ஆதியோசை

vg 01என்னை நிரப்ப முயன்ற இருளுக்குள் மங்கலாக ஊடுருவியிருந்தது சிறிது வெளிச்சம். வடிவற்ற தேங்கிய குட்டையின் முகப்பில் ஊடுருவிய அந்த வெளிச்சம் இருளின் ஒரு கோணத்திலிருந்து மட்டும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. நான் குட்டையின் அடியாழத்தில் இருந்தேன் என்பதையன்றி வேறெந்த நினைவும் இல்லை; நான் நீந்தவுமில்லை மிதக்கவுமில்லை; திணறிக்கொண்டு மேலே வரும் முனைப்பேதும் என்னிடம் இருக்கவுமில்லை. அது என்னை நானே நிராகரிக்கும் தருணமாய் இருந்தது. ஆனால், மூச்சு முட்டுவதை மட்டும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. வடிகட்டி வந்த வெளிச்சம் அதற்குமேல் அவசியமாய் இருக்கவில்லை.

இமைகளை மூடி, மூச்சு வரும் வழி நோக்கி பிரக்ஞையின் தடம் மாற்றினேன். எஃகு குண்டுகள் சில நெஞ்சுக்கூட்டின் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தன. ஒன்றுடன் ஒன்று சிக்கியபடி இருந்தவை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் எதிரெதிர் திசையில் உந்த, மூச்சுத் திணறல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இது மட்டும்தான் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அதற்கு என்னிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை. எஃகு குண்டுகளின் அசைவுக்குத் தோதாய் முதுகுத் தண்டு வளைந்து கொடுத்தது. திணறலில் அடைபட்ட அரைமுச்சு பெரும் திரளாய் உருண்டு வெளிக்காற்றை துப்புரவாய் உள்ளுறிஞ்சி பெருமூச்சை உந்தித் தள்ளியது. காற்று வெளியேறும்போதே எஃகு குண்டுகள் மீண்டும் நெஞ்சுக்கூட்டை ஆக்கிரமித்தன.

“நீ போகக் கூடாது. என் பேச்சைக் கேள். இப்போது நீ போனால் இதுவரை நடந்த எதற்குமே அர்த்தமில்லாமல் போகும்.”

உச்சரிப்புப் பிசகாமல் சொற்கள் அழுத்தமாய்க் கேட்டது. இருந்தும் உடலில் அசைவில்லை. அப்போது நான் அங்கு இருக்கவில்லை. எங்குமே என் இருப்பு இல்லை.

கைப்பேசி மீண்டும் ஒலித்தது. மீண்டும் அம்மாவாக இருக்கலாம். மீண்டும் அதேபோல் தேம்பித் தேம்பி அழலாம். விசும்பலுக்கு நடுவில் ஒன்றிரண்டாய் அவர் திரட்டி வைத்திருந்த சொற்களை என்னிடம் உதிர்க்கலாம். கோர்வையற்று உடைந்து விழும் சொற்களை அல்ல, அதன் பொருளை என்னால் அப்படியே உள்வாங்கிக் கொள்ள முடிந்தது ஆச்சரியம்தான். இன்று அதுமட்டும் ஆச்சரியம் இல்லை. இன்னொன்றும்கூட இருந்தது. அவரால் சொற்களுக்குள் கலவையாய் பல உணர்வுகளைக் கூடுதலோ குறைச்சலோ இன்றி சமன் குலையாமல் வெளிக்காட்ட முடியும் என்பதையும் நான் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்டேன். இருபத்தெட்டு ஆண்டுகளில் இப்படி ஒன்றை நான் அவரிடம் பார்த்ததாக நினைவில் இல்லை. அம்மாவின் விரல் நுனி அசைவுக்குக்கூட அர்த்தம் சொல்ல முடியும் என்று நினைந்திருந்த முகம் அவமானத்தில் தலைக்குப்புற விழுந்தது. ஒரு முகம் விழுந்தால் சட்டென சிருஷ்டித்துக்கொள்ளும் புதிய முகங்கள் ஏதும் அங்ஙணம் முளைக்கவில்லை.

கைப்பேசி இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. எடுத்து காதில் வைத்தேன். தங்கையின் குரல் இன்னொரு விதமான விசும்பலுடன் கேட்டது.

“அக்கா… எங்கே இருக்கீங்க? என்னை வந்து ஏற்றினால் தாமதமாகும். நீங்க போங்க. அம்மா அங்கே தனியாக இருக்காங்க. எதிர் லோட்டு வீடு அண்ணனும் இல்லையாம். அந்தக் காட்டுக்குள்ள நுழைந்து ஆம்புலன்சு நம்ம வீட்டை கண்டுபிடிச்சி போறதுக்குள்ள விடிஞ்சிடும். சீக்கிரம் போய் பாருங்க.”

எனக்குப் பேச ஒன்றுமில்லை எனத்தோன்றியது. வாயெல்லாம் இறுகிப்போய் திறக்கவே சிரமம் என மூளை சொல்லிக்கொண்டே இருந்தது.

“இருக்கீங்களா? ஹலோ? அக்கா நான் பேசுறது கேட்குதா?” அவள் குரலில் பதற்றம் கூடியதும் மூச்சைப் பிடித்துக்கொண்டு “போறேன்,” என்றேன். அதற்குமேல் ஏதும் சொல்ல அவசியமிருக்கவில்லை.

கன்னத்தில் வெப்பக் கனலுடன் கண்ணீர் வழிந்தது. ஒரு துளி நீர் சிறுசிறு துளிகளாக உடைந்து பிரிந்து, கடைசியில் மூக்கின் வளைவில் வற்றி நின்றது. இமைகளைத் திறந்தேன். கன்னத்தில் வழியவிட்டது போக, இன்னும் சில நீர்ச் சிதறல்கள் இமைகள் திறப்பதைத் தாமதப்படுத்தியது. விழித்தபோது குட்டை இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. காட்சிகள் தெளிந்திருந்தன. பாதுகாப்புப் பட்டையை இணைப்பில் செருகினேன்.

“நான் போறேன்.”

கார் எஞ்சினின் சத்தம் அவளுக்குக் கேட்கும்படி செய்ய எண்ணெயை அழுத்தினேன். முன்பு ஒரு விபத்துக்குப் பின்னர் அதன் எஞ்சின் அதிரும் சத்தம் நான் போகுமிடமெல்லாம் ஏக பிரபலம். தங்கை கோபமாகத்தான் அழைப்பை முடக்கியிருப்பாள். எங்களுக்கு இடையில் இருக்கும் பத்து வயது வித்தியாசம் இதுபோல இன்னும் பல தருணங்களில் தலைகாட்டிவிட்டுப் போகும். எப்போதும் திட்டிவிடும் நான் இன்று அப்படியேதும் செய்யவில்லை. அல்லது நான் திட்டும் முன்பே அவள் அழைப்பைத் துண்டித்தாளா?

மனதில் மீண்டும் அந்தக்குரல் எழுந்தது. எஞ்சின் அதிரும் ஓசைக்கு மத்தியில் அதனால் மிகத்தெளிவாகத் தன் எண்ணத்தைக் கூற முடிந்தது. இந்நேரம் அக்கம் பக்கத்துக்காரர்கள் உதவிக்கு வந்திருப்பார்கள் எனக் கேலியாகச் சிரித்தது.

“நான் பேசுவது உன் காதில் விழுகிறதா? அவங்களுக்கெல்லாம் அப்பா குடிகாரன், அம்மாவை அடிப்பவன்னு மட்டும்தானே தெரியும்! வேறென்ன தெரியும்!”

“வாய மூடு. எனக்கு நேரமில்ல. இப்ப போறதுதான் சரி. இன்னொரு அழைப்பு வரதுகுள் நா போயாகனும். ஐயோ..!”

கத்தி முடித்த அடுத்த நொடி கன்னம், காது, மூக்கின் நுனியெல்லாம் சூடேறியது. நிமிர்ந்து, காரின் முன்பக்க கண்ணாடியைப் பார்த்தேன். தலையை மேலும் கீழும் அசைத்தபோது முகத்தை மூன்று வெவ்வேறு காட்சிகளாய் செவ்வக வடிவ கண்ணாடி உடைத்துக் காட்டியது. கோபத்தின் அடையாளத்தை அதில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. கூடுதலாக நெற்றியும் சிவந்திருந்தது. எதிர்பேச்சு இல்லை. வீட்டுக்குச் செல்லும் சாலை பெரிதாய் நெரிசல் இல்லாமல் பயணத்தை இலகுவாக்கி விட்டிருந்தது.

தங்கை பிறந்து நான்கு வயதுவரை நான் அவளைப் பார்த்ததில்லை. ஒரு அதிகாலையில் வீட்டுக்கு வர அம்மா சம்மதித்துவிட்டார் என்று அப்பத்தா உற்சாகமாகச் சொல்லவும்தான் அவளைப் பார்க்கும் ஆவல் தோன்றியது. எல்லாருமாகச் சுங்கைப்பட்டாணியில் இருக்கும் துப்பாய்க்கார தாத்தா வீட்டுக்குக் கிளம்பினோம். அம்மா தங்கையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும்போது அப்பா அடித்ததில் மண்டையுடைந்து மயங்கிவிழ அதோடு பிறந்தவீட்டுக்குப் போனவர் பிரசவித்தும் வரவில்லை. அம்மாவின் அப்பா கடும் கோபக்காரர். வேட்டைத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். அதனாலேயே ஊரில் அவருக்குத் துப்பாய்க்காரர் என்ற புனைப்பெயரும் இருந்தது. ஒவ்வொரு வேட்டையிலும் குறைந்தது இரண்டு பன்றியாவது சுட்டுவிடும் தாத்தா மனிதர்களையும் சுட்டுள்ளதாகப் பேச்சுகள் இருந்தன. அப்பா எப்போது வந்தாலும் சுடுவேன் என குலதெய்வத்தின் மீது சத்தியம் செய்திருந்தார். நான் வயதுக்கு வந்துவிட்டதாகச் செய்தி அனுப்பியபோதும் “என் பிணத்தை தாண்டி போ,” என அம்மாவிடம் சொல்லிவிட்டாராம். துப்பாய்க்கார தாத்தா பிணமாக நான்கு வருடங்கள் ஆனது. அம்மா எத்தனையோ முறை என்னைத் தன்னோடு வந்துவிடும்படி ஆளை அனுப்பி அழைத்துள்ளார். அப்பா அனுப்பியதில்லை. “அவளுக்கு பாக்கனுமுன்னா இங்க வரட்டும்,” எனக் கத்துவார். தாத்தாவின் இறப்புக்கும்கூட இங்கிருந்து ஒருவரும் போகவில்லை.

