மலேசிய அனுபவம் : யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை

யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை. சமூகமே யாரையும் அப்படி ஆக்குகிறது. யாரொருவரும் அப்படி ஆவதற்கு இச்சமூக அமைப்பும் நாம் ஒவ்வொருவருமே காரணமாய் உள்ளோம்.

இன்றைய மலேசியத் தமிழ்ச் சமூகம் எதிர்க்கொண்டுள்ள மிகப் பெரிய சமூகச் சிக்கல்களில் ஒன்று இளைஞர் மத்தியில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். மலேசிய மக்கள் தொகையில் 7 சதம் தமிழர்கள் என்றால், சிறைச்சாலைகளில் வாடுவோரில் 50 சதத்திற்கு மேல் தமிழர்கள்.

ரப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுதல், அவற்றில் வேலை செய்யப் பெரிய அளவில் இந்தோனேசியர்களும் வங்க தேசத்தவரும் இறக்குமதி செய்யப்படுதல், ரப்பர் தோட்டங்களும் குடியிருப்புகளும் அழிக்கப்பட்டு அவ்விடங்கள் தொழிற்சாலைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாற்றப்படுதல், இதன் மூலமான இடப்பெயர்வு, தமிழ்ப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுதல், உயர் கல்வி அதிகச் செலவுடையதாக மாறுதல், ‘பூமிபுத்ரா’ கொள்கையின் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுதல், ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தமிழர் அரசியல் கட்சிகள் இது குறித்துக் கவலை கொள்ளாதிருத்தல்… என எத்தனையோ காரணங்கள் இதற்கு. இளைஞர்கள் நேரடியாகப் பங்குபெறும் குற்றச் செயல்கள் தவிர, சீனர்களின் தலைமையில் இயங்கும் இது போன்ற கும்பல்களில் பகடைக் காய்களாய் இயங்குவோரும் உளர்.

essay1aஇப்படியான குற்றச் செயல் புரிபவர்களாக அடையாளம் காணப்படும் தமிழ் இளைஞர்கள், சிறை சென்று மீண்டவர்கள், வீட்டில் அடங்கவில்லை எனக் கொண்டு வரப்படுவோர் எனச் சுமார் 300 சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கென உருவாக்கப்பட்டுள்ள பள்ளிதான் போர்ட் கிளாங்கில் ‘மை ஸ்கில்ஸ் ஃபௌன்டேஷனால்’ நடத்தப்படுகிற ‘Primus Institute of Technology’.

மலேசியத் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் தன்னலம் கருதாச் சமூகப் பணியாளர் வழக்குரைஞர் பசுபதி சிதம்பரம் மற்றும் உளவியல் வல்லுனரும் மருத்துவரும், தமிழின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவருமான டாக்டர் சண்முக சிவா ஆகியோர் முன்னின்று மலேசியத் தமிழ்ப் புரவலர்களின் ஆதரவோடும், அரசு உதவியுடனும் இப்பள்ளியைச் சென்ற 2011 முதல் நடத்தி வருகின்றனர்.

பசுபதி அவர்கள் Educational Welfare research Foundation எனும் அமைப்பின் தலைவராகவும் தமிழ் அறவாரியத்தின் நிறுவனராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். அங்குள்ள சீன முற்போக்காளருடன் இணைந்து மலேசியச் சிறுபான்மையினருக்கான நலன் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். World Tamil Relief Fund ஒன்றை அமைத்துப் பெரிய அளவில் ஈழப் போராட்டத்திற்கு உதவி செய்தவர். தற்போது மலேசிய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் (The Malaysia Education Blueprint 2013 – 2025) ஊடாகத் தமிழ் மற்றும் மான்டரின் (சீனம்) மொழி புறக்கணிக்கப்படும் ஆபத்தை எதிர்த்துச் சீனர்களும் தமிழர்களும் இணைந்து கொலாலம்பூரில் உள்ள சீன அரங்கொன்றில் நடத்திய கருத்தரங்கொன்றில் சிறிது நேரம் பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. அங்கு வாசிக்கப்பட்ட கட்டுரைகளை மேலோட்டமாகப் பார்த்தபோது ‘தேசிய அரசு’ என்னும் கருத்தாக்கத்தினூடாகச் சிறுபான்மை மொழிகளும் அடையாளங்களும் சிதைக்கப்படுவது குறித்த பிரச்சினைகளை அவை ஆழமாக அலசியுள்ளதைப் புரிந்து கொள்ள இயன்றது. இது குறித்து விரிவாகப் பின்னர் பார்க்கலாம். இப்போது மீண்டும் ப்ரைமஸ் பள்ளிக்குத் திரும்புவோம்.

