மண் அகல்

00002“முதல் கொட்டுக்கு ஆள் வந்துடுவாங்க. இப்பயே எழுந்தா தானே கல்லுக்கு பொங்கல் படைக்க ரெடி பண்ண முடியும், இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படி வசந்தி? எந்திரி.”

அப்போதுதான் அசந்தது போலிருந்தது வசந்திக்கு. அம்மாவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள். அம்மாவின் குரலா கேட்டது? உடல் சிலிர்த்தது வசந்திக்கு. ஜோதிமயி பாயிலிருந்து உருண்டு தரையில் கோணல் மாணலாக உறங்கிக் கொண்டிருந்தாள். மணி அதிகாலை 4. நேற்றே கௌசல்யா சித்தி நினைவூட்டி விட்டுப் போயிருந்தாள். “சரியா 3.30க்கு எழுந்திரிச்சாதான் வண்ணான் மாரி வந்ததும், முதல் கொட்டு கொட்டும் முன்ன கல்லு படைக்க பொங்கல் வைக்க முடியும். உங்க வீட்டுல அடுப்பேத்தக்கூடாது. என் வீட்டுல பொங்கிடலாம். மாரி வந்துட்டா எங்க பொங்கன்னு, பறக்க ஆரம்பிச்சுடுவான். நான் வர்றதுக்குள்ள அம்மா போட்டோ எடுத்து வைச்சிரு. மாலைய பிரிட்ஜ்ல இருந்து கடைசியா எடுத்துப் போட்டுக்கலாம். மணப்பலகையைக் கழுவி வைச்சிடு. மத்த அலங்காரமெல்லாம் பெரியவங்க வீட்டுக்கு வந்ததும் பார்த்துக்கலாம். இளநீர், பால் கோவா, மிச்சர் எல்லாமே எடுத்து வைச்சிடு,” என்று சொல்லிவிட்டுத்தான்,  அவர்கள் வீட்டுக்குப் படுக்கப் போயிருந்தாள்.

கௌசல்யா சித்தி வீட்டில் இன்னேரம் எழுந்து பொங்கல் தயார்செய்து கொண்டு இருக்கலாம்.  சித்தி வீட்டுக்குப் போக இங்கிருந்து பின்புறம் போகும் சந்தில் போக வேண்டும். பின்கட்டில் குடியிருக்கும் மூன்று குடித்தனக்காரர்களில் யாருமே சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் வெளி விளக்கைப் போடுவதில்லை. இந்த நேரத்தில் கும்மிருட்டாகத்தான் இருக்கும். பிறந்ததிலிருந்து கல்யாணம் ஆகிப் போகும் வரை ஆயிரம் முறை, கோடி முறை நடந்த சந்துதான். ஆனாலும் இருட்டில் இப்போதும் நடக்க பயமாகத்தான் இருக்கும். பூச்சிபொட்டு இருந்தா, தட்டுகிட்டா என்ன செய்வது. ‘இந்த குடித்தனக்காரங்க, வீட்டுக்காரங்க வீட்டில நல்லதுகெட்டது, விஷேசம்ன்னா விளக்க போட்டே வைச்சிருந்தா என்ன’ என்று நேற்றே மாலா அண்ணி சொல்லி ஆயாசப்பட்டாள்.

எழுந்து விளக்கைப் போட்டாள் வசந்தி. பளீரென்று பரவிய வெளிச்சத்தில் கண்கள் கூசியன. வீடு முழுவதும் சொந்தங்கள் ஆங்காங்கே உறங்கிக்கொண்டிருந்தனர். முதல் கொட்டுக்கு ஐந்து மணிக்கு வந்துடுவாங்கன்னு நேற்று சொல்லியிருந்தார்கள். கல்லுக் கூடையை எட்டு, எட்டரை மணிக்கு தூக்கிட்டு போவாங்க. அதுக்கு அப்பறம் வீட்டைக் கழுவிவிட்டு, குளிச்சா போதும், காலைல குளிக்கிற வேலகூட இல்ல. அதனால சித்தி வீட்டுல 3.30க்கு எந்திரிச்சா பரவால்ல. அவங்க பொங்க கிண்ட முக்காமணி நேரம் ஆவலாம், நீ மெதுவா எந்திரின்னு சொல்லியிருந்தாள் அரியலூர் சித்தி. பாக்யம்மாளுக்கு விளக்குப் போட்டதும் விழிப்பு வந்துவிட்டது.

“என்ன வசந்தி எத்தன மணி?”

“4.10 ஆகப் போகுது சித்தி!”

“இன்னும் கொஞ்ச நேரம் கூடத் தூங்கலாம் அஞ்சு மணிக்கு மின்ன எங்க மாரி வரப் போறான்..”

பாக்யம்மாள் திரும்பிப் படுத்துக்கொண்டாள். வெளியில் வாசல் தெளித்து கோலம் போட்டு இன்றோடு பன்னிரெண்டு நாள் ஆயிற்று. அம்மாவுக்கு உடல்நிலை மோசமான நாளிலிருந்தே திருவலம் வந்து, அங்கிருந்துதான் வேலைக்கு போய்க்கொண்டிருந்தாள் வசந்தி. ‘ஜோதி பிறந்தநாளுக்குக்கூட நல்லாதானே இருந்தாங்க. பொங்கலுக்கு வீடு கழுவ முடியல, முதுகு குனியக்கூட முடியலன்னு சொல்லவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனோம். இரண்டு மாசத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சு. பெரிசா படுத்திருக்கல, பட்டுன்னு போயிட்டாங்க. புத்து நோய்தான். ரொம்ப முத்தின பருவம். சரி செய்ய முடியாது. அகற்ற முடியாத அளவு வளர்ந்துடுச்சி. ஆறு வாரம், வாரம் ஒருமுற ரெடியேசன் வைச்சிட்டு, அப்பறம் ஆறு மாதத்துக்கு ஒருக்கா ரெடியேசன் வைச்சிகிட்டு, கவனமா இருந்தா ஆறு ஏழு வருஷத்துக்குகூட கவல இல்லைன்னுதானே சொன்னாங்க. ஆனா இப்படியாகும்ன்னு யார் நினைச்சா. இந்த இரண்டு மாசமா லைப்ரரி பக்கம்கூட போகல. கடமன்னு, கொடுக்கிற சம்பளத்துக்கு வேலைக்குப்போகத்தான் முடிஞ்சது. அம்மா முடியாத கிடந்தப்ப, பிள்ளயப் பார்த்து, வேலைக்கு போய் அதுக்கு மேல எங்க புத்தகம் படிக்கிறது.