காரில் ஏறி அமர்ந்த அந்த நிமிடம் நான் கடைசி பிள்ளை இல்லை எனத் தோன்றியது. கடைசி பிள்ளை எனச் சொல்லிக்கொள்வதில் ஒரு சந்தோசம் இருக்கவே செய்தது. அதற்கான கவனிப்பு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அப்படிச் சொல்லும்போது குழந்தையாகிவிடுவதுபோல தோன்றும். வழியில் ஒரு கடையில் நிறுத்தச் சொல்லி அப்பத்தா இனிப்பு மிட்டாய்களை வாங்கினார். என்னிடம் ஒன்றை நீட்டிவிடுவாரோ என்ற அச்சம் உறைய ஆரம்பித்தது. பல் பூச்சாகும்; பூச்சாகினால் சிரிக்கும்போது நெல் மணிகள்போல் பளிச்சிடும் பற்கள் ஓட்டைவிழுந்துவிடும். அம்மா அதற்குமேல் என் உதட்டில் முத்தமிடாமல் போகலாம். நான்கு ஆண்டுகள் வழுவாமல் மேற்கொண்ட அந்தத் தவத்தைப் அப்பத்தாவின் ஓர் அதட்டல் குலைத்துவிடுவதற்கான சாத்தியங்களே அதிகமாக இருந்தது. அதிலிருந்து ஒரு எக்ஸ் மிட்டாயை அப்பா வாயில் போட்டுக்கொண்டார். எப்போதும்போல் அன்றும் அப்பா போதையில் இருந்தார். சிகரெட், தை சொங்குடன் எக்ஸ் மிட்டாயின் கெட்டியான வாடை காரில் நிரம்பத் தொடங்கியது. அம்முறை அது நான் எளிதில் நிராகரித்துவிடக் கூடிய தொலைவிலேயே இருந்தது.

வரவேற்பரை சுவரில் மாட்டியிருந்த தாத்தாவின் படத்திற்குக் கீழ் சிலைபோல் நிலைத்துவிட்ட அம்மா சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தார். மெல்ல நலம் விசாரித்த அப்பத்தா, அம்மாவைக் கல்நெஞ்சக்காரி என ஏசத் தொடங்கினார். நடக்கும் எதற்குமே சற்றும் தொடர்பில்லாதவர்போல் அப்பா வாசற்படியில் உட்கார்ந்து ஒன்றன்பின் ஒன்றாய் சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்தார். போதைக்கு மத்தியிலும் நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்து மிடுக்கான தோற்றத்தைத் தக்கவைத்திருந்தார். அம்மாவிடம் போய் பாப்பா எங்கே எனக் கேட்கத் தோன்றியது. கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லிவிட்டு என் இருப்பை கவனிக்காமல் இருந்துவிடுவாரோ என்ற பதற்றம் மௌனமாய் ஓர் ஓரத்தில் என்னை நிற்க வைத்தது. நான்கு வருடத்தில் அம்மா யாரோ போல் இருந்தார்.

அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருப்பாள் போல. வாயில் பால் புட்டி, கையில் கைலியுடன் நடந்து வந்தாள். அதுதான் என் தங்கை என்பதை “அங்கப்பாரு… அக்கா,” என்று அம்மா அறிமுகப் படுத்தி வைத்ததில் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கட்டுக்கட்டாய் தசை மடிப்புகளுடன் தங்கை கொளுகொளுவென இருந்தாள். நடந்து வரும்போது கால் தொடையின் தசைகள் ஒன்றுடன் ஒன்று உரசி தடுமாறினாள். தூக்கிவிடும் ஆவலில் அருகில் சென்றேன்; தொட்டுப் பார்க்க மட்டுமே முடிந்தது. தூக்க அனுமதிக்காமல் உடலை நெழித்து அழத் தொடங்கினாள். கன்னத்தில் தடவினேன்; பஞ்சுபோல் இருந்தாள். என்னைப்போல் கம்பி முடிகள் இல்லை; சுருள் சுருளாய் தலையிலிருந்து மேல்நோக்கி வளர்ந்து கழுத்தைத் தாராளமாகக் காட்டிக் கொண்டிருந்தது அவள் முடி. என்னைவிட சிறிய விரல்கள்; குட்டியான கை. ஒரு மிட்டாயை அவளது உள்ளங்கையில் நுழைத்தபோது கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். என்ன பேசுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அந்த மொழியிலிருந்து கிளைத்துவிட்டதுபோல் அவளது வாயிலிருந்து வடிந்து கொண்டிருந்த எச்சிலைப் பார்த்துகொண்டிருக்க வைத்தது. முதன் முதலாக அருவருப்பே உணரவில்லை; என் கைகளால் துடைத்துவிட்டேன். உடனே வீட்டுக்குக் கூட்டிச் செல்லும் ஆவல் இருந்தாலும் அதைவிட அதிகமாய் அவளது தோல்நிறம் எனக்குள் பதற்றத்தைக் கிளப்பியது. என்னைப்போலில்லாமல் தங்கை கருப்பாய் இருந்தாள். நகக் கீறல்களை, பல் பதிப்பதாலும் கிள்ளுவதாலும் உண்டாகும் வடுக்களை அந்தத் தோல் நிறம் காட்டிக் கொடுக்காது. பதற்றத்தை அடிபடும் மூச்சு உறுதிப்படுத்தியது.

சட்டென அவளை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்ட அப்பா, முகத்தை அவளருகே கொண்டு சென்றார். அப்பாவின் வாய் நாற்றத்தில் பாப்பா வாந்தியெடுத்துவிடும் எனப் பதறினேன். அம்மா இல்லாத நான்கு ஆண்டுகளில் பல தருணங்கள் நான் அப்படி வாந்தியெடுத்திருந்தேன்.

“இதப்பாருடி கதைய. அப்பங்காறன் தூக்க வறான்னு அம்மணக்குண்டியோட இளிக்கிறா இந்தப்புள்ள.”

அப்பத்தா சொற்களை நம்ப முடியாமல் தங்கையின் முகபாவனையைப் பார்க்க முயன்றேன். என்ன ஆச்சரியம். தங்கை எச்சில் வழிய சிரித்துக் கொண்டிருந்தாள். அப்பா வாயில் குதப்பிக்கொண்டிருந்த எக்ஸ் மிட்டாயை எடுத்து அவள் உதட்டின்மேல் வைக்க சப்புக்கொட்டி உறிஞ்ச தொடங்கினாள். எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அம்மா அதை ரகசியமாய் ரசிப்பது தெரிந்தது. அம்மா காரில் பொருட்களை எடுத்து வைக்கும்போது முதுகில் இலேசாய் தடவிக் கொடுத்தது போக, காரில் போய்க்கொண்டிருக்கும்போது பட்டும் படாமலும் ஓர் அணைப்பு. அவர் மார்புக்குள் என் முகம் புதைத்து, கதகதப்பைப் படரவிட்டு, இரு கைகளால் என் முகத்தை அள்ளியெடுத்து உதட்டில் முத்தமிடுவதாக மெல்லிய கற்பனை ஒன்று வந்தது. அதையும் அப்பாவின் குரல் மிரட்டலாய்க் கலைத்தது.

“என் ரத்தம்,” என சொல்லிக்கொண்டே தங்கையின் முகம் முழுக்க முத்தமிட்டார். எக்ஸ் மிட்டாயில் கலந்த எச்சில் அவளது வாயினுள் நுழையாமல் இருந்த அளவில் என் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. தங்கையின் முகத்தில் கொஞ்சம்கூட சுழிப்பே இல்லை. அப்பாவின் வாய் நாற்றமும் தலைக்கு இணையாய் முகத்தின் முக்கால் பகுதியை ஆக்கிரமித்திருந்த தாடி மீசையும் அவளுக்குப் பிடித்திருந்ததுபோல. எங்களுக்கு இடையேயான வித்தியாசங்களின் பட்டியல் உருவாகி, நீளத் தொடங்கியது அன்றுதான்.

அப்பாவுடன் ஒன்றாகக் குளிக்க, அவர் தூக்கிக் கொள்ள ஒய்யாரமாய் அவருடன் ஊர் சுற்ற, மேசைமேல் பீர் பாட்டில்களுக்கு மத்தியில் அமர்ந்து வன் தான் மீ சாப்பிட, அவர் சாப்பிட்டுக் கொடுக்கும் எச்சில் மிச்சங்களையும் மிச்ச எச்சங்களையும் மிச்சம் வைக்காமல் விழுங்க, அவர் மென்று கொடுப்பதை வாங்கித் தின்ன, தூக்கத்தில் அவரது தொப்பை வயிற்றில் குறட்டை சத்தத்தையெல்லாம் மீறி ஆழ்ந்து தூங்க அவளால் முடிந்தது. முன்பு அந்த உரிமைகள் என்னிடம் கட்டாயமாய் திணிக்கப்பட்டிருந்தன. முன்பென்றால் மிகவும் முன்பு.

அம்மா இல்லாத தருணங்களில் திடுக்கிடும் பதற்றத்துடன் தங்கையை மீட்கvg 02 முயன்றதில் அப்பாவிடம் பல அறைகளை வாங்கியதுண்டு. வீறிட்டு அழுதபடி கை நகங்களால் கண்ட இடங்களில் கீறுவதும் கடிக்க வருவதுமாகத் தங்கை என்னிடம் காட்டிய எதிர்ப்பும் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போதும் அவளது கெஞ்சலான குரலுக்குப் பின்னால் நரநரவென பல்லைக் கடித்துக்கொண்டு தாக்க துடிக்கும் அதே கோபத்தை என்னால் உணர முடிந்தது. கோபத்தை விழுங்கிக் கொண்டு அவள் என்னிடம் கெஞ்சுவதன் காரணம் புரியாமல் இல்லை. அண்ணன், தங்கை இருவரைக் காட்டிலும் கூப்பிட்ட அவசரத்துக்குச் செல்லும் தூரத்தில் காரில் செல்ல முடிவது என்னால் மட்டும்தான்.