இந்த மாணவர்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல்கள் ஏராளம். அவற்றை நாம் எதிர்பார்த்திருக்கவே இயலாது. மிக்க பொறுமை, உளவியல் நுணுக்கம், மனித நேயம், அர்ப்பணிப்பு ஆகியன மிக அதிகமாகத் தேவைப்படும் பணி இது. தற்போது மொத்தம் 300 மாணவர்கள் உள்ளனர். ஆறு வகுப்பறைகள், இரண்டு பட்டறைகள், ஆண்கள், பெண்களுக்கெனத் தனித்தனி விடுதி, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், உளவியல் கவுன்சிலர்கள் என 25 பேர். இவர்கள் தவிர நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரவென்றும் பகலென்றும் பாராது பசுபதி, ராஜலிங்கம் ஆகியோரின் இருப்பு, டாக்டர் சண்முக சிவாவின் கவுன்சிலிங் என்றும் தொடர்கிறது.

பூச்சோங்கில் தொடங்கி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாகத் தற்போது போர்ட் கிளாங்கில் முனிசிபாலிடிக்குச் சொந்தமான ஒரு இரண்டுமாடிக் கட்டிடத்தில் இப்பள்ளி செயல்படுகிறது. 700 மாணவர்கள் வரை தங்கிப் படிக்கும் அளவிற்கு அதில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 1200 மாணவர் வரை தங்கிப் படிக்கும் பள்ளியாக உருவாக்குவது அவர்கள் லட்சியம். தற்போது கோலாலம்பூரிலிருந்து 91 கி.மீ தொலைவில் கலூம்பாங் என்னுமிடத்தில் 30 ஏக்கர் நிலம் இதற்கென வாங்கப்பட்டுள்ளது.

எழுத்தர் பயிற்சி (legal secretariat), எலக்ட்ரிகல் ஒயரிங், வெல்டிங், mechatronic முதலிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்குவதோடு வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. வேலைக்குப் போயிருப்பவர்கள் திருப்திகரமாகச் செயல்படுவதாக நிர்வாகங்கள் கூறுகின்றனவாம். Risk youths / under achievers ஆக உள்ள இவர்களைத் தகுதிப்படுத்தி, உளவியல் ரீதியாக அணுகி பல்வேறு சமூக மற்றும் தொழிற் திறன்களை உருவாக்கி ஒரு வேலையில் அமர்த்தும் பணி அத்தனை எளிதானதன்று. ஆசிரியர்களின் அனுபவங்களைக் கேட்டபோது மனம் கனிந்தது. ஆறு மாதம் மற்றும் ஓராண்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எதிர்கால ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் இவர்களிடமிருந்தே உருவாக்கப்படுமாம்.

இங்கு கடந்த இரு ஆண்டுகளாக மிக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றித் தற்போது ஓராண்டு சட்டப் படிப்பிற்காக பிரிட்டன் செல்லும் ஆசிரியை செல்வமலர் அவர்களுக்கு இம்மாணவர்கள் பிரியா விடை அளித்த நிகழ்வுக்கு டாக்டர் சண்முக சிவா என்னை அழைத்துச் சென்றார். நான் மலேசியாவில் இருந்த பத்து நாட்களில் நான் மலேசியாவில் வேறு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும், பலரைச் சந்தித்தபோதும் நான் மிகவும் நெகிழ்ந்த, எனது உள்ளத்தைத் தொட்ட சந்திப்பாக இதுவே அமைந்தது. கலை நிகழ்ச்சிகள், உணவு அனைத்தையும் மாணவர்களே தயாரித்து அளித்தனர். அவர்களிடம் பொதிந்திருந்த திறமை யாரையும் வியக்க வைக்கும். ஆசிரியை மலர் குறித்துப் பேச வந்த ஒவ்வொரு மாணவரும் கண்ணீருடன்தான் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பினர்.

பெற்றோர்களாலேயே பொறுத்துக்கொள்ள இயலாத அக்குழந்தைகளை தாயினும் சாலப் பரிந்தும், கண்டித்தும் வளர்த்தெடுத்த ஆசிரியை மலர் தன் அனுபவங்களை விவரித்து முடித்து விடை கூறியபோது அவர் கண்கள் மட்டுமின்றி என் கண்களும் கசிந்தன.

நிகழ்ச்சி முடிய இரவு பன்னிரண்டு மணி ஆகியது. காலையில் கூலிம் செல்ல வேண்டிய அவசரம். மாணவர்களோடு கலந்து பேச இயலவில்லையே என்கிற மனக்குறையுடன் புறப்பட்டேன்.