நாலு முறை ரெடியேசன் வைச்சதும் அம்மா கொஞ்சம் தேறிட்டதுபோல இருந்தது. இடுப்பு வலி எல்லாம் கூட குறைஞ்சிடுச்சின்னு சொன்னாங்க. கொஞ்சம் நிம்மதியா இருந்தது….’ கொஞ்சம் கொஞ்சமாக பழைய மனநிலைக்கு வந்திருந்தாள் வசந்தி.

‘எந்த நேரத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்தேனோ? அம்மா சாகும் முதல் நாள்தான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன்,’ என்று நினைத்தாள். புத்தகத்தின் அட்டையே அவ்வளவு ஈர்ப்பாக இருந்தது. உடனேயாக படிக்க வேண்டும்போல உணர்வைத் தூண்டும் வண்ணமிருந்தது  பெரிய முக்காலி செய்ய நிறுத்தப்பட்ட மூங்கில்கள், அதன் முன்பகுதியில் சிலுவையில் அறையப்பட்டது போன்ற ஒரு பெண் உருவம், அது என்னவோ செய்தது. அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அயல் மொழியிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் புத்தகம். அம்மாவுக்கும் எப்போதுமே வசந்தி வாசிப்பது பிடிக்காது. அதனாலேயே என்னவோ அடிக்கடி தான் இருக்கும் வரைதான் வசந்தி இப்படியெல்லாம் இருக்க முடியும் என்று சபிப்பாள். அதுவே இப்போது உண்மையாகிவிட்டது. ‘ஒருவேளை அந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருந்தால் அம்மா இன்னும் உயிரோடு இருந்திருப்பாளோ?’ என்று நினைத்தாள் வசந்தி.

நீண்ட கதைகளின் தொகுப்பான அந்தப் புத்தகத்தின் முதல் கதையை வாசிக்க ஆரம்பித்தபோதே தெரிந்து விட்டது. அந்தக் கதைகளில் வரும் பெண்ணின் பாடுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது அம்மாவின், அம்மம்மாவின் வேதனைகள்.  புத்தகத்தைப் பாதி படித்துக்கொண்டிருக்கும்போதே என்னவோ போலிருக்கு என்ற அம்மா அதற்கு மேல் பேசவில்லை. ஹாஸ்பிடல் போகுமுன்னரே நினைவு தப்பி விட்டது. அதன்பிறகு அந்தப் புத்தகத்தை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாக இருந்தது வசந்திக்கு. ‘ஜோதி பாப்பாவை எப்படி இனி பார்த்துக்கொள்வேன்?’ வசந்திக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.

அம்மா இல்லாமல் போனது முதல் மூன்று நான்கு நாட்கள் வீடு முழுவதும் சொந்தங்கள் நிறைத்திருந்த அழுகையில் கொஞ்சம் கரைந்து போயிருந்தது. ஏதோ இப்போதுதான் வேறு வீட்டு விஷேசத்துக்கு போயிருக்கிறாள். வந்து விடுவாள் என்பது போலவே இருந்தது. ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு எல்லாம் வைத்தது வைத்த இடத்தில் இருந்தது.  ஜோதிமயி கூட அதிகம் அடம் செய்யவில்லை. ஒரு வயது முடிந்து இரண்டே மாதம் ஆகியிருக்கும் அவளுக்குக்கூட தெரிந்திருக்கிறது கண்டதை கண்ட இடத்தில் போட்டால் புலம்பிக்கொண்டே எடுத்து அடுக்க பாட்டியைக் காணோமென்று. பாட்டி பாட்டியென்று அரட்டிக் கொண்டு மடியிலேயே கிடக்கிறாள். பிள்ளைக்குப் பின்னால் எவ்வளவு ஓடியிருப்பாள் அம்மா. எத்தனை கவளம் சோறு ஊட்டியிருப்பாள். ஜோதிக்கு சோறு ஊட்ட பொறுமையே கிடையாது  திட்டிக்கொண்டே தினிக்கிறாள் என்றும் வசந்தியைத் திட்டியிருக்கிறாள் அம்மா.

உள்ளறையில் காற்றாடி சுழன்றுகொண்டிருந்தது. காற்று புத்தகத்தின் மேலட்டையை மெல்ல அசைத்தது. பக்கங்கள் புரண்டு அன்று படித்த கதையின் நினைவு வந்தது வசந்திக்கு. அதில் வரும் முஸ்லிம் பெண்ணுக்கு பெரியம்மா மகனுடன் திருமணம் நடக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண் தன் அண்ணனுடன் எப்படி உறவுகொள்ள முடியாமல் தவிக்கிறாள் என்பதை வாசிக்கும் தருணத்தில் அந்த மணப்பெண்ணின் முக்காடிட்ட முகம் ஏனோ அம்மாவின் முகம் போலவே தோன்றியது. அம்மம்மாவின் தம்பியையே அம்மாவுக்கு மணம் முடித்து வைத்திருந்தனர்.  ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவது, கேலி பேசி விளையாடுவது என்று எந்த சின்ன சின்ன சந்தோஷங்களையும் தனது பெற்றோகளிடையே வசந்தி  பார்த்தில்லை. சின்னக் குழந்தையாக இருந்தது முதல் பார்த்து வளர்ந்த பெண் என்பதால் அப்பாவுக்கு அம்மா மேல் அவ்வளவு நாட்டமில்லையோ? சின்ன வயது முதலே மாமா என்று பயம் கொண்டதால் அம்மாவுக்கு  அப்பாவிடம் நெருங்கமுடியவில்லையோ என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறாள். தன் மாமாவுடன் முதல் முறை உறவுகொள்ளவே பெரிய சாகசங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று அம்மா சொன்னதாக, அம்மா இறந்து அவள் சடலம் கிடந்த அன்று சின்னப் பாட்டி ஒப்பாரியில் புலம்பினாள். செத்த வீட்டில் சுவாரஸ்யமாக இருக்கட்டுமென்று சொன்னாளா அல்லது நிஜமாய்ச் சொன்னாளோ தெரியாது. அப்போது அப்பாவின் முகம் செத்துப் போனது. இப்போது கட்டுக்கட்டி கல்லு படைக்க மேசையை வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் இடத்தில் தான் அம்மா எப்போதும் படித்திருப்பாள். வசந்தி இரவு நெடுநேரம் விழித்து பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருப்பாள். அப்பா பெரும்பாலும் வீட்டைப் பூட்டி அம்மா படுத்த பின்னரே சத்தம்போடாமல் வந்து தன்னிடமிருக்கும் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து படுக்கையறைக்குப் போவார். அவர் படுக்கையறைக்கு உள்ளே நுழையும் வரை கண்களை மூடியே படுத்திருக்கும் அம்மா, நொடி நேரம் போர்வையை விலக்கி கொக்கு போல் தலை தூக்கிப் பார்த்து விட்டு பழையபடி போர்த்திக்கொண்டு உடலை இடுக்கிக்கொண்டு குறுக்கிப் படுத்துக்கொள்வாள்.