பின் கழுத்து வலித்தது. கை வைத்து அழுத்தும்போது புடைத்துக் கொண்டிருந்த நரம்பு தட்டுப்பட்டது. இலேசாய் தடவிக் கொடுத்துக் கொண்டேன். வலது பக்கத்துக் கண் சோர்ந்தது. கழுத்திலிருந்து தலை நோக்கி வளர்ந்து சென்று கண்ணிருக்கும் திசையில் வலியைப் படரவிட்டிருக்கும் போல; உள்ளிருக்கும் நரம்புகள் வெடிப்பதுபோல் இருந்தது. கழுத்தை எல்லாப் பக்கமும் தளர்த்தி சாய்த்து சுலுக்கு முறிப்பதுபோல் செய்து பார்த்தேன். எதுவும் இதம் தருவதாக இல்லை. இன்னும் இரண்டு சாலை விளக்குகளைக் கடந்தால் வீடு வந்துவிடும். வீட்டுக்குப் போய் என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாய் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

வீட்டை அடைந்தபோது பாதி இருட்ட ஆரம்பித்தது. காட்டுப்பூச்சிகளின் தினுசு தினுசான ரீங்காரம் தாளகதியற்றுப் பேரிரைச்சலாய் ஒலித்தது. பாட்டி அதை ஆதியோசை என்பாள். உலகம் தோன்றியதிலிருந்து அந்த ஒரு ஓசைதான் இன்றும் பூமியில் நிலைத்திருப்பதாகச் சொல்லியிருந்தாள். அம்மா முற்றத்தில் நின்று கொண்டிருந்தார். கலவரமான முகத்துடன் அதே விசும்பலையும் கண்ணீரையும் தக்கவைத்திருந்தார். வேகமாய் காரின் சன்னலருகே வந்து “காடிய நிறுத்தாத. உள்ள வா,” என்றார்.

என்னிடம் எந்தப் பதற்றமும் இல்லை. ஆனால் அரைமூச்சு மட்டும்தான் எனக்கு சாத்தியப்பட்டிருந்தது. வாசற்படிவரை பெரிதாய் சலனமற்று வந்த என்னால் வாசற்படியைத் தாண்டி அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தளர்ந்தேன்.

“என்னம்மா இது?”

“பாரு மதி. எப்படி இருக்காரு பாரு. இது நாளாவது நாள். இன்னைக்கும் டையலிசிஸ் போகல. இப்படி இருந்தா நான் எப்படிதான் கூட்டிட்டு போறது. யாரயும் ஒதவிக்குக் கூப்புடவே முடியல. போக மாட்டேனு அடம்பிடிச்சி, ஒதவிக்கு வர்றவங்களையும் கண்டமானமா பேசி அடிக்கறாரு. நான் என்னாதான் செய்வேன். ஒழுங்கா ஒரு எடமா படுக்கறதும் இல்ல. படுக்க வச்சா தம்கட்டி ஏஞ்சிருக்க பார்க்கிறாரு. தூக்கி நிப்பாட்டினா தெம்பில்லாம தொப்புனு உட்கார்ந்துடறாரு. ஒடம்பு இருக்கிற நெலயில மொதல்ல ஏஞ்சி நிக்க பார்த்தப்ப பலமில்லாமல் உழுந்து, மண்டவேற வீங்கி கெடக்கு. தூக்குறதும் கீழ உழாம தாங்கிப் புடிக்கறதுமா காலையிலிருந்து எனக்கு சோர்ந்து போச்சு மதி. என்னால முடியல. பேசாம ஆசுபித்திரியிலேயே சேர்த்திடலாம்,” என்றார்.

“அவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுங்க. உங்கள் ஐசியையும் எடுத்துவாங்க.”

சக்கர நாற்காலியை இழுத்து வந்து நிறுத்தினேன். நழுவி ஓடாதபடி சக்கரத்தில் பொறுத்தியிருந்த விசையைக் கீழிறக்கினேன். அருகில் சென்று, “எழுந்திருங்க!” என்றேன்.

முதுகு பக்கம் நின்று, குனிந்து, அவரது அக்குள் வழியாகக் கைவிட்டு, நெஞ்சுப்பகுதியில் எனது இரு கைகளையும் இறுக்கிப் பிடித்துத் தூக்க முயற்சித்தேன்.

“ஐயோ…! வுடுடி என்னைய. ஐயோ! என்னைய கொல்லப் பார்க்குறாளே! உங்கொம்மாள! வுடுடி!”

நடு உடலைப் பிடித்தவுடன் திமிறி நெழியும் பாம்புபோல அப்பா உடலை முறுக்கினார். என்னை அடிப்பதற்காகக் கைகள் ஆவேசமாய் பின்நோக்கி அலைந்தன. பிடி கிடைக்கவில்லை. உடலை விறைத்து முறுக்கிப் பிடியைத் தளர்த்தப் போராடினார். நான் விடுவதாக இல்லை.

தம்பிடித்துத் தூக்கினேன்.

“உங்கொம்மாள! வுடுடி! என்னைய கொண்ணுட்டு அவன கூட்டிட்டு வந்து நடுவீட்டுல வைக்கப்போறியா! தேவுடியா!”

என் உடம்பெல்லாம் சூடேறத் தொடங்கியது.

“இப்போ வாய மூடப்போறிங்களா இல்லையா!”

“அவரே சுயபுத்தியில் இல்லாம இருக்காரு. ஏன் கோபப்படுற.”

இந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் அப்பா சுயபுத்தியோடு இருந்த சில தினங்களும் உண்டு. அதில் ஏதேனும் ஒரு கணப்பொழுதுகூட அம்மா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்பதை நினைக்கும்போது எரிச்சல் வந்தது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் நடை போய்வந்தால் அன்றுதொடங்கி அடுத்த நடை போகும்வரை பகல் இரவு பேதமில்லாமல் தெருவே பார்க்க அப்பாவின் வாயிலிருந்து வரும் நாற்றமெடுத்த சொற்கள் தன்னை வதைத்ததற்கான அறிகுறியைக்கூட அம்மா முகத்தில் காட்டியதில்லை. எவ்வளவு குடித்தாலும், எந்த நேரம் வீடு வந்தாலும், என்ன கதியில் இருந்தாலும் குளிப்பாட்டி, உடை போட்டு, உணவை ஊட்டிவிட தவறியதில்லை.

“அவன் வந்தானா?… ராத்திரி வந்தானா? பகலில் வந்தானா? என்ன, எங்கு, எப்படி நடந்தது?” எனக் குடைந்தெடுக்கும்போது பகலில் எங்கள் காதில் எதுவும் விழுந்துவிடக்கூடாதென அப்பாவின் வாயடைக்க முயன்று அடியுதை வாங்கிக்கொள்ளும் அம்மா இரவுகளில் அதையும் செய்யாமல் அடர்ந்த மெளனத்திற்குள் தன்னை இரையாக்கிக் கடந்துள்ளார். அப்படியான ஒவ்வொரு இரவுகளிலும் சில நூறு கண்களோடும் காதுகளோடும் நான் சாட்சியாகிக் கொண்டிருந்ததைத் தெரிந்துகொள்ள அம்மா முயன்றதில்லை. அப்போதெல்லாம் வீட்டில் ஓடாமல் ஸ்தம்பித்திருக்கும் கடிகாரத்தின் முற்களை மனதால் அசைத்து அசைத்து நகர்த்தி, அம்மா அறை கதவைத் திறக்கும் சத்தம் கேட்கும்வரை காத்திருப்பேன். கட்டிலற்ற அந்த அறையின் தரை விளக்கெண்ணையால் பிசுபிசுக்கும்போது மறுநாள் முழுவதும் கால்களை கழுவிக்கொண்டே இருப்பேன்.

அன்றும் பாதங்களைத் தடவிப் பார்க்கச் சொல்லி சட்டென மனம் சொன்னாலும் மூளை அதற்கு இடம்கொடுக்காமல் விழிப்பாகத்தான் இருந்தது. ஓரளவு தூக்கி நிறுத்திவிட்டேன். இடுப்பிலிருந்து கைலி உருவிக்கொண்டு கீழே விழுந்தது. கைலியுடன் சேர்ந்து அப்பாவும் சரிந்து விழுந்தார். “ஐயோ! அம்மா!”வென அவரது அலறல் ஈனமாய்க் கேட்டது.

அப்பாவா இது. என்னால் நம்ப முடியவில்லை. பதினாறு சக்கர லாரியில் ஒற்றை ஆளாக ஏறி இறங்கி தரப்பா இழுத்துக் கட்டிய அப்பாவின் உடலா இது. திகைப்பாய் இருந்தது. நடுத்தர வயது கோலேட்டுப் பையன்கள் மடித்து வைத்திருக்கும் தரப்பாவை விரிக்கவே மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்குவார்கள். ஆனால் அப்பாவுக்கோ நிறைய வியர்ப்பதோடு சரி. கோலேட்டுகளைத் திட்டிக் கொண்டே சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டி, காலில் சப்பாத்து அணியாமல் லாரி கம்பிகளில் தாவி ஏறி தரப்பா விரிக்கும்போது அப்பா தார்சன் போல் தெரிவார். தரப்பா லாரியின் இரு பக்கமும் சம அளவில் இருப்பதைப் பார்த்து சொல்லும் வேலைகள் அண்ணனுக்கும் எனக்கும் வழங்கப்பட்டிருக்கும். தரப்பாவின் ஓரங்களில் துளையிடப்பட்டிருக்கும் ஓட்டைகளில் நாற்கயிறுகளைத் திணித்துக் கோர்த்தபடியிருக்க, அப்பாவின் இன்னொரு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். லாரியின் இரு பக்கமும் கயிற்றின் முனைகளைப் பிடித்துக் கொண்டு நிற்போம். என் பக்க கயிறை லாரிக் கம்பிகளில் அப்பா இழுத்துக் கட்டும்போது மறுபக்க கயிறை இழுத்துப் பிடிக்கும் அண்ணன் பல சமயம் அந்தரத்தில் தொங்குவான். கயிறைச் சுழற்றிக் கம்பியில் இறுக்கும்போது அவரது மேற்கையின் உள்தசை புடைத்து விரியும். எனது இரு கைகளையும் இணைத்து சாண் அளந்தாலும் இருமுனை தொடாத பகுதி எஞ்சி நிற்கும். பக்கத்து வீட்டில் தேவாரம் சொல்லிக் கொடுக்கும் மாமா, அதற்கடுத்த வீட்டில் காற்பந்து விளையாடும் சித்தப்பா, கோயில், கடைத்தெரு எங்கிலும் எவரிடமும் இல்லாத மிடுக்கான தேகம் அப்பாவினுடையது. பத்துக் கிலோ அரிசி மூட்டையை அசட்டையாய் தோள்மேல் போட்டுக்கொண்டு எதிரே ஓடிவரும் என்னை இன்னொரு கையால் அள்ளி மறுதோளில் வைத்துக் கொண்டு நடந்துவருவார்.