**********
சுவாமி ப்ரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமத்தில் ஓர் நாள்

essay1bகெடா (கடாரம்) மாநிலத்தில் கூலிமில் அமைந்துள்ள தியான ஆஸ்ரம நிறுவனர் ப்ரம்மானந்த சுவாமிகளை அநேகமாகத் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் அறிந்திருப்பர். மலேசியாவுக்குச் செல்லும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அவரைச் சந்திக்க நேரிடும். நவீனமாக எழுதும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும், குறிப்பாக வல்லினம் குழுவினருடன் நெருக்கமாக இருப்பவர் சுவாமிகள். சென்ற 14 அன்று நடைபெற்ற வல்லினம் கலை இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட நூல்களை விமர்சித்த மூவரில் சுவாமிகளும் ஒருவர். அவரது பேச்சை ஒலிப் பதிவில் வாசிக்கும் யாரும் அது ஒரு ஆன்மீகவாதியின் உரை என நம்பமாட்டார்கள். ஆன்மீகம் எதையும் கலக்காமல் இலக்கியத்தை வாசிப்பவர், ரசிப்பவர் என்பது தவிர நாம் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என நம்புபவர் அவர்.

நம்புவது மட்டுமல்ல மிகவும் திறந்த மனத்தோடு நாம் சொல்பவற்றைச் செவி மடுப்பவர்.

சென்ற முறை மலேசியா சென்றபோது ஓர் இரவு அவரது ஆஸ்ரமத்தில் நானும் ஆதவன் தீட்சண்யாவும் தங்கி இருந்தோம். எனினும் அப்போது விரிவாக உரையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இம்முறை அங்கு நான் தங்கவில்லை ஆயினும் சுமார் நான்கு மணி நேரங்கள் சுவாமிகளுடனும் அப்பகுதி இலக்கிய நண்பர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர்களின் சந்திப்பு மையமாக விளங்கும் தியான ஆஸ்ரமத்தில் நடைபெறும் சூடான விவாதங்களில் எல்லோரும் சமமாகப் பங்கேற்கின்றனர். சுவாமிகளைச் ‘சாமி’ என அழைப்பதைத் தவிர வேறெந்த விதத்திலும் அவருக்கு விவாதங்களில் யாரும் கூடுதல் மதிப்பளிப்பதில்லை. அந்த அளவிற்குச் சுவாமிகளின் கருத்துக்களை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.

சொல்ல மறந்து போனேன். சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் விருந்தினர்களிடம் சாதி மத வேறுபாடுகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. சுவாமிகளின் அறைக்குப் பக்கத்திலேயே என்னைப் போன்ற விருந்தினர்களும் தங்க வைக்கப்படுகின்றனர். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எவ்வாறு உபசரிக்கிறோமோ அதேபோலத்தான் அவரும் நம்மை உபசரிக்கிறார். அவர் கையால் நமக்குத் தோசை சுட்டுத் தருகிறார். தேநீர், காஃபி எல்லாம் நம் விருப்பத்தைக் கேட்டுத் தயாரித்துக் கொடுக்கிறார்.

எனக்குதான் கைலியுடன் அவர் கண்முன் நடமாடச் சற்றுக் கூச்சமாக இருந்தது.