தொலைபேசி ஒலித்தது. ‘சந்தில் இருட்டா இருக்கு. டார்ச் லைட் எடுத்துக்கிட்டு வா பொங்கல் எடுத்துட்டுப் போவ’ என்று சித்தி அழைத்திருந்தாள். அவங்க வீட்டில இல்லையா விளக்கு. இந்த வீட்டுலதான எழவு, அதனால அவங்க மகளே செய்யட்டுமென்ற நினைப்பு. விளக்கை எடுத்துக்கொண்டு சந்து வழியே கல் படிகளில் ஏறி கொஞ்சம் தடுமாறியபடி சித்தி வீட்டை அடைந்தாள் வசந்தி. பெரிய வாசல். சொத்துப் பிரிக்கும் முன்னர் வாசலுக்கு தெற்கே, வடக்கே இரண்டு பக்கமும் வீடு. எல்லாம் ஒரே வீடுதான். வாசலில் கிழக்குப் பக்கம் கிணறு. கிணற்றை ஒட்டி ஆள் உயர சுவரால் மறைக்கப்பட்ட இடம். அது மேல் கூரையில்லாத திறந்தவெளி. முன்பொரு காலத்தில் வீடு பிரிக்கப்படும் முன்னர் எல்லோருக்குமான குளியலறை இந்த இடம்தான். இப்போதும் ஏதேனும் பெரிய காரியங்களுக்கு இரண்டு வீட்டில் யார் போய் வந்தாலும் அங்கேதான் குளியல். அதன் பின்னர்தான்  வீட்டுக்குள் நுழைவார்கள்.

கிணற்றுக்கும் குளிக்கும் இடத்துக்கும் அருகே அமைந்திருந்தது பெரிய துவைக்கும் கல். நின்றபடியே கும்மி எடுக்க முடிந்த அளவுக்கு மூன்றடி உயரத்திலிருந்தது அது. சின்ன வயதில் அந்தக் கல்லில் அமர்த்தித் தான் தண்ணீர் ஊற்றுவாள் அம்மா. குளிக்கும், துவைக்கும் தண்ணீரில் வளர என்று சில மல்லிகைப் புதர்களும், ஒரு கறிவேப்பிலை மரமும், சில வாழைக் கன்றுகளும் இருந்தன. அதெல்லாமே அம்மா வைத்ததுதானே என்று நினைத்தாள் வசந்தி. ஆனால் எல்லாமே கௌசிச் சித்தி பராமரிப்பில் இருக்கின்றன. வாசலில் வசந்தி வீட்டுப் பின்கட்டு சுவரோடு ஒட்டியபடி பந்தல் இறக்கி இருந்தார்கள். கிணற்றை எதிர்ப்புறம் வாசலுக்கு மேற்கே வீடு பிரிந்தபோது பொதுவில் கட்டிக்கொடுத்த குளியலறையும், கழிப்பறையுமிருந்தது. ரமணிக்காக சித்தி சண்டை போட்டு அவற்றைக் கட்டச் செய்தாள். இவர்களுக்கு கிடைத்த பகுதி பெரிய வீடு. அதைத்தான் இப்போது மூன்று பகுதியாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். தாத்தாவுக்கு இருந்த கடனை எல்லாம் அடைக்கும் பொறுப்பை அப்பா ஏற்றுக்கொண்டதால் பெரிய வீட்டுப் பகுதியில் அப்பாவுக்கும், சிறியதாக பொருள் சேமிக்கும் இடமாகவும், தீட்டு பெரிய காரியங்களுக்கு தற்காலிகமாக சமைக்கவும் இருந்த சமையல் கட்டும் இருந்த இரண்டு மூன்று அறைகளை சித்தப்பாவுக்கும் பிரித்தார்கள். வாசலாவது எங்களுக்கே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கௌசிச் சித்தி அந்த இடத்தை வைத்துக்கொண்டாள். அதற்காக பெரிய வீட்டின் பின்பகுதியிலிருந்த பட்டியை விட்டுக் கொடுத்தார்கள். அந்தப் பட்டியில், இப்போது வசந்தியின் அம்மா, அப்பா இருக்கும் கச்சிதமாகவும் நவீனமாகவும் கட்டப்பட்ட புது வீடு இருந்தது. புதுவீட்டில் ஒரு தாழ்வாரமும் அதைத் தாண்டி உள்ளறை. அதன் இரண்டு பக்கங்களிலும் ஒன்று சமையலறை மற்றது படுக்கையறை என்றிருக்கும் வீடு.

புதுவீடு கட்டி பால் காய்ச்சக் கூப்பிட்டபோது கௌசிச் சித்தி ‘லோன் தள்ளுபடியான ஒன்றரை ஏக்கர் எங்களுக்கு விடறேன்னு சொல்லியிருந்தீங்க.’ என்று எங்கிருந்தோ பேச்சை எடுத்து, பெரிய சண்டையை இழுத்துவிட்டார். ஏன் அந்த சண்டையென்று யருக்குமே விளங்கவில்லை. பால் காச்ச எல்லோரும் போனபின்னர் வந்தவள் உம்மென்று எதுவும் சொல்லாமல் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல்கூடப் போய்விட்டாள். ‘. அவ்வளவு ஆங்காரமா சண்டை போட்டும் கௌசிக்கு மனசாரல. புது வீடு விளங்க கூடாதுன்னெ கௌசி சாப்பிடாம போறா பாருங்கன்னு’ அம்மா சொன்னதும் நினைவுக்கு வந்தது வசந்திக்கு.

“என்ன சிலயாட்டம் யோசிச்சுக்கிட்டே நிக்கிற, பொங்கல் வைச்சாச்சு, பானையோடு எடுத்துட்டு போ. நான் ரமணி பிள்ளைங்களுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வரேன். கொட்டுக் கொட்ட ஆளுங்க வந்தாச்சா?”

“ம் வந்தாச்சு சித்தி.”

“அப்படியே பெரியண்ணிக்கு ஒரு போன் போடு. அவங்க வந்துதானே எல்லா அலங்காரமும் பண்ணனும். படையல் எல்லாம் வண்ணானே பண்ணிடுவான். கல்லுக் கூடை ரெடி பண்ணி வைச்சிருக்கீங்கல்ல?”