“அது நானில்ல. மதி!  உங்கள ஆசுபித்திரிக்கு அழைத்து போக வந்திருக்கு. எஞ்சிரிங்க.” அம்மா கைலியை வாரி எடுத்துக்கட்டினார்.

“மதியா… யாரு மதி… அடியே! உங் கை, ஒடம்பு வாட எனக்கு தெரியாதா? பின்னால நின்னு தூக்கினா என்னால கண்டுபிடிக்க முடியாதா…?!”

“அங்கப்பாருங்க… மதி நிக்குது தெரியலயா!”

திரும்பிப் பார்த்தார். இரண்டடி தூரத்தில் நிற்கும் என்னை அவரால் அடையாளம் காண முடியவில்லை. ஆறுமாத கால டையலிசிஸ் அவரது சுயநினைவுடன் கண் பார்வையையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொண்டிருந்தது.

“என்னை யாரும் தூக்க வேணாம். நானே எழுந்திருப்பேன். போடி… முண்ட!”

“எங்காவது முட்டி மூஞ்சி முகரை ஒடஞ்சி, எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை வெக்கணும். அதானே! சொன்னா கேளுங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தூக்கறோம். பேசாம வந்து காடியில் உட்காருங்க. உங்களுக்கு உடம்பு முடியல. சொல்ற பேச்சை கேளுங்க,” அம்மா கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“ஐயோ! ஐயோ!” என்று தலையில் அடித்துக் கொண்டார் அப்பா.

“இவ என்னை கொள்ள பாக்குறா. என்னை யாராவது காப்பாத்துங்களேன்!” என அப்பா அடித்தொண்டையிலிருந்து அலறினார். தலையை சிமிந்து தரையில் இடித்து இடித்துக் குழந்தையைப் போல அழத் தொடங்கினார். கைலி இடுப்பைவிட்டு நீங்கி முழங்கால் வரை வர, விருட்டென கால்களை உதறி உடலில் ஒட்டாத தூரத்திற்கு அதை உதைத்துத் தள்ளினார். தலைக்குக் கீழ் கைகளால் முட்டுக் கொடுத்து அடிபடாமல் பாதுகாத்துக் கொண்டிருந்த அம்மா, கைலி விலகியதைப் பார்த்ததும் ஒருகணம் என்னை நிமிர்ந்து பார்த்துப் பதறிப்போய் கைலியை எடுத்து மறுபடியும் மூடத் தொடங்கினார். பார்வை விலகாமல் அனைத்தையும் பார்த்தபடி இருந்தேன். மண்டியிட்டு அமர்ந்து, அம்மாவின் கைகளிலிருந்து கைலியை வாங்கி அப்பாவுக்குக் கட்டிவிட்டேன். குளிர்ந்த நீரை எடுத்துவரச் சொல்லி, அவரது தலையை உயர்த்தி முகத்தைக் கழுவி விட்டேன். டையலிஸிசுக்காகக் கழுத்தில் இடப்பட்டிருந்த இரு துளைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பழையத் துணியைக் கழுத்தைச் சுற்றி ஓரளவு இறுக்கமாகக் கட்டிவிட்டேன். முன்பக்கம் பொத்தான் இருக்கும் சட்டையொன்றை அம்மா மாட்டிவிட்டார். அப்பாவின் கண்களைப் பார்த்துப் பேசினேன்.

“நான் மதி, தெரியுதா.. ஒங்களுக்கு காய்ச்சல் அடிக்கிது. வாங்க கிளினிக் போலாம். டாக்டர் கொடுக்கும் மருந்து சாப்பிட்டா தலை வலிக்காது. உங்க கழுத்தில் ரத்தம் வருது. அதையும் துடைத்து மருந்து போட்டுக்கலாம்.”

அப்பாவின் புருவம் உயர்ந்து, கண்கள் விரிந்தன. அவரால் என்னை அடையாளங்காண முடியவில்லை.

“வாங்க போகலாம்,” இம்முறையும் அதட்டலான தொனியிலேயே பேசினேன்.

அவரிடம் பதில் ஏதுமில்லை.

மிகச் சரியாய் இரண்டு மாதத்திற்கு முன்பு அப்பா கழிவறையில் மயங்கி விழுந்துவிட்டதாக செய்தி வந்தது. மூளையில் பக்கவாதம் என்றுதான் முதலில் சொல்லப்பட்டது. பிறகு, கல்லீரல் செயலிழந்து விட்டதாகவும் அதற்கடுத்து இருபக்க சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாகவும் வாரம் மூன்று முறை டையலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் ஒன்றன் பின் ஒன்றாய் தகவல்கள் வரவே அப்பா தனது இறுதி நாட்களை நெருங்கிவிட்டார் என உறவினர்கள் மருத்துவமனையில் வந்து பார்ப்பது வாடிக்கையானது. ஒரு சிலர் மட்டும் நாட்டு மருந்துகளையும் வீட்டு வைத்தியங்களையும் சொல்லி அம்மாவை செய்து பார்க்கச் சொன்னார்கள். எப்போதும் போதையிலேயே இருக்கும் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மதுவிலிருந்து விலகிவைக்கப் பட்டும் போதை குறையாமல் இருந்தார். மது அருந்தாவிட்டாலும் போதையிலேயே இருக்கும் அளவுக்கு ரத்தத்தைவிட தை சொங் உடலில் அதிகம் ஓடுகிறதோவென வந்து போகும் உறவினர்கள் கிண்டலடிக்கும்போது வெட்கத்தையும் அவமானத்தையும் மறைக்க சக்கையாய் சிரிப்பொன்று என் முகத்தில் வந்து மறையும். அம்மா அப்போதும் அப்பாவுக்கு பழம் வெட்டி கொடுப்பது, அக்கம் பக்கத்துக் கட்டில் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளை இரவல் பெற்று வந்து உறவினர்களை உட்கார வைப்பது என மும்முரமாக இருப்பார்.

தாதிமார்களும் மருத்துவர்களும் அப்பாவிடம் பேசும்போதும் சிகிச்சையளிக்கும்போதும் சிடுசிடுவென இருப்பதுபோல் தோன்றும். தினமும் இரு வேளை வந்து பார்க்கும் மருத்துவரும், எப்போதாவது பார்வையிட வரும் பெரிய மருத்துவரும்கூட “உங்க அப்பா மது அருந்துபவர்தானே,” என்று கேட்கும் தோரணையில் ஒருவித உதாசினம் தெரியும். பயிற்சிக்காக வரும் இளம் மருத்துவர்கள் வெளிப்படையாகவே முகத்தில் அருவருப்பைக் காட்டிவிடுவதுண்டு. அப்படியான தருணங்களிலிருந்து எப்படியாவது தப்பிக்க நினைத்தாலும் அம்மா தனியாக நின்று பதில் சொல்லி அல்லல் படுவதை நினைக்கவே பாவமாக இருக்கும். எனக்குத்தான் அப்பாவின் நோய்மை குறித்த முழு விபரமும் தெரியும் எனக் கூறி உடன் பிறந்த இருவரும் கழண்டு போவதும் மிகச் சாதாரணமாய் நிகழ்வது அப்போதுதான். அந்தக் கணங்களிலெல்லாம் என்னை அங்கிருந்து விடுதலை செய்துகொண்டு உடலையும் குரலையும் அவர்களது தேவைக்காக அங்கேயே விட்டு வைப்பேன். அப்படி செய்வதில் எனக்கு எந்தவொரு சிரமமும் தடையும் இருந்ததில்லை.

டையலிசிஸை அடுத்து வலி மருந்து, நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டன. நோயை குணப்படுத்தும் முறையாக அல்லாமல் உடலில் உயிரைத் தக்க வைக்கும் முயற்சிகள் மட்டும்தான் நடந்துகொண்டிருந்தன. அப்படியும் ஒருமுறை அப்பாவின் உடல் நாளுக்கு நாள் மஞ்சள் ஏறிக்கொண்டே இருந்ததைப் பார்த்து டையலிசிஸை நிறுத்திவிடலாம் என்று பெரிய மருத்துவர் சொன்னபோது தங்கை அழுது, கெஞ்சி டையலிசிஸைத் தொடரும்படி வரம் வாங்கி வந்தாள். அன்றிலிருந்துதான் அம்மாவும் மருத்துவமனையில் திருட்டுத்தனமாக ஆட்டுப்பால் வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். அப்பாவுக்கு உடை மாற்றுவதுபோல் பாவனை செய்து கட்டிலைச் சுற்றி திரைச்சீலையை இழுத்து மறைத்துக் கொண்டார். கண்களில் ஆட்டுப்பாலைப் பீய்த்தடிப்பதோடு வழுக்கட்டாயமாக அப்பாவின் வாயைப் பிளந்து, ஏற்கனவே அரைத்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்திருந்த கீழாநெல்லியைத் தொண்டைவரை கொண்டு வைத்துப் பாலை ஊற்றி நெஞ்சைத் தடவியவாறே காதோரம்போய் “பாலைக் குடிங்க, நல்லாயிரும்,” என்று கெஞ்சிகொண்டே இருந்தார்.

அரை மணிநேரத்தில் ஆட்டுப்பால் வேலை செய்தது. வாந்தி பேதி வாடையைக் கிளப்பியது. தாதிமார்கள் பார்க்காததுபோல் நழுவிவிட அம்மா மட்டும்தான் ஓயாமல் சுழன்றார். முதல்முறையே வெற்றிகரமாகத் திருட்டு வைத்தியம் செய்துவிட்டதால் அதற்கடுத்து அடிக்கடி செய்ய அம்மாவுக்கும் தைரியம் வந்துவிட்டது. எல்லா நேரங்களிலும் என் அருகாமையைத் தேடும் அம்மா, அப்பா கழிந்துவிடும்போதும் உடை கலைந்து குளிப்பாட்டும்போதும் என்னை வெளியே நிற்கச் சொல்லிவிடுவார். காற்றில் விலகும் திரைச்சிலை, முழுமையாக அடைக்கப்படாத கதவிடுக்குகளில் தெரியும் சிறுசிறு காட்சிகளைக் கொண்டு மனம் ஓட்டிப்பார்க்கும் முழுநீள படத்தை ஒருமுறைகூட என்னால் தவிர்க்க முடிந்ததில்லை.