19 மாலை நான் பேருந்தில் வந்து பட்டர்வொர்த்தில் இறங்கினேன். அதற்கு முன்னதாகப் பலமுறை சுவாமிகள் என்னுடன் தொடர்பு கொண்டு எனது பஸ் வந்தடையும் நேரம் முதலியவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டார். நான் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் அங்கே அவரது ஆஸ்ரமக் கார் எனக்குக் காத்திருந்தது. ஆஸ்ரமத்தில் சுமார் 20 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். அவர்களும் கூட ஒரு வகையில் பெற்றோர்களுக்கு அடங்க மறுத்த வித்தியாசமான பிள்ளைகள்தான். ஆசிரமத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவு, உடை தவிர அருகிலுள்ள பள்ளிகளில் படித்துத் தேற எல்லா வசதிகளும் இலவசமாகச் செய்யப்படுகின்றன. அப்படிப் படித்து இன்று வேலையில் இருக்கும் இருவர்தான் என்னை மிக்க மரியாதையுடன் காரில் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அன்று மாலை ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் வாராந்திரக் கீதைப் பேருரை. ஆசிரமத்தில் மட்டுமின்றி வேறு பல ஊர்களுக்கும் சென்று ஆன்மீக உரைகளை சுவாமிகள் நிகழ்த்தி வருகிறார். சற்று நேரத்தில் எழுத்தாளர் அ.பாண்டியன் வந்துவிட்டார். மலாய் மொழி இலக்கியப் போக்குகளைத் தமிழில் அறிமுகப் படுத்தும் முக்கிய பணியைச் செய்து வருபவர் பாண்டியன். அன்று மாலை அவருடன் கழிந்தது. அங்கேயே அவரது ஊரில் ஒரு லாட்ஜில் தங்கினேன். அடுத்த நாள் பாண்டியனுக்குப் பள்ளியில் வேலை இருந்தது. அவர் ஓர் ஆசிரியர். எழுத்தாளர் கே.பாலமுருகனுக்கும் ஏதோ வேலை. மாலையில்தான் ஆஸ்ரமத்தில் கலந்துரையாடல். இடைப்பட்ட நேரத்தில் அறையில் அடைந்து கிடக்க நான் தயாராக இல்லை. பக்கத்தில்தான் பினாங் தீவு. மலேசியாவின் இரண்டாவது பெரு நகரம். அழகிய பெரிய துறைமுகம். போய் வர ஏதேனும் ஏற்பாடு செய்து விட்டுப் போங்கள் எனப் பாண்டியனிடம் சொன்னேன்.

காலையில் அப்படியே வெளியே போய்த் தமிழ்க் கடையாகப் பார்த்து ஒரு தோசை, தேநீர் எனக் காலை உணவை முடித்துக் கொண்டேன். வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள உணவுகளைச் சாப்பிடுவதே என் வழக்கம். ஆனாலும் தனியாகச் சாப்பிட நேரும் தருணங்களில் தமிழ்க் கடையாகப் பார்த்துக் கொள்வேன். மலேசியாவில் பெரும்பாலும் தமிழ்க் கடைகளில் பணியாற்றுபவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நம்மை அன்புடன் உபசரிப்பர். அன்று அந்த ஓட்டலில் இருந்தவர் இளையான்குடியைச் சேர்ந்தவர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன்.

அடுத்த சில நிமிடங்களில் யாரோ ஒரு பையன் பேசினான். “அங்கிள், தயாரா இருங்க. சாமி சொன்னார். நாங்க வந்திடுறோம். பினாங் போகலாம்.” சொன்னபடிக்குச் சரியாகப் 12 மணிக்கு அவர்கள், ஆம் இரு இளைஞர்கள் வந்திருந்தனர். நான் அதற்குள் அறையைச் ‘செக் அவுட்’ செய்து காத்திருந்தேன்.

அந்த வாகனத்தில் இருவர் இருந்தனர். இரு இளைஞர்கள். இருவரும் ஆஸ்ரமத்தில் தங்கிப் படித்தவர்கள். பதின் வயதுக்காரர்கள். ஒருவன் கெமிகல் எஞ்சினீரிங் படித்துக் கொண்டுள்ளான். மற்றவன் ஏதோ ஒரு வேலையில் உள்ளான்.

அங்கிள் ஏதோ முக்கியமானவர், ஆனால் இந்த ஊர் தெரியாதவர் என்கிற புரிதலோடு அவர்கள் என்னை அணுகினர். செல்லும் வழியெங்கும் காணும் காட்சிகளின் முக்கியத்துவத்தை என்னிடம், அவர்கள் அறிந்தவரை, மிக்க அன்புடன் விளக்கினர். அவர்கள் விருப்பப்படி எனக்கு பினாங் நகரைச் சுற்றிக் காட்டினர். முதலில் ராமகிருஷ்ண ஆஸ்ரமம், அப்புறம் புகழ்பெற்ற அருள்மிகு பால தண்டாயுதபாணி மலைக் கோவில். மிகப் பெரிய அளவில் தைப்பூசத் திருவிழா இங்கு நடக்குமாம். சாலை முழுவதும் வண்ணக் கோலங்கள் கலக்குமாம். இன்னும் எஞ்சியிருந்த கோலங்களைச் சுட்டிக் காட்டினர்.

