மூன்று பேர் மட்டுமே வந்திருப்பது எரிச்சலாக்கியது. இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என் வழக்கமான மாலை நேர குட்டித் தூக்கம் கெட்டிருப்பதால் லேசாகத் தலைவலியும் இருந்தது. கூடவே ராபியாவின் தொல்லை வேறு. அவள் வீட்டுக்கே செல்லவில்லை என காலையில் அணிந்த விளையாட்டு உடையும் அவள் சுமந்து வந்த புத்தக மூட்டையும் காட்டியது.
நான் மாணவர்களை மூன்று முப்பதுக்குள் வந்துவிடுமாறு கூறி இருந்தேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்து சேர அவ்வளவு நேரம் போதுமானது. ஆனால் வழக்கம் போல இன்றும் பலர் வரவில்லை. மாலை நேர சந்திப்பு என்றாலே இப்படித்தான். நாளைக்குக் கேட்டால் சிலர் டியூஷன் என்பார்கள். சிலர் பார்ட் டைம் வேலை என்பார்கள். சிலர் வீட்டில் அம்மா விடவில்லை என்பார்கள். எந்தப் பதிலும் சொல்லாதவர்கள் கம்பத்துப் பொட்டலில் பந்துவிளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்.
இவர்களை நம்பித்தான் நான் நாடகம் தயார் செய்ய வேண்டும்.
நான் கைப்பேசியில் நேரத்தை மறுபடியும் பார்த்த போது, ராபியா மீண்டும் என் முன் வந்து நின்றாள்.
செக்கு… நான் ஒரு முறை அந்தக் கதையைச் சொல்லி விடுறேன்… நீங்க கேட்டுப்பாருங்க…” என்றாள் தனிவாக.
நான் அவளையே சற்று நேரம் உற்றுப் பார்த்தேன். நான் அவளுக்குப் பாடம் எடுக்கவில்லை. அவளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தனித்துத் தெரிய வேண்டுமானால் சிறப்பாக ஏதாவது செய்திருக்க வேண்டும். அல்லது மோசமாகவாவது எதையாவது செய்து வைத்திருக்க வேண்டும். ராபியா அப்படி எதையும் செய்திருக்கவில்லை.
ஆனால் ஒரு நாள் அவள் வகுப்பில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தின் விசாரணை குழுவில் நானும் இருந்தேன். அந்தத் திருட்டுச் சம்பவத்தின் சாட்சிகளில் ஒருத்தியாக ராபியா இருந்தாள். என்னென்ன நடந்தது… யார் எங்கே நின்றார்கள்… அவள் எங்கே நின்று அந்தச் சம்பவத்தைப் பார்த்தாள்… யாருடைய கை எந்த பேக்கில் இருந்தது…. அந்தப் பையின் நிறம் என்ன… என விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தாள். “சரி! சரி! போதும்” என்று நாங்களே சொல்லி அவளை அனுப்பிவிட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது.
‘என்ன ஒரு பிடிவாதம் இவளுக்கு. நாடகம் போடுவது என்றால் என்னவென்று இவளுக்குத் தெரியுமா? டீவியில் அதிகம் நாடகம் பார்ப்பாள் போல.’ என நினைத்துக்கொண்டேன். உண்மையில் இது என்மேல் திணிக்கப்பட்ட ஒரு பொறுப்பு.
கடந்த வாரம் பள்ளி முதல்வர் என்னை அழைத்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் இருந்தே எனக்கு டென்ஷன் ஏறுமுகமானது. கடிதத்தில் பெறுனர் பகுதியில் என் பெயருக்கு மேலே புவான் சூரினா சம்சூடின் என்று கிறுக்கலாக எழுதியிருந்தது. ஆனால் அவர் தப்பித்துக் கொண்டதால் எனக்குக் குடைச்சல் தொடங்கிவிட்டது.
தேசிய அளவில் நடைபெறும் ஒரு கிராமிய நாடகப்போட்டிக்கான அறிக்கை அது. பள்ளியில் கலைப்பண்பாட்டு மன்றம் என்ற ஒன்று இருக்கிறது. அப்படி ஒன்று இருக்கிறது என்பது பலருக்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம், பெற்றோர் ஆசிரியர் பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும் போதுதான் ஞாபகம் வரும்.
அந்த ஒரு சில நாட்களில் குழுப் பாடல், தனிப் பாடல், பண்பாட்டு நடனம் என ஏதாவது செய்வது கடமை. பெரும்பாலும் மறுசுழற்சிதான். அந்த மன்றத்துக்கு இரண்டு ஆசிரியர்கள் பொறுப்பு. ஒன்று புவான் சூரினா சம்சூடின் அடுத்து செக்கு தியாகுவாகிய நான். புவான் சூரினா சம்சூடின் அதிக உடல் அசைவுடன் பேசுவதே கூட நாடக பாணியில்தான் இருக்கும். முன்பு அவர் சிறந்த நடன தாரகை என அவ்வப்போது சொல்லிக்கொள்வார். எனவே அந்த மன்றத்துக்கு அவரே முழு பொறுப்பு. நான் ஒப்புக்குக் கூட நிற்பதோடு சரி.
புவான் சூரினா சம்சூடினின் கணவர் அவரைவிட பொறுப்பானவர். கடந்த ஐந்து வருடங்களில் ஆண்டுக்கு ஒரு குழந்தை என புவான் சூரினா சம்சூடின் பெற்றுக் கொள்கிறார் என்றால் அவர் கணவர் மிகவும் பொறுப்புடன் பணிபுரிபவர் தானே. அதன் காரணமாக புவான் சூரினா சம்சூடின் அடிக்கடி மூன்று மாத விடுமுறையில் போய்விடுகின்றார். பள்ளி முதல்வர் அந்த அறிக்கையை என் கையில் கொடுத்த போது கூட புவான் சூரினா சம்சூடின் மகப்பேறு விடுமுறையில்தான் இருந்தார்.