மூன்று முறை டையலிசிஸ் செய்த பிறகு ஒரே வாரத்தில் அப்பாவின் நிறம் தானாகவே கருக்க ஆரம்பித்தது. முன்பிருந்த மினுமினுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. அவருக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்வதே பெரும்பாடாக ஆனது. மீறி உடல் சூடேரும்போது கைத்தாங்கலாகத் தூக்கிச் சென்று பொது குளியலறையில் வைத்துத் தலையோடு நீரூற்றிக் குளிப்பாட்டி ஈரசட்டையோடு படுக்க வைத்துக் குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியிலும் தலையிலும் வைத்து, மாற்றி அம்மா இரவு பகலாய் போராடினார்; பல இரவுகள் எனக்கும்கூட பகல்போலானது. ஒரு மாத போராட்டத்துக்குப் பின் அம்மா தன் தாலியைக் காப்பாற்றிக் கொண்டார் என்று சொல்வது பொருந்தும்.

வீட்டு வரவேற்பறையிலிருந்து அப்பாவை தூக்கியும் இழுத்தும் வந்து வாசல்முன் நிற்கும் காரில் உட்கார வைத்து பாதுகாப்புப் பட்டையைப் பொறுத்தி நிமிர்ந்தபோது முதுகுத்தண்டில் எல்-3, எல்-4 நிமிர மறுத்து மரண வலியுடன் உயிரை பிழிய செய்தது. முதுகைப் பிடித்தவாறே காரில் அமர்ந்து அம்மா வர காத்திருந்தேன். அப்பா கார் கதவின் கண்ணாடியில் சாய்ந்துகொண்டார். அம்மா வீட்டு கதவடைத்து வருவதற்குள் வீட்டில் செய்த அதே அமர்க்களங்களை அப்பா காரில் செய்ய தொடங்கியிருந்தார். எதையும் தடுக்க விருப்பமில்லாமல் அனைத்தையும் கைப்பேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அம்மா பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அப்பாவின் இரு கைகளையும் பிடித்துக் கொள்ள, காரை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றேன். அவசர பிரிவில் சேர்த்துவிட்டு, மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி காரில் வந்து படுத்ததுதான் தாமதம் கண்கள் தானாக மூடிக்கொண்டன.

vg 03கண்களைத் திறந்து பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. அதே ஆதியோசை, அதே வாடை. விருட்டென உடல் விழித்துக்கொள்ள, முதலில் குட்டையை ஊடுருவி வந்த வெளிச்சத்தை அன்னாந்து தேட ஆரம்பித்தேன். தலைக்கு மேல் தொலைதூர புள்ளியைப் பிளந்துகொண்டு வட்ட விளக்காய் உடல்கூசும் அடர்ந்த ஒளிக்கற்றைக் கண்களைக் கூசி செயற்கை தோலாக உடல்மீது ஒட்டிக்கொண்டது. அதைக் கடந்து, திசைமுழுக்க கிலியூட்டும் கும்மிருட்டு. இமைகள் மூடி திறக்கும்போது ஆரஞ்சு, ரத்தச் சிவப்பில் கீற்றெழுந்து இருட்டை ரொப்பி பின் ஒளி வந்தது. கண்ணீர் தேங்கி இமையை வீங்க வைத்து வலிகொடுத்தது. தடுமாறி எழுந்து நின்றபோது தரையில் படிந்திருந்த என் நிழல் என்னிடமிருந்து கழன்றுகொண்டு ஊர்ந்துப்போய் இருட்டில் கலந்தது. ஊர்ந்து சென்ற நிழலில் அதுவரையிலும் கண்டிராத அளவு மிகத் துள்ளியமான வடிவ நேர்த்தி.

என்ன நடக்கிறதென புரியாமல் கால்களைச் சுற்றிப் பார்த்தேன். இதற்குமுன் நிழல் இருந்ததற்கான சுவடுகூட இல்லாமலிருந்தது. இப்போது நெஞ்சுக்கூடு படபடக்கும் அதிர்வை விரல்நுனிகளில் உணர முடிந்தது. கொஞ்சம் நிமிர்ந்து உடலைப் பார்த்தேன். ஊடுருவிய ஒளிப்பிழம்பு சட்டைகளைக் கிழித்து என்னுள் நிர்வாணத்தைப் போர்த்தியிருந்தது. மயக்கம் வருவதுபோல் தலை சுற்றியது. மிக அண்மையில், தரையை அழுத்திப் பிளக்கும் காலடி சத்தம். என் கால்கள் நடுக்கத்தில் பின்னிக்கொள்ள, சரிந்து விழுந்தேன். எழுந்து ஓட எத்தனித்தபோது புஜங்கள் பெருத்த கையொன்று காலைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. எட்டி உதைத்துப் பிடிதளர்த்தி உள்வாங்கியபோது இடி முழக்கத்துடன் மழை கொட்டியது. பால்நிற துளிகள் பட்டு உடல் எரிந்தது. ஈரம் பட்ட இடங்களை அழுத்தித் தேய்த்து, உடலை உதறிக்கொண்டே முடியை விலக்கிப் பார்த்தேன். உடல் முழுவதும் கூரிய நகங்களுடன் சில நூறு கைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. அறற்றியபடியே கைகளைப் பீய்த்து எரிய எத்தனித்தேன். அவை என் இழுப்புக்கு வருவதாய் இல்லை; என் தோலில் நுழைந்து ஒட்டிக்கொண்டு அயாசயமாய் உடல் முழுக்க அலைந்தன. மிக அண்மைய தூரத்திலிருந்து அந்தக் குரல்.

“மதீ.”

திடுக்கிட்டு எழுந்தேன். அண்ணனுடன் அம்மா நின்று கொண்டிருந்தார். கார் இருக்கையை சாய்த்துப் படுத்திருந்ததால் முதுகு வலி போய் சற்றே இதமாய் இருந்தது.

“கார் ஏர்கோனை தட்டிவிட்டு படுக்க வேண்டியதுதானே. எப்படி வேர்த்திருக்கு பாரு,” அம்மாவின் குரலில் கொஞ்சம் பிடிப்பு தெரிந்தது. முன்பிருந்த தழுதழுத்த குரல் இல்லாதிருந்ததை வைத்து அப்பாவின் நிலையை அனுமானிக்க முடிந்தது.

“நான் அம்மாவை வீட்டுக்குக் அழைத்து போறேன். அவங்க ஓய்வெடுக்கட்டும். காலையில் பார்க்கலாம். நீ இன்னைக்கு அப்பாவை பார்த்துக்க. அப்படியே விட்டுவிட முடியாது. புரியுதா?” முகம் பார்த்து பேச விருப்பமற்றவனாய் அண்ணனின் கண்கள் பூமியில் புதைந்திருந்தன.  ஒருகணம் அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டேன். அப்பா பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கண்கள் இன்னமும் உயிர்ப்போடு இருந்தன. அப்பாவுக்கு இணையாய் மெலிந்துவிட்ட அவரது உடலுக்கு இன்று போல் இன்னும் பல இரவுகள் ஓய்வு வேண்டும் எனத் தோன்றியது.

“என்னென்னமோ செஞ்சாரு. இப்பவும் என்னை தூத்திக்கிட்டுதான் இருக்காரு,” அம்மாவிடமிருந்து சொற்கள் தீர்க்கமாய் வந்து விழுந்தன; தொடர்ந்து பேசினார்.

“விடு மதி. கடைசி காலத்துல சீக்கு பிடிச்சி போவனுமா… நல்லவிதமாதான் போய் சேரட்டுமே,” அம்மா நிதானத்தின் அடுத்தடுத்த சுருள்களை விரித்து விஸ்தாரமாக்கிக் கொண்டிருந்தார். மேற்கொண்டு எதையும் கேட்க மனமின்றி அவசர பிரிவை நோக்கி நடந்தேன்.

அப்பா வார்ட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதை மருத்துவர் தெரிவித்திருந்தார். நாளைதான் டையலிசிஸ் செய்ய முடியும் என்றும் இன்றிரவு காய்ச்சல் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆண்கள் பிரிவு வார்ட்டு சவக்கிடங்குக்குச் செல்லும் வழியில் மூன்றாவது வளைவில் இருந்தது. நான்கு முறை டையலிசிஸ் செய்யாமல் விட்டதால் ரத்தத்தில் அழுக்கு அதிகமாகி அப்பா ஆறு மாதத்திற்கு முன்பிருந்த நோய்மை நிலைக்குப் போய்விட்டார் என்பதை மருத்துவர்கள் விளக்காமலேயே புரிந்துகொள்ள முடிந்தது. சுயநினைவு அரைகுறையாகி புத்தி பேதலித்துள்ளது; வலியை மட்டும் உணர முடியும். ஆனால், மருந்துகள் ஏதும் தரப்படாது. ஒருவேளை காய்ச்சல் அதிகமானாலோ சுயநினைவு முழுவதும் அற்றுப் போனாலோ காலையில் பார்க்கவரும் அண்ணனும் அம்மாவும் மூன்றாவது வளைவில் நுழையாமல் நேராகச் செல்ல வாய்ப்புண்டு.

நெஞ்சின் அடிப்பாகத்தில் மெல்ல வலி எடுத்தது. அப்படியானால் அந்தக் குரல் வெளிப்பட முயல்கிறது என்று பொருள். நான் நிதானமாக இருந்ததால் அதைப் பேச அனுமதித்தேன். அப்பாவுக்கு ஏதும் நடந்தால் என்மீது பலி வருமென பயமுறுத்தியதோடு உடனே முதுகெலும்பு வலியெனச் சொல்லிப் புறப்பட எச்சரித்தது. எச்சிலை விழுங்கி கொண்டேன். அப்படி செய்தால் அதன் குரல் கொஞ்ச நேரம் ஓயும்.

வார்ட்டை நெருங்கும்போது மருந்து வாடையையும் முந்திக்கொண்டு அப்பாவின் ஓலக்குரல் வந்து சேர்ந்தது. வரவேற்பரையில் அட்டவணையைப் பார்த்து அப்பாவின் கட்டில் எண்ணைக் குறித்துக் கொண்டேன். வார்ட்டுக்குள் நுழைந்த மறுநொடி “உன் அப்பா வாந்தியெடுத்துவிட்டார் போல. சுத்தம் செய்து, உடை மாற்றிவிடு,” என்ற தாதியின் குரலுக்குத் தலையசைத்துவிட்டு நிமிராமல் கட்டில் நோக்கி நடந்தேன். ஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்து விறுவிறுவென வாந்தியைத் துடைத்து சட்டையையும் மாற்றினேன். கட்டிலிலிருந்து எழுந்துகொள்ள முயன்றிருப்பார் போல. கட்டிலின் இருபக்க இரும்புக் கம்பிகளும் உயர்த்தப்பட்டிருந்தது. அப்படியும் அவர் நழுவி இறங்க வாய்ப்புள்ளது என்பதால் வரும்போது அவர் உடுத்திவந்த கைலியைக் கிழித்து இரு கைகளையும் கால்களையும் அருகருகே இருந்த இரும்புக் கம்பிகளில் கட்டினேன்.