“புதுசாவே வாங்கிட்டோம் சித்தி”

“அய்யோ புதுசா கொடுக்கக்கூடாது. அத இங்க கொண்டு வந்து வைச்சிரு. நான் எங்க வீட்டுல இருக்குற கூடைக்கி சட்டுன்னு சாணி மொழுகி எடுத்துட்டு வரேன்”

“சரி” என்று சொல்லி விட்டு பொங்கல் பானையைத் தூக்கினாள். “லைட்டையும் பிடிச்சிட்டு, பொங்க பானையையும் தூங்கிட்டுப் போக முடியாது. ரமணிய வரச் சொல்லுங்க சித்தி,” என்று சொல்லிக் கொஞ்ச நேரம் காத்திருந்தாள். ரமணி வரவில்லை. பிள்ள வேற முழுச்சிகிட்டா என்று நினைத்து கக்கத்தில் விளக்கை இடுக்கிக்கொண்டு பொங்கல் பானையை சுடாமலிருக்க துணியால் தாங்கிபிடித்தபடி, தடுமாறியபடி சந்தில் நடந்தாள் வசந்தி. இந்த ரமணி வந்தா என்ன என்று யோசிக்கும்போதே, ரமணியின் குரல் பெரிதாகக் கேட்டது “ஏன் அவளால தூக்கிட்டு போக முடியாதாமா. என்ன நம்மல கண்டா இளக்காரமா? எனக்கும் இவளுக்கு இருக்கற எல்லாம் இருக்கு. கூடவே ஒரு ஆம்பிளப் பிள்ளயும்.”

“…”

“விழுந்தா விழட்டுமே. இப்போ எப்படி தூக்கிட்டு போறா? என்ன இழிச்ச வாயின்னு நினைச்சாங்கலா”

“…”

“அதெல்லாம் எந்த மசிரும் வேண்டாம். இவங்க போடற மோதிரத்த நம்பிதானா நான் பிள்ள பெத்தேன்.”

“எங்க போயிட்ட வசந்தி, ஜோதி உன்ன காணோம்ன்னு அழுவுறா. மாரி வேற வந்துட்டான் பாரு.”

“பொங்கப் பானை எடுத்தாற போயிருந்தேன்,” என்று சொல்லும்போதே பறை அதிரத் தொடங்கியது. அதிகாலை நேரத்தில் எந்த ஒரு ஒலியுமற்ற அந்த வேளையில் ஓங்கி ஒலித்த பறையின் அதிர்வலைகள் கடும் சோகத்தைக் கொண்டு வந்தன. தன்னையறியாமல் கண்கள் கலங்க பொங்கல் பானையை இறக்கி வைத்தாள் வசந்தி. கொட்டு ஒலிக்கு முழித்துக்கொண்டு, அதிர அடிக்கும் ஓசைக்கு  பயந்து வீரிட்டாள் ஜோதிமயி.

“மாரி வந்தாச்சு, அதான் கொட்டுக் கொட்டறாங்க. டேபிள இன்னும் எடுத்துப் போடலையே என்ன பண்ணறாளுங்க, மாரி எப்படி கட்டுக் கட்டுவாரு. யாருக்குமே இந்த வீட்டுல பொறுப்பில்ல,” அரியலூர் சித்தி புலம்ப ஆரம்பித்தாள்.

“எம்மா நேத்தே சொல்லியிருந்தேனே மேசை எங்க, இப்படி வடமேற்கு மூலைல கொண்டாந்து வையுங்க. இந்தப் போட்டோவ எடுத்து கழுவி பொட்டு வைச்சிக் கொண்டாங்க. அதுக்கு ஒரு மாலையப் போடுங்க. மணப் பலக நாமம் போட்டு வையுங்க. வெள்ள நாமம் போட்டா போதும். இன்னிக்கி குங்குமம் நடுவுல தீட்டக்கூடாது. குத்து விளக்கு எடுத்தாங்க. விளக்கு எல்லாம் திரி போடுங்க. எண்ணைய ஊத்துங்க. சூட தாம்பாளத்துல வெளக்கேத்தனும் அதுக்கும் திரி போடுங்க. மண் அகல் எங்க?”

சடசடவென கட்டளைகளை அடுக்கினார் மாரி. அப்பா எழுந்து உள்ளறையில் வைக்கப்பட்டிருந்த மேசையை இழுத்துக்கொண்டு வந்தார். அதிலிருந்த பொருட்களை எல்லாம் நேற்றே எடுத்து வேறு இடத்தில் வைத்திருந்தார். அதில் பெரிய பொக்கிஷங்கள் எதுவுமில்லை. இழுப்பறையில்  சில காகிதங்களும், அடிக்கடி கையாளும் மின்சாரக் கட்டண அட்டை, குடும்ப அட்டை போன்றவை இருக்கும். சில நோட்டீஸ் காகிதங்களும் இருந்தன. அம்மா, அப்பா இல்லாத சமயத்தில் யார் எதைக் கொடுத்தாலும் அந்த மேசை இழுப்பறையில்தான் போட்டு வைப்பாள். அப்பா ஒருநாள் அதைப் பார்த்து தேவையில்லாதவற்றை தூக்கிப் போடுவார். இன்றைக்கு, அவற்றில் எது தேவையானது எது தேவையற்றது என்று பார்க்க நேரமில்லாமல் எல்லா காகிதங்களையும் மின்சார கட்டண அட்டை, குடும்ப அட்டை எல்லாவற்றையும் அப்படியே பீரோவுக்குள் வைத்துவிட்டார்.

மேசையின் நான்கு கால்களிலும் வாதநாரக் கிளைகளில் இருந்து ஒடித்துக்கொண்டு வந்திருந்த கம்புகளை கணக்காக வெட்டிக் கட்டினார் மாரி. நான்கு கொம்பையும் பக்கவாட்டில் இணைத்து மேலும் நான்கு கொம்புகளைக்கொண்டு கட்டினார். அது பழங்காலக் கட்டிலில் கொசுவலை போட வைக்கப்பட்டிருந்த மரச்சட்டங்களின் வடிவத்தைக் கொண்டது. மேற்புறமிருந்த கம்புகளில் குறுக்கும் நெடுக்குமாக இன்னும் நான்கு கொம்புகளைக் கட்டினார். இப்போது அந்த மேசை ஒரு ஓட்டை வீடு அதன் மேல் ஓட்டையான மேல்கூரையுடன் இருப்பது போலத் தோன்றியது. கொஞ்சம் வளைவுகள் இருந்தாலும் எல்லாக் கொம்புகளும் ஓரளவு நேராக இருந்தன.

“முன்பெல்லாம் சுத்தமா வழுவழுப்பான கொம்புகளையே கொண்டு வருவாங்க,” என்று மாலா அண்ணி கிசுகிசுத்தாள்.

“சீக்கிரம் அலங்காரம் பண்ணுங்க கல்லு பொங்க படைக்க நேரமாச்சு,” என்றார் மாரி.

பெரியத்தையை மாரி வந்ததுமே தொலைபேசியில் அழைத்திருந்தாள் வசந்தி. அழைப்பு இசை போய்க்கொண்டே இருந்தது ஆனால் பெரியத்தை வீட்டில் யாரும் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று வசந்திக்குப் பதட்டமாக இருந்தது. சித்தியும் அவர்கள் வீட்டிலிருந்து வர நேரமாகும். பெரியத்தையும் வரவில்லை என்றால் என்னென்ன செய்ய வேண்டுமென்று எதுவுமே தெரியாதே என்று நினைத்துக் கொண்டே கதம்பப் பூவை எடுத்து வெளியே வைத்தாள்.