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகத்திலிருந்து வெளியே வந்தபின். “அங்கிள் என்ன சாப்ட்றீங்க?” என்று கேட்டனர். எது வேணும்னாலும் என்றேன். “அங்கிள் ‘நான் வெஜ்’ சப்பிடுவீங்களா?” என்றனர். எதுவும் பிரச்சினை இல்லை என்றேன். சற்று யோசித்துவிட்டு, “அங்கிள் மெக் டொனால்ட்ஸ் போகலாமா?” என்றனர். எனக்கு மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி முதலியன பிடிப்பதில்லை. ஆனால் இன்றைய இளைஞர்கள், சிறுவர்களின் விருப்பம் அதுதான் என எனக்குத் தெரியும். அத்தோடு அன்று முழுவதும் அந்த இளைஞர்களின் விருப்புகளுக்கு என்னை ஆட்படுத்திக் கொள்வது என முடிவு செய்துவிட்டேன். “ஓ போகலாமே” என்றேன்.

வண்டி மெக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரென்ட் அருகில் நின்றது. கடற்கரை ஓரம். சுற்றிலும் பல மாடிக் கட்டிடங்கள், அந்த இடத்தின் பெயரில் ‘குர்னி’ இடம் பெற்றிருந்ததைக் கவனித்து. “குர்னி என்றால் அது…” என இழுத்தேன். அவர்களும் யோசித்தனர். “ஆமா அங்கிள், அது இங்கிருந்த பிரிட்டிஷ் கவர்னரின் பெயர்” என்றனர். “அவரைக் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொன்றார்கள் தெரியுமா?” என்றேன். அவர்களுக்குப் புரியவில்லை. கணபதி என்கிற தமிழரை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டுக் கொன்றது. அவர் ஒரு தமிழர் மட்டுமல்ல கம்யூனிஸ்டும் கூட. அதற்குப் பழி வாங்க கம்யூனிஸ்டுகள்தான் கவர்னர் ஹென்றி குர்னியைச் சுட்டுக் கொன்றார்கள் என்றொரு கருத்தும் உண்டு” என்றேன். “ அங்கிள் அதை எல்லாம் எங்கள் பாட புத்தகங்கள்ல போடவே மாட்டாங்க. கம்யூனிஸ்டுகள்னா கடவுளை இல்லைங்கிறவங்க. கொடூரமானவங்க .. அப்டித்தான் சொல்லித் தருவாங்க…”

அவர்கள் தேர்வில் அன்றைய மதிய உணவு கழிந்தது. சில நிமிட நேரம் அவர்களைக் காணவில்லை. சிறிது நேரங் கழித்து அவர்கள் தோன்றினர். “அங்கிள் கவலைப் படாதீங்க… சாமி நீங்க ஆறு மணிக்கு வந்தாப் போதும்னு சொல்லிட்டாரு. இங்கே மலை மேல ஒரு புத்தர் கோவில் இருக்குப் போகலாமா?”

நான் ஆவலோடு ஏற்றுக் கொண்டேன். செல்லும் வழியில் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வண்டியை நிறுத்தி, “அங்கிள் நமக்கு நேரம் நிறைய இருக்கு. நீங்க வண்டியிலேயே இருங்க. நான் கொஞ்ச நேரம் மேலே போய்ட்டு வர்றேன்” எனச் சொல்லி விரைந்தனர். கெமிகல் எஞ்சினீரிங் படிக்கும் மாணவன் இங்கே நான்காண்டு தங்கிப் படித்தவன்.

கொஞ்சம் என் பொறுமையைச் சோதித்து விட்டுத்தான் வந்தனர். சுற்றிலும் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கிப் படிக்கும் சிறுவர்கள். “ ஒழுங்காப் படிங்க, என் பேரைக் காப்பாத்தனும்..” எனச் சொல்லி விடை பெற்றான் கெமிக்கல் எஞ்சினீயரிங். “அங்கிள், இந்தாங்க” எனச் சொல்லி ஒரு கொகோ கோலா டின்னையும் என் கைகளில் திணித்தான். படிக்கும் போது, தான் எப்படி இரவில் ஆசிரமச் சுவரேறிக் குதித்துச் சினிமா பார்க்கப் போவான் என்பதை மற்றவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்

வண்டியில் அதிக வால்யூமுடன் ‘எதிர்நீச்சல்’ படப் பாடல்கள் முழங்கின. “என்னை ஏத்துக்கடி… எதிர் நீச்சலடி..” பாடல் திரும்பத் திரும்ப ஒலித்தது. நன்றாகத்தான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் நானும் ரசிக்கப் பழகிவிட்டேன். “இது யார் ம்யூசிக்?” எனக் கேட்டேன். “அனுருத் தெரியாதா அங்கிள் உங்களுக்கு?” எனப் படு கேவலமாக என்னைப் பார்த்துவிட்டு அவர்கள் விளக்கத் தொடங்கினர். அவர்களின் விளக்கம் போதுமானதாக இருந்தது. இது அனுருத்துக்கு இரண்டாவது படம். முதல் படமே படு ஹிட். அப்போது அனுருத்துக்கு வயது 21தான். தொடர்ந்து தமிழ் சினிமா குறித்து ஏராளமான தகவல்கள். மலேசியத் தமிழர்கள் எல்லோரும், நம் எழுத்தாள நண்பர்கள் உட்பட, நிறைய தமிழ் சினிமாத் தகவல்களை அறிந்து வைத்துள்ளனர். எஃப் எம் வானொலிகளும் தமிழ் சினிமாத் தகவல்களைச் சொல்லிக் கொண்டே உள்ளன.

