஒத்துழைக்க மறுக்க தன் மனைவியையே கூட்டிக் கொடுக்க முனையும் தண்டலின் செயல், மானிடன் எவ்வளவு கீழ்மைக்கும் செல்வான் என்பதற்குப் புனைவில் காணும் மற்றுமொரு சான்று.

பல தொழிற்சங்க போராட்டவாதிகளின் வரலாற்றையும் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு வரையப்பட்ட பகுதிகளும் ஒருங்கே அமைந்திருக்கிறது. கோப்ரல் மணியம் என்கிற கதைமாந்தரைப் பற்றி படிக்கத் தொடங்கும் போதே உச்சநிலை கதைக்கு வந்துவிட்ட திருப்தி வந்து விடும். காரணம் குட்டியப்பனைத் தேடும் பொறுப்பில் சிறிதும் பின்வாங்காத மனிதர் அவர்தன். மீசைக்கார சிங்காரத்தின் அம்மா, முனியம்மா பாட்டியைப் பற்றி அவர் விவரிக்கையில், மலாயா இராணுவ படையில் ஒருவனான கண்ணம்மாவின் கணவன் காங்கோ நாட்டு உள்நாட்டு போரில் வீர மரணம் அடைந்த செய்தியையும் காட்டி இரு வெவ்வேறான சூழலை விளக்க முனைகிறார். எந்த நிலையிலும் கதை நாயகனாகிய குட்டியை, ஏதாவது ஒரு நிலையில் கதைக்குள் கதையெனும் உத்தியில் முன்னே கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் சீ. முத்துசாமி.

குட்டியப்பனின் காதல் மலர்ந்த கதையும் அவனது காதலியான பவானியம்மாள் பற்றிய அறிமுகமும் நாவலின் இறுதி அத்தியாயங்களில் நிழலாடுகிறது. தாழ்ந்த சாதியில் பிறந்துவிட்ட அவளின் அந்த மனநிலையில் சமூக சீர்கேட்டுத் தனத்தை விளக்குகிறார். அந்தக் காலகட்டத்தில் சாதிய கொடுமைகளை நுண்உணர்வியல் மூலமாகவே புரிந்து கொள்ள இயலும். அதற்காக அவர் காட்டியிருக்கும் காட்சிகளிலேயே உணர்ச்சியேற்றி இருந்தால் புனைவுக்கான தன்மையுடன் இருந்திருக்கும். மேலும், கோப்ரல் மணியத்தின் இளமை கால மகிழ்ச்சியான தருணங்களையும் அவர் பேச தவறவில்லை. அம்மாவை இழந்து தவிக்கும் ஒருவருக்குள் இருக்கும் அந்த ஆற்றொண்ணா துன்ப கூட்டில் எப்படியெல்லாம் நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் நிகழும் என்பதை நாவலை வாசிக்கும் வாசகனுக்குப் புலப்படும். கோப்ரல் மணியத்தின் தந்தை நாய்களுக்குக் காட்டும் பாசத்தில் ஒரு பங்காய் மணியமும் தாயிழந்த குட்டிகளை எடுத்து வந்து பராமரிக்கும் விதம் நம்மை நெகிழ செய்கிறது. இன்றும் சிலர் ஆங்காங்கே இருக்கும் நாய்களுக்கு இதுபோன்று உணவுகளைக் கொண்டு சென்று போட்டுவருவதும் நடந்து கொண்டிருக்கிறது. கோப்ரல் மணியத்தின் தோழனாக உடன் வரும் சீசரும், முத்தாயி வளர்த்த மணி எனும் செவல நாயைப் போல காவலுக்கும் நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியதாகி நிற்கின்றன. வாயில் புற்று நோய்வந்து மறைந்துப்போகும் கோப்ரலின் தாயின் கதை மெல்ல நெஞ்சை உருக்கி கண்ணில் கண்ணீரை நிரப்பி நிற்கிறது.  குட்டியப்பனுக்கு அம்முவூட்டு கோபல், பெற்ற தகப்பனாக இல்லாத போதிலும் வளர்த்தப் பாசம் அதிகமாகவே இருக்கிறது. முத்தாயி மானாவாரியாகப் பேசினாலும் தன்னியல்பிலிருந்து மாறாமல் அப்படியே ஒடுங்கிக் கிடக்கும் அம்முவூட்டு கோபாலின் முதல் மனைவியையும் அவள் காதலனான நண்பனையும் வெட்டிக் கொன்ற கதையும் பின்னொரு நாளில் ஏதோ ஒரு சம்பவத்திற்காகக் காத்திருக்கிற முடிச்சியைப் போட்டு வைத்திருக்கிறது நாவல்.