சில ஆசிரிய நண்பர்களிடம் பேசி ஒரு வழியாக நான்காம் படிவ மாணவர்களை வைத்துப் பிரபலமான மசூரி நாடகத்தை அரங்கேற்றிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். அந்த நாடக ஸ்கிரிப்டுகள் பல வகைகளில் சுலபமாகக் கிடைக்கும். அதோடு நான் கல்லூரியில் பயின்றபோதும் பயிற்சி ஆசிரியர்களால் மசூரி நாடகம் போடப்பட்ட அனுபவம் உண்டு. அந்த நாடகத்தில் மசூரியை ஈட்டியால் குத்தியதும் வெண்குருதி பொங்கி வரும்படியான டெக்னிக்கல் வேலைகளை நானும் நண்பனும்தான் செய்தோம். வெள்ளை வர்ணத்தை நீரில் கலந்து பிலாஸ்டிக் பையில் கட்டி ‘மசூரி’ அதை கையில் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காவலாளி ஈட்டியில் அவள் வயிற்றில் ‘குத்தியதும்’ அவள் கையை வயிற்றில் வைத்துக் கொண்டே பையைப் பிதுக்கி வெண்குருதியை வழியவிடவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ‘மசூரி’ எவ்வளவு பிதுக்கியும் பை உடையவே இல்லை. வெண்குருதியும் வடியவில்லை. பிறகு திரையை மூடிவிட்டு நண்பனே ஓடிப்போய் ஊக்கால் பையைக் கீரி விட்டு நாடகத்தைத் தொடர்ந்தோம்.
இப்போது மேடை உபகரண விபரங்களும் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என ஆசிரியர் சைஃபூல் சொல்லியிருந்தார். யூடியூப்பில் பார்த்தபோது பல பள்ளிகள் மசூரி நாடகத்தை நடித்த காணொளிகள் கிடைத்ததால் என் வேலை சுலபமாகிவிட்டது என்றே நினைத்தேன். நினைவில் வைத்து வசனம் பேசக்கூடிய நான்கு மாணவர்கள் கிடைத்தால் போதுமானது என்பது என் மனக்கணக்கு.
ஆகவே, பள்ளி சபை கூடலில் நாடக போட்டி விபரங்களை மேலோட்டமாகக் கூறி, ஆர்வமுள்ள நான்காம் படிவ மாணவர்கள் என்னை மாலையில் சந்திக்கலாம் என்று கூறினேன்.
ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில் இரண்டாம் படிவம் படிக்கும் ராபியா சபை கூடல் முடிந்ததுமே என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள். அவள் நடிக்கத்தான் வாய்ப்புக் கேட்டு வந்திருக்கிறாள் என முதலில் நினைத்தேன். ஆனால், அவளின் குண்டான குள்ளமான உடல்வாகு நான் நினைத்திருக்கும் நாடகக் காட்சியில் பொருந்துவதாக இல்லை. வேண்டுமானால் மசூரியின் டாயாங்குகளில் ஒருத்தியாக நிறுத்தி வைக்கலாம்.
ஆனால், ராபியா கொஞ்சம் தட்டுத் தடுமாறி தன்னிடம் நாடகத்துக்கான கதை ஒன்று இருப்பதாகக் கூறியதும் நான் சற்றுக் குழம்பிப் போனேன்.
“எங்கே படித்தாய்… சிறுவர் நாடகமா?”
“இல்லை… பழைய கதை… என் பாட்டி சொன்னது”
“பாட்டி சொன்னதா? சிரிப்பு கதையா? நன்னெறி கதையா?” ஏதாவது சொல்லி அவளை முதலில் தவிர்க்க நினைத்தேன்.
“இல்லை செக்கு… இது நல்ல கதை… அந்தக் காலத்துக் கதை.”
எனக்கு அவள் சொல்லப்போகும் கதையைக் கேட்கும் ஆர்வம் இல்லை. முதல் காரணம், எப்படியோ மசூரி என் நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்றாள். அவளை நாடகமாகப் போடுவது எனக்குப் பலவகையிலும் வசதியானது. புதிய கதையை மண்டையில் போட்டுக் குழப்பிக் கொள்வதெல்லாம் இருக்கிற டென்ஷனை இன்னும் கூட்டிக் கொள்ளும். அதிலும் ராபியா ‘பாட்டி கதை’ என சொன்னது எனக்கு உள்ளூர சிரிப்பை வரவழைத்தது.
எனக்கு அவள் சொல்லும் கதையில் ஆர்வம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு போய்விடுவாள் என்றுதான் நினைத்தேன். ஆனால், தூடோங்குக்குள் வட்டமாகத் தெரியும் அவளது முகம் முழுதுமே என் பதிலுக்காக எதிர்பார்த்துத் துடிப்பதுபோல் இருந்தது. அவளது கண்கள் என் மீதே படிந்திருந்தது. மிக உறுதியான குழப்பம் இல்லாத பார்வை.
அவளிடம் என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை. அவளைச் சட்டென்று நிராகரிக்கவும் முடியவில்லை.
“செக்கு தியாகு நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை” என்று புகாராக மற்ற ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டால், என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற விசனமும் கலந்தே இருந்தது. அவள் பார்த்த பார்வையில் எனக்கு அப்படிதான் தோன்றியது.
“சரி… இன்னிக்கு மூனு முப்பதுக்கு பள்ளி டேவானுக்கு வந்துடு. அப்ப உன் கதையைக் கேட்கிறேன். இப்ப வேலை இருக்கு” என்று சொல்லி விட்டு வகுப்புக்குச் சென்றுவிட்டேன்.
வெய்யில் வெகு வேகமாகக் குறைந்து வானம் மந்தாரமாகிக் கொண்டிருந்தது. சுற்றிலும் செம்பனைகளும் காட்டு மரங்களும் சூழ்ந்திருந்த பள்ளியின் மண்டபக் கதவு வழியாகக் குளிர்ந்த காற்றுப் புகுந்துவந்தது.
நான் எதிர்பார்த்தபடி மாணவர்கள் வரவில்லை. மூன்று மாணவிகள் மட்டும் வந்து மண்டபத்தின் மூலையில் அமர்திருந்தனர். வந்திருந்த இருவரின் கையிலும் கைப்பேசி இருந்தது. அவர்கள் வந்ததே கைப்பேசியில் அரட்டை அடித்துப் பொழுதுபோக்க என்பதுபோல் இருந்தது.