“அங்கிள் உங்களுக்கு நடிகர்களில் யாரைப் பிடிக்கும்?” என்று கேட்டனர். நடிகைகளைக் கேட்டாலாவது சொல்லியிருப்பேன். நடிகர்களில் யாரைச் சொல்வது? என் தயக்கத்தைக் கண்ட அவர்கள், “விஜயைப் பிடிக்குமா?” என்றனர். பிடிக்கும். சூர்யாவையும் பிடிக்கும் என்றேன். அங்கிள் சென்னை வந்தால் அவங்களைப் பாக்க முடியுமா என்றனர். என்ன சொல்வேன். “பாக்கலாம். நீங்க வரும்போது சொல்லுங்க நான் ஏற்பாடு செய்றேன்…” எனத் துணிந்து சொன்னேன். இருந்தாலும் மனசுக்குள் ஒரு உதைப்பு. சூர்யா என பதில் வந்தாலாவது ஏதாவது செய்யலாம். அப்பா சிவக்குமாரைக் கொஞ்சம் தெரியும். என் மகள் திருமணத்திற்கெல்லாம் வந்துள்ளார். அதோடு அந்தக் குடும்பம் இப்போது நம்ம பேராசிரியர் கல்விமணிக்கு ரொம்ப நெருக்கம். நிச்சயம் ஏதாவது ஏற்பாடு செய்வார். விஜய் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது…

அதற்குள் புத்த கோவில் வந்துவிட்டது. மலைமேல் இருக்கும் அற்புதக் கோவில். பொறுமையாக அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினர். படி ஏறும் வழி எல்லாம் நெருக்கமான சீனக் கடைகள். கெமிகல் எஞ்சினீரிங் படிக்கும் மாணவன் ஒரு கூலிங் கிளாஸ் வாங்கிக் கொண்டான். அது அவன் முகத்திற்கு மிகவும் அழகாக இருந்தது. மலை ஏறும் வழியில் ஒரு சிறு குட்டை. அது நிறைய ஏராளமானகக் கல் ஆமைகள். அவர்கள் வியப்புடன் அதை நோட்டம் விட்டனர். எல்லாவற்றையும் படம் எடுத்துக் கொள்ளும் என்னைப் பார்த்து அவர்கள் ஏதோ கேலி செய்வதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

“நாம் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?”. அவர்கள் ஆவலோடு முன்வந்தனர். ஒருவர் மாற்றி ஒருவராகப் படம் எடுத்துக் கொண்டோம். திரும்பி வரும் வழியில் அவர்களில் ஒருவன் என் முகநூல் விலாசத்தைக் குறித்துக் கொண்டான். “அங்கிள், இந்தப் படங்களைப் ஃபேஸ் புக்கில் போடுங்க. நான் ‘சேவ்’ பண்ணிகிறேன்” என்றான்.

திரும்புகையில் கெமிகல் எஞ்சினீரிங் படிக்கும் மாணவன் வண்டியை நிறுத்தி ஒரு ஏடிஎம்மில் காசு எடுத்துக் கொண்டான். பிறகு பட்டர்வொர்த்திற்குப் போய் ஒரு பஸ்ஸில் டிக்கட் எடுத்துக் கொண்டான். அடுத்த நாள் அவன் கல்லுரியில் இருக்க வேண்டும்.

புறப்படும் நேரம் சுவாமியிடமிருந்து போன் வந்தது. “ பஸ் டிக்கட் எடுக்க நேரம் ஆய்ட்டு சாமி. ஆறு மணிக்குள் வந்திடறோம்” எனப் பதில் சொல்லினர். அடுத்த கணம் கார் அறு வழிச் சாலையில் பறந்தது. பின் சீட்டிலிருந்து எக்கிப் பார்த்தபோது வேகமானி 140க்கும் 150க்கும் இடையில் துடித்துக் கொண்டிருந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்திருந்தேன்.