காற்றாடியின் வேகம் போதவில்லை. அப்பாவுக்கு வியர்த்துக் கொட்டியது. கட்டிலோடு கலந்துவிட்ட தேகத்திலிருந்து தனித்து மண்டை மட்டும் அளவு பெரிதாயிருந்தது. கருவடைந்து சூம்பிப் போயிருந்த முகத்தில், உதட்டை துருத்தி வெளிநீட்டிக் கொண்டிருந்த பற்கள் முதுமையின் நோய்மையைக் கோரமாய்க் காட்டியது. வற்றி, வெடிப்புகள் கிளைவிட்டிருந்த உதட்டில் ஈரத்துணியை நனைத்து ஒத்தடமிட்டேன். அவரது உதடுவழி உயிர்சூடு என் விரல் நுனியைத் துளைத்து உடல்கொள்ள, கணநேரத்தில் உரோமங்கள் குத்திட்டு நின்றன. அங்ஙணம் ஓர் விடுதலை அவசியமாய் தோன்றியது.

எதையும் அலட்டிக் கொள்ளாமல் குளிர்ந்த நீரில் துணியை நனைத்துத் தலையெல்லாம் துடைத்துவிட்டேன். சற்றே ஈரமான துணையைத் தலையில் போர்த்தி, கழுத்துக்குக் கீழும் வைத்தேன். துணியிலிருந்து வடிந்த துளிகள் சில அவரது சட்டையை மேல்வாக்கில் ஈரமாக்கின. அருகிலிருந்த நாற்காலியில் சாய்ந்தேன். அப்பாவின் ஓலம் வார்ட்டில் இருந்த பலரை உச்சுக்கொட்ட வைத்தாலும் மிக அண்மையில் இருந்த எனக்குள் ஒரு சலனமும் இல்லை. கண்கள் தானாக மூடிக்கொண்டன.

சட்டென பூமி அதிரத் தொடங்கியது. சுற்றிலும், நெடுக நீண்டிருந்த கட்டிடங்கள் சரிந்து விழ, நிலம் தூசியுள் கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்துகொண்டிருந்தது. சம தரை அலைபோல் அசையத் தொடங்கியது. எது இதன் தொடக்கம், என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்க முடியவில்லை. உயர்ந்த மேம்பாலத்தின்மீது மனித, வாகன நெரிசலுக்கு மத்தியில் தப்பித்துவிடக்கூடும் எனும் நம்பிக்கையில் அரைமூச்சுடன் ஓடிக் கொண்டிருந்தேன். மூச்சை உள்ளிழுப்பது தெரிந்தது, அதை வெளியேற்றும் மாயம் மட்டும் மூளைக்குத் தட்டுப்படவில்லை. அலைப் பெருக்கெடுப்புக்குமுன் என் ஓட்டம் அர்த்தமற்றிருந்தது. என்னை மீறிய ஓர் சக்திக்கு முன்னால் மண்டியிட்டு என் இயலாமையை ஒப்புக் கொள்ள மறுத்தேன். தப்பிக்க என்வசம் இருந்த ஒரே ஆயுதம் ஓட்டம். ஓடிவிட வேண்டும். அதை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். கரும் புகையாய் மண்டியிருந்த தூசிக்குள் ஓட பார்வையை இன்னும் கூர்மையாக்கிக் கொண்டேன். சிற்றலைகள் உடலை சரிந்துவிழ வைத்தாலும் எழுந்து ஓடுவதை நிறுத்திவிடும் பிரயர்த்தனம் எனக்குள் இருக்க வில்லை. விண்ணைப் பிளந்து அந்தக் கைகள் என்னை இங்கிருந்து மீட்டெடுத்து அணைத்து முத்தமிடும் என்ற நம்பிக்கையில் அடிக்கடி அன்னாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டேன். சற்றே உள்வாங்கிய அலை, பேரலையாய் திரண்டுவந்து என்னை எம்பி வானில் வீச, அடுத்த கணம் உயிர் உடலை விடுவித்துக் கொண்டு என் முன்னால் சென்றுக் கொண்டிருந்தது. பேரிரைச்சல் கூடிய ஓர் வெளிச்சம்.

“அடெக்!”

தாதிமார் ஒருவர் கட்டிலின் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். அப்பாவுக்குப் பேதியாகிவிட்டத்தைச் சொல்லி மாற்றுத் துணிகளைக் கொடுத்து சுத்தப்படுத்த சொன்னார்.

நாற்காலியிலிருந்து நிதானமாகவே எழுந்தேன். கட்டிலைச் சுற்றி திரைச்சீலையை இழுத்து மூடினேன். அதுவரை கெட்ட வார்த்தைகளால் அம்மாவைத் திட்டி ஓலமிட்டுக் கொண்டிருந்தவர் இடுப்புத் துணியில் நான் கை வைத்ததும் சட்டென மௌனமானார். அதுவரை உடலிலிருந்த ஏகபோக அசைவுகள் நின்றுபோயின. அவரது கண்கள் விரிந்து பெரிதாவதைக் கவனித்தேன். பதுங்கியிருந்து பாயவரும் வேட்டை நாய்போல் சில நொடிகள் பேரமைதியை உருவாக்கினார். அடுத்தடுத்து அசைவுகள் மிகுந்த பிரக்ஞையுடன் முன்வைக்கப்பட்டன. முதலில் என்னைக் காலால் எட்டி உதைக்க முனைந்தார்; முடியாதபோது நான் இருக்கும் திசையிலிருந்து எதிர்ப்பக்கம் நகர்ந்தார். எதையும் பொருட்படுத்தாமல் இடுப்புத் துணியைக் கழற்றி பெம்பர்சை பிரிக்க ஆரம்பித்தேன். தம்பிடித்து எழுந்து கடிக்க வந்தார். போதுமான இடைவெளியில் என் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டேன். எதுவுமே சாத்தியப்படவில்லை என்ற கோபத்தில் மீண்டும் மீண்டும் கடிக்கப் பாய்ந்தார். திடுமென கழுத்துத் துளைகளிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. உடலை கட்டிலில் அழுத்தி, கழுத்தில் துணியை வைத்து, காதருகே சென்று “பேசாம படு,” என்றேன்.

“ஐயோ! நீ என்னை தொடாமல் இரு. நீ போ” என்று அரற்றினார். வாயில் துணியை வைத்து அதக்கி பேச்சை மட்டுப்படுத்திவிட்டு பெம்பர்சை கழற்றினேன். அம்மா ஆட்டுப்பால் கொடுத்திருக்க வேண்டும், பேதி மஞ்சளாய் இருந்தது. பிட்டத்தைத் தூக்கி ஈரத்துணியால் துடைத்தபடி நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன். கண்களை இறுக மூடியிருந்தார். ஓரத்தில் ஈரத்துளிகள் பிசுபிசுத்தன. வாழ்வின் எல்லா கணங்களிலும் சாட்சியாய் நிறைந்திருந்த ஆதியோசை அப்போது அவர் காதருகே வளரத் தொடங்கியிருக்க வேண்டும்.

7 comments for “ஆதியோசை

  1. சிவாமணி
    July 1, 2020 at 12:09 pm

    கத்தி மேல் நடக்கும் கதைக்கரு. அற்புதமான கதைச்சொல்லல். ஆங்காங்கு கொடுக்கும் குறியீட்டு துணுக்கு கதையில் ஏறிச்செல்லும் ஏணியாகிறது. மகளின் உக்கிரம் சுடுகிறது

  2. பிரேமிளா
    July 2, 2020 at 12:12 pm

    வழக்கமான கதையின் கருவை எப்படி புனைவாக மாற்ற வேண்டும் என இந்தக் கதையை ஒரு பாடமாகவே நடத்தலாம்; தந்தையால் பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒரு பெண்ணின் கதையை மிக நுட்பமாக மின்னும் அன்பின் பெருக்காக சொல்லப்பட்டுள்ளது; எவ்வளவு குறைவான சொற்களில் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாக; அப்பாவின் சாகசத்தில் ஆர்வம் கொள்ளும் மகளாக; வன்மத்தில் கோபம் கொள்ளும் பெண்ணாக என பல முகங்களுடன் ஒரு பெண்.

  3. சு.வேணுகோபால்
    July 5, 2020 at 12:01 pm

    பாண்டியனின் வெள்ளிக்காசு,செந்தில்குமாரின் அனுபவபாத்தியம்,விஜயலட்சுமியின் ஆதியோசை மூன்று கதைகளும் புத்தம் புதிய அனுவத்தைத்தரும் நல்லகதைகள். பட்டாளிகளின் உண்மைக்கு அப்பால் இன்றைய பண்ணைகளின் உண்மையைச்சொல்லும் கதைஅனுபவபாத்தியம். பாட்டாளிகள் ஏமாற்றுத்தனம் செய்யமாட்டார்கள் என்ற ஒரு பொதுப்பார்வை உண்டு. உழுதவனுக்கே நிலம்சொந்தம் என்பது ஒரு நேர்மையான கைக்கொள்ளும் முறையாகப்பார்க்கப்பட்டது. நிலங்களும் கை மாறின. இந்தக் கதை மிச்சம் மீதி இருந்த நிலங்கள் எப்படி ஏமாற்றி எடுத்துக்கொள்ளப்பட்டன என்பதை சொல்கிறது. பண்ணையாரா பாட்டாளியா என்பதல்ல பிரச்சனை. உண்மை என்பது எப்படி மனித வாழ்விலிருந்து நழுவிப்போய்விட்டது என்பதைச் சொல்கிறது. விஜயலட்சுமியின் ஆதியோசை மலேசிய சிறுகதை வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டகதை. வன்மமும் குரூரமும் ஒரு மனிதனிடம் வெளிப்படுவதையும் மனைவி தன்வாழ்நாளெல்லாம் அதை மௌனமாக எதிர்கொண்டு வெளிப்படுத்திய காருண்யத்தையும் இக்கதை ஆற்றலோடு சொல்கிறது. வன்மம் மிக்க குடிகாரத்தந்தை வெளிப்படுத்தும் அன்பையும் சொல்லத்தெரிந்த மேலான படைப்புப் பார்வை இக்கதையில் கூடி வந்திருக்கிறது. கதை சொல்லியான பெண்ணிற்கு வரும் கனவுகள் உறவுளின் சிக்கலான நடத்தைகளை மிக சூசகமாக சொல்கிறது. இந்தக் கதைக்குள் பல்வேறு ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.சமீபத்தில் நான்படித்த மிகச்சிறந்த கதைகளில் ஆதியோசை ஒன்று. பாண்டியன் கதைகுறித்து முகநூலில் முதன் முதல் சொல்லி இருக்கிறேன். பதிவானதா என்று தெரியவில்லை.