ராபியா மீண்டும் “சீக்கிரம் சொல்லிடுவேன் செக்கு” என்று சொன்னதும் நான் வேறு வழியே இன்றி “சரி சொல்லு” என்று சொல்லிவிட்டு பிலாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டேன்.
ராபியா என் முன் நேராக வந்து நின்று கொண்டாள்.
“அது ஒரு பெரிய காடு… இங்க இருக்குற மாதிரி காடு இல்லை… அது வேற மாதிரி காடு. ஒவ்வொரு மரமும் பெருசு பெருசா உயர உயரமா இருக்கும். வேர் வெளியே புடைச்சிக்கிட்டு மலைப்பாம்பு மாதிரி தெரியும். மரங்கல்ல பல மாதிரி கொடிகள் சுற்றிச் சுற்றி வானத்துக்குப் போகும். வானம் மனிதர் கண்ணுக்குத் தெரியாது. அவ்வளவு இலைகள் வானத்தை மூடிக்கிட்டுக் கூடாரம் போட்டது போல இருக்கும். நாளா பக்கத்தில் இருந்தும் கீச்சி கீச்சி சத்தமும் கோங் கோங் சத்தமும் கூய்ய்ய்ய் என்ற விசில்களும் கேட்டுக்கொண்டே இருக்கும்… உஸ்ஸ்ஸ் னு வீசும் காற்றுச் சத்தம் சமயங்களில் பாம்பு சீருற மாதிரி கேட்கும்” ராபியா கைகளை விரித்து வளைத்து விளக்கிக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் எங்கோ ஆழ்ந்து போயிருந்தன. கைகளைக் காற்றில் அலையவிட்டுச் சுழன்றுக்கொண்டிருந்தாள்.
நான் திகைத்துப் போனேன். அவள் ஒரு பெரிய கதைச்சொல்லியைப் போல என்னைக் குழந்தையாக்கி கதை சொல்லத் தொடங்கி இருந்தாள். அவள் சொல்லும் சொற்களும் அதில் அவள் கூட்டும் நயமான குரலும் என்னை அப்படியே அமரச்செய்து விட்டது. ராபியா என் முன்னே காட்டை வரைந்து கொண்டிருந்தாள். நான் காட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தேன். அவள் உதட்டைச் சுழித்து ஏதோ ஒரு பறவையின் ஓசையை உருவாக்க முயன்றுக்கொண்டிருந்தாள்.
காடு இறங்கி இறங்கிக் கடலுக்குச் சென்றது. கடற்கரையை ஒட்டிய இடத்தில் டூயூங் பூத்தே கம்பம் தனியாகத் தெரிந்தது. அந்தக் கடற்கரையில் மேலும் நடந்து போனால் அதே போன்ற சின்னச் சின்ன கம்பங்கள் சில இருந்தன. கம்பங்களுக்கு இடையில் ஒற்றையடி பாதைகள் பாம்புபோல வளைந்து வளைந்து சென்றன. கம்பத்தில் ஈக்கு போக்கு இல்லாமல் நான்கு கால்கள் கொண்ட சின்னச் சின்ன குடிசைகள் இருந்தன. ஐம்பதுக்கும் குறைவானவை. மரத்தாலும் மூங்கில் தட்டைகளாலும் கட்டப்பட்டிருந்தன. அத்தாப்புக் கூரைகள். மூங்கிலை இணைத்துக் கட்டிய ஏணி வாசலில் சாய்வாக கிடந்தது. மிகத்தெளிவாக நான் அவற்றைப் பார்த்தேன்.
“ஆக்ரா அந்தக் கம்பத்தில் இளவயசு வாலிபன். தோள்கள் புடைத்த பலசாலி. மீசை ரோமம் லேசாகத் தெரிகின்றது. அவன் அம்மணமாக அலைந்த காலம் மாறிவிட்டது. அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. சுவானா கிழவி மரப்பட்டையில் செய்து கொடுத்த தட்டையை இடுப்பில் கட்டிக் கொள்கிறான். அவர்கள் குடும்ப வழக்கப்படி அவனுக்கு இன்னும் பத்து பெளர்ணமியில் திருமணம் செய்து வைத்து விடலாம்.
காடு அக்ராவிற்குப் புதிது இல்லை. நெடு நெடுவென்று வளர்ந்த மரங்கள் சூழ்ந்த காட்டுக்குள் நுழைந்து நுழைந்து காணாமல் போவது அவனுக்குப் பிடிச்ச விளையாட்டு. கெட்டிக்காரத்தனமாகப் பாதைகளைக் கண்டுபுடிச்சு திரும்பவும் கம்பத்துக்கு வந்து சேர்ந்துவிடும் போது ஓடிப் போய் சுவான கிழவியிடம் தன் திறமையைச் சொல்லிக் கொள்வான். “ஒங்கப்பனவிட நான் கெட்டிக்காரன் பாத்துக்க…” என்று கூவிக் கொள்வான்.
சுவானா கிழவிக்கு ஆக்ராவைப் நினைத்தால் பெருமைதான். ஆள் வாட்ட சாட்டமா வளர்ந்து விட்டான். ஆனால் காட்டுக்குள்ள தனியாகப் போகக்கூடாதுனு சொல்றத மட்டும் ஆக்ரா கேட்காமல் இருப்பது கிழவிக்குப் பிடிக்கல. பாம்பு, தேளு கடிச்சுடும்னும் புலி, கரடி அடிச்சுடும்னும் பயம் இல்ல. காட்டில் அலையும் பெனுங்கு அவனைப் போன்ற அழகான ஆம்பிள பின்னால வந்துவிடுமாம். பிறகு கம்பத்துக்குப் பிரச்சனை வந்திடும். அவனுக்கும் பொம்பளைங்கள பிடிக்காம போயிடுமாம். பெனுங்குவோடு காட்டுக்குள்ள போய்விடுவானாம்.
ஆனாலும் ஒரு நாள் காலையிலேயே ஆக்ரா கூனாங்குடன் காட்டுக்குள்ள போயிட்டான். அவனை முந்திக் கொண்டு கூனாங் ஓடியது. தன் மோப்ப சக்தியைத் தீட்டிக் கொண்டு அது ஓடியது. ஒரு பெனாகா மரத்தின் கீழ் நின்னு அது விடாமல் குரைச்சது. பிறகு நான்கு கால்களிலும் தாவி மரத்தில் ஏறியது. முதல் கிளையில் தொங்கிக் கொண்டு வேகமாகக் குரைத்தது.