ஆஸ்ரமத்தை அடைந்தவுடன் சுவாமி கேட்ட முதல் கேள்வி. “பையங்க நல்லா கவனிச்சிட்டாங்களா? எல்லா இடத்தையும் சுத்திக் காமிச்சாங்களா? நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்தாங்களா?” என எனக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டே கேட்டார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல. நால்லா கவனிச்சுட்டாங்க. மெக் டொனால்ட்ஸ்ல சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. 140 கி.மீ வேகத்தில காரை ஓட்டிச் சரியா ஆறு மணிக்குக் கொண்டு வந்தும் சேர்த்துட்டாங்க என்றேன். “பாத்தீங்களா, எனக்குத் தெரியும்… அப்பவே சொல்லி அனுப்பிச்சேன். காரை அவ்வளவு வேகமா ஓட்டக் கூடாதுன்னு… கேக்க மாட்டாங்களே..” என்றார் சாமி. “இல்ல சாமி….140 கி மீ எல்லாம் யாராவது ஓட்டுவாங்களா…” என்று நெளிந்தவாறே இருவரும் நழுவினர்.

essay1cஎழுத்தாளர்கள் பாண்டியன், பாலமுருகன் தவிர வேறு சிலரும் வந்திருந்தனர். உரையாடல் ஈழப்பிரச்சினையின் பக்கம் நகர்ந்தது. வடக்கு கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாகி இருப்பதன் பரிமாணங்கள் குறித்துக் கூறினேன். கடந்த 30 ஆண்டுகளில் கிராமப்புற சிங்கள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது ராணுவத்தில் சேர்வதாக மட்டுமே இருந்தது. போர் முடிந்த இன்றைய சூழலில் மக்கள்தொகைக்குப் பொருத்தமில்லாத வீங்கிப் பெருத்த ஒரு இராணுவத்தைச் சுமக்க வேண்டிய நிலை இன்று இலங்கைக்கு நேர்ந்துள்ள பிரச்சினைகளில் ஒன்று. மிகையாக இருக்கும் இராணுவத்தை அவர்கள் கலைத்தால் கிராமப்புற சிங்களவர்களிடமிருந்து பெரிய எதிர்ப்பு வரும். ஆக இன்று இராணுவம் நெடுஞ்சாலைகளில் உணவுக்கடைகள் நடத்துவது, கல்லூரி மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது. காவல்துறையின் வேலைகளை அவர்களே செய்வது, தமிழர்களின் ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் பண்ணுவது.. இப்படியாக ஆக்கப்பட்டிருப்பது, இதன் பாரதூரமான கொடும் விளைவுகள் இவை குறித்தெல்லாம் பேசினேன். ‘வளர்ச்சி நடவடிக்கைகளில்’ இந்தியா, சீனா ஆகியவற்றுக்கிடையே உள்ள போட்டிகள், சிறைக் கைதிகளை எல்லாம் சீனம் அங்கு கொண்டுவந்து வளர்ச்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல் என்பதெல்லாம் அவர்களுக்கு வியப்பை அளித்தன. தமிழர்களின் இன்றைய அவல நிலை, அதே நேரத்தில் ஒரு 30 ஆண்டுகாலக் கொடும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளதை அங்குள்ள எல்லாத் தரப்பினருமே வரவேற்று அனுபவிக்கும் மனநிலை உருவாகியுள்ளது குறித்தும் கூறினேன்.