“கொட்டு கேட்டுதான் முழிச்சேன். கொஞ்சம் முன்னாடி போன் பண்ணி இருக்கலாமே,” என்றபடி வந்தாள் பெரியத்தை.

“ரொம்ப சீக்கிரம் முழிச்சிட்டேன். அப்பவே போன் பண்ணி அவ்வளவு சீக்கிரம் எழுப்ப வேண்டாம்ன்னு தான் கூப்பிடல. அப்பறம் என்னவோ யோசனை. நேரம் போனதே தெரியல, சித்தி கூப்பிட்டாங்க, பொங்க எடுக்கப் போயிருந்தேன்.”

கதம்பப் பூவை எடுத்து பக்கவாட்டுக் கால்களில் ஜடையில் சுற்றுவது போல் சுற்றினாள் பெரியத்தை. சர சரவென்று இரண்டே நிமிடத்தில் சுற்றி முடிந்து கூரை வேய்வதுபோல போடப்பட்டிருந்த கம்புகளில், சாமிப் படத்தில் வளைவுகளாகத் தொங்க விடுவது ல வளைவு வளைவுகளாகத் தொங்க ட்டாள். அதைப் பார்த்த வசந்திக்கு அம்மா இறக்கும் முன்பு படித்த கதையில் அண்ணனைத் திருமணம் செய்த பெண் முதலிரவு அறை அலங்காரத்தைப் பாடையின் அலங்காரத்தோடு ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது. அம்மாவும் தனது முதலிரவு அலங்காரத்தை அதே அளவுக்கான ஆசூசையுடன்தான் எதிர்கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தாள். அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்த ஜோதி “பாட்டி… பாட்டி மடில தாச்சி” என்றது. வசந்திக்கு அழுகை வந்தது. பால் குடி மறந்ததிலிருந்து ஜோதி அம்மாவின் மடியில்தான் அதிகம் ஒன்னுக்கு இருந்திருப்பாள்.

“கதம்பம் பத்தாது போலிருக்கே இன்னும் நிறைய வாங்கி வைக்கறதில்ல? இதுக்குக் கூடவா கணக்கா வாங்கி வைப்பீங்க. மேசை உள் வீட்டுலதானே இருந்தது… அங்கேயே வைச்சிருக்கலாமே. கவிதா எப்போதும் உள் வீட்டுலதானே படுக்கும்.”

“இல்லக்கா கல்லு படைப்புக்கு மேசைய உள் வீடுல வைச்சி நான் பார்த்தது இல்ல,” என்றாள் மாலா அண்ணி.

“மாரி, பரியாரிய உள் ரூமுக்கு விட முடியுமா? என்ன கூறுகெட்டத்தனமா பேசாறாங்க பெரியக்கா” என்று பிறர் காதில் விழாத மாதிரி வசந்தியிடம் முணுமுணுத்தாள் மாலா.

“குத்து விளக்குக்கு ஐஞ்சி முகத்துக்கும் திரி போட்டு எடுத்தா.”

ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலுக்கு முன்னர் இந்தக் குத்துவிளக்கையும், பழைய வெண்கலச் சாமான்களையும் எடுத்துத் தேய்த்து மீண்டும் அடுக்கி வைப்பாள் அம்மா. வசந்தி ஒரு ளும் இந்த விளக்கைத் தொடவேண்டிய அவசியமே வந்ததில்லை. ‘ஒருமுறையானும் வீட்டுப் பொண்ணா பரம்பர விளக்க தேய்ச்சிருக்கியா’ திருமணம் ஆகும் வரை ஒவ்வொரு பொங்கலின் போதும் இந்த ஏச்சைக் கேட்டிருக்கிறாள்.

‘குத்து விளக்கைத் துடைத்து, திரி போட்டு எடுத்து வரும் முன்னரே படையலுக்குத் தேவையான எல்லாம் வைச்சிட்டாங்க. இளநி பொத்து வைச்சி இருக்கு, சொம்புல தேங்காய் வைச்சி தேங்கா தெரியாம பூ சுத்தி கல்லு கும்பம் வைச்சிட்டாங்க, மைசூர் பாகு, மிச்சர், மாதுளை, கொய்யா, ஆப்பிள் வைச்ச தட்டு. தென்னங்குருத்து இரண்டு பக்கமும், போட்டோவுக்கு மல்லிகை மாலை, பக்கத்துல மணப்பலகை, அதில் வெள்ளை நாமம் மட்டும் போட்டு அதுக்கும் மல்லிகை மாலை போட்டு இருக்காங்க. அம்மா உனக்குத்தான் எல்லாமே. உன்னை உட்கார வைச்சி ஒருநாளும் நான் சோறு என் வீட்டிலகூட போட்டதில்லை. உனக்கு வாசனை வருதா, இனிமே உனக்குக் கால், கை கிடையாது மூக்கு காது எதுவுமில்ல. உணர்ச்சிகள் எதுவுமில்லை, முன்னாடி பெரிய அகல் விளக்கு அதில் மொத்தமான பெரிய திரி ஏத்தி வைச்சிருக்காங்க. எல்லா விளக்கையும் விட பிரகாசமா அதுதான் எரியுது. இன்னொரு பக்கம் தீபாராதனை காட்டற தட்டுல எண்ணெய் ஊத்தி திரி போட்டு ஏத்தி வைச்சிருக்காங்க. இரண்டு பக்கமும் குத்து விளக்கு எரியுது. இந்த குத்து விளக்கு அம்மா கல்யாணத்துக்கு எரிஞ்சது. அப்புறம் அம்மாவோடு அம்மம்மா, அதான் என் அய்யம்மா செத்தப்ப எரிஞ்சது, பின்ன அவங்க கரும காரியத்துக்கும், தேவை சடங்குக்கும், வருஷத் தெவசத்துக்கும், அதுக்கு அப்புறம் என் கல்யாணத்துல, அப்புறம் இன்னிக்கி, அம்மாவோட கல்லு காரியத்துக்கு எரியுது. இந்தக் குத்து விளக்கு மாதிரி, தானே அம்மாவும் எரிஞ்சிரிப்பாங்களோ?’

“வசந்தி காப்பி கொண்டா, அம்மாவுக்கு காப்பின்னா உசுரு.”