ஆக்ரா ஓடிப்போய் மரத்தில ஏறினான். கிடு கிடுவென்று உச்சிக் கிளைகளுக்குத் தாவினான். கடல் தெரிந்தது. பெனாக மரத்தின் சிவந்த கொழுந்து இலைகளை விலக்கிக் கொண்டு பார்த்த போது இதுவரை பார்த்தில்லாத கப்பல்கள் கரையோரம் தெரிந்தன”
ராபியா கொஞ்ச நேரம் இடைவெளி விட்டாள்.
நானும் பார்த்தேன். இரட்டை பாய்மரம் பொருத்திய பெரிய கப்பல் ஒன்று. பக்கத்தில் சில படகுகள். எல்லாம் புதுவிதமானவை. அவை நாட்டுப் படகுகள் அல்ல என்பதை நானும் நம்பினேன். நக்கோடாக்களின் படகுகள் வேறு மாதிரி இருக்கும்.
“அவை யாருடைய கப்பல்கள் ராபியா?” நான் கேட்டேன்.
ராபியா என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கதையைத் தொடர்ந்தாள்.
“ஆக்ரா அந்தக் கப்பல்கள் நின்ற இடத்துக்கு ஓடினான்”
ஆக்ரா அவசரமா மரத்தில் இறங்கும்போது எனக்கும் பதற்றமானது. அவனுக்கு முன்பே கூனாங் ஒரே தாவலாகக் குதித்தது. அவன் மலை சரிவில் தவழ்கிறான். காட்டு வாழைகள் வளர்ந்திருந்த சருக்கத்தில் மேற்கு நோக்கி ஓடுகின்றான். தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் வளர்ந்திருந்த சமவெளிக்கு வந்துவிட்டான். கப்பல்கள் அவன் பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தன. எனக்கும்தான். அங்கு மனித நடமாட்டம் இருந்தது. உயரமான மூங்கில் கழியில் கொடி ஒன்று காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
ராபியா கதையைத் தொடர்ந்தாள்.
“கப்பல் நின்ன இடத்தின் கரையில் நிறைய பெனாகா மரங்கள் இருந்தன. நீண்ட வெள்ளைச் சட்டையும் உயரமான தொப்பியும் அணிந்த வெள்ளைத்தோல் மனிதர்கள் இருந்தார்கள். பெரிய மனித தோரணையில் சிலர் குதிரைகளில் அமர்ந்து மெல்ல சுற்றி வந்தனர். வெள்ளைத் துணியில் கோவணம் கட்டிய கருத்த மனிதர்கள் கடற்கரை மணலில் கூட்டமாகக் குந்தியிருந்தார்கள். தொப்பிக்காரர்கள் முதலாளிகள் மாதிரியும் கருப்புத் தோல்காரர்கள் அவர்களின் கூலிகள் மாதிரியும் இருந்தார்கள். கொஞ்சம் உள்ளூர் கம்பத்து மக்களும் கடற்கரையில் இருந்தார்கள்.
திடீரென்று காட்டுக்குள் டுமீல்னு வெடிச்சத்தம் கேட்டது. கூனாங் அச்சத்தில் குய்ய்ய்னு கத்திக் கொண்டு ஓடி எங்கோ பதுங்கிக் கொண்டது. ஆக்ராவுக்கு அது பெனுங்குவின் கூச்சலோனு பயம் வந்ததும். உடனே கம்பத்துக்கு ஓடிடலாம்னு நினைத்தான்.
தலையை நீட்டிப் பார்த்தபோது, சில பெனாகா மரங்கள் சாய்ந்து கிடந்தன. பறவைகள் வித விதமாகக் கத்திக் கொண்டு காட்டில் பறந்தன. கருப்புத்தோல் மனிதர்கள் கூட்டமாகக் காட்டுக்குள்ள இருந்தனர். உள்ளூர் வாசிகளும் கையில இருந்த கத்தியாலும் பாராங்காலும் மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் வெட்டிக் கொண்டிருந்தாங்க. அவங்க ரொம்ப பரபரப்பா இருந்தாங்க. ஒரே இரைச்சல். திடீர் என்று சிலர் உற்சாகத்தில் கூச்சல் போட்டாங்க.
ஆக்ரா நிமிர்ந்து நின்னான். தொப்புனு காலுக்கு அடியில் ஒரு சின்ன பொருள் வந்து விழுந்தது. பளபளப்பா வட்டமா இருந்தது அது. கூனாங் ஓடி வந்து மோப்பம் பிடித்தது. ஆக்ரா அந்தப் பொருளை எடுத்துப் பார்த்தான். அது ஒரு நாணயம். வெள்ளிக் காசு. முன்பக்கம் ஏதோ தொப்பி மாதிரியும் தூண் மாதிரியும் படங்கள் இருந்தன. அடுத்த பக்கம் எழுத்துகளும் சின்னங்களும் இருந்தன. ஆக்ரா வானத்தைப் பார்த்தான். பணம் வானத்தில் இருந்து வந்து விழுகிறதா என்ன?
ஆக்ராவுக்கு ரொம்ப வியப்பா இருந்தது. அந்தக் கப்பல்கள், அந்த வெள்ளை தொப்பி அணிந்த மனிதர்கள், கோவணம் கட்டிய கருப்புத் தோல் மனிதர்கள், அவர்களின் திடீர் கூக்குரல். பெரிய வெடிச்சத்தத்தம், வானத்தில் இருந்து வந்து விழுந்த வெள்ளி நாணயம். எல்லாமே அவனுக்கு வியப்பான காட்சிகளாக இருந்தன”
எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. “அந்த நாணயம் எங்கிருந்து வந்தது ராபியா?” என கேட்க நினைத்த போது என் கைப்பேசி அதிர்ந்தது.