  4. Suthantiran சுதந்திரன்
    July 5, 2020 at 6:17 pm

    ஆதியோசை. அற்புதமான கதை. வாசித்து முடித்த பிறகும் ஏதோ ஒரு வலி மனதில். ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிற்கிறது. வெவ்வேறு வாசிப்புகளில் இன்னும் வெவ்வேறு குறிப்புகள் வெளிப்படலாம். தோழி விஜயலட்சுமிக்கு வாழ்த்துகள். இத்தனை நாளாய் எங்கிருந்தீர்கள் மா?

  5. BHARATHI
    July 6, 2020 at 5:49 pm

    அன்பு என்பது பல பரிமாணத்தோடும் பல விதமானக் குணாதிசியங்களைக் கொண்ட ஜீவராசியோடும் உறவாடியுள்ளது. ஆண் பெண் இருவரும் ஒரே சிந்தனையோடும் நடத்தையோடும் உள்ளவர்கள் மட்டும் உறவாடுவது அன்பல்ல. மாறாக, எதிர்மறையானக் குணாதிசியமும் கெட்ட பழக்கமும் மேலோங்கி இருக்கும் ஒருவரிடத்திலும் எந்தவொரு எதிர்வினையை ஆற்றாமலும் வெறுப்பை உமிழாமலும் அன்பு காட்டலாம் என இக்கதையின் வழி உணர்ந்து கொண்டேன். இது பலவந்தாலோ அல்லது விதியின் சதியாலோ வெளிப்படும் அன்பல்ல. மாறாக, எதிர்மறையானக் குணம் இருக்கும் ஒருவரிடம் கண்டுக் கொண்ட சிறு அன்புதான் அதற்கு மூலக் காரணமாகும். நாம் பழகும் நபரிடமோ அல்லது உறவுகளிடத்திலோ குறையைப் பார்ப்பதை விட, சிறு நிறையைக் கண்டு திருப்திக் கொள்; அன்பைக் காட்டு எனச் சொல்லாமல் சொல்கிறது இக்கதை.

    இக்கதையை வாசித்து கொண்டிருக்கும் போது, என் இதயம் வேகமாகத் துடிக்கவும் முணுமுணுக்கவும் செய்ததது. ஏன்னென்றால், நான் மேலோட்டமாக வாசித்தால் தந்தை மகளின் உறவைப் பற்றி புனையப் பட்ட சிறுகதை என தோன்றினாலும், மறுபக்கம் இலை மறை காயாக ஒரு தோட்டத்து பெண்ணின் (கதை சொல்லியின் அம்மா) தலைவன் பால் கொண்ட புனிதமான அன்பு வெளிக்கொணரப்படுகிறது. அப்படி இரு துருவமாக அவதாரித்த அன்பை புரிந்து கொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் இரண்டாவது முறையாக இச்சிறுகதையை வாசித்தேன். கதைச் சொல்லி மதியால் அறிமுகப் படுத்தப்படும் அவளின் அம்மா மற்ற கதாபாத்திரங்களை விட என்னை வெகுவாகக் கவர்ந்தார். அவரே இக்கதையின் வரும் அனைத்து கதாபாத்திரத்துக்கும் ஆணிவேராக விளங்குகிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் இரண்டு ஆண்கள் இருப்பர். ஒருவர் அவளுடைய அப்பா; இன்னொருவர் அவளுடைய கணவர். இதில் ஓன்று சரியாக அமையாவிட்டால் அவளுடைய வாழ்க்கையே விடையில்லா கேள்விக் குறியாகிவிடும். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய அப்பாதான் முதல் HERO, அதற்கு அப்புறம்தான் துணைவன். ஆனால், மதியின் அம்மாவுக்கு திருமணமாகியும் அவர் அப்பாதான் அவருக்கு முன்னோடி. அவருடைய அப்பாவுக்கு எதிர்மறையான குணாதிசியத்தைக் கொண்ட கணவரோடு, அவர் வாழும் வாழ்க்கையை எழுத்தாளர் விவரித்த விதம், எனக்கு புராணக் கதையில் வரும் பூமாதேவியை நினைவு படுத்தினார். இருப்பினும், கதையில் மதியின் அம்மாவை புணரப்பட்ட விதம், இவர் பூமாதேவியையே மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

    நரகாசுரனைப் போல நரகத்திற்கு இணையாகத் தனக்கு துன்பம் அளிப்பவராக கணவன் திகழ்ந்தாலும், பூமாதேவியை போல் சத்தியபாமாவாக அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றது போல் தன் கணவனைப் பழி தீர்க்கவும் இல்லை. அதே போல், பூமியில் வாழும் உயிர்களை எடுத்துச் செல்லும் எமதர்மனை ஒரு முறை சிவபெருமான் சம்ஹாரம் செய்து விட்டார். எமதர்மனின் தொழில் தடைப்பட்டதால் பூமியில் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்தது; பூமியின் பாரம் அதிகமானது. பாரம் தாங்காமல் பூமாதேவி இறைவனை வேண்டினாள். அதன் விளைவாக கடவுள் மனமிறங்கி எமனை உயிர்பித்து வரம் அருளினார். இதனால், பூமாதேவி தன் சுமையைக் குறைக்க முடிந்தது. இது போல், பல வழிகள் இருந்தும் மதியின் அம்மா தன் கணவனை வதம் செய்யவில்லை; பிள்ளைகளிடத்திலும் தந்தையை விட்டு கொடுக்கவும் இல்லை.
    இவ்வளவு நாள், தோற்று போனக் காதல் காவியங்களே அன்பின் அர்த்தங்களையும் ஆழத்தையும் தெரிந்து கொள்ள உதராணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு தோட்டப்புற பெண்ணின் பார்வையில் அன்பு என்றால் தாய்மை என புது அர்த்ததைக் கொடுக்கிறார் எழுத்தாளர். குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். அப்பேற்பட்ட குடிக்கு, ஆளாகிய ஒரு நபரை ஏன் மனைவி வெறுக்க வில்லை; தான் கர்ப்பமாக இருக்கும்போது, அடிப்பட்டும் மண்டை உடைந்தும் மயக்க நிலையை அடைய வைத்த கணவனை மன்னிக்க முடியுமானால், அது ஒரு தாயின் இயல்பு நிறைந்த பெண்ணால் மட்டுமே முடியும். என்னைப் பொறுத்தமட்டில், மதியின் அம்மா அப்பாவுக்கு இன்னொரு தாயாக மாறி அன்பு காட்டினாள். அந்த தாய்மையும் அன்பும் கலந்து அந்த சுமையைச் ஒரு சுகமாகவே பாவித்தார். அந்த தாய்மை அன்போடு, உடல்நலம் இல்லாத கணவனை உபசரித்து, காதோடு உறவாடிய அந்த கணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. மதி அப்பாவிடம் தீங்கானக் குணங்கள் நிறைந்திருந்தாலும் அதை தாய்மை கண்ணோட்டதோடு பார்த்தார். தன் கணவனை இன்னொரு குழந்தையாக பார்த்திருக்கிறார். தன் நண்பர் வட்டாரமும் உற்ற உறவினரும் எள்ளி நகையாடினாலும் ஏன் ஊருக்கே தன் கணவன் குடி போதையில் அரக்கனாக இருந்து பல தொல்லைகள் கொடுத்தாலும்; கொலையே செய்து இருந்தாலும் இந்த தாய் வெறுத்து ஒதுக்க மாட்டார். அதற்கு இவ்வரிகள் அதற்கு நல்ல சான்று.
    எவ்வளவு குடித்தாலும், எந்த நேரம் வீடு வந்தாலும், என்ன கதியில் இருந்தாலும் குளிப்பாட்டி, உடை போட்டு, உணவை ஊட்டிவிட தவறியதில்லை.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என சொல்லுவர். அதில் மதியின் அப்பா ரொம்பவே கொடுத்து வைத்தவர். இக்கதையில் வரும் அம்மாவைப் போல் நேரில் யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் என் கையால் அவரை தொட வேண்டும் என அவா. ஏன்னென்றால், அவர்களைத் தொடும் போது கோயில் இருக்கும் விக்கிரகத்தைத் தொடுவது போல் ஒர் உணர்வு தோன்றும் என்பது திண்ணம். மதியின் அம்மா ரெளத்திரத்தையும் வன்மத்தையும் தீர்வேனா தேர்ந்தெடுக்காமல், மாறாக தாய்மையை முன்னிருத்தியதால் போதையில் இருக்கும் அப்பாவிடமிருந்தும் பிள்ளைகள் சின்ன சின்ன அழகிய நினைவுகளை நினைவுகூற முடிந்ததது.