உள்ளே போய் எல்லோகஉக்கும் கொடுக்க கடையிலிருந்து வந்திருந்த காப்பியை00001 ப்ளாஸ்கிலிருந்து ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து மேசை மீது வைத்தாள் வசந்தி. ஆவி பறக்க அப்படியே நெருப்புக்கோழி போலக் குடிப்பாள் அம்மா. இந்த காப்பி கொஞ்சம் ஆறிப் போயிருந்தாலும் சூடு இருந்தது. வைத்ததும் அதன் மேல் மெல்ல ஏடு கட்டியது. ‘அம்மாவும் இப்படித்தான் சூடு தாளாமல் தன்னைச் சுற்றி ஏடுகட்டிக்கொண்டாளோ?’ வசந்திக்கு தொடர்ந்து அம்மாவின் நினைவுகளாக எழுந்தன. தனக்குப் பிறகு அம்மா ஏன் பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் அம்மாவுக்கு ஆண்பிள்ளை என்றால் கொள்ளப் பிரியம். ரமணி பையனை ஜோதி பிறக்கும் வரையில் வளர்த்தது அவள்தான். இடுப்பை விட்டு இறக்கவே மாட்டாள். ஜோதி பிறந்ததும் “ப்ச் எனக்கு ஒன்னே ஒன்னு பொண்ணா போச்சு, உனக்கும் ஜாதகப்படி ஒன்னுதான் அதுவும் பொண்ணா பிறந்திருக்கே” என்று வருத்தப்பட்டாள். அம்மா ஜாதகப்படி ஆறு பிள்ளைகளாம். ஒருநாள் சின்னப்பாட்டி சொன்னது நினைவிருக்கிறது வசந்திக்கு. ஜாதகமாவது மண்ணாவது நான்தான் ஏழு பிள்ளைக்கு சமமாக ஒத்தையாக நிற்கிறேன். தம்பி, தங்கை என்றிருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். ரமணிபோல வெறுப்பைக் கக்காமல் பாதுகாப்பாய் இருந்திருப்பார்கள்.’ என்று நினைத்தாள் வசந்தி.

“சரி அலங்காரம் எல்லாம் டாப்பா இருக்கு. அம்சமா அமைஞ்சிட்டது. குருத்தெல ஒன்னு கொண்டாங்க, பொங்க எங்க எடுத்தாங்க, படையலப் போட்டு நான் உத்தரவு வாங்கிக்கிறேன்!”

“இந்தக்காவுக்கு கூரே இல்ல. கல்லு படையல் அலங்காரத்தை அம்சமா இருக்குன்னு சொல்லுது,” மீண்டும் வசந்தியிடம் முணுமுணுத்தான் மாலா.

தலைவாழையிலை குருத்தொன்றை சமையல் வீட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தாள் வசந்தி. அதை தென்வடமாகப் போட்டு அதில் பெரிய பானையிலிருந்த வெள்ளைப் பொங்கலை மொத்தமாக எடுத்து வைத்தார். மேலே குழி செய்து நெய் ஊற்றினார். அதன் மேல் முழு அச்சு வெல்லத்தை வைத்தார். நீர் விளாவி விட்டு, வசந்தி அப்பாவிடம் சூடம் காட்டச் சொன்னார். வெளியே கொட்டுக்காரர்க்கு யார் சொன்னார்களோ வேகம் கொண்டு அடித்தார்கள். அம்மாவின் புகைப்படத்துக்கும், பொங்கல் வைத்திருந்த இலைக்கும், தீபாராதனை காட்ட வசந்திக்கு அடக்கமுடியாத அழுகை வந்தது. பொங்கலைக் கிள்ளி அம்மா படத்தருகே அப்பாவைக் கொண்டு போகச் சொன்னபோது, அம்மா ஜோதிக்கு சாப்பாடு ஊட்ட இடுப்பில் வைத்து நிலா காட்டி ஊட்டுவதுபோலவே இருந்தது. ‘என்றாவது அம்மாவுக்கு அப்பா எதுவும் ஊட்டி விட்டு விளையாடியிருப்பாரா? அவர் எனக்கே எதுவும் ஊட்டிவிட்டதில்லையே. ஒருவேளை அம்மா சின்னக் குழந்தையாக இருக்கும்போது மடியில் தூக்கி வைத்து சாப்பாடு ஊட்டியிருப்பாரா?’

“கல்லுக்குப் படைக்கிறப்ப அழக்கூடாதும்மா!”

ஒவ்வொரு சொந்தங்களாக வந்து சேர்ந்தார்கள். வரும் எல்லோரும் வசந்தியை கொஞ்ச நேரம் கட்டிக் கொண்டு அழுதார்கள். அவளும் கொஞ்ச நேரம் அழுதாள்.

“உன்னோட பொண்ணுக்காகவாவது உன் அம்மா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்”

“பொறந்த வீட்டு மகராசி, தாய் மாமனுக்கு மகராணி, ஒத்த ரோசா பெத்த ராசாமணி, பொண்ணுக்கு பொண்ணு எடுத்த காந்தாமணி, இப்படி எங்கல ஏங்கவுட்டு போயிட்டேயேம்மா… அய்யய்யா பொன்னுமணி, தங்கமயிலி” பிறர்க்கு எடுத்துக்கொடுத்து இட்டுக்கட்டிப் பாடிக்கொண்டிருந்தாள் வசந்தியின் சின்னப்பாட்டி. “பெரிசுக்கே ஓல வர இன்னும் நாளிருக்க, இப்படி சின்ன ராஜாத்தி சீக்கிரமே போனதெங்க… அய்யய்யா. அய்யோ ஆறலையே எங்கக்கா போனதே இன்னும் தாங்கல அக்கா மகளே என் தம்பி பொண்டாட்டி நீ இப்படி போயிட்டியே எத்தன தவமிருந்து இனி உன்னப் பாக்கப் போறேன். அய்யய்யோ!” சின்னப்பாட்டியின் ஒப்பாரி வீட்டு வாசல்வரை கேட்டது.

‘ஆமா எல்லாம் இருந்தீங்க, தாய் வீட்டு தல மக, அங்கயும் அன்னாடம் பணி, நிக்க நேரமில்லாத நிமிர விடாத வேல, என்ன ஏதுன்னு அதுகிட்ட கேட்டீங்களா, பிடிச்சதா இல்லையான்னு பார்த்தீங்கலா, ஜாதகப் பொருத்தம் எதையும் யோசிச்சிங்களா, கட்டின ஆளுக்கு பொண்டாட்டி ஆயுசு அம்சம் எவ்வளவுன்னு பார்த்தீங்களா, நீங்களும் சேர்ந்துதானே கட்டி வைச்சிச்சீங்க. மாமனக் கண்டா அம்மாவுக்கு பயம்ன்னு உங்க யாருக்குமே தெரியல. கல்யாணம் பண்ணிட்டு எப்படி இருப்பான்னு யாராவது யோசிச்சிங்களா? கட்டிக்குடுத்த பொண்ணு கண்ணுல ஒளியிருக்கான்னு என்னை எங்கம்மா துருவித் துருவிப் பாத்துச்சே. நீங்க யாரேனும் பார்த்தீங்களா? இங்க வந்து உழைப்பா உழைச்சி, சீவகுச்சி, கொட்டாங்குச்சி கணக்கா சேவை பண்ணியே தேய்ஞ்சி போச்சே. இப்போ வந்து பவுசா ஒப்பாரி வைச்சா போதுமா. எங்க அம்மம்மா இருந்தா இப்படி விட்டிருக்குமா?’ வசந்தி உள்ளுக்குள் குமுறினாள்.