நான் சட்டென்று மீண்டு வந்தேன். ஆழ்ந்து தூங்கி அலாரம் அடித்துத் திடுதிப்பென்று எழுந்தவன் போல குழப்பம் ஏற்பட்டது. வெளியே மந்தாரமாகவே இருந்தது. ஒரு வேளை மழை பெய்து ஓய்ந்து விட்டதா என்ற குழப்பமும் தோன்றியது. ராபியா சலனமில்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படி நகர்ந்தது என்று தெரியவில்லை. என் உடல் வியர்த்திருந்தது. இன்னும் மாணவர்கள் யாரும் வரவில்லை. முன்பு வந்த மாணவிகள் இப்போது ஐஸ்கிரிம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களும் டூயுங் பூத்தே கம்பத்தையும் ஆக்ராவையும் பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. மாலை ஐந்தரை ஆகி விட்டிருந்தது.
நான் அரக்கப் பரக்க நாற்காலியில் இருந்து எழுந்தேன். ராபியா ஏமாற்றமாக என்னைப் பார்த்தாள். எனக்கு அவள் முகத்தைப் பார்க்க ஏனோ பயமாக இருந்தது.
“ராபியா! நாம நாளைக்கி பேசுவோம். இப்ப நேரமாகிடுச்சி” என்றேன் பதற்றமாக. மற்ற மாணவர்களும் ஏமாற்றமாகக் கிளம்பினர்.
வீட்டுக்கு வந்தும் முழுமையாக இயல்புக்குத் திரும்பமுடியாமல் இருந்தேன். கைப்பேசியில் கேம் விளையாடினேன். தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றி மாற்றி ஏதோதோ நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு புதிரான கனவுகள் வந்தன. நான் கடற்கரையில் ஓடும் போது கடல் பாறை வெடிக்கிறது. காலடியில் வெள்ளி நாணயங்கள் வந்து விழுகின்றன. கையில் எடுத்துப் பார்க்கும் போது அவற்றில் ரத்தக் கறை தெரிகின்றது. யாரோ அதைத் தொடாதே! தொடாதே! என்று சொல்கிறார்கள். நான் திடுக்கிட்டு எழுந்தேன். அலாரம் அடிக்க இன்னும் நேரம் இருந்தது. எப்படியோ எழுந்து கிளம்பி பள்ளிக்குச் சென்று விட்டேன். அன்றைய என் வருகைப் பதிவு நேரம் அவ்வாண்டின் மிக துரிதமானதாக இருந்தது.
பல வேலைகளில் நான் ஈடுபட்டாலும் ராபியாவின் கதை துரத்தியபடியே இருந்தது. ராபியா அபாரமான கதைச்சொல்லி மற்றவை எல்லாம் என் பிரம்மை என்று நினைத்தே என்னை சமாதானம் செய்துகொள்ள முயன்றேன்.
ஓய்வு நேரத்தில் நான் ஆசிரியர் அறைக்குள் நுழைந்த போது ராபியா எனக்குக் காத்திருந்தாள். நான் இயல்பாக இருக்க முயன்றேன். வேறு வேலைகளில் மூழ்கி இருப்பதுபோல் ஒரு பாவனையை வரவழைத்துக் கொண்டேன்.
“செக்கு நான் இன்னும் கதைய முடிக்கல… இன்னிக்கு சொல்லலாமா?” என்று தயங்கியே கேட்டாள்
இப்படி சாந்தமாகப் பேசும் ராபியாவா நேற்று அப்படிக் கதை சொன்னாள் என்று எனக்கு வியப்பாக இருந்தது. அந்தக் குரலும் பாவனையும் ஆழத்துக்குள் இழுத்துச் செல்பவை. அவளது சொற்கள் பாலமாக இருந்து கடந்த காலத்துக்குள் நுழைத்துவிடும் மாயம் எனக்குப் பிடிபடவில்லை.
நான் அதிகம் பேசாமல் “கண்டிப்பாக வந்துவிடு” என எழுந்த சொற்களை விழுங்கி “மூனு மணிக்கு வா” என்றேன். ராபியா உட்சாகமாக நன்றி கூறிவிட்டுப் போனாள். அவளிடம் இருந்த குழந்தை தன்மை எனக்கே என்னை நினைத்து வெட்கப்பட வைத்தது.
நான் மூன்று மணிக்கு வீட்டுக்கும் போகாமல் பள்ளி மண்டபத்திற்கு விரைவாகவே சென்றேன். ராபியா எனக்கு முன்பே காத்திருந்தாள்.
“இன்னும் யாரும் வரல செக்கு” என்றாள். அவள் முகத்தில் ஆர்வம் பொங்கியிருந்தது. முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்தாள்.
இன்று நான் மேடைக்குக் கீழே நாற்காலியில் அமர்ந்து கொண்டு ராபியாவை மேடையில் இருந்து கதை சொல்லச் சொன்னேன்.
ராபியா சின்ன அமைதிக்குப் பின் கதை சொல்லத் தொடங்கினாள்
“ஆக்ரா அந்த வெள்ளிக் காசை கம்பத்துக்கு எடுத்துப்போனான். ஆனால் சுவானா கிழவியிடம் கூட அதைக் காட்ட அவன் விரும்பல. எருமை மாட்டுக் கொம்பில் போட்டு லங்சாட் மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.
ஆக்ராவுக்கு அந்த ரெண்டு பாய்மரம் விரித்த கப்பலும், வெள்ளை தொப்பி மனிதர்களும் அவனுக்கு வானத்தில் இருந்து கிடைத்த வெள்ளிக் காசும் ரொம்ப பிடித்து போய் விட்டன. படபடத்துக் கொண்டிருந்த கொடி அவன் கண்களைக் கவர்ந்தது. அவன் தினமும் காலையிலேயே பெனாகா மரங்கள் சூழ்ந்த அந்த இடத்துக்குப் போனான். ஏதாவது ஒரு மரத்தின் மீது ஏறி அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்ப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. பல மாதிரி தொழிலாளர்கள் அன்றாடம் காடுகளைச் சுத்தப்படுத்தினார்கள்” என்று ராபியா நிறுத்திய போது…
எனக்கு, யானைகள் வரிசையாக வந்து மரங்களை இழுத்துப் போகின்ற காட்சிகள் தெரியத்தொடங்கின. மாட்டு வண்டிகளில் மண்ணையும் கல்லையும் தொழிலாளர்கள் ஏற்றினார்கள். அவர்கள் பேசும் குரல் கூட எனக்குக் கேட்டது. பல மொழிகள். ஒன்றோடு ஒன்று கலந்து வெறும் இரைச்சலாகக் கேட்டது. அந்த இடம் பொட்டலாகிக் கொண்டிருந்தது. வெகுவிரைவாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. தொப்பிக்காரர்கள் குதிரை சவுக்கால் கூலிகளை விளாசுவது எப்போதும் நடந்தது. வெடிச்சத்தமும் மரங்கள் சாய்வதும் தொடர்ந்தது.