இறுதி தருணத்தில் கட்சித் தலைவரைக் கொன்று முடிச்சினை அவிழ்த்து விடுகிறது. பித்துப் பிடித்துப் போகும் அந்த முத்தாயியின் சோக கதை செவல நாய் மணி மாண்ட போதே அடக்கி வைத்திருந்த துக்கம், குட்டியப்பன் காணாமல் போகும் சூழலில் வெடித்துப் புகைத்து நிற்கிறது. அது அம்முவூட்டு கோபாலின் மூலமாக நிறைவடையும் வேளையில், சுவான் லீயின் உதவியோடு அந்த மலைக்காட்டைக் கடந்து சென்று, குட்டியப்பன், நெட்டமணி, டிரசர் பாலையா ஆகியோரையும் கண்டுபிடித்து விவரங்களைச் சொல்ல எத்தணிக்கும் கோப்ரல் மணியத்தின் உள்ளுணர்வுக்குள் புகுந்து, தடைப்போட்டு  மீளுகிறார் சீ.முத்துசாமி. குட்டியப்பனைச் சந்தித்த வேளையில், கண்டுகொண்ட அத்தருணத்தில் அவனை, எஸ்.ஏ.கணபதிக்கு உருவகப்படுத்திக் காட்டுகிறார்.

‘பொழுதுபோகத் தொடங்கி கருக்கல் வரை நீளும் கானாங்கோழியின் குரல் அடையாளம் தெரிந்தது’, எனும் அந்த வரிகளில் கானாங்கோழிகளைப் பற்றி பேசியிருப்பது அருமை. காரணம் இன்று கானாங்கோழிகளைப் பார்க்க முடியவில்லை. எதிர்கால தலைமுறையினருக்குப் படங்களின் வழிதான் அவைகளைக் காட்டப் போகிறோம். இது போன்ற நாவல்களின் வழி அந்தப் பறவை வாழ்ந்ததற்கான தடயம் இருக்கிறது என்பது புலனாகிறது. அது போல இடையில் வரும் சாமியாடி, மலைமேட்டு முனி, நம்மைக் கற்பனை உலகத்திற்குக் கொண்டு சென்று வாழவைத்திருப்பார். கிருஷ்ணன் கைப்பிடித்துக் கூட்டிச் சென்ற மலைமேட்டு முனியால் கூட விதியை வெல்ல முடியாமல் போகும் அவலத்தைச் சொல்கிறார்.

மலைக்காடு நாவல் தொடக்கம் தொட்டு இறுதி வரையில் வரலாற்றுச் சம்பவங்களை எந்தப் பகுதியிலும் சுணங்கிப் போகாமல் தொடர்ந்து வந்து வாசகனைக் கழிவிரக்கம்  மேலோங்க முணகளுடன் முதுகில் தட்டி, உச்சந்தலையில் ஆணி அடித்தது போல ஆழ் மனதில் பதிந்து, கிளை பரப்பிப் பல்கி பெருகி உயர்ந்து நிற்கிறது. ஆனால், வெறுமனே வரலாற்றுக் குறிப்புகளை மட்டும் வழிய கொண்டு வந்து சேர்த்திருப்பது, நாவலின் தன்மையைக் கெடுத்து விட்டிருக்கிறது. மூன்றாவது தலைமுறையில் வந்து தொடங்கும் கதையின் ஓட்டம் 1948 க்கும் 1960க்கும் இடைப்பட்டக் கதைப்போல இருக்கிறது. ஆனால் கடார பகுதிகளில் 1960களில் தான் தியேட்டர் உருவெடுத்திருக்கிறது. மற்றப்படி திரைக்கட்டிப் படமோட்டும் நிலைதான் தோட்டங்களில் இருந்திருக்கிறது. அதனால் இந்த நாவல் மலாயா விடுதலை பெற்ற பிறகான கதையா? அல்லது அதற்கு முந்தைய கதைக்களமா என்கிற கால பின்னணி தெளிவாக இல்லை.