வந்த சொந்தமெல்லாம் வாசலுக்கும் உள்ளுக்குமாக அமர்ந்திருந்தார்கள். ஆண்கள் வெளிப்பந்தலிலும் தாழ்வாரம் போலிருந்த பகுதியிலும் இருந்தார்கள். கல்லுப் பொங்கல் படைத்த இடத்திலும் பெண்கள் கூடியிருந்தனர். எல்லோரும் குழுக்குழுவாக அமர்ந்து தங்களது சொந்தக் கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளறையில் சில சொந்தங்கள் தேவை சடங்கு முடிந்ததும் வசந்திக்கும், அவள் அப்பாவுக்கும் தருவதற்கு எடுத்து வந்திருந்த துணிமணிகளை பிறருக்கு காட்டிக்கொண்டிருந்தார்கள். ‘நான் இந்தக் கடையில் எடுத்தேன், நீ எந்தக் கடையில் எடுத்தாய்’ என்று பெருமை பேசிக்கொண்டிருந்தார்கள். வசந்திக்கு எப்போது கல்லை எடுத்துக்கொண்டு போவார்கள், வீடு வாசலைக் கழுவிவிட்டு குளித்து விட்டு வந்து, தேவை சடங்கு முடித்து புண்ணியாதானம் பண்ணி எல்லாம் சீக்கிரம் முடிஞ்சா தேவலை என்று இருந்தது. பாப்பாவுக்கு சோறு வேற ஊட்டனும். அதுவே பெரிய வேலை என்று நினைத்த அதே கணத்தில் இரண்டாம் கொட்டு கொட்ட ஜோதிமயி மீண்டும் உரக்க அழத்தொடங்கினாள். அவளைப் பக்கத்தில் இழுத்து அணைத்துக்கொண்டாள் வசந்தி. மாரி உள்ளே வர, “கல்லுக் கூடை எங்க” என்று யாரோ கேட்டது காதில் விழுந்தது. அதுக்குள்ளயா எட்டு மணியாச்சு என்றிருந்தது வசந்திக்கு. உடனே பின் வீட்டுக்கு ஓடினாள் வசந்தி. சித்தி இன்னும் என்னவோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சித்தி கல்லு கூடை கேட்கறாங்க. நான் வீட்டில இருக்கறத குடுத்திடவா?”

“அங்க சாணி மொழுவி வெயில்ல வைச்சிருக்கேன் பாரு. எடுத்துட்டு போ”

“நீங்களும் வாங்க கல்லு படைக்கப் போறாங்க”

கூடையைக் கொண்டு போய் கொடுத்தாள் வசந்தி. அது அடியில் கொஞ்சம் பிய்ந்து போயிருந்ததை மாரி திருப்பிப் பார்த்தான்.

“புதுக்கூட வாங்கலயா?”

“..”

“ஓட்ட வழி வச்ச சோறு செதறிச்சின்னா, பரலோகம் போகவேண்டிய புண்ணியவதி, பாதி வழியில திண்டாடுவா“

“சின்னதா கண்ணுக்குகூடத் தெரியாமதானே ஒட்ட இருக்கு. இன்னும் இரண்டு இலை எடுத்து அடியில போட்ருங்க மாரி,” என்றாள் பாக்யம்மாள் சித்தி.

“சரி ஏதேனும் பழைய துணி குடுங்க.”

பழைய புடவை ஒன்றை எடுத்து வந்து வண்ணானிடம் கொடுத்தாள் வசந்தி. அதைக் கூடையின்  ஓட்டை தெரியாமல் பரத்தினார் மாரி. அதன் மேல் ஒரு வாழையிலைப் பரப்பி வைத்தார்.

“அந்தச் சீல கவிதாவுக்கு ரொம்பப் பிடிக்குமே அதயா குடுக்கற” என்றாள் கௌசி சித்தி.

“பரவால்ல சித்தி”

காலையில் படையலில் இருந்த பொங்கலை இலையோடு எடுத்து அந்தக் கூடையில் அலுங்காமல் போட்டார். அதன் மேல் இன்னொரு இலையைப் போட்டு மூடினார்.

“தேவைச் சோறு படைக்கலாமா? இன்னும் இரண்டு இலை எடுத்தாங்க. வசந்தியம்மா இந்த இடத்தக் கொஞ்சம் தண்ணி வைச்சி துடைங்கம்மா.”

00000வசந்தி சமையல் அறையிலிருந்து ஒரு துணியை எடுத்துக்கொண்டு வந்து அந்த இடத்தைத் துடைத்தாள். இரண்டு தலைவாழை இலைகளை வடமேற்காகப் போட்டார். தேவைச் சடங்குக்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் சாப்பிட ஹோட்டலிருந்து சாப்பாடு வந்திருந்தது. சாப்பாடு வந்து இறங்கியதுமே வசந்தி, அவள் அப்பா, பங்காளிகள் எல்லாம் விரதம்விட ஏதுவாக யாருக்கும் பரிமாறும் முன்னர் கொஞ்சம் சாப்பாடு, சாம்பார், பொரியல்கள், ரசம், பாயாசம் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து பக்கத்து வீட்டில் வைத்திருந்தார்கள். அதிலிருந்து சாப்பாடு, காய்கறிகளை எடுத்து அந்த இரண்டு இலைகளிலும் பரிமாறச் சொன்னார். எல்லா விதக் காய்கறிகளும் வாழைத்தண்டுத் துவையலும் பறிமாறப்பட்டது. அப்பளம் எடுத்து வைக்கச் சொன்னார். சாப்பாட்டில் பெரிய குழி அமைத்து சாம்பாரை அதில் ஊற்றச் சொன்னார்.

“பொங்க தின்ன பொம்மாயி, காலசோறு தின்னாத்தா. மக்க மாரி விட்டுப் போறோம் கலங்காம தின்னாத்தா. வயிறு நிறைய தின்னுட்டு வந்த வழி போ பூவாத்தா. மக்க மக வாழ மனசார வாழ்த்தாத்தா” என்று சொல்லத் தொடங்கியபோது யாரோ சிணுங்கும் சத்தம் தொடங்க, “யாரும் அழுவக்கூடாது சூடம் காட்டியதும் கிழக்க திரும்பிக்கங்க. தேவை சோத்த எடுத்துப் போட்டதும் நான் நிமிச நேரம் நிக்கக்கூடாது” அப்பாவை சாம்பிராணி காட்டி, நீர் விளாவச் சொன்னார்.

வாயைத் துண்டால் கட்டிக்கொண்டு, சூடம் காட்டி எல்லோரையும் விழுந்து கும்பிடச் சொன்னார் மாரி. அந்த இரண்டு இலைகளில் ஒன்றை எடுத்து வாயில் கட்டியிருந்த துண்டைக் கழற்றி விரித்துப் பரப்பி அதன் மேல் வைத்துக்கட்டினார். அவருடன் வந்திருந்த பரியாரி அதேபோல் இன்னொரு இலையைத் துண்டில் கட்டினார். பூ அலங்காரத்தை அலங்கோலமாகக் கலைத்தார் பரியாரி. அப்படியே கொத்தாக எடுத்து அதையெல்லாம் கூடையில் மேலிருந்த இலை மேல் வைத்தார் மாரி. அரிசி பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கையும், விளக்குப் போல் எரிந்துகொண்டிருந்த தீபாராதனைத் தட்டையும் எடுத்து அதிலிருந்த திரிகளை அகல் விளக்கிலேயே போட்டார். அரிசியை எடுத்து தனி மூட்டையாகக் கட்டிக்கொண்டார். ஐந்து முகம் கொண்டு எரியும் குத்து விளக்குத் திரிகளையும் அகல் விளக்கிலேயே சேர்த்தார். பந்துபோல் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பூ மேலே அகலை எடுத்து வைக்க ஏதுவாக சில பூவரச இலைகளை வைத்தார். குத்து விளக்குகளை ஒரு சேர வேறு இடத்துக்கு நகர்த்தினார்.

‘இனி இந்தக் குத்து விளக்கு எரியப்போவதில்ல.’ வசந்தியின் மனம் குலுங்கியது.

பூவரச இலையின் மேல் அகல் விளக்கை வைத்தார். கல்லு கும்பத்தை அலுங்காமல் அப்படியே எடுத்தார். அதையும் கூடை மேல் வைத்தார். வெளியே மூன்றாம் கொட்டு தொடங்கியது. பறையோசையின் வேகம் வெறிகொண்டு ஒலித்தது. துக்கமற்றவர்களுக்கு அந்த ஓசையைக் கேட்டுப் பெரும் துயரம் வரக்கூடும். விறுவிறுவென்று வாசலை அடைந்த மாரி, வசந்தியின் கணவர் தலையில் கல்லுக் கூடையை ஏற்றி வைத்தார்.

“ஏன் என் பேரன் தலையில் வைச்சா என்ன, அவனும் ஒரு பவுன் மோதிரத்தைத்தான் போட்டுப் பாக்கட்டுமே, அதையும் மருமவனுக்கே கொடுக்கனுமா. உங்களுக்கு கல்லு பொங்க வைக்க, தேவை பாயசம் வைக்க எங்க வீட்டு அடுப்பு வேணும். அனுபவிக்க மட்டும் மருமவன், மக மட்டும் போதும்!”

“சரிப்பா அந்த கல்லு கும்பத்த ரமணி பையன் தலையில வைங்கப்பா!” கொட்டு சத்தத்தை மீறி யாரோ சொல்வது காதில் விழுந்தது.

“ரமணி பையனுக்கு ஏற்கனவே மோதிரம் எடுத்துதான் வைச்சிருக்கோம்,” என்றாள் வசந்தி.

ஆண்கள் எல்லோரும் சொல்லி வைத்தால்போல வாசலைக் காலி செய்திருந்தார்கள். வெளி வாசலில் மூன்றாம் கொட்டு விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. கல்லுக் கூடையும் கும்பமும் காடு நோக்கி கிளம்பத் தயாராக இருந்தது. பெண்கள் எல்லோரும் வாசலில் வட்டமாய் ஒருவர் கை ஒருவர் கோர்த்து ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினார்கள். அமைதியாக கையைக் கூட நீட்ட மறந்து அமர்ந்திருந்த வசந்தியிடம் கை பிடித்து இழுத்து உள்ளங்கையை தடவி  சிலர்  கை கொடுத்தார்கள். வேறு சிலர் வலுக்கட்டாயமாக வசந்தியை  கட்டிக் கொண்டு அழுதனர். வசந்திக்கு ஏனோ அழுகை வரவில்லை.

‘மூணாம் கொட்டு முடியும் வரை இவங்க மாரடிச்சி அழுவுறாங்க. என்னவோ அவங்க அம்மா செத்த மாறி. சித்தி புத்தி ஏன் இப்படி? அந்தச் சின்னப் பையன் தலையில் தூக்க முடியாத கல்லு கும்பம். பாவம். ஆனா அவர் தலையில் மேல் இருக்கும் கல்லுக் கூடை மேல் எரியற மண் அகல் முன்னவிட பிரகாசமா எரியுது. இவ்வளவு நேரம் அது வீட்டுக்குள்ள சுடர்விட்டு எரிஞ்சது இனி…’

மூன்றாம் கொட்டு பறையோசை வீட்டைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி தூரம் போய்க் கொண்டிருந்தது. “யாரும் சாப்பிடமா போயிடாதீங்க. சாப்பாடு பஜனமடத்து கொட்டாயில ஏற்பாடு பண்ணியிருக்கு,” பட்டம்மாள் சித்தி சத்தமாகச் சொன்னாள். பெண்கள் எல்லோரும் கலைந்து அவரவர் வீட்டுக்குப் போனார்கள். பட்டமாள் சித்தி, மாலா அண்ணி எல்லோரும் வீட்டைக் கழுவிவிட்டார்கள். எத்தனையோ முறை அம்மா கழுவி நிமிர்ந்த வீடுதானே? யார் தண்ணீர் ஊற்றி தீட்டினாலும் அம்மா வீடு அம்மா சுத்தம் செய்ததைப் போலவா சுத்தமாகும்? தீட்டு நீக்க தேய்த்து வைக்கவென்று வெளியே கொண்டு வந்த குத்து விளக்கின் வெறும் முனைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசந்தி. அது பகீர் என்று உள்ளே எதையோ தொட்டது. குத்து விளக்கின் நுனியிலிருந்த தீபம் மண் அகலோடு செல்லும் தூரத்தை உணர்த்த, பறையோசை மெல்லிசாக கேட்டது. வசந்தி ஜோதிமயியை கட்டிக்கொண்டு வீரிட்டு அழத் தொடங்கினாள்.

 

1 comment for “மண் அகல்

  1. sunthari
    May 16, 2020 at 11:32 pm

    kathai manathai migavum varudi sendru vittathu.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...