கருப்புத்தோல் கூலிகள் காட்டுக்குள் புகுந்து மரங்களையும் புதர்களையும் நீண்ட கத்திகளால் அழித்தனர். மண் மேடுகளைச் சம்மட்டிகளால் சரித்து சமன் செய்தனர். பெரிய பாறைகளைக் கடப்பாரைகளால் சிதைத்தனர். திடீர் கூச்சல்கள் கேட்டன. பாம்புகள் அச்சத்தில் தாறுமாறாக மறைவிடம் தேடிக் கடற்கரையில் அலைந்தன. பொந்துகளில் பதுங்கியிருந்த அணில்களும் கீரிகளும் கிரீச்சிட்டுக் கொண்டு ஓடின. மரங்கள் சாய்ந்து செத்த கூலிகளை நான் பார்த்தேன். பாறைகள் சரிந்து நசுங்கியவர்களின் ஓலம் எனக்குக் கேட்டது. விஷப் பூச்சிகள் பலரையும் தீண்டிய அலறல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததன. மனித சடலங்களைத் தூரமாகத் தூக்கிச்சென்று குழி தோண்டி புதைத்தனர். புதைகுழிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
நான் ராபியாவிடம் அந்த வெள்ளிக் காசு மீண்டும் விழுந்ததா என்று கேட்க நினைத்தேன்.
“அந்த வெள்ளிக்காசு….” என்று நான் தொடங்கும் போதே “அதை பிறகு சாரா சொல்வாள்” என்று ராபியா என்னை வாயடைத்து விட்டாள். சாராவை நான் இன்னும் சந்திக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
“அவள் யார்?” என்றேன்.
ராபியா என்னைக் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வை என் விழிவழி நுழைந்து தீண்டுவதுபோல கூசியது. மன்னித்துவிடு என்பதுபோல பணிந்தேன். நான் முழுவதும் ராபியாவின் கட்டுப்பாட்டில் இருந்தேன்.
“ஒரு நாள் ஆக்ரா அந்த இடத்துக்கு வந்த போது, பழைய கூடாரங்களோடு புதுக் கூடாரம் ஒன்றும் இருப்பதைப் பார்த்தான். இப்போது அவன் கடற்கரையில் இருக்கும் பாறை ஒன்றின் கீழ் உட்கார்ந்து கொள்வது பழக்கமாகிவிட்டது. அங்கிருந்து அந்தக் கூடாரத்தைக் கிட்டத்தில் பார்க்க முடிந்தது. அது பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறம். அதன் கூம்பில் கடற்கரையில் பறந்த அதே கொடி பறந்துகொண்டிருந்தது. கூடாரத்துக்கு வெளியே குதிரை வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆக்ரா எதிர்பார்க்காத நேரத்தில் கூடாரத்தில் இருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் வெள்ளை நிற பாவாடையும் வட்டமான தொப்பியும் போட்டிருந்தாள். நீண்ட முடியின் செம்பட்டை நிறம் பக்கவாட்டில் தெரிந்தது. சிறுமியா குமரியா என முடிவுசெய்ய முடியாத தோற்றம். ஆக்ரா அவளை ஆச்சரியமாப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் ஆக்ராவைப் பார்த்து விட்டாள்… சட்டென கூடாரத்துக்குள் மறைந்துவிட்டாள்.
ஒரு காலத்தில் பெனாகா மரங்கள் சூழ்ந்த அந்த இடத்துக்கு ஆக்ரா இப்போ தினமும் செல்ல நிறைய காரணங்கள் இருந்தன. அவன் அன்றாடம் கம்பத்தில் இருந்து காணாமல் போய்விடுவது பெரியவர்களைக் கவலையாக்கியது. அவன் எங்கு போகிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏதாவது பிரச்சனை வருமோ என்று எல்லோரும் பயந்தனர்.
ஆக்ரா ஒரு நாள் அந்தச் சிறுமியிடம் பேசி விட்டான். ஆமாம்… அவன் பேசுவது அவளுக்குப் புரிந்தது. அவள் பேசுவது அவனுக்குப் புரிந்தது.”
ராபியா அந்த உரையாடலை நாடகம் போல் நடித்துக் காட்டினாள்.
“உன் பேர் என்ன?”
“சாரா… சாரா லைட். எங்கள் குடும்பத்தில் மூத்த பெண் நான்… நீ?”
“நான் ஆக்ரா… மலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் டூயூங் பூத்தே கம்பத்தில் இருந்து வருகிறேன்”
“உன்னை அன்றாடம் இங்க பார்க்கிறேனே”
“ஆமாம், சும்மா இங்கே இருப்பேன்..… நீ எங்கிருந்து வருகிறாய்”
“நான் தாலாங்கில் பிறந்தேன். என் அப்பா அங்கு வேலை பார்த்தார்”
“உன் அப்பா யார்?”
“அவர் பெயர் பிரான்சிஸ் லைட்…அதோ அங்கே கருப்பு குதிரையில் இருக்கிறாரே அவர்தான்”
“அம்மா..?”
“மார்தினா ரோசேல்… கூடாரத்துக்குள் தங்கையுடன் ஓய்வெடுக்கிறார்”
“நீ இனிமேல் இங்குதான் இருப்பாயா?”
“ஆமாம்…இந்தத் தீவை என் அப்பா வாங்கிவிட்டார்… இது இனிமேல் எங்கள் இடம்.”
“இல்லையே இது எப்போதும் புலாவ் கா-சாத்து தானே?”
“இல்லை… இனிமேல் இது “Prince of Wales Island” என் அப்பா வைத்த பெயர்! அதோ கொடி பறக்குதே அங்கதான் உயரமான கோட்டை கட்டப் போகிறோம்.”
“அவர்கள் பேச்சு சில நாட்கள் தொடர்ந்தது. ஆக்ரா காட்டில் கிடைக்கும் பழங்களையும் பூக்களையும் மான் கொம்பு போன்ற சிறப்பான பொருள்களையும் கொண்டு வந்து சாராவுக்குக் கொடுப்பான். கடல் ஓரம் ஒதுங்கும் கிழிஞ்சல்களை அவள் விரும்பி வாங்கிக் கொள்வாள். சாரா அப்போது அவனிடம் சில வெள்ளிக் காசுகளைக் கொடுப்பாள். அவன் அவற்றைக் கம்பத்தில் லங்சாட் மரத்தடியில் புதைத்து வைப்பான்”
“நான் இங்க முதல் தடவை வந்த போது ஒரு வெள்ளிக் காசு வானத்தில் இருந்து விழுந்தது தெரியுமா?” ஆக்ரா சாராவிடம் கேட்டான்.
சாரா வேகமாகச் சிரித்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“வானத்தில் இருந்து விழுந்ததா?”
“ஆமாம்…என் காலடியில் வந்து விழுந்தது”
அவள் மீண்டும் சிரித்தாள்…
“அது வானத்தில் இருந்து விழ வில்லை. அதோ அந்த பீரங்கியில் இருந்து விழுந்தது…”
“எப்படி….”
“இந்தத் தீவு மக்களும் காட்டை அழிக்க எங்கள் ஆள்கள் அப்படி செய்கிறார்கள் என்று அப்பா சொன்னார்”.
“எப்படி… எப்படி” என்று ஆக்ரா தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
சாரா சிரித்துக் கொண்டிருந்தாள்.
எனக்கு அந்த மேடையிலேயே புதிய காட்சி தெரியத்தொடங்கியது. பீரங்கி துவாரத்தில் இரும்பு குண்டோடு கைப்பிடியளவு வெள்ளிக்காசுகளைப் போடச்சொல்லி ஒரு தொப்பிக்காரன் கட்டளை இடுகிறான். கூலி ஒருவன் தீபந்ததோடு வருகிறன். தீ பொசு பொசுத்து வெடிமருந்து வெடிக்கிறது. அதன் சத்தம் காதுகளை அடைக்கிறது. இரும்பு குண்டுகளுடன் வெள்ளிக் காசுகள் காட்டுக்குள் சிதறிப் பாய்கின்றன. இரும்பு குண்டுகள் தாக்கிய மரங்கள் மடமடவென்று சாய்கின்றன. பாறைகள் சிதறுகின்றன. வெள்ளிக் காசுகள் பலதிசைகளிலும் விழுந்து உருண்டோடுகின்றன. உடனே வேலையாட்கள் கூட்டம் காட்டுக்குள் புகுகின்றது. காசுகளைத் தேடும் ஆபத்தான விளையாட்டு தொடங்குகின்றது. மரங்களையும் செடி கொடிகளையும் அழித்துக் காசுகள் தேடப்படுகின்றன…. அந்த உற்சாகமூட்டும் சாகச விளையாட்டில் கலந்துகொள்ள பலரும் முன்வருகின்றனர். காடுகள் மெல்ல அழிக்கப்படுகின்றன.
சாரா கேட்டாள்…
“நீ உன் வெள்ளிக் காசை என்ன செய்கிறாய்?”
“என்ன செய்ய முடியும் ?….. யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கிறேன்.” ஆக்ரா சிரித்தான்.
“ஆனால் அவர்கள் சந்திப்பு ரொம்ப நாள் தொடரவில்லை”
ராபியாவின் குரல் மாறியிருந்தது. தழுதழுத்தது
“ஒரு நாள் ஆக்ரா மாலை நேரம் கம்பத்துக்குத் திரும்பும் போது நான்கு வெள்ளைத் தொப்பிக்காரர்கள் அவனை வளைத்துக் கொண்டார்கள்”.
“நீ அன்றாடம் இங்கு ஏன் வருகிறாய்…?” குரலில் அதிகாரம் இருந்தது
ஆக்ரா தடுமாற்றத்தோடு “ஒன்னும் இல்லை… சும்மாதான்” என்றான்
“உன்னைத் துப்புரவு இடத்திலும் பார்த்ததில்லையே”
“நான் வேலை செய்யவில்லையே…”
“பின்ன இந்தக் காசு …?”
ஆக்ரா கையில் வெள்ளிக் காசு இருப்பதைப் பார்த்துவிட்டார்கள். அவன் ஆங்கில ஆதிக்கத்துக்கு உட்பட்ட இடத்தில் புகுந்து திருடியிருப்பதாகக் குற்றம் சாட்டினர். அவனைக் கீழே தள்ளி உதைத்தார்கள். அவன் அலறினான். அவன் சொல்வதைக் கேட்க அவர்கள் தயாராய் இல்லை.
“எவ்வளவு திருடினாய்.. எங்கே அந்தக் காசுகள்”
ஆக்ரா சொல்லிவிட்டான். “லங்சாட் மரத்தடியில் புதைத்து வைத்துள்ளேன்”
உடனே ஒரு படை அவனை இழுத்துக் கொண்டு கம்பத்துக்குள் புகுந்தது.
கம்பத்து மக்கள் கூச்சல் இட்டுக் கொண்டு ஓடினர். ஆங்கில படையின் குதிரைகளும் கையில் இருந்த ஆயுதங்களும் அவர்களைப் பயமுறுத்தின.
“ம்.. காட்டு எந்த லங்சாட் மரம்?”
“ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அங்கே பல லங்சாட் மரங்கள் முளைத்திருந்தன. அவை எப்போது அங்கு வந்தன என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆக்ராவால் எந்த மரம் என்று அடையாளம் காட்ட முடியவில்லை. ஆங்கிலப்படை ஒவ்வொரு லாங்சாட் மரத்தின் அடியிலும் தோண்டி களைத்துப் போனது. புதிய புதிய மரங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. படை வீரர்கள் குழம்பிப் போனார்கள். அவர்களுக்குப் பீதியாகிவிட்டது. ஆக்ராவை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
அவன் சாராவைப் பார்க்க வேண்டும் என்று அழுது அடம் பிடித்தான். கம்பத்து மக்கள் ஆக்ராவின் மேல் கோபம் கொண்டார்கள். அவன் காட்டுக்குள் அலைந்து பெனுங்குவைக் கொண்டுவந்துவிட்டதாக நினைத்தார்கள். பெனுங்குவை விரட்ட கடுமையான தண்டனைகள் கொடுத்தனர். அவனைப் பட்டினி போட்டனர். ஆக்ரா மீண்டும் கம்பத்தில் இருந்து வெளியே போகாமல் இருக்க அவன் கை கால்களைக் காட்டுக் கொடிகளால் கட்டிப் போட்டார்கள். அவன் லங்சாட் மரத்தடியிலேயே கிடந்தான். சுவானா கிழவி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். இரவும் பகலும் வந்து வந்து போனது”.
ராபியா அழுவது நன்றாகக் கேட்டது. என் கன்னம் இளஞ்சூட்டால் நனைவது தெரிந்தபோது சுற்றிலும் பார்த்துக்கொண்டேன். மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது. நேற்றுப் போலவே சட்டை தொப்பரையாகியிருந்தது.
“கடைசியில் ஆக்ராவுக்கு என்ன ஆனது?” நான் கேட்க முடியாமல் தடுமாறினேன்…
ஆனால் அப்போது என்னால் ஆக்ராவை அந்தக் கிழட்டு லங்சாட் மரத்தடியில் பார்க்க முடிந்தது. அவன் மெல்ல எழுந்து நிற்பது தெரிகின்றது. கால் கட்டும் கைக்கட்டும் அப்படியே இருந்தன. திடீரென வேகமாகக் கடலை நோக்கி தாவித் தாவிச் சென்றான். கீழே விழுந்து மணலில் புரண்டான். அப்படியே கடலுக்குள் போய் விழுந்தான். நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆக்ரா கொஞ்ச நேரத்தில் கடலில் மிதந்தான்.
ராபியா அழுதுவதை நிறுத்தவில்லை.
நான் ராபியாவிடம் மெல்ல கேட்டேன்….
“ராபியா, நீ ஆக்ராவை பார்த்திருக்கியா?”
ராபியா மிகக் கோபமாக என்னைப் பார்த்தாள்… காலைத் தூக்கித் தரையை உதைத்துக் கொண்டாள்.
பரபரப்பாகத் தன் சிலுவார் பாக்கேட்டில் கைவிட்டு எதையோ எடுத்து என்னை நோக்கி வீசினாள். நான் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அந்த மண்டபம் முழுவது சிதறி ஓடும் வெள்ளிக்காசுகளின் ஒலி நெடுநேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.
THIRU PAANDIYAN SIR. SIRANTA PADAIPU KODUTTULLERKAL. THANGALIN MUTAL SIRUKATAI ITU ENA NINAIKIREN. ITARKU MUN TANGALIN KADDURAIKALAI MADDUMEE ATHIKAM VASITULLEN. ADUTTADUTA KATAIKALAI TAANGAL ELUTHA VENDUM. AARVAMAKA VASIKKA KAATIRUPEN.
பாண்டியனின் இக்கதை சமீபத்தில் நான் வாசித்த சிறந்த கதைகளில் ஒன்று. வரலாறு ஒரு பக்கம், வரலாற்றை ஏந்தும் மனம் அதை நிகழ்த்திக்காட்டும் சாகஸம் மறு பக்கம். பாண்டியனிடம் தனி வலைப்பதிவு பக்கம் உண்டா? உண்டு என்றால் அதன் இணைப்பு தேவை. அவரது ஏனைய கதைகளை வாசிக்க விரும்புகிறேன். அவர் அடுத்த கதைகளை எழுதுவது அவருக்கு செய்துக்கொள்ளும் நற்பயிற்சியாக இருக்கும். வாழ்த்துகள்.
https://writerpandiyan.wordpress.com/
இது அ.பாண்டியனின் வலைப்பக்கம்
பாண்டியன் உங்கள் வரலாற்றுப்பார்வை ஒவ்வொரு இனக்குழுவின் அழிவை இக்கதை காட்டுகிறது. அந்த தீவு வெள்ளைக்காரன் கைக்கே சென்றது தெரியாமல் அடிமையாகிப்போன மண் மக்களின் அவலத்தை சொல்கிறது.ராபியாவின் கதை சொல்லும் உத்தி குறிப்பாக பாட்டி சசொன்ன கதை என்ற குறிப்பு கதையை வலுவாக்குகிறது. ஆக்ரா என்ற சிறுவனின் களங்கமற்ற பார்வையில் ஒரு மாயம் போல தீவு கைமறியதை நன்றாக சொல்கிறது. வாழ்த்துகள் பாண்டியன்.
நாம் நம்முடைய வரலாற்றை மட்டும் பார்த்து, கேட்டு, வாசித்து கொதித்து வந்திருக்கின்றவேளையில், இது இன்னொரு இனத்தின் பால் நிகழ்த்திய கொடுமையினைச் சொல்கிற அற்புத சம்பவம். மேலும் இது மறைக்கப்பட்ட, எவரும் சுட்டிக்காட்டாத உண்மைச் சம்பவமாகக்கூட இருக்கலாம். !
காட்டை அழித்தார்கள் ரோட்டைப்போட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் அரைத்தமாவை அரைப்பதை விடுத்து காட்டில் உள்ளாசமாக வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை யோசிக்கவைத்து துயரத்தில் ஆழ்த்திய சிறுகதை.
நமக்கு நம்முடைய வரலாறு முக்கியம்தான் இருந்தபோதிலும் out of boxயில் பெரும்பாலும் சராசரியான நாம் யோசிப்பதே இல்லை.
இந்தச் சிறுகதை மற்ற இனத்தின் மேல் பரிவையும் பாசத்தையும் கொண்டுவருகிற சிறந்த மலேசிய எழுத்து. மலாய் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்தால் பாண்டியன் சார் மலாய் இலக்கிய உலகில் மின்னலாம்.
அருமை சார். வாசிப்பின் இறுதியில் மனது கனப்பதை உணரமுடிகிறது.. உங்களின் எளியஎழுத்து நடை எப்போதுமே என்னைக் கவர்ந்தவை.
ஸ்ரீவிஜி
அருமையான நடை