தலைவர் இங்கிலிஸ் மணியம், காணாமல் போன இரண்டு பையன்களைத் தேடிக் கொண்டு கோயில் முன்னால் உள்ள வாங்கில் உட்கார்ந்து இருந்த வேளையில் திடீரென வந்த ஒரு உருவத்தைப் பற்றிய அவருடைய கற்பனை இங்கு தேவைக்கு அதிகமாகவே உப்புப் போட்டது போல இருக்கிறது. ஒரே இரவில் பைத்தியம் போல் வந்தவன் கோயில் சுவர்களில் ராமாயண கதையை வரைந்து வைத்திருந்தான் என்பதும் கையில் எதுவும் இல்லாமல் எப்படி வரைந்திருப்பான் என்கிற கேள்வியும், இந்தப் பகுதி மூலம் என்ன சொல்ல வருகிறது நாவல் என்பதும் புலப்படவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் கோவில்களில் அத்தனை அகன்ற சுவர் இருந்ததா என்ற குழப்பம் மேலோங்குகிறது.

கோப்ரல் மணியம், கதையின் நாயகனான குட்டியப்பனைத் தொடர்ந்து தேடும் முயற்சியில் இருக்கும் தருவாயில் அவரையே கதைக்கு நாயகனாக்கி விட்டது போல இருக்கிறது. கோப்ரல் மணியத்தின் பாலிய கால வாழ்க்கை அனுபவத்தையும், அவருடைய குடும்பத்தைப் பற்றி பேசுவதற்கான அவசியத்தையும் நாவல் கொண்டிருக்கலாம். ஆனால், கதைநாயகனைத் தேடும் ஒருவருடைய கதை பல அத்தியாயங்களில் பேசவேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன். பத்து வயது சிறுவனாக இருந்த காலக்கட்டத்தில் கோப்ரல் மணியம் பெற்றோரோடு இருந்த சூழலை விளக்குகிறார். இவ்விடத்தில், கோப்ரல் மணியமாக, நாவலாசிரியர் தன் கதைச் சொல்வது போல அமைந்திருக்கிறது. நாவல் முழுக்க நாவலாசிரியன் கதைச் சொல்லிக் கொண்டுவர இந்தப் பகுதியில் சீ. முத்துசாமி ஏன் கதைமாந்தராக மாறினார் என்ற கேள்வி எழுகிறது.

ஜேம்ஸ் கேனலியின் கறுப்புக் குதிரையைப் பற்றி அவர் வர்ணிக்கும் போது எழுந்த ஆவலில், கதையில் போகும் இடத்தில் எல்லாம் நாய்களை வழிய கொண்டு வந்து திணித்து அதன் மேலிருக்கும் அன்பைக் காட்ட முனைகிறார். ஆனால், வாசகனுக்கு அது ஒருவகையான சலிப்பை ஏற்படுத்தி விடும். எங்கு பார்த்தாலும் அம்மாவை இழந்த நாய்கள் வருகிறது. ஒரேயொரு இடத்தில்தான், உரிமையாளன் விட்டுச் சென்ற நாயைப் பற்றி பேசுகிறார்.

மேலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆங்கில அரசின் ஆள்சேர்ப்பில் இராணுவத்தில் இணைந்து காங்கோ நாட்டு உள்நாட்டுப் போரில் வீரமரணம் அடைந்த கண்ணம்மாவின் கணவன்  (Misi Pasukan Pengaman Bangsa-Bangsa Bersatu di Congo pada 1962-63), ஆப்ரிக்காவில் இருந்து தனது நேயர் விருப்பப் பாடலாகத் தமிழ் வானொலியில் கேட்ட பாடல் சித்திரமே..சித்திரமே.. சிரிக்கக்கூடாதா? இந்தப் பாடல் வீரக்கனல் எனும் திரைப்பட பாடல். இது 1960ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த திரைப்படம். 1970களில் தான் ரங்காயான் மேரா இயங்கத் தொடங்கியதாக அதன் வரலாறு குறிப்பிடுகிறது. ரங்காயான் மேரா எனும் தமிழ் வானொலி பிரிவில் இருந்து கேட்டதாக அவர் சொல்லியிருப்பது, நாவலாசிரியரின் கவனக்குறைவு (தகவல் பிழை) என எண்ணுகிறேன்.

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...