    இக்கதையின் சாயல் போலவே சமீபத்தில் நான் Dollhouse Diaries எனும் உண்மை சம்பவத்தை முன்வைத்து எடுத்த நாடகத்தையும் பொன்மகள் வந்தாள் எனும் படத்தையும் பார்த்தேன். இவ்விரண்டும் என் உணர்ச்சிகளையும் மனதையும் அவ்வளவாக தாக்கவில்லை. இப்புனைவில் வரும் மதி என்ற மகளின் கதாபாத்திரத்தை எழுத்தாளர் ஆர்த்மார்த்தமாக புனைந்துள்ள விளைவே என் தூக்கத்தையும் ; எதையோ பறிகொடுத்தது போல உணர்வையும் கொடுக்கிறது. இன்னும் எத்தனை நாள் என் எண்ண அலைகள் அவளுக்காக துடிக்கும் வருந்தும் என தெரியவில்லை. பொதுவாகவே ஒரு பெண்ணின் மனது கடலை விட ஆழம் அதனால் அவர்கள் மனதை புரிந்து கொள்ள முடியாது என்பர். பெண்ணின் மனம் எனும் கடலில் மறைத்தும் மறந்தும் இருக்கும் வாழ்வியல் ஒரு ரணத்தை இப்புனைவின் மிக அழகாகச் சொல்லியுள்ளார். மனிதரை விட எல்லா ஆற்றலிலும் பின்தங்கிய பெங்குயின் பறவைக்கு தெரிந்த நாகரீகம் கூட ஏன் மதியின் அப்பாவுக்குத் தெரியவில்லை என அப்பாவை வெறுத்து ஒரு அரக்கன் என என் நினைவலையில் ஓடவிடும் போது, அதே அப்பாவுடன் இருந்த அழகிய நினைவுகளை மீட்டு எடுத்து என்னை அவருடைய புனைவால் வதைத்துவிட்டார். மதியின் அந்த அழகிய நினைவுகள் குறிப்பாக, Tarzan என் அப்பாவை நினைவுபடுத்தியது.இதனாலேயே, என்னால் மதியின் அப்பாவை வெறுக்க முடியவில்லை. என் அப்பா என்னை வன்முறையிலிருந்து பாதுகாத்தார். அதே அப்பா வடிவில் இருக்கும் இன்னொருவர் என்னை போல் இருக்கும் பெண்ணுக்கு எதிர்மறையானக் குணங்களைக் கொண்டு திகழ்கிறார்; மாறுகிறார்; சித்திரிக்கப்படுகிறார் என்றால் எப்படி இருக்கும். என் மூச்சே நின்னு போகும் போல் ஓர் உணர்வு; தனியாக அறையில் அழ வேண்டும் போல் தோன்றியது. .ஒருவரை எப்படி சிரிக்க வைக்க கஷ்டமோ, அதே போலதான் ஒருவரை புனைவின் வழி அழ வைப்பதும் மிக கஷ்டம். ஆனால், இதில் எழுத்தாளர் வெற்றியும் கண்டார்; என் உணர்வுகளையும் ஆன்மாவையும் தொட்டுவிட்டார். என் அப்பாவை போலவும் மதியின் தாத்தாவை போலவும் மதியின் அப்பா ஒரு சிறந்த தந்தையாக இருந்திருக்கலாம். இதற்கு எல்லாம் மூலக்காரணம், மதியின் அப்பாவை விட மிக பெரிய அரக்கன் தை சொங் என நினைக்கும் போது, அந்த ரெளத்திரதை விவரிக்க வார்த்தையில்லை.
    நான் வாசித்த மலேசிய படைப்புகளில், பேய்ச்சி நாவலுக்கு அடுத்து ஆதியோசை சிறுகதை மிக அழகாகப் பெண்ணியத்தை மையமாக வைத்து புனையப்பட்ட கதை என சொல்லலாம். பொருளதார ரீதியில் மதியின் அம்மா எப்படி சமாளித்தார் என்பதையும் அப்பாவின் ஊதியம் குடிக்கே அர்பணிக்கப் பட்டதா என சில வரிகளில் புனைந்திருந்தால், தோட்டத்து பெண்ணின் வாழ்வியலை புரிந்து கொள்ள இன்னும் வாய்ப்பலித்திருக்கும். மலேசியாவில் புனையப்பட்ட சமூகவியல் கதைகளில், ஒரு மகளின் பார்வையில் இருந்து இப்பழக்கத்தால், எதிர்ப்படும் பிரச்சனைகளை மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இக்கதையில் மட்டுமே புனையப்பட்டுள்ளது. ஆகவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு வாசகியாக எழுத்தாளருக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். இக்கருவையே மையமாக வைத்தும்; முடிந்தால் இதே தலைப்பிலும் ஒரு நாவலை எழுதும்மாறு கேட்டு கொள்கிறேன். மலேசியாவில் தமிழர்களிடம் உள்ள மது பழக்கத்தினால், ஒரு பெரிய அலைகளைப் போல வந்த பல இன்னல்களைக் குடும்ப பெண்கள் அனுபவித்துள்ளனர். அவர்களில் சிலர் எதிர் நீச்சலைப் போட்டு, கரையை அடைந்தனர்; மீதியுள்ளவர்கள் அவ்வலைக்கே இரையாயினர். அந்த தோட்டப்புற பெண்கள் வாழ்வியலில் மறைக்க பட்ட; அனுபவித்த துன்பங்களையும் போரட்டங்களையும் அர்த்தமுள்ளதாகவதற்கும் தத்ரூபமாகவும் உண்மையாகவும் புனைய உங்களைப் போன்ற எழுத்தாளரால் மட்டுமே முடியும்.அதற்கு இச்சிறுகதை நல்லதொரு சான்று. PLEASE ……… நீங்களும் இதைச் செய்ய தவறினால் பிறகு சிறு கட்டுரை தொகுப்பாக வெளிவரும் புனைவை சில வாசகரும் ஆனந்தமாக இதுதான் சிறந்த நாவல் என்றும் சிறுகதை என்றும் கண்மூடித்தனமாக நம்புவர் ……

  6. Viji
    July 7, 2020 at 11:00 am

    விஜி தமது அழகிய மொழி நடையில் சொல்லப்பட்ட அற்புத சிறுகதை. ஆரம்பத்தில் இது வழக்கமான குடும்பக்கதை என்கிற யோசனையிலேயே வாசித்தேன். நிறைய குறியீடுகள் தேவையா?, என்று யோசித்தவண்ணமே தொடர்ந்தேன். திடீரென மனதில் ஒரு பொறி தட்டியது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து
    நுணுகி வாசிக்கத்துவங்கினேன். திடுக்கிட்டேன்.. அதிர்ச்சியடைந்தேன். அருமை விஜி. வாழ்த்துகள்.

    ஸ்ரீவிஜி

  7. Bharathes Devi
    July 7, 2020 at 11:13 am

    அன்பு என்பது பல பரிமாணத்தோடும் பல விதமானக் குணாதிசியங்களைக் கொண்ட ஜீவராசியோடும் உறவாடியுள்ளது. ஆண் பெண் இருவரும் ஒரே சிந்தனையோடும் நடத்தையோடும் உள்ளவர்கள் மட்டும் உறவாடுவது அன்பல்ல. மாறாக, எதிர்மறையானக் குணாதிசியமும் கெட்ட பழக்கமும் மேலோங்கி இருக்கும் ஒருவரிடத்திலும் எந்தவொரு எதிர்வினையை ஆற்றாமலும் வெறுப்பை உமிழாமலும் அன்பு காட்டலாம் என இக்கதையின் வழி உணர்ந்து கொண்டேன். இது பலவந்தாலோ அல்லது விதியின் சதியாலோ வெளிப்படும் அன்பல்ல. மாறாக, எதிர்மறையானக் குணம் இருக்கும் ஒருவரிடம் கண்டுக் கொண்ட சிறு அன்புதான் அதற்கு மூலக் காரணமாகும். நாம் பழகும் நபரிடமோ அல்லது உறவுகளிடத்திலோ குறையைப் பார்ப்பதை விட, சிறு நிறையைக் கண்டு திருப்திக் கொள்; அன்பைக் காட்டு எனச் சொல்லாமல் சொல்கிறது இச்சிறுகதை.

    தந்தை மகளின் உறவைப் பற்றி புனையப் பட்ட சிறுகதை என தோன்றினாலும், மறுபக்கம் இலை மறை காயாக ஒரு தோட்டத்து பெண்ணின் (கதை சொல்லியின் அம்மா) தலைவன் பால் கொண்ட புனிதமான அன்பு வெளிக்கொணரப்படுகிறது. அப்படி இரு துருவமாக எழுத்தாளரால் அவதாரித்த அன்பை ஒரு வாசகராக புரிந்து கொண்டால், அன்பின் அர்த்தம் தாய்மை எனவும் அழுகை எனவும் இக்கதையின் வழி புது பரிமாணம் எடுக்கிறது. மதியால் அறிமுகப் படுத்தப்படும் அவளின் அம்மாவின் வாழ்க்கையை விவரித்த விதம், புராணக் கதையில் வரும் பூமாதேவியை நினைவு படுத்தினார். இருப்பினும், இவர் பூமாதேவியையே மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும். மதியுடனா அப்பாவின் அன்பு நிஜமா அல்லது மாயையா என புனையும் விதம் வாசிப்பவரின் உணர்வுகளைச் சீண்டும். இப்பெண்களின் வாழ்வியலில் மறைமுகமாக வரும் தை சொங் தான் மிக பெரிய அரக்கன் என நினைக்கும் போது, அந்த ரெளத்திரதை விவரிக்க வார்த்தையில்லை. இக்கதையை எழுத்தாளர் ஆர்த்மார்த்தமாக புனைந்துள்ள விளைவே ,என்னுடைய தூக்கத்தையும்; எதையோ பறிகொடுத்தது போல உணர்வையும் கொடுக்கிறது. இன்னும் எத்தனை நாள் என் எண்ண அலைகள் அவளுக்காக துடிக்கும் வருந்தும் என தெரியவில்லை.
    பொருளதார ரீதியில் மதியின் அம்மா எப்படி சமாளித்தார் என்பதையும் அப்பாவின் ஊதியம் குடிக்கே அர்பணிக்கப் பட்டதா என சில வரிகளில் புனைந்திருந்தால், தோட்டத்து பெண்ணின் வாழ்வியலை புரிந்து கொள்ள இன்னும் வாய்ப்பலித்திருக்கும். மலேசியாவில் புனையப்பட்ட சமூகவியல் கதைகளில், ஒரு மகளின் பார்வையில் இருந்து இப்பழக்கத்தால், எதிர்ப்படும் பிரச்சனைகளை மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இப்புனைவில் மட்டுமே புனையப்பட்டுள்ளது. நான் வாசித்த மலேசிய படைப்புகளில், பேய்ச்சி நாவலுக்கு அடுத்து ஆதியோசை சிறுகதை மிக அழகாகப் பெண்ணியத்தை மையமாக வைத்து புனையப்பட்ட கதை என சொல்லலாம். ஆகவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு வாசகியாக எழுத்தாளருக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். இக்கருவையே மையமாக வைத்தும்; முடிந்தால் இதே தலைப்பில் ஒரு நாவலை எழுதும்மாறு கேட்டு கொள்கிறேன். மலேசியாவில் தமிழர்களிடம் உள்ள மது பழக்கத்தினால், ஒரு பெரிய அலைகளைப் போல வந்த இன்னல்களைப் பல குடும்ப பெண்கள் அனுபவித்துள்ளனர். அவர்களில் சிலர் எதிர் நீச்சலைப் போட்டு, கரையை அடைந்தனர்; மீதியுள்ளவர்கள் அவ்வலைக்கே இரையாயினர். அந்த தோட்டப்புற பெண்கள் வாழ்வியலில் மறைக்க பட்டும்; அனுபவித்த துன்பங்களையும் போரட்டங்களையும் அர்த்தமுள்ளதாகவதற்கும் தத்ரூபமாகவும் உண்மையாகவும் புனைய உங்களைப் போன்ற எழுத்தாளரால் மட்டுமே முடியும்.அதற்கு இச்சிறுகதை நல்லதொரு சான்று. PLEASE ………

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...