உரையாடல் ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் பக்கம் திரும்பியது. செப்டம்பர் 11, சுனாமி, வாகரைப் போரில் தொடங்கிய தோல்வி ஆகியவற்றிற்குப் பின் தங்களின் அரசியல் அணுகல்முறைகளை மாற்றியிருக்க வேண்டும். போர்த் தந்திரங்களையும் மாற்றி இருக்க வேண்டும் என்பதை சுவாமிகள் பலமாக ஆமோதித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ்ச் சமூக உருவாக்கம், அங்குள்ள சாதி முறைகள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர்களாக உணர இயலாமற் போனதற்கான ‘குற்றச்சாட்டை’ அவர்கள் மீது மட்டுமே சுமத்த இயலாது என்பது போன்ற செய்திகளை அவர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் பின்னணி தேசியம் மற்றும் அடையாள உருவாக்கங்களின்பால் பேச்சைத் திருப்பியது. எதுவும் இயற்கை அல்ல, எல்லாமே கட்டமைக்கப்பட்டதுதான் என்கிற கருத்து சுவாமி உட்பட அங்கிருந்த எல்லோரையும் ஒரு கணம் அதிர்ச்சியடையவும் யோசிக்கவும் வைத்தது. இது இலக்கியப் படைப்புகளில் எதார்த்தம் குறித்த விவாதமாக மாறியது. எதர்த்தத்தை இலக்கியம் பிரதிபலிக்கவில்லை, மாறாக அது ஒரு எதார்த்தத்தைக் கட்டமைக்கிறது என்கிற கருத்தை சுவாமி முழுமையாக ஏற்றுக் கொண்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் கவனமாக உள்வாங்கிக் கொண்டார். கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் குறித்தும் மாதவையாவும், புதுமைப்பித்தனும் எவ்வாறு இரு வேறு எதார்த்தங்களைக் கட்டமைக்கின்றனர் என விளக்கியபோதும், தலித்கள், சிறுபான்மையோர் குறித்து சுந்தர ராமசாமி, புதுமைப் பித்தன் முதலானோர் கூறுவதற்கும் ‘பிரஸன்னம்’ கதையில் பிரமீள் தலித் பிரச்சினையை முன்வைப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து நான் சொன்னவற்றையும் அவர்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டனர். சுந்தரராமசாமி முதல் ஜெயமோகன் வரை தெரிந்திருந்த மலேசிய இலக்கிய நண்பர்கள் பலருக்கும் பிரமீளைத் தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பிரஸன்னம் கதையின் முற்பகுதியில் சில மேஜிகல் ரியலிசக் கூறுகள் இருப்பதையும், பிற்பகுதியில் சில ‘மெடாஃபிக்ஷன்’ எனச் சொல்லத் தக்க கூறுகள் இருப்பதையும் பேசினோம். இந்த உரையாடல் தொடர்ந்து வாசிப்பின் அரசியலுக்கு இட்டுச் சென்றது. சுவாமிகள் அவ்வப்போது ஆசிரியனின் சுதந்திரத்தை வற்புறுத்தியபோதும் வாசிப்புச் சுதந்திரத்தையும் ஏற்றுக் கொண்டார். பாரதியின் அரசியல் கவிதைகளின் கவித்துவம் குறித்த விவாதம், காந்தியை எவ்வாறு அணுகுவது என்கிற பிரச்சினைகளும் பேசப்பட்டன.

உரையாடலின் இறுதிப் பகுதி மலேசியத் தமிழர்களின் அரசியல் பக்கம் திரும்பியது, உள்ளூர் அரசியல்வாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் குறித்தெல்லாம் சுவாமிகள் ரொம்பவும் வெள்ளந்தியாகத் தன் விமர்சனங்களை வைத்தார். முக்கியச் சமூகச் செயல்பாட்டாளர்களின் பங்களிப்புகளை அவர் ஏற்றுக் கொண்டபோதும் அவர்கள் மீதான தன் விமர்சனத்தையும் அவர் வைக்கத் தயங்கவில்லை.

அப்படியானால் நீங்கள் யாரைத்தான் சொந்த வாழ்க்கை, அரசியல் இரண்டிலும் சரியானவர்களாகக் கருதுகிறீர்கள் என பேராசிரியர் ஒருவர் வினவியபோது, “ஏன் அருள் செல்வன், டாக்டர் ஜெயகுமார் எல்லாம் இல்லையா?” என்றார் சுவாமிகள். அருள்செல்வன், ஜெயகுமார் இருவரும் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்று மலேசியாவில் கம்யூனிஸ்டுகள் என்கிற பெயரில் யாரும் இயங்கமுடியாது. இடதுசாரி அரசியலை இன்று சோஷலிஸ்டுகளும், டி.ஏ.பி கட்சியினரும்தான் முன்னெடுக்கின்றனர். டாக்டர் ஜெயகுமாரின் எளிமையையும்,அர்ப்பணிப்பையும் பலரும் கூறினர். சுவாமி ப்ரம்மானந்தரும் அவரை ஒரு ‘ரோல் மாடலாக’ச் சொன்னது எனக்கு சுவாமியின் மீதிருந்த மரியாதையை அதிகப் படுத்தியது,

இரவு 12.30 மணிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து கோலாலம்பூர் பஸ்சை நாங்கள் பிடித்தாக வேண்டும் அடுத்த நாள் மதியம் நான் விமானத்தைப் பிடிக்க வேண்டும். எல்லோருக்கும் தன் கைப்படக் கேழ்வரகுத் தோசை வார்த்துக் கொடுத்தார் சுவாமி. எனக்குக் கொஞ்சம் ஃபில்டர் காபியும் கிடைத்தது. ஆசிரம வாசல் வரை வந்து எங்களை வழி அனுப்பி வைத்தார் ப்ரம்மானந்